Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > பலபட்டை சொக்கநாதப் புலவர் இயற்றிய அழகர் கிள்ளை விடு தூது
 

palapattai chokkanAtha pulavar's
azakar kiLLai vidu thUthu

பலபட்டை சொக்கநாதப் புலவர் இயற்றிய
அழகர் கிள்ளை விடு தூது



Etext Preparation: Ms. Deeptha Thattai, Columbia, SC, USA.
Proof Reading and Web version: Kumar Mallikarjunan, Blacksburg, VA, U.S.A.
Source Acknowledgement: azakar kiLLai vitu thUthu published by Mullai Nialayam, Chennai -17.

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



காப்பு
தெள்ளு தமிழ்அழகர் சீபதி வாழ்வார் மீது
கிள்ளைவிடு தூது கிளத்தவே - பிள்ளைக்
குருகுஊரத் தானேசங்கு ஊர்கமுகில் ஏறும்
குருகூர் அத்தான் நேசம் கூர்.

கிளியின் சிறப்புகள்
கார்கொண்ட மேனிக் கடவுள் பெயர்கொண்டு
நீர்கொண்ட பாயல் நிறம்கொண்டு - சீர்கொண்ட .....1

வையம் படைக்கும் மதனையும் மேல் கொண்டு இன்பம்
செய்யும் கிளியரசே செப்பக்கேள் - வையம்எலாம் .....2

வேளாண்மை என்னும் விளைவுக்கு நின்வார்த்தை
கேளாதவர் ஆர்காண் கிள்ளையே - நாளும் .....3

மலைத்திடும் மாரன் ஒற்றை வண்டிலும் இல்லாமல்
செலுத்திய கால்தேரை முழுத்தேராய் - பெலத்து இழுத்துக் .....4

கொண்டுதிரி பச்சைக் குதிராய் உனக்கு எதிரோ
பண்டுதிரி வெய்யோன் பரிஏழும் - கண்ட .....5

செகம்முழுதும் நீ ஞானதீபமும் நீ என்று
சுகமுனியே சொல்லாரோ சொல்லாய் - வகைவகையாய் .....6

எவ்வண்ணமாய்ப் பறக்கும் எப்பறவை ஆயினும்உன்
ஐவண்ணத்துள்ளே அடங்குமே - மெய்வண்ணம் .....7

பார்க்கும்பொழுதில் உனைப் பார்ப்பதி என்பார் என்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய் - நாக்குத் .....8

தடுமாறுவோரை எல்லாம் தள்ளுவரே உன்னை
விடுவார் ஒருவர் உண்டோ விள்ளாய் - அடுபோர் .....9

மறம்தரு சீவகனார் மங்கையரில் தத்தை
சிறந்ததுநின் பேர்படைத்த சீரே - பிறந்தவர் .....10

ஆரும் பறவைகளுக்கு அச்சுதன் பேரும் சிவன்தன்
பேரும் பகர்ந்தால் பிழைஅன்றோ - நேர்பெறு வி .....11

வேகி ஒருகூடு விட்டு மறு கூடுஅடையும்
யோகி உனக்கு உவமை உண்டோ காண் - நீகீரம் .....12

ஆகையால் ஆடை உனக்கு உண்டே பாடகமும்
நீ கொள்வாய் கால்ஆழி நீங்காயே - ஏகாத .....13

கற்புடையாய் நீ என்றால் காமனையும் சேர்வாயே
அற்புடைய பெண்கொடி நீ ஆகாயோ - பொற்புடையோர் .....14

துன்னிய சாயுச்யம் சுகரூபம் ஆகையால்
அன்னது நின்சொரூபம் அல்லவோ - வன்னி .....15

பரிசித்த எல்லாம் பரிசுத்தம் என்றோ
உருசித்த உன்எச்சில் உண்பார் - துரிசு அற்றோர் .....16

இன்சொல்லைக் கற்பார் எவர்சொல்லும் நீகற்பாய்
உன்சொல்லைக் கற்கவல்லார் உண்டோகாண் - நின்போலத் .....17

தள்ளரிய யோகங்கள் சாதியாதே பச்சைப்
பிள்ளையாய் வாழும் பெரியோர்யார் - உள்உணர்ந்த .....18

மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டம்அறப்
பாலனத்தாலே பசி தீர்ப்பாய் - மேல் இனத்தோர் .....19

நட்டார் எனினும் நடந்துவரும் பூசைதனை
விட்டார் முகத்தில் விழித்திடாய் - வெட்டும் இரு .....20

வாள்அனைய கண்ணார் வளர்க்க வளர்வாய் உறவில்
லாளனைநீ கண்டால் அகன்றிடுவாய் - கேளாய் .....21

இருவடிவு கொண்டமையால் எங்கள் பெரிய
திருவடிகள் வீறுஎல்லாம் சேர்வாய் - குருவாய்ச் .....22

செப தேசிகர்க்கு எல்லாம் தென்அரங்கர் நாமம்
உபதேசமாக உரைப்பாய் - இபமுலையார் .....23

சித்தம் களிகூரச் செவ்விதழில் ஆடவர்போல்
முத்தம் கொடுக்க முகம் கோணாய் - நித்தம் அவர் .....24

செவ்விதழ்உன் மூக்கால் சிவந்ததோ உன்மூக்கில்
அவ்விதழின் சிவப்பு உண்டானதோ - செவ்வி இழந்து .....25

அண்டருக்குத் தோற்றான் அடல்வேள் ஆநானைநீ
கொண்டு இழுத்தால் ஆகும் குறைஉண்டோ - உண்டு அடக்கி .....26

ஆயுவை நீட்ட அருந்தவத்தோர் பூரகம்செய்
வாயுவைஉன் பின்னே வரவழைப்பாய் - தேயசு ஒளிர் .....27

மைப்பிடிக்கும் வேல்கண் மலர்மாதும் சங்கரியும்
கைப்பிடிக்க நீ வங்கணம் பிடித்தாய் - மெய்ப்பிடிக்கும் .....28

பச்சை நிறம் அச்சுதற்கும் பார்ப்பதிக்கும் உன்தனக்கும் .....29
இச்சைபெற வந்தவிதம் எந்தவிதம் - மெச்சும்

குருகே உன் நாக்குத்தான் கூழை நாக்கு ஆனது
அரி கீர்த்தனத்தினால் அன்றோ - தெரிவையர்கள் .....30

ஆர்த்த விரல் உன்முகம் ஒப்பாகையாலே கையைப்
பார்த்து முகம்அதனைப் பார்என்பார் - சீர்த்திக் .....31

கிரியையிலே காணுங்கால் கிள்ளை அடையாத
பெரியதனம் வீண்அன்றோ பேசாய் - தெரியும்கால் .....32

தேறுகனி காவேரி சிந்து கோதாவிரியும்
வீறுபெறுமே நீ விரும்பினால் - கூறில் அனம் .....33

உன்னுடைய ஊண்அன்றோ ஊதப் பறந்துபோம்
சின்ன வடிவன்றோ செழும்குயிலும் - என்னே .....34

முதுவண்டு இனந்தான் முடிச்சு அவிழ்த்தாலும்
மதுஉண்டாய் பின்னை வாயுண்டோ - எதிரும் .....35

கரும்புறா வார்த்தை கசப்பென்று சொல்ல
வரும் புறாவுக்கும் ஒரு வாயோ - விரும்புமயில் .....36

உற்ற பிணிமுகமே உன்போல் சுகரூபம்
ெற்ற பறவை பிறவுண்டோ - கற்று அறியும் .....37

கல்வியும் கேள்வியும் நீ கைக்கொண்டாய் சாரிகைக்குஉன்
செல்வம் அதில் அள்ளித் தௌித்தாயோ - சொல் வேதம் .....38

என் பரி நாலுக்கும் விதி சாரதி வில்வேள்
தன் பரியே உனக்குச் சாரதியார் - வன்போரில் .....39

மேவும் சிவன் விழியால் வேள்கருகி நாண்கருகிக்
கூவும் பெரிய குயில்கருகிக் - பாவம்போல் .....40

நின்று மறுப்படும்நாள் நீதான் நடுப்படையில்
சென்றும் மறுப்படாதே வந்தாய் - என்றும் மாக் .....41

காய்க்கும் கனிஅல்லால் காய்பூ என்றால் நாக்கும்
மூக்கு மறுப்பாய் முகம் பாராய் - ஆக்கம் .....42

வரையாமல் நன்மை வரத்தினை நல்கும்
அரிதாளை நீ விட்டு அகலாய் - இருகை .....43

உனக்குஇல்லை உன்சிறகு இரண்டும் எனக்கில்லை
எனக்கும் உனக்கும் பேதம் ஈதே - மனைக்குள் .....44

இதமாய் மனிதருடையனே பழகுவாய் அன்பு
அதனால் முறையிட்டு அழைப்பாய் - மது உண்டு .....45

அளிப்பிள்ளை வாய்குழறும் ஆம்பரத்தில்ரேறிக்
களிப்பிள்ளைப் பூங்குயிலும் கத்தும் - கிளிப்பிள்ளை .....46

சொன்னத்தைச் சொல்லுமென்று சொல்லப் பெயர் கொண்டாய்
பின் அத்தைப் போலும் ஒரு பேறுண்டோ - அன்னம் இன்றிப் .....47

பால்குடிக்கும் பச்சைக் குழந்தை நீ ஆனாலும்
கால்பிடிப்பார் கோடிபேர் கண்டாயே - மால்பிடித்தோர் .....48

கைச்சிலை வேளால் வருந்தும் காமநோய் தீர்ப்பதற்கோ
பச்சிலை ரூபம் படைத்து இருந்தாய் - அச்ச .....49

மனப் பேதையார் மால்வனம் சுடவோ வன்னி
எனப் பேர் படைத்தாய் இயம்பாய் - அனத்தை .....50

நிலவோ என்பார்கள் நெடுந்துயர் வேழத்தைக்
கொலவோ அரிவடிவம் கொண்டாய் - சிலை நுதலார் .....51

கொள்ளை விரகக் கொடும்படையை வெல்லவோ
கிள்ளை வடிவு எடுத்தாய் கிற்பாய் நீ - உள்ளம் .....52

மிகஉடை மாதர் விதனம் கெடவோ
சுகவடிவு நீ கொண்டாய் சொல்லாய் - தகவு உடைய .....53

தத்தை அடைந்தவர் ஏதத்தை அடையார் என்னும்
வித்தை அடைந்தாய் உனையார் மெச்சவல்லார் - முத்தமிழோர் .....54

மாரதி பாரதியார்க்கு உன்னை உவமானிப்பார்
ஆர்அதிகம் ஆர்தாழ்வு அறைந்திடாய் - ஊர்அறிய .....55

நெய்யில் கைஇட்டாலும் நீதான் பசுமையென்றே
கையிட்டுச் சுத்தீகரிக்கலாம் - மெய்யின் .....56

வடிவும் வளைந்த மணிமூக்கும் மாயன்
கொடியில் இருப்பவர் தம் கூறோ - நெடிய மால் .....57

விண்டு தறித்து ஊது வேணு கானத்தினிலே
பண்டு தழைத்த பசுந்தழையோ - கொண்ட சிறகு .....58

அல்இலங்கு மெய்யானை அன்று அழித்து வீடணன் போய்த்
தொல் இலங்கை கட்டு புதுத்தோரணமோ - நல்வாய் .....59

மழலை மொழிதான் மணிவண்ணன் செங்கைக்
குழலின் இசைதானோ கூறாய் - அழகுக் .....60

கிளிப்பிள்ளாய் தெள்ளமுதக் கிள்ளாய் நலங்குக்
குளிப்பிள்ளாய் இன்ப ரசக் குஞ்சே - வளிப்பிள்ளை .....61

தன்னைத் தாய போல் எடுத்துச் சஞ்சரிக்கும் சம்பத்தாய்
பின்னைத்தாய் கையில்உறை பெண் தத்தாய் - பொன்ஒத்தாய் .....62

முத்திநகர் ஏழில்ஒன்றே முத்தமிழ் வல்லாறில் ஒன்றாய்
ஒத்த தனித் தவ்வரிப் பேர் உற்றது ஒன்றே சுத்தம் உறும் .....63

ஐந்து பூதத்தில் ஒன்றே ஆனபடை நான்கில் ஒன்றே
முந்து முதலான பொருள் மூன்றில் ஒன்றே - வந்த .....64

இரு பயனில் ஒன்றே இமையே விழியே
பருவ விழியில் உறை பாவாய் - ஒருநாரில் .....65

ஏற்றும் திருமலை எய்தப்போய் ஊரெல்லாம்
தூற்றுமலர் கொண்டகதை சொல்லக்கேள் - தோற்றி .....66

அழகர் சிறப்பு
அரிவடிவுமாய்ப் பின்னரன் வடிவுமாகிப்
பெரியது ஒரு தூணில் பிறந்து - கரிய .....67

வரைத் தடந்தோள் அவுணன் வன்காயம் கூட்டி
அரைத்து இடும்சேனை அருந்தி - உருத்திரனாய்ப் .....68

பண்ணும் தொழிலைப் பகைத்து நிலக்காப்பும் அணிந்து
உண்ணும் படிஎல்லாம் உண்டுஅருளி - வெண்ணெய் உடன் .....69

பூதனை தந்தபால் போதாமலே பசித்து
வேதனையும் பெற்று வௌிநின்று - பா தவத்தை .....70

தள்ளுநடை இட்டுத் தவழ்ந்து விளையாடும்
பிள்ளைமை நீங்காத பெற்றியான் - ஒள் இழையார் .....71

கொல்லைப் பெண்ணைக் குதிரைஆக்கும் திருப்புயத்தான்
கல்லைப் பெண் ஆக்கும் மலர்க் காலினான் - சொல் கவிக்குப் .....72

பாரம் முதுகுஅடைந்த பாயலான் விண்ணவர்க்கா
ஆரமுது கடைந்த அங்கையான் - நாரியுடன் .....73

வன்கானகம் கடந்த வாட்டத்தான் வேட்டுவர்க்கு
மென்கால் நகங்கள் தந்த வீட்டினான் - என் காதல் .....74

வெள்ளத்து அமிழ்ந்தினோன் வேலைக்கு மேல் மிதந்தோன்
உள்ளத்து உள்ளான் உலகுக்கு உப்பாலன் - தெள்ளிதின் .....75

வெட்ட வெறுவௌியிலே நின்றும் தோற்றாதான்
கிட்ட இருந்தும் கிடையாதான் - தட்டாது என் .....76

எண்ணிலே மாயன்எனும் பேரினால் ஒளிப்போன்
கண்ணன் எனும்பெயரால் காண்பிப்போன் எண்ணுங்கால் .....77

எங்கும் இலாதுஇருந்தே எங்கும் நிறைந்து இருப்போன்
எங்கும் நிறைந்து இருந்தே எங்கும் இலான் - அங்கு அறியும் .....78

என்னை எனக்கு ஒளித்து யான் என்றும் காணாத
தன்னை எனக்கு அருளும் தம்பிரான் - முன்னைவினை .....79

கொன்று மலமாயைக் கூட்டம் குலைத்து என்னை
என்றும் தனியே இருத்துவோன் - துன்று பிர (மா) .....80

மாவும்நான் மன்னுயிரும் நான் அவ்விருவரையும்
ஏவுவான் தானும் நான் என்று உணர்த்தக் - கோவலர்பால் .....81

ஆனும்ஆய் ஆன்கன்றுமாகி அவற்றை மேய்ப்
பானும்ஆய் நின்ற பரஞ்சோதி - மாநகரப் .....82

பேர்இருள் நீக்கப் பெருந்தவம் வேண்டா உடலில்
ஆருயிர் கூட்ட அயன் வேண்டா - பாரும் எனச் .....83br>
சங்கத் தொனியும் தடங்குழல் ஓசையெனும்
துங்கத் தொனியும் தொனிப்பிப்போன் - பொங்கும் அலை .....84

மோதும் பரன் ஆதிமூலம் இவன் என்றே
ஓதும் கரி ஒன்று உடைய மால் - மூதுலகைத் .....85

தந்திடுவோனும் துடைப்போன் தானும் நான் என்று திரு
உந்தியால் வாயால் உரைத்திடுவோன் - பைந்தமிழால் .....86

ஆதிமறை நான்கையும் நாலாயிரத்து நற்காவிய
ஓதும் பதினொருவர் உள்ளத்தான் - பாதம் எனும் .....87

செந்தாமரை மலரில் சிந்திய தேன்போல
மந்தாகினி வழியும் வண்மையான் - சந்ததமும் .....88

ஆன்ற உலகம் அறிவும் அறியாமையுமாத்
தோன்றத் துயிலாத் துயில் கொள்வோன் - ஈன்றவளைத் .....89

தெள்ளு மணிவாயில் காட்டிச் செகம்புறமும்
உள்ளும் இருப்பது உணர்வித்தோன் - கொள்ளைக் .....90

கவற்சிதறு சென்மக் கடலில் கலந்த
அவிச்சை உவர்வாங்க முகில் ஆனோன் - நிவப்பா .....91

மடங்கும் பரசமய வாத நதி வந்து
அடங்கக் கருங்கடலும் ஆனோன் - உடம்பில் .....92

புணர்க்க ஒரு கிரணம் போலும் எனையும் கொண்டு
அணைக்க மணிநிறமும் ஆனோன் - பணைக்கும் .....93

விசைப் பூதல ஊசன் மீதில் இருப்போனும்
அசைப்போனும் தான்ஆகும் அண்ணல் - இசைத்து இசைத்து .....94

ஊன் பிடிக்கும் வேடர் ஒருபார்வையால் நூறு
மான் பிடிக்கின்ற வகை என்னத் - தான் படைத்த .....95

என்பிறவி எண்பத்துநான்கு நூறாயிரமும்
தன் பிறவி பத்தால் தணித்திடுவோன் - முன்பு புகழ்ந்து .....96

பத்து அங்கங்கள்
அழகர் மலை

ஏத்தி இருவர் நீங்காது இருக்கையாலே கேச
வாத்திரி என்னும் அணிபெற்று - கோத்திரமாம் .....97

வெம் காத்திரம்சேர் விலங்கு களை மாய்த்திடலால்
சிங்காத்திரி என்னும் சீர்மருவி - எம்கோமான் .....98

மேய்த்த நிரை போல வெற்புகழ் எல்லாம் சூழ
வாய்த்த நிரையில் ஒரு மால் விடையாய்ப் - பார்த்திடலால் .....99

இன்னியம் ஆர்க்கும் இடபகிரி என்னும் பேர்
மன்னிய சோலை மலையினான் - எந்நாளும் .....100

சிலம்பாறு

பொற்சிலம்பில் ஓடும் சாம்பூநதம் போல் மாணிக்க
நற்சிலம்பில் ஓடும் நதியாகிக் - கல் சிலம்பில் .....101

இந்திரன் போலும் இடபாசலம் அவன்மேல்
வந்த விழி போலும் வாளச்சுனைகள் - முந்துதிரு .....102

மாலுடைய தோளின் மணிமார்பின் முத்தாரம்
போல வரு நூபுரநதியான் - சீலம் உறு .....103

தென்பாண்டி நாடு

பன்னிரு செந்தமிழ்சேர் நாடுகளும் பார்மகளுக்கு
முன்இருகை காது முலை முகம் கால் - பின்னகம்கண் .....104

காட்டும் அவற்றுள் கனகவரை மீது புகழ்
தீட்டும் புனல்நாடும் தென்நாடும் - நாட்டமாம் .....105

அந்நாடு இரண்டில் அருள்சேர் வலக்கண் எனும்
நல்நாடாம் தென்பாண்டி நாட்டினான் - பொன் உருவச் .....106

திருமாலிரும்சோலை எனும் ஊர்

சந்த்ர வடிவாம் சோமச்சந்திர விமானத்தை
இந்திர விமானம் இது என்றும் - மந்த்ர விரு(து) .....107

துக்கொடி ஏறு துசத்தம்பம் வல்லிசா(த)
தக்கொடி ஏறு கற்பதாறு என்றும் - மிக்கோர்க்கு .....108

ஒரு வாழ்வு ஆனோனை உபேந்திரனே என்றும்
திருமலை ஆண்டானைத் தேவ - குருஎன்றும் .....109

நண்ணிய சீர்பெற்ற நம்பி முதலோரை
விண்ணவர்கோன் ஆதி விபுதர் என்றும் - எண்ணுதலால் .....110

ஆர்பதியான அமராபதி போலும்
சீர்பதியான திருப்பதியான் - மார்பு இடத்தில் .....111

துளசி மாலை

எண்ணும் கலன் நிறத்தோடு இந்திரவில்போல் பசந்த
வண்ணம் தரும்துளப மாலையான் - உள்நின்று .....112

அத்வைதம் எனும் யானை

உருக்கும் வயிணவமாம் ஓங்கும் மதம் பொங்கத்
திருக்கொம்புதான் துதிக்கை சேர - நெருக்கிய .....113

பாகம்ஒத்த வைகானந்தம் பாஞ்சராத்திரமாம்
ஆகமத்தின் ஓசை மணிஆர்ப்பெடுப்ப - மோகம்அறு .....114

மட்டும் பிணிக்கும் வடகலையும் தென்கலையும்
கட்டும் புரசைக் கயிறாக - விட்டுவிடா .....115

ஆனந்தமான மலர்த்தாள் கண்ட அத்துவி(த)
ஆனந்தம் என்ற களியானையான் - தான் அந்த .....116

வேதப்புரவி

வர்க்கத்துடன் எழுந்து வாயி னுரைகடந்து
கற்கி வடிவு நலம் காண்பித்துச் - சொர்க்கத்தில் .....117

ஏறும் கதி காட்டி எய்தும் அணுத் தோற்றி
வீறும் பலகலையும் வென்றுஓடி - ஆறு அங்கம் .....118

சாற்றிய தன்அங்கமாய்க் கொண்டு தாரணியில்
போற்றிய வேதப் புரவியான் - பாற்கடலில் .....119

கருடக்கொடி

புக்கதுஒரு மந்தரமும் பூமியும் பம்பரமும்
சக்கரமும் போலத் தலைசுழன்று - தொக்க விசை .....120

வற்றும் பொழுது விழ வாசுகியைச் சேடனைப்
பற்றும் கருடப் பதாகையான் - சுற்றிய தன் .....121

மும்முரசு

குன்றில் அரியும் கரியும் கொண்மூவும் நின்று அதிர
முன்றில் அதிர் மும்முரசினான் - என்றும் .....122

ஆணை

அவன் அசையாமல் அணு அசையாது என்னும்
தவநிலை ஆணை தரித்தோன் - நவநீதம் .....123

இறைவனின் உடல்

மேனியில் சிந்தியதும் மென்கையில் ஏந்தியதும்
வானில் உடுவும் மதி ம்எனத் - தான் உண்டோன் .....124

செங்கதிரும் வெண்கதிரும் என்னத் திருவிழியும்
சங்கமும் சக்கரமும் தாங்கினோன் - அங்கண் உலகு .....125

உலகும் இறைவனும்

உண்ட கனிவாயான் உறையும் திருவயிற்றான்
கொண்டபடி ஈன்ற கொப்பூழான் - மண்டி .....126

அளந்த திருத்தாளான் அன்று ஏற்ற கையான்
விளைந்த பொருள் காட்டும் மெய்யான் - உளம்கொண்டு .....127

இடந்த மருப்பினான் ஏந்து முதுகான்
படந்தனில் வைத்த மணிப்பாயான் - தொடர்ந்தவினை .....128

முட்டு அறுக்கும் தன்நாமம் உன்னித் திருநாமம்
இட்டவருக்கு ஈவோன் இகபரங்கள் - எட்டு எழுத்தால் .....129

பிஞ்செழுத்தாய் நையும் பிரமலிபி என்னும் பேர்
அஞ்சு எழுத்தை மூன்று எழுத்து ஆக்குவோன் - வஞ்சம் அறத் .....130

தங்கள் குன்று எங்கிருந்தும் சங்கரன் ஆதியோர்
நங்கள் குன்று ஈது என்னவரு நண்புஉடையோன் - அங்கு ஓர் .....131

வயமுனிக்குக் கண்இரண்டும் மாற்றினோன் போற்றும்
கயமுனிக்குக் கண்கொடுத்த கண்ணன் - நயம் உரைக்கின் .....132

அஞ்சுபடையோன் எனினும் அஞ்சாமல் அங்கையில் வா
சம்செய்யும் உத்யோகச் சக்கரத்தான் - எஞ்சாது .....133

விண்நலம்கொள் பொன்இலங்கை வெற்றியாய்க் கொண்டாலும்
மண்ணில் அங்கைத் தானமாய் வாங்குவோன் - பண் இலங்கும் .....134

ஏர்அணி பொன் அரங்கத்து எம்பிரான் போல் எவர்க்கும்
தார்அணி நல்காத தம்பிரான் - கார் அணியும் .....135

செங்கைத் தலத்து இடத்தும் தென்மதுரை ஊர் இடத்தும்
சங்கத்து அழகன் எனும் தம்பிரான் - எங்கும் .....136

திருப்பாது உதைக்கும் செழும் கருடனுக்கும்
திருப்பாதுகைக்கும் அரசு ஈந்தோன் - விருப்பமுகம் .....137

சந்திரன் ஆன சவுந்திரவல்லி உடன்
சுந்தரராசன் எனத் தோன்றினோன் - அந்தம் .....138

சொல நலங்கொள் தோள் அழகால் சுந்தரத் தோளன் மலை அலங்காரன் என் வந்தோன் - பலவிதமாய் .....139

வழிபட்டவர்கள்
நண்ணிய தெய்வத்தை நரர்எல்லாம் பூசித்த
புண்ணியமே தன்னைவந்து பூசித்தோன் - கண் அனைய .....140

பாத கமலம் பரவு மலயத்துவசன்
பாதக மலம் பறித்திடுவோன் - கோதுஇல் .....141

அரணாம் புயங்கள் உறும் அம்பரீடற்குச்
சரணா அம்புயங்கள் தருவோன் - திருநாளில் .....142

கோடைத் திருவிழா
சந்தக்கா ஊடு தவழ்ந்து வரும் தென்றல்கால்
மந்தக் காலாக மருவும்கால் - சிந்திக்கும் .....143

வாடைத் துளிபோல் மலர்த்தேன்துளி துளிக்கும்
கோடைத் திருவிழாக் கொண்டுருஅளி - நீடு விடைக் .....144

மதுரை

குன்றில் உற்ற வெள்ளம் கொழுந்துஓடி வையைதனில்
சென்று எதிர்த்து நிற்பதுஎனச் சீபதியோர் - அன்று எதிர்த்துக் .....145

கூடலின் கூடல்எனும் கூடல் திருநகரில்
ஏடு அலர் தாரான் எழுந்துஅருளி - ஆடல்உடன் .....146

தல்லாகுளம்

கல்லாகு உளங்கள் கரையப் பணிவார்முன்
தல்லாகுளம் வந்து சார்ந்து அருளி - மெல்ல .....147

வையை

நரலோகம் மீது நடந்து வருகின்ற
பரலோகம் என்று சிலர் பார்க்கச் - சுரலோகத்து .....148

இந்த்ர விமானம் இது என்றும் இது சோமச்
சந்த்ர விமானமே தான் என்றும் - முந்திய அட்ட .....149

ஆங்க விமானம் அவை இரண்டும் எனவே
தாங்கு விமானம் தனில் புகுமுன் - தீங்குஇலார் .....150

உன்னி விமானம் உரத்து எடுக்கும் போது அனந்தன் சென்னி மணி ஒன்று தெறித்து எழுந்தது - என்னவே .....151

உம்பரில் வெய்யோன் உதயம் செயக் குதிரை
நம்பிரான் ஏறி நடந்துஅருளி - அம்பரத்தில் .....152

கோடி கதிரோனும் கோடி பனிமதியும்
ஓடி நிறையா உதித்த என - நீடிய .....153

பொன் கொடியும் வெள்ளிக்குடையும் பொலிந்து இலங்க
வில் கொடிகள் விண்ணோர் வெயர் துடைப்பச் - சொற்கத்து .....154

இயலும் கரியும் அதில் எற்று முரசும்
புயலும் உருமேறும் போலக் - கயலினத்தை .....155

அள்ளும் திரைவையை ஆறுள் பரந்து நர
வெள்ளம் கரை கடந்து மீதூர - வள்ளல் .....156

திருத்தகு மேகம்போல் செல்லுதலால் நீர்தூம்
துருத்தி மழைபோல் சொரியக் - கருத்துடனே .....157

வாட்டம் அற வந்து வரம் கேட்கும் அன்பருக்குக்
கேட்ட வரம் ஊறும் கிணறுபோல் - நாட்டமுடன் .....158

காணிக்கை வாங்கி அன்பர் கைகோடி அள்ளிஇடும்
ஆணிப்பொன் கொப்பரை முன்னாக வரக் - காணில் .....159

புரந்தரற்கு நேர்இது என்று போற்றிஇசைப்ப ஓர்ஆ
யிரம் திருக்கண் வையைநதி எய்தி - உரம் தரித்த .....160

வண்டியூர் மண்டபம்

வார்மண்டு கொங்கை மனம்போல் விலங்கு வண்டி
யூர் மண்டபத்தில் உவந்து இருந்து - சீர்மண்டு .....161

16மாயனுக்கு வாகனமாய் வாஎன்று சேடனைத்தான்
போய்அழைக்க வெய்யோன் புகுந்திடலும் - தூயோன் .....162

மருளப் பகலை மறைத்தவன் இப்போது
இருளைப் பகல் செஇதான் என்னத் - தெருளவே .....163

அங்கிக் கடவுளும் வந்து அன்பருடன் ஆடுதல்போல்
திங்கள் கடவுள் சேவிப்பது போல் - கங்குல் .....164

கரதீபமும் வாணக் காட்சியும் காண
வர தீபரூபமாய் வந்த - திருமால் .....165

தலைவி அழகரைக் காணல்
அவனி பரிக்கும் அனந்தஆழ்வான் மீது
பவனி வரக்கண்டு பணிந்தேன் - அவன் அழகில் .....166

பின்னழகு முன்னழகுஆம் பேரழகைக் காணும் முன்னே
முன்னழகைக் கண்டே நான் மோகித்தேன் - பின்னழகு .....167

தானே கண்டாலும் தனக்குத் துயர் வரும் என்று
ஏனோரை நோக்கி எழு்து அருள - ஆனோன் .....168

விமலத் திருமுகமும் மென்மார்பில் மேவும்
கமலத் திருமுகமும் கண்டேன் - அமலன் .....169

அரவணையான் என்பதும் உண்டு அண்ணல் அரன்போல
இரவு அணையான் என்பதும் உண்டு ஏனும் - பரவைத் .....170

திருஅணையான் என்றுதினம் செப்புவது பொய்என்று
உருவஅணையும் மாதர்க்கு உரைத்தேன் - மருஅணையும் .....171

தலைவி அழகரிடம் தன் நிலை உரைத்தல்
செங்கரத்தில் அன்று திருடிய வெண்ணெய் போலச்
சங்கு இருக்க என்சங்குதான் கொண்டீர் - கொங்கை .....172

மலைஅருவி நீர்உமக்கு மால் இரும்சோலைத்
தலைஅருவி நீர்தானோ சாற்றீர் - விலை இலாப் .....173

பொற்கலை ஒன்று இருந்தால் போதாதோ அன்றுபுனை
வற்கலையிலே வெறுப்பு வந்ததோ - நற்கலைதான் .....174

ஆரம்சேர் கொங்கைக்கு அளித்தது அறியீரோ
சோரம் திரும்பத் தொடுத்தீரோ - ஈரம்சேர் .....175

நூலாடையாம் எங்கள் நுண்ஆடைதாம் உமக்குப்
பாலாடை ஆமோ பகருவீர் - மால்ஆகி .....176

மொய்த்து இரையும் எங்கள் மொழி கேளீர் பாற்கடலில்
நித்திரை தான் வேகவதி நீரில் உண்டோ - இத்தரையில் .....177

பொங்கு நிலா வெள்ளம் பொ ருந்திற்றோ பாற்கடல்தான்
அங்கு நிலாதுஉம்மோடு அணைந்ததோ - கங்குல் எனும் .....178

ஆனை கெசேந்திரன் ஆகில் அதன்மேல் வருவன்
மீனையும் விட்டு விடலாமோ - கானச் .....179

சதிர் இளமாதர் தாமக்கு இரங்கு வீர் நெஞ்சு
அதிர் இளமாதர்க்கு இரங்க ஒணாதோ - முதிர்கன்றைக் .....180

கொட்டத்து வெண்பால் குனிந்து கறப்பார் முலையில்
விட்டுக் கறப்பதையும் விட்டீரோ - கிட்டப்போய் .....181

மென்பால் தெறித்த வியன்முலையைப் பால்குடம் என்று
அன்பால் எடுத்தது அறியீரோ - மின்போல்வார் .....182

செவ்விதழின் மேலே தெறித்த வெண்ணெய் உண்பதுபோல்
அவ்விதழை உண்டது அயர்த்தீரோ - செவ்வி தழை .....183

குன்றுஅன்று எடுத்தீர் குளிரும் அமுதம் கடைந்தீர்
சென்று அன்று பாம்பின் நடஞ் செய்தீரே - என்று என்று .....184

தேனூரில் இருந்தருளியபின் அழகர் சோலைமலை திரும்புதல்
கொண்ட பஞ்சாயுதன் மேல் கொள்கை பெறத் தேனூர்
மண்டபம் சார்வாய் வலம்கொண்டு - பண்டை .....185

விரசையுடன் வைகுந்த வீடும் இது என்னப்
புரசைமலை காத்தோன் புகுந்தான் - வரிசை .....186

உபசாரம் கொண்டு அருளி ஓர்சிவிகை மீது
தபசுஆர் அம்சீபதியைச் சார்ந்தான் - இபம் உண்ட .....187

தலைவியின் காதல் வேதனை
வெள்ளில்கனி ஆனேன் வேதனை ஈன்றவன்தான்
உள்ளில் கனியானே ஊர்ந்துவரும் - பிள்ளைமதி .....188

செவ்வை மதியோ திரைக் கடல் வாய் சிறிதோ
கொவ்வை இதழார் மொழிதான் கூற்று அன்றோ - எவ்வம் உறும் .....189

கால்தேரினானும் ஒரு காலன்அன்றோ உருக்கி
ஊற்றாத சேமணியும் ஒன்று உண்டோ - வேற்றுக் .....190

கிளையோடு வாடிக் கிடந்தாலும் சுட்டுத்
துளையாக் குழலும் உண்டோ சொல்லாய் - கிளிஅரசே .....191

கிளியை வேண்டல்

என்கூடு பொன்கூடும் இந்த நிறத்தினால்
உன்கூடும் என்கூடும் ஒன்றுகாண் - என்கூட்டில் .....192

மாங்கனி உண்டு வளம்சேர் செழும் கொவ்வைத்
தீங்கனி உண்டு ஆசினிஉண்டு - பாங்கில் .....193

குழையுமன முண்டு குழம்பிய பாலுண்டு
உழையே தௌிபாலும் உண்டு - விழைவு அறிந்து .....194

ஊட்டுவேன் உன்னை உருப்பசியாய் என்ன நலங்
காட்டுவேன் பட்டாடையால் துடைப்பேன் - கூட்டில் .....195

அரசாய் இருத்தி ஆலத்தி எடுத்துப்
புரைதீர் நறையும் புகைப்பேன் - அருகே .....196

இளவெயிலில் காய்வித்து எடுத்து ஒருகால் முத்தி
வளைபயில் கையின்மேல் வைத்துத் - துளபம் அணி .....197

ஈசன் திருநாமம் எல்லாம் என்போல் உனக்குப்
பாசம் தொலையப் பயிற்றுவேன் - பேசுஎன்றே .....198

பிறபொருட்கள் தூதுக்குப் பயன்படா என்றல்

ஈடுபட்ட வெள்ளை எகினத்தைத் தூதுவிட்டால்
சூடுபட்டார் துணிந்து சொல்வாரோ - கூடுகட்டி .....199

அன்பாய் வளர்த்த தாயார்க்கு உதவாக் கோகிலம் தான்
என்பால் அருள்வைத்து இயம்புமோ - தன்பேர் .....200

அரிஎன்று சொன்னால் அளிஎன்று சொல்லும்
வரிவண்டு பேசி வருமோ - விரகம்செய் .....201

வன்கால திக்கின் மலைவாய் இருக்கின்ற
தென்காலும் என்காதல் செப்புமோ - பொன்காதல் .....202

வண்டு அலையும் தாரான்முன் மாதரை எல்லாம் தூற்றும்
கொண்டலையும் தூதுவிடக் கூடுமோ - உண்ட .....203

படிஏழும் காக்கும் பரங்கருணையான் முன்
கொடியோரும் போவாரோ கூறாய் - அடியார்கள் .....204

கிளியின் தகுதி

அங்கு இருந்தால் கீர்த்தனம் செய்வாய் அடுத்த நாச்சியார்
பங்கு இழிந்தால் கையில் பறந்து இருப்பாய் - எங்குஇருந்து .....205

வந்தாய் என்றால் மாலிரும் சோலையினில் இருந்து
எந்தாய் உனைத் தொழ வந்தேன் என்பாய் - அந்த .....206

சவுந்தரவல்லி எனும் தற்சொரூபிக்கும்
உவந்து அலர்சூடிக் கொடுத்தாளுக்கும் - சிவந்த .....207

கடுகு இலேசம் கோபம் காணாமல் என்மால்
வடுகிலே சொல்வாய் வகையாய் - அடுகிலே (சம்) .....208

சம்கெடுப்பாய் சங்குஎடுக்கும் சச்சிதானந்தர் அணி
கொங்கு எடுக்கும் தாமம் கொடுவருவாய் - அங்கு அடுக்கின் .....209

இறைவன் இருக்குமிடத்தின் அடையாளம்
ஓர்உகத்தில் ஆலாகி ஓருகத்திலே அரசாய்
ஓர் உகத்திலே வில்லுவம் ஆகி - ஓர் உகத்தில் .....210

புத்திரதீபமும் ஆய்ப் பங்கவர்க்கு ஆறாம் தருவாய்ச்
சத்திதரும் ஓர் தருஉண்டு - மொய்த்த .....211

ஒருகோடி காஉண்டு ஒருகோடி ஆறுண்டு
ஒருகோடி பூஞ்சுனையும் உண்டு - திறம்சேர் .....212

அறம்காக்கும் யோகிகள்போல் அல்லும் பகலும்
உறங்காப்புளி தானும் உண்டு - திறம்சேர் .....213

அவையில் உள்ளோர்
பிதாமகனோடு உறையும் பெற்றி விளங்கப்
பிதாமகன் வந்து புகழ் பேசச் - சதா கால(மும்) .....214

மும்திரமாய் வாழும் உபேந்திரன் அங்கில்லைஎன
இந்திரனார் வந்துஅங்கு இனிது இறைஞ்சப் - பிந்திய .....215

தம்பியர் மூவருக்கும் தானே அரசு ஈந்த
நம்பி திருத்தாளை நம்பினோர் - வெம்பிற வித் .....216

தேகம் பவித்திரம் செய்சீரங்கராச பட்டர்
ஆகும் ப்ரசித்தராம் அர்ச்சகரும் - மோகம்உறும் .....217

கங்குல் மலமாயை கன்மம் விளங்காமல்
செங்கையில் ஓங்கு திரிதண்டு ஏந்திச் - சங்கை அறச் .....218

செய்யும் திருமாலிருஞ்சோலைச் சீயர் என
வையம் விளங்கவரு மாதவரும் - பொய்யில்லா .....219

ஞானதீபம் காட்டி நன்னெறி காட்டு என்று ஒருப
மான தீபம் காட்டி வந்துநின்று - மேல்நாளில் .....220

முத்தமிழ்க்குப் பின்போவார் முன்போகப் பின்போன
அத்தன் திருமலை ஆண்டானும் - பத்தியினால் .....221

வையம் கார்வண்ணனையே வாழ்த்த வரும் தோழப்ப
ஐயங்கார் என்னும் ஆசாரியரும் - மெய் அன்பாம் .....222

சிட்டர்கள் தேவர்களாகத் தினம் பரவும்
பட்டர்களாம் வேதபாரகரும் - விட்டு எனும் .....223

சோதி கருணைக்கடல் தோன்றிக் கரசரண்
ஆதியுடன் வந்த அமுதாரும் - மூதுலகில் .....224

தண்அம் துழாய் அழகன் தங்கும் திருமலைபோல்
நண்ணும் திருமலை நம்பிகளும் - உள்நின்ற .....225

மாலை மலை சோலைமலையையே நம்புதலால்
சோலைமலை நம்பி என்னும் தூயோரும் - மேலை .....226

விரிஞ்சன் முதலோர்க்கும் விட்டுப் பிரசாதம்
தரும் சடகோபநம்பி தாமும் - பெரும்சீர் .....227

வரிஎழுதிக் கற்ற திருமாலிருஞ்சோலைப்
பிரியர் எனும் சீர் கருணப் பேரும் - கிரியில் இருந்து .....228

ஆளும் கடவுள் அருளே துணையாய் எந்
நாளும் சீகாரியம் செய் நாயகரும் - தாள்வணங்க .....229

தூது உரைக்க வேண்டிய வேளை
ஆர்த்த திருவோலக்கமாய் இருப்பன் அப்பொழுது உன்
வார்த்தை திருச்செவியில் வாயாது - சேர்த்தியிலே .....230

மெல்ல எழுந்தருளும் வேளைபார்த்து அவ்வேளை
சொல்ல எழுந்து ஒருவர் சொல்லாமுன் - வெல்லும் மதன் .....231

அம்புஅலர் தூற்ற அடர்த்து வரும்முன்னே
வம்பலர் தூற்ற வருமுன்னே - கும்பமுனி .....232

வாயில் நுர அடங்க வந்த கடல் அடங்கத்
தாயின் உரை அடங்கத் தத்தையே - நீ உரையாய் .....233

உன்பேர் சுவாகதம் என்று ஓதுகையால் உனக்கும்
அன்பு ஏர் சுவாகதம் உண்டாகும் காண் - முன்பு ஒருநாள் .....234

கோசலை கையில் குருசில் உனைப் புகழ்ந்து
பேசின் உனைப் புகழ்ந்து பேசார் ஆர் - நேசமுடன் .....235

மாலையைக் கேள்
எம்முடைய மாலை இருபுயத்து மாலைகேள்
உம்முடைய மாலை உதவீரேல் - அம்மை திருக் .....236

கோதையார் சூடிக் கொடுத்து வரவிட்ட
தாதையார் மாலைதனைத் தம்மின் என்பாய் - நீதி .....237

அடுப்பவர் யாவர்க்கும் ஆடித் தியாகம்
கொடுப்பவன் இல்லை என்று கூறான் - தடுக்கும் .....238

அருமாலை நீக்கும் அழகன் புயத்து
மருமாலை நீ வாங்கி வா .....239



 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home