Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் "பிரபந்தத்திரட்டு" - பகுதி 23 (2670 - 2770)


 
திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 23 (2670 - 2770)
மதுரைத் திருஞானசம்பந்தசுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி.

Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 23 (verses 2670 -2770)
pUvALUrp patiRRuppattantAti


Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany
for providing us with a photocopy of the work.Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach. We thank the following persons in the preparation and proof-reading of the etext: .Karthikeyan, V.S. Kannan, Swaminathan Narayanan, V. Devarajan Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. � Project Madurai, 1998-2007
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



கணபதிதுணை.
 

    விநாயகர்துதி.


     

    2670

    ஒத வினிய தமிழ்க்கூட லோங்கு ஞான சம்பந்தர்
    பாத யுகமே லொருபதிற்றுப் பத்தந் தாதித் தொடைசாத்தப்
    போத மலர்நா ரினிதுதவும் பொல்லா வினையிற் புக்குழலு
    மாத ரகஞ்சா ராவொருகோட் டாம்ப லடித்தா மரைமலரே.

    1

    நூல்.


     

    2671

    சீர்பூத்த திருமுகமுந்தேவிமுலைப்
           பால்பூத்த செய்ய வாயு,
    மேர்பூத்த வருள்பொழியு மிருவிழியும்
           பொற்றாள மேந்து கையும்,
    பேர்பூத்த தமிழ்க்கூடற் றிருஞான
           சம்பந்தப் பெருமான் செம்பொற்,
    றார்பூத்த சிறுதண்டைத் தாளுமுளத்
           துள்ளிவினை தள்ளி வாழ்வாம்.

    1

    2672

    வாழிநெடு வழுதிபுறக் கூனிமிர்த்த
           நினக்கரிதோ மாறாச் சன்ம,
    வாழியுழல் வேனகக்கூ னிமிர்ப்பதுதென்
           கூடலம ரமல வாழ்வே,
    வீழியித ழுமையளித்த வள்ளநிறை
           பரஞான வெள்ளமுண்டாய்,
    காழிவளர் மாமணியே கவுணியர்தங்
           கற்பகமே கலைவ லோயெ.

    2

    2673

    கலைபுகழா யிரமுகத்தெய் வதமந்தா கினியுடைய
            கடவுண் மற்றை,
    யலைபுனலாட் டவுமகிழு மதுபோற்றென்
            கூடலகத் தன்பர் வாழ்வே,
    விலையில்கவு ணியமணியே வேதாதி
            முழுதுடையவிமல நீயோ,
    தலையடையாச் சிறியேன்செய் புன்றுதிக்கு
            மகிழ்கூர்த றக்க தாமே.

    3

    2674

    தக்கபடி யன்றியிரும் படியிடந்து
            வரையுருட்டிச் சலதி மோது,
    மிக்கபுனற் பேர்யாற்றிற் பல்லோருங்
            கரையேறி விளங்கச்செய்தாய்,
    தொக்கசுவைத் தமிழ்க்கூடற் கவுணியக்கன்
            றேயொருவேன் றொடர்ந்து நாளும்,
    புக்கபவப் பேர்யாறுங் கரையேறச்
            செயினினக்குப் புகழன் றாமோ.

    4

    2675

    புகழ்பரவு தமிழ்மதுரைப் புகலிகா
            வலசலசப் பூந்தார்மார்ப,
    நிகழ்கருணைக் குரவமறை நிறைசெல்வ
            பரஞான நேய வாய,
    வகழ்வினைய ருளத்தமரு மமரசிறு
            சிலம்பொலிக்கு மம்பொற் றாள,
    திகழ்வினையி லமணரென வடியன்மல
            நினக்கெதிராய்ச் சிதைவ தென்றோ.

    5

    2676

    என்றுநிகர் மணிமாடக் கூடலிட
            மோவிணையி லெண்டோ ளம்மா,
    னன்றுதிரு வரத்துறையி லளித்தமணிச்
            சிவிகைகொலோ வருநோன் புற்று,
    நன்றுமிகு சிவபாத விருதயர்தந்
            திருத்தோளோ நாயே னுள்ள,
    மொன்றுதலி னீயுறைய மழவிளங்கன்
            றேமணியே யுவட்டாத் தேனே.

    6

    2677

    தேனார்க்கு மலர்த்தடத்து மோட்டெருமை
            பாயவெரீஇச்சினந்த வாளை,
    கானார்க்குங் கற்பகத்தின் கழுத்தொடிய
            மீப்பாயுங் கணிசூழ் கூடல்,
    வானார்க்கும் பெரும்புகழாய் வண்புகலிப்
            பெருந்தகையே மறையோர் பேறே,
    யானார்க்குங் குடியல்ல னினக்கடியேனுய்யுநெறி
            யருள்க வின்றே.

    7

    2678

    அருண்மிகுபொற் றில்லைமூ வாயிரருங்
            கணநாத ராக வாங்கே,
    தெருண்மிகுநன் னீலகண்டப் பாணருக்குக்
            காட்டியநீ தேமாஞ்சோலை,
    பொருண்மிகுவிண் ணுலகளக்கும்
            புகழ்க்கூடற் சம்பந்தாபுலவரேறே,
    வெருண்மிகுநா யேன்காண வொருநினைக்காட்
            டாதிருக்கும் விதமற் றென்னே.

    8

    2679

    என்னையிவன் றனையடிமை கொள்கென்பா
            னடியார்தாமில்லை யோவென்,
    றன்னையனை யாய்கூடற் சம்பந்தா
            நீநினையே லலகிலாச் செம்,
    பொன்னையுடை யாருளதன் வரவைவெறுத்
            தாருமெவர் புத்த ரானோர்,
    முன்னையடி யாராகக் கொண்டவனு நீயன்றி
            மொழியின் யாரே.

    9

    2680

    மொழியுமறை யாயிரமு மெண்ணிறந்த
            மறையோர்க்கு மொழிந்தா சங்கை,
    யொழிதரவைந் தெழுத்துமே யந்தியின்மந்
            திரமென்று முணர்த்தி நின்றாய்,
    பொழிநறவப் பூஞ்சோலைப் புகழ்க்கூடற்
            சம்பந்தா புகலடைந்தேன்,
    வழிதருமத் துணைவேண்டா வைந்தெழுத்தே
            யுணர்த்து கெனின் வருத்தமென்னே.

    10

    2681

    வேறு.
    வருந்துபொய்ப் பவஞ்ச வாழ்க்கையை
            மதித்துன் மலரடி யிணைமதி யாதே,
    யிருந்தஞர்ப் பிறந்தை யுற்றுழல் வேன்கொ
            லின்னமு மிடையறா வன்பி,
    னருந்தவர்க் கரசே யாலவா யமுதே
            யருட்கவு ணியர்குலக் கன்றே,
    திருந்துபல் லோர்க்குஞ் சிவகதிப்
            பரிசுசேர்தர நல்குதே சிகனே.

    11

    2682

    தேசினாற் பொலிநின் றிருமணத் தடைந்த
            செழுந்தவத் தவரொடும் விரைந்து,
    கூசிலா தடியே னடைந்திலே னடையிற்குலவுவா
            னவர்க்கெலா மரிய,
    வாசிலாப் பதப்பே றெளிதினி முன்னியாவதெ
            ன்னாவவென் செய்கேன்,
    மாசிலா மணியே மதுரைவாழ்தருவே
            வளர்கவு ணியர்குல விளக்கே.

    12

    2683

    குலவுநின் கருணை பெரியர்பா லன்றிக்
            குணமிலாச் சிறியனேன் பாலு,
    நிலவுறப் புகுதல் வழக்கருண் மதுரை
            நிறைதிரு ஞானசம் பந்தா,
    மலர்தலை யுலகில் வருபெரு வெள்ளம்
            வாரிவாய்ப் புகுவதே யன்றிப்,
    புலர்தரு முறவி யளையினு மோடிப்
            புகுதனீ யறிந்திலாய் கொல்லோ.

    13

    2684

    கொல்லையா னுகைக்குங் குழகனா
            ரிடப்பால்குடிகொளுங்கோதைமெல் லருப்பு,
    முல்லைநேர் நகையாண் முலைபொழி
            தீம்பான்முற்றுமுண் டாங்குமிழ்ந் தாங்கு,
    வல்லமா மறைநற் றமிழ்பொழிமதுரை
            வள்ளலே புகலிமா மணியே,
    யில்லையன் பென்பா லாயினும் புரத்த
            லிலகுநின் னருட்கியல் பன்றே.

    14

    2685

    இயறெரி புலவர் புகழுமோத் தூரி
            லேற்றுவன் பனையெலா மிலகி,
    மயலறு கதியிற் புகவருள் புரிந்தாய்
            மற்றவை செய்தவன் பென்னே,
    புயறவழ் குடுமி மாளிகை மதுரா
            புரியுறை முத்தமிழ் விரகா,
    வுயலுற வெனையு மங்ஙன நினைந்தாண்
            டுன்னடி யிருத்துத லழகே.

    15

    2686

    அழகிய மயிலை யத்தியைப் பூவை
            யரசுசெய் தனையுதவாமை,
    பழகிய பெண்ணை பலவுமின் குரும்பை
            பலகொளப் பாடினைபற்பல்,
    கழகமுற் றோங்கு மாலவா யமுதே
            கவுணியர் பெருங்குலவிளக்கே,
    மழவிளங் களிறே யென்மனந் திருத்தின்
            மற்றுமப் புகழொடொன் றாமே.

    16

    2687

    ஒன்றுவெங் காமம் வெகுளியுண் மயக்க
            மோங்குமும்மதமெனக் கொண்டு,
    கன்றுமென் மனமாங் களிறகல்
            பவஞ்சக்காடெலா முழிதரு மதனை,
    வென்றியா னடக்க வலியிலா
            மையினான்மேதகு கூடலென் றுரைக்குங்,
    குன்றில்வாழ் தெய்வக் குருபர சமயகோளரி
            சரணடைந் தனனே.

    17

    2688

    அடையல ரஞ்சுஞ் சூற்படைச் சொக்க
            ரங்கயற் கண்ணியோ டமர்ந்த,
    நடைகெழு கூட னன்மறைக் கொழுந்தே
            நண்ணினர்க் கெய்ப்பினில் வைப்பே,
    யிடையறா வன்பி னெண்ணிலார்
            குழுமியேத்துநின் சந்நிதா னத்திற்,
    கடையனேன் புரியன் பறுதுதி நாணங்கழித்தெதி
            ரடையவும் பெறுமே.

    18

    2689

    பெறலருஞ் செல்வ நின்னடி யேத்தும்
            பெருமையேயென்பது தெரிந்துந்,
    திறல்கொண்முற் றவமில் லாமையால்
            வருந்தித்திகைத்திடு நெஞ்சமென் செய்கே,
    னறவருள் விளக்கே யாலவாயமுதே
            யற்புதக் கற்பகக் கனியே,
    புறவவண் களிறே போற்றுவார்பொன்னே
            பொங்குபே ரருட்பெருங் கடலே.

    19

    2690

    கடல்விளிம் புடுத்த கண்ணகன் புவியிற்
            கழிதரு பொய்யெனு மெய்யை,
    யடன்மிக யானென் றவாய்வினைச்
            சிமிழ்ப்புண்டவத்தைக டொறும்புகு மடியே,
    னுடலபி மான முதலிய வெறுத்துன்
            னொண்சிலம் படியடை குவனோ,
    மடல்விரி கமல வாவிசூழ் மதுரை
            மாநகர்க் கவுணியக் கன்றே.

    20

    2691

    வேறு.
    கன்றி யொருவே னிவண்வருந்தக் கடவ
            னோவங் கயற்கண்ணி,
    யொன்றிமகிழு மொருமுதல்வ னுறைதென்
            கூடற் சம்பந்தா,
    துன்றி வருத்து குளிர்க்கஞ்சித் தொண்டர்
            குழுமி முறையிடுமு,
    னன்றி யுகவு நீலகண்ட நவின்று
            தீர்த்த நல்லோயே.

    21

    2692

    நல்லாய் கூடற் சம்பந்தா நல்லார்
           போல நமைத்தொழநீ
    கல்லாயென்று கைவிட்டாற் கடையே
           னுய்யு நெறியுளதோ,
    செல்லாமழைபெய் யாதொழியிற்
           றிரைசூழ் புவிக்குய் வகையுண்டோ,
    வல்லா யுறவென் றூழுதய மாகா
           விடிற்கண் ணறிவதெவன்.

    22

    2693

    அறிவ தறியும் வகையுணர்த்தி
           யால வாயி னகத்தொருநீ
    செறிய வுறைத லாற்புகலித் தேவர்
           வடியர் சிறந்துய்ந்தார்,
    வெறியனாயி னேனொருவேன்
           வெய்யோ னுதயத் தெவர்விழியுங்,
    குறிகொளொளியே யடைமவிருள்
           கூகை விழிக ளடைவனபோல்.

    23

    2694

    அடைய வினிமை யருளுநின்பொன்
           னடிக ளடைந்தேனதற்கேற்ப,
    விடைய றாத வன்பில்லே
           னெனினுங் கூடற் சம்பந்தா,
    தடையி லடியா னினக்கென்றே
           சாற்றா நிற்ப ரெனையுலகர்,
    மிடைசில் லுறுப்பி லார்தமையு
           மக்க ளென்றே விளம்புதல்போல்.

    24

    2695

    விள்ளுங் கருணைப் பெருந்தகையே
           விண்டாழ் பொழில்சூழ் வியன்மதுரை,
    யுள்ளு மடியே னுள்ளுமுறை
           யொருவா பெருமுத் தமிழ்விரகா,
    தள்ளு மமணர் குலகாலா
           தண்டைத் தாளா தனிமுதலே,
    துள்ளுங் கயல்சேர் வயற்புகலித்
           தோன்றா லென்முன் றோன்றாயே.

    25

    2696

    தோன்றாய் விழிமுன் மனமாசுந்
           துடையா யென்னோவருந்திமன,
    மான்றா யென்றும் வாய்மலராய்
           மன்னன் றென்னன்மதுரைவளர்,
    சான்றாய் பெருமா னிடப்பாகத்
           தையன் முலைப்பாலுண்டனே,
    கான்றாய் போலின் றமிழ்பொழிந்த
           கருணாநிதியே யிதுதகவோ.

    26

    2697

    தகவே யென்றுன் சரண்புகுந்தேன்
           றள்ளி விடநீ வல்லாயோ,
    நகவே திரிவா னடியார்போ னடிக்குங்
           கள்வ னிவனம்பாற்,
    புகவே தகானென் றுளத்தெண்ணல்
           புகழ்த்தென் கூடற் புகலியாய்
    மிகவே யலைசெய் வாரிதியுள்
           விரைந்தங் கணநீ ரும்புகுமால்.

    27

    2698

    புகுமே பிறந்தை யென்பாலும்
           போமே பொறியின் வாய்மனமு,
    நகுமே சகமு மெனை நோக்கி
           நண்ணு மேயுண் மயக்கமுநீ,
    தகுமே யென்று தடுத்தாளிற்
           சம்பந் தாதோ மொருமூன்றுஞ்,
    செகுமே லவர்க டொழுங்கூடற்
           றேவா குரவர் சிகாமணியே.

    28

    2699

    மணியே யனையாய் திருப்புகலி
           மறையோர் பேறே மதுரைநகர்க்,
    கணியே தோர் பலரையுநீ யடிமை
           கொண்டா யதற்காகத்
    தணியே முனிவென் றுனைவெறுக்கத்
           தக்கார் சிலரு மிருந்தாரோ,
    துணியே யெனையு மடிமைகொளத்
           துணிந்தால் வெறுப்பரெவரையா.

    29

    2700

    ஐய வயனா னெடுமாலா லளந்து
           காணாப்பரம் பொருளைத்
    துய்ய வொருகை விரலாலே
           சுட்டிக் காட்டுஞ் சம்பந்தா
    வைய மதிக்குந் தென்கூடன்
           மணியே வயங்கு பொற்றாளக்
    கைய வுன்னை யெனக்கறியக்
           காட்டி லதுவே போதுமால்.

    30

    2701

    வேறு
    போது செறி பிரமபுரப் பொய்கையதன் கரையிடத்துத்
    தாது செறி மலர்ச்சோலைத் தண்கூடற் சம்பந்தர்
    யாதுரைசெய் கேன்ஞான வமுதுண்ட நாளமண
    ரோதுகொடுங் கடியவிட முண்டார்போன் றுலைந்தனரே.

    31

    2702

    உலையாத புகழ்க்கூட லுவமையின்முத் தமிழ்விரகர்
    கலையாரு மதியனைய காமர்மணிச் சிவிகைமிசை
    யிலையார்தண் பொழிலுலக மேத்தவே றியஞான்று
    கொலையாரு மனத்தமணர் கூர்ங்கழுவே றினரொத்தார்.

    32

    2703

    ஒத்தபுக ழாலவா யுறையுமறைக் கவுணியனார்
    சித்தமகிழ் திருமுனெழு திருச்சின்னப் பெருக்கோசை
    வித்தகமி லமணருக்கு வெங்கூற்றி னோசைகொலோ
    குத்திரவம் மறலிகடாக் குரலோசை யோவறியேம்.

    33

    2704

    அறிவுருவ னாலவா யாண்டகைமுத் தமிழாளி
    செறிநிழல்செய் மணிமுத்தின் சிவிகைகுடை செழும்பந்தர்
    பறிதலைய ரூற்றைவாய்ப் பதகர்முதற் பரசமய
    வறியவருக்கு வேனில்வெயில் வயங்குதலொத் திருக்குமால்.

    34

    2705

    இருக்குமுத லோதாம லெளிதுணர்ந்த கவுணியர்கோன்
    குருக்கிளர்சண் பையினின்றுங் கூடலடைந் திருந்தவுடன்
    றருக்கமிகப் பேசிமயிர் தலைபறித்திட் டுழலமணக்
    குருக்கள்புவி நின்றுகழுக் கூடலடைந் திருந்தனரே

    35

    2706

    இருந்தவர்க ளேத்தெடுக்கு மெம்மிறைமுத் தமிழாளி
    யருந்தமிழ்நா வலருறையு மாலவா யமரண்ணல்
    ‍பொருந்துதிரு மறைக்காட்டிற் புகல்சதுர மறைப்பாடல்
    வருந்துமனப் பரசமயர் வாயடைத்த பாட்டன்றோ.

    36

    2707

    பாட்டுவரிச் சுரும்புளரும் பைம்பொழிலிற் பசுமயிலிற்
    கோட்டுமுலை யார்பயிறென் கூடன்மறைக் குலக்குருளை
    வாட்டுவினை கடிமயிலை மட்டிட்ட வெனப்புகல்பா
    வூட்டுபுகழ்ப் பெருஞ்சைவர்க் குயிர்கொடுத்த பாவன்றோ.

    37

    2708

    அன்றுகனி ‍வொடுபோக மார்த்தபூண் முலையாண்மற்
    றென்றுகவு ணியாமதுரைக் கிறைவாரு ளியபதிக
    நன்றுசெறி நெறியொருவா நல்லறிவி னோர்முகங்கட்
    கொன்றுபொலி வுறுத்தியதே லுவமையதற் குளதாமோ.

    38

    2709

    உளரளிவண் பொழின்மதுரை யொப்பிலா மணிபுகலிப்
    பளகில்கவு ணியக்கன்று பாலறா வாய்க்குருளை
    வளமலிபா சுரமொன்றே வான்சைவ மீடேற
    வளவிலமண் கழுவேற வாற்றெதிரே றியதம்மா

    39

    2710

    மாமேவு திருவால வாய்ஞான சம்பந்தர்
    பூமேவு திருக்காத்தாற் புரிந்தளித்த திருநீறு
    கோமேவு வுழுதியுடல் குளிர்தரச்செய் தாங்கிருந்த
    தீமேவு தொழிலமணர் சிந்தையில்வெப் புறுத்தியதே.

    40

    2711

    வேறு
    தேவர் தானவர் சித்தர்வித் தியாதரர்
           திசைபுரப் பவர்மற்றும்
    யாவருள்ளவ ரவரெலாம் வந்துவந்
           தடியிணை தொழமேவு
    மூவா தம்பிரா னாலவா யினிதமர்
           முத்தமிழ் விரகாயான்
    பாவரோடுற வுறறுழ வாதுநின்
           பதத்துற வுறவுன்னே.

    41

    2712

    உன்னு வார்பிறப் பொழித்திடு
           மொருவனை யுத்தமர்பெருமானைப்,
    பன்னு வார்க்கினிப் பானைமெய்ஞ்
            ஞானவின் பாலறாவாயானை,
    மன்னு வார்பொழின மதுரையா
           சிரியனை வழிபடா தவரெல்லாந்,
    றுன்னு வார்பிறப் பொழிவரோ
           வொழிவார் தொழுதவத்தவரேனும்.

    42

    2713

    தவரெனப்படு வார்களு மும்மலத்
           தடையறு சிவஞானத்,
    தவரெனப்படு வார்களு மிருவளி
           யடைத்தொரு வழிநிற்பா,
    ரிவரெனப்படு வார்களுஞ் சிவகதிக்
           கெதுவழி யென்றோயாய்,
    பவரெனப்படு வார்களு மதுரைச்சம்
           பந்தன்மெய் யடியாரே.

    43

    2714

    அடியா செல்வமே யாலவாய்
           முத்தமி ழாளிகேண் மதிபொல்லாக,
    கொடிய நாயினேன் விண்ணப்ப
           மொன்றுவான் குளிர்மதி நதிசூடு,
    முடிய னையநிற கெனையனெற
           கனையைநீ முடிவினமறறவற்***,
    நெடிய சீர்புனை யெனையனமற்
           றனையனோ நினக்கியானலலேனே.

    44

    2715

    அல்லை நேர்களத் தண்ணறன்
           றிருவடிக் கருகரா யனைவோருந்,
    தொல்லை மாவினைத் தொடரோழிந்
           தானந்தந் துயத்திடவருள்கூர்ந்து,
    வில்லை வீசுபஞ் சாக்கர மோதிய
           வித்தக வியன்கூட,
    னல்லை நீயடி யேற்குமவ் வாறரு
           ணலகிடி னுயவேனே.

    45

    2716

    உய்ய லாம்வகை யொன்றுகண் டேனஃ
           துண்மையேயின்தோமன்,
    வைய வாழ்வடை மயங்கியே யுழிதரு
           மாந்தாகாண் மடைநண்ணான்
    ... .... .... ...
           சம்பந்தன்,
    .... ..... .... .....
           தொழும்புபூண்றேறானே.

    46

    2717

    உறவும் வேனினண் பகலழ லிடைப்புகுந்
            துணங்குதலுணாநீத்தே,
    யறவும் வாடுதன் மூச்சவித் திருத்தல்கா
            லாதிதுய்த்தலுமோவ,
    லிறவு நேருமென் றிடக்குகை வனம்புகல்
            யாவுநீத்திடும்வம்மின்,
    புறவ நாயகன் கூடல்வாழ் புண்ணியன்
            பொன்னடி யடைவீரே.

    47

    2718

    அடையு நற்பசு விருக்கயான் கற்பசு
            வடைந்தனென் கறந்தெய்த்தே,
    னடைகொ ளாலவா யிடையமர் தருபர
            ஞானபோனகக்கன்றே,
    குடையும் யானமும் பந்தரு முத்தமாக்
            கொண்டமுத்தேபொன்னே,
    மிடையு மும்மல மகன்றருள் பெறும்வகை
            மெய்யருள் புரிவாயே.

    48

    2719

    வாய்ந்த செம்பொனாற் செய்கொழுக்
            கொண்டியான் வரகினுக் குழலுற்றே,
    னேய்ந்த தீஞ்சுவைக் கனியொரீஇக்
            காய்கவர்ந்தென்றுமுண் பவன்போன்றே,
    னாய்ந்த நாவலர் புகழ்மது ராபுரியண்ணலே
            யடல்கொண்டு,
    காய்ந்த காமத்தர் கருதிடுங் கவுணியர்
            காவலா வருள்வாயே.

    49

    2720

    அருந்து தற்கமை பாலைவிட் டருந்தினே
            னமைதராப் புளிங்காடி,
    பொருந்து கங்கையா டப்புகுந் தள்ளலைப்
            பூசிடு பவன்போன்றேன்,
    றிருந்து மாலவாய்த் தெள்ளமு தேவர
            சிரபுரத் தவரேறே,
    மருந்து நேருன தருண்மொழி பெற்றியான்
            மலமறுத் துயலென்றே.

    50

    2721

    வேறு.
    என்றவ றனைத்து மெண்ணா தின்னருள் புரிய வேண்டு
    நின்றசீர் நெடிய மாற னிலவுநன் னெறிக்க ணேவந்
    தொன்றமுன் றடுத்தாட் கொண்டா யுவமைதீர் புகலி வாழ்வே
    வென்றசீ ருடையாய் கூடல் விளக்கமே மெய்மமை யானே.

    51

    2722

    யானென தெனுங்கோண் ஞான வழல்கொடு நிமிர்க்க வல்லான்
    ஞானசம் பந்த னன்றி நாடின்மற றகிலத் தியாவ
    ரீனமி லறவொர் சூழு மிருந்தமிழ்க் கூடல் சார்ந்து
    மானமா ரனையா வள்ளன் மலரடி வணங்கு வீரே.

    52

    2723

    வணங்குவா ருள்கு வார்வாய் வாழ்த்துவார் வழுத்து வாரோ
    டிணங்குவார் நின்பொற் பாத மெய்துவா னெண்ணி யன்பர்
    குணங்குலாந் துவாத சாந்தக் கூடனமே வியசம் பந்தா
    விணங்குறாப் பவஞ்ச வாழ்க்கை யேட்டையே னென்செய் கேனே.

    53

    2724

    செயம்மலி துவாத சாந்தத் திருநக ரொருசம் பந்தா
    ..... .... .... .... ....
    மெய்யம்மலி செல்வ ரின்பம் விழைத்தனர் புகுநின் றாளிய
    பொயம்மலி யேழை வாழ்க்கைப் புன்மையென புகலொ ணாதோ.

    54

    2725

    ஒண்ணுத லுமையாள் கொங்கை யூறிய பரமெய்ஞ் ஞானங்
    கண்ணுத லருளா லுண்ட கவுணியர் காளாய் மேலோ
    ரெண்ணுதல் செய்யுங் கூட லுடையநீ யென்னோ டூடல்
    பண்ணுத றகாதுன் றீராப் பரவருட் பெருமை நோக்கின்.

    55

    2726

    நோக்குயர் கூடல் வாழ்வே நோன்மைசா லருட்சம் பந்தா
    தேக்குசீர் வீரட் டானச் சிவபிரா னாடல் கண்டா
    யாக்கிய புகழின் மேலா மையநின் சித்த மென்றன்
    பாக்கிய மலர ருட்கட் பார்வைக்கே பார்வை வைத்தேன்.

    56

    2727

    வையகத் தன்பு பூண்டார் குற்றமு மற்றஃ தில்லார்
    செய்யநற் குணமு முள்ளஞ் செறித்திடாக் கருணை வாழ்வே
    பொய்யகன் மதுரை மூதுர்ப் புகலியாய் நின்றா ளன்றி
    வெய்யவேழ் பிறவி யென்னும் வீரைக்கோர் மதலை யின்றே.

    57

    2728

    இன்றடம் பொழில்சூழ் கூட லெழிற்கவு ணியர்தங் கன்றே
    யொன்றவைந் தெழுத்தி னுள்ளே யோதுமுப் பொருளுந்தேற
    நன்றடி யவர்க்கு ணர்த்தி நலமுறுத் திடுதல் போலெற்
    கென்றருள் புரிவை யென்றே யிருந்தன னெதிர்பார்த் தம்மா.

    58

    2729

    அம்மைபா லுண்ட ஞான வருட்பெருங் குருளை கூட
    லெம்மையா ளுடைய தெய்வ மிலகரு ணோக்கஞ் செய்ய
    நம்மையாய் புரிந்த பாச நசித்திடு நம்பு நெஞ்சே
    வெம்மையார் கதிரோன் றோன்ற வீடிடா விருளு முண்டோ.

    59

    2730

    உண்டுடுத் துழல்வேன் றெய்வ முண்டெனு முறுதி நெஞ்சுட்
    கொண்டுசற் றறியேன் காமக் கொள்கல னாகி நிற்பேன்
    றொண்டுபட் டுன்றா ளேத்தத் துணிவனோ கணித மில்லா
    வண்டுதுற் றியபூஞ் சோலை மதுரைமா ஞான வாழ்வே.

    60

    2731

    வேறு.
    வாழு மாறுளத் தெண்ணினன் மற்றது மருவத்
    தாழு மாறுனைத் தாழ்ந்தில னாகிலென் றவறே
    சூழு மாதவிச் சோலையின் மலர்தொறுந் தும்பி
    வீழு மாலவாய் மேவிய சிரபுர வேந்தே.

    61

    2732

    வேந்த ராகிலென் முப்பகையறுத்தற விளங்குஞ்
    சாந்த ராகிலென் றக்கவ ராகிலென் றவஞ்செய்
    மாந்த ராகிலென் மதுரையிற் கவுணியன் மலர்த்தா
    ளேந்த வாய்ந்தநெஞ் சுடையரே சிறந்தவ ரென்றும்.

    62

    2733

    என்று நேர்மணி மாளிகைக் கூடல்வா ழிறையை
    யன்று ஞானபோ னகமினி துண்டவா ரமுதைக்
    கன்று சூழ்வினை களைந்தடி யார்க்கருள் கனியை
    நன்று கண்டுதோத் திரஞ்செயார் நாவென்ன நாவே.

    63

    2734

    நாவ லோர்புகழ் ஞானசம் பந்தனை நல்லோ
    ராவ லோடணை யாலவா யிருந்தரு ளமுதைத்
    தேவ லோகமே யெனச்சொலுஞ் சிரபுரச் செல்வர்
    காவ லோனைநேர் கண்டிடார் கண்ணென்ன கண்ணே.

    64

    2735

    கண்ண கன்புவி தொழுதெழ வாலவாய் கலந்தே
    யெண்ண வம்புரி யமணரைக் கழுவில்வைத் தியார்க்கும்
    வண்ண நீறளித் திருந்தருண் ஞானமா மணியின்
    றிண்ண வண்புகழ் கேட்டிடார் செவியென்ன செவியே.

    65

    2736

    செவிய வாவுமின் றமிழ்பொழி செய்யவாய்த் தேனைப்
    புவியு ளோர்புகழ் மதுரைமா நகருறை பொன்னைச்
    சவிவி ராங்கவு ணியர்குல மணியைவெண் டாளக்
    கவிகை யாளியை யருச்சியார் கையென்ன கையே.

    66

    2737

    ஏல வார்குழ லுமையருண் ஞானமுண் டெழுந்து
    சால வெங்கணும் பொழிதமிழ்க் கொண்டலைத் தாவாச்
    சீல மாதவ ராலவாய் மேவிய கேவைத்
    தால மேலுற வணங்கிடார் தலையென்ன தலையே.

    67

    2738

    தலைமை வைதிக மெய்தவுந் தெய்வமாச் சைவ
    நிலைமை யெய்தவு ஞானவா ரமுதுண்ட நிதியை
    யிலைகு லாம்பொழில் சூழ்மது ராபுரி யிறையைக்
    கலைவ லாளனைச் சூழ்தரார் காலென்ன காலே.

    68

    2739

    காலி னார்பொழிற் கனியுதிர் தரவெழுங் கடுப்பிற்
    சேலி னார்வயற் றிருமது ராபுரித் தேவைச்
    சாலி னார்மறைக் கவுணியன் றனைத்தொழச் சாரா
    மாலி னாருடைப் பிறப்பையெப் பிறப்பென வகுக்கேன்.

    69

    2740

    வகைசெய் மூலமா விலக்கிய மாகவு மறையிற்
    றகைசெய் பல்பொருண் முற்றவுந் தமிழ்பொழி தருவை
    முகைசெய் வான்பொழி லாலவாய் மேவிய முதலைத்
    தொகைசெ யுந்துதி சொற்றனன் சிறந்ததென் றுணிவே.

    70

    2741

    வேறு.
    துணியு மாறொன்று சொல்லுவன் யார்க்கும்வான்
    பணியுங் கூடற்சம் பந்த னடிதொழிற்
    றணியும் வெவ்வினை சார்த லறும்பவ
    மணியு மொன்றியொன் றாக்கதி யாருமே.

    71

    2742

    யாரு மேத்து மியன்மது ராபுரிச்
    சீருந் தேசுந் திருந்துசம் பந்தர்தா
    மூரும் யானமுன் றாங்கின ரொண்பதந்
    தேரு நீரிலென் சிந்தையுந் தாங்குமே.

    72

    2743

    தாங்கு பேரருட் சம்பந்தன் கூடலா
    னோங்கு மாமுறை யோதி யெழுதினோ
    ரேங்கு வேனுக் கெழுவகைச் சன்மமுந்
    தேங்கு மாறெழு தாவகை தீர்ப்பரே.

    73

    2744

    தீரன் ஞான சிகாமணி பூந்தரா
    யூரன் கூட லொருக்கன் றிருமுன
    ரார வொண்டிருச் சின்னம தூதுவார்
    வீர மல்கென் வினையையு மூதுவார்.

    74

    2745

    வாரு மன்பினர் வாழ்த்தும் பகலியார்
    தேருங் கூடற் றிகழ்கரு பிள்ளையார்க்
    கோரு மன்பின் விருந்தமு தூட்டினா
    ராரு மெற்கரு ளாரமு தூட்டுவார்.

    75

    2746

    ஊட்டி யன்புயிர்க் கோரெழு சன்மமும்
    வீட்டி யாளும் விரகர்சம் பந்தர்க்கு
    நாட்டின் மிக்கநல் லாலவா யீதென்று
    காட்டி னாரெற் கருங்கதி காட்டுவார்.

    76

    2747

    வார மிக்க மதுரையிற் சம்பந்தர்
    சேர வாற்றியெண் ணாயிரந் தீக்கழு
    வார வஞ்ச வமணருக் கூன்றினார்
    பார வாங்கதிப் பாடெனை யூன்றுவார்.

    77

    2748

    ஊன்ற வுள்ளத்தி னுள்ள பொருளெலா
    மீன்ற மாதொடு மின்றமிழ்க் கூடல்வா
    ழான்ற சம்பந்தர்க் காக வொதுக்கினார்
    மான்ற வென்னை மலநின் றொதுக்குவார்

    78

    2749

    குவல யம்புகழ் கோமது ராபுரித்
    தவல ரும்புகழ்ச் சம்பந்தப் பிள்ளையா
    ருவமை தீரடித் தொண்டருக் கொல்லையே
    கவலி றொண்டுசெய் வார்கன வானரே.

    79

    2750

    வான வாழ்வு மதிப்பரி தாஞ்சிவ
    மோன வாழ்வெனு முத்தியு நல்குமிக்
    கான கூடன்மெய் யாறு முகத்திரு
    ஞான சம்பந்தர் நாண்மலர்ப் பாதமே.

    80

    2751

    வேறு.
    பாதக மும்மல பந்தத் தாலுறு
    நோதக வொழிதர நூலு ணர்ச்சிசான்
    மேதக வோர்குழு மேவு மாலவாய்ப்
    போதகன் கவுணியன் புகழ்வி ரும்புவாம்.

    81

    2752

    விரும்பிடப் படுவது மெய்ம்மை யாவதுங்
    கரும்பினு மினிப்பதுங் கவலை தீர்ப்பதுஞ்
    சுரும்புளர் நறுமலர்ச் சோலை யாலவா
    யிரும்புகழ்ப் பிள்ளையா ரிணையில் சீர்த்தியே.

    82

    2753

    சீர்மலி யாலவாய் திகழும் வானகம்
    பேர்மலி கவுணியப் பிள்ளை யார்மதி
    யார்மலி யவர்புக ழம்ம திக்கதிர்
    நார்மலி யடியவர் சகோர நாளுமே.

    83

    2754

    நாள்பல கண்டதென் மதுரை நற்றட
    நீள்பல விதழ்மலர் நிலவு சம்பந்த
    ராள்பல சீர்த்தியவ் வலரி லூறுதேன்
    றாள்பல வளிக்குலந் ததைந்த வன்பரே.

    84

    2755

    அன்பமை யாலவா யவிரு மோர்சிலம்
    பின்பமை சம்பந்த ரினிய நீர்முகின்
    மன்பெருங் கருணையம் மங்குல் பெய்யுநீர்
    துன்பமி லடியவர் சூழு மாமயில்.

    85

    2756

    மயலகல் கூடல்லாள் வழங்கு வானக
    முயல்புரி கவுணிய ரோங்கு கற்பகஞ்
    செயன்மிகு பொருட்கொடை திருவ ருட்கொடை
    யயல்விரா வடியவ ரளவில் வானவர்.

    86

    2757

    வானமும் புகழ்திரு மதுரை பாற்கடல்
    ஞானசம் பந்தனார் நயக்கு நல்லமு
    தூனமில் சைவர்க ளுவந்த வானவர்
    தீனவெவ் வமணரே திதிதன் மைந்தர்கள்.

    87

    2758

    மைந்துசே ருதயமால் வரைதென் னாலவாய்
    நந்துசீர் மழகதிர் ஞான சம்பந்தர்
    முந்துபு முகமலர் முளரி சைவரே
    சிந்திரு ளறிவிலா வமணர் தேரரே.

    88

    2759

    தேருமின் கவுணியர் செய்ய சீரினி
    தோருமி னவர்கனிந் துரைத்த மாமறை
    சாருமி னாலவாய் சார்ந்து தாழ்வற
    வாருமி னருங்கதி யகிலத் தியாருமே.

    89

    2760

    மேவுதென் னாலவாய் விரும்பு புண்ணியன்
    மூவுல கும்புகழ் முதல்வன் சம்பந்தன்
    பூவுயர் பொன்னடி போற்று வார்மல
    நோவுதீர்ந் துய்வது நுவல வேண்டுமோ.

    90

    2761

    வேறு.
    வேண்டாமை வேண்டேன் விழைந்தே திரிந்தேன்
    பூண்டார் நினக்கன்பு பொய்ப்பாச மற்றா
    ராண்டா தரிப்பா யருட்கூடன் மேய
    தூண்டா விளக்கே தொழுஞ்சண்பை யானே.

    91

    2762

    யானேது செய்கேனென் மனமெங்கு மோடுங்
    கோனே தடுத்தாட் கொளிற்பொய்ய னுய்வேன்
    றேனே கரும்பே திருக்கூடல் வாழம்
    மானே பெருஞ்சண்பை வள்ளற்பி ரானே.

    92

    2763

    பிரான்வேறும் வேண்டேன் பிதற்றித் திரிந்தே
    னிராதார னாகாம னீயாண்டு கொள்வாய்
    குராவாச மென்சோலை கொள்கூடன் மேவும்
    பராஞான சம்பந்த பண்பாளர் பேறே.

    93

    2764

    பேறே துதிப்பார் பெருஞ்சண்பை யாள
    ரேறே தமிழ்க்கூட லின்பப் பிரானே
    மாறே படும்புன் மனத்தேன் மதித்துன்
    னாறே யடைந்துய்வ தறிகின்றி லேனே.

    94

    2765

    ஏமங் குறித்தே யிருந்தே னதற்குன்
    னாமங் குறித்தோத நாவைத் திருப்பேன்
    பூமங்கை மேவும் புகழ்க்கூடல் வைப்பே
    காமங்கை யாருட்பு காச்சண்பை வாழ்வே.

    95

    2766

    வாழ்வான திருண்மாய மென்றெண்ண மாட்டேன்
    றாழ்வான தேகொண்டு தடுமாறு கின்றேன்
    சூழ்வான ரேத்தித் தொழுங்கூடல் வாழ்வே
    யாழ்வாரி சூழ்காழி யாள்வார்க டேவே.

    96

    2767

    தேவே கரும்பே தெவிட்டா ததேனே
    கோவே திருக்கூடல் குடிகொண்ட பொன்னே
    மாவேரி யொண்டா மரைத்தொங்கன் மார்பா
    நீவேறு செய்தென்னை நீக்காம லாளே.

    97

    2768

    ஆளா னவர்க்கே யருட்டே சுறுத்துந்
    தோளாத முத்தே தொழுங்கூடல் வைப்பே
    நீளாத ரத்தியாரு நின்றேத்து காழிக்
    காளா யெனைக்கா கருப்பால் கடிந்தே.

    98

    2769

    கடிமா மலர்ச்சோலை ககனந் துழாவும்
    படிமே லெழுந்தண் பழங்கூடல் வைப்பே
    கொடிமாட மிகுவெங் குருக்கொண்ட லேநின்
    னடிமா மலர்க்கென்னை யான்செய்த பிழையே.

    99

    2770

    பிழையாது செயினும் பிறக்கா தகற்று
    மழையா ரருட்பெருமை வாழ்கவளர் கூடற்
    றழையாறு முகஞான சம்பந்த குரவன்
    விழையாறு நனிவாழ்க மிகவாழ்க சீரே.

    100


    மதுரைத்திருஞானசம்பந்தசுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி முற்றிற்று
     

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home