Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > குருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா

 

குருஞான சம்பந்தர் அருளிய
சொக்கநாத வெண்பா
(குருஞான சம்பந்தர் வாழ்க்கை வரலாறுடன்)

cokkanAta veNpA & cokkanAta kalittuRai of
kurunjAna campantar


Acknowledgements: Our Sincere thanks go to shaivam.org for providing the etext. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2008.Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

 

    புண்டரிகத் தாளைப் புகழ்ந்து புகழ்ந்துதினம்
    அண்டமரர் கொண்டிறைஞ்சும் ஆதியே - தொண்டுபடும்
    நாயேனை யாண்டுகந்து நன்னெறிகள் காட்டுவித்த
    தாயே நீ சொக்கநா தா.

    1

    மிண்டுசெய்யு மும்மலமு மிக்கவினை நல்குரவும்
    பண்டுபோ லென்னைவந்து பற்றாமல் - கொண்டுபோய்
    நின்னருளிற் சேர்க்க நினைகண்டாய் தென்மதுரை
    மன்னவனே சொக்கநா தா

    2

    கூரியவெம் பாசக் குளிர்நீங்க நின்னருளாஞ்
    சூரியனெப் போதுவந்து தோன்றுமோ - பாரறியக்
    கொட்டமிட்ட சண்டனுயிர் கொள்ளையிட்ட மாமதுரை
    யிட்டமிட்டச் சொக்கநா தா.

    3

    உனக்குப் பணிசெய்ய உன்றனையெந் நாளும்
    நினைக்க வரமெனக்கு நீதா - மனக்கவலை
    நீக்குகின்ற தென்மதுரை நின்மலனே எவ்வுலகும்
    ஆக்குகின்ற சொக்கநா தா.

    4

    சன்மார்க்கஞ் செய்யுந் தபோதனரோ டென்னையுநீ
    நன்மார்க்கஞ் செய்யவருள் நாடுமோ - துன்மார்க்கஞ்
    செய்கின்ற முப்புரத்தைத் தீயாக்கித் தென்மதுரை
    வைகின்ற சொக்கநா தா.

    5

    வந்தபொருளாசை மண்ணாசை பெண்ணாசை
    இந்தவகை யாசையெல்லா மென்மனத்தின் - வந்துமினிச்
    சேராமல் வாழ நினைகண்டாய் தென்கூடல்
    பேராத சொக்கநா தா.

    6

    தண்டுவரும் குண்டுவரும் தானைவரும் ஆனைவரும்
    வண்டில்மரு மாடுவரு மாடுவரும் - மிண்டிப்
    பெருங்கோட்டை யுஞ்சுமையும் பின்புவருங் கூடல்
    அருங்கோட்டை வாசலிற்சென் றால்.

    7

    எல்லாம் வல்லசித்தர் என்றக்கால் என்னுடைய
    பொல்லாக் கருத்தகற்றப் போகாதே - வல்லாடும்
    பொங்கரா வேணிப் புனிதா மதுரைநகர்ச்
    சங்கரா சொக்கநா தா.

    8

    பேசாநு பூதிபிறக்க என துளத்தில்
    ஆசா பாசாசை அகற்றுவாய் - தேசாருஞ்
    சிற்பரா நந்தா திருவால வாயுறையும்
    தற்பரா சொக்கநா தா.

    9

    இறந்தும் பிறந்தும் இளைத்தேன் இனியான்
    மறந்தும் பிறவா வரம்தா - சிறந்தபுகழ்
    ஞாலவா யாமுடிக்கு நாட்டுஞ்சூ ளாமணியாம்
    ஆலவாய்ச் சொக்கநா தா.

    10

    உலக வெறுப்பும் உடல்வெறுப்பும் உள்ளத்
    திலகு மலவெறுப்பும் எல்லாம் - அலகிறந்த
    நந்தாக இன்பசுக நாட்டின் விருப்பமுறத்
    தந்தாள்வை சொக்கநா தா.

    11

    எப்போது மும்மலம் விட்டேறுவேன் பூரணமாய்
    எப்போதுன் இன்பசுகத் தெய்துவேன் - எப்போதும்
    நித்தியா சுத்தா நிராமயா சொல்தவறாச்
    சத்தியா சொக்கநா தா.

    12

    காயமோ காலன் கருத்தோ மகாகாலன்
    ஞாயமோ சற்றும் நடப்பதில்லை - பேயனேன்
    மாளுவனோ தென்மதுரை மாமணியே என்னையுகந்(து)
    ஆளுவையோ சொக்கநா தா.

    13

    எரிசுடுவ தல்லால் இரும்பு சுடுமோ
    அரிஅயற்கும் வாசவற்கும் யார்க்கும் - பெரியவர்க்கும்
    பூணுமெ தந்தொழில்நின் பொன்னருளால் தென்மதுரைத்
    தாணுவே சொக்கநா தா.

    14

    ஆரிடத்தில் வந்தும் அடியேன் உளத்திருந்தும்
    ஓரிடத்தில் உற்பவித்தும் உள்ளபடி - பாரிடத்தில்
    நாயேன் உளமகிழ நன்றா உணர்த்திடுவாய்
    தாயேநீ சொக்கநா தா.

    15

    நித்தம் எழுந்தருளி நின்மலனே என்றனக்குப்
    புத்தி மிகமிகவும் போதித்துச் - சித்தமயல்
    போக்குவாய் இன்பசுக பூரணத்தி ரண்டரவே
    ஆக்குவாய் சொக்கநா தா.

    16

    மறைஆ கமவிதியும் வந்தவுடல் தன்னின்
    நிறையூழ் விதியுமுன்னா னின்றேன் - மறைவிதிக்கே
    எற்கவே செய்வேன் இசைந்தாலூழ் வேறெதனோ
    யார்க்கவென் சொக்கநா தா.

    17

    நலம்விளைக்கும் உன்பதத்தில் நாடவைப்ப தல்லால்
    மலம்விளைக்குஞ் சோறருந்த வைத்தாய் - சலம்விளைக்குஞ்
    சென்னியா மாமதுரைச் செல்வாஎல் லாம்வல்ல
    தன்னியா சொக்கநா தா.

    18

    ஆர்வந்தென் ஆர்போயென் அய்யாஉன் ஆனந்தச்
    சீருளத்தே என்றுஞ் செறிந்திலதேல் - காரிருண்ட
    கண்டனே ஓர் புருடன்கா தல்கொண்டாள் போல்மதுரை
    அண்டனே சொக்கநா தா.

    19

    கான்றசோ றாயுலகங் காணவில்லை இன்பவெள்ளத்(து)
    ஊன்றஅடியேன் உறங்கவில்லை - என்ற
    இருள்சகல நீங்கவில்லை ஏழையேற் குன்றன்
    அருளுறுமோ சொக்கநா தா.

    20

    நீயே பரமசிவன் ஆனக்கால் நின்மலனே
    நாயேன் உளம்மகிழநன்றாகப் - பேயேன்
    கருத்தடங்க நின்கருணை காட்டியின்ப வெள்ளம்
    அருத்திடுவை சொக்காநா தா.

    21

    விதிமார்க்கம் எப்பொழுது மேயறியேன் ஊழின்
    விதிமார்க்கம் அல்லாது மெய்யாங் - கதிமார்க்கம்
    காட்டுவாய் நாயேன் கறையேற எவ்வுலகும்
    ஆட்டுவாய் சொக்காநா தா.

    22

    அருவெருப்பே மெத்தியிடும் ஆகத்தைச் சற்றும்
    அருவெருக்கத் தோற்றுதில்லை அய்யோ - அருவெருக்கத்
    தோற்றியிடா தென்னவினை துய்ப்பித் தறுப்பதற்கோ
    சாற்றியிடாய் சொக்காநா தா.

    23

    தவமோ சிறிதறியேன் தாரணிமேற் செய்யும்
    அவமோ அளவில்லையானால் - சிவமோ
    பெறுமாறென் கூடற் பிரானேமுப் பாசம்
    அறுமாறென் சொக்காநா தா.

    24

    அனைத்துயிர்க்கும் பாசம் அறுத்துமுத்தி கூட்ட
    மனைத்துயரஞ் செய்தல் மருந்தோ - மனத்துயரம்
    செய்யாமல் தீர்மருந்து சித்தா அறிந்திலையோ
    அய்யா என் சொக்காநா தா.

    25

    உணர்த்தில் உணர்வேன் உணர்த்தயேல் - நாயேன்
    கணத்தும் உணரும்வகை காணேன் - உணர்த்தியென்னுட்
    பூண்டமல மாயைகன்மம் போக்கிச் சிவானந்தத்
    தாண்டருள்வை சொக்காநா தா.

    26

    பிரிந்தேன் மலத்துனது பேரருளினாலே
    அறிந்தேன் உனைநன்றா அய்யா - செறிந்தஇன்ப
    பூரணா செங்கமலப்பொற்பாதா கூடலில்வாழ்
    ஆரணா சொக்காநா தா.

    27

    கெடுங்காலம் வந்தால் கெடுப்பை கதியில்
    விடுங்காலம் வந்தால் விடுவை - கொடுந்தவங்கள்
    பண்ணிடினும் பாவம் பயிற்றிடினும் ஆரேனும்
    அண்ணலே சொக்காநா தா.

    28

    என்னவினை நாயேற் கிருக்குதோ இக்காயத்
    தென்னவினை நின்தாள் இயற்றுமோ - என்னவினை
    வந்திடுமோ என்றறியேன் வந்தாலும் நின் அருளே
    தந்திடுவாய் சொக்காநா தா.

    29

    ஆறாறு தத்துவத்தும் ஆணவத்தும் கன்மத்தும்
    மாறாதெந் நாளும் மயங்காமல் - பேறாக
    நித்தனே நின்மலனே நின்பதத்தில் ஆள்மதுரை
    அத்தனே சொக்காநா தா.

    30

    அடியேன் உனைவேண்ட அப்படியே என்றுங்
    கொடியேன் கருத்திசையக் கூறி - அடியேனை
    மீண்டுபிற வாதுன் விரைமலர்த்தாள் சூட்டிஎனை
    ஆண்டவனே சொக்காநா தா.

    31

    ஆசான் உளத்திருந்தும் ஆன்மா உளத்திருந்தும்
    மாசார் மலத்தை அறுத்தருளி நேசா
    ஒளித்திருந்த இன்பவெள்ளம் ஒன்றஉயிர்க்(கு) என்றும்
    அளிப்பவன் நீ சொக்காநா தா.

    32

    ஆற்றையணி வேணி அமலனே மெய்யதனில்
    நீற்றைப் புனையும் நிமலனே - கூற்றைக்
    குமைத்தவனே என்சிரத்துன் கோகனதத் தாளை
    அமைததவனே சொக்காநா தா.

    33

    கால வசமோ கடியேன் வினைவசமோ
    ஞாலவச மோஅருளை நாடியே - கோலமறச்
    சிற்பரா னந்தவெள்ளம் சேற்ந்தறிந்தும் சேர்கிறேன்
    தற்பரா சொக்காநா தா.

    34

    நீள்நாள் பிறந்திறந்து நின்றதுயர் நீயறிவை
    வீண்நாள் கழித்து விடாமலே - பூணஅருள்
    நண்ணரிய பேரின்பம் நாடி அதுவாக
    அண்ணலே சொக்கநா தா.

    35


    ஆறாறு தத்துவத்தும் ஆணவத்தும் சாராமல்
    மாறாத பேரின்ப வாரிதியே - பேறாகச்
    சார்ந்திருக்க வல்ல சதுரர் உளத்ததுவாய்
    ஆர்ந்திருக்கும் சொக்கநா தா.

    36

    காடோ வனமோ கனகிரியோ காசினியோ
    நாடோ சகலகலை ஞானமோ - வாடி
    ஒடுங்குவதோ மெய்வீ டுயிர்க்களித்தல் போதம்
    அடங்குவதோ சொக்கநா தா.

    37

    துன்றுபர மாநந்தச் சோதியிலி ரண்டற்று
    நின்றுவிட என்னை நிறுத்துவாய் - அன்று
    கமலனே காண்பறிய கண்ணுதலே கூடல்
    அமலனே சொக்கநா தா.

    38

    எக்காலம் இக்காயம் இற்றிடுமோ என்வினைகள்
    எக்காலம் மும்மலங்கள் இற்றிடுமோ - எக்காலம்
    ஆநந்த சாகரத்தில் ஆடிடுமோ என்னுளந்தான்
    ஆநந்தா சொக்கநா தா.

    39

    எக்காலம் மெய்க்கே இரையிடுதல் இற்றிடுமோ
    எக்காலம் இக்கரணம் இற்றிடுமோ - எக்காலம்
    பேசாது பூதி பிறந்திடுமோ என்னுளத்தில்
    ஆசானே சொக்கநா தா. 40

    40

    வாக்கிலுரை பொய்யே மனம்நினைப்ப தும்கவடே
    ஆக்கைதினம் செய்வ தகிர்த்தியமே - நோக்கில்
    திரிவிதமூம் இப்படிநீ செய்வித்தால் முத்தி
    தருவிதமென் சொக்கநா தா.

    41

    இக்காலத் தின்னவினை என்றமைப்பை அப்படியே
    அக்காலத் தவ்வூழ் அருந்திடுவை - இக்காலம்
    தப்புவார் உண்டோ தமியேற்கும் தப்பரி(து)என்
    அப்பனே சொக்கநா தா.

    42

    மோகாபி மானமின்னும் முற்றும் மறக்கவில்லை
    தேகாபி மானம் சிதையவில்லை - ஓகோ
    உனையடைந்தும் பாசம் ஒழியவில்லை கூடல்
    தனையடைந்த சொக்கநா தா.

    43

    பத்திமெத்தச் சித்தம் பதியவில்லை அட்டமா
    சித்தி அவாவெறுக்கச் செய்யவில்லை - முத்தியுளம்
    கூடவில்லை எந்நாளும் கூடலிலே மாறிநடம்
    ஆடவல்ல சொக்கநா தா.

    44

    என்னைவளை பாசஅரண் இன்னமுநீ கொள்ளவில்லை
    அன்னையனே நீபதண மானாலும் முன்னைமலம்
    ஓடவே எவ்வுயிர்க்கும் ஓட்டும் அருட்சேனை
    தாடியிடும் சொக்கநா தா.

    45

    சேகரத்தி னுச்சியின்மேல் செந்தேனுக் கிச்சித்தே
    போகவசம் ஆகுமோ போகாதார் - தாகம்
    மிக அறவே யுள்ளத்தில் வேண்டிலுன் தாட்செந்தேன்
    அகமுறுமோ சொக்கநா தா.

    46

    அடியார் பரிபாகம் எல்லாம் அறிந்து
    படிகீழ்ப் பதமேற் பதத்திற் - கொடுபோய்
    இருத்திடுவை சேர இனும்மேலாம் போகம்
    அருத்திடுவை சொக்கநா தா.

    47

    வாழ்அய்ம் மலத்தால் வருந்தி மிகஉடைந்த
    ஏழையனுக் கையோ இரங்குவாய் - கோழையனாய்ப்
    போனேன் புலப்பகையாற் பொன்னடியை நின்னருளால்
    தானேதா சொக்கநா தா. 48

    48

    எக்காலம் தாகங்கள் இற்றிடுமோ காயங்கள்
    எக்காலம் ஆசைசினம் இற்றிடுமோ - எக்காலம்
    நல்லார் குணம்வருமோ நாதாஎல் லாமுமாய்
    அல்லானே சொக்கநா தா.

    49

    உள்ளமுனை அல்லாலொன் றுள்ளவில்லை நின்றொளிக்கும்
    கள்ளமுற நீயும் கருதவில்லை - எள்ளவும்
    நற்றவமோ செய்யவில்லை நாயேன் உனையடைதற்
    கற்றதென்ன சொக்கநா தா. 0

    50


    ஆர்க்குக் கிடைக்கும் அடியேன்முன் வந்துமறைக்(கு)
    ஏற்கக் கருத்துக்(கு) இசையவே - யார்க்கும்
    தெரிவரியா வெதசிகை சித்தா உரைத்தாய்
    அரிஅறியாச் சொக்கநா தா.

    51

    எவ்விதையை மக்கள் பயிர் இட்டார் இட்டவரே
    அவ்விதையின் போகம் அருந்துதல்போல் - செவ்விதாய்த்
    துன்மார்க்கம் செய்வார்க்குத் தோன்றும் பிறப்புமுத்தி
    சன்மார்க்கஞ் சொக்கநா தா.

    52

    எல்லார் கருத்தும் இதமா உரைக்கறியேன்
    நல்லங்கு தீங்கிதென நாடறியேன் - எல்லாரும்
    நீரூரும் வேணி நிமலா மதுரையில்வாழ்
    ஆரூரா சொக்கநா தா.

    53

    உரை இறந்த பேரின்ப உல்லாச வீட்டில்
    திரை இறந்து தூங்கித் திளையேன் - வரை பெருகப்
    பேசுவேன் யானென்றே பெற்றவர்தம் உள்ளத்துக்கு
    ஆசுவே சொக்கநா தா.

    54

    ஆறாறு தத்துவமும் அத்திலுறை மூர்த்திகளும்
    பேறாம் வினையினையும் பெந்தித்து - மாறாமல்
    ஆட்டுவதும் நீயானால் ஆகா மியம்என்பால்
    சாட்டுவதென் சொக்கநா தா.

    55

    முன் அளவில் மாக்களுக்கு முத்தி கொடுத்தஅருள்
    என் அளவில் சும்மா இருப்பதேன் - முன் அளவில்
    சீர்பெற்றா ரேல்உன் திருவருளோத் தாசையன்றி
    ஆர்பெற்றார் சொக்கநா தா.

    56

    நோயால் வருந்தியுனை நூறுகுரல் கூப்பிட்டால்
    நீயாரெ னாதிருக்கை நீதியோ - தாயாய்
    அலைகொடுத்த கேழல் அருங்குழவிக் கன்று
    முலைகொடுத்தாய் நீயலவோ முன்.

    57

    தாயார் மகவருத்தஞ் சற்றுந் தரியார்கள்
    ஆயவினைக் கீடா அமைத்தாலும் - காயம்
    பரிக்குந் துயரமெல்லாம் பார்க்கஉனக் கென்றும்
    தரிக்குமோ சொக்கநா தா.

    58

    தீவினையால் இன்னமின்னம் தேகமுறச் செய்வையோ
    தீவினையற் றுன்மயமாய்ச் செய்வையோ - தாவிதமாய்
    இன்னபடி மேல்விளைவ தென் றறியேன் ஈதறிந்த
    அன்னையே சொக்கநா தா.

    59

    என்னதியான் என்பதுவும் யான்பிறர்செய் தாரெனலும்
    மன்னுமதி பாதகமேல் வாஞ்சைகளும் - இன்னமின்னம்
    சொல்லுகின்ற இச்செயல்நீ தூண்டுதலற் றென்செயலால்
    அல்லவே சொக்கநா தா.

    60

    ஆலந் தரித்தலிங்கம் ஆலவாய்ச் சொக்கலிங்கம்
    மூலமாம் எங்கும் முளைத்தலிங்கம் - பாலொளியாம்
    மத்தனே கூடல் மதுரா புரிஉமையாள்
    அத்தனே சொக்கநா தா.

    61

    எல்லாம் உனதுபதம் எல்லாம் உனதுசெயல்
    எல்லாம் உனதருளே என்றிருந்தால் - பொல்லாத
    மாதுயரம் நீங்கும் மருவும் உனதடிக்கே
    ஆதரவாய்ச் சொக்கநா தா.

    62

    தீதாம் அவாநந்தச் செய்மதுரை வாழ்வேந்தா
    நாதா சிவாநந்தம் நல்குவாய் - வேதச்
    சிரகரா நித்தா திரபரா சுந்தா
    அரகரா சொக்கநா தா.

    63

    மற்றொருவர் தஞ்சமின்றி வந்தடைந்தக் கால்எனைநீ
    சற்றுமிரங் காதிருக்கை தன்மையோ - கொற்றவா
    பாவலா கூடற் பரமா பரதேசி
    காவலன்நீ சொக்கநா தா.

    64

    தன்னந் தனியே தமியேன் முறையிட்டால்
    இன்னந் திருச்செவியில் ஏறாதோ - மன்னவனே
    தென்மதுரை மேவித் திருந்தியசெய் கோல்செலுத்தந்
    தன்மதுரை நீயலவோ தான்.

    65

    என்போல் மலகடினர் எவ்விடத்துங் கண்டதுண்டோ
    இன்பே மதுரைக் கிறைவனே - அன்(பு)ஏதும்
    இல்லா தெனையாண்ட எண்ணத்தால் தேவரீர்
    எல்லாமும் வல்லசித்த ரே.

    66

    நீயே யொளித்திருப்பை நீஎன்றுங் காணாமல்
    நீயே யொளித்தபடி நின்னருளால் - நீயேதான்
    காட்ட அன்னியமாக் கண்டேன் உனதுவினை
    யாட்டதென்ன சொக்கநா தா.

    67

    பேரன்பன் அல்லன் பிழைசெய்யான் தானல்லன்
    ஓரன்பும் இல்லா உலுத்தனேன் - பேரன்பு
    காட்டிஎனைக் காட்டியுனைக் காட்டிஇன்பத் தொட்டிலிலே
    ஆட்டிவளர் சொக்கநா தா.

    68

    இட்டா சனத்தில் இரவுபக லற்றிடத்தில்
    முட்டா திருக்க அருள் முற்றந்தா - அட்டாங்க
    யோகந்தான் நீங்கி ஒழியாச் சிவாநந்த
    ஆகம்தா சொக்கநா தா.

    69

    மோகங் கரைய முழுதும் மலம்கரைய
    ஆகங் கரைய அறி வானந்த - மோகமாய்ப்
    பூரணமாய் எங்கெங்கும் பொங்கி எழவிழித்த
    ஆரணனே சொக்கநா தா.

    70

    ஊனது வானவுட லோடும்அணு காமலருள்
    ஆனசிவ போகமது வாயருள்வாய் ஞானக்
    கரும்பொருளே வாழ்மதுரைக் கண்ணுதலே ஆர்க்கும்
    அரும்பொருளே சொக்கநா தா.

    71

    பூண்டமலம் மாண்டுவிடப் போந்தசிவா னந்தவெள்ளத்
    தாண்டுமெனை மீண்டுவிட லாகுமோ - நீண்டமால்
    வீரனென்பார் தாரா விமலா எனைக்கண்டார்
    ஆரனென்பார் சொக்கநா தா.

    72

    முன்னை மலமகற்றி மூதறிவா நந்தமயந்
    தன்னை யறிந்த தபோதனருள் - என்னையுநீ
    ஆண்டுபரிச் சொக்கநா தாந்தமருள் கூடலிலே
    தாண்டுபரிச் சொக்கநா தா.

    73

    கருணா நிதியே கடவுளே அன்பர்
    பொருளான பேரின்பப் பொற்பே - ஒருநாளும்
    நீங்கா தெனதரிவில் நின்றசுகா னந்தமே
    ஆங்காண்நீ சொக்கநா தா.

    74

    நீரிலே மூழ்கிலுமென் நித்தமருச் சிக்கிலுமென்
    பாரிலே சுற்றிப் பணியிலுமென் - வேரிலே
    உற்றிருந்தா லன்றோ உயிர்க்குறுதி ஒன்றிரண்டும்
    அற்றவனே சொக்கநா தா.

    75

    என்செயலே என்றேன் றியற்றுவதும் என்செயலும்
    உன்செயலே என்றேன் றுண்ர்த்துவதும் - நின்செயல
    தாகுமே என்ன அடியேற் குணர்த்தலும்நீ
    ஆகுமே சொக்கநா தா.

    76

    ஈண்டுமெனை ஆண்டிலையேல் என்வினைக்கீ டாயானே
    வேண்டும் பவங்களில் நீ விட்டாலும் - பூண்டருளால்
    அங்கங்கெ என்னோ டனனியமாய் என்னுருவில்
    தங்கியருள் சொக்கநா தா.

    77

    உன்னைவிட நீங்குமுயிர் ஒன்றில்லை ஆதலினால்
    என்னைவிட நீங்குவதும் இல்லைநீ - பொன்னைவிட
    பூந்தேன் அலருடையாய் பொங்குமது ராபுரியில்
    வேந்தே பிரியா விடை.

    78

    அன்பர்க் கருள்புரிவ தல்லாமல் தேவரீர்
    வன்பர்க் கரும்புரிய மாட்டீரேல் - உம்பர்தொழு
    நல்லார் புகழ்மதுரை நாதரே தேவரீர்க்
    கெல்லாமும் வல்லசித்த ரேன்?

    79

    நரகம் இனிநால் நாடோம் உமையாள்
    விரகர் தமிழ்மதுரை மேவித் - துரகநரி
    ஆக்கினார் வைகையில்நீர் ஆடினோம் அவ்வெல்லைப்
    போக்கலாம் யாம்திரிந்திப் போது.

    80

    நானோ தனுகரணம் நானோ மலமாயை
    நானோ இவைகள் நடத்துவது - நானோதான்
    பூண்ட வினை அறுப்போன் புண்ணியபா வம்புரிவோன்
    ஆண்டவனே சொக்கநா தா.

    81

    அரும்பாச நன்மைதின்மை ஆகம் அதன்மேல்
    விரும்பாது நிட்டையிலே மேவித் - திரும்பாத
    மனந்தா என்னறிவில் மாறாது பொங்கிஎழும்
    ஆநந்தா சொக்கநா தா.

    82

    துஞ்சப் பிணமென்னச் சுற்றத்தார் இட்டத்தார்
    அஞ்சச் சலிக்க அருவருக்கக் - கொஞ்சமுற
    தந்த தநுஇருந்து வாழ்ந்துநான் என்னவைத்த
    தந்திரமென் சொக்கநா தா.

    83

    தனுவாதி ஆக்கிஉயிர் தன்னிலிசைத் தாட்டி
    எனுமாக மம்கருணை என்றுந் - தினமுநீ
    ஆச்சரியம் யான்எனதென் றாட்டல்மறந் தொன்றுரைத்தல்
    ஆச்சரியம் சொக்கநா தா.

    84

    தேகாதி எல்லாஞ் சடம்பிணம்பொய் என்றிருக்க
    மோகாதி எல்லாம் முடிந்திருக்க - ஏகமாய்
    எப்போதும் இன்பவெள்ளத் தேயிருக்க வாழ்வை என்னுள்
    அப்போதே சொக்கநா தா.

    85

    நின்பாடல் என்று நினைப்பாடல் அன்றியே
    என்பாடல் எங்கே இறைவனே - நின்பாடல்
    ஆமே தனுவாதி ஆகமநால் வாக்காதி
    யாமேநீ சொக்கநா தா.

    86

    நீயற்ற ஓர்பொருளை நிச்சயித்த நாயேனும்
    போயியற்றல் செய்யப் புரிகுவேன் - நீயியற்றல்
    ஆக்கா தணுவும் அசையுமோ அவ்விகற்பந்
    தாக்காத சொக்கநா தா.

    87

    அன்றுமுதல் இன்றளவும் மேலும் அடியேனுக்(கு)
    என்றுநீ நன்மைசெய்வ தன்றிநான் - ஒன்றேனுஞ்
    செய்யுமா(று) எங்ஙன் சிவனே இனிநாயேன்
    உய்யுமாறு எங்ஙன் உரை.

    88

    அறிவுபரம் ஆனந்த மாகவில்லை ஆகம்
    பொறிகரணம் யானெனதும் போக - நெறிதவஞ்சேர்
    பேரன்போ இல்லை பினைநான் உனக்கடிமைக்(கு)
    ஆரென்பேன் சொக்கநா தா.

    89

    நின்னளவி லானந்தம் நின்கருணை சற்றேனும்
    என்னளவில் தோற்றா திருந்தக்கால் - நின்னளவில்
    பூரணம்பொய் ஆனந்தம் பொய்கருணை பொய்உரைத்த
    ஆரணம்பொய் சொக்கநா தா.

    90

    தேவே மதுரை நகர்ச் சிற்பரனே எவ்வுயிர்க்கும்
    கோவே எனையாளுங் கோவேஎன் - நாவே
    உனைத்துதிக்கச் சிந்தை உனைநினைக்கச் சென்னி
    கனத்தில் உனைவணங்கக் காண்.

    91

    உன்னைச்சிங் காரித் துனதழகு பாராமல்
    என்னைச்சிங் காரித் திடர்ப்பட்டேன் - பொன்னை
    அரிவையரை யே நினையும் அன்பிலேற் குந்தாள்
    தருவையோ சொக்கநா தா.

    92

    சொக்கநா தாஉனையே சொல்லுமடி யேனுடைய
    பக்கமாய் நின்றுவினை பாற்றியே - எக்காலும்
    மீண்டுவா ராதகதி மேவுவிப்பாய் தென்மதுரைத்
    தாண்டவனே சொக்கநா தா.

    93

    ஆறுதலை இல்லை அடியேனுக் கன்பாகத்
    தெறுதலை சொல்வார் சிலர் இல்லை - வேறெனக்குத்
    திக்காரும் இல்லை சிவனே பழிக்கஞ்சி
    சொக்கேநின் தாளே துணை.

    94


    சொக்கநாத வெண்பா முற்றிற்று


குருஞான சம்பந்தர் அருளிய
சொக்கநாத கலித்துறை

    கண்ணுக்கினிய பொருளாகி
          யேயென் கரத்தில்வந்தாய்
    விண்னும் பரவிடும் அற்புத
          மெயென்ன விஞ்சையிதான்
    மண்ணும் புகழ்ந்திட என்னையும்
          பூரண வாரியுள்ளே
    நண்ணும் படிசெய் மதுரா
          புரிச்சொக்க நாயகனே.

    1

    ஆதரா மிந்நிலத் துன்னையல்
          லால் எனக் காருளரோ
    மீதான் மான வெளியினைக்
          காட்ட விரைந்துடன் வந்(து)
    ஓதாம லோதி யெனைவச
          மாக்கினை உள்ளொளியா
    நாதா வருள்செய் மதுரா
          புரிச்சொக்க நாயகனே.

    2

    கல்லது நெஞ்சம் இரும்பே
          இருசெவி கண்கள்மரம்
    சொல்லுவ தும்பொய் அவமே
          தொழில்துக்க சாகரமாம்
    அல்லலென் பங்குநின் அன்பர்பங்(கு)
          ஆனந்த மாகவைத்தாய்
    நல்லது நல்ல மதுரா
          புரிச்சொக்க நாயகனே.

    3

    பாடும் படிசெய் நினைநினைந்
          தேத்திப் பணிந்தெழுந்தே
    ஆடும் படிசெய் மலமைந்து
          மேயடி யேன் உளத்தே
    வீடும் படிசெய் நின்ஆனந்த
          சாகரம் மேல்எனவே
    நாடும் படிசெய் மதுரா
          புரிச்சொக்க நாயகனே.

    4

    ஏறாத விண்ணப்பம் கூறாநின்
          றேன் அ• தேதெனிற்கேள்
    மாறாம லிந்த மகாலிங்கந்
          தன்னின் மகிழ்ந்திருந்தே
    ஆறாப் பவத்துய ராற்றிச்
          சிவானந்தம் அன்பர்க்கென்றும்
    பேறாக நல்குதி மாமது
          ராபுரிச்சொக்க நாயகனே.

    5

    ஆகங் கரணம் புவனங்கள்
          போகங்க ளானஎல்லாம்
    மோகம் பொருந்தவைத் தாட்டுதி
          யேமும் மலாதியெல்லாம்
    போக விடுத்தெனக்கா னந்தம்
          காட்டப் பொறியுனக்கே
    நாகம் அசைக்கு மதுரா
          ராபுரிச்சொக்க நாயகனே.

    6

    ஆடாம லாடிப் புலன்வழி
          யிற்போய் அனுதினமும்
    வாடாமல் வாடி மயங்கல்நன்
          றோமன வாக்கிறந்து
    கூடாமற் கூடிச் சிவானந்த
          வெள்ளக் குணக்கடலை
    நாடாமல் நாட அருள்கூடல்
          வாழ்சொக்க நாயகனே.

    7

    பொய்யா மலமறுத் தென்உளத்(து)
          ஆனந்த பூரணத்தை
    மெய்யா அளித்து விடாதுகண்
          டாய்விடி லோகெடுவேன்
    ஐயா எனதுயி ரேவினை
          மார்க்கத் தழுந்தியென்றும்
    நையா தரும்செய் மதுரா
          புரிச்சொக்க நாயகனே.

    8

    பிறவாத சென்மம் அழுத்தாத
          துன்பம் பிறந்தடியேன்
    இறவாத தானமு முண்டுகொ
          லோஎளி யேன் திரும்ப
    அறவாவிங் கென்னை யினியாட்டல்
          போதும்நின் ஆனந்தத்தே
    நறவார் பொழில்மன் மதுரா
          புரிச்சொக்க நாயகனே.

    9

    செய்யாத பாதக மொன்றில்லை
          ஒன்றொன்று செய்ததெல்லாம்
    ஐயா வளவில்லை நீயே
          யறிவைஅ• தியார் செயலோ
    மெய்யா வுயிர்க்கு ரேயடி
          யேன் இவ் வினையிலென்றும்
    நையாமல் ஆள்வை மதுரா
          புரிச்சொக்க நாயகனே.

    10

    அறிவைத் திருப்பிநின் பாதார
          விந்தம் அடையவில்லை
    நெறியைக் கொடுத்து நிறுத்தினை
          யேநின்ம லாஇனிஎன்
    பொறியைத் தவிர்த்துநின் ஆனந்த
          சாகர பூரணத்தைப்
    பிறிவற் றிருக்கவைப் பாய்எனை
          ஆண்டருள் பிஞ்ஞகனே.

    11


    சொக்கநாத கலித்துறை முற்றிற்று


----------

குருஞான சம்பந்தர் வாழ்க்கை வரலாறு

    source: tarupamura AtInam publication

    ஞானக்குழந்தை :
    தமிழகத்தில் - தென்பாண்டி நாட்டில் ஷ்ரீவில்லிபுத்தூரில் கார்காத்த வேளாளர் மரபில் சுப்பிரமணிய பிள்ளை மீனாட்சியம்மை என்ற நல்லறப் பெரியோர்கட்கு அருந்தவ மகவாகப் பதினாறாம் நூற்றாண்டில் அவதரித்தவர், தருமை ஆதீன முதற் குருமூர்த்திகளாகிய ஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள். இவருக்குப் பெற்றோர்கள், திருஞானசம்பந்தரைப்போல் தமது குழந்தையும் சிவஞானம் பெற்றுச் சைவம் வளர்க்கும் ஞானாசிரியனாகத் திகழ வேண்டும் என்று எண்ணி `ஞானசம்பந்தன்' என்ற நற்பெயரைச் சூட்டி வளர்த்து வருகையில், தமது குலதெய்வமாகிய சொக்கநாதரையும் மீனாட்சியம்மையையும் தரிசிப்பதற்கு ஞானசம்பந்தருடன் மதுரை சென்று பொற்றாமரைத் தடாகத்தில் நீராடி வழிபட்டனர். பெற்றோர்கள் ஊருக்குப் புறப்படுங்கால் ஞானசம்பந்தர் தன்னைத் தொடர்ந்து நின்ற தாயும் தந்தையுமாகிய சொக்கநாதரைப் பிரிய மனமின்றி, உடலுக்குத் தாய் தந்தையர்களாகிய பெற்றோர்களுக்கு விடை கொடுத்தனுப்பிச் சொக்கநாதர் வழிபாட்டிலே ஈடுபாடு கொண்டவரானார்.

    கண்ணுக்கினிய பொருள்:
    நாள்தோறும் பொற்றாமரைக் கரையில் அடியார்கள் சிவபூசை புரிவதைக் கண்டார் ஞானசம்பந்தர். தாமும் அவ்வாறு சிவபூசை புரிய எண்ணினார். சொக்கநாதரை வேண்டினார். கருத்தறிந்து முடிக்கும் கண்ணுதற் கடவுளும் அன்றிரவு அவர் கனவில் தோன்றி, `நாம் பொற் றாமரைத் தடாகத்தின் ஈசான்ய பாகத்தில் கங்கைக்குள் இருக்கிறோம். நம்மை எடுத்துப் பூசிப்பாயாக' என அருளினார். அவ்வண்ணமே மறுநாள் காலையில் பெருமானின் கருணையை வியந்து போற்றிப் பொற்றாமரைத் தடாகத்தில் மூழ்கினார். ஷ்ரீ சொக்கநாதப் பெருமான் கண்ணுக்கினிய பொருளாகத் தமது கரத்தில் வரப்பெற்றார். `ஆசாரியன் மூலமாகத் தீகை்ஷ பெற்றுத்தானே சிவபூசை புரிதல் வேண்டும்; ஆசாரியன் வேண்டுமே; சிவஞான உபதேசம் பெறவேண்டுமே; எப்படிப் பூசையைப் புரிவேன்! என்ற எண்ணம் தோன்றவே, அது பற்றி இறைவனிடமே முறையிட்டார்.

    ஞானாசாரியனை அடைதல் :
    வேண்டத்தக்கது அறிந்து வேண்ட முழுதுந் தருவோனாகிய சொக்கநாதப் பெருமான் மறுநாள் கனவில் எழுந்தருளி `திருக்கயிலாய பரம்பரை - திருநந்தி மரபு மெய்கண்ட சந்தான வழியில் திருவாரூரில் விளங்கும் கமலை ஞானப்பிரகாசர் என்ற ஆசாரியரிடத்தில், வருகிற சோமவாரத்தில் ஞானோபதேசம் பெற்று நம்மைப் பூசிப்பாயாக' என அருளினார் அன்றிரவே கமலை ஞானப்பிரகாசர் கனவிலும் எழுந் தருளி, `ஞானசம்பந்தன் வருகிற சோமவாரத்தன்று வருவான்; அவனுக்கு ஞானோபதேசம் செய்து சிவபூசையும் எழுந்தருளுவிப் பாயாக' என்று அருளினான். ஞானசம்பந்தர் பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு திருவாரூர் சென்று, பூங்கோயிலில் உள்ள சித்தீச்சரம் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் அமர்ந்திருந்த கமலை ஞானப் பிரகாசரைக் கண்டார். காந்தம் கண்ட இரும்புபோல ஆசாரியரால் ஈர்க்கப்பட்டார். சமய விசேட நிர்வாண தீகை்ஷகளால் பாச ஞானம் பசுஞானங்கள் நீங்கிப் பதிஞானம் கைவரப் பெற்றார். சொக்கநாதப் பெருமானை ஆன்மார்த்த பூஜாமூர்த்தியாகப் பூசிக்கப்பெறும் பேற்றையும், ஞான அநுபூதியையும் அடைந்தார்.

    கைவிளக்குப் பணிவிடை :
    பன்னாளும் ஆசாரியப் பணிவிடை செய்து தங்கி இருக்கும் நாள்களில் ஒருநாள் தியாகராசப் பெருமானின் அர்த்தயாம பூசையைத் தரிசித்து ஆசாரியர் தமது மாளிகைக்கு எழுந்தருளினார். அப்பொழுது கைவிளக்குப் பணியாளன் உறங்கிவிட ஞானசம்பந்தர் தமக்கு ஞான ஒளியேற்றி நல்வழிகாட்டிய ஞானாசாரியருக்கு ஒளிவிளக்கு ஏந்தி முன்சென்றார். திருமாளிகையின் வாயில் முன்னர்ச் சென்றவுடன், சிவாநுபூதியிலேயே திளைத்திருந்த ஞானப்பிரகாசர், அருள்நிலை கைவரும் பக்குவத்திலிருந்த ஞானசம்பந்தரை `நிற்க' எனக் கட்டளை யிட்டு உட்சென்றார். ஆசாரியர் பெற்ற சிவாநுபூதியை ஞான சம்பந்தரும் கைவரப் பெற்றவராய் மாளிகை வாயிலில் கைவிளக்கு ஏந்தியவராகவே நின்றார். ஞானசம்பந்தரின் பெருமையை ஞாலம் அறியச்செய்து அதன்மூலம் சைவப் பயிர் தழைக்க இறைவன் திரு வுளம் பற்றினான் போலும். அன்றிரவு பெருமழை பெய்தது. சிவாநு பூதியில் திளைத்திருந்த ஞானசம்பந்தர் மீது ஒருதுளி மழை கூடப்பட வில்லை. விளக்கோ அணையாது சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டு இருந்தது.

    குருஞானசம்பந்தராயினார் :
    வைகறைப் பொழுதில் ஞானப்பிரகாசரின் பத்தினியார் சாணம் தெளிக்க வருங்கால், ஞானசம்பந்தர் அநுபூதி நிலையில் நிற்பதையும், விளக்குச் சுடர்விட்டுப் பிரகாசிப்பதையும் கண்டு உட் சென்று பதியிடம் வியப்புடன் அதனை வெளியிட்டார். ஞானப் பிரகாசர் விரைந்து வந்து பார்த்து, ஞானசம்பந்தரிடம் திருவருள் பெருகுகின்ற நிலையைக் கண்டு மகிழ்ந்து "ஞானசம்பந்தா! நீ ஆசாரியனாக இருந்து, பக்குவம் உடையவர்களுக்கு ஞானோப தேசம் செய்து ஆசாரியனாக விளங்குவாயாக" என்று அருளினார். அப்பொழுது ஞானசம்பந்தர்,

      கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்டதுண்டோ
      எனக்கும் உடற்கும் எனதிச்சை யோஇணங் கார்புரத்தைச்
      சினக்குங் கமலையுள் ஞானப்ர காச சிதம்பரஇன்
      றுனக்கிச்சை எப்படி அப்படி யாக உரைத்தருள.

    என்ற பாடலைப்பாடி "எங்குச்சென்று எவ்வாறு இருப்பேன்" என்று விண்ணப்பிக்க, ஞானப்பிரகாசர், "மாயூரத்தின் ஈசான்ய பாகத்தில் வில்வாரணியமாய் உள்ளதும், திருக்கடவூரில் நிக்கிரகம் பெற்ற எமதருமனுக்கு அநுக்கிரகம் செய்ததும் ஆன தருமபுரத்தில் இருந்து கொண்டு, அன்பு மிக உண்டாய், அதிலே விவேகமுண்டாய், துன்ப வினையைத் துடைப்ப துண்டாய், இன்பம் தரும் பூரணத்துக்கே தாகமுண்டாய் ஓடி வருங்காரணர்க்கு உண்மையை உபதேசித்துக் குருவாக விளங்குவாயாக" என்று கட்டளையிட்டருளினார். ஞான சம்பந்தர், "குருஞானசம்பந்தர்'' ஆயினார்.

    தருமபுரத்தில் ஆதீனம் கண்டார் :
    ஆசிரியர் ஆணையை மறுத்தற்கு அஞ்சியவராய்க் கன்றைப் பிரிந்த பசுப்போல வருந்தும் குருஞானசம்பந்தரை நோக்கிக் "குருவாரந்தோறும் வந்து நம்மைத் தரிசிப்பாய்" என்று தேறுதல் கூறினார் ஞானப்பிரகாசர். குருஞானசம்பந்தர் தம் குரு ஆணையைச் சிரமேற்கொண்டு தமது ஆன்மார்த்த மூர்த்தியுடன் தருமபுரத்திற்கு எழுந்தருளி, தருமபுர ஆதீன மடாலயத்தை நிறுவியருளினார். ஞானாநுபூதியில் திளைத்துப் பல பக்குவ ஆன்மாக்களுக்குச் சிவஞானோபதேசம் செய்து அநுபூதிச் செல்வராய்த் திகழ்ந்தார். அவர் அநுபூதியில் பொங்கித் ததும்பிப் பூரணமாய் எழுந்த சிவஞானப் பேரருவியே சிவபோக சாரம், சொக்க நாத வெண்பா, முத்தி நிச்சயம், திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல், சோடசகலாப் பிராசாத ஷட்கம், சொக்கநாதக் கலித்துறை, ஞானப் பிரகாசமாலை, நவமணிமாலை ஆகிய எட்டு நூல்கள் ஆகும். பாடல்கள் எளிமையும், இனிமையும் பயப்பனவாய், பதி, பசு, பாசம் என்ற முப்பொருளுண்மையைத் தெளிய விளக்குவனவாய் உள்ளன.

    ஆனந்த பரவசருக்கு உபதேசம் :
    குருஞானசம்பந்தர் தம்மை அடைந்த பக்குவமுடையவர்களுக்கு உபதேசித்து அநுபூதிமானாக விளங்கும்போது, உபதேச பரம்பரையை வளர்த்துவர அதி தீவிர பக்குவ நிலையிலிருந்த ஆனந்த பரவசருக்கு உபதேசித்துத் தாம் ஜீவசமாதி கூடியருளினார்கள். அதிதீவிர நிலையில் இருந்த ஆனந்தபரவசர் தமது குருநாதர் உபதேசித்த ஞானநிலை விரைவில் கூடியவராய், தம் ஞானாசாரியர் ஜீவசமாதி கூடிய ஷ்ரீ ஞானபுரீசுவரர் ஆலய விமான ஸ்தூபியைத் தரிசித்தவாறு நிட்டை நிலை கூடினார்கள்.

    மீண்டும் எழுந்தருளினார் :
    அதுகண்ட ஏனைய சீடர்கள் குருமரபு விளங்க வேண்டுவதை ஆசாரியர் திருமுன் சென்று விண்ணப்பிக்க, பரமாசாரிய மூர்த்திகள் ஜீவசமாதியினின்றும் எழுந்து வந்து ஸ்ரீ சச்சிதானந்த தேசிகருக்கு உபதேசம் செய்து அநுபூதிநிலை வருவித்து ஞானபீடத்து இருத்தி வைகாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சப்தமி திதியில் தாம் முன்போல் ஜீவ சமாதியில் எழுந்தருளினார்கள்.

    தருமை ஆதீனப் பணி :
    கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ குருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப் பெற்ற இத்திருத்தருமை ஆதீனம் அதுமுதல் வழி வழியாக விளங்கி, மொழித் தொண்டும், சமயத் தொண்டும், சமூகத் தொண்டும் ஒல்லும் வகையெல்லாம் ஆற்றி வருகிறது. இப்பொழுது ஞானபீடத்தில் இருபத்தாறாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் எழுந்தருளியிருந்து அருளறப் பணிகள் பல இயற்றி அருளாட்சி புரிந்து வருகிறார்கள்.

    வாழ்க தருமை ஆதீனம்! வளர்க குருபரம்பரை!
    ஆய்வார் பதிபசு பாசத்தின் உண்மையை ஆய்ந்தறிந்து
    காய்வார் பிரபஞ்ச வாழ்க்கையெல் லாங்கல்வி கேள்வியல்லல்
    ஓய்வார் சிவானந்த வாரியுள் ளேயொன் றிரண்டுமறத்
    தோய்வார் கமலையுள் ஞானப்ர காசன்மெய்த் தொண்டர்களே.
    ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்
    நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீ சீ
    சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்
    மனமே உனக்கென்ன வாய்.
          - குருஞான சம்பந்தர்.

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home