ஆவி அகரமுதல் ஆயிரண்டாய் ஆய்தமிடை மெவுங் ககரமுதன் மெய்களாம் -
மூவாறுங் கண்ணு முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று நண்ணுமுதல்
வைப்பாகு நன்கு.
|
1
|
ஆன்றவுயிர் ஈராறும் ஐங்குறில் ஏழ்நெடிலாம் ஏன்றமெய்ம் மூவாறும்
எண்ணுங்கால் - ஊன்றிய வன்மையே மென்மை யிடைமையாம் வாட்கண்ணாய்
தொன்மை முயற்சியால் தொக்கு.
|
2
|
ஓங்குயிர்கள் ஒற்றில்மேல் ஏறி உயிர்மெய்யாய் ஆங்கிரு நூற்றொருபத்
தாறாகும் - பாங்குடைய வல்லொற்று மெல்லொற்று வர்க்கம் அளபெடைகள்
சொல்லொற்றி நீட்டத் தொகும்.
|
3
|
தொடர்நொடிற் கீழ்வன்மை மேலுகரம் யப்பின்பு அடைய வருமிகரம் அன்றி -
மடநல்லாய் மும்மையிடத் தையௌவுங் குன்றுமுன் னொற்றுண்டேற்
செம்மையுயிர் ஏறுஞ் செறிந்து
|
4
|
குறில்நெடில்கள் ஒன்றிரண்டு மூன்றளவு காலாங் குறுகுமவ் வாய்தம்
உயிர்மெய் - பெறுமுயிரே மெய்யாய்தம் இஉக் குறுக்கமரை மென்மொழியாய்
ஐஔ வளவொன் றரை.
|
5
|
உந்தியிற் றோன்றும் உதான வளிப்பிறந்து கந்தமலி நெஞ்சுதலை கண்டத்து -
வந்தபின் நாசிநா அண்ணம் இதழெயிறு மூக்கெனப் பேசும் எழுத்தின்
பிறப்பு.
|
6
|
காட்டு முயிருங் கசதநப மவ்வரியும் ஈட்டிய வவ்வரியி னெட்டெழுத்தும் -
ஈட்டு ஞயவின்கண் மும்மூன்று நன்மொழிக்கு முன்னென்று அயர்விலார்
கட்டுரைத்தார் ஆய்ந்து.
|
7
|
உயிரின்கண் ஒன்பா னுடன்மென்மை இம்மூன்று அயர்வில் இடையினங்க ளாறும் -
நயனுணர்ந்து நன்மொழிகட் கீற்றெழுத்தாம் என்றுரைப்பர் ஞாலத்துச்
சொன்முடிவு கண்டோர் துணிந்து.
|
8
|
ஆதியுயிர் வவ்வியையின் ஔவாம் அஃதன்றி நீதியினால் யவ்வியையின் ஐயாகும்
- ஏதமிலா எஒமெய் புள்ளிபெரும் என்ப சஞயமுன் அஐயாம் ஆதி யிடை.
|
9
|
அகரத்திற்கு ஆவும் இகரத்திற் ஐயும் உகரத்திற்கு ஔவும் இருவிற் -
ககல்வரிய வாருமாம் ஏயாம் மிகரத்திற்கு ஒவாகிச் சேரும் உகரத்தின்
திறம்.
|
10
|
நேர்ந்தமொழிப் பொருளை நீக்க வருநகரஞ் சார்ந்தது உடலாயிற் றன்னுடல்
போஞ் - சார்ந்ததுதான் ஆவியேற் றன்னாவி முன்னாகும் ஐஔவாம் மேவிய
ஏவும் விரைந்து.
|
11
|
மெய்யீறு உயிரீறு உயிர்முதன் மெய்ம்முதலா எய்தும் பெயர்வினையும்
இவ்வகையே - செய்தமைத்தாற் தோன்றல் திரிதல் கெடுதலெனத் தூமொழியாய்
மூன்றென்ப சந்தி முடிவு.
|
12
|
மூன்றுநான் கொன்பான் உயிர்ப்பின்னும் அல்லாத ஆன்ற வுயிர்ப்பின்னும்
ஆவிவரின் - தோன்றும் யகர வகர மிறுதியிடைத் தோரோர் மகரங் கெட
வகரமாம்.
|
13
|
குற்றுகரம் ஆவி வரிற்சிதையு கூறியவல் லொற்றுமுன் தோன்றுதலும்
உண்டாகும் - முற்றோன்று மென்மையதன் வல்லெழுத்தாம் வேற்கண்ணாய்
முற்றுகரத்
தன்மையும்போம் ஆவியினைச் சார்ந்து.
|
14
|
குற்றொற் றிரட்டுமுயிர் வந்தால் யரழக்கண் நிற்கப்பின் வல்லெழுத்து
நேருமேல் - ஒற்றாம் பிணைந்த வருக்கம் பெயர்த்தியல்பு சந்தி
யிணைந்தபடி யேமுடியும் ஏய்ந்து.
|
15
|
வாய்ந்த வுயிர்ப்பின் வருமெழுத்தின் வர்க்கத்தொற் றேய்ந்து புகுதும்
இயல்புமாம் - ஆய்ந்த இறுதி வருமெழுத்ததா மீறரா மோரோர் மறுவில்பதங்
கெட்டு வரும்
|
16
|
வன்மை வரினே ளணலன மாண்டறவா மென்மை வரினே ளலணனவாந் - தந்நக்கண்
முன்பின்னாந் தப்பி னணவியல்பாத் தட்டறவாம் ஒன்றழிந்து போதலு முண்டு.
|
17
|
மகரந்தான் வன்மைவரின் வர்கத்தொற் றாகும் புகரிலா மென்மைவரிற் பொன்றும்
- நிகரில் வகரம்வந் தால்குறுகும் வவ்வழிந்து மவ்வாம் மகரந் தவயவாம்
வந்து.
|
18
|
உரிவரின் நாழியி னீற்றுயிர்மெய் யைந்தாம் வருமுயிரொன் றொன்பான்
மயங்குந் - தெரியத் திரிந்தும் விகாரங்கள் தேர்ந்தாறு முன்றும்
பொருந்தமிடம் கண்டு புகல்.
|
19
|
நின்றமுதற் குற்றுயிர்தான் நீளுமுதல் நெட்டுயிர்தான் குன்றும்
உயிருயிர்மெய் கூடுமேல் - ஒன்றியவெண் பத்தினிடை ஆய்தமுமாம் பந்நீண்டு
நீளாது மற்றவைபோய் ஈறு வரும்.
|
20
|
ஒன்பா னொடுபத்து நூறதனை யோதுங்கான் முன்பாந் தகரணள முன்பிரட்டும் -
பின்பான வெல்லாங்கெட் டாறிரண்டு ஆவியின்பின் வல்லுகர நல்லா
யிரமீறாய் நாட்டு.
|
21
|
மேய விருசொற்பொருள்தோன்ற வேறிருத்தி ஆய இடைச்சொல் அடைவித்தால் -
தூயசீர் ஆவிபோ மொற்றுப்போம் ஆங்குயிர்மெய் போமன்றி மேவியசுட்
டாங்கே மிகும்.
|
22
|
உற்றஆ காரம் அகரமாய் ஓங்குகரம் பெற்றிடுநீ யாமாவின் பின்னிறுதி -
யொற்றணையுஞ் சாவவக மென்புழிச் சார்ந்த இறுதியிடைப் போவதுயிர்
மெய்யென்றே போற்று.
|
23
|
ஐந்தாறாம் ஆறு பதினாறாம் ஒற்றுமிகும் வந்துறழு மன்ன வயனலக்கள் -
சந்திகளின் அல்லா தனவும் அடக்குவாய் கண்டடக்க எல்லாம் முடியும்
இனிது.
|
24
|
|