Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > விவேக சிந்தாமணி

 
 

vivEka cinthAmani
விவேக சிந்தாமணி


Etext Preparation (input) : Dr. Kumar Mallikarjunan, Blackburg, VA, USA Etext Preparation (proof-reading) : Mr. M. Batmanabane, Paris, France Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan, Blacksburg, VA, USA � Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம்; போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாம்அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே. 1.

பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான்
கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார். 2.

குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணம் செய்தாலும் தான்
அக்குலம் வேறதாமோ அதனிடம் புனுகு உண்டாமோ
குக்கலே குக்கல் அல்லால் குலந்தனில் பெரியதாமோ? 3.

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் கும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே. 4.

கதிர்பெறு செந்நெல்வாடக் கார்க்குலம் கண்டு சென்று
கொதிநிரைக் கடலில் பெய்யும் கொள்கைபோல் குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார் நிலை இலார்க்கு ஈயமாட்டார். 5.

ஆலிலே பூவும் காயும் அளிதரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம் தன்குடி என்றே வாழும்
வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடாகோடி
ஆலிலை ஆதிபோனால் அங்கு வந்திருப்பர் உண்டோ? 6.

பொருட் பாலை விரும்புவார்கள் காமப்பால் இடைமூழ்கிப் புரள்வர் கீர்த்தி
அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்பார்கள் அறிவொன்று இல்லார்
குருப்பாலர் கடவுளர்பால் வேதியர்பால் புரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து இடுவார். 7.

தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்து இடைஇருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே. 8.

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே! 9.

வண்டு மொய்த்தனைய கூந்தல் மதன பண்டாரவல்லி
கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளிமொழி வாயின் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ கனியடு கலந்த பாகோ
அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே! 10.

கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்
விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்
இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல்
அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா. 11.

ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்
கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே! 12.

சங்கு வெண்தாமரைக்குத் தந்தை இரவி தண்ணீர்
அங்கதைக் கொய்து விட்டால் அழுகச் செய்து அந்நீர் கொல்லும்
துங்கவெண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்
தங்களின் நிலைமை கெட்டால் இப்படித் தயங்குவாரே. 13.

நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின்

நற்றமிழை எழுத எழுத் தாணி ஆகுமோ?
பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்
பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீட தாமோ?
தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்
சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான்
ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான்
எழுபிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே. 14.

வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல் விழுந்தழுவாள் பொய்யே
தம்பலம் தின்பாள் பொய்யே சாகிறேன் என்பாள் பொய்யே
அம்பிலும் கொடிய கண்ணாள் யிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடையாவாரே. 15.

கெற்ப்பத்தான் மங்கையருக்கு அழகு குன்றும்
கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம்
துற்ப்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்
சொல் கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம்
நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார்
நன்மை செய்யத் தீமை உடன் நயந்து செய்வார்
அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும்
அரிய தவம் கோபத்தால் அழிந்து போமே! 16.

தன்னுடன் பிறவாத் தம்பி தனைப் பெறாத் தாயார் தந்தை
அன்னியர் இடத்துச் செல்வம் அரும்பொருள் வேசி ஆசை
மன்னிய ஏட்டின் கல்வி மறுமனையாட்டி வாழ்க்கை
இன்னவாம் கருமம் எட்டும் இடுக்கத்துக்கு உதவாதன்றே. 17.

ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே
பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந் தாலே
சகிக்க முடியாதினி என் சகியே மானே. 18.

தேனுகர் வண்டு மது தனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்புவின் கனி என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியும் வந்தது என்றெண்ணி மலர்கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது எனப் புகன்றாள். 19.

கருதிய நூல் கல்லாதான் மூடனாகும்
கணக்கறிந்து பேசாதான் கசடனாகும்
ஒரு தொழிலும் இல்லாதான் முகடியாகும்
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பனாகும்
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்
பேசாமல் இருப்பவனே பேயனாகும்
பரிவு சொலித் தழிவினவன் பசப்பனாகும்
பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே. 20.

தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே. 21.

அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ
கரும்பு கோணிடில் கட்டியம் பாகுமாம்
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்
நரம்பு கோணிடில் நாமதற்கு என் செய்வோம்? 22.

அன்னையே அனைய தோழி அறந்தனை வளர்க்கும் மாதே
உன்னையோர் உண்மை கேட்பேன் உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையோ புணருவோர்கள் எனக்குமோர் இன்பம் நல்கிப்
பொன்னையும் கொடுத்துப் பாதப் போதினில் வீழ்வதேனோ? 23.

பொம்மெனப் பணைத்து விம்மிப் போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர் முலையினாளே கூறுவேன் ஒன்று கேண்மோ
செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் சிதற வேண்டி
நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே! 24.

பொன்னொரு மணி உண்டானால் புலைஞனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியி மணமும் செய்வார்
மன்னராய் இருந்த பேர்கள் வகைகெட்டுப் போவார் ஆகில்
பின்னையும் யாரோ என்று பேசுவார் ஏசுவாரே! 25.

வேதம் ஓதிய வேதியர்க்கு ஒர் மழை
நீதி மன்னர் நெறியனுக்கு ஓர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர் மழை
மாதம் மூன்று மழைஎனப் பெய்யுமே. 26.

அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை
புருடனைக் கொன்ற பூவையர்க்கு ஓர் மழை
வருடம் மூன்று மழையெனப் பெய்யுமே. 27.

திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க்கு ஈயாக் கைகள் இனிய சொல் கேளாக் காது
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத் தேகம்
இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லை தானே. 28.

தன்னுடலினுக்கு ஒன்று ஈந்தால் தக்கதோர் பலமதாகும்
மின்னியல் வேசிக்கு ஈந்தால் மெய்யிலே வியாதி ஆகும்
மன்னிய உறவுக்கு ஈந்தால் வருவது மயக்கமாகும்
அன்னிய பரத்துக்கு ஈந்தால் ஆருயிர்க்கு உதவி யாமே. 29.

படியின் அப்பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம்
பழி நமக்கென வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம்
கொடும் மதக் குவடென வளர்ந்திடு குஞ்சரத் தையும் நம்பலாம்
குலுங்கப் பேசி நகைத்திடும் சிறு குமரர் தம்மையும் நம்பலாம்
கடை இலக்கமும் எழுதிவிட்ட கணக்கர் தம்மையும் நம்பலாம்
காக்கை போல் விழி பார்த்திடும் குடி காணி யாளரை நம்பலாம்
நடை குலுக்கியும் முகம்மினுக்கியும் நகை நகைத்திடும் மாதரை
நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே. 30.

வண்டுகள் இருந்திடின் மதுவை உண்டிடும்
தண்டமிழ் இருந்திடின் சங்கம் சேர்ந்திடும்
குண்டுணி இருந்திடின் கோள்கள் மிஞ்சிடும்
பெண்டுகள் இருந்திடின் பெரிய சண்டையே. 31.

கற்புடை மாதர் கொங்கை கவரிமான் மயிரின் கற்றை
வெற்புறு வேங்கையுன் தோல் வீரன்கை வெய்ய கூர்வேல்
அற்பர்தம் பொருள்கள் தாமும் அவரவர் இறந்த பின்னே
பற்பலர் கொள்வார் இந்தப் பாரினில் உண்மை தானே. 32.

வீணர் பூண்டாலும் தங்கம் வெறும் பொய்யாம் மேற் பூச்சென்பார்
பூணுவார் தராப் பூண்டாலும் பொருந்திய தங்கம் என்பார்
காணவே பனைக் கீழாகப் பால் குடிக்கினும் கள்ளே என்பார்
மாணுலகத்தோர் புல்லர் வழங்குரை மெய் என்பாரே. 33.

ஓரியே மீன் உவந்து ஊன் இழந்தையோ
நாரியே கண்பிழை நாட்டில் இல்லையோ
பாரியே கணவனைப் பழுது செய்து நீ
நீரிலே இருப்பது நிலைமை அல்லவே. 34.

சம்புவே என்ன புத்தி சலந்தனில் மீனை நம்பி
வம்புறு வடத்தைப் போட்டு வானத்தைப் பார்ப்பதேனோ?
அம்புவி மாதே கேளாய்! அரசனை அகலவிட்டு
வம்பனைக் கைப்பிடித்தவாறு போல் ஆயிற்றன்றே. 35.

மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம்
காப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி
கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம்
ஆப்பிலா சகடுபோலே அழியுமென்று உரைக்கலாமே. 36.

பொன்னின் மணி கிண்கிணி சிலம்பொலி புலம்ப
மின்னு மணி மேகலைகள் மெல்லென ஒலிப்பச்
சின்னமலர் கொண்டு சில சேடியர்கள் சூழ
அன்னம் என அல்ல என வாமென உரைத்தார். 37.

கானலை நீரென்று எண்ணிக் கடுவெளி திரியும் மான்போல்
வானுறும் இலவு காத்த மதியிலாக் கிள்ளையே போல்
தேனினை உண்டு தும்பி தியங்கிய தகைமையே போல்
நானுனை அரசன் என்றெண்ணி நாளையும் போக்கினேனே. 38.

சங்கு முழங்கும் தமிழ்நாடன் தன்னை நினைத்த போதெல்லாம்
பொங்கு கடலும் உறங்காது பொழுதோர் நாளும் விடியாது
திங்கள் உறங்கும் புள் உறங்கும் தென்றல் உறங்கும் சிலகாலம்
எங்கும் உறங்கும் இராக்காலம் என் கண்ணிரண்டும் உறங்காதே. 39.

அரவினை ஆட்டுவாரும் அரும் களிறு ஊட்டுவாரும்
இரவினில் தனிப்போவாரும் ஏரிநீர் நீந்துவாரும்
விரைசெறி குழலியான வேசையை விரும்புவாரும்
அரசனைப் பகைத்திட்டாரும் ஆருயிர் இழப்பார் தாமே. 40.

வாழ்வது வந்த போது மனம் தனில் மகிழ வேண்டாம்
தாழ்வது வந்ததானால் தளர்வரோ? தக்கோர் மிக்க
ஊழ்வினை வந்ததானால் ஒருவரால் விலக்கப்போமோ?
ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டிலீரோ? 41.

பருப்பதங்கள் போல் நிறைந்திடு நவமணிப் பதங்களைக் கொடுத்தாலும்
விருப்பம் நீங்கிய கணவரைத் தழுவதல் வீணதாம் விரை ஆர்ந்த
குருக்கு சந்தனக் குழம்பினை அன்பொடு குளிர் தர அணிந்தாலும்
செருக்கு மிஞ்சிய அற்பர்தம் தோழமை செப்பவும் ஆகாதே. 42.

பெருத்திடு செல்வமாம் பிணிவந்து உற்றிடில்
உருத் தெரியாமலே ஒளி மழுங்கிடும்
மருந்து உளதோஎனில் வாகடத்து இலை
தரித்திரம் என்னும் ஓர் மருந்தில் தீருமே. 43.

அத்தியின் மலரும் வெள்ளை யாக்கைகொள் காக்கைதானும்
பித்தர்தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதம் தானும்
அத்தன் மால் பிரம்ம தேவனால் அளவிடப் பட்டாலும்
சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லை கண்டீர். 44.

சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழ்வார் புல்லர்
நல்லவர் விசாரியாமல் செய்வாரோ நரிசொல் கேட்டு
வல்லியம் பசுவும் கூடி மாண்டதோர் கதையைப் போலப்
புல்லியர் ஒருவராலே போகுமே யாவும் நாசம். 45.

கதலி வீரர் களத்திடை வையினும்
குதலை வாயில் குழவிகள் வையினும்
மதன லீலையின் மங்கையர் வையினும்
இதமுறச் செவிக்கு இன்பம் விளையுமே. 46.

புத்திமான் பலவான் வான் பலமுளான் புத்தி அற்றால்
எத்தனை விதத்தினாலும் இடரது வந்தே தீரும்
மற்றொரு சிங்கம் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே
உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலே. 47.

மானம் உள்ளோர்கள் தங்கள் மயிர் அறின் உயிர் வாழத
கானுறு கவரி மான்போல் கனம்பெறு புகழே பூண்பார்
மானம் ஒன்று இல்லார் தாமும் மழுங்கலாய்ச் சவங்கலாகி
ஈனமாம் கழுதைக்கு ஒப்பாய் இருப்பர் என்று உரைக்கலாமே. 48.

கழுதை கா எனக் கண்டு நின்றாடிய அலகை
தொழுது மீண்டும் அக்கழுதையைத் துதித்திட அதுதான்
பழுதிலா நமக்கு ஆர் நிகர் மெனப் பகர்தல்
முழுது மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல். 49.

ஆசாரம் செய்வார் ஆகில் அறிவொடு புகழும் உண்டாம்
ஆசாரம் நன்மை னால் அவனியில் தேவர் ஆவார்
ஆசாரம் செய்யாராகில் அறிவொடு புகழும் அற்றுப்
பேசார் போல் பேச்சுமாகிப் பிணியடு நரகில் வீழ்வார். 50.

செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிது பேணார்
சொல்வதை அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் பேணார்
வெல்வதே கருமம் அல்லால் வெம்பகை வலிதென்று எண்ணார்
வல்வினை விளைவும் பாரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர். 51.

யானையைச் சலந்தனில் இழுத்த அக்கரா
பூனையைக் கரைதனில் பிடிக்கப் போகுமோ?
தானையும் தலைவரும் தலம்விட்டு ஏகினால்
சேனையும் செல்வமும் தியங்கு வார்களே. 52.

கொண்டநற் கலைகளோடு குணம்இலாக் கோதைமாரைக்
கண்டு விண்டு இருப்பதல்லால் கனவிலும் புல்ல ஒண்ணாது
உண்டென மதுவை உண்ண ஒவியப் பூவில் வீழ்ந்த
வண்டினம் பட்டபாடு மனிதரும் படுவர் தாமே. 53.

மயில்குயில் செங்கால் அன்னம் வண்டுகண்ணாடி பன்றி
அயில் எயிற்று அரவு திங்கள் தவன் ஆழி கொக்கோடு
உயரும் விண் கமலப் பன்மூன்று உறுகுணமுடையோர் தம்மை
இயலுறு புவியோர் போற்றும் ஈசன் என்று எண்ணலாமே. 54.

தெருளிலாக் கலையினார் செருக்கும் ண்மையும்
பொருளிலா வறியர்தம் பொறி அடக்கமும்
அருளிலா அறிஞர்தம் மௌன நாசமும்
கருவிலா மங்கையர் கற்பும் ஒக்குமாம். 55.

மங்குல் அம்பதினாயிரம் யோசனை மயில்கண்டு நடமாடும்
தங்கும் ஆதவ னூறாயிரம் யோசனை தாமரை முகம் விள்ளும்
திங்கள் ஆதவற்கு இரட்டி யோசனையுறச் சிறந்திடும் அரக்காம்பல்
எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம் விட்டு அகலாரே. 56.

சந்திரன் இல்லா வானம் தாமரை இல்லாப் பொய்கை
மந்திரி இல்லா வேந்தன் மதகரி இல்லாச் சேனை
சுந்தரப் புலவர் இல்லாத் தொல்சபை சுதர்இல் வாழ்வு
தந்திகள் இல்லா வீணை தனம் இலா மங்கைபோலாம். 57.

குரைகடல் வறுமையும் குறத்தி உண்மையும்
நரை அற மருந்தை உண்டு இளமை நண்ணலும்
விரை செறி குழலினாள் வேசை ஆசையும்
அரையர் அன்பு அமைவது ஐந்தும் இல்லையே. 58.

முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும்
தடவரை முலைமாதே இத் தரணியில் உள்ளோர்க்கு எல்லாம்
மடவனை அடித்த கோலும் வலியனை அடிக்கும் கண்டாய். 59.

பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லை புண்ணியம் இல்லை என்றும்
மருவிய கீர்த்தி இல்லை மைந்தரில் பெருமை இல்லை
கருதிய கருமம் இல்லை கதிபெற வழியும் இல்லை
பெருநிலம் தனில் சஞ்சாரப் பிரேதமாய்த் திரிகுவாரே. 60.

தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றிச் சுடர் கொடாது
பாம்புக்கு பால்வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா
வேம்புக்கு தேன்வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா
தாம்பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார். 61.

கல்லாத மாந்தரையும் கடுங்கோபத் துரைகளையும் காலம் தேர்ந்து
சொல்லாத அமைச்சரையும் துயர்க்கு உதவாத் தேவரையும் சுருதி நூலில்
வல்லா அந்தணர் தமையும் கொண்டவனோடு எந்நாளும் வலது பேசி
நல்லார் போல் அருகிருக்கும் மனைவியையும் ஒருநாளும் நம்பொணாதே. 62.

தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்தபேரை
மீளவே கொடுக்கினாலே வெய்துறக் கொட்டலேபோல்
ஏளனம் பேசித் தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும்
கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்றமாமே. 63.

அறிவுளோர் தமக்கு நாளும் அரசரும் தொழுது வாழ்வார்
நிறையடு புவியில் உள்ளோர் நேசமாய் வணக்கம் செய்வார்
அறிவுளோர் தமக்கு யாதோர் அசடது வருமே ஆகில்
வெறியரென்று இகழார் என்றும் மேதினி உள்ளோர் தாமே. 64.

குரு உபதேசம் மாதர்கூடிய இன்பம் தன்பால்
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம்
அரிய மந்திரம் விசாரம் ஆண்மை இங்கிவைகள் எல்லாம்
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே. 65.

இடுக்கினால் வறுமையாகி ஏற்றவர்க்கு இசைந்த செல்வம்
கொடுப்பதே மிகவும் நன்று குற்றமே இன்றி வாழ்வார்
தடுத்ததை விலக்கினோர்க்குத் தக்கநோய் பிணிகளாகி
உடுக்கவே உடையும் இன்றி உண்சோறும் வெல்லமாமே. 66.

மெய்யதை சொல்வாராகில் விளங்கிடும் மேலும் நன்மை
வையகம் அதனைக் கொள்வார் மனிதரில் தேவர் ஆவார்
பொய்யதை சொல்வாராகில் போசனம் அற்பமாகும்
நொய்யர் இவர்கள் என்று நோக்கிடார் அறிஉள்ளோரே. 67.

தந்தை உரை தட்டினவன் தாய் உரை இகழ்ந்தோன்
அந்தமுறு தேசிகர் தம் ஆணையை மறந்தோன்
சந்தமுறு வேத நெறி தாண்டின இந்நால்வர்
செந்தழலின் வாயினிடைச் சேர்வது மெய் கண்டீர். 68.

நாரிகள் வழக்கதாயின் நடு அறிந்துரைத்தார் சுத்தர்
ஏரிபோல் பெருகி மண்மேல் இருகணும் விளங்கி வாழ்வார்
ஓரமே சொல்வாராகில் ஓங்கிய கிளையும் மாண்டு
தீரவே கண்கள் இரண்டும் தெரியாது போவர்தாமே. 69.

துப்புறச் சிவந்தவாயாள் தூய பஞ்சணையின் மீதே
ஒப்புறக் கணவனோடே ஓர்லீலை செய்யும் போது
கற்பகம் சேர்ந்த மார்பில் கனதனம் இரண்டும் தைத்தே
அப்புறம் உருவிற்று என்றே அங்கையால் தடவிப் பார்த்தாள். 70.

ஏரிநீர் நிறைந்த போது அங்கு இருந்தன பட்சி எல்லாம்
மாரிநீர் மறுத்த போதப் பறவை அங்கிருப்பதுண்டோ?
பாரினை ஆளும் வேந்தன் பட்சமும் மறந்தபோதே
யாருமே நிலையில்லாமல் அவரவர் ஏகுவாரே. 71.

மண்ணார் சட்டி கரத்து ஏந்தி மரநாய் கௌவும் காலினராய்
அண்ணார்ந் தேங்கி இருப்பாரை அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா!
பண்ணார் மொழியார் பால் அடிசில் பைம்பொன் கலத்தில் பரிந்தூட்ட
உண்ணா நின்ற போது ஒருவர்க்கு உதவா மாந்தர் இவர்தாமே! 72.

மண்டலத்தோர்கள் செய்த பாவம் மன்னவரைச் சேரும்
திண்திறல் மன்னர் செய்தீங்கு மந்திரியைச் சேரும்
தொண்டர்கள் செய்த தோடம் தொடர்ந்து தம் குருவைச் சேரும்
கண்டுஅன மொழியாள் செய்த கன்மமும் கணவர்க் காமே. 73.

நற்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று
பொற்புடை மகளிரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று
பற்பலரோடு நன்னூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று
சொற்பெறும் இவைகள் மூன்றும் இம்மையில் சொர்க்கந் தானே. 74.

நிட்டையிலே இருந்து மனத் துறவடைந்த பெரியோர்கள் நிமலன் தாளைக்
கிட்டையிலே தொடுத்து முத்தி பெருமளவும் பெரிய சுகம் கிடைக்கும் காம
வெட்டையிலே மதிமயங்கிச் சிறுவருக்கு மணம்பேசி விரும்பித் தாலி
கட்டையிலே தொடுத்து நடுக் கட்டையிலே கிடத்துமட்டும் கவலை தானே. 75.

அன்னம் பழித்தநடை லம் பழித்த விழி அமுதம் பழித்த மொழிகள்
பொன்னம் பெருத்த முலை கன்னங் கறுத்த குழல் சின்னஞ் சிறுத்த இடை பெண்
என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்
சின்னஞ் சிறுக்கியவள் வில்லங்கம் இட்டபடி தெய்வங் களுக்கு அபயமே! 76.

ஆஈன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாஈரம் போகுதென்று விதை கொண்டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
கோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே. 77.

தாய் பகை பிறர் நட்பாகில் தந்தை கட்காரன் கில்
மாய் பகை மனைவி யாகும் மாஅழகு உற்றபோது
பேய் பகை பிள்ளை தானும் பெருமைநூல் கல்லா விட்டால்
சேய் பகை ஒருவர்க்காகும் என்றனர் தெளிந்த நூலோர். 78.

நிலை தளர்ந்திட்ட போது நீள்நிலத்து உறவுமில்லை
சல மிருந்து அகன்றபோது தாமரைக்கு அருக்கன் கூற்றம்
பல வனம் எரியும்போது பற்று தீக்கு உறவாம் காற்று
மெலிவது விளக்கே கில் மீண்டும் அக் காற்றே கூற்றம். 79.

மடுத்த பாவாணர் தக்கோர் மறையவர் இரப்போர்க்கு எல்லாம்
கொடுத்து யார் வறுமை உற்றார் கொடாது வாழ்ந்தவர் ஆர் மண்மேல்
எடுத்து நாடாண்ட நீரும் எடாத காட்டகத்து நீரும்
அடுத்த கோடையிலே வற்றி அல்லதில் பெருகும்தானே. 80.

உணங்கி ஒருகால் முடமாகி ஒரு கண்இன்றிச் செவி இழந்து
வணங்கு நெடுவால் அறுப்பு உண்டு மன்னு முதுகில் வயிறு ஒட்டி
அணங்கு நலிய மூப்பெய்தி அகல் வாயோடு கழுத்தேந்திச்
சுணங்கன் முடுவல் பின்சென்றால் யாரைக் காமன் துயர் செய்யான்? 81.

கன்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக் காகத்தை என்செயப் படைத்தாய்?
துன்மதி வணிகர் தங்களைப் படைத்துச் சோரரை என்செயப் படைத்தாய்?
வன்மன வடுகர் தங்களைப் படைத்து வானரம் என்செயப் படைத்தாய்?
நன்மனை தோறும் பெண்களைப் படைத்து நமனையும் என்செயப் படைத்தனையே? 82.

உண்ணல் பூச்சூடல் நெஞ்சு உவத்தல் ஒப்பனை
பண்ணல் எல்லாம் அவர் பார்க்கவே அன்றோ?
அண்ணல் தம் பிரிவினை அறிந்தும் தோழிநீ
மண்ண வந்தனை இது மடமை ஆகுமால். 83.

கோளரி அடர்ந்த காட்டில் குறங்கில் வைத்து அமுதம் ஊட்டித்
தோளினில் தூக்கி வைத்துச் சுமந்து பேறா வளர்ந்த
ஆளனைக் கிணற்றில் தள்ளி அழகிலா முடவர் சேர்ந்தாள்
காள நேர் கண்ணினாரைக் கனவிலும் நம்பொணாதே. 84.

சேய் கொண்டாரும் கமலச் செம்மலுடனே அரவப்
பாய் கொண்டாரும் பணியும் பட்டீசுரத் தானே
நோய் கொண்டாலும் கொளலாம் நூறுவயது ஆமளவும்
பேய் கொண்டாலும் கொளலாம் பெண்கொள்ளல் ஆகாதே. 85.

நானம் என்பது மணம் கமழ் பொருளது நாவில் உண்பதுவோ சொல்?
ஊன் உணங்குவோய் மடந்தையர் அணிவதே உயர்முலைத் தலைக் கோட்டில்
ஆனது அங்கது பூசினால் வீங்கவது அமையுமோ எனக் கேட்க
கான வேட்டுவச் சேரி விட்டு அகன்றனர் கடி கமழ் விலை வாணர். 86.

கொண்டு விண்படர் கருடன் வாய்க் கொடுவரி நாகம்
விண்ட நாகத்தின் வாயினில் வெகுண்ட வன்தேரை
மண்டு தேரையின் வாயினில் அகப்படு வண்டு
வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம். 87.

கற்பூரப் பாத்தி கட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்
சொற் போதையருக்கு அறிவுஇங்கு இனிதாக வருமெனவே சொல்லி னாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும் தானே. 88.

தண்டுலாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முகத்தருகு ஏந்தினாள்
கெண்டை கெண்டை எனக்கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள். 89.

மருவு சந்தனக் குழம்பொடு நறுஞ்சுவை நலம்பெற அணிந்தாலும்
சருவ சந்தேக மனமுள மாதரைத் தழுவலும் காதே
பருவதங்கள் போல் பலபல நவமணிப் பைம்பொனை ஈந்தாலும்
கெருவம் மிஞ்சிய மானிடர் தோழமை கிட்டலும் ஆகாதே. 90.

நிலைத்தலை நீரில் மூழ்கி நின்றவள் தன்னை நேரே
குலைத்தலை மஞ்ஞை கண்டு கூ எனக் காவில்ஏக
முலைத்தலை அதனைக் கண்டு மும்மதக் கரிவந்துற்ற
தலைத்தலைச் சிங்கம் என்று அக்களிறு கண்டு ஏகிற்றம்மா. 91.

கரி ஒரு திங்கள் ஆறு கானவன் மூன்றுநாளும்
இரிதலைப் புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈதென்று
விரிதலை வேடன் கையில் வில்குதை நரம்பைக் கவ்வி
நரியனார் பட்ட பாடு நாளையே படுவர் மாதோ. 92.

பூதலத்தில் மானிடராய்ப் பிறப்பது அரிதெனப் புகல்வர் பிறந்தோர் தாமும்
ஆதிமறை நூலின் மறைஅருள் கீர்த்தியாம் தலங்கள் அன்பாய்ச் சென்று
நீதி வழுவாத வகை வழக்குரைத்து நல்லோரை நேசம் கொண்டு
காதவழி பேரில்லார் கழுதை எனப் பாரில் உள்ளோர் கருதுவாரே. 93.

ஆரம் பூண்ட மணிமார்பா அயோத்திக்கு அரசே அண்ணா கேள்
ஈரம் இருக்க மரம் இருக்க இலைகள் உதிர்ந்த வாரேது
வாரம் கொண்டு வழக் குரைத்து மண்மேல் நின்று வலிபேசி
ஓரம் சொன்ன குடியது போல் உதிர்ந்து கிடக்கும் தம்பியரே. 94.

வல்லியம் தனைக் கண்டு அஞ்சி மரம்தனில் ஏறும் வேடன்
கொல்லிய பசியைத் தீர்த்து ரட்சித்த குரங்கைக் கொன்றான்
நல்லவன் தனக்குச் செய்த நலமது மிக்கதாகும்
புல்லர்கள் தமக்குச் செய்தால் உயிர்தனைப் போக்குவாரே. 95.

தன்மானம் குலமானம் தன்னை வந்து அடைந்த உயிர் தங்கள் மானம்
என்மான மாகில் என்ன எல்லவரும் சரிஎனவே எண்ணும் போந்து
நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி அடைந்தோரைக் காக்கின்ற வள்ளல் என வழுத்தலாமே. 96.

தன்னைத் தான் புகழ்வோரும் தன்குலமே பெரி தெனவே தான் சொல்வோரும்
பொன்னைத் தான் தேடி அறம் புரியாமல் அவைகாத்துப் பொன்றி னோரும்
மின்னலைப் போல் மனையாளை வீட்டில் வைத்து வேசை சுகம் விரும்பு வோரும்
அன்னை பிதா பாவலரைப் பகைப் போரும் அறிவிலாக் கசடர் ஆமே! 97.

பெண்டுகள் சொல் கேட்கின்ற பேயரேனும் குணமூடப் பேடி லோபர்
முண்டைகளுக்கு இணையிலா முனைவீரர் புருடரென மொழியணாதே
உண்டுலகம் உதிப்பாருள் கீர்த்தியறம் இன்னதென உணர்வே இல்லார்
அண்டினவர் தமைக் கெடுப்பார் அழி வழிக்கே செய்தவர் அறிவு தானே. 98.

பொல்லார்க்கும் கல்வி வரில் கருவம் உண்டாம் அதனோரு பொருளும் சேர்ந்தால்
சொல்லாதும் சொல்ல வைக்கும் சொற் சென்றால் குடி கெடுக்கத் துணிவர் கண்டாய்
நல்லோர்க்கு இம்மூன்று குணம் உண்டாகில் அருளதிக ஞானம் உண்டாய்
எல்லார்க்கும் உபகாரராய் இருந்து பரகதியை எய்து வாரே. 99.

உந்தியின் சுழியின் கீழ் சேருரோமமாம் கரியநாகம்
சந்திரன் எனவே எண்ணித் தையலாள் முகத்தை நோக்க
மந்திர கிரிகள் விம்மி வழிமறித் திடுதல் கண்டு
சிந்துரக் கயற் கண்ணோடிச் செவிதனக்கு உரைத்ததம்மா. 100.

மாகமா மேடை மீதில் மங்கை நின்று உலாவக் கண்டு
ஏகமா மதி என்றெண்ணி இராகு வந்துற்ற போது
பாகுசேர் மொழியினாளும் பற்றியே பாதம் வாங்கத்
தோகைமா மயில் என்றெண்ணித் தொடர்ந்த ரா மீண்டதன்றே. 101.

சலதாரை வீழு நீரும் சாகரம் தன்னைச் சார்ந்தால்
குலம் என்றே கொள்வதல்லால் குரைகடல் வெறுத்ததுண்டோ?
புலவர்கள் சபையில் கூடிப் புன்கவியாளர் சார்ந்தால்
நலமென்றே கொள்வதல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம்? 102.

கார் எனும் குழல்கள் தப்பிக் கடுஞ்சிலை வாளிதப்பி
மேரு என வளர்ந்து நின்ற வேழத்தின் கோடு தப்பித்
தாருறு கரிய ரோமச் சங்கிலி வழியே சென்று
சீரிய தென வளர்ந்த செல்வன் அல்குலில் கைவைத்தான். 103.

உண்டதை ஒழிக்கும் வாசல் ஓரம் நீர் ஒழித்து மேலே
வண்டலும் அழுக்கும் சேரும் உதிரமும் மாறா வாசல்
உண்டதன் இருப்பைக் கண்டு பெருங்களி உள்ளம் கொண்டு
கண்டனர் இளைஞர் எல்லாம் கதிஎனக் கருதுவாரே. 104.

கரந்தொருவன் கணை தொடுக்க மேற்பறக்கும் இராசாளி கருத்தும் கண்டே
உரைந்து சிறு கானகத்தில் உயிர்ப் புறா பேடு தனக்கு உரைக்கும் காலை
விரைந்து விடம் தீண்ட உயிர் விடும் வேடன் கணையால் வல்லூறும் வீழ்ந்தது
தரன் செயலே வதல்லால் தன் செயலால் வதுண்டோ அறிவுள் ளோரே. 105.

கொல்உலை வேல் கயல்கண் கொவ்வை அம் கனிவாய்மாதே
நல்லணி மெய்யில் பூண்டு நாசிகாபரணி மீதில்
சொல்லதிற் குன்றி தேடிச் சூடியது என்னோ என்றான்
மெல்லியல் கண்ணும் வாயும் புதைத்தனள் வெண்முத்தென்றாள். 106.

அருகில் இவளருகில் இவளருகில் வர உருகும்
கரிய குழல் மேனியவள் கானமயில் சாயல்
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே. 107.

அலகு வாள்விழி யிழை நன் னுதல்
திலகம் கண்டெதிர் செஞ்சிலை மாரனும்
கலகமே செய்யும் கண் இதுவாம் என
மலர் அம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான். 108.

குரங்கு நின்று கூத்தாடிய கோலத்தைக் கண்டே
அரங்கு முன்புநாய் படிக் கொண்டாடிய அதுபோல்
கரங்கள் நீட்டியே பேசிய கசடரைக் கண்டு
சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் அறிவிலார் செய்கை. 109.

வில்லது வளைந்த தென்றும் வேழமது உறங்கிற்றென்னும்
வல்லியம் பதுங்கிற் றென்னும் வளர்கடா பிந்திற்றென்னும்
புல்லர் தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் பெரியோர் என்று
நல்ல தென்றிருக்க வேண்டா நஞ்செனக் கருதலாமே. 110.

சலந்தனில் கிடக்கும் ஆமை சலத்தை விட்டு அகன்ற போது
கொலைபுரி வேடன் கண்டு கூரையில் கொண்டு செல்ல
வலுவினால் அவனை வெல்ல வலுவொன்றும் இல்லை என்றே
கலை எலி காகம் செய்த கதை என விளம்புவாயே. 111.

நிலமதில் குணவான் தோன்றின் நீள் குடித்தனரும் வாழ்வார்
தல மெலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம்
நலமிலாக் கயவன் தோன்றின் குடித்தனம் தேசம் பாழாம்
குலமெலாம் பழுது செய்யும் கோடரிக் காம்பு நேராம். 112.

உயிரனை யானுடன் கலந்த உளவறிந்து ஈண்டு
எனை மணந்தோன் உடன்று இச் செய்கை
செயல் என என்று இலை மறைகாய் எனத்
தணவாது அவ்விரு வகையும் தீது என்று
அயல் விழியாய் மயல் பொது ஊழ்வலித்தினும்
பெண் மதி எனதுவும் ஊழின்
இயல் என வள்ளுவர் உரைத்தார் சான்று
நீ எனப் புகன்றேன் இன்புற்றானே. 113.

நட்பிடைக் குய்யம் வைத்தார் பிறர்மனை நலத்தைச் செய்வார்
கட்புடை காமத் தீயார் கன்னியை விலக்கினோரும்
அட்டுடன் அஞ்சுகின்றோர் ஆயுளும் கொண்டு நின்று
குட்ட நோய் நரகில் வீழ்ந்து குளிப்பவர் இவர்கள் கண்டாய். 114.

மதியிலா மறையோன் மன்னர் மடந்தையை வேட்கையாலே
ருதுவது காலந்தன்னில் தோடம் என்று உரைத்தே ஆற்றில்
புதுமையாய் எடுத்த போது பெட்டியில் புலி வாயாலே
அதிருடன் கடி உண்டு அன்றே அருநரகு அடைந்தான் மாதோ. 115.

மையது வல்லியம் வாழ் மலைகுகை தனில் புகுந்தே
ஐயமும் புலிக்குக் காட்டி அடவியில் துரத்தும் காலை
பையவே நரி கோளாலே படுபொருள் உணரப்பட்ட
வெய்ய அம் மிருகம் தானே கொன்றிட வீழ்ந்த்தன்றே. 116.

மங்கை கைகேய் சொற்கேட்டு மன்னர்புகழ் தசரதனும் மரணம் னான்
செங்கமலச் சீதை சொல்லை சீராமன் கேட்டவுடன் சென்றான் மான் பின்
தங்கையவள் சொற்கேட்ட இராவணனும் கிளையோடு தானும் மாண்டான்
நங்கையர் சொல் கேட்ப தெல்லாம் கேடுவரும் பேருலகோர் நகைப்பர் தாமே. 117.

ஆதியாம் இருவர் நட்புக்கு அவமதிப்புற்று அவர்க்குள்
சூதினால் கபடம் செய்து துணை பிரிந்திடுவது என்றால்
வேதியன் பவளவாயில் வேசைதாய் பச்சைநாவி
ஊதிய கதை போலாகி உறு நரகு எய்துவாரே. 118.

அருமையும் பெருமையும் தானும் அறிந்துடன் படுவர் தம்பால்
இருமையும் ஒருமையாகும் இன்புறற்கு ஏது உண்டாம்
பரிவு இலாச் சகுனி போலப் பண்பு கெட்டவர்கள் தம்மால்
ஒருமையின்ல் நரகம் எய்தும் அதுவே உயரும் மன்னோ. 119.

ஒருவனே இரண்டு யாக்கை ஊன்பொதியான நாற்றம்
உருவமும் புகழுமாகும் அதற்குள் நீ இன்பமுற்று
மருவிய யாக்கை இங்கே மாய்த்திடு மாற்றி யாக்கை
திறமதாய் உலகம் ஏத்தச் சிறந்து பின் நிற்குமன்றே. 120.

வேலியானது பயிர்தனை மேய்ந்திட விதித்தால்
காலனானவன் உயிர்தனைக் கவர்ந்திட நினைத்தால்யா
ஆலம் அன்னையர் பாலகர்க்கு அருத்துவ தானால்
மேலிது ஓர்ந்துடன் யார்கொலோ விலக்குவர் வேந்தே. 121.

அறம் கெடும் நிதியும் குன்றும் வியும் மாயும் காலன்
நிறம் கெடும் மதியும் போகி நீண்டதோர் நரகில் சேர்க்கும்
மறம் கெடும் மறையோர் மன்னர் வணிகர் நல் உழவோரென்னும்
குலம் கெடும் வேசை மாதர் குணங்களை விரும்பினோர்க்கே. 122.

அரவிந்த நண்பன் சுதன் தம்பிமைத்துனன் அண்ணன் கையில்
வரமுந்தி ஆயுதம் பூண்டவன் காணும்மற்று அங்கவனே
பரமன் திகிரியை ஏந்திய மைந்தன் பகைவன் வெற்பை
உரமன் றெடுத்தவன் மாற்றான் தன் சேவகன் ஒண்தொடியே. 123.

சங்கரன் தேவி தமையன் மனைவி தனக்கு மூத்தாள்
ஆங்கவள் ஏறிய வாகனம் காணிவள் மற்றங்கவளோ
கொங்கைகள் ஈரைந்து உடையவளாயிக் குவலயத்தில்
எங்கு திரியும் வையிரவர் ஊர்தி என்றே நினையே. 124.

இந்திர பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும்
மந்திர நிலைகள் பேர மறுகயல் வறுமையாகும்
சந்திரன் கதிரோன் சாயும் தரணியில் தேசு மாளும்
அந்தணர் கருமம் குன்றின் யாவரே வாழ்வர் மண்ணில்? 125.

என் அனைக் கன்று முத்தனைக் குனிக்கும் இறையனை அனைக்குமே அன்று
மன்னனுக்கு அன்று பிள்ளைக்கு உதவா அன்பினால் வருந்தி வாடுவனோ
முன்னைக் கொன்று பின்னனைப் புரந்த முதுபகை வன்பிதா உறாமல்
கன்னனைக் கொன்று விசயனைப் காத்த கவத்துவ இராம கிருட்டினனே. 126.

பண்புளருக் கோர் பறவை பாவத்திற் கோர் இலக்கம்
நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி - திண்புவியை
ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க் கரவம்
நீள்வாகன நன் னிலம். 127.

சிறுவன் அனை பயறு செந்நெல் கடுகு
மறி திகிரி வண்டு மணி நூல் பொறியரவம்
வெற்றேறு புள் அன்னம் வேதன் அரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி. 128.

சிரம் பார்த்தான் ஈசன் அயன் தேவி தனைப் பார்த்தான்
கரம் பார்த்தான் செங்கமலக் கண்ணன் - உரஞ்சேர்
மலை வளைத்த திண்புயத்து வண்ணான் சீராமன்
கலை வெளுத்த நேர்த்திதனைக் கண்டு. 129.

கரிஎன்று பொன்மிகும்பை ஏறக் கற்றவர் சூழ்ந்து தொழ
எரி என்னும் செல்வன் துலாத்தினில் ஏற இருண்ட மஞ்சு
சொரிகின்ற நாகமின் சோற்றினிலேறித் தொடர்ந்து வர
நரி ஒன்று சொந்தக் கனலேறி வந்தது நங்களத்தே. 130.

ஒரு பாதி மால் கொள மற்று ஒரு பாதி உமையவள் கொண்டு
இரு பாதி யாலும் இறந்தான் புராரி இரு நிதியோ
பெருவாரிதியில் பிறைவானில் சர்ப்பம் பிலத்தில் கற்ப
தருவான போச கொடை உன்கை ஓடு என்கை தந்தனனே. 131.

கம்பமத கடகளிற்றான் தில்லை வாழும்
கணபதிதன் பெருவயிற்றைக் கண்டு வாடி
உம்பர் எலாம் விழித்திருந்தார் அயில்வேல் செங்கை
உடைய அறுமுகவனும் கண்ணீர் ஆறானான்
பம்பு சுடர்க் கண்ணனுமோ நஞ்சுண்டான் மால்
பயம் அடைந்தான் உமையும் உடல் பாதியானாள்
அம்புவியைப் படைத்திடுதல் அவமதே என்று
அயனும் அன்னம் இறங்காமல் அலைகின்றானே. 132.

காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம்
காமமே தரித்திரங்கள் அனைத்தையும் புகட்டி வைக்கும் கடாரம்
காமமே பரகதிக்குச் செல்லாமல் வழி அடைக்கும் கபாடம்
காமமே அனைவரையும் பகையாக்கிக் கழுத்தரியும் கத்திதானே. 133.

தடாரி தண்ணுமை பேரிகை சல்லரி இடக்கை
கடாக மெங்கணும் அதிர்ந்திட ஒலித்திடக் காணல்
விடாத நாண் அகன் றன்னிய புருடனை விழைந்தே
அடாது செய்த மங்கையர் வசை ஒலித்தல் போலாமே. 134.

தண்டுல மிளகின் தூள் புளி உப்பு தாலளிதம் பாத்திரம் எதேஷ்டம்
தாம்புநீர் தோற்றம் ஊன்று கோல் ஆடை சக்கி முக்கிக் கை ராந்தல்
கண்டகம் காண்பான் பூசை முஸ்தீபு கற்குடை ஏவல் சிற்றுண்டி
கம்பளி ஊசி நூல் எழுத்தாணி கரண்டகம் கண்ட மேல் தங்கி
துண்டம் ஊறியகாய் கரண்டி நல்லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி
சொல்லிய எல்லாம் குறைவறத் திருத்தித் தொகுத்துப் பல்வகையின் இனிதமைத்துப்
பெண்டுகள் துணையோடு எய்த வாகனனாய்ப் பெருநிலை நீர் நிழல் விறகு
பிரஜையும் தங்கும் இடம் சமைத்துண்டு புறப்படல் யாத்திரைக்கு அழகே. 135.

 


 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home