Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > கோதை நாச்சியார் தாலாட்டு


kOtai nAcciyAr tAlATTu (author not known)

கோதை நாச்சியார் தாலாட்டு
( ஆசிரியர் யார் என தெரியவில்லை)
S.வையாபுரிப் பிள்ளை, B.A., B.L., உபசரித்தது)



Etext Preparation: Dr. N. Kannan, Boeblingen, Germany ; Grammer correction; Periannan Chandrasekaran, Atlanta, GA, USA
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Source acknowledgement: "kOtai nAcciyAr tAlATTu", Periyan Srinivasan ( Publisher), mutttiraip piracurAlayam, AzwAr tirunagari, June 2, 1928
Our thanks also due to Mr. S. Nambi (son of the publisher) for providing us with a copy of the work for etext preparation.

� Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


 
காப்பு
சீரார்ந்த கோதையின்மேற் சிறப்பாகத் தாலாட்டப்
பாரோர் புகழநிதம் பாடவே வேணுமென்று
"காரூர்ந்த தென்புதுவைக் கண்ணன் திருக்கோயில்
ஏரார்ந்த சேனையர்கோன்" இணையடியுங் காப்பாமே.

நூல்
தென்புதுவை விஷ்ணுசித்தன் திருவடியை நான்தொழுது
இன்பமுடன் தாலாட்டு இசையுடனே யான்கூறத்
1

தெங்கமுகு மாலானைச் சிறந்தோங்கும் "ஸ்ரீ ரங்கம்
நம் பெருமாள்" பாதம் நமக்கே துணையாமே.
2

சீரார்ந்த கோயில்களும் சிறப்பாகக் கோபுரமும்
காரார்ந்த மேடைகளும் கஞ்சமலர் வாவிகளும்
3

மின்னார் மணிமகுடம் விளங்க அலங்க்ருதமாய்ப்
பொன்னாலே தான்செய்த பொற்கோயில் தன்னழகும்
4

கோபுரத்து உன்னிதமும் கொடுங்கை நவமணியும்
தார்புரத் தரசிலையும் சந்தனத் திருத்தேரும்
5

ஆரார் தலத்தழகும் அம்மறையோர் மால்திரமும்
சீரார் தனத்தழகும் சிறப்பான உத்ஸவமும்
6

வேத மறையோரும் மேன்மைத் தலத்தோரும்
கீத முறையாலே கீர்த்தனங்கள் தான்முழங்க
7

பாவலர்கள் பாமாலை பாடி மணிவண்ணன்
ஆவலாய்ப் போற்றி அனுதினமும் தான்துதிக்கக்
8

கச்சுமுலை மாதர் கவிகள் பலபாட
அச்சுதனர் சங்கம் அழகால் தொனிவிளங்க
9

தித்தியுடன் வீணை சகமுழுதுந் தான்கேட்க
மத்தளமுங் கைமணியும் அந்தத் தவிலுடனே
10

உத்தமர் வீதி உலாவியே தான் விளங்கப்
......................................................................
11

பேரிகையும் எக்காளம் பின்பு செகண்டிமுதல்
பூரிகை நாதம் பூலோகம் தான்முழங்கத்
12

தும்புருவும் நாரதரும் துய்யகுழ லெடுத்துச்
செம்பவள வாயால் திருக்கோயில் தான்பாட
13

அண்டர்கள் புரந்திரனும் அழகு மலரெடுத்துத்
தொண்டர்களும் எண்டிசையுந் தொழுது பணிந்தேத்த
14

வண்டுகளும் பாட மயிலினங்கள் தான்பாடத்
தொண்டர்களும் பாடத் தொழுது பணிந்தேத்த
15

பண்பகரும் பாவலர்கள் பல்லாண் டிசைபாட
செண்பகப்பூ வாசனைகள் திருக்கோயில் தான்வீச
16

இந்திரனும் இமையோரும் இலங்கும் மலர்தூவச்
சந்திரனும் சூரியனுஞ் சாமரங்கள் தான்போடக்
17

குன்றுமணி மாடங்கள் கோபுரங்கள் தான்துலங்கச்
சென்றுநெடு வீதியிலே திருவாய் மொழி விளங்க
18

அன்னம் நடைபயில் அரிவையர் மடலெழுதச்
சென்னல் குலைசொரியச் செங்குவளை தான்மலரக்
19

கரும்பு கலகலெனக் கஞ்ச மலர்விரிக்கக்
கரும்பு குழலூதத் தோகை மயில்விரிக்க
20

மாங்கனிகள் தூங்க மந்தி குதிகொள்ளத்
தேன்கூடு விம்மிச் செழித்து வழிந்தோடச்
21

சென்னல் விளையச் செகமுழுதும் தான்செழிக்கக்
கன்னல் விளையக் கமுகமரம் தான்பழுக்க
22

வெம்புலிகள் வாழும் மேரு சிகரத்தில்
அம்புலிகைக் கவளமென்று தும்பி வழிபறிக்கும்
23

மும்மாரி பெய்து முழுச் சம்பாத் தான்விளையக்
கம்மாய்கள் தான்பெருகிக் கவிந்து வழிந்தோட
24

வாழையிடை பழுத்து வருக்கைப் பிலாபழுத்துத்
தாழையும் பூத்துத் தலையாலே தான்சொரியப்
25

புன்னையும் பூக்கப் புறத்தே கிளிகூவ
அன்னமும் பேசும் அழகான தென்புதுவை
26

தலையருவி பாயும் தடஞ்சூழ்ந்த முக்குளமும்
மலையருவி பாயும் வயல் சூழ்ந்த தென்புதுவைப்
27

பவளமுடன் வச்சிரம் பச்சை மரகதமும்
தவளமொளி முத்துத் தான்கொழிக்கும் தென்புதுவைக்
28

காவணங்கள் மேவிக் கதிரோன் தனைமறைக்கும்
பூவணங்கள் சூழ்ந்து புதுவை மணங்கமழும்
29

தென்னை மடல்விரியச் செங்கரும்பு முத்தீனப்
புன்னை முகிள்விரியப் புதுவை வனந்தனிலே
30
திரு அவதாரம்

சீராரு மெங்கள்விஷ்ணு சித்தர்நந் தாவனத்தில்
ஏராருந் துளசிமுல்லை யேகமாய்த் தானும்வச்சு
31

வச்ச பயிர்களுக்கு வளரவே நீர்பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள்செய் துகந்திருக்கும் வேளையிலே;
32

பூமிவிண்டு கேட்கப் புகழ்பெருகு விஷ்ணுசித்தன்
பூமிவிண்ட தலம்பார்த்துப் போனார்காண் அவ்வேளை
33

ஆடித் திருப்பூரத்தில் அழகான துளசியின்கீழ்
நாடி யுதித்ததிரு நாயகியைச் சொன்னாரார்!
34

அப்போது விஷ்ணுசித்தன் அலர்மகளைத் தானெடுத்துச்
செப்பமுடன் "கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்"!!
35

"அய்யா உமக்கடியேன் அருமை களாக்கும்,
மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி" என்றார்!!!
36

அப்போது கேட்டு அருளப் பரவசமாய்ச்
செப்பமுடன் பெண்ணேந்தித் திருக்கோயில் தான்புகுந்து;
37

பூந்துளவ மணிவண்ணன் பொன்னடிக்கீழ்ப் பெண்ணைவிட
ஊர்ந்து விளையாடி யுலாவியே தான்திரியப்
38

பெண்கொணர்ந்த விஷ்ணுசித்தன் பெருமாளைத் தானோக்கிப்
'பெண்வந்த காரணமென் பெருமாளே சொல்லு" மென்றார்
39

அப்போது மணிவண்ணன் 'அழகான பெண்ணுனக்குச்
செப்பமுடன் வந்த திருக்கோதை நாயகியார்
40

என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை
உன்றன் மனைக்கு உகந்துதான் செல்லும்' என்றார்.
41

சொன்னமொழி தப்பாமல் சுந்தரியைத் தானெடுத்துக்
கன்னல் மொழி விரசைசு கையிலேதான் கொடுக்க
42

அப்போது விரசையரும் அமுதுமுலை தான்கொடுக்கச்
செப்பமுடன் தொட்டிலிலே சீராய் வளரவிட்டு
43

மாணிக்கங் கட்டிவயிர மிடைக்கட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில்
44

பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையரே தலேலோ,
45

அன்னமே தேனே அழகே அரிவையரே
சொன்னமே மானே தோகையரே தாலேலோ.
46

பொன்னே புனமயிலே பூங்குயிலே மாந்துளிரே
மின்னே விளக்கொளியே வேதமே தாலேலோ,
47

பிள்ளைகளும் இல்லாத பெரியாழ்வார், தனக்குப்
பிள்ளைவிடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ,
48

மலடி விரசையென்று வையகத்தோர் சொல்லாமல்
மலடு தனைத் தீர்த்த மங்கையரே தாலேலோ,
49

பூவனங்கள் சூழும் புதுவா புரிதனிலே
காவனத்தில் வந்துதித்த கன்னியரைச் சொன்னாரார்.
50

கண்ணேயென் கண்மணியே கற்பகமே தெள்ளமுதே
பெண்ணே திருமகளே பேதையரே தாலேலோ,
51

மானே குயிலினமே வண்டினமே தாறாவே
தேனே மதனாபிஷேகமே தெள்ளமுதே
52

வானோர் பணியும் மரகதமே மாமகளே
ஏனோர் கலிநீங்க இங்குவந்த தெள்ளமுதே,
53

பூமலர்கள் சூழும் பூங்கா வனத்துதித்த
மாமகளே சோதி மரகதமே தாலேலோ,
54

வண்டினங்கள் பாடும் மதுவொழுகும் பூங்காவில்
பண்டுபெரி யாழ்வார் பரிந்தெடுத்த தெள்ளமுதே,
55

சென்னல்களை முத்தீன்று செழிக்கும் புதுவையிலே
அன்னமே மானே ஆழ்வார் திருமகளே
56

"வேதங்க ளோதி வென்றுவந்த ஆழ்வார்க்குச்
சீதைபோல் வந்துதித்த திருமகளைச் சொன்னாரார்"!
57

முத்தே பவளமே மோகனமே பூங்கிளியே
வித்தே விளக்கொளியே வேதமே தாலேலோ,
58

"பாமாலை பாடிப் பரமனுக்கு என்னாளும்
பூமாலை சூடிப் புகழ்தளித்த தெள்ளமுதே"!!
59

அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்த
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ,
60
"எந்தை தந்தையென்று இயம்பும்பெரி யாழ்வார்க்கு
மைந்தர் விடாய்தீர்த்த மாதேநீ" தாலேலோ,
61

"பொய்கைமுத லாழ்வார்க்கும் பூமகளாய் வந்துதித்த
மைவிழிசோதி மரகதமோ" தாலேலோ!
62

"உலகளந்த மாயன் உகந்துமணம் பண்ணத்
தேவாதி தேவர் தெளிந்தெடுத்த தெள்ளமுதோ"!
63

"சொல்லை நிலையிட்ட சுந்தரராம் ஆழ்வார்க்குச்
செல்லப் பெண்ணாய்" வந்த திருமகளைச் சொன்னாரார்!
64

நாராணனை விஷ்ணுவென்று நண்ணுமெங்க ளாழ்வார்க்குக்
காரணமாய் வந்துதித்த கற்பகத்தைச் சொன்னாரார்!
65

உள்ள முருகி ஊசலிடும் பட்டருக்குப்
பிள்ளை விடாய்தீர்த்த பெண்ணமுதே தாலேலோ!
66

பாகவ தார்த்தம் பாடுமெங்க ளாழ்வார்க்குத்
தாகவிடாய் தீர்த்த தங்கமே தாலேலோ!
67

தென்புதுவை வாழும் ஸ்ரீவிஷ்ணு தீர்த்தனுக்கு
அன்புடனே வந்துதித்த அன்னமே தாலேலோ!
68

சாஸ்திரங்கள் ஓதும் சத்புருஷன் ஆழ்வார்க்குச்
சோஸ்திரஞ் செய்து துலங்கவந்த கண்மணியோ!
69

வாழைகளும் சூழ்புதுவை வாழுமெங்க ளாழ்வார்க்கு
ஏழையாய் வந்துதித்த ஏந்திழையே தாலேலோ!
70

கன்னல்களுஞ் சூழ்புதுவை கார்க்குமெங்க ளாழ்வார்க்குப்
பன்னுதமிழ் என்னாளும் பாடநல்ல நாயகமோ!
71

பல்லாண்டு பாடும் பட்டர்பிரா னாழ்வார்க்கு
நல்லாண்டில் வந்துதித்த நாயகியைச் சொன்னாரார்!
72

எந்தாகம் தீத்து ஏழேழு தலைமுறைக்கும்
வந்தாளும் செல்வ மங்கையரே தாலேலோ!
73

என்றுநிதம் கோதையரை எடுத்து வளர்க்கையிலே;
'அன்றொருநாள் விஷ்ணுசித்தன் முதுமலர் தொடுத்துவைக்கத்,
74

தொடுத்துவைத்த மலரதனைச் சூடி நிழல்பார்த்து
விடுத்துவைத்துக் கோதையரும் விளையாட்டி லேதிரிய
75

அப்போது விஷ்ணுசித்தன் அனுஷ்டான முதலசெய்
தெப்போதுங் போல்கோயிற் கேகவே வேணுமென்று
76

தொடுத்த மாலைதனைச் சுவாமிக்கே சாத்தவென்று
எடுத்தேகு மாழ்வாரும் என்கையிலே கேசங்கண்டு
77

பெண்ணரசி கோதை குழல்போலே யிருக்குதென்று
பெண்ணான கோதைக்குக் காட்டியே தானுருக்கிப்
78

பின்பு வனம்புகுந்து பிரியமாய்ப் பூக்கொய்து
அன்புடனே மாயனுக் கலங்கார மாய்ச்சாத்த".
79

அப்போது மணிவண்ணன் ஆழ்வாரைத் தான்பார்த்து
"இப்போது மணங்காணேன் ஏதுகா ணாழ்வாரே"
80

என்று சொல்ல, ஆழ்வாரும் இருகையும் தான்கூப்பித்;
"துன்றிவளக் கோதையரும் சூடியே தானும்வைத்தாள்.
81

அம்மாலை தள்ளி அழகான பூக்கொணர்ந்து
நன்மாலை கொண்டு நானுனக்குச் சாத்தவந்தேன்"
82

என்றுசொல்ல, மணிவண்ணன் இன்பமாய்த் தான்கேட்டு,
"நன்றாக ஆழ்வாரே நானுனக்குச் சொல்லுகிறேன்:-
83

ஒன்மகளும் பூச்சூட்டி ஒருக்கால் நிழல்பார்த்து
பின்பு களைந்து பெட்டியிலே பூ வைப்பாள்.
84

அம்மாலை தன்னை ஆழ்வாரே நீ ரேத்துவந்து
இம்மாலை சாத்தி யிருந்தீ ரிதுவரைக்கும்.
85

இன்றுமுதல் பூலோக மெல்லாந் தானறிய
அன்றுமலர் கொய்து அழகாகத் தான்தொடுத்துக்
86

கோதை குழல்சூடிக் கொணருவீர் நமக்குநிதம்
கீதமே ளத்தோடும் கீர்த்தனங்கள் தன்னோடும்
87

இன்றுமுதல் சூடிக்கொடுத்தா ளிவள்பேரும்
நன்றாகத்தான் வாழ்த்தும் நன்மையே தான்பெறுவீர்!
88

என்றுரைக்க மணிவண்ணன் யேகினர்காண் ஆழ்வாரும்
சென்றுவந்த மாளிகையில் சிறப்பா யிருந்துநிதம்
89

நீராட்டி மயிர்முடித்து நெடுவேற்கண் மையெழுதி
சீராட்டிக் கோதையரைச் சிறப்பாய் வளர்க்கையிலே
90
ஊரார் உறமுறையார் உற்றார்கள் பெற்றோர்கள்
சீரான ஆழ்வாரைச் சிறப்பாகப் பெண்கேழ்க்க;
91

அப்போது விஷ்ணுசித்தன் அழகான கோதையரை
செப்பமுடன் மடியில் வைத்துத் திருமாலைதான் கொடுத்து
92

'உனக்கேதம் பிள்ளைகட் குகந்தே மலர்சூடி
மனைக் காவலனென்றும் மகிழ்ந்தேத்தி வாழும் என்றார்.
93

அவ்வார்த்தை கேட்டு அழகான கோதையரும்
செவ்வான வார்த்தையென்று திரும்பியே தானுரைப்பாள்
94

வையம் புகழய்யா மானிடவர் பதியன்று!
"உய்யும் பெருமாள் உயர்சோலை மலையழகர்
95

இவர்கள் தாம்பதி இரண்டாம் பதியரில்லை!!
அவர்கள் தம்பாட்டில் அனுப்பியே வையும்!!! என்றார்
96

இவ்வார்த்தை கேட்டு இனத்தோரெல்லோரும்
செவ்வான வடிதேடித் தேசத்தே போனார்கள்
97

போனபின்பு விஷ்ணுசித்தன் பொன்னே புனமயிலே
ஞானமுடன் வந்துதித்த நாயகியைச் சொன்னாரார்.
98

இப்படிக் கோதையரும் இருந்து வளருகையில்,
ஒப்பிலாள்நோம்பு உகந்துதான் நோர்க்கவென்று
99

மணிவண்ணர் தனைத்தேடி மனக்கருத்தை யவர்க்குரைத்துப்
பணிசெய்த விருதுகளைப் பாரிப்பாய்த் தான்கேழ்க்க!
100

மகிழ்ந்து மணி வண்ணன் மனமுவந்து மறையோர்க்குப்
புகழ்ந்துதான் உத்தரவு பொருமுதலுந் தான்கொடுக்க!!
101

உத்தரவு வாங்கி உலகெலாந் தான்நிறைய;
'ந்஢த்தமொரு நோன்பு நேத்தியாய்த் தான்குளித்து
102

மாயவனை நோக்கி வந்தி மலரெடுத்து
மாயவனைப் போத்தி மணம்புணர வேணுமென்று
103

மார்கழி நீராடி மகிழ்ந்து திருப்பாவை
சீர்கள் குறையாமல் சிறப்பாகத் தான்பாடிப்
104

பாடிப் பறைகொண்டு பரமனுக்குப் பூமாலை
சூடிக் கொடுத்து தொழுது நினைத்திருக்க'
105

மாயவனும் வாராமல் மாலைகளுந் தாராமல்
ஆயன்முகங் காட்டாமல் ஆரு மனுப்பாமல்
106

இப்படிக்குச் செய்தபிழை யேதென்று நானறியேன்
செப்படி தோழியரே! திங்கள்முகக் கன்னியரே,
107

தோழியரும் தானுரைப்பாள் 'துய்யவட வேங்கடவன்
ஆழியுடன் வந்து அழகாய் மணம்புணர்வார்'
108

என்றுசொலக் கோதையும் இதையுங் குழைந்து நிதம்
அன்றில் குயில்மேகம் அரங்கருக்குத் தூதுவிடத்,
109

'தூதுவிட்டும் வாராமல் துய்ய வேங்கடவன்
எதிரிருந்து கொண்டார் இனிமேல் மனஞ்சகியேன்
110

என்று மனம்நொந்து இருக்க நிதங் கோதையரும்
சென்றுவந்து தோழியர்கள் செப்பவே பாவையர்க்கு
111

'அச்சேதி கேட்டு ஆழ்வார் நடுநடுங்கி
அச்சுதனைப் பாடும் அழகான கோதையர்க்குச்
112

சென்றுவந்து பிள்ளைவிடாய் தீர்த்த திருமகட்கு
மன்றலுஞ் செய்யாமல் வச்சிருந்தால் மோசம்வரும்,
113

என்று திருமகளை எடுத்துச் சிவிகைவைச்சு
சென்று திருவரங்கம் சேவிக்க வேணுமென்று
114

நல்லநாள் பார்த்து நடந்து திருவரங்கம்
எல்லையுங் கிட்டி இருந்துதென் காவிரியில்
115

நீராட்டஞ் செய்து நெடும்போது செபஞ்செய்து
சீராட்ட வந்து திருமகளத் தான்தேடப்
116

பல்லக்கில் காணாமல் பந்தொடியார் காணாமல்
எல்லாருங் காணாமல் என்மகளை யாரெடுத்தார்
117

நின்று மனம்நொந்து நாற்றிசையும் தான்தேடி
சென்று திருவரங்கத் திருக்கோயில் தான்புகுந்து
118

ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்!
119

என்றாழ்வா ருஞ்சொல்ல இரங்கித் திருவரங்கர்
சென்றெங்களய்யர் திருவடியைத் தான்தொழுவார்!
120
அப்போது கோதையரும் அரங்கர் அடியைவிட்டு
இப்போதும் அய்யர் இணையடியைத் தான்தொழுதாள்!!
121

வாழ்த்தியே அய்யர் மகிழ்ந்து மகள்தனக்கும்
வாழ்த்தியே முற்று மகிழ்ந்து ரெங்கருக்கும்.
122

வாழிமுதல் பாடி மங்களமும் தான்பாடி
'ஆழிநீர் வண்ணனுக்கு அழகாய் மணம்புணர்வாய்!
123

என்று சொல்லி யாழ்வாரும் இன்பமாய் ரெங்கர்தனை
மன்றல்செய்ய வாருமய்யா மணவாளா என்றழைத்தார்!
124

பங்குனி மாசப் பவர்ணமையில் உத்திரத்தில்
அங்கூரஞ் செய்து அழகாய் மணம்புணர
125

வாருமைய்யா வென்று மகிழ்ந்தேத்தி ரெங்கரையும்
சீரணிந்த கோதைதனைச் சிறப்பாகத் தானழைக்க!!!
126

அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை விடைகொடுத்துத்
தப்பாமல் நான்வருவேன் தார்குழலி தன்னோடும்.
127

என்றுசொல்லி ஆழ்வாரும் ஏகியே வில்லிபுத்தூர்
சென்றுதிரு மாளிகையில் சிறப்பாகத் தானிருந்து
128

கோதையருக்கு மன்றல் கோஷமாய்ச் செய்யவென்று
.....................................................................................
129

சீதையர்க்கு மன்றல் சிறப்பாய்ச் செய்யவென்று,
ஓலை யெழுதி உலகெலாம் நாளனுப்பிக்
130

..............................................................
கரும்பினால் கால்நிறுத்திக் கற்பகத்தால் பந்தலிட்ட
131

கரும்பினிடை வாழை கட்டிக் கஞ்சமலர் தொங்கவிட்டுப்
................................................................
132

பூக்கள் கொணர்ந்து பூம்பந்தல் தான்போட்டு
.................................................................
133

மாங்கனிகள் தூக்கி வருக்கைப் பிலாதூக்கித்
தேங்கனிகள் தூக்கிச் சிறப்பா யலங்கரித்து.
134

மேளமுடன் மத்தளமும் மேல்முரசுந் தானடிக்கக்
காளமுடன் நாகசுரம் கலந்து பரிமாற.
135

வானவர்கள் மலர்தூவி வந்து அடிபணியக்
கானவர்கள் பூக்கொய்து கலந்து பணிந்தேத்த.
136

இந்திரனும் எண்டிசையும் இறைஞ்சி மலர்தூவச்
சந்திரனுஞ் சூரியனும் சாமரங்கள் தான்போட.
137

ரத்னமணி யாசனமும் ரத்தினக் கம்பளியும்
சித்ரமணி மண்டபமும் செம்பொன் குறடுகளும்.
138

ஆழ்வார் கிளையும் அயலோர்கள் எல்லோரும்
ஆழ்வார் திருமகளை அன்பாகப் போற்றவந்த
139

தூபம் கமழத் தொண்டர்களுந் தான்பாடத்
தீபம் துலங்க ஸ்ரீவைஷ்ண வோரிருக்க
140

வேதந் துலங்க மேன்மேலும் சாஸ்திரங்கள்
கீதம் முழங்கக் கீர்த்தனங்கள் தான்முழங்க.
141

வாத்திமார் புல்லெடுத்து மறைகள் பலஓதப்.
................................................................
142

பூரண கும்பமுதல் பொற்கலசம் தானும்வைத்து
நாரணனைப் போத்தி நான்மறைகள் தானோத.
143

இப்படிக்கு ஆழ்வாரும் எல்லாருங் காத்திருக்க
சத் புருடன் வாராமல் தாமசமாய்த் தானிருக்க.
144

கொற்றப் புள்ளியில் ரெங்கர் கொடிய வனங்கடந்து
வெற்றிச் சங்கூதி வில்லிபுத்தூர் தன்னில்வந்து.
145

மணவாள ராகிமணவறையில் தானிருந்து
மணஞ்செய்யும் வேளைகண்டு மறையோர்க்குத் தான்கொடுத்தார்
146

ஆடைமுத லாபரணம் அவனிமுதல் பால்பசுக்கள்
கோடைமுதல் தானங் கொடுத்து நிறைந்தபின்பு
147

மந்தரமார் கோடியுடுத்து மணமாலை
யந்தரி சூட்டி அழகான கோதையர்க்கு
148

மத்தளம்கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்தாலித் ததும்ப நிரைதரளப் பந்தலின்கண்
149

கைத்தலம் பத்திக் கலந்து பரிமாற.
.......................................................
150

ஆழ்வார் திருமகளை அழகாகத் தான்வாங்கி.
151

மன்றலுஞ் செயது மகிழ்ந்து மதுவர்க்கம்
கன்றலு மூன்று கழித்து அரங்கருந்தான்
152

அக்கினி வளர்த்து அழகா யலங்கரித்து
அக்கினியைப் போத்தி அக்ஷதையும் தான்தூவி
153

வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்.
.....................................................................
154

பஞ்சிலை நாணற் படுத்துப் பரிவைத்து
...............................................................
155

ஓமங்கள் செய்து ஒருக்காலும் மலர்தூவி
.................................................................
156

காசின் பணங்கள் கலந்துதா னெங் கொடுத்து
................................................................
157

தீவலஞ் செய்து திரும்பி மனையில்வந்து
.................................................................
158

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பார்த்தவாய்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
159

செம்மையுடைய திருக்கையால் தாழ்த்தி
அம்மி மிதித்து அருந்ததியும் தான்பார்த்து
160

அரிமுதன் அச்சுதன் அங்கைமேலும் கைவைத்துப்
பொரி முகந்தபடிப் போத்தி மறையோரை
161

அக்ஷதைகள் வாங்கி அரங்கர் மணவரையில்
பக்ஷமுட னிருந்து பாக்கிலையுந் தான்போட்டுக்
162

கோதையுடன் கூடிக் குங்குமச் சப்பரத்தில்
சீதையுடன் கூடிச் சிறப்பாகத் தானிருந்தார்.
163

அச்சேதி கேட்டு ஆழ்வார் மனமகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது.
164

என்று பெரியாழ்வார் இளகி மனமகிழ்ந்து
குன்று குடையெடுத்த கோனை மகிழ்ந்துநிதம்.
165

வாழி முதல் பாடி மங்களமும் தான்பாட
ஆழிமுதல் பாடி ஆழ்வாரும் போற்றிநின்றார்
166

வாழும் புதுவைநகர் மாமறையோர் தான்வாழி
ஆழிநிறை வண்ணன்முதல் ஆழ்வார்கள் தான்வாழி
167

கோதையரும் வாழிகோயில்களும் தான்வாழி
சீதையரும்வாழி செகமுழுதும் தான்வாழி.
168
கோதை நாச்சியார் தாலாட்டு முற்றிற்று.
கோதை நாச்சியார் தாலாட்டு : ஒரு முன்னுரை
கொண்டல் வண்ணனைக் குழவியாய்க் கண்டு குதூகலித்துப் பாடிய விட்டு சித்தரின் மகள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள். குழல் இனிது, யாழ் இனிது, மழழைச் சொல் அமுதினிது என்று இறைவனைப் பிள்ளையாய்க் கண்டு ஆனந்தித்துப் பாடிய பெரியாழ்வாழ்வருக்கு - உண்மையான தூண்டுதல் (inspiration) ஆண்டாள் என்ற இளம் சிட்டிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும். "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! ஆடிவரும் தேரே!" என்று கண்ணனைப் பாடிய பாரதியின் அழியாக் கவிதைக்கு அவர் மகள் காரணியாக இருந்தது போல்! இப்படியானதொரு சிந்தனை சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு வைணவ அன்பருக்கு ஏற்பட்டு அவர், விட்டு சித்தரின் வழியில், அவரது வரிகளை உரிமையுடன் கையாண்டு அவரது மகளான கோதை நாச்சியாருக்கு ஒரு தாலாட்டுப் பாடியுள்ளார். ஆழ்வார்திருநகரி என்னும் ஊர் தமிழ்த் தாத்தா உ.வே.சா, மகாவித்வான் இரா.இராகவையங்கார் போன்றோருக்குப் பண்டைத் தமிழ்க் கருவூலங்களைத் தந்த புண்ணிய பூமியாகும். பழந்தமிழ்நூல் வெளியீடுகளுள் பத்துப்பாட்டு, பதிற்றுப் பத்து, பரிபாடல், புறநானூறு முதலிய நூற்பதிப்புகளுக்கு ஆழ்வார்திருநகரி ஏட்டுப் பிரதிகள் மிகவும் உபயோகமாயிருந்தன என்பது உ.வே.சாவின் கூற்று. அத்தகைய ஆழ்வார்திருநகரியில் கிடைத்திருக்கும் மற்றுமொரு தமிழ்க் கருவூலம்தான், "கோதை நாச்சியார் தாலாட்டு". ஏடுகளில் கண்டபடி 1928-ல் ஆழ்வர்திருநகரி திருஞான முத்திரைக் கோவை பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

ஆக்கியோன் பெயர் ஏட்டில் அழிந்து விட்டதாலோ, இல்லை , "நாடோ டிப் பாட்டுக்கு தாய் தந்தை யாரோ?" எனும் படியாகவோ இந்நூலை ஆக்கியோன் பெயர் விட்டுப் போயிருக்கிறது. பழம் ஓலைச் சுவடிகளைச் சரியாகப் பராமரிக்கவில்லையெனில் அவை பூச்சிகளின் வாய்க்கு இரையாகி அழிந்துவிடுகின்றன. இந்நூலில் பல வரிகள் அச்சிடப் படாததற்குக் காரணம் அவை வாசிக்கத் தக்கதாய் இல்லை என்று ஊகிக்கலாம். இல்லை, வாய் மொழியாகக் கேட்ட பாடலைப் பதிவு செய்தவருக்கு ஞாபகத்தில் வராத வரிகளை எழுதாமல் விட்டு விட்டார் என்றும் கருதலாம். 1928 புத்தகம் இது பற்றி ஒரு சேதியும் தராமல் நம்மை இப்படியெல்லாம் ஊகிக்கவிடுகிறது.

தாலாட்டு ஒரு மக்கள் கலை. அடுப்படிப் பெண்களின் கவித்துவத் தூறல். தவழும் குழந்தைக்கு தூளிக் கயிற்றில் அன்பைப் பாய்ச்சும் மந்திரப் பாடல்கள். தூளியில் உறங்கும் எளிமையின் உருவைத் திருமகளாகக் காணும் தாயின் பரிவைப் பதிவு செய்யும் பாடல்கள் தாலாட்டு. திருமகளே உரு எடுத்து விட்டு சித்தருக்கு மகளாகப் பிறந்த பின், அவளுக்குத் தாலாட்டுப் பாடாமல் வேறு யாருக்குப் பாடுவது? வைணவம் என்பதின் மறு பெயர் அன்பு, பரிவு, காதல் என்பவை.

முதல் மூவருக்கிடையில் இடித்துப் பழகும் தோழனாக நாராணன் இடையில் புகுந்தான். வாள் கொண்டு போர் செய்யும் வேல் மாந்தர் கள்ளத் தொழில் செய்த போது, மறைமகன் திருடனாக வந்து வழி மறைத்தான், பறைமகன் தானொருவன் பரம்பொருளைத் தொழத் தடை சொன்னபோது மறை சொல்லும் நூலார் தலைமேல் தூக்க வைத்தான் நம் பெருமாளான, "நீதி வானவன்!", கள்ளமற்ற விட்டு சித்தர் உள்ளம் கவர்ந்து வெண்ணெய் உண்ட வாயனாக வளைய வந்தான் வீட்டு முற்றத்தில் மணிவண்ணன், ஆனால், அவர் மகள் கோதைக்கோ, "மானிடற்கு மணமென்ற பேச்சுப் படின் மரிதிடுவேன்" எனப் பேச வைத்து மணவாளனாக வந்து உய்யக் கொண்டான். இப்படி வீட்டுக் கொல்லையில் வளைய வரும் கன்று போல், கை கொண்டு நெருடும் அன்பர்க்கு கழுத்தை தரும் பசும் கன்று போல் அன்று முதல் இன்றுவரை வளைய, வளைய வருகிறான், "பண்டமெல்லாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப், பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து, நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்" வளைய, வளைய வருகிறான் மாதவன். இத்தனைச் சுகம் தரும் வைணவத்தின் மறுபெயர் அன்பு, காதல், பரிவு என்றால் மிகையோ?

எனவே பரிவுடன் வரும் தாலாட்டில் வைணவத்தின் மெல்லிசை குழல் போல் ஒலிப்பது தவறோ? தவறில்லை என்று சொல்லித் தாலாட்டுப் பாடினர் முன்னைய மாந்தர். கண்ணனுக்குத் தலாட்டு பலபாடி வைத்து விட்டார் புதுவைப் பட்டர் என்று சொல்லி, கோதைக்குத் தாலாட்டுப் பாடினர் கொங்கைப் பெண்டிர்!

இத்தாலாட்டு பல வைபவங்கள் கொண்டது.

புதுவை நகர் என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரின் அழகு முதலில் சொல்லப்படுகிறது.
கரும்பு கலகலெனக் கஞ்ச மலர்விரிக்கக்
கரும்பு குழலூதத் தோகை மயில்விரிக்க
20
மாங்கனிகள் தூங்க மந்தி குதிகொள்ளத்
தேன்கூடு விம்மிச் செழித்து வழிந்தோடச்
21
.........
புன்னையும் பூக்கப் புறத்தே கிளிகூவ
அன்னமும் பேசும் அழகான தென்புதுவை
26
கன்னல் தமிழர் வாழ்வுடன் இணைந்த ஒரு பயிர். கன்னல் மொழிப்பெண்டிர் நிறைந்த தமிழ் மண்ணில் கன்னல் "கல, கலவென"ப் பேசுவதாகச் சொல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதே! கண்ணன் ஊரில் கரும்புகள் குழல் ஊதுவதும் இயல்பான ஒன்றே! கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்ற பெருமிதத்தில் தேன் கூடுகள் கூட நெஞ்சு விம்மி தேன் பாய்ச்சுவது கவிச் சுவையின் உச்சம்!!

அடுத்து, கோதை நாச்சியாரின் திரு அவதாரம்!

கிரேக்க, ரோம பழம் தொன்மங்களை விஞ்சும் தொன்மங்கள் தமிழில் உண்டு என்தற்கு கோதையின்
கதை நல்ல உதாரணம். பூமி விண்டு கோதை பிறக்கிறாள். மண்ணின் மாது அவள்.
அப்போது விஷ்ணுசித்தன் அலர்மகளைத் தானெடுத்துச்
செப்பமுடன் "கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்"!!
35
"அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கும்,
மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி" என்றார்!!!
36
சீதை போல் பூமியின் புதல்வியான கோதை, கண்விழித்துச் சொல்லும் முதற் சொல், "மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி" என்பது! இவள் துளசியின் புதல்வி! காளிதாசன் சொல்லாத கவி நயம் ஒரு எளிய தமிழ்த் தாலாட்டில் கிடைப்பது, நாம் செய்த பாக்கியம்!
வைணவத் தொன்மங்களில் (myths), குரு பரம்பரைக் கதைகளில் மிகச் சாதாரணமாக பக்தனுக்கும், பரம்பொருளுக்கும் உரையாடல் நடக்கும். இது, இந்த நூற்றாண்டு "கோபல்ல கிராமம்" வரை கடை பிடிக்கப் படுகிறது (கோபல்ல கிராமத்தின் மூத்த குடிகள் பரம வைஷ்ணவர்கள்). அதனால்தான், திருவரங்கத்துயில் பரம்பொருள், "நம் பெருமாள்" என்றழைக்கப் படுகிறார். நம் பெருமாள், நம்மாழ்வார், நம் ஜீயர், எம்பெருமானார் என்று இவர்கள் கொண்டாடும் பந்தம் பக்தனைப் பிச்சேற்றுவது!!
பெண்கொணர்ந்த விஷ்ணுசித்தன் பெருமாளைத் தானோக்கிப்
'பெண்வந்த காரணமென் பெருமாளே சொல்லு" மென்றார்
39
அப்போது மணிவண்ணன் 'அழகான பெண்ணுனக்குச்
செப்பமுடன் வந்த திருக்கோதை நாயகியார்
40
என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை
உன்றன் மனைக்கு உகந்துதான் செல்லும்' என்றார்.
41
அந்தச் சம்பிரதாயம் மாறாமல் விட்டு சித்தர் பெருமாளிடம் போய் பெண்வந்த காரணம் கேட்டு பேரும் வைத்து வருகிறார்.

விட்டு சித்தர், கண்ணனுக்குப் பாடிய வரிகளை ஒரு வைணவ உரிமையுடன் கோதைக்குப் பாடுவதாகச் சொல்வது, "தொண்டீர்! எல்லீரும் வாரீர், தொழுது, தொழுது நின்றார்த்தும்!" என்ற நம்மாழ்வாரின் எட்டாம் நூற்றாண்டு வைணவ அறைகூவல் (an address of Vaishnava congress) இன்றளவும் கேட்பதன் அறிகுறியென்றே கொள்ள வேண்டியுள்ளது. மேலும் அவரே சொல்வது போல், "தடங்கடல் பள்ளிப் பெருமான், தன்னுடைப் பூதங்களேயாய் (பூதம்=பக்தன்) கிடந்தும், இருந்தும், எழுந்தும், கீதம் பலபல பாடி, நடந்தும், பரந்தும், குனித்தும் நாடகம் செய்கின்றனவே" - கடல் வண்ணனே, பக்தர்கள் உருவில் வந்து நாடகம் ஆடுவதாகச் சொல்வதால், கண்ணனுக்குப் பாடிய சொல் கோதைக்கும் பொருந்துவது இயல்பானதே. அந்த உரிமையின் குரல் இத்தாலாட்டு முழுவதும் கேட்கிறது.
மாணிக்கங் கட்டிவயிர மிடைக்கட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில்
44
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையரே தலேலோ,
45
ஒரே பாட்டில் ஒரு யுக பந்தத்தைக் காட்ட முடியுமெனில் அது தாலாட்டில்தான் முடியும் என்பதற்கு கீழ்க்காணும் வரிகளே சான்று;
அன்னமே தேனே அழகே அரிவையரே
சொன்னமே மானே தோகையரே தாலேலோ.
46
பொன்னே புனமயிலே பூங்குயிலே மாந்துளிரே
மின்னே விளக்கொளியே வேதமே தாலேலோ,
47
இப்படிப் பாசமுடன் வளர்க்கப்படும் குழந்தை நல்லதொரு தமிழ்க் குடியாக வராமல் என்ன செய்யும்?

கம்பனும், வள்ளுவனும், பாரதியும் அணி செய்த தமிழுக்குப் பெண்மை மணம் தந்தவள் ஆண்டாள். அவள் இல்லையேல் இன்று மார்கழி நோன்பு இல்லை. ஒரு அழகிய திருப்பாவையில்லை. நாச்சியார் மொழியில் இல்லாத பெண்மையை வேறெங்கு காணமுடியும்? கோதை தந்த தமிழுக்கு, தமிழ் சொல்லும் தாலாட்டுதான், இத்தாலாட்டு :
முத்தே பவளமே மோகனமே பூங்கிளியே
வித்தே விளக்கொளியே வேதமே தாலேலோ,
58
"பாமாலை பாடிப் பரமனுக்கு என்னாளும்
பூமாலை சூடிப் புகழ்தளித்த தெள்ளமுதே"!!
59
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்த
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ,
60

அடுத்து, சூடிக் கொடுக்கும் வைபவம் பேசப் படுகிறது. ஒரு பக்தை சூடிக் கொடுத்த மாலையைப் பரிவுடன் ஏற்கிறான் பரந்தாமன். இது பக்தியின் சக்தியை அவனிக்குச் சொன்ன முக்தி இரகசியமாகும். கோதை காவியத்தின் உயிரான வரிகளை எளிமையாய் சொல்கிறது இத்தாலாட்டு:
வையம் புகழய்யா! மானிடவர் பதியன்று.
"உய்யும் பெருமாள் உயர்சோலை மலையழகர்
95
இவர்கள் தாம்பதி இரண்டாம் பதியரில்லை!!
அவர்கள் தம்பாட்டில் அனுப்பியே வையும்!!! என்றார்
96
இச்சூளுரைதான், காட்டுத்தீ போல் இந்தியா முழுதும் பரவி, இன்று பிரபு பாதாவின் முயற்சியால் உலக மாந்தரை உய்யக் கொண்டுள்ளது. மானிடர்க்குப் பதி என்பவன் இறைவன் ஒருவன்தான். நாம் எல்லோரும் அவன் தோட்டத்து கோபியர்கள் என்னும் Yin Yan தத்துவத்தை விளம்பும் வரிகள் இவை.

அடுத்து மார்கழி நோன்பு பற்றிப் பேசுகிறது தாலாட்டு. "தூயோமாய் வந்தோம்" என்னும்படி உள்ளத் தூய்மைக்கு வித்திடுவது நோன்பு ஆகும். நோன்பு கழித்த பின்தான் இறைத் தரிசனம் சாத்தியமாகிறது. அது "நெய்யுண்ணோம், பாலுண்ணோம்" என்னும் விரதம் மட்டுமன்று, "செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்" என்பதும் அடங்கும். உடலையும், மனதையும் சுத்தப் படுத்தும் போது இறையொளி சாத்தியப் படுகிறது.

அடுத்து, கோதைக் கல்யாண வைபவம் பேசப்படுகிறது.

எளிமையின் மறு உருவான விட்டு சித்தரின் வாழ்வு பல திருப்பங்கள் கொண்டது. பூவின் இனம் காணும் பட்டரின் வாய் வழியாய் கவிதையில் இனம் காண வைக்கிறான் பரந்தாமன். பிள்ளைத் தமிழை தமிழுக்குத் தரும் உள நோக்குடன்!! பிள்ளைத் தமிழ் பாடினால் போதாது என்று பர தத்துவம் பேச வைத்து பொற்கிழி கொண்ட பிரானாக்கி,' நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை" என்பது போல் கூடல் சனம் அத்தனைக்கும் அன்று வைகுந்த தரிசனம் அளிக்கிறான் இறைவன். பின் பிள்ளையற்ற பட்டருக்கு பிள்ளை விடாய் தீர்க்க ஆண்டாளைத் தந்துய்வித்தான். கொடுத்த பெண்ணை மணம் பெரும் வயதில் மறைத்து வைத்து,
ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்!

என்றாழ்வா ருஞ்சொல்ல இரங்கித் திருவரங்கர்
சென்றெங்களய்யர் திருவடியைத் தான்தொழுவார்!

ஆக, யசோதையின் பாவத்தில் பாடிய பட்டர்பிரானை உண்மையான அன்னையென்றே கருதி அய்யரவர் திருவடியைத் திருவரங்கன் தான் தொழுகின்றான். பாகவதன் திருப்பாதத் தூளியில் சுகம் காணும் பாகவதப் பிரியனான கீதாசிரியன், அத்தோடு நில்லாமல் அவர் தம் திருமகள் பாத மலரையும் தொடுகின்றான். முன்பு வந்து எல்லோர்க்கும் அருளியது போதாது என்று பட்டர் பிரான் சம்மந்தமுடைய அனைவருக்கும் மணவாளனாக வந்து மீண்டுமொருமுறை காட்சியளிக்கின்றான்.
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி 159
செம்மையுடைய திருக்கையால் தாழ்த்தி
அம்மி மிதித்து அருந்ததியும் தான்பார்த்து
160
அரிமுதன் அச்சுதன் அங்கைமேலும் கைவைத்துப்
பொரி முகந்தபடிப் போத்தி மறையோரை............
நாராணனுக்குப் பெருமை "நம்மை உடைத்தல்" என்று சொல்லும் வரிகளை வேறு எந்த நெறியிலும் காணப்பெறோம். செம்மையுடைய திருக்கையால் அம்மி மிதித்து, அங்கைமேல் கைவைத்து பொரி முகர்ந்த சேதி வேறு எங்கேணும உண்டோ ? பரம் பொருளை "தாழ்த்தி அம்மி மிதி"க்க வைத்த திறம் தமிழுக்கு உண்டு ஆரியத்திற்கு உண்டோ ?

அச்சேதி கேட்டு ஆழ்வார் மனமகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது.

என்று சொல்வதாகப் பேசுகிறது கோதை தாலாட்டு. இதுதான் எவ்வளவு உண்மை!!

ஆண்டாள், "வாரணமாயிரம்" என்று தொடங்கும் பாடல்களில் திருமண வைபவத்தைப் பதிவு செய்கிறாள். அதில் விட்டுப் போன சில சேதிகள் (details) இத்தாலாட்டில் இடம் பெறுகிறது.
தாயின் சொல் அமுது என்பது இப்பாட்டில் தெரிகிறது. செந்தமிழ், தாய் சொல் பட்டு மென்மையாகிப் போகிறது.
சீராரு மெங்கள்விஷ்ணு சித்தர்நந் தாவனத்தில்
ஏராருந் துளசிமுல்லை யேகமாய்த் தானும்வச்சு
31
வச்ச பயிர்களுக்கு வளரவே நீர்பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள்செய் துகந்திருக்கும் வேளையிலே;
32
என்று கிராமத்து மக்கள் மொழியில் தாலாட்டு போகிறது. மேலும் சில உதாரணங்கள்:

நோம்பு (நோன்பு); நோன்பு நேத்தியாய் (நேர்த்தியாய்); மாயவனைப் போத்தி (போற்றி) ஆரு மனுப்பாமல் (யாரும் அனுப்பாமல்); மன்றலுஞ் செய்யாமல் வச்சிருந்தால் (வைத்திருந்தால்) கைத்தலம் பத்திக் கலந்து (கைத்தலம் பற்றி); சத் புருடன் வாராமல் தாமசமாய்த் தானிருக்க. - தாமசம்? தாமதம்!! வாத்திமார் புல்லெடுத்து மறைகள் பலஓத !!

நாட்டுப் பாடல்களுக்கான தனி மொழி இத்தாலாட்டிலும் ஒலிக்கிறது.

"ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்!"

என்று விட்டு சித்தர் அன்று கதறியது இத்தாலாட்டின் வாயிலாக இன்று நம் நெஞ்சைக் கலக்குகிறது.

"அய்யர் இணையடியைத்" என்று சொல்வதிலிருந்து இப்பாடல் இயற்றப் பட்ட காலத்தில் ஐயங்கார் என்ற ஒரு பிரிவு தோன்றவில்லையென்று தெரிகிறது. இல்லையெனில் பரம வைஷ்ணவரான விட்டு சித்தரை ஐயங்கார் என்றே இத்தாலாட்டு இயம்பியிருக்கும். 1928-ல் பதிப்பிக்கப் பட்டு இன்று 73 ஆண்டுகளாகின்றன (2001). இவ்வோலைச் சுவடி பதிப்பிக்கப் பட்ட காலம் புத்தகத்தில் இல்லை. ஐயங்கார் என்ற பிரிவு ஆங்கிலேயர் காலத்தில் உருவானது என்று சொல்வர். அப்படியெனில் இத்தாலாட்டு ஆங்கிலேயர் வருகைக்கு முன் எழுதப் பட்டிருக்குமோ?

ஆழிநிறை வண்ணன்முதல் ஆழ்வார்கள் தான்வாழி
கோதையரும் வாழிகோயில்களும் தான்வாழி
சீதையரும்வாழி செகமுழுதும் தான்வாழி.

ஆழ்வார்க்கு அடியான்
தாசன்

நா.கண்ணன் மே 27, 2001
ஜெர்மனி.

நன்றி: பதிப்பாசிரியர் திரு.பெரியன் ஸ்ரீநிவாசன் புதல்வர் திரு.S.நம்பி (ஆழ்வார் திருநகரி) அவர்களுக்கு

 



 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home