Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > உமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்
 


 

உமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்
tiruvarutpayan of umApati civAccAriyAr


Etext Preparation, Proof-reading: Dr. K. Loganathan, Malaysia Our sincere thanks go to Dr. Loganathan for his kind permission to reproduce this Etext as part of Project Madurai collections. Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland � Project Madurai 1999-2000 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


அன்பர்களே,

சைவ சித்தாந்தக் கருத்துக்களை எளிதில் மக்கள் உணரும் வகையில் உமாபதி சிவம் அருளிய நூலே குறள் வெண்பாவால் இயன்ற "திருவருட்பயன்" எனும் இந்நூலாகும். சைவ பெருமக்களால் பெரிதும் பயிலப்படும் நூற்களில் இதுவும் ஒன்றாகும். இதற்கு பண்டே பல உரைகள் தோன்றியுள்ளன, இன்றும் தோன்றிக் கொண்டிருகின்றன. இங்கு மூலத்தை மாத்திரம் தருகின்றேன். பத்துப் பத்தாக மொத்தம் 100 குறள்கள்.

அன்பன் கி.லோகநாதன்



கணபதி வணக்கம்
நற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்.

1. பதிமுது நிலை

அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரில் இறை நிற்கும் நிறைந்து. 1

தன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும்சத்தி
பின்னம் இலான் எங்கள் பிரான். 2

மெருமைக்கும் நுண்மைக்கும் பேர்அருட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்புஇன்மை யான். 3

ஆக்கிஎவையும் அளித்து ஆசுடன் அடங்கப்
போக்கு அவன் போகாப் புகல் . 4.

அருவம் உருவம் அறிஞர்க்கு அறிவாம்
உருவம் உடையான் உளன். 5.

பல்ஆர் உயிர் உணரும் பான்மைஎன மேல்ஒருவன்
இல்லாதான் எங்கள் இறை. 6.

ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வான்நாடர் காணாத மன். 7

எங்கும் எவையும் எரி உறு நீர்போல் ஏகம்
தங்கும்அவன் தானே தனி. 8.

நலம்இலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலம்இலன் பேர் சங்கரன். 9.

உன்னும்உளது ஐயம்இலது உணர்வாய் ஓவாது
மன்னுபவம் தீர்க்கும் மருந்து

திருவருட்பயன் -இரண்டாம் பத்து

2. உயிரவை நிலை

பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாள் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை. 11.

திரிமலத்தார் ஒன்றுஅதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தார் ஆயும் உளர். 12

மூன்றுதிறத்து உள்ளாரும் மூலமலத்து உள்ளார்கள்
தோன்றலர்தொத்து உள்ளார் துணை. 13

கண்டவற்றை நாளும் கனவில் கலங்கியிடும்
திண்திறலுக்கு என்னோ செயல் . 14

பொறிஇன்றி ஒன்றும் புணராதே புந்திக்கு
அறிவுஎன்ற பேர்நன்று அற. 15

ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவு இல்எனில் என்செய. 16

சத்துஅசத்தைச் சாராது அசத்துஅறியாது அங்கண்இவை
உய்த்தல் சத்சத்தாம் உயிர். 17

இருளில் இருளாகி எல்இடத்தில் எல்லாம்
பொருள்கள் இலதோ புவி. 18

ஊமக்கண் போல ஒளியும் மிக இருளே
யாம்மன்கண் காணா தவை. 19

அன்றுஅளவும் ஆற்றும் உயிர் அந்தோ அருள்தெரிவது
என்றுஅளவு ஒன்றுஇல்லா இடர். 20

திருவருட்பயன் - மூன்றாம் பத்து


3. இருள்மல நிலை

துன்றும் பவத்துயரும் இன்பும் துணைப்பொருளும்
இன்றென்பது எவ்வாறும் இல். 21

இருளானது அன்றி இலதெவையும் ஏகப்
பொருளாகி நிற்கும் பொருள். 22

ஒருபொருளும் காட்டாது இருளுருவம் காட்டும்
இருபொருளும் காட்டாது இது. 23

அன்றுஅளவி உள்ளளியோடு ஆவி இடைஅடங்கி
இன்றளவும் நின்றது இருள். 24

பலரைப் புணர்ந்தும் இருள்பாவைக்கு உண்டென்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு. 25

பன்மொழிகள் என்உணரும் பான்மை தெரியாத
தனமை இருளார் தந்தது. 26
27.
இருள்இன்றேல் துன்புஎன் உயிர் இயல்பேல் போக்கும்
பொருள் உண்டேல் ஒன்றாகப் போம். 27
28.
ஆசுஆதியேல் அணைவ காரணமென் முத்திநிலை
பேசாது அகவும் பிணி. 28
29.
ஒன்று மிகினும் ஒளிகவராதேல் உள்ளம்
என்றும் அகலாது இருள். 29
30.
விடிவாம் அளவும் விளக்கனைய மாயை
வடிவுஆதி கன்மத்து வந்து. 30


திருவருட்பயன் - நான்காம் பத்து

4. அருளது நிலை

அருளில் பெரியது அகிலத்தில் வேண்டும்
பொருளில் தலைஇலது போல். 31

பெருக்க ஒளியினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள். 32

ஊனறியாது என்றும் உயிர்அறியாது ஒன்றுமிவை
தானறியாதார் அறிவார் தான். 33

பால்ஆழி மீன்ஆளும் பான்மைத்து அருளுயிர்கள்
மால்ஆழி ஆளும் மறித்து. 34

அணுகும் துணைஅறியா ஆற்றோனில் ஐந்தும்
உணர்வை உணராது உயிர். 35

தரையை அறியாது தாமே திரிவோர்
புரையை உணரார் புவி. 36

மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெட்த்தோர் ஞானம்
தலைகெடுத்தோர் தற்கேடர் தாம். 37

வெள்ளத்துள் நாவாற்றி எங்கும்விடிந்து இருளாம்
கள்ளத் தலைவர் கடன். 38

பரப்புஅமைந்து கேண்மின்இது பாலல்கலன்மேல் பூஞை
கரப்பு அருந்த நாடும் கடன். 39

இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமிலா
வெற்று உயிர்க்கு வீடு மிகை. 40

திருவருட்பயன் -ஐந்தாம் பத்து

5. அருள் உரு நிலை

அறியாமை உள்நின்று அளித்ததே காணும்
குறியாக நீங்காத கோ. 41

அகத்துறு நோய்க்கு உள்ளினரை அன்றிஅதனை
சகத்தவரும் காண்பரோ தான். 42

அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருள்ஆர் அறிவார் புவி. 43

பொய்இருண்ட சிந்தைப் பொறி இலார் போதமாம்
மெய்இரண்டும் காணார் மிக. 44

பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வைஎனக் காணார் புவி. 45

எமக்குஎன் எவனுக்கு எவை தெரியும் அவ்வத்
தமக்குஅவனை வேண்டத் தவிர். 46

விடம்நகுலம் மேவினும் மெய்ப்பாவகனின் மீளும்
கடனில்இருள் போவதுஇவன் கண். 47

அகலத் தரும் அருளை ஆக்கும் வினைநீக்கும்
சகலர்க்கு வந்துஅருளும் தான். 48

ஆர்அறிவார் எல்லாம் அகன்ற நெறிஅருளும்
பேர்அறிவான் வாராத பின். 49

ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும் நற்கல்அனல்
பானு ஒழியப் படின். 50

திருவருட்பயன் - ஆறாம் பத்து

6. அறியும் நெறி

நீடும் இருவினையும் நேராக நேர்ஆதல்
கூடும் இறைசத்தி கொளல். 51

ஏகன் அநேகன் இருள்கருமம் மாயைஇரண்டு
ஆக இவை ஆறு ஆதி இல். 52

செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும்
உய்வான் உளன்என்று உணர். 53

ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தெ ஊனொடு உயிர்
தான் உணர்வொடு ஒன்றாம் தரம். 54

தன்நிறமும் பல்நிறமும் தானாம்கல் தன்மைதரும்
பொன்நிறம்போல் மன்நிறம்இப் பூ. 55

கண்தொல்லை காணும்நெறி கண் உயிர் நாப்பண்நிலை
உண்டுஇல்லை அல்லது ஒளி. 56

புன்செயலி நோடு புலன்செயல்போல் நின்செயலை
மன்செயலது ஆக மதி. 57

ஓராதே ஒன்றையும்உற்று உன்னாதே நீமுந்திப்
பாராதே பார்த்தனைப் பார். 58

களியே மிகுபுலனாய்க் கருதி ஞான
ஒளியே ஒளியாய் ஒளி. 59

கண்டபடியே கண்டு காணாமை காணாமல்
கொண்டபடியே கொண்டு இரு. 60

திருவருட்பயன் -ஏழாம் பத்து

7. உயிர் விளக்கம்

தூநிழல் ஆர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இதுபோல்
தன்அதுவாய் நிற்கும் தரம். 61

தித்திக்கும் பால்தானும் கைக்கும் திருந்திடும்நாப்
பித்தத்தில் தான் தவிர்ந்த பின். 62

காண்பான் ஒளி இருளில் காட்டிடவும் தான் கண்ட
வீண்பாவம் எந்நாள் விழும். 63

ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை
தெளிவு தெரியார் செயல். 64

கிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க்கு அல்லால்
எடுத்துச் சுமப்பானை இன்று. 65

வஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதிகவரத்
துஞ்சினனோ போயினனோ சொல். 66

தனக்குநிழல் இன்றாம் ஒளிகவரும் தம்பம்
எனக்கவர நில்லாது இருள். 67

உற்கைதரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின்
நிற்க அருளார் நிலை. 68

ஐம்புலனால் தாம்கண்டது என்றால் அதுவொழிய
ஐம்புலன் ஆர்தாம் ஆர்அதற்கு. 69

தாமே தருபவரைத் தம்வலியினால் கருதல்
ஆமே இவன்ஆர் அதற்கு. 70
திருவருட்பயன் - எட்டாம் பத்து

8. இன்புறு நிலை

இன்புறுவார் துன்பார் இருளில் எழும்சுடரின்
பின்புகுவார் முன்புகுவார் பின். 71

இருவர் மடந்தையருக்கு என்பயன் இன்பு உண்டாம்
ஒருவன் ஒருத்தி உறின். 72

இன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு உருவம்
இன்பகனம் ஆதலினால் இல். 73

தாடலைபோல் கூடி அவை தான் நிகழா வேற்று இன்பக்
கூடலைநீ ஏகமெனக் கொள். 74

ஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஓசைஎழாது
என்றாலும் ஓர் இரண்டும் இல். 75

உற்றாரும் பெற்றாரும் ஓவாது உரைஒழியப்
பற்றாரும் அற்றார் பவம். 76

பேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி
நீ ஒன்றும் செய்யாது நில். 77

ஒண்பொருட்கண் உற்றார்க்கு உறுபயனே அல்லாது
கண்படுப்பார் கைப்பொருள்போல் காண். 78

மூன்றாய தன்மை அவர் தம்மில் மிக முயங்கித்
தோன்றாத இன்பம் அது என் சொல். 79

இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று உண்டாம்
அன்பு நிலையே அது. 80

திருவருட்பயன் - ஒன்பதாம் பத்து

9. ஐந்தெழுத்து அருள் நிலை

அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்
பொருள்நூல் தெரியப் புகின். 81

இறைசத்தி பாசம் எழில்மாயை ஆவி
உறநிற்கும் ஓங்காரத்து உள். 82

ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம்
ஞானநடம் தான்நடுவே நாடு. 83

விரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம்
பெரியவினை தீரில் பெறும். 84

மால்ஆர் திரோதம் மலம்முதலாய் மாறுமோ
மேலாகி மீளா விடின். 85

ஆராதி ஆதாரம் அந்தோ அதுமீண்டு
பாராதுமேல் ஓதும் பற்று. 86

சிவமுதலே ஆம்ஆறு சேருமேல் தீரும்
பவம் இதுநீ ஓதும் படி. 87

வாசி அருளியவை வாழ்விக்கும் மற்று அதுவே
ஆசுஇல் உருவமும் ஆம் அங்கு. 88

ஆசில்நவா நாப்பண் அடையாது அருளினால்
வாசி இடை நிற்கை வழக்கு. 89

எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று
நில்லா வகையை நினைந்து. 90

திருவருட் பயன் - பத்தாம் பத்து

10. அணைந்தோர் தன்மை

ஓங்கு உணர்வின் உள்அடங்கி உள்ளத்துள் இன்புஒடுங்கத்
தூங்குவர்மற்று ஏது உண்டு சொல். 91

ஐந்தொழிலும் காரணர்களாம் தொழிலும் போகம்நுகர்
வெந்தொழிலும் மேவார் மிக. 92

எல்லாம் அறியும் அறிவுஉறினும் ஈங்குஇவர்ஒன்று
அல்லாது அறியார் அற. 93

புலன் அடக்கித் தம்முதல்கண் புக்குறுவார் போதார்
தலம்நடக்கும் ஆமை தக. 94

அவனைஅகன்று எங்குஇன்றாம் ஆங்குஅவனாம் எங்கும்
இவனைஒழிந்து உண்டாதல் இல். 95

உள்ளும் புறம்பும் ஒருதன்மைக் காட்சியருக்கு
எள்ளும் திறம் ஏதும் இல். 96

உறும்தொழிற்குத் தக்க பயன் உலகம் தத்தம்
வறும்தொழிற்கு வாய்மை பயன். 97

ஏன்ற வினைஉடலொடு ஏகுமிடை ஏறும்வினை
தோன்றில் அருளே சுடும். 98

மும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதுஅறிவார்க்கு
அம்மையும் இம்மையே ஆம். 99

கள்ளத்தலைவர் துயர்கருதித் தம்கருணை
வெள்ளத்து அலைவர் மிக. 100

திருவருட்பயன் முற்றிற்று.



 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home