Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி...

 
tirukkuRRAlak kuRavanjci, tirukkuRRAla mAlai and tirukkuRRAla UTAl
of tirikUTarAcappa kavirAyar

திரிகூடராசப்பக் கவிராயரின்
திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
 


Etext Preparation: Ms. Sarala Sandirasegarane, Kanpur, India and Mr. Srinivasa Varadarajan (aruLaracan) , St. Louis, MI, USA.; Proof Reading : Mr. Srinivasa Varadarajan (aruLaracan) , St. Louis, MI, USA
PDF and Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
We are grateful to Mr. Periannan Chandrasekaran of Atlana, GA, USA for providing us with a complete version of these works for etext preparation.
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி -- மதிப்புரை
(ஆசிரியர் : இரசிகமணி சிதம்பரநாத முதலியார், 1937 )

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழில் அருமையான கவிகள் இயற்றப்பட்டன. திருக்குறள், திருவாசகம், காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, குலசேகர ஆழ்வார் பாசுரங்கள், பொய்கையாழ்வார் பாடல்கள், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம் முதலானவை அனுபவிக்கத்தக்க கவிகள். அவைகளைக் கற்கும்போது தமிழராகிய நமக்குத் தனித்த ஒரு பேருவுவகை பிறக்கிறது. அவைகளுக்குப் பிற்பாடு உண்டாயிருக்கிற நூல்கள் - புராணங்கள், கோவைகள், அந்தாதிகள் எல்லாம் அனேகமாய்க் கவித்துவம் என்பது இல்லாத, எதுகை மோனைகளைக் கணக்காக அமையும்படி செய்து தீர்த்த செய்யுள்களாகத்தான் முடிந்தன. பூர்வமான, தமிழ்ப்பண்பு, கவிப்பண்பு, இதயப்பண்பு இவைகளை ஆசிரியர்கள் அறவே மறந்துவிட்டார்கள் அல்லது ஒழித்துவிட்டார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. "ஏது தமிழ்க்கவி அஸ்தமித்தே போய்விட்டதோ?" என்று அஞ்சவே தோன்றும்.

இந்த நிலைமையில் இருநூறு வருஷங்களுக்கு முன் திருநெல்வேலி ஜில்லாவில் மேலகரம் என்ற - சுமார் ஐம்பது கூரைவீடுகள் உள்ள - சிறிய ஊரில் இருந்த புலவர் ஒருவர் தமிழ்ப்பாஷையின் இன்ப நிலைகளை அனுபவத்தறிந்து அற்புதமான கவிகளைப்பாடி உதவினார் என்பது பாலைவனத்துக்கு மத்தியில் கற்பகக்காவைக் கண்டக் கணக்குத்தான். புலவர் திரிகூடராஜப்ப(ன்) கவிராயர் பாடிய "குறவஞ்சி" தன்னுடைய புலமையைக் காட்டிவிட வந்த சொற்கோவை அன்று; உண்மையாக இதயம் அனுபவித்த ரசங்களைத் தமிழுக்கே உரிய இசையிலும் தாளத்திலும் வைத்துப் பாடிய பாடல்கள். வழக்கோடு ஒட்டிய தமிழில் எளிமைபடக் பாடியிருப்பதால் தமிழராய்ப் பிறந்த யாருமே கவிரஸத்தை அனுபவிக்கும்படியாக இருக்கின்றன. தமிழ் நூல்களை முறையில் கற்றுணர்ந்தவர்களுக்கோ கற்கக் கற்கத் தெவிட்டாத தேன்தான்.

நாற்பது ஐம்பது வருஷத்துக்கு முன்பு திருநெல்வேலி மதுரைச் சீமையில் தமிழ் கற்றவர் என்றால் குற்றாலக் குறவஞ்சியைக் கல்லாதவர் இருக்கமாட்டார்கள். மந்தை நாடகத்திலும் பரதநாட்டியத்திலும் குறவஞ்சிப் பாடலைப் பாடுவது சாமான்யம். எல்லாப்பள்ளிக்கூடங்களிலுமே பாடமாக வைத்துப் பாடும்படியாகக் கற்பிப்பார்கள். "தமிழ் கற்பதே அகௌரவம். குற்றாலக் குறவஞ்சியைப் படிப்பது அனுபவிப்பது என்பது எவ்வளவு கேவலம்! ஆங்கிலக் கவிகளை வைத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி, அனுபவித்தோம்" என்று மாத்திரம் சொன்னால் போதும் அவர்களுக்குப் பெரிய பெரிய மதிப்பு.

பல பதிப்புகள் வௌிவந்தும், குறவஞ்சியைத் தமிழுலகம் கவனித்த பாடாக இல்லை. காரணம், மேலே சொன்ன ஆங்கில மோகம் ஒன்று. மற்றது, பண்டைத்தமிழ். பண்டைத்தமிழ் என்று வழக்கொழிந்த பாஷையில் எழுதிய நூல்களின்மேல் ஏற்பட்ட மோகம். தற்போது இந்த மோகம் எல்லாம் கொஞ்சம் தௌிந்து வருகிறது. உண்மையான தமிழ்க்கவியை அனுபவிக்கவேண்டும் என்ற அவா தமிழர் பலருக்கும் உண்டாகி வருகிறது.

குறவஞ்சி ஆசிரியர் காலத்தில் சாமான்ய மக்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் வின்னியாசமான செய்யுள்களிலும் கற்பனைகளிலும் மற்றும் போலியான விகடங்களிலுமே விருப்பம் இருந்தது. ஆகவே அவர்களுடைய விருப்பத்திற்கிணங்கியோ அல்லது மற்றப்புலவர்களோடு ஒட்டிப்போகும் காரணத்தினாலோ சிற்சில அவசியம் அல்லாத விஷயங்களும் கவிப்போக்குகளும் அங்கொன்று இங்கொன்று காணக்கிடக்கின்றன. அவைகளை ஒதுக்கிவிட்டு நூலைப்பார்ப்போமானால் ரொம்ப ரொம்ப வியக்கக்கூடிய தாயும் தெவிட்டாத ரஸம் உள்ளதாகவுமே இருக்கக்காண்போம். ஏதோ பழம் புத்தகங்களையும் நிகண்டுகளையும் வாசித்துவிட்டு அவைகளையுமே அப்படியுமிப்படியாக புரட்டுகிற காரியம் அல்ல. இயற்கையை - புற இயற்கையையும் மக்களின் உள இயற்கையையும் தன் இதயத்தோடு ஒட்டவைத்து அனுபவித்தவர்

இது புலவர் திருக்குற்றாலத்தைக் கண்டு பாடியதல்லவா! திணையிலக்கணத்தை முன்னால் வைத்துக் கொண்டு எழுதிய வெறும் சம்பபிரதாயச் செய்யுளா? மேலும் உண்மையான பழந்தமிழ்க் கவிகளை இதய தத்துவம் புலப்படும்படியாக ஊடுருவிக் கற்றிருக்கிறார்.
காதல் துறையில் வெள்வளையைக் காணோமே! காணோமே! என்று பாடியதெல்லாம் பார்த்துச் சடைத்துப் போயிருக்கிறோம். ஆனால் நம்முடைய ஆசிரியர் அதைக் கையாளுகிற விதத்தில் நாயகி கைவளையல்களை உண்மையில் காணாமல் போக்கிவிட்டு அங்குமிங்குமாகத் திகைத்துப் பார்க்கிற சாயல் நம் கண் முன்னால் வந்துவிடுகிறது.

குறத்தி வருகிறது, குறி சொல்கிறது, வேடன் வருகிறது, பறவைகள் மேய்கிறது முதலான பாடல்களைப் பார்த்தால் கவியெல்லாம், காட்டிலும் மலையிலும் தான் சஞ்சரிக்கிறது என்று சொல்லத் தோன்றும். எத்தனை தடவை படித்தாலும் அந்தப் பாடல்கள் புதிதாகவே தோன்றும்.

சமயபக்தி என்றால் அது சம்பந்தமாக மூர்த்தியையும் ஸ்தலத்தையும் அனுபவிக்கிறதும் கூடத்தான்.
போதும், என்று அழகாக அனுபவித்துப் பாடுகிறார். இயற்கை அழகையும், கடவுள் தத்துவத்தையும் ஒன்றாய்ச் சேர்த்து அனுபவித்து விடுகிறார். சிருஷ்டி தத்துவங்களில் உள்ள உண்மைகளை தற்காலத்து அறிவியல் நிபுணர்களைப்போல நேர்முகமாகக் கண்டு அனுபவித்துப் பாடுகிறார். ஒரே ஒரு தத்துவந்தான் சகல பகுதிகளையும் ஒழுங்கான முறையில் இயங்கச் செய்கிறது என்பது தற்காலத்து அறிவியல் முடிபு. அதை இருநூறு வருஷங்களுக்கு முன் நமது மேலகரம் கவிராஜர்
என்று உடல் புளகிக்கப் பாடுகிறார்.

இப்படிச் சிறிய விஷயம் பெரிய விஷயம் எல்லாவற்றையும் பற்றிப் பாடுகிறார். ஆனால் ஒன்று: அவைகளுக்குள் எல்லாம் ஒரு ஹாஸ்ய ரசமும் ஒரு பக்தி ரஸமும் பின்னிக்கொண்டு ஓடுவதைப் பார்க்கலாம். இதைப் பார்த்து அனுபவிக்கக் கொடுத்து வைத்தவர்கள் தமிழர்கள்தாம்.

(ரசிகமணி, 1937)

திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி
தற்சிறப்புப்பாயிரம்

விநாயகர் துதி

பூமலி யிதழி மாலை புனைந்தகுற் றாலத் தீசர்
கோமலர்ப் பாதம் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட
மாமதத் தருவி பாயு மலையென வளர்ந்த மேனிக்
காமலி தருப்போ லைந்து கைவலான் காவ லானே.
...1

முருகக்கடவுள்

பன்னிருகை வேல்வாங்கப் பதினொருவர் படைதாங்கப் பத்துத் திக்கும்
நன்னவவீ ரரும்புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின்முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ்தந் தானே.
...2


திரிகூடநாதர்

கிளைகளாய்க் கிளைத்தபல கொப்பெலாஞ் சதர்வேதம் கிளைக ளீன்ற
களையெலாஞ் சிவலிங்கம் கனியெலாம் சிவலிங்கம் கனிக ளீன்ற
சுளையெலாஞ் சிவலிங்கம் வித்தெலாஞ் சிவலிங்க சொரூ பமாக
விளையுமொரு குறும்பலவின் முளைத்தெழுந்த சிவக்கொழுந்தை வேண்டு வோமே.
...3


குழல்வாய்மொழியம்மை

தவளமதி தவழ்குடுமிப் பனிவரையின் முளைத்தெழுந்து தகைசேர் முக்கட்
பவளமலை தனிலாசை படர்ந்தேறிக் கொழுந்துவிட்டுப் பருவ மாகி
அவிழுநறைப் பூங்கடப்பந் தாமரையு மீன்றொருகோட் டாம்ப லீன்று
குவலயம்பூத் தருட்கொடியைக் கோதைகுழல் வாய்மொழியைக் கூறு வோமே.
...4

சைவசமயாச்சாரியார் நால்வருள் மூவர்

தலையிலே யாறிருக்க மாமிக் காகத்
தாங்குகட லேழழைத்த திருக்குற் றாலர்
சிலையிலே தடித்ததடம் புயத்தை வாழ்த்திச்
செழித்தகுற வஞ்சிநா டகத்தைப் பாட
அலையிலே மலைமிதக்க ஏறி னானும்
அத்தியிலே பூவையந்நா ளழைப்பித் தானும்
கலையிலே கிடைத்தபொரு ளாற்றிற் போட்டுக்
கனகுளத்தில் எடுத்தானுங் காப்ப தாமே.
...5

அகத்தியமுனிவர், மாணிக்கவாசக சுவாமிகள்

நித்தர்திரி கூடலிங்கர் குறவஞ்சி நாடகத்தை நிகழ்த்த வேண்டி
முத்தர்திரு மேனியெல்லா முருகவே தமிழுரைத்த முனியைப் பாடி
இத்தனுவி லாத்துமம்விட் டிறக்குநாட்சி லேட்டுமம்வந் தேறா வண்ணம்
பித்தனடித் துணைசேர்ந்த வாதவூ ரானடிகள் பேணு வோமே.
...6

சரசுவதி

அடியிணை மலருஞ் செவ்வா யாம்பலுஞ் சிவப்பினாளை
நெடியபூங் குழலு மைக்க ணீலமுங் கறுப்பினாளைப்
படிவமும் புகழுஞ் செங்கைப் படிகம்போல் வெளுப்பாம்ஞானக்
கொடிதனைத் திருக்குற்றாலக் குறவஞ்சிக் கியம்புவோமே.
...7

நூற்பயன்

சிலைபெரிய வேடனுக்கும் நரிக்கும் வேதச்
செல்வருக்குந் தேவருக்கு மிரங்கி மேனாள்
கொலைகளவு கட்காமங் குருத்து ரோகங்
கொடியபஞ்ச பாதகமும் தீர்த்த தாலே
நிலவணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள்
நினைத்தவரம் பெறுவரது நினைக்க வேண்டிப்
பலவளஞ்சேர் குறவஞ்சி நாட கத்தைப்
படிப்பவர்க்குங் கேட்பவர்க்கும் பலனுண் டாமே.
...8

அவையடக்கம்

தாரினை விருப்ப மாகத் தலைதனில் முடிக்குந் தோறும்
நாரினைப் பொல்லா தென்றே ஞாலத்தோர் தள்ளு வாரோ?
சீரிய தமிழ்மா லைக்குட் செல்வர்குற் றாலத் தீசர்
பேரினா லெனது சொல்லைப் பெரியவர் தள்ளார் தாமே
...9


நூல்
கட்டியக்காரன் வரவு

தேர்கொண்ட வசந்த வீதிச் செல்வர்குற் றாலத் தீசர்
பார்கொண்ட விடையி லேறும் பவனியெச் சரிக்கை கூற
நேர்கொண்ட புரிநூன் மார்பும் நெடியகைப் பிரம்பு மாகக்
கார்கொண்ட முகிலே றென்னக் கட்டியக் காரன் வந்தான்
...1

இராகம் - தோடி, தாளம் - சாப்பு

கண்ணிகள்

(1) பூமேவு மனுவேந்தர் தேவேந்தர் முதலோரைப்
புரந்திடுஞ்செங் கோலான் பிரம்புடையான்
(2) மாமேருச் சிலையாளர் வரதர்குற் றாலநாதர்
வாசற் கட்டியக்காரன் வந்தனனே.
....2


திரிகூடநாதர் பவனி வருதலைக் கட்டியக்காரன் கூறுதல்

விருத்தம்

மூக்கெழுந்த முத்துடையா ரணிவகுக்கும்
நன்னகர மூதூர் வீதி
வாக்கெழுந்த குறுமுனிக்கா மறியெழுந்த
கரங்காட்டும் வள்ள லார்சீர்த்
தேக்கெழுந்த மறைநான்குஞ் சிலம்பெழுந்த
பாதர்விடைச் சிலம்பி லேறி
மேக்கெழுந்த மதிச்சூடிக் கிழக்கெழுந்த
ஞாயிறுபோல் மேவி னாரே
...3

இராகம் - பந்துவராளி, தாளம் - சாப்பு

பல்லவி

பவனி வந்தனரே மழவிடைப் பவனி வந்தனரே

அநுபல்லவி

அவனிபோற்றிய குறும்பலாவுறை மவுனநாயகர் இளமைநாயகர்
சிவனுமாயரி அயனுமானவர் கவனமால்விடை அதனிலேறியே (பவனி)

சரணங்கள்

(1) அண்டர் கூட்டமு முனிவர் கூட்டமும்
அசுரர் கூட்டமு மனித ராகிய
தொண்டர் கூட்டமும் இமைப்பி லாரெனச்
சூழ்ந்து தனித்தனி மயங்கவே
பண்டை நரரிவர் தேவ ரிவரெனப்
பகுத்து நிறுவிய வேளை தொறுந்தொறும்
மண்ட லீகரை நந்தி பிரம்படி
மகுட கோடியிற் புடைக்கவே (பவனி)

(2) தடுப்ப தொருகரம் கொடுப்ப தொருகரம்
தரித்த சுடர்மழு விரித்த தொருகரம்
எடுத்த சிறுமறி பிடித்த தொருகரம்
இலங்கப் பணியணி துலங்கவே
அடுத்த வொருபுலி கொடுத்த சோமனும்
ஆனை கொடுத்தவி தானச் சேலையும்
உடுத்த திருமருங் கசைய மலரயன்
கொடுத்த பரிகல மிசையவே. (பவனி)

(3) தொடரு மொருபெருச் சாளி யேறிய
தோன்றற் செயப்படை தாங்கவே
அடல்கு லாவிய தோகை வாகனத்
தரசு வேல்வலம் வாங்கவே
படலை மார்பினிற் கொன்றை மாலிகை
பதக்க மணியொளி தேங்கவே
உடைய நாயகன் வரவு கண்டுகண்
டுலகெலாந் தழைத்தோங்கவே. (பவனி)

(4) இடியின் முழக்கொடு படரு முகிலென
யானை மேற்கன பேரிமு ழக்கமும்
துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி
துதிக்கை யாற்செவி புதைக்கவே
அடியர் முழக்கிய திருப்ப லாண்டிசை
அடைத்த செவிகளும் திறக்க மூவர்கள்
வடிசெய் தமிழ்த்திரு முறைக ளொருபுறம்
மறைக ளொருபுறம் வழங்கவே. (பவனி)

(5) கனக தம்புரு கின்ன ரங்களி
யாசை வீணை மிழற்றவே
அனக திருமுத்தின் சிவிகை கவிகைபொன்
ஆல வட்டம் நிழற்றவே
வனிதை மார்பல குஞ்சம் சாமரை
வரிசை விசிறி சுழற்றவே
தனத னிந்திரன் வருணன் முதலிய
சகல தேவரும் வழுத்தவே. (பவனி)

(6) சைவர் மேலிடச் சமணர் கீழிடச்
சகல சமயமு மேற்கவே
கைவலா ழியங் கருணை மாலொடு
கமலத் தோன்புடை காக்கவே
ஐவர் நாயகன் வந்த னன்பல
அமரர் நாயகன் வந்தனன்
தெய்வ நாயகன் வந்த னன்எனச்
சின்ன மெடுத்தெடுத் தார்க்கவே (பவனி)

(7) சேனைப் பெருக்கமுந் தானைப் பெருக்கமுந்
தேரின் பெருக்கமுந் தாரின் பெருக்கமும்
ஆனைப் பெருக்கமுங் குதிரைப் பெருக்கமும்
அவனி முழுதினு நெருங்கவே
மோனைக் கொடிகளின் காடு நெடுவௌி
மூடி யடங்கலும் ஓடி யிருண்டபின்
ஏனைச் சுடர்விரி இடப கேதன
மெழுந்து திசைதிசை விளங்கவே (பவனி)

(8) கொத்து மலர்க்குழல் தெய்வ மங்கையர்
குரவை பரவையை நெருக்கவே
ஒத்த திருச்செவி யிருவர் பாடல்க
ளுலக மேழையு முருக்கவே
மத்த ளம்புயல் போல்மு ழங்கிட
மயில னார்நடம் பெருக்கவே
சத்தி பயிரவி கௌரி குழல்மொழித்
தைய லாளிட மிருக்கவே (பவனி)
...4

பவனி காணப் பெண்கள் வருதல்

விருத்தம்

பாலேறும் விடையில் திரிகூடப் பெருமானார் பவனி காணக்
காலேறுங் காமனுக்காக் கையேறும் படைப்பவுஞ்சாய்க் கன்னி மார்கள்
சேலேறுங் கலகவிழிக் கணைதீட்டிப் புருவநெடுஞ் சிலைகட் கோட்டி
மாலேறப் பொருதுமென்று மணிச்சிலம்பு முரசறைய வருகின் றாரே.
...5

பவனி காண வந்த பெண்கள் சொல்லுதல்

இராகம் - புன்னாகவராளி, தாளம் - சாப்பு

கண்ணிகள்

(1) ஒருமானைப் பிடித்துவந்த பெருமானைத் தொடர்ந்துவரும்
ஒருகோடி மான்கள்போல் வருகோடி மடவார்
(2) புரிநூலின் மார்பனிவன் அயனென்பார் அயனாகில்
பொங்கரவ மேதுதனிச் சங்கமேது என்பார்
(3) விரிகருணை மாலென்பார் மாலாகில் விழியின்மேல்
விழியுண்டோ முடியின்மேல் முடியுண்டோ என்பார்
(4) இருபாலு நான்முகனுந் திருமாலும் வருகையால்
ஈசனிவன் திரிகூட ராசனே என்பார்.
(5) ஒருகைவளை பூண்டபெண்கள் ஒருகைவளை பூணமறந்
தோடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்
(6) இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடை தொடுவார்பின்
இந்தவுடை ரவிக்கையெனச் சந்தமுலைக் கிடுவார்.
(7) கருதுமனம் புறம்போக ஒருகண்ணுக்கு மையெடுத்த
கையுமா ஒருகணிட்ட மையுமாய் வருவார்
(8) நிருபனிவன் நன்னகரத் தெருவிலே நெடுநேரம்
நில்லானோ ஒருவசனஞ் சொல்லானோ என்பார்
(9) மெய்வளையு மறுவுடைய தெய்வநா யகன்முடித்த
வெண்மதியும் விளங்குதெங்கள் பெண்மதிபோல் என்பார்
(10) பைவளைத்துக் கிடக்குமிவன் மெய்வளையும் பாம்புகட்குப்
பசியாதோ தென்றலைத்தான் புசியாதோ என்பார்
(11) இவ்வளைக்கை தோளழுந்த இவன்மார்பி லழுந்தாமல்
என்னமுலை நமக்கெழுந்த வன்னமுலை என்பார்
(12) மைவளையும் குழல்சோரக் கைவளைகொண் டானிதென்ன
மாயமோ சடைதரித்த ஞாயமோ என்பார்
...6

வசந்தவல்லி வருதல்

விருத்தம்

நன்னகர்ப் பெருமான் முன்போய் நாணமும் கலையுந்தோற்ற
கன்னியர் சநுப்போற்காட்டிக் காமவேள் கலகமூட்டிப்
பொன்னணித் திலதந் தீட்டிப் பூமலர் மாலைசூட்டி
வன்னமோ கினியைக்காட்டி வசந்தமோ கினிவந்தாளே.
..7

இராகம் - கல்யாணி, தாளம் - ஆதி

கண்ணிகள்

(1) வங்காரப் பூஷணம் பூட்டித் திலதந்தீட்டி
மாரனைக்கண் ணாலே மருட்டிச்
சிங்கார மோகனப் பெண்ணாள் வசந்தவல்லி
தெய்வரம்பை போலவே வந்தாள்

(2) கண்ணுக்குக் கண்ணிணை சொல்லத் திரிகூடக்
கண்ணுதலைப் பார்வையால் வெல்லப்
பெண்ணுக்குப் பெண்ம யங்கவே வசந்தவல்லி
பேடையன்னம் போலவே வந்தாள்.

(3) கையாரச் சூடகமிட்டு மின்னாரை வெல்லக்
கண்ணிலொரு நாடகம் இட்டு
ஒய்யார மாக நடந்து வசந்தவல்லி
ஓவியம் போலவே வந்தாள்

(4) சல்லாப மாது லீலர் குற்றால நாதர்
சங்கநெடு வீதிதனிலே
உல்லாச மாது ரதிபோல் வசந்தவல்லி
உருவசியும் நாணவே வந்தாள்.
...8

இராகம் - பைரவி, தாளம் - சாப்பு

கண்ணிகள்

(1) இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு சுழியெறியுங்
கொண்டையாள் - குழை
ஏறி யாடிநெஞ்சைச் சூறையாடும் விழிக்
கெண்டையாள்
திருந்து பூமுருக்கி னரும்பு போலிருக்கும்
இதழினாள் - வரிச்
சிலையைப் போல்வளைந்து பிறையைப் போலிலங்கு
நுதலினாள்.

(2) அரம்பை தேசவில்லும் விரும்பி யாசைசொல்லும்
புருவத்தாள் - பிறர்
அறிவை மயக்குமொரு கருவ மிருக்குமங்கைப்
பருவத்தாள்
கரும்பு போலினித்து மருந்துபோல் வடித்த
சொல்லினாள் - கடல்
கத்துந் திரைகொழித்த முத்து நிரை பதித்த
பல்லினாள்.

(3) பல்லி னழகையெட்டிப் பார்க்கு மூக்கிலொரு
முத்தினாள் - மதி
பழகும் வடிவுதங்கி அழகு குடிகொளு
முகத்தினாள்
வில்லுப் பணிபுனைந்து வல்லிக் கமுகைவென்ற
கழுத்தினாள் - சகம்
விலையிட் டெழுதியின்ப நிலையிட் டெழுதுந்தொய்யில்
எழுத்தினாள்.

(4) கல்லுப் பதித்ததங்கச் செல்லக் கடகமிட்ட
செங்கையாள் - எங்கும்
கச்சுக் கிடக்கினும்தித் திச்சுக்கிடக்குமிரு
கொங்கையாள்
ஒல்லுங் கருத்தர்மனக் கல்லுஞ் சுழிக்குமெழில்
உந்தியாள் - மீதில்
ஒழுங்கு கொண்டுள்ளத்தை விழுங்கு சிறியரோம
பந்தியாள்.

(5) துடிக்கு ளடங்கியொரு பிடிக்கு ளடங்குஞ்சின்ன
இடையினாள் - காமத்
துட்ட னரண்மனைக்குக் கட்டுங் கதலிவாழைத்
தொடையினாள்
அடுக்கு வன்னச்சேலை எடுத்து நெறிபிடித்த
உடையினாள் - மட
அன்ன நடையிலொரு சின்ன நடைபயிலும்
நடையினாள்.

(6) வெடித்த கடலமுதை எடுத்து வடிவு செய்த
மேனியாள் - ஒரு
வீமப் பாகம் பெற்ற காமப் பாலுக்கொத்த
சீனியாள்
பிடித்த சுகந்தவல்லிக் கொடிபோல் வசந்தவல்லி
பெருக்கமே - சத்தி
பீட வாசர்திரி கூட ராசர்சித்தம்
உருக்குமே.
...9

வசந்தவல்லி பந்தடித்தல்

விருத்தம்

வித்தகர் திரிகூ டத்தில் வௌிவந்த வசந்தவல்லி
தத்துறு விளையாட்டாலோ தடமுலைப் பிணைப்பினாலோ
நத்தணி கரங்கள் சேப்ப நாலடி முன்னே ஓங்கிப்
பத்தடி பின்னே வாங்கிப் பந்தடி பயில்கின் றாளே.
...10

இராகம் - பைரவி, தாளம் - சாப்பு

கண்ணிகள்

(1) செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்
என்றாட - இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து
குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.

(2) பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு
புரண்டாடக் - குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை
வண்டோட - இனி
இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை
திண்டாட - மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.

(3) சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை
நின்றாடப் - பனை
பாடக முஞ்சிறு பாதமு மங்கொரு பாவனை
கொண்டாட - நய
நாடக மாடிய தோகை மயிலென நன்னகர்
வீதியிலே - அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி
அடர்ந்துபந் தாடினளே.

(4) இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ
மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய
தோவெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி
வீதியிலே - மணிப்
பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற்
பந்துகொண் டாடினளே.
...11

விருத்தம்

கொந்தடிப்பூங் குழல்சரிய நன்னகரில் வசந்தவல்லி கொடிய காமன்
முந்தடிபிந் தடியிடைபோய் மூன்றடிநா லடிநடந்து முடுகி மாதர்
சந்தடியில் திருகியிட சாரிவல வாரிசுற்றிச் சகிமார் சூழப்
பந்தடிக்கும் பாவனையைப் பார்க்கஅயன் ஆயிரங்கண் படைத்தி லானே.
...12


தரு

இராகம் - காம்போதி, ஆதி - தாளம்

பல்லவி

பந்தடித்தனளே வசந்த சுந்தரி விந்தை யாகவே (பந்)

சரணங்கள்

(1) மந்தர முலைக ளேச லாட
மகரக் குழைக ளூச லாடச்
சுந்தர விழிகள் பூச லாடத்
தொங்கத் தொங்கத் தொங்கத் தொம்மெனப் (பந்)

(2) பொன்னி னொளிவில் வந்துதாவிய
மின்னி னொளிவு போலவே
சொன்ன யத்தினை நாடிநாடித்
தோழியருடன் கூடிக் கூடி
நன்ன கர்த்திரி கூடம் பாடி
நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம்மெனப் (பந்)
...13

வசந்தவல்லி திரிகூடநாதரைக் காணுதல்

விருத்தம்

வருசங்க வீதி தன்னில்
வசந்தபூங் கோதை காலில்
இருபந்து குதிகொண் டாட
இருபந்து முலைகொண் டாட
ஒருபந்து கைகொண் டாட
ஒருசெப்பி லைந்து பந்துந்
தெரிகொண்டு வித்தை ஆடுஞ்
சித்தரை யெதிர் கொண்டாளே
...14


இராகம் - அடாணா, தாளம் - ரூபகம்

பல்லவி

இந்தச் சித்த ராரோ வெகு
விந்தைக் காரராக விடையி லேறி வந்தார் (இந்த)

சரணங்கள்

(1) நாகம் புயத்திற் கட்டி நஞ்சு கழுத்திற்கட்டிக்
காக மணுகாம லெங்குங் காடு கட்டிப்
பாகந் தனிலொரு பெண் பச்சைக் கிளிபோல் வைத்து
மோகம் பெற வொருபெண் முடியில் வைத்தார். (இந்த)

(2) மெய்யிற் சிவப்பழகும் கையில் மழுவழகும்
மையார் விழியார் கண்டால் மயங்காரோ
செய்ய சடையின் மேலே திங்கட் கொழுந்திருக்கப்
பையை விரிக்கு தம்மா பாம்பு சும்மா. (இந்த)

(3) அருட்கண் பார்வை யாலென் னங்கம் தங்கமாக
உருக்கிப் போட்டார் கண்ட உடனேதான்
பெருக்கம் பார்க்கில் எங்கள் திருக்குற் றாலர் போலே
இருக்கு திவர்செய் மாயம் ஒருக்காலே (இந்த)
...15

தோழியர் சொல்கேட்டு வசந்தவல்லி மோகங்கொள்ளுதல்

விருத்தம்

திங்களை முடித்தார் கண்டாய்
திரிகூடச் செல்வர் கண்டாய்
எங்குள சித்துக் கெல்லாம்
இறையவ ரிவரே யென்று
நங்கைமார் பலருங் கூறு
நன்மொழித் தேறல் மாந்தி
மங்கையாம் வசந்த வல்லி
மனங்கொண்டாள்; மயல்கொண் டாளே.
...16

இராகம் - புன்னாகவராளி, தாளம் - ரூபகம்

கண்ணிகள்

(1) முனிபரவும் இனியானோ (வேத) முழுப்பலவின் கனிதானோ
கனியில் வைத்த செந்தேனோ (பெண்கள்) கருத்துருக்க வந்தானோ
தினகரன்போற் சிவப்பழகும் (அவன்) திருமிடற்றில் கறுப்பழகும்
பனகமணி இருகாதும் (கண்டால்) பாவையுந்தா னுருகாதோ.

(2) வாகனைக்கண் டுருகுதையோ (ஒரு) மயக்கமதாய் வருகுதையோ
மோகமென்ப திதுதானோ (இதை) முன்னமேநா னறிவேனோ
ஆகமெல்லாம் பசந்தேனோ (பெற்ற) அன்னைசொல்லுங் கசந்தேனே
தாகமின்றிப் பூணேனே (கையில்) சரிவளையுங் காணேனே.
...17

தோழியர் புலம்பல்

விருத்தம்

நடைகண்டா லன்னம் தோற்கு
நன்னகர் வசந்த வல்லி
விடைகொண்டா னெதிர்போய்ச் சங்க
வீதியிற் சங்கம் தோற்றாள்
சடைகொண்டா னுடைதான் கொண்டு
தன்னுடை கொடுத்தா ளையன்
உடைகொண்ட வழக்குத் தானோ
ஊர்கின்ற தேர்கொண் டாளே.
...18

இராகம் - தோடி, தாளம் - சாப்பு

கண்ணிகள்

(1) ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேசமா னென்பார் விளை
யாடாள் பாடாள் வாடா மாலை சூடாள் காணெண்பார்
பேசி டாத மோச மென்ன மோசமோ என்பார் காமப்
பேயோ என்பார் பிச்சோ என்பார் மாயமோ என்பார்.

(2) ஐயோ என்ன செய்வ மென்பார் தெய்வமே களைப்
பாச்சோ என்பார் மூச்சே தென்பார் பேச்சே தோவென்பார்
கையிற் றிரு நீறெடுப்பார் தையலா ரெல்லாஞ் சூலக்
கையா திரி கூடநாதா கண்பாரா யென்பார்.
...19

வசந்தவல்லியைப் பாங்கியர் உபசரித்தல்

விருத்தம்

வானவர் திருக்குற் றாலர்
மையலால் வசந்த வல்லி
தானுடல் சோர்ந்தா ளென்று
தமனிய மாடஞ் சேர்த்து
மேனியா ரழகு தோற்ற
மின்னனார் விழுந்த பேரைக்
கூனைகொண் டமிழ்த்து வார்போற்
குளிர்ச்சியால் வெதுப்புவாரே
...20

இராகம் - கல்யாணி, தாளம் - சாப்பு

கண்ணிகள்

(1) முருகு சந்தனக் குழம்பு பூசுவார் விரகத்தீயை
மூட்டி மூட்டி விசிறி வீசுவார்
கருகு தேயுட லுருகு தேயென்பார் விரித்த பூவும்
கரியுதே முத்தம் பொரியு தேயென்பார்.

(2) அருகி லிருந்து கதைகள் நடத்துவார் எடுத்து மாதர்
அணைத்து வாழைக் குருத்திற் கிடத்துவார்
பெருகு நன்னகர்க் குறும்ப லாவினார் வசந்த மோகினி
பெருநி லாவி னொடுக லாவினாள்.
...21

வசந்தவல்லி சந்திரனை நிந்தித்தல்

விருத்தம்

பெண்ணிலே குழல்மொழிக்கோர் பங்குகொடுத் தவர்கொடுத்த
பிரமை யாலே
மண்ணிலே மதிமயங்கிக் கிடக்கின்றே னுனக்குமதி
மயக்கந் தானோ
கண்ணிலே நெருப்பை வைத்துக் காந்துவா ருடன்கூடிக்
காந்திக் காந்தி
விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண்ணிலாக் கொடும்பாவி
வெண்ணி லாவே.
...22

இராகம் - வராளி, தாளம் - ஆதி

கண்ணிகள்

(1) தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே அந்தத்
தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே
பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன்
பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே.

(2) விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே எரு
விட்டுநா னெறிந்ததற்கோ வெண்ணிலாவே
கண்ணில்விழி யாதவர்போல் வெண்ணிலாவே மெத்தக்
காந்தியாட்ட மாடுகிறாய் வெண்ணிலாவே.

(3) ஆகடியஞ் செய்தல்லவோ வெண்ணிலாவே நீதான்
ஆட்கடியன் போற்குறைந்தாய் வெண்ணிலாவே
மோகன்வரக் காணேனென்றால் வெண்ணிலாவே இந்த
வேகமுனக் கானதென்ன வெண்ணிலாவே.

(4) நாகமென்றே யெண்ணவேண்டாம் வெண்ணிலாவே இது
வாகுகுழற் பின்னல்கண்டாய் வெண்ணிலாவே
கோகனக வீறழித்தாய் வெண்ணிலாவே திரி
கூடலிங்கர் முன்போய்க்காய்வாய் வெண்ணிலாவே.
...23

வசந்தவல்லி மன்மதனை நிந்தித்தல்

விருத்தம்

தண்ணிலா மௌலிதந்த மையலா னதையறிந்துத்
தைய லார்கள்
எண்ணிலாப் பகையெடுத்தா ரிந்நகரை நன்னகரென்
றெவர்சொன் னாரோ
அண்ணலார் திரிகூட நாதரென்ப தென்னளவு
மமைந்தி டாரோ
வெண்ணிலாக் குடைபிடித்து மீனகே தனம்பிடித்த
வேனி லானே
...24

இராகம் - எதுகுலகாம்போதி, தாளம் - சாப்பு

கண்ணிகள்

(1) கைக்கரும் பென்ன கணையென்ன நீயென்ன மன்மதா - இந்தச்
செக்கரும் பாவி நிலாவுமே போதாதோ மன்மதா
மைக்கருங் கண்ணா ளிரதிக்கு மால்கொண்ட மன்மதா - விடை
வல்லார்க்கு மால்கொண்டாற் பொல்லாப்பென் மேலண்டே மன்மதா

(2) திக்கெலாந் தென்றற் புலிவந்து பாயுதே மன்மதா - குயிற்
சின்னம் பிடித்தபின் னன்னம் பிடியாதே மன்மதா
அக்கா ளெனுஞ்சகி வெட்காம லேசுவாள் மன்மதா - அவள்
அல்லாமல் தாயொரு பொல்லாத நீலிகாண் மன்மதா

(3) நேரிழை யாரையு மூரையும் பாரடா மன்மதா - கண்ணில்
நித்திரை தானொரு சத்துரு வாச்சுதே மன்மதா
பேரிசை யேயன்றிப் பூரிசை யேன்பிள்ளாய் மன்மதா - சிறு
பெண்பிள்ளை மேற்பொரு தாண்பிள்ளை யாவையோ மன்மதா.

(4) வார்சடை யீதல்ல கார்குழற் பின்னல்காண் மன்மதா - நெற்றி
வந்தது கண்ணல்ல சிந்தூர ரேகைபார் மன்மதா
நாரிபங் காளர்தென் னாரிய நாட்டினர் மன்மதா - எங்கள்
நன்னகர்க் குற்றாலர் முன்னமே செல்லுவாய் மன்மதா.
...25

வசந்தவல்லியைப் பாங்கி வினாவுதல்

விருத்தம்

படியே ழுடையோர் திரிகூடப்
படைமா மதனைப் பயிற்றியசொல்
அடியேன் சகியா யிருக்கையிலே
அதுநான் பயின்றா லாகாதோ
கொடியே மதுரம் பழுத்தொழுகு
கொம்பே வம்பு பொருதமுலைப்
பிடியே யெமது குடிக்கொருபெண்
பிள்ளாய் கருத்து விள்ளாயே.
...26

வசந்தவல்லி பாங்கிக்குச் சொல்லுதல்

இராகம் - கல்யாணி, தாளம் - சாப்பு

கண்ணிகள்

(1) மெய்யர்க்கு மெய்யர் திரிகூட நாயகர் மீதில்மெத்த
மையல்கொண் டேனந்தச் செய்தியைக் கேளாய் நீபாங்கி
செய்ய சடையுந் திருக்கொன்றை மாலை யழகுமவர்
கையில் மழுவுமென் கண்ணை விட்டே யகலாவே.

(2) கங்கைக் கொழுந்தணி தெய்வக் கொழுந்தைநான் கண்டுகுளிர்
திங்கட் கொழுந்தையும் தீக்கொழுந் தாக்கிக் கொண்டேனே
சங்கக் குழையாரைச் சங்க மறுகினிற் கண்டு இரு
செங்கைக்குட் சங்கமுஞ் சிந்தி மறுகி விட்டேனே.

(3) மன்றல் குழவி மதியம் புனைந்தாரைக் கண்டுசிறு
தென்றற் குளவி தினங்கொட்டக் கொட்ட நொந்தேனே
குன்றச் சிலையாளர் குற்றால நாதர்முன்போ னேன்மதன்
வென்றிச் சிலைகொடு மெல்ல மெல்லப் பொருதானே.

(4) பெம்மானை நன்னகர்ப் பேரரச வீதியிற் கண்டு அவர்
கைம்மானைக் கண்டு கலையை நெகிழ விட்டேனே
செம்மேனி தன்னிற் சிறுகறுப் பாரைநான் கண்டிப்போது
அம்மாவென் மேனி யடங்கலு மேகறுத் தேனே.

(5) வெள்ளி விடையில் வியாழன் புனைந்தாரைக் கண்டுசிந்தை
நள்ளிய திங்களை ஞாயிறு போலக் கண்டேனே
எள்ளள வூணு முறக்கமு மில்லாரைக் கண்டுநானும்
ஒள்ளிய வூணு முறக்கமு மற்று விட்டேனே.
...27

வசந்தவல்லியைப் பாங்கி பழித்தல்

விருத்தம்

தரைப்பெண்ணுக் கணிபோல் வந்த
தமனியக் கொடியே மாதர்
துரைப்பெண்ணே வசந்த வல்லி
சொன்னபேதை மைக்கென் சொல்வேன்
வரைப்பெண்ணுக் காசை பூண்டு
வளர்சங்க மறுகி னூடே
நரைத்தமா டேறுவார்க்கோ
நங்கைநீ மயல்கொண் டாயே.
...28

வசந்தவல்லி திரிகூடநாதரைப் புகழ்ந்து பாங்கிக்குக் கூறுதல்

இராகம் - சௌராஷ்டிரம், தாளம் - ரூபகம்

கண்ணிகள்

(1) மன்னவர்குற் றாலர்செய்தி இன்னமின்னங்
கேளாயோ மானே அவர்
வாகனத்தின் மால்விடைக்கு லோகமொக்க
ஓரடிகாண் மானே
சன்னதியின் பேறல்லவோ பொன்னுலகில்
தேவர் செல்வ மானே
சந்திரருஞ் சூரியரும் வந்திறங்கும்
வாசல்கண்டாய் மானே.

(2) நன்னகரி லீசருக்கு நான்றானோ
ஆசைகொண்டேன் மானே பல
கன்னியரு மாசைகொண்டார் பன்னியரும்
ஆசைகொண்டார் மானே
தென்னிலங்கை வாழுமொரு கன்னிகைமண்
டோதரியாள் மானே அவர்
பொன்னடியிற் சேர்ந்தணைய என்னதவஞ்
செய்தாளோ மானே
...29

இதுவுமது விருத்தம்

வேரிலே பழம்பழுத்துத் தூரிலே சுளைவெடித்து
வெடித்த தீந்தேன்
பாரிலே பாதாள கங்கைவந்த தெனக்குதித்துப்
பசுந்தேன் கங்கை
நீரிலே பெருகுகுறும் பலாவிலே கொலுவிருக்கும்
நிமல மூர்த்தி
பேரிலே பிரமைகொண்ட பெண்களிலே நானுமொரு
பெண்கண் டாயே.
...30

பாங்கி வசந்தவல்லியை நியாயம் வினாவுதல்

விருத்தம்

வசந்தவுல் லாச வல்லி
வல்லிக்கு வல்லி பேசி
பசந்தேதுார் பசப்புங் கண்டாய்
பரமர்மே லாசை கொண்டாய்
நிசந்தருந் திருக்குற் றால
நிரந்தர மூர்த்தி யுன்பால்
இசைந்திடக் கரும மேதோ
இசையநீ யிசைத்தி டாயே
...31

வசந்தவல்லி வருந்திக்கூறுதல்

இராகம் - நாதநாமக்கிரியை, தாளம் - ஆதி

கண்ணிகள்

(1) புரத்து நெருப்பை மூவர்க் கவித்தவர் மையல் கொண்டவென்
ஒருத்தி காம நெருப்பை யவிக்கிலார்
பருத்த மலையைக் கையி லிணக்கினார் கொங்கை யான
பருவ மலையைக் கையி லிணக்கிலார்.

(2) அஞ்சு தலைக்குள் ஆறு தலைவைத்தார் எனது மனதில்
அஞ்சு தலைக்கொ ராறுதலை வையார்
நஞ்சு பருகி யமுதங் கொடுத்தவ ரெனது வாள்விழி
நஞ்சு பருகி யமுதங் கொடுக்கிலார்.

(3) தேவர் துரைதன் சாபந் தீர்த்தவர் வன்ன மாங்குயிற்
சின்னத் துரைதன் சாபந் தீர்க்கிலார்
ஏவ ரும்புகழ் திருக்குற் றாலர்தாம் சகல பேர்க்கும்
இரங்கு வாரெனக் கிரங்கிலார் பெண்ணே.
...32

பாங்கி வசந்தவல்லிக்குப் புத்தி கூறுதல்

விருத்தம்

நன்னகர்த் திருக்குற் றால
நாதர்மே லாசை பூண்டு
சொன்னவர்க் கிணங்க வார்த்தை
சொல்லவும் படித்துக் கொண்டாய்
சன்னதி விசேடஞ் சொல்லத்
தக்கதோ மிக்க தோகாய்
என்னிலா னதுநான் சொன்னேன்
இனியுன திச்சை தானே
...33

வசந்தவல்லி பாங்கியைத் தூதனுப்புதல்

இராகம் - காம்போதி, தாளம் - ஆதி

பல்லவி

தூதுநீ சொல்லி வாராய் பெண்ணே குற்றாலர் முன்போய்த்
தூதுநீ சொல்லி வாராய்

அநுபல்லவி

ஆதிநாட் சுந்தரர்க்குத் தூதுபோனவர் முன்னே (தூதுநீ)

சரணங்கள்

(1) உறங்க உறக்கமும் வாராது மாயஞ் செய்தாரை
மறந்தால் மறக்கவும் கூடாது பெண்சென்ம மென்று
பிறந்தாலும் பேராசை யாகாது அஃத றிந்தும்
சலுகைக் காரர்க் காசையானே னிப்போது (தூதுநீ)

(2) நேற்றைக்கெல் லாங்குளிர்ந்து காட்டி இன்று கொதிக்கும்
நித்திரா பாவிக்கென்ன போட்டி நடுவே இந்தக்
காற்றுக்கு வந்ததொரு கோட்டி விரகநோய்க்கு
மாற்று மருந்து முக்கண் மருந்தென்று பரஞ்சாட்டி (தூதுநீ)

(3) வந்தாலிந் நேரம்வரச் சொல்லு வராதி ருந்தால்
மாலையா கிலுந்தரச் சொல்லு குற்றாலநாதர்
தந்தாலென் னெஞ்சைத் தரச்சொல்லு தராதி ருந்தால்
தான்பெண்ணா கியபெண்ணை நான்விடே னென்று. (தூதுநீ)
...34

வசந்தவல்லி திரிகூடநாதர் சமயத்தைப் பாங்கிக்குச் சொல்லுதல்

விருத்தம்

செவ்வேளை யீன்றருள்வார் சிலவேளை வென்றருள்வார்
திரும்பத் தாமே
அவ்வேளை யழைத்தருள்வா ரகங்கார மிகுதலா
லறவ ரேவும்
கைவேழ முரித்தவர்குற் றாலர்கொலு வமரருக்குங்
காணொ ணாதால்
வெவ்வேளை பலவுமுண்டு வியல்வேளை நான்சொலக்கேள்
மின்ன னாளே.
...35

இராகம் - பியாகடை, தாளம் - ஆதி

கண்ணிகள்

(1) திரிகூட ராசருக்குத் திருவனந்தல் முதலாகத்
தினமுமொன் பதுகாலம் கொலுவிற் சகியே.
(2) பெரிதான அபிஷேகம் ஏழுகா லமுமொருவர்
பேசுதற்குச் சமயமல்ல கண்டாய் சகியே.
(3) வருநாளி லொருமூன்று திருநாளும் வசந்தனும்
மாதவழி வருடவழிச் சிறப்பும் சகியே.
(4) ஒருநாளுக் கொருநாளில் வியனாகக் குழல்மொழிப்பெண்
உகந்திருக்குங் கொலுவேளை கண்டாய் சகியே.
(5) பெத்தரிக்க மிகுந்ததிருக் குற்றால நாதலிங்கர்
பெருங்கொலுவில் சமயமறி யாமற் சகியே.
(6) சித்தரொடு தேவகணஞ் சிவகணங்கள் தடைசெய்யத்
திருவாசற் கடைநிற்பார் சிலபேர் சகியே.
(7) அத்தலையிற் கடந்தவர்கள் நந்திபிரம் படிக்கொதுங்கி
ஆட்கொண்டார் குறட்டில்நிற்பார் சிலபேர் சகியே.
(8) மைக்கருங்கண் மாதர்விட்ட வண்டுகளும் கிள்ளைகளும்
வாசல்தொறுங் காத்திருக்குங் கண்டாய் சகியே.
(9) கோலமகு டாகமம்சங் கரவிசுவ நாதனருள்
குற்றாலச் சிவராம நம்பிசெயுஞ் சகியே.
(10) பாலாறு நெய்யாறா யபிஷேக நைவேத்யம்
பணிமாறு காலமுங்கொண் டருளிச் சகியே.
(11) நாலுமறைப் பழம்பாட்டு மூவர்சொன்ன திருப்பாட்டும்
நாலுகவிப் புலவர் புதுப்பாட்டுஞ் சகியே.
(12) நீலகண்டர் குற்றாலர் கொண்டருளு நிறைகொலுவில்
நீக்கமிலை எல்லார்க்கும் பொதுக்காண் சகியே.
(13) அப்பொழுது குற்றாலர் தேவியுடன் கொலுவிருப்பார்
ஆசைசொலக் கூடாது கண்டாய் சகியே.
(14) முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார் வந்துநின்று
முயற்சிசெயுந் திருவனந்தல் கூடிச் சகியே.
(15) கொப்பழகு குழைமடந்தை பள்ளியறை தனிலிருந்து
கோயில்புகும் ஏகாந்த சமயஞ் சகியே.
(16) மைப்பழகு விழியாயென் பெருமாலை நீசொல்லி
மருமாலை வாங்கியே வாராய் சகியே.
...36

வசந்தவல்லி கூடலிழைத்தல்

கொச்சகம்

தெண்ணீர் வடவருவித் தீர்த்தத்தார் செஞ்சடைமேல்
விண்ணீர் புனைந்தார் விரகவெம்மைக் காற்றாமல்
கண்ணீர் நறும்புனலாக் கைவளையே செய்கரையா
யுண்ணீரிற் கூட லுறைக்கிணறு செய்வாளே.
...37

சிந்து

இராகம் - பந்துவராளி, தாளம் - திரிபுடை

கண்ணிகள்

(1) பாடியமறை தேடிய நாயகர் பன்னகர்பணி நன்னகர் நாயகர்
பாவலர்மனுக் காவலர் நாயகர் பதஞ்சலி பணிதாளர்
(2) கோடியமதி சூடிய நாயகர் குழல்மொழிபுண ரழகிய நாயகர்
குறும்ப லாவினிற் கூடுவ ராமெனிற் கூடலேநீ கூடாய்
(3) கஞ்சனைமுகில் மஞ்சனை நொடித்தவர் காமனைச்சிறு சோமனை முடித்தவர்
காரணமறை யாரணம் படித்தவர் கருதிய பெருமானார்
(4) குஞ்சரமுதற் பூசித்த நாயகர் குறுமுனிதமிழ் நேசித்த நாயகர்
குறும்ப லாவினிற் கூடுவ ராமெனிற் கூடலேநீ கூடாய்
...38

குறிசொல்லும் குறத்தி வருதல்

விருத்தம்

ஆடல்வளை வீதியிலே அங்கணர்முன் போட்டசங்க
மரங்கு வீட்டில்
தேடல்வளைக் குங்குறிபோற் கூடல்வளைத் திருந்துவல்லி
தியங்கும் போதிற்
கூடல்வளைக் கரமசைய மாத்திரைக்கோ லேந்திமணிக்
கூடை தாங்கி
மாடமறு கூடுதிரி கூடமலைக் குறவஞ்சி
வருகின் றாளே.
...39

ஆசிரியப்பா
(1) சைவமுத் திரையை வானின் மேற்றரிக்குந்
தெய்வமுத் தலைசேர் திரிகூட மலையான்
வான்புனல் குதட்டு மடக்குரு கினுக்குத்
தேன்புரை யேறுஞ் சித்திரா நதியான்.
(5) ஏரிநீர் செழிக்க வாரிநீர் கொழிக்கு
மாரிநீர் வளர்தென் னாரிய நாட்டான்
கன்னிமாப் பழுத்துக் கதலிதேன் கொழித்துச்
செந்நெல்காத் தளிக்கு நன்னகர்ப் பதியான்
ஓரா யிரமறை ஓங்கிய பரியான்.
(10) ஈரா யிரமருப் பேந்திய யானையான்
சேவக விருது செயவிடைக் கொடியான்
மூவகை முரசு முழங்குமண் டபத்தான்
அண்ட கோடிகளை ஆணையா லடக்கிக்
கொண்டல்போற் கவிக்குங் கொற்றவெண் குடையான்.
(15) வாலசுந் தரிகுழல் வாய்மொழி அருட்கட்
கோலவண் டிணங்குங் கொன்றைமா லிகையான்
பூவளர் செண்பகக் காவளர் தம்பிரான்
தேவர்கள் தம்பிரான் றிருவருள் பாடி
இலகுநீ றணிந்து திலகமு மெழுதிக்
(20) குலமணிப் பாசியுங் குன்றியும் புனைந்து
சலவைசேர் மருங்கிற் சாத்திய கூடையும்
வலதுகைப் பிடித்த மாத்திரைக் கோலு
மொழிக்கொரு பசப்பு முலைக்கொரு குலுக்கும்
விழிக்கொரு சிமிட்டும் வௌிக்கொரு பகட்டுமாக
(25) உருவசி அரம்பை கருவமு மடங்க
முறுவலின் குறும்பால் முனிவரு மடங்க
சமனிக்கு முரையாற் சபையெலா மடங்கக்
கமனிக்கு மவரும் கடைக்கண்ணா லடங்க
கொட்டிய உடுக்கு கோடாங்கிக் குறிமுதல்
(30) மட்டிலாக் குறிகளுங் கட்டினா லடக்கிக்
கொங்கண மாரியங் குச்சலர் தேசமும்
செங்கைமாத் திரைக்கோற் செங்கோல் நடாத்திக்
கன்னடம் தெலுங்கு கலிங்க ராச்சியமும்
தென்னவர் தமிழாற் செயத்தம்ப நாட்டி
(35) மன்னவர் தமக்கு வலதுகை நோக்கி
இன்னகை மடவார்க்கை இடதுகை பார்த்துக்
காலமுன் போங்குறி கைப்பல னாங்குறி
மேலினி வருங்குறி வேண்டுவார் மனக்குறி
மெய்க்குறி கைக்குறி விழிக்குறி மொழிக்குறி
(40) எக்குறி ஆயினு மிமைப்பினி லுரைக்கும்
மைக்குறி விழிக்குற வஞ்சி வந்தனளே.
    ...40
    விருத்தம்

    சிலைநுதலிற் கஸ்தூரித் திலகமிட்டு நறுங்குழலிற்
    செச்சை சூடிக்
    கொலைமதர்க்கண் மையெழுதி மாத்திரைக் கோல்வாங்கி
    மணிக்கூடை தாங்கி
    முலைமுகத்திற் குன்றிமணி வடம்பூண்டு திரிகூட
    முதல்வர் சாரல்
    மலைதனிற்பொன் வஞ்சிகுற வஞ்சியப ரஞ்சிகொஞ்சி
    வருகின் றாளே.
    ...41

    கீர்த்தனை

    இராகம் - தோடி, தாளம் - சாப்பு

    பல்லவி

    வஞ்சி வந்தனளே மலைக்குற வஞ்சி வந்தனளே

    அநுபல்லவி

    வஞ்சி எழிலப ரஞ்சி வரிவிழி நஞ்சி முழுமற நெஞ்சி பலவினில்
    அஞ்சு சடைமுடி விஞ்சை அமலனை நெஞ்சில் நினைவொடு மிஞ்சு குறிசொல -
    வஞ்சி வந்தனளே மலைக்குற வஞ்சி வந்தனளே.

    சரணங்கள்

    வல்லை நிகர்முலை இல்லை யெனுமிடை
    வில்லை யனநுதல் முல்லை பொருநகை
    வல்லி எனவொரு கொல்லி மலைதனில்
    வல்லி அவளினு மெல்லி இவளென
    ஒல்லி வடகன டில்லி வரைபுகழ்
    புல்லி வருகுறி சொல்லி மதுரித
    நல்லி பனிமலை வல்லி குழல்மொழிச்
    செல்வி புணர்பவர் கல்வி மலைக்குற (வஞ்சி)

    குன்றி லிடுமழை மின்க ளெனநிரை
    குன்றி வடமுலை தங்கவே
    மன்றல் கமழ்சிறு தென்றல் வரும்வழி
    நின்று தரள மிலங்கவே
    ஒன்றிலி ரதியும் ஒன்றில் மதனனு
    மூச லிடுகுழை பொங்கவே
    என்று மெழுதிய மன்றி னடமிடு
    கின்ற சரணினர் வென்றி மலைக்குற (வஞ்சி)

    ஆடு மிருகுழைத் தோடு மொருகுழற்
    காடு இணைவிழி சாடவே
    கோடு பொருமுலை மூடு சலவையி
    னூடு பிதுங்கிமல் லாடவே
    தோடி முரளி வராளி பயிரவி
    மோடி பெறஇசை பாடியே
    நீடு மலைமயி லாடு மலைமதி
    சூடு மலைதிரி கூட மலைக்குற (வஞ்சி)
    ...41-1

    கொச்சகக்கலிப்பா

    முன்னங் கிரிவளைத்த முக்கணர்குற் றாலவெற்பிற்
    கன்னங் கரியகுழற் காமவஞ்சி தன்மார்பிற்
    பொன்னின் குடம்போற் புடைத்தெழுந்த பாரமுலை
    இன்னம் பருத்தால் இடைபொறுக்க மாட்டாதே.
    ...41-2

    இராகம் - தோடி, தாளம் - ஆதி

    பல்லவி

    வஞ்சி வந்தாள் - மலைக்குற - வஞ்சி வந்தாள்

    அநபல்லவி

    வஞ்சி வந்தாள் திரிகூட ரஞ்சிதமோ கினிமுன்னே
    மிஞ்சிய விரகநோய்க்குச் சஞ்சீவி மருந்துபோலே

    சரணங்கள்

    (1) மும்மையுல கெங்கும் வெல்லக்
    கொம்மைமுலை யார்க்கு நல்ல
    செம்மையாக் குறிகள் சொல்ல
    அம்மேயம்மே என்று செல்ல (வஞ்சி)

    (2) சோலையில் வசந்த காலம்
    வாலகோ கிலம்வந் தாற்போற்
    கோலமலை வில்லி யார்குற்
    றாலமலை வாழும்குற (வஞ்சி)

    (3) மாத்திரைக் கோலு துன்னச்
    சாத்திரக்கண் பார்வை பன்னத்
    தோத்திர வடிவமின்னப்
    பூத்தமலர்க் கொடியென்ன (வஞ்சி)
    ...42

    வசந்தவல்லி குறத்தியைக்கண்டு மலைவளங்கேட்டல்

    விருத்தம்

    அந்தரதுந் துபிமுழங்கு நன்னகர்குற் றாலலிங்க
    ரருளைப் பாடி
    வந்தகுற வஞ்சிதன்னை வசந்தவல்லி கண்டுமன
    மகிழ்ச்சி கொண்டு
    சந்தமுலைத் துவளுமிடைத் தவளநகைப் பவளவிதழ்த்
    தைய லேயுன்
    சொந்தமலை எந்தமலை யந்தமலை வளமெனக்குச்
    சொல் லென்றாளே.
    ...43

    குறத்தி மலைவளங்கூறுதல்

    இராகம் - புன்னாகவராளி, தாளம் - ஆதி

    கண்ணிகள்

    (1) வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
    மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

    (2) கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
    கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்.

    (3) தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
    செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்.

    (4) கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
    குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.

    (5) முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும்
    முற்றமெங்கும் பரந்துபெண்கள் சிற்றிலைக்கொண் டோடும்.

    (6) கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடப்போம்
    கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்

    (7) செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப்பந் தடிக்கும்
    தேனலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்

    (8) வழங்குகொடை மகராசர் குறும்பலவி லீசர்
    வளம்பெருகுந் திரிகூட மலையெங்கள் மலையே

    (9) ஆடுமர வீனுமணி கோடிவெயி லெறிக்கும்
    அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும்

    (10) வேடுவர்கள் தினைவிதைக்கச் சாடுபுனந் தோறும்
    விந்தையகில் குங்குமமுஞ் சந்தனமும் நாறும்

    (11) காடுதொறும் ஓடிவரை யாடுகுதி பாயுங்
    காகமணு காமலையில் மேகநிரை சாயும்

    (12) நீடுபல வீசர்கயி லாசகிரி வாசர்
    நிலைதங்குந் திரிகூட மலையெங்கள் மலையே

    (13) கயிலையெனும் வடமலைக்குத் தெற்குமலை யம்மே
    கனகமகா மேருவென நிற்குமலை யம்மே

    (14) சயிலமலை தென்மலைக்கு வடக்குமலை யம்மே
    சகலமலை யுந்தனக்கு ளடக்குமலை யம்மே

    (15) வயிரமுடன் மாணிக்கம் விளையுமலை யம்மே
    வானிரவி முழைகள்தொறு நுழையுமலை யம்மே

    (16) துயிலுமவர் விழிப்பாகி யகிலமெங்கும் தேடுந்
    துங்கர் திரிகூடமலை யெங்கள் மலை யம்மே

    (17) கொல்லிமலை யெனக்கிளைய செல்லிமலை யம்மே
    கொழுநனுக்குக் காணிமலை பழனிமலை யம்மே

    (18) எல்லுலவும் விந்தைமலை யெந்தைமலை யம்மே
    இமயமலை யென்னுடைய தமயன்மலை யம்மே

    (19) சொல்லரிய சாமிமலை மாமிமலை யம்மே
    தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை யம்மே

    (20) செல்லினங்கள் முழவுகொட்ட மயிலினங்க ளாடும்
    திரிகூட மலையெங்கள் செல்வமலை யம்மே

    (21) ஒருகுலத்திற் பெண்கள்கொடோம் ஒருகுலத்திற் கொள்ளோம்
    உறவுபிடித் தாலுவிடோங் குறவர்குலம் நாங்கள்

    (22) வெருவிவருந் தினைப்புனத்திற் பெருமிருகம் விலக்கி
    வேங்கையாய் வெயில்மறைத்த பாங்குதனைக் குறித்தே

    (23) அருளிலஞ்சி வேலர்தமக் கொருபெண்ணைக் கொடுத்தோம்
    ஆதினத்து மலைகளெல்லாஞ் சீதனமாக் கொடுத்தோம்

    (24) பரிதிமதி சூழ்மலையைத் துருவனுக்குக் கொடுத்தோம்
    பரமர்திரி கூடமலை பழையமலை யம்மே
    ...44

    வசந்தவல்லி குறத்தியினது நாட்டுவளமும் நகர்வளமும் வினாவுதல்

    விருத்தம்

    கோட்டுவளம் முலைகாட்டும் கொடியின்வள மிடைகாட்டும்
    குறிஞ்சி பூத்த
    காட்டுவளங் குழல்காட்டும் மலைவளந்தா னீயுரைத்துக்
    காட்டு வானேன்?
    தோட்டுவளம் புரிகாதர் திரிகூட மலைவளரும்
    தோகை யேயுன்
    நாட்டுவள மெனக்குரைத்துக் குற்றால நகர்வளமு
    நவிலு வாயே.
    ...45

    குறத்தி நாட்டுவளம் கூறுதல்

    இராகம் - கேதாரகௌளம், தாளம் - சாப்பு

    கண்ணிகள்

    (1) சூர மாங்குயிற் சின்னங்கள் காமத்
    துரைவந் தான்றுரை வந்தானென் றூத
    ஆர மாமுலை மின்னா ரவரவர்
    அல்குல் தேர்க ளலங்காரஞ் செய்யப்
    பார மாமதி வெண்குடை மிஞ்சப்
    பறக்குங் கிள்ளைப் பரிகள்முன் கொஞ்சத்
    தேரின் மாரன் வசந்தன் உலாவும்
    திருக்குற் றாலர்தென் னாரிய நாடே.

    (2) காரைச் சேர்ந்த குழலார்க்கு நாணிக்
    கடலைச் சேர்ந்த கறுப்பான மேகம்
    வாரைச் சேர்ந்த முலைக்கிணை யாகும்
    மலையைச் சேர்ந்து சிலையொன்று வாங்கி
    நீரைச் சேர்ந்த மழைத்தாரை யம்பொடு
    நீளக் கொண்டலந் தேரேறி வெய்யவன்
    தேரைச் சூழ்ந்திடக் கார்காலம் வெல்லுந்
    திருக்குற் றாலர்தென் னாரிய நாடே.

    (3) சூழ மேதி இறங்குந் துறையிற்
    சொரியும் பாலைப் பருகிய வாளை
    கூழை வாசப் பலாவினிற் பாயக்
    கொழும் பலாக்கனி வாழையிற் சாய
    வாழை சாய்ந்தொரு தாழையிற் றாக்க
    வருவி ருந்துக் குபசரிப் பார்போல்
    தாழை சோறிட வாழை குருத்திடுஞ்
    சந்திர சூடர்தென் னாரிய நாடே.

    (4) அந்ந லார்மொழி தன்னைப் பழித்ததென்
    றாடவர் மண்ணில் மூடுங் கரும்பு
    துன்னி மீள வளர்ந்து மடந்தையர்
    தோளை வென்று சுடர்முத்த மீன்று
    பின்னு மாங்கவர் மூரலை வென்று
    பிரியுங் காலத்திற் பெண்மையை வெல்லக்
    கன்னல் வேளுக்கு வில்லாக ஓங்குங்
    கடவுளாரிய நாடெங்கள் நாடே.

    (5) தக்க பூமிக்கு முன்புள்ள நாடு
    சகல தேவர்க்கு மன்புள்ள நாடு
    திக்கெ லாம்வளர்ந் தோங்கிய நாடு
    சிவத்து ரோகமு நீங்கிய நாடு
    முக்க ணான்விளை யாடிய நாடு
    முதிய நான்மறை பாடிய நாடு
    மைக்க ணாள்குழல் வாய்மொழி பாகர்
    வசந்த ஆரிய நாடெங்கள் நாடே.

    (6) அஞ்சு நூறு மகங்கொண்ட நாடு
    அநேக கோடி யுகங்கண்ட நாடு
    கஞ்ச யோனி உதிக்கின்ற நாடு
    கமலை வாணி துதிக்கின்ற நாடு
    செஞ்சொல் மாமுனி ஏகிய நாடு
    செங்கண் மால்சிவ னாகிய நாடு
    வஞ்சி பாகர் திரிகூட நாதர்
    வசந்த ஆரிய நாடெங்கள் நாடே.

    (7) மாத மூன்று மழையுள்ள நாடு
    வருடம் மூன்று விளைவுள்ள நாடு
    வேத மூன்றும் பலாவுள்ள நாடு
    விசேஷ மூன்றுங் குலாவுள்ள நாடு
    போத மூன்று நலஞ்செயு நாடு
    புவனமூன்றும் வலஞ்செயு நாடு
    நாத மூன்றுரு வானகுற் றால
    நாத ராரிய நாடெங்கள் நாடே.

    (8) நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
    நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல்
    தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
    சுழலக் காண்பது தீந்தயிர் மத்து
    வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை
    வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
    ஏங்கக் காண்பது மங்கல பேரிகை
    ஈச ராரிய நாடெங்கள் நாடே.

    (9) ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
    ஒடுங்கக் காண்பது யோகிய ருள்ளம்
    வாடக் காண்பது மின்னார் மருங்குல்
    வருந்தக் காண்பது சூலுளை சங்கு
    போடக் காண்பது பூமியில் வித்து
    புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
    தேடக் காண்பது நல்லறங் கீர்த்தி
    திருக்குற் றாலர்தென் னாரிய நாடே.
    ...46

    வசந்தவல்லிக்குக் குறத்தி தலச் சிறப்பு கூறுதல்

    விருத்தம்

    அரிகூட அயன்கூட மறைகூடத் தினந்தேட
    அரிதாய் நின்ற
    திரிடகூடப் பதியிருக்கும் திருநாட்டு வளமுரைக்கத்
    தெவிட்டா தம்மே
    கரிகூடப் பிடிதிரியுஞ் சாரலிலே ஒருவேடன்
    கைவில் லேந்தி
    நரிகூடக் கயிலைசென்ற திரிகூடத் தலமகிமை
    நவிலக் கேளே.
    ...47

    இராகம் - பிலகரி, தாளம் - ஜம்பை

    கண்ணிகள்

    (1) ஞானிகளு மறியார்கள் சித்ரநதி மூலம்
    நானறிந்த வகைசிறிது பேசக்கே ளம்மே

    (2) மேன்மைபெறுந் திரிகூடத் தேனருவித் துறைக்கே
    மேவுமொரு சிவலிங்கம் தேவரக சியமாய்

    (3) ஆனதுறை அயனுரைத்த தானமறி யாமல்
    அருந்தவத்துக் காய்த்தேடி திரிந்தலையுங் காலம்

    (4) மோனவா னவர்க்கெங்கள் கானவர்கள் காட்டு
    முதுகங்கை யாறுசிவ மதுகங்கை யாறே

    (5) சிவமதுகங் கையின்மகிமை புவனமெங்கும் புகழும்
    செண்பகாட வித்துறையின் பண்புசொல்லக் கேளாய்

    (6) தவமுனிவர் கூட்டரவும் அவரிருக்குங் குகையுங்
    சஞ்சீவி முதலான விஞ்சைமூ லிகையும்

    (7) கவனசித்த ராதியரும் மவுனயோ கியரும்
    காத்திருக்குங் கயிலாய மொத்திருக்கு மம்மே

    (8) நவநிதியும் விளையுமிட மவிடமது கடந்தால்
    நங்கைமார் குரவையொலிப் பொங்குமா கடலே.

    (9) பொங்குகடல் திரிவேணி சங்கமெனச் செழிக்கும்
    பொருந்துசித்ர நதித்துறைகள் பொன்னுமுத்துங் கொழிக்கும்

    (10) கங்கையெனும் வடவருவி தங்குமிந்த்ர சாபம்
    கலந்தாடிற் கழிநீராய்த் தொலைந்தோடும் பாபம்

    (11) சங்கவீ தியிற்பரந்து சங்கினங்கள் மேயுந்
    தழைத்தமதிற் சிகரமெங்குங் கொழுத்தகயல் பாயும்

    (12) கொங்கலர்செண் பகச்சோலைக் குறும்பலா வீசர்
    குற்றாலத் திரிகூடத் தலமெங்கள் தலமே

    (13) மன்றுதனில் தெய்வமுர சென்றுமேல் முழங்கும்
    வளமைபெறுஞ் சதுரயுகங் கிழமைபோல் வழங்கும்

    (14) நின்றுமத கரிபூசை அன்றுசெய்த தலமே
    நிந்தனைசெய் புட்பகந்தன் வந்தனைசெய் தலமே

    (15) பன்றியொடு வேடன்வலஞ் சென்றதிந்தத் தலமே
    பற்றாகப் பரமருறை குற்றாலத் தலமே

    (16) வென்றிபெறுந் தேவர்களும் குன்றமாய் மரமாய்
    மிருகமதாய்த் தவசிருக்கும் பெரியதல மம்மே
    ...48

    வசந்தவல்லி திரிகூடநாதர் சுற்றம் வினாவுதல்

    விருத்தம்

    தீர்த்தவிசே டமுந்தலத்தின் சிறந்தவிசே டமுமுரைத்தாய்
    திருக்குற் றால
    மூர்த்திவிசே டந்தனையு மொழிதோறு நீயுரைத்த
    முறையால் கண்டேன்
    வார்த்தைவிசே டங்கட்கற்ற மலைக்குறவஞ் சிக்கொடியே
    வருக்கை வாசர்
    கீர்த்திவிசே டம்பெரிய கிளைவிசே டத்தையினிக்
    கிளத்து வாயே.
    ...49

    குறத்தி திரிகூடநாதர் கிளைவிசேடம் கூறுதல்

    இராகம் - முகாரி, தாளம் - ஏகம்

    கண்ணிகள்

    (1) குற்றாலர் கிளைவளத்தைக் கூறக்கே ளம்மே
    குலம்பார்க்கில் தேவரினும் பெரியகுலம் கண்டாய்

    (2) பெற்றதாய் தந்தைதனை யுற்றுநீ கேட்கில்
    பெண்கொடுத்த மலையரசன் தனைக்கேட்க வேணும்

    (3) உற்றதொரு பனிமலையின் கொற்றவேந் தனுக்கும்
    உயர்மதுரை மாறனுக்குஞ் செயமருகர் கண்டாய்

    (4) வெற்றி பெறும் பாற்கடலில் புற்றரவி லுறங்கும்
    வித்தகர்க்குக் கண்ணான மைத்துனர்கா ணம்மே

    (5) ஆனைவா கனத்தானை வானுலகி லிருத்தும்
    ஆகுவா கனத்தார்க்கும் தோகைவா கனர்க்கும்

    (6) தானையால் தந்தைகா லெறிந்தமக னார்க்கும்
    தருகாழி மகனார்க்கும் தகப்பனார் கண்டாய்

    (7) சேனைமக பதிவாச லானைபெறும் பிடிக்குந்
    தேனீன்ற மலைச்சாரல் மானீன்ற கொடிக்கும்

    (8) கானமலர் மேலிருக்கு மோனவய னார்க்கும்
    காமனார் தமக்குமிவர் மாமனார் அம்மே

    (9) பொன்னுலகத் தேவருக்கு மண்ணுலகத் தவர்க்கும்
    பூதலத்தின் முனிவருக்கும் பாதலத் துளார்க்கும்

    (10) அன்னவடி வெடுத்தவர்க்கும் ஏனவுரு வார்க்கும்
    அல்லார்க்கு முன்னுதித்த செல்வர்கா ணம்மே

    (11) முன்னுதித்து வந்தவரைத் தமையனென வுரைப்பார்
    மொழிந்தாலு மொழியலாம் பழுதிலைகா ணம்மே

    (12) நன்னகரிற் குற்றால நாதர்கிளை வளத்தை
    நானுரைப்ப தரிதுலகம் தானுரைக்கும் அம்மே
    ...50

    வசந்தவல்லி குறத்தியைக் குறியின் விசேடம் வினாவுதல்

    விருத்தம்

    நீர்வளர் பவள மேனி
    நிமலர்குற் றால நாதர்
    கூர்வளம் பாடி யாடுங்
    குறவஞ்சிக் கொடியே கேளாய்
    கார்வளர் குழலார்க் கெல்லாங்
    கருதிநீ விருந்தாச் சொல்லுஞ்
    சீர்வளர் குறியின் மார்க்கம்
    தெரியவே செப்பு வாயே.
    ...51

    குறத்தி குறியின் விசேடம் கூறுதல்

    இராகம் - தோடி, தாளம் - ஆதி

    பல்லவி

    வித்தாரம் என்குறி யம்மே - மணி
    முத்தாரம் பூணு முகிழ்முலைப் பெண்ணே
    வித்தாரம் என்குறி யம்மே

    சரணங்கள்

    (1) வஞ்சி மலைநாடு கொச்சி கொங்கு
    மக்க மராடம் துலக்காணம் மெச்சி
    செஞ்சி வடகாசி நீளம் சீனம்
    சிங்கம் ஈழம் கொழும்புவங் காளம்
    தஞ்சை சிராப்பள்ளிக் கோட்டை தமிழ்ச்
    சங்க மதுரைதென் மங்கலப் பேட்டை
    மிஞ்சு குறிசொல்லிப் பேராய்த் திசை
    வென்று நான் பெற்ற விருதுகள் பாராய் (வித்தாரம்)

    (2) நன்னகர்க் குற்றாலந் தன்னில் எங்கும்
    நாட்டுமெண் ணூற்றெண்பத் தேழாண்டு தன்னில்
    பன்னக மாமுனி போற்றத் தமிழ்ப்
    பாண்டிய னார்முதல் சிற்றொடு வேய்ந்த
    தென்னாருஞ் சித்ர சபையை எங்கள்
    சின்னணஞ் சாத்தேவன் செப்போடு வேய்ந்த
    முன்னாளி லேகுறி சொல்லிப் பெற்ற
    மோகன மாலைபார் மோகன வல்லி (வித்தாரம்)

    (3) அன்பாய் வடகுண பாலிற் கொல்லத்து
    ஆண்டொரு நானூற் றிருபத்து நாலில்
    தென்காசி ஆலயம் ஓங்கக் குறி
    செண்பக மாறற்குச் சொன்னபேர் நாங்கள்
    நன்பாண்டி ராச்சியம் உய்யச் சொக்க
    நாயகர் வந்து மணக்கோலஞ் செய்ய
    இன்பா மதுரை மீனாட்சி குறி
    எங்களைக் கேட்டதும் சங்கத்தார் சாட்சி (வித்தாரம்)
    ...52

    வசந்தவல்லி குறி கேட்டல்

    விருத்தம்

    கலவிக்கு விழிவாள் கொண்டு
    காமனைச் சிங்கி கொள்வாய்
    குலவித்தை குறியே ஆனால்
    குறவஞ்சி குறைவைப் பாயோ
    பலவுக்குட் கனிவாய் நின்ற
    பரமர்குற் றாலர் நாட்டில்
    இலவுக்குஞ் சிவந்த வாயால்
    எனக்கொரு குறிசொல் வாயே.
    ...53

    குறத்தி குறி சொல்லுதல்

    இராகம் - அடாணா, தாளம் - ஆதி

    கண்ணிகள்

    (1) என்னகுறி யாகிலுநான் சொல்லுவே னம்மே - சதுர்
    ஏறுவே னெதிர்த்தபேரை வெல்லுவே னம்மே

    (2) மன்னவர்கள் மெச்சுகுற வஞ்சிநா னம்மே - என்றன்
    வயிற்றுக்கித் தனைபோதுங் கஞ்சி வாரம்மே

    (3) பின்னமின்றிக் கூழெனினுங் கொண்டுவா அம்மே - வந்தால்
    பெரிய குடுக்கைமுட்ட மண்டுவே னம்மே

    (4) தின்னவிலையும் பிளவும் அள்ளித்தா அம்மே - கப்பல்
    சீனச்சரக் குத்துக்கிணி கிள்ளித்தா அம்மே

    (5) அம்மேயம்மே சொல்லவாராய் வெள்ளச்சி யம்மே - உனக்கு
    ஆக்கம் வருகுதுபார் வெள்ளச்சி யம்மே

    (6) விம்முமுலைக் கன்னிசொன்ன பேச்சு நன்றம்மே - நேரே
    மேல்புறத்தில் ஆந்தையிட்ட வீச்சுநன் றம்மே

    (7) தும்மலுங்கா கமுமிடஞ் சொல்லுதே யம்மே - சரஞ்
    சூட்சுமாகப் பூரணத்தை வெல்லுதே யம்மே

    (8) செம்மையிது நன்னிமித்தங் கண்டுபா ரம்மே - திரி
    கூடமலைத் தெய்வமுனக் குண்டுகா ணம்மே
    ...54


    விருத்தம்

    பல்லியும் பலப லென்னப்
    பகரும் திரிகூ டத்தில்
    கல்விமான் சிவப்பின் மிக்கான்
    கழுத்தின்மேற் கறுப்பு முள்ளான்
    நல்லமேற் குலத்தா நிந்த
    நன்னகர்த் தலத்தா னாக
    வல்லியே உனக்கு நல்ல
    மாப்பிள்ளை வருவா னம்மே
    ...55

    ஸரீராகம், அடதாளம், சாப்பு

    கண்ணிகள்

    (1) தரைமெழுகு கோலமிடு முறைபெறவே கணபதிவை அம்மே - குடம்
    தாங்காய்முப் பழம்படைததாய் தேங்காயும் உடைத்து வைப்பாய் அம்மே

    (2) அறுகுபுனல் விளக்கிடுவாய் அடைக்காய் வெள்ளிலை கொடுவா அம்மே - வடை
    அப்பமவல் வர்க்கவகை சர்க்கரையோ டெள்பொரிவை யம்மே

    (3) நிறைநாழி யளந்துவைப்பாய் இறையோனைக் கரங்குவிப்பா யம்மே - குறி
    நிலவரத்தைத் தேர்ந்துகொள்வாய் குலதெய்வத்தை நேர்ந்துகொள்வா யம்மே

    (4) குறிசொல்லவா குறிசொல்லவா பிறைநுதலே குறிசொல்லவா அம்மே - ஐயர்
    குறும்பலவர் திருவுளத்தாற் பெரும்பலனாங் குறிசொல்லவா அம்மே...
    ...56

    கட்டளைக் கலித்துறை

    ஆனேறுஞ் செல்வர் திரிகூட நாதரணி நகர்வாழ்
    மானே வசந்தப் பசுங்கொடி யேவந்த வேளைநன்றே
    தானே இருந்த தலமுநன் றேசெழுந் தாமரைபோற்
    கானேறுங் கைம்மலர் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே
    ...57

    இராகம் - கல்யாணி, தாளம் - சாப்பு

    கண்ணிகள்

    (1) முத்திரைமோ திரமிட்ட கையைக் காட்டா - யம்மே
    முன்கை முதாரிட்ட கையைக் காட்டாய்

    (2) அத்தகட கம்புனைந்த கையைக் காட்டாய் - பொன்னின்
    அலங்கார நௌியிட்ட கையைக் காட்டாய்

    (3) சித்திரச்சூ டகமிட்ட கையைக் காட்டாய் - பசும்
    செங்கமலச் சங்கரேகைக் கையைக் காட்டாய்

    (4) சத்திபீ டத்திறைவர் நன்னகர்க் குள்ளேவந்த
    சஞ்சீவி யேயுனது கையைக் காட்டாய்
    ...58

    கவிக்கூற்று

    கொச்சகக்கலிப்பா

    ஏழைபங்கர் செங்கைமழு வேற்றவர்குற் றாலர்வெற்பில்
    வாழிகொண்ட மோக வசந்தவல்லி கைபார்த்து
    வீழிகொண்ட செங்கனிவாய் மிக்ககுற வஞ்சிபழங்
    கூழையுண்ட வாயால் குறியைவிண்டு சொல்வாளே.
    ...59

    இராகம் - பைரவி, தாளம் - ரூபகம்

    கண்ணிகள்

    (1) மாறாமல் இருநிலத்தில் அறம்வளர்க்குங் கையே
    மனையறத்தால் அறம்பெருக்கித் திறம்வளர்க்குங் கையே

    (2) வீறாக நவநிதியும் விளையுமிந்தக் கையே
    மேன்மேலும் பாலமுதம் அளையுமிந்தக் கையே

    (3) ஆறாத சனங்கள்பசி யாற்றுமிந்தக் கையே
    அணங்கனையார் வணங்கிநித்தம் போற்றுமிந்தக் கையே

    (4) பேறாக நன்னகரங் காக்குமிந்தக் கையே
    பிறவாத நெறியார்க்கே றேற்குமிந்தக் கையே.
    ...60

    குறத்தி தெய்வ வணக்கம் செய்தல்

    விருத்தம்

    கைக்குறி பார்க்கில் இந்தக்
    கைப்பிடிப் பவர்தா மெட்டுத்
    திக்குமே யுடைய ராவர்
    செகமக ராசி நீயே
    இக்குறி பொய்யா தென்றே
    இறையவர் திரிகூ டத்தில்
    மெய்க்குற வஞ்சி தெய்வம்
    வியப்புற வணங்கு வாளே
    ...61

    ஆசிரியப்பா

    குழல்மொழி யிடத்தார் குறும்பலா வுடையார்
    அழகுசந் நிதிவா ழம்பல விநாயகா
    செந்திவாழ் முருகா செங்கண்மால் மருகா
    கந்தனே இலஞ்சிக் கடவுளே சரணம்
    புள்ளிமா னீன்ற பூவையே குறக்குல (5)
    வள்ளிநா யகியே வந்தெனக் குதவாய்
    அப்பனே மேலை வாசலில் அரசே
    செப்பரு மலைமேல் தெய்வகன் னியர்காள்
    ஆரியங் காவா வருட்சொரி முத்தே
    நேரிய குளத்தூர் நின்றசே வகனே (10)
    கோலமா காளி குற்றால நங்காய்
    கால வைரவா கனதுடிக் கறுப்பா
    முன்னடி முருகா வன்னிய ராயா
    மன்னிய புலிபோல் வரும்பன்றி மாடா
    எக்கலா தேவி துர்க்கை பிடாரி (15)
    மிக்கதோர் குறிக்கா வேண்டினே னுங்களை
    வந்துமுன் னிருந்து வசந்தமோ கினிப்பெண்
    சிந்தையில் நினைந்தது சீவனோ தாதுவோ
    சலவையோ பட்டோ தவசதா னியமோ
    கலவையோ புழுகோ களபகஸ் தூரியோ (20)
    வட்டிலோ செம்போ வயிரமோ முத்தோ
    கட்டிலோ மெத்தையோ கட்டிவ ராகனோ
    வைப்பொடு செப்போ வரத்தொடு செலவோ
    கைப்படு திரவியம் களவுபோ னதுவோ
    மறுவிலாப் பெண்மையில் வருந்திட்டி தோடமோ (25)
    திரிகண்ண ரானவர் செய்தகைம் மயக்கமோ
    மன்னர்தா மிவள்மேல் மயல்சொல்லி விட்டதோ
    கன்னிதா னொருவர்மேற் காமித்த குறியோ
    சேலையும் வளையுஞ் சிந்தின தியக்கமோ
    மாலையு மணமும் வரப்பெறுங் குறியோ (30)
    இத்தனை குறிகளி லிவட்குறி இதுவென
    வைத்ததோர் குறியை வகுத்தருள் வீரே.
    ...(62)

    விருத்தம்

    கடித்திடு மரவம் பூண்ட
    கர்த்தர்குற் றாலர் நேசம்
    பிடிக்குது கருத்து நன்றாய்ப்
    பேசுது சக்க தேவி
    துடிக்குதென் னுதடு நாவுஞ்
    சொல்லுசொல் லெனவே வாயில்
    இடிக்குது குறளி அம்மே
    இனிக்குறி சொல்லக் கேளே.
    ...(63)

    இராகம் - பிலகரி, தாளம் - சாப்பு

    கண்ணிகள்

    (1) சொல்லக்கே ளாய்குறி சொல்லக்கே ளாயம்மே
    தோகையர்க் கரசேகுறி சொல்லக் கேளாய்

    (2) முல்லைப்பூங் குழலாளே நன்னகரில் வாழ்முத்து
    மோகனப் பசுங்கிளியே சொல்லக் கேளாய்

    (3) பல்லக்கே றுந்தெருவி லானை நடத்திமணிப்
    பணியாபர ணம்பூண்ட பார்த்திபன் வந்தான்

    (4) செல்லப்பூங் கோதையேநீ பந்தடிக் கையிலவன்
    சேனைகண்ட வெருட்சிபோற் காணுதே யம்மே
    ...(64)

    வசந்தவல்லி குறத்தி சொன்னதைத் தடுத்து வினாவுதல்

    கண்ணிகள்

    (1) நன்றுநன்று குறவஞ்சி நாடகக் காரியிந்த
    நாட்டான பேர்க்கான வார்த்தைநா னறியேனோ

    (2) ஒன்றுபோ டாமற்குறி சொல்லிவந் தாய்பின்னை
    உளப்பிப்போட் டாய்குறியைக் குழப்பிப் போட்டாய்

    (3) மன்றல்வருஞ் சேனைதனைக் கண்டுபயந் தாலிந்த
    மையலும் கிறுகிறுப்பும் தையவர்க் குண்டோ

    (4) இன்றுவரை மேற்குளிருங் காய்ச்சலுமுண் டோபின்னை
    எந்தவகை என்றுகுறி கண்டுசொல்லடி
    ...(65)

    குறத்தி சொல்லுதல்

    கண்ணிகள்

    (1) வாகனத்தி லேறிவரும் யோக புருடனவன்
    வங்காரப் பவனியாசைப் பெண்களுக் குள்ளே

    (2) தோகைநீ யவனைக்கண்டு மோகித்தா யம்மேவது
    சொல்லப் பயந்திருந்தேன் சொல்லுவேன் முன்னே

    (3) காகமணு காததிரி கூடமலைக் கேயுன்மேற்
    காய்ச்சலல்ல காய்ச்சலல்ல காமக்காய்ச் சல்காண்

    (4) மோகினியே உன்னுடைய கிறுகிறுப்பை யெல்லாமவன்
    மோகக்கிறு கிறுப்படி மோகனக் கள்ளி
    ...(66)

    வசந்தவல்லி கோபித்துப் பேசுதல்

    கண்ணிகள்

    (1) கன்னியென்று நானிருக்க நன்னகர்க் குளேயென்னைக்
    காமியென்றாய் குறவஞ்சி வாய்மதி யாமல்

    (2) சன்னையாகச் சொன்னகுறி சாதிப்பாயா னாலவன்
    தாருஞ்சொல்லிப் பேருஞ்சொல்லி ஊருஞ் சொல்லடி

    குறத்தி சொல்லுதல்

    கண்ணிகள்

    (3) உன்னைப்போ லெனக்கவ னறிமுகமோ அம்மே
    ஊரும்பேருஞ் சொல்லுவதுங் குறிமுகமோ

    (4) பின்னையுந்தா னுனக்காகச் சொல்லுவே னம்மேயவன்
    பெண்சேர வல்லவன்காண் பெண்கட் கரசே
    ...(67)

    வசந்தவல்லி சொல்லுதல்

    கண்ணிகள்

    (1) வண்மையோ வாய்மதமோ வித்தைமத மோவென்முன்
    மதியாமற் பெண்சேர வல்லவ னென்றாய்

    (2) கண்மயக்கால் மயக்காதே உண்மைசொல் லடிபெருங்
    கானமலைக் குறவஞ்சி கள்ளி மயிலி

    குறத்தி சொல்லுதல்

    கண்ணிகள்

    (3) பெண்ணரசே பெண்ணென்றால் திரியு மொக்குமொரு
    பெண்ணுடன் சேரவென்றால் கூடவு மொக்கும்

    (4) திண்ணமாக வல்லவனும் நாதனுமொக் கும்பேதைத்
    திரிகூட நாதனென்று செப்பலா மம்மே
    ...(68)

    கவிக்கூற்று

    கண்ணிகள்

    (1) மன்னர்திரி கூடநாத ரென்னும்போ திலேமுகம்
    மாணிக்க வசந்தவல்லி நாணிக் கவிழ்ந்தாள்.

    குறத்தி சொல்லுதல்

    (2) நன்னகரில் ஈசருன்னை மேவவரு வாரிந்த
    நாணமெல்லாம் நாளைநானுங் காணவே போறேன்

    (3) கைந்நொடியிற் பொன்னிதழி மாலைவருங் காணினிக்
    கக்கத்தி லிடுக்குவாயோ வெட்கத்தை யம்மே

    (4) என்னுமொரு குறவஞ்சி தன்னையழைத் தேயவட்கு
    ஈட்டுசரு வாபரணம் பூட்டினாளே
    ...(69)

    சிங்கன் சிங்கி(குறத்தி)யைத் தேடிவருதல்

    விருத்தம்

    பாமாலைத் திரிகூடப் பரமனருள் பெறுவசந்தப்
    பாவை கூந்தல்
    பூமாலை யிதழிபெறப் பொன்மாலை மணிமாலை
    பொலிவாய்ப் பூண்டு
    நாமாலைக் குறவஞ்சி நன்னகர்ப்பட் டணமுழுது
    நடக்கு நாளில்
    மாமாலை பூண்டசிங்கன் வங்கணச்சிங் கியைத்தேடி
    வருகின் றானே.
    ...(70)

    வக்காவின் மணிபூண்டு கொக்கிறகு சிகைமுடித்து
    வரித்தோர் கச்சை
    தொக்காக வரிந்திறுக்கித் தொடர்புலியைக் கண்டுறுக்கித்
    தூணி தூக்கிக்
    கைக்கான ஆயுதங்கள் கொண்டுசில்லிக் கோலெடுத்துக்
    கண்ணி சேர்த்துத்
    திக்கடங்காக் குளுவசிங்கன் குற்றாலத் திரிகூடச்
    சிங்கன் வந்தான்.
    ...(71)

    வக்காவின் மணிசூடி வகைக்காரி சிங்கிவரும்
    வழியைத் தேடி
    மிக்கான புலிகரடி கிடுகிடென நடுநடுங்க
    வெறித்து நோக்கிக்
    கக்காவென் றோலமிடுங் குருவிகொக்குக் கேற்றகண்ணி
    கையில் வாங்கித்
    தொக்கான நடைநடந்து திரிகூட மலைக்குறவன்
    தோன்றி னானே.
    ...(72)

    இராகம் - அடாணா, தாளம் - சாப்பு

    கண்ணி

    கொக்கிறகு சூடிக்கொண்டு குருவிவேட்டை யாடிக்கொண்டு
    வக்காமணி பூட்டிக்கொண்டு மடவார்கண்போ லீட்டிக்கொண்டு
    தொக்காக்கச்சை இறுக்கிக்கொண்டு துள்ளுமீசை முறுக்கிக்கொண்டு
    திக்கடங்காக் குளுவசிங்கன் திரிகூடச் சிங்கன் வந்தான்.
    ...(73)

    சிங்கன் தன் வலிமை கூறுதல்

    விருத்தம்

    ஆளிபோற் பாய்ந்துசுரும் பிசைகேட்குந் திரிகூடத்
    தமலர்நாட்டில்
    வேளைதோறும் புகுந்துதிரு விளையாட்டம் கண்ணிகுத்தி
    வேட்டை யாடி
    ஞாளிபோற் சுவடெடுத்துப் பூனைபோல் ஒளிபோட்டு
    நரிபோல் பம்மிக்
    கூளிபோல் தொடர்ந்தடிக்குந் திரிகூடச் சிங்கனெனுங்
    குளுவன் நானே.
    ...(74)

    இராகம் - தன்யாசி, தாளம் - ஆதி

    கண்ணிகள்

    (1) தேவருக் கரியார் மூவரிற் பெரியார்
    சித்திர சபையார் சித்திர நதிசூழ்
    கோவிலில் புறவில் காவினி லடங்காக்
    குருவிகள் படுக்கும் குளுவனு நானே.

    (2) காதலஞ் செழுத்தார் போதநீ றணியார்
    கைந்நரம் பெடுத்துக் கின்னரந் தொடுத்துப்
    பாதகர் தோலால் பலதவி லடித்துப்
    பறவைகள் படுக்கும் குறவனு நானே.

    (3) தலைதனிற் பிறையோர் பலவினி லுறைவார்
    தகையினை வணங்கார் சிகைதனைப் பிடித்தே
    பலமயிர் நறுக்கிச் சிலகண்ணி முறுக்கிப்
    பறவைகள் படுக்கும் குளுவனு நானே.

    (4) ஒருகுழை சங்கம் ஒருகுழை தங்கம்
    உரியவி நோதர் திரிகூட நாதர்
    திருநாமம் போற்றித் திருநீறு சாற்றுந்
    திரிகூட நாமச் சிங்கனு நானே.
    ...(75)

    நூவன் வருதல்

    விருத்தம்

    புலியொடு புலியைத் தாக்கிப்
    போர்மத யானை சாய்க்கும்
    வலியவர் திரிகூ டத்தில்
    மதப்புலிச் சிங்கன் முன்னே
    கலிகளுங் கதையும் பேசிக்
    கையிலே ஈட்டி வாங்கி
    எலிகளைத் துரத்தும் வீரன்
    ஈப்புலி நூவன் வந்தான்.
    ...(76)

    இராகம் - அடாணா, தாளம் - சாப்பு

    கண்ணிகள்

    (1) ஊர்க்குரு விக்குக் கண்ணியுங் கொண்டு
    உள்ளானும் வலியானும் எண்ணிக் கொண்டு
    மார்க்கமெல் லாம்பல பன்னிக் கொண்டு
    கோட்கார நூவனும் வந்தானே.

    (2) கரிக்குரு விக்குக் கண்ணியும் கொண்டு
    கானாங் கோழிக்குப் பொரியுங் கொண்டு
    வரிச்சிலைக் குளுவரிற் கவண்டன் மல்லன்
    வாய்ப்பான நூவனும் வந்தானே.

    (3) ஏகனை நாகனைக் கூவிக் கொண்டு
    எலியனைப் புலியனை யேவிக் கொண்டு
    வாகான சிங்கனை மேவிக் கொண்டு
    வங்கார நூவனும் வந்தானே.

    (4) கொட்டகைத் தூண்போற் காலிலங்க
    ஒட்டகம் போலே மேலிலங்கக்
    கட்டான திரிகூடச் சிங்கன் முன்னே
    மட்டீவாய் நூவனும் வந்தானே.
    ...(77)

    சிங்கன் பறவைகளைப் பார்த்தல்

    விருத்தம்

    மூவகை மதிலுஞ் சாய
    மூரலால் வீரஞ் செய்த
    சேவகர் திருக்குற் றாலர்
    திருவிளை யாட்டந் தன்னிற்
    பாவக மாக நூவன்
    பறவைபோற் பறவை கூவ
    மாவின்மே லேறிச் சிங்கன்
    வரும்பட்சி பார்க்கின் றானே.
    ...(78)

    சிங்கன் பறவை வரவு கூறுதல்

    இராகம் - கல்யாணி, தாளம் - ஆதி

    பல்லவி

    வருகினு மையே பறவைகள் வருகினு மையே

    அநுபல்லவி

    வருகினு மையே திரிகூட நாயகர்
    வாட்டமில் லாப்பண்ணைப் பாட்டப் புறவெல்லாம்
    குருகும் நாரையும் அன்னமும் தாராவும்
    கூழைக் கடாக்களும் செங்கால் நாரையும் (வருகினு)

    சரணங்கள்

    (1) சென்னியி லேபுனற் கன்னியை வைத்த
    திரிகூட நாதர் கிரிமாது வேட்கையில்
    மன்ன னொருவன் வரிசையிட் டான்கங்கை
    மங்கைக்கு நானே வரிசைசெய் வேனென
    அன்னை தயவுடை ஆகாச கங்கை
    அடுக்களை காணப் புறப்படு நேர்த்திபோல்
    பொன்னிற வானெங்குந் தம்நிற மாகப்
    புரிந்து புவனம் திரிந்து குருகினம். (வருகினு)

    (2) காடை வருகுது கம்புள் வருகுது
    காக்கை வருகுது கொண்டைக் குலாத்தியும்
    மாடப் புறாவு மயிலும் வருகுது
    மற்றொரு சாரியாய்க் கொக்குத் திரளெல்லாங்
    கூடலை யுள்ளாக்கிச் சைவம் புறம்பாக்கிக்
    கூடுஞ் சமணரை நீடும் கழுவேற்ற
    ஏடெதி ரேற்றிய சம்பந்த மூர்த்திக்கன்
    றிட்ட திருமுத்தின் பந்தர்வந் தாற்போல (வருகினு)

    (3) வெள்ளைப் புறாவும் சகோரமும் ஆந்தையும்
    மீன்கொத்திப் புள்ளு மரங்கொத்திப் பட்சியும்
    கிள்ளையும் பஞ்சவர் னக்கிளி கூட்டமும்
    கேகயப் பட்சியும் நாகண வாய்ச்சியும்
    உள்ளானுஞ் சிட்டும் வலியானும் அன்றிலும்
    ஓலஞ்செய் தேகூடி நாலஞ்சு பேதமாய்த்
    துள்ளாடும் சூல கபாலர் பிராட்டியார்
    தொட்டாடும் ஐவனப் பட்டாடை போலவே (வருகினு)
    ...(79)

    சிங்கன் சொல்லுதல்

    கொச்சகக் கலிப்பா

    ஈரா யிரங்கரத்தா னேற்றசங்கு நான்மறைச்
    சீரா யிரங்கநடம் செய்தவர்குற் றாலவெற்பில்
    ஓரா யிரமுகமாய் ஓங்கியகங் காநதிபோல்
    பாரார் பலமுகமும் பட்சிநிரை சாயுதையே.
    ...(80)

    இராகம் - கல்யாணி, தாளம் - ஆதி

    பல்லவி

    சாயினு மையே பறவைகள் சாயினு மையே.

    அநுபல்லவி

    சாயினு மையே பாயும் பறவைகள்
    சந்தனக் காட்டுக்கும் செண்பகக் காவுக்கும்
    கோயிற் குழல்வாய் மொழிமங்கைப் பேரிக்குங்
    குற்றால நாயகர் சிற்றாற்று வெள்ளம்போல் (சாயினு)

    சரணங்கள்

    (1) காராருஞ் செங்குள மேலப்பாட் டப்பற்று
    காடுவெட் டிப்பற்று நீடுசுண் டைப்பற்று
    சீராரும் பேட்டைக் குளமுடைக் காங்கேயன்
    ஸரீகிருஷ்ணன் மேடு முனிக்குரு கன்பேரி
    ஏரிவாய் சீவலப் பேரி வடகால்
    இராசகுல ராமன் கண்டுகொண் டான்மேலை
    மாரிப்பற் றும்கீழை மாரிப்பற் றுஞ்சன்ன
    நேரிப்பற் றும்சாத்த னேரிப்பற் றும்சுற்றிச் (சாயினு)

    (2) பாரைக் குளந்தெற்கு மேல்வழு திக்குளம்
    பாட்டப் பெருங்குளம் செங்குறிஞ் சிக்குளம்
    ஊருணிப் பற்றும் திருப்பணி நீளம்
    உயர்ந்த புளியங் குளத்து வரைக்குள
    மாரனே ரிக்குளம் மத்தளம் பாறை
    வழிமறித் தான்குளம் மாலடிப் பற்றும்
    ஆரணி குற்றாலர் தோட்ட நெடுஞ்செய்
    அபிஷேகப் பேரிக் கணக்கன் பற்றிலுஞ் (சாயினு)

    (3) ஐயர்குற் றாலத்து நம்பியார் திருத்தும்
    அப்பா லொருதாதன் குற்றாலப் பேரிச்
    செய்யம் புலியூ ரிலஞ்சிமே லகரஞ்
    செங்கோட்டை சீவல நல்லூர்சிற் றம்லம்
    துய்ய குன்றக்குடி வாழவல் லான்குடி
    சுரண்டை யூர்முத லுக்கிடை சுற்றியே
    கொய்யு மலர்த்தார் இலஞ்சிக் குமார
    குருவிளை யாடுந் திருவிளை யாட்டத்தில் (சாயினு)
    ...(81)

    சிங்கன் சொல்லுதல்

    கொச்சகக்கலிப்பா

    கொட்டழகு கூத்துடையார் குற்றால நாதர்வெற்பில்
    நெட்டழகு வாள்விழியும் நெற்றியின்மேற் கஸ்தூரிப்
    பொட்டழகும் காதழகும் பொன்னழகு மாய்நடந்த
    கட்டழகி தன்னழகென் கண்ணளவு கொள்ளாதே.
    ...(82)

    இராகம் - கல்யாணி, தாளம் - ஆதி

    பல்லவி

    மேயினு மையே பறவைகள் மேயினு மையே

    அநுபல்லவி

    மேயினு மையே குற்றால நாதர்
    வியன்குல சேகரப் பட்டிக் குளங்களும்
    ஆயிரப் பேரியுந் தென்காசி யுஞ்சுற்றி
    அயிரையுந் தேளியு மாராலுங் கொத்தியே. (மேயினு)

    சரணங்கள்

    (1) ஆலயஞ் சூழத் திருப்பணி யுங்கட்டி
    அன்னசத்தி ரங்கட்டி அப்பாலுந் தென்காசிப்
    பாலமும் கட்டிப் படித்தரஞ் சேர்கட்டிப்
    பத்த சனங்களைக் காக்கத் துசங்கட்டி
    மாலயன் போற்றிய குற்றால நாதர்
    வழித்தொண்டு செய்திடக் கச்சைகட் டிக்கொண்ட
    சீலன் கிளுவையிற் சின்னணைஞ் சேந்த்ரன்
    சிறுகால சந்தித் திருத்துப் புறவெல்லாம் (மேயினு)

    (2) தானைத் தலைவன் வயித்தியப் பன்பெற்ற
    சைவக் கொழுந்து தருமத்துக் காலயஞ்
    சேனைச் சவரிப் பெருமாள் சகோதரன்
    செல்வன் மருதூர் வயித்தி யப்பனுடன்
    மானவன் குற்றால நாதனைப் பெற்றவன்
    வள்ள லெனும்பிச்சைப் பிள்ளை திருத்தெல்லாங்
    கானக் குளத்துள்வாய்க் கீழைப் புதுக்குளங்
    கற்பூரக் காற்பற்றுந் தட்டான் குளச்சுற்றும் (மேயினு)

    (3) மன்னன் கிளுவையிற் சின்னணைஞ் சேந்த்ரன்
    வடகரை வீட்டுக்கு மந்திரி யாகவும்
    செந்நெல் மருதூர்க்கு நாயக மாகவும்
    தென்காசி யூருக்குத் தாயக மாகவும்
    தன்னை வளர்க்கின்ற குற்றால நாதர்
    தலத்தை வளர்க்கின்ற தானிக ளாகவும்
    நன்னகர்க் குற்றாலத் தந்தாதி சொன்னவன்
    நள்ளார் தொழும்பிச்சைப் பிள்ளை திருத்தெல்லாம் (மேயினு)

    (4) நன்னக ரூர்கட்டிச் சாலை மடங்கட்டி
    நாயகர் கோவில் கொலுமண் டபங்கட்டித்
    தென்ன மரம்பர மானந்தத் தோப்பிட்டுத்
    தெப்பக் குளங்கட்டித் தேர்மண் டபங்கட்டிப்
    பன்னுந் திரிகூடத் தம்பலங் கட்டிப்
    பசுப்புரை கோடி திருப்பணி யுங்கட்டி
    அந்நாளில் தர்மக் களஞ்சியங் கட்டும்
    அனந்த பற்பநாபன் கட்டளைப் பற்றெல்லாம் (மேயினு)

    (5) தந்தைமுன் கட்டின அம்பலத் துக்கும்
    தருமத் துக்குநிலைக் கண்ணாடி போலவே
    எந்தையார் வாசலிற் பிள்ளையார் செய்வித்து
    இரண்டு குறிஞ்சிப் படித்துறை யுஞ்செய்த
    கொந்தார் புயத்தான் இராக்கதப் பெருமாள்
    குற்றால நாதன்முன் உற்ற சகோதரன்
    வந்தனை சேர்சங்கு முத்துதன் மைத்துனன்
    மன்னன் வயித்திய நாதன் திருத்தெல்லாம் (மேயினு)

    (6) ஆர்மேல் வருகின்ற துன்பமு நீக்கி
    அடங்கார் குறும்பு மடக்கியே தென்காசி
    ஊர்மே லுயர்ந்த மனுநீதி நாட்டி
    உடையவர் குற்றாலர் பூசைநை வேத்தியம்
    தேர்மேல் திருநாளுந் தெப்பத் திருநாளுஞ்
    சித்திர மண்டபஞ் சத்திரஞ் சாலையும்
    பார்மேல் வளஞ்செ யனந்த பற்பநாபன்
    பாலன் வயித்திய நாதன் திருத்தெல்லாம் (மேயினு)

    (7) ஆறை அழகப்ப பூபாலன் கட்டளை
    அன்பன் திருமலைக் கொழுந்துதன் கட்டளை
    நாறும்பூக் குற்றாலச் சங்குதன் கட்டளை
    நங்களொல் லாரரி நரபாலன் கட்டளை
    வீறுசேர் பால்வண்ணச் சங்குதன் கட்டளை
    மிக்கான ஓமலூர்க் கிருஷ்ணன் வணிகேசன்
    பேறுடைப் பம்பை வருசங்கு முத்துதன்
    பேரான கட்டளைச் சீரான பற்றெல்லாம் (மேயினு)

    (8) தானிகன் சர்க்கரைப் பண்டாரம் என்னும்
    தணியாத காதற் பணிவிடை செய்கின்ற
    மேன்மை பெருஞ்சுந் தரத்தோழன் கட்டளை
    மிக்க கருவைப் பதிராம நாயகன்
    நானில மும்புகழ் தாகந்தீர்த் தானுடன்
    நல்லூர் வருசங் கரமூர்த்தி கட்டளை
    ஆன சடைத்தம்பி ரான்பிச்சைக் கட்டளை
    அப்பால் மலைநாட்டார் கட்டளைப் பற்றெல்லாம் (மேயினு)
    ...(83)

    சிங்கன் சிங்கியை நினைத்துக் கூறுதல்

    கொச்சகக்கலிப்பா

    செட்டிக் கிரங்கிவினை தீர்த்தவர்குற் றாலர்வெற்பில்
    சுட்டிக் கிணங்குநுதற் சுந்தரியாள் கொங்கையின்மேல்
    முட்டிக் கிடந்துகொஞ்சி முத்தாடிக் கூடிநன்றாய்க்
    கட்டிக் கிடக்கமுலைக் கச்சாய்க் கிடந்திலனே.
    ...(84)

    சிங்கன் குளுவனைப் பார்த்துக் கண்ணி கொண்டுவரச் சொல்லுதல்

    இராகம் - கல்யாணி, தாளம் - சாப்பு

    பல்லவி

    கண்ணி கொண்டுவாடா குளுவா கண்ணி கொண்டுவாடா

    அநுபல்லவி

    கண்ணி கொண்டுவாடா பண்ணவர் குற்றாலர்
    காரார் திரிகூடச் சாரலி லேவந்து
    பண்ணிய புண்ணியம் எய்தினாற் போலப்
    பறவைக ளெல்லாம் பரந்தேறி மேயுது (கண்ணி)

    சரணங்கள்

    (1) மானவர் குழு மதுரையிற் பாண்டியன்
    மந்திரி யார்கையில் முந்திப் பணம்போட்டுத்
    தானாசைப் பட்டுமுன் கொண்டகொக் கெல்லாந்
    தரிகொண்ட தில்லை நரிகொண்டு போச்சுது
    கானவர் வேடத்தை ஈனமென் றெண்ணாதே
    காக்கை படுத்தான் கருமுகில் வண்ணனும்
    மேனாட் படுத்திட்ட கொக்கிற கின்னும்
    விடைமே லிருப்பார் சடைமே லிருக்குது (கண்ணி)

    (2) முன்னாள் படுத்த பரும்பெருச் சாளியை
    மூத்த நயினார் மொடுவாய்க் கொடுபோனார்
    பின்னான தம்பியா ராடு மயிலையும்
    பிள்ளைக் குறும்பாற் பிடித்துக்கொண் டேகினார்
    பன்னரும் அன்னத்தை நன்னக ரீசர்
    பரிகல மீந்திடும் பார்ப்பானுக் கீந்தனர்
    வன்னப் பருந்தொரு கள்வன் கொடுபோனான்
    வக்காவும் நாரையும் கொக்கும் படுக்கவே (கண்ணி)

    (3) மீறு மிலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்
    வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போனநாள்
    ஆறுநாட் கூடி யொருகொக்குப் பட்டது
    அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
    சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்
    தாமுங்கொண் டார்சைவர் தாமுங்கொண் டார்தவப்
    பேறா முனிவரு மேற்றுக்கொண் டாரிதைப்
    பிக்குச்சொல் லாமலே கொக்குப் படுக்கவே (கண்ணி)
    ...(85)

    கவிக்கூற்று

    கொச்சகக்கலிப்பா

    ஆனைகுத்திச் சாய்த்ததிற லாளர்திருக் குற்றாலர்
    கூனிகொத்தி முக்கிவிக்கிக் கொக்கிருக்கும் பண்ணையெலாம்
    சேனைபெற்ற வாட்காரச் சிங்கனுக்குக் கண்ணிகொண்டு
    பூனைகுத்தி நூவன்முழுப் பூனைபோல் வந்தானே.
    ...(86)

    நூவன் சொல்லுதல்

    இராகம் - காம்போதி, தாளம் - சாப்பு

    (1) கலந்த கண்ணியை நெருக்கிக் குத்தினாற்
    காக்கையும்படுமே குளுவா காக்கை யும்படுமே

    (2) மலர்ந்த கண்ணியைக் கவிழ்த்துக் குத்தினால்
    வக்கா வும்படுமே குளுவா வக்கா வும்படுமே

    (3) உலைந்த கண்ணியை இறுக்கிக் குத்தினால்
    உள்ளா னும்படுமே குளுவா உள்ளா னும்படுமே

    (4) குலைந்த கண்ணியைத் திருத்திக் குத்தடா
    குற்றால மலைமேற் குளுவா குற்றால மலைமேல்.
    ...(87)

    சிங்கன் சொல்லுதல்

    கொச்சகக்கலிப்பா

    கள்ளுலவு கொன்றையந்தார்க் கர்த்தர்திரி கூடவெற்பிற்
    பிள்ளைமதி வாணுதலாள் பேசாத வீறடங்கத்
    துள்ளிமடி மேலிருந்து தோளின்மே லேறியவள்
    கிள்ளைமொழி கேட்கவொரு கிள்ளையா னேனிலையே.
    ...(88)


    இராகம் - கல்யாணி, தாளம் - ஆதி

    பல்லவி

    கெம்பா றடையே பொறுபொறு கெம்பா றடையே

    அநுபல்லவி

    கெம்பா றடையே நம்பர்குற் றாலர்
    கிருபைப் புறவிற் பறவை படுக்கையில்
    வம்பாக வந்தவுன் சத்தத்தைக் கேட்டல்லோ
    வந்த குருவி கலைந்தோடிப் போகுது (கெம்பா)

    சரணங்கள்

    (1) ஏறாத மீன்களும் ஏறி வருகுது
    எத்திசைப் பட்ட குருகும் வருகுது
    நூறாவது கண்ணியைப் பேறாகக் குத்தியே
    நூவனு நானு மிருந்தோ முனக்கினிப்
    பேறான சூளை மருந்தா கிலும்பிறர்
    பேசாமல் வாடைப் பொடியா கிலுமரைக்
    கூறா கிலுமொரு கொக்கா கிலுநரிக்
    கொம்பா கிலுந்தாரேன் வம்புகள் பேசியே (கெம்பா)

    (2) பூசி யுடுத்து முடித்து வளையிட்டுப்
    பொட்டிட்டு மையிட்டுப் பொன்னிட்டுப் பூவிட்டுக்
    காசு பறித்திடும் வேசைய ராசாரக்
    கண்ணிக்குள் ளேபடுங் காமுகர் போலவும்
    ஆசார ஈனத் துலுக்கன் குதிரை
    அடியொட்டிப் பாறை அடியொட்டி னாற்போலுந்
    தேசத்துக் கொக்கெல்லாங் கண்ணிக்குள் ளேவந்து
    சிக்குது பார்கறி தக்குது பாரினிக் (கெம்பா)

    (3) ஆலாவுங் கொக்கும் அருகே வருகுது
    ஆசாரக் கள்ளர்போல் நாரை திரியுது
    வேலான கண்ணிய ராசையி னால்கீழும்
    மேலுந் திரிந்திடும் வேடிக்கைக் காரர்போற்
    காலாற் றிரிந்து திரிந்து திரிந்தெங்கள்
    கண்ணிக்குள் ளாகும் பறவையைப் போகட்டுப்
    பாலாறு நெய்யாறு பாய்கின்ற ஓட்டத்திற்
    பல்லொடிக் கச்சிறு கல்லகப் பட்டாற்போல (கெம்பா)
    ....(89)

    கவிக்கூற்று

    விருத்தம்

    தேவிகுழல் வாய்மொழிப்பெண் நாச்சி யார்கால்
    செண்பகக்கால் திருந்தமதி சூடி னார்கால்
    காவிவயல் வெண்ணமடை தட்டான் பற்றுக்
    கள்ளிகுளம் அழகர்பள்ளங் கூத்தன் மூலை
    வாவிதொறு நின்றுசிங்கன் வேட்டை யாடி
    வடவருவி யாற்றுக்கால் வடகால் தென்கால்
    கோவில்விளை யாட்டமெங்குங் கண்ணி குத்திக்
    கூவினான் நூவனைவிட் டேவி னானே.
    ...(90)

    சிங்கன் சொல்லுதல்

    இராகம் - தர்பார், தாளம் - சாப்பு

    கண்ணிகள்

    (1) கல்வித் தமிழ்க்குரியார் திரிகூடக் கர்த்தர்பொற் றாள்பரவுஞ்
    செல்வக் கடலனையான் குற்றாலச் சிவராம நம்பியெங்கோன்
    வல்ல மணியபட்டன் பெருமை வளர்சங்கு முத்துநம்பி
    வெல்லுங்குற் றாலநம்பி புறவெல்லா மீன்கொத்திக் கூட்டமையே.

    (2) சீராளன் பிச்சைப்பிள்ளை திருப்பணிச் செல்வப் புதுக்குளமுங்
    காராளன் சங்குமுத்து திருத்தொடைக் காங்கேயன் கட்டளையும்
    மாராசன் தென்குடிசை வயித்திய நாதன் புதுக்குளமும்
    தாராள மானபுள்ளும் வெள்ளன்னமுந் தாராவு மேயுதையே.

    (3) தானக் கணக்குடனே ஸரீ பண்டாரம் தன்மபத் தர்கணக்கும்
    வானவர் குற்றாலர் திருவாசல் மாடநற் பத்தியமும்
    நானிலஞ் சூழ்குடிசை வைத்திய நாத நரபாலன்
    தானபி மானம்வைத்த சிவராமன் சம்பிர திக்கணக்கும்.

    (4) வேதநா ராயணவேள் குமாரன் விசைத்தொண்டை நாடாளன்
    சீதரன் முத்துமன்னன் விசாரிப்புச் சேர்ந்த புறவினெல்லாங்
    காதலாய்க் கண்ணிவைத்துப் பறவைக்குக் கங்கணங்கட் டிநின்றேன்
    ஏதோ ஒருபறவை தொடர்ந்துவந்து என்னைக்க டிக்குதையோ.
    ...(91)

    சிங்கன் சிங்கியை நினைத்தல்

    விருத்தம்

    காவலர் திரிகூ டத்திற்
    காமத்தால் கலங்கி வந்த
    நூவனைப் பழித்துச் சிங்கன்
    நோக்கிய வேட்டைக் காட்டில்
    ஆவல்சேர் காம வேட்டை
    ஆசையா லன்னப் பேட்டைச்
    சேவல்போய்ப் புணரக் கண்டான்
    சிங்கிமேற் பிரமை கொண்டான்.
    ...(92)

    சிங்கன் சிங்கியை நினைத்துப் புலம்பல்

    இராகம் - ஆகிரி, தாளம் - சாப்பு

    எட்டுக் குரலிலொரு குரல்கூவும் புறாவே எனது
    ஏகாந்தச் சிங்கியைக் கூவாத தென்னகு லாவே
    மட்டார் குழலிதன் சாயலைக் காட்டும யூரமே அவள்
    மாமலர்த் தாள்நடை காட்டாத தென்னவி காரமே
    தட்டொத்த கும்பத் தடமுலை காட்டுஞ் சகோரமே சற்றுத்
    தண்ணென்றும் வெச்சென்றும் காட்டிவிட் டாலுப காரமே
    கட்டித் திரவியங் கண்போலு நன்னகர்க் காவியே கண்ணிற்
    கண்டிட மெல்லாம் அவளாகத் தோணுதே பாவியே.
    ...(93)

    சிங்கன் வேட்டையைப் பற்றிச் சொல்லுதல்

    கொச்சகக்கலிப்பா

    செட்டிபற்றிற் கண்ணிவைத்துச் சிங்கிநடைச் சாயலினாற்
    பெட்டைக் குளத்திலன்னப் பேடைநடை பார்த்திருந்தேன்
    கட்டுற்ற நன்னகர்க்கென் கண்ணியெலாங் கொத்திவெற்றி
    கொட்டிக்கொண் டையே குருவியெலாம் போயினுமே.
    (94)

    இராகம் - முகாரி, தாளம் - சாப்பு

    பல்லவி

    போயினு மையே பறவைகள் போயினு மையே

    அநுபல்லவி

    போயினு மையே நாயகர் குற்றாலர்
    பொல்லாத தக்கன் மகத்தை அழித்தநாள்
    வாயி லடிபட் டிடிபட் டுதைபட்டு
    வானவர் தானவர் போனது போலவே (போயினு)

    சரணங்கள்

    (1) மேடையின் நின்றொரு பஞ்சவர் ணக்கிளி
    மின்னார்கை தப்பியென் முன்னாக வந்தது
    பேடையென் றேயதைச் சேவல் தொடர்ந்தது
    பின்னொரு சேவலும் கூடத் தொடர்ந்தது
    சூடிய வின்பம் இரண்டுக்கு மெட்டாமற்
    சுந்தோப சுந்தர்போல் வந்த கலகத்திற்
    காடெல்லாம் பட்சியாக் கூடிவளம் பாடிக்
    கண்ணியுந் தட்டியென் கண்ணிலுங் குட்டியே (போயினு)

    (2) ஆயிரங் கொக்குக்குக் கண்ணியை வைத்துநா
    னப்பாலே போயொரு மிப்பா யிருக்கையில்
    மாயிருங் காகங்க ளாயிரம் பட்டு
    மறைத்து விறைத்துக் கிடப்பது போலவே
    காய மொடுங்கிக் கிடந்தது கண்டுநான்
    கண்ணி கழற்றி நிலத்திலே வைத்தபின்
    சேயிழை தன்பொருட் டாலேபஞ் சாட்சரம்
    செபித்த மன்னவன் பாவம்போ னாற்போலப் (போயினு)

    (3) தம்பமென் றேநம்பி னோரைச் சதிபண்ணித்
    தாம்வாழப் பார்ப்பவர் செல்வங்கள் போலவும்
    பம்பும் வடபா லருவியில் தோய்ந்தவர்
    பாவங் கழுநீராய்ப் போவது போலவும்
    கும்ப முனிக்குச் சிவமான காலம்
    குதித்தோடிப் போன வயிணவர் போலவும்
    அம்பிகை பாகர் திரிகூட நாதர்
    அடியவர் மேல்வந்த துன்பங்கள் போலவும் (போயினு)
    ...(95)

    நூவன் சிங்கனைப் பழித்தல்

    விருத்தம்

    வருக்கையார் திரிகூ டத்தில்
    மாமியாள் மகள்மேற் கண்ணும்
    பருத்திமேற் கையு மான
    பான்மைபோல் வேட்டை போனாய்
    கருத்துவே றானாய் தாயைக்
    கற்பித்த மகள்போ லென்னைச்
    சிரித்தனை சிங்கா உன்னைச்
    சிரித்தது காமப் பேயே.
    ...(96)

    இதுவுமது

    கடுக்கையார் திரிகூ டத்திற்
    காமத்தால் வாமக் கள்ளைக்
    குடித்தவர் போலே வீழ்ந்தாய்
    கொக்குநீ படுத்து வாழ்ந்தாய்
    அடிக்கொரு நினைவேன் சிங்கா
    ஆசைப்பே யுனைவி டாது
    செடிக்கொரு வளையம் போட்டுச்
    சிங்கியைத் தேடு வாயே.
    ...(97)

    சிங்கன் சிங்கியைத் தேடும்படி நூவனுக்குச் சொல்லுதல்

    விருத்தம்

    வேடுவக் கள்ளி யோர்நாள்
    மெய்யிலா தவனென் றென்னை
    ஊடலிற் சொன்ன பேச்சா
    லுருவிலி பகைத்தா னென்மேற்
    போடுவான் புட்ப பாணம்
    புறப்பட மாட்டேன் நூவா
    தேடுநீ திரிகூ டத்தில்
    சிங்கியைக் காட்டு வாயே.
    ...(98)

    நூவன் சிங்கியைத் தேடமாட்டேனென்று மறுத்துக் கூறல்

    அங்கணர் திரிகூ டத்தி
    லவளைநீ யணைந்தா லென்ன
    நுங்களிற் பிரிந்தால் என்ன
    நூவனுக் குண்டோ நட்டம்
    கங்கண மெனக்கேன் சிங்கா
    காசலை யுனக்குண் டானால்
    கொங்கணச் சிங்கி தன்னைக்
    கூட்டிவா காட்டு வேனே.
    ...(99)

    சிங்கன் சிங்கியைத் தேடல்

    திருவண்ணா மலைகாஞ்சி திருக்கா ளத்தி
    சீகாழி சிதம்பரதென் னாரூர் காசி
    குருநாடு கேதாரம் கோலக் கொண்டை
    கோகரணஞ் செகநாதங் கும்ப கோணம்
    அரியலூர் சீரங்கந் திருவா னைக்கா
    அடங்கலும்போய்ச் சிங்கிதனைத் தேடிச் சிங்கன்
    வருசிராப் பள்ளிவிட்டு மதுரை தேடி
    மதிகொண்டான் திரிகூட மெதிர்கண் டானே.
    ... (100)

    வில்லிபுத்தூர் கருவைநல்லூர் புன்னைக் காவு
    வேள்திருச்செந் தூர்குருகூர் சீவை குந்த
    நெல்வேலி சிங்கிகுளம் தேவ நல்லூர்
    நிலைதருஞ்சிற் றூர்குமரி திருவாங் கோடு
    சொல்லரிய குறுங்கைகளாக் காடு தேடித்
    தொன்மருதூ ரத்தாள நல்லூர் தேடிச்
    செல்வருறை சிவசயிலம் பாவ நாசம்
    திரிகூடச் சிங்கிதனைத் தேடு வானே.
    ...(101)

    இராகம் - நீலாம்பரி, தாளம் - ஆதி

    கண்ணிகள்

    (1) பேடைக் குயிலுக்குக் கண்ணியை வைத்துநான்
    மாடப் புறாவுக்குப் போனேன்
    மாடப் புறாவுங் குயிலும் படுத்தேன்
    வேடிக்கைச் சிங்கியைக் காணேன்.

    (2) கோல மயிலுக்குக் கண்ணியை வைத்துநான்
    ஆலாப் படுக்கவே போனேன்
    ஆலாவுங் கோல மயிலும் படுத்தேன்
    மாலான சிங்கியைக் காணேன்.

    (3) வெவ்வாப் பறவையின் வேட்டைக்குப் போய்க்காம
    வேட்டையைத் தப்பிவிட் டேனே
    வவ்வால் பறக்க மரநா யகப்பட்ட
    வைபவ மாச்சுது தானே.

    (4) இவ்வாறு வந்தவென் நெஞ்சின் விரகத்தை
    எவ்வாறு தீர்த்துக்கொள் வேனே
    செவ்வாய்க் கரும்பை அநுராக வஞ்சியைச்
    சிங்கியைக் காணகி லேனே.
    ...(102)

    குற்றாலத்தில் சிங்கன் சிங்கியைத் தேடுதல்

    விருத்தம்

    நற்றாலந் தன்னிலுள்ளோர் யாவ ரேனும்
    நன்னகரத் தலத்தில்வந்து பெறுவார் பேறு
    பெற்றார்தாம் நன்னகரத் தலத்தை விட்டாற்
    பிரமலோ கம்வரைக்கும் பேறுண் டாமோ
    வற்றாத வடவருவிச் சாரல் நீங்கி
    வடகாசி குமரிமட்டு மலைந்த சிங்கன்
    குற்றாலத் தலத்திமுன்னே தவத்தால் வந்து
    கூடினான் சிங்கிதனைத் தேடி னானே.
    ...(103)

    சிங்கன் சிங்கியைக் காணாமல் புலம்பல்

    இராகம் - தோடி, தாளம் - ஆதி

    பல்லவி

    சிங்கியைக் காணேனே என்வங்கணச் சிங்கியைக் காணேனே

    அநுபல்லவி

    சிங்கியைக் காமப் பசுங்கிளிப் பேடையைச்
    சீர்வளர் குற்றாலர் பேர்வளம் பாடிய
    சங்கீத வாரியை இங்கித நாரியைச்
    சல்லாபக் காரியை உல்லாச மோகனச் (சிங்கி)

    சரணங்கள்

    (1) ஆரத் தனத்தைப் படங்கொண்டு மூடி
    அசைத்துநின் றாளதை யானைக்கொம் பென்றுநான்
    கோரத் தைவைத்த விழிக்கெதிர் சென்றேனென்
    கொஞ்சத் தனத்தை யறிந்து சுகக்காரி
    பாரத் தனத்தைத் திறந்துவிட் டாள்கண்டு
    பாவியே னாவி மறந்துவிட் டேனுடன்
    தீரக் கனிய மயக்கி முயக்கியே
    சிங்கார மோகனம் சிங்கிகொண் டாளந்தச் (சிங்கி)

    (2) பூவென்ற பாதம் வருடி வருடிப்
    புளக முலையை நெருடி நெருடி
    ஏவென்ற கண்ணுக்கோ ரஞ்சனம் தீட்டி
    எடுத்த சுருளு மிதழா லிடுக்குவள்
    வாவென்று கைச்சுருள் தாவென்று வாங்காள்
    மனக்குறி கண்டு நகக்குறி வைத்தபின்
    ஆவென் றொருக்கா லிருக்கா லுதைப்பள்
    அதுக்குக் கிடந்து கொதிக்குதென் பேய்மனம் (சிங்கி)

    (3) தாராடுங் குன்றி வடத்தை ஒதுக்கித்
    தடமார் பிறுகத் தழுவவந் தாலவள்
    வாராடுங் கொங்கைக்குச் சந்தனம் பூசாள்
    மறுத்துநான் பூசினும் பூசலாகா தென்பாள்
    சீராடிக் கூடி விளையாடி இப்படித்
    தீரா மயல்தந்த தீராமைக் காரியைக்
    காராடுங் கண்டர்தென் னாரிய நாட்டுறை
    காரியப் பூவையை ஆரியப் பாவையை (சிங்கி)
    ...(104)

    நூவன் சிங்கியினது அடையாளம் வினாவுதல்

    கொச்சகக்கலிப்பா

    சங்கமெலா முத்தீனுஞ் சங்கர்திரி கூடவெற்பில்
    பொங்கமெலாஞ் செய்யுமுங்கள் போகமெலா மாரறிவார்
    சிங்கமெலா மொத்ததுடிச் சிங்காவுன் சிங்கிதனக்
    கங்கமெலாம் சொல்லியடை யாளஞ்சொல் வாயே.
    ...(105)

    சிங்கன் சிங்கியினது அடையாளங் கூறுதல்

    இராகம் - பியாகடை, தாளம் - மிசுரம்

    பல்லவி

    கறுப்பி லழகியடா என்சிங்கி கறுப்பி லழகியடா

    அநுபல்லவி

    கறுப்பி லழகிகாமச் சுறுக்கில் மிகுந்தசிங்கி - சுகக்காரி (கறு)

    சரணங்கள்

    (1) கண்க ளிரண்டுமம்புக் கணைபோல் நீண்டிருக்கும்
    கையத் தனையகலங் காணுமடா
    பெண்கள் மயக்குமவள் விரகப்பார்வை சிங்கி
    பிடித்தால் மதப்பயலும் பெலப்பானோ (கறு)

    (2) நகையு முகமுமவள் நாணயக் கைவீச்சும்
    பகைவருந் திரும்பிப் பார்ப்பாரடா
    தொகையாய்ச் சொன்னேனினிச் சொல்லக் கூடாதொரு
    வகையாய் வருகுதென்னை மயக்குதையே (கறு)

    (3) விடையில் வரும்பவனி யுடையதிருக் குற்றாலர்
    சடையில் இளம்பிறைபோல் தனிநுதலாள்
    நடையி லழகுமிரு துடையி லழகுமவ
    ளுடையி லழகுமென்னை உருக்குதையோ (கறு)
    ...(106)

    நூவன் சிங்கியைச் சேர்த்து வைப்பதற்குச் சிங்கனிடங் கூலி வினாவுதல்

    கொச்சகக்கலிப்பா

    சாட்டிநிற்கு மண்டமெலாம் சாட்டையிலாப் பம்பரம்போல்
    ஆட்டுவிக்குங் குற்றாலத் தண்ணலார் நன்னாட்டிற்
    காட்டுவிக்கு முன்மோகக் கண்மாயச் சிங்கிதனைக்
    கூட்டுவிக்கும் பேர்களுக்குக் கூலியென்ன சொல்வாயே.
    ...(107)

    சிங்கன் நூவனுக்குப் பிரதியுபகாரங் கூறுதல்

    இராகம் - தர்பார், தாளம் - ரூபகம்

    கண்ணிகள்

    (1) வாடை மருந்துப் பொடியு மம்மியூர்
    மரப்பாவை பின்தொடர மாயப்பொடியும்
    கூடி யிருக்க மருந்து மிருபொழுதும்
    கூடியிருப் பார்களைக் கலைக்க மருந்தும்
    காடுகட் டக்கினிக் கட்டு குறளிவித்தை
    கண்கட்டு வித்தைகளுங் காட்டித் தருவேன்
    வேடிக்கைக் காம ரதிபோல் திரிகூட
    வெற்பிலுறை சிங்கிதனைக் காட்டா யையே.

    (2) மலையைக் கரையப் பண்ணுவேன் குமரிகட்கு
    வாராத முலைகளும் வரப்பண்ணுவேன்
    முலையை ஒழிக்கப் பண்ணுவே னொழித்தபேர்க்கு
    மோகினி மந்திரஞ்சொல்லி வரப்பண்ணுவேன்
    திலத வசீகரஞ் செய்வே னொருவருக்குந்
    தெரியாமற் போகவரச் சித்துமறிவேன்
    கலக மதனப் பயலையென் மேற்கண்
    காட்டிவிட்ட சிங்கிதனைக் காட்டா யையே.
    ...(108)

    நூவன் சிங்கனைப் பரிகசித்தல்

    விருத்தம்

    ஆற்றைநான் கடத்தி விட்டா
    லாகாச மார்க்க மோடத்
    தேற்றநீ யறிவாய் கொல்லோ
    திரிகூட மலையில் சிங்கா
    சாற்றுமுன் மருந்து போலச்
    சகலர்க்குங் குறிகள் சொல்லிப்
    போற்றுமுன் சிங்கி போன
    புதுத்தெரு இதுகண் டாயே.
    ...(109)

    சிங்கன் சிங்கியைக் காணாமல் வருந்துதல்

    இராகம் - முகாரி, தாளம் - ஆதி

    பல்லவி

    எங்கேதான் போனாளையே என்சிங்கி இப்போது
    எங்கேதான் போனளையே.

    அநுபல்லவி

    கங்காளர் திரிகூடக் கர்த்தர்திரு நாடுதன்னில் (எங்கே)

    சரணங்கள்

    (1) வேளாகிலு மயக்குவள் வலியத் தட்டிக்
    கேளா மலுமு யக்குவள்
    ஆளா யழகனுமா யாரையெங்கே கண்டாளோ
    தோளசைக் காரிசிங்கி சும்மா கிடக்கமாட்டாள் (எங்கே)

    (2) மெய்க்குறியா லெங்கும் வெல்லுவள் மனக்குறியுங்
    கைக்குறியும் கண்டு சொல்லுவள்
    திக்கிலடங் காதுகுறி இக்கிலடங் காதுமொழி
    மைக்குளடங் காதுவிழி கைக்குளடங் காதகள்ளி (எங்கே)

    (3) சித்திரச பேசர்மேலே சிவசமயப்
    பத்தியில்லாப் பேயர்போலே
    குத்தியி லரக்குங்கள்ளுங் குடுவையில் தென்னங்கள்ளும்
    அத்தனையுங் குடித்துப்போட் டார்பிறகே தொடர்ந்தாளோ (எங்கே)
    (110)

    சிங்கன் சிங்கியைக் காணுதல்

    கொச்சகக்கலிப்பா

    ஆணாகிப் பெண்விரக மாற்றாமற் போனசிங்கன்
    பூணாகப் பாம்பணிவார் பொன்னகர்சூழ் நன்னகரின்
    சேணார்பெ ருந்தெருவிற் சிங்கியைமுந் தேடிவைத்துக்
    காணாமற் போனபொருள் கண்டவர்போற் கண்டானே.
    ...(111)

    விருத்தம்

    சீதமதி புனைந்தவர்குற் றால நாதர்
    திருநாட்டி லிருவருந்தாம் கண்ட போது
    காதலெனுங் கடல்பெருகித் தரிகொள் ளாமற்
    கைகலக்கும் போதுகரை குறுக்கிட் டாற்போல்
    வீதிவந்து குறுக்கிடவே நாணம் பூண்ட
    விண்ணாணச் சிங்கிதனைக் கண்டு சிங்கன்
    தூதுவந்த நளனானான் கன்னி மாடம்
    துலங்குதம யந்தியவ ளாயி னாளே.
    ...(112)

    இராகம் - எதுகுலகாம்போதி, தாளம் - சாப்பு

    பல்லவி

    இங்கே வாராய் என்கண்ணே யிங்கே வாராய்

    அநுபல்லவி

    இங்கே வாராய் மலர்ச்செங்கை தாராய் மோகச்
    சங்கை பாராய் காமச்சிங்கி யாரே (இங்கே)

    சரணங்கள்

    (1) பாதநோமே நொந்தால்மனம் பேதமாமே
    பாதநோக நிற்ப தேது பாவமினிக்
    கூதலோ கொடிது காதலோ கடினம் (இங்கே)

    (2) பாவிதானே மதன்கணை ஏவினானே
    காவில்மாங் குயில்கள்கூவிக் கூவியெனது
    ஆவி சோருதுனை யாவியாவிக் கட்ட (இங்கே)

    (3) வருக்கை மூலர் வடவருவித் திருக்குற்றாலர்
    பெருக்கம் பாடிக்கொள்ள மருக்கள் சூடிக்கொள்ள
    ஒருக்கா லூடிக்கொள்ள இருக்காற் கூடிக்கொள்ள (இங்கே)
    ...(113)

    சிங்கன் சிங்கியை மகிழ்வித்தல்

    கொச்சகக்கலிப்பா

    தொண்டாடுஞ் சுந்தரர்க்குத் தோழர்திரி கூடவெற்பில்
    திண்டாடி நின்றசிங்கன் சீராடுஞ் சிங்கிதனைக்
    கண்டாடித் துள்ளாடிக் கள்ளாடும் தும்பியைப்போற்
    கொண்டாடிக் கொண்டாடிக் கூத்தாடிக் கொண்டானே.
    ...(114)

    சிங்கனுக்கும் சிங்கிக்கும் உரையாடல்

    இராகம் - தன்யாசி, தாளம் - ஆதி

    கண்ணிகள்

    (1) இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
    எங்கே நடந்தாய்நீ சிங்கி (எங்கே நடந்தாய்நீ)

    (2) கொத்தார் குழலார்க்கு வித்தார மாகக்
    குறிசொல்லப் போனனடா சிங்கா (குறிசொல்ல)

    (3) பார்க்கி லதிசயம் தோணுது சொல்லப்
    பயமா இருக்குதடி சிங்கி (பயமா)

    (4) ஆர்க்கும் பயமில்லைத் தோணின காரியம்
    அஞ்சாமற் சொல்லடா சிங்கா (அஞ்சா)

    (5) காலுக்கு மேலே பெரிய விரியன்
    கடித்துக் கிடப்பானேன் சிங்கி (கடித்து)

    (6) சேலத்து நாட்டிற் குறிசொல் லிப்பெற்ற
    சிலம்பு கிடக்குதடா சிங்கா (சிலம்பு)

    (7) சேலத்தா ரிட்ட சிலம்புக்கு மேலே
    திருகு முருகென்னடி சிங்கி (திருகு)

    (8) கோலத்து நாட்டார் முறுக்கிட்ட தண்டை
    கொடுத்த வரிசையடா சிங்கா (கொடுத்த)

    (9) நீண்டு குறுகியு நாங்கூழுப் போல
    நௌிந்த நௌிவென்னடி சிங்கி (நௌிந்த)

    (10) பாண்டிய னார்மகள் வேண்டுங் குறிக்காகப்
    பாடக மிட்டதடா சிங்கா (பாடகம்)

    (11) மாண்ட தவளையுன் காலிலே கட்டிய
    மார்க்கம தேதுபெண்ணே சிங்கி (மார்க்க)

    (12) ஆண்டவர் குற்றாலர் சந்நிதிப் பெண்கள்
    அணிமணிக் கெச்சமடா சிங்கா (அணிமணி)

    (13) சுண்டு விரலிலே குண்டலப் பூச்சி
    சுருண்டு கிடப்பானேன் சிங்கி (சுருண்டு)

    (14) கண்டிய தேசத்திற் பண்டுநான் பெற்ற
    காலாழி பீலியடா சிங்கா (காலாழி)

    (15) மெல்லிய பூந்தொடை வாழைக் குருத்தை
    விரித்து மடித்ததார் சிங்கி (விரித்து)

    (16) நெல்வேலி யார்தந்த சல்லாச் சேலை
    நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா (நெறிபிடி)

    (17) ஊருக்கு மேக்கே யுயர்ந்த அரசிலே
    சாரைப்பாம் பேதுபெண்ணே சிங்கி (சாரை)

    (18) சீர்பெற்ற சோழன் குமாரத்தி யார்தந்த
    செம்பொனரை ஞாணடா சிங்கா (செம்பொ)

    (19) மார்பிற்கு மேலே புடைத்த சிலந்தியில்
    கொப்புளங் கொள்வானேன் சிங்கி (கொப்பு)

    (20) பாருக்குள் ஏற்றமாங் காயலார் தந்த
    பாரமுத் தாரமடா சிங்கா (பார)

    (21) எட்டுப் பறவை குமுறுங் கமுகிலே
    பத்தெட்டுப் பாம்பேதடி சிங்கி (பத்தெட்டுப்)

    (22) குட்டத்து நாட்டாரும் காயங் குளத்தாரும்
    இட்ட சவடியடா சிங்கா (இட்ட)
    ...(115)

    வேறு

    இராகம் - புன்னாகவராளி, தாளம் - ஆதி

    கண்ணிகள்

    (1) வள்ளிக் கொடியிலே துத்திப்பூப் பூப்பானேன் சிங்கி - காதில்
    வங்காளத் தாரிட்ட சிங்காரக் கொப்படா சிங்கா

    (2) கள்ளிப்புப் பூத்த ததிசய மல்லவோ சிங்கி - தெற்கு
    வள்ளியூ ரார்தந்த மாணிக்கத் தண்டொட்டி சிங்கா

    (3) வன்னக் குமிழிலே புன்னை யரும்பேது சிங்கி - மண்ணில்
    முந்நீர்ச் சலாபத்து முத்துமூக் குத்திகாண் சிங்கா

    (4) சொருகி முடித்ததில் தூக்கண மேதடி சிங்கி - தென்
    குருகையூ ரார்தந்த குப்பியுந் தொங்கலுஞ் சிங்கா

    (5) பொன்னிட்ட மேலெல்லா மின்வெட்டிப் பார்ப்பானேன் சிங்கி - இந்த
    வன்னப் பணிகளின் மாணிக்கக் கல்லடா சிங்கா

    (6) இந்தப் பணியைநீ பூணப் பொறுக்குமோ சிங்கி - பூவில்
    ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக்குங்காண் சிங்கா

    (7) குன்றத்தைப் பார்த்தாற் கொடியிடை தாங்குமோ சிங்கி - ???
    கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா

    (8) இல்லாத சுற்றெல்லா மெங்கே படித்தாய்நீ சிங்கி - நாட்டில்
    நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா

    (9) பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கி - இந்த
    வெட்ட வௌியிலே கோடிப்பாம் பாடுமோ சிங்கா

    (10) கட்டிக்கொண் டேசற்றே முத்தங் கொடுக்கவா சிங்கி - நடுப்
    பட்டப் பகலில்நா னெட்டிக் கொடுப்பேனோ சிங்கா

    (11) முட்டப் படாமுலை யானையை முட்டவோ சிங்கி - காம
    மட்டுப் படாவிடில் மண்ணோடே முட்டடா சிங்கா

    (12) சேலை யுடைதனைச் சற்றே நெகிழ்க்கவா சிங்கி - சும்மா
    நாலுபேர் முன்னெனை நாணங் குலையாதே சிங்கா

    (13) பாதம் வருடித் துடைகுத்த வேண்டாமோ சிங்கி - மனப்
    போதம் வருடிப்போய் பூனையைக் குத்தடா சிங்கா

    (14) நாக்குத் துடிக்குதுன் நல்வா யிதழுக்குச் சிங்கி - உன்றன்
    வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் அல்லவோ சிங்கா

    (15) ஒக்கப் படுக்க வொதுக்கிடம் பார்க்கவோ சிங்கி - பருங்
    கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா

    (16) விந்தைக் காரியுன்னை வெல்லக் கூடாதடி சிங்கி - அது
    சந்தேக மோஉன்றலைப் பேனைக் கேளடா சிங்கா

    (17) தென்னாடெல் லாமுன்னைத் தேடித் திரிந்தேனே சிங்கி - அப்பால்
    இந்நாட்டில் வந்தென்னை யெப்படி நீகண்டாய் சிங்கா

    (18) நன்னகர்க் குற்றால நாதரை வேண்டினேன் சிங்கி - மணிப்
    பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா

    (19) பாடிக்கொள் வாரெவ ராடிக்கொள் வாரெவர் சிங்கி - நீதான்
    பாடிக்கொண் டால்போது மாடிக்கொள் வேனடா சிங்கா

    (20) பார்க்கப் பொறுக்குமோ பாவியென் னாவிதான் சிங்கி - முன்னே
    ஆக்கப்பொறுத்தவ ராறப் பொறர்களோ சிங்கா.
    ...(116)

    வாழ்த்து

    வெண்பா

    சுற்றாத ஊர்தோறுஞ் சுற்றவேண் டாபுலவீர்
    குற்றால மென்றொருகாற் கூறினால் - வற்றா
    வடவருவி யானே* மறுபிறவிச் சேற்றில்
    நடவருவி யானே நமை.
    (117)
    (* "வடவருவி யான் மறுபிறவிச் சேற்றில்" என்றிருந்தது. தளைத்தட்டலை நீக்க
    "வடவருவி யானே" என்று மாற்றிவிடேன் - தவறாயின் மன்னிக்கவுன். - அருளரசன்.)

    கண்ணிகள்

    (1) கொற்றமதிச் சடையானைக் குறும்பலா உடயானை
    வெற்றிமழுப் படையானை விடையானை வாழ்த்துகிறேன்.

    (2) தாதையிலாத் திருமகனைத் தடமலைக்கு மருமகனை
    வேதசங்க வீதியனை வேதியனை வாழ்த்துகிறேன்.

    (3) தந்திமுகத் தொருகோனைத் தமிழிலஞ்சி முருகோனை
    மைந்தரெனு மிறையோனை மறையோனை வாழ்த்துகிறேன்.

    (4) தீமுகத்திற் பறிகொடுத்த திருமுடிக்கா ஒருமுடியை
    மாமனுக்கு வரிசையிட்ட மாமனைநான் வாழ்த்துகிறேன்.

    (5) காமனுக்கும் பூமனுக்கும் கன்னிதெய்வ யானைக்கும்
    மாமனென வேபகரும் வள்ளல்தனை வாழ்த்துகிறேன்.

    (6) நீடுலகெ லாமளந்த நெடியா னுமயனும்
    தேடரிய திரிகூடச் செல்வனையான் வாழ்த்துகிறேன்.

    (7) சித்ரநதி யிடத்தானைத் தேனருவித் தடத்தானைச்
    சித்ரசபை நடத்தானைத் திடத்தானை வாழ்த்துகிறேன்.

    (8) பனகவணி பூண்டவனைப் பக்தர்களை ஆண்டவனை
    அனவரதத் தாண்டவனை ஆண்டவனை வாழ்த்துகிறேன்.

    (9) அரிகூட அயனாகி யரனாகி அகலாத
    திரிகூட பரம்பரனைத் திகம்பரனை வாழ்த்துகிறேன்.

    (10) சிற்றாற்றங் கரையானைத் திரிகூட வரையானைக்
    குற்றாலத் துறைவானைக் குருபரனை வாழ்த்துகிறேன்.

    (11) கடகரியை உரித்தவனைக் கலைமதியம் தரித்தவனை
    வடஅருவித் துறையவனை மறையவனை வாழ்த்துகிறேன்.

    (12) ஆதிமறை சொன்னவனை யனைத்துயிர்க்கு முன்னவனை
    மாதுகுழல் வாய்மொழிசேர் மன்னவனை வாழ்த்துகிறேன்.
    ...(118)

    விருத்தம்

    வார்வாழுந் தனத்திகுழல் வாய்மொழியம் பிகைவாழி
    வதுவை சூட்டும்
    தார்வாழி திரிகூடத் தார்வாழி குறுமுனிவன்
    தலைநாட் சொன்ன
    பேர்வாழி யரசர்செங் கோல்வாழி நன்னகரப்
    பேரா லோங்கும்
    ஊர்வாழி குற்றாலம் தலத்தடியார் வாழிநீ
    டூழி தானே.
    ...(119)

    திருக்குற்றாலக் குறவஞ்சி முற்றிற்று


    திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றால மாலை
    காப்பு

    பூமண்ட லம்பரவும் புங்கவர்குற் றாலலிங்கர்
    நாமஞ்சேர் பாமாலை நாட்டவே - தாமஞ்சேர்
    தந்தமதத் தந்திமுகத் தந்தைதுணைச் செந்தினகர்க்
    கந்தனிணைச் செஞ்சரணங் காப்பு.

    நூல்

    மொழிகொண்ட மூவர் திருப்பாடல் கற்று முழுதுமுன்பால்
    வழிகொண்ட பேரன் புவைப்பதென்றே குழல்வாய் மொழிப்பெண்
    விழிகொண்ட காட்சிக் கௌியாய்பெண் பூமிபொன் வேட்கையெல்லா
    மொழிகொண்ட தொண்டர்க் குரியாய்குற் றாலத் துறைபவனே.
    ...(1)

    எனக்கேற நின்வழி நில்லாமல் யானென தென்னும்வழி
    தனக்கேறி ஐவர் தடையிற்பட் டேன்றடை தீர்ப்பதற்கோ
    கனக்கே ளுனையன்றிக் காணேன் முழுதுமுன் கையிற்பிள்ளை
    உனக்கே யடைக்கலந் *திருவாச கங்கண்டாய் குற்றாலத் துறைபவனே
    ...(2)

    (*திருவாசகம் என்னும் சொல் இங்கு இடைசெறுகலாக இருக்கலாம்.)

    பொன்னைப் பரமென்று மின்னார் கலவிப் புலவியின்பம்
    தன்னைப் பரமென்று மேயிருந் தேன்யம தண்டம்வந்தால்
    பின்னைப் பரமொன்றுங் காணே னுனதருட் பேறருள்வாய்
    உன்னைப் பரமென்று சார்ந்தேன்குற் றாலத் துறைபவனே
    ...(3)

    ஆக்கமுண் டாக மகிழ்ச்சியுண் டாகியு மல்லவென்றான
    ஏக்கமுண் டாகியு மேயிளைத் தேனன்ப ரின்பக்கல்வித்
    தேக்கமுண் டாகியுந் தேறே னெனைமுற்றுந் தேற்றுகண்டாய்
    ஊக்கமுந் தூக்கமு மில்லாய்குற் றாலத் துறைபவனே
    ...(4)

    அருமந்த நின்னருள் போற்றென் பொசிப்புக் கமைத்தபடி
    வருமென் றிருக்கவு மாட்டேன் பிறவி மயக்கமறக்
    குருவென்று நீவந்து தோன்றாய்முன் மூவர்கள் கோட்டைகொன்ற
    ஒருமந்த காசப் படையாய்குற் றாலத் துறைபவனே
    ...(5)

    பெற்றார்தம் பிள்ளைக ணோவறியார் பிள்ளை நோவறிந்தால்
    சற்றா கிலும்பகிர்ந்தால் தரியார் தந்தை தாயினுமென்
    பற்றாப் பசிகண் டமுதூட்டி நோயறப் பார்க்கவல்ல
    உற்றா ருனையன்றி யுண்டோகுற் றாலத் துறைபவனே
    ...(6)

    மறையாடுந் தெய்வத் திரிகூடஞ் சார்ந்து வடவருவித்
    துறையாடி யுன்னைத் தொழுவதென் றோதடஞ் சோலையெல்லாம்
    சிறையாறு கால்வண்டு பண்பாட மாந்தளிர்ச் செங்கரத்தால்
    உறையாடுந் தேனமு தூட்டுங்குற் றாலத் துறைபவனே
    ...(7)

    கிள்ளைகள் போற்படித் தாவதிங் கேதுன் கிருபையின்பால்
    பிள்ளைகள் போலுண்ணப் பேறவருள் வாய்கிளிப் பிள்ளையெல்லாம்
    வள்ளைகள் பாடுஞ் சித்ராநதி யாயன்பு வைத்ததொண்டர்
    உள்ளையெல் லாங்கொள்ளை கொண்டாய்குற் றாலத் துறைபவனே
    ...(8)

    ஆசையெ லாம்பொருண் மேலோ யொருவ னகத்திலிரா
    வேசையு மென்னெஞ்சு மொக்குங்கண்டாய் விண்ணு ளோர்புரியும்
    பூசையம் போருகத் தாளாய் நிறைந்த சம்பூரணமாம்
    ஓசையும் விந்துவு மாவாய்குற் றாலத் துறைபவனே
    ...(9)

    கருக்கொண்ட போதுள்ளுங் கன்மருவி யாதி கருவிலுருப்
    பெருக்கும் பொழுது நெருக்கும் வியாதி பிறந்துபின்னை
    இருக்குஞ் சடமும் வியாதியென் றாலிதை நம்பிநன்றாய்
    உருக்குஞ் செனன மெடுத்தேன்குற் றாலத் துறைபவனே
    ...(10)

    கன்மமரும் பியவா வீங்கியைம் புலன்கண் கள்வைத்துப்
    பன்மலஞ்சீக் கொண்ட சென்மவி யாதி பழுத்துவந்தால்
    தன்ம வயித்தியன் சத்ரமிடா மற்ற விர்க்கமருந்
    துன்மலர்த் தாளினை தாராய்குற் றாலத் துறைபவனே
    ...(11)

    அமையம் பலவு மொருபொழு தாயசை யாமலுன்றன்
    சமயங் கருதத் தவமெய்து மோசண்ப காடவிசூழ்
    இமயம் பெறுமங்கை சுந்தரி கோமளையா மளையென்னும்
    உமையம் பிகைமண வாளாகுற் றாலத் துறைபவனே
    ...(12)

    பூங்கா ரணிகுழ லார்மயக் கால்மனம் புத்திசித்தம்
    ஆங்கா ரந்தட் டழிவேற்கி ரங்காயன் புநீர்பெருகித்
    தேங்கா மற்றேங்கு மனத்தார் பரவித்தி யானஞ்செய்யும்
    ஓங்கார வட்டத் தொளியேகுற் றாலத் துறைபவனே
    ...(13)

    முன்வடி வாய்முன் னிருந்திட லேது முளைக்கருவாப்
    பின்வடி வார்க்கும் வினைவடி வேதுகை பேணிநின்ற
    என்வடி வேதுபின்யா னென்பதே தென்னை யாட்டிவைக்கும்
    உன்வடி வேதுகொல் சொல்லாய்குற் றாலத் துறைபவனே
    ...(14)

    நில்லா வுடம்பி லுயிர்நின்ற தோவுயிர் நின்றிடத்தே
    எல்லா வுடம்பு நிலைநின்ற தோவியல் சேர்வடிவம்
    பல்லா வுயிரு மொன்றே புறம்போ பகையோவுறவோ
    ஒல்லா மலோர்வழி சொல்லாய்குற் றாலத் துறைபவனே
    ...(15)

    வருநாள வர்கள் மனைசந்தைக் கூட்டம் வரவற்றநாள்
    திருநாட் கழிந்த மடமொக்கு மேயிதைச் சிந்தித்துநான்
    பருநாட் கழிப்பது பாரைய யான்பல நாளுமுன்னை
    ஒருநாளிற் காண்ப துரையாய்குற் றாலத் துறைபவனே
    ...(16)

    வாசக் குழந்தையு மாய்மட வார்மண வாளனுமாய்
    ஆசைப் பருவமது தப்பினா லந்த மாதருங்கண்
    கூசக் கிழங்கொண்டு தோலாகி நாற்றம் குலைக்குமிந்த
    ஊசச் சடமென்று போமோகுற் றாலத் துறைபவனே
    ...(17)

    திருத்தப் புகுந்திடி லண்டங்கள் கோடி திருத்துவையென்
    கருத்தைத் திருத்தவுனக் கரிதோ கௌவை காட்டுங்கன்ம
    வருத்தத்தை மாற்றவோர் மாற்றங் கொடாய்குழல் வாய்மொழியாள்
    ஒருத்திக் கொர்பாகங் கொடுத்தாய்குற் றாலத் துறைபவனே
    ...(18)

    காணுறக் கண்டுனைப் போற்றறி யார்கடை யாம்பொசிப்பும்
    வீணுறக் கங்களு மேகுறிப் பாரருள் வெள்ளத்தின்பால்
    சேணுறக் கண்டு சிவயோக நித்திரை செய்யுமன்பர்
    ஊணுறக் கங்குறிப் பாரோகுற் றாலத் துறைபவனே
    ...(19)

    நிறையும் பரணவ மூடாச் சதுர்மறை நீண்டகொப்பா
    அறைகின்ற சாகை கிளையா யறமுத னான்கரும்பிக்
    குறைவின்றி ஞான மணநாறுந் தெய்வக் குறும்பலாவில்
    உறைகின்ற முக்கட் கனியேகுற் றாலத் துறைபவனே
    ...(20)

    எல்லா வடிவு மொன்றானா லுமங்கங் கிருந்துநல்லார்
    பொல்லா தெனவிளை யாட்டிய தாலது போல்மனத்திற்
    கல்லாமை கற்பிக்கு மென்பாச நேசங் கருதிலன்பர்
    உல்லாச நேசமொப் பாமோகுற் றாலத் துறைபவனே
    ...(21)

    அருவித் துறைபடிந் தாடிவெண் ணீறிட்டு னன்பர்தம்பான்
    மருவிப் பணிலமறு கூடுவந் துன்னை வாழ்த்தும்வண்ணம்
    கருவிப் பவமறு கூடுசெல் லாக்கதி காட்டுகண்டா
    உருவிற் குவமையொன் றில்லாய்குற் றாலத் துறைபவனே
    ...(22)

    விருத்தரையும் வெல்லு மெல்லியர் நேசம் விடுத்துநின்பால்
    இருத்தரை மாத்திரைக்கே ஐவ ரோடலை யேத்துமுண்மைக்
    கருத்தரைக் கண்டு கருதாமற் சிந்தைக பாடஞ்செய்தால்
    ஒருத்தரை நோவ தழகோகுற் றாலத் துறைபவனே
    ...(23)

    நானா ரெனதுடம் பேதுணர் வேதெனை நாட்டினைநீ
    யாரெனத் தௌியே னௌியேன் செண்ப காடவிசூழ்
    கானார் சிவமது கங்கையின் மூழ்கக் கருணைசெய்தே
    ஊனாற் பிறவி யொழிப்பாய்குற் றாலத் துறைபவனே
    ...(24)

    வேம்பே புழுவுக் கதிரசமாய் வெவ்விடம் கிடந்த
    பாம்பே கலுழனுக் காரமுதாய்ப் பற்பல வுயிர்க்கும்
    ஆம்பே தபேதமட் டூட்டிய தால்வினை யாம்பொசிப்பை
    ஓம்பே னருளமு தூட்டாய்குற் றாலத் துறைபவனே
    ...(25)

    குன்றாத ஞானக் கனியை அஞ்ஞானக் கொடும்பசிக்குத்
    தின்றே கவென்னினு மைவரொட் டார்திகைத் தேங்கிமனம்
    கன்றா மலுன்னரு ளூடாடி யுள்ளனுங் கள்ளனும்போல்
    ஒன்றா குநாளினி யென்றோகுற் றாலத் துறைபவனே
    ...(26)

    பொன்னென்று சொன்ன வுடனே மயக்குமென் புத்தியைநான்
    என்னென்று சொல்லி திருத்திக் கொள்வேனெனை யீன்றுசெஞ்சோற்
    பன்னென்று சொன்ன படிபோல வுள்ள படியைநெஞ்சில்
    உன்னென்று போதித் தருள்வாய்குற் றாலத் துறைபவனே
    ...(27)

    நாறுங் குரம்பைக் குள்ளே மருண்டேனுனை நாடிமனம்
    தேறும் படிக்கொரு தேற்றஞ் சொல்வாயன் புதேக்கியுள்ளே
    ஆறுங் கருத்தினர் சித்தாம் புயத்தி லருட்பெருக்காய்
    ஊறுஞ் சிவானந்தத் தேனேகுற் றாலத் துறைபவனே
    ...(28)

    ஆற்றிற் குமிழியின் றோற்றங்கட் போலண்ட கோடியெல்லாம்
    தோற்றிக் கணப்பொழு தேமறைப் பாய்துறைப் பாவிலுன்சீர்
    சாற்றித் துதிப்பவர்முன் வருவாய் சண்ட னென்னுயிரை
    ஊற்றிக் குடிக்குமுன் வாராய்குற் றாலத் துறைபவனே
    ...(29)

    திடம்போத வுண்ணக் கிடைத்தால் நடக்குஞ் சிலகுறைந்தால்
    முடம்போற்கி டக்கு மிகுந்தாலு வாதிக்கு முன்கொடுத்த
    கடன்போலு னுதினங் கைக்கூலி வாங்குங் களிசலிந்த
    உடம்போடி ருப்ப தௌிதோகுற் றாலத் துறைபவனே
    ...(30)

    மழைமுகந் தேடும் பயிர்முகம் போலநின் வாய்த்தசங்கக்
    குழைமுகந் தேடுமென் சிந்தைக்கண் டாய்கொன்றை வேணிவில்லத்
    தழைமுகந் தாட மறைபாடச் சித்ர சபையினின்றே
    உழைமுகந் தாடுங் கரத்தாய்குற் றாலத் துறைபவனே
    ...(31)

    வெண்மைப் பொருளின் விவகாரங் கணீங்கிவி காரமில்லாத்
    திண்மைப் பொருளென்று சேருங்கொல் லோசிந்தை செய்யுமன்பர்
    வண்மைப் பெரும்பெருக் கேயொருக் காலு மவுனம்விடார்
    உண்மைச் சிவானந்த வாழ்வேகுற் றாலத் துறைபவனே
    ...(32)

    கற்பனை யாஞ்செக வாழ்க்கையெல் லாங்கண்டு கண்விழிக்குஞ்
    சொற்பன மாமென்று தூஷணி யேனியான் றூஷணிக்க
    நிற்பன வேண்டு நெறியிலி யேனெனை நீபுரப்பா
    உற்பன ஞானப் பொருளேகுற் றாலத் துறைபவனே
    ...(33)

    அருவ மென்றோருக் கருவமுற் றாய்தம் மறிவுமட்டுஞ்
    சொருவ மென்றோர்க்குச் சொரூபமுற் றாய்தொல்லை மூவுலகும்
    செருவில் வெல்வாய் படைப்பாளிப் பாயுன் றிருவிளையாட்
    டொருவிளை யாட்டல்ல கண்டாய்குற் றாலத் துறைபவனே
    ...(34)

    வென்றறி யாச்சமர் வெல்பவ ராகிலும் வெவ்வினையைச்
    சென்றறி வால்வெல்ல வல்லருண் டோநின் செயல்பிரிந்தால்
    நன்றறி வாருமி ரப்பா ருனதருள் நாட்டம்பெற்றால்
    ஒன்றறி யாருல காள்வார்குற் றாலத் துறைபவனே
    ...(35)

    பூதாதி பல்லுயிர்க் குந்தலை யானநின் பொற்சிலம்பின்
    பாதாம்பு யஞ்சென்னி சேர்த்தருள் வாய்பெரும் பார்படைக்கும்
    வேதாவின் மேல்விதியே வித்தில் லாமல் விளைபொருளே
    ஓதா துணரு முணர்வேகுற் றாலத் துறைபவனே
    ...(36)

    படையாத சென்ம முமேன்படைத் தாய்பஞ்ச பூதவெறி
    விடையாதி யில்விட வோவிட மோமெத்த வேமெலிந்து
    கடையாயி னேனிரங் காயொரு பாகங் கவுரிகொண்டாய்
    உடையாய் கரந்தைச் சடையாய்குற் றாலத் துறைபவனே
    ...(37)

    அடுக்குறுந் துன்பமு மின்பமு மாய வலையடித்து
    நடுக்குறுஞ் சென்மக் கடல்புகுந் தேநலி யாமலென்னை
    யெடுக்குறு நின்னருட் பேரின்பத் தோணியி லேற்றுகண்டா
    யெடுக்கமுந் தோற்றமு மில்லாய்குற் றாலத் துறைபவனே
    ...(38)

    இருகாது கேட்கில் வருமாசை யற்ப மிருகண்கண்டாற்
    பெருகாசை கொண்டு பிதற்றிய தாற்பெரும் பேதமையாற்
    கருகா வண்ணங் கருகிநொந் தேன்கருத் தாறியுன்பால்
    உருகாத நெஞ்சனை யாள்வாய்குற் றாலத் துறைபவனே
    ...(39)

    பொன்மேரு வத்தனை பொன்குவித் தாலுமென் புத்தியின்னம்
    மென்மேலுந் தேட நினைக்குங்கண் டாய்வினை போக்கறவே
    என்மேற்ற யாவினு மெண்மடங் காவெந்தக் காலமுநான்
    உன்மேன்ம னம்வைப்ப தென்றோகுற் றாலத் துறைபவனே
    ...(40)

    பன்னாளுங் காமம் பொறுத்திருந் தாலும் பசியொருநாள்
    என்னாற்பொ றுக்கப்ப டாதுகண் டாயிதை யார்க்குரைப்பேன்
    சொன்னாற்ப குத்தறிவார்க் கண்டிலேன் சுற்றிப் பார்க்கிலெங்கு
    முன்னால் பதமன்றிக் காணேன்குற் றாலத் துறைபவனே
    ...(41)

    விரகப் படாமணிக் கொங்கையர் காமத்தில் வீழ்ந்துபொல்லா
    நரகப் படாமலெ னைப்புரப்பா யுண்மை ஞானமொன்றிக்
    கிரகப் படாமனத் தார்க்குரி யாய்மதிக் கீற்றணிந்த
    உரகச் சடாடவி யானேகுற் றாலத் துறைபவனே
    ...(42)

    வேறு படாம லுலகாண்ட மன்னரும் வெந்துடலம்
    நீறு படாரில்லை நீணிலத் தேநெடும் பாசவினைத்
    தூறு படாவழி பார்த்தியென் றேன்சொலச் சொல்லமனம்
    ஊறு படாதென்ன செய்வேன்குற் றாலத் துறைபவனே
    ...(43)

    மறுக்கிச் சுறுக்கென் றெமதூதர் வந்துகை வாளெடுத்துக்
    குறுக்கித் தறுக்குமுன் னேவருவாய் மந்தி குந்திவெள்வான்
    முறுக்கிச் சுருக்கிக் குறித்துப் பலாப்பழ மொக்கிவிக்கி
    உறுக்கித் தறுக்கி நடிக்குங்குற் றாலத் துறைபவனே
    ...(44)

    வெறுமந்தி முன்னிருட் போல்வருங் காலன்வெ குண்டுயிரைத்
    தெறுமந்தி யகாலத்தின் முன்வரு வாய்கனி தின்றுதட்டி
    மறுமந்தி மேற்செலத்தேன் பாயுங் கொம்பு வழுகிவிழுந்
    துறுமந்தி குந்திந டிக்குங்குற் றாலத் துறைபவனே
    ...(45)

    அவப்பாடல் பாடி யலைவது தீர வனுதினமும்
    சிவப்பாடல் பாடித் தௌிவதென் றேதெய்வப் பாடல்மறைத்
    தவப்பாடல் காட்டுநற் றாருடை யாய்கொன்றைத் தாருடையா
    யுவப்பாடன் மாமன்று டையாய்குற் றாலத் துறைபவனே
    ...(46)

    வருபான் மதிவைத்த செஞ்சடைக் காடும் வழுத்தமுத்தி
    தருபா தமுமென்று சந்திப்ப னோமலைச் சாரலெல
    மிருபா லுமுத்துங் கனகமும் வாரியி றைத்துநித்த
    மொருபா லருவி குதிபாய்குற் றாலத் துறைபவனே
    ...(47)

    செண்பகக் காவுந் திரிகூடமுஞ் சித்ர மாநதியுங்
    கண்படைத் தார்பிரிந் தாற்றுவ ரோகன்மி யாய்ப்பிறந்து
    புண்படைத் தேனுக் கிரங்கா யிரவிற்பொன் மேடையெல்லா
    மொண்பகற் போலொளி வீசுங்குற் றாலத் துறைபவனே
    ...(48)

    நீட்டி நினைப்பதை வேறுசெய் வாய்நினை யாததெல்லாங்
    காட்டி வைத்தங்கன மேமறைப் பாயெனைக் காத்தருள்வாய்
    ஆட்டி யசைக்கின்ற சூத்திரத் தாலனைத்த தாருயிர்க்கும்
    ஊட்டி யுறக்கந் தருள்வாய்குற் றாலத் துறைபவனே
    ...(49)

    மறவேன் மயக்கென்று நெஞ்சில்வி காரத்தை வஞ்சமறத்
    துறவேன் வெருட்டித் தொடருமில் வாழ்க்கையைச் சுற்றிச்சுற்றி
    அறவே தளர்ந்துவிட் டேனிரங் காயென்று மாசையற்றா
    ருறவே மெய்ஞ்ஞான நறவேகுற் றாலத் துறைபவனே
    ...(50)

    பேசிய வாய்மையெல் லாமுனைப் பேசியுன் பேரருளாம்
    வாசியை மேற்கொண்டு வாழ்வதல் லால்கவி வாணரென்றால்
    கூசிய மூடரைப் பாடித்திண் டாடிக்கொ டுங்கலியா
    மூசியின் மேனிற்கப் போமோகுற் றாலத் துறைபவனே
    ...(51)

    கள்ளார்ந்த பூமணம் போலிருப் பாயுன் கருணையின்பத்
    தெள்ளா ரமுதுண்டு தேக்கியி ராமல் திகைத்துநித்தம்
    வெள்ளாவி நாற்றமுடை நாறுங் காய விடக்குக்குநான்
    உள்ளாசை வைத்தது நன்றோகுற் றாலத் துறைபவனே
    ...(52)

    குறைந்தாற் குறைந்து நிறைந்தா னிறைந்தெவர் கோலத்துள்ளும்
    அறைந்தா யுன்கோலத் தையார றிவாரென்னை வாழ்விகண்டாய்
    அறைந்தா டருவி மலைச்சாரல் சூழ்செண்ப காடவியில்
    உறைந்தா யுலக நிறைந்தாய்குற் றாலத் துறைபவனே
    ...(53)

    ஆகார நித்திரை யேகா ரணமென் றறமயங்கி
    மாகாமி நான்கொண் டமாலொ ழிப்பாய் மங்கையின்ப
    மோகா குழன்மொழி பாகாமெய்ஞ் ஞானத்தின் மோனம்விடா
    யோகா வசந்தவை போகாகுற் றாலத் துறைபவனே
    ...(54)

    வண்டாடும் பூங்குழல் கண்டாடும் பால்மொழி மாதர்மயல்
    கொண்டாடி நித்தமும் திண்டாடி னேன்கொடுங் கூற்றுதைத்துத்
    தண்டா முனியுய்யக் கொண்டா யமரரைத் தாங்கவிட
    முண்டா யடைக்கலங் கண்டாய்குற் றாலத் துறைபவனே
    ...(55)

    சாலக் கொடும்பசி தாக்கநொந் தேன்வினை தாக்குகலி
    காலத்தை வெல்லக் கருணைசெய் யாய்தனிக் காலங்கண்டு
    வாலக் களிமொழி யாரிசை வாதுக்கு மாறனைப்போ
    லோலக் கருங்குயில் கூவுங்குற் றாலத் துறைபவனே
    ...(56)

    கையார் தொழிலுக்கெல் லாந்தொல்லைப் பாரங்க ருத்திலஞ்சிச்
    செய்யா திருக்கிற் கடும்பசி பாரஞ்செய் துண்ணவென்றாற்
    பொய்யா முடம்பிற் பிணிபார நின்றுபு லம்புகிறே
    னுய்யாமை தீர்த்தரு ளையாகுற் றாலத் துறைபவனே
    ...(57)

    இம்பரைக் காமித்து வந்துநின் னன்பரை யேத்தலன்றி
    வம்பரைப் போய்வணங் காதருள் வாய்வண்டு கிண்டுமலர்க்
    கொம்பரைக் காத மணக்குந் திரிகூடக் குவட்டினின்றே
    உம்பரைக் கானவர் கூவுங்குற் றாலத் துறைபவனே
    ...(58)

    வெறுத்திடுந் தீவினை செய்தாலுந் தொண்டனை வேண்டியென்றும்
    பொறுத்தினி யாளக் கடனுனக் கேமழை போலிருள்போல்
    கறுத்திடுங் கோதையர் பூந்தாளின் மாணிக்கக் கற்படிக
    ளுறுத்திடுங் கோல மலைசூழ்குற் றாலத் துறைபவனே
    ...(59)

    கொடுக்கச் சடைவற்ற வுன்னையும் பாடிக்கு லாமர்முன்போய்
    இடுக்கட் படுவ தழகல்ல வேகவ்வை யீடழிக்கும்
    நடுக்கத்தை யாற்றப் படாதுகண் டாயெந்த நாளுமுண்ண
    உடுக்கங் குறைவருத் தாதேகுற் றாலத் துறைபவனே
    ...(60)

    பேராசைக் கள்ளத்தை யுள்ளேய டக்கிப்பி றருக்கெல்லாம்
    பாராசை யற்றவர் போல்திரி வேன்பசுத் தோல்புனைந்து
    போராசை கொண்ட புலிநானென் னாசையைப் போக்குகண்டா
    யோராசை யுமற்ற யோகீகுற் றாலத் துறைபவனே
    ...(61)

    கழிக்கும் பலபொழு தோர்பொழு தாய்க்கலங் காமலுள்ளே
    விழிக்கும் விழிவௌி யாவதென் றோவெண்ணி லாக்கதிரைப்
    பழிக்கும் திரிகூடத் தருவிநன் னீர்பக லோனைவெம்மை
    யொழிக்குந் திவலை தௌிக்குங்குற் றாலத் துறைபவனே
    ...(62)

    செருமிக் கவலை யுளந்தடு மாறித் தினம்பொருமிப்
    பொருமிக் கரைவது கண்டிரங்காய்ப் புல்லும் பூடுங்கல்லும்
    தருமிக்க பட்சி மிருகங்க ளாதி சராசரமு
    மொருமிக்கத் தெய்வ வடிவாங்குற் றாலத் துறைபவனே
    ...(63)

    சிறையோ படுவ தினிக்கவை யோதினந் தான்படுதல்
    முறையோ முறையிடல் கேட்கிலை யோமுன்னை நாளிற்செய்த
    குறையோ குறையுன்முன் னேநிற்கு மோகொண்ட கோபமென்னோ
    உறையாங்கு கொண்ட லுலாவுங்குற் றாலத் துறைபவனே
    ...(64)

    தண்டேன் மலர்சொரி சண்பகச் சோலையுஞ் சந்நிதியும்
    பண்டே பழகுநின் சித்ரா நதியும் பலவளமுங்
    கண்டே பிரிந்துந்தரித் தேனென்போ லொத்தகன் னெஞ்சர்தாம்
    உண்டேநின் கற்பனைக் குள்ளேகுற் றாலத் துறைபவனே
    ...(65)

    பொறுக்கும் படைகொண்டு கோபத்தை மாய்த்துப் புரையற்றுநான்
    வெறுப்பு விருப்பற் றிருப்பதென் றோவண்டம் விண்டுகிறு
    கிறுக்கும் படிமலை யைச்சிலை யாக்கிக் கிளர்புரங்க
    ளொருக்குந் தனிப்பெரு வீராகுற் றாலத் துறைபவனே
    ...(66)

    வருக்காம் பலகரும்பைப் பார்க்க நன்றொரு வட்டெனவே
    பெருக்காசை விட்டு நின்றாளே பரவிப் பிறவியின்வேர்
    கருக்காம லென்றுமென் சிந்தைக்குள் ளேயொருக் காற்றௌிவு
    மொருக்கான் மயக்கமு மாமோகுற் றாலத் துறைபவனே
    ...(67)

    தருகோடி யம்புயத் தாள்தொழும் போது சதுரயுக
    மிருகோடி யும்நொடிப் போதொக்கு மேதுன்ப மீட்டுங்கவ்வை
    யருகோடி யுன்னைப் பிரிந்தா லரைநொடிப் போதுமெனக்
    கொருகோடி கோடியு கங்காண்குற் றாலத் துறைபவனே
    ...(68)

    காண்பதெல் லாங்கண் மயக்கமென் றேமனங் கண்டிருந்தும்
    வீண்பல கௌவைக்கு ளோடிய தால்வந்து மீட்டருள்வாய்
    சேண்படர் கங்கைச் சடையாய் பிரமன்சி ரத்திலொன்று
    மூண்பலி தேடுங்க ரத்தாய்குற் றாலத் துறைபவனே
    ...(69)

    கண்பார்த்துச் சோரமிடுங் கள்வரை வர்கை கள்ளமிட்டுப்
    பண்பார்த்த துன்னைப் பணிவதென் றோபுயல் பார்த்துநின்று
    விண்பார்க்குஞ் சாதகம்போ லுன்னைப் பார்த்துநின் மெய்யருட்பால்
    உண்பார்க்கு ஞானப் பெருக்கேகுற் றாலத் துறைபவனே
    ...(70)

    சிறுகாலந் தாயர் முலைப்பால் மயக்கம் செகத்தறிவு
    பெறுகால மாதர் முலைமேல் மயக்கம் பெருங்கிழமா
    யிறுகாலம் வஞ்சப் பிணியால்ம யக்கமுன்னின் பத்தைநா
    னுறுகால மாவதெக் காலங்குற் றாலத் துறைபவனே
    ...(71)

    ஆணவங் காட்டுவித் தாசையுங் காட்டுவித் தார்க்குமில்லா
    நாணமுங் காட்டிய மாயையி னால்நெடு நாட்கருத்தை
    வீணவம் போக்கிவிட் டேனிரங் காய்கடல் வெவ்விடத்தி
    னூணலங் காரமி டற்றாய்குற் றாலத் துறைபவனே
    ...(72)

    கருநோயுங் கன்மப் பிறவியி னோயுங்க ருத்திற்கவ்வை
    பொருநோயும் பூண்ட சரீரத்தி னோய்களும் போக்குந்தெய்வத்
    திருநீரு டையநின் சித்ரா நதிக்கரை சேர்ந்தவன்றே
    ஒருநோயு மின்றித் தவிர்ந்தேன்குற் றாலத் துறைபவனே
    ...(73)

    மறைப்பொரு ளானநின் சேவடி வாழத்தி வடவருவித்
    துறைப்புன லாடிக் குழல்வாய் மொழியுடன் சோதியுன்னை
    இறைப்பொழு தாகிமுள் ளேதியா னித்தி ருக்கநெஞ்சி
    லுறைப்பிலை யேயென்ன செய்வேன்குற் றாலத் துறைபவனே
    ...(74)

    செய்வதெல் லாங்குற்ற மேயத னாற்செகத் தோர்களென்னை
    வைவதெல் லாங்கொடுந் துட்டனென் றேகட்ட வல்வினையால்
    நைவதெல் லாமுன் பொருட்டே சரண்புக்கு நானினிமே
    லுய்வது நின்பொருட் டையாகுற் றாலத் துறைபவனே
    ...(75)

    தேயா மயக்கந் தௌிந்தோர்கண் முன்னந் தௌிவொன்றில்லாப்
    பேயாக நின்று பிதற்றுவ னோமனப் பேதமையால்
    மாயா மலத்துக்குள் வீணே கிடந்து மயங்குமிந்த
    ஓயா மயக்கந் தவிர்ப்பாய்குற் றாலத் துறைபவனே
    ...(76)

    எளியேனை யாட்டுஞ் செயல்யாவு முன்செய லென்றுநன்றாய்த்
    தௌியேனெவ் வாறு தௌிவிப்பை யோதிரை யேவரையே
    வளியே மறிபுன லேகன லேநெடு வானகமே
    ஒளியே பரந்த வௌியேகுற் றாலத் துறைபவனே
    ...(77)

    அடக்கிக்கொண் டாலுள் ளடங்கிக்கொள் வேன்புவி யாதிக்குநீ
    நடத்திக்கொண் டாலு நடந்துகொள் வேனன்றி நானென்றென்னைத்
    தொடக்கிக்கொண் டாட்டமி டாதே சகல தொழிற்குமெண்சா
    ணுடக்கைக்கொண் டாட்டிய சித்தாகுற் றாலத் துறைபவனே
    ...(78)

    எழுதிண் புவியு நொடிக்கேறுஞ் சிந்தை யெருதுமங்கோர்
    பொழுதென் னோரு மடக்கேறி வராது புலன்கலப்பை
    பழுதன்றிச் சேர்க்கவல் லெனல்ல னானபர மாநிலத்தி
    லுழுதுண்டு வாழ்வதெவ் வாறோகுற் றாலத் துறைபவனே
    ...(79)

    பிறர்பொரு ளாசித்துப் போய்பேசிச் சாணும் பிழைப்பதற்கா
    அறமுத னானி லைபிழைத் தேனடி யார்க்கடிமைத்
    திறமில னாகிலு நின்னடி யார்திருக் கூட்டமல்லா
    லுறவினி வேறிலை யாள்வாய்குற் றாலத் துறைபவனே
    ...(80)

    கொலைபா தகங்செய்யக் கற்றேனுன் பத்தர்கு ழாத்திற்செல்ல
    மலையாத வுண்மை வரக்கற்றி லேனெனை வாழ்விப்பையோ
    நிலையா ரணங்களுக் கெட்டாத நாத நெடுவௌிக்கே
    உலையாத வானந்தக் கூத்தாகுற் றாலத் துறைபவனே
    ... (81)

    ஆலமென் றாலு மமுதா முனைக்கண்ட ஆடரவின்
    கோலமு மாலையின் கோலம தாங்கொடி யேன்வினையுங்
    காலமுஞ் சாலநன் றாவதென் றோவரை காலருவி
    யோலமென் றார்க்குந் துறைசூழ்குற் றாலத் துறைபவனே
    ...(82)

    தொண்டென் றுனக்குப் புரியேன் மகளிர் சுரிகுழற்கே
    வண்டென்று மாலையென்றுஞ் சுழல்வே னெனைவாழ் விப்பையோ
    விண்டொன்றும் வெள்ளிப் பொருப்பாய் விருப்பும் வெறுப்புமில்லா
    யுண்டென் றவர்மனத் துள்ளாய்குற் றாலத் துறைபவனே
    ...(83)

    வன்பெருங் காய மெடுத்தவர் யார்க்கும் வருவதின்பத்
    துன்பங்கட் கூடத் தொடர்ந்தல் லதொடர்ந் தாலுமித்தை
    யென்பரஞ் சாட்டி யிடையாம லொன்றுபட் டென்றைக்குநா
    னுன்பரஞ் சாட்டி யிருப்பேன்குற் றாலத் துறைபவனே
    ...(84)

    செகந்தோறுஞ் சென்று செனித்தலுத் தேன்சென்மந் தோறும்புல்லர்
    முகந்தோறுஞ் சென்றலுத் தேனிரங் காய்முனி வோர்மடவா
    ரகந்தோறு முண்பலிக் காய்நடந் தாயயன் மாலென்றிங்கே
    யுகந்தோறும் பேர்பெற் றிருந்தாய்குற் றாலத் துறைபவனே
    ...(85)

    சென்னிற வேழ முகத்தெம்பி ரானையுந் தென்னிலஞ்சிப்
    பன்னிரு கையனையும் பயந்தாய் வெற்பர சன்பெற்ற
    கன்னியைக் கைவச மாக்கிக்கொண் டாயென் கருத்தையெல்லா
    முன்னிரு தாள்வச மாக்காய்குற் றாலத் துறைபவனே
    ... (86)

    வாலத் தனையு மொடுக்கிமிக் காய்வினை வாய்பிளந்து
    காலக் கடும்புலி பாயுமுன் னேசெண்ப காடவிக்கே
    ஏலக் குழன்மட மாதொடு நீயுமி ருந்ததிரு
    ஓலக் கங்காட்டி யருளாய்குற் றாலத் துறைபவனே
    ...(87)

    பத்தியு மில்லை வைராக் கியமில்லை பாரிலுண்மைச்
    சத்திய மில்லை தவமா கிலுமில்லை சார்ந்தகுணப்
    புத்தியு மில்லை கொடியே னிருந்ததுர்ப் புத்திக்குநீ
    ஒத்திருந் தெப்படி யாள்வாய்குற் றாலத் துறைபவனே
    ...(88)

    பழுக்குமுன் னேயுடல் நொய்க்குமுன் னேபதைத் தாவியெல்லா
    நழுக்குமுன் னேயுட்கி நாறுமுன் னேநமன் பாசத்தினா
    லிழுக்குமுன் னேகண்கண் மூடுமுன் னேயிர தங்கடைவா
    யொழுக்குமுன் னேவந்து தோன்றாய்குற் றாலத் துறைபவனே
    ...(89)

    குருவாக்கி யங்கட்கல் லேன்பத்தர் கூடுங்கு ழாத்திற்செல்லேன்
    திருவாக்கு முண்மை தௌிந்துநில் லேன்தௌி வேதுமின்றி
    எருவாக் கிடுமெலும்பா னேன்முழு பித்த னென்னையுமோ
    குருவாக்கி விட்டெனை யாள்வாய்குற் றாலத் துறைபவனே
    ... (90)

    சுகதுக்க பாசத்தி னாலே பிறவித்து வட்சிக்குநான்
    முகம்வைத்த மோசந் தவிர்ந்திட வேமுத லந்தமிலாப்
    பகலுற்ற சுத்த வௌிக்கே யிருக்குநின் பாதபத்ம
    யுகபத்தி முற்றுந் தருவாய்குற் றாலத் துறைபவனே
    ... (91)

    வினைப்பாத கர்க்குள் முழுப்பாவி யாகியும் வெட்கமின்றி
    யெனைப்பார்க்க யார்மிக்கா ரென்றெண்ண வேனுன்னை யென்றுமொன்றாய்
    நினைப்பா ரிகழ்ச்சி மகிழ்ச்சி வந்தாலு நிலைமைவிடா
    ருனைப்பாரஞ் சாட்டி யிருப்பார்குற் றாலத் துறைபவனே
    ...(92)

    எனதெனக் கென்றுத விப்பதல் லாலுனை யெண்ணுதற்கென்
    மனதுசற் றாகிலு முண்மையுண் டோவஞ்ச னேனுமுன்னைத்
    தனதுபட் டாதிக்கம் போலே தமிழ்க்கவி சாற்றுவது
    முனதுகட் டாயத்தொ ழில்காண்குற் றாலத் துறைபவனே
    ...(93)

    முடக்கிட்டு மாயப் பிறவிக்குள் ளேவிட்டு மூட்டியென்னைத்
    துடக்கிட்டு நானென்று பேச்சிட்ட தென்வரை சூழ்ந்துவட்டக்
    கடற்குட்ட மிட்ட புவனிக்கெல் லாமொரு கம்பத்திலே
    உடக்கிட்ட சூத்திர தாரீகுற் றாலத் துறைபவனே
    ...(94)

    அன்பது வைத்துனைப் போற்றுகி லேனடி யார்க்கௌியா
    யென்பது சற்றுங் கருத்திலுன் னேனெனை யாட்கொள்வையோ
    முன்பது மத்தயன் மாலா னவர்முத லொன்றுக்கொவ்வா
    ஒன்பது மான ஒளியேகுற் றாலத் துறைபவனே
    ...(95)

    மலைவாய்க் குவடன்ன வார்முலை யார்க்கு மயல்கொடுதேக்
    கிலைவாய்ப் படுபுனல்போ லலைந்தே னஞ்ச லென்றருள்வா
    யலைவாய்ப் படாததெள் ளாரமு தேதுளை யாதமுத்தே
    உலைவாய்ப் படாதசெம் பொன்னேகுற் றாலத் துறைபவனே
    ...(96)

    தடுக்கும் பொழுதி லணுவள வேனுந்த டுத்துக்கொள்வாய்
    கொடுக்கும் பொழுதிலெல் லாங்கொடுப் பாய்திருக் கூத்துக்குநீ
    எடுக்குஞ் சொரூபங்க ளாரறிவா ரெனையாள் புலித்தோல்
    உடுக்குஞ் சதாநந்த யோகீகுற் றாலத் துறைபவனே
    ...(97)

    நின்னாச் சிரம முனியாச் சிரம நினதடியார்
    பொன்னாச் சிரமும் பூவாச் சிரமும் பூமடந்தை
    மன்னாச் சிரமு மன்னுவர் காண்மனத் தாலும்வஞ்ச
    ருன்னாச் சிரம பதத்தாய்குற் றாலத் துறைபவனே
    ...(98)

    திரையற்ற ஞானக் கடலுடை யாயுனைச் சேர்ந்துசென்மக்
    கரையற்ற வாரி கடக்கின்ற வாறு கருணைசெய்வாய்
    புரையற்ற தொண்டர் மனத்தே யிருந்து பொருள்விளைக்கு
    முரையற்ற மோன வுணர்வேகுற் றாலத் துறைபவனே
    ...(99)

    நித்தர்கள் போற்று நின்னாவணி மூலத்தி னெல்லைவந்து
    முத்தமிழ் பாடக் கருணைசெய் தாண்டனை முற்றுமினிக்
    கொத்தடி யேனுக்குன் பொற்பதந் தாகுழல் வாய்மொழியா
    ளுத்தமி பாகமு வந்தாய்குற் றாலத் துறைபவனே
    ...(100)

    திருக்குற்றால மாலை முற்றிற்று
    -------
    திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றால ஊடல்
    காப்பு

    பொருப்பிறை திருக்குற் றாலப் புனிதனும் புவன மீன்ற
    ஒுத்தியும் புலவி தீர்ந்த ஓலக்க மினிது பாடத்
    திருக்கைவேற் கதிரென் றோங்குஞ் சேவகன் முன்னே தோன்றி
    மருப்பெனப் பிறையொன் றேந்தும் வழுவையான் வழுவை யானே.

    நூல்

    குழல்வாய்மொழியம்மையார்:

    தேரேறுஞ் சூரியர்கள் வலம்புரியும் வல்மபுரியின் செம்பொற் கோயில்
    தாரேறு மலர்தூவித் தாலத்தார் பரவியகுற் றாலத் தாரே
    ஏரேறு கடல்பிறந்த கருணைநகை முத்துவெளுத் திருப்ப தல்லால்
    ஆரேறு மழுப்படையீர் பவளம்வெளுத் திருப்பதழ காகுந் தானே
    ...(1)

    குற்றாலநாதர்:

    காகமணு காததிரி கூடமலை யணங்கேயுன் கற்பின் சீர்த்தி
    யோகமுறை பணிந்தேத்தி யுயர்மறையெ லாம்வெளுப்பா யுனக்கு மூத்த
    மேகவண்ணன் கடல்வெளுப்பாய் யாமிருக்கும் மலைமுழுதும் வெளுப்பா யென்றன்
    ஆகமெலாம் வெளுப்பானா லதரம்வெளுப் பேறாதென் றார்சொல் வாரே.
    ...(2)

    குழல்வாய்மொழியம்மையார்:

    ஆரிருந்தும் தனித்திருந்தும் பிறைமவுலித் திரிகூடத் தண்ண லாரே
    சீரியபொன் முலைக்குறியும் வளைக்குறியும் பெற்றிருந்த தேவ ரீர்தாம்
    மார்பிலொரு மைக்குறியும் வாடைமஞ்சட் குறியுமன்று வரப்பெற் றீரே
    நேரிழைதன் பேருரையீர் வஞ்சம்தா னோவுமது நெஞ்சந் தானே.
    ...(3)

    குற்றாலநாதர்:

    நெஞ்சகத்தி னீயிருக்க நின்னையல்லா லொருவரையு நினைய லாமோ
    உஞ்சலிட்ட குழைதடவும் கயல்விழிப்பெண் குழல்மொழியே ஒன்று கேளாய்
    அஞ்சனத்தின் வண்ணமல்ல திருச்சாந்து வழிந்துநிற மதுவே யன்றி
    மஞ்சளைப்போ லிருந்தநிறம் பொன்னிதழித் தாதவிழ்ந்த மாற்றந் தானே
    ... (4)

    குழல்வாய்மொழியம்மையார்:

    மாற்றுவெள்ளி மலையிலொரு பவளமலை கொலுவிருக்கு மகிமை போல
    வேற்றுவெள்ளை விடைமீதில் காட்சிதருங் குற்றாலத் தெந்தை யாரே
    ஆற்றுவெள்ளை சடையிருக்கக் கீற்றுவெள்ளை மதியிருக்க அதிக மாநீர்
    நேற்றுவெள்ளை சாத்தினதை இன்றுசிவப் பானகண்ணா னிறுத்தி னீரே
    ...(5)

    குற்றாலநாதர்:

    நிறுத்திநாம் பிரிந்ததில்லை நீபிரிந்து பனிவரைக்கே நிற்கு நாளில்
    பொறுத்துநாம் வடவாலின் கீழிருந்தோ மதுதனக்குப் பொறுப்பில் லாமல்
    சிறுத்துநாள் மலர்தூவிக் கறுத்துவந்த சேவகனைச் சிவந்த போது
    குறித்துநாம் பார்த்தவிழி சிவப்பன்றோ குழல்மொழிப்பூங் கொடியன் னாளே.
    ...(6)

    குழல்வாய்மொழியம்மையார்:

    அந்நாளிற் கோவணமும் புலித்தோலும் வேடமுமா யாலின் கீழே
    பன்னாளும் தூங்கினநீ ரென்னாலே மணக்கோலப் பதம்பெற் றீரே
    இந்நாளிற் சலவைக்கட்டிப் பூமுடித்துத் தினஞ்சுகித்தா லிதுவோ செய்வீர்
    மின்னாரு மினிச்சிலபேர் வேண்டாவோ நீண்டசங்க வீதி யாரே.
    ...(7)

    குற்றாலநாதர்:

    வீதியாய் மரவுரிகிட் டினாசம்பூண் டரியதவ வேடம் தாங்கி
    ஆதிநாட் கான்தோறு மலைந்துதிரிந் தானதுபோ யயோத்தி மேவி
    மாதுசீ தையைப்புணர்ந்து பாராண்ட வுங்களண்ணன் மார்க்க மெல்லாம்
    காதுகேட் டிருந்துமிது சொன்னதென்ன குழல்மொழிப்பூங் கயல்கண் மாதே.
    ..(8)

    குழல்வாய்மொழியம்மையார்:

    மாதர்பாற் பலியிரந்தீர் பலியிடப்பைந் தார்துகிலும் வளையும் கொண்டீர்
    சாதுவாய்த் தோலுடுப்பீ ரரையிலுள்ள சோமனையுந் தலைமேற் கொள்வீர்
    காதிலே பாம்பையிட்டீர் கழுத்திலே நஞ்சையிட்டீர் கனபேய் கொண்டீர்
    ஆதலா லுமைப்போலும் பித்தருண்டோ குற்றாலத் தண்ண லாரே
    ...(9)

    குற்றாலநாதர்:

    அண்ணல்வரைத் திரிகூடப் பெண்ணமுதே கேட்டியுங்க ளண்ண னான
    கண்ணன்முதல் வரகுதின்று வாயாலெ டுத்தபண்டைக் கதைகே ளாயோ
    மண்ணிலொரு காற்சிலம்பைக் கையிலிட்டான் கைவளையை வாய்மே லிட்டான்
    பெண்ணொருத்திக் காயொருத்தி புடவைகிழித் தானவனே பித்த னாமே
    ...(10)

    குழல்வாய்மொழியம்மையார்:

    பித்தனென்றும் பாராமற் பெண்கொடுத்தா னவனோடு பிறந்த வாசிக்
    கித்தனைபெண் சீருமிட்டாங் கையம்பா வுமக்கிருந்தா னெந்த நாளும்
    மைத்துனனைப் பாராட்டி யெங்களண்ணன் செய்தநன்றி மறந்த தாலே
    சத்திபீ டத்துறைவீர் செய்தநன்றி நீர்மறந்த சங்கை தானே.
    ...(11)

    குற்றாலநாதர்:

    சங்கமெடுத் தேதிரிந்தான் சக்கராயு தங்கொடுத்தோம் தலைநாட் கொண்ட
    சிங்கவெறி தீர்த்தருளிச் செய்யாளை முகம்பார்க்கச் செய்தோம் கண்டாய்
    மங்கைகுழல் வாய்மொழியே யுங்களண்ணன் செய்தநன்றி மறந்த தாலே
    எங்கெல்லாம் பால்திருடி யெங்கெல்லா மடிபடவு மேது வாச்சே.
    ...(12)

    குழல்வாய்மொழியம்மையார்:

    வாய்ச்சதிரி கூடமலைக் கிறையவரே சொன்னமொழி மறக்க வேண்டா
    ஏச்சுவந்து சுமந்ததெங்க ளண்ணற்கோ வுமக்கோவென் றெண்ணிப் பாரீர்
    காய்ச்சியபால் கண்ணனுண்டான் வேடனெச்சில் நீர்கலந்தீர் கருணை யாமா
    லாய்ச்சியர்கை யாலடிபட்ட டானையநீர் பேடிகையா லடிபட் டீரே.
    ...(13)

    குற்றாலநாதர்:

    அடிப்பதுவு மாய்ச்சியர்பால் குடிப்பதுவு மிசைந்தானு மரச னாக
    முடித்தலையில் முடியுமின்றிப் படிபுரந்தா னுமுனது முன்வந் தானும்
    படிக்கலமும் பசுநிரையும் பயின்றானுங் குழல்மொழிப்பூம் பாவை கேளாய்
    இடைக்குலத்திற் பிறந்தானோ எதுகுலத்திற் பிறந்தானோ இவன் கண்டாயே.
    ...(14)

    குழல்வாய்மொழியம்மையார்:

    கண்டிருந்தும் கன்னியர்க்கா வெனைப்பிரிந்த மதந்தானோ கலவித் தேற
    லுண்டிருந்த மதந்தானோ எங்களண்ணன் குலத்தில்மறு வுரைத்தீ ரையா
    பண்டிருந்த வுமதுகுலம் நான்சொன்னாற் பழுதாமோ பரம ரேநீர்
    கொண்டிருந்தும் குலம்பேசல் ஞாயமோ குற்றாலக் கூத்த னாரே.
    ...(15)

    குற்றாலநாதர்:

    கூத்திருந்த பதம்பெறவே கொதித்திருந்த முனிவர்கட் கொலுச்சே விக்கக்
    காத்திருந்த தேவர்களுங் காட்சிபெற வேண்டியுனைக் கரந்து போனோம்
    பூத்திருந்த திரிகூடப் பொருப்பிருந்த பசுங்கிளியே புலவிக் காக
    வேத்திருந்த வார்த்தையெல்லா மெதிர்த்திருந்து நீயுரைத்தா லென்செய் வோமே.
    ...(16)

    குழல்வாய்மொழியம்மையார்:

    என்மேலும் பத்தியில்லாத் தேவருண்டோ எனைப்பிரிந்து வீதி போகத்
    தென்மேவு திரிகூடச் செல்வரே நீதியுண்டோ தேவரீர் மேல்
    முன்மேவுங் குற்றமுண்டு திருவாக்குக் கெதிர்வாக்கு மொழிந்த தாலே
    தன்மேலும் குற்றமுண்டு தமையனார் மேலுமுண்டோ தாழ்த்தி தானே.
    ...(17)

    குற்றாலநாதர்:

    தமையனென்று தங்கையென்று வேற்றுமையென் குழன்மொழிப்பூஞ் சாயல் மாதே
    உமையவளே தமையனுனக் கருமையென்றா னமக்குமவ னருமை யாமே
    நமையுமோரிங் குறையுரைத்தாய் நாமவனைச் சரசமாக நவின்றோம் கண்டாய்
    இமையவர்கள் வேண்டுதற்கா இத்தனையும் பொறுத்தருள்வாய் இமய மாதே.
    ...(18)

    குழல்வாய்மொழியம்மையார்:

    மாதேவர் நீரொருவ ராடினது கூத்தாச்சு வலியோர் செய்தால்
    தீதேதுஞ் செமியாதீர் குற்றால நஞ்சையுண்டு செமிப்பீ ரையா
    போதாது நீரளக்கு மிருநாழிப் படியெனக்குப் பொன்னும் பூணுஞ்
    சூதான வகைமுழுதுஞ் சொன்னாலென் னாற்பெருமை சொல்ல லாமோ.
    ...(19)

    குற்றாலநாதர்:

    சொன்னமலை தனதாச்சுப் பொன்னுலகு வெள்ளிமலை சொந்த மாயிச்
    சின்னமொரு பொருளுமுண்டோ பெண்கட்பே தமைக்குணந்தா னிதுபோ லண்டோ
    உன்னரிய விளைநிலமு நன்னகர நவநிதியு முனக்கே யென்று
    பன்னிகுழல் வாய்மொழியே பாலித்தோம் பட்டயமும் பாலித் தோமே.
    ...(20)

    திருக்குற்றால ஊடல் முற்றிற்று



    வாழ்த்து

    வார்வாழுட் டனித்திகுழல் வாய்மொழியி னும்பிகை வாழி வதுவை சூட்டும்
    தார்வாழி திரிகூடத் தார்வாழி குறுமுனிவன் தலைநாட் சொன்ன
    பேர்வாழி யரசர்சொங் கோல்வாழி நன்னகரப் பேரா லோங்கும்
    ஊர்வாழி குற்றாலச் சிவனடி யார்வாழி நீடுழி வாழி.



     

    Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home