Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > உண்மை நெறி விளக்கம், போற்றிப் பஃறொடை - இயற்றியவர்: உமாபதி சிவம்


uNmai neRi viLakkam & pORRip pqRoTai
of Umapathi Sivam

உண்மை நெறி விளக்கம், போற்றிப் பஃறொடை
இயற்றியவர்: சீகாழி தத்துவ நாதர் (உமாபதி சிவம்)



Etext Preparation & Proof Reading : Ms. Subashini Kanagasundaram, Boeblingen, Germany
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

� Project Madurai 1999 - 2004  Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


1. உண்மை நெறி விளக்கம் (காலம்: கி.பி.1350)
1.
மண்முதற் சிவம தீறாய் வடிவுகாண் பதுவே ரூபம்
மண்முதற் சிவம தீறாய் மலஞ்சட மென்றல் காட்சி
மண்முதற் சிவம தீறாய் வகையதிற் றானி லாது
கண்ணுத லருளால் நீங்கல் சுத்தியாய்க் கருதலாமே

2.
பாயிரு ணீங்கிஞானந் தனைக்காண்ட லான்ம ரூபம்
நீயுநின் செயலொன் றின்றி நிற்றலே தரிச னந்தான்
போயிவன் தன்மை கெட்டுப் பொருளிற்போயங்குத் தோன்றா
தாயிடி லான்ம சுத்தி யருணூலின் விதித்த வாறே.

3.
எவ்வடி வுகளுந் தானா யெழிற்பரை வடிவ தாகிக்
கௌவிய மலத்தான் மாவைக் கருதியே யொடுக்கியாக்கிப்
பௌவம்விண் டகலப் பண்ணிப் பாரிப்பானொருவனென்று
செவ்வையேயுயிரிற் காண்டல் சிவரூபமாகுமன்றே.

4.
பரையுயிரில் யானெனதென் றறநின்ற தடியாம்
பார்ப்பிடமெங் குஞ்சிவமாய்த் தோன்றலது முகமாம்
உரையிறந்த சுகமதுவே முடியாகு மென்றிவ்
உண்மையினை மிகத்தெளிந்து பொருள்வேறொன்றின்றித்

தரைமுதலிற் போகாது தன்னிலைநில் லாது
தற்பரையி னின்றழுந்தா தற்புதமே யாகித்
தெரிவரிய பரமாநந் தத்திற் சேர்தல்
சிவனுண்மைத் தரிசனமாச் செப்பு நூலே.

5.
எப்பொருள்வந் துற்றிடினு மப்பொருளைப் பார்த்தங்
கெய்துமுயிர் தனைக்கண்டிங் கவ்வுயிர்க்கு மேலா
மொப்பிலருள் கண்டுசிவத் துண்மை கண்டிங்
குற்றதெல்லா மதனாலே பற்றி நோக்கித்
தப்பினைச்செய் வதுமதுவே நினைப்புமது தானே
தருமுணர்வும் புசிப்புமது தானே யாகும்
எப்பொருளு மசைவில்லை யெனவந்தப் பொருளோ
டிசைவதுவே சிவயோக மெனுமிறைவன் மொழியே.

6.
பாதகங்கள் செய்திடினுங் கொலைகளவு கள்ளுப்
பயின்றிடினு நெறியல்லா நெறிபயிற்றி வரினுஞ்
சாதிநெறி தப்பிடினுந் தவறுகள்வந் திடினுந்
தனக்கெனவோர் செயலற்றுத் தானதுவாய் நிற்கின்

நாதனவ நுடலுயிரா யுண்டுறங்கி நடந்து
நானாபோ கங்களையுந் தானாகச் செய்து
பேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்
பெருகுசிவ போகமெனப் பேசுநெறி யிதுவே.
-------------
எண்ணும் அருள்நூல் எளிதின் அறிவாருக்(கு)
உணமை நெறிவிளக்கம் ஓதினான் - வண்ணமிலாத்
தண்காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும்
நண்பாய தத்துவநா தன்.

முற்றும்

2. போற்றிப் பஃறொடை (காலம் : கி.பி.1309)

பூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர் கோன்
மாமன்னு சோதி மணிமார்ப - னாமன்னும்
வேதம்வே தாந்தாம் விளக்கஞ்செய் விந்துவுடன்
நாதநா தாந்த நடுவேதம் - போதத்தால்
ஆமளவுந் தேட அளவிறந்த வப்பாலைச்
சேம வொளியெவருந் தேரும்வகை - மாமணிசூழ்
மன்று ணிறைந்து பிறவி வழக்கறுக்க
நின்ற நிருத்த நிலைபோற்றி - குன்றாத
பல்லுயிர்வெவ் வேறு படைத்து மவைகாத்து
மெல்லை யிளைப் பொழிய விட்டுவைத்துந் தொல்லையுறும்.

அந்தமடி நடுவென் றெண்ண வளவிருந்து
வந்த பெரிய வழிபோற்றி - முந்துற்ற
நெல்லுக் குமிதவிடு நீடு செம்பிற் காளிதமுந்
தொல்லைக் கடறோன்றத் தோன்றுவரு - மெல்லாம்
ஒருபுடை யொப்பாய்த்தா னுள்ளவா றுண்டாய்
அருவமா யெவ்வுயிரு மார்த்தே - யுருவுடைய
மாமணியை யுள்ளடக்கு மாநாகம் வன்னிதனைத்
தானடக்குங் காட்டத் தகுதியும் போன் - ஞானத்தின்
கண்ணை மறைத்த கடிய தொழி லாணவத்தால்
எண்ணஞ் செயன்மாண்ட வெவ்வுயிர்க்கு முண்ணாடிக்
கட்புலனாற் காணார்தங் கைகொடுத்த கோலேபோற்

பொற்புடைய மாயைப் புணர்ப்பின்கண் - முற்பால்
தனுகரண மும்புவன முந்தந் தவற்றான்
மனமுதலாவந்தவிகா ரத்தால் - வினையிரண்டுங்
காட்டி யதனாற் பிறப்பாக்கிக் கைகொண்டு
மீட்டறிவு காட்டும் வினைபோற்றி - நாட்டுகின்ற
வெப்பிறப்பு முற்செ யிருவினையா நிச்சயித்துப்
பொற்புடைய தந்தைதாய் போகத்துட் கர்ப்பமாய்ப்
புல்லிற் பனிபோற் புகுந்திவலைக் குட்படுங்கால்
எல்லைப் படாவுதரத் தீண்டியதீப் - பல்வகையா

லங்கே கிடந்த வநாதியுயிர் தம்பசியால்
எங்கேனுமாக வெடுக்குவென - வெங்கும்பிக்
காயக் கருக்குழியிற் காத்திருந்துங் காமியத்துக்
கேயக்கை, கான்முதலா யெவ்வுறுப்பு - மாசறவே
செய்து திருத்திப்பின்பி யோகிருத்தி முன்புக்க
வையவழி யேகொண் டணைகின்ற - பொய்யாத
னல்லவமே போற்றியம் மாயக்கா றான்மறைப்ப
நல்ல வறிவொழிந்து நன்குதீ - தொல்லையுறா
வக்காலந் தன்னிற் பசியையறி வித்தழுவித்
துக்காவி சொரத்தா யுண்ணடுங்கி மிக்கோங்குஞ்.

சிந்தையுருக முலையுருகுந் தீஞ்சுவைப்பால்
வந்துமடுப் பக்கண்டு வாழ்ந்திருப்பப் - பந்தித்த
பாசப் பெருங்கயிற்றாற் பல்லுயிரும் பாலிக்க
நேசத்தை வைத்த நெறிபோற்றி - பாசற்ற
பாளைப் பசும்பதத்தும் பாலனா மப்பதத்து
நாளுக்கு நாட்சகல ஞானத்து - மூள்வித்துக்
கொண்டாள வாளக் கருவிகொடுத் தொக்க நின்று
பண்டாரி யான படி போற்றி - தண்டாத
புன்புலால் போர்த்த புழுக்குரம்பை மாமனையில்
அன்புசேர் கின்றனகட் டைந்தாக்கி - முன்புள்ள

உண்மை நிலைமை யொருகா லகலாது
திண்மை மலத்தாற சிறையாக்கிக் - கண்மறைத்து
மூலவருங் கட்டிலுயிர் மூடமா யுட்கிடப்பக்
கால நியதி யதுகாட்டி - மேலோங்கு
முந்திவியன் கட்டிலுயிர் சேர்த்துக் கலைவித்தை
யந்தவராக மவைமுன்பு - தந்த
தொழிலறி விச்சை துணையாக மானி
நெழிலுடைய முக்குணமுமெய்தி - மருளோடு
மன்னு மிதயத்திற் சித்தத்தாற் கண்ட பொருள்
இன்ன பொருளென் றியம்பவொண்ணா - வந்நிலை போய்க்

கண்டவியன் கட்டிற் கருவிகளீ ரைந்தொழியக்
கொண்டுநியமித்தற்றை நாட்கொடுப்பப் - பண்டை
யிருவினையான் முன்புள்ள வின்பத்துன் பங்கள்
மருவும்வகை யங்கே மருவி - யுருவுடனின்
றோங்கு நுதலாய வோலக்க மண்டபத்திற்
போங்கருவி யெல்லாம் புகுந்தீண்டி - நீங்காத
முன்னை மலத்திருளுண் மூடா வகையகத்துள்
துன்னுமிரு ணீக்குஞ் சுடரேபோ - லந்நிலையே
சூக்கஞ் சுடருருவிற் பெய்து தொழிற்குரியர்
ஆக்கிப் பணித்த வறம் போற்றி - வேட்கைமிகு

முண்டிப் பொருட்டா லொருகா லவியாது
மண்டியெரி யும்பெருந்தீ மாற்றுதற்குத் திண்டிறல் சேர்
வல்லார்கள் வல்ல வகையாற் றொழில்புரிதல்
எல்லா முடனே யொருங்கிசைந்து - செல்காலை
முட்டாமற் செய்வினைக்கும் முற்செய்வினைக் குஞ் செலவு
பட்டோ லை தீட்டும் படிபோற்றி - நட்டோ ங்கு
மிந்நிலைமை மானுடருக் கேயன்றி யெண்ணிலா
மன்னுயிர்க்கு மிந்த வழக்கேயாய் - முன்னுடைய
நாணாள் வரையி லுடல்பிரித்து நல்வினைக்கண்
வாணாளின் மாலா யயனாகி - நீணாகர்
வானாடர் கோமுதலாய் வந்த பெரும்பதத்து
நானா விதத்தா நலம் பெறுநாள் - தான்மாள
வெற்றிக் கடுந்தூதர் வேகத் துடன் வந்து
பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட விற்றைக்கும்

இல்லையோ பாவி பிறவாமை யென்றெடுத்து
நல்லதோ ரின்சொ னடுவாகச் - சொல்லியிவர்
செய்திக்குத் தக்க செயலுறுத்து வீரென்று
வெய்துற் றுரைக்க விடைகொண்டு - மையறருஞ்
செக்கி னிடைத்திரித்துந் தீவாயி லிட்டெரித்துந்
தக்கநெருப் புத்தூண் தழுவுவித்து - மிக்கோங்கு
நாராசங் காய்ச்சிச் செவிமடுத்து நாவரிந்து
மீராவுன் னூனைத்தின் நென்றடித்தும் - பேராமல்
அங்காழ் நரகத் தழுத்துவித்தும் பின்னுந்தம்
வெங்கோப மாறாத வேட்கையரா - யிங்கொருநாள்
எண்ணிமுதற் காணாத வின்னற் கடுநரகம்
பன்னொடுநாட் செல்லும் பணிகொண்டு - முன்னாடிக்
கண்டு கடன்கழித்தல் காரியமா மென்றண்ணிக்
கொண்டுவரு நோயின் குறிப்பறிவார் - மண்டெரியிற்
காச்சிச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதிய
மீய்த்துத்தாய் தந்தைதம ரின்புறுதல் - வாய்த்த நெறி

யோடியதே ரின்கீ ழுயிர்போன கன்றாலே
நீடுபெரும் பாவமின்றே நீங்குமென - நாடித்தன்
மைந்தனையு மூர்ந்தோன் வழக்கே வழக்காக
நஞ்சனைய சிந்தை நமன்றூதர் - வெஞ்சினத்தால்
அல்ல லுறுத்து மருநரகங் கண்டுநிற்க
வல்ல கருணை மறம்போற்றி - பல்லுயிர்க்கும்
இன்ன வகையா லிருவினைக்க ணின்றருத்தி
முன்னைமுத லென்ன முதலில்லோ - நல்வினைக்கண்
எல்லா வுலகு மெடுப்புண் டெடுப்புண்டு
செல்காலம் பின்னரகஞ் சேராமே - நல்லநெறி
யெய்துவதோர் காலந்தன் னன்பரைக்கண் டின்புறுதல்

உய்யு நெறிசிறிதே யுண்டாக்கிப் - பையவே
மட்டாய் மலராய் வருநாளின் முன்னைநாண்
மொட்டா யுருவா முறைபோலக் - கிட்டியதோர்
நல்ல பிறப்பிற் பிறப்பித்து நாடும்வினை
யெல்லை யிரண்டு மிடையொப்பிற் - பல் பிறவி
யத்தமதிலன்றோ வளவென்று பார்த்திருந்து
சத்தி பதிக்குந் தரம் போற்றி - முத்திதரு
நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமல மொன்றினையு
மந்நிலையே யுண்ணின் றறுத்தருளிப் - பின்னன்பு

மேவா விளங்கும் பிரளயா கலருக்குத்
தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப் -பூவலயந்
தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல
முன்னின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை - யன்னவனுக்

காதிகுண மாதலினா லாடுந் திருத்தொழிலுஞ்
சோதி மணிமிடற்றுச் சுந்தரமும் - பாதியாம்
பச்சை யிடமும் பவளத் திருச்சடைமேல்
வைச்ச நதியு மதிக் கொழுந்து - மச்சமற
வாடு மரவு மழகார் திருநுதன்மேல்
நீடுருவ வன்னி நெடுங்கண்ணும் - கேடிலயங்
கூட்டுந் தமருகமுங் கோல வெரியகலும்
பூட்டரவக் கச்சும் புலியதளும் - வீட்டின்ப
வெள்ளத் தழுத்தி விடுந்தா ளினுமடியார்
உள்ளத் தினும்பிரியா வொண்சிலம்புங் - கள்ளவினை

வென்று பிறப்பறுக்கச் சாத்திவீ ரக்கழலும்
ஒன்றுமுருத் தோன்றாம லுள்ளடக்கி - யென்றும்
இறவாத வின்பத் தெமையிருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்து - நறவாருந்
தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று
பேரிலா நாதனொரு பேர்புனைந்து - பாரோர்தம்

உண்டி யுறக்கம் பயமின்ப மொத்தொழுகிக்
கொண்டு மகிழ்ந்த குணம் போற்றி - மிண்டாய
வாறு சமயப் பொருளுமறி வித்தவற்றிற்
பேறின்மை யெங்களுக்கே பேறாக்கித் - தேறாத
சித்தந் தெளியத் திருமேனி கொண்டுவரும்
அத்தகைமை தானே யமையாமல் - வித்தகமாஞ்
சைவ நெறியிற் சமய முதலாக
வெய்து மபிடேக மெய்துவித்துச் - செய்யதிருக்
கண்ணருளா நோக்கிக் கடியபிறப் பாற்பட்ட
புண்ணு மிருவினையும் போயகல - வண்ணமலர்க்

கைத்தலத்தை வைத்தருளிக் கல்லாய நெஞ்சுருக்கி
மெய்த்தகைமை யெல்லாம் விரித்தோதி - யொத்தொழுகுஞ்
சேணா ரிருள்வடிவுஞ் செங்கதிரோன் பானிற்பக்
காணா தொழியுங் கணக்கேபோ - லாணவத்தின்
ஆதி குறையாம லென்பா லணுகாமல்
நீதி நிறுத்து நிலைபோற்றி - மேதக்கோர்
செய்யுஞ் சரியை திகழ்கிரியா யோகத்தால்
எய்துஞ்சீர் முத்திபத மெய்துவித்து - மெய்யன்பாற்
காணத் தகுவார்கள் கண்டாற் றமிப்பின்பு
நாணத் தகுஞான நன்னெறியை - வீணே

யெனக்குத் தரவேண்டி யெல்லாப் பொருட்கு
மனக்கு மலரயன்மால் வானோர் - நினைப்பினுக்குந்
தூரம்போ லேயணிய சுந்தரத்தா ளென்றலைமேல்
ஆரும் படிதந் தருள்செய்த - பேராளன்
தந்தபொரு ளேதென்னிற் றான்வேறு நான்வேறாய்
வந்து புணரா வழக்காக்கி - முந்தியென்றன்
உள்ளமென்று நீங்கா தொளித்திருந்து தோன்றி நிற்குங்
கள்ளமின்று காட்டுங் கழல்போற்றி - வள்ளன்மையால்
தன்னைத் தெரிவித்துத் தன்றாளி நுட்கிடந்த
வென்னைத் தெரிவித்த வெல்லையின்கண் -மின்னாரும்

வண்ண முருவ மருவுங் குணமயக்கம்
எண்ணங் கலைகாலமெப்பொருளு - முன்னமெனக்
கில்லாமை காட்டிப்பின்பெய்தியவா காட்டியினிச்
செல்லாமை காட்டுஞ் செயல்போற்றி - யெல்லாம்போய்த்
தம்மைத் தெளிந்தாராய்த் தாமே பொருளாகி
யெம்மைப் புறங்கூறி யின்புற்றுச் - செம்மை
யவிகாரம் பேசு மகம்பிரமக் காரர்
வெளியா மிருலில் விடாதே - யொளியாய்நீ
நின்ற நிலையே நிகழ்த்தி யொருபொருள்வே
றின்றியமை யாமை யெடுத்தோதி - யொன்றாகச்

சாதித்துத் தம்மைச் சிவமாக்கி யிப்பிறவிப்
பேதந் தனிலின்பப் பேதமுறாப் - பாதகரோ
டேகமாய்ப் போகாம லெவ்விடத்துங் காட்சி தந்து
போகமாம் பொற்றாளி நுட்புணர்த்தி - யாதியுடன்
நிற்க வழியா நிலையிதுவே யென்றருளி
யொக்க வியாபகந்தன் நுட்காட்டி - மிக்கோங்கு
மாநந்த மாக்கடலி லாரா வமுதளித்துத்
தான்வந்து செய்யுந் தகுதியினால் - ஊனுயிர்தான்
முன்கண்ட காலத்து நீங்காத முன்னோனை
யென்கொண்டு போற்றிசைப்பேன் யான்

போற்றி திருத்தில்லை போற்றி சிவபோகம்
போற்றியவன் மெய்ஞ்ஞானப் புண்ணிய நூல் - போற்றியெங்கள்
வெம்பந்த வாழ்க்கைவிட வேறாய்வந் துண்ணின்ற
சம்பந்த மாமுனிபொற் றாள்.

முற்றும்


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home