Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > "சகோதரர் அன்றோ" (அகிலனின் சிறுகதைகள் தொகுப்பு) - short stories by akilan

 

"சகோதரர் அன்றோ"
(அகிலனின் சிறுகதைகள் தொகுப்பு)

"cakotarar anRO" - short stories by akilan

Akilan
Akilan - P.V.Akilandam


Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India for providing online a scanned image version of this literary work. This etext has been prepared via Distributing Proof-reading implementation of PM. We thank the following volunteers for their help in the preparation of the etext: V. Devarajan, Rajasekar Elangovan, Sakthikumaran, S. Karthikeyan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan, Sivakami and M. K. Saravanan Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
� Project Madurai, 1998-2008 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


சகோதரர் அன்றோ
(அகிலனின் சிறுகதைகள் தொகுப்பு)
 

சகோதரர் அன்றோ ?
(கதைகள்)
அகிலன்
தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் லிமிடெட்
(X 417)
8, சின்ன ரெட்டித் தெரு, எழும்பூர், சென்னை-8
முதல்பதிப்பு: 1963
தமிழ் உறவு

உரிமை ஆசிரியர்க்கு
விலை ரூ.2-50
அச்சிட்டோர்:
அமுதா பிரிண்டர்ஸ்,
சென்னை-14

பொருளடக்கம்

பக்கம்

பதிப்புரை  
முன்னுரை  

1. சகோதர் அன்றோ?

... 1

2. அருவிக்கரை அழகி

... 16

3. பொங்கலோ பொங்கல்!

... 35

4. நாதனுள்ளிருக்கையில்

... 45

5. வெள்ளம் வந்தது

... 61

6. நினைப்பு

... 69

7. கறவையும் காளையும்

... 80

8. தெய்வத்தின் குரல்.

... 86

9. யார் தியாகி?

... 94

10. பித்தம் தெளிய மருந்து

... 106

11. கலியபெருமாளின் கனவு

... 117

12. சொர்க்கம் எங்கே?

... 130

13. காக்கைச் சிறகினிலே

... 145


    பதிப்புரை

    எழுத்தாளர்கள் ஒன்று கூடித் தங்கள் நூல்களைத் தாங்களே வெளியிட்டுக்கொள்ளத் தக்க வகையில் ஒரு நிறுவனம் இருந்தால் அதனால் பல நல்ல வெளியீடுகளைக் கொணரவும் எழுத்தாளர்களுக்கு நலம் செய்யவும் இயலும் என்ற எண்ணத்தில் சில எழுத்தாளர்கள் சேர்ந்து தொடங்கியது தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம். நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ் மக்களிடையே இப்போது மிகுதியாக உண்டாகி வளர்ந்து வருகிறது. பல பல வெளியீட்டாளர்கள் புத்தகங்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார்கள். அதனால் ஓரளவு எழுத்தாளர்கள் சிலருக்கு ஊதியம் கிடைக்கிறது. ஆயினும் எழுத்தாளர்களின் பெருளாதார நிலை இன்னும் உயரவில்லை. பல நல்ல எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை வெளியிட வாய்ப்பில்லாமல் திண்டாடுகிறார்கள். கிடைக்க வேண்டிய ஊதியம் கிடைக்காவிட்டாலும் அவசியத்தை முன்னிட்டுப் பலர் கிடைத்ததைப் பெற்றுப் புத்தகங்களை விற்றுவிடுகிறார்கள்.

    இவ்வாறு உள்ள நிலையை ஓரளவேனும் மாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு எழுந்தது இந்தக் கூட்டுறவுச் சங்கம். வேறுமொழியார்களிடையே இத்தகைய சங்கம் இருப்பதாகவும் அதனால் எழுத்தாளர்களுக்கு நலன் உண்டாவதாகவும் தெரியவருகிறது.
    கூடியவரையில் நல்ல நூல்களை வெளியிடவேண்டும் என்பது இந்தச் சங்கத்தின் கொள்கை. இதற்கு அரசியலாரின் உதவியும் பொது மக்களின் உதவியும் இன்றியமையாதவை. ஏழைகளாகிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களைத் தங்கள் பொருளைக் கொண்டே வெளியிடிடுவது என்பது இயலாத காரியம். ஆகவே இந்தக் கூட்டுறவுச் சங்கத்துக்கு எத்தனைக் கெத்தனை அரசியலாருடைய ஆதரவு இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை எழுத்தாளர்களுக்கு ஆக்கமும் தமிழ்மக்களுக்கு நல்ல புத்தகங்களும் கிடைக்கும்.பணமாக உதவுவதோடு தங்கள் ஆட்சியிலுள்ள நிறுவனங்களில் இந்த வெளியீடுகளை வாஙகச் செய்து ஆதரிக்கும் வண்ணம் அரசியலார் செய்ய வேண்டுமென்பது இந்தச் சங்கத்தின் வேண்டுகோள்.

    பொதுமக்களும் இந்தச் சங்க வெளியீடுகளை வாங்கி ஆதரிக்க வேண்டும். 'தமிழுறவு' என்ற அழகிய அடையாளக் குறியையுடைய சங்க வெளியீடுகள் தமிழ்நாட்டின் புத்திலக்கியப் படைப்பின் கொழுந்துகளாக நிலவ இச்சங்கம் முயலும் என்று உறுதி கூறுகிறோம்.

    வளர்ந்து வரும் சமுதாயத்தில் எத்தனை பதிப்பகங்கள் இருந்தாலும் அறிவுப் பசியைப் போக்கும் துறையில் மிகையாவதில்லை. ஆகவே இந்தச் சங்கம் பிற பதிப்பகங்களின் ஆதரவையும் எதிர்பார்க்கிறது. அவற்றின் உரிமையாளர்கள் இவ்வெளியீடுகளையும் தங்கள் புத்தகங்களாகவே எண்ணி விற்பனை செய்து நலம் செய்வார்கள் என்று நம்புகிறோம்.

    நல்ல வகையில் நல்ல புத்தகங்களை வெளியிட முன் வந்திருக்கும் இந்தச் சிறிய நிறுவனத்திற்கு அரசாங்கம், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பொதுமக்கள் எல்லோருடைய ஆதரவும் இன்றியமையாதது. இநதக் குழந்தை வளர்ந்தால் தமிழ்நாட்டு எழுத்தாளர் நிலை வளரும். அவர்கள் நிலை வளர்ந்து உயர்ந்தால் தமிழ் மக்களுக்கே பெருமை உண்டாகும் என்பதைச் சொல்லவும் வேணடுமா?

    தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தார்,  20-11-63


    முன்னுரை

    இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் 'கலைமகள்', 'ஆனந்த விகடன், 'கல்கி, 'நண்பன்' முதலிய பத்திரிகைகளில் ஏற்கெனவே வெளிவந்தவை.

    இவற்றில் 'சகோதரர் அன்றோ' என்ற சிறுகதை 'சாரிகா' என்ற இந்திப் பத்திரிகையிலும், 'நினைப்பு' ஆங்கிலப் பத்திரிகையான 'Illustrated Weekly'யிலும், 'கறவையும் காளையும்' இந்தியில் 'நவனீத்', குஜராத்தியில் 'சாந்தினி' பத்திரிகைகளிலும் மொழிபெயர்க்கப் பெற்று வெளிவந்திருக்கின்றன. 'வெள்ளம் வந்தது' மலையாளம் கன்னடம் முதலிய மொழிப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

    தமிழிலும் பிற மொழிகளிலும் வெளியிட்ட பத்திரிகைகளுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் எனது நன்றி. இப்போது தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உதவியோடு இந்தக் கதைகள் தொகுப்பாக வெளிவருகின்றன. எழுத்தாளர்களுக்கு உதவும் கூட்டுறவுச் சங்கத்துக்கும் இந்தச் சங்கத்தின் வெளியீடுகளை வாங்கி எழுத்தாளர்களையும் இலக்கியத்தையும் வளர்க்கும் அனைவருக்கும் எனது நன்றி.

    171,லாயிட்ஸ் ரோடு,
    சென்னை-14 அகிலன்,         2-12-1963



    1. சகோதரர் அன்றோ?


    தொலைவில் தெரிந்த வெள்ளிப் பனி மலையின் பளிங்குச் சிகரங்கள் பகைவர்களைப் பயமுறுத்தும் ஈட்டி முனைகளைப் போலக் காலை வெயிலில் பள பளத்தன. சிகரங்களின் வாயிலாக ஊடுருவிப் பாய்ந்த இளங்கதிர், இன்னும் அந்த மலைக் காட்டில் நுழையவில்லை. அடிவாரத்தின் மடியில் அடர்த்தியான குளிர்; மங்கலான இருள்.

    நெடியதொரு மலைப் பாம்பு போல், ஒரு குறுகலான ஒற்றையடிப் பாதை வளைந்து மேலே சென்றது. பாதையின் இரு புறங்களிலும் நெடி துயர்ந்த மரங்கள். அடிக்கடி சின்னஞ்சிறு மலையருவிகள் குறுக்கிட்டன. பனிப் பாளங்கள் நொறுங்கி நீரில் மிதந்ததால், அருவியில் வைத்த காலை, மரத்துப்போன மரக்கட்டையாகத்தான் வெளியில் எடுக்க முடியும். மரக்கிளைகளிலும் இலைகளிலும் படிந்த வெண்பனி மட்டும் சொட்டுச் சொட்டாக உருகி உதிரத் தொடங்கியது.

    பனியும் ,பயங்கரமும், இடர்ப்பாடும் நிறைந்த அந்த மேட்டுப் பாதையில் இருபது போர் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்றனர்.அவர்களது ஒழுங்கான காலடி ஓசையைத் தவிர, மற்ற எந்த ஒலியும் அங்கு எழவில்லை. ஓசையில் ஏதாவது நேரும்போது மட்டிலும், முன்னால் சென்ற தலைவன் குமார், தாளம் தவறிப் போடுபவனைப் பார்க்கும் பாடகனைப்போல் திரும்பிப் பார்ப்பான்- பிறகு ஓசை தவறுவதில்லை.

    "லெப்ட்...ரைட்...சரக்...சரக்...சரக்...சரக்...!"

    இது அவர்களுக்கு இரண்டாவது நாள் நடை.கம்பளிக் குல்லாய்களையும் அங்கிகளையும் தாண்டி வந்து எலும்புக் குருத்தைச் சுண்டி இழுத்தது அந்தக் குளிர். முதல் நாள் இரவை எப்படியோ ஒரு கூடாரத்துக்குள் நெருப்பு மூட்டிக் கழித்து, தங்கள் எலும்புகளை ஓரளவு உலர்த்திக்கொண்டு, மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தார்கள்.

    வேவு பார்ப்பதற்காக முன்னால் சென்றுகொண்டிருந்த ரோந்துப் படை இது. இதை அடுத்து இதேபோல் ராஜ்பகதூர் என்ற பாஞ்சாலத்து இளைஞனின் தலைமையில் மற்றொரு சிறு படையும் வந்துகொண்டிருந்தது. அதற்கும் பின்னால் வந்த படைதான், நூறுபேர்களடங்கிய 'பயனீர்' படை. காடுகளை வெட்டிச் செப்பனிட்டுப் பாதைகளை ஒழுங்காய்ச் சமைத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். அதை அடுத்தாற் போல்தான் அவர்களது தாற்காலிக ராணுவ முகாம் இருநதது. அங்கிருந்தவர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால்,மொத்தம் முந்நூறு பேர் தேறுவார்கள்.

    போக்குவரத்துச் சாலைகளில்லாத மலைக் காட்டுப் பிரதேசம் அது. வீரர்கள், தளவாடங்கள், சப்ளைகள் முதலிய எல்லாவற்றையும் அங்கு 'ஹெலிகாப்டர்' விமானம் மூலம் கொண்டு வந்து இறக்கித்தான், அந்த ராணுவ முகாமையே ஏற்படுத்தி யிருந்தார்கள்-சீனர்களின் நயவஞ்சகத்தனமான படையெடுப்புக்கு ஆளாகியிருந்த வடகிழக்கு எல்லைப் பிரதேசம் அது.

    சூரியன் வானத்தின் உச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தான். குமாரின் தலைமையில் வந்த வீரர்களும் மலை உச்சியை நெருங்கினார்கள். சூரியனின் ஒளி அங்கு நிலவொளி போலத்தான் குளிர்ந்திருந்தது. வெளிச்சமுண்டு; வெம்மையில்லை.

    மலை முகட்டைத் தாண்டிச் செல்வதற்கு அவர்களுக்கு உத்தரவு இல்லை. ஆகவே, இயற்கையாக அரண் போல் அமைந்த ஒரு பாறைத் தொடரின் மறைவில் தன் வீரர்களை உண்டு களைப்பாறச் செய்தான் குமார். ரொட்டித்துண்டு நன்றாக இறுகிப் போயிருந்தது. அதை மென்று, விழுங்கி விட்டு, குளிரை விரட்டுவதற்கு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். தாங்கள் வநது சேர்ந்ததுபற்றியும், மலை முகட்டை அடுத்த பள்ளத்தாக்கில் பகைவரின் நடமாட்டம் எதுவும் தெரியவில்லை என்பது பற்றியும் பின்னால் வரும் ராஜ்பகதூருக்குச் செய்தி அறிவித்தான். தலைமை நிலையத்தை 'சிக்னல்' கூப்பிட்டபோது, அங்கிருந்து பதில் இல்லை. அங்குள்ள இயந்திரம் பழுதாகி விட்டது போலும்!

    குமார் ஒரு பாறையின் பின்பு நின்று கொண்டு, தொலை நோக்கிக் கண்ணாடியால் பள்ளத்தாக்கு முழுவதையும் நன்றாக ஊடுருவிப் பார்த்தான். நடுத்தரமான உயரம்; வைரம் பாய்ந்த ஒல்லியான உடற்கட்டு; முறுக்கு மீசை; கறுப்பு நிறம்.

    "சீனர்களுக்குச் சாதகமான நில அமைப்பு அவர்களுடைய எல்லையில் இருக்கிறது. பாதை அமைத்துக்கொண்டு வாகனங்களில் வந்து குவிந்து விடலாம் -அதை நமக்குப் பாதகமாகப் பயன் படுத்தி விட்டார்கள் துரோகிகள்!" என்றான் குமார், அருகில் நின்ற மராத்திய வீரனிடம்.

    "அவர்களுடைய கொரில்லாப் பயிற்சி இந்த மலைக்காடுகள் வரையில்தான் எடுபடும். சமவெளிக்கு வந்தால் நாம் புதை குழி வெட்டிவிடலாம்" என்றான் மராத்தியன்.

    தொலை நோக்கியால் பார்த்தபடி பேசிக்கொண்டே வந்த குமார், சட்டென்று பேச்சை நிறுத்தி, ஒரு திசையில் சுட்டிக்காட்டினான். தொலைநோக்கியை மற்றவனிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னான்.

    "ஆமாம்; பெரியகூட்டம்!" என்றான் மராத்தியன். "இலை தழைகளை அள்ளிப் போட்டு மறைத்துக் கொண்டு வருகிறார்கள், வாகனங்கள் ஏதுமில்லை கோவேறு கழுதைகளில் சப்ளை வருகிறது."

    இரும்புச் சிலையின் முகமாக மாறியது குமாருக்கு. சட்டென்று அதை வாங்கிப் பார்த்துவிட்டு, மீண்டும் தலைமை நிலையத்தோடு கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கெள்ளமுயன்றான்;முடியவில்லை."சுமார் ஆயிரம் பேர் இருப்பார்கள்; இரண்டு மைல் தொலைவில் வந்துகொணடிருக்கிறார்கள்!" என்றான்.

    இருப்பதோ இருபது பேர்; வருவதோ ஆயிரம்...! குமார் சிறிது நேரம் யோசித்தான், பிறகு மள மளவென்று தனக்குப் பின்னால் வந்த ராஜ்பகதூருக்குச் செய்தி அனுப்பினான்.

    "ராஜ்பகதூர்!...ஆயிரம் சீனர்கள்!...வாகனங்களில்லை; இரண்டு மைல் தொலைவில் வருகிறார்கள்... உச்சிக்கு வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்... தலைமை நிலையத்திற்குத் தொடர்புமில்லை... நாமே முடிவு செய்ய வேண்டியதுதான்...என்ன சொல்லுகிறாய்?"

    ஒரு மைல் தொலைவிலிருந்து செய்தியைக் கேட்ட ராஜ்பகதூரின் நெடிய உருவம் ஒரு கணம் திடுக்கிட்டு விட்டது.

    " நீ என்ன சொல்கிறாய்?...முகாமில் உள்ள எல்லோரைடும் சேர்த்தாலே, நாம் மூன்றில் ஒரு பங்குதான் தேறுவோம்!" என்றான் ராஜ் பகதூர்.

    "இருந்தால் என்ன?... நாங்கள் இங்கே வாய்ப்பாக மறைந்து, முடிந்தவரை தீர்த்துக் கட்டுகிறோம். நூறு பேர்களையாவது சரிக்கட்டிவிட்டு, நாங்களும் செத்துத் தொலைகிறோம். சுமார் ஒரு மணிநேரம் எங்களால் அவர்களை 'எங்கேஜ்' செய்ய முடியும். அதற்குள் நீ பின்வாங்கிப் 'பயனீர்' படையோடு சேர்ந்துகொள். கட்டிய பாலத்துக்குச் சரியான நேரத்தில் வேட்டு வைத்தால் அதில் பலர் ஒழிந்து போவார்கள். நீங்கள் எல்லோரும் காட்டுக்குள் மறைந்து கொண்டு பகைவர்களைச் சிதற அடிக்கலாம். என்ன சொல்கிறாய்?-'பயனீர்' படைக்குச் செய்தி அனுப்பிவிட்டுத் திரும்பிப் போ!"

    " நீ சொல்லியது அவ்வளவும் சரி. நான் அப்படியே செய்தி அனுப்புகிறேன்.- ஆனால் ஒரு விஷயத்தில் நீ முட்டாள்! இருபது பேர்களை வைத்துக் கொண்டு நீ எவ்வளவு நேரம் எத்தனை பேர்களைச் சமாளிக்க முடியும்?"

    "எங்களது எண்ணிக்கை முதலில் அவர்களுக்குத் தெரியப்போவதில்லை..." "ஏ முட்டாள்! நீ உன் வாயை மூடு! நான் வரத்தான் போகிறேன்."

    "நீ முட்டாள் மட்டுமல்ல; சண்டைக்காரனும் கூட நம்முடைய பழைய சண்டையைப் புதுப்பிக்க இதுவா நேரம்?... ராஜ்பகதூர்!"

    "நான் அங்கே வந்து கொண்டிருக்கிறேன்!...நம்முடைய உத்தியோகம் ஒன்றாக இருந்தாலும், நீ என்னை விட சீனியர்; உத்தரவு கொடு!...உத்தரவு கொடு!"

    "சரி வந்து தொலை!" என்று கூறி விட்டுத் தனக்குள் சிரித்துக்கொண்டான் குமார். சண்டைக்காரனாக இருந்தாலும், ராணுவக் கட்டுப்பாட்டை மீறாமல் தன்னிடம் உத்தரவு கேட்டதில் அவனுக்கு மகிழ்ச்சி.

    தூரத்திலிருந்தே இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர், "பொல்லாத மதராஸி" என்றும், "முரட்டுப் பஞ்சாபி!" என்றும் பெருமையோடு கூறி நகைத்துக் கொண்டார்கள்.

    மலை உச்சியிலிருந்த குமாருடன் இப்போது ராஜ்பகதூரும் வந்து சேர்ந்து கொண்டான். இருபது பேர்களாக இருந்தவர்கள், நாற்பது பேர்களானார்கள். எதிர்ப்பக்கத்திலிருந்து பொங்கி எழும் கடல் அலைபோல் சீனப்படை முன்னேறிக் கொண்டிருந்தது. மரணம் என்கிற முடிவுக்குத் தீர்மானமாக வந்து விட்டு, அதைக் கம்பீரமாக ஏற்றுக் கொள்ளத் துணிந்த இந்த நாற்பது பேர்களும், ஆளுக்குப் பத்து பகைவர்கள் வீதமாவது தீர்த்துவிட்டுத்தான் மடியவேண்டு மென்று உறுதி பூண்டனர்.

    நெருங்கிக் கொண்டிருந்தனர் பகைவர்கள்.

    "ராஜ்பகதூர், நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள்" என்று அவனிடம் திட்டங்களை விளக்கினான் குமார்." நாம் செய்ய வேண்டிய காரியங்கள் மூன்று: ஒன்று, நமது எண்ணிக்கை தெரிந்துவிடாதபடி திடீர்த் தாக்குதல் நடத்தி அவர்களைக் கலக்கி விட நேண்டும்; பெரும் படை இங்கே இருப்பதாக அவர்களை நினைக்கச் செய்து உறுதியைக் குலைக்க வேண்டும். இரண்டு, தாக்குதலின் மூர்க்கத்தனம் அவர்களுக்கு அதிகச் சேதத்தையும், தாமதத்தையும் தரவேண்டும். மூன்று, நான் முன்னின்று போரை நடத்துகிறேன். நீ செய்திகளை வேகமாக அனுப்பிக்கொண்டே இரு.-இன்றைய போரில் நம்மை மீறிப் போனாலும், அடுத்த இடத்தில் இவர்கள் தோற்றுத் திரும்ப வேண்டும்!"

    துப்பாக்கி முனைக் கெதிரே குமார் நின்று கொண்டு, செய்திப் பொறுப்பைத் தன்னிடம் விட்டு விட்டானே என்று ராஜ்பகதூருக்குச் சிறிது வருத்தம். என்றாலும், செய்திப் பொறுப்பும் மிக முக்கியமானது என்பதால் அவன் முணுமுணுக்கவில்லை. குமாரை விட உயரத்திலும் பருமனிலும் எவ்வளவோ பெரியவன் ராஜ்பகதூர்; வயதில் மட்டும் இளையவன்.

    நுங்கும் நுரையுமாகப் பொங்கிப் பொருமிக் கொண்டு வந்தது செஞ்சீனரது மஞ்சள் நிறப் படை.

    பாரத வீரர்கள் கண்ணிமைக்காமல், மூச்சுக் காற்றைக் கட்டுப் படுத்திக் கொண்டு, துப்பாக்கி விசைகளின்மீது விரல்களை வைத்த வண்ணம் ஒவ்வொரு விநாடியும் தங்கள் தலைவனின் ஆணைக்குக் காத்திருந்தார்கள். -ஆயிற்று, மிகமிக நெருக்கத்தில் வந்து விட்டார்கள் பகைவர்கள்.

    'டுமீல்' என்று ஒரே ஒரு குண்டு சீனர்களின் பக்கத்திலிருந்து வெடித்து, ஒரு இந்திய வீரனின் தலையை ஒட்டிப் பறந்தது.

    வீரர்கள் அனைவரும் ஆவேசத்துடன் குமாரைத் திரும்பிப் பார்த்தார்கள். 'தலைவன் ஏன் இன்னும் தாமதம் செய்கிறான்'?

    "முட்டாள்!....முட்டாள்!... நீ எந்த உலகத்தி லிருக்கிறாய்?" என்று குமாரின் காதருகில் வந்து கத்தினான் ராஜ்பகதூர். முதலில் குமாரைச் சுட்டுத் தள்ளிவிட்டு, மறுவேலை பார்க்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

    "ஆத்திரப் படாதே ராஜ்! சந்தேகத்தின் பேரில் அவர்கள் சுட்டுப் பார்க்கிறார்கள். இன்னும் அருகில் அவர்கள் நெருங்கிவிட்டால், நம்முடைய ஒவ்வொரு குண்டுக்கும் ஒருவன் பலியாவானில்லையா?" -குமாரின் சமயோகித புத்தி அவனை வியக்க வைத்தது.

    நன்றாக நெருங்கி விட்டது கூட்டம். குமார் சைகை செய்துவிட்டு, தன்னுடைய துப்பாக்கி விசையையும் தட்டி விட்டான். இயந்திரச் சுழல் துப்பாக்கிகள் அந்த மலைக் கூட்டமும் கானகமும் அதிர முழக்கம் செய்தன.

    பனி மலை கிடு கிடுத்தது;கானகம் கதறியது; வெள்ளிப்பனி செவ்விரத்த வெள்ளமாய் உருகிப் புரண்டோடியது; மரண ஓலங்கள் மனித இதயங்களை உலுக்கி எடுத்தன.

    எதிர்பாராத இந்தத் தாக்குதலில் நிலை குலைந்து பதறிய பகைவர்கள் தங்களில் கால் பகுதி வீரர்களைக் கால் மணிப் பொழுதுக்குள் இழந்தனர். என்றாலும், அவர்கள் தங்கள் இழப்பைப் பற்றிப் பொருட்படுத்தியவர்களாகவே தெரியவில்லை. மூர்க்கத்தனத்தோடு மேலும் மேலும் படைகள் முன்னணிக்கு வரத் தொடங்கின. பாரத வீரர்களிலும் பத்துப் பேர்களுக்குமேல், தஙகள் கடமையை நிறைவேற்றிய பெருமையோடு வீர சுவர்க்கம் புகுந்தனர்.

    பாரத வீரர்களின் எண்ணிக்கையும் தெரிந்துவிட்டது அவர்களுக்கு-மலை போன்ற மனிதப் பேரலை ஒன்று ஆர்ப்பரித்துப் பொங்கி வந்தது.

    "கடைசி வீரன் உள்ள வரையில் , அல்லது கடைசிக் குண்டு உள்ளவரையில் சுட்டுத் தள்ளுஙகள்!" என்று கத்தினான் குமார்.

    அது வரையில் செய்திகளைப் பரபரப்போடு அனுப்பிக் கொண்டிருந்த ராஜ்பகதூர், செய்திப்பெட்டியும் துப்பாக்கியுமாகக் குமாரின் அருகில் வநது தானும் சுடத் தொடங்கினான்.

    ஒரு குண்டு, குமாரின் தோளில் பாய்ந்து அவனைக் கீழே தள்ளியது. மற்றொரு குண்டு ராஜ்பகதூரின் செய்திப் பெட்டியைச் சுக்கு நூறாகச் சிதற அடித்தது.

    ராஜ்பகதூர் பாரதப் பகுதியின் படுகளத்தைத் திரும்பிப் பார்த்தான். குமாரைத் தவிர, அனைவருமே விண்ணுலகெய்திவிட்டனர். குமார் மட்டிலும் குற்றுயிராய்க் கிடந்தான்.

    ராஜ்பகதூருக்கு வேறொன்றும் தோன்றவில்லை. பகைவர்களின் கண்களுக்குப் படாமல், அவர்கள் நெருங்குவதற்குள், பர பரவென்று குமாரை இழுத்துக்கொண்டு ஒரு பாறையின் மறைவுக்கு ஓடி வந்தான். அங்கும் அவன் நிற்கவில்லை. குமாரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு, வெறி பிடித்தவன் போல் மேலும் ஓடினான்.

    கால் வழுக்கியது. மள மளவென்று இருவரும் ஒருவரையொருவர் பற்றிக் கொண்டபடியே மலைச்சரிவில் புரண்டார்கள். ராஜ்பகதூருக்கு நினைவு வந்த போது, மலைப்புல் நிறைந்த ஒரு புதருக்குள் இருவரும் ஒன்றாய்க் கிடப்பது தெரிந்தது. குமாரின் மூக்கருகில் கையை வைத்துப் பார்த்தான். வெப்பமான மூச்சுக்காற்று வந்து கொண்டிருந்தது.

    மாலை மயங்கும் நேரம்.தொலை நோக்கிக் கண்ணாடி உடையாமல் இருந்ததால், மலைப்பாதையை உற்றுப் பார்த்தான். நண்பகலில் படைகளுடன் சென்ற சீனர்கள், பின்னணியிலிருந்த பாரதப் படையினரிடம் எஞ்சி யிருநதவர்களில் பாதிப்பேரைப் பறி கொடுத்துவிட்டு, சோர்வும் களைப்புமாக மலையேறிக் கொண்டிருந்தார்கள். பெருமையோடு குமாரின் முகத்தைப் பார்த்துக்கொண்டு, "குமார், நம்முடைய இன்றைய திட்டம் வெற்றி பெற்றுவிட்டது!" என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினான் ராஜ்பகதூர்.

    குமாரின் விழிகள் திறந்து கொண்டன. அவன் புன்னகை பூத்தான். 'நல்ல செய்தியைக் கேட்டு விட்டேன். இனி நிம்மதியாக என்னைச் சுட்டுத் தள்ளிச் சாகவிட்டு, நீ பத்திரமாகத் திரும்பிப் போ!" என்று மெலிந்த குரலில் கூறினான் குமார்.

    "என்ன!- உன்னைச் சுட வேண்டுமா?"

    "முட்டாள்!- இது போர்க் களம்! எனக்கு உதவி செய்ய விரும்பினால் சுட்டுத்தள்ளு!... முடியா விட்டால் நீ மட்டுமாவது இங்கிருந்து போய்த்தொலை!"

    " நீ தான் முட்டாள்;உன் மூளை தான் குழம்பியிருக்கிறது! நீ கட்டாயம் பிழைத்துக் கொள்வாய்."

    "சண்டை போடாதே! உன் முரட்டுத் தனத்துக்கு நான் ஆளில்லை; இது நேரமுமில்லை."

    குமாரைத் தூக்கிக் கொண்டுபோவது என்ற பிடிவாதம் ராஜ்பகதூருக்கு. இது தேவையில்லாத வீண் முயற்சி என்பது குமாரின் எண்ணம். வாய்ச் சண்டை முற்றியதால், அந்த வேகம் தாங்காது மீண்டும் மயக்க மடைந்தான் குமார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் சண்டை யிட்டு மோதிக் கொண்டு தரையில் புரண்ட காட்சியை அப்போது நினைத்துக்கொண்டான் ராஜ்பகதூர்.

    பஞ்சாப் மாநிலக் கல்லூரி ஒன்றுக்கும் சென்னைக் கல்லூரி ஒன்றுக்கும் சென்னை விளையாட்டு மைதானத்தில் 'ஹாக்கி' போட்டி நடந்தது. இருவரும் இரு வேறு கட்சிகளின் தலைவர்கள். மாணவர்களும் பொது மக்களூம் கூடி ஆட்டக்காரர்களை ஆரவாரங்களோடு உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தனர். வட இந்திய மாணவர்களின் தலைவனான ராஜ்பகதூர், பீமசேனனைப் போன்ற உருவத்தோடு, மின்னல் வேகத்தில் அங்குமிங்கும் ஓடி'கோல்'போடப் பார்த்தான். குமார் அதிகமாகப் பரபரப்படையவில்லை. நளினமாக மட்டையால் பந்தைத் தள்ளி விட்டு வெற்றி கொள்ளப் பார்த்தான்.இடைவேளை வரையில் இருபுறமும் 'கோல்' விழவில்லை.

    கடைசிக் கால் மணி நேரத்தில் சென்னை மாணவர்கள் லாவகமாக ஒரு 'கோல்' போட்டு விட்டார்கள். கை தட்டலால் மைதானமே அதிர்ந்தது. ரசிகர்கள் பலர் வெறி பிடித்துக் கூத்தாடினார்கள். இவற்றுக்கிடையில் சில அரை வேட்டூக்க உணர்ச்சிப் பித்தர்கள் "ஒழிந்தது வடக்கு" என்று கூக்குரலிட்டனர்.

    திடீரென்று விளையாட்டில் சூடு பிடித்துக் கொண்டது. ராஜ்பகதூர் பம்பரமாக மைதானம் முழுவதும் சுழன்று, பந்துருட்டிக் கொண்டு ஓடினான். குறுக்கிட்டவர்களிடமிருந்து சாகசத்தோடு பந்தைக் காப்பாற்றினான். பிறகு, கடைசி நிமிஷத்தில் தன் பலமனைத்தும் சேர்த்துச் சென்னைக் கல்லூரிக்கு ஒரு 'கோல்' போட்டான். நீண்ட குழலும் ஊதினார் நடுவர். வெற்றி தோல்வி யின்றி முடிந்தது ஆட்டம்.

    அத்துடன் நிற்கவில்லை விஷயம். ராஜ்பகதூர் 'கோல்' போட்ட சமயம், இடது பக்கத்திலிருந்து குறுக்கே வந்து விழுந்த ஒரு தமிழக இளைஞன் பலமான அடிபட்டுத் தலைகுப்புறப் போய் விழுந்தான்.

    குமாருக்கு கோல் விழுந்து விட்ட ஆத்திரம் வேறு. அத்துடன் ராஜ்பகதூர் வேண்டு மென்றே தங்கள் கட்சிக்காரனை அடித்துவிட்டான் என்ற எண்ணம் வேறு. ஓடிச்சென்று தன்னை மறந்த வெறியில் ராஜின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத ராஜ், ஹாக்கி மட்டையால் அவன் கழுத்தை வளைத்து இழுத்தான். இருவரும் வெறியோடு கட்டிப் புரண்டு உருண்டார்கள். துடிப்பு மிக்க இளம் ரத்தமல்லவா?

    "தந்திரக்கார மதராஸிகள்!... ஜெயிக்க முடியவில்லையே என்ற ஆத்திரம்!" என்று ராஜ்பகதூரின் ஆள் ஒருவன் உளறி வைத்தான்.

    "கோல் போட்டு ஜெயிக்க வக்கில்லை; காலொடிக்க வந்துவிட்டான்.- வடக்கத்தி முரட்டுத் தனம் இங்கே சாயாது!" என்றான் மறத் தமிழன் ஒருவன்.

    வாய்ச் சண்டை முற்றி, சூடான பத்திரிகைகளின் பரபரப்பான செய்தி வளர்ந்து, மேடை முழக்கங்கள் வரையில் முற்றி விட்டது விவகாரம்.

    விளையாட்டு கசப்பு நிறைந்த வினையாக முடிந்து விட்டது. இருவருக்குமே சில்லறைக் காயங்கள்.

    நெருக்கடி நிலையின் போது, திடீரென்று இருவரும் ராணுவ முகாமில் சந்தித்தபோதுதான், இருவரும் ராணுவத்தில் சேர்ந்திருப்பதைப் புரிந்து கொணடார்கள். பழைய மனக் கசப்பின் தழும்பு ஒரு மூலையில் இருவருக்கும் இருந்துகொண்டுதான் இருந்தது. என்றோ நடந்த விஷயங்கள் இவை.

    இருள் பரவத் தொடங்கியவுடன் துப்பாக்கியைத் தூக்கித் தோளில் மாட்டிக்கொண்டு, குமாரைப் பற்றித் தூக்குவதற்கு முயன்றான் ராஜ்பகதூர்.

    "வேண்டாம், என்னை விட்டு விட்டுப் போ!... வீணாய் நீ அவதிப்பட வேண்டாம். வழியில் எந்தச் சீனனாவது எதிர்ப்பட்டால், எனக்காக நீயும் சாக வேண்டி வரும்... போ ராஜ்பகதூர்!"..மன்றாடினான் குமார்;கெஞ்சினான்.

    "குமார், உன் மீது எனக்குப் பாசமில்லை; பற்றுதலும் கிடையாது. இந்தத் தேசத்துக்கு ஒரு வீரனின் உயிர் இந்த நேரத்தில் மிக மிகத் தேவையானது. என் கடமையில் நீ குறுக்கிட வேண்டாம்."

    பிடிவாதமாகக் குமாரைத் தூக்கித் தோள்மீது சாய்த்துக் கொண்டு, இரவின் மங்கலான நிலவில் தனது பயணத்தைத் தொடங்கினான் ராஜ்பகதூர். நிலவின் வெளிச்சத்தையும் மறைப்பதற்குப் பனி மழை வந்து சேர்ந்தது. கண்களுக்குப் பாதை புலப்படவில்லை. பனிக் கூடாரத்துக்குள் அகப்பட்டது போன்ற பிரமை.

    ஆனால் எந்தத் தடைகளும் ராஜ்பகதூரின் உறுதியைக் குலைக்கவில்லை. உள்ளத்திலே வைராக்கியம், எண்ணத்திலே நற்செயலின் பூரிப்பு, தன் தாய்த் திரு நாட்டின் சகோதரனைக் காப்பது தேச பக்தி என்ற லட்சியம் இவ்வளவும் அவனுடைய நடைக்கு வேகம் தநதன.

    விண்ணிலிருந்து பனி மழை;அவன் உள்ளத்திலிருந்து அதை விரட்டும் நெருப்பு. வெளியில் இருட்டு;உள்ளுக்குள் பேரொளி. உடலில் பசி, களைப்பு, சோர்வு; நெஞ்சில் நிறைவு, தெம்பு, உற்சாகம்! அவனை அந்தக் கோலத்தில் யாரும் கண்டால், வெறி பிடித்த பேய் என்றோ, பிசாசு என்றோதான் சொல்வார்கள்.

    அவன் தோளில் கிடந்த குமார் இரவெல்லாம் ஏதேதோ பிதற்றினான். குமாரின் உடல் நெருப்பாய்த் தகிப்பது, அவனுக்குக் கடுமையான ஜுரம் என்பதை ராஜ்பகதூருக்கு, உணர்த்தியது. ஒரு வகையில் அவன் கவலைப்பட்டாலும் இறந்து போகாமல் உயிரோடிருக்கிறானே என்று ஆறுதல் கொண்டான்.

    இரவு முழுதும் அவன் நடந்த நடை, அந்தப் பயங்கரமான காடுகளுக்குத் தெரியும்; தூரத்துப் பனி மலைகளுக்குத் தெரியும்; இரக்கமில்லாமல் கொட்டிய கடும் பனிக்குத் தெரியும். ஆனால் குமாருக்குத் தெரியாது.

    பொழுதும் விடிந்தது. அருவிக் கரையும் வந்தது. அதன் பாலத்தைப் பாரத வீரர்கள் தகர்த்திருந்தார்கள். முதல் நாள் அங்குக் கடுமையான போர் நடந்திருப்பதற்கான சின்னங்கள் சுற்றுப்புற மெங்கும் சிதறிக் கிடந்தன.

    'அருவியைத் தாண்டிச் செல்வது எப்படி?' என்ற கேள்வி எழுந்தவுடன், திடீரென்று ராஜ்பகதூரிடமிருந்த வலிமையனைத்தும் மறைந்து விட்டன. தட்டுத் தடுமாறித் தன் தோள் சுமையைக் கிழே இறக்கி வைத்தான். தோள்களிரண்டும் வீக்கம் கண்டு இசி வெடுத்தன. பனியால் பாளம் பாளமாக வெடித்திருந்தது உதடு. கண்கள் சிவந்து, பார்வை மங்கி, எரிச்சல் கண்டது. - ஒவ்வொரு மயிர்க்காலிலும் ஒரே வலி, வேதனை, குடைச்சல்.

    "கடவுளே, குமாரைக் கொண்டு சேர்க்கும் வரையிலாவது என்னைக் காப்பாற்று. பாரத தேசத்தின் மண்ணில் பிறந்தவன் அவன்!" என்று, தன்னை மறந்து வாய்விட்டு அலறினான் ராஜ்பகதூர். குமாரின் செவிகளில் நண்பனின் ஓலம் விழுந்து விட்டதா? கண்களைத் திறந்தான் குமார்; புன் முறுவல் பூக்க முயன்றான்.

    "பைத்தியக்காரா!..எப்படியாவது தனியாகப் போய், குறுகலான இடத்தில் அருவியைத் தாண்டி விடு!...நான் சொல்வதைக் கேட்கமாட்டாயா ராஜ்?"- குமாரின் குரல் ஏக்கத்தோடு ஒலித்தது.

    பெற்ற தாய் ஒருத்தி தன் புதல்வனை உற்றுப் பார்ப்பதுபோல் குமாரைக் கனிவுடன் உற்றுப் பார்த்தான் ராஜ் பகதூர்.

    "குமார், எனக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. சகோதரர்களும் இருக்கிறார்கள். ஆனால் உனக்கொரு மனைவி இருக்கிறாள். இந்த மாதத்தில்தான் நீ தகப்பனாகப் போகிறாய் என்றும் கேள்விப்பட்டேன். நான் இறந்தால், இந்த தேசம் ஒரு வீரனை மட்டும் இழக்கும். ஆனால் நீ?...நீ ஒரு கணவன், ஒரு தந்தை, ஒரு வீரன்!... உனக்குக் கணக்குப் போடத் தெரியுமே? தேசத்துக்கு நம் இருவரில் இப்போது யார் முக்கியம் என்று கணக்குப் போட்டுப் பார்!"- ராஜ்பகதூர் தெளிவாக, உறுதியோடு, உருக்கமாகப் பேசினான்.

    "என் குடும்பத்தைப் பற்றி....?"

    "உன் நண்பன் ஆறுமுகத்திடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்."

    குமாருக்கு வாயடைத்துப் போய் விட்டது. நிறை மாதக்காரியான அவன் மனைவி, அவனது நகரம், காவேரிக்கரை எல்லாம் நினைவுக்கு வந்தன. அத்துடன், சென்னையில் நடை பெற்ற மாணவர் ஹாக்கிப் பந்தயம், இருவரும் சண்டையிட்டு மண்டைகளை உடைத்துக்கொண்டது, வடக்கு- தெற்கு வீண் விவகாரம், எல்லாமே மனத் திரையில் சுழன்றன.

    குமாரின் கண்கள் குளங்களாக மாறின. மெல்ல மெல்லத் தன் கரங்களை உயர்த்தி ராஜ்பகதூரின் கழுத்தை வளைத்துக் கொண்டான். அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. "தம்பி, தம்பி! ...எனக்கு உடன் பிறந்தான் யாருமில்லை... நீ... நீதான் அவன்..தம்பீ!"-பேச்சுத் திணறி மீண்டும் மயங்கி வீழ்ந்தான் குமார்.

    மீண்டும் அருவிக் கரையோரமாகவே இந்தப் புனித யாத்திரை தொடங்கியது. கனவும் நினைவுமற்ற ஏதோ ஒரு நிலையில், ராஜ்பகதூரின் தோளில் தொங்கிக்கொண்டிருந்தான். அப்போது சர சரவென்று யாரோ காட்டுக்குள் ஓடும் சத்தம் கேட்டது. ராஜ்பகதூர் குமாரைத் தூக்கிக்கொண்டே ஓடினான்.

    சுய நினைவு வந்தபோது குமாருக்கு உடல் முழுவதும் கட்டுக்கள் போட்டிருந்தார்கள். முகாமின் ராணுவ ஆஸ்பத்திரி அது. குமாருக்குப் பக்கத்துக் கட்டில்களில் காயம்பட்ட வீரர்கள் சிலர் கிடந்தார்கள். அருகில் குமாரின் நண்பன் ஆறுமுகம் நின்றுகொண்டிருந்தான்.

    "ராஜ்!..ராஜ் எங்கே?"என்று கேட்டான் குமார். "நமது காவல் வீரர்கள் அருவிக் கரையைத்தாண்டி வந்த போது, அங்கே உன்மீது விழுந்து கிடந்தான் ராஜ் பகதூர். உடலில் உயிர் இல்லை. அவனுக்குப் பத்தடி தூரத்தில் ஒரு சீனனின் சடலமும் கிடந்தது. இருவரும் ஒரே சமயத்தில் ஒருவரை யொருவர் சுட்டுக் கொண்டிருக்க வேண்டும். காட்டில் ஒளிந்துகொண்டிருந்த சீனர்கள் சிலரையும் நம் வீரர்கள் சுட்டிருக்கிறார்கள்"

    குமார் எங்கோ தொலை தூரத்தில், கூடாரத்துக்கப்பால் தெரிந்த கானகத்தை ஊடுருவிப் பார்த்தான். ஒன்றுமே பேசவில்லை அவன். கண்ணீர் அவன் இரத்தத்துடன் இரண்டறக் கலந்துவிட்டது.

    "வீட்டிலிருந்து நல்ல செய்தி வந்திருக்கிறது" என்று கூறி, ஒருகடிதத்தைக் குமாரிடம் நீட்டினான் ஆறுமுகம். அவன் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், அது குமாரையே உரித்துக் கொண்டு வந்திருப்பதாகவும் செய்தி, நீண்ட பெருமூச்சு விட்டு,"ஆறுமுகம், நான் சொல்வது பொல் ஒரு பதில் எழுது" என்றான் குமார். " என் மகனுக்கு ராஜ்பகதூர் என்று பெயர் வைக்கச் சொல்... அணுவளவு ஆறுதல், அவன் பெயரை அடிக்கடி கூப்பிடுவதாலாவது எனக்கு ஏற்படும்."

    தமிழ்ப் பெயர் இல்லையே இது?" என்று குறுக்கிட்டான் ஆறுமுகம்.

    வேதனையோடு சிரித்தான் குமார். "ராமன், கிருஷ்ணன், கைலாசம் என்றெல்லாம் தமிழ்நாட்டில் காலங்காலமாகப் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்களே, ஏன் தெரியுமா? ஆயிரம் வேற்றுமைகளுடைய நம் தேசத்தில், அடிப்படையான ஒரு பண்பாடு வலிமையாக இழையோடுகிறது. எனக்கும் உனக்கும் இமயமலை சொந்தம். அதனால் நாம் அதைக் காக்க உயிர் கொடுக்க வந்திருக்கிறோம். அது போலவே கன்யாகுமாரியும் ராமேஸ்வரமும் ராஜ்பகதூருக்குச்சொந்தம்.- ராஜ்பகதூர் என் ரத்தத்தின் ரத்தம்; உயிரின் உயிர். அவனும், நானும், நாமும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்...நெடுங்காலத்து உறவு இது. - நீ எழுது!"

    ஆறுமுகத்தின் கண்களிலும் நீர் பொங்கியது. அவன் மள மளவென்று கடிதம் எழுதினான். அப்போது குமாரின் வாயிலிருந்து பாரதியின் பாடல் உருக்கத்துடன் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

    "சண்டை செய்தாலும் சகோதரனன்றோ? சகோதரனன்றோ? சீனத்தராய் விடுவாரோ? ...சீனத்தராய் விடுவாரோ!....."'
     


    2. அருவிக்கரை அழகி.


    சிங்காரவேலு என்ற வாசகர் எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார், அதைக் கடிதம் என்று சொல்வதைவிடக் கதை என்றே சொல்லவேண்டும். அவருடைய சொந்த அனுபவக் கதை அது. ஆனால்,முழுமையான கதையல்ல; முக்காலே மூன்று வீசம் கதை. அதன் முடிவை அவரிடம் நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்போல் இருந்தது. கடிதம் எழுதி அவரை வரவழைத்தேன்.

    சிங்காரவேலுக்குச் சுமார் இருபத்தைந்து வயதிருக்கும். நல்ல சிவப்பு; நடுத்தரமான உயரம்; நறுக்கு மீசை. மிகவும் வெட்கப்பட்டுக் கொண்டே என் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். இரண்டாவது உலகப் போரில் கலந்து கொண்டவர். பர்மா எல்லையில் ஒரு மலைக்காட்டுப் பிரதேசத்தில் நடந்த காதல் நிகழ்ச்சியை அவர் எழுதியிருந்தார். மலைச் சாதிப் பெண் லியோ என்ற அழகிக்கும் அவருக்கும் ஏற்பட்ட அன்பின் தொடர்பு அப்படி அவரை எனகுக் கதை சொல்லத் தூண்டி விட்டதாம்.

    "ஆமாம், லியோவை நீங்கள் கடைசியாகச் சந்தித்த பிறகு அவளுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டேன்.

    " அதுதான் எனக்கும் தெரியவில்லை" என்றார் சிங்காரம். " என்னை அந்தக் கிராமத்திலிருந்து இழுத்துக்கொண்டு வந்து விட்டார்கள். சரியாக ஒரு வருஷத்திற்குப் பிறகு ராணுவத்திலிருந்து எனக்கு விடுதலை கிடைத்தது. திரும்பவும் நான் இனிமேல்தான் அங்கே புறப்படப் போகிறேன். தந்தி, தபால் முதலிய எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாத பயங்கரமான காட்டுப் பிரதேசம் அது. ஆனால், அங்கே போய் லியோவின் நிலைமையைத் தெரிந்துகொள்ளாதவரை எனக்குத் தூக்கம் வராது."

    அந்த இளைஞரின் பிடிவாதம் எனக்கு வியப்பைத் தந்தது. எங்கோ ஓர் இடத்தில், அடர்ந்த கானகத்துக்குள்ளே, மலர்ந்த மலரின் நறுமணம் அவரை விடாமல் சுற்றி வளைத்துக்கொண்டிருக்கிறதே! திரும்பவும் தமிழ் நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டிப் பர்மாவின் எல்லைக்குப் போகப் போகிறாரா?

    "நீங்கள் அங்கே போவது உண்மையானால், போய் வந்த பிறகு எனக்குக் கடிதம் எழுதுங்கள். அல்லது நேரில் வந்து பாருங்கள்" என்றேன். கதை படிக்கும் வாசகர்களுக்கு எப்படி அதன் முடிவைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் உண்டோ, அத்தனை ஆர்வம் எனக்கும் உண்டல்லவா?

    சிங்காரவேலுவின் கடிதப் பகுதியை அவர் நேரடியாகச் சொல்வதையே என் எழுத்துக்களில் தருகிறேன். முதலில் அந்த முக்காலே மூன்று வீசக் கதைப் பகுதியைக் கொடுத்து விட்டால் அவர் திரும்பி வந்தவுடன் அவரது முழுக் கதையையும் கூறிவிடலாம் அல்லவா?

    சிங்காரவேலு கூறுகிறார்:

    என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. சண்டையில் சேர்ந்தேன். பல ஊர்கள் சுற்றிப் பல தண்ணீர் குடித்து, பல வீரச் செயல்கள் செய்ய வேண்டு மென்று எனக்கொரு ஆசை. படங்களில் 'ஸ்டன்டு'களைப் பார்த்துப் பார்த்து எனக்கும் பல 'ஸ்டன்டு'கள் நடத்த வேண்டுமென்ற துடிப்பு. பட்டாளத்தில் புகுந்தால் இதற்கெல்லாம் இடம் கிடைக்குமல்லவா? சேர்ந்து வைத்தேன். துப்பாக்கி பிடிக்காத கையும் ஒரு கையா? சண்டை போடாத மனிதனும் ஒரு மனிதனா?

    நான் ஓரளவு படித்துத் தொலைத்திருந்ததால் பட்டாளத்தில் சேர்ந்ததும் எனக்குக் குமாஸ்தா வேலைதான் கொடுத்தார்கள். என்றாலும் பரேடுகள், பயிற்சிகள் துப்பாக்கி பிடித்தல், ஓடுதல், ஒளிதல், முன்னேறுதல், பின்வாங்குதல் முதலிய எல்லா விவகாரங்களும் அங்கே உண்டு. 1941-ல் இந்தியாவில் பயிற்சிகளை முடித்தபின் 1942-ல் பர்மா போர்முனைக்குப் போய்ச் சேர்ந்தேன்.

    நங்கள் இந்தியாவிலிருந்து பர்மாவை நோக்கி முன்னேறும்போது, பர்மாவில் இருந்த எங்கள் துருப்புக்கள் பர்மாவை ஜப்பானியரிடம் கோட்டை விட்டு விட்டுப் பின்வாங்கத் தொடங்கின! எதிரிகளை எதிர்ப்பதற்குப் பதிலாக நாங்கள் எங்களைச் சேர்ந்த வீரர்களையே எதிர்கொண்டழைத்தோம். ஆகவே நாங்கள் முன்னேற்றத்தை நிறுத்திக்கொண்டு இந்திய எல்லைக்குள் பத்திரமாக இருந்தோம்.

    எங்களுக்கு அதே இடத்தில் தங்கி எல்லையைப் பாதுகாக்கும்படி மேலிடத்து உத்தரவு வந்தது. ஜப்பானியரைத் தடுத்து நிறுத்துவதாகப் பெயர் பண்ணிக்கொண்டு நாங்கள் வேளா வேளைக்கு எங்கள் சாப்பாட்டையும் பயிற்சிகளையும் கவனித்து வந்தோம். ஜப்பானியரைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேவையே எங்களுக்கு வரவில்லை. விவரம் தெரியாமல் அந்தக்குட்டை மனிதர்கள், தாங்கள் பிடித்த நாடுகளையே கட்டிக் காக்கத் தெரியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

    ஆனால், அவர்களது அடுத்த இலக்கு இந்தியா என்பதற்காக, அவ்வப்போது சின்னஞ்சிறு சலசலப்பையும் எதிரிகள் ஏற்படுத்தாமல் இல்லை. கண்ணாமூச்சி விளையாட்டைப் போல் பறந்து வந்து குண்டுகளை வீசினார்கள். காடுகளில் ஒளிந்துகொண்டு கொரில்லா மிரட்டு மிரட்டினார்கள்.

    தளவாடச் சாமான்களும் உணவுப் பொருள்களும் கல்கத்தாவிலிருந்து லாரிகளில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. அவற்றைச் சேமித்துக் கொண்டு எல்லைப் பிராந்தியத்தில் காவல் காத்த படைகளுக்குத் தேவையானவற்றை அனுப்பிக் கொண்டிருந்தோம். காவல் படைகளுக்கு அப்போது போர்க் கருவிகள் தேவைப்படவில்லை. சாப்பாட்டுச் சாமான்கள் மட்டுமே தினசரி ஒழுங்காகக் காலியாகிக் கொண்டிருந்தன!

    சுறுசுறுப்பை நாடிச் சென்று, சோம்பலை வளர்த்துக் கொண்டிருந்த இந்தச் சமயத்தில்தான், எனக்குச் சுறுசுறுப்பூட்ட வந்தாள் பேரழகி லியோ. இயந்திரம்போல் உப்புச் சப்பில்லாமல் ஓடிக்கொண்டிருந்த நாட்கள் திடீரென்று எனக்கு ஒளி வீசி மகிழ்வூட்டத் தொடங்கின.

    நாங்கள் தங்கியிருந்தது நான்கு புறங்களிலும் மலைகளால் சூழப்பெற்ற அழகியதொரு பள்ளத்தாக்கு. ஐந்தாறு மைல்களில் ஒரு சில கிராமங்கள் சிதறிக் கிடப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள். மலைச்சாதி மக்கள் அங்கே இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்ந்தார்களாம். அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

    சாமான்களை லாரிகளில் ஏற்றி இறக்குவதற்காக அடுத்த கிராமத்திலிருந்து வேலையாட்கள் வரவழைக்கப்பட்டார்கள். சுமார் இருபது வீடுகள் உள்ள அந்தக் கிராமம் முழுவதுமே எங்களுக்காக உழைக்க முன் வந்தது.

    கிராமத்தின் தலைவன் ஷியானுக்கு அரைகுறையாக ஆங்கிலம் பேசத் தெரியும். மணிபூரில் சில ஆண்டுகள் ஏதோ ஒரு வெள்ளைக்காரன் வீட்டில் காவலாளியாக இருந்தவனாம். இப்போது நாற்பதுக்கு மேல் வயதாகி விட்டது. அவனுடைய உதவியால் அந்தக் கூட்டத்தை ஒருவகையாகச் சமாளிக்கத் தொடங்கினோம். கிராமவாசிகள் எல்லோரும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். செம்பொன் மேனி படைத்தவர்கள். தலைவன் ஷியானைத் தங்களது தந்தையாகப் பாவித்து நடந்துகொண்டார்கள்.

    முதல் நாளின் முதற்பார்வையிலேயே அத்தனை பேர்களிலும் லியோ தனித் தன்மை வாய்ந்த பெண்ணாகத் தோன்றினாள். ஒரு முறை எதேச்சையாகப் பார்த்துவிட்ட என் கண்கள் ஒன்பது முறை அவளைப் பார்க்கத் தூண்டின.

    வயது பதினெட்டு இருக்கும். தளதளவென்று பளிச்சிடும் பசலைக் கீரைக் கொழுந்து போன்ற தேகம். இடுப்பில் பச்சை நிற லுங்கி கட்டிக்கொண்டு, மேலே கேரள நாட்டுக் கிராமப் பெண்களைப்போல் ஒரு தாவணியைப் போட்டுக் கொண்டிருந்தாள். கைகளில் தந்தத்தால் செய்த வளையல்கள். தலைமுடியை வாரிவி்ட்டு இரு கூறாகப் பிரித்துத் தலையைச் சுற்றிலும் வட்டமாகக் கட்டிக் கொணடிருந்தாள். இடது காதின் அருகே ஏதோ ஒரு காட்டு மலர் இரண்டு இலைகளுடன் சிரித்துக் குலுங்கியது. அவளைப் பார்த்தால் உடலை வளைத்துக் கூலி வேலை செய்யக்கூடிய பெண்ணாகத் தோன்றவில்லை.

    வேலையாட்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்த என் மேலதிகாரி, "ஏன் அந்தப் பெண் அங்கே விளையாடிக் கொண்டிருக்கிறாள்?" என்று என்னிடம் சற்றுக் கோபமாய்க் கேட்டார்.

    நானும் உடனே கோபத்தை வரவழைத்துக் கொண்டு அந்தக் கிராமத் தலைவன் ஷியானிடம், "அவள் இங்கே வேலை செய்ய வந்திருக்கிறாளா? இல்லை, விளையாட வந்திருக்கிறாளா?" என்று கடுமையான குரலில் கத்தினேன்.

    "விளையாட வந்திருக்கிறாள்" என்று அமைதியாகப் பதிலளித்தான் ஷியான். இதைக் கேட்டதும் என் மேலதிகாரிக்குத் தூக்கிவாரிப்போட்டது.

    "அவள் என்னுடைய செல்ல மகள், சாஹேப்!" என்று சிரித்துக் கொண்டே கூறினான் ஷியான்."நீங்கள் வேண்டுமானால் தலைகளை எண்ணிப் பாருங்கள். எத்தனை பேருக்குக் கூலி உண்டோ" அத்தனைபேரும் வேலை செய்கிறோம். நானும் என் மகனும் வேலைக்கு வந்து விட்டதால், வீட்டில் இருக்கப் பிடிக்காமல் லியோவும் எங்களுடன் வந்திருக்கிறாள். அவளுக்கும் அவள் தாயாருக்கும் ஒத்துக் கொள்ளாது. லியோ பெரிய சண்டைக்காரி,"

    அதிகாரி அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டு மேலே சென்றார். நான் ஷியானிடம் பேச்சுக் கொடுத்து அவன் வாயைக் கிளறினேன். தன்னுடைய மகளின் அருமை பெருமைகளை அடுக்கிக் கொண்டே போனான் அவன். அவள்தான் அந்தக் கிராமத்துக்கே முடிசூடாத ராணியாம். மணிப்புரியில் பெரிய சந்தைகள் கூடும்போது அவளையும் கொண்டு போய் வேடிக்கை காட்டுவானாம். பெண்கள் அந்த நகரத்தில் நடனமாடுவதைப் பார்த்து விட்டால், அதே நடனத்தை வீட்டில் வந்து ஆடிக் காண்பிப்பாளாம் லியோ. அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளை அந்தச் சுற்று வட்டாரத்தில் எங்குமே கிடையாதாம். கிராமத்தில் எல்லோருமே அவளைச் "சின்னப் பெண்ணே" என்றுதான் செல்லமாகக் கூப்பிடுவார்களாம்.

    மாலை நான்கு மணிக்கெல்லாம் அன்றைய வேலை முடிந்தது. மலைச் சாதியினரை உற்சாகப் படுத்துவதற்காக அவர்களுக்குச் சிறிதளவு உணவுப் பொருளைத் தினமும் வழங்கும்படி கூறியிருந்தார் என்னுடைய மேலதிகாரி.

    தேயிலைத் தூள், சர்க்கரை, பால்பொடி இவற்றை முதல்நாள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தனுப்பினேன். கடைசியாக "லியோ" என்று அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டவுடன் அவள் திகைத்து விட்டாள். ஒருகணம் என்னை வெறுத்துப் பார்த்துவிட்டு, ஒரு கரத்தை இடுப்பில் மடித்து வைத்தபடி, மறு கையை ஆட்டி அவள் நடந்து வரும் அழகைக் கண்டபோது, எனக்கு மணிபுரி நாட்டிய மங்கையரின் நினைவு வநதது. எல்லோருக்கும் கொடுத்ததைப் போல் இரு மடங்கு சர்க்கரையையும் தேயிலையையும் அவளிடம் நீட்டினேன்.

    உதட்டைப் பிதுக்கிக் கொண்டே, வேண்டாம் என்று கையசைத்துவிட்டு, அவள் அப்பாவிடம் எதையோ சொல்லிக் கல கலவென்று நகைத்தாள். அவள் பேசிய மொழி எனக்குப் புரியவில்லை."வேலை செய்யாமல் கூலி வாங்கக் கூடாது" எனறு கூறினாளாம் அவள். "அதனால்தான் உனக்கு இரண்டு பங்கு" என்று நான் சொல்லியும் அவள் கேட்கவில்லை. 'சட்'டென்று தன் தகப்பனின் கரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டே வந்த வழியில் திரும்பினாள்.

    மறுநாள் அவள் வருவாளோ, வர மாட்டாளோ என்ற கவலை எனக்கு, ஆனால் தவறாது வந்து சேர்ந்தாள். அவளுடைய தகப்பன் நேரே என்னிடம் வந்து, "லியோவையும் இன்றிலிருந்து வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று வேண்டினான். எனக்கு வியப்புத் தாங்க முடிய வில்லை. "பாவம்! விளையாட்டுப் பெண்ணை ஏன் தொந்தரவு செய்கிறாய்?" என்றேன்.

    "நானா தொந்தரவு செய்கிறேன்? வீட்டுக்குப் போனதிலிருந்து இவள் தொந்தரவைத்தான் என்னால் தாங்க முடியவில்லை. பிடிவாதம் பிடித்து ரகளை செய்து விட்டாள்."

    லியோவின் பெயரையும் பட்டியலில் எழுதிக் கொண்டேன். அவள் வேலை செய்வதைப் பார்த்து அத்தனை கிராம வாசிகளும் ஆச்சரியப்பட்டார்கள்.

    அன்றைக்குச் சாயங்காலம் எல்லோருக்கும் ரொட்டித் துண்டுகள் கொடுத்தனுப்பிய நான் அவளுக்கு மட்டும் கொடுக்கவில்லை. முதல் நாள் என்னை அலட்சியம் செய்தவளை, சீண்டி விட்டு வேடிக்கை பார்க்க நினைத்தேன். எல்லோருக்கும் கொடுத்து முடிக்கும் வரையில் ஒரு ஓரமாக நின்றுகொண்டு இருந்தவள், கடைசியாக வந்து என் எதிரில் நின்றாள். மொழி தெரியாத படியினால், 'உனக்கு இன்றைக்குக் கிடையாது' என்பது போல் குறும்புச் சிரிப்புச் சிரித்தேன். ஏக்கத்துடன் ஒருகணம் என்னைப் பார்த்துவிட்டு, வேகமாகத் திரும்பி நடந்தாள்.

    "லியோ!...ஏ,லியோ!...ஏ, லியோ!"

    திரும்பிப் பார்த்தாள்,வரச்சொல்லித் தலையசைத்தேன். தலையைக்குனிந்து கொண்டே என்னிடம் வந்தாள்.

    "இந்தா!"- ஒரு முழு ரொட்டியை நான் அவளிடம் நீட்டியபோது அவள் கரங்களும் நீண்டன. வாங்கிக் கொண்டு நிதானமாகத் தன் முகத்தை உயர்த்தி என்னை நோக்கினாள். முதல் நாள் சிரித்த ஏளனச் சிரிப்பு இப்போது அவளிடம் இல்லை. கண்களின் ஓரங்களில் இரு நீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன. 'இந்த அன்புக்காகத்தானே நான் உங்களிடம் கூலி வேலை செய்ய வந்தேன்?' என்று அவள் தன் கண்களால் கூறுகிறாளா?

    காட்டுப் புதர்களின் மத்தியில் அவள் திரும்பி மறையப் போகும் சமயத்தில், என்னை ஒரு முறை நின்று பார்த்துவிட்டு வேகமாக நடந்தாள். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ஒரு இன்ப நாளாக இருந்தது எனக்கு.

    ஆறு மாதங்கள் சென்றன.எங்கள் பட்டாளம் முன்னேறவும் இல்லை; பின் வாங்கவும் இல்லை. இன்னும் ஓரிரண்டு வருடங்களுக்கு நாங்கள் அதே இடத்தில் தங்கியிருக்க நேரிடும் என்று படைத் தலைவர்கள் பேசிக்கொண்டார்கள். நானும் லியோவும் பழகிய விதத்திலும் முன்னேற்றமும் இல்லை; பின் வாங்குதலும் இல்லை. எப்போதாவது என்னைப் பார்த்து அவள் ஒரு புன்சிரிப்பை உதிர்ப்பாள். ஓரிரண்டு வார்த்தைகள் பேசுவாள். அன்றைக்குப் பொழுது அபூர்வப் பொழுதாகக் கழிந்ததாக நினைத்துக் கொள்வேன். சரியாக ஓராண்டு முடிவதற்குள், 'லியோ' ஓரளவு ஆங்கிலமும் இந்தியும் பேசக் கற்றுக்கொண்டாள். பட்டாளத்தில் இந்த இரு மொழிகளும் மணிப் பிரவாளத்தில் அடிபட்டன.

    ஒரு நாள் லியோவும் அவள் தகப்பன் ஷியானும் வேலைக்கு வரவில்லை. ஷியானுக்கு உடல் நலமில்லையாம். மறுநாள் அதற்கு மறுநாளும் கூட அவர்கள் வரவில்லை. எழு வாரமாகியும் ஷியானுக்கு உடம்பு தேறவில்லையாம். லியோவின் தம்பியைத் தனியே அழைத்து, "உன் அக்காள் ஏன் வருவதில்லை?" என்று கேட்டேன். தகப்பனாருக்கு உதவி செய்வதற்காக அவள் வீட்டில் தங்கிவிட்டாளாம். அந்தப் பையனிடம் அவர்களுக்காக உயர்தரமான தேயிலையும் பால் பொடியும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினேன்.

    எங்கள் முகாமிலிருந்து நான்கு மைல் தூரத்தில் அவர்கள் கிராமம் இருந்தது. எப்படியாவது அங்கே போய் அவர்களைப் பார்க்க வேண்டு மென்று எனக்கு ஆவல். ஆனால் அந்தப்பகுதியின் கிராமங்களைப் பற்றிப் பட்டாளத்தார்களிடையே பயங்கரமான பல கதைகள் உலவின. அந்த மலைச்சாதியார்கள் தங்கள் மத்தியில் அன்னியர்கள் யாரும் நடமாடுவதை விரும்புவதில்லையாம். அந்த மலைச்சாதியார் ஆண்-பெண் விகற்பமின்றி மிகவும் சரளமாகப் பழகக் கூடியவர்களாதலால், அதனைத் தவறாகப் புரிநது கொண்ட சில அன்னியர்கள் தங்கள் உயிரையே அவர்கள் மத்தியில் பலி கொடுத்திருக்கிறார்களாம். "வழக்கமாக வெளியாட்கள் அங்கே போவதில்லை; அப்படிப் போனவர்கள் உயிருடன் திரும்பி வந்ததில்லை" என்று கூறிப் புரளியைக் கிளப்பி விட்டார்கள்.

    'என்ன வந்தாலும் சரி; போயே தீருவது' என்ற முடிவுக்கு வந்த நான், லியோவின் தம்பியிடம் என் எண்ணத்தைக்கூறினேன். " நாளைக்கு மறுநாள் எங்கள் முகாமை விட்டு வெளியில் செல்வதற்கு அநுமதி பெற்றிருக்கிறேன். வேலையும் கிடையாது. உங்கள் கிராமத்துக்கு வரலாமா? உன் அப்பாவைக் கேட்டு வா" என்று சொல்லி அனுப்பினேன்.

    லியோவின் தம்பியின் பெயர் லம்குப்பா. குறித்த நாளில் அவனே என்னை அழைத்துக்கொண்டு போக வந்துவிட்டான். எதற்கும் முன் யோசனையுடன் தற்காப்புக்காக என் கைத் துப்பாக்கியோடு கிளம்பினேன். இறக்கமும், ஏற்றமும், வளைவுகளும் கொண்ட மலைக் காட்டுப் பாதை, சில இடங்களில் விசாலமாகவும், சில இடங்களில் குறுகலாகவும் இருந்தது. சில இடங்களில் குன்றுகளின் வழியாகவும் புதர்களுக்குள்ளும் நாங்கள் நடந்து சென்றோம்.

    மூன்று மைல்கள் கடந்த பின்னர் ஒரு பெரிய அருவிக்கரை யோரத்துக்கு நாங்கள் வந்தோம். குன்றின் உச்சியைப் பிளந்துகொண்டு குதித்தோடிப் பாய்ந்தது அருவி. அதிலிருந்து புகை மண்டலம் போல் எழுந்த நீர்த்துளிகளில் சூரியனின் கதிர் ஏழு வர்ணங்களில் வானவில்லாய்ப் பிரதிபலித்தது. மெய்மறந்து நின்றுவிட்டேன். முரட்டுப் பட்டாளத்தானாகிய என்னைக்கூட அந்த இடம் கவிஞனாக மாற்றிவிடும்போல் தோன்றியது.

    "அதோ!"என்று மலையடிவாரத்தை நோக்கிச் சுட்டிக் காட்டினான் லம்குப்பா. அங்கே கூரை குடிசைகளின் சிறு கூட்டம் ஒன்று தெரிந்தது.வட்டக் குடைகளை நட்டு வைத்தாற்போல் சுமார் இருபது வீடுகள். தரையிலிருந்து வீடுகள் எழும்பாமல், பரண்களைப்போல் மரக் கால்களின் மேல் குத்துக் குத்தாக நின்றன. பையனிடம் விசாரித்தேன். காட்டு மிருகங்கள் இரவு வேளைகளில் நடமாடக் கூடுமாதலால், உயரத்தில் மரத்தளங்கள் போட்டு, குடிசைகள் கட்டி வசிப்பது அவரகள் வழக்கம்.

    "ஓஹோ!..ஓஹோ!... என்று ஒரு தேன் குரல் மலைச்சரிவிலிருந்து அபூர்வ ராகம்போல் ஒலிக்கத் தொடங்கியது. உற்றுப் பார்த்தேன். கோவேறு கழுதையின் மேல் உட்கார்ந்துகொண்டு உல்லாசமாக ஆடி அசைந்த வண்ணம் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தாள் லியோ. அவளுடைய தம்பி கைகொட்டிச் சிரித்தான். "பாருங்கள், அந்தச் சின்னப் பெண் உங்களைப் புது மாப்பிள்ளையாக்கி விட்டாள்!" என்று கேலி செய்தான். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இதற்குள் லியோ எங்கள் அருகில் நெருங்கி, தான் கழுதையிலிருந்து இறங்கிவிட்டு, என்னை ஏறிக்கொள்ளச் செய்தாள்.

    "பார்த்தீர்களா! பர்த்தீர்களா! புது மாப்பிள்ளையை வரவேற்பதற்குத்தான் நாங்கள் கழுதையுடன் ஊர் எல்லைக்கு வருவோம்" என்று கூறினான் லம்குப்பா. எனக்குப் பெருமை தாங்கவில்லை. "உண்மையா லியோ?"என்று கேட்டேன். அவள் முகம் நாணத்தால் சிவந்தது. ஓரக் கண்களால் அவள் என்னை நோக்கிவிட்டுக் கழுதையைப் பிடித்துக்கொண்டு வேகமாய் நடந்தாள்.

    லியோவின் வீட்டு மரப் படிகளில் அவள் தகப்பனும் தாயாரும் என்னை எதிபார்த்துக் கொண்டிருந்தார்கள். "சாஹேப், உங்களுக்கு என்மீது இத்தனை பிரியமா?" என்று கேட்டான் ஷியான். அவன் மனைவி, " நீங்கள் வருவதாய்க் கேள்விப்பட்டவுடனேயே இவருக்கு உடம்பு குணமாகிவிட்டது" என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

    விருந்து மிகவும் பலமாக இருந்தது. அரிசியிலிருந்து இறக்கிய ஒருவகைப் பானத்தைக் கிண்ணத்தில் ஊற்றிக் கொடுத்தார்கள். பச்சை மூங்கில் குழாயில் வேகவைத்த ஒரு வகைச் சர்க்கரைப் பொங்கலைப் பரிமாறினார்கள். அதற்குப் பெயர் மூங்கில் சோறாம். இன்னும் பலவகை உணவுகள் என் எதிரில் வந்தன. முடிந்தவரையில் ஒரு கை பார்த்தேன். லியோவின் வீட்டு முதல் விருந்தல்லவா?

    சாப்பாட்டுக்குப் பிறகு சிறிது நேரம் ஷியானுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, விடை பெற்றுக்கொண்டேன். "இரண்டுநாள் கழித்து வழக்கம்போல் நானும் லியோவும் வேலைக்கு வருகிறோம்" என்று ஷியான் என்னிடம் கூறி "அம்மா! சின்னப் பெண்ணே! விருந்தாளியை வழியனுப்பிவிட்டு வா" என்றான் லியோவிடம்

    தன்னை நன்றாகச் சீவி சிங்காரித்துக் கொண்டு என்னுடன் கிளம்பினாள் லியோ. தலையைச் சுற்றியிருந்த பின்னல் முழுவதும் ஒரே மலர் மயமாக விளங்கியது. இளம் பச்சை 'சில்க்'கில் மார்புத் துண்டும், பச்சை லுங்கியுமாக வெளியில் வந்தாள். மணிப்புரிக் கடைகளில் அவள் அப்பா வாங்கிக் கொடுத்த கழுத்தணிகளும் வளையல்களும் அவள் அழகுக்கு அழகு செய்தன. கிராமத்தின் எல்லை வரையில் என்னைக் கழுதைமீதேற்றிவிட்டு, தான் மட்டும் நடந்து வந்தவள், பிறகு எனக்கு முன்னால் ஜம்மென்று ஏறி உட்கார்ந்துகொண்டாள். அருவிக் கரை அருகில் நெருங்க நெருங்க அவள் உள்ளமும் நெகிழ்ந்து கொடுத்து உருகத் தொடங்கிவிட்டதோ என்னவோ! மிக மெல்லிய இனிய குரலில் உல்லாசமாகப் பாட்டிசைக்க முற்பட்டாள்.

    என் மனம் அதற்கு முன்பாகவே பாகாய்க் கசிந்து சொட்டத் தொடங்கியது. கழுதையின்மேல் எனக்கு முன்னால் அவள் உட்கர்ந்தவுடனேயே அது என்வசம் இல்லை. கோவேறு கழுதை அப்போது செங்குத்தான ஏற்றத்தை கடந்துகொண்டிருந்ததால், அவளை யறியாது அவள் என்னுடைய மார்பின்மீது சாய்ந்து வரவேண்டி யிருந்தது. இதையெல்லாம் அவள் சிறிதேனும் விகற்பமாக நினைத்ததாய்த் தெரியவில்லை. மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருந்தவள் சிறுகச் சிறுகக் குரலை உயர்த்தி வானத்தின் உச்சிக்கு எட்டவிட்டாள். நான் என்னை மறந்தேன். ஏதோ ஓர் இனம் புரியாத உலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பதாக எனக்கு எண்ணம்.

    அதே நிமிஷத்தில் அவளிடம் என் உள்ளத்தைத் திறந்து காட்டிவிட வேண்டுமென்று தோன்றியது. ஆயிரம் ஆயிரம் சொற்கள் என் தொண்டைவரையிலும் அலை மோதிவிட்டுப் பின்னால் சென்றன.'லியோ! என் உயிருக்குயிரான லியோ! நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது! உன்னைக் கல்யாணம் செய்துகொண்டு உங்கள் கூட்டத்தாருடன் கலந்து விடுகிறேன். அல்லது நீ என் மனைவியாகி, என்னருமைத் தமிழ்நாட்டுக்கு என்னுடன் வந்துவிடு! இரண்டில் நீ எதைச் செய்கிறாய்? முடிவு உன்னுடையது. என்னை மணந்து கொள்வதற்கு உனகுப் பரிபூரண சம்மதமா?'

    லியோவின் பாட்டு 'டக்'கென்று நின்றவுடன், "லியோ!" என்று பதற்றத்துடன் அவளது தோள்களைப் பற்றினேன். சட்டென்று திரும்பி என் முகத்தைப் பார்த்தாள். அவளுடைய பார்வையில் இத்தனை கொடூரமா? நான் சொல்ல நினைத்த வார்த்தைகள் எனக்குச் சதி செய்துவிட்டன. தோளின் பிடியைப் பயந்துபோய் இறுக்கமாக்கிக்கொண்டே,'லியோ!...லியோ..." என்று தடுமாறிக்கொண்டே இருந்தேன்.

    அவள் என்ன நினைத்தாளோ? கழுதை மேலிருந்தவள் கீழே குதித்துக் காளிதேவியாக மாறிவிட்டாள். கண்களை உருட்டி விழித்துக்கொண்டு, தலையில் சுற்றியிருந்த மலர் மாலையைப் பிய்த்து என் முகத்தில் வீசினாள். "நாட்டு மனிதர்கள் கேவலமானவர்கள்; சுயநலக்காரர்கள்; மரியாதை கெட்டவர்கள்" என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்டிநாள்.

    என்னுடைய வாய் அடைத்துக்கொண்டது. 'தப்பாக நினக்காதே! என்னை மணக்க உனக்குச் சம்மதமா என்றுதான் கேட்கிறேன். பிறகு ஏன் எனக்குப் புது மாப்பிள்ளைக் குச் செய்யும் உபசாரமெல்லாம் செய்தீர்கள்? 'என்று கேட்க வேண்டுமென்று என் மனம் துடித்தது. ஆனால் மனத்தின் துடிப்புக்கு வாய் ஒத்துழைக்கவில்லை. பயத்தால் ஏதேதோ உளறினேன். நடந்தது அவ்வளவுதான். கழுதையின் மேலிருந்த என்னைத்தன் கரங்களால் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு, அதைத் திருப்பிக்கொண்டு வந்தவழியே நடந்தாள் லியோ. சோர்ந்துபோய்க் கைத் துப்பாக்கியை இடுப்பிலிருந்து எடுத்துக்கொண்டு முகாமை நோக்கி நடந்தேன்.

    இரண்டு நாள் கழித்து அவள் தந்தையும் தம்பியும் மாத்திரமே வேலைக்கு வந்தார்கள். லியோ என்னை ஏமாற்றி விட்டாள்.' நாளை வருவாள், மறுநாள் வருவாள்' என்று மேலும் ஒரு வாரம் பொறுத்திருந்தேன்; வரவில்லை. மெல்ல அவளுடைய தம்பியை அழைத்து, லியோவிடம் தனியாகக் காரணம் கேட்டு வரச் சொன்னேன். அடுத்த நாள் காலையில் அவன் என்னிடம் வந்து, "அவளுக்கு உங்கள்மேல் கோபமாம்; அதனால் தான் வரவில்லையாம்" என்றான். ஆனால் தினந்தோறும் அவள் என்னைப் பற்றி அவனிடம் கேட்கத் தவறுவதில்லையாம். அந்தக்காலத்துக் கதைத் தலைவனுக்குத் தூது சொல்லத் தோழி கிடைத்ததுபோல், எனக்கு அவள் தம்பியான தோழன் கிடைத்தான். அவனிடம் என் அந்தஸ்தையும் வெட்கத்தையும் விட்டு என் மன நிலையை விளக்கினேன்.

    மாலை வேளைகளில் நான் காட்டருவிக்குக் குளிக்கப் போவதாகவும், மறுநாளும் போகக் கூடுமென்றும் அந்தப் பையனிடம் சொல்லிவைத்தேன். என் ஆவல் வீண்போகவில்லை. மறுநாள் மாலை அங்கே லியோ வந்திருந்தாள். இருவரும் பேசிக்கொள்ளாமலே பாறைகளில் உட்கார்ந்திருந்தோம். பிறகு, நானே எனக்குள் பேசிக்கொள்வதுபோல், அன்றைக்கு அவளிடம் சொல்லத் தயங்கிய விஷயங்களை யெல்லாம் சொன்னேன்.

    லியோவின் அகன்ற கண்களில் தண்ணீர் துளும்பியது. "நான் தான் தப்பாக நினைத்துக்கொண்டேன். எங்களை மனிதர்களாக மதிக்காமல் விளையாட்டுப் பொம்மைகளாக நகரத்து மனிதர்கள் சிலர் நினைப்பதுண்டாம். நீங்கள்கூட அப்படித்தானோ என்று நினைத்துவிட்டேன். அதனால்தான் உங்கள்மீது வெறுப்பு ஏற்பட்டது." அன்றிலிருந்து வாரம் ஒருமுறையாவது நாங்கள் அந்த அருவிக்கரையில் சந்திப்பது வழக்கம். வாரந் தவறாமல் மனக்கோட்டைகள் பெரிதாகி வளர்ந்துகொண்டே வந்தன. லியோவும் நானும் சண்டை முடிந்தவுடன் திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிட வேண்டுமென்று எங்களுக்குள் முடிவு செய்துகொண்டோம். தகப்பனும் தாயாரும் தன்னை முழு மனதோடு என்னுடன் அனுப்புவார்கள் என்று அவள் கூறினாள். இடையிலிருந்த மற்றத் தொல்லைகளை நாங்கள் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. ஒருவரை யொருவர் கண்டுவிட்டால் போதும். பயங்கரமான உலகப்போர் என்ற ஒன்று நடந்துகொண்டிருப்பதையே நாங்கள் மறந்துவிடுவோம்.

    ஆனால் உலகப்போர் எங்களை மறக்கவில்லை. எந்த யுத்தம் எங்களை ஒன்று சேர்த்ததோ, அதே யுத்தம் திடீரென்று எங்களைப் பிரிக்கவும் சதி செய்தது. நெடுநாட்கள் எங்களுக்கெதிராகப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த ஜப்பானியர்கள், பெரும்படையுடன் உக்கிரமாக எங்களை இருபுரமும் வளைத்துக்கொண்டு தாக்கினார்கள். கோஹிமா, மணிபுரி முதலிய இடங்களில் பலமான சண்டை. மேலிடத் திலிருந்து எங்களை மணிபுரிக்குப் பின்வாங்கச் சொல்லி உத்தரவு வந்துவிட்டது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எங்களோடு நெருங்கிப் பழகிய மலைச்சாதியினர் எங்கள் நிலை கண்டு தேம்பித் தேம்பி அழுதனர். எங்களைச் சுற்றியிருந்த கூட்டத்தில் லியோவை மட்டிலும் காணோம். ஷியானுக்கும் லியோவின் தம்பிக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு, அருவிக்கரையை நோக்கி கண்மண் தெரியாமல் ஓடினேன்.

    நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் மறைவிடத்தில் சோகமே உருவாக உட்கார்ந்துகொண்டிருந்தாள் லியோ. வீட்டிலிருந்து எனக்காகத் தேநீர் தயாரித்துகொண்டு வந்திருந்தாள். சுள்ளிக் குச்சிகளைப் பொறுக்கிவைத்து நெருப்புப் பற்றவைத்து அதைச் சூடாக்கினாள். முதலில் தான் ஒருவாய் குடித்துவிட்டு, என்னிடம் கிண்ணத்தை நீட்டினாள். ஒன்றுமே பேசாமல் நான் அதை மறுத்துத் தலையாட்டினேன்.

    லியோவின் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது. "இதை வேண்டாமென்று சொல்லாதீர்கள்; எங்கள் சாதியில் கணவனுக்கு மனைவி செய்யும் பணிவிடை இது" என்றுகூறி, கிண்ணத்தை என் வாயருகில் கொண்டுவந்தாள். பிறகு என்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து என்னிடம் நீட்டினாள்."உங்களை வழியனுப்பியவுடன் நான் இந்த அருவியில் குதிக்கப் போகிறேன்" என்று அவள் கூறியதைக் கேட்டவுடன் ஒருகணம் தவி்த்தேன். எனக்குக் கிலி பிடித்துக்கொண்டது.

    "எப்படியும் திரும்பி வநது உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன். எனக்காகக் காத்திரு" என்று பல முறைகள் சொல்லி அவளிடம் கெஞ்சிய பிறகுதான் அவளுடைய மனத்தை ஒருவாறு என்னால் மாற்றுவதற்கு முடிந்தது.

    "கட்டாயம் வருவீர்களா?" என்று பன்னிப் பன்னிக் கேட்டாள்.

    "கட்டாயம் வருவேன்"

    ஆறுமாதங்கள் சென்றன. கால் நடையாகவே மணிபுரிக்குப் பின்வாங்கிய நாங்கள், பிறகு சண்டை செய்து ஜப்பானியரைப் பர்மாவுக்குள் விரட்டிக்கொண்டே முன்னேறினோம். டிடிம் என்ற இடத்தில்தான் எங்கள் பழைய முகாம் இருந்தது. அதற்கு அடுத்தாற்போல்தான் லியோ வசித்த கிராமம்.

    டிடிமுக்கு வந்தவுடன் நான் எதிரே திரண்டிருந்த அபாயத்தைக் கண்டு சிறிதும் அஞ்சவில்லை.மூர்க்கத்தனமாக என்னோடிருந்த வீரர்களையும் சேர்த்துக்கொண்டு கிராமத்தை நோக்கி ஓடினேன். ஜப்பானியர் சிலர் அங்கே பதுங்கியிருப்பதாகத் தவல் கிடைத்தது. அருவிக்கரையிலிருந்து கிராமத்தை நோக்கினோம். பகீரென்று எங்கள் அனைவருக்கும் நெஞ்சு பற்றி எரிந்தது. வீடுகள் யாவும் தீக்கிரையாகி வெந்து கொண்டிருந்தன. ஒரே அழுகையும், ஓலமும், கூக்குரலும் ஊளையுமாக ஒலித்தன.மனிதர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடுவதைக் கண்டேன்.

    என் கால்களுக்கு வெறி பிடித்து விட்டது. எனக்குப் பின்னால் என் நண்பர்கள் ஓடி வந்தார்கள்.ஜப்பானியர்கள சிலர் தலைதெறிக்க ஓடுவதைக் கண்டேன். கண்களில் பட்டவர்களைச் சுட்டு வீழ்த்திக் கொண்டு அவர்கள் பறந்தார்கள். லியோவின் வீடும் அதையடுத்த இரு வீடுகளும் இன்னும் நெருப்புக்கு இரையாகாமல் தப்பி நின்றன. லியோவின் வீட்டிலிருந்து பயங்கரக் கூக்குரல். பலகைக் கதவை ஒரே உதையில் நொறுக்கிக் கொண்டு உள்ளே பாய்ந்தேன். லியோவின் தந்தை ஷியான் உயிரற்ற சவமாக ஒருபுறம் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். தாயாருக்கு எதிரில் ஒரு ஜப்பானியச் சிப்பாய் துப்பாக்கியும் கையுமாக நின்று கொண்டிருந்தான். ஆளுக்கொரு புறமாக இரண்டு ஜப்பானிய வெறியர்கள் என்னருமை லியோவைப் பற்றி இழுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கண்களில் மிருக வெறியும், உடலில் குடிவெறியும் ஏறியிருந்தன. முகத்தில் கத்திமுனையால் குத்தி அவள் கூக்குரலை அடக்கப் பார்த்தனர். என்னைக் கவனிக்கக் கூட அவர்களுக்கு நேரமில்லை.

    நான் எப்படி அந்த மூன்று குள்ளையர்களையும் ஒருவனாக நின்று கொன்று தீர்த்தேனென்று எனக்குத் தெரியாது. எனக்குள்ளே இருந்த லியோவின் உணர்ச்சி அவர்களை அப்படிப் பழி தீர்த்துக் கொண்டது. ஒரு மரத்தூணுக்குப் பின்புறம் என்னை மறைத்துக்கொண்டு துப்பாக்கியில் குண்டுகள் தீருமட்டு்ம் அவர்களைச் சுட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் செத்து விழுந்த பிறகும் சுட்டேன்.

    "சிங்கா பாபு! சிங்கா பாபு!" என்று அலறிக்கொண்டே என் கால்களில் விழுந்து கட்டிக்கொண்டாள் லியோ. முகமெங்கும் ஒரே ரத்தக்கறை. கத்தி முனைகள் இரண்டு மூன்று இடங்களில் ஆழமாகக் கீறியிருந்தன. பயத்தால் அவளால் எதுவுமே பேச முடியவில்லை. என்னைக் கண்ட ஆனந்தம்கூட அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும்.

    அவள் தாயாரும் நானுமாக அவளுக்கு முதற்சிகிச்சைகள் செய்தோம். "வந்துவிட்டீர்கள், பாபு! வந்துவிட்டீர்கள்! நீங்கள் என் தெய்வம்! என் தெய்வம்!" என்று அவள் மெலிந்த குரலில் முணு முணுத்தாள். என்னைக் கண்டு புன்முறுவல் பூக்க முயற்சி செய்தாள். என் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

    இந்த இன்பமெல்லாம் கால் மணிநேரமே நிலைத்திருந்தது. எங்கள் படைத்தலைவரும் சிப்பாய்களும் அந்த வீட்டருகே வந்தவர்கள் என்னைக் கண்டுவிட்டார்கள். "இது என்ன கூத்து? புறப்படு, சிங்காரம்" என்று அலறினார் தலைவர். எனக்கு அவரிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. லியோ மெல்லத் தன்னுடைய தலையை வேறு பக்கமாக நகர்த்திக்கொண்டாள்.

    "இதோ, அரைமணிநேரத்தில் வந்துவிடுகிறேன். முன்னால் போய்க்கொண்டிருங்கள்" -நான் கெஞ்சினேன்.

    "டேய்!" என்று அடுத்த சிப்பாய்ப் பக்கம் திரும்பினார் அவர். "அவன் வருகிறானா என்று கேள். இல்லாவிட்டால் இதே இடத்தில் அவனைச் சுட்டுத் தள்ளிவிட்டுப் புறப்படு!" என்று உத்தரவு போட்டார். லியோ நடுநடுங்கிப் போய் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டாள். "போய் வாருங்கள், பாபு! என்னை மட்டும் மறந்துவிடாதீர்கள். திரும்பி வந்து என்னை அழைத்துப் போங்கள்!".

    படுகளத்தில் ஓலமிட்டழுவதற்கு நேரமேது? லியோவின் கண்ணீரும் ரத்தமும் படிந்திருந்தன என் விரல்களில். உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலையில் அவள் இல்லை. என்றாலும் அக்கம் பகத்துக் காடுகளில் எதிரிகள் ஒளிந்திருந்ததால் திரும்பவும் அங்கே வந்து என் அருமை லியோவை.....

    என்னுடைய பட்டாளத்து நண்பன் ஒருவன் என் கையைப் பிடித்து வெடுக்கென்று இழுத்து வெளியே தள்ளினான். இன்னும் ஒரு நிமிஷம் என்னால் அவர்களுக்குத் தாமதமானால், என்னையே படைத் தலைவரின் உத்தரவுக்கு அஞ்சிச் சுட்டுவீழ்த்தி யிருப்பார்கள். நான் அவர்களுடன் நடைப் பிணம்போல் உனர்விழந்து நடந்தேன்.

    சண்டை ஓய்ந்த பின்னர் சரியாக ஓராண்டு சென்றவுடன் எனக்குப் பட்டாளத்திலிருந்து விலகிக்கொள்வதற்கு அநுமதி தந்துவிட்டார்கள். இனி நான் இந்திய -பர்மா எல்லைக்குச் செல்ல வேண்டும். போவதற்கு முன்பு எனக்குப் பிடித்த கதாசிரியரிடம் என்னுடைய கதையைச் சொல்லிவிட்டுப் போக வேண்டுமென்பதற்காகவே இதை உங்களூக்கு எழுதுகிறேன்.

    முடிவுரை:

    சிங்காரவேலுவின் முதல் கடிதத்திலிருந்த முக்காலே மூன்றுவீசம் கதையும் இவ்வளவுதான். இவ்வளவு நாட்களாக இதை வெளியிடாமலிருந்ததற்குக் காரணம், சிங்காரவேலு லியோவைத் தேடிச் சென்ற முயற்சியின் பலன் என்ன என்று எனக்குத் தெரியாமல் இருந்ததுதான்.

    நான்கு தினங்களுக்கு முன்பு அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தச் சிறு கடிதத்தை இங்கே தருகிறேன்:

    அன்புள்ள ஐயா,

    மணிப்புரி வரையிலும் சென்று, அங்கிருந்து டிடிமுக்கு வாரச்சந்தை கூடுவதற்காகச் செல்லும் வியாபாரிகள் கூட்டத்தோடு லியோவின் கிராமத்துக்குப் போனேன். குதிரைகளிலும் மாடுகளிலும் கோவேறு கழுதைகளிலும் சாமான்களை ஏற்றிச் செல்லும் நாடோடி வியாபாரிகளின் கூட்டம் அது. அங்கே நான் போய்ச் சேர்வதற்குப் பட்ட கஷ்டங்களை விவரித்துத் தங்களுக்குத் துன்பம் கொடுக்க விரும்பவில்லை. அவ்வளவு கஷ்டங்களும் அவள் முகத்தை நான் ஒருமுறை கண்களால் கண்டிருந்தால் பஞ்சாகப் பறந்திருக்கும்.

    ஆனால் என்னுடைய லியோ இப்போது அங்கே இல்லை. தினந்தோறும் என் வரவை எதிபார்த்து அருவிக்கரைக்கு வந்துகொண்டிருந்தாளாம். வேறு யாரையும் மணந்து கொள்வதற்கு அவள் மறுத்துவிட்டாளாம்.

    கடைசியில் என்னைத் தேடிக்கொண்டு அவள் தமிழ்நாட்டுக்கே புறப்பட்டு விட்டாளாம். அவளுக்கு மொழி தெரியாது: அவளிடம் பணம் இல்லை: நம் நாட்டு மனிதர்களின் பழக்கவழக்கத்திற்கும் அவள் வாழ்க்கைக்கும் வெகுதூரம். மனிதர்களை எளிதில் நம்பிவிடுவாள்.

    என்னைத் தேடிக்கொண்டு புறப்பட்டுவிட்ட லியோவை நான் எங்கே எப்படித் தேடிக்கண்டுபிடிப்பது? நல்ல அழகி; நல்ல இளமை; புறப்படும்போது மஞ்சள்பட்டு மேல்துணியும், பச்சைநிற லுங்கியும் உடுத்திக்கொண்டிருந்தாளாம். தலையிலே காட்டு மலர்கள். கைகளில் தந்த வளையல்கள். அவள் என்னிடம் வந்து சேர்வாளா? நாங்கள் இந்தப் பிறவியில் கணவனும் மனைவியுமாக ஒன்றாய் வாழ்வோமா?

    எனக்குப் பதில் தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள்.

    உங்களன்புள்ள, சிங்காரவேலு.

    -----------------


    3. பொங்கலோ பொங்கல்!


    சென்னப்பட்டணத்திலிருந்து ஏதோ ஒரு கிராமத்தை நோக்கிச் சிட்டுக் குருவிகளைப் போலப் புத்தம் புதுக் கார்கள் பறந்துகொண்டிருந்தன. இருந்தாற்போலிருந்து திடீரென்று அந்தக் கிராமத்துக்கு ஒரு யோகம் பிறந்துவிட்டது. தமிழ்ச் சினிமாப் படம் ஒன்றில் அந்தக் கிராமமும் தலை நீட்டுவதென்றால் அதற்கு அதிருஷ்டந்தானே?

    ஏற்கனவே கிராமத்தின் எல்லையில் நான்கைந்து 'வான்'களும் 'லாரி'களும் வந்து நின்றன. ஐம்பது அறுபது பட்டணத்து மனிதர்கள் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக ஓடி ஏதேதோ செய்யத் தொடங்கினார்கள். புகைப்படக் கருவிகளும் ஒலிப்பதிவுக் கருவிகளும் பொருத்தப்படும் வேலை ஒருபுறம் நடந்துகொண்டிருந்தது. மறுபுறம் நாற்காலிகள், மேஜைகள், பெரிய பெரிய குடைகள் முதலியவை கார்களிலிருந்து இறக்கப்பட்டன.

    தேர்த் திருவிழாவுக்குக்கூட அவ்வளவு கூட்டம் அந்தக் கிராமத்தில் கூடியதில்லை. அந்தக் கூட்டத்தை ஓர் எல்லைக்குள் தடுத்து நிறுத்துவதற்குள் பட்டணத்துக்காரர்களுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.

    விஷயம் இவ்வளவுதான்:-

    அந்தப்படக் கதையின் கதாநாயகி கிராமத்துப் பெண்மணியாம்; குடியானவக் குடும்பத்தைச் சேர்ந்தவளாம். அவள் வயல் வரப்பில் வேலைகள் செய்வதுபோல் படம் பிடிக்க வேண்டுமாம். தழை மிதிப்பது, நாற்று நடுவது, களை பிடுங்குவது, கதிர் அறுப்பது, நெற்கட்டைச் சுமந்து செல்வது-- இவைபோன்ற வேலைகளை நம் தமிழ் நாட்டுக் குடியானவப் பெண்கள் செய்வதில்லையா? அதே போல் சினிமாக் கதையிலும் காட்சிகள் இருந்தனவாம்.

    படத்தில் நடிக்கும் கதாநாயகியின் பெயரைக் கேட்டவுடன், 'ஆஹா, ஆஹா!' என்று உச்சுக் கொட்டினார்கள், கிராமத்து இளைஞர்கள். ஒருவர் தோளை ஒருவர் இடித்துக் கொண்டார்கள். ஒரே குதூகலம் அவர்களுக்கு. கண்ணெதிரில் அவளுடைய உருவத்தைக் காணும் பாக்கியம் கிடைக்கிறதல்லவா?

    "குமாரி கோமளம்" என்று சிலர் தங்களுக்குள் பல முறை சொல்லிப் பார்த்துக்கொண்டார்கள். அவளைப் பற்றிய பல விவரங்களையும் அவர்கள் பத்திகைகளில் படித்திருக்கிறார்கள், அவள் எந்த எந்த வேளைகளில் எந்த எந்தப் புடவைகள் உடுத்துவாள், என்றைக்கு எந்த மாதிரி முடி அலங்காரம் செய்துகொள்வாள், எந்த வேளையில் என்ன ஆகாரம் சாப்பிடுவாள் என்பன போன்ற அதிமுக்கியமான கலைச் செய்திகளைக் கொடுப்பதற்கென்றே இந்தச் சோஷலிச நாட்டில் மக்கள் பத்திரிகைகள் உள்ளனவே!

    ஆகவே, விநாடிக்கு விநாடி ஜுரவேகத்தோடு ரசிகர்கள் அவளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒருவன் விளையாட்டுக்காக, "இதோ பார், வந்திட்டா!" என்று சொல்லிவைத்தான். அதற்குள் நூறு பேர், "எங்கே? எங்கே?" என்று அவன்மீது மோதி விழத் தொடங்கிவிட்டார்கள். அவ்வளவு பிரபலமான நட்சத்திர மோகினி அவள்.

    பளபளக்கும் பெரியதொரு காரில் வந்து, ஒய்யாரமாக இறங்கி, உல்லாசமாக நடந்தாள் குமாரி கோமளம். குமரர்கள் முதல் கிழவர்கள் வரையிலும் வாயில் ஈ நுழைவதுகூடத் தெரியாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றனர். கண நேரத்துக் கண்வீச்சில் கூட்டத்தை ஒருமுறை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, விரித்த குடைக்குள் அடைக்கலம் புகுந்தாள் அவள்.

    பட்டணத்துப் பணியாட்கள் சிலர் ஓடோடியும் அவள் அருகில் சென்று கைகட்டி வாய் புதைத்து நின்றனர்.

    "பிரயாணத்திலே ரொம்பவும் களைச்சிப் போயிட்டிங்களே!" என்று தொடங்கிய ஒருவன், "ஆப்பிள் ஜூஸ் வேணுங்களா? ஓவல் வேணுங்களா? கூல் டிரிங்க் வேணுங்களா?" என்று அடுக்கினான்.

    அதே சமயத்தில், ஒரு மணி நேரமாக வேகாத வெயிலில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தாகத்துக்குப் பச்சைத் தண்ணீர் கேட்டபோது, ஒரு பயல் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.

    படப்பிடிப்புக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. எந்த வயலில் அவர்கள் படம் பிடித்தார்களோ, அந்த வயலுக்குச் சொந்தக்கார ஆண்களும் பெண்களுங்கூட அப்போது நடவு நட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தியாகக் கோமளாவும் கலந்துகொண்டு நாற்று நட்டால், மிகவும் இயற்கையாக இருக்குமென்று டைரக்டர் கருதினார்.

    கோமளாவை மிகவும் பயபக்தியோடு வரவேற்று உபசார வார்த்தைகள் பேசினார் தயாரிப்பாளர். பிறகு டைரெக்டர் வந்து அவள் கலகலப்பாக நடிக்க வேண்டுமென்பதற்காக, தாம் ஏதோ பத்திரிகையில் படித்த நகைச்சுவை முத்துக்கள் சிலவற்றை உதிர்த்து அவளுக்குச் சிரிப்பு மூட்டினார். அடுத்தாற்போல் வசனகர்த்தா தம்முடைய தலையை மெல்ல நீட்டினார். மிகவும் நிதானத்தோடு, வசனங்களை ஆரம்பிக்கலாமா என்பதுபோல் தயக்கத்தோடு அவளைப் பார்த்தார்.

    "சரி ஸார், சொல்லுங்கோ!" கேரளத்துக் குயில் தமிழில் கூவியது. நடிக்கவேண்டிய கட்டத்தை விநயமாக எடுத்துச் சொல்லிவிட்டு, வசனங்களைச் சொல்லிக்கொண்டு போனார் வசனகர்த்தா.

    "ஸார், ஸார், நிறுத்துங்க! உங்க வசனத்திலே இந்த �ழ�னா அதிகமாக வருது ஸார்! வளவளன்னு அது எதுக்கு ஸார்?"

    மொழி உணர்ச்சி கொண்ட வசனகர்த்தாவுக்கு அது சுருக்கென்று தைத்துவிட்டது. பொதுக் கூட்டங்களில், "தாயைப் பழித்தாலும் தமிழைப் பழிக்காதே!" என்று சீறுகிறவர் அவர்.

    "ழனா எங்கள் தமிழுக்கு உயிர்போலே இருக்கிற ஓர் எழுத்தம்மா!" என்று அவர் பரிதாபமாகப் பதிலளித்தார்.

    "வேண்டாம் ஸார்! அதைப் போட்டு என் உயிரை எடுக்காதிங்க!"

    "அம்மா! அம்மா!" என்று தம்முடைய நிலையை விளக்கப் பார்த்தார் ஆசிரியர். குமாரியோ தன்னுடைய முகத்தை இலேசாக ஒரு முறை சுளித்துக்கொண்டு தயாரிப்பாளரை ஒரு பார்வை பார்த்தாள்.

    வேர்த்துக் கொட்டியது தயாரிப்பாளருக்கு. ஒரு மாதமாக நடிகையிடம் கெஞ்சிக் கூத்தாடி இந்த ஒருநாள் நடிப்புக்கு அவளை வெளியூருக்கு அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார். அன்றைக்குச் செலவு அவருக்குப் பத்தாயிரம் ரூபாய்.

    "ஆசிரியர் ஸார்! அந்த உயிர் எழுத்து வேறே இடத்திலே இருந்திட்டுப் போகட்டும். இப்ப நம்ப உயிரே அந்த அம்மா கையிலே இருக்கு. தயவு செஞ்சு மாத்திப்புடுங்க!"

    டைரெக்டர் 'நமக்கு ஏன் இந்த வம்பு� என்பதுபோல பேசாமல் நழுவிப்போய், அவருடைய கோபத்தை ஒரு வேலைக்காரச் சிறுவன்மீது எரிந்து விழுந்து தணித்துக் கொண்டார்.

    நேரம் நெருங்கி விட்டது. இன்னும் குடியானவப் பெண்ணுக்குள்ள சேலையை உடுத்திக்கொள்ளாமல் இருக்கிறாளே என்று தவியாய்த் தவித்தார் டைரெக்டர். உடை மாற்றத்துக்கு அருகிலேயே ஒரு களத்து வீட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள். அருகில் நின்ற உடைமாற்றும் பையனைச் சாடைகாட்டி அழைத்தார் டைரெக்டர்; "ஏன், அந்தப் புடைவையைக் கொடுத்துக் கட்டிக்கொண்டு வரச்சொல்லேன்!" என்று அவன் காதருகில் ஓதினார்.

    "சொல்லிப் பார்த்திட்டேன், ஸார்! அந்தப் புடவை நல்லா இல்லையாம். இப்பக் கட்டிக்கிட்டிருக்கிறதே போதும்னு சொல்லிட்டாங்க."

    டைரெக்டருக்கு அதற்கு மேலும் தாங்க முடியவில்லை. தயாரிப்பாளரைக் கூப்பிட்டார்; "நம்ப இப்ப எடுக்கப் போற படம் கிராமப் படம். இந்த லட்ச ரூபாய் நட்சத்திரம் கட்டிக்கிட்டிருக்கிற சில்க் புடவையோ காலேஜ் பெண் வேஷத்துக்குத்தான் பொருத்தமாயிருக்கும். இப்ப என்ன செய்யப் போறிங்க?"

    தயாரிப்பாளரின் முகத்தில் ஈ ஆடவில்லை. உடைகளைக் கவனிக்கும் பையனிடம், "ஏம்பா, நீ சொல்லிப் பார்த்தாயா?" என்று கேட்டார்.

    "நான் சொல்லிப் பார்த்திட்டேங்க!"

    "டைரெக்டர் ஸார், நீங்க கொஞ்சம்..." தயவாகக் கெஞ்சினார் தயாரிப்பாளர்.

    "என்னையே போய்க் கட்டிவிடச் சொல்லுவிங்க போலிருக்கே!" ரோஷத்தோடு பாய்ந்தார் டைரெக்டர்.

    ஒரு கணம் யோசித்துவிட்டு, தலையைச் சொரிந்து கொண்டே குமாரியிடம் சென்று, மென்று விழுங்கிக் கொண்டே விஷயத்தை வெளீயிட்டார் படத்தின் சொந்தக்காரர்.

    கலகலவென்று அம்மையாரின் சிரிப்பொலி கிளம்பியது; "ஏன் ஸார், நாட்டுப்புறத்துப் பெண்கள்தான் இப்பக் காலேஜ் பெண்களைத் தூக்கியடிக்கிறாப்பிலே டிரஸ் பண்ணிக்கிறாங்களே. அதைத் தெரிந்சுதான் நான் இந்த டிரஸ்லே வந்திருக்கேன். சும்மா இப்படியே இருக்கட்டும், ஸார்."

    அதற்குமேல் 'அப்பீல்' கிடையாது. அப்பீலுக்குப் போனால், 'ஐ.பி' கொடுக்கும் நிலை வந்தாலும் வந்துவிடும்! டைரெக்டரிடம் வந்து, "போனால், போகட்டும், எப்படியாவது இன்னிக்கு வேலையை முடிச்சிடுங்க" என்று கேட்டுக்கொண்டார்.

    "முதலாளி ஸார், இதுக்குப் பேர் தர்மசங்கடமில்லை! அதர்ம சங்கடம்! சமதர்ம நாட்டிலே, சினிமா உலகத்துக் குள்ளே நடக்கிற தர்மக்கொலை ஸார், தர்மக்கொலை! படம் டப்பாவுக்குள்ளே போயிட்டா அவங்களுக்கு என்ன நஷ்டம்?"

    "ஸார், ஸார்! அவ காதிலே விழுந்திடப் போகுது ஸார், மெதுவாப் பேசுங்க!"

    ஆயிற்று. நேரம் நெருங்கியது. ஒளிப்பதிவு நிபுணர் 'காமிரா'வின் கறுப்புத் துணிக்குள் தலையைக் கொடுத்துக் கொண்டார். ஒலிப்பதிவுக்காரர் காதுகளில் இயந்திரத்தை மாட்டிக் கொண்டார். டைரெக்டர், முதலில் இயற்கையாக வயலில் வேலை செய்தவர்களைப் பார்த்து, "எங்கே காமிராவைப் பார்க்காமல் சுறுசுறுப்பாய் நாற்று நடுங்கள், பார்க்கலாம்!" என்றார்.

    மற்றவர்கள் நாற்று நடும் சமயத்தில், கதாநாயகி வயல் வரப்பில் துள்ளிக்குதித்து ஓடி வந்து, தானும் நடவில் கலந்து கொள்வதைப்போல் காட்சியமைப்பு இருந்தது. ஓடி வரும் கதாநாயகி, வயலுக்குள் குதித்து, மற்றப் பெண்களைப் போலவே குனிந்து நின்று நெல்நாற்றுகளைச் சேற்றில் பதிய வைக்க வேண்டும்.

    "ரெடி! ஷூட்!" என்று கத்தினார் டைரெக்டர். காமிராவின் இயந்திரம் சுழன்றது; ஒளிப்பதிவுச் சுருளும் உருண்டது.

    "வாங்கம்மா!" என்று கதாநாயகியை டைரெக்டர் அழைக்க, அவள் துள்ளிக் குதித்துக்கொண்டு வரப்பின்மேல் ஒயிலாக ஓடினாள். நாற்றுக் கட்டுக்களை வைத்திருந்த இடத்துக்குச் சென்று மெல்லக் குனிந்து ஒரு பிடி நாற்றைக் கையிலும் எடுத்து விட்டாள். அடுத்தாற்போல், உற்சாகமாக சேற்றில் குதித்து, நாற்றுக்களை நட்டு வைப்பதுபோல் நடிக்க வேண்டியதுதான்.

    காமிரா ஓடிக்கொண்டிருந்தது. பல நூறு கண்கள் அவள் செய்வதை ஆவலோடு தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்தன.

    நாற்றைக் கையில் எடுத்தவள் வயலுக்குள் குதிக்காமல், திடீரென்று திரும்பி நின்று, "கட்! கட்! நிறுத்துங்கள்!" என்று கத்தினாள்; பயத்தால் பதறுவதுபோல் பதறினாள்.

    திகைத்துப் போனார்கள் டைரெக்டரும் தயாரிப்பாளரும். 'ஏன், வயலில் ஏதும் பாம்பைக் கண்டு மிரண்டுவிட்டாளா? என்ன நடந்தது?'

    வயலுக்குள் வேலை செய்துகொண்டிருந்தவர்களில் மூத்தவளான அந்த வயலின் சொந்தக்காரி சுப்பம்மாள், காரணம் புரியாமல் கோமளாவின் அருகில் வந்து, "என்னம்மா சமாசாரம்?" என்று பரிவோடு கேட்டாள். குமாரியோ அவளைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை; பதில் அளிக்கவும் இல்லை. அத்தனை அலட்சியம் அவளுக்கு. இதற்குள் தயாரிப்பாளரும் டைரெக்டரும் அவள் நின்ற இடத்துக்கே ஓடி வந்து விட்டார்கள்.

    "என்னம்மா!"

    "என்னம்மா!"

    "நான் இந்தச் சேத்திலே குதிச்சு 'ஆக்ட்' பண்ண முடியாது ஸார்! ஒரே அசிங்கமா இருக்கு!"

    தலையில் கையை வைத்துக்கொண்டார் தயாரிப்பாளர். அவரைக் கீழே விழுந்து விடாமல் தாங்கிப் பிடித்துக்கொண்டார் டைரெக்டர்.

    "இப்படியெல்லாம் சேத்திலேயும் சகதியிலேயும் புரளச் சொல்லிக் கதை எழுதினா, எப்படி ஸார் நான் நடிக்கிறது? யாரையாவது எனக்குப் பதிலா 'டூப்' போட்டு, இதை மட்டும் எடுத்துக்குங்க. இந்த அசிங்கத்திலே நான் கால் வைக்க மாட்டேன்!"

    "நீங்க பார்க்கிற முப்பது நாள் வேலைக்கு உங்களுக்கு லட்ச ரூபாய் கொடுக்கிறேன், தாயே! தயவு செய்து என்னைக் கைவிட்டுடாதீங்க!" என்று அழாக்குறையாகக் கெஞ்சினார் தயாரிப்பாளர்.

    "ஷூட்டிங் முடிஞ்சவுடனே, இங்கேயே சுத்தமாய்க் குளிச்சிட்டுப் போகலாம், அம்மா!" என்றார் டைரெக்டர்.

    எந்தப் பேச்சும் குமாரியிடம் எடுபடவில்லை.

    இவ்வளவையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கிராமத்துச் சுப்பம்மாள் திடீரென்று வரிந்து கட்டிக்கொண்டு சேற்றுக் கையோடு குமாரியின் எதிரில் வந்து நின்றாள். நிலத்தில் உழைத்தவர்கள் நிமிர்ந்து பார்த்தார்கள்.

    "என்ன சொன்ன நீ? அசிங்கமா இருக்குதா? எது உனக்கு அசிங்கமா இருக்குது? என்னவோ வானத்திலிருந்து குதிச்சு வந்தாப்பிலே வேஷம் போட்றியே?"

    "நான் உங்கிட்ட ஒண்ணும் பேசல்லை!" என்றாள் குமாரி. லட்சாதிபதிகள் பிச்சைக்காரர்களைப்போல் தம்மிடம் கைகட்டி நிற்க, இவள் யார் எதிர்த்துப் பேசுவதற்கு என்ற ஆத்திரம் அவளுக்கு.

    "நீ இப்ப நின்னுகிட்டிருக்கிறது என்னோட நிலம்! நீ இப்ப அவமானப்படுத்தினியே இந்தச் சேறு, இதுதான் உன் வயித்துக்குப் போற சோறு! எந்த வகையிலே உன்னோட பிழைப்பு எங்க பிழைப்பைவிட உயர்ந்து போச்சு? சோறு இல்லாட்டி இந்த உலகம் பட்டினியாலே செத்துப் போகும். நீ இல்லாட்டி இங்கே என்ன குறைஞ்சு போகும்னு கேக்கிறேன். நீ பேசலேம்மா, நீ வாங்கிற பணம் உன்னை இப்படிப் பேச வைக்குது. கோடான கோடிப்பேரு கும்பி கொதிக்க உழைச்சுபிட்டு, இங்கே மாட்டைவிடக் கேவலமாச் சாகிறான். நீ என்னடான்னா குபேரப் பட்டணத்திலே குடியிருக்கிறாப்லே நினைச்சுக்கிட்டுக் கும்மாளம் போடுறே!"

    "அம்மா, அம்மா!" என்று குறுக்கிட்டுப் பதறினார் தயாரிப்பாளர். டைரெக்டருக்கோ, தங்களைப்போல் மீசைமுளைத்த ஆண்பிள்ளைகள் கேட்க முடியாத கேள்விகளை ஒரு பட்டிக்காட்டுப் பெண்பிள்ளை கேட்கிறாளே என்று ஆனந்தம்.

    "நிறுத்துங்கம்மா!" என்று கத்தினார் தயாரிப்பாளர்.

    "அட, நிறுத்தய்யா!உனக்குத்தான் அவ பெரிசு!" என்றாள் சுப்பம்மாள். பிறகு தன்னோடு வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடியானவர்கள் பக்கம் திரும்பினாள்; "கேட்டீங்களா சேதியை? நீங்க இங்கே ஒரு ரூபாய் கூலிக்கு ஒரு நாள் முழுக்க உழைச்சுப்பிட்டு, சினிமாக் கொட்டகைக்குப் போயிக் கொட்டி அழுதிட்டு வர்ரிங்க பாருங்க, அதனாலே வந்த ஏத்தம் இது!"

    "பாக் அப்!பாக் அப்!இன்னிக்கு ஷூட்டிங் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்!" என்று கத்தினார் தயாரிப்பாளர். சாமான்கள் மளமளவென்று லாரிகளுக்குச் சென்றன.

    "இந்தா பார், நீ ஏன் இன்னம் இந்தப் பூமித்தாயை மிதிச்சுக்கிட்டு இங்கே நிக்கிறே? உன்னோட மூச்சுப் பட்டாக் கூட என்னோட நிலம் விளையாது.போ, வயலை விட்டு!"

    எல்லோரும் போய்ச் சேர்ந்த பிறகு, மாலை நேரத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்தாள் சுப்பம்மாள். அவளுடைய ஆத்திரமும் அழுகையும் நெஞ்சுக்குள்ளிருந்து இன்னும் அகலவில்லை. பரம்பரையாக அந்தக் குடும்பத்துக்கு உயிர் கொடுத்த தெய்வம் அந்த நிலம். அதை ஒருத்தி கேவலமாய்ப் பேச, கேட்டுக்கொள்ளும் காலம் வந்துவிட்டதே என்ற ஆற்றாமை அவளுக்கு. நிலத்தில் படப்பிடிப்புக்கு அநுமதி கொடுத்த தன் கணவனை நொந்துகொணடாள்.

    சற்று நேரத்துக்கெல்லாம் அவளுடைய மூத்தமகன் கையில் சில வழுவழுப்பான வர்ணத்தாள்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். "என்னடா அது?" என்று கேட்டாள்.

    "அடுத்த வாரம் பொங்கல் வரப்போகுதில்லை, அம்மா? அதுக்குச் சினேகிதர்களுக்கு அனுப்பறத்துக்கு பொங்கல் வாழ்த்து வாங்கிட்டு வந்திருக்கேன்."

    ஆசையோடு தன் தாயிடம் நீட்டினான் மகன். சுப்பம்மாள் அவற்றை உற்றுப் பார்த்தாள். எரிகிற நெருப்பில் எண்ணெயை வாரிக் கொட்டியது போலிருந்தது அவளுக்கு. உழவனுக்கும் தொழிளாளிக்கும் நன்றி சொல்லும் விழாவுக்குக் குமாரி கோமளத்தின் மூவர்ணப் படங்கள்! அவையும் ஆடைகள் சரிந்து விழும் அலங்கோல நிலைப் படங்கள்!

    "ஏண்டா, நீ ஒரு ஆண்பிள்ளைதானா? நீ பொங்கலைக் கொண்டாடுகிற யோக்கியதை இதுதானான்னு கேக்கிறேன்."

    பையனுக்கு ஒன்றும் புரியவில்லை.

    "நெத்தி வேர்வையை நிலத்திலே கொட்டி, ரத்தத்தைப் பாய்ச்சி நெல்லைக் குவிக்கிறானே, அவனை மதிக்கிறதுக்கு ஏற்பட்ட திருவிழாடா இது! குடியானவனையும் தொழிலாளியையும் வருஷத்திலே ஒரு நாளாவது மனுஷன் நினைச்சுப் பாக்கிறதுக்கு ஏற்பட்ட பொங்கல்டா இது! மனுஷனுக்கு ஒண்ணு, மாட்டுக்கு ஒண்ணுன்னு நம்ப பெரியவங்க இதை ஏற்படுத்தியிருக்காங்க. இந்தப் படத்துக்குப் பதிலா, கறவை மாட்டுப் படத்தையோ, காளை மாட்டுப் படத்தையோ நீ வாங்கி இருந்தா, நீ சோத்திலே உப்புப் போட்டுத் திங்கிறதுக்கு அது நியாயமா இருந்திருக்கும். நீ குடியானவண்டா, குடியானவன்!"

    பிள்ளை மெதுவாகத் தாயின் கையில் இருந்ததை வாங்கப் பார்த்தான். தாயோ அதைச் சுக்குநூறாய்க் கிழித்து அவன் முகத்தில் வீசிக்கொண்டே, "டே! வயலிலே உழைக்கப் போற உனக்கே சூடு சுரணை இல்லேன்னா வேறே எவனுக்குடா அது வரும்?" என்று கத்தினாள்; போடா, போ, ஊதாரி!- நன்றி விசுவாசம் கெட்டுப்போய், நாசுக்கா வாழத் திரியாதே!"

    அந்த வீட்டில் பால் பொங்கிய நேரத்தில், சுப்பம்மாள் தன் மகனுக்கு வாழ்த்துகள் என்ற பெயரில் வந்த வெளிமயக்குக் குப்பை கூளங்களையெல்லாம் அடுப்பில் போட்டு எரித்தாள். பாலும் பொங்கியது.


    4. நாதனுள்ளிருக்கையில்


    தனுஷ்கோடிக்குச் சென்றுகொண்டிருந்த 'இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸி'ல் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் கட்டையை நீட்டிவிட்டுப் படுத்திருந்தார் பேரின்பநாயகம். கட்டை நல்ல உரமான கட்டை. அதன் சட்டைப் பையில் ராமேசுவரத்துக்கு டிக்கெட் இருந்தது.

    அறுபது வயதைத் தாண்டி ஆறு மாதங்கள் கடந்த முற்றி விளைந்த கட்டை அது. வைரம் பாய்ந்த தேகத்தைப் பார்த்தால் நாற்பத்தைந்து வயதுகூட மதிக்க முடியாது.

    பெரிய துணிப் பையைத் தலைக்கு வைத்துப் படுத்திருந்தது அது. பைக்குள் மாற்றுத் துணிகளும், கெட்டி அட்டைச் சித்தர் பாடல் தொகுப்பொன்றும் இருந்தன. பாம்பாட்டிச் சித்தர் குதம்பைச் சித்தர், அகப்பைச் சித்தர், அழுகணிச் சித்தர் -- இப்படிப் பல சித்தர்கள் அந்த 'பைண்ட் வால்யூமுக்குள் பதுங்கிக் கொண்டிருந்தார்கள். பாம்பாட்டிச் சித்தரின் பதினேழாவது பக்கத்தில் ஒரு காகித உறையில் ஒரு நோட்டுக் கற்றை பிதுங்கிக்கொண்டிருந்தது.

    வண்டியில் அடுத்த பலகையில் நாலைந்து பையன்கள் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு வந்தார்கள். அதற்கடுத்த பலகைகளில் இலங்கைக்கு கப்பலேறப்போகும் பிரயாணிகள், ராமேசுவரத்துக்கு யாத்திரை போகிறவர்கள், சொந்த ஊர்களுக்குத் திரும்புகிறவர்கள்-- இப்படிப் பலர் இருந்தார்கள்.

    ரெயில் ராமநாதபுரத்தைத் தாண்டி மண்டபம் ரெயிலடியை நெருங்கிக்கொண்டிருந்தது.

    அடுத்த பலகையிலிருந்த பையன்கள் பிள்ளை வரத்துக்காக ராமேசுவரம் போகிறவர்களைப் பற்றிப் பலவிதமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு வந்தார்கள். 'மூடநம்பிக்கை' என்றான் ஒருவன். விஞ்ஞான உண்மை அதில் பொதிந்து கிடப்பதாகச் சொன்னான் மற்றொருவன். 'மூடநம்பிக்கை இல்லை, கருத்துள்ள நம்பிக்கை' என்று வாதாடினான் மூன்றாவது பையன். ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்குத் தெரிந்த காரணங்களைச் சொல்லிக்கொண்டு வந்தார்கள்.

    சித்த சாகரத்தில் முழுகிக்கொண்டிருந்த பேரின்ப நாயகத்திடம் பையன்களின் பேச்சு விழிப்பேற்படுத்திவிட்டது.

    அவரே ஒரு சித்தர்; அரைகுறைச் சித்தர். அதாவது அவருக்குச் சித்து விளையாட்டுக்கள் கைவரவில்லை. ஆனால் சித்த வைத்தியம் அவரைக் கைதூக்கி விட்டது.

    அவருடைய காளைப் பருவத்தில், இருபதாவது வயதில், அவருடைய கிராமத்துக்கு ஒரு கோவணச் சித்தர் வந்திருந்தார். அவரைப் பற்றிப் பலர் பலவிதமாகப் பேசிக்கொண்டார்கள். அற்புதமான சித்து விளையாடல்களை அவர் செய்து வந்தாராம். தெருவோரம், வீட்டுத் தின்ணை, மரத்தடி, குப்பைமேடு எங்கே வேண்டுமானாலும் அவர் படுத்து உறங்கினார். வியாதியஸ்தர்களுக்குப் பச்சிலை மருந்துகள் அரைத்துக் கொடுத்துக் குணப்படுத்தினார்.

    விசித்திரமான கதை ஒன்று கிளம்பிவிட்டது:

    அவர் படுத்து உறங்கியபோது, கை வேறு, கால் வேறு, கழுத்து வேறாகத் தனித் தனி முண்டங்களாகக் காட்சி கொடுத்தாராம். தலைக்குப் பக்கத்தில் அந்தரத்தில் ஒரு விளக்கொளி தெரிந்ததாம். பலர் நேரில் பார்த்ததாகச் சொன்னார்கள். இந்த அதிசயம் உண்மைதானா என்று கண்டுபிடிக்கப் பேரின்பநாயகம் அவருக்குச் சீடரானார். அவருடன் பல ஊர்களைச் சுற்றி, பல மருந்துகள் அரைத்து, பலவிதமான அநுபவங்களைப் பெற்றார். ஆனால் ஒருநாள்கூடத் தமது குரு நாதரிடம் அவர் எதிர்பார்த்த அதிசயம் நடக்கவில்லை.

    உறங்கும்போது சித்தர் குறட்டை விட்டார்; தலையும் கழுத்தும் ஒட்டிகொண்டுதான் இருந்தன!

    சித்தரே ஒருநாள் தமதுசீடரை மடக்கினார். "ஏண்டா பயலே! நீ பிடிவாதக்காரண்டா, இதற்காகவா என்னைச் சுற்றுகிறாய்?" என்று கேட்டார்.

    சீடர் மௌனம் சாதித்தார்.

    "வந்ததுதான் வந்தாய்; வைத்தியத்தைக் கற்றுக்கொண்டு சொந்த ஊருக்கே போய்த் தொலை. வயது வந்த பையன் என்னோடு இருந்தால் சம்சாரபந்தம் பற்றிக்கொள்ளும்".

    மூன்று வருஷத் தொண்டு பேரின்பநாயகத்தைச் சித்தராக்கவில்லை; சித்த வைத்தியராக்கியது.

    பக்கத்துப் பலகையிலிருந்து ஒரு பையன் வேகத்தோடு பேசினான்:

    "மூடப் பழக்கம்! முட்டாள் நம்பிக்கை! யாத்திரைக்கும் பூசைக்கும் காசு செலவு செய்தால் குழந்தை பிறக்குமா?"

    பேரின்பநாயகம் அவனுடைய கட்சியைத் தமக்குள் ஆமோதித்தார்.

    "நாதனுள்ளிருக்கையில் இவர்கள் ஏன் நட்ட கல்லைத் தேடிப் போகிறார்கள்?"

    இதில் செலவழிக்கும் காசையும் நேரத்தையும் வைத்தியரிடம் செலவழிக்கலாம்; மருந்து வாங்கிச் சாப்பிடலாம்" என்று கத்தினான் அதே பையன்.

    வைத்தியருக்கு இது 'சுருக்'கென்று தைத்தது. சித்த வைத்திய முறையில் அவர் பலவிதமான 'சர்வ ரோக நிவாரணி'களைத் தயார் செய்துவிட்டார். பல வியாதிகளைப் பறக்க அடித்துப் பலலட்சம் திரட்டிவிட்டார். ஆனால் இந்த ஒரே ஒரு விஷயத்தில் அவருடைய வைத்தியம் கைகொடுக்க வில்லை.

    அந்த மருந்தை மட்டிலும் அவர் நிறுத்திக்கொண்டு விட்டார்.

    பிறவிப் பெருங்கடல் தாண்டிய பின் முத்தி நிலையை எதிர்பார்ப்பதுபோல் பாம்பன் கடலைத் தாண்டியவுடன் ராமேசுவரத்தை எதிர்பார்த்தார் பேரின்பம்.

    பழுதடைந்த பாம்பன் பாலத்தில் ரெயில் அட்டையைப்போல் ஒட்டிக்கொண்டு நகர்ந்தது. குபீரென்று கடல் காற்று உள்ளே வீசவே, கட்டையை நிமிர்த்திச் சன்னலோரத்தில் சாயவிட்டார் வைத்தியர். வலது புறத்தில் மீன்பிடிக்கும் சிறு தோணிகள் இரண்டு. பாய்மரங்களில் காற்றை நிரப்பிக்கொண்டு, கடல் நீரைக் கிழித்துச் சென்றன. இடது புறத்தில் சுறாமீன் குஞ்சுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நீருக்கு வெளியே எழும்பிக் குதித்துச் சண்டை போட்டுக்கொண்டன. தந்திக் கம்பிகளில் தவயோகம் செய்த மீன்குத்திகள், தரிசனம் கிடைத்தவுடன், தரிசனம் கொடுத்த சிறு மீன்குஞ்சுகளைத் தமக்குள் இழுத்துக்கொண்டன.

    பாம்பன் சந்திப்பில் இறங்கி, குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு, அடுத்தாற்போல் காத்திருந்த ராமேசுவரம் வண்டியில் ஏறிக்கொண்டார் பெரியவர்.

    யாத்திரைக்காரர்களைப்பிய்த்துப் பிடுங்கும் தரகர்கள் பெரியவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பாம்பாட்டிச் சித்தரின் பதினேழாவது பக்கத்தில் இருக்கும் நோட்டு கற்றையை அவர்கள் எங்கே கண்டார்கள்? கட்டை வெறுங்கட்டை என்று ஒதுக்கினார்கள். ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சைக்காரர்களுக்கென்று ஒதுக்கிய கட்டை அது.

    வண்டியை வடக்கத்திக் கூட்டம் அடைத்துக்கொண்டிருந்தது. நாற்றம் சித்தரின் மூக்கைத் துளைத்தது. உள்ளத்தின் அழுக்கைப் போக்கி கொள்ளத்தான் அவர்கள் அங்கு வந்தார்களே தவிர, உடல் அழுக்கையல்ல. பத்து நாட்களுக்கு முன்பு காசியில் கங்கைத் தண்ணீரில் மூழ்கியவர்கள், அந்தப் புனிதத் தன்மை கெட்டுப் போகாதபடி அடுத்த முழுக்குக்கு ராமேசுவரம் கடலுக்கு வந்தார்கள். உள்ளத்தைக் கழுவிக் கொள்ளச் சுவாமி தரிசனம் போதும். உடலைக் கழுவிக் கொள்ள ஒரு கட்டிச் சோப்பும் ஒரு மட்டைத் தேங்காய் நாரும் ஒரு வாளித் தண்ணீரும் வேண்டும்.

    ராமேசுவரம் கோயில் பிரகாரத்தைக் கண்டு திகைத்துப் போனார் பேரின்பநாயகம். மணலைத்தவிர கல்லையே காணமுடியாத அந்தத் தீவில் பெரிய பெரிய மலைகளை உடைத்துக் கல் தூண்கலை நிறுத்தியிருந்தான் அதைக் கட்டியவன். மனிதன் கல்லைவிட உறுதி வாய்ந்தவன்தான். கடலைத் தாண்டி மலையைத் தூக்கி வந்து கோயில் எழுப்பி யிருக்கிறான் அல்லவா?

    அன்று வைகாசி பௌர்ணமி.

    இடித்துப் புடைத்துக் கொண்டு சந்நிதியை மறைத்தது பக்தர்கள் கூட்டம். யானையைவிட பெரிதாய்ப் படுத்துக் கிடந்த நந்திக்கும், உள்ளே நட்டநடுவில் நின்ற சிவலிங்கத்துக்கும் இடையில் நெரிசல் தாங்கவில்லை. சித்த வைத்தியர் பக்தரில்லை. ஆகவே அவர் ஒதுங்கி ஓர் தூணருகில் உட்கார்ந்து, 'சிவோஹம்-- நானே சிவன்' என்று மூச்சை உள்ளே இழுத்தார். பிறகு வெளியே விட்டார்.

    நாதனுள்ளிருக்கையில் இந்த மனிதர்கள் ஏன் இப்படி நட்ட கல்லைச் சுற்றிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்று அவருக்குப் புரியவில்லை. அழுதார்கள், தொழுதார்கள், ஆடினார்கள், பாடினார்கள், அதைக் கேட்டார்கள், இதைக்கேட்டார்கள், அர்ச்சனை அபிஷேகம் என்று என்ன என்ன வெல்லாமோ செய்தார்கள்.

    பேரின்பநாயகம் எழுந்து நின்று, தம்முடைய நண்பர் ஒருவரிடம், 'போய் வருகிறேன்' என்று சொல்லும் பாவனையில் ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பினார். இதைப் போல் ஒரு நம்பிக்கையில்லாத கட்டை இங்கு எதற்காக வந்தது? வேடிக்கை பார்க்கவா?

    இங்கே மட்டும் அது வரவில்லை. இமயமலைக்குப் போய்க் கம்பளிப் போர்வையைச் சுற்றிக்கொண்டு கைலாய நாதரை வேடிக்கை பார்த்தது. காசிக்குப் போய் விசுவநாதரை விசாரித்தது. கன்னியாகுமரிக்குச் சென்று அம்மனைப் பேட்டி கண்டது. கடைசி கடைசியாக ராமேசுவரத்துக்கு வந்திருக்கிறது.

    தமக்குள்ளே உள்ள நாதனிடம் தாம் நம்பிகை வைப்பதுபோல், மற்ற மனிதர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மற்ற நாதர்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது. பார்த்த பிறகும் அவருக்குப் பக்தி ஏற்படவில்லை. மற்ற மனிதர்களிடம் அனுதாபம் கொண்டார்.

    கையில் பணமிருந்தது, தொழிலைப் பிள்ளைகள் கவனித்துக் கொண்டார்கள், வீட்டை மனைவி மேற்பார்த்தாள், கட்டையில் தெம்பிருந்தது; அவர் புறப்பட்டு விட்டார்.

    மறுநாள் காலையில் தனுஷ்கோடிக்குப் போய் சேதுக்கடற்கரையில் மூழ்கிவிட்டு ஊர் திரும்ப வேண்டியதுதான்.

    2

    அன்றைக்குப் பௌர்ணமியல்லவா? அமாவாசை-- பௌர்ணமி இந்த இரண்டு இரவுகளும் அவருக்கு மிக முக்கியமானவை. தனிமைச் சமாதியில் உட்கார்ந்து நீண்ட நேரம் தியானத்தில் முழுகி விடுவார். வீட்டில் இருக்கும்போது அறையைத் தாழிட்டுக்கொண்டு நிலைக் கண்ணாடியின் முன்னால் உட்கார்ந்து விடுகிற வழக்கம் அவருக்கு.

    இப்போது அவருக்கு அந்தத் தனிமை தேவையாக இருந்தது. சத்திரம், சாவடி, ஓட்டல் அறை ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. பெட்டிக்கடையில் ஓரணா கொடுத்து இரண்டு வாழைப்பழங்களை உள்ளே தள்ளினார். ஊருக்கு வெளியில் தென்னந்தோப்பைக் கடந்தார். தோப்பையும் தாண்டிப் பெரிய மணற் குன்று தென்பட்டது. அதன் உச்சியில் ஏறி எதிர்ப் பக்கம் பார்த்தார். பார்த்த இடமெல்லாம் பாலைப் போல் நிலவு கொட்டிக் கிடந்தது.

    ஒரு மைல் தூரத்துக்கப்பால் பசுமையும் வெண்மையும் கலந்த மணல் திட்டுக்கள் மங்கலாகத் தெரிந்தன.இடையில் அங்கங்கே தாழம் புதர்கள். அந்த இடம் அவருக்குப் பிடித்திருந்ததால் வேகமாக நடந்தார்.

    பகத்தில் வந்து பார்த்தவுடன் அந்த இடம் அவரை ஏமாற்றி விட்டது. அசைபோடும் கால்நடைகளைப் போல் திசைக்கொன்றாய்த் திரும்பி கொண்டிருந்தன மணல் மேடுகள். குத்துக் குத்தாக முளைத்திருந்த தாழம் புதர்களிலும் ஒரு ஒழுங்கில்லை.

    மேலும் நூறடி நடந்தார் ஒரே ஒரு திட்டு இயற்கையின் அழகையெல்லாம் தன்னுள் அடக்கிக்கொண்டு அவரைத் தன்னிடம் அழைத்தது. நான்கு புறமும் சுவர்போல் எழும்பியிருந்தன தாழஞ் செடிகள். கிளைக் குறுத்துக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தாழம்பூ வெடித்திருந்தது. மலர்ந்த தென்னம் பாளைகள்போல், நிலவுக் கீற்றுக்களின் தொகுப்புக்கள்போல் அவை தோன்றின. இயற்கையின் பரந்த மார்பகத்தில் இப்படி ஒரு விசித்திரமான பேரழகு கொப்பளிக்க முடியுமா? பச்சைப் புதர்களின் உச்சித் தலைகளில் கொழுந்துவிட்டெரியும் நெருப்புப் பந்தங்கள்......

    அருகில் நெருங்கப் போனவர் திடுக்கிட்டு ஒருகணம் திகைத்தார்.

    யாரோ இரண்டு பேர்கள் அந்தப் புதருக்குள் பேசும் சத்தம் கேட்டது. ஒன்று ஆண் குரல்; மற்றொன்று பெண் குரல்.

    உண்மைதானா?

    இரண்டு கடல்களுக்கு மத்தியில், இரவின் நடுச்சாமத்தில், நடுக்காட்டில் புதருக்குள், மணல்மேட்டுத் தனிமையில் மனிதக்குரல்களா? தம்மால்தான் பயத்தை வெல்ல முடியும் என்று அவர் நினைத்திருந்தார்.அவர்களுக்கு பயமாயிருக்காதா?

    சந்தடி செய்யாமல் மறைவில் இருந்துகொண்டு புதர்வழியே எட்டிப் பார்த்தார். உண்மைதான். இறுக்கிப் போயிருந்த மணல் திட்டில் இரண்டு பேர்கள் உல்லாசமான பேச்சில் ஈடுபட்டிருந்தனர். ஆண்மகனின் மடியில் தலைவைத்துப் படுத்து அவனிடம் சிணுங்கிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.

    உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விட நினைத்தார் பேரின்பநாயகம். ஆனால் கால்கள் நகரவில்லை. தம்மைவிட நூதனமான பிராணிகளாய் அவர்கள் தோன்றியதால் வேடிக்கை பார்த்தார்.

    பெண்ணின் கண்களில் வழிந்த நீர் நிலவில் மண்புழுப்போல் நெளிந்தது. அதை அவன் துடைத்து விரல்களால் சுண்டினான்.

    அவனுக்கு முப்பது வயதிருக்கும்;அவளுக்கு ஐந்து வயது குறைவாக இருக்கலாம். இருவருமே நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது.

    அவள் பேசினாள்:

    "என்னுடைய கஷ்டம் உங்களுக்கு எங்கே தெரிகிறது? நீங்களும் பெண்ணாய்ப் பிறந்திருந்தால் தெரியும். என்றைக்குமே உங்களுக்கு சிரிப்பும் விளையாட்டும் தான்."

    "பெண்ணாய்ப் பிறக்க வில்லையே என்று நான் வருத்தப் படுகிறேன்" என்றான் அவன். "பிறந்திருந்தால் கட்டியவனை அதிகாரம் செய்துகொண்டு காலந் தள்ளலாம் நூறு ரூபாய்க் காசுக்கு என்னைப்போல் ஆலாய்ப் பறக்க வேண்டியதில்லை. மதுரையில் இருபது ரூபாய் கொடுத்து நாம் குடியிருக்கும் வீட்டைப் பார்த்தால் எனக்கு எப்படிக்கோபம் வருகிறது, தெரியுமா? இடித்து அதைத் தூள் தூளாக்கத் தோன்றுகிறது."

    "நான் இருப்பது உங்களுக்குப் பாரமா யிருக்கிறதா?" என்று கேட்டாள் அவள்.

    "அப்படிச் சொல்லாதே!" என்று அவள் கன்னத்தில் அவன் செல்லமாய்த் தட்டினான். "சிரிப்பும் விளையாட்டும் எனக்கு நீ கொடுத்திருக்கிறாய். இல்லாவிட்டால் இதற்குள் நான் திருடி விட்டோ, சண்டை போட்டுக் கொண்டோ சிறைக்குப் போயிருப்பேன். அல்லது சாமியாராய்ப் போயிருப்பேன்".

    பெருமை தாங்காமல் அவள் அவனுடைய கழுத்தை வளைத்துக்கொண்டு விட்டாள்.

    "பிறகு ஏன் என்னைப் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?"

    "எதைப் புரிந்து கொள்ளவேண்டும்?"

    "நமக்குக் கல்யாணமாகி ஏழு வருஷங்களுக்கு மேல் ஆகவில்லையா?"

    "எழுபது வருஷமானால்தான் என்ன?"

    "எழுபது வருஷமானால் அப்புறம் தெரியும். உழைத்துப்போட ஒரு பிள்ளையில்லாமல் என்ன செய்வீர்களாம்?"

    "பிள்ளை, பிள்ளை, பிள்ளை! ஏழு வருஷத்தில் ஏழு பிறந்தால்தான் தெரியும் உனக்கு. ஏன், எட்டுகூடப் பிறக்கும்!"

    அவன் சிரித்தான்.

    "சிரிக்காதீர்கள்" என்று அவள் கத்தினாள்.

    "நூறு ரூபாய் சம்பளத்தில் நூலேணியாட்டம் போடுகிறோம் நாம். உனக்கோ குழந்தைப்பைத்தியம் பிடித்திருக்கிறது. வைத்தியருக்கும், மருந்துக்கும் ரொட்டி மிட்டாய்க் கடைக்காரனுக்கும் செலவு வைக்க வேண்டுமென்கிறாய் நீ."

    "ஐம்பது ரூபாய்க்குக் குறைந்து வாங்குகிறவர்களுக்கு ஐந்து குழந்தைகள் இல்லையா?"

    "அந்தக் குடும்பத்தில் ஒருநாள் தலை நீட்டிப் பார்த்தால் தெரியும்."

    உங்களுக்கு என்னைத் தெரியவே தெரியாது!" என்று அலறினாள் அவள். "நீங்கள் என்னைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கக் கூடாது."

    சண்டைக்கு வராதே! என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? ராமேசுவரத்துக்கு வரவேண்டுமென்று ஒற்றைக் காலில் நின்றாய். கூட்டிக்கொண்டு வந்தேன்."

    "உங்களுக்கு இதில் நம்பிக்கை யில்லையா?"

    "எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை யில்லை நீ நம்பினால் சரி."

    "உங்களுக்கு வேறே எதில்தான் நம்பிக்கை யுண்டு?"

    "சொல்லட்டுமா! உன்னிடம் நம்பிக்கை யுண்டு; என்னிடம் நம்பிக்கை யுண்டு." அவன் உரக்கச் சிரித்தான்.

    பேரின்பநாயகத்துக்கு அவனுடைய தன்னம்பிக்கை பெருமை தந்தது. தம்முடைய தத்துவத்தின் வெற்றி என்று எண்ணிக்கொண்டார்.

    "இந்தத் தன்னம்பிக்கை போதவே போதாது" என்று சீறினாள் அவள். "மனிதர்கள் குறையுள்ளவர்கள். அவர்களுடைய குறைகளைக் கடவுள்தான் தீர்த்துவைப்பார்."

    "சரி, அப்படியே வைத்துக்கொள்."

    "நான் என்ன வைத்துக் கொள்வது?" படீரென்று எழுந்து உட்கார்ந்து அவனை வெறித்துப் பார்த்தாள். "பொய் சொல்லாமல் உங்கள் நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள். உங்களுக்கு என்னால் ஏதாவது சுகமுண்டா?"

    "எல்லாச் சுகமும் உண்டு" என்று அவள் முகத்தைத் திருப்பினான் அவன்.

    "கேவலம்! என்னை நீங்கள் பெண்ணாகவே மதிக்கவில்லை. மதித்தால் என் உணர்ச்சியை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். நான் உங்களுக்கு என்ன கொடுத்திருக்கிறேன். உங்களையே கொடுத்திருக்கிறேனா? சொல்லுங்கள்!"

    மறைவிலிருந்த பேரின்பநாயகத்தின் உடல் சிலிர்த்தது. அவள் ஏதேதோ பேசிக்கொண்டே போனாள் தாய்மை உணர்ச்சியின் தவிப்பு அவர் கண்டும் கேட்டுமிராத அளவுக்கு அந்தப்பிரதேசத்தில் எதிரொலி செய்தது. தம்முடைய கண்களில் அந்தப் பெண்ணுக்காகக் கசிந்து வழிந்த நீரை அவர் துடைத்து விட்டுக் கொண்டார்.

    அவன் அவளருகில் சென்று சமாதானம் செய்ய முயன்றான். அவள் விலகிக்கொண்டு தள்ளி உட்கார்ந்தாள்.

    "இதோ பார், உனக்காக இப்போது கோவிலுக்குப் போய் வந்தோம்."

    "'எனக்காக!' எனக்காகத்தானே? நமக்காக இல்லையே?"

    அவன் பேசவில்லை.

    "எனக்காக நீங்கள் அங்கே வந்தீர்கள்; உங்களுக்காக நான் இங்கே வந்திருக்கிறேன். நமக்குள் உள்ள உறவு இவ்வளவுதானே?"

    "என்னை நீ என்ன செய்யச் சொல்கிறாய்?" என்று கேட்டான் அவன்.

    "இனி உங்களுக்காக என்னிடம் ஒன்றுமே இல்லை. என்னைத் தொடாதீர்கள்" அவள் எழுந்து ஓடத் தொடங்கினாள்.

    அவன் பிடித்துக் கொண்டான். அவள் திமிறினாள்.

    "நீங்கள் நம்பாத வரையில் நமக்குக் குழந்தை பிறக்காது. என்னை விட்டுவிடுங்கள்." அவள் அவனுடைய பிடியை விடுவித்துக்கொண்டு போக முயன்றாள். முடியவில்லை. அவன் தோளில் ஓங்கித் தன் தலையை மோதிக்கொண்டு அந்தக் கடலே பொங்கும்படி கதறி அழுதாள்.

    "கோயிலில் நீங்கள் கையெடுத்துக் கும்பிடவில்லை. அதை நான் பார்த்தேன். நாலு பேருக்கு மத்தியில் எனக்கொன்றும் சொல்லத் தோன்றவில்லை. இனி நீங்கள் கடவுளைக் கும்பிடாதவரையில் என்னைத் தொடுவதற்கு உங்களை விட மாட்டேன். தொடாதீர்கள். எட்டி நில்லுங்கள்!"

    படபடவென்று அவள் தேகம் நடுங்கியது. அவள் மயங்கிப் போய் தரையில் துவண்டு விழுந்தாள். பேச்சு மூச்சில்லை; அசைவில்லை.

    3

    கால் மணி நேரத்தில் திரும்பவும் அவளுக்குச் சுய உணர்வு திரும்பியது. இந்தக் கால் மணிநேரத்தில் அவளுக்காக அவள் கணவன் துடித்த துடிப்பு, பட்ட வேதனை...

    அவளுடைய நாடித் துடிப்பைக் கவனித்தான். மூச்சு வருகிறதா என்று பார்த்தான். கண்களைத் திறந்து விட்டான் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டான். தட்டி எழுப்பினான். ஒன்றிலும் பயனில்லை.

    நடுக்காட்டில் நள்ளிரவில், அவள் கட்டையாக விறைத்துப் போய்விட்டாளோ என்ற பயம் அவனைப் பிடித்துக் கொண்டது. பயமும் துக்கமும் அவனைப் படாத பாடு படுத்தின. குழந்தை போல் அவள் பெயரைச் சொல்லி அழைத்துக் கேவிக் கேவி அழுதான்.

    பயம், துக்கம், வேதனை! நிராசை! ஏமாற்றம்...

    அவளைத் தூக்கி மடியில் போட்டுக்கொண்டு வானத்தை நோக்கிக் கரங்களை உயர்த்தினான். பிறகு கரங்கள் தாழ்ந்து நெஞ்சுக் கெதிரே குவிந்தன. மூடிய கண்களை அவன் திறக்க வில்லை; குவிந்த கரங்களை அவன் தாழ்த்தவில்லை. கும்பிடும் சிலையாக மாறினான்.

    கடல் காற்று சில்லென்று அவள் முகத்தில் வீசியது. கணவனின் கண்ணீர் அவள் கண்களில் வழிந்தது. மெல்ல மெல்ல அவள் கண்களைத் திறந்தாள். உதடுகள் துடித்தன. நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது.

    அவளுக்கு தன்னுடைய துணைவனின் கோலத்தை நம்பவே முடியவில்லை. நன்றாக மூர்ச்சை தெளிந்தவுடன் அவனைப் பார்த்து பல் தெரியச் சிரித்தாள். கும்பிட்ட அவன் கரங்களை அன்புடன் பற்றித் தன்னுடைய நெஞ்சில் புதைத்துக்கொண்டாள்.

    நேரம் சென்றது. நிலவு உச்சி வானத்தை விட்டு மேற்கில் ஒதுங்கி அவர்களை வேடிக்கை பார்த்தது.

    இரண்டு புறமும் இருந்த கடல்கள் நிலவு மயக்கத்தால் கொந்தளித்து ஒன்றை ஒன்று தழுவிக்கொள்வதற்கு அலைக் கரங்களை வீசிக்கொண்டன.

    ஒன்று ஆண் கடல்; மற்றொன்று பெண் கடல். - அப்படித்தான் ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார்கள்.

    ஆண் கடல் அலைகளை எழுப்பி விட்டுக்கொண்டு, முட்டி மோதிக்கொண்டு, சீற்றத்துடன் ஆரவாரம் செய்தது. பெண் கடலின் கொந்தளிப்பு வெளியில் தெரியவில்லை.அமைதியாக அலைகளைச் சுருளவிட்டு மென்காற்றில் அது கிளு கிளுத்தது.

    பேரின்பநாயகம் கடல்களின் நிலையில் அந்தத் தம்பதிகளைக் கண்டார். சந்தடி செய்யாமல் அவர்களுடைய தனிமைக்கு வாழ்த்துக் கூறிவிட்டு, அந்த இடத்தை விட்டு நழுவிவிட்டார்.

    கால்களுக்குப் புதிய வலிமை பிறந்துவிட்டது. காற்றைப்போல் நடந்து பழைய மணல் குன்றுக்கே வந்தார். உச்சியில் நின்று உலகத்தைத் திரும்பிப் பார்த்தார்.

    அவருடைய சித்தத்துக்குள்ளே அடைபட்டுக் கிடந்த 'நான்' என்னும் புலி, அதை உடைத்துக்கொண்டு வெளியே பாய்வதற்காகப் பயங்கரமாக உறுமியது. யாரோ முன்பின் தெரியாத ஒரு பெண் பிள்ளை, தன்னுடைய வேதனைச் சுமையெல்லாம் அவளை அறியாமலே இறக்கிவிட்டு, தான் பாட்டில் அங்கே தன் கணவனுடன் உல்லாசமாய்க் குலவிக் கொண்டிருந்தாள்.

    அவளுடைய கண்ணீர்த் துளிகள் இங்கே இவரது சித்த சாகரத்தில், அறுபதாண்டுகள் வரையிலும் ஏற்படாத கடும் புயலை எழுப்பிவிட்டன.

    நாதன் உள் இருப்பது உண்மைதான். ஆனால் அந்த நாதனைத் தம்மைத் தவிர வேறு யாருமே நம்பவில்லையே? தம்மை நம்பியவர்கள் தம்முடைய பணத்துக்காக, மருந்துக்காக, தம்முடைய உடைமைகளுக்காக நம்பினார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் கண்ணீர் வெறும் நம்பிக்கையால் துடைக்கப்பட்டுவிட்டதே!

    நம்பிக்கை....

    உருவம் இல்லாத ஒன்று, பெயர் இல்லாத ஒன்று, நிறம் இல்லாத ஒன்று, பணம் இல்லாத ஒன்று - இதற்கு உருவம் கொடுத்து, பெயர் கொடுத்து, நிறம் கொடுத்து, பொருள் கொடுத்து எப்படியெல்லாம் நம்புகிறார்கள் இந்த மனிதர்கள்! நாதன் வெளியிலும் இருக்கிறானா? அவனுக்கு கண்ணீர்தான் காணிக்கையா?

    அவருடைய கண்ணீர் கரை புரண்டு வடிந்தது. "கடவுளே! அந்த ஏழைப் பெண்ணுக்கு ஓர் குழந்தையைக் கொடு! அவளுடைய துன்பத்தைப் போக்கு!" என்று தமக்குள்ளே கதறினார்

    இரவெல்லாம் பக்திப் பெருக்கு அவரை ஆட்டிவைத்து விளையாட்டுப் பார்த்தது. பொழுது புலரும் வேளையில் இரண்டு கடல்கள் கூடும் சேதுக் கரைக்கு அவர் குளிக்கப் போனார். அங்கே அவருக்கு முன்னால் அந்த இளம் தம்பதிகள் ஒன்றாய்க் குளித்துக்கொண்டிருந்தார்கள் அவர்களது முகங்களில் எல்லையற்ற மகிழ்ச்சி தண்டவமாடியது.

    தனுஷ்கோடியிலிருந்து நடுப்பகலில் ரெயில் புறப்பட்டது. என்ன திருவிளையாடல் இது! அவர் உட்கார்ந்திருந்த அதே பெட்டியில் அவருடைய பலகைக்கு எதிரில் வந்து உட்கார்ந்தார்கள் அந்தத் தம்பதிகள். பேரின்பநாயகம் அவர்களைப் பார்த்துச் சிரித்துவிட்டு, தாமே அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்.

    பேச்சு அவரை அறியாமலே வெளிப்பட்டதென்று சொல்லலாம்.

    "உங்களுக்கு அடுத்த வருஷம் கட்டாயம் குழந்தை பிறக்கும். அப்படிப் பிறந்தால் என்ன தருகிறீர்கள்?"

    அந்தப் பெண் பிள்ளையின் முகத்தில் குபீரென்று புதுக்களை பொங்கி வழிந்தது. ஆனந்தப் பெருக்கில் அவளுக்கு அவரிடம் என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை.

    "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று தடுமாறினாள்.

    பெரியவர் அவள் கணவனைத் திரும்பிப் பார்த்தார். அவன் கண்களில் கேலிச் சிரிப்புத் துள்ளத் தொடங்கியது. 'பணம் பிடுங்கும் சாமி ஒன்று எதிரில் வந்து கழுத்தறுக்கத் தொடங்கிவிட்டதே! இவள் நம்மைச் சும்மா விடமாட்டாளே!'

    சித்த வைத்தியர் அவன் சிரிப்பைக் கண்டுபிடித்துவிட்டார்.

    துணிப் பைக்குள் இருந்த சித்தர் பாடல் தொகுப்பை வெடுக்கென்று வெளியில் இழுத்தார். பாம்பாட்டிச் சித்தரின் பதினேழாவது பக்கத்தில் பதுங்கியிருந்த பணக் கற்றை பக்குவமாய்க் கீழே விழுந்தது. இளைஞன் பிரமித்தான். 'கட்டை வெறுங் கட்டை இல்லை போல் இருக்கிறதே! புத்தம் புது நோட்டை அச்சடித்து வைத்திருக்கிறதோ?'

    "இதில் உங்கள் இருப்பிடத்தை எழுதிக் கொடுங்கள்" என்று துண்டுக் காகிதத்தை அவனிடம் நீட்டினார்.

    பணத்தைக் கண்டவுடன் அவனுக்கு அவரிடம் மரியாதை பிறந்துவிட்டது. எழுதிக் கொடுத்தான். தம்முடைய அச்சிட்ட முகவரிச் சீட்டையும் அவனிடம் கொடுத்தார். அவனுக்கு அதைப் படித்தவுடன் தூக்கி வாரிப் போட்டது.

    "குழந்தை பிறந்தவுடன் ஒரு முக்காலணா கார்டு போடுங்கள். நான் உங்கள் வீட்டுக்கு வருகிறேன். ஒரே ஒரு நிமிஷம் அதை என் கையில் கொடுத்தால் போதும். ஒரு முத்தம் கொடுத்து விட்டு உங்களிடம் திருப்பி கொடுத்து விடுகிறேன். எனக்கு அதுதான் காணிக்கை."

    "பிறந்தால் நாங்களே கொண்டு வருகிறோம்." "பிறந்தாலாவது! பிறக்கும்."

    அவர்களுக்கு குழந்தை பிறக்க வேண்டுமென்று தினந்தோறும் கடவுளை வேண்டிக்கொண்டார் பேரின்பநாயகம். அன்றிலிருந்து அவர் சித்தர் அல்ல ; பக்தர்.
    -------------


    5. வெள்ளம் வந்தது


    வறண்டு கிடந்த வானத்துக்குத் திடீரென்று ஆனந்தம் வந்துவிட்டதோ, துக்கம் வந்துவிட்டதோ தெரியவில்லை. கொட்டுக்கொட்டென்று கொட்டித் தீர்த்து, நாடு நகரமெங்கும் ஒரே வெள்ளக் காடாக மாற்றிவிட்டது. மழையோடு இடியும் புயலும் சேர்ந்துகொண்டால் கேட்கவா வேண்டும்? -- சில மாதங்களுக்கு முன்பு சென்னை, மதுரை முதலிய இடங்களைச் சூழ்ந்து பெய்த மழையைத்தான் சொல் கிறேன். சென்னை நகரத்து மாடி வீட்டுக் குழந்தைகள் மாடிச் சன்னல்கள் வழியாக மழைக்காற்றில் தலைவிரித்தாடும் தென்னை மரங்களை வேடிக்கைப் பார்த்தார்கள். பொழிந்து தள்ளும் மழைப் பெருக்கில் திளைத்து விளையாடத் துடித்தார்கள். ஆனால் பெரியவர்கள் அவர்களை விடவில்லை.

    சிற்சில குழந்தைகள் மட்டிலும் காகிதக் கப்பல்கள் செய்து, வீட்டுக்கு வெளியில் வழிந்தோடும் வெள்ளத்தில் விட்டுப் பார்த்தார்கள். காகிதக் கப்பல்கள் சிறிது தூரம் நேராகச் சென்றன; பிறகு காற்றில் சுழன்றன; பிறகு நீருக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து எழுந்தன. பிறகு தலை குப்புறவோ பக்கவாட்டிலோ சாய்ந்து அமிழ்ந்தே போய் விட்டன. குழந்தைகள் கைக்கொட்டிச் சிரித்தார்கள். புதிய கப்பல்களை அனுப்பிவைத்தார்கள்.

    அதே சமயத்தில் சென்னை நகரத்தின் பிரசித்தி பெற்ற கூவம் நதிப் பெருக்கிலும் பல கப்பல்கள் மிதந்துகொண்டிருந்தன. ஆனால் காகிதக் கப்பல்களல்ல; கூரைக் கப்பல்கள். கூரைக் கப்பல்களா! ஆமாம்; வீட்டுக் கூரைகள்தான்; குடிசைகள்தான்.

    குப்பத்துக் குழந்தைகளும் பெரியவர்களும் கூட்டங் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அந்த வேடிக்கை விளையாட்டில்லை; கண்களில் உற்சாகமோ, உல்லாசமோ சிறிதும் இல்லை.

    கடலுக்குள் கட்டு மரத்தில் போய் மீன் பிடித்து வரும் குப்பத்துக் குப்புசாமியின் குடும்பமும் அங்கே நின்றுகொண்டிருந்தது. குப்புசாமி, அவன் மனைவி முனியம்மா, பத்து வயது பையன் துலுக்காணம் இந்தமூவரும், கடலுக்குள்ளிருந்து கரையில் இழுத்து போட்ட மீன்களைப் போல் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய குடிசை, காகிதக் கப்பலின் கடைசி நிமிஷம்போல் வெள்ளத்துக்குள் அமிழ்ந்து- அமிழ்ந்து எழுந்தபடியே வெள்ளத்தோடு வெள்ளமாய்ப் போய்க்கொண்டிருந்தது.

    தகப்பன் தாய் இருவரையும்விட அந்தப் பத்து வயதுப் பையன் துலுக்காணத்துக்குத்தான் அதிகமான ஆத்திரம். அவன் ஒரு கந்தலில் முடிந்து பதினைந்து நயாபைசா காசைக் கூரைக்குள் ஒரு பக்கம் சொருகி வைத்திருந்தான். ஒரு மாதமாய்த் தன் தகப்பனிடம் அடம் பிடித்துச் சேர்த்து வைத்த காசு அது.

    குடிசை போனது பற்றிக்கூடத் துலுக்காணத்துக்குக் கவலையில்லை. அந்த பொல்லாத குடிசை அவனுடைய பதினைந்து நயா பைசா காசையுமல்லவா எடுத்துக்கொண்டு போய்விட்டது?

    மரத்திலே ஒரே ஒரு மாம் பிஞ்சு தோன்றி, நாளுக்கு நாள் அது பெரிதாகி, காயாகி, பிறகு பழுக்கிற வரையில் தினமும் அதை ஒருவன் வாயில் நீர் ஊற எதிர்பார்த்து நிற்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். பழமும் பழுக்கிறது; அதை அவன் மறுநாள் ஏறிப் பறிக்க நினைக்கிறான். மறுநாள் அதை மரத்தில் தேடிப் பார்க்கும்போதோ, அணில் கடித்துப்போட்ட வெறுங் கொட்டை கீழே தரையில் கிடக்கிறது!

    துலுக்காணத்தின் நிலையும் அப்படித்தான். ஒரு மாதம் பாடுபட்டுப் பதினைந்து நயாபைசா சேர்த்தாகிவிட்டது. அதை வைத்துக்கொண்டு ஒரு பெரிய சுகத்தை அனுபவிப்பதற்காக அவன் நல்ல நாள் பார்த்துக்கொண்டிருந்தான். தகப்பன் கடல் மேலே போன பிறகு, அடுத்த தெருவுக்கு அடுத்த தெருவில் உள்ள ஓர் ஓட்டலுக்குப் போய் ஒரு தட்டுச் சாம்பார் சாதம் சாப்பிடவேண்டும் என்பது அவனது நெடு நாளைய ஆசை.

    எப்போதோ ஒரு முறை அப்பனோடு அவன் அந்த ஓட்டலுக்குப் போயிருக்கிறான். அவன் தாய் முனியம்மா உடம்பு சரியில்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த சமயம் அது. அந்த ஓட்டல் சாம்பார் சாதம் மிகவும் குறைவாய்த்தான் இருந்தது. ஆனால் என்ன ருசி! என்ன ருசி! பதினைந்து நயா பைசாவுக்கு நெய் மணக்கும் சாம்பார் சாதத்தை அல்வாத் துண்டு போல் பிளேட்டில் வைத்துத் தருகிறார்களே!

    தான் அநுபவிக்க விரும்பிய சுகத்தை இப்போது நினைத்துக்கொண்டான் துலுக்காணம். அவனுடைய சொத்தைச் சுமந்துகொண்டு மிதந்த குடிசை அதற்குள் வெகுதூரம் சென்று, கண்களிலிருந்து மறைந்துவிட்டது. பொங்கிய கண்ணீர் உதட்டில் உப்புக் கரிக்க, நெய் மணக்கும் சோற்டைக் கரண்டியில் நாகரிகமாக எடுத்துச் சாப்பிடுவதாய் நினைத்துக்கொண்டு, எச்சிலை வெடுக்கென்று விழுங்கினான்.

    கொட்டும் மழை அவர்களுக்காகச் சிறிதும் இரக்கம் காட்டவில்லை. வீசுகிற காற்றும் அவர்களுக்காக நின்றுவிட வில்லை. குப்பத்துக் கூட்டம் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டே, புகலிடத்துக்காக அங்கங்கே கலையப் பார்த்தது.

    நல்ல வேளை! இயற்கை இரக்கங் காட்டாத சமயத்தில் நல்லவர்கள் சிலர் இரங்கத் தொடங்கிவிட்டார்கள். திடீரென்று சில லாரிகளும் மோட்டார்களும் அங்கு வந்து நின்றன.அவைகளில் குப்பத்துக்காரர்களை ஏறிக்கொள்ளச் சொன்னார்கள். துலுக்காணமும் தன் பெற்றோர்களோடு ஓடிப் போய் ஒரு மோட்டாரில் தொத்திக்கொண்டான்.

    வெள்ளக்காடாய்க் கிடந்த சென்னை நகரத்துத் தெருக்களில் கார்கள் சேற்றை அள்ளி வீசிக்கொண்டு புறப்பட்டன. இரு புறமும் விழுந்து கிடக்கும் மரங்களையும், மின் விளக்குக் கம்பங்களையும் பார்த்துக்கொண்டே போனான் துலுக்காணம். இரு புறமும் காணப்பட்ட கெட்டிக் கட்டிட வீடுகளும் அவன் கண்களில் பட்டன.

    "ஏம்பா,இந்த வீடுகள்ளே இருக்கவங்கள்ளாம் நம்பளோட வரலையே! பாவம், இவுங்க என்ன செய்வாங்க?" என்று தன் தகப்பனைக் கேட்டான் துலுக்காணம்.

    குப்புச்சாமி சிரித்தான். சிரித்துவிட்டு, "மழையும் புயலும் நமக்குத் தாண்டா கண்ணு! காசு வச்சிருக்கவங்களைக் கண்டா கடவுள்கூடப் பயப்படுவாரு!"

    காசு என்ற பேச்சு காதில் விழுந்தவுடன் துலுக்காணத்துக்கு வேறு எந்த நினைவும் எழவில்லை. வேறு புறம் திரும்பித் தன் தகப்பனுக்குத் தெரியாமல் நாவால் ஒருமுறை உதட்டைத் துழாவிக்கொண்டான்.'ஹும்! ஒரு பிளேட் சாம்பார் சாதம் வெள்ளத்தில் கரைந்தே விட்டது' என்ற ஏக்கம் அவனுக்கு.

    மோட்டாரில் இருந்தவர்கள் தங்களுக்கு உதவி செய்தவர்களை வாழ்த்திக்கொண்டு வந்தார்கள். நல்ல மனமுள்ள சில சினிமாக்காரர்களும், வேறு சில செல்வந்தர்களும், இரக்க குணம் படைத்தவர்களும் அவர்களுக்குப் புகலிடம் கொடுக்க முன் வந்திருக்கிறார்களாம். அதோடு உணவும் உடையும் கூடக் கிடைக்குமென்று பேசிக்கொண்டார்கள்.

    பள்ளிக்கூடங்கள் , அரசாங்க அலுவலகங்கள், திரைப்படத் தயாரிப்பு நிலையங்கள், சில பெரிய மாளிகைகள் இப்படி வெவ்வேறு இடங்களுக்குக் கார்கள் பிரிந்து சென்றன.

    துலுக்காணம் முதலியவர்கள் ஏறியிருந்த மோட்டார் பெரிய மாளிகைபோல் தோன்றிய ஒரு கட்டிடத்தின் காம்பவுண்டுக்குள் நுழைந்தது. பிறகு ஒரு பிரும்மாண்டமான கூடத்தின் அருகில் நின்றது. அங்கு நின்றவர்கள் அவர்களை அழைத்துக்கொண்டு போய் உள்ளே தங்கச் சொன்னார்கள்.

    துலுக்காணத்துக்குத் தன் கண்களையும் காதுகளையும் நம்பவே முடியவில்லை. இத்தனை பெரிய இடத்துக்குள் போகச் சொல்கிறர்களே! தாயும் தகப்பனும் அவனையும் பிடித்து இழுத்ததால், குளிரோடு சேர்த்துப் பயத்தையும் உதறிக்கொண்டு, மெல்ல உள்ளே நுழைந்தான்.

    உள்ளே அந்தக் கூடத்தில் கண்ட காட்சியை அவன் அதுவரையில் நேரில் பார்த்ததேயில்லை. திரைப்படத்தில் எப்போதோ அவன் ஒரே ஒரு முறை பார்த்திருக்கிறான். அந்தக் காட்சியும் சீக்கிரம் மறைந்துவிட்டது.

    அவன் பார்த்தது உண்மைதான் என்று நம்புவதற்கு அவனுக்கு வெகுநேரம் சென்றது. அவன் நடந்து சென்றதரை வழவழவென்று பளிங்கு போலிருந்தது. ஒருபுறம் மெத்தை வைத்துத் தைத்த நாற்காலிகளும் சோபாக்களும் ஒதுங்கிக்கிடந்தன. கண்ணைப் பறிக்கும் திரைத் துணிகள். மேலே அண்ணாந்து பார்த்தான். எங்கும் விசிறிகள், மின் விளக்குகள், என்னென்னவோ, அவனால் புரிந்துகொள்ள முடியாத சாமான்கள்.

    அவ்வளவும் அவனுக்குப் பிரமிப்பைத் தந்தன வென்றாலும், அந்த மாளிகையிலும் அவனுக்கு ஒரு குறை தென்படாமல் இல்லை. ஒருமாதம் கஷ்டப்பட்டுப் பதினைந்து நயாபைசா காசைச் சேர்க்க முடிந்தால், அதை எப்படிக் கந்தலில் முடிந்து, கூரையில் சொருகுவது? தலையைத் தட்டுகிற உயரத்தில் கீற்றுக்கூரை போட்டிருந்தால் எவ்வளவு வசதியாய் இருக்கும்?

    நன்றாக உற்றுப் பார்த்தான். அங்கே காசைச் சேர்த்து வைக்கிறாற்போல் ஓர் இடம்கூடத் தென்படவில்லை. 'ப்பூ இவ்வளவுதானா?" என்று தனக்குள் அலட்சியமாய்ச் சொல்லிக்கொண்டான்.

    அவனுடைய அலட்சியம் அடங்குவதற்குள் அங்கு மற்றோர் அதிசயம் நடந்தது. எல்லோரையும் வரிசையாக வந்து உட்காரச் சொன்னார்கள். துலுக்காணமும் தன்னைப் பெற்றவர்களுக்கு மத்தியில் உட்கார்ந்தான். உட்கார்ந்த சிறிது நேரத்தில் ஒவ்வொருவர் கரங்களிலும் ஒவ்வொரு காகிதப் பொட்டலம் வந்து விழுந்தது. பொட்டலங்களைப் பிரிப்பதற்கு முன்பே 'கும்' மென்று நெய் வாசனை வீசியது.

    துலுக்காணம் தன் பொட்டலத்தைப் பிரித்தவுடன் தன்னை ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொண்டான். அவன் சொப்பனம் காணவில்லை. அவன் கையில் சூடான சாம்பார் சாதப் பொட்டணம் தான். சந்தேகமேயில்லை; சந்தேகமே இல்லை; சாம்பார் சாதமேதான்...

    துலுக்காணத்தின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது. இடது கையால் தன் பரட்டைத் தலையை ஒதுக்கி விட்டுக்கொண்டான். சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டான். வெகுநேரம் அதைப் பார்த்துக்கொண்டே மெல்ல மெல்லச் சாப்பிட்டான். மற்றவர்கள் சாப்பிட்ட பிறகும் அவசரமில்லாமல் சாப்பிட்டான். சீக்கிரம் தீர்ந்துவிடக் கூடாதல்லவா? பிறகு, இலையைப் பள பள வென்று சுத்தப்படுத்தினான். தூக்கி எறிய மனமில்லாமல் எறிந்துவிட்டுக் குழாயில் கையைக் கழுவினான்.

    அன்றைக்கு மாலை அங்கே மற்றோர் அதிசயம் நடந்தது. எல்லோருக்கும் கனமான போர்வைகள் கொடுத்தார்கள். பெரிய போர்வை; புதுப் போர்வை. ஒவ்வொருவருக்கும் சொந்தமாகவே கொடுத்து விட்டார்கள்!

    மழையும் புயலும் வந்தாலும் வந்தது. அதிசயங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் நிகழ்ந்து கொண்டே யிருந்தன. ஈரத் துணிகளைக் கழற்றச் சொல்லி, மாற்றுத் துணிகளும் கொடுத்து விட்டார்கள்.

    இரண்டு நாட்களுக்குமேல் இப்படி இந்திர போகத்தை, குபேர சம்பத்தை, நினைத்துப் பர்க்கமுடியாத இன்ப வாழ்க்கையை அநுபவித்தான் துலுக்காணம். காலையில் இட்லி சாம்பார், மற்ற வேளைகளில் சாம்பார் சாதம், இரவில் அந்த மாளிகைக்குள்ளாகவே புதுப் போர்வைக்குள் உறக்கம்.

    'அடடா, வெள்ளம் வந்தாலும் இப்படியல்லவா வர வேண்டும்?' என்று நினைத்து ஆனந்தப்பட்டான் அவன்.

    மூன்றாவது நாள் மழை குறைந்தது; புயலும் தணிந்தது. அந்த மாளிகைக்குள்ளிருந்த வானொலிப்பெட்டிக்கு முன் பலர் கூடிக்கொண்டிருந்தார்கள்.

    "நாளையிலிருந்து மழையும் புயலும் கிடையாது. இனி சமீபத்தில் மறுபடியும் இப்படிப் பெரிய அளவில் வருவதற்கான நிலைமை இல்லை" என்றது வானொலிப் பெட்டி.

    துலுக்காணத்தின் அப்பா குப்புசாமி புன்னகை பூத்தான். அம்மா முனியம்மாள், அப்பாடா! கடவுள் ஒருவழியாகக் கண்ணை முழிச்சிட்டார்!" என்று மகிழ்ச்சியோடு கூறினாள்.

    துலுக்காணம் உம்மென்று முகத்தை என்னவோபோல் வைத்துக்கொண்டு நின்றான். 'கடவுள் எதுக்காக இப்பக் கண்ணை முழிக்கிறார்? மழையும் புயலும் இல்லேன்னா நம்ப இங்கே வந்து இவ்வளவு சுகமாகத் தங்கியிருக்க முடியுமா? இதெல்லாம் பெரியவர்களுக்குத் தெரிய மாட்டேங்குதே!'

    "அப்பா! இந்த மழை நிக்கவே படாதுப்பா!" என்று பரிதாபமாக அடம் பிடிக்கும் குரலில் கூறினான் துலுக்காணம். "நின்னுபோச்சுன்னா நம்பளை இங்கே யிருந்து போகச் சொல்வாங்கள்ள?" என்றான்.

    "சொல்லாமல் இருப்பாங்களா? சொல்லியும் போகலேன்னோ அடிச்சு விரட்டுவாங்க!" என்று கூறினான் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு குப்பத்து மனிதன்.

    துலுக்காணம் அவனை கோபத்தோடு பார்த்தான்; பார்த்துக்கொண்டே நின்றான். அவனது நெஞ்சில் இடி இடித்தது; புயல் வீசியது; மழை கொட்டியது. அதனால் ஏற்பட்ட வெள்ளம் அவன் கண்களில் பெருகியது.

    மகனின் கண்ணீருக்குக் காரணம் தெரியாத குப்புச்சாமி அதை மெல்லத் துடைத்து விட்டான், அவன் கண்களை இந்த சமுதாயம் துடைத்து விட்டதைப் போல, இந்தக் கண் துடைப்பால் துலுக்காணத்தின் கண்ணீர் நிற்கவில்லை; வெள்ளம் வடியவில்லை. -----------------


    6. நினைப்பு


    பிற்பகல் மூன்று மணி.

    சமஸ்தானத்துப் பெரிய ஆஸ்பத்திரிக்கு அப்போது சோம்பல் முறிக்கும் நேரம். தூங்குகிற நோயாளிகள் தூங்குவார்கள்; தூக்கம் வராதவர்கள் ஏங்குவார்கள்; அல்லது, அடுத்தவர் தூக்கத்தைக் கெடுப்பார்கள்.

    ஆஸ்பத்திரிக்கே உரிய அபூர்வமான மணம் மின்விசிறிக் காற்றில் சோம்பலுடன் சுழன்றுகொண்டிருந்தது.

    ஏழாம் நம்பர் வார்டில், பன்னிரண்டாம் நம்பர் படுக்கைகார ரத்தினம் பிள்ளை, ஆஸ்பத்திரி வேலைக்காரி வெள்ளயம்மாளிடம் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டிருந்தார். வெள்ளையம்மாள் நல்ல அழகி; வயசு முப்பது.

    ரத்தினம் பிள்ளைக்கு அவளைவிட இருபது இருபத்தைந்து வயசு அதிகம் இருக்கும். வாட்ட சாட்டமாக இருந்த உடம்பின் அடையாளங்கள் இப்போது அவரிடம் வற்றியிருந்தன. வழுக்கை தலையைச் சுற்றிலும் கருப்பும் வெள்ளையும் கலந்து ஒட்டிக்கொண்டிருந்தன.

    அவர்கள் ஏதோ கசமுசவென்று ஒருவர் காதை ஒருவர் கடித்துக்கொண்டார்கள். இப்படி அவர்கள் ரகசியம் பேசுவது முப்பதாவது தடவையாக இருக்கலாம்.

    பத்தாம் நம்பர் படுக்கையும் பதினோராம் நம்பர் படுக்கையும் அந்தக் காட்சியைச் சிறிது பொறாமையுடன் உற்றுப் பார்த்தன. அடுத்தாற்போல் தமக்குள் ஒன்றை ஒன்று உற்றுப் பார்த்துக்கொண்டன.

    பத்து இளவட்டம்; பதினொன்று நடுவட்டம். ஒன்றுக்கு வயசு இருபத்தைந்து; மற்றொன்றுக்கு முப்பத்தைந்து. இரண்டுமே இளமையைப் பறிகொடுத்த எலும்புக் கூடுகள்.

    படுக்கையில் கிடந்தபடியே, பத்து பதினொன்றின் தோளில் ஒரு குத்துக் குத்தி, "அதைக் கொஞ்சம் பாரு பக்கிரி" என்று பல்லைக் காட்டியது.

    "டே மாணிக்கம்! பிள்ளைவாளுக்கு இப்பத்தான் வாலிபம் திரும்பியிருக்கு! காடு வாவான்னு கூப்பிடுது; இவரோ வெள்ளையம்மாளைக் கூப்பிடுகிறார்."

    "போப்பா! நம்ப கூப்பிட்டா ஏன்னுகூடக் கேட்க மாட்டேங்கறா!" என்று தன் ஏக்கத்தை கொட்டிக் கவிழ்த்தது பத்து.

    இதையெல்லாம் நம்பர் பன்னிரண்டும் காதில் போட்டுக் கொள்ளவில்லை; சிவப்புச் சேலைக்கார வெள்ளையம்மாளும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

    "பன்னெண்டுக்குப் படுக்கை வசதியா அமைஞ்சு போச்சு; கடைசிப் படுக்கையாவும் இருக்கு; அப்பாலே, அதை மறைச்சுக்கிட்டுச் சுவரும் நிக்குது." "கிழட்டுப்பய அவளுக்குச் சொக்குப் பொடி போட்டுட்டான்பா!"

    "கிழவன் போட்ற மூக்குப் பொடியிலே மயங்கியிருப்பா!" பதினொன்று சிரித்தது.

    பழுத்த பழமான பன்னிரண்டு இப்போது சுவர்ப் பக்கமாக மெல்லக் கீழே இறங்கியது. இடுப்பைப் பிடித்துக் கொண்டே தரையில் உட்கார்ந்து இரும்பு அலமாரிக்குள் கையை விட்டது. வெள்ளையம்மாளும் கீழே குந்திக்கொண்டு தன் சிவப்புச் சேலையின் முன்றானையை விரித்தாள். அலமாரிக்குள் இருந்த பொருள்கள் முன்றானைக்குள் மறைந்தன.

    அதை இழுத்துச் செருகிக்கொண்டு பன்னிரண்டுக்குக்கை கொடுத்தாள். தூக்கிவிட்டாள். முக்கி முனகிக் கொண்டே அது திரும்பவும் படுக்கையில் உட்கார்ந்தது.

    "வரட்டுமா?" செல்லமாய்க் கேட்டாள் வெள்ளையம்மாள்.

    'போய் வா!' என்பதுபோல் புன்னகை செய்தார் ரத்தினம் பிள்ளை. அவள் மறைந்தவுடன் புன்னகை மறைந்தது. பிறகு அவர் இரும்பு உத்தரங்களை அண்ணாந்து பார்த்தார். நெற்றியை அழுத்தித் தேய்த்துக் கொண்டார். தேய்த்துக்கொண்டே இடக் கரம் நெற்றியைவிட்டுக் கீழே இறங்கியபோது அதில் கண்ணீர்ப் பசை ஒட்டியிருந்தது.

    "ஏம்பா, வீடுவாசல் ஒண்ணும் கிடையாது போலிருக்கு! யாரும் வந்து, எதையும் கொண்டாந்து கொடுக்கிறதுமில்லை. அப்படியிருக்கிறப்போ, ஆஸ்பத்திரியிலே கொடுக்கிற ரொட்டியையும் சக்கரைத் தூளையும், அவகிட்ட தானம் பண்ணிட்டா, வயிறு என்ன செய்யும்?" பதினொன்று பத்தினிடம் கேட்டது.

    "வயிறு என்ன செய்யும்? காயும்! அது சுத்தமாய்க் காஞ்சு உசிரைக் குடிக்காம இருக்கறதுக்குத்தான், அந்தக் கிழம், பாலைக் குடிக்குது. பசும் பால் வேறே கொடுக்கிறாங்களே!" "அதையும் அவகிட்ட கொடுத்திட்டா?"

    "அவளோட முகத்தைப் பார்க்கறதுக்கு உசிரு நிலைக்க வேண்டாமா? ஆமா, இது பழைய கேஸோ?"

    "வந்து ரெண்டு மூணு மாசம் ஆச்சாம். இனிமே இது எங்கே திரும்பப் போவுது? ரொட்டியும் சக்கரையும் கொடுத்தது போதாதுன்னு, ஆஸ்பத்திரியிலே தர்ர எல்லாத்தையுமே அவகிட்டக் கொட்டி அழுதுட்டு, பட்டினி கிடந்தே சாகப் போகுது."

    "வெள்ளையம்மா ரொம்பப் பொல்லாதவ!" என்றான் பக்கிரி; "அவளோட மூஞ்சியும், முகறையும், திமிரும்..."

    "எட்டாத பழம் புளிக்கும்னு ஒரு குள்ள நரி சொல்லுச்சாம், அதைப் போல..." மாணிக்கம் சிரித்தான்.

    ரத்தினம் பிள்ளையின் காதில் இந்தப் பேச்செல்லாம் அரை குறையாய் விழுந்துகொண்டிருந்தன. அவர் அவர்களைப் பார்த்து முறைத்தார்.

    "என்ன தாத்தா, முறைக்கிறிங்க?" மாணிக்கம் கேட்டான்.

    "ஏண்டா, தம்பிகளா! உங்க நாற வாயை வச்சுக்கிட்டுக் கொஞ்சம் சும்மா இருக்கமாட்டிங்க?" காரசாரமாகவே பேசினார் ரத்தினம் பிள்ளை.

    "தாத்தா! உங்களுக்கும் வெள்ளையம்மாளுக்கும் என்ன உறவு?" இது பக்கிரி.

    "பார்த்தாத் தெரியலையா?" என்று பதிலளித்தான் மாணிக்கம்.

    "பெரிய டாக்டர்கிட்டே சொல்லி, உங்க வாயை ஊசி போட்டுத் தைக்கச் சொல்லப்போறேன்" என்றார் ரத்தினம் பிள்ளை.

    "ஓஹோ! 'ரிப்போர்ட்' பண்ணப் போறிங்களா? பண்ணுங்க,பண்ணுங்க!" என்றான் பக்கிரி; "நாங்க பண்ணினா என்ன நடக்கும் தெரியுமா? உங்க வெள்ளையம்மாளோட கள்ளத்தனம் வெளிப்படும். அவளுக்குச் சீட்டுக் கிழியும்; உங்களுக்கும் முதுகு கிழியும்!" அவர்களுடைய வாயைத் தைக்கச் சொல்வதாகப் பயமுறுத்திய ரத்தினம் பிள்ளை, தம்முடைய வாய்க்குத் தாமே தையல் போட்டுக்கொண்டார். பக்கத்தில் கிடந்த பஞ்சை எடுத்துத் தம் காதுகளில் அடைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தார்.

    2

    ரத்தினம் பிள்ளைக்கு முதலில் கை கால் வீக்கம். பிறகு அது வடிந்தவுடன் வேறொரு வியாதி. அடுத்தாற்போல் இன்னொன்று. இப்படி ஒன்று போக ஒன்று.

    அவருடைய உண்மையான நோய்க்கு அந்த ஆஸ்பத்திரியில் மருந்து கிடையாது. பரந்த உலகமான பெரிய ஆஸ்பத்திரியில் அவர் தேடிக் களைத்துப்போன மருந்து அது. பணமே அவருடைய மருந்து.

    கடுமையான உழைப்பால் ஏற்பட்ட உடல் தளர்ச்சி, அதனால் ஏற்பட்ட மனத் தளர்ச்சி, மனைவி, மக்கள், அவர்களுடைய வாய்கள், வயிறுகள், ஆசைகள், ஆத்திரங்கள் இவையே அவருடைய வியாதிகள். பணக்கவலையே அவர் மனக்கவலை.

    நன்றாக இருந்த காலத்தில் நன்றாக உழைத்தார்; நன்றாகச் சம்பாதித்தார்; நன்றாகச் சாப்பிட்டார். சாகும் வரையில் இப்படியே உழைத்துச் சம்பாதித்துச் சாப்பிட முடியுமென்று நம்பினார்.

    வெகு நாட்கள் குழந்தை இல்லாமலிருந்து, பிறகு நாற்பது வயசுக்குமேல் குழந்தை பிறந்தது. முதற் குழந்தை செல்லக் குழந்தை; செல்வக் குழந்தை. அடுத்தாற்போல் தொடர்ந்து பிறந்துகொண்டே இருந்தன. சவலைக் குழந்தைகள். ஒவ்வொன்றும் பத்து மாதம் சுமந்து பெற்ற பெருமை அவர் மனைவிக்கு. அவள் தன் வயிற்றில் சுமந்து பெற்ற குழந்தைகளை அவர் தம் நெஞ்சில் சுமக்கலானார்.

    பாசம் வளர்ந்தது; அந்த அளவுக்குப் பணம் வளரவில்லை. அதனால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வளர்ந்தன. அவர் மனைவிக்குப் பாசத்தின் அருமை தெரிந்ததே தவிர, பணத்தின் அருமை தெரியவில்லை.

    உழைப்புச் சக்தி குறைந்தது; ஊதியமும் குறைந்தது. குழந்தைகள், விவரம் தெரிந்த குழந்தைகளாகிவிட்டார்கள். இதைக் கொடுத்தால் அதைக் கேட்டார்கள். மனைவி எதற்கும் குறைப்பட்டுக்கொண்டாள்.

    பிள்ளைவாள் பார்த்தார். உள்ளூரில் காலந் தள்ள முடியாதுபோல் தோன்றியது. குடும்பத்தை மனைவியின் பிறந்த வீட்டில் விட்டு வெளியூருக்குக் கிளம்பினார்.

    பல ஊர், பல தண்ணீர்,பற்பல முயற்சி, பற்பல தொல்லை, பல நாள் பட்டினி; பலன், வியாதியும் படுக்கையும். நோய்க்கு மருந்து கொடுத்தார்கள்; வயிற்றுக்கு ரொட்டியும் பாலும் கொடுத்தார்கள்.

    அந்த ரொட்டியில் சிறு அளவை மென்றுவிட்டு, மற்றதை வெள்ளையம்மாளிடம் கொடுத்தார். கிழவருக்கு ஏற்பட்ட திமிர்தானா இது? அல்லது மனக்கவலைக்கு மருந்தை அவள் முகத்தில் தேடினாரா?

    ஆஸ்பத்திரிக்குள்ளே கசமுசவென்று பேசிக்கொண்டார்கள். வாய்க்கு வாய் ரகசியம் பரவியது. கிழவருக்கும் குமரிக்கும் சேர்த்து முடிச்சுப் போட்டார்கள். அவர் ஆண்: அவள் பெண். வேறு என்ன வேண்டும்?

    ஆவணிக் கடைசியில் வந்தவருக்கு ஐப்பசி பிறந்த பிறகும் நோய் தீரவில்லை. ஒரு வேளை, அவர் தம்முடைய ரொட்டியைத் தாமே சாப்பிட்டிருந்தால் நோய் தீர்ந்திருக்குமோ என்னவோ?

    3

    தீபாவளி நெருங்கிக்கொண்டிருந்தது.

    மாலை நாலரை மணியிலிருந்து ஆறு வரையில் நோயாளிகளை வெளியில் உள்ளவர்கள் பார்க்க வரும் நேரம். அந்த ஏழாம் நம்பர் வார்டுக்கு எத்தனையோ பேர் வந்தார்கள். சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, திராட்சைப்பழம் இப்படிப் பல வகைகள் வந்தன.

    பன்னிரண்டாம் நம்பர் படுக்கைக்கு யாரும் வர வில்லை. யாரும் வருவதில்லை.

    மூன்று மணிக்கே வரக்கூடிய வெள்ளையம்மாள், மணி ஆறு ஆகியும் வரக் காணவில்லையே என்று பிள்ளை கவலைப் பட்டுக்கொண்டிருந்தார். நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.

    "பெரியவரே!" என்று ரத்தினம் பிள்ளையைக் கூப்பிட்டான் மாணிக்கம்;" நான் சொல்றனேன்னு வருத்தப்படாதிங்க. அந்தக் குட்டி உங்களை நல்லா ஏமாத்துறா. வீணா நீங்க ஏமாந்து போகப்போறீங்க."

    'அட,அயோக்கியப் பயலே, சும்மா இருடா!' என்று கத்தத் தோன்றியது அவருக்கு. ஆனால் அதே சமயம் அவள் தன்னை ஏமாற்றுகிறாளோ என்ற எண்ணமும் எழுந்தது. மூன்று மணிக்கே வருகிறவள் இன்னும் வரவில்லையே!

    வராமல் இருந்து விடுவாளோ?- நெஞ்சு வலித்தது பிள்ளையவர்களுக்கு. 'இளம் பெண்ணை நம்பி மோசம் போய் விட்டோமோ?'

    -அவள் வந்து விட்டாள், கலகலத்த சிரிப்புடன். அவள் கண்கள் சிரித்தன, உதடுகள் சிரித்தன, முகம் சிரித்தது. ரத்தினம் பிள்ளையும் நம்பிக்கையோடு சிரித்தார்.

    பக்கத்தில் வந்து, ஓர் காகிதப் பைக்குள்ளிருந்து, இரண்டு சீட்டித் துணிகளை எடுத்து அவரிடம் காண்பித்தாள் வெள்ளையம்மாள். "கடைக்குப் போய் வாங்கிட்டு வந்தேன். உங்களுக்குப் பிடிச்சிருக்கா, பாருங்க"

    கிழவரின் வாயெல்லாம் பல்லாகியது."வெள்ளையம்மா, உனக்குப் பிடிச்சிருந்தா சரி." அதைத் தம் கையால் வாங்கிப்பார்த்து மகிழ்ந்தார். விலை குறைந்த இரண்டு சீட்டித் துணிகள் உறுதியாக இருந்தன். சாயம் போகாத ரகம். விலையைச் சொன்னாள்.

    "நீ கெட்டிக்காரப் பொண்ணு, நல்லதாப் பார்த்து எடுத்திருக்கே."

    "சரி, நீங்க சொன்னபடியே செய்திடட்டுமா?"

    "மறந்திடாமல் நாளைக்கே செய்திடு."

    பத்தாம் நம்பர் பக்கிரியும், பதினோராம் நம்பர் மாணிக்கமும் கண்களால் சாயை காட்டிக்கொண்டார்கள். "கிழவன் தீபாவளிக்கு ரவிக்கைச் சீட்டி எடுத்துக் கொடுக்கிறாண்டா!"

    "கையிலே காசு வேறே கொடுப்பான் போலே இருக்கு."

    அந்த வழியாக எதேச்சையாகப் போய்க்கொண்டிருந்த நர்ஸ் ரஞ்சிதம், கையில் சீட்டித் துணிகளுடன் பிள்ளையவர்களிடம் நின்று கொண்டிருந்த வெள்ளையம்மாளைக் கண்டு விட்டாள். காலகள் வேகமாக நடை போட்டு மற்றொரு நர்ஸ் காந்தாமணியுடன் திரும்பி வந்தன. ரவிக்கைச் சீட்டியைக் கண்ட அவர்கள் கண்கள் கொப்புளித்துப் பொங்கின.

    "இப்பவே நான் கேக்கப் போறேன், பார்!" என்றாள் காந்தாமணி.

    "பொறுத்துக்க! தீபாவளி அன்னிக்கு, தச்சுப் போட்டுக்கிட்டு 'ஜம்'முன்னு வருவா; அப்போ பாத்துக்கலாம்."

    "கண்றாவி! கண்றாவி! காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு!"

    4

    ஊரெல்லாம் ஒரே தீபாவளி அமர்க்களமாக இருந்தது. அடிமடியில் சில தின்பண்டங்களை வைத்துக் கட்டிக்கொண்டு பகல் பதினொரு மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்தாள் வெள்ளையம்மாள். அன்றைக்கு அவளுக்கு விடுமுறை நாள். என்றாலும் அவரைப் பார்க்க வேண்டியிருந்தது. நோயாளிகளுக்குத் தின்பண்டம் கொடுக்கக் கூடாது என்பது சட்டம். 'தீபாவளியும் அதுவுமாக் கொஞ்சம் சாப்பிட்டால் என்ன வந்து விடும்?' என்று நினைத்தாள் அவள்.

    நர்ஸ் ரஞ்சிதமும் காந்தாமணியும் அவளை மழி மறித்துக் கொண்டார்கள். "வெள்ளையம்மா, மடியிலே என்ன வச்சிருக்கே? யாருக்குக் கொண்டுபோறே?"

    வெள்ளையம்மாள் விழித்தாள்.

    "என்னடி திருட்டு முழி முழிக்கிறே?" என்றாள் காந்தாமணி: உன்னோட வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்தாரே ரவிக்கைத் துணி, அதைத் தச்சுப் போட்டுக்கலே?"

    "நீங்க என்னம்மா சொல்றீங்க?"

    "பாவம்! ஒண்ணுந் தெரியாதவ!"என்று சிரித்தாள் ரஞ்சிதம். "போ!போ! புருஷன் தீபாவளிப் பலகாரம் வரலேன்னு காத்துக் கிடப்பாரு. கொண்டு போய்க் கொடு."

    "அம்மா, உங்க நாக்கு அழுகிப் போகும்!" என்று அலறினாள் வெள்ளையம்மாள். கண்ணீர் வெடித்துக்கொண்டு கிளம்பியது.

    "அந்தக் கிழட்டுப் 'பே ஷண்டு' உனக்கு என்ன சொந்தம்?"

    "உங்களுக்கு அவர் என்ன சொந்தமோ அதே சொந்தம்"

    " என்ன சொன்னே?"-ரஞ்சிதம் அவளைப் பிடித்துக்கொண்டு, சொற்களால் குதறிப் பிடுங்கினாள்."என்ன துணிச்சல் உனக்கு! கிழவனுக்கு வைப்பாட்டியா இருக்கிறவளுக்கு வாய் வேறேயா, வாய்?"

    "அம்மா, கொஞ்சம் நான் சொல்றதைக் கேளுங்க" என்று மன்றாடினாள் வெள்ளையம்மாள்: "அவர் யாரோ, நான் யாரோ! எனக்கு அவர் ஒண்ணும் சொந்தமில்லை. அவர் தன்னோட கதையை ஏங்கிட்ட சொன்னாரு. புள்ளை குட்டியுள்ள பெரிய குடும்பம் இருக்குதாம் அவருக்கு. வெளியூருக்குப் போய்ப் பணம் சம்பாதிச்சு அனுப்பறதாச் சொல்லிட்டு வந்தாராம்.சம்பாதிக்க வழியில்லே; நோயிலே படுத்திட்டார். வீட்டுக்கு இதைச் சொன்னா வருத்தப் படுவாங்கன்னு, வேலை தேடிக்கிட்டிருக்கிறதாக் கடுதாசி எழுதினாராம்..."

    அவள் குரலும் கண்ணீரும் அவளை நம்ப வைத்தன. இருவரும் உற்றுக் கேட்டனர்.

    "ஆஸ்பத்திரி ரொட்டியை ஏங்கிட்டக் கொடுத்து வெளியிலே விற்கச் சொன்னாரு. மாட்டேன்னு சொன்னேன். கெஞ்சினார்;அழுதார்; குடும்பக் கஷ்டத்தை எடுத்துச் சொன்னார். மனசு கேக்கல்லே. அவரோட ரொட்டியை வித்துச் சேத்த காசிலே அவர் சம்சாரத்துக்கு ரவிக்கைத்துணியும் அவர் பெண் குழந்தைக்கு ஒரு சட்டைத் துணியும் வாங்கினேன். அவரோட ஊருக்கு அதைப் பார்சல் பண்ணி அனுப்பியிருக்கு."

    "வெள்ளையம்மா........ நாங்க தப்பா நினைச்சிட்டோம், வெள்ளையம்மா!" என்று தடுமாறினான் ரஞ்சிதம்.

    "நினைப்பீங்கம்மா!" என்றாள் வெள்ளையம்மாள் ஆத்திரத்துடன்; "எலும்பிலே ஒட்டியிருக்கிற சதையைப் பார்த்திட்டு ஆம்பளைங்க நம்மைச் சுத்தி அலையற காலம் இது. கையிலே சிக்கினாக் கடிச்சுக் குதறிப் போட்டுக் கண்காணாமப் போயிடுவானுங்க."- வெள்ளையம்மாளின் குரல் தன் கசப்பான பழைய அநுபவம் எதையோ நினைத்துக்கொண்டு தழுதழுத்தது. " அப்படி ஆம்பிளைங்க இருக்கிற உலகத்திலே, தன் குடலைப் பிடுங்கி வேகவச்சுக் குடும்பத்துக்குக் கொடுக்கிற உத்தமரும் இருக்காரு... பெத்த தகப்பன் மாதிரி நினைச்சு அவரை நான் சுத்திக்கிட்டு அலையறேன்"

    கண்களைத் துடைத்துக்கொண்டு வெகு வேகமாக ரத்தினம் பிள்ளையிடம் ஓடி வந்தாள் வெள்ளையம்மாள்.

    "இந்தாங்க இதைச் சாப்பிடுங்க!"

    "வேண்டாம்" என்று தலையாட்டினார் பிள்ளை; "குழந்தைங்க அங்கே என்ன சாப்பிட்றாங்களோ, தெரியாது."

    வற்புறுத்தியதின் பேரில், வெள்ளையம்மாளின் மனம் நோக வேண்டாம் என்பதற்காக, ஒன்றை வாங்கிக் கடித்தார். அது தொண்டையில் அடைத்து விக்கிக் கொண்டது. புரை ஏறியது.

    "வீட்டிலே நினைச்சுக்கறாங்க" என்றாள் வெள்ளையம்மாள்.

    "அப்படியா!" என்று விக்கலோடு விக்கலாகக் கேட்டார் பிள்ளை.

    ஆமாம்; வீட்டில் அப்போது அவரை நினைத்துத்தான் கொண்டார்கள்; "எங்க வீட்டுக்காரருக்குப் புத்தி கெட்டுப் போச்சு. ரெண்டு சல்லாத் துணியையும், ரொட்டியையும், சக்கரைத் தூளையும் மூட்டை கட்டி அனுப்பிச்சிருக்காரு. மேலே போட்டுக்கறத்துக்கு லாயக்கான துணியா இது?"

    "ஏம்மா, அப்பா முந்தியெல்லாம் கோதுமை அல்வா வாங்கித் தருவாங்களே; இப்ப ஏன் ரொட்டி அனுப்பிச்சிருக்காங்க?" என்று கேட்டான் பிள்ளைகளில் ஒருவன்.

    "வயசானாப் புத்தி கெட்டுப் போகும்.உங்கப்பாவுக்கு வயசாயிடுச்சு."

    அவளைச் சொல்லக் குற்றமில்லை. அவர்கள் நன்றாயிருந்த போதே அவர் வாங்கி வந்த பொருள்களிலெல்லாம் குறை கண்டவள் அவள். பணக்குறை தெரியாத மனக்குறைக்காரி அவள்.

    ஆஸ்பத்திரியில் கிடந்த பிள்ளை மறுபடியும் விக்கினார். பயந்துபோய் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, சிறிது தண்ணீரை அவர் வாயில் ஊற்றினாள் வெள்ளையம்மாள்.

    சற்று நேரம் திக்குமுக்காடித் திணறிவிட்டு, "வேண்டாம் 'வெள்ளையம்மா! அரை மனசோட இதை நான் சாப்பிட வேண்டாம்" என்றார். பிறகு, "அவங்க என்னை நினைச்சுக்குவாங்கன்னு சொல்றியா?" என்று குழந்தைபோல் கேட்டார்; "உண்மையா நினைச்சுக்குவாங்களா?"

    "கட்டாயம் நினைச்சுக்குவாங்க!"

    எந்த விதமாக நினைத்துக்கொண்டார்கள் என்பது அவருக்குத் தெரியவில்லை. அவர் அனுப்பிய துணிகளை அவர் மனைவி ஒரு மூலையில் கசக்கி எறிந்தாள் என்பதும் அவருக்குத் தெரியாது.


    7. கறவையும் காளையும்


    அழகான செவலைப் பசு; அதன் அருகில் கம்பீரமான மயிலைக் காளை. கறவைப் பசுவும் காளைமாடும் ஒன்றை ஒன்று சந்தித்தவுடன் திடுக்கிட்டுத் தலை தூக்கிப் பார்த்தன. அவற்றின் கண்களிள் ஒளிவிட்ட தாப உணர்ச்சி சொற்களில் அடங்காத‌து. பழைய காதலர்களின் மறு சந்திப்பு இது.

    பழைய காதலென்றால் முதற் காதல்; இளமைப் பருவத்தில் அடி எடுத்து வைத்தவுடன் ஏற்படும் முதல் அநுபவம். மனிதர்களின் முதற் காதலைப் பற்றி எத்தனை எத்தனையோ காவியங்களும் ஓவியங்களும் தோன்றியிருக்கின்றன.

    மனிதர்கள் பல சமயங்களில் மிருக உணர்ச்சிக்கு வசப்படுவது போல், இந்தப் பசுவும் காளையும் மனித உணர்ச்சிக்கு இப்போது அடிமையாகின. தங்களுடைய அந்தக் காலத்தை‍-மறக்க நினைத்த பொற்காலத்தை‍-நினைத்துக் கொண்டன.

    அந்த நான்கு கண்களையும் ஒரு கவிஞன் கண்டிருக்க வேண்டும். ஆனால் விவசாயப் பண்ணையின் கருணையற்ற காவலாளி கண்டான். அவனுக்கு என்ன புரியும்?

    "உங்க கொட்டத்தையெல்லாந்தான் அடக்கியாச்சே! ஏன் இப்படிப் பாக்கிறீங்க?" என்று எகத்தாளமாகச் சொல்லிவிட்டு அவன் அப்பால் போனான். அவன் கொட்டம் இன்னும் அடங்கவில்லை.

    அவன் இளைஞன். அந்த மாடுகளைக் கட்டியிருந்த இடம் ஒரு நவீன விவசாயப் பண்ணை. ஒரு பக்கம் நெல் சாகுபடி செய்திருந்தார்கள்; மறுபக்கம் கரும்பும் வாழையும் வளர்ந்தன. இடையில் மரங்களும் செடிகளும் மண்டிக் கிடந்தன. இயற்கையும் செயற்கையும் முட்டி மோதிக்கொண்டிருந்த இடம் அது.

    மாட்டுத்தொழுவங்கள், கோழிக் கூடாரங்கள், தேனீப் பெட்டிகள் இப்படி பல தரப்பட்டவை அந்தப் பண்ணைக்குள் பதுங்கிக் கொண்டிருந்தன. விவசாயம் நடநிதுகொண்டிருந்த முறையை முற்றிலும் விஞ்ஞானமென்றும் சொல்ல முடியாது; அஞ்ஞானமென்றும் தள்ளமுடியாது. ஒரு பக்கம் இயந்திரங்கள் உழுதன; மற்றொரு பக்கம் மாடுகள் உழுதன. குழாய் மாட்டிய மனிதர்களும், கோவணங் கட்டிய மனிதர்களும் அங்கே ஒன்றாய் உழைத்தார்கள்.

    காளை மாடு கண்ணிமைக்கவில்லை.பசு தன் பார்வையை அகற்ற வில்லை. காளை மாட்டின் கண்களில் சுழன்ற நிழற்படமொன்று பசுவின் கண்களிலும் பிரதிபலித்தது.

    இரண்டு சொட்டுக் கண்ணீர் திரண்டது முதலில்.அடுத்தாற்போல் அது நான்கு சொட்டுக் கண்ணீராக மாறியது. பசு இதைக் கவனித்தது.

    காளையின் கண்களீல் ஏன் கலக்கம்? இது பசுவுக்குப் புரியவில்லை.

    பசுவின் கண்களில் ஏன் கசிவு? இது காளைக்கு விளங்கவில்லை.

    இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது:-

    ஏதோ ஒரு கிராமத்தின் எதிரெதிர் வீடுகளில் இரண்டும் கன்றுப் பிராயம் முதல் ஒன்றாய் வளர்ந்தன. துள்ளிக்குதித்து விளையாடின. மேய்ச்சலுக்குப் போகும்போதும் வயல் வரப்புகளில் மேயும்போதும், வீட்டிற்குத் திரும்பும் போதும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துக் காண முடியாது.

    கன்று காளையானது; கிடாரி குமரியானது.

    அடடா! அந்தக் கிராமத்துக் காளைகளிடையே எத்தனை எத்தனை போட்டா போட்டிகள்! தன் உயிரினும் மேலான உடைமையைக் காப்பாற்றும் முயற்சியில் ஒரு சமயம் அந்த இளம் காளை தன் கொம்புகளில் ஒன்றையே ஒடித்துக் கொண்டது.

    நெற்றியெல்லாம் ஒரே ரத்தம்; கொம்பு உடைந்து தொங்கியது; தாங்கமுடியாத வலி, வேதனை அதற்கு.

    ஆனால், அதன் காதலி பரிவோடு ரத்தம் தோய்ந்த அதன் முகத்தை மெல்லத் தன் நாவால் துழாவியபோது, அத்தனை வலியும் வேதனையும் எங்கே போயின?

    அந்த முதல் நாளைத்தான் மறக்க முடியுமா?

    ஆற்றங்கரைப்படுக்கையில் நாணற்புல்லை மனங்கொண்ட மட்டும் மென்றுவிட்டு, திடீரென்று தன் துணைவியை நினைத்துக்கொண்டு, நாலாபுறமும் திரும்பிப் பார்த்தது காளை. எங்கும் அதைக் காணவில்லை. பச்சைப் புல்லும் குளிர்ந்த தண்ணீரும் அதன் வயிற்றுக்குள்ளே குதூகலத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. உச்சி வெய்யில்கூட அதற்குப் பால் நிலாவாகத் தோன்றியது.

    வாலை உயர்த்திப் பட்டுக் குஞ்சம் போல் வீசிக்கொண்டு நாலு கால் பாய்ச்சலில் பறந்தது காளை.

    "ம்...ம்மா!..."

    புதருக்கு மத்தியில் ஒளிந்து நின்ற பசு தலை தூக்கிப் பார்த்தது. காளையின் குரலில் கொப்பளித்த வேகத்தைவிட அதன் பாய்ச்சல் வேகம் அதற்குப் பயங்கரனமான தொரு ஆனந்தத்தைக் கொடுத்தது. 'எதிர்வீட்டுப் பெண்தானென்றாலும் எட்டிய கரத்துக்கு அகப்படுவேனோ?' என்று கேட்கிற பாவனையில் அதுவும் துள்ளிக் குதித்து ஓடத் தொடங்கியது.

    ஓட்டப் பந்தயத்தில் அந்த ஆற்றுப் படுகையே அதிர்ந்தது.

    ஆற்றுத் தண்ணீர் அலைமோதியது.

    நாணல் புதர்கள் சின்னாபின்னமாயின. மணல் மேடு புழுதி எழுப்பிக் காளையின் கண்களை மறைத்தது.

    இனி ஓட முடியாதென்ற நிலை வந்தவுடன், ஓரக் கண்களால் காளையைத் திரும்பிப் பார்த்துவிட்டு, ஒரு மாமர நிழலில் ஒதுங்கி நின்றது பசு. தன் தோல்வியை ஒப்புக் கொள்வதாகக் காளையிடம் சாகசம் செய்துவிட்டு, உண்மையில் பருவத்தின் வெற்றியைக் கண்டது அது.

    அந்த ஒரு நிமிஷம், இந்த உலகத்திலிருந்து அவைகள் மறையும் வரையில் மறக்கமுடியாத நிமிஷம். இந்த உலகத்தை இன்ப உலகமென்றும், அழியா உலகமென்றும் நம்ப வைத்த நிமிஷம்.

    அதன் பிறகு காளை கம்பீரமாக முன்னே நடந்து சென்றது. பசு பணிவோடு அதைப் பின்பற்றியது.

    பத்தே மாதங்களில் அவர்களுக்கு ஒரு படு சுட்டி பிறந்தான். தகப்பனைப் போன்ற அதே மயிலை நிறம்; அதே கண்கள்; அதே மிடுக்கும் துடிப்பும்.

    இதெல்லாம் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய கதை.

    எதிர் வீட்டுப் பசுவையும் கன்றையும் யாரோ விலை கொடுத்து வாங்கிக் கொண்டு போனார்கள். பிறகு கன்றையும் தாயையும் பிரித்தார்கள். கடைசியில் பசு இந்த நாகரிகப் பண்ணைக்கு- விஞ்ஞானப் பண்ணை என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்-வந்து சேர்ந்தது.

    வந்த பிறகு இதுதான் முதல் சந்திப்பு. பிரிவுக்குப் பின் ஏற்படுகிற சந்திப்பு.

    இப்போது பசுவுக்கு நிறைமாதம். அடுத்த குழந்தையை அது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. �அது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது� என்று சொன்னேனா? தப்பு! அதை வளர்த்தவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    காளை மெல்லத் தன் வாயைப் பசுவின் காதருகில் கொண்டு சென்றது. தயங்கித் தயங்கிக் கேட்டது.

    "அடுத்த குழந்தையா?"

    பசு கண்களை மூடிக்கொண்டது.

    "குழந்தையின் தகப்பன் யார்? நான் பார்க்கலாமா?"

    பசுவின் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் வந்தது.

    "பதில் சொல்லக் கூடாதா?" என்று ஏக்கத்தோடு கேட்டது காளை. "நான் கேட்கிறேன்; சொல்லக் கூடாதா?"

    கதறி அழவேண்டும் போலிருந்தது பசுவுக்கு. காவற்காரனுக்குப் பயந்து, பல்லைக் கடித்துக் கொண்டது.

    "சொல்லக் கூடாதா?" பசுவின் நெஞ்சு பதறியது.

    "தெரியாது; உண்மையில் தெரியாது; சத்தியமாய்த் தெரியாது!"

    காளை திடுக்கிட்டது. பிறகு சந்தேகத்துடன் அதைப் பார்த்தது.

    "பத்து மாசம் சுமந்துவிட்டேன்; எத்தனையோ மாசம் பால் கொடுக்கப் போகிறேன். குழந்தையின் தகப்பன் முகம் கூட எனக்குத் தெரியாது... ஏதோ விஞ்ஞானமாம்; கருவியாம்; மனிதர்களுக்கு இரும்பும் ஒரு கருவி; நாமும் ஒரு கருவி".

    காளையின் கண்களில் நெருப்புத் திவலைகள் தோன்றின.

    "என்னைத் தான் அழித்தார்களென்றால் உனக்குமா இந்தக் கதி?"

    "உங்களையா?" என்று கதறியது பசு.

    "நான் இப்போது காளை இல்லை; உன்னிடம் கொஞ்சி விளையாடிய கட்டிளம் ஆண்மகனில்லை. என் ஆண்மையை அழித்துவிட்டார்கள்;- அவர்களுக்காக உழைத்துச் சாக வேண்டுமாம் நான்."

    காளை தன் கொம்புகளை ஓங்கி மண்ணில் குத்தித் தரையைப் புழுதிக் காடாக்கியது. நான்கு கால்களாலும் மண்ணைப் பிராண்டிச் சூராவளிபோல் தூசி எழுப்பியது. அதன் கண்களில் கொப்புளித்த உவர் நீரைப் பசு மெல்லத் தன் மிருதுவான நாவால் நக்கித் துடைக்க வந்தபோது, காவலாளி முரட்டுத்தனமாய்க் காளையைத் தாக்கி அங்கிருந்து அதை அகற்றினான்.

    மனிதனுடைய மிருக இச்சையால் கட்டுப்பாடின்றிப் பெருகும் உயிர்க்குலத்தை வளர்க்க, மிருகங்களின் புனித உணர்ச்சியைக் குலைக்கும் விஞ்ஞானக் கருவிகள் அந்தப் பண்ணையின் ஒரு அறைக்குள் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன!
    --------------------


    8. தெய்வத்தின் குரல்


    கூட்டமென்றால் கூட்டம்; மருதனூர்க் கிராமம் அதுவரையில் என்றைக்குமே கண்டிராத பெருங்கூட்டம்! அக்கம் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஏழை எளியவர்கள் எல்லோரும் அங்கே வாரி வழித்துக் கொண்டுவந்து கூடியிருந்தார்கள். அது மட்டுமல்ல, பத்திரிகை நிருபர்கள், படம் பிடிப்பவர்கள், ஆட்டக்காரர்கள், பாட்டுக்காரர்கள், நடிகர்கள்- இப்படி ஊரே அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தது.

    இவ்வளவும் எதற்கு என்று கேட்கிறீர்களா? மருதனூர் மாகாளி கோயிலில் அன்றைக்குத் திருவிழா. வழக்கம்போல் வருடம் வருடம் தூங்கி வழிந்துகொண்டு நடைபெறுமே, அதுபோல சாதாரணத் திருவிழா அல்ல இது. மூன்று பெரிய மலைகள் ஒன்று கூடி, முப்பெரும் வள்ளல்கள் ஒன்று சேர்ந்து, முழுமூச்சோடு இதை நடத்துகிறார்கள்.

    விழாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே பரபரப்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. அந்த ஊரில் பிறந்து வளர்ந்து, பட்டணத்துக்குப் போய்ப் பிரமுகர் களான பெரியசாமி, சின்னச்சாமி, தங்கசாமி மூவருக்கும் தங்கள் குலதெய்வத்தின் நினைவு வந்துவிட்டதாம். திருவிழாவைப் போட்டி போட்டுக்கொண்டு நடத்தத் துணிந்து விட்டார்களாம்.

    அன்றைக்கு வருகிற ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யும் பொறுப்பைப் பெரியசாமி ஏற்றுக்கொண்டார். உணவுப் பொருள்களை மொத்தமாய்ச் சேகரித்து விற்பனை செய்து பெரிய மனிதரானவர் அவர். ஆகவே உணவுப் பொறுப்பை அவரிடமே மற்றவர்கள் விட்டுவிட்டார்கள்.

    சின்னச்சாமியோ, "நீங்கள் சாப்பாடு போட்டால் நான் துணி கொடுக்கிறேன்!" என்று துணிந்து கூறினார்; "ஆண்களுக்கு வேட்டி துண்டு; பெண்களுக்குச் சேலை" என்றார்.

    "தாராளமாய்ச் செய்யுங்கள்! உங்களுடைய மில் துணிகளில் ஒரு பகுதியை இப்போதே தர்மத்துக்கு மூட்டை கட்டி வைத்து விடுங்கள்" என்றார் பெரியசாமி. நெசவாலைகளை வைத்து நடத்தும் சின்னச்சாமியும் தம்முடைய தொழிலுக் கேற்றபடி பொறுப்பெடுத்துக் கொண்டதில் அவருக்குத் திருப்தி.

    மூன்றாவது பிரமுகரான தங்கசாமிக்கோ தாம் மற்ற இருவரையும்விடப் பெருந்தன்மையில் குறைந்தவரல்ல என்று காட்டிக்கொள்ளத் தோன்றியது. "மற்ற எல்லாச் செலவுகளும் என்னுடையவை!" என்று ஓங்கியடித்தார் அவர்; "பெரிய பெரிய ஆட்களையெல்லாம் அழைத்து வந்து ஆட்டங்கள் பாட்டுக்கள் நடத்த வேண்டும். பந்தல்கள் கொட்டகைகள் கட்ட வேண்டும். கோவிலுக்கு வர்ணம் பூச வேண்டும். எல்லாவற்றையும் என்னிடம் விட்டு விடுங்கள்!"

    தங்கசாமி பலருடைய பெயர்களில் பல தொழில்கள் செய்து வந்தார். பணம் பண்ணும் வித்தையில் அவருக்கு நிகர் அவர்தாம். எங்கும் இருப்பார்; எல்லோரையும் தெரியும்; எதையும் செய்வார். அவருக்கேற்ற பொறுப்பு அவருக்கு.

    "நம்ப மருதனூர்தானா இது!" என்று உள்ளூர்க்காரர்கள் மூக்கின்மேல் விரல் வைக்கும் படியாக ஊரே மாறிவிட்டது. பல பாதைகள் செப்பனிடப்பட்டு லாரிகளும் கார்களும் வந்தன. தண்ணீர் வசதி, சுகாதார வசதி, விளக்கு வசதி யாவும் மந்திரஜால வித்தைகள் போல நடந்த வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்த பலருக்கு வேலைகளும் கிடைத்தன.

    "எல்லாம் நம்ப ஊர்த் தெய்வத்துக்குச் செய்யும் காரியம். கூலியைப்பற்றிக் கவலைப்படாமல் வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்யுங்கள்!" என்று உற்சாகமூட்டினார் தங்கசாமி.

    முப்பெரும் பிரமுகர்களான மூன்று சாமிகளையும் அடிக்கடி ஒன்றாய்ச் சேர்த்துத் தரிசனம் செய்யும் பாக்கியம் அந்த ஊர்காரர்களுக்குக் கிடைத்தது.

    பொழுது புலர்வதற்கு முன்பிருந்தே திரள்திரளாக மனிதர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஒலிபெருக்கிகளின் வாயிலாகத் திசைக்குத் திசை இசைத்தட்டுகளும், நாகசுரமும், பல்வேறு ஒலிகளும் பெருகத் தொடங்கின. எங்கே பார்த்தாலும் தோரணங்கள், வாழைமரங்கள், வளைவுகள்.

    ஊரை நோக்கிக் கூட்டம் அலைமோதிய அதே சமயத்தில், ஊருக்குள்ளிருந்து கையில் தடிக்குச்சி ஒன்றை ஊன்றியபடியே தட்டுத் தடுமாறி வந்துகொண்டிருந்தாள் ஒரு கிழவி. அதன் எல்லைக்கு வந்து ஒரு கூரை வீட்டுத் திண்ணையில் களைப்பாற உட்கார்ந்தாள். கூட்டத்து மக்களை அடிக்கடி ஏக்கத்தோடு ஏறிட்டுப் பார்த்தாள். "திருவிழாவுக்குப் போறிங்களா? போங்க! போங்க! இன்னைக்காவது உங்களுக்கு நல்ல சோறு கிடைக்கும்; நல்ல துணி கிடைக்கும். போங்க! போங்க!" என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

    பிறகு என்ன நினைத்துக் கொண்டாளோ, திண்ணைச்சுவரில் சாய்ந்துகொண்டே, "அட, நான் பெற்ற மக்களா!" என்று சொல்லிக் கண் கலங்கினாள்.

    அந்த வீட்டுச் சொந்தக்காரன் ராமையா வெளியில் வந்து பார்த்துவிட்டு ஒரு கணம் திடுக்கிட்டான். கிழவிக்கு வயசு நூறு இருக்கும்; அதற்கு மேலும் இருக்கும். அவளுடைய முகத்தில் பூச்சும் குங்குமப் பொட்டும் துலங்கி, அவள் சுமங்கலி என்பதைச் சுட்டிக்காட்டின. அந்த வயசில் அவ்வளவு களை மிகுந்த ஒரு முகத்தை ராமையா கண்டதில்லை.

    "என்ன பாட்டி,நீ மாத்திரம் தாத்தாவை விட்டுட்டு வேடிக்கை பார்க்க வந்திட்டியா?" என்று கேட்டான் ராமையா.

    பாட்டி தன் பொக்கை வாயைக் காட்டிப் பேரனைப் பார்த்துச் சிரித்தாள்; "ஆமாண்டா கண்ணு! வேடிக்கை பாக்கறத்துத்தான் என்னோட இடத்தை விட்டுட்டு இங்கே வந்திருக்கேன்." என்றாள்.

    "உனக்கு எவ்வளவு வயசிருக்கும் பாட்டி?"

    "வயசா? அதெல்லாம் எனக்கு எங்கே நினைவு இருக்கு?" என்று சொல்லிவிட்டு, "ஏண்டாப்பா, இன்னிக்கு மாத்திரம் எனக்கு இந்தத் திண்ணையில் தங்கறத்துக்கு இடம் தர்ரியா?" எனக் கேட்டாள்.

    "திண்ணை எதுக்கு? தாராளமா வீட்டுக்குள்ளேயே வந்து தங்கிக்க; இங்கேயே எங்களோட சாப்பிடு. ஆனாத் திருவிழாச் சாப்பாடு காத்துக்கிட்டிருக்கிறப்போ, உனக்கு இதெல்லாம் ஒத்து வருமா?"

    " கூட்டத்திலே போய் இடிபட்றதுக்கு எனக்குத் திராணி இல்லே. நீ சாப்பாடு போட்டாலும் நல்லதுதான்."

    "உனக்குப் போட்றதுக்கு எனக்குக் கொடுத்து வைக்கணும் பாட்டி! இந்தக் காலத்திலே உன் வயசுப் பாட்டியைப் பாக்கிறது எனக்குத் தெய்வத்தைப் பாக்கிறாப்பலே இருக்கு, வா,உள்ளே! பழைய கஞ்சியைக் குடிச்சிட்டு, நம்பளும் வேடிக்கை பார்க்கப் போகலாம். நான் உன்னைப் பத்திரமாய்க் கூட்டிக்கிட்டுப் போறேன்.."

    "நீ மகராஜனா இருக்கணும்!" என்று நீட்டி முழக்கி ஆசி கூறிக்கொண்டே, அவனோடு உள்ளே புகுந்தாள் பாட்டி.

    ராமையா தான் அந்தக் குடும்பத்துக்குப் பெரியவன்.அவன் நிலபுலன்களைக் கவனித்துக்கொண் டிருந்தான்.

    அவனுடைய தம்பிகள் இருவரில் மூத்தவன் கைத்தறி மக்கத்தில் வேலை செய்துகொண் டிருந்தான். இளையவன் கொத்து வேலை செய்தான். ராமையாவுக்கு மட்டிலும் கல்யாணமாகி யிருந்தது. மற்றவர்களுக்கு இனிமேல்தான் ஆகவேண்டும். தகப்பனரின் பொறுப்பிலிருந்து குடும்பத்தைக் கவனித்து வந்தான் ராமையா.

    இவ்வளவு விஷயங்களையும் வீட்டுக்குள் நுழைந்து ஒரு நாழிகைப் பொழுதுக்குள் பாட்டி தெரிந்துகொண்டாள். ராமையாவின் மனைவி வட்டியில் போட்டு வைத்த பழைய சாதத்துக் கஞ்சியை ஒருவாய் குடித்து வைத்தள்; "உங்க குடும்பம் அமோகமா வளரணும்டா கண்ணு!" என்றாள் நிறைந்த வயிறோடு.

    "என்ன பாட்டி ஔவைக் கிழவி கூழுக்கு பாடினாப்பலே நீ பேசறே?"

    ஆமாண்டா ராசா! நீயோ உழுது பயிர் செஞ்சு ஊருக்குச் சோறு கொடுக்கிறே. உன்னோட மூத்த தம்பி வள்ளுவரைப் போலத் தறிநெசவு வேலை செஞ்சு துணி கொடுக்கிறான். இன்னொருத்தனோ குடியிருக்க நிழல் கொடுக்கிற கொத்து வேலை செய்கிறான். நீங்க மூணுபேரும் செய்கிற தொழில் இருக்கே, உத்தமமான தொழில்! சத்தியத்தை வளர்க்கிற தொழில்!"

    "போ பாட்டி, நீ சுத்தக் கர்நாடகம்!" என்றான் ராமையா; "உழுதவன் கணக்குப் பாக்கிறேன், உழக்கரிசி கூட மிஞ்ச மாட்டேங்குது. இதை என்கிட்டேயிருந்து வாங்கிட்டுப் போய் வச்சிருந்து, கிராக்கி பண்ணி விக்கிறார் பார், அவர் இன்னிக்கு விழா நடத்துறார்!"

    "யார், பெரியசாமியையா சொல்றே?"

    "எல்லாச் சாமியையுந்தான் சொல்றேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விசயத்திலே பெரிய ஆசாமி, பாட்டி! நீ இதையெல்லாம் வெளியிலே சொல்லி வைக்காதே! கைத்தறி மக்கத்துக்கு நூலு கிடைக்காமல், நீ வள்ளுவர் வேலையின்னு

    சொன்னியே, அது தவியாத் தவிக்குது. என் தம்பி திண்டாடிக்கிட்டிருக்கான்."

    "அடப்பாவமே!"

    "கொத்து வேலை பாக்கிறவனோட கதையையும் சொல்றேன் கேட்டுக்க: 'நெல் கொன்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே'ன்னு யாரோ பாடினாங்களாமில்ல? அதுமாதிரி, கையிலே காசு வாங்கற வரைக்கும் நிலைச்சு நிக்கறாப்பிலே இப்பக் கட்டிடம் கட்டச் சொல்றானாம்! கூலிக்கு வேலை செய்யறவன் என்ன செய்ய முடியும்? இந்தத் தங்கசாமியோட வேலையெல்லாம் இப்படித்தான். ரெண்டு ரூபா கூலியைக் கொடுத்திட்டு, நாலு ரூபான்னு எளுதி வாங்கறானாம். சத்தியம் செத்துப் போய்க்கிட்டிருக்குது பாட்டி, செத்துப் போய்கிட்டிருக்கு!"

    பாட்டிக் கிழவி திடீரென்று பெண் புலிபோல் விழித்தாள். அவளுடைய முகமும் விழிகளும் கோபத்தால் சிவந்தன;"சொல்லாதே!சத்தியம் சாகாது! ஒருகாலும் சாகாது!" என்று கத்தினாள்.

    அவள் விழித்த விழிப்பையும், அவள் குரலையும் கேட்டு ராமையாவே நடுநடுங்கிப் போனான். யார் இந்தக் கிழவி? இந்த வயசில் இவளுக்கு எப்படி இவ்வளவு வேகம் வருகிறது?

    நேரம் சென்றது. திருவிழாவை வேடிக்கை பார்ப்பதற்காகத் தன் மனைவியையும் கிழவியையும் அழைத்துக் கொண்டு ஊருக்குள் சென்றான் ராமையா. ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துவிட்டுச் சாப்பாட்டுப் பந்தியை அவர்கள் ஒதுங்கியிருந்து கவனித்தார்கள். கிழவியின் கண்கள் கலங்கியிருந்தன. "சாப்பிடுங்கள் மக்களா!; இன்னைக்கு ஒரு நாளைக்காவது வயிறாரச் சாப்பிடுங்க!" என்று அவள் வாய் முணுமுணுத்தது.

    அதற்குள் சாப்பாடு பரிமாறும் ஒருவரைச் சுற்றிக்கொண்டு, பளிச்சுப் பளிச்சென்று ஒளி மின்னச் சிலர் புகைப்படம் பிடித்தார்கள். " பெரியசாமியே தன் கையாலே பரிமாறினாருன்னு பத்திரிகையிலே போட்றதுக்கு இப்போது படம் பிடிக்கிறாங்க!" என்று ரகசியமாய்க் கிழவியின் காதில் சொன்னான் ராமையா.

    அடுத்தாற்போல் சின்னசாமி உடைகளைத் தானம் செய்யும் போதும் இதேபோல் படங்கள் பிடிக்கப்பட்டன. தங்கசாமியும் தவறாமல் புகைப்படக் கருவிகளுக்குள் அகப்பட்டார்.

    நாட்டியங்கள் நடந்து முடிந்தன. இசைப் பெருக்கும் ஓய்ந்தது. 'முப்பெரு வள்ளல்கள்' என்ற தலைப்பில் ஒருவர் நெடுநேரம் பிரமுகர்களைப் பற்றி பேசித் தீர்த்தார். பேச்சின் முடிவில், "இவர்களே மக்களைக் காப்பதற்காக மாகாளியால் அனுப்பப்பட்ட் தர்ம தாதாக்கள்" என்று சொல்லி வைத்தார்.

    ஒலிபெருக்கியில் அதைக் கேட்ட கிழவியின் உதடுகள் கோபத்தால் துடித்தன. ஒருபுறமாகத் திரும்பித் தரையில் காறித் துப்பினாள் அவள்.

    நேரம் சென்றது. கூட்டம் கலைந்தது. விழா நடத்திய பிரமுகர்கள் தங்கள் கார்களில் ஏறிக்கொண்டு சிட்டெனப் பறந்தார்கள்.

    திரும்பிப் போகும் கூட்டத்தாரைப் பார்த்த பாட்டிக்கிழவி, போங்க! போங்க! நாளைக்கு போய் என்ன செய்யப் போறீங்க? போங்க! என்று தனக்குள் பேசிக் கொண்டாள்.

    பிறகு, கிழவி தடிக்கம்பை கீழே போட்டுக்கொண்டு கோவில் வாசலில் உட்கார, ராமையாவும் அவன் மனைவியும் அவளருகில் அமர்ந்தார்கள்.

    "திருவிழா நடத்தறாங்களாம் திருவிழா!" என்றாள் கிழவி. "இதை நடத்தினாங்களே இந்த வள்ளல்கள், இவங்களோட அறிவுக்கும், திறமைக்கும், சக்திக்கும் இவங்களுக்கு மனச்சாட்சிங்கிற ஒண்ணுமட்டும் கூட இருந்திட்டா, இத்தனைபேர் ஏழை எளியவங்க இந்தப் பக்கத்திலியே இருந்திருக்க மாட்டாங்க! இவங்க நினைச்சிருந்தா, இங்கே அத்தனை பேரையும் எப்பவுமே பட்டினியில்லாமல் காப்பாத்தியிருக்கலாம். பக்தி செலுத்தறாங்களாம் பக்தி! எல்லாம் வெறும் யுக்தியடா மகனே யுக்தி!"

    "பாட்டி!நீ பொல்லாத பாட்டியா இருப்பே போலே இருக்கே?" என்றான் ராமையா;"சரி, வா, வீட்டுக்குப் போய் பேசலாம்."

    " நான் இப்ப என் வீட்டிலேதாண்டா கண்ணு இருக்கிறேன். நீங்க போயிட்டு வாங்க!"

    "பாட்டி!" மெய் சிலிர்க்கக் கூவினார்கள் இருவரும்.

    "ஆமாண்டா ராசா!அவுங்க நுழையற இடத்திலே எனக்கென்ன வேலை? அந்தப் பாவிகளுக்குப் பயந்துகிட்டுத்தான் நான் உன் வீட்டைத் தேடி வந்தேன்."

    "அப்படீன்னா நீ வந்து...?"

    "இன்னுமா தெரியலே?"என்று கேட்டுப் புன்னகை பூத்தாள் சுமங்கலிக் கிழவி:"நான்தாண்டா மகனே, இந்தக் கோயிலுக்குச் சொந்தக்காரி!"

    கிழவி எழுந்தாள்;கோயிலுக்குள் நுழைந்தாள்; கல்தோடு கலந்தாள். சிலையின் முகத்தில் இப்போது தனிக்களை துலங்கியது. வெளியில் இருவர் கல்லாய்ச் சமைந்து நின்றார்கள். --------------------


    9. யார் தியாகி?


    சகுந்தலாவின் வாழ்க்கையில் இருபது ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1942 ஆகஸ்டில், ஓர் முக்கியமான நிகழ்ச்சி நடந்தது. அதை நினைக்கும் போதெல்லாம் என்னுடைய உள்ளத்திலிருந்து ஊதுவத்தியின் நறுமணம் கமழ்ந்து வருவது போன்று ஓர் இனிய உணர்வு பிறப்பதுண்டு. அவளுடைய தியாகம், இருதயம் படைத்த எந்த மனிதராலும் மறக்க முடியாத தியாகந்தான்.

    ஆனாலும், சகுந்தலாவின் வாழ்க்கையில் அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து, மற்றொரு சம்பவமும் நடந்திருக்கிறது. அந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் சேர்ந்தாற்போல் நினைக்கத் தொடங்கினால் உள்ளத்திற்குள்ளே இரண்டு ஊதுவத்திகள் ஒன்றாகச் சேர்ந்து நறுமணம் பரப்புவது தெரியும்.

    அந்த இரண்டு ஊதுபத்திகளில் எதனுடைய மணம் உயர்ந்தது என்று இன்னும் என்னால் தீர்மானிக்க முடியவில்லை. இருவருடைய தியாகங்களில் எது சிறந்த தியாகம் என்று எனக்குப் புரியவில்லை. உங்களிடம் சகுந்தலாவின் கதையைச் சொல்கிறேன். கேட்டுவிட்டுத் தயவுசெய்து உங்கள் முடிவைச் சொல்கிறீர்களா?

    சகுந்தலா அப்பொழுது கல்லூரியில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்தாள். அவள் தகப்பனார் மிகவும் ஏழையாக இருந்தாலும், தமது மகளுக்குக் கல்விச் செல்வத்தை அளிப்பதற்காகத் தம்மிடம் எஞ்சியிருந்த பிற செல்வங்கள் அனைத்தையும் இழந்தார். பெண்களுக்கென்று தனியாகக் கல்லூரி அந்த ஊரில் இல்லாததால், ஆண்களும் பெண்களும் ஒன்றாகத் தான் அங்கு படித்து வந்தார்கள்.

    சகுந்தலாவின் அழகில் ஏதோ ஓர் தனித் தன்மை இருந்தது. நீண்ட விழிகளும், எடுப்பான நாசியும், அடர்ந்த புருவங்களுமாக அவள் கற்பனையில் சிறந்த ஓவியனின் கைவண்ணம் போல் விளங்கினாள். ஒரு முறை அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவர்கள், மறுமுறையும் திரும்பிப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். உடனடியாக அந்த முகத்தை அவர்களால் மறந்து விடவும் முடியாது.

    ஆனால் அவ்வழகினால் அவள் யாரையும் மயக்கிக் கிறங்கச் செய்யவில்லை. நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாக அவள் எல்லோரிடமும் கள்ளங் கபடின்றிக் கலகலப்போடு பழகினாள். 'நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்!' என்று கூறும் பாரதியின் புதுமைப் பெண்ணுக்கு அவள் இலக்கணமாய்த் திகழ்ந்தாளென்றே சொல்ல வேண்டும்.

    என்றாலும் அதே கல்லூரியில் படித்த ராஜாராமனிடம் மட்டிலும் ஏனோ அவளுக்கு அச்சமும் நாணமும் ஏற்பட்டன. அவன் முகத்தை அவளால் நிமிர்ந்து நோக்க முடியவில்லை; அவனிடம் சிரித்துப் பேசுவது அவளுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. ஒரு வேளை இதற்குப் பெயர்தான்...?

    ராஜாராமன் மாணவர் சங்கத் தலைவன். அற்புதமாக மேடைகளில் பேசுவான். அழகான தோற்றமும் அறிவாற்றலும் பெற்றிருந்தான். பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

    அந்த நாட்களில் விடுதலை வேட்கையான நாட்டுப் பற்று ஒவ்வொரு இளம் உள்ளத்திலும் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. 'அடிமைத் தனக்கு எதிராகப் போராட்டம் நடக்கும்போது, நாம் நம்முடைய உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் தியாகம் செய்வோம்!' என்று கனல் தெறிக்கப் பேசுவான், ராஜாராமன். அதிலும் சகுந்தலா அந்தக் கூட்டத்தில் இருந்து விட்டால், அவனுடைய பேச்சின் வேகம் கட்டுக்கடங்காமல் சென்றுவிடும்.

    அவனுடைய தீரப் பேச்சும் தியாக மனமும் தான் சகுந்தலாவின் முகத்தில் அவனைக் கண்டவுடன் நாணம் பரவக் காரணமாக இருந்தனவோ என்னவோ!

    "சகுந்தலா! என்னுடைய பெற்றோர்களிடம் இப்போதே சொல்லி ஒரு விஷயத்தில் அனுமதி வாங்கிவிட்டேன்" என்று ஒரு நாள் பெருமையுடன் கூறினான் ராஜா ராமன். "எனக்குப் பிடித்த பெண்ணைத் தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன்; ஏழையாக இருக்கிறாள் என்று நீங்கள் மறுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டேன்" என்றான்.

    சகுந்தலாவின் முகம் அளவுக்கதிகமான நாணத்தால் கவிழ்ந்தது. அந்தத் தோற்றத்தில் அவள் தலை குனிந்து நின்ற காட்சியைக் கண்டு உளம் பூரித்தான் ராஜாராமன். மற்ற எல்லோருக்குமே அவள் 'நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும்' உள்ளவள் அல்லவா?

    அறப்போர் துவங்கிவிட்டது. ஆண்டியிலும் ஆண்டியாக வாழ்ந்து, தியாக வாழ்வுக்கென்றே தம்மைத் தியாகத் தீயில் வேகச் செய்து புடம் போட்டுக்கொண்ட காந்தியடிகள், மீண்டும் வெஞ்சிறையில் வாடச் சென்றுவிட்டார். ராணுவம் கட்டவிழ்த்து விடப்பட்டு விட்டது. விடுதலை வேட்கை கொண்டவர்கள் புற்றீசல்களைப் போல் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    எங்கும் துப்பாகி வெடி, தடியடி, சிறைச்சாலை, கூட்டு அபராதம், உடைமைப் பறிமுதல்...

    அது கட்சி அரசியல் போராட்டமல்ல-நாட்டு மக்களின் விடுதலைப்போர்...

    வாழ்வு அல்லது சாவு!

    கல்லூரி வாசலில் பெருங் கூட்டம் கூடிவிட்டது. ராஜாராமன் ஒரு புறம் காம்பவுண்டுச் சுவரின் மேல் நின்று கொண்டு கூவினான். வேறொரு பக்கம் சகுந்தலா நின்று கொண்டாள். கன்னியாகுமரியிலிருந்து இமயம் வரையிலும் ஆங்காங்கே மக்கள் சுட்டுக்கொல்லப்படும் பயங்கரச் செய்திகளை அவர்கள் கூறி, "வெள்ளையர்களின் ஆட்சியை இங்கே நடக்காமல் செய்வோம்; அல்லது எல்லோருமே செத்து மடிவோம்" என்று முழங்கினார்கள்.

    அந்த நகரத்துக்குப் புதிதாக மாற்றப்பட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாசலம், நூற்றுக்கணக்கான போலீஸ் வீரர்களுடன் அங்கு வந்து சேர்ந்தார். போலீஸ்காரர்களைக் கண்டவுடன் மாணவ மாணவிகள் பலருக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் பொங்கத் தொடங்கியது. ஒரு சில மானவர்கள் மாத்திரம் பயந்துகொண்டு கல்லூரிகளுக்குள் செல்ல முயன்றார்கள்.

    "போகிறவர்களைத் தடுக்காதீர்கள்!" என்று கத்தினார் இன்ஸ்பெக்டர்.

    துப்பாக்கி முனைகளில் கூர்மையான கத்திகள் பள பளப்புடன் ஒளி வீசின.

    பயத்தால் நடுங்கிய இளைஞர்கள் சிலர் வழியில் நின்று தடுத்த சகுந்தலாவை மீறிக்கொண்டு உள்ளே புக முயன்றார்கள். தன் இரு கைகளயும் விரித்துத் தடுக்கத் துடித்தாள், சகுந்தலை.

    "தடுக்காதே! வழியை விடு!" இன்ஸ்பெக்டர் கூறினார்.

    சகுந்தலை இன்ஸ்பெக்டரின் குமுறலைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. மாணவர்களின் முகத்தில் நிலவிய பீதி உணர்ச்சியைக் கண்டவுடன் அவளுக்கு வெறி வந்துவிட்டது.

    "நீங்களெல்லாம் ஆண்பிள்ளைகள் தானா? இது தானா உங்கள் வீரம்?" என்று கத்தினாள். "இந்தாருங்கள்! என்னுடைய வளையல்களைக் கழற்றித் தருகிறேன்! ஆளுக்கொன்றைப் போட்டுக்கொண்டு, உங்களைப் பெண்கள் என்று சொல்லிக்கொண்டு,உள்ளே நுழையுங்கள்! நாளையிலிருந்து சேலைகளைக் கட்டிக் கொண்டு வாருங்கள்!"

    பீதியுற்றிருந்த மாணவர்களின் முகங்களில் வீரக்களை குடி கொண்டு விட்டது. சட்டென்று திரும்பி நின்றார்கள்.

    சுவரில் நின்ற ராஜாராமன் பரிகாசத்துடன் வாய் விட்டுச் சிரித்தான். குதித்தோடி வந்து நின்று மாணவர்களை உற்சாகப் படுத்தினான். இன்ஸ்பெக்டர் அருணாசலத்தின் கண்கள் கொவ்வைக்கனிகளாக மாறின. அவருடைய மீசை துடித்தது. சகுந்தலா வின் முகத்தைச் சுட்டு வீழ்த்தி விடுவதுபோல் பார்த்தார்.

    எவ்வளவு அழகான முகம்! இந்த அழகும் இளமையும் உணர்ச்சி வேகமும் ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டுக்கு முன்னால் என்ன செய்ய முடியும்?

    சுடுவதற்கு அவரிடம் தயாராக உத்தரவு இருந்தது. தேவையானால் எந்த நிமிடத்திலும் ராணுவத்தை அனுப்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.

    மின் வெட்டும் நேரத்திற்குள் முடிவு செய்தார் இன்ஸ்பெக்டர். அவருடைய கடமையிலிருந்து அவர் அணுவளவும் நழுவ விரும்பவில்லை. நகரத்தின் அமைதியையும் ஒழுங்கையும் அவர் எப்படியும் காப்பாற்றித் தீரவேண்டும். இந்த மாணவர் கூட்டம் முழுவதும் நகரத்திற்குள் திரண்டு சென்றால் ஏற்கனவே உணர்ச்சி வசப்பட்டிருக்கும் போது மக்கள் எப்படி மாறுவார்கள் என்று சொல்ல முடியாது.

    உத்தரவு கையில் இருந்தது:-

    நகரத்தின் அமைதியைக் காப்பாற்றியாக வேண்டும்.

    பயந்து நடுங்கிய இளைஞர்கள் சிலரையும் வெறிகொண்ட வேங்கைகளாக மாற்றிவிட்டாள், ஒரு பெண்.

    ' என்ன செய்வது? என்னசெய்வது? என்ன செய்வது?

    'ஷூட்' என்று ஒருவார்த்தை சொல்லி விடலாமா?

    இன்ஸ்பெக்டரும் இளைஞர்தாம். என்றாலும் மனித உயிர்களின் மதிப்பை அவரால் மறக்க முடியவில்லை.'பாவம்! இளம் கன்றுகள் பயமறியாமல் துள்ளுகின்றன! வீட்டில் இவர்களுடைய தாய் தகப்பன்மார்கள், உற்றார், உறவினர், இவர்களைத் தங்களுடைய எதிர் காலத்துக்காக நம்பியிருப்பவர்கள்....."

    சிந்தனை முடியவில்லை. இதற்குள் மாணவ மாணவிகளின் கூட்டம் கட்டுக்கடங்காமல் போலீஸ்காரர்களையே தள்ளி ஒதுக்கிவிட்டு ஊருக்குள் நுழையும் போல் தோன்றியது.

    வெறிகொண்டவர்போல் தம்முடைய கைத்தடியை ஓங்கிக்கொண்டு,"சார்ஜ்" என்று கத்தினார், இன்ஸ்பெக்டர். அவரது உத்தரவையே எதிபார்த்துக்கொண்டிருந்த மற்ற போலீஸ்காரர்களும் ஆவேசத்துடன் தடிகளைச் சுழற்றத் தொடங்கினார்கள்.

    "கலங்காதீர்கள்!" என்று கத்தினான், ராஜாராமன்.

    இன்ஸ்பெக்டர் உயர்த்திய தடியைச் சுழற்றிக்கொண்டே தமது கண்களை இறுக மூடிக்கொண்டு அவன்மேல் பாய்ந்தார். பிறகு என்ன நடந்ததென்று அவருகுத் தெரியவில்லை. கைவலிக்கு மட்டிலும் தடியைச் சுழற்றினார்.

    "ஆ!" என்று, அவரது நெஞ்சையே குலுங்கச் செய்த ஓர் பெண் குரல் எழுந்த பிறகுதான் அவரது ஆவேசம் அடங்கியது.

    அவர் தம் விழிகளைத் திறந்தபோது சகுந்தலா இரத்த வெள்ளத்தில் கிடந்தாள். நெற்றி பிளந்திருந்தது. புருவத்திற்குமேல் இரத்த வெள்ளம் நிற்கவில்லை. ராஜாராமனை அங்கு காணவே காணோம்.

    சுற்று முற்றும் பார்த்தார். அவன் எங்கு சென்று மறைந்தானோ தெரியவில்லை.

    'ஒருவேளை., அவன் மீது விழ இருந்த அடியை இவள் குறுக்கிட்டு...!"

    ஒரு உயிரைக் கூடக் கொல்லாமல் அன்றைக்குப் போராட்டத்தைத் தடுத்து விட்டாலும், ஏனோ இன்ஸ்பெக்டரின் மனம் தமது செய்கைக்காகப் பெருமைப் படாமல் சிறிது சஞ்சலமடைந்தது. அரசாங்க மருத்துவமனைக் கட்டிலில் சுயநினைவிழந்து படுத்துக்கிடந்தாள், சகுந்தலா. அவளருகில் உட்கார்ந்துகொண்டு அவளுடைய தாயாரும் தகப்பனாரும் கண்ணீர் வடித்துக்கொண் டிருந்தார்கள். சகுந்தலாவின் ஒரு பகுதி முகத்தை மறைத்துக் கட்டுப்போட் டிருந்தார்கள். இன்னும் கைகளிலும் கால்களிலும் சிறுசிறு கட்டுக்கள். என்ன இருந்தாலும் முகத்தில் போட்டிருந்த கட்டு மாத்திரம் பயங்கரமாகத் தோற்றமளித்தது.

    "என்னுடைய பெண் அழகாக இருக்கிறாளென்று எவ்வளவோ கர்வப்பட்டேனே, நான்! அக்கம் பக்கத்தார் இவளுடைய அழகைப்பற்றிச் சொல்லும்போது பூரித்துப் போனேனே,நான்! அந்த அழகைக் குலைத்து விட்டானே படுபாவி!" என்று புலம்பினாள், தாயார்.

    அவளுடைய தகப்பனாரும் தமது பெண்ணின் முகத்தைப் பற்றித்தான் பேசிக் கண்ணீர் சிந்தினார். அழகும் பணமும் உள்ள பெண்களுக்கே கல்யாணம் நடைபெறுவது கஷ்டமாக உள்ள இந்தக் காலத்தில், சகுந்தலாவின் கதி என்ன ஆகுமோ என்று கூறி வருந்தினார்.

    "சுட்டுக் கொன்றிருந்தால்கூடத் தேவலாமே? உயிருள்ள வரையில் இந்தப் பெண்ணை அழவைத்து விட்டானே!" என்று கலங்கினாள் தாய்.

    "பெண் மாத்திரமா அழப்போகிறாள்? பெண்ணோடு நீயும் நானும் சேர்ந்துதான் அழப்போகிறோம்" என்றார், தகப்பனார். அவருக்குக் கோபம் வந்தபோது சிலவேளைகளில் சகுந்தலாவைத் திட்டினார். சிலவேளைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டரைத் திட்டினார். இன்னும் சில வேளைகளில் காந்தியடிகளைத் திட்டினார்.

    காயத்தை அவிழ்த்துக் கட்டும்போது அந்தக்காட்சியைப் பார்ப்பதற்குச் சகுந்தலையின் தாயாருக்கே மிகவும் வேதனையாக இருக்கும்.கன்னத்திலும் புருவத்திலும் ஏற்பட்டிருந்த காயம், எவ்வளவுதான் ஆறக்கூடியதாக இருந்தாலும், அதன் தழும்பு மறையவே மறையாது. சித்திரப் பாவையின் செந்தாமரை முகம்போல் விளங்கிய அந்த முகத்திற்கா இந்த நிலை வரவேண்டும்?

    பெற்றவர்கள் இருவருக்குமே சகுந்தலாவுக்கும் ராஜாராமனுக்கும் ஏற்பட்டிருந்த மனத்தொடர்பு தெரியாது. கல்லூரி மாணவ மாணவிகளில் சிலர் வழக்கமாக அவளை வந்து பார்த்துச் சென்றார்கள். அவர்களில் ஒருவனாகவே அவர்கள் ராஜாராமனை நினைத்ததால், அவர்களிடம் சகுந்தலாவின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை நாளுக்குநாள் மங்கிக் கொண்டு வந்தது.

    சகுந்தலாவுக்கு எதிரிலும் அவர்கள் அதைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். சகுந்தலா பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். பிறகு அவர்களைத் தடுத்துப் பார்த்தாள். ஆனால் அவர்களுக்கு மனம் கேட்கவில்லை.

    "பணம் இருந்தாலாவது யாராவது பணத்திற்கு ஆசைப் பட்டாவது கல்யாணம் செய்துகொள்ள வருவார்கள். அதுவும் நம்மிடம் இல்லையே!" என்றார் அவள் தகப்பனார்.

    "அவள் படிப்புக்காகச் செலவழித்த பணத்தைச் சேர்த்திருந்தால், இப்படி இவளுக்குத் தொல்லையும் வந்திருக்காது. நல்ல இடத்திலும் கல்யாணம் செய்து கொடுத்திருக்கலாம். நீங்கள் தான் என் பேச்சைக்கேட்காமல் படிக்க வைத்தீர்கள்!"

    சகுந்தலாவுக்கு இதற்கு மேலும் மௌனமாக இருக்க முடியவில்லை.

    "என்னுடைய கல்யாணத்தைப் பற்றி நீங்கள் கவலைப் படவே வேண்டாம்! படித்தவர், பணக்கார வீட்டுப் பிள்ளை, பரந்த மனம் கொண்ட ஒரு பண்புள்ள இளைஞர் கட்டாயம் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போக்கிறார். என்னுடைய பணத்துக்காகவோ அழகுக்காகவோ அவர் என்னை விரும்பவில்லை!"

    விவரத்தைத் தெரிந்து கொண்ட பிறகுதான் சகுந்தலாவின் தாயாருக்கு அமைதி ஏற்பட்டது. அவளுடைய தகப்பனாரும் தமக்குள் தம்முடைய பெண்ணின் திறமையை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். ராஜாராமனின் குடும்பத்தைப்பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். அவனுக்கு விருப்பமிருந்தால் அவர்கள் மறுக்க மாட்டார்கள் என்பதையும் அவர் அறிந்து கொண்டிருந்தார்.

    கட்டை அவிழ்த்துத் தன்முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள், சகுந்தலா. அவளுடைய கண்ணீரே அவள் உருவத்தை மறைத்தது. அதைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் பார்த்தபோது, கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தையே ராஜாராமன் உற்றுப் பார்த்துக்கொண்டு பின்னால் நிற்பதைக் கவனித்தாள்.

    சகுந்தலாவின் முகம் வழக்கம்போல் நாணத்தால் சிவந்தது.மெல்லத் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

    "சகுந்தலா!" என்ற குரல் தேனருவிபோல் தன் செவியில் பாயுமென அவள் எதிர்பார்த்தாள்.

    ஆனால்,அவனோ கண்ணாடியில் பார்த்த முகம் கண்டு திடுக்கிட்டு வந்த சுவடே தெரியாமல் மறைந்து விட்டான். அடுத்த ஆறு மாதங்களில் அவனுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் மிக விமரிசையாக அதே ஊரில் திருமணம் நடந்தது.

    அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் சென்றன. எப்படிச் சென்றன என்று கேட்காதீர்கள்.

    சகுந்தலாவைப் பார்க்கும் ஒவ்வொருவரும் திடீரென்று தங்கள் முகத்தைச் சுளித்துக்கொண்டால், அவள்தான் பாவம் என்ன செய்வாள்? கல்யாணம் நடப்பது இருக்கட்டும். ஏதாவது வேலைக்குச் சென்று பிழைக்கலாம் என்றால், மற்ற மனிதர்கள் முகங்களில் விழிக்காமல் எப்படி இருப்பது?

    அவளுடைய வீட்டில் படத்தில் இருந்த காந்தி அவளைப் பார்த்துப் புன்னகை பூத்தார். தன்னுடைய தழும்பை அவரிடம் சுட்டிக்காட்டி ஆறுதல் அடைந்தாள், சகுந்தலா. நேரில் அவரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தால் அவரிடம் அந்தத் தழும்பின் கதையைக் கூறினால், அவர் எவ்வளவு ஆனந்தப்படுவார்? ஆமாம், அவருக்கு மாத்திரந்தான் அதன் அருமை தெரியும். அதன் உயர்வு தெரியும்.

    நாட்டுக்கு விடுதலை கிடைத்த அன்றைக்கும் அப்படியே ஆனந்தக் கண்ணீருடன் காந்தியடிகளின் படத்திற்கு முன்னால் நின்று கொண் டிருந்தாள், சகுந்தலா. அவளுடைய வீட்டு வாசலுக்கு முன்னால் ஓர் புதிய கார் வந்து நின்றது. வீடு தெரியாமல் யாராவது வந்திருப்பார்கள் என்று நினைத்தாள்.

    காரிலிருந்து வாட்டசாட்டமாக ஓர் ஆண் அழகன் இறங்கி வந்தார். அவருடைய மீசை கருகருவென்று முறுக்கி விடப்பட்டிருந்தது. அவளுக்கோ அவளுடைய பெற்றோர்களுக்கோ ஒன்றுமே விளங்கவில்லை.

    "நீங்கள் வந்து... " என்று இழுத்தார், அவள் தகப்பனார்.

    "என் பெயர் அருணாசலம்.ஐந்து வருடங்களுக்கு முன்னால் இந்த ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்சராக இருந்தேன். இப்பொழுது நான் சூப்பரிணடெண்டாக இருக்கிறேன்."

    சகுந்தலாவின் தகப்பனாரின் கண்கள் சிவந்தன. தாயார் அவர் மேல் பாய்வதற்குப் போனாள். சகுந்தலா மெதுவாகக் கதவோரம் வந்து நின்று அவர்கள் பேசுவதைக் கவனித்தாள்.

    பேசுவதையெல்லாம் பேசித் தீர்த்தார்கள், பெற்றவர்கள் இருவரும். "எதற்காக இங்கே வந்தீர்கள்? வெட்கமில்லை உங்களுக்கு?...வேண்டுமானால் எங்களையும் அப்படி அடித்துப் போட்டுவிட்டுப் போங்கள்!அவளைச் சுட்டுக் கொன்றிருக்கலாமே?...அவள் முகத்தைக் கொஞ்சம் பாருங்கள்!"

    மறுமொழி பேசாமல் மௌனமாக இருந்தார் அருணாசலம். பிறகு மெதுவாகத் தம் தலையைத் தூக்கி " என்னுடைய கடமையை நான் செய்ததாகவே இப்போதும் நினைக்கிறேன்; அதைப்பற்றிப் பேசுவதற்காக நான் வரவில்லை; வேறொரு விஷயம் பேச வேண்டும்" எனறார்.

    "உங்களிடம் பேசுவதற்கு என்ன விஷயம் இருக்கிறது?" என்று வெறுப்போடு கேட்டார் அவள் தகப்பனார்.

    "என்னுடைய வேலை நேரம் முடிந்த பிறகு, நானே சாதாரண உடையில் பலமுறை உங்களுடைய பெண்ணை அப்போது ஆஸ்பத்திரியில் வந்து பார்த்திருக்கிறேன். அப்போதே நீங்கள் என்னைத் திட்டியதையும் தூற்றியதையும் காதாரக் கேட்டிருக்கிறேன். நான் அதற்காகக் கவலைப் படவில்லை. உங்கள் பெண்ணுக்காகக் கவலைப்பட்டேன்...."

    சகுந்தலா மெதுவாக அந்த மனிதரின் முகத்தை அவருக்குத் தெரியாமல் கவனித்தாள். அவருடைய கண்கள் கலங்கியிருந்தன."அந்த ராஜாராமனுக்கும் உங்கள் பெண்ணுக்கும் கல்யாணம் நடக்கக்கூடுமென்று எதிர் பார்த்தேன். அப்படி நடந்திருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன்..."

    "நீங்கள் ஏன் வருத்தப்படவேண்டும்?"

    "சொல்கிறேன்; அதைச்சொல்வதற்குத்தான் வந்தேன்" என்று சொல்லிவிட்டுச் சிறிது நேரம் யோசனை செய்தார்.

    "கல்யாணம் நடக்கவில்லை என்று தெரிந்தவுடன் நான் இங்கு வருவதற்குப் பலமுறை முயற்சி செய்தேன்.ஆனால் உங்களுடைய பெண்ணின் வெறுப்புக்கு ஆளாக நேரிடுமோ என்று தயங்கினேன். தேசபக்திக்கும் என்னுடைய கடமைக்கும் விரோதமென்று சகுந்தலா நினைக்கலாமல்லவா? தேசபக்தி இருந்ததால்தான் சுடுவதற்கு உத்தரவிருந்தும் சுட்டுக் கொல்லாமல் கலவரத்தைச் சமாளிக்க முடிந்தது."

    "கலவரமென்று சொல்லாதீர்கள்!விடுதலைப் போரென்று சொல்லுங்கள்!" என்று தன்னையும் மறந்து கோபத்துடன், கூறிக்கொண்டு வெளியில் வந்தாள் சகுந்தலா.

    "மன்னித்துக் கொள். நீ இங்குதான் இருக்கிறாயா?"

    சகுந்தலாவை அவர் பார்த்த பார்வையில் ஆனந்தம் துள்ளியதே தவிர, அதில் அனுதாபமோ, வருத்தமோ, வேதனையோ சிறிதுகூட இல்லை. அவருடைய கண்களுக்கு சகுந்தலா எவ்விதக் குறைபாடுகளுமே இல்லாதவளாகத் தோன்றினாள். பல ஆண்டுகளுக்குப் பிறகுதான், தன் முகத்தைக் கண்டவுடன் மற்றொரு முகமும் மலர்வதை முதல் முறையாக உணர்ந்தாள் அவள்.

    அருணாசலம் நாணத்துடனும் அச்சத்தோடும் தலையைக் குனிந்து கொண்டு பேசலானார்:-

    "எனக்கு இன்னும் கல்யாணம் நடக்கவில்லை. நீங்களும் உங்கள் பெண்ணும் சம்மதித்தால்....சகுந்தலாவை... நான்"

    மற்ற மூவராலும் அவரவர்களுடைய செவிகளையே நம்ப முடியவில்லை.

    திருமணத்திற்குப் பிறகு ஒருநாள் அருணாசலத்தின் கண்ணீர் சகுந்தலையின் நெற்றித் தழும்பின்மீது உதிர்ந்து அவள் கன்னத்தில் வழிந்தது. அன்புடன் அவருடைய கையைப் பற்றி அந்தத் தழும்பின்மீது பதித்துக் கொண்டு மெய் மறந்திருந்தாள், சகுந்தலா.

    "சகுந்தலா! நீ அன்றைக்குக் குறுக்கே விழுந்து அடி வாங்கிக் கொண்டாயே, அது...அது...அவனைக் காப்பாற்றுவதற்கா? இல்லை..?"

    "என்னுடைய சுய நினைவே எனக்கு அப்போது இல்லை. நான் யாரைக் காப்பாற்றவும் குறுக்கே வரவில்லை என்னுடைய நாட்டைக் காப்பாற்றுவதற்காக அடிபட்டுச் சாக நினைத்தேன்."

    "உண்மையிலேயே நீ ஒரு தியாகி சகுந்தலா!"

    "இல்லை; நீங்கள் தாம் தியாகி!.........அழகில்லாத என்னை..."

    சகுந்தலா குரல் தழுதழுத்தது. சட்டென்று அவள் வாயைப் பொத்தினார், அருணாசலம். "அழகு உன் முகத்தில் இல்லை என்று யார் சொன்னார்கள்? உன்னுடைய முகத்தழகு என் கணகளுக்குத் தெரிந்தால் போதாதா? நீ முகத்திலும் அழகி; அகத்திலும் அழகி!"

    இப்போது சொல்லுங்கள்: இந்த இருவரில் யாருடைய தியாகம் உயர்ந்ததென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நாட்டுக்காக சகுந்தலா செய்த தியாகமா? அல்லது அவளுக்காக அருணாசலம் செய்த தியாகமா?
    ----------------


    10. பித்தம் தெளிய மருந்து.



    பைத்தியங்களுக்கென்றே தனியாக ஒரு வைத்தியசாலை வைத்து நடத்தும் டாக்டர் குருநாதனைப் பற்றிப் பொதுமக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. பைத்தியங்களுக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவரை நன்றாகத் தெரியும். டாக்டருக்கு ஐம்பது வயதுக்குமேல் ஆகிவிட்டது. என்றாலும் அவரிடம் இளமை, உற்சாகம், உழைப்புத்திறன், நேர்மை இவ்வளவும் இருந்தன. மேல்நாட்டு வைத்தியம், சித்தம், ஆயுர்வேதம், யுனானி, மனோதத்துவம் இப்படிப் பலதுறைகளிலும் உள்ளவர்கள் எப்படிப் பைத்தியங்களுக்குச் சிகிச்சை செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, நோயாளிகளுக்கு ஏற்ற முறையில் வைத்தியம் செய்து, வெற்றிமேல் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார் அவர்.

    வெற்றி பெருகப் பெருக அவருடைய ஆஸ்பத்திரியில் கூட்டமும் பெருகியது. எங்கிருந்தெல்லாமோ விதம் விதமான பைத்தியங்களை அவரிடம் கொண்டுவந்து சேர்த்தார்கள். பணமும் புகழும் பெருகின. பணத்தால் தமது மருத்துவ மனையின் வசதிகளைப் பெருக்கிக் கொண்டார். புகழைப்புறக்கணித்து ஒதுக்கித் தள்ளினார்.

    ஆயிரக்கணக்கான மனிதர்களுக்குச் சுயசிந்தனையைத் திருப்பிக் கொடுத்த அவர் புகழ் ஆசையையும் ஓர் அப்பட்டமான பைத்தியக்காரத்தனம் என்றே கருதினார். பணக்காரப் பைத்தியங்களைச் சேர்ந்த பலர் அவருக்கு விருந்துகள் நடத்தி, மாலைகள் போட்டு, பாராட்டுப் பத்திரங்களும் பரிசுகளும் கொடுப்பதற்குத் துடியாய்த் துடித்தார்கள்.

    " இந்தப் பைத்தியக்கார வேலைகளையெல்லாம் என்னிடமே வைத்துக் கொள்ளாதீர்கள்! பணம் அதிகமாக இருந்தால் என்னுடைய ஆஸ்பத்திரிக்கு இன்னொரு அறை கட்டிக்கொடுத்துவிட்டுப் போய்ச் சேருஙகள்" என்று பதிலளிப்பார் அவர்.

    பணம்,பெண்,புகழ்-இவைகளால் விளையும் பேராசைகளாலும் நிராசைகளாலுமே அதிகப்படியான பைத்தியங்கள் அங்கு கூடுகின்றன என்பதை அவர் அநுபவத்தால் கண்டவர்.

    டாக்டரின் முக்கியமான நண்பர்களில் ஒருவர், உளநூல் பேராசிரியர் மாணிக்கம். உளநூல்களைப் படித்துவிட்டு வகுப்பில் பாடம் நடத்துவதோடு பேராசிரியர் தம்முடைய பணியை நிறுத்திக்கொள்ளவில்லை. மக்களின் உள்ளப் பண்புகளை அவர்களிடம் நெருங்கிப் பழகி ஆராய்ந்தார். டாக்டர் குருநாதன் போன்றவர்களிடம் விவாதித்தார். அவரே புதியதோர் நூல் எழுதுவதற்காகச் செய்திகளைத் திரட்டிக் கொண்டிருந்தார்.

    குருநாதனின் பைத்திய ஆஸ்பத்திரி அவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்பட்டது. இரண்டு நண்பர்களுமே ஒருவரின் கூட்டுறவால் ஒருவர் பயன்பெற்று வந்தனர்.

    அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. காலை நேரத்தில் வழக்கம் போல் வைத்தியசாலையின் தோட்டம் மலர்களோடும் இலைகளோடும் அழகாக விளங்கியது. தோட்டத்துக்குள் இருந்த மருத்துவமனைக் கட்டிடங்களைக் கழுவிச் சுத்தப்படுத்திக் கொணடிருந்தார்கள் பணியாட்கள்.

    அபாயகரமான பைத்தியங்களை மட்டிலுமே அறைகளுக்குள் அடைத்து வைத்திருந்தார் டாக்டர். மற்றவர்களுக்கு அங்கே தோட்டத்திற்குள் உலவுவதற்கோ, சேஷ்டைகள் செய்வதற்கோ, சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கோ எல்லா உரிமைகளும் உண்டு. செடி கொடிகளைப் பிடுங்கித் தலைகீழாக சிலர் நட்டு வைத்ததிலிருந்து, அத்தகையவர் களைக் கண்காணிப்பதற்காகமட்டிலும் அங்கங்கே சில காவற்காரர்கள் இருந்தார்கள்.

    பேராசிரியர் மாணிக்கம் மருத்துவ மனைக்குள் நுழைந்தபோது, காண்பதற்கரிய பல அபூர்வக் காட்சிகள் அவருக்கு வழியிலேயே காத்திருந்தன. ஒருவர் தலைகீழாக நின்று சிரசாசனம் பழகிக்கொண்டிருந்தார். இன்னொருவர் விளக்குக் கம்பத்தைப் பார்த்து அதனிடம் சினிமா வசனமும் சிங்காரப் பாட்டும் பாடிக்கொண்டிருந்தார்.

    அடுத்தாற்போல் தென்பட்ட காட்சி ஒன்று பேராசிரியரை அதே இடத்தில் நிற்கச் செய்துவிட்டது. சிறியதோர் மரக் கிளையில் நாற்பது வயதுக்கு மேலான ஓர் பணக்காரப் பைத்தியம் தனது மிடுக்குப் பார்வையுடன் உட்கார்ந்திருந்தது. சில்க் சட்டை, ஜரிகை அங்கவஸ்திரம், தங்கச்சங்கிலி, விரல்களில் மோதிரங்கள் அவ்வளவும் அப்படியே அதனிடம் இருந்தன.அது மரத்தின் மேல் மட்டும் ஏறி உட்கார்ந்திரா விட்டால் அதைப் பைத்தியம் என்றே சொல்ல முடியாது.

    மரக் கிளைக்கு அடியில் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றன, இன்னும் சில பைத்தியங்கள். கிளையிலிருந்து குச்சி ஒன்றை ஒடித்து, அதனால் அடிமரத்தைத் தட்டிச் சத்தமுண்டாக்கி, கூட்டத்தின் கவனத்தைத் தன் பக்கம் அது திருப்பப் பார்த்தது.

    "டப,டப,டப்...!பட,பட,பட்...! இதனால் சகலவிதமான ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்... தெரிவித்துக்கொள்வது என்னவென்றால்..."

    பேராசிரியரை அது உற்றுப் பார்த்துவிட்டு, "ஸார், நீங்களும் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்" என்று அழைத்தது. பேராசிரியருக்கு அந்தக் காட்சியைக் காண மிகவும் பரிதாபமாக இருந்தது.. என்றாலும் ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டவராதலால் அவரும் அருகில் நெருங்கிச் சென்றார்.

    "மஹா ஜனங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்,.......அந்த இன்ஸ்பெக்டர் எத்திராஜ் சொல்வது போல் நான் ஒரு 'பிராட்� பேர்வழி இல்லை! ....நான் மகா...மகா....யோக்கியன்.நான் எப்படி மகா யோக்கியனாய் ஆனேன் தெரியுமா?........ஐந்தாவது வயதில் அரிச்சந்திர புராணம் படித்தேன். அப்போதே சத்தியம் தான் பேசுவது என்று சத்தியம் செய்துகொண்டேன்!"

    கூட்டம் கை தட்டியது. பைத்தியம் ஜரிகை விசிறி மடிப்பால் முகத்தைத் துடைத்துக்கொண்டு மேலே உளறியது:-

    "ஆறாவது வயதில் ராமாயணம் படித்து ராமன் ஆனேன். எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை என்று சத்தியம் செய்தேன்!... அப்புறம் ஏழாவது வயதில் கொடைவள்ளல் குமணன்! பத்தாவது வயதிற்குள் பத்தாயிரம் புத்தகம் படித்துப் பகவத் கீதையையும் கரைத்துக் குடித்தேன்!"

    குபீர் என்று கூட்டத்தில் சிரிப்பொலி கேட்டது. உருட்டி விழித்துப் பார்த்தது உயரத்தில் உட்கார்ந்திருந்தது.

    "சொல்லுங்க! சொல்லுங்க! அஞ்சாவது வயசிலே அரிச்சந்திர அவதாரம், ஆறாவதிலே ராமாவதாரம், இப்போ அனுமார் அவதாரம்.." "குறுக்கே பேசாதே!" என்று அதட்டிவிட்டு, தன்னுடைய பிறப்பு வளர்ப்பின் பிரதாபங்களை மேலும் மேலும் அள்ளிவிட்டுக் கொண்டிருந்தது அது.

    "பகவத் கீதையில் உள்ள கர்ம காண்டத்தைப் படித்துவிட்டுத் தான் நான் கர்மயோகியானேன். நான் உழைத்துத் தொழில் செய்து, கடை வைத்துச் சம்பாதித்தேன்;...சத்தியமாய்ச் சொல்லுகிறேன்: என் பிள்ளை குட்டிகளின்மேல் ஆணையாகச் சொல்லுகிறேன்! தொழிலில் ஒரு திருட்டுப் புரட்டுக் கிடையாது! தில்லுமுல்லுக் கிடையாது! நான் 'பிராட்� பேர்வழியில்லை; உத்தமன்; சத்தியவந்தன்;... மகா...மகா...மகா யோக்கியன்!"

    "அரிச்சந்திர மகாராஜா! வாங்க, உங்களை டாக்டர் கூப்பிடுகிறார்" என்று சொல்லி, ஒரு ஆள் வந்து மரத்திலிருந்து அதை இறக்கிவிட்டுக் கூட்டிக்கொண்டு போனான்.

    பேராசிரியர் யோசனையுடன் மெதுவாக நடந்தார். "இந்த மனிதனுக்கு எதனால் இப்படிச் சித்தப் பிரமை ஏற்பட்டிருக்கிறது?" என்ற கேள்வி அவர் உள்ளத்தில் எழுந்தது.

    அவருடைய பேச்சுக்களின் சாரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தபோது, ஒரே ஒரு விஷயத்தைத் தான் அவர் பல வார்த்தைகளில், திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்தது. அவர் ஒரு மகா, மகா....மகா யோக்கியர்!

    யோக்கியராக இருந்தவருக்கு அப்படி என்ன தொல்லை வந்துவிட்டது? யோக்கியர்களாக இருப்பவர்கள் யாரும் தங்கள் யோக்கியத் தன்மையைத் தம் பட்டம் அடித்துக் கொள்வதில்லையே! இவர் மட்டும் ஏன்?"

    பேராசிரியர் மாணிக்கம் சிந்தனையுடன் நடந்தார்.

    சிகிச்சை அறையில் டாக்டர் குருநாதன் அந்த நோயாளிக்கு ஊசி போட்டுவிட்டு வெளியில் வந்தார். மயக்கம் தெளிந்தவுடன் சில மருந்துகளை அவருக்குக் கொடுக்கும்படி நர்ஸிடம் கூறினார். பிறகு அவரது அவசர அலுவல்கள் முடிந்த பின்பு, இருவரும் தனி அறையில் உட்கார்ந்து பேசத் தொடங்கினார்கள்.

    டாக்டர் அறை அழகோடும் குளுமையாகவும் இருந்தது. மெல்லிய திரைத் துணிகளும், குலுங்கிச் சிரிக்கும் பூந் தொட்டிகளும், மிருதுவான சோபாக்களும், அந்த அறையின் அழகில் ஓர் தனித் தன்மையைச் சுட்டிக் காட்டின. சன்னல்கள் வழியே தோட்டத்துக் காற்று வீசிக் கொண்டிருந்தது.

    "இந்த நோயாளியின் பேச்சுக்களை நானும் கேட்டுக் கொண்டிருந்து விட்டுத்தான் வருகிறேன்" என்று ஆரம்பித்தார் பேராசிரியர்.

    "ஓ! இந்த அரிச்சந்திரனைப் பற்றிச் சொல்கிறீர்களா? இவர் பெயர் ராமச்சந்திரன்! சொத்து சுகம் ஒன்றிலும் குறைவில்லை.எல்லா வசதிகளும் எப்படியோ கிடைத்து விட்டன. மனிதர் உணர்ச்சி வசப்படாமல், உள்ளதை இனி மேலாவது நல்லபடியாக வளர்த்துக்கொண்டு வாழலாம். ஆனால்,பாவம் போலிப் பெருமை! பொய்க் கௌரவம்!"

    "சத்தியவந்தன் என்று கூறிக்கொண்டாரே!"

    டாக்டர் மெல்லச் சிரித்துவிட்டு,"கோளாறு இப்போது அந்த இடத்தில் தான் இருக்கிறது! சத்தியம் எங்கே இருக்கிறது? சத்தியம் எங்கே இருக்கிறது என்பதை அவருக்கே நாம் சுட்டிக்காட்ட முடியுமானால், பிறகு அவரது சித்தப் பிரமை தன்னால் நீங்கிவிடும்" என்றார்.

    " நோயாளியின் வாழ்க்கையையும், அதன் சிக்கல்களையும் தெரிந்து கொள்ளாமல்தான் நான் வைத்தியத்தில் இறங்குவதில்லையே! வக்கீலிடமும் டாக்டரிடமும் உண்மையைச் சொல்லாதவர்கள் அவர்களுக்கே நன்மை செய்து கொள்வதில்லை. இந்த மனிதருடைய அந்தரங்கக் காரியதரிசியிடமிருந்து விவரங்களைத் தெரிந்துகொண்டேன்."

    ஆராய்ச்சி மனத்தின் ஆவலுடன் நிமிர்ந்து உட்கார்ந்தார் பேராசிரியர். டாக்டர் பேசினார்.

    'அண்டர் வோல்ட்' என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே அந்தக்'கீழ் உலக'த்துடன் தொடர்புள்ள மனிதர் இவர்.

    " கீழ் உலகமா?"

    " ஆமாம், சாதாரணமாக மனிதர்களின் கண்ணொளி படாத ரகசிய உலகம் ஒன்று இருக்கிறதே, உங்களுக்குத் தெரியாதா? கௌரவக் குறைவான காரியங்களைச் செய்கிறவர்கள் பகிரங்கமாகவா செய்வார்கள்? ரகசியத்தில் தீமைகளைச் செய்துகொண்டு, பகிரங்கமாய்ப் பகழ் வேட்டையாடுகிறவர்கள் எங்கும்தான் இருக்கிறார்கள் அப்படிப்பட்டவர்களில் இவரும் ஒருவர்!"

    "என்ன!" - அரிச்சந்திரன், ராமன், குமணன், தரும புத்திரன் எல்லோரும் பேராசிரியரின் நினைவுக்கு வந்தார்கள்.

    "திருட்டுப் பொருள்களை உருமாற்றி மலிந்த விலையில் விற்கும் சிலர் இருக்கிறார்கள். பெரிய பெரிய நவரத்தினங்கள் கூட இவர்களிடம் கிடைப்பதுண்டு! - உலகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு போலீஸ் காவல் வைக்க முடியுமா? ஆனால் கடவுள் என்னவோ அந்தப் போலீஸ் காவலை ஒவ்வொருவரிடத்திலும் வைத்துத்தான் இருக்கிறார்."

    "இவருக்கு வந்து..." என்று டாக்டரிடம் கதையைக் கேட்டார் பேராசிரியர். "ஒரு முறை இவர் போலீசில் வசமாக அகப்பட்டுக் கொண்டார். சட்ட திட்டம் சாமர்த்தியங்கள் பலிக்கவில்லை. எல்லா விஷயங்களும் முடிவடைந்துவிட்டன. ஆனால் இவரை மட்டிலும் அந்த வரட்டுப் பெருமை விடவில்லை. வருகிறவர்கள் போகிறவர்களிடமெல்லாம் தாம் அரிச்சந்திர னுக்கு வாரிசு, தர்மபுத்திரருக்குத் தமையன் என்று சொல் லிக்கொண்டிருந்தாராம். பலன் ? ...பாவம்!"

    "குணப்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?"

    "மருந்தால் மட்டும் முடியுமென்று நான் சொல்லவில்லை; கடவுளும் கைகொடுக்க வேண்டும். கடவுள் கை கொடுக்கும் போது அந்த மனிதரும் கை நீட்டி அதைப் பற்றிக் கொள்ள வேண்டும்."

    பேராசிரியருக்குத் தெளிவாகப் புரியவில்லை. "மத்தி யானம் சாப்பிட்டுவிட்டு, நாம் இருவருமே அவரிடம் பேசிப் பார்ப்போம்" என்றார் டாக்டர்.

    மதியச் சாப்பாடு டாக்டரின் வீட்டிலேயே முடிந்தது. சிறிது நேரம் இருவரும் இளைப்பாறினார்கள். பிறகு பேரா சிரியருடன் தம்முடைய அலுவல் அறைக்கு வந்து, அந்த நோயாளியையும் அழைத்து வரச் செய்தார் டாக்டர்.

    அவர் வருவதற்கு முன்பே அவருடைய குரல் அறைக் குள் நுழைந்தது : -

    "அநியாயம் ஸார்! அக்கிரமம் ஸார்!...அந்த இன்ஸ் பெக்டர் எத்திராஜை நம்பாதீர்கள் ஸார்! என்னுடைய கௌரவம் என்ன, பெருமை என்ன....என்னைப் போய்......"

    "மிஸ்டர், ராமச்சந்திரன், இப்படி உட்காருங்கள்" என்றார் டாக்டர். "நீங்கள் இங்கே வந்து எவ்வளவு வரு டங்கள் ஆகின்றன தெரியுமா?"

    ராமச்சந்திரன் விழித்தார். அங்கு வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை என்று அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. முற்பகலில் டாக்டர் வேறு ஊசி போட்டிருந்ததால், பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகத் தோன்றியது.

    "ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன! அதற்குள் உலகத்தில் ஒரு பெரிய யுத்தம் வந்து, உலகமே தலைகீழாக மாறிப்போய் விட்டது. சாஸ்திரம், புராணம், சட்டதிட்டங்கள் எல் லாமே மாறிவிட்டன."

    "ஓ! அப்படியா.... இருக்கும், இருக்கும்!" என்றார் நோயாளி.

    "அரிச்சந்திரன், ராமன், தர்மன் இவர்களுக்கெல்லாம், பிழைக்கத் தெரியாத அப்பாவிகள் என்று இப்போது பெயர். சத்தியத்தைக் காப்பாற்ற எவனாவது தன் மனைவியை அடிமையாக விற்பானா? அவனுடைய சரித்திரத்தைப் படிப் பவர்களுக்கு இப்போதெல்லாம் ஐந்து வருட ஜெயில் தண் டனை!"

    "உண்மையாகவா?"

    "எல்லாமே தலைகீழ் என்கிறேன். நம்ப மாட்டீர்கள் போலிருக்கிறதே!- முன்பெல்லாம் பஞ்சமா பாதகம் என்று சொல்வார்களே, அதை யெல்லாம் திறமையோடு செய்கிற வர்களுக்குத் தான் இப்போது நாட்டிலே நல்ல பெயர்!"

    முதன் முறையாகப் புன்சிரிப்புச் சிரித்தார் நோயாளி.

    "ஒவ்வொரு கெட்ட காரியத்தையும் செய்வதற்கு எவ் வளவு சாமர்த்தியம், உழைப்பு, கவனம் வேண்டியிருக்கிறது? உண்மையை எல்லோரும் சாதாரணமாய்ச் சொல்லி விடலாம். பொய் சொல்லுவதற்குத்தானே தகுதியும் திறமையும் வேண்டும்! ஒரு பொய்யை நிரூபிக்க ஒன்பது பொய் தேவைப் படுகிறதல்லவா? ஒன்பது பொய்களையும் முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லித் தொலைக்கக் கூடாது. அதில் எவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன!"

    "டாக்டர் ஸார்! என்னுடைய அருமை உங்கள் ஒரு வருக்குத் தான் தெரிகிறது" என்று மகிழ்ச்சியோடு கூறினார் ராமச்சந்திரன்.

    "என்னை விட இவருக்குத்தான் அதிகம் தெரியும்!" என்று பேராசிரியர் மாணிக்கத்தச் சுட்டிக் காட்டினார் டாக்டர். "இவர் உள நூல் பேராசிரியர். உங்கள் முகத்தை ஒரே ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தால் போதும். உங்களுடைய எல்லா ரகசியங்களையும் உங்களிடமே சொல்லிவிடுவார்."

    பயத்துடன் அவரைத் திரும்பிப் பார்த்தார் நோயாளி.

    "பயப்படாதீர்கள்! வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பொய், களவு, சூது முதலிய எல்லா விஷயங்களையும் திறமை யோடு கையாளுவது எப்படி என்ற அனுபவங்களை இப்போது நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளத் துடியாய்த் துடிக்கிறார் கள். சிறந்த அனுபவங்களை வெளியிடுபவர்களுக்கு ஓர் பெரிய பரிசு கொடுக்கப் போகிறார்களாம்! 'நோபல்' பரிசை விடப் பெரிய பரிசு!- நீங்கள் விரும்பினால் உங்களுக்கு இவரே அந்தப் பரிசை வாங்கிக் கொடுத்துவிடுவார்."

    "ஸார், ஸார், குறித்துக் கொள்ளுங்கள் ஸார்! இப் போதே சொல்கிறேன், குறித்துக் கொள்ளுங்கள் ஸார்!.. அதையெல்லாம் எப்படி எங்கே நான் கற்றுக்கொண்டேன், அதற்காக நான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்பதையெல் லாம்..."

    "சொல்லுங்கள்!" என்று குறித்துக்கொள்ளத் தொடங் கினார் பேராசிரியர்.

    புகழ் ஆசையால் தூண்டப் பட்ட மனிதர், தம்முடைய ரகசியச் செயல்களின் பிரதாபங்களைச் சுவையோடு வர்ணித் துக்கொண்டு போனார். உளநூல் ஆசிரியரின் உள்ளம் தனக்குள்ளே மிகவும் வேதனை அடையத் தொடங்கியது. அப்பாவி மக்களின் வாழ்க்கையில் அவரால் ஏற்பட்டிருந்த துன்பங் களை நினைத்துப் பார்க்கவே அவர் நெஞ்சு நடுங்கியது.

    இடையிடையே, அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் எப் படிப்பட்ட கொடுமைக்குள்ளாகி யிருப்பார்கள் என்று அவரையே கேட்டார் பேராசிரியர். கேள்விகளுக்குப் பதி லளிக்கத் தொடங்கியபோதுதான், அவர் பாடு பெரும் பாடாகப் போய்விட்டது.

    விவரங்களைச் சொல்லிவரத் துவங்கிய நேரத்திலிருந்து சொல்லி முடியும் நேரத்திற்குள்ளாகவே அந்த மனிதரிடம் சிறிது சிறிதாக மாறுதல்கள் தெரிந்தன. ராமச்சந்திரனின் கண்களில் புத்தொளி மலரத் தொடங்கியது; சொற்களில் தடுமாற்றமில்லை; புத்தி சுவாதீனமுள்ளவராக அவர் மாறிக் கொண்டு வந்தார்.

    தொடங்கிய பேச்சு முடிவதற்குள் அவருடைய குரல் தழுதழுத்தது. கண்களில் நீர் பெருகியது. அவர் விம்மி னார்; விக்கினார்; தேம்பித் தேம்பி அழுதார்.

    அவருடைய மன அழுக்கெல்லாம் கண்ணீரில் கரைந்து உருகிவருவதை வியப்போடு கவனித்த பேராசிரியருக்கு இப் போது பெருமிதம் உண்டாயிற்று.

    "ராமச்சந்திரன்! உங்களுக்குக் குணமாகிவிட்டது, ராமச்சந்திரன்!" என்றார் டாக்டர். இப்படிச் சொல்லிக் கொண்டே மெதுவாக அருகில் இருந்த ஓர் மின்விசையை அழுத்தினார்

    இனியதோர் பாடல் உருக்கமான குரலில் ஒலிக்கத் தொடங்கியது.

    "பித்தம் தெளிய மருந்தொன் றிருக்குதாம் சத்தியமென்றுள்ளே! சத்தியமென்றுள்ளே!"
    ராமச்சந்திரனுடைய கரங்களிரண்டும் குவிந்தன.மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தார் அவர்.

    பேராசிரியருக்கு ஏதோ ஒரு விசித்திர உலகத்தில் இருப் பதுபோல் தோன்றியது.

    "உலகத்தையே மனிதன் ஏமாற்றி விடலாம். ஆனால் அவனுடைய உள்ளத்துக்குள் ஒளிந்திருக்கும் சத்தியமூர்த்தி யான ஒரே ஒருவனை மட்டும் அவனால் ஏமாற்ற முடியாது. அவனையே ஏமாற்ற நினைக்கும்போதுதான் உமக்குச் சித்தம் கலங்கிவிட்டது. ஆனால் அவன் கருணை வடிவானவன்; எதையும் மன்னிக்கக் கூடியவன்!"

    குனிந்த தலை நிமிராமல் அறையை விட்டு நடந்தார் ராமச்சந்திரன்.


    11. கலியபெருமாளின் கனவு


    கலியபெருமாள் பிறந்து வளர்ந்தது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம். அவனுடைய கல்லூரிப் படிப்பு நடந்த இடம் திருச்சி. இப்போது அவன் கலைக் கோட்டையான பட்டணத்தை முற்றுகை இடுவதற்கு எழும்பூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.

    பி.ஏ. பரீட்சை முடிந்தது. விடுமுறையும் விட்டுவிட்டார்கள். வட இந்தியாவுக்குத் தன் நண்பர்களுடன் புறப்படுவதாக வீட்டில் ஒரு பொய்யைச் செல்லிவிட்டுப் பை நிறையப் பணம் எடுத்துக்கொண்டு அவன் இந்தத் தலைநகர யாத்திரையைத் தொடங்கியிருக்கிறான். தலைநகரம் அவனைப் பொறுத்தமட்டில் கலைநகரம்.

    எழும்பூர் ரயிலடியில் இறங்கி அவன் விழித்த விழிப்பைக் கண்டுவிட்டு, முன்பின் தெரியாத ஓட்டல் தரகர் ஒருவர், நெடுநாள் பழகியவர்போல் அவனிடம் நெருங்கினார். அவனுக்காகவே காத்திருப்பவர்போல் தேன் சொட்டப் பேசினார். அவன் சார்பில் கூலியாட்களை அதட்டிப் பெட்டி படுக்கையைத் தூக்கிக்கொள்ளச் செய்தார். வெளியில் நின்று கொண்டிருந்த 'டாக்ஸி'யில் ஏறிக்கொண்டு அவர்கள் இருவரும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார்கள்.

    ஓட்டலில் சாப்பாடும் உண்டு;தங்குவதற்கு அறையும் உண்டு; ஏவலுக்கு ஆளும் உண்டு.

    புது மாப்பிள்ளைக்கு நடக்க வேண்டிய உபசாரங்கள் அங்கே அவனுக்கு நடந்தன.காலைக் காப்பி, குளிப்பதற்க வெந்நீர், பிறகு பலகாரம், அடுத்தாற்போல் பத்திரிகை இவை யாவும் அவன் கேட்காமலே அவனுக்குக் கிடைத்தன. ஏற்கெனவே அவன் ஓட்டல் வசதிகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்ததால் அவனுக்கு வியப்பொன்றும் ஏற்படவில்லை.

    செய்தித்தாளை அகலமாகப் பிரித்து வைத்துக்கொண்டு படிக்கத் தொடங்கினான் கலியபெருமாள். அவனுக்குப் பிடித்தமான தினசரி அது.கலியபெருமாளிடம் இப்போது எதையும் ஆழ்ந்து படிக்கும் வழக்கமில்லை. அகலமாகப் படித்தே பழகி விட்டவன் அவன்.

    'நாட்டு நடப்பில்' நாட்டம் செலுத்தியது அவன் மனம். கொலை வழக்கு, கள்ளச் சாராயம், நடுத்தெருச் சோரம், பருத்திச் சூதாட்டம், பொய் புனைசுருட்டு இவையே அவனுக்குப் பிடித்தமான நாட்டு நடப்புக்கள். முற்காலத்திலிருந்த 'மூடர்கள்' இவைகளுக்குப் பஞ்சமா பாதகங்கள் என்று பெயர் வைத்திருந்தார்கள். இந்தக்காலத்து இளம் அறிவாளிகளின் கருத்துக்கு அவை உணவாகப் போகின்றன என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்?

    அடுத்தாற்போல் அவனைக் கவர்வது சினிமாச் செய்தி. அதற்கும் அடுத்தாற்போல் கட்சி அரசியல் சண்டை. இவர் அவரை இன்றைக்கு எப்படித் திட்டினார், அவர் இவரை எப்படித் திருப்பித் திட்டினார் என்ற விஷயங்கள்.

    ஓட்டல் மானேஜர் ஒரு நோட்டுப் புத்தகமும் கையுமாக அவனிடம் வந்து சேர்ந்தார்.செய்தித்தாளில் 'இந்திய எல்லையில் சீனத்துருப்புக்கள்' என்ற பகுதியை ஒதுக்கித தள்ளிவிட்டுக் குமார் குந்தளா என்ற எஸ்ட்ரா நடிகையின் அந்தரங்க வாழ்க்கையாகிய 'நாட்டு நடப்புக்குள்' அவன் அப்போது புகுந்து கொண்டிருந்தான். செய்தித்தாளும், சீனத் துருப்புக்களுக்குக் கொடுக்காத மகத்துவத்தைக் குமாரி குந்தளாவுக்குக் கொடுத்து, அவளுக்காக அரைப் பக்கத்தையும் ஒதுக்கியிருந்தது.

    ஓட்டல் மானேஜர் நடுத்தர வயதும் முதல்தர உடம்புமாக முறுக்கிவிட்ட மீசையுடன் காமா பயில்வானின் தம்பிபோல் இருந்தார். அகலமான நெற்றி, மல் ஜிப்பா, மல் வேஷ்டி, மூக்குக் கண்ணாடி அவருக்கு.

    பையனை ஒருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஏற இறங்கப் பார்த்தார். ஓட்டலுக்கு வருகிறவர்களை எடை போட்டுப் பழகிப் போன கண்கள் அவருடைய கண்கள்.

    பையனுக்கோ ஒல்லியான உடம்பு, திலீப் குமார் கிராப்பு, நறுக்கு மீசை, ஜாக்கெட் துணியில் மேல் சட்டை, தொள தொளத்த பைஜாமா, விலை உயர்ந்த சென்ட் மணமும் சிகரெட் மணமும் அவனைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. 'புள்ளி சுமாரான புள்ளி தான்' என்று தமக்குள் புள்ளி போட்டுக் கொண்டார் மானேஜர்.

    மெல்லக் கனைத்துத் தம் வருகையை வெளிப்படுத்திக் கொண்டு, "எவ்வளவு நாட்களுக்குப் பட்டணத்திலே தங்கறதா உத்தேசமோ?" என்று குழைவுடன் ஆரம்பித்தார் அவர்.

    குமாரி குந்தளாவிடம் ஒட்டிக்கொண்டிருந்த மனத்தை வெட்டிவிடத் துணிந்த அவரைச் சற்றுக் கடுப்புடன் பார்த்துவிட்டு, "எதுக்காக இதையெல்லாம் கேக்கிறீங்க?" என்றான் கலியபெருமாள்.

    "இல்லே, உங்க சொந்த ஊர், நீங்கே இங்கே வந்த காரணம், நீங்க எத்தனை நாள் இங்கே தங்கப் போறீங்கங்கற விஷயம் இதையெல்லாம் நான் குறிச்சுக்கணும். அதனாலே கேட்டேன்."

    பையன் யோசனை செய்தான். அவன் பட்டணத்துக்குப் புதியவன். ஓட்டலுக்குப் புதியவன். கேள்வி ஞானத்தால் மட்டும் விவரம் தெரிந்துகொண்டு வந்திருக்கிறான்.

    "நீங்க என்ன சொல்றீங்களோ,அதை நாங்க எழுதிக்கிறோம்" என்றார் மானேஜர், அவனுடைய யோசனையைப் பார்த்துவிட்டு. "உண்மையைத்தான் சொல்லணும்கிறது இல்லை; நீங்க சொல்றதுதான் எங்களுக்கு உண்மை" என்று மறைமுகமாக அவர் சொல்வது போலிருந்தது.

    அதை அவன் புரிந்து கொள்ளாமல்,"எத்தனை நாட்கள் இருக்கப்போறேன்னு எனக்கே தெரியாது" என்றான். பிறகு "ஏன், இவ்வளவு நாட்கள்தான் தங்கலாம்னு எதுவும் கட்டாயம் உண்டோ?" என்று கேட்டான்.

    "சே! இதை உங்க சொந்த வீடுமாதிரி நினைச்சுக்குங்க. ஒரு நாளைக்கு அஞ்சு ரூபாய் அறை வாடகை. காப்பி, சாப்பாடு, வெந்நீர், தயிர் இதல்லாம் தனிச்செலவு. நீங்க நிரந்தரமா இங்கேயே தங்கலாம். ஆமாம் வந்த வேலை என்னான்னு சொல்றீங்களா?"

    "ஒரு வேலையா இருந்தால் சொல்லலாம். எனக்கு எத்தனையோ வேலைகள். சினிமா, சங்கீதம், அரசியல், பேச்சு, எழுத்து, சித்திரம்..."

    'ஓ! சகல கலாவல்லவர் போலிருக்கு!' என்று தமக்குள் சொல்லிக்கொண்டு, "அப்படீன்னா, 'கலைப்பணி'ன்னு நோட்டிலே எழுதிக்கவா?"

    "ஆமாம், கலைத்தொண்டுதான் என் வாழ்க்கை இலட்சியம். அதுக்காக என் உடல்,பொருள், ஆவி எல்லாத்தையும் கொடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். பட்டணத்திலேதான் அதுக்கெல்லாம் இடமிருக்கு!"

    "தெரியாமலா'கெட்டும் பட்டணம் சேர்'னு சொன்னான்?..அட்வான்ஸ் ஒரு நூறு ரூபா தர்றீங்களா?" என்றார் மானேஜர்.

    நூறு ரூபாய் நோட்டை எடுத்து அலட்சியமாக மானேஜரிடம் நீட்டினான் கலியபெருமாள். அதை அவர் வெளிச்சத்தில் பிடித்து நீரோட்டம் பார்த்துவிட்டு, நல்ல நோட்டுத்தான் என்று தெரிந்துகொண்ட பிறகு அவனுக்கு ரசீது கொடுத்தார்.

    " இன்னும் உங்களுக்கு என்னென்ன வசதி வேணுமோ, கேளுங்க. உங்களைப் பார்த்தால் பெரிய இடத்துப் பிள்ளை போலத் தோணுது. எங்களாலே முடிஞ்ச உதவிகளை யெல்லாம் செய்யக் காத்துக் கிட்டிருக்கோம்."

    "முதல்லே நான் ஊரைச் சுத்திப் பார்க்கணும். யார் யார் எங்கெங்கே இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கறத்துக்கே ஒருவாரம் ஆகும். அது வரையிலே ஒரு பையனை எனக்குத் துணையாக அனுப்பி வைச்சிங்கன்னா, அதுதன் பெரிய உதவி."

    சற்று நேரத்துக்கெல்லாம் ஓர் இருபது வயது இளைஞனுடன் திரும்பி வந்தார் மானேஜர். குப்பத்து இளைஞனாக இருந்தாலும் அவன் வெளுப்பான சட்டையும் சராயும் போட்டுக் கொண்டிருந்தான். "பையன் யோக்கியமான பையன்; நீங்கள் இவனை நம்பலாம்" என்று சொல்லிவிட்டு, அவனிடம் திரும்பி, "டேய், மன்னார்! ஐயாவை நீ கவனிச்சுக்க; அவர் உன்னை கவனிச்சுக்குவார். தெரிஞ்சுதா?" என்றார். " ஆமாம், கொண்டு போய் நீ பாட்டுக்குத் தப்புத் தண்டாவிலே மாட்டி விடாதே!"

    " என்னங்க, இது! சாமியைப் பார்த்தா நல்லவரு மாதிரித் தோணுது. நான் அப்படியெல்லாம் செய்வேனுங்களா?"

    அன்றிலிருந்து கலியபெருமாள் பட்டணத்துக்குள் மணிக்கு இருபது முப்பது மைல் வேகத்தில் சுற்றத் தொடங்கினான். 'டாக்ஸியின் மீட்டர்' சுற்றிய வண்ணமாகவே இருந்தது. தார் ரோட்டில், காற்றில் பறப்பதுபோல் காரில் போவதில் ஓர் ஆனந்தம் இருகத்தான் செய்கிறது. குளிர்ந்த காற்றுள்ள சினிமாக் கொட்டகைகளில் உட்கார்ந்து படம் பார்ப்பதிலும், திறந்த மாடியுள்ள ஓட்டல்களில் உட்கார்ந்து பலகாரம் சாப்பிடுவதிலும் வரிசை வரிசையாகப் பங்களாக்கள், கார்கள், பெண்களை வேடிக்கைப் பார்ப்பதிலும் அந்த ஆனந்தம் அதிகரிக்கத்தான் செய்கிறது.

    கலிய பெருமாளின் தகப்பனார் நெற்றி வேர்வை நிலத்தில் விழப் பாடுபட்டுப் பணம் சேர்த்த மிராசுதார். தாமும் உழைத்தார்; வேலையாட்களையும் விரட்டி வேலை வாங் கினார்; நியாய விலைக்கும் நெல்லை விற்றார்.

    அவருடைய மூத்த பிள்ளைக்குச் சேலத்தில் ஜவுளி வியாபாரம். அதுவும் நன்றாகத்தான் நடந்தது.

    அவருடைய அடுத்த பிள்ளை ஏதோ ஒரு ஊரில் டாக்டராக இருந்தான். தொழிலையும் கவனித்துக்கொண்டு அவன் புதிய மருத்துவ ஆராய்ச்சிகளையும் செய்து வந்தான். அவனுக்கு அவன் இருந்த வட்டாரத்தில் நல்ல பெயர்.

    அவருடைய மூன்றாவது பிள்ளைதான் கலியபெருமாள். எல்லோருக்கும் செல்லப் பிள்ளை அவன்.

    பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் அவனைக் கல்லூரிக்குள் தள்ளி விடுவதற்கு அரும்பாடு பட்டார் அவனுடைய தகப்பனார். பிடிக்காதவர்களையெல்லாம் பிடித்து, கெஞ்சாதவர்களிடமெல்லாம் கெஞ்சி, கிடைக்காத இடத்தைக் கிடைக்கச் செய்தார்.

    ஆரம்பத்தில் படிப்பில் சுறுசுறுப்பு ஏற்பட்டது. பிறகு அது படுத்துக்கொண்டது. கல்லூரி நாடகங்கள், பேச்சுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், இவற்றில் நாட்டம் கொள்ளலானான். படிப்பையும் கவனித்துக்கொண்டு மற்ற விஷயங்களையும் கவனிப்பதற்கு அவனுக்கு நேரம் இருந்தது. நேரம் இருந்தால் போதுமா? மனம் வேண்டாமா?

    அவனுடைய வகுப்பில் பாடப் புத்தகங்களை மட்டும் அரித்துத் தின்னும் கரையான் கூட்டத்தாரும் இருந்தார்கள். கல்வி அறிவையும் பொது அறிவையும் வளர்த்துக்கொண்ட புத்திசாலிகளும் இருந்தார்கள். 'படிப்பதே பாவம்! வகுப்பில் கவனிப்பதே குற்றம்!கல்லூரியே சிறைச்சாலை!' என்று நினைக்கிற பிறவி மேதைகளும் சிலர் இருந்தார்கள்.

    பெற்றோரை முட்டாள்களென்று நினைத்த இந்தப் பிறவி மேதைகளின் வட்டத்துக்குள் கலியபெருமாள் எப்படியோ அகப்பட்டுக்கொண்டான். பாடப் புத்தகங்கள் பரிதாபத்துக்குரிய பொருள்களாகி விட்டன. நாட்டு நடப்பைப் பற்றியும் கலைப் பணியைப் பற்றியுமே அவனுக்கு இரவு பகல் எந்த நேரமும் சிநதனை.

    'நாட்டு நடப்பெ'ன்றால் கலியபெருமாளின் அகராதியில் கோர்ட்டு நடப்புகளும் கட்சி அரசியல் விவகாரங்களும்தான் ஆகும்.

    'கலைப் பணி' என்றால் சினிமாவில் நடிப்பது, பாடுவது அதற்கு எழுதுவது முதலிய வேலைகளாகும்.

    "தோன்றிற் புகழொடு தோன்றுக!" என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறார் அல்லவா? நாட்டுக்கு நல்ல பணிகள் பல செய்ய வேண்டுமென்றால், அதற்கு முதலில் புகழ்வேண்டும். புகழ் பெறுவது எப்படி? அவன் ஒரே சமயத்தில் ஒரே ஒரு வழியில் புகழ் தேட முனைந்திருந்தாலும் அதில் பொருள் உண்டு. ஆனால் கலியபெருமாளோ திரைப் படத்தில் பற்பல வேடங்களில் நடிக்கவும் விரும்பினான்; மேடையேறிச் சொற்போர் நடத்தவும் விரும்பினான்; காவியம் எழுத நினைத்தான்; ஓவியம் தீட்டத் துடித்தான்; தேர்தலுக்கு நின்று அமைச்சராகி நாடாளவும் ஆசைப் பட்டான்!

    பரீட்சையின் வினாத் தாள்களைத தயாரித்தவர்கள் நாட்டுப் நடப்பைச் சிறிதும் அறியாத கொள்கையற்றவர்கள். பாடப் புத்தகங்களிலிருந்தே அநாவசியமாகக் கேள்விகளைக் கேட்டு வைத்திருந்தார்கள். கொள்கை இல்லாமல்தானே இந்த நாட்டில் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் தோன்றியிருக்கின்றன? விவசாயம், பொறி இயல், மருத்துவம், கணிதம், இலக்கியம் இவையெல்லாம் கொள்கைக்குரிய கல்வியாகுமா என்ன! இவற்றைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதால் இந்த நாடு உருப்படப் போகிறதா, என்ன!

    ஆகவே தான் தேர்வின் முடிவு கொடுத்த அதிர்ச்சி தாங்காமல், கலை என்ற பொன்னாடையைப் போர்த்திக்கொண்டு புகழ் பெறுவதற்காக, அவன் தமிழ் நாட்டின் தலைநகரமான கலை நகரத்துக்கு வந்து சேர்ந்து விட்டான்.

    முதல் வாரம் பளபளப்பும் மினுமினுப்பும், கண் கூசும் வெளிச்சமும், காதடைக்கும் சத்தமும் நிறைந்த சென்னை மாநகரத்தைச் சுற்றிப்பார்ப்பதில் கழிந்தது. குபேர பட்டணம் என்று கதையில் வருகிற பட்டணம் இதன் ஒரு தெருவுக்கு உறை போடக் காணுமா? கார் போகிற வேகத்தில், உட்கார்ந்திருக்கும் 'ஸீட்'டை விட உயரத்தில் இருந்த பொருள்களே கண்ணுக்குத் தெரிந்தன.

    இரண்டாவது வாரம் கலைப் பிரமுகர்களைச் சந்திப்பதில் கழிந்தது. காருக்குக் காசு அதிகமானாலும் முதல் வாரத்துப் பழக்கம் அடுத்த வாரமும் அவனை விட்டு விடவில்லை.

    மூன்றாவது வாரம் ஆட்டோ ரிக்‌ஷா, சைக்கிள் ரிக்‌ஷா, மனித வாகனம். நான்காவது வாரம் நடை. வெளியில் வேலையுமில்லை' அவனுக்குப் போவதற்கு மனமும் இல்லை. அவனுடைய அபிமான நடிக நட்சத்திரங்களைப் பேட்டி காண்பதற்குள் அவன் பாடு பெரும் பாடாகிவிட்டது. வீட்டுக்குப் போனபோது ஸ்டூடியோவுக்குப் போயிருந்தார்கள். ஸ்டூடியோவுக்குப் போனபோது வீட்டில் இருந்தார்கள். சில சமயங்களில் வீட்டுக்குள்ளும் நுழைய முடியவில்லை; ஸ்டுடியோவுக்கும் அநுமதி கிடைக்கவில்லை. எப்படியோ ஒருவரைச் சந்தித்து, "நீங்கள் எப்படி இந்தத் துறையில் புகழ் பெற்றீங்க?" என்று கேட்டான். "புகழாவது, மண்ணாங்கட்டியாவது! அஞ்சாவது வயதிலே நாடக மேடையிலே வாத்தியார்கிட்ட வாங்கின அடியை நினைச்சா இன்னும் பயமா இருக்குது. நடிக்கச் சொல்லி அவர் படுத்தின் பாடு ரொம்ப அதிகம். அப்ப அவர் மேலே எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இப்ப நான் அவரை நினைக்காத நாள் இல்லை. பத்துப் பதினைந்து வருஷங்களுக்கு முந்தி நல்ல துணி ஏது? சோறேது? புகழைப் பத்திப் பேச வந்திட்டீங்களே!"

    "எனக்கும் உங்களைப் போல் நடிக்கணும்னு ஆசையாக இருக்கு, ஒரு சந்தர்ப்பம் கிடைச்சால்....." "ஆசைப்படறது நல்லதுதான். ஆனால் இந்த நாட்டிலே வீட்டுக்கொரு பிள்ளை நடிக்கணும்னு ஆசைப்பட்டால், நான் யாருக்குத்தான் சந்தர்ப்பம் வாங்கிக்கொடுக்கிறது? ஏற்கனவே நடிச்சு அநுபவப்பட்டவங்க ஆயிரக்கணக்கான பேர்கள் சந்தர்ப்பம் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காங்க, தெரியுமா?"

    அப்போதே நூற்றுக்கணக்கானவர்கள் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் தன்னைப் போலவே அவர்களும் சென்னைக்கு வந்தவர்கள் என்பதும் அவனுக்குத் தெரிந்தது.

    அப்போதே நூற்றுக்கணக்கானவர்கள் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் தன்னைப் போலவே அவர்களும் சென்னைக்கு வந்தவர்கள் என்பதும் அவனுக்குத் தெரிந்தது.

    அடுத்தாற்போல் புகழுக்குரிய அரசியல் கட்சித் தலைவர்களைப் பேட்டி காண்பதற்காக முயற்சி செய்தான். பலர் ஊரில் இல்லை. வரப்போகும் பொதுத்தேர்தலுக்குப் பணம் தேடுவதற்காகவும் ஆதரவு தேடுவதற்காகவும் அவர்கள் வெளியூர்களுக்குப் போயிருந்தார்கள்.

    பார்க்க முடிந்த ஒருவரிடம் தனக்கு நன்றாக மேடையில் பேசத் தெரியும் என்றும் நாட்டுப் பணிசெய்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்றும் அவன் கேட்டுக்கொண்டான்.

    "மேடையிலே பேசற நாட்டுப் பணி இப்ப போதாது, தம்பி!" என்றார் அவர். "வரப் போகிற தேர்தலிலே உன்னோட வட்டாரத்திலே நீ நம்ப கட்சிக்காக பாடுபடு. உன்னோட உழைப்பைப் பார்த்திட்டுப் பின்னாலே யோசிப்போம்"என்றார்.

    இன்னும் பல இடங்களுக்குப் போய்ச் சலிப்பு ஏற்பட்ட பிறகு,'சும்மா இவரையுந் தான் பார்ப்போமே!' என்ற எண்ணத்துடன் ஒரு எழுத்தாளரைப் போய்ப் பார்த்தான். அவர் புகழுக்கு உரியவரே தவிர பொருளுக்கு உரியவரல்ல. தன் தகப்பனாரிடம் பொருள் இருந்ததால், புகழ் கிடைத்தால் போதுமென்று நினைத்தான் கலியபெருமாள்.

    அவன் போய்ச் சேர்ந்த நேரத்தில் அவர் கதை எழுதுவதற்காகக் கற்பனையைத் தேடிக்கொண்டிருந்தார். அவன் தன்னுடைய கதையை அவரிடம் சொல்லத் தொடங்கவே, அவருக்குக் கற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. தூண்டித் துருவி அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்போல் கேட்டார்.

    அவருக்குக் கதை கிடைத்துவிட்டது. பதிலுக்கு அவனுக்கு ஏதாவது கைம்மாறு செய்யவேண்டுமல்லவா? - அவனோ கதை எழுதவும் ஆசைப்பட்டான்.

    "நீங்க சொன்னதைத்தான் நான் இப்ப எழுதப் போகிறேன். இதை நீங்ககூட எழுதலாம். ஆனால் பயிற்சி வேணும். உழைத்துப் பழகணும். புகழுக்காகவோ பொருளுக்காகவோ ஆரம்பத்திலே பலர் இதில் ஈடுபடுவதில்லை. பிறகு தன்னாலே அது வந்தாலும் வரும்; வராமல் போனாலும் போகும். புகழ்ச்சி கிடைக்கிறப்போ இகழ்ச்சியும் கிடைக்கும். இதை மறந்திடாதீங்க."

    "நான் வரட்டுமா?" என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு எழுந்தான் கலியபெருமாள்.

    " இன்னொரு விஷயமும் கேட்டுக்குங்க; 'ஒன்றே செய்க, அதை நன்றே செய்க!' என்பதையும் மனசிலே போட்டு வையுங்க. ஏதாவது ஒரு கலையிலே உங்கள் ஊக்கத்தையும் திறமையையும் ஒருங்கே காட்டி நீங்கள் நீண்டநாள் அயராமல் உழைச்சிங்கன்னா கட்டாயம் வெற்றி பெறுவீங்க"

    கலியபெருமாள் இப்போது சென்னை நகரத்தின் ஒரு தெருவோரத்தில் மரத்தோடு மரமாக நின்றுகொண்டிருந்தான். ஓட்டலில் அடுத்த அறையில் வந்து தங்கியிருந்தவர் அவனைச் சினிமாவில் சேர்த்து விடுவதாகச் சொல்லி, அவனிடம் இருநூறு ரூபாய்கள் வாங்கிக்கொண்டு, எங்கோ கம்பி நீட்டிவிட்டார். மேற்கொண்டு பணத்துக்கு வீட்டுக்கு எழுதியிருந்தான். பணம் வந்து சேரவில்லை. ஓட்டல் மானேஜரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டுப் பிறகு அவனை மரியாதையுடன் வெளியில் அனுப்பிவைத்தார்.

    பாக்கிப் பணத்துக்கு ஈடாக அவனுடைய உடைமைகள் யாவும் அகப்பட்டுக்கொண்டன. சாப்பிடுவதற்கு அவனிடம் கையில் காசில்லை; தங்குவதற்கு இடமில்லை; மாற்றுடைகளையோ மானேஜர் வைத்திருந்தார்.

    நேரம் இரவு நேரம். இந்த நேரத்தில் சென்னையில் யார் முகத்தில் போய் விழிப்பது? யாருக்கு அவனுடைய முகம் தெரியும்? இரவு நேரத்துச் சென்னை நகரத்தின் முகத்தை நன்றாக உற்றுப் பார்ப்பதற்காக , அவன் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.

    பகல் நேரத்துச் சென்னைக்கும் இரவு நேரத்துச் சென்னைக்கும் எவ்வளவோ வேற்றுமை இருந்தது. காரில் போகும்போது கண்ட நகரம் வேறே; கால் நடையாகப் போகும்போது காணும் நகரம் வேறே. பணக்காரர்களின் நகரமான அது அவனுக்குத் திடீரென்று ஏழைகளின் நரகமாக மாறிவிட்டது.

    தெருவோரத்து எச்சில் தொட்டிகளைச் சில இடங்களில் மனிதர்கள் மொய்த்தார்கள். கால் நடைகளைக் கட்டிப் போடுவதற்காகவாவது தனி இடம் உண்டு. மனிதர்கள் தங்கள் கட்டைகளை விட்டெறிவதற்கு அங்கே இடமில்லை. தெருவோரங்களில் கண்ட கண்ட இடங்களில் அவர்கள் படுத்துக் கிடந்தார்கள்.

    பசியும் களைப்பும் அதிகமாகப் போனதால் ஓரிடத்தில் சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்தான் கலியபெருமாள். கையிலே அவன் கட்டியிருந்த கடிகாரம், முன்பு கால்சட்டைப் பைக்குள் இருந்ததால் அது ஓட்டல் மானேஜரின் கண்களுக்குப் படவில்லை. இப்போது கடிகாரத்தைக் காசாக மாற்றிப் பசியாற்றிக் கொள்ளவும் முடியாது. கடைகளையெல்லாம் அடைத்துவிட்டார்கள்.

    ஓட்டல் விவகாரம் முன்னறிவிப்பின்றித் திடீரென்று ஏற்பட்டதால், அந்த அதிர்ச்சி வேறு அவனை வாட்டிக் கொண்டிருந்தது. கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான். இரவு மணி ஒன்று ஆகியிருந்தது.

    உட்கார்ந்திருந்த அவனிடம் யாரோ ஒரு பெண் பிள்ளை பேச்சுக் கொடுக்கப் பார்த்தாள். சினிமாவில் சேருவதற்காக வந்து சீரழிந்த பெண்களில் அவளும் ஒருத்தியாக இருக்கலாமோ என்று அநுதாபத்துடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். வயது, பருவம், உருவம் எல்லாமே அவளுடைய அழகின் வாட்டத்தை அவனிடம் எடுத்துச் சொல்லத் தொடங்கின.

    "நீங்க எந்த ஊருங்க?"

    " எல்லாம் இந்த ஊருதான்!" என்று சலிப்போடு கூறினான் கலியபெருமாள். அடுத்த வார்த்தை அவள் பேசுவதற்குள் முரட்டுத்தடியன் ஒருவன் ஓடிவந்து, அவளை அடிப்பது போல் அடித்து, வேறு பக்கம் இழுத்துப் போட்டான். "ஏண்டா பயலே!" என்று சாராயவாடை வீசக் கலியபெருமாளின்மீது புலியைப் போலத் தாவினான் அந்த முரடன்.

    அவனால் கலியபெருமாளுக்குக் கிடைத்தது ஒன்று; பறிபோனது மற்றொன்று. கிடைத்தது முகத்தில் குத்து; பறிபோனது கைக்கடிகாரம். போகிற போக்கில் முதுகத் தோலைப் பிய்த்தெடுத்துக் கொண்டுபோக நினைத்தவன், சட்டைத்துணியைப் பிய்த்தொடுத்துக் கொண்டதோடு விட்டுவிட்டான்.

    பொழுது விடிந்த பிறகும் அவனால் அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க முடியவில்லை. அங்கேயே விழுந்து கிடந்தான். இத்தனை ஆண்டுகளாக அவன் தெரிந்துகொள்ளாத உண்மைகளை யெல்லாம் அந்த ஒரு இரவு அவனுக்குப் போதித்துவிட்டது.

    தன் பசியால் நாட்டின் பசியையும், தனது நிலையால் நாட்டின் நிலையையும் அறிந்துகொண்டான் அவன். ஜுர வேகத்தில் முனகிக்கொண்டிருந்த அவனை ஒரு ரிக்ஷாக்காரன் இரக்கப்பட்டுப் பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தான்.

    ஆஸ்பத்திரியில் அவனுக்கு எப்படியோ தற்காலிகப் புகலிடம் கிடைத்தது. உணவு கொடுத்தார்கள்; மருந்தும் கொடுத்தார்கள்.

    உணவு கொடுத்தபோது உழவரான தந்தையின் நினைவும், உடை கொடுத்தபோது துணி வியாபாரம் செய்த பெரிய தமையனின் நினைவும், மருந்து கொடுத்தபோது டாக்டரான சிறிய தமையனின் நினைவும் அவனுக்கு வந்தது. ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்குப் புகலிடம் அளித்துள்ள அந்த ஆஸ்பத்திரிக் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தான்.

    முன்பு அவன் சந்தித்த எழுத்தாளர் நினைவுக்கு வந்தார். அவர் கூறிய அறிவுரைகளை எண்ணிப் பார்த்தான்.

    'பிழைத்துக் கிடந்து ஊர் போய்ச் சேர்ந்தால் தொழிற் கல்வி கற்று இதைப் போன்ற பல கட்டிடங்கள் கட்டுவேன். வீடில்லாதோருக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பேன்' என்று தனக்குள் ஓர் முடிவு செய்து கொண்டான்.
     


    12. சொர்க்கம் எங்கே?


    "இந்த மண்ணுலகத்திலே சொர்க்கம் என்று ஒன்று இருக்குமானால், அது இங்கேதான்!அது இங்கேதான்! அது இங்கேதான்!"-தன் கரத்திலிருந்த ஒரு புத்தகத்திலிருந்து இந்த வரிகளைக் குதூகலத்துடன் வாய்விட்டுப் படித்துக் கொண்டிருந்தாள் மல்லிகா.

    "ஆம், அது இங்கேதான்!அது இங்கேதான்! அது இங்கேதான்!"

    பின்னாலிருந்து ஆனந்தனுடைய குரல் எதிரொலிக்கவே, மல்லிகா நாணத்துடன் எழுந்து நின்று அந்தப் புத்தகத்தால் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள்.

    ஓவியன் ஆனந்தனுடைய நீண்ட மெல்லிய விரல்கள், மல்லிகாவின் முகத்தை மூடியிருந்த புத்தகத்தை மெல்லப் பற்றின. சிரித்துக்கொண்டே அதைத் தானும் படித்தான்.

    முகலாயர்களுடைய கட்டடக் கலைச் சிறப்புகளைப் பற்றி. படங்கள் நிறைந்த புத்தகம் அது. டில்லி செங்கோட்டை என்று இன்று அழைக்கப்படும் அந்தப் பழைய அரண்மனையின் மண்டபம் ஒன்றில், சக்கரவர்த்தி ஒருவர் அந்த வரிகளைப் பதித்து வைத்திருப்பதாக அந்த நூலில் எழுதியிருந்தது.

    "மல்லிகா! அந்தச் சக்கரவர்த்திக்கு அந்த மாளிகை சொர்க்கமென்றால், இந்த ஏழைக் கலைஞனுக்கு இந்தக் குடிசைதான் சொர்க்கம்! இதுதான் நம் சொர்க்கம்!"

    "கலைச் சக்கரவர்த்தி என்று சொல்லுங்கள். ஏன் ஏழையென்று உங்களையே தாழ்த்திக் கொள்ளவேண்டும்?" என்று சற்றுக் கோபத்துடன் கூறினாள் மல்லிகா.

    ஆனந்தனுக்குச் சிரிப்பு வந்தது. " என்னைப் பற்றி நான் உயர்வாக நினைக்கவில்லை. ஆனால், என்னைச் சக்கரவர்த்தி யாக்குவதன் மூலம் நீ மகாராணியாக விரும்புகிறாய் என்றால் தாராளமாகச் சொல்லிக்கொள். மற்ற ஓவியர்கள் கேட்டால் பொறாமைப் படுவார்கள்" என்று கூறிய ஆனந்தனுடைய கற்பனை நெஞ்சிலே விதம் விதமான வண்ண ஓவியங்கள் மலர்ந்து மணம் வீசத்தொடங்கின.

    "சரி, மகாராணியாரே! நம்முடைய சாம்ராஜ்யத்தில் மாதம் மும்மாரி பொழிகிறதா? குடிபடைகள் பத்திரமாக இருக்கிறார்களா? வரி வசூல் ஒழுங்காக நடைபெறுகிறதா?" என்று கேட்டான்.

    "அடிக்கடி சொல் மாரிதான் பொழிகிறது!" என்று சிரித்துக்கொண்டே சித்திரங்களைச் சுட்டி "அதோ உங்களுடைய குடிபடைகளையெல்லாம் பத்திரமாக எடுத்துத்துடைத்து வைத்திருக்கிறேன்!" என்றாள் மல்லிகா. அத்தோடு கணக்கு நோட்டையும் எடுத்துவந்து பிரித்துக்காட்டி "வரி வசூல்தான் ஒழுங்காக நடைபெறுவதில்லை; படங்களை வாங்கிக்கொண்டு போவதற்குக் காலுக்கு விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு நடப்பவர்கள், வாங்கிக்கொண்டு போனபிறகு காணிக்கை செலுத்த மறந்து போகிறார்கள்!" என்றாள்.

    "கொடுத்துவிடுவார்கள்; விட்டுத்தள்ளு!" என்று அலட்சியமாகக் கூறிவிட்டு" உண்பது நாழி அரிசி; உடுப்பது நாலுமுழத்துண்டு; இதற்குத்தானா பஞ்சம் வந்துவிடும்?" என்று குழந்தை போல் கேட்டான் ஆனந்தன்.

    வயது வந்த குழந்தைகளான இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். தஙகளுடைய வறுமையை மறந்து, கவலைகளை மறந்து அவர்கள் சிரித்தார்கள்.

    வீட்டின் மற்றொரு பகுதியில் இட்டிலி வார்த்துக்கொண்டிருந்த ஆனந்தனுடைய தாயாருடைய செவிகளிலும் அந்தச் சிரிப்பொலி விழுந்தது. "கல்யாணம் பண்ணிக்கொண்ட புதுசு! காணாததைக் கண்டதுபோல் அவனும் தலைகீழே நிற்கிறான். போய்த் தொலையட்டும்!" என்று தனக்குள் பேசிக்கொண்டாள் அவள்.

    ஆனந்தனின் தாயாருக்கு அவன் ஒரே செல்லப்பிள்ளை. தகப்பனார் சிறு வயதில் அவனை விட்டுவிட்டுப் போன பிறகு எத்தனையோ சிரமங்கள் பட்டு அவனை வளர்த்து ஆளாக்கி விட்டவள் அவள். 'குழந்தை' என்கிற ஆனந்தனைத்தான் அவளுக்குத் தெரியுமே தவிர, வலிமை மிக்க ஓவியனாக வளர்ந்து, பலருடைய பெருமைக்கும் பாராட்டுக்கும் உரியவனாக அவன் உலவிக்கொண்டிருப்பது அவளுக்குப் புலப்பட வில்லை.

    சென்னை நகரத்தின் ஒதுக்குப்புறத்திலிருந்த ஒரு சிறிய கூரை வீடுதான் ஆனந்தனுடையது. என்றாலும் அதைச் சுற்றிலும் ஓர் அழகிய பூந்தோட்டம் அவன் போட்டிருந்தான். மூங்கில் பட்டைகளால் வேலி அடைத்துக்கொண்டு நகரத்தை ஒட்டினாற் போல் கிராம வாசத்தின் அமைதியைத் தேடிக்கொண்டிருந்தான் அவன்.

    "செங்கோலை எடு!" என்றான் ஆனந்தன். அதற்குப் பிறகு அவன் முற்றிலும் மாறுபட்ட வேறு மனிதன் என்பதை மல்லிகா தன்னுடைய சிறிது காலப் பழக்கத்திலேயே கண்டு விட்டாள். மௌனமாகச் சித்திரம் வரையும் தூரிகையை எடுத்து அவனிடம் நீட்டினாள். முன்னதாகவே வர்ணக் கிண்ணங்கள் பல்வேறு நிறங்களில் அவனருகில் தயாராக இருந்தன.

    இனிமேல் அவளுடன் நாடக வசனங்கள் இல்லை; பேச்சில்லை; சிரிப்பில்லை. குதூகலமோ கொண்டாட்டமோ அங்கு இனி இல்லை.

    அந்த நேரத்தில் அவனுக்கு இடி இடித்தால் தெரியாது; மழை பொழிந்தால் தெரியாது;பிரளயமே ஏற்பட்டாலும் தெரியாது. மல்லிகா அந்த நேரங்களில் அவனுடைய காதலியல்ல; மனைவியல்ல; கலைத் தேவிக்குத் தொண்டு செய்யும் ஆனந்தன் என்ற அடிமைக்கு அவள் ஓர் அடிமை!

    தன்னையே அவனுடைய கண்கள் ஊடுருவிக் கொண்டிருந்தாலும், தனக்குப் பின்னே உள்ள எதையோ அவன் தேடுகிறான் என்பதை அவள் கண்டுகொள்வாள். அவனுடைய தோற்றம் விசுவரூபம் எடுத்து நிற்பதை அவளுடைய கண்கள் மட்டுமே கண்டிருக்கின்றன.

    மகாராணியாக இருந்த மல்லிகா, அடிமையிலும் அடிமையாகத் தன்னை மாற்றிக்கொண்டு, மௌனமாக அவனுக்கு வேண்டிய சிறு உதவிகளைச் செய்வாள். அல்லது, அவன் எங்கே எப்படியெல்லாம் இருக்கச் சொல்கிறானோ, அங்கே அப்படிக் கட்டுண்டு இருந்துவிடுவாள்.

    ஆனந்தனின் கண்கள் மதுவை உண்ட மயக்கத்தில் கிறங்கிப் போயிருந்தன. கரத்தின் தூரிகை நர்த்தனமாடியது. அடிக்கடி மல்லிகாவின் பக்கம் திரும்பிப் பார்ப்பதும், பிறகு தோட்டத்துச் செடி கொடிகளை உற்று நோக்குவதும் பிறகு திரைச் சீலையில் கவனம் செலுத்துவதுமாக இருந்தான் ஆனந்தன்.

    நேரம் சென்றதே இருவருக்கும் தெரியவில்லை.

    சமையலறைக்குள்ளிருந்து சத்தம் கேட்டது. "மல்லிகா! மல்லிகா!"

    "இதோ வந்துவிட்டேன் அத்தை!" என்று குரல் கொடுத்துக்கொண்டே கிளம்பினாள் மல்லிகா.

    "கொஞ்சம் பொறு! இப்போதே போகாதே!" என்று தடுத்தான் ஆனந்தன். மல்லிகா நடுங்கினாள். கலைக் கட்டளைக்குக் கட்டுப்படுவதா? அத்தையின் அழைப்பை மீறுவதா?

    சில விநாடிகள் தயங்கியபிறகு 'போகலாம்' என்று அவன் கையசைத்தபிறகு மெல்ல அங்கிருந்து கிளம்பினாள் அவள். அடுப்படியில் அவர்களுக்குள் ஏதோ வார்த்தை நடந்தது. அது ஆனந்தனின் செவியில் விழவில்லை.

    அன்றைக்கு மாலையில், அவன் காலையில் எழுதத் தொடங்கிய படம் முழுமை பெற்றது. இடையில் ஏதோ அவன் தாயாரின் கட்டாயத்துக்காகச் சாப்பிட்டு வைத்தான். மல்லிகா எடுத்துக் கொடுத்த தண்ணீரைச் சுய நினைவின்றிக் குடித்து வைத்தான். படம் முழுமை பெற்ற பிறகு தான் அவனுக்கு இந்த உலகின் நினைவே வந்தது.

    வேதனைகளையும் பொறுக்கமுடியாத வலியையும் பொறுத்துக் கொண்டு, தான் பெற்றிருந்த குழந்தையை முதன் முதலாகப் பார்க்கும் தாயைப் போல, அந்தப் படத்தை ஒரு நிமிடம் தன் ஆவல் தீரப் பார்த்தான் ஆனந்தன். மல்லிகாவும் தன் கண்கள் மலர அதையே உற்று நோக்கினாள்.

    இதுதான் அவன் எழுதிய ஓவியம்: ஒரு பூங்காவின் மத்தியிலிருந்த பளிங்கு மேடையருகில் மாலைத் தென்றலில் அசைந்தாடும் முகத்திரையைப் பற்றியவாறே நாணத்துடன் எழுந்து நிற்கிறாள் மகாராணி மும்தாஜ். அப்போதுதான் அங்கு சக்கரவர்த்தி ஷாஜஹான் தமது பேகத்தைத் தனிமையில் சந்திப்பதற்கு ஆவலோடு வந்து கொண்டிருக்கிறார். அவருடைய வரவைக் கண்டுவிட்டு, மகிழ்ச்சி பொங்கிய நாணத்துடன் மும்தாஜ் பரபரப்போடு பளிங்கு மேடையிலிருந்து எழுந்து நிற்பதுபோல் ஒரு தோற்றம்.

    "மல்லிகா!இதற்கு என்ன தலைப்புக் கொடுக்கலாம்?"

    "'சொர்க்கம் இங்கே' என்று கொடுங்கள்!"

    "மல்லிகா! எதை நான் நினைத்துக் கொண்டிருந்தேனோ, அதையே நீயும் சொல்லிவிட்டாய்.இதற்கு எத்தனையோ பேர்கள் விலை மதிப்புச் சொல்வார்கள். ஆயிரம் ஆயிரமாக அவர்கள் அள்ளிக் கொடுத்தால் கூட, அவர்களால் இதன் ஆத்மாவை உன்னைப்போல் உணர முடியுமா, மல்லிகா?... இந்தப் படத்தின் வெளி அழகும் நீ, உள்ளழகும் நீ, உயிரழகும் நீ!...எல்லாவற்றையும்விட இதன் ஆத்மத் துடிப்பு இருக்கிறதே, அது நீயேதான் மல்லிகா!நீயேதான்... "

    மெய்யான பக்தனைக் கண்டு பரவசம் அடையும் கடவுளைப்போல், ஆத்மாவைக் கண்டு ஆனந்தமுறும் யோகியைப்போல், தனக்கொரு ரசிகையைக் கண்டுவிட்ட கலைஞன் மகிழ்ச்சிப் பூரிப்பால் ஏதேதோ அவளிடம் உளறினான்.

    மறுநாள் அவனுடைய வீட்டுக்கு வந்திருந்த நண்பன் நாவுக்கரசு, அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வாயடைத்துப் போய் நின்றான். அதை ஆனந்தன் ஒரே நாளைக்குள் எழுதி முடித்தான் என்பதை மட்டும் அவன் நம்பவே இல்லை.ஒரு வாரமாவது ஆகியிருக்குமென்று வாதாடினான்.

    "மல்லிகா சாட்சி யிருக்கிறாள், கேட்டுப்பார்!"

    "ஆம், அண்ணா! நேற்றுக் காலையில் தொடங்கி மாலையில் முடித்துவிட்டார்" என்று நாவுக்கரசிடம் பெருமையோடு கூறினாள் மல்லிகா,

    "அடேயப்பா! அசுர சாதனையென்று சொல்வார்களே, அதைத்தான் நீ சாதித்திருக்கிறாய். எப்படி ஆனந்தா உன்னால் இவ்வளவு அழகான படத்தை, இவ்வளவு சீக்கிரம் உருவாக்க முடிகிறது?-உண்மையாய்க் கேட்கிறேன்: உன்னுடைய கலை இரகசியத்தைத்தான் என்னிடம் கொஞ்சம் சொல்லி வையேன்."

    "இதோ பார்! இந்த ரோஜாப் பூவிடம் போய், 'நீஎப்படி மலர்கிறாய்?' என்று கேள்வி கேட்டால், அது என்ன பதிலைச் சொல்லும்?" என்று தோட்டத்தில் மலர்ந்திருந்த ஒரு ரோஜாவைத் தன் நண்பனிடம் காட்டினான் ஆனந்தன்.

    நாவுக்கரசு அவனை விடவில்லை. " ரோஜாவிடம் அழகும் மணமும் இருக்கிறதே தவிர, அதற்கு வாயில்லை. உன்னிடம் கலையும் இருக்கிறது; அதைப் பற்றிச் சொல்ல வாயும் இருக்கிறது" என்று கூறினான்.

    "நாவுக்காரசு! இந்தப் படத்தையே எடுத்துக்கொள். இதை எழுதப்போகிறேனென்று நான் நேற்று காலை வரையில் நினைக்கவில்லை. அறைக்குள் நுழைந்தபோது இவள் ஏதோ சில வரிகளைப் படித்துக்கொண்டிருந்தாள். அதன் பொருள் எனக்கு உற்சாகம் தந்தது. என்னைக் கண்டவுடன் இவள் நாணத்துடன் எழுந்து நின்ற சாயல் என் கற்பனை யைத் தூண்டிவிட்டது. இவளையே மும்தாஜாக மாற்றி, நான் ஷாஜஹானாகிவிட்டேன்!... இதையெல்லாம் நீ கிளறிக் கேட்பது எவ்வளவு சங்கடமாக இருக்கிறது தெரியுமா?"

    "போங்கள்! உங்களுக்குக் கொஞ்சங்கூட வெட்கமில்லை!" என்று கோபத்தோடு சொல்லிவிட்டு, உள்ளே ஓடி மறைந்தாள் மல்லிகா.

    நாவுக்கரசு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான். அதிசயப் பிறவியான தன்னுடைய நண்பனுக்கு மற்றோர் அதிசயப் பிறவி வந்து மனைவியாக வாய்த்திருப்பது அவனுக்கு மகிழ்ச்சி தந்தது.

    "நீ ஒரு கலை வெறியன்!" என்றான் நாவுக்கரசு சிரித்துக்கொண்டே.

    "அதெல்லாம் எனக்குத் தெரியாது. சில சமயங்களில் கலைக்கே வெறி வந்து என்னை ஆட்டி வைக்கிறது என்று வேண்டுமானால் வைத்துக்கொள். கிண்ணங்களில் வண்ணங்களைக் குழைத்தவுடன் அதில் கற்பனை ஊற்றும் கலந்துவிட்டால் சித்திரம் நயமாக அமைந்துவிடுகிறது. எதிர்பாராத சில சமயங்களில் ஆத்ம தரிசனம் கிடைத்ததுபோல், கலை ஊற்றுப் பீறிட்டுப் பொங்கிப் பூரிக்கிறது. சில வேளைகளில் பல நாடகள் சிரமப்பட்டு ஒரு சித்திரத்தைக்கூட முடிக்க முடிவதில்லை."

    " ஆனந்தா! உண்மையிலேயே நீ மிகவும் கொடுத்து வைத்தவன்" என்று பூரிப்போடு கூறினான் திருநாவுக்கரசு."சீக்கிரம் நீ மிகப் பெரிய ஓவியக் கலை மேதையாகிவிடப் போகிறாய், பார். பாசமே உருவாக வந்த தாயாரும், உன் கலை மனத்துக்கு உற்சாகமூட்டும் மனைவியும் உனக்குக் கிடைத்திருக்கிறார்கள். இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?"

    "நேசமே உருவான நண்பனும் எனக்குக் கிடடைத்திருக்கிறான் என்பதை மறந்துவிடாதே!" என்று கூறிச் சிரித்தான் ஆனந்தன்.

    நண்பன் நாவுக்கரசு கூறியது ஒருவகையில் உண்மையாகிவிட்டது. நாளுக்கு நாள் ஆனந்தநிந் சித்திரங்கள் ரசிகர்களிடம் பேராதரவைப் பெற்றுக்கொணம்டே வந்தன. வறுமைத் துன்பமும் மறைந்துகொண்டு வந்தது. மல்லிகாவுக்கும் எந்த நேரத்திலும் அவனுடைய வேலைகளுக்கே பொழுது சரியாக இருந்தது. ஆனால் தன் கணவனுக்கு அருகிலேயே எந்த நேரமும் இருந்தும் கூட, அவன் தன்னை விட்டு வெகு தூரத்துக்கு வெகு தூரம் விலகிக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். மல்லிகாவிடம் அவன் பேசுகிற பேச்செல்லாம் சித்திரங்களைப் பற்றிய பேச்சுத்தான். 'அவருக்கு நான் மனைவி என்பதையே முற்றிலும் மறந்துவிட்டார் போலிருக்கிறது' எந்று எண்ணி ஏங்கத் தொடங்கினாள் மல்லிகா.

    அவனுடைய தாயார் பார்வதியம்மாளுக்கோ, மல்லிகா வீட்டுக்கு வந்ததிலிருந்தே தன்னுடைய மகன் மாறிவிட்டான் என்ற எண்ணம் விதையூன்றிவிட்டது. தன் பாசத்துக்குப் பஞ்சம் வந்துவிட்டதுபோல் ஓர் அச்சம் அவளுக்கு. எந்த நேரமும் ஆனந்தனின் கூடவே மல்லிகா இருந்ததால், அவனைத் தன்னிடமிருந்து பறித்துக்கொண்டுவிட்டாள் என்று பார்வதியம்மாளால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

    பாசத்தைப் பயம் பற்றிக்கொண்டது.

    காதலோ கடமையின் பிடியில் அகப்பட்டு ஏங்கித் தவித்தது.

    இடையில் மல்லிகாவுக்கு ஒரு மகனும் பிறந்துவிட்டான்.

    இந்த நிலையில் வீட்டுப் பெண்கள் ஆனந்தனின் கலை வளர்ச்சியையோ, அவனுடைய புகழையோ, முன்னேற்றத்தையோ சிறிது சிறிதாகக் கவனிப்பதை மறந்தார்கள். மாமியார் தன் கவனத்தை மருமகள்மீது திருப்பி, அவளுடைய செயல்களிலெல்லாம் குறை காணத் தொடங்கினாள். மருமகளோ, தன்னிடம் கணவன் பராமுகமாக இருப்பதாகவும் மாமியார் தன்னைக் கஷ்டப்படுத்துவதாகவும் நினைக்கத் தொடங்கிவிட்டாள்.

    "நீ வந்ததிலிருந்து என் குடும்பமே போய்விட்டது!" என்று குற்றம் சாட்டினாள் மாமியார்.

    "நான் இருதலைக் கொள்ளி எறும்பு! அங்கே அவருக்கு நான் அடிமையாகக் கிடந்து உழைத்துவிட்டு, இங்கே உங்களிடமும் ஏச்சு வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது!" என்றாள் மருமகள்.

    மாமியாருக்கும் பொறுமை யில்லை; மருமகளுக்கும் பொறுமையில்லை. மாமியார் மருமகளைத் தூற்றினால், மருமகள் குழந்தையைத் தூற்றுவாள். கோபம் தாங்க வில்லையென்றால் குழந்தை குமரனின் அழுகுரலை அங்கே கேட்கலாம்!

    மனத்தில் வண்ணம் குழைத்துத் தூரிகையை எடுக்கும் ஆனந்தனின் சிந்தனை அடிக்கடி குடும்பத்திற்குள் திரும்பியது. 'குடும்பமென்று இருந்தால் அதிலும் குழந்தையும் பிறந்துவிட்டால், இப்படித்தான் இருக்கும்.எல்லாம் நாளடைவில் சரியாகிவிடும்' என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டு வந்தான் ஆனந்தன்.

    நாளடைவில் நிலைமை மோசமாகிக்கொண்டு வந்ததே தவிரச் சரியாகவில்லை. பிரகு ஒருநாள் மல்லிகாவிடம் "நீதான் பொறுத்துக்கொள்ளவேன்டும், மல்லிகா! அம்மா என்னைப் பெற்று வளர்த்தவர்கள்! கலைஞனுடைய வாழ்விலுள்ள சிரமங்களையும் தொல்லைகளையும் அறியாதவர்கள் என்னோடு வாழ்வதென்றால் உனக்கு அளவுக்கு மீறிய பொறுமை வேண்டும், மல்லிகா!" என்று வேதனையோடு கூறினான்.

    தாயாரிடமும், " அம்மா எனக்கும் பெயரை ஆனந்தன் என்று வைத்தீர்கள். என்னுடைய ஆனந்தத்தினால்தான் என்னுடைய கலையே வளர முடியும். உங்களுக்கும் பொறுமை வேண்டுமம்மா!... நீங்கள் அவளைக் குறை கூறிக்கொண்டே இருந்தால், அவளுடைய மன அமைதியைக் குலைக்கிறதம்மா!" என்றான்.

    " அவள் வந்ததிலிருந்து வீட்டில் அமைதியே குலைந்து போய்விட்டது!" என்றாள் தாயார்.

    "புரிந்து கொள்ளுங்கள், அம்மா,புரிந்து கொள்ளுங்கள்!" என்று கத்தினான் ஆனந்தன்."நீங்கள் இருவரும் என்னிடம் அன்பு செலுத்துவது உண்மையானால், முதலில் உங்களுக்குள் அன்பும் ஒற்றுமையும் வேண்டும். அப்படியில்லாவிட்டால் அது என்னைத்தான் பாதிக்கும்."

    இவ்வளவுக்கும் இடையில் ஆனந்தன் தன்னுடைய குழந்தை குமரனின் களங்கமற்ற சிரிப்பிலும், மழலையிலும், சுட்டித்தனத்திலும் ஆனந்தம் கண்டான். உயிர்களுடைய மலர்ச்சியிலே கற்பனைக் கனவுகளைக் காண்பவன் அவன். மல்லிகாவின் இடத்தை நிரப்புவதற்கு அவனுக்குக் குமரன் கிடைத்தது ஓர் ஆறுதலாக இருந்தது.

    ஒரு நாள் அவனுடைய சித்திரக்கூடத்துக்குள், பூந்தோட்டத்தை வெறித்துப் பார்த்தவாறு குழந்தையும் கையுமாக நின்றுகொண்டிருந்தாள் மல்லிகா. அறைக்குள் நுழைந்த ஆனந்தனுக்குக் குழந்தையும் கையுமாக அவள் தோன்றிய காட்சி அற்புதமான கற்பனையைக் கொடுத்தது. தோட்டத்துக் குருவிகளைக் கண்டு குமரன் குதூகலமாக மழலைகளை வாரி இறைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய பிஞ்சுக் கரங்களும் கால்களும் துள்ளித் துடித்தன. சிரிப்பின் சிற்றலைகள் அந்த அறையெங்கும் நறுமணம் வீசியது. குழந்தையும் கடவுளும் ஒன்றேயல்லவா!

    ஆனந்தனின் இதயமான வண்ணக்கிண்ணத்தில் கற்பனைத் தேன் பொங்கத் தொடங்கவே, மல்லிகாவுக்குத் தெரியாமல் தூரிகையை எடுத்துக் கொண்டு திரைச் சீலையின் அருகில் சென்றான். பெற்றெடுத்த தாயின் இதயமும் அப்போது தன் இதயத்தைப் போலவே குழந்தையின் ஆனந்தத்தில் திளைத்திருக்கும் என்பது அவனுடைய கற்பனை. ஓவியர்கள் அனைவருக்குமே தெவிட்டாத காட்சிதான் இது.

    "மல்லிகா! எங்கே இப்படிக் கொஞ்சம் திரும்பு!" என்று மெல்லக் கூறினான் ஆனந்தன். "குமரனின் முகத்தைக் கொஞ்சம் சிரித்தபடியே பார்!"

    மல்லிகா பயந்து நடுங்கிக் கொண்டே திரும்பினாள். அவள் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்தது. சிரிப்பை எதிர்பார்த்த முகத்தில் துயரம்; ஆனந்தத்தை எதிர்பார்த்த முகத்தில் சோகம்; கற்பனைத் துளிகளை எதிர்பார்த்த முகத்தில் கண்ணீர்த் துளிகள்.

    அவ்வளவு தான்! தான் என்ன செய்கிறோம் என்பதை மறந்து, அருகிலிருந்த ஒரு வர்ணக் கிண்ணத்தை எடுத்து அவள் முகத்தில் வீசினான் ஆனந்தன். குழந்தை குமரன் வீறிட்டு அழுதான். "நீங்கள் மனிதர் தானா?: என்று கதறினாள் மல்லிகா. "சிரிக்கச் சொல்கிறீர்களே, என்னை நீங்கள் நடிக்கச் சொல்கிறீர்களா? எப்படிச் சிரிப்பு வரும் எனக்கு இந்த வீட்டில்? தொட்டதெல்லாம் குறை, செய்வதெல்லாம் தப்பு என்று ஒருவர் சொல்லிக்கொண்டே இருந்தால் உங்களால் தான் உற்சாகமாகச் சித்திரம் வரைய முடியுமா" - இதோ பாருங்கள். என்னிடம் உங்களுக்கு அன்பில்லை; உங்களுடைய தாயாருக்கும் அன்பில்லை! உங்களுடைய கலைக்கு அன்பு வேண்டும், ஆத்மா வேண்டும், உற்சாகம் வேண்டும் என்கிறீர்களே, அதை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டே வந்தால் உங்களிடம் நான் எதைக் கொடுப்பது?"

    குழந்தையுடன் அவள் வேகமாகச் சென்று மறைந்தாள். ஆனந்தன் துக்கத்தில் ஆழ்ந்தவனாகத் தூரிகையை வீசி எறிந்தான். அன்றிலிருந்து அவனுக்குத் தூரிகையைத் தொடுவதற்குக் கூட உற்சாகமில்லை. தொல்லைகளுக்காக எதையாவது எழுதித் தரவேண்டும் என்ற எண்ணம் அவனுக்குக் கிடையாது. மாதத்துக்கு ஒரு படத்தைக் கூட அவனால் முழுமையாக்கிக் கொடுக்க முடியவில்லை . ஒரே நாளில் ஓர் உயிர்ச் சித்திரத்தை முடித்தவனால், ஒரு மாதத்தில் ஒன்றையாவது திருப்தியோடு வரைய முடியவில்ல. பலவற்றை எழுதிப் பார்த்துவிட்டுத் தனக்குப் பிடிக்காததால் கிழித்துப் போட்டுவிட்டான். அவனுடைய போக்கைப் பற்றி அவன் தாயாரோ, மல்லிகாவோ கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் கவலை அவரவர்களுக்கு. பார்வதி அம்மாளுக்கு மல்லிகாவின் மீது குறை; மல்லிகாவுக் குப் பார்வதியம்மாளின் மீது குறை.

    ஆனந்தன் மல்லிகாவிடம் தன் நிலையைச் சொல்லி அவளை முன்போல் இருக்கும்படி வேண்டினான். அவனும் முன் போலவே அவளிடம் மனம் விட்டுப் பேசிப் பொழுது போக்கினான். கணவனிடம் அவளுடைய அநுதாபம் திரும்பியது. ஆனால் பார்வதியம்மாளுக்கோ அதன் காரணம் புரியவில்லை. இருவரும் தன்னைப் பற்றித் தான் குறை கூறிக் கொள்கிறார்களோ என்ற சந்தேகம் அவளுக்கு.

    வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஆனந்தனைப் பார்க்க வந்த நாவுக்கரசுக்கு, ஆனந்தனுடைய தோற்றத்தைக் கண்டவுடன் திகைப்பாகப் போய் விட்டது. அதைப் போலவே அவன் மனைவியும் வீட்டுப் பெண்கள் இருவரும் மாறியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள்.

    நாவுக்கரசு கேட்டான்: "உனக்கு என்ன வந்துவிட்டது ஆனந்தா? ஏன் இப்படி மெலிந்து போய்விட்டாய்? அடையாளமே தெரியாதபடி உருக் குலைந்து போயிருக்கிறாயே?" "அதிக வேலை;வேறொன்றும் காரணமில்லை" என்று மழுப்பினான் ஆனந்தன்.

    "பொய் சொல்லாதே! நீ உன் வேலைகள் எதையுமே ஒழுங்காகச் செய்வதில்லை என்று எனக்குப் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.குறித்த காலத்தில் எந்தப் படத்தையும் முடித்துக் கொடுப்பதில்லையாம். அருமையான வாய்ப்புக்கள் வந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் நீ இப்படித்தானா நடந்துகொள்வது?"

    ஆனந்தன் மௌனமாகத் தலை குனிந்துகொண்டான்.

    நாவுக்கரசோ தன் பேச்சை நிறுத்தவில்லை. "வாழக்கையில் சிலருக்குத்தான் பிறவியிலேயே கடவுள் கலைத் திறன் என்கிற அருளைக் கொடுக்கிறார். அவர்களிலும் ஒரு சிலரைத்தான் வெளி உலகம் தெரிந்துகொண்டு வரவேற்கிறது. இவ்வளவிருந்தும், தன்னுடைய நிலையை நீயே தெரிந்துகொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்டால், பிறகு நீ வருந்த வேண்டியிருக்கும், ஆனந்தா!"

    ஆனந்தனுக்கு அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. "இவ்வளவும் எனக்குத் தெரிகிறது திருநாவுக்கரசு. ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியவில்லை. என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்? கலையையே வாழ்வாகக் கொண்ட பல மேதைகளின் குடும்பவாழ்வு எவ்வளவு துன்பம் நிறைந்ததாக இருந்ததென்பது உனக்குத் தெரியுமே!"

    "முட்டாள்!" என்று அன்பின் உரிமையோடு கண்டித்தான் நாவுக்கரசு. "உன்னை நான் விட்டுவிடுவேனென்று நினைக்காதே" என்றான்.

    வீட்டுக்குள் புகுந்த நாவுக்கரசின் மனைவியிடம் மல்லிகாவும் பார்வதியம்மாளும் தங்கள் குறைகளைக் கூறி அழுதனர். நாவுக்கரசு தன் மனைவியிடமிருந்து வீட்டுப் பெண்கள் இருவரைப் பற்றியும் அறிந்துகொண்டான்.

    "பாவம்! உலகத்தில் பலருக்கு இயற்கையாகவே துன்பத்துக்கு மேல் துன்பம் வந்துகொண்டிருக்கிறது. வேறு சிலரோ இயற்கையாகவே தங்களுக்கு இன்பத்துக்கு மேல் இன்பம் வந்து குவியும்போதே, அதை ஒதுக்கிவிட்டு, துன்பத்தைத் தேடிக்கொண்டு அவதிப்படுகிறார்கள். எது இன்பம், எது துன்பம் என்று அவர்களுக்கே தெரிவதில்லை" எனறான் நாவுக்கரசு தன் மனைவியிடம்.

    "பார்வதியம்மாளும் நல்லவர்கள்தான்; மல்லிகாவும் நல்லவள்தான். ஏன் இந்தக் கஷ்டம் அவர்களுக்கு?" என்று கேட்டாள் அவள்.

    "இரண்டு பேருமே நல்லவர்களாக இருந்தும், மற்றவர்களை நல்லவர்கள் என்று நினைக்காததனால் வரும் தொல்லைதான் இது. தனியே தன் மகன்மீது உயிரையே வைத்திருக்கும் அவன் தாயாருக்கு யார் மீதெல்லாம் அவன் அன்பு செலுத்துகிறானோ, அவர்கள் மீதெல்லாம் தானும் அன்பு செலுத்தவேண்டும் என்று தெரிவதில்லை. அதேபோல் அவன் மனைவிக்கும் அவன் தாயார்மீது வைக்கும் பாசம் அவள்மீது செலுத்தும் அன்பு என்பதும் புரியவில்லை..."

    "ஏன், இதை நீங்களும் நானுமே போய்ச் சொல்லலாமே!" என்றாள் அவள்.

    "பொறு! நாம் போய்ச் சொன்னால் அவர்கள் நம்மையே பொல்லாதவர்கள் என்று நினைப்பார்கள்.நம்மையே அவர்கள் வெறுக்கத் தொடங்கினாலும் தொடங்குவார்கள்."

    " அப்படியானால் உங்களுடைய நண்பரின் பாடு என்ன ஆவது? அவர் நன்றாக இருந்தால்தானே அந்தக் குடும்பத்துப் பெண்களுக்குச் சண்டை போட்டுக் கொள்வதற்காகவாவது வசதி கிடைக்கும்? அவர் மனம் நொந்து போய்ப் படுக்கை யில் விழுந்து விட்டால்? தூரிகையைத் தூக்கி எறிந்து விட்டால்? இந்த நாட்டுக்கே பெருமை தரும் கலைஞர் என்று அவரைப் பற்றிச் சொல்லிக் கூத்தாடுவீர்களே, அவரிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பு இவ்வளவுதானா?"

    சிரித்தான் நாவுக்கரசு.அவன் சிரிப்பைக் கண்டு அவன் மனைவிக்கு எரிச்சலாக இருந்தது.

    நாவுக்கரசின் தூண்டுதலால், உலகச் சித்திரப் போட்டிக்கென்று ஒரு படம் வரைவதற்காக, சென்னையை விட்டுக் கிளம்பி மைசூருக்குச் சென்று ஓர் ஓட்டலில் தங்கிக் கொண்டு படம் வரைந்து கொண்டிருந்தான் ஆனந்தன். அவன் வீட்டை விட்டுச் செல்லும்போது கூறி விட்டுப்போன வார்த்தைகளை அவன் தாயாரும் மறக்கவில்லை; மனைவியும் மறக்கவில்லை. "உங்களை விட்டு வெகுதூரம் போனால்தான் அமைதி கிடைக்கும் போலிருக்கிறது. அமைதியில்லாமல் என்னால் சித்திரம் வரைய முடியாது!"

    இதை நினைத்து நினைத்து இருவரும் ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில், ஒரு நாள் இரண்டு கடிதங்கள் ஆனந்தனின் விலாசத்துக்கு வீட்டுக்கு வந்தன. வந்த கடிதங்களில் ஒன்றை மனைவி மல்லிகா படித்தாள்; மற்றொன்றை அவள் தாயார் படித்தாள்.

    மல்லிகா படித்த கடிதம் யாரோ ரசிகை எழுதியது:-

    அன்புள்ள ஆனந்தன் அவர்களுக்கு,

    எங்களுக்கெல்லாம் ஆனந்த பரவசத்தை இடைவிடாமல் உங்கள் சித்திரங்களால் கொடுத்துக் கொண்டிருந்த நீங்கள் ஏன் இப்போது சித்திரங்களே வரைவதில்லை? கடவுளுக்கு அடுத்தபடியாகக் கலைஞர்களைப் போற்றும் நாடு இது. இதில் தாங்கள் தவறிப் பிறந்தவர்கள். தங்கள் கலைத்திறனால் நம் நாட்டின் மதிப்பே உலகத்துக்கு மத்தியில் உயரப்போகிறது.

    ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். என் தோழி ஒருத்தி தங்களைக் காண வந்திருந்தபோது, தங்களது வீட்டில் சரியான வரவேற்பில்லையாம். தங்கள் தாயாரும் மனைவியும் ஒருவருக்கொருவர் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருந்தார்களாம். இது நீடித்துக் கொண்டே போகிறதென்றும் அறிந்தேன்.

    நான் எழுதுவது தவறாக இருக்கலாம். ஆனால் எனக்கு உங்களுடைய கலைதான் பெரிது. உங்களுடைய ஆனந்தத்துக்காக என் வாழ்வையும், என்னுடைய உடைமைகளையும் நான் காணிக்கையாக வைக்கக் காத்திருக்கிறேன். மேலை நாடுகளில் கலைஞர்களை வளர்க்கும் ரசிகைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

    தங்கள் அடிமை,

    கண்களில் கண்ணீர் பொங்க, மல்லிகா அந்தக் கடிதத்தைத் தன் மாமியாரிடம் கொடுத்துவிட்டு, அவளிடமிருந்த கடிதத்தை வாங்கினாள். அதை ஆனந்தனின் சித்திரக்கார நண்பன் ஒருவன் எழுதியிருந்தான்.

    அதில் இருந்த சில வரிகள் பார்வதியம்மாளையே பதறச் செய்துவிட்டன.

    "ஆனந்தா! உடனே புறப்பட்டு ஓடி வந்துவிடு.நாம் பாரிசுக்குப் போவோம்; அல்லது லண்டன் போவோம். கையில் பணமிருக்கிறது. கவலைகளை மறப்பதற்காக எவ்வளவோ வழிகள் அங்கே இருக்கின்றன. மிகச்சிறந்த கலைஞர்கள் சிலர் என்ன செய்கிறார்கள், தெரியுமா? குடும்பத் தொல்லைகளில் அவர்கள் அகப்படுவதே இல்லை. நினைத்தபோது குடிக்கிறார்கள்; பிறகு ஆவேசத்தோடு சித்திரங்கள் வரைகிறார்கள். நாம் ஒவ்வொரு படத்தை எழுதும் போதும் எத்தனை எத்தனை வேதனைகளை அனுபவிக்கிறோம்? அந்தக் கலையின் வெற்றிக்காகவே நம்முடைய வாழ்வைச் சீரழித்துக் கொண்டால்தான் என்ன? வாழ்க்கை மண்ணுக்கு; கலை விண்ணுக்கு. பறந்து போகலாம், வா!"

    கடிதங்களைப் படித்துவிட்டுச் சிலையாகிப் போனார்கள் இருவரும். பிறகு வெகுநேரம் தங்களுக்குள் கண்ணீர் வடித்தார்கள். ஒருவர் கண்ணீரை மற்றவர் துடைத்தார்கள்.

    மைசூரிலிருந்து திரும்பி வந்த ஆனந்தனுக்கு வீட்டுக்குள் ஏற்பட்டிருந்த மாறுதல்களை நம்புவதற்கே சில வாரங்கள் சென்றன. அவனக்குக் காரணமே தெரியவில்லை. எப்போதும் ஒரே குதூகலம், சிரிப்பு, பரிகாசப் பேச்சுக்கள். பார்வதியம்மாளின் மடியில் படுத்துக்கொண்டு மல்லிகா கதை கேட்டாள். மாமியாரைப் பற்றி வாய்க்கு வாய் பெருமை பேசினாள். குழந்தை குமரனுக்கோ எந்த நேரமும் கொண்டாட்டம்.

    நண்பன் நாவுக்கரசு உலகத்துச் சித்திரப் போட்டியில் ஆனந்தனுக்கே முதல் பரிசு என்ற செய்தியை ஆரவாரத்தோடு வீட்டில் வந்து கூறினான். தமிழ் நாட்டின் புகழை உலகத்துக்கு மத்தியில் நிலைநாட்டி விட்டதாக அவன் பெருமைப் பட்டுக் கொண்டான்.

    பரவசத்தோடு மல்லிகா அவனை மெய்ம்மறந்து பாராட்டினாள். ஆனந்தனோ நிதானமாக அவளிடம் கூறினான். "மல்லிகா! உலகப் பரிசு எனக்குப் பெரிதாகவே தோன்றவில்லை. என் உள்ளம் ஒரு பெரிய பரிசை அதற்கு முன்பே பெற்றுவிட்டது. அம்மாவும் நீயும் எப்படி இவ்வளவு தூரம் மாறி விட்டீர்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. அந்த மாற்றம் என்ற பரிசு இருக்கிறதே அது அப்படியே இருக்கவேண்டும்."

    அந்தக் கடிதங்களைப் பற்றி மல்லிகாவோ பார்வதியோ ஆனந்தனிடம் எதுவும் கூறவில்லை. அவர்களுக்குக்கூட அந்தக் கடிதங்களை எழுதியவன் நாவுக்கரசுதான் என்பது தெரியாது.
    -----------------------


    13. காக்கைச் சிறகினிலே...


    அது ஓர் அடர்ந்த காடு; அந்தக் காட்டுக்குள் ஓர் பெரிய ஏரி; அந்த ஏரியின் மத்தியில் சின்னஞ்சிறு தீவுகளைப் போன்ற சில திட்டுக்கள்; அந்தத் திட்டுக்களில் மரம் செடி கொடிகள் பின்னிப் பிணைந்து கிடந்தன.

    ஆழ்ந்து அகன்ற அந்த ஏரிக்குள்ளே அந்தத் திட்டுக்கள் பசும் நிறைந்த மரகதத் தெப்பங்களைப்போல் மிதந்து கொண்டிருந்தன. நங்கூரம் பாய்ச்சிய மரக்கலங்கள் என்றும் சொல்லலாம்.

    அந்த மரகதத் தெப்பங்களுக்கிடையில் பலவேறு நிறங்களில், வண்ண வண்ண உருவங்களில், ஒளிசிந்தும் நவரத்தின மணிகளைப்போல் மின்னுகின்றனவே, அவை என்னவென்று கேட்கிறீர்களா?

    அவை பறவைகள்; பலவேறு இனங்களைச் சேர்ந்த கொக்குகள், நாரைகள், மீன்கொத்திகள், மரங்கொத்திகள், சிட்டுக்கள், மணிப்புறாக்கள், தவிட்டுப் புறாக்கள்......இப்படி எத்தனையோ வகை!

    அந்த ஏரிக்கரை மேட்டை மதிற்சுவராகவும், அதன் மரங்களைக் காவல் வீரர்களாகவும், ஏரியை அகழியாகவும் வைத்துக்கொண்டு, அங்கு அவை ஓர் கந்தர்வலோக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தன. தெவிட்டாத தீஞ்சுவைப்பாடல்கள், ஆனந்தமயமான ஆடல்கள், காதல் களியாட்டங்களான ஊடல்-கூடல்கள் இவற்றுக்கெல்லாம் அங்கே பஞ்சம் இல்லை.

    இன்பம் நிறைந்த இளவேனிலை அடுத்து,ஏரியில் நீர் நிறைந்து துளும்பி வழியும் காலங்களில் மட்டுமே அங்கே பறவைகள் வந்து கூடுவது வழக்கம். ஆண்டுதோறும், ஆண்டுதோறும், எத்தனையோ ஆண்டுகளாக, குறிப்பிட்ட சில மாதங்களில் இந்த இன்பக் கொள்ளை நடந்துகொண்டிருக்கிறது.

    பணம் படைத்த மனிதர்கள் தங்களது குதூகலத்திற்காகப் பறவைக் கப்பலில் பறந்து பாரிஸ் நகரத்துக்கும் பனிமலை நிறைந்த நாடுகளுக்கும் செல்வதில்லையா? உல்லசத்துக்காக உதகமண்டலத்துக்கும் காஷ்மீரத்துக்கும் புறப்படுவதில்லையா?

    அந்தப்பறவைகள் இந்தவிஷயத்தில் தற்கால நாகரிக மனிதர்களை முந்திகொண்டு விட்டன. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே அவைகளுடைய உல்லாசப் பிரயாணம் தொடங்கிவிட்டது. வெகு காலமாக மனிதர்கள் கண்களுக்குப் படாமலே அவை களியாட்டம் நடத்தி வருவதால், மனிதர்களுக்குக் காலத்தைக் கணக்குப் பார்க்க முடியவில்லை. எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தெல்லாம் பறவைகள் அந்த இடத்தைத் தேடிக்கொண்டு வந்தனவாம். கடல் கடந்த நாட்டுப் பறவைகளையும் அங்கே காணமுடியுமாம்.

    அதிசயம்தான்! நெடுங்கடல் வெளியை எப்படித் தங்கள் சிறகுகளாலேயே அவைகளால் கடக்க முடிந்ததோ, வழியில் எப்படி அவைகளால் உண்ணவும் உறங்கவும் ஓய்வு கொள்ளவும் முடிந்ததோ, எப்படிக் குறிப்பாக அந்த ஏரி இருக்குமிடம் தெரிந்து அவைகளால் வந்து சேர முடிந்ததோ, அதிசயந்தான்!

    காடுகளில் திரிந்த வேடுவர்களின் கண்களுக்கு முதல் முதலில் அந்த இடம் தெரிந்திருக்க வேண்டும். ஆனாலும் அவர்களுடைய கைவரிசைக்கு எட்டாத தொலைவில், நீருக்கு மத்தியில், நிலத் திட்டுக்களில், மரக் கிளைகளின் மறைவில் கொட்டமடித்த அவைகளிடம் என்ன செய்ய முடியும்? வில்லின் அம்புக்கு எட்டாத தூரம்; அப்படியே அம்பு எய்தாலும் தண்ணீரில்தான் அடிபட்டு விழக் கூடும்; வேடர்களுக்கு மனத் தாங்கல்தான் மிச்சம்! அம்புக்கு எட்டியும் கைக்கு எட்டவிட்டால், அம்பு எய்து பயன் என்ன?

    காடு நாடாகத் தொடங்கியபோது, ஒரு சிறு கிராமம் அந்த ஏரிக்கரையை அடுத்து உருவாயிற்று. சுற்றியுள்ள நிலங்களைப் பண்படுத்தி உழுது விதைக்கத் தொடங்கினார்கள். பயிர் பச்சைகள் வளர்ந்து வரும் காலங்களில், அவற்றைப் பூச்சி புளுக்கள் அரிக்கத் தொடங்கின.

    உல்லாசப் பறவைகளுக்கு உழைப்பும் கிடைத்தது; பிழைப்பும் கிடைத்தது. பயிர்களை அழிக்கும் பூச்சி புழுக்களைத் தின்று உழவர்களுக்கு உபகாரம் செய்யத் தொடங்கின பறவைகள். கிராமத்து மக்களுக்கு ஒரே ஆனந்தம்.

    அதனால், பிற்காலத்துத் துப்பாக்கி வேட்டைக்காரர்கள் அந்தப் பறவைகளைச் சுட்டு விளையாட விரும்பியபோது, அவர்களையே சுட்டு விளையாடி விடுவதாகப் பயமுறுத்தித் திருப்பி அனுப்பினார்கள் கிராமவாசிகள்.

    கிராமத்துக் குழந்தைகளுக்கு அந்தக் காலங்களில் காலையிலும் மாலையிலும் வேறு பொழுதுபோக்கே கிடையாது. ஏரிக்கரைக்கு வந்து பறவைகளைப் போலவே கூவுவார்கள்; ஆடுவார்கள்; பாடுவார்கள்; பறப்பதற்குக்கூட முயற்சிகள் செய்வார்கள்.

    இந்தச் சமயத்தில்தான் அதிசயமான அந்தப் பறவைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, இயற்கை வாழ்வில் பற்றுதல் கொண்ட ஓர் இளைஞர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் கண்ட காட்சி அவரை அப்படியே வியப்பில் ஆழ்த்திவிட்டது. அதே கிராமத்தில் தங்கி, கிடைக்கும் உணவைச் சாப்பிட்டுவிட்டு, தினமும் ஏரிக்கரைக்கு வரலானார்.

    குழந்தைகள் அவரிடம் பறவைகளுக்குப் பெயர்களைக் கேட்கலானார்கள். முதலில் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தார். பிறகு தாமே உற்சாகத்துடன் பெயர்களைக் கற்பனை செய்து சொல்லத் தொடங்கினார். மூக்கு நீண்டிருந்தால் அதற்கு 'நீண்ட மூக்கன்', கண்கள் பெரியனவாக இருந்தால் 'வட்டக் கண்ணன்', சிவந்த கொண்டை இருந்தால் 'சிவப்புக் கொண்டை' இப்படியே 'கரும்புள்ளிக்காரன்', 'வெள்ளைராஜா', 'முக்குளிப்பான்' முதலிய பெயர்கள் வந்தன.

    நாட்கள் சென்றன. இளைஞர் அந்தப் பறவைகளின் இன்ப வாழ்க்கையைப் பற்றித் தமிழ்ப் பத்திரிகையொன்றில் ஒரு கட்டுரை எழுதினார். யாரும் அதைப் படிக்கவில்லை. மீண்டும் ஒரு கட்டுரை எழுதினார். பத்திரிகாசிரியரே திருப்பி அனுப்பி விட்டார். தமிழர்கள் சங்ககாலத்திலேயே இயற்கையோடு வாழ்ந்து, தமிழிலும் கரைகண்டு விட்டார்களாதலால், இந்தக் காலத்து எழுத்தையும் வாழ்க்கையையும் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லையாம்!

    பிறகு அந்த இளைஞர் மனம் சோர்ந்துபோய், வெளிநாட்டுப் பத்திரிகை ஒன்றுக்கு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதி நம்பிக்கையில்லாமல் அனுப்பிவைத்தார், அவ்வளவுதான்! ஆசிரியரின் பாராட்டுதலுடன் கட்டுரையும் வெளிவந்தது. அதை அடுத்துப் பல கடிதங்களும் அவருக்கு வந்தன.சிலர் அந்த இடத்தைக் காண்பதற்காகவே மேல்நாடுகளிலிருந்து நேரில் வரப்போவதாகவும் எழுதிவிட்டார்கள்.

    கிராமத்தில் தங்குவதற்கு வசதியான இடம் இல்லை; குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடையாது;உணவு விஷயமும் அப்படித்தான். இவ்வளவு சிரமங்களையும் அவர்களுக்கு எழுதினார் இளைஞர்.

    அவர்களோ எதையுமே பொருட்படுத்தாமல் வந்து சேர்ந்துவிட்டார்கள். வெளி நாடுகளிலிருந்து பறவைகள் வந்து கூடித் திரும்பியது போலவே அவர்களும் வந்து திரும்பினார்கள்.தங்களுக்கு இருந்த வசதிக் குறைவுகளை அவர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

    இந்த நிலையில்தான் ஒரு மேல்நாட்டு இளைஞர் அங்கு வந்து வாரக்கணக்கில் அந்தத் தமிழ்நாட்டு இளைஞருடன் தங்கினார். பறவைகளுக்கு அவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள். மேல்நாட்டு இளைஞரிடம் தொலைநோக்கிக் கண்ணாடி, திரைப்படம் பிடிக்கும் கருவிகள் முதலிய பலவேறு சாதனங்கள் இருந்தன.

    இளைஞர்கள் இருவரும் மரத்தினால் தெப்பம் ஒன்று கட்டிக்கொண்டு, நீரில் மிதந்து, பறவைகள் கூடியிருந்த திட்டுக்களைச் சுற்றி வரலானார்கள். தொலை நோக்கி வழி யாக அவர்கள் கண்ட பறவைகளின் வாழ்க்கை விநோதங்கள் அவர்களை மெய்மறக்கச் செய்தது.

    கடவுள் என்னும் ஓவியன் எத்தனை எத்தனை வண்ணக் கலவைகளை அவற்றின் விழிகளிலும் அலகுகளிலும் சிறகுகளிலும் கொண்டைகளிலும் கழுத்துகளிலும் தீட்டியிருக்கிறான்! அவற்றின் உல்லாசக் களியாட்டம், உக்கிரமான போராட்டம், பலவகை உணர்ச்சிகளை வெளியிடும் குரல்கள் இவ்வளவையும் அவர்களால் அருகில் இருந்து கவனிக்க முடிந்தது.

    பறவைகளின் விழிகளும் அவர்களை அச்சமின்றி வரவேற்பதுபோல் ஒளி உமிழ்ந்தன.

    வந்த மேல்நாட்டு இளைஞர் பிரியா விடைபெற்றுச் சென்றார் தம் நண்பரிடம். அந்த உயிரினங்களோடு ஒன்றாக உறவாடிப் பழகுவதற்காக, அந்த இளைஞர் மேற்கொண்ட கடினமான எளிய வாழ்க்கை தமிழ்நாட்டு இளைஞரையே திகைக்க வைத்தது. பரம்பரையான பணக்காரர் வீட்டுப்பிள்ளை அவர். விமானத்தில் பிரயாணம் செய்து பலமுறை உலகைப் பார்த்தவர். அப்படிப்பட்ட ஒருவர் குக்கிராமத்திலும் குக்கிராமமான இங்கு வந்து கொசுக் கடியிலும் வெப்பத்திலும் அரைப்பட்டினியிலும் உழன்று, பறவை களிடம் ஈடுபாடு கொண்டாரென்றால்......?

    அடுத்த சில மாதங்களில் இந்த நாட்டின் முக்கியமான திரைப்படக் கொட்டகைகளிலெல்லாம் ஓர் வண்ணப்படம் திரையிடப்பட்டது. 'தமிழ்நாட்டு ஏரியில் உலகத்துப் பறவைகள்' என்ற தலைப்புக் கொண்ட படம் அது.படத்தின் துவக்கத்தில் தம் நண்பருக்கு நன்றி கூறியிருந்தார் அவர்.

    அந்தப் படத்தைப்பற்றி எல்லாத் தமிழ் பத்திரிகைகளும் ஆங்கிலப் பத்திரிகைகளும் தாராளமாகத் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தன. நிருபர்கள் பலர் கூட்டங கூட்டமாகச் சென்று வந்தார்கள். தமிழ் நாட்டு இளைஞருக்குப் பூரிப்புத் தாங்க முடியவில்லை. ஒரே சமயத்தில் பலரிடமிருந்து அவருக்குக் கட்டுரைகள் எழுதும்படி கடிதங்கள் வந்து குவிந்தன.

    பறவைகள் தங்கக்கூடிய காலம் முடிந்துவிட்டதால் அவை வழக்கம்போல் பறந்து கலைந்துவிட்டன.

    இனி அடுத்த ஆண்டுதான் அவைகளைக் காணமுடியும்.

    அதற்குள் பணம் படைத்தவர்கள் பலர் பெரிய பெரிய கார்களில் அங்கு வந்து இறங்கினார்கள். கேட்ட விலையைக் கைமேல் கொடுத்து அங்கிருந்த நிலங்களை வாங்கினார்கள். பெரிய பெரிய ஓட்டல்களைக் கட்டினார்கள். மின் விளக்குகளைக் கொண்டு வந்தார்கள். புதிய புதிய நவநாகரிக வசதிகளுடன் அங்கே பங்களாக்கள் எழும்பின. பறவைகள் வருவதற்கு முன்பே மனிதர்கள் வந்து கூடிக் கலைந்தார்கள்.

    'மேலை நாட்டார் ஒரு படம் எடுத்துத் திரையில் காட்டமுடிந்தபோது, நாமும் நம் திரைப்படத்தில் அதை ஏன் காட்டக்கூடாது?' என்று ஒருவர் நினைத்தார். அந்தப் படத்தைப் பார்த்தவுடன்தான் அப்படி நினைத்தார் என்பதையும் நாம் சொல்லத்தான் வேண்டும்.

    'வேட்டைக்காரன்!' என்ற கதை உருவாயிற்று. நூற்றுக்கணக்கான ஆண், பெண் நடிக நடிகையர், பலவேறு வண்ண்ங்களில் அலங்கரித்துக்கொண்டு, ஓர் அழகிய தெப்பத்தில் அந்த ஏரிக்குள் போவதுபோல் படம் எடுக்கத் திட்ட மிட்டார்கள். பறவைகளை இயற்கையான பின்னணியாகக் கொண்டு பாடிய வண்ணம் படகோட்டும் காட்சி ஒன்று உருவாயிற்று.

    வண்ணப் படம் அல்லவா? நூற்றுக்கணக்கானவர்கள் அங்குவந்து நாட்கணக்கில் தங்கவேண்டும் அல்லவா? ஏற்கனவே நாகரிகமாகிக் கொண்டுவந்த கிராமம், திடீர் திடீரென்று புதிய புதிய வசதிகளைக் காணத் தொடங்கியது.

    ஏரியைப் போய்ப் பார்த்து வந்த செய்திகள், கிராமத்தில் ஏற்பாடு நடைபெறும் செய்திகள், அங்கே போய் ஒவ்வொருவரும் தும்மியது முதல் இருமியது வரையுள்ள பல வேறு செய்திகள் பத்திரிகைகளை அலங்கரிக்கத் தொடங்கின.

    பறவைகளைப் பார்ப்பதற்குக் கூடாதவர்கள்கூட, பறவைகளைப் படம் பிடிப்பதற்காகச் செய்யும் முன்னேற்பாடுகளைப் பார்ப்பதற்கு அங்கு வந்து திரண்டார்கள். 'தேர்க் கூட்டம், திருவிழாக் கூட்டம், என்று முன்னாட்களில் சொல்வதுபோல், அங்கு அக்கம் பக்கத்துக் கிராமங்களெல்லாம் கூடத்தொடங்கின.

    பறவைகளும் குறிப்பிட்ட காத்தில் வந்து குழுமிவிட்டன.

    பெரிய பெரிய லாரிகளிலும் 'வான்' களிலும் இயந்திரக்கருவிகள் வந்து சேர்ந்தன. சரமாரியாகக் கார்களும் கிளம்பின. சாலைகளின் இரு மருங்குகளிலும் மக்கள் கூட்டத்தின் உற்சாகம் எல்லை கடந்து நின்றது.

    ஆயிற்று. துரிதமாக ஏற்பாடுகள் நடந்து முடிந்து விட்டன.காலை இள வெய்யிலில் பொன்னிறமான வண்ணப் படகு, நூற்றுக்கணக்கான காளையரும் கன்னியரும் நிறைந்த கூட்டத்தைச் சுமந்துகொண்டு ஏரிக்குள் சென்றது. அதைத் தொடர்ந்து நான்கைந்து 'கமிரா' க்கள் பல வேறு கோணங்களிலிருந்து சுடுவதற்குத் தயாராக இருந்தன.

    குபீரென்று ஒலிபரப்பி திரைப் பாடலை முழக்கம் செய்தது;

    "வேட்டைக்காரா!....வேட்டைக்காரா!... ஓடிவா!"

    "ஷூட்" என்றது இயக்குனரின் குரல்.

    சொல்லி வைத்தாற்போல் அவ்வளவு பறவைகளும், 'ஜிவ்' வென்று வானத்தில் கிளம்பி வட்டமிடத் தொடங்கின.

    "கட்! கட்! என்று கத்தினார் டைரக்டர்.

    எல்லோரும் வானத்தையே அண்ணாந்து பார்த்தார்கள். கழுத்துச் சுளுக்கும்வரை பார்த்தார்கள். அவ்வளவு பறவைகளும் வட்டமிட்டுச் சுழன்றுகொண்டிருந்தனவே தவிர, ஒன்று கூட இறங்கி வந்து தனது கூட்டை எட்டிப் பார்க்க வில்லை. சற்று நேரத்தில் கரும் புள்ளிகளென மறைந்து அவை இரை தேடச் சென்றுவிட்டன.

    மாலையில் திரும்பி வந்தபோதும் அங்கு ஓடம் இருந்தது; அதன்மேல் மனிதர்கள் நிறைந்திருந்தார்கள்.

    ஒருபறவையாவது வானத்தை விட்டுக் கீழே இறங்கி வரவேண்டுமே!

    இரவில் அவை எங்கேதான் சென்று தங்கினவோ தெரியவில்லை. மறுநாள் காலையிலும் அந்த மரகத மணித் திட்டுக்கள் பறவைகளின் கலகலப்பின்றி வெறிச்சிட்டுக் கிடந்தன. காத்திருந்தார்கள். காத்திருந்தவர்களில் ஒருவருக்குப் பறவைகளின்மீது கோபம் கோபமாக வந்தது. 'என்ன திமிர் இந்த அற்பப் பிராணிகளுக்கு! லட்சக்கணக்கில் பணம் செலவு செய்துகொண்டு, எவ்வளவோ ஏற்பாடுகள் செய்துகொண்டு இங்கு வந்திருக்கிறோம். கொஞ்சங்கூட மரியாதை தெரியவில்லையே!'

    பறவைகளின் நண்பரான அந்த இளைஞரும் அங்கு வந்து இவ்வளவு வேடிக்கைகளையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.

    முதலில் அந்த இளைஞரை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் அலட்சியம் செய்த ஒருவர், பிறகு அவரிடம் வந்து, "அந்த வெள்ளைக்காரன் மட்டும் எப்படி வந்து படம் பிடித்தான்?" என்று மெதுவாய்க் கேட்டார். "அவன் இங்கு வந்து பல நாள் தங்கினான். தன்னுடைய உயிரைப் போலவே அவற்றின் உயிரையும் நேசித்தான். ஆவலோடு அவற்றின் வாழ்க்கையிலுள்ள இன்ப துன்பங்களைத் தெரிந்துகொள்ள முயன்றான். கடைசியில் அவற்றின் வாழ்க்கைக் கலையை வெளி உலகத்துக்கு வெளிப்படுத்துவதற்காகவே அவன் படம் பிடித்தான். அவன் கலைஞன்!"

    அவனைக் கலைஞன் என்று அந்த இளைஞர் கூறியவுடன் கோபத்தால் முகம் சிவந்தது பிரமுகருக்கு.

    "அப்படியானால் நாங்கள்?" உருட்டி விழித்தார் அவர்.

    புன்முறுவல் பூத்துவிட்டு, "தயவு செய்து என்னிடம் இப்படிக் கேட்காதீர்கள்" என்று மழுப்பப் பார்த்தார் இளைஞர்.

    "இல்லை, சொல்லுங்கள்!"

    "நான் என்ன சொல்வது? பறவைகளே உங்களுக்குப் பதில் சொல்லிவிட்டனவே !......உங்களுடைய படத்தின் பெயர் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் போதும்!"

    பணவேட்டைக்குத் தங்களைக் கருவிகளாகப் பயன்படுத்த வந்தவர்கள், திரும்பிச்சென்றவுடன், கலைவாழ்வு வாழ வந்த உயிரினங்கள் மீண்டும் அங்கு ஆனந்தத்துடன் கூடிக் களித்தன.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home