நரி விருத்தம்
- திருத்தக்க தேவர்
nari viruttam tiruttakka tEvar
Acknowledgements: Etext - Preperation,
input-keying, Proof reading, *.rtf, Web versions in TSCII and
Unicode N D LogaSundaram and his sister Ms.N D Rani-Chennai. PDF
version : Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
� Project Madurai 1998 - 2009. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of Tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are available at
the website You are welcome to freely distribute this file, provided this header
page is kept intact
திருத்தக்க தேவர் நரி விருத்தம் ஓர் குறு அறிமுகம் இச்சிறுநூலின் ஆசிரியராம் திருத்தக்க தேவர் சீவகசிந்தாமணி
பெருங்காவியத்தை இயற்றிவர். சமணசமயத்தினர். அம்மரபினோர் வழங்கும் வரலாற்றுப்படி
இவ்வாசிரியர் தம் காலத்தில் "சமணர் நீதிநூல்கள் மட்டுமே இயற்ற வல்லார் நாட்டு மக்கள்
யாவரும் நாளும் உழலும் அகப்பொருள் எனும் போகப்பொருள் பற்றி பாடஇயலார்" எனும் கருத்து
நிலவ இவர் தாம் நல்லதோர் நீண்ட காவியம் அப்போருள் கொண்டு பாட துணிந்து தன் மூத்த
ஆசிரியர் பெரியேர் பால் சென்று ஆணைகேட்க அவர்கள் "முதலில் ஓர் நூலில் தன்திறன்
காட்டுக" என திருத்தக்க தேவரும் இந் 'நரிவிருத்தம்' எனும் சிறு நூலை இயற்றி ஆணை
பெற்று பலர் போற்ற சீவகசிந்தாமணி எனும் மாபெரும் காவியத்தைப் படைத்து புகழ்
பெற்றாராம்
இவ்வாசிரியர் காலம் சங்காலத்திற்கு அடுத்த சிலநூற்றாண்டுகள் என
வரலாற்றறிஞர் தேர்ந்துள்ளனர். 6 -7 ஆம் நூற்றாண்டின் இடைஆண்டுகளில் தமிழகத்தில் சமய
மறுமலர்ச்சி கொணர்ந்த பெரியோர் ஞானசம்பந்தரும் சமண்தழுவி மீண்ட அப்பர் அடிகளும்
ஆவர். அப்பர் தம் ஆதிபுராண திருக்குறுந்தொகை பாடலில் (5.100.7) "நரிவிருத்தம தாகுவர்
நாடரே" என குறிக்கின்றார்.சம்பந்தர்தம் ஆலவாய் பதிகம்(3.39.5) 'கிளிவிருத்தம்'
'எலிவிருத்தம்' என்பன சமணசமய நூற்கள் என குறிக்கின்றது. 11 ஆம் நூற்றாண்டு நூல்
'வீரசோழியத்தின்' உரை ஆசியர் 'பெருந்தேவனார்' இம்மூன்று விருத்தங்களுடன் 'குண்டலகேசி
விருத்தம்' என்பன 'விருத்தங்கள்' என குறித்துள்ளார். என 'நரிவிருத்தம்' தொன்மை வாய்ந்த
ஓர் நூலாம்
மேலும் சில விளக்ககுறிப்புகளை நூல் கடையில் காண்க
நரி விருத்தம்
திருத்தக்க தேவர்
அருகதேவர் காப்பும் பாயிரமும்
1
பால் நிலா *மதியம் மூன்றும் பன்மணி மிடைந்த பாங்காய்
மேல் நிலா விரித்த போலும் விளங்கு $முக் குடையின் நீழல்
தேனவாங் குளிர்கொள் பிண்டிச் செல்வன்சே அடியை வாழ்த்தி
ஊன் அவா நரியினார்தம் உரைசிறி(து) உரைக்க லுற்றேன்
* மதியம் மூன்றும்=இரவினில் ஒளிரும் திங்கள், வெள்ளி, வியாழன்
$முக்குடை=மூன்றடுக்குள்ள கவிக்கும் குடை-சமண தீர்த்தங்காரர்தம்
சிறப்பு மங்களச் சின்னம் % பிண்டிச் செல்வன்=அருகன்/பிண்டி=அசோகு
நூல்
2
சென்றுயர் மதியம் முட்டும் சிகரமால் வரைகள் சூழ்ந்த
குன்றியின் குறவர் வாழும் குறிச்சியுள் ளான் ஒரு வேடன்
கன்றிஊன் கிழங்கு காய்தேம் கனியடு தேன் கள் துய்ப்பான்
நன்றிஇல் செய்கை தம்மால் *நாரகர் தம்மோ(டு) ஒப்பான்
* நாரகர்=நரக கணங்கள்
3
வாங்கு*வில் கலப்ப வீசி வளைகடல் முகந்து வானம்
பாங்கினால் எழுந்து மின்னி படுமழைப் பொழிந்த காலைத்
தேங்கமழ் சிலம்பில் வாழும் குறவர்கள் நறவம் மாந்தி
வேங்கைபூ விரித்த நல்நாள் விளைவுநாள் செய்யல் (உ)ற்றார்
* வில் கலப்ப வீசி=வானவில் வளைந்து தோன்ற
4
கருவியால் அகிலொடு*(ஆ)ரம் கற்புரம் $திமிசு %நூறி
மருவி(ஆ)ங்கு குறவர் நீக்கி வளைத்தன காடுமாணப்
பரவியாங்(கு) அருவி வீழும் சாரல்பைந் திணையை வித்திக்
குருவியும் கிளியும் &ஓப்பி குறமகள் காக்கும் நாளால்
* ஆரம்=சந்தனமரம், $ திமிசு=மூங்கில், %நூறி=வெட்டி, & ஓப்பி=விரட்டி
5
விண்ணின்ஆர் வரையின் தாழ்வில் வேழ(ம்)ஒன்று தினையை மாந்த
நண்ணினான் குறவன் நண்ணி நனிவெகுண்(டு) ஓடிஏறி
மண்ணின்ஆர் புற்றின் உச்சி நின்று வார் சிலையை வாங்கிக்
கண்ணினால் அமர்ந்து நோக்கிக் களிற்றின் *மத் தகத்தின் எய்தான்
*மத்தகம்=நடுத்தலை-நுதல்-நெற்றி
6
விடுகணை நுதலில் *நுங்க வேழமோ வெகுண்டு மற்றோர்
தொடுகணை தொடாமல்அப் புற்றின்மேல் ஓடிஏறிப்
படுகணை உருவிப் பாய பாம்(பு) அழல் உமிழ்ந்து பொங்கிக்
கொடுவிலும் கணையும் வீழக் குறவனை தீண் டிட்டன்றே
* நுங்க=புதைய
7
நாகத்தைக் குறவன்வல்ல *பத்திரம் உருவிக் கொண்டு
பாகத்தைப் படுத்துவீழ்ந்தான் வீழ்தலின் பசியின்வாடி
மோகத்தால் சென்று கண்(டு) ஓர் முழைநரி முழுதும் தின்பான்
ஆகத்தான் அமைக என்ன வாய்த்தது வகுக்கும் அன்றே
* பத்திரம்=இலை வடிவ வாள்
8
களிறு அறுதிங் கட்குஆகும் கானவன் ஆகும் ஏழ்நாள்
ஒளிறு *வால் எயிற்று நாகம் உண்(டு)ஓர்நாள் இரையே என்றே
வெளிறிலாச் சிலையில் கோத்த நாரிவாய்க் குதையைக் கவ்விக்
குளிறு பேழ் வாயில் உய்ப்பக் கொடுவில் கோத் திட்டதன்றே
* வால்=வெண்மை
9
அத்தியும்* அரவில் விழ்ந்த வேடனும் வேடன் கொன்ற
துத்தி$மா நாகம் தானும் கிடப்ப விற் குதையைப் கவ்விச்
செத்(து) அவி நரியைப் போலச் செய் பொருள் ஈட்டுவார்கள்
சித்தம் வைத்(து) அறங்கள் செய்யார் தேர்ச்சிஇல் மாக்கள் அந்தோ
* அத்தி=யானை $துத்தி=படர்பொறி
10
சுற்றின்ஆர் வில்லின் விழ்ந்த சூழ்ச்சியில் நரியைப் போல
பற்றினார் பெரிதும் வவ்விப் பகுத்(து)உரை தீட்டினார்கள்
மற்றுணா வெறுக்கை தன்னை மன்னரும் பிறரும் வவ்வத்
தெற்றென வெளிறு நீரார் செல்வமும் இழப்பர் அன்றே
11
குடற்படுமுன் மேயக் கண்டு குறுநரி தின்று *மான்தேர்
கடற்படை இயக்கம் கண்டே கள்ளத்தால் கிடப்ப யாரும்
திடற்பட இன்மையாலே செவி கொய்வான் வால் கொய்வானாய்
உடல் புறம் பேர்த்த புன்தோல் உரித்திட்(டு)அங்(கு) ஒருவன் கொன்றான்
* மான்தேர்=குதிரைபூட்டியதேர்
12
நாட்டி நாம் உரைக்கப்பட்ட *முழைநரி அனைய நீரார்
ஈட்டிய பொருள்கள் தம்மை ஈதலும் துய்த்தல் தானும்
மாட்டிலர் அகழ்ந்து பார்க்கீழ் நிலம்கொள வைப்பர் மாதோ
பாட்டறு மக்கள் யாக்கை பயன் கொளக் கழிப்பர் அன்றே
* முழை=குழி
13
உண்டலோ(டு) உறங்கல் அச்சம் இணைதலும் ஒருங்கு நாடின்
மண்திணி உலகில் வாழும் மாக்களும் விலங்(கு) ஒப்பாமே
கண்ட(து) ஒன்(று) உண்டு நல்ல அறங்களை படித்த நீரார்
பண்டிதர் ஏனை மாக்கள் *பசுவினும் கடையர் அன்றே
*பசு=விலங்கு
14
கடிமணக் கோல மாதர் காளைக்குக் காட்டி மீள்வர்
நடுஇடப் பட்டதெல்லாம் நயப்புறக் கேட்டு *நாய்கன்
கெடிஎனக் கூறி ஆங்கே உணர்தலின் கேட்(டு)உவந்து
உடையதும் ஒருங்கு கொண்டே விடையமும் கடிவித்தானே
* நாய்கன்=பெருவணிகன்
15
இளமையும் வனப்பு நில்லா இன்பமும் நின்ற அல்ல
வளமையும் வலிதுநில்லா வாழ்வுநாள் நின்ற அல்ல
களிமகள்* நேசம் நில்லா கைப்பொருள் கள்வர் கொள்வர்
அளவிலா அறத்தின் மிக்க யாதும் மற்(று)இல்லை மாதோ
* களிமகள்=பரத்தை
16
நின்றனஅல்ல வாழ்நாள் நிதியமும் நின்ற அல்ல
சென்று சென்(று)அணுகி நாளும் *சினவரன் சொன்ன நன்னூல்
ஒன்றிய மனத்தராகி ஊதியம் கொள்வார் நல்லோர்
அன்றெனில் அதனைக்காணா ஆதனைப் போலும் அன்றே
* சினவரன்=அருகன்
17
கேத்திரம்* நல்லதாகில் கேடின்றி இட்ட வித்து
வாய்த்ததாய் எழுந்து நன்றாய் விளைதலை காட்டுமா போல்
ஏத்தரும் தவத்தின் மிக்க எல்லைஇல் குணத்தினார்க்கும்
பாத்திர தானம் ஈந்தால் பயனும் மற்று அதனைப் அற்றே
* கேத்திரம்=�க்ஷத்திரம்=நிலம்
18
ஓக்கத்தால் மதியம் முட்டும் உறுதவ நகரி முன்னே
யாக்கையால் அழகிதாய பொன் மயில்(ஒ)ன்(று) ஆடக்கண்டு
தோக்கையை$ பற்றலோடும் தொட்டவன் காய *நூக்கி
காக்கையாய் பறந்தே ஓட கவர்ந்து அங்கை நோர்ந்து விட்டான்
$ தோகை>>தோக்கை என யதுகை நோக்கித் திரிபு
* நூக்கி=தாழ்த்தி-அமுக்கி
19
நல்ல சூழ்ச்சியி னால் நரி எய்திய
அல்லல் கேட்டும் அறம் செய்கிலாதார்
செல்லல் எய்திய செம்பொனின் *அட்டிகை
புல்லிதாய்க் கொண்ட வாணிகன் போன்றதே
*அட்டிகை=அணைய(ஒட்டி)அணியும் பூண்
20
மெய்பொரு தேறலன் பற்றுள மேபுரிந்து
இப்பை யாக்கையில் தேர்ச்சிஇல் வாணிகன்
கப்பியாய்ப் பிறந்தான் என்னும் கட்டுரை
ஒப்ப நூல் உணர்ந்தார் சொலக் கேட்டுமால்
21
நரியினார் உரை கேட்பின் நல்லராய்ப்
புரி(வு)இல் நல்அறம் செய்வர் பொய்யாக் கொளீஇ
அரிவரம் மகன் அப்பொருள் வேட்கையால்
தெரிவித்திட்(டு) அறம் செய் பொருள் செப்பினான்
22
அஞ்சுமின் அதிலோபம் இல்லோர்களும்
செஞ்சுடர் நெடுவேல் துரியோதனன்
பஞ்சவர்க்கு மண்பாகம் கொடாமலே
துஞ்சினான் கிளை தன்னொடும் என்பவே
23
குட்டம்* நீந்து துறைபோம் வழிக் கூனியை
ஒட்டலன் புனல் உய்த்த அக் காகுத்தன்
திட்டை வேண்டிய தேர்ச்சிஇல் வாணிகன்
பட்ட தெய்வப் பற்றுளா தார்களே
* குட்டம்=சிறுகுளம்
24
நட்டவன் வந்து நல்அறம் காட்டவும்
ஒட்டலன் அதிலோபம் உடையப் பெரும்
செட்டி எய்தியது எய்தியே பொருள்
கிட்டி அம்மனத்தார்க் கிளர்ந்த(து) என்பவே
25
நாட்டு யாத்திரை செய்பவன் நல்மணி
காட்டி வைத்தவன் போய்வந்து கண்ணுறச்
சாட்டியம்* சொன்ன சத்தியக் கோடலும்
ஈட்டிவைத்(து) இழந்தான் பொருள் என்பவே
* சாட்டியம்=பகர் சான்று(சாட்சி)
26
விழுமின் பொற்கலம் பெற்(று)அங்(கு)ஓர் ஏழைபோய்க்
கழுவு வான் புகக் கைத்தலத்தின் இராது
அழுவநீர்ப் புகுந்து ஆழ்தலில் கெட்டு உயிர்
வழுவினார் கதை வைகலும் கேட்டுமால்
27
சந்தம் ஆயினும் தன் பழப் பிண்டியைக்
கந்தமாய் புளிநீரொடு காடியாய்ச்
சிந்தை ஒன்றிலன் உண்ட சிரேட்டியும்
அந்தம்இல் பொருள் காத்தவன் ஆயினான்
28
பொன்னின் ஏறுடைச் செட்டிஇல் போந்(து)இருள்
கன்னம் இட்(டு) அவன் அப்பொருள் கொண்டுபோய்த்
துன்னு தாபதன் தான்குறியில் கிடந்து
இன்னல் எய்தினான் என்பதும் கேட்டுமால்
29
நீடுநெறிச் செல்பவன் நாள்தொறும்
பாடிகண்டு ஓர் பாசனத்தால் நிறை
நாடி நாள்தோறும் நெய்தனக்கு ஈட்டிய
தாழிவெண்ணெய் தனதுரை கேட்டுமால்
30
அறத்தினால் பொருள் கேட்(டு) அது கொள்ளலன்
மறத்தினல் அரவிந்தனும் மாநிதித்
திறத்தினால் ஒன்றிலான் ஊன்உடைஉண்டு
இரப்பவும் நரகத்திடையே எய்தினான்
31
மானவேல் மன்னன் மாதவத்தார்க்(கு) உண்டி
தானம் ஈ உழி சத்திய பாமையும்
ஊனமில் மனத்தால் உடன் பட்டனளே
ஈனம்இல் குருவத் திடையே எய்தினாள்
32
கயக்(கு)*இல் கற்பில் $பார்ப்பனி போசனம்
வியக்கப்பட் டவள் வேதியற்கு இல்வழி
மயக்(கு)இல் மாதவத்தாற்(கு) உண்டி ஈந்தவள்
இயக்கி% ஆயினள் என்பதும் கேட்டுமால்
* கயக்(கு)=இங்குஅங்குஎன தாவுதல்
$பார்ப்பனி=இருபிறப்பாளர் மனையாள்
%இயக்கி=யக்ஷ�-உயர்நிலைகொண்டபெண்டிர்
33
சந்தனை என்னும் மாதோ *சாரணர்க்கண்டு முன்றில்
வந்தனை செய்து பேணி வரகுநீர்ப் புன்கை ஈந்தாள்
இந்திரன் உவந்து நோக்கி எல்லையில் செம்பொன் மாரி
அந்தரம் ஆர்ப்பச் சொரிந்(து) அர்ச்சித் தாரே
* சாரணர்=இறைவனடி(சரணம்)யே வாழ வழிநடைசெல்வோர்
34
பற்றுளம் என்(று) ஓர் பாவை பாவமும் பழியும் ஆக்கிச்
சிற்றுள *மிலேச்சர் பொல்லா நால்கதி நவையை நூக்கிச்
சேற்றுள வாய துன்பம் பயத்தலின் துறந்து போகிக்
கற்றறி உடைய மாந்தர் கடிந்தனர் அதனை அன்றே
*மிலேச்சர்=புல்லறிவுடை வேற்றினத்தார்
35
ஓங்கிய தவத்தின் மிக்க உறுதவர்க்(கு) உறுதி நாடின்
ஈங்(கு)இரண்(டு)அல்ல(து) இல்லை இசைகொடா நிற்ப மண்மேல்
பாங்கமை செல்வர் ஆகி பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே
36
இல்லறத்து இயல்பு குன்றா ஏந்துபூண் முலையினார் தோள்
புல்அற புல்லி* மண்மேல் பூஅண பொருந்தல் ஒன்றே
நல்அறத்(து)இறைவன் சொன்ன நால்கதி நவையை நீக்கும்
தொல் அறத்துணி(வு) இலாதார் துன்பத்தை துணிந்து நின்றார்
* புல்லி=தழுவி
37
ஈகை நல்தானம் ஈந்தார் இணைஇலாக் குருவின் மிக்க
போகத்தைக் கொடுத்து புத்தேள் உலகமும் கொடுத்து மண்மேல்
ஏக நல் இன்பம் ஆக்கி இறைவன் *நற்காட்சி ஈயும்
மேகத்து மின்னொ(டு) ஒக்கும் விழுச்செல்வம் மதிக்க வேண்டாம்
* நற்காட்சி=சமணர் கடைபிடி விரதம்
38
பற்றுளம் அகல நீக்கி பாசிழை பரவை அல்குல்
பொன்தொடி* மகளிர் தங்கள் புணர் முலை குவட்டின் வைகிச்
சுற்றத்தார் சுற்ற வாழ்தல் அன்(று)எனில் துறந்து போகி
நல்தவம் புரிகிலாதார் நடலைநோய்க் கடலில் வீழ்ந்தார்
* தொடி=தோளணி
39
கலைஎலாம் நினைத்தால் ஒன்றே கதிர்நகைப் பவழச்செவ்வாய்
அலைகுழல் *அமிர்தரோடு அகில்புகை அளாய சேக்கை
முலைஉற முயங்கல் ஒன்றோ முனிவளம் புகுதல் ஒன்றோ
புலை கொலை களவொ(டு) ஒன்றி பொழு(து) அவம் கழிப்பதன்றே
* அமிர்தர்=தெவிட்டாத இன்பம் பயக்க வல்ல மகளிர்
40
இரும் தவர்க்(கு) இசைவ(து)ஒன்றோ கரப்பில தாக வீழ்ந்து
கரும்தடம் கண்ணினார் தோள் கதிர்முலை *கரத்தல் ஒன்றோ
பொருந்திய சுற்றம் என்றும் $நிகளத்தைப் பரிந்து போகி
அரும்தவ முயற்சி இல்லார் ஆசையுள் அழுந்துகின்றார்
* கரத்தல்=ஒளித்தல், $ நிகளம்=சங்கிலி
41
உத்தம தானம் ஈந்தே ஒள்பொருள் உவந்து நல்ல
உத்தமர்க்(கு) உவந்து முன்னே உத்தம் தானம் ஈந்தே
உத்தம நெறிநின்றார்க்(கு) உவமை ஒன்று இல்லை ஆகும்
உத்தம குருவும்* புத்தேள் உலகமும் உடையார் அன்றே
* குருவும் புத்தேள் உலகமும்=சுவர்க்கமும் தேவர் நாடும்
42
மறு*விலா குணத்தின் மிக்க மறுஅறு தவத்தினார்க்கு
மறுஅறு தானம் ஈந்தே மறுவில போக பூமி
மறுவிலா பயன் கொடுத்து மறுவிலர் ஆவர் மாதோ
மறுவிலா மண்ணும் விண்ணும் மறுவின்றி விளங்க அன்றே
* மறு=குற்றம்-குறை
43
நடர் இடைப் பட்ட நாளும் நால்கதி நவையை நீக்கி
இடர் இடை உய்த்தல் இன்றி நீள் மனத் தொகுப்பினார்க்கும்
சுடர் கொள் பூம் பிண்டிநாதன் தொல்அறம் துணித்து முன்னே
படர் கள் பூ* சிந்தை வைத்தார் பவக்கடல் எல்லைக் காண்பார்
* படர்கள்பூ=(திருவடி)தாமரை
44
உள் அறப் பற்று நீக்கி உத்தம தானம் ஈந்தே
கள் அவிழ் கோதை மாதர் கதிர்முலை கரத்தல் ஒன்றோ
புள் உறை வந்து நீண்ட தவ வனம் பரிந்து போகி
எள்அற நோற்றல் செய்யார் இடும்பை நோய்க்கு இரைகள் ஆவார்
* கதிர்முலை= கூரியமார்பகம்
45
கோறல்* ஓம்புமின் கொன்றபின் ஊன் தடி
மேறல் ஓம்புமின் மெய்ப்பொருள் அல்லன
தேறல் ஓம்புமின் தீயவை யாவையும்
கூறல் ஓம்புமின் நற்குணம் அல்லன
* கோறல்=கொல்லுதல்
46
விட்டு நீங்குமின் பற்றுளம் இன்மையால்
கட்டும் எண்வினை கால்தளை கட்டலால்
ஒட்டி இன்உயிர் கோறல் பிறர்மனை
விட்டு நீங்குமின் கற்(று)அறிந் தீர் எலாம்
47
ஊக்கி ஒள் பொருள் எள் துணைத்(து) ஆயினும்
ஆக்கி நல்அறம் செய்பவர் பொய்க் கொளின்
நீக்கி நல்அறம் நிற்ப நிலா விடில்
தேக்குமேல் துணைச் செல்கதி இல்லையே
48
திருத்தம் ஒன்றலர் தேர்ச்சிஇலா நரி
விருத்தம்* கேட்டலும் மெய்என ஓர்த்(து)உள
கருத்தம் உற்றவர்க்(கு) ஈந்து அருள் செய்திரேல்
வருத்தம் ஒன்றில செல்கதி மாடெலாம்
* விருத்தம்=பழமைகதை
49
வரைத்த நாள் அன்றி வாழ்பவர் இன்மையால்
உரைத்த மாட்சி இலா நரி உற்ற கோள்
- - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - -
50
மற்று இம்மண்மிசை பற்றுளத்தால் கிளை
உற்ற மாந்தர் உரைபல உண்மையால்
குற்றமாய்க் கொண்டு *உலோபெனும் பாவியைக்
கற்ற மாந்தர் கடிந்தனர் என்பவே
* உலோபி=கஞ்சன்
நரிவிருத்தம் முற்றிற்று
(நூலுக்குப் புறத்தே காண்பது மிகைப் பாடல் போலும்)
ஆக்குவதே எனில் அறத்தை ஆக்குக
போக்குவதே எனில் வெகுளியைப் போக்குக
நோக்குவதே எனில் ஞானம் நோக்குக
காக்குவதே எனில் விரதம் காக்குக
நூல் விளக்கக் குறிப்புகள் சில
இது ஓர் நீதிக்கதைகளை புகல் நூல் மட்டும் அல்லாது நீதி உரைக்கும்
நூலாகவும் காண்கின்றது. முதல் 9 பாடல்களில் (2>>>10) காணும் ஓர் நரிபற்றிய கதை
வருமாறு. ஓர் வேடன் தன் புலத் தினை விளைவை மேய வந்த யானையைக் கொல்லுவதற்கு பாம்பு
வாழும் ஓர் புற்றின் மேலிருந்து கைவில் கொண்டு கணை எய்ய, பாம்பு அவனைத் தீண்ட,
அவன் கீழே வீழ்ந்த உடன், தன் கை வாளால் பாம்பினைத் துணிக்க, அப்பக்கம் வந்த
நரி ஒன்று இறந்து பட்ட 3 உடல்களைக் கண்டு, மகிழ்ந்து, இவை 6 திங்கள் 7 நாட்கள் 1
நாள் என இரை ஆகும் எனக் கணக்கிட்டுக் கொண்டே, இப்பெரு தொகுதியாலும் ஆசை அறாமல்,
விடமேறி இறந்த வேடன் கையில் பூட்டி இருந்தபடியே உள்ள
வில்/கணையிலிருக்கும் ஒன்றினுக்கு ஆசைப்பட்டு, அதனைக் கவ்வ, கணை தெறித்து தொண்டையில்
அகப்பட்டு அதுவும் இறந்தது. ஆக 'பேராசை கொள்ளல்' எனும் கருத்து
பஞ்சதந்திரக்கதைபோல் காண்கின்றது.
பாடல் 11 இல் வேறொரு நரியின் கதை காண்கின்றது பெருவழி இரை தேடி சென்ற
நரி ஒன்று ஓர் போர்ப் படை களம் இறங்க இருக்க கண்டு தான் இறந்தது போல்
கிடந் தால் மடிந்து விழ்ந்து இறந்த பற்பலர் உடல் பலநாள் இரையாகுமே என்றெண்ணி
கண்முடிக் கிடக்க அங்குவந்த ஓர்வீரன் இறந்துபட்ட நரியின்தோல் கேடயத்திற்கும்,
வாலும் செவியும் வேறு விதமாக பயன்படுமே என்று அந்நரியினைக் அறுத்தெடுக்க அது இறந்து
பட்டது. இதனிலும் அவ்வகை 'பேராசை' நீதியே காட்டப்பட்டது
பாடல்கள் 14(மணக்கோலப் பெண்டிர்), 18(மயிற்தோகை பறிப்பு),
19(வணிகன்-அட்டிகை), 20(கப்பியாய் பிறந்த வணிகன்), 21(அரிவரம் மகன்??), 22(துரியோதனன் மண்
கொடாதது) 23(கூனி-காகுத்தன்??), 24(அதிலோப செட்டி), 25(யாத்திரை-சாட்சி),
26(கழுவு பொற்கலம், தப்பியது) 27(புளிநீர்-காடி-சிரேட்டி), 28(தாபதன் செட்டிவீடு-கன்னம்),
29(தாழி வெண்ணெய்), 30(அரவிந்தன்??), 31(சத்தியபாமா??), 32(பார்பனி-இயக்கி ஆதல் ?),
33(சாந்தனை ?), 34(பாவை-பழி-மிலேச்சர்), என பல்வேறு நீதிகள் நுவலும் கதைகளை ஓர்இரு
சொற்களால் குறித்தலாலும் இக்காலத்து அவை வழக்கறுந்து பட்டமையாலும் விளங்காமல்
உள்ளன. வழங்கும் வரலாற்றுப்படி இந்நூல் ஆசிரியற்கு கன்னிமுயற்சி ஆதலால்
சொல்லாட்சி மரபு இலக்கியங்களை ஒட்டிச் செல்ல விழையும் புலமையும் நோக்கும் நன்கே
காட்டப் படுகின்றது. 36, 38, 39, 40 எனும் பாக்களில் சீவக சிந்தாமணி போல்
போகப்பொருள் பற்றி பாட விழைதலுக்கு முன்னோடியாக பெண்களின் அவயவ வருணனைகள்
முயற்சிகள் காணப்படுகின்றன. அறிமுகம், ஓர்சில சொற்களுக்கு பொருள், நூல் விளக்கக்
குறிப்பு-நூதலோகசுந்தரமுதலி
|