"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF >குமரகுருபரர் அருளிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
kumara kuruparar's meenakshiammai pillai thamiz குமரகுருபரர் அருளிய
|
Etext Preparation (input) : Mrs. Vijaya Mallikarjunan, Blacksburg, Virginia, U.S.A.
Etext Preparation (proof-reading) : Mr. Anbumani Subramanian, Blacksburg, Virginia, U.S.A.
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan
� Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
காப்பு
விநாயக வணக்கம்
கார்கொண்ட கவுண்மதக் கடைவெள்ள முங்கட்
கடைக்கடைக் கனலு மெல்லை
கடவாது தடவுக் குழைச்செவி முகந்தெறி
கடைக்கா றிட்ட வெங்கோன்
போர்கொண்ட வெண்டோ ட்பொலன்குவடு பொதியும்வெண்
பொடிதுடி யடித்து வைத்துப்
புழுதியாட் டயராவொ ரயிராவ ணத்துலவு
பொற்களிற் றைத்து திப்பாந்
தார்கொண்ட மதிமுடி யொருத்தன் றிருக்கண்மலர்
சாத்தக் கிளர்ந்து பொங்கித்
தவழுமிள வெயிலுமழ நிலவுமள வளவலாற்
றண்ணென்று வெச்சென்று பொன்
வார்கொண்ட டணிந்தமுலை மலைவல்லி கர்ப்பூர
வல்லியபி ராம வல்லி
மாணிக்க வல்லிமர கதவல்லி யபிடேக
வல்லி சொற் றமிழ் தழையவே.
9-வது நீராடற் பருவம்
வளையாடு வண்கைப் பொலன்சங் கொடும்பொங்கு
மறிதிரைச் சங்கொலிட
மதரரிக் கட்கயல் வரிக்கய லொடும்புரள
மகரந்த முண்டுவண்டின்
கிளையொடு நின்றிருக் கேசபா சத்தினொடு
கிளர்சைவ லக்கொத்தெழக்
கிடையாத புதுவிருந் தெதிர்கொண்டு தத்தமிற்
கேளிர்க டழீஇக்கொண்டெனத்
தளையொடு கரையடிச் சிறுகட் பெருங்கைத்
தடக்களி றெடுத்து மற்றத்
தவளக் களிற்றினொடு முட்டவிட் டெட்டுமத
தந்தியும் பந்தடித்து
விளையாடும் வையைத் தடந்துறை குடைந்துபுது
வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவர்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
வெள்ளநீ ராடியருளே. (1)
நிரைபொங் கிடுஞ்செங்கை வெள்வளை களிப்பநகை
நிலவுவிரி பவளம்வெளிற
நீலக் கருங்குவளை செங்குவளை பூப்பவற
னெறிகுழற் கற்றை சரியத்
திரைபொங்கு தண்ணந் துறைகுடைந் தாடுவ
செழுந்தரங் கக்கங்கைநுண்
சிறுதிவலை யாப்பொங்கு மானந்த மாக்கட
றிளைத்தாடு கின்றதேய்ப்பக்
கரைபொங்கு மறிதிரைக் கையாற் றடம்பணைக்
கழனியிற் கன்னியாமுலைக்
களபக் குழம்பைக் கரைத்துவிட் டள்ளற்
கருஞ்சேறு செஞ்சேறதாய்
விரைபொங் கிடத்துங்க வேகவதி பொங்குபுது
வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
வெள்ளநீ ராடியருளே. (2)
பண்ணாறு கிளிமொழிப் பாவைநின் றிருமேனி
பாசொளி விரிப்ப வந்தண்
பவளக் கொடிக்காமர் பச்சிளங் கொடியதாய்ப்
பருமுத்த மரகதமாய்த்
தண்ணாறு மல்லற் றுறைச்சிறை யனங்களி
தழைக்குங் கலாமஞ்ஞைபாய்ச்
சகலமுந் நின்றிருச் சொருபமென் றோலிடுஞ்
சதுமறைப் பொருள் வெளியிடக்
கண்ணாறு குழலியர் குடக்கொங்கை பொங்குசெங்
களபமுங் கத்தூரியும்
கர்ப்புரமு மொக்கக் கரைத்தோடி வாணியுங்
காளிந்தி யுங்கங்கையாம்
விண்ணாறு மளவளாய் விளையாடு வையைபுது
வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
வெள்ளநீ ராடியருளே. (3)
தூங்குசிறை யறுகா லுறங்குகுழ னின்றுணைத்
தோழியர்கண் மெற்குங்குமந்
தோயும் பனித்துறைச் சிவிறவீ சக்குறுந்
துளியெம் மருங்குமோடி
வாங்குமலை வில்லிமார் விண்ணுறு நனைந்தவர்
வனைந்திடு திகம்பரஞ் செவ்
வண்ணமாச் செய்வதச் செவ்வான வண்ணரொடு
மஞ்சள்விளை யாடலேய்ப்பத்
தேங்குமலை யருவிநெடு நீத்தது மாசுணத்
திரள்புறஞ் சுற்றியீர்ப்பச்
சினவேழ மொன்றொரு சுழிச்சுழலன் மந்தரந்
திரைகடன் மதித்தன்மானும்
வீங்குபுனல் வையைத்தடந்துறை குடைந்துபுது
வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவர்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
வெள்ளநீ ராடியருளே. (4)
துளிக்கும் பனித்திவலை சிதறக் குடைந்தாடு
துறையிற் றுறைத்தமிழொடும்
தொன்மறை தெளிக்குங் கலைக்கொடி யெனுந்துணைத்
தோழீமூழ் கிப்புனன்மடுத்
தொளிக்கும் பதத்துமற் றவளென வனப்பேடை
யோடிப் பிடிப்பதம்மை
யொண்பரி புரத்தொனியு மடநடையும் வௌவின
துணர்ந்துபின் றொடர்வதேய்ப்ப
நெளிக்குந் தரங்கத் தடங்கங்கை யுடனொட்டி
நித்திலப் பந்தாடவும்
நிரைமணித் திரளின் கழங்காட வுந்தன்
னெடுத்திரைக் கையெடுத்து
விளிக்கும் பெருந்தண் டுறைக்கடவுள் வையைநெடு
வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவர்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
வெள்ளநீ ராடியருளே. (5)
வேறு
துங்க முலைப்பொற் குடங்கொண்டு
தூநீர்நீந்தி விளையாடுந்
துணைச்சே டியர்கண் மேற்பசும்பொற்
சுண்ண மெறிய வரச்சேந்த
அங்கண் விசும்பி னின்குழற்காட்
டறுகாற் கரும்ப ரெழுந்தார்ப்ப
தையன் றிருமே னியலம்மை
யருட்கட் சுரும்பார்த் தெழன்மானச்
செங்க ணிளைஞர் களிர்காமத்
தீமுண் டிடக்கண் டிளமகளிர்
செழுமென் குழற்கூட் டகிற்புகையாற்
றிரள்காய்க் கதலி பழுத்துநறை
பொங்கு மதுரைப் பெருமாட்டி
புதுநீ ராடி யருளுகவே
பொருநைத் துறைவன் பொற்பாவாய்
புதுநீ ராடி யருளூகவே. (6)
இழியும் புனற்றண் டுறைமுன்றி
லிதுவெம் பெருமான் மண்சுமந்த
இடமென் றலர்வெண் கமலப்பெண்
ணிசைப்பக் கசிந்துள் ளுருகியிரு
விழியுஞ் சிவப்பவானந்த
வெள்ளம்பொழிந்து நின்றனையால்
மீண்டும் பெருக விடுத்தவர்கோர்
வேலை யிடுதன் மிகையன்றே
பிழியு நறைக்கற் பகமலர்ந்த
பிரச மலர்பூந் துகண்மூழ்கும்
பிறைக்கோட் டயிரா வதங்கூந்தற்
பிடியோ டாடத் தேனருவி
பொழியும் பொழிற்கூ டலிற்பொலிவாய்
புதுநீ ராடி யருளுகவே
பொருநைத் துறைவன் பொற்பாவாய்
புதுநீ ராடி யருளூகவே. (7)
மறிக்குந் திரைத்தண் புனல்வையை
வண்ட லிடுமண் கூடைகட்டி
வாரிச் சுமந்தோர்க் கம்மைதுணை
மணிப்பொற் குடத்திற் கரைத்தூற்றும்
வெறிக்குங் குமச்சே றெக்கரிடும்
ிரைப்பூந் துறைமண் போலொருத்தி
வெண்பிட் டிடவு மடித்தொருவன்
வேலை கொளவும் வேண்டுமெனக்
குறிக்கு மிடத்திற் றடந்தூநீர்
குடையப் பெறினக் கங்கைதிருக்
கோடீ ரத்துக் குடியிருப்புங்
கூடா போலும் பொலன்குவட்டுப்
பொறிக்குஞ் சுறவக் கொடியுயர்ததாய்
புதுநீ ராடி யருளுகவே
பொருநைத் துறைவன் பொற்பாவாய்
புதுநீ ராடி யருளூகவே. (8)
வேறு
சொற்கொடி யோடு மலர்க்கொடி கொய்து
தொடுத்த விரைத்தொடையும்
சுந்தரி தீட்டிய சிந்துர மும்மிரு
துங்கக் கொங்கைகளின்
விற்கொடி கோட்டிய குங்கும முங்குடை
வெள்ளங் கொள்ளைகொள
வெளியே கண்டுநின் வடிவழ கையன்
விழிக்கு விருந்து செய
விற்கொடி யோடு கயற்கொடி வீர
னெடுத்த கருப்புவிலும்
இந்திர தனுவும் வணங்க வணங்கு
மிணைப்புரு வக்கொடிசேர்
பொற்கொடி யிமய மடக்கொடி வையைப்
புதுநீ ராடுகவே
பொருநைத் துறையொடு குமரித் துறையவள்
புதுநீ ராடுகவே. (9)
கொள்ளைவெ ளருவி படிந்திடு மிமயக்
கூந்தன் மடப்பிடிபோல்
கொற்கைத் துறையிற் சிறைவிரி யப்புனல்
குடையு மனப்பெடைபோல்
தெள்ளமு தக்கட னடுவிற் றோன்று
செழுங்கம லக்குயில்போல்
தெய்வக் கங்கைத் திரையூ டெழுமொரு
செம்பவ ளக்கொடிபோல்
கள்ளவிழ் கோதையர் குழலிற் குழலிசை
கற்றுப் பொற்றருவிற்
களிநற வுண்ட மடப்பெடையோடு
கலந்து முயங்கிவரிப்
புள்ளுறை பூம்பொழின் மதுரைத் துரைமகள்
புதுநீ ராடுகவே
பொருநைத் துறையொடு குமரித் துறையவள்
புதுநீ ராடுகவே. (10)
நீராடற் பருவம் முற்றிற்று