"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
Etext Preparation: Ms. Sarala Sandirasegarane, Kanpur, India and Mr. Srinivasa Varadarajan (aruLaracan) , St. Louis, MI, USA.; Proof Reading : Mr. Srinivasa Varadarajan (aruLaracan) , St. Louis, MI, USA
PDF and Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
We are grateful to Mr. Periannan Chandrasekaran of Atlana, GA, USA for providing us with a complete version of these works for etext preparation.
� Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் |
|
வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக் கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம் அம்பா னெய்யோ டாட லமர்ந்தா னலர்கொன்றை நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள் | ...1 |
பொடிகள் பூசித் தொண்டர் பின்செல்லப் புகழ்விம்மக் கொடிக ளோடுந் நாள்விழ மல்கு குற்றாலம் கடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய் அடிகண் மேய நன்னகர் போலும் அடியீர்காள் | ...2 |
செல்வ மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக் கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குற்றாலம் வில்லி னொல்க மும்மதி லெய்து வினைபோக *நல்கு நம்பான் நன்னகர் போலும் நமரங்காள் | ...3 |
(*நல்கு நம்பான் மேயநன் னகர்போலும் நமரங்காள் என்றும் பாடம்.) |
|
பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின்றேன் கொக்கின் கோட்டுப் பைங்கன ிதூங்கும் குற்றாலம் அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டோ ரனலேந்தும் நக்கன் மேய நன்னகர் போலும் நமரங்காள் | ...4 |
மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி குலையார் வாழைத் தீங்கனி மாந்தும் குற்றாலம் இலையார் சூல மேந்திய கையா னெயிலெய்த சிலையான் மேய நன்னகர் போலும் சிறுதொண்டீர் | ...5 |
மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணிவாரிக் கொய்ம்மா வேன லுண்கிளி வோப்பும் குற்றாலம் கைம்மா வேழத் தீருரி போர்த்த கடவுள்எம் பெம்மான் மேய நன்னகர் போலும் பெரியீர்காள் | ...6 |
நீல நெய்தல் தண்சுனை சூழ்ந்த நீட்சோலைக் கோல மஞ்ஞை பேடையொ டாடும் குற்றாலம் காலன் தன்னைக் காலாற் காய்ந்த கடவுள்எம் சூல பாணி நன்னகர் போலும் தொழுவீர்காள் | ...7 |
போதும் பொன்னு முந்தி யருவி புடைசூழக் கூதன் மாரி நுண்டுளி தூங்குங் குற்றாலம் மூதூ ரிலங்கை முட்டிய கோனை மிறைசெய்த நாதன் மேய நன்னகர் போலும் நமரங்காள் | ...8 |
அரவின் வாயில் முள்ளெயி றேய்ப்ப வரும்பீன்று குரவம் பாவை முருகமர் சோலைக் குற்றாலம் பிரமன் னோடு மாலறி யாத பெருமைஎம் பரமன் மேய நன்னகர் போலும் பணிவீர்காள் | ...9 |
பெருந்தட் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக் குருந்தம் ஏறிச் செவ்வழி பாடுங் குற்றாலம் இருந்துண் டேரும் நின்றுட் சமணும் எடுத்தார்ப்ப அருந்தண் மேய நன்னகர் போலும் அடியீர்காள் | ...10 |
மாட வீதி வருபுனல் காழி யார்மன்னன் கோட லீன்று கொழுமுனை கூம்புங் குற்றாலம் நாட வல்ல நற்றமிழ் ஞான சம்பந்தன் பாடல் பத்தும் பாடநம் பாவம் பறையுமே | ...11 |
பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம் |
|
திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம் பொருந்திப் பொருந்தாத வேடத்தால் காடுறைதல் புரிந்தசெல்வர் இருந்த விடம்வினவி லேலங்கமழ் சோலையின வண்டியாழ்செய் குருந்த மணநாறும் குன்றிடஞ்சூழ் தட்சாரற் குறும்பலாவே | ...1 |
நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பானம்மை ஆட்பலவுந் தானுடைய அம்மா னிடம்போலு மந்தட்சாரல் கீட்பலவுங் கீண்டுகிளை கிளையன் மந்திபாய்ந் துண்டுவிண்ட கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்பலாவே | ...2 |
வாடற் றலைமாலை சூடிப் புலித்தோல் வலித்துவீக்கி ஆட லரவசைத்த அம்மா னிடம்போலு மந்தட்சாரல் பாடற் பெடைவண்டு போதலர்த்தத் தாதவிழ்ந்து பசும்பொனுந்திக் கோடல் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தட்சாரற் குறும்பலாவே | ...3 |
பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடியாடிக் கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலும் கல்சூழ்வெற்பில் நீல மலர்க்குவளை கண்டிறக்க வண்டற்று நெடுந்தட்சாரல் கோல மடமஞ்ஞை பேடையோ டாட்டயருங் குறும்பலாவே | ...4 |
தலைவாண் மதியம் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித்தேவி முலைபா கங்காத லித்தமூர்த்தி யிடம்போலு முதுவேய்சூழ்ந்த மலைவா யசும்பு பசும்பொன் கொழித்திழியு மல்குசாரல் குலைவா ழைத்தீங் கனியுந் தேன்பிலிற்றும் குறும்பலாவே | ...5 |
நீற்றேது தைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றிக்கண்ணர் கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலும் குளிர்சூழ்வெற்பில் ஏற்றே னமேன மிவையோ டவைவிரவி யிழிபூஞ்சாரல் கோற்றே னிசைமுரலக் கேளாக் குயில்பயிலுங் குறும்பலாவே | ...6 |
பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலும்சூடிப் பின்றொத்த வார்சடைஎம் பெம்மா னிடம்போலும் பிலையந்தாங்கி மன்றத்து மண்முழவ மோங்கி மணிகொழித்து வயிரமுந்திக் குன்றத் தருவி யயலே புனல்ததும்புங் குறும்பலாவே | ...7 |
ஏந்துதிணி திண்டோ ளிராவணனை மால்வரைக்கீ ழடரவூன்றிச் சாந்தமென நீறணிந் தசைவ ரிடம்போலும் சாரற்சாரற் பூந்தணறு வேங்கைக் கொத்திறுத்து மத்தகத்திற் பொலியவேந்திக் கூந்தல் பிடியுங் களிறு முடன்வணங்கும் குறும்பலாவே | ...8 |
அரவி னணையானு நான்முகனும் காண்பரிய அண்ணல்சென்னி விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ்சாரல் மரவ மிருகரையு மல்லிகையுஞ் சண்பகமு மலர்ந்துமாந்தக் குரவமுறு வல்செய்யும் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே | ...9 |
மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூறுண்டு காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலும் கல்சூழ்வெற்பில் நீடுயர் வேய்குனியப் பாய்கடுவன் நீள்கழைமேல் நிருத்தஞ்செய்யக் கூடிய வேடுவர்கள் குய்விளியாக் கைமறிக்கும் குறும்பலாவே | ...10 |
கொம்பார் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற்றண்ணல் நம்பா னடிபரவு நான்மறையான் ஞானசம் பந்தன்சொன்ன இன்பாய பாடலிவை பத்தும் வல்லார் விரும்பிக்கேட்பார் நம்பால தீவினைகள் போயகலு நல்வினைகள் தளராவன்றே | ...11 |