Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai > Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > ஹாஸ்ய மஞ்சரி S.P.S.K.காதிறு சாகிபவர் இயற்றியது

hasya manjari
by SPSK Kathir Sahib


ஹாஸ்ய மஞ்சரி
S.P.S.K.காதிறு சாகிபவர் இயற்றியது


Acknowledgements:
This small piece of humourous work by SPSK Kathir Sahib was first published in 1898.
Our sincere thanks to the Tamil Heritage Foundation for providing us with a scanned image version of this work and permission to publish this machine-readable version of the etext as part of Project Madurai collections. PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai
We thank the following for their help in the preparation of this etext:
Ms. Deeptha, S. Karthikeyan, V.S. Kannan, V. Govindan, V. Devarajan and S. Govindarajan.
� Project Madurai 2007. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


ஹாஸ்ய மஞ்சரி.
இஃது பினாங்கு
S.P.S.K.காதிறு சாகிபவர்களால் இயற்றி,
M.C.முகம்மது காசீமவர்களது
"வச்சிர குயிலி" அச்சியந்திர சாலையிற் பதிப்பிக்கப் பட்டது.
1898 ம் வருடம்.


ஹாஸ்ய மஞ்சரி.

1-வது - தம்பி என்று கூப்பிட்டதற்கு மயிராண்டி என்று முடித்தது.

2-வது - மணியமுதல் மரகதக்கல் பரியந்தம் கேள்வியும் ஜவாப்பும்.

மணியம் - என்ன மணியம்? பட்டாமணியம்
என்ன பட்டா? கட்டுப்பட்டா,
என்ன கட்டு? விரகு கட்டு,
என்ன விரகு? புளிய விரகு,
என்ன புளி? பழம் புளி,
என்ன பழம்? மாம்பழம்,
என்ன மா? நெல்லுவருத்த மா,
என்ன நெல்லு? சம்பா நெல்லு,
என்ன சம்பா? முத்துச் சம்பா,
என்ன முத்து? கொட்டை முத்து,
என்ன கொட்டை? மிந்திரிக்கொட்டை,
என்ன மிந்திரி? கொடிமிந்திரி,
என்ன கொடி? அருணாள்கொடி,
என்ன அருணாள்? வெள்ளி அருணாள்,
என்ன வெள்ளி? சக்கரை வெள்ளி,
என்ன சக்கரை? ஜீனி சக்கரை,
என்ன ஜீனி? குதிரை ஜீனி,
என்ன குதிரை? பாராசாரிக் குதிரை,
என்ன பாரா? சோத்துப்பாரா,
என்ன சோரு? கள்ளிச் சோரு,
என்ன கள்ளி? திருகு கள்ளி,
என்னதிருகு? வாளித்திருகு,
என்ன வாளி? தீவாளி,
என்ன தீ? அடுப்புத்தீ,
என்ன அடுப்பு? கோட்டையடுப்பு,
என்ன கோட்டை? பட்டுக்கோட்டை,
என்ன பட்டு? செங்கல்பட்டு,
என்ன செங்கல்? பச்சைச்செங்கல்
என்ன பச்சை? மரகதப்பச்சை.

3-வது-நாட்கடோரும் நடைபெரும் ஸெஷன்கேஸ்.

செய்யும் தொழிலையுடையது கைகளாதலால் கைகளுக்கெல்லாம் செய்யூரார் என்று பெயர் இந்தச் செய்யூரார் கத்திபாக்கத்தாரைக் கொண்டு கழணிவாசலுக்குப்போய் நெல்லுராரை அறுத்து கட்டாகக் கட்டி களத்தூரில் போட்டு அடித்தார்கள், பிரகு அவர்களை எடுத்துக் கொளத்தூரில் அலம்பி நெருப்பினாரிடத்தில் வைத்து எரிக்கவே புறப்பட்டார்களையா!
தளபுளவென்றுகொதித்து கஞ்சிபுரத்தாரோடு சோத்துப்பாளையத்தார் உடனே அவர்களுக்கு ஒத்தாசையாக வாழைப்பந்தலார், வழுதலம்பேடார், கருனையூரார், சேமங்கலத்தார், மாங்காட்டார், துவரங்குருச்சியார், பலாப்பத்தூரார், புளியங்குடியார், தென்னங்குடியார், பாலூரார், நெய்யூரார், கடலூரார் முதலிய சில்லரைக் கிராமத்தார் ஒன்றாகச் சேர்ந்துக்கொண்டு வந்தார்களாம்.
அப்பால் செய்யூரார் இவர்கள் எல்லோரையும் தின்னனூரா ராகச்செய்ய வேண்டுமென்று திருவாய்ப்பாடியாரிடம் விடுக்க அவர்கள் பல்லாவரத்தாரை லாயர்களாக வைத்துக்கொண்டு நாவலூராராகிய ஜட்ஜினிடம் விட்டார்களாம்.
அந்த நாவலூரார் தீர்மானம் செய்ய முடியாமல் தொண்டை மண்டலத்தாரிடம் அப்பீலுக்கு அனுப்ப, அவர்களும் முடியாமல் ஸ்பெஷலுக்கு வயித்தீச்வரன் கோயிலாரிடம் அனுப்பினார்கள்.
கடைசியில் அந்தக்கோவிலார் அவர்களை யெல்லாம் அன்று இராத்திரி முழுதும் ஜெயிலில் போட்டு வைத்து காலமே இரண்டு பம்பூஸ்களுடன் ஸேஷன் சமிட் செய்யவே குப்பைக்காட்டார் பிடித்துக் கொண்டு இப்போதும் தண்ணீர்மேலே ஏற்றிக்கொண்டு வருகிறார்கள்.

4-வது- ஐந்துவிரல்களின் சண்டையும் அதின் தீர்ப்பும்.

ஒருநாள் ஒருவனுடைய ஐந்து விரல்களும் ஒன்றோடொன்று தானே பெரிதென்று சண்டை போடுகையில் விரல்களுக்குடைய மனிதன் ஒவ்வொரு விரல்களையும் பார்த்துக் கேட்கின்றான்.
"ஹேபெருவிரலே! நீயெப்படிப் பெரியவனென?"
"அது ஐயா! நான் பொடிபோடுவதற்கு உபயோகப் படுகிறதினால் நானே பெரிது" என்றது.
பிறகு அதற்கடுத்த விரலைக் கேட்கையில், அது "சுவாமி! நான் தங்களுக்குத் தெரியாதவிடங்களை யெல்லாம்
இதோ! இது தான் என்று காட்டுவதினாலும் கோபத்தினால் நீர் அதட்டிப் பேசுகையில் நானும் கூட ஆடுகிறபடியாலும் நானே பெரிது" என்று சொல்லிற்று,
அப்பால் கடைசி விரலைக் கேட்கையில் அது "ஐயா! நான் நவரதன மிழைத்த மோதிரங்களை அணிவால்
நானே பெரிது" என்றது.
உடனே அதற்கடுத்ததைக் கேட்கையில் அது "ஐயனே! கடைசிவிரலைப்போல் மோதிரங்கள் அணிவதிலும்
பெரிய மோதிரங்கள் நான் அணிவதால் நானே பெரிது" என்றது.
கடைசியில் நடுவிரலைக் கேட்கையில் அது "எஜமானே! நான் பெரிதென்பதற்கு இவர்களைப் போல காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை ஏனென்றால், என்னை அவர்களோடு நிறுத்திவைத்துப் பார்த்தால் யார்
பெரிதாயிருக்கிற தென்பது தெரியு"மென்றது.


5-வது-பன்னிரண்டு மாதங்களைப் பற்றிய கதை.

கார்த்திகை யென்று பெயரை யுடைய ஒரு பெண்ணுக்கு மன்மத பானத்தினால் (மார்கழி) மார்கிழிந்து போச்சுதாம்.
அப்போது அவள் ஒரு புருஷனைப்பார்த்து அப்பா இதை (தை) தை என்று சொல்ல, அந்த புருஷன் அடி பெண்ணே! இதை
தைத்தால் (மாசி) குற்றமாகிற அடையாளம் உண்டாகுமே என்றான். அப்போது அந்தப் பெண் எப்படியாகிலும் தைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ள அவன் அப்படியானால் அது விஷயத்தில் (பங்குனி) நீயொரு பங்காயிருக்கவேண்டுமென அப்படியே ஆகட்டுமென்று அவள் ஒப்புக் கொள்ள இருவரும் ஒரு (சித்தரை அல்லது சித்திரை) சிறுஅரையில் நுழைந்தார்கள். உள்ளே போனவுடன் அவள் (வைகாசி) காசிகொடுவென அந்தப் புருஷன் (ஆணி) ஆ! நீ யென்று ஆச்சரியமடைந்துநிற்க அந்தப் பெண் (ஆடி) ஆடியென்ன செய்யலாம் துட்டுக்கொடுத்தால் காரியம் நடக்குமென ஆடியே! (ஆவணி) ஆ-ஆச்சரியமுள்ள, அணி ஆபரணங்கள் தருகிரேனென்றான். அந்தப்பெண்ணும் அதைப்பொய்யென்று நினைத்து (புரட்டாசி) புரட்டா! சீ! யென்று வைது நிந்திக்கவே, அந்தப் புருஷன் கோபங்கொண்டு (அற்பசி) அற்ப முள்ளவளே! சீ! யென்று போய்விட்டான்


6-வது-சந்தியாவந்தனக் கதை.

ஓர் கிராமத்தில் அஸ்மஞ்சனென்றொரு பிராமணனிருந்தான். அவனுக்கு குமுதவல்லியென்றொரு பெண் உண்டு. அந்தப் பெண்ணை அடுத்த கிராமத்திலிருக்கும் ஒரு ஏழையாகிய சாமு என்பவனுக்கு விவாகஞ் செய்து கொடுத்து சோபனமும் ஆய்விட்டது.
ஒரு நாள் கிராமத்தாரில் சிலர் இவனைப்பார்த்து 'அல்லுடு! அல்லுடு! சந்தியாவந்தனத்துக்கு வருகிறீரா என்று கூப்பிட்டார்கள். ஆனால் இவனுக்கு சந்தியாவந்தனமென்றால் இப்படிப்பட்டது என்பது தெரியாமலிருந்தாலும் கவரவத்திற்காக அவர்களுடன் வருகிறேனென்று ஒப்புக்கொண்டு கூடவே குளக்கரைவந்து சேர்ந்தான்.
அங்கு வந்தவுடன் எல்லோரும் மலபாதைக்குப்போக வேண்டி கிரமப்பிரகாரம் தலையில் துணியைக் கட்டி காதில் பூனூலை மாட்டிக்கொண்டு செடிமரைவில் போய் உட்கார்ந்தார்கள். இந்தச் சாமும் மலபாதைக்குப் போவதே சந்தியாவந்தனமென்று எண்ணித் தானும் ஒரு செடிமரைவிலுட்கார்ந்து மலபாதை நீக்கி கைகால் கழுவிக்கொண்டு எல்லோருக்கு முன்னமே கரையில் வந்து உட்கார்ந்தான். கூடவந்தவர்கள் சந்தியாவந்தனங்களை முடித்துக்கொண்டு அல்லுடு சந்தியாவந்தனமாச்சுதா? என்று கேட்க இந்த மடையனும் மருமகன்.ஆய்விட்டது என்றான். உடனே எல்லோரும் வீட்டுக்குப் போய் விட்டார்கள்.
மருநாள் காலையில் இவன் தன் கிராமத்திற்குப் போக நிச்சயித்திருப்பதைக் கண்ட மாமன் மாமி இருவரும் அன்று இராத்திரி ஒரு விருந்து செய்தார்கள். அதில் போளி, ஆமைவடை, மசால்வடை, உளுந்து வடை, முருக்கு, ஓமப்பொடி, காராபூவந்தி, லட்டு, ஜிலேபி, பேணி, அல்வா, பாயசம், மோர்க்குழம்பு பத்துவிதம் கறி, எட்டுவிதம் பச்சடி, ஆறுவிதம் சட்ணி, அப்பளம் முதலானவைகளை தடபுடலாகச் சமைத்து மன்னார்சாமிக்குப் பலிகொட்டுவது போலப்படைக்க வயிறு தெரியாமல் தின்றுதேக்கிட்டு பெருமூச்சுவிட்டு இரவுபடுக்கை அறையில் தன்மனைவியுடன் படுத்துக்கொண்டான்.
சுமார் பன்னிரண்டு மணிக்கு வயிறு களபுளவென்று அலையவே பக்கத்தில் படுத்திருந்த பெண்சாதியை எழுப்பி அடி! அடி! சந்தியாவந்தனத்துக்கு சகிக்க கூடாமல் வருகின்றதடி ஐயையோ இதோவந்து விட்டது என்று தட்டித்தடுமாறி குதித்துக் குதித்து திண்டாடி நின்றான். இவள் இதென்ன விந்தை! சந்தியாவந்தனத்துக்கு வருகிறதென்றால் ஒன்றும் புரிய வில்லையே! ஒரு வேளை சந்தியாவந்தனம் செய்ய மரந்து இப்போ நினைத்துக்கொண்டாரோ என்னமோ தெரியவில்லை என்று ஒரு சொம்பு நிறைய ஜலத்தையும் ஒரு சிறிய சொம்பையும் சந்தியாவந்தனம் செய்த ஜலம் கீழே சிந்தாமலிருக்கும் படியாக ஒரு தாம்பாளத்தையும் கொண்டு வந்து வைத்து விட்டு நித்திரை போயினள்.
இவனும் அவசரம் பொருக்க முடியாமல் தட்டில் மலத்தைப் போக்கி சோம்பிலிருக்கும் ஜலத்தால் கால் கழுவிக்கொண்டு வந்து படுத்துக்கொண்டான்.
சுமார் ஐந்து மணிக்கு இந்தப்பெண் வீடுகளை விளக்கிக் கொண்டு வரும்போது அங்கு தாம்பாளம் இருப்பதைப் பார்த்து ஓகோ! இது நம் புருஷன் சந்தியாவந்தனம் செய்த ஜலமல்லவா! இதைக் காலில் படாத இடத்தில் கொட்டவேண்டுமென்று வாசலில் வைத்திருந்த துளசி மாடத்தில் கொண்டுபோய் கொட்டி தாம்பாளத்தை ஓர் அரையில் போட்டுவிட்டாள்.
பத்து மாதமாய் தீக்ஷயினால் தலை வளர்த்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணினுடைய தந்தையாகும் அஸ்மஞ்சன் சுத்திக்காக ஒரு பிடி மண் அந்த துளசிமாடத்திலிருந்து தலையில் எடுத்து வைத்துக்கொண்டு ஸ்நானத்துக்குப் போவது வழக்கம்.
அதே பிரகாரம் அன்றைக்குந் தெரியாமல் அந்த மலத்தில் ஒரு உருண்டையை உருட்டி தன்னுடைய மயிர்த்தலையில் வைத்து அதின் மேல் பூஜை மூட்டையை வைத்துக்கொண்டு ஸ்நானத்துக்குச்சென்று மூட்டையை குளக்கரையில் வைத்துதான் மலபாதைக்கு போய் காலலம்பி இடுப்பளவு ஜலத்தில் நின்று உடம்பழுக்கைத் தேய்த்து ஸ்நானம் செய்ய எத்தனித்து ஹர ஹர சம்போ சிவ என்று ஜலம் பிரோக்ஷிகையில் பொத்தென்று மலம் தண்ணீரில் விழ அதை எடுத்து மோந்து மலமென்னறறிந்து வீட்டுக்கு வந்து துளசிமாடத்தைப் பார்த்து இதென்ன வென்று கேட்க, உடனே மகள் தன் புருஷன் சந்தியாவந்தனம் பண்ணிட்ட ஜலத்தைத் தான் கொட்டினதாகத் தெரிவிக்கவே பக்கத்திலிருந்த சாமு, அடாடா! டடட்டடாடா! டாடாடடாடா! மாமா! ஐயையோ! உம்முடைய பெண்ணி்ன் மூடத்தனத்தைப் பார்த்தீரா! நான் இராத்திரி சந்தியாவந்தனத்துக்குப் போனதை இங்கே கொட்டிவிட்டாளே என்றான்.
உடனே அஸமஞ்சன் மருமகன் யோக்கியத்துக்கு மெச்சி தடியடிகளால் பூஜைசெய்து ஊருக்குக் கழுத்தில் கையை வைத்து இரண்டு மூன்று கல்தா சம்மானம் பண்ணியனுப்பிவிட்டான்


7--வது - கணவனை விட்டுப் பரபுருஷனைத் தேடி அவமானமடைந்த கதை.

மச்சராச்சியம் என்னும் ஓர் தேசத்தில் கச்சிநாதன் என்றொரு அரசன் இருந்தான் அவனுக்கு வச்சிராங்கி என்னும் அதிக ரூபலாவண்ணியமுள்ள மனைவியிருந்தாள். அவள் கற்பு நீக்கமே சிறந்த அறமாக மதித்த ஓர் புண்ணியவதி அவள் நெடிநாளாக அவ்வூர் இராஜமாளிகை காப்போனாகிய முத்து நாய்க்கனிடம் விருப்பங்கொண்டிருந்து, ஓர் நாள் இரவு பதினைந்து நாழிகைக்குமேல் தனது வீட்டிலிருந்த சொத்துக்களில் சிலவற்றைச் சுருட்டிக்கொண்டு மேற்படி கள்ளபுருடனையும் இட்டுக் கொண்டு பிரதேசம் செல்வாளாயினாள்.
போகும் வழியிலே ஓர் ஆறு எதிர் இருந்தது. அவ்வாற்றை நீந்திச் செல்ல முயன்று அம்முத்து நாய்க்கன் வச்சிராங்கியைப்பார்த்துப் பெண்ணே! இவ்வாற்றைத்தாண்ட வேண்டியிருப்பதினாலே உன்னுடைய ஆபரணங்கள் வஸ்திரங்கள் எல்லாவற்றையும் கழட்டிக் கொடு அக்கரையில் வைத்து விட்டு வந்து உன்னை கூட்டிப்போகிரேன் என்று கூற, இவள் அவன் பேச்சை நம்பி ஆடையாபரணாதிகள் யாவும் கழற்றிக் கொடுத்து விட்டு அம்மணமாய் நின்றாள். அம்முத்து நாய்க்கனாவன் இச்சொத்துக்களையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஆற்றைத்தாண்டி ஓடிப் போய் விட்டான்.
இம்மாது சிரோன்மணி சிறிது நேரம் நின்று, போன கள்ளப்புருடன் மீண்டும் வராமையைப்பார்த்து இவ்விடம் இனி நிற்றல் தகுதியன்று; மானபங்கம் வந்துவிட்டது, என்ன செய்வேன், தெய்வமே! பரபுருஷனை விரும்பி வந்ததினாலல்லவா? இந்த அவமானம் நேரிட்டதென்று துக்கித்து அவ்வாற்றினடுவில் போய் நின்றுக் கொண்டாள்.

அங்கு ஓர் தந்திர முள்ள குள்ளநரி யானது மாமிசத்துண்டைக் கவ்வி ஓடிவந்து அவ்வாற்றின் கண்ணே ஓடும் மீனைப் பார்த்து மாமிசத்தை விட்டு ஆற்றில் குதித்து மீன் பிடிக்கப் போயிற்று, அப்போறு கருடன் மாமிசத்தைக் கவ்வி ஓடினான். மீனும் தப்பி விட்டறு, இந்தத் தந்திர நரி "வாய்த் தவிடும் போய் அடுப்பு நெருப்பு மிழந்தவன்" போல ஆகாயத்தைப் பார்த்து நின்றது. அப்போறு ஆற்றில் நிற்கும் வச்சிராங்கியானவன் கேட்கின்றாள். "சம்புவே! யென்ன புத்தி! சலந்தனின் மீனை நம்பி, வம்புறுவடத்தைப்போட்டு வானத்தைப் பார்ப்பதேனோ?"
அதாவது ஓ! தந்திர முள்ள குள்ளநரியே! சலத்தின் கண்ணே வசிக்கின்ற ஓர் அற்ப மீனை நம்பி மிகவும் இனிப்பு பொருந்திய மாமிசத்துண்டை இழந்று மானம் பார்க்கின்றாயே! என்ன புத்தி? என்றனள்.

அதற்கு நரி சொன்னதாவது "அம்புவி மாதே! கேளாய்! அரசனயைகலவிட்டு வம்பனைக் கைபிடித்தவாறு போலாயிற்றன்றே!" அதாவறு, மச்ச தேசத்து அரசியே! நீ சொல்வது சரியே, நான் சொல்வதைச் சிறிறு செவி கொடுத்றுக் கேட்பாயாக அழகும் கல்வியும் நிறைந்த மச்ச தேசத்தை அரசாட்சி செய்யும் உனது பத்தாவை விட்டு ஓர் *றுனமார்க்கனை சேரக் கருதி அவனை றுணைப்பற்றி வந்து மானபங்கம் அடைந்து ஆற்றின் கண்ணி ந்கிறாயே! அந்தக் கதி யானும் அடைந்தேன் என்றதாம். அது கேட்டு அவள் திடுக்கிட்டு, ஆ! ஆ! ஓர் அற்ப நரியினிடம் நாம் அவமானச்சொல் கேட்கவேண்டிய தாயிற்றே என உயிர் இழந்தாள்.
-----

8வது - பிரற்மேற் குற்ற முறைத்து ஏமாந்தவர்களின் கதை

ஜர்மானிய தேசத்தில் வெகு ஐசுவரியவானான ஓர் பிரபு இருந்தார். அவர் ஒரு நாளிராத்திரி தமது மாளிகைக் கெதிரே நடுப்பாதையில் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப்போட்டார். மறுநாள் காலையில் ஒரு வண்டிக்காரன் அவ்வழியே வண்டி கொண்டு கோபையில் கல்லைக்கண்டு. "இதென்ன, அனியாயம்! நடுப்பாதையில் கல்லை போட்டிருக்கிறார்கள் இந்த மாளிகையில் வாசம் பண்ணுகிறவர்களுக்கு புத்தியில்லையா! இந்தக்கல்லை ஒரு கரையில் ஆக்கக்குடாதா? இவர்கள் சுத்த சோம்பேரிகள், இவர்களுக்கு கருத்தும் கவனமும் இல்லவே இல்லை" என்று சொல்லி திட்டிக் கோண்டு போனான்

பின்பு ஒரு பாவலன் அவ்வழியே வந்தான். அவன் வெகு குசாலாய் உடுப்புகள் தரித்திருந்தான். அவன் கீழே பார்த்து நடவாமல், தலையை நிமிர்ந்து இனிதாய் பாடிக் கொண்டு வந்தான். வரவே, கல்லில் காலிடறி பக்கென்று விழுந்தான். அவனெழுந்து காலையும் கையையும் துடைத்துக்கொண்டு, கல்லை சுற்று முற்றும் பார்த்து "எந்த மடையன் இந்தக்கல்லை இங்கே போட்டான் இங்கே குடியிருக்கிறவர்களுக்கு இவ்வளவு புத்தியு முணர்வுமில்லையா இதென்ன பைத்தியம்" என்று சொல்லிவிட்டுப் போனான்.

அதற்குப்பின் சில வியாபாரிகள் சரக்குகளோடும் வந்தார்கள். அவர்கள் அந்தக் கல்லைக் கண்டபொழுது இருபவிஞ்சாக பிரிந்து அதன் பக்கங்களின் வழியாய் நடந்து போனார்கள். போகையில் ஒருவன் மற்றவர்களை நோக்கி, "நடுவழியில் இத்தக்கல் கிடக்கிறது எவ்வளவு தொந்தரவு ஒருவனும் அதை எடுத்து தூரப் போட்டானில்லையே" என்றான்.
மூன்று கிழமையாக அந்த கல் அப்படியே வழியில் கிடந்தது ஒருவரும் அதைப்புரட்டித் தள்ளவில்லை.
பின்பொருநாள் மேற்படி பிரபு தமது மாளிகைக்குச் சமீபமாக ஊரார் யாவரும் கூடும்படி விளம்பரம் பண்ணினார்.
அப்படியே அவர்கள் கூடினபொழுது மேற்படி வண்டிக்காரனும் வியாபாரியும் பிரபுவை நோக்கி, "சங்கை பொருந்திய பிரபுவே, உமது வேலையாட்கள் எவ்வளவோ அசமந்தர் அவர்கள் வழிமத்தியிலிருந்த இந்த கல்லை எடுத்துப்போடாதது எவ்வளவோ வெட்கமான காரியம்" என்க, பிரபு அந்த கல் கிட்டப்போய் நின்று, சனங்களை நோக்கி, "சிநேகிதரே, மூன்று வாரத்திற்கு முன் நானே இந்தக் கல்லை இங்கே போட்டேன். இந்த வழியே போனவர்கள் யாவரும் தங்கள் அயலாரைக் குற்றப்படுத்தினதேயன்றி தாங்களாக முயற்சி செய்து இந்த கல்லை நீக்க வில்லை" என்று சொல்லி குனிந்து அந்த கல்லை கிளப்பினார். கிளப்பவே, கல்லுக்குக்கீழ் ஒரு செப்பும் அதற்குள் ஒரு தோற்பையும் இருந்தது.
பிரபு அந்த பையை எடுத்து அதையாவரும் பார்க்கத்தக்கதாக உயர்த்திப்பிடிக்க, "இந்த கல்லை நீக்குகிறவனுக்கு இது இனாம்" என்று அந்த பையின் வெளிப்பக்கத்தில் எழுதி யிருந்ததை யாவரும் வாசித்தார்கள். பையை திறந்து தட்ட, அதற்குள்ளிருந்து ஒரு தங்க மோதிரமும் இருபது பவுனும் கீழே விழுந்தது.
அதைக்கண்டபொழுது ஒவ்வொருவரும் அடடா நான் கல்லை புரட்டினேனில்லையே, நான் புரட்டினேனில்லையே என்று சொல்லி, தங்களையே குற்றப்படுத்தி ஏமாந்து தங்களிருப்பிடங்களுக்குச் சென்றார்கள்.

9வது - சூரிய சந்திர வாயுக்கள் விருந்துண்ட கதை

ஒரு நாள் சூரியன், சந்திரன், வாயு இவர்களெல்லாம் தங்களுக்குச் சிற்றப்பனும் சிற்றம்மையுமாகிய இடி மின்னல்களுடனே ஓரிடத்திற்கு விருந்துண்ணப் போனார்கள். அவர்களுடைய தாய் (அதாவது ஆகாயத்தில் வெகுதூரத்திலே நமது கண்ணுக்குப் புலப்படுகிற நக்ஷத்திரங்களுள் ஒன்று) தனியே இருந்துகொண்டு தன் மக்கள் எப்போது திரும்பிவருவார்களோ வென்று அவர்கள் வரவை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். சூரியன் வாயு ஆகிய இருவரும் பேராசை கொண்டவர்களும் தன்னயம் பார்க்கிறவர்களுமாயிருந்தார்கள்.

வீட்டில் தாயொருத்தியிருக்கிறாளே, அவளுக்கு ஏதாவது ஒரு துளிகொண்டு போய்க்கொடுப்போமென்கிற எண்ணம் எள்ளளவுமில்லாமலே அந்தச் சூரிய வாயுக்கள் இருவரும் தங்களுக்கு அளித்த நல்விருந்தைத் தாங்களே திருப்தியாய்ப் புசித்துக் களிப்படைந்தார்கள்.
சாந்தகுணமுள்ள சந்திரனோ தன் தாயை மறக்கவில்லை தனக்குப் பரிமாறின ஒவ்வொரு பண்டத்திலும் சிறிது சிறிது பங்கெடுத்துத்தன் தாய்க்கு என்று ஒரு மூட்டையாகக் கட்டிவைத்துக் கொண்டான்.

மிகவும் பிரகாசமுள்ள தன் கண்களைக் கொட்டாமலே மலரவிழித்துக் கொண்டு நெடுநேரம் தன் மக்கள் வருகிற வழியையே பார்த்துக் கொண்டிருந்த தாய், அவர்கள் திரும்பி வீட்டண்டை வந்தவுடனே, "என் அருமைக்குழந்தைகாள்! நீங்கள் எனக்கு என்ன கொண்டு வந்தீர்கள்." என்று கேட்க, மூத்த மகனான சூரியன் "நான் ஒன்றும் உனக்காக வீட்டுக்குக் கொண்டு வரவில்லை. நான் என் நேசர்களோடு உல்லாசமாய் விருந்துண்ண போனேனேயன்றி தாய்க்குச் சோறெடுத்துக் கொண்டு வருவதற்கன்றே,' என்று சொன்னான்.

பின்பு வாயுவானவன்:"அம்மா! நானும் ஒன்றுங் கொண்டுவரவில்லை. விநோதத்திற்காக நான் எங்கேயாவது வெளியே போனால், அப்பொழுது நீ நமக்கு நல்லவுணவுகள் வந்து சேருமென்று ஒரு போதும் எதிர்பாராதே" என்று சொன்னான். கடைசியில் சந்திரன் "என் தாயே! ஏதாவது ஒரு ஏனங்கொண்டுவா. இதோ நான் கொண்டுவந்த பண்டங்களைப் பார்" என்று சொல்லி தன்கைக் குட்டையில் கட்டி வைத்திருந்ததை அவிழ்த்துக் காட்டினான். அதிலிருந்தவை யெல்லாம் அவள் ஒருநாளும் கண்டிராத சிறந்த வாசனையும் ருசியுமுள்ள இனிய பண்டங்களாயிருந்தன.

அதைப்பார்த்த வுடனே தாய் நக்ஷத்திரம் சூரியனை நோக்கி : அடா! நீ உன் விநோதத்தையே பெரிதாய் நாடி வீட்டில் தாய் ருத்தி இருக்கிறாளே யென்கிற எண்ணமே யில்லை, உன் வயிற்றை மாத்திரம் நிரப்பிக்கொண்டு களித்து வந்ததினால், இன்று முதல் உன் கிரணங்களெல்லாம் நெருப்புப்போல் வெப்ப முடையவைகளாகவும் எதையும் எரித்துப் போடத்தக்க தன்மையுடையவைகளாகவும் ஆகக்கடவன்: உன் கொடுமையைக் கண்டு யாவரும் உன்னைப் பகைக்கக்கடவர்கள், உன்னைக் கண்டவுடனே‍ எல்லோரும் தலையை மூடிக்கொள்ளக் கடவர்கள் என்று சாபமிட்டாள். அதனாலே தான் சூரியன் நாளைக்கும் கொடிய வெப்பமாய் எரிக்கிறான்.

அதன் பின்பு அவள் வாயுவை நோக்கி : உன் கோலாகாலத்திலும் கொந்தளிப்பிலும் நீ சிறிதேனும் என் நினைவேயில்லாமல் என்னை மறந்து போனாயல்லவா? ஆகையால் எதையும் எரிக்கிற கிரீஷ்ம காலத்திலேயே நீயும் வெப்பமாய் வீசத்தலைப்பட்டு எந்த பிராணியையும் வதக்கிக் கொளுத்தக்கடவை; அதனால் உன்னை எவரும் அருவருத்துத் தடுக்கக்கடவர்கள் என்று ஆணையிட்டாள். அதனாலே தான் கோடை காலத்தில் தீக்காற்று மிகவும் நாம் வெறுக்கத்தக்கதாயிருக்கின்றது

அவள் கடைசியாய்ச் சந்திரனை நோக்கி என் அருமைக் குழந்தாய் நீ சுகமனுபவிக்குங் காலத்திலும் உன் தாயை மறவாமல் அவளுக்கும் உன் உணவிற் சிறிது பங்கு கொண்டு வந்ததனால் இது முதல் நீ எப்போதும் குளிர்ந்த குணமும் சாந்தமும், ஒளியும் பொருந்தி யிருக்கக்கடவை மிகவும் தெளிவான உன் கிரணங்களோடு விஷத்தன்மையுள்ள கிரணம் ஒன்றும் சேராது பிராணிகள் உன்னை எப்போதும் குளிர்ந்தவன் என்று கொண்டாடக்கடவர்கள் என்று வாழ்த்தினாள். இதுதான் சந்திரகிரணம் எக்காலத்திலும் அழகாயும் சீதமாயும் யாவரும் நேசித்துக் கொண்டாடத் தக்கதாயும் இருப்பதற்குக் காரணமாம்.

ஹாஸ்ய மஞ்சரி முற்றிற்று
-------

அங்கிலேய முஹம்மதிய வித்தியா சாலை.

இப்பெயர் புனைந்த அங்கிலேயப் பாட சாலையொன்று நம் முஸ்வீம் பிள்ளைகள் அங்கிலேயக் கல்வி கற்றுத் தேர வேண்டியும், முஸ்லிம்களுக்கோர் அங்கிலேயப் பாடசாலை உண்டென மற்ற மதத்தவர்கள் மதிக்கவும், 1898ம் வருடம் மே மாதம் 1 ஆம் தேதி முதல் பினாங்கு சோலியா ஸ்திரீட் 130ம் நம்பர் "டைமன் சூபிலி" மூன்றாவது மெத்தையிற் திறந்திருக்கிறது.
இப்பாடசாலைக்காக அங்கிலேயக் கல்விகேள்விகளிற்தேர்ந்த Mr.தைரியல் நாயகரவர்களை ஹேட்மாஸ்டராயும் கல்கத்தா பிரவேசப் பரிட்சையிற்தேரிய Mr.வைரமுத்று என்பவரை உபாத்தியாயராகவும் நியமித்திருக்கின்றன. கவர்ன்மென்ட் ஸ்கூல்களைப் போல் நான்கு வகுப்பு வைத்து பிள்ளைகளை சோதனை பார்க்கப்படும்.
ஆகையால் ஒவ்வொரு முஸ்லிம்களும் தங்கள் தங்கள் பிள்ளைகளை இப்பாடசாலைக்கனுப்பி முஸ்லிம் பாடசாலை என்ற பெயர் வளர்ந்தோங்கச் செய்வீர்க ளென்று மிகவும் கேட்டுக்கொள்கிறேன்.
சம்பள விகிதம்
முதலாமிரண்டாம் வகுப்புகளுக்கு மாதம் 1க்கு காசு 50
மூன்றாம் வகுப்புக்கு காசு 75 நான்காம் வகுப்புக்கு டாலர் 1-00

Penang, 25-4-98
இங்ஙனம் / M.G.Mohammad casim,Manager
---
விளம்பரம்.

"வச்சிர சூபிலி" அச்சியந்திர சாலை.

இவ்வச்சியந்திர சாலையில் இங்கிலீஷ், தமிழ் மலாய் இப்பாஷைகளினால் நானாவிதப் புத்தகங்கள், பிரசித்தப் பத்திரிகைகள், விஞ்ஞாபனங்கள் மனுவர்ஜிகள், இலட்ஜர்கள் உண்டிகள், பில்கள், எக்சாமி னேஷன் பேப்பர்கள், வர்த்தகர்களுக்கும் பாங்கி களுக்கும் வேண்டிய பலவிதப் பட்டிகள், இரசீதுகள், டிக்கட்டுகள் கடிதவுரை மேல்விலாசங்கள் இன்னும் பற்பல பதிப்பு வேலைகள் வெகு நாகரீகமாக பலவித வர்ணங்களில் நேர்த்தியாகவும் பதிப்பித்துக்கொடுக்கப் படுவது மன்றி எவ்வித உயர்ந்த புத்தகக்கட்டு வேலைகளும் கிலீட்டு வேலை களும் வெகு சரசமாக செய்து தரப்படும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் அட்டி சொல்லாது குறித்த காலத்தில் தவக்க மன்னியில் கொடுக்கப்படும்.

ஹாஸ்யமஞ்சரி புத்தகம் 1க்கு காசு 10.

பினாங்கு, 28-4-98
இங்ஙனம்
M.C.முகம்மது காசீம், சொந்தக்காரர்



 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home