"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home >
Tamil Language & Literature > Project Madurai
>Index
of Etexts released by Project Madurai - Unicode & PDF >
" புது மெருகு" (சிறுகதைத் தொகுப்பு)
-
கி.வா.ஜகந்நாதன்
" புது மெருகு" (சிறுகதைத் தொகுப்பு)
முகவுரை பழைய நகைக்குப் புதிய மெருகு கொடுப்பது வழக்கம். நகையின் மதிப்பு எப்போதும் மாறாமல் இருந்தாலும் அதைக் கண்ணிலே படும்படி செய்வது மெருகு. இலக்கியங்களிலும் உரைகளிலும் இலைமறை காய் போலவும் வெளிப்படையாகவும் அரிய நிகழ்ச்சிகள் பல உள்ளன. அவற்றை இந்தக் காலத்துக்கு ஏற்ற தோரணையில் சிறுகதையைப் போல ஆக்கினால் சுவையாக இருக்கும் என்ற கருத்தினால் எழுதி வந்தவை இத்தொகுதியிலே காணும் வரலாறுகள். இத்துறையில் என் ஆசிரியப் பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் முன்பே வழி காட்டியிருக்கிறார்கள் என்பதைத் தமிழர் நன்கு அறிவார்கள். இதிலுள்ள வரலாறுகளை அப்படியே சரித்திரமாகக் கொள்ளல் கூடாது. சிறிய உருவத்திலே கண்ட மூலக்கருவைக் கற்பனை வண்ணம் கொண்டு பெரிது படுத்தியவையாதலால் இவை முழுச் சரித்திரமும் அல்ல; முழுக் கற்பனைக் கதைகளும் அல்ல. அவ்வப்போது கலைமகளிலும் பிற பத்திரிகைகளிலும் வெளியானவை இவை. கி.வா.ஜகந்நாதன்
தென்னாட்டிற்கு அகத்திய முனிவர் புறப்பட்டார் தாம் போகிற நாட்டிலே வாழ்வதற்கு அந்த நாட்டு மொழி தெரிய வேண்டாமா? சிவபெருமானிடத்திலே தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். போகிற இடத்தில் காடும் மலையும் அதிகமாக இருப்பதால் தமக்குத் தெரிந்தவர்கள் வேண்டும். 'குடியும் குடித்தனமு'மாக வாழ்வதற்கு வேண்டிய சௌகரியங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக அவர் ' கங்கையாரிடத்தில் காவிரியாரையும், யமதக்கினியாரிடத்தில் திருணதூமாக்கினியாரையும், புலத்தியனாரிடத்தில் உலோபமுத்திரையாரையும், துவாரகைக்குப் போய் பதினெட்டு அரசர்களையும், பதினெண் கோடி வேளிர்களையும் அருவாளரையும் பிறரையும்' பெற்றுப் புறப்பட்டார், ஜமதக்கினியின் புதல்வர் திருணதூமாக்கினி அகத்தியருக்கு மாணாக்கரானார். போகிற இடத்தில் தாம் போய் நிலைத்த பிறகு மனைவியை, அழைத்து வரவேண்டும் என்பது அகத்தியர் எண்ணம்போலும். புலத்தியர் கன்னிகாதானம் செய்து கொடுக்க மணந்துகொண்ட அந்த லோபா முத்திரையை அங்கேயே விட்டுவிட்டு, "பிறகு அழைத்துக்கொள்கிறேன்" என்று சொல்லி வந்து விட்டார். தென்னாட்டுக்கு வந்து அங்குள்ளவர்களை யெல்லாம் வசப்படுத்திப் பொதிய மலையில் தம்முடைய ஆசிரமத்தை அழகாக அமைத்துக்கொண்டார், அகத்தியர். அந்த ஆசிரமத்தை அமைத்துக்கொள்வதற்கு அவர் எவ்வளவோ சிரமப்பட்டார். தென்னாட்டில் இராவணனுடைய தலைமையின் கீழ் அட்டஹாஸம் செய்துவந்த ராட்சசர்களை அடக்கிக் காட்டையெல்யாம் அழித்து நாடாக்கி தம்மோடு அழைத்து வந்தவர்களை அங்கங்கே நிறுவி ஒருவாறு அமைதி பெற்றார். நாட்டைப் பிடித்தார்; மலையையும் கைக்கொண்டார்; ஆசிரமமும் கட்டியாயிற்று. வீட்டுக்கு விளக்கு, தர்மபத்தினியாயிற்றே? தம்முடைய பத்தினியாகிய லோபாமுத்திரையின் நினைவு முனிவருக்கு வந்தது. 'அடடா! எத்தனை காலம் மறந்து இருந்து விட்டோம்! கல்யாணம் பண்ணிக்கொண்ட அன்று பார்த்ததுதான்!' என்று ஏங்கினார். அவர் மாணாக்கராகிய திருணதூமாக்கினியார் காப்பியக் குடியில் வந்தவர். அவரே தொல்காப்பியர். அகத்தியர் அவரை அழைத்தார்;"புலத்தியரிடத்தில்போய் லோபாமுத்திரையை அழைத்து வா" என்று ஆணையிட்டார். "உத்தரவுப்படி செய்கிறேன்" என்று தொல்காப்பியர் புறப்பட்டார். அதற்குள் அகத்தியருக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ? "நீ எப்படி அவளை அழைத்து வருவாய்?" என்று கேட்டார். பாவம்! தவமும் கல்வியும் நிறைந்த அந்தப் பிரம்மசாரிக்கு உலக இயல் தெரியாது. யானையா, குதிரையா, ரதமா, என்ன இருக்கிறது அழைத்துவர? தம்முடைய குருபத்தினிக்குத் தாமே வாகனமாக ...... ......ல் (text missing) அவர் உதவுவார். இந்த யோசனை அகத்தியர் மனத்தில் உண்டாயிற்று. 'இந்தக் கட்டழகுக் காளை, விரைவில் வரவேண்டுமென்று நினைத்து அவளைத் தோளில் தூக்கிக்கொண்டு வந்தால் அவள் பிரஷ்டையாய் விடுவாளே!' என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் ஒரு குழப்பத்தை உண்டாக்கியது. தம் ஆணைக்கு அடங்கிய மாணாக்கனது தூய்மையை அவர் அறிந்தாலும் பெண்களின் சஞ்சல புத்தியை நினைந்து கலங்கினார். "அவளருகில் செல்லாமல் நாலு கோல் தூரம் இடை விட்டு அவளை அழைத்து வா" என்று கட்டளையிட்டுத் தொல்காப்பியரை அனுப்பிவிட்டுத் தம் மனைவியின் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் முனிவர். உத்தம மாணாக்கராகிய தொல்காப்பியர் புலத்திய முனிவரிடம் சென்று தம் ஆசிரியரது கட்டளையைத் தெரிவித்து லோபாமுத்திரையை அழைத்துக்கொண்டு புறப்பட்டார். நாலு கோல் நீளம் இடை விட்டே அழைத்து வந்தார். காடும் மலையும் தாண்டிச் சோழ நாடும் கடந்து பாண்டி நாட்டுள்ளே புகுந்தார். பாண்டி நாட்டினிடையில் வையையைற்றில் இறங்கி அக்கரைக்கு வரும் சமயத்தில் திடீரென்று வெள்ளம் வந்துவிட்டது. தொல்காப்பியர் எப்படியோ கரையேறிவிட்டார். லோபாமுத்திரையால் ஏற முடியவில்லை. வெள்ளம் இழுத்துக்கொண்டு போயிற்று. "ஐயோ, என்னைக் காப்பாற்று!" என்று லோபாமுத்திரை கதறினாள். தொல்காப்பியருக்கு அகத்தியர் இட்ட கட்டளை *நினைவுக்கு* வந்தது. 'இவரை நான் எப்படிக் கரையேற்றுவது! "நாலுகோல் தூரம் இடை விட்டு அழைத்து வரவேண்டும்" என்று ஆசிரியர் கட்டளையிட்டாரே' என்று மயங்கினார்.ஆனாலும் ஆபத்து வந்தபோது அதையெல்லாம் பார்க்கமுடியுமா? லோபா முத்திரை ஆற்றோடு போய்க்கொண்டிருந்தாள். "அட பாவி! என்னை வந்து எடுக்கக் கூடாதா?" என்று அவள் அழுதாள். "தாயே, என்ன செய்வேன்!" என்று இரக்கத்தோடு தொல்காப்பியர் வருந்தினார். 'மரம் மாதிரி நிற்கிறாயே; கரையில் இழுத்துவிடத் தெரியாதா?' என்று அவர் நெஞ்சமே கேட்டது. லோபாமுத்திரை நீரில் மூழ்கிக்கொண்டிருந்தாள். இரண்டு வாய்த் தண்ணீரும் குடித்துவிட்டாள். கண் முன்னே ஒருவர் உயிர்விடும்போது அதைப் பார்த்துக் கொண்டு நிற்பதா? இதைவிட, அமிழ்த்திக் கொலை செய்துவிடலாமே! 'ஆபத்துக்குப் பாவம் இல்லை' என்று துணிந்து விட்டார் தொல்காப்பியர். கரையில் நின்ற ஒரு மூங்கிலை மளுக்கென்று ஒடித்தார். அதை நதியில் நீட்டினார்.லோபாமுத்திரை அதைப் பற்றிக்கொண்டு தட்டுத் தடுமாறிக் கரைக்கு வந்து சேர்ந்தாள். மூங்கிற் கோலை முறித்து நீட்டும் எண்ணம் மின்னல்போல ஒரு கணத்தில் தொல்காப்பியருக்குத் தோன்றியது. 'நாம் குருநாதனுடைய ஆணையை முற்றும் மீறவில்லை. நாலு கோல் தூரம் இல்லாவிட்டாலும் ஒரு கோல் தூரத்துக்குக் குறையவில்லை' என்று சமாதானம் செய்துகொண்டார். குருபத்தினியை வெள்ளத்திலிருந்து கரையேற்றாமற் போயிருந்தால் முனிவர் பிரானிடம் சென்று, 'உங்கள் பத்தினியை வைகைக்கு இரையாக்கிவந்தேன்' என்று சொல்லி நிற்பதா? தம்முடைய பத்தினியை இறவாமல் காப்பாற்றியதற்கு அவர் தம் மாணாக்கரைப் பாராட்டுவாரே யன்றிக் குறை கூறுவாரா? இவ்வளவு காலம் தொல்காப்பியரோடு பழகி அவருடைய இயல்பு முனிவருக்குத் தெரியாதா?- இந்த எண்ணங்கள் ஒன்றன்மேல் ஒன்று தோன்றித் தொல்காப்பியருக்குத் தைரியமூட்டின. ஆனாலும் உள்ளுக்குள்ளே ஒரு பயம் இருக்கத்தான் இருந்தது. மனைவியையும் மாணாக்கரையும் கண்ட முனிவருக்கு உண்டான மகிழ்ச்சி வைகை வெள்ளத்தை விட அதிகமாக இருந்தது. "சௌக்கியமாக வந்து சேர்ந்தாயா? வழியில் ஒரு குறையும் நேரவில்லையே!" என்று தம் மனைவியைப் பார்த்துச் சாதாரணமாகக் கேட்டார் முனிவர். "நான் பிழைத்தது புனர்ஜன்மம். உங்கள் சிஷ்யன் இல்லாவிட்டால் ஆற்றோடே போயிருக்க வேண்டியதுதான்" அகத்தியருக்குப் பகீரென்றது. "என்ன செய்தி?" என்று ஆவலோடு கேட்டார். லோபா முத்திரை விஷயத்தைச் சொன்னாள். அந்தக் குறுமுனிவருடைய சந்தேகக் கண்களுக்கு எல்லாம் தந்திரமாகப் பட்டது. 'வெள்ளம் வந்தால், இவளுக்கு நீந்தத் தெரியாதா? அல்லது நீரோட்டத்தின் போக்கிலே போய்க் கரையேற முடியாதா? தொல்காப்பியன் இவளைத் தொடவில்லை என்பது என்ன நிச்சயம்? நாம் இவனை அனுப்பியது தவறு' என்றெல்லாம் அவர் எண்ணலானார். தம்முடைய மனைவி ஒரு கண்டத்திலிருந்து தப்பி வந்தாள் என்பதாக அவர் எண்ணவில்லை. தம் மாணாக்கன் தமக்குத் துரோகம் செய்துவிட்டதாகவே "அடே,பாபி! நான் நாலு கோல் இடம் விட்டு அழைத்துவரச் சொன்னேனே! நீ ஏன் இப்படிச் செய்தாய்?" என்று கடுங் கோபத்தோடு உறுமினார் அகத்தியர். "ஸ்வாமி, நான் என்ன செய்வேன்! ஆபத்துக் காலத்திலே ஆசாரம் பார்க்கலாமா? இவரை வைகையிலே விட்டுவிட்டு வந்து தேவரீர் முகத்தில் எப்படி விழிப்பேன்! நான் சிறிது நேரம் ஒன்றும் செய்யாமல் தான் இருந்தேன். இவர் என் கண்முன் மூழ்கி உயிர் துறக்க நான் பார்த்திருக்கலாமா? எவ்வளவு கடின சித்தமுடையவனானாலும் அந்தச் சமயத்தில் சும்மா இருப்பானா? நான் மூங்கிற்கோலை நீட்டிக் கரையில் இழுத்துவிட்டேன். வேறு என்ன செய்வது?" இந்தக் கதையெல்லாம் முழுப் புரட்டென்றே அகத்தியர் தீர்மானித்துக்கொண்டார். ருத்திர மூர்த்தியைப் போலக் கோபம் மூள உடல் துடிக்க எழுந்தார். "நீங்கள் பாபிகள்; பிடியுங்கள் சாபத்தை: உங்களூக்குச் சுவர்க்க பதவி இல்லாமற் போகக்கடவது!"என்று இடிபோலக் குமுறினார். தொல்காப்பியர் என்ன செய்வார்! லோபா முத்திரைக்கோ ஒன்றும் விளங்கவில்லை. தாம் நன்மையே செய்திருக்கவும் தம் ஆசிரியர் அதை உணராமல் முனிந்ததைக் கண்ட தொல்காப்பியருக்கும் கோபம் மூண்டது. "நாங்கள் ஒரு பாவமும் அறியோம். எங்களை அநாவசியமாகக் கோபித்த எம் பெருமானுக்கும் சுவர்க்க பதவி இல்லாமற் போகட்டும்!" என்று சொல்லிப் புறப்பட்டுவிட்டார். தொல்காப்பியர் அகத்தியரைப் பிரிந்து வந்தாலும் தமிழைப் பிரியவில்லை. அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்னும் நூல் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுப்பது. அது பரந்து விரிந்து கிடந்தமையாலும் முதல் இலக்கணமாகையாலும் அதில் சில விஷயங்கள் ஒன்றனோடு ஒன்று கலந்திருந்தன. தொல்காப்பியர் தம்முடைய ஆசிரியரைப் பிரிந்தும் அவர் திருவடியை மறவாமல் தியானித்துத் தமிழ் நூல்களை ஆராய்ந்துவந்தார். இயற்றமிழுக்குத் தனியே ஓர் இலக்கணம் செய்யவேண்டும் என்ற கருத்து அவருக்கு உண்டாயிற்று. பல நாள் சிந்தித்து இயற்றலானார். அறிவும் அன்பும் உடைய அவர் கருத்து நிறைவேறியது. தமிழ் மொழியின் இலக்கணத்தை ஒழுங்காகத் திரட்டி அமைத்த, 'தொல்காப்பியம்' என்னும் பேரிலக்கணத்தை அவர் இயற்றி முடித்தார். அக்காலத்தில் பாண்டிநாட்டில் பாண்டியன் மாகீர்த்தி என்பவன் அரசாண்டு வந்தான். தொல்காப்பியர் அக்கால வழக்கப்படி, தொல்காப்பியத்தை அரசன் அவைக்களத்தில் பல புலவர் முன்னிலையில் அரங்கேற்ற எண்ணினார். அதனை அறிந்த அரசன் அதற்கு உரியவற்றை ஏற்பாடு செய்தான். அதங்கோடு என்ற ஊரில் ஒரு சிறந்த புலவர் வாழ்ந்து வந்தார். அவர் அந்தணர். வேத சாஸ்திரங்களிலும் தமிழிலும் தேர்ந்தவர் யாரும் அப் பெரியாருடைய சொந்தப் பெயரைச் சொல்லுவதில்லை.'அதங்கோட்டு ஆசான்' என்றே சொல்லிவந்தனர். அரங்கேற்றுகையில் அவரையே சபைத்தலைவராக இருக்கும்படி அரசன் கேட்டுக்கொண்டான். தொல்காப்பிய அரங்கேற்ற விழா நெருங்கியது. அரசன் அகத்திய முனிவருக்கும் செய்தி அனுப்பினான். சமாசாரத்தைக் கேட்டாரோ இல்லையோ, எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல அவர் கோபங்கொண்டார். ' வஞ்சகன், துரோகி, என் ஆணையை மீறியதோடு, நான் செய்த இலக்கணத்துக்கு எதிரிலக்கணம் வேறு செய்துவிட்டானா?' என்று படபடத்தார்; பல்லை நெறித்தார்; தரையில் ஓங்கி அறைந்தார். 'அதங்கோட்டாசானா அதைக் கேட்கப்போகிறவன்? பார்க்கலாம் அவன் கேட்பதை! இப்போதே சொல்லி அனுப்புகிறேன்' என்று எழுந்தார். அகத்தியரிடமிருந்து ஆள் வந்ததென்றால் அதங்கோட்டாசிரியர் நிற்பாரா? நேரே பொதியமலைக்குப் போய் அகத்தியரைத் தொழுது வணங்கினார். "முனிவர்பிரானே, என்னை அழைத்தது எதற்கு?" என்று கைகட்டி வாய் புதைத்து நின்றார். "அந்தத் தொல்காப்பியன் செய்த இலக்கணத்தை நீ கேட்கக்கூடாது. அவன் மாகா பாதகன், குருத் துரோகி!" 'இதைச் சொல்லவா இவ்வளவு அவசரமாக அழைத்தார்!' என்று அதங்கோட்டாசிரியர் வியந்தார்; அவர் நூலை அரங்கேற்ற வேண்டும் என்று பாண்டியன் உத்தரவு இட்டிருக்கிறானே!" என்றார் பாண்டியன் வேண்டிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தொல்காப்பியர் எத்தனை தடவை அவரிடம் வந்து பணிவோடு விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறார்! அவர்பேச்சிலே எத்தனை பணிவு! நடையிலே எவ்வளவு அடக்கம்! தமிழிலே எவ்வளவு அன்பு! அவருடைய மதிநுட்பந்தான் எவ்வளவு அருமையானது! தொல்காப்பியருடைய இயல்பிலும் அறிவிலும் ஈடுபட்டு அவருடைய வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காகவே தொல்காப்பிய அரங்கேற்றத்தில் தலைமை வகித்து அதைக்கேட்க அதங்கோட்டாசிரியர் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் அகத்தியர் இப்படிச் சொன்னால் அவர் என்ன செய்வார்? "அவர் பேரில்என்ன குற்றம், சுவாமி?" "அதெல்லாம் உனக்கு என்ன? அவன் என்னிடம் வருவதே இல்லை. என்னிடம் பாடம் கேட்டுவிட்டு என் இலக்கணம் இருக்கும்போது அவன் ஓர் இலக்கணம் இயற்றலாமா?" "முனிவர் பிரானே, அடியேன் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. வளருகிற பாஷைக்கு வளர வளர இலக்கணங்கள் உண்டாவதில் என்ன பிழை? தேவரீருடைய இலக்கணம் எல்லாவற்றிற்கும் அடிநிலையாக இருக்குமே.தொல்காப்பியர் நன்றாகக் கற்றவர். அவருடைய முயற்சியைப் பாராட்ட வேண்டுவது நம் கடமையல்லவா?" அகத்தியருக்கு மேலும் மேலும் கோபம் வந்ததே யொழிட அதங்கோட்டாசிரியர் வார்த்தை ஒன்றும் அவர் காதில் ஏறவில்லை;"இந்த நியாயமெல்லாம் இருக்கட்டும்.அந்தக் கயவன் செய்த இலக்கணத்தை நீ கேட்கக் கூடாது." இந்தப் பிடிவாதத்துக்கு மருந்து எங்கே தேடுவது? "சுவாமி, அடியேனைத் தர்ம சங்கடமான நிலையில் மாட்டிவிடக் கூடாது. நான் கேட்பதாக ஒப்புக் கொண்டுவிட்டேன். இனிவார்த்தை பிசகக்கூடாது." "நான் சொல்வதை நீ கேட்க மாட்டாயா?" "எப்படிச் செய்தால் நான் அபவாதத்துக்கு ஆளாகாமல் இருக்க முடியுமோ அப்படிச் செய்யச் ....... ....... "நீ கேளாமல் இருக்க முடியாதா?" "முடியாதே" அகத்திய முனிவருடைய கோபம் மேலே மேலே படர்ந்ததே ஒழியத் தணியவில்லை. அவருக்குப் பேச வாய் எழவில்லை.அதங்கோட்டாசிரியரும் மௌனமாக இருந்தார். முனிவரது முகத்தைப் பார்த்தால் அங்கேயே அவரைச் சுட்டுச் சாம்பலாக்கி விடுவார் போல இருந்தது. 'இதற்கு என்ன வழி?' என்று ஆசிரியர் யோசிக்கலானார். சிறிது நேரம் கழிந்தது. "சுவாமி, ஒரு வழி தோன்றுகிறது. கட்டளையிட்டால் விண்ணப்பித்துக் கொள்கிறேன்-" என்று மெல்ல ஆரம்பித்தார். முனிவர் இன்னும் கோபக் கடலில் திளைத்திருந்தார். "ஹூம்!" என்று கனைத்தார். "சொல்லட்டுமா?" "சொல்" "அரங்கேற்றத்தின்போது தொல்காப்பியத்தில் அங்கங்கே குற்றம் கண்டுபிடித்துக் கேள்வி கேட்கிறேன். பல பல கேள்விகள் கேட்டுத் தொல்காப்பியரைத் திணற வைக்கிறேன்." அகத்தியர் இந்த வார்த்தைகளைக் கவனித்தார்; யோசித்தார். "நல்ல யோசனை! நாலு பேருக்கு நடுவில் அவன் முகத்தில் கரியைத் தீற்றி அனுப்புவது சரியான தண்டனை. நல்லது. உன் அறிவுக்கேற்ற தந்திரம். நல்ல காரியம்." அகத்தியர் ஆனந்தக்கூத்தாடினார். தொல்காப்பியத்தையும் தொல்காப்பியரையும் அடியோடு வீழ்த்தி விட்டோம் என்பது அவர் ஞாபகம். தொல்காப்பிய அரங்கேற்ற விழாவுக்குரிய நாள் வந்தது. பாண்டியன் சபையில் நடப்பதென்றால் சொல்ல வேண்டுமா? இடைச்சங்கப் புலவர்கள் எல்லோரும் கூடினர். இலக்கணம் வகுப்பதற்கு எவ்வளவோ திறமை வேண்டும். ஆயிரம் இலக்கியங்கள் எழுந்தால் ஓர் இலக்கணம் உண்டாகும். அவ்வளவு பெரிய காரியத்தைத் தொல்காப்பியர் சாதித்திருக்கிறார். பாண்டியன் மாகீர்த்தி உயர்ந்த ஆசனத்தில் வீற்றிருக்கிறான். அவனுக்கு அருகே மற்றோர் உயர்ந்த இருக்கையில் அதங்கோட்டாசிரியர் எழுந்தருளியிருக்கிறார். எங்கும் புலவர் கூட்டம்; தமிழ் பயில்வார் தலைகள். அரங்கேற்றம் முறைப்படி தொடங்கியது. கற்றுச் சொல்லி ஒருவன் தொல்காப்பியச் சூத்திரத்தை வாசித்தான். தொல்காப்பியர் பணிவோடு உரை கூறலானார். அவ்வளவு பேரும் ஒலியடங்கிக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு சூத்திரம் முடிந்தது. அதங்கோட்டாசிரியர் மெல்ல அந்தச் சூத்திரத்தில் ஒரு தடையை எழுப்பினார். புலவர்களெல்லாம் திடுக்கிட்டனர்; "இதென்ன? ஆரம்பிக்கும் போதே இப்படிக் கண்டனம் செய்கிறாரே!"என்று அஞ்சினர். ஆனால் அடுத்த கணத்தில் தொல்காப்பியர் தக்க விடையைக் கூறவே, சபையினர் தம்மை அறியாமலே ஆரவாரம் செய்தனர். அந்த முதற் சூத்திரத்தில் ஆரம்பித்த தடையை அதங்கோட்டாசிரியர் நிறுத்தவே இல்லை. மேலும் மேலும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போனார். அவற்றுக்கு உடனுக்குடன் தக்க விடைகளைச் சொல்லி வந்தார் தொல்காப்பியர். அந்த வினாவிடைப் போரில் தொல்காப்பியருடைய அறிவுத் திறமை பின்னும் ஒளி பெற்றது. சிங்கக்குட்டி துள்ளி எழுவது போல அவருடைய விடைகள் பளீர் பளீரென்று அவர் வாயிலிருந்து எழுந்தன. அதங்கோட்டாசிரியர் அவர் கூறும் விடைகளைக் கேட்டு அகத்துள்ளே மகிழ்ச்சி பூத்தார். அவர் கேட்கும் கேள்விகள் அகத்தியருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றத்தானே? அறிவின் ஒளியைக்கண்டு போற்றுவதில் உண்மை அறிவாளியாகிய அந்தப் பெரியார் தாழ்ந்தவர் அல்லவே? ஒரு நாள், இரண்டு நாள், பல நாட்கள் அரங்கேற்றம் நடைபெற்றது. தமிழின் இலக்கணத்தை மூன்று அதிகாரங்களாகத் தொல்காப்பியர் வகுத்துச் சொல்லியிருந்தார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற அந்த மூன்றுள் ஒவ்வொன்றிலும் ஒன்பது ஒன்பது இயல்களை அமைத்திருந்தார். எழுத்ததிகாரம் அரங்கேற்றி முடிந்தது; அதன் ஒழுங்கான அமைப்பு, புலவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சொல்லதிகாரம் நடந்தது; அதிலுள்ள முறை வைப்பும், வகையும் அறிஞர்களுக்கு வியப்பை உண்டாக்கின. பொருளதிகார அரங்கேற்றம் தொடங்கியது. தமிழ் மொழிக்கே சிறப்பைத் தரும் பொருள் இலக்கணத்தைத் தொல்காப்பியர் எப்படி இயற்றியிருக்கிறார் என்று தெரிந்து கொள்வதில் புலவர்களுக் கெல்லாம் மிகுதியான ஆர்வம் இருந்தது. அகப்பொருளையும் புறப்பொருளையும் பற்றி விரிவாக இலக்கணம் வகுத்திருந்தார். தமிழ்ச் செய்யுளின் பரப்பை அளவிட்டுச் செய்யுளியலைச் செய்திருந்தார். உவம இயல், மெய்ப்பாட்டியல் முதலியவற்றில் மிகவும் நுட்பமாக உவமானத்தின் வகைகளையும் சுவைகளையும் மெய்ப்பாடுகளையும் உணர்த்தியிருந்தார். இவ்வளவையும் கேட்டவர்கள், 'இவர் தெய்வப் பிறப்பு' என்று பாராட்டினர். 'நூல் இயற்றியது பெரிதன்று; இதை இங்கே அரங்கேற்றியதுதான் பெரிது. இந்த ஆசிரியர் கூறும் கண்டனங்களுக்குத் தக்க சமாதானஙகளைத் தைரியமாகச் சொன்னாரே; இவருக்கு எவ்வளவு அறிவுத் திறன் இருக்கவேண்டும்!' 'விஷயம் கருத்தில் தெளிவாகப் பதிந்திருக்கும்போது யார் எத்தனை கேள்வி கேட்டால் என்ன? மலையைப் போல இருக்கும் இவர் அறிவை எந்தக் காற்றால் அசைக்க முடியும்?' என்பன போலப் பல பல வகையாகத் தொல்காப்பியருக்குப் புகழுரைகள் எழுந்தன. நல்ல வேளையாக அரங்கேற்றமே முடிந்தது.அதங்கோட்டாசிரியர் தொல்காப்பியரை வாயாரப் பாராட்டினர். "இந்த நூல் தமிழுக்கு ஒரு வரம்பு. சங்கப் புலவருக்கு இதுவே இலக்கணமாக இருக்கும் தகுதியுடையது. தொல்காப்பியர் ஆசிரியரென்ற சிறப்புப் பெயர் பெறும் தகுதி உடையவர்"என்று உள்ளங்குளிர்ந்து கூறினார். பாண்டியன் மாகீர்த்தி, "என்னுடைய அவையில் அரங்கேற்றும் பேறு எனக்கு இருந்தது. என் பெயர் மாகீர்த்தி என்பது தங்கள் நூலினால்தான் பொருளுடையதாயிற்று. இனி ஆசிரியர் தொல்காப்பியர் என்றே தங்களை உலகம் வழங்கும்." என்று வாழ்த்திப் பரிசில்களை அளித்தான். அன்று முதல் திருணதூமாக்கினி,ஆசிரியர் தொல்காப்பியர் ஆனார். இந்த அரங்கேற்றம் நிறைவேறின போது தொல்காப்பியத்திற்கு ஒரு புலவர் சிறப்புப் பாயிரம் பாடினார். அதன் பிற்பகுதி வருமாறு:
[மாற்றாரது நிலத்தைக் கொள்ளும் போர்த் திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தி அவையின்கண்ணே, அறமே கூறும் நாவினையுடைய நான்கு வேதத்தினையும் முற்ற அறிந்த, அதங்கோடென்கிற ஊரின் ஆசிரியனுக்குக் குற்றமற ஆராய்ந்து கூறி, எழுத்து, சொல், பொருள் என்னும் மூவகை இலக்கணமும் மயங்கா முறையால் செய்கின்றமையால் எழுத்திலக்கணத்தை முன்னர்க் காட்டி, கடல் சூழ்ந்த உலகின்கண்ணே ஐந்திர வியாகரணத்தை நிறைய அறிந்த பழைய காப்பியக் குடியிலுள்ளோனெனத் தன் பெயரை மாயாமல் நிறுத்தி, பல புகழ்களையும் இவ்வுலகின்கண்ணே மாயாமல் நிறுத்திய தவவேடத்தை உடையோன். -நச்சினார்க்கினியர் உரை.] - - - - - - - - - - - 2. முற்றுகை
சேரனுடைய யானைப் படையின் மிகுதியைச் சொல்வதா? சோழனுடைய ஆட்படையைச் சொல்வதா? பாண்டியனுடைய குதிரைப் படையைச் சொல்வதா? எதை அதிகமென்று சொல்வது? இந்தப் படைப் பெருங் கடலினிடையே கூம்பு உயர நிற்கும் கப்பலைப்போலப் பாரியின் பறம்பு மலை நிற்கிறது; அந்த மலை எப்படி அசைவற்று நிற்கிறதோ அப்படியே மலை மேலுள்ள பாரியும் அவனுடைய உயிர்த் தோழரான புலவர்பெருமான் கபிலரும் வீரர்களும் உள்ளத்தில் அச்சம் சிறிதும் இல்லாமல் திண்ணிய நெஞ்சத்தோடு நிற்கின்றனர். பறம்புமலையில் அவ்வளவு பகைப்படைகளும் ஏறிச்சென்று போரிடுவதென்பது கனவிலும் நினைக்க முடியாத காரியம். முட்புதரும் அடர்ந்த காடும் பிணக்குற்ற கொடிவழிகளும் பாறை வெடிப்புக்களும் நிரம்பிய அம்மலைச்சாரலில் வீரர் ஏறிச்சென்று உச்சியை அடைவதற்குள் யமலோகத்திற்கே ஏறிப் போய் விடுவார்கள். வில்லும் வேலும் வாளும் கொண்ட வீரர்கள் மீனினங்களைப்போல மலையடிவாரத்தில் வட்டமிடு கின்றனர். வட்டமிட்டு என்ன பயன்? அவர்களுடைய வேலும் வாளும் இந்த நிலையில் ஒன்றுக்கும் பயன் படா. வில்லும் அம்பும் கொண்டு பறம்பு மலையின் உச்சியைத் துளைக்கப் பார்க்கிறார்கள். அதைவிட வானுலகத்தைத் துளைத்துவிடலாம். கையோய்ந்து காலோய்ந்து உடல் ஓய்ந்து உள்ளம் ஓய்ந்து நிற்கும் அந்தப் பெரும்படையின் இடையே தங்களுடைய திருவோலக்கத்தை நிருமித்துக்கொண்ட மூன்று மன்னர்களும் கூடி ஆலோசிக்கலானார்கள். பாரி முன்னூறே ஊர்களை உடைய பறம்பு நாட்டை ஆளும் சிற்றரசன். பறம்புமலையின்மேல் அமைந்தது அவன் இராசதானி. சிற்றரசனாக இருந்தாலும் அவனுடைய பெரும் புகழ் வையம் அளந்து வானம் முட்டியது. இயற்புலமை விஞ்சிய புலவர்களிடத்தும், இசைத் திறமை கொண்ட பாணர் பாலும், நாடகத்தில் தேர்ந்த விறலியர் திறத்தும் அவன் காட்டிய பேரன்புக்கு எல்லை இல்லை. சிறந்த ரசிகசிரோமணி. பெரு வள்ளல். புலவருக்கும் பாணருக்கும் விறலியருக்கும் அவன் அளிக்காத பொருள் இல்லை. பொன் கொடுப்பான், பொருள் கொடுப்பான்; ஊர் அளிப்பான், நாடு நல்குவான்;குதிரையும் யானையும் கொடுத்து உதவுவான்; அவர்கள் வேண்டினால் தன்னையே கொடுக்கவும் முன்வருவான். கலைச்சுவை தேரும் பண்பும், கரவாத ஈகையும் உடைய அவனுடைய புகழ் எங்கும் பரவியது. அவனுடைய சிறப்பைப் பின்னும் பன்மடங்கு மிகுவிக்கக் கபிலர் அவனுடன் இருந்து வாழ்ந்தார். புலனழுக்கற்ற அந்தணாளரும் புலவர் அடி பணிந்து போற்றும் கவிப்பெருமானும் ஆகிய அவர் பாரிக்கு உயிர்த்தோழராக இருந்தார். தமிழ்ச் சுவையூட்டும் ஆசிரியராகவும், புலவர்களை வரவேற்று உபசரிக்கும் பிரதிநிதியாகவும், அவைக்களப் புலவராகவும், அரசியல் துறையில் பாரிக்கு ஏற்ற மந்திரத் தலைவராகவும் விளங்கினார். அவனுடைய பெண்களாகிய அங்கவை,சங்கவை என்னும் இருவரையும் தம் கண்மணிபோலப் பாதுகாத்துத் தமிழ் பயில்வித்து வந்தார். அழகிலே சிறந்து விளங்கிய அவ்விளம் பெண்கள் கபிலரது பழக்கத்தால் அறிவிலும் ஒழுக்கத்திலும் பெண்களுக்கு வரம்பாக நின்றனர்.அவர்களாலும் பாரியின் பெருமை உயர்ந்தது. இவ்வளவு சிறப்புகளையும் பாரியிடம் வந்து பரிசு பெற்றுச் செல்லும் புலவர்கள், உலகத்துக்குத் தங்கள் வாய் முரசால் அறிவித்தனர். பெரிய மண்டலங்களுக்கு அதிபதிகளாய், பாரியைப் போன்ற பல குறுநில மன்னர்களுக்கு மன்னர்களாய், புலவர் கூட்டங்களையும் கலைஞர் குழாங்களையும் இறையிலியும் முற்றூட்டும் அளித்து நிலையாகப் பாதுகாக்கும் பெருவண்மையராய், படையாலும் பலத்தாலும் கொடையாலும் குலத்தாலும் நாட்டாலும் நகராலும் குறைவின்றி நிறைவு பெற்ற வளத்தினராய் விளங்கிய சேர சோழ பாண்டியர்கள் காதுக்கும் பாரியின் புகழ் எட்டியது. எட்டியதோடு மட்டும் அல்ல. அவர்கள் செவி வழியே அம்பு போல நுழைந்து உள்ளத்தே பாய்ந்து புண் படுத்தியது. புண்ணிலிருந்து பீரிட்டெழும் குருதிபோலப் பொறாமைத் தீ புறப்பட்டது. 'முன்னூறே ஊர்களையுடைய ஒருவேள் இவன். இவனுக்கு இத்தனை புகழா! இந்தப் புகழைக்குறைக்க வழி தேடவேண்டும்' என்று சூழ்ச்சியில் முனைந்தனர் மூவரும். காரணமின்றி அவனுடன் போரிட விரும்பவில்லை.ஒரு காரணத்தை உண்டாக்கிக் கொள்ள எண்ணினர். பாரியின் மகளிரைத் தமக்கு மணம் செய்து கொடுக்க வேண்டுமென்று மூவேந்தரும் தனித்தனியே ஓலைபோக்கினர். அவர்கள் எதிர்பார்த்ததே நிகழ்ந்தது செல்வச் செருக்கில் மூழ்கிக் கண் மூடிக் கிடக்கும் அவர்கள் வேண்டுகோளை பாரி மறுத்தான். அதன் விளைவாகவே இந்தப் பெரும் போர் மூண்டது. மூன்று மன்னர்களும் ஒருங்கே தம் படைகளைக் கூட்டிப் பறம்பை முற்றுகையிட்டுப் பொருது நின்றனர். படைப்பலத்தால் பறம்பை வெல்ல முடியாது என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். மேலே என்ன செய்வது? பறம்பு மலைக்கு முன் அவர்கள் உள்ளம் பணிந்து போய், ஊக்கமிழந்து, தருக்கின்றிக் குவிந்தன. யாவரும் கூடி ஆலோசித்தனர். 'இனி நம் அம்புகளை எய்து வீணாக்குவதில் பயன் இல்லை. போர்முறைகளில் இப்போது செய்வதற்கு உரியது இன்னதென்று ஆராயவேண்டும். பகைமன்னர் மதிலை வளைந்த காலத்தில் உள்ளே உணவு செல்லாமல் முற்றுகையிட்டால் போர் செய்யாமலே வெற்றி பெறலாம் என்று போர்க்கலையில் வல்லவர்கள் சொல்வார்கள். அவ்வாறு நாம் இன்னும் சில மாதங்கள் இந்த முற்றுகையைத் தளர்வின்றிச் செய்துவந்தோமானால் மேலுள்ள குடிகளும் வீரர்களும் உணவின்றி வாடுவார்கள். நெல்லும் கரும்பும் வெற்றிலையும் மலையில் இல்லை. கீழிருந்துதான் செல்லவேண்டும். உணவுப் பொருள்கள் செல்லாமல் அடைத்துக் காத்திருந்தோமானால் மேலே இருந்து கொண்டு வீறு பேசுபவர்கள் வயிறு வாடும்போது நம் வழிக்கு வருவார்கள்; இல்லையானால் எல்லோரும் ஒருங்கே அழிவார்கள்!'என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆதலால் பறம்புமலையைக் காத்துக்கொண்டு படை முழுவதும் போர்விளையாமல் அங்கே கிடந்தன. பறம்பு மலை என்னும் கடவுளுக்குமுன் பாடு கிடப்பதுபோல இருந்தது, அந்தத் தோற்றம். ஒருநாள் மேலிருந்து ஒரு செய்தி வந்தது; அம்பிலே கோத்து அனுப்பிய ஓலைச் சுருளொன்று படையினிடையே வந்து விழுந்தது. அதைக் கண்டவுடனே படைத்தலைவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று; 'சந்தேகமே இல்லை, இனிமேல் சமாதானம் செய்துகொள்ளத்தான் வேண்டும், இல்லாவிட்டால் உயிர் தப்புவது அரிது என்ற நல்லறிவு அவர்களுக்கு வந்திருக்கவேண்டும். புகலடைகிறோம் என்பதைத்தான் இந்த ஓலையில் எழுதி விடுத்திருக்கிறார்கள்' என்று உள்ளம் பொங்கிக் கூத்தாடினார்கள். ஓலைச் சுருளை எடுத்துக்கொண்டு மூவேந்தரும் அவையிருக்கும் இடத்துக்குச் சென்று முன்னே வைத்தார்கள். 'மேலே இருந்து வந்தது' என்று சொல்லுவதற்கு முன்னே ஆத்திரத்தோடு பாண்டியன் அதை எடுத்துப்பிரித்தான்; வாசித்தான். இதென்ன! அவன் முகத்தில் ஒளி மழுங்குகிறதே! படித்துவிட்டுச் சோழன் கையிலே கொடுத்தான்; அவனும் படித்தான். படைத்தலைவர்கள் எதிர்பார்த்தது ஒன்றும் நிகழவில்லை; அவன் தோளைக் கொட்டவில்லை; முகம் மலரவில்லை. சேரன் கையிற் சென்றது ஏடு; பார்த்துவிட்டுக் கீழே வைத்தான். பாண்டியன் மீட்டும் எடுத்துக் கூர்ந்து கவனிக்கலானான். அவன் கண்கள் கலங்கின. உள்ளத்திலே துக்கம் குமுறிற்றா? கோபம் மூண்டதா? - என்னவென்று சொல்ல முடியவில்லை. சூழ நிற்கும் படைத் தலைவர்களுக்கோ ஒன்றும் தெரியவில்லை. பாண்டியன் வாய் திறந்தான்: "என்ன அழகிய பாட்டு! கபிலரது வாக்கிலே எத்தனை சுவை! கருத்து, வைரம் பாய்ந்ததுபோல இருக்கிறது. இத்தகைய புலவர் பெருமான் ஒருவரே போதும், பாரியின் இறுமாப்பு மேலும் மேலும் வளர்ந்து ஓங்குவதற்கு. கபிலர் நம்முடைய கருத்தையும் முயற்சியையும் அறிந்திருக்கிறார். நம் முயற்சி வீணென்று சொல்லி வீறுபேசுகிறார். நம்மைப் பரிகாசம் செய்கிறார். பாட்டின் கருத்தைப் பகைவரது கருத்தென்று எண்ணும்போது நம் உடம்பு துடிக்கிறது; உள்ளம் சினத்தால் குமுறுகிறது. அதன் கவிச்சுவையைப் பார்க்கும்போது - பகைமையை மறந்து தமிழ் இன்பத்தை மாத்திரம் நுகரும்போது - நம்முடைய உள்ளம் மலர்கிறது; தலை வணங்குகிறது. ஒவ்வொரு சொல்லையும் சுவைத்துச் சுவைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழும்புகிறது....போர்க்களத்தில் புலமைக்கு இடமில்லை; வாள் முனையில் தமிழின்பத்துக்கு வகை இல்லை; பகையுணர்ச்சிக்குமுன் கலையின் சாந்திக்குத் தரிப்பில்லை.... என்ன இது! என்னை இந்தக் கவிதை அடிமையாக்கிவிடுகிறதே! கவிதையை விட்டுக் கருத்தைப் பார்க்கவேண்டும். கபிலரை மறந்து பாரியை நெஞ்சின் முன் நிறுத்தவேண்டும். நீங்களே பாருங்கள்" என்று சொல்லி வழுதி அந்த ஏட்டைப் படைத்தலைவருள் முதல்வனிடம் அளித்தான். தலைவன் வாசித்தான்; உண்மையை உணர்ந்தான். பறம்பு மலையின் இயற்கை வளம் இந்த முற்றுகையை எதிர்த்து நிற்கும் வலியைப் பாரிக்கு அளித்திருக்கிறது என்ற கருத்தை அந்தப் பாட்டு வெளியாக்கிற்று. "நீங்கள் மூன்று பேரும் ஒருகாலும் சேராதவர்கள். இப்போது சேர்ந்து வந்திருக்கிறீர்கள். எல்லோருடைய முரசும் சேர்ந்து முழக்கும் முழக்கம் எங்கள் காதைச் செவிடுபடச் செய்கிறது. ஆனாலும் என்ன பிரயோசனம்? பாரியின் பறம்பு மலை அவ்வளவு சுலபமாக வசப்படுவதல்ல! இதைப் பார்க்கும்போது இரக்கந்தான் உண்டாகிறது. "நீங்கள் பல காலம் முற்றுகையிட்டால் உணவுப் பொருள் கிடைக்க வழியில்லாமல் நாங்கள் மாண்டு மடிவோம் என்று நினைக்கிறீர்கள். எங்கள் பறம்பு மலை அவ்வளவு வறியது அன்று. மண்ணை உழுது விளைவிக்கும் உணவுப் பொருள்களால்தான் நாங்கள் உயிர் பிழைக்கவேண்டும் என்ற அவசியமே இல்லை. காலைமுதல் மாலை வரையில் உழைத்து உழுது பயிரிடும் சிரமம் இல்லாமலே எங்களுக்குப் பறம்பு மலை நான்கு உணவுப் பொருள்களைத் தருகின்றது. எங்கும் அடர்ந்து வளர்ந்துள்ள மூங்கிலிலே நெல் விளைகின்றது. அதைக் கொண்டு நாங்கள் சோறு சமைத்துக்கொள்ளலாம். பலாமரங்களில் இனிய சுளைகளோடு கூடிய பழங்கள் கனிந்து உதிர்கின்றன. அவற்றை நாங்கள் உணவுக்கு வியஞ்சனமாகக் கொள்வோம். தளதள வென்று படர்ந்திருக்கும் வள்ளிக்கொடி கணக்கில்லாமல் உள்ளது. அதன் கிழங்கு வேறு இருக்கிறது. பொதுவாக, உண்ணும் உணவுக்கு இவை போதும். பெரு விருந்து நுகரவேண்டுமானால், இதோ தேனடை இருக்கிறது. நன்றாக முற்றி விளைந்த அடைகளிலிருந்து தேன் சொரிந்துகொண்டே இருக்கிறது. அதைக் கலத்தில் ஏந்திக் குடிக்கவேண்டியதுதான். "எவ்வளவு நாளைக்கு இந்த வாழ்வு என்று நீங்கள் நினைக்கலாம். எங்கள் பறம்பு மலையின் பரப்பு உங்களுக்குத் தெரியாது. ஆகாசத்தைப் போலப் பரந்திருக்கிறது இது. அந்த ஆகாசத்திலே எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ, அவ்வளவு சுனைகள் இங்கே இருக்கின்றன. ஆகையால் நீர்வளத்திலே சிறிதும் குறைவில்லை. உயிர் வாழ்வதற்குப் பிறர் கையை எதிர்பாராமல் எங்களைப் பறம்பு மலை வைத்திருக்கிறது. "பாவம்! இதைக் கேட்டால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். உங்கள் யானைப்படை எவ்வளவோ பெரிதாக இருக்கலாம்; ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு யானையைக் கட்டி நிறுத்தியிருக்கலாம். உங்கள் தேர்ப் படை மிகப் பரந்ததாக இருக்கலாம்; கையகலம் இடம் இருந்தாலும் அங்கெல்லாம் உங்கள் தேர் நிற்கலாம். இவ்வளவு இருந்தும் ஒரு பயனும் இல்லையே! நீங்கள் தலை கீழாக நின்று முயன்றாலும் இந்த மலை உங்கள் வசமாகப் போவதில்லை; உங்கள் முயற்சி வீணாகிவிடும். உங்களுடைய ஆயுத பலத்துக்கு அஞ்சி இந்த மலையைப் பாரி கொடுக்க மாட்டான். யானை, தேர், வாள், உங்கள் வீரம் யாவும் கவைக்கு உதவாத நிலையில் உள்ளன. "உங்களுக்குப் பறம்பு மலை அவசியம் வேண்டுமென்றால் நான் வழி சொல்கிறேன். அதை வசப்படுத்தும் தந்திரம் எனக்குத் தெரியும். பேசாமல் இந்த யானையையும் குதிரையையும் ஊருக்கு அனுப்பிவிடுங்கள். வேலையும் வாளையும் ஒடித்து அடுப்பிலே வையுங்கள். எங்கேயாவது நல்ல நரம்புக் கட்டுக்களை உடைய யாழ் இருந்தால் பார்த்து ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் இசையையும் கற்றுக் கொண்டு யாழைச் சுருதிகூட்டி வாசியுங்கள். உங்கள் தேவிமார் இருக்கிறார்களே, அவர்களை விறலியராக உங்களோடு அழைத்துக்கொள்ளுங்கள். எல்லோரும் சேர்ந்து ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் பாரியினிடம் வந்து கேளுங்கள்; பறம்பு மலை ஒன்றுதானா? பறம்பு நாட்டையும் சேர்த்துக் கொடுத்து விடுவான்''. பாட்டில் இவ்வளவு பொருளும் - இதற்கு மேற்பட்ட பொருள்கூட - அடங்கியிருந்தது. 'நீங்கள் போர் செய்யத் தகுதியுடையவர்கள் அல்ல. பாரியின் புகழ் பாடும் பாணர்களாகத் தகுதியுடையவர்கள்' என்பது கபிலர் கருத்தா? அல்லது, 'பகைமைக் கண்ணோடு பார்த்தால் பாரியின் பெருமை தெரியாது; அவன் உங்களுக்கு வசமாகான்; அமைதியையுடைய கலைகளை உணர்ந்து அவன் நட்பை நாடுங்கள். அப்போது அவனை அடையலாம்' என்ற உண்மையை அவர் சொன்னரா? உண்மை விளங்காமல் படைத்தலைவர்களும் மயக்கமும், வியப்பும், மானமும் போராட நின்றனர். 'இனி என்ன செய்வது?' என்ற சூழ்ச்சியில் தலைப்பட்டனர் பேரரசர் மூவரும்.''வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை. நம்மை அவமானம் செய்து இழித்துக் கூறி நகைக்கிறார் கபிலர். பாரியின் அகம்பாவத்தை அவர் இதன் மூலமாகத் தெரிவித்திருக்கிறார். பார்க்கலாம் இவர்களுடைய வீரத்தை ! மூங்கி லரிசி தின்று வயிறு நிரம்புமா? குடிகள் யாவரும் தின்பதற்கு அது போதுமா? பலாப்பழத்தைத் தின் றால் வீரம் வருமா? இவர்களுடைய பறம்பு வளம் வெறும் வாய்ப் பந்தல் தான். இன்னும் சில காலம் முற் றுகையிட்டால் அந்த வளம் எப்படி இருக்கிறதென்று தெரிந்துகொள்ளலாம். பலாப்பழம் எப்பொழுதும் பழுக்காது; மூங்கில் ஒவ்வொரு நாளும் விளை யாது. இந்தக் கோடை வரட்டும்; வள்ளிக் கிழங்கு இவர்களுக்குக் கிடைப்பதைப் பார்க்கலாம் "என்று ஏளனக் குரலோடு பேசினான் சோழன். முற்றுகையைத் தளர்த்தாமல் இருந்தனர் மூவரும்.படைகளையெல்லாம் அங்கே காவல் புரிய வைத்துத் தங்கள் தங்கள் நகரத்திற்குச் சென்றனர். இடையிடையே வந்து சில காலம் தங்கிப் படைத் தலைவர்களுக்கு ஊக்கமளித்தனர். நாட்கள் சென்றன; வாரங்கள் கடந்தன; பல மாதங்கள் கழிந்தன. பறம்பு மலை நின்றது; அதனை முற்றுகையிட்ட படைகளும் அதனடியிலே கிடந்தன; வீணே சோறுண்டு பொழுதுபோக்கிக் கிடந்தன.ஒரு வருஷம் ஆயிற்று; இரண்டாண்டுகள் கடந்தன. அங்குள்ள படைகள் நிலைப்படைகளாயின; போர் செய்வதைக்கூட மறந்துபோயிருக்கலாம். பறம்பு மலையின்மேல் உள்ளவர்கள் வாழ்வு எப்படி இருந்தது? குடிகளுக்கு உழவர் உழாத நான்கு உணவுகள் கிடைத்தன. ஆயினும் நெல்லஞ் சோற்றை உண்டு பழகினவர்களுக்கு மூங்கிலரிசிச் சோறு செல்லுமா? வயிற்றுக்கில்லாமல் சாகும் நிலை யாருக்கும் வராது. ஆனாலும் சுவையற்ற உணவைத் தின்பதில் உண்டாகும் அருவருப்பைத் தடுக்க முடியவில்லை. பாரியும் கபிலரும் படைவீரரும் ஒவ்வொரு நாளும் கூடிக் குடிமக்களுக்கு வேண்டிய வகசதிகளைச் செய்து வந்தனர். உணவுப் பொருள்களை அரண்மனையிலே சேமித்து வைத்து அவர்களுக்கு அளித்தனர். மலைவளத்தையும் மலைவிளை பொருள்களின் இயல்பையும் நன்கு உணர்ந்த கபிலர் எந்த எந்தப் பொருளை உணவாகக் கொள்ளலாம் என்பதை அநுபவத்தால் தெரிந்து வைத்திருந்தார். இயற்கையின் எழில் நலங்களையும், இயற்கைப் பொருள்களின் இயல்புகளையும் தீர ஆராய்ந்து தெரிந்திருந்த அவருடைய யோசனையால் பறம்பு மலைமேல் உள்ளவர்களுக்கு உணவுக் குறை ஒன்றும் உண்டாகவில்லை. ஒரு நாள் பாரியும் கபிலரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர்: "பாரிவேளே, கீழே முற்றுகையிட்டவர்கள் வெளியிலிருந்து உணவு நமக்குக் கிடைக்கக் கூடாதென்று எண்ணியிருக்கிறார்கள். வெளியிலிருந்து உணவுப்பொருள் வராவிட்டாலும் நாம் சுகமாக உயிர் வாழ்வோம் என்பதைத் தெரிவித்து விட்டோம். அது போதாது. அவர்கள் எண்ணத்திற்கு மாறாக, அவர்களுடைய முற்றுகைக்கு மீறி வெளியிலிருந்து நமக்கு உணவுப்பொருள் கிடைக்கும்படி செய்ய வேண்டும் " என்றார் கபிலர். "அது எப்படி முடியும்? பறம்பு மலைமேல் யாரும் வர முடியாதபடி நாம் வாயில்களை அடைத்திருக்கிறோம். அவர்களும் சூழ நிற்கிறார்கள். வேடம் புனைந்து யாரேனும் வந்தால் கொண்டுவரலாம். அத்தகையவர்களை நம் பகைவர்கள் அணுகவிட மாட்டார்களே !" என்று சந்தேகத்தோடு கேட்டான் பாரி. "பகைவர்களுடைய கட்டுக்கும் காவலுக்கும் பறம்புமலை நெகிழாது. இங்குள்ள நாமும் பணியோம். அவர்கள் செருக்கை அடக்க இம்மலையில் வாழும் நம் நண்பர்களை அனுப்ப எண்ணியிருக்கிறேன். அவர்கள் கீழே நாட்டுக்குச் சென்று நெற்கதிர்களைக் கொணர்ந்து நமக்குக் கொடுப்பார்கள்" "தாங்கள் சொல்வது விளங்கவில்லை. நம்முடைய அன்பர்களுக்குப் பகைவர்கள் வழி விடுவார்களா?" "அவர்கள் வழி விட வேண்டாம். கடவுள் வழி விட்டிருக்கிறார் . அந்த வழியை அடைக்கப் பிரமதேவனாலும் இயலாது." "அந்தணர் பெரும, தங்கள் வார்த்தைகள் எப்பொழுதும் பொய்யானதில்லை. கருத்தில்லாத சொற்கள் தங்கள் வாக்கில் வருவதும் இல்லை. ஆனால் இந்த மொழிகளை என் காது கேட்டும், அவற்றினுள் அடங்கிய கருத்தை உணர்ந்துகொள்ளும் ஆற்றல் என் பேதை அறிவுக்கு இல்லை." "நான் உறுதியாகச் சொல்கிறேன். இன்னும் சில நாட்களில் நாம் இறைவனுக்கு நெல்லஞ் சோற்றை நிவேதிக்க முடியும்' அந்தப் பிரசாதத்தை நாம் உண்ணலாம். குடிகளும் ஓரளவு சுவை காணச் செய்யலாம், பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்." மாதங்கள் கடந்தன. ஒரு நல்ல நாள்; அன்று பறம்புமலையிலுள்ள திருக்கோயிலில் இறைவனுக்குப் பெரிய பூசை நடைபெற்றது. குடிமக்கள் யாவருக்கும் இறைவனுக்கு நிவேதனமான அன்னம் கிடைத்தது! ஆம். பல காலமாக அவர்கள் மறந்திருந்த நெல்லஞ் சோறு தான் அது! சந்தேகமே இல்லை. கண்ணை நம்பாவிட்டாலும் பிறந்தது முதல் பழகி ருசியறிந்த நாக்குக் கூடவா பொய் சொல்லும்? அதோ கோயிலின் முன்னே குவிந்திருக்கும் சிறு நெற்குவியல் கூடப் பொய்யா? கொத்தாகக் கட்டித் தொங்க விட்டிருக்கும் நெற்கதிர் கூடப் பொய்யா? எல்லோரும் வியப்பே உருவமாகிப் பிரசாதத்தை உண்டார்கள். களி துளும்பும் அகமும், மலர்ந்து விளங்கும் முகமும் படைத்த அவர்களுக்கிடையே பாரியும் கபிலரும் வீற்றிருக்கின்றனர். அருகில் நூற்றுக் கணக்கான கிளிகளும் குருவிகளும் நெல்லையும் வேறு தானியங்களையும் கொரித்துக் கொண்டிருக்கின்றன.தங்கள் குடிமக்களோடு அந்தப் பறவைகளும் விருந்தயர வேண்டும் என்பது கபிலருடைய விருப்பம். கிளிகளையும் குருவிகளையும் பழக்குவதில் அவர் வல்லவர். அவ்வளவு பறவைகளும் அவருடைய ஏவலுக்கு அடங்கி நிற்பன. "பாரி, பாரி" என்று தம்முடைய மழலைப் பேச்சிலே கிளிகள் கொஞ்சுகின்றன. "பிரசாதத்தில் சில உருண்டைகள் மிச்சம் இருக்கட்டும். கீழே இருக்கிறார்களே, அவர்களுக்கும் அனுப்பலாம். அவர்கள் நம்பால் பகைமை பாராட்டினாலும் நாம் நண்பு பாராட்டலாம் " என்று சொல்லிக் கபிலர் பாரியைப் பார்த்தார். சில சோற்றுருண்டைகளை இலையில் பொதிந்து ஓர் அம்பிலே கோத்துப் பாரி வில்லில் வைத்து எய்தான். அடுத்த கணத்தில் நேரே படைத்தலைவன் பாசறைக்கு முன்னே அது சென்று வீழ்ந்தது. 'பறம்பு ] மலையில் இறைவனுக்கு �நிவேதனமான அன்னம்' என்ற குறிப்போடு உள்ள ஓலையொன்றும் அதில் இருந்தது. படைத்தலைவன் அவற்றைப் பார்த்தான்; பிரமித்தான். நண்பர்களுகெல்லாம் காட்டினான். "இந்த அதிசயத்தை நம் அரசர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். பாரிக்குப் பறம்புமலையும் கபிலருமே பலம் என்று இருந்தோம். இப்போது தெய்வமே அவன் பக்கமாக இருக்கிறது. வானவர்களே நெல்லை அனுப்புகிறார்கள் போலும்!" என்று உணர்ச்சி ததும்பக் கூறினான். வஞ்சிக்கும் உறையூருக்கும் மதுரைக்கும் ஆட்கள் ஓடினர். "அதிசயம், அதிசயம்" என்று சொல்லிப் படைத்தலைவர் திருமுகத்தைக் கொடுத்தனர். மூன்று வேந்தர்களும் உடனே புறப்பட்டுப் பறம்புமலை யடியில் வந்து சேர்ந்தனர். மூவரும் கூடினர்; படைத்தலைவர்களைக் கூட்டினர். " இந்தப் பறம்புமலை ஒரு தெய்வம்; இதை ஆளும் பாரி ஒரு தெய்வம்; அவனுக்கு வாய்த்த கபிலர் ஒரு பெரிய தெய்வம்" என்று அருண்டுபோய் அவர்கள் சொல்லி விடுதலை வேண்டினர். இதென்ன! மறுபடியும் ஓர் ஓலைச் சுருள் வந்து விழுந்தது. அதனோடு ஒரு நெற்கதிரும் துணையாக வந்தது. தம்முடைய கண்ணாலே நெற்கதிரைக் கண்டபோது அந்த முடி மன்னர்களின் அடி வயிறு பகீரென்றது. கபிலர் பாடல் ஒன்று அனுப்பியிருந்தார். ஆனால் இந்தத் தடவை பாட்டு மிகவும் சுருக்கமாக இருந்தது. நாலே வரி. "பாவம்! இந்தப் பெரிய மலை இரங்கத்தக்கது; வேலால் இதை வெல்லுதல் அரசர்களால் சாத்தியம் இல்லை. ஆனால் நீலோற்பலம் போன்ற மையுண்ட கண்களைக் கொண்ட நாட்டியப் பெண் கிணைப்பறையைத் தட்டிப் பாடிக்கொண்டு வந்தால் அவள் சுலபமாக இதனைப் பெறலாம்" என்று மட்டும் எழுதியிருந்தார். "இனி மேல் மீசையைச் சிரைத்துவிட்டு மஞ்சள் பூசி வளையல் அணிந்து விறலி வே ஷம் போட்டுக்கொண்டு வாருங்கள்! ஆண் பிள்ளைத் தனம் வேண்டாம்" என்று காறித் துப்பினாற் கூட அவ்வளவு காரம் இராது. அதே கருத்தைக் குளிர்ச்சியாகக் கொல்லும் விஷத்தைப் போல அந்தப் பாட்டு வெளிப்படுத்தியது. பாண்டியன் கவிதையைப் படித்தான்; சோழன் அதன் கருத்தை உணர்ந்தான்; சேரன் பாரியின் பெருமையை ஓர்ந்தான். �இனி இந்த முயற்சியினால் பயன் இல்லை' என்று ஒவ்வொருவரும் எண்ணினர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அலங்க மலங்க விழித்தனர். எல்லோர் கருத்தும் ஒன்றே என்பது தெளிவாயிற்று. " சரி, இவ்வளவு காலம் இங்கே காவல் புரிந்த நம் படைகளுக்கு வேறு போர்க்களத்தை உண்டாக்கிக் கொடுப்போம்" யாவரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகலாம்" என்று மூன்று அரசர்களும் ஒரே குரலில் உத்தரவிட்டனர். பறம்புமலை காலை யிளஞ் சுடரோன்முன் பொன்மலை போலப் பொலிந்து நிமிர்ந்து நின்றது; பாரியின் புகழ்போல வானை யளாவ ஓங்கி நின்றது. அன்று மீட்டும் பறம்புமலை இறைவன் கோயிலில் சிறப்பான பூசை நடந்தது. நாட்டிலிருந்து உணவு வர இப்போது தடையொன்றும் இல்லை.நெல்லும் வெல்ல குவியல் குவியலாக வந்தன. புலவரும் கலைஞரும் திரண்டு வந்தனர். அரண்மனையில் பெருங்கூட்டம். ஆடலும் பாடலும் முழங்கின. முரசும் சங்கும் ஒலித்தன. கபிலரும் பாரியும் அறிவுக்கும் கொடைக்கும் அடையாளம் போல வீற்றிருக்கின்றனர். ஒருபால் கிளிகளும் குருவிகளும் சர்க்கரைப் பொங்கல் விருந்துண்டன. "பாரி வாழ்க!" என்று வாழ்த்துவாரோடு கிளிகளும் சேர்ந்து, "பாரி வாழ்க" என்கின்றன. "கபிலர் வாழ்க" என்று வாழ்த்துவாரோடு பாரியும் சேர்ந்து வாழ்த்துகின்றான். கபிலர் வேதமோதும் தம் இனிய கண்டத்திலிருந்து புறப்படும் கணீரென்ற தொனியில், "நம்முடைய தோழர்களாக வளர்ந்து முற்றுகைக் காலத்தில் இரவில் காட்டிலிருந்து நெற் கதிர் கொண்டுவந்து நமக்கு உதவிய இந்தக் கிளிகளும் குருவிகளும் வாழ்க!" என்று வாழ்த்தினார். யமன் வாயில் மண் காலத்தின் கோலத்தால் சோழநாடு இரண்டு பிரிவு பட்டு இரண்டு அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டது. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்னும் இருவரும் சோழ குலத்தினரே. இருவரும் தனித்தனியே ஒவ்வொரு பகுதியை ஆண்டுவந்தனர். அவ்விருவருக்கும் இடையே இருந்த பகைமை மிகக் கடுமையானது. கடுமை, கொடுங்கடுமை மிகக் கொடுங்கடுமை என்று அந்தப் பகைமையின் உரத்தை எப்படிச் சொன்னாலும் பற்றாது. இருவரும் வீரத்திலும் கொடையிலும் ஒத்தவர்கள்; புலவர்களைப் போற்றுபவர்கள். ஆயினும் அவ்விருவரும் ஒன்றவில்லை. இந்தப் பகைநிலைக்கிடையே துன்புற்றவர்கள் குடிமக்களே. சோழநாடு மிகப் பழங்காலமுதல் பிரிவின்றிச் சிறந்திருந்தது. நாடு முழுவதும் உடல் போலவும் அதனைத் தனியாளும் அரசன் உயிர்போலவும் இருப்பதாகக் கவிஞர் வருணிப்பது வழக்கம். இப்பொழுதோ அந்த உடல் இரண்டு துண்டுபட்டுக் கிடக்கின்றது. ஒரு பகுதியில் உள்ள குடிகள் மற்றொரு பகுதியிலுள்ளா ரோடு கலந்து பழக வழியில்லை. அது பகைவன் நாடு என்ற ஒரு பெருந்தடை. அவர்களிடையே நெடுங்காலமாக இருந்த உறவையும் நட்பையும் வியாபாரம் முதலியவற்றையும் அறுத்துவிட்டது. மகளைக் கொடுக்க தந்தை நலங்கிள்ளியின் ஆட்சியின் கீழ் இருப்பான்; மகளும் மருமகனும் நெடுங்கிள்ளியின் குடிமக்களாக இருப்பார்கள். இருசாராரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பழக வாய்ப்பில்லை. என்ன செய்வது! அரசர்களுக்குள் உண்டாகிய பகைமை நாடு முழுவதும் துன்புற ஏதுவாகியது. 'இதைக்காட்டிலும் அரசன் இல்லாத நாடு சிறந்ததாகஇருக்குமே. நினைத்தபடி நினைத்த இடத்துக்குப் போகலாம், வரலாம், திரியலாம்' என்று எண்ணி வருந்தினர் சிலர். தமிழ்நாட்டில் புலவர்களுக்கு இருந்த நன்மதிப்பை என்னவென்று சொல்வது! சாதாரண ஜனங்களுக்கு இல்லாத பெருமையும் உரிமையும் அவர்களுக்கு இருந்தன. ஒருவருக்கொருவர் பகைமை சாதிக்கும் இரு பெருவேந்தரிடத்தும் சென்று பரிசு பெறும் உரிமையை அவர்கள் படைத்திருந்தார்கள். இன்று ஒரு புலவர் மதுரையிலே பாண்டியன் அவைக்களத்தில் தம்முடைய நாவன்மையைப் புலப்படுத்திப் பரிசு பெறுவார். நாளை அவரே பாண்டியனுக்குப் பரம விரோதியாகிய சோழன்பால் சென்று அவனையும் பாடிப் பரிசு பெறுவார். அவர்களுக்கு எங்கும் அடையா நெடுங்கதவுதான். இளந்தத்தன் என்னும் புலவன் இளம் பருவத்தை யுடையவன்; கற்பன கற்றுக் கேட்பன கேட்டு இப்பொழுதான் உலக அரங்கத்தில் உலவக் கால் வைத்திருக்கிறான். அவனைப் பலர் அறியார். இனி மேல்தான் அவன் தன் புலமையைத் தமிழ்நாட்டில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். தகுதியறிந்து பரிசளிக்கும் வள்ளல் யாரென்று ஆராய்ந்தறிந்த அப்புலவன் சோழன் நலங்கிள்ளியின் அரசவையை அணுகினான். தன்னுடைய புலமைத் திறத்தைப் புலப்படுத்தினான். இளமை முறுக்கோடு அவன் வாயிலிருந்து வந்த தமிழ்க் கவிதை நலங்கிள்ளியின் உள்ளத்தே இன்பத்தைப் பாய்ச்சியது."இவ்வளவு காலமாகத் தாங்கள் இந்தப் பக்கம் வந்ததேயில்லையே" என்றான் நலங்கிள்ளி. "கூட்டைவிட்டு முதல் முதலாக வெளியேறும் சிறு குருவி நான். இன்னும் தமிழ்நாட்டின் விரிவை உணரும் பாக்கியம் கிடைக்கவில்லை. முதல் முதலாக இந்த அவைக்களத்திலே என் கவிக் குழந்தையைத் தவழவிடுகிறேன். அதனை ஆதரித்துப் போற்றும் செவிலித் தாயைக் கண்டுகொண்டேன். நல்ல சகுனம் இது. இனி நான் ஊக்கம் பெறுவேன்; தமிழ் மன்னர்களை என் கவிதைக் காணிக்கையுடன் கண்டு நட்புப்பூண்பேன். உலகையும் வலம் வருவேன்." இளம் புலவன் உற்சாகத்தோடு பேசிய பேச்சிலே அவனுடைய உள்ள எழுச்சி பூரணமாக வெளிப் பட்டது. மனிதன் தொடங்கும் முயற்சிகளிலெல்லாம் வெற்றி உண்டாகிவிடுகிறதா? பெரும்பாலும் தோல்வியைத்தான் அவன் காண்கிறான். இந்தப் புலவன் தன் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றான். வரிசை யறிந்து பாராட்டும் வள்ளலிடம் முதற் பரிசைப் பெற்றான். அவனுக்கு ஊக்கம் உண்டாகத் தடை என்ன? உலகத்தையும் வலம் வரலாமென்ற பெருமிதம் எழுவதற்கு அந்த ஊக்கமும் பயமறியாத இளமையும் ஆதாரமாக இருந்தன. புலவர்களுக்குச் சம்மானம் பெரிதல்ல; விருந்தும் பெரிதல்ல. யானைகளையும் குதிரைகளையும் ஆயிரம் ஆயிரமாகக் கொடுத்தாலும் அவர்கள் மகிழ மாட்டார்கள். தரம் அறிந்து பாராட்டும் வள்ளல்களையே அவர்கள் தேடுவார்கள். தம்முடைய கவிதையின் நயத்தை அறிந்து இன்புற்றுப் பாராட்டி அவர்கள் அளிக்கும் பரிசில் எவ்வளவு சிறியதானாலும் பெரு மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்வார்கள். நலங்கிள்ளி வரிசை யறிபவர்களிற் சிறந்தவன். இனிய கவிதையைக் கேட்பதிலும், அக்கவிதையின் தரந்தெரிந்து பாராட்டுவதிலும், நல்ல கவிஞர்களை நாட்டுக்கு அணியாக எண்ணிப் போற்றி வழிபடுவதிலும் யாருக்கும் இளையாதவன். இது தமிழ் உலகம் அறிந்த செய்தி. இளந்தத்தன் அவன் புகழைப் பலரும் சொல்லக் கேட்டுத்தான் அவன்பால் வந்தான். வந்தது வீண் போகவில்லை. வீண் போவதா? புலவன் தான் நினைத்ததற்குப் பல மடங்கு அதிகமான பரிசிலைப் பெற்றான்; பாராட்டைப் பெற்றான்; எல்லாவற்றையும் விட, 'இனி எங்கும் உலாவித் தமிழ் பரப்பலாம்' என்ற தைரியத்தைப் பெற்றான். சிலநாள் நலங்கிள்ளியின் உபசாரத்தில் பொழுது போவதே தெரியாமல் இருந்த இளந்தத்தன், "தமிழ் நாட்டின் விரிவை அளந்தறிய விடை கொடுக்க வேண்டும்" என்று சோழனிடம் தெரிவித்தான். வரும் புலவரை வாவென்று சொல்லத் தெரியுமேயன்றிப் போகும் புலவர்களைப் போவென்று சொல்லத் தெரியாது அவனுக்கு. "அடிக்கடி வரவேண்டும் என்னை மறவாமல் இருக்கவேண்டும். உலக முழுவதும் புலவர்களுக்கு ஊர். ஆனாலும் இந்த இடத்திலே தனிப்பற்று இருந்தால் நான் பெரும் பேறு பெற்றவனாவேன்" என்ற நயஞ் செறிந்த வார்த்தைகள் சோழனிடமிருந்து வந்தன. "மறப்பதா? எப்படி முடியும்? முதல் முதலாகப் பரிசு பெற்ற இந்த இடத்தை மறந்தால் என்னிலும் பாவி ஒருவனும் இருக்க முடியாது. எனக்குத் தாயகம் இது" என்று கூறிப் புறப்பட்டான் புலவன். சோழ நாட்டின் மற்றொரு பகுதிக்கு உறையூர் தலைநகரம். அங்கிருந்து ஆண்டு வந்தான் நெடுங்கிள்ளி. நலங்கிள்ளியின் குணச்சிறப்பு அவ்வளவும் அவனிடம் இல்லை. ஆயினும் பழங்குடியிற் பிறந்து பயின்ற பெருமையால் பல நல்லியல்புகள் அவனிடம் அமைந்திருந்தன. இளந்தத்தன் நலங்கிள்ளியிடம் பெற்ற வரிசையுடன் புறப்பட்டான். உறையூர் சென்று நெடுங்கிள்ளியையும் பார்த்துப் பிறகு மற்ற நாடுகளுக்குப் போகலாம் என்று எண்ணினான். 'இனி நமக்கு எங்கும் சிறப்பு உண்டாகும்' என்ற உறுதியான நம்பிக்கையோடு அவன் நெடுங்கிள்ளியின் ராஜ்யத்தில் புகுந்து உறையூரை அடைந்தான். 'நெடுங்கிள்ளியின்மேல் படையெடுப்பதற்காகச் சோழன் நலங்கிள்ளி படைகளைக் கூட்டுகிறான்' என்ற செய்தி அப்போது நாட்டில் உலவியது. அதனால் நெடுங்கிள்ளியும் தன் நாட்டுப் படைவீரர்களை நகரத்தில் கூட்டிவைத்திருந்தான். போருக்கு ஆயுத்தமாக அவ்வீரர்கள் இந்தச் சமயத்தில் இளந்தத்தன் உறையூர் வீதியிலே சென்றான். அவனைக் கண்ட ஒரு வீரன், 'இவன் யாரோ புதியவனாக இருக்கிறான். பகைவன் நாட்டிலிருந்து வருகிறானோ என்னவோ?' என்று எண்ணித் தன் படைத்தலைவனுக்கு அதனைக் கூறினான். தலைவன் பார்த்தான்; உடனே, "சந்தேகம் என்ன? நலங்கிள்ளியிடமிருந்து ஒற்றனாக வந்திருப்பான். இவனை மறித்துக் காவல் செய்யுங்கள்" என்ற கட்டளையை அவன் இட்டுவிட்டான். இளந்தத்தன் சிறைப்பட்டான். அவன் வார்த்தை ஒன்றும் முரட்டுப் போர்வீரர்களின் காதில் ஏறவில்லை." நான் நலங்கிள்ளியிடமிருந்து வருவது உண்மைதான். ஆனால் நான் ஒற்றன் அல்ல. அவனிடம் பாடிப் பரிசு பெற்று வருகிறேன். அவன் அளித்த பரிசுப் பொருள்களை இதோ பாருங்கள்" என்றான். "இதெல்லாம் வேஷம்; பொய். புலவன் போல வேஷம் போட்டால் சர்வ சுதந்திரம் உண்டென்று தெரிந்துகொண்டு இப்படிப் புறப்பட்டாய் போலும்!" " நான் பிறவியிலேயே புலவன் தான். நான் பாடின பாட்டை வேண்டுமானால் சொல்லுகிறேன், கேளுங்கள்." "அதெல்லாம் சூழ்ச்சி. வேறு யாராவது இயற்றிய பாட்டை நீ தெரிந்துகொண்டு இங்கே கதை பேசு கிறாய்." "புதிய கவிதையைச் சொல்லட்டுமா? அப்பொழுதாவது நான் புலவனென்று தெரிந்துகொண்டு விட்டு விடுவீர்களா?" புதிய கவிதையும் வேண்டாம்; மண்ணும் வேண்டாம். அதெல்லாம் யமதர்மராஜன் சந்நிதானத்தில் போய்ச் சொல்லிக்கொள். நீ புலவனென்றால் பல பேருக்குத் தெரிந்திருக்குமே. இங்கே யாரையாவது தெரியுமா?" இளந்தத்தன் இப்பொழுதானே வெளியே புறப்பட்டிருக்கிறான்? அவனுக்கு யாரைத் தெரியும்? "ஐயோ! இந்த ஊருக்கே நான் வந்ததில்லையே! இப்பொழுதுதானே வருகிறேன்? எனக்குப் பழக்க மானவர் ஒருவரும் இல்லையே!" என்று புலம்பினான். நெடுங்கிள்ளியிடம், 'பகையரசனிடமிருந்து வந்த ஓர் ஒற்றனைச் சிறைப்படுத்தியிருக்கிறேன்' என்ற செய்தி படைத்தலைவனிடமிருந்து சென்றது. அரசன் முன்பின் யோசிக்கவில்லை; "தாமதம் ஏன்? கொன்று விடுங்கள்" என்ற ஆணையை வீசினான். 'முதற் பரிசு நலங்கிள்ளி தந்தான். இரண்டாம் பரிசு யமனிடம் பெறப்போகிறோம்!' இதுதான் இளங் தத்தன் உள்ளத்தில் நின்ற எண்ணம். அட மனித வாழ்வே! அற்ப சந்தோஷமே! நேற்று அவன் இருந்த இருப்பென்ன! நின்ற நிலை என்ன! வைத்திருந்த நம்பிக்கை என்ன~! உலக முழுவதும் தன்னை வரவேற்கும் கைகளையும் பாராட்டும் வாய்களையும் கற்பனைக் கண்ணாலே கண்டான்; இன்றோ யமன் அவன் முன் நிற்கிறான். எந்தச் சமயத்தில் அவன் தலை தனியே பூமியில் உருளப்போகிறதோ! எந்த வேளையில் அவன் புறப்பட்டானோ! அவன் தமிழ்நாடு முழுவதும் பிரயாணம் செய்து திரும்ப எண்ணிப் புறப்பட்டிருக்கவேண்டும்; திரும்பாப் பிரயாணத்துக்காகவா அவன் நாள் பார்த்தான்! எவ்வளவோ சம்மானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து வரலாமென்ற ஆசையோடு புறப்பட்டான். இந்த உடற்பாரங்கூட இல்லாமல் செய்யுமென்றால் உறையூருக்கு அவன் வந்திருப்பானா? அவன் கவிதையை மறந்தான்; நலங்கிள்ளியை மறந்தான். உயிர் நின்று ஊசலாட வாழ்நாளின் இறுதி எல்லையிலே நின்றான். ------ 3. யமன் வாயில் மண்
"எங்கே?" "கொலைக்களத்திற்கு." "ஆ!" அவன் மூர்ச்சையாகி விழுந்துவிட்டான். முகத்தில் நீர் தெளித்து அவனை எழுப்பினார்கள். எதற்காக? அடுத்தபடி அவனைக் கொல்வதற்காகத்தான். அப்பொழுது அங்கே ஏதோ ஆரவாரம் உண்டாயிற்று. ஒரு சிறு கூட்டத்தினர் சந்தோஷ கோஷத் தோடு அந்த வழியே வந்தனர். கோவூர்கிழார் என்ற நல்லிசைப் புலவர் வந்திருக்கிறார். அவரைச் சுற்றி ஜனங்கள் கூடிக்கொண்டு குதுகலித்தார்கள். தமிழுலக முழுவதும் பெரும் புகழ்பெற்ற சிறந்த கவிஞர் அவர். அரசனை நோக்கிச் செல்லும் அப்புலவரைச் சூழ்ந்த கூட்டம் யமனை நோக்கிச் செல்லும் இளந்தத்தனை அணுகியது. அப்பொழுதுதான் அந்த இளம் புலவன் மூர்ச்சை தீர்ந்து கண் விழித்தான். கோவூர் கிழார் போகிறார் என்பதை அந்தக் கூட்டத்தினரின் பேச்சால் உணர்ந்துகொண்டு ஓலமிட்டான்:"புலவர் திலகரே ஒலம்! கோவூர்கிழாரே ஓலம்!' என்று கதறினான். கோவூர்கிழார் காதில் இந்தப் புலம்பல் பட்டது. அவர் நின்றுவிட்டார். விஷயத்தை விசாரித்தார். இளந் தத்தனை அணுகிப்பேசினார். "யாதொரு பாவமும் அறியாதவன் நான். என்னை ஒற்றனென்று கொல்லப்போகிறார்கள்." அறிவிற் சிறந்த அப்பெரியார் அவனோடு சில கணம் பேசினார்.'உண்மையில் அவன் புலவன் தான்' என்பதை உணர்ந்துகொண்டார். இனம் இனத்தை அறிவது இயல்புதானே?' என்ன காரியம் இது? பெரிய பாதகச் செயலுக்கு இவ்வரசன் உள்ளாகி விட்டானே! இந்த இளம் புலவன் குற்றமின்றியே கொலைப்படுவதா?" என்று நினைத்தபோது அவர் உடல் நடுங்கியது. கொலையாளிகளைப் பார்த்து," சற்றுப் பொருங்கள். இவரை நான் அறிவேன். இவர் ஒற்றர் அல்ல. மன்னனிடம் இதைப் போய்ச் சொல்லி வருகிறேன்" என்று கூறிவிட்டு விரைவாக அரண்மனையை நோக்கி நடந்தார். யமன் வாயை நோக்கிச் சென்ற கவளம் அந்தரத்திலே நின்றது. "அரசே, அந்தப் புலவர்களின் பெருமையை நான் என்னவென்று சொல்வேன்!" என்று நிதானமாகப் பேச ஆரம்பித்தார் கோவூர்கிழார். "அதில் என்ன சந்தேகம்? புலவர்களால்தான் எங்களுடைய புகழ் நிலைநிற்கிறது" என்று ஆமோதித் தான் நெடுங்கிள்ளி. "அவர்களுடைய முயற்சியைச் சொல்வதா? அடக்கத்தைச் சொல்வதா? திருப்தியைச் சொல்வதா? அவர்களும் ஒரு விதத்தில் அரசர்களாகிய உங்களைப் போன்றவர்களே!" "கவிஞர்களென்ற பெயரே சொல்லுமே." "எங்கெங்கே ஈகையாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போகிறார்கள். பழுத்த மரம் எங்கே உண்டோ அங்கே பறவைகள் போய்ச் சேருகின்றன அல்லவா? கடப்பதற்கரிய வழிகள் நீளமானவை என்று நினைக்கிறார்களா? இல்லை இல்லை. ஒரு வள்ளல் இருக்கிறானென்றால் நெடிய என்னாது சுரம் பல கடக்கிறார்கள். அவனை அடைந்து தமக்குத் தெரிந்த அளவிலே அவனைப் பாடுகிறார்கள்.அவன் எதைக் கொடுக்கிறானோ அதைத் திருப்தியோடு பெற்றுக்கொள்கிறார்கள். பெற்றதைத் தாமே நுகராமல் தம்முடைய சுற்றத்தாரும் நுகரும்படி செய்கிறார்கள். நாளைக்கு வேண்டுமென்று வைத்துக் கொள்வதில்லை. திருப்தியாக உண்ணுகிறார்கள்; எல்லோருக்கும் தாராளமாகக் கொடுக்கிறார்கள். மறுபடியும், வரிசை அறிந்து கொடுக்கும் உபகாரி எங்கே இருக்கிறானென்று தேடிப் புறப்பட்டு வருகிறார்கள். வரிசை அறிவோர் கிடைக்காவிட்டால் வருந்துகிறார்கள். இந்த நல்ல பிராணிகளால் யாருக்காவது தீங்கு உண்டோ? கனவிலே கூட அவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்க மாட்டார்கள்; நினைக்கவும் தெரியாது. பரம சாதுக்கள். நான் சொல்வது உண்மையல்லவா?" "முக்காலும் உண்மை. புலவர்களால் நன்மை உண்டாகுமேயன்றித் தீமை உண்டாக வழியே இல்லைஅவர்கள் கடிந்து சொன்னாலும் அது நன்மையைத் தான் விளைவிக்கும்." "அதைத் தான் நான் வற்புறுத்திச் சொல்கிறேன். இவ்வளவு சாதுவாக இருந்தாலும் அவர்களுடைய பெருமை பெரிது. உங்களைப் போன்ற சிறப்பு அவர்களுக்கும் உண்டு. பகைவர்கள் நாணும்படி தலை நிமிர்ந்து சென்று வெற்றி கொள்ளும் தன்மை அவர்களிடமும் உண்டு. கல்விவீரர்கள் அவர்கள். ஓங்கு புகழ் மண்ணாள் செல்வம் எய்திய நும்மனோரைப் போன்ற தலைமை அவர்களுக்கும் உரியதே." "மிகவும் பொருத்தமான வார்த்தைகள்." கோவூர்கிழார் சிறிது மௌனமாக இருந்தார். "பிறர்க்குத் தீதறியாத வாழ்க்கையுடைய அவர்களைக் குற்றவாளிகளாக எண்ணுவது--" "மடமையிலும் மடமை" என்று வாக்கியத்தை முடித்தான் நெடுங்கிள்ளி. "அரசே, இன்று இந்த உண்மை இவ்வூரில் பொய்யாகிவிடுமென்று அஞ்சுகிறேன்." "ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?" என்று திடுக்குற்றுக் கேட்ட்டான் அரசன். "ஒரு பாவமும் அறியாத புலவனாகிய இளந்தத்தனைக் கொலைக்களத்துக்குப் போகும் வழியில் கண்டேன். புலவர் உலகமே தூக்கு மரத்தில் தொங்குவது போல அஞ்சினேன். ஓடி வந்தேன் இங்கே. அவன் யான் அறிந்த புலவன்." கோவூர்கிழார் முன்னம் அப்புலவனை அறியாவிட்டாலும் ஒரு கணத்தில் அவனை அறிந்துகொண்டார் என்பதில் பிழை என்ன? �அப்படி அல்ல அவர் சொன்னது பொய்' என்றாலோ, ஒருவன் உயிரைப் பாதுக்காக்கச் சொன்ன அச் சொல்லைக் காட்டிலும் வாய்மை வேறு உண்டோ? "பொறுத்தருள வேண்டும் நான் செய்தது பிழை....யர் அங்கே! ஓடுங்கள்.
இளந்தத்தரை விடுவித்து அழைத்து வாருங்கள்...ஆசனம் கொண்டு வாருங்கள்...
என்ன பாதகம் செய்தேன்! அபசாரம்! அபசாரம்! ...பகைமை இருள் என் கண்ணை
மறைத்துவிட்டது.. உங்களால் நான் அறிவு பெற்றேன்." - அரசன் வார்த்தைகள்
அவன் உணர்ச்சியைக் காட்டின. அச்சமும் பச்சாதாபமும் துள்ளின அவன்
வாக்கில்.கோவூர்கிழார் முகத்தில் ஒளி புகுந்தது. இளந்தத்தன் உடம்பில்
உயிர் புகுந்தது. யமன் வாயில் மண் புகுந்தது. இந்த நிகழ்ச்சியை அறிந்த
உலகத்தார் உள்ளத்தில் வியப்புப் புகுந்தது. 4. யானைக் கதை
புலவர் பெருமான் புதிய பாண்டிய மன்னனைக் கண்டுவரலாமென்று புறப்பட்டார். இராசதானி நக ருக்கு வந்தார். அவருடைய நண்பர்கள் அவரை எதிர்கொண்டழைத்துப் பாராட்டினார்கள். பாண்டிய மன்னனாகிய அறிவுடை நம்பியின் குணங்கள் எத்தகையனவென உசாவி அறிந்துகொண்டார். "அவன் நல்லவன்தான் அவனுடைய மந்திரிகளே பொல்லாதவர்கள். அவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு பாண்டியன் அரசியலை நடத்துகிறான்" என்றார் சிலர். "அரண்மனையில் நேர்ந்த செலவை ஈடுகட்டுவதற்காக அதிக வரி விதிக்க வேண்டும் என்று யோசனை நடக்கிறதாம். குடிமக்கள் இதை அறிந்து மிக்க வருத்தத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள்" என்று சிலர் கூறினர். 'அதிக வரியைத் தாங்கும் சக்தி எமக்கு இல்லை' என்பதைத் தெரிவிக்க வழியில்லாமல் குடிகள் தவித்துக்கொண்டிருந்தார்கள். 'வரி கொடா இயக்கம்' அந்தக் காலத்திற்குத் தெரியாத சமாசாரம். நல்ல வேளையாகத் தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்ற பேரறிவாளராகிய பிசிராந்தையார் வந்து சேர்ந்தார். அவரிடம் தங்கள் குறைகளைக் கூறி முறையிட்டார்கள். அறிவுடைய புலவர்கள் அரசர்களையும் வழிப்படுத்தும் ஆற்றலுடையவர்கள் என்பது தமிழ் நாட்டில் பிரசித்தமான விஷயம். தம்மிடம் வந்து குறை கூறியவர்களிடம்,"என் னால் இயன்றதைச் செய்கிறேன்" என்று ஆந்தையார் சொல்லிப் பாண்டியனைப் பார்க்கச் சென்றார். பாண்டியன் அப்பெரும் புலவரது புகழை நன்கு அறிந்திருந்தான். அவரை மிக்க மரியாதையோடு வர வேற்று உபசாரம் செய்தான். யோகக்ஷேமங்களை விசாரித்தான். பிசிராந்தையாரும் அறிவுடை நம்பியின் மனம் உவக்கும்படி பல விஷயங்களைக் கூறினார். அப்பால் வழியிலே கண்ட காட்சி ஒன்றைக் கூறுவார்போல ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார். "அரசே! நான் கண்ட காட்சியை என்னவென்று கூறுவது! தளதளவென்று விளைந்து முற்றியிருந்த வயல். நெற்கதிர்கள் அறிவுடையோரைப் போலத் தலை பணிந்து நின்றன. நிலமகள் வஞ்சனையின்றித் தனது வளத்தைத் தானஞ் செய்ய அதனைச் சுமந்து நிற்பது போலத் தோற்றியது அவ்வயல். அதைக் காணும்போது என் கண்கள் குளிர்ந்தன. "என்ன கொடுமை! அடுத்த கணத்தில் ஒரு களிறு அவ்வயலில் புகுந்தது. அங்குள்ள நெற்பயி ரைச் சுருட்டி அலைத்து வாயில் செலுத்தியது. தன் காலினால் பயிரில் பெரும்பாகத்தைத் துகைத்து அழித் தது. அதன் வாயிலே சென்றதைக் காட்டிலும் காலினால் அழிக்கப்பட்ட பயிரே அதிகம். தானும் உண்ணாமல் உடையவனுக்கும் பயன்படாமல் அத்தனை பயிரையும் அந்தக் கொடிய யானை வீணாக்கி விட்டது." "அப்பால்?" என்று அரசன் ஆர்வத்தோடு கேட்டான். "அப்பால் என்ன? போனது போனதுதான். அந்த யானைக்குத் தினந்தோறும் அந்த நெல்லை அறுத்துக் கவளமாகக் கொடுத்து வந்தால் எவ்வளவோ மாதங்களுக்கு வரும். ஒருமா நிலத்திலே, குறைவாக இருந்தாற்கூட ஒருயானைக்கு எவ்வளவோ நாளைக்குக் கவளம் கொடுக்கும். இந்த மாதிரி, யானையே அழிக்கப் புகுந்தால் நூறு செய்யாய் இருந்தாலும் போதாது. என்ன செய்வது, அந்த யானைக்கு இந்தக் கணக்குத் தெரிகிறதா? யானை ஒரு விலங்கு. அறிவு இல்லாதது. அறிவுடையவர்கள்கூட அந்த யானையைப் போலச் சில சமயங்களில் நடந்துகொள்கிறார்கள்!" என்றார் புலவர். "யார்? என்னசெய்கிறார்கள்?" என்று அரசன் வினவினான். "அரசர்களில் சிலர் அந்த யானையைப் போல நடக்கிறார்கள். குடிகளிடம் முறையாக வரி வாங்கி ஆதரித்து வந்தால் அவர்களுக்கு ஊக்கம் உண்டாகும்; நிலத்தைப் பண்படுத்தி அதிகமாகப் பயன் தரும்படி செய்வார்கள். அதனால் அரசனுக்கும் வருமானம் அதிகப்படும். இப்படியின்றி அறியாமையினால் அதிக வரி விதித்து அவர்களைத் துன்புறுத்தினால் குடிமக்கள் என்ன செய்வார்கள்? அறிவுடை வேந்தன் வரி வாங்கும் நெறியறிந்து கொள்ளின். நாட்டு வளம்கோடி பங்கு அதிகமாகி விருத்தி பெறும். அறிவில்லாத அரசன் அரசாட்சி செய்யத் தொடங்கினால் அவனைச் சுற்றி முட்டாள்கள் கூடிவிடுகிறார்கள்.' இது செய்யலாம், இது செய்யக்கூடாது' என்று அவர்கள் ஆராயமாட்டார்கள். அரசன் கூறுவன எல்லாம் சரியென்று ஆமோதிப்பார்கள். 'மதுரை நகருக்குக் காவிரி நதியைக் கொண்டுவர எண்ணுகிறேன்' என்று அரசன் சொன்னால். 'ஆஹா! அப்படியே செய்யலாம். மகாராஜா நினைத்தால் ஆகாதது என்ன!' என்று தலை யசைப்பார்கள். 'வரிசை யறியாக் கல்லென் சுற்ற'மாகிய இத்தகையவர்கள் பேச்சைக் கேட்டு அரசன் நடப்பானானால் அவனுக்கு வேறு விரோதியே வேண்டாம். குடிமக்களிடம் இரக்கம் இல்லாமல் வரிவிதித்து லாபம் பெறலாம் என்று அவர்கள் சொல்வார்கள்; அரசனும் கேட்பான். அப்பால் யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான்; உலகமும் கெடும்" என்று கதையோடு கருத்தையும் பிணைத்து விரித்துப் புலவர் நிறுத்தினார். வரியைப் பற்றிய பேச்சை எடுத்தபோதே அரசனுக்குக் குடர் குழம்பியது. அவர் முற்றும் கூறிய போது புலவர் தன்னையே நினைந்து கூறினார் என்பதைத் தெளிவாக உணர்ந்தான். அவர் கூறிய கதையிலே ஈடுபட்ட அவன் மனம் வயலை அழிக்கும் யானையையே நினைந்துகொண்டிருந்தது. தன் செயலையும் அவ்யானையின் செயலையும் ஒப்பு நோக்கிப் பார்த்தான் புலவர் கூற்று உண்மையே என்பதை அறிந்தான். " புலவார் பெருமானே! உங்கள் உபதேசம் மிகவும் உபயோகமாயிற்று. அது என் காது வெறுக்கும்படியாக இருந்தாலும், நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதை உணர்ந்தேன். நான் செய்ய இருந்த பெரும்பிழையினின்றும் நீங்கினேன்" என்று பாண்டியன்சொல்லிப் புலவரைப் பாராட்டினான். வரியை அதிகப் படுத்தும் யோசனை நின்றது. ஒரு புரட்சியும் இல்லாமல்
மிகவும் சுலபமான வழியில் வரிவிதிப்பு நீக்கப் பட்டது. பிசிராந்தையார்,
அறிவுடை நம்பியாகிய யானையைத் தம் அறிவுக் கயிற்றால் கட்டிவிட்டார்.
அதனால் யானைக்கும் நன்மை; நாட்டுக்கும் நன்மையே உண்டாயிற்று. 5. குடிப் பெருமை
தாமப்பல் கண்ணனார் என்ற புலவர் மாவளத்தானுடைய நட்புக்குப் பாத்திரமானவர்;அந்தணர். தமிழ் இன்பத்தைத் தேக்கும் உள்ளத்தையும் தமிழ்ச் செய்யுட்கள் பாயும் மடையாகிய செஞ் செவிகளையும் உடைய மாவளத்தானுக்கு அவரைக் கண்டாலே மகிழ்ச்சி பொங்கும்;அவர் வார்த்தையைக் கேட்டாலோ உள்ளம் பூரிக்கும்;அதுவும் தமிழ்க் கவிதையை அவர் சொல்ல ஆரம்பித்தால் அவன் தன்னையே மறந்துவிடுவான். இந்த மாதிரி, செந்தமிழ் நுகர்ச்சியிலே இருவரும் சேர்ந்து மகிழ்வதோடு நில்லாமல், வேறொரு வகையிலும் அவர்கள் இருவரும் சேர்ந்து மகிழ்வதுண்டு. இருவரும் சதுரங்கம் விளையாடுவதிலே வல்லவர்கள். இளவரசனும் புலவரும் சதுரங்க விளையாட்டிலே ஈடுபட்டுவிட்டால் சில சமயங்களில் பகல் போனதும் தெரியாது; இரவு போனதும் தெரியாது; அப்படி விளையாடுவார்கள். புலமை விளையாட்டிலும் வட்டு விளையாட்டிலும் ஒருங்கு பயின்ற உள்ளத்தினராகிய அவர்களுக்கிடையே நட்பு முதிர்ந்துவந்தது வியப்பன்று. ஒருநாள் இருவரும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பகலுணவு உண்டு உட்கார்ந்தவர்கள், இருட்டப்போகிறது. இன்னும் எழுந்திருக்கவில்லை. ஒருநாளும் இல்லாதபடி அன்று புலவருக்கு ஆதியிலிருந்து தோல்விதான் உண்டாயிற்று. தோல்வி உண்டாக உண்டாக ரோசம் மிகுதியாயிற்று. மாவளத்தானோ வெற்றி மிடுக்கினால் ஊக்கம் பெற்று விளையாடினான். "என்ன, தாமப்பல் கண்ணனாரே, இன்று சதுரங்க பலம் உம்மிடத்திலே இல்லையே! நான் அரச குலத்திலே பிறந்தவன், சதுரங்க வலியுடையவன்; நான் தான் வெல்கிறேன். உம்முடைய பக்கம் வெற்றி உண்டாக இது தமிழ்க் கவிதை அல்ல" என்று அந்த உற்சாகத்திலே மாவளத்தான் பேசத் தொடங்கினான். "போர்க்களத்துப் படைக்கும் இந்தச் சதுரங்கத்துக்கும் சம்பந்தமே இல்லை. அது வேறு, இது வேறு" என்று புலவர் சொல்லிக் காயை நகர்த்தி வைத்தார். "நேற்றுவரையில் வேறாகத்தான் இருந்தன. இன்று இரண்டும் ஒன்றாகவே தோற்றுகின்றன. நீர் அந்தணர். நான் அரசன், சதுரங்கபலத்தால் வெல்லும் உரிமை எனக்குத்தான் உண்டு." என்று சொல்லி அவர் வைத்த காய் மேலே செல்ல முடியாமல் மடக்கினான் இளங்கோ. "அந்தணருக்கும் வீரம் உண்டு; துரோணர், கிருபாசாரியார் என்பவர்களையும் விறல் வீரனாகிய அசுவத்தாமனையும் மறந்து விட்டீர்களோ!" என்று வாதப்போர் தொடங்கினார் தாமப்பல் கண்ணனார். "அதெல்லாம் கதை. துரோணரும் கிருபரும் பொதுவிதிக்கு விலக்கானவர்கள். க்ஷத்திரியர்களைச் சார்ந்து பிழைத்தவர்கள். அந்தணர் கூட்டத்திலே அவர்களுக்கு இடம் இல்லை" என்று திருப்பினான் மாவளத்தான். அருச்சுனன் வீரமெல்லாம் துரோணர் இட்ட பிச்சை என்பதை நினைக்க வேண்டுகிறேன். கர்ணன் கற்ற வில்வித்தை ஜமதக்கினியின் புதல்வராகிய பரசுராமர் தந்ததென்பதையும் ஞாபகப்படுத்துகிறேன்." துரோணர் நூற்றைவருக்குந்தான் வில்வித்தை கற்றுத் தந்தார். அவர் சொல்லித்தந்த வித்தைக்குப் பெருமை இருந்தால் அந்த நூற்றைம்பது பேரும் சிறந்த வீரர்களாக இருக்கவேண்டும். அருச்சுனன் மாத்திரம் சிறந்தமைக்குக் காரணம் அவனுடைய திறமையேயன்றித் துரோணர் திறமை அல்ல." "மழை எங்கும் பெய்தாலும் நிலத்திற்குத் தக்கபடிதான் விளைவு உண்டாகிறது. களர் நிலத்தில் மழை பெய்தும் ஒன்றும் விளையவில்லையே என்றால் அது மழையின் குற்றமா? வெறும் புழுதியாக இல்லாமல் ஈரமாகி அடங்குகிறதே. அந்த அளவிலே அது பயன் அடைகிறது." இளவரசனுக்கு, மேலே தொடர்ந்து வாதம் செய்ய வழி தோன்றவில்லை. "அது கிடக்கட்டும், இந்தச் சதுரங்கத்திலே நீங்கள் துரோணராக இருங்கள் பார்க்கலாம்; உங்களுடைய நா வன்மையினால் வட்டுப்பலகையில் மாயம் நிகழாது. இங்கே திறமையோடு ஆடித்தான் வெற்றி பெற வேண்டும்" என்று பின்னும் ரோசத்தை மூட்டி விட்டான் அரசிளங்கோ. "ஓர் ஆட்டமாவாது வெல்லாமல் எழுந்திருப்பதில்லை" என்று காலைச் சிறிது நகர்த்தி நிமிர்ந்து உட் கார்ந்துகொண்டார் புலவர். தோல்விமேல் தோல்வியும், மாவளத்தான் பேச்சும் அவருடைய ரோசத்தையும் கோபத்தையும் தூண்டிவிட்டன. என்ன என்னவோ விதமாக வெல்லாம் விளையாடினார்; நன்றாக யோசித்துக் காய்களை நகர்த்தி வைத்தார்; நிச்சயமாக மாவளத்தான் படையை மறித்துவிடலாம் என்று துணிந்து காயை நகர்த்தினார். அவன் அவர் எதிர் பாராதபடி அவருடைய கட்டை மீறினான். அவனுடைய தந்திர சாமர்த்தியங்கள் அன்று உச்ச நிலையில் இருந்தன. "எவ்வளவு நாழிகை இப்படியே இருப்பது; இது விளையாட்டுத்தானே?" என்ற கோணல் எண்ணம் புலவர் நெஞ்சில் புகுந்தது. மாலை வேளையில் தாம் செய்யும் கரவு தெரியாதென்று நினைத்தாரோ, என்னவோ? திடீரென்று ஒரு காயை ஆட்டவிதிகளுக்குப் புறம்பாகத் திருட்டுத்தனமாய் மாற்றி வைத்துவிட்டார். அவன் அரசன்; கோபம் வந்தால் புயலைப் போலத் தான் வரும். புலவர் கைகரப்பதைக் கண்டுவிட்டான். எடுத்தான் காயை. படீரென்று அவர் முகத்தில் வீசினான். "ஸ் ஸ்" என்று நெற்றியைக் கையால் அமுக்கிக்கொண்டார் தாமப்பல் கண்ணனார். ரத்தம் அவர் கைக்கு அடங்காமல் வழிந்து சொட்டியது. கோபமும் அவர் உள்ளத்தில் தங்கவில்லை. "சீ, நீ சோழனுக்குப் பிறந்தவனா? நான் பிராம்மணன். உங்கள் வமிதில் இந்தத் துணிச்சல் யாருக்கும் இல்லை. நீ இந்த வமிசத்தில் பிறந்தவனாக இருந்தால் அல்லவா உனக்குத் தர்மம் தெரியும்?" என்று வார்த்தைகளை வீசி எறிந்தார். அடுத்தபடியாக நாம் எதிர்பார்ப்பது இதுதான்: மாவளத்தான் சடக்கென்று தன் உறையிலிருந்து வாளை உருவினான். அந்தணன் கோபத்தைவிட அரசன் கோபம் வீறியது என்று தெரிவிப்பதுபோல அடுத்த கணத்தில் தாமப்பல் கண்ணனார் தலை சதுரங்கக் காய்களோடு சேர்ந்து உருண்டது. ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மாவளத்தானுடைய கோபம் வட்டை எறியும்போதுதான் இருந்தது. அவர் நெற்றியில் தோன்றிய ரத்தத்தைக் கண்டவுடன் அது அவிந்தது. ஏதோ பெரும் பழியைச் செய்துவிட்டவனைப் போல அவன் நாணித் தலை குனிந்து உட்கார்ந்துபோனான். 'பெரிய பிழையைச் செய்துவிட்டோம்; இதற்கு பரிகாரம் என்ன?' என்று ஆராய்வதுபோல் அவன் சிந்தனையில் மூழ்கினான். புலவர் சொன்ன வார்த்தைகள் சரியாக அவன் காதில் நுழைந்தனவோ இல்லையோ, சந்தேகந்தான், அவர் நெற்றியிற் புறப்பட்ட ரத்தத்துளிகள், அவன் உள்ளம் முழுவதையும் கறையாக்கி அவன் உடம்பையும் குன்றவைத்துவிட்டன. எதிர்ப்புக்குமேல் எதிர்ப்பு இருந்தால்தான் கோபமும் மூளும். தாமப்பல் கண்ணணாருடைய அம்பு போன்ற கொடிய வார்த்தைகளுக்குப் பதில் இல்லை; அவை, நாணத்தால் முகம் கவிழ்ந்து உட்கார்ந்திருந்த இளவரசனுடைய மௌனத்தினால் தாக்குண்டு உதிர்ந்து போயின. அவனிடமிருந்து எதிர்த் தாக்கு ஒன்றும் வரவில்லை. இப்போது புலவர் சினம் ஆறியது. சற்று நிதானித்தார். தாம் கூறிய வார்த்தைகளை அவரே நினைத்துப் பார்த்தார். அத்தகைய நல்லிசைச் சான்றோருடைய வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகள் அல்ல அவை. அது மட்டுமா? சதுரங்க விளையாட்டானாலும் அதற்கு என்று ஒரு முறை, ஒரு தர்மம் இல்லையா? விளையாட்டுத் தர்மத்தையே கடைப்பிடிக்கத் தெரியாத அவர் உலகில் மற்ற எந்தத் தர்மத்தைக் கடைபிடிக்கப் போகிறார்! அவன் காயை எறிந்ததிலே என்ன பிழை? அவன் செய்தது சரிதான். குற்றம் தம்மேல் இருக்க இதை உணராமல் அவனைப் பின்னும் கொடிய மொழிகளால் புண்படுத்தலாமா? அந்த வார்த்தைகளை நினைத்தாலே நெஞ்சு நடுங்குமே! அவன் எறிந்த காயம் நாளைக்கு ஆறிவிடும். அவர் எறிந்தாரே அந்த வார்த்தைகளால் உண்டான புண் இந்தப் பிறவியில் ஆறுமா? 'இப்படி நம்மையே மறந்து கொட்டிவிட்டோமே' என்ற வருத்தந்தான் அவருக்கு மாறுமா? அவன் அரசன்; அவன் உணர்ச்சி செய்கையால் வெளியாகும்; மனம் மகிழ்ந்தால் கை உதவும்; அகம் சினந்தால் கை எறியும். இதை அவன் இன்று காட்டினான். புலவரோ தம் மன உணர்ச்சியை நாவால் வெளியிடுவார். அவர் மனம் மகிழ்ந்தால் வாய் பாடும். இன்று சினஞ் சிறந்த உள்ளத்தில் எழுந்த உணர்ச்சி சொல்லத் தகாத வார்த்தைகளை நாவால் வாரி இறைத்தது. அவனோ தன் கோபத்தைச் செயலில் காட்டாமல் அடங்கினான். இவரோ அடங்காமல் வசைமாரி பொழிந்தார். மாரி என்று சொல்லும்படி நெடு நேரம் வையவில்லை. சொன்னவை சில வார்த்தைகளே, ஆனாலும் அவை கூரிய அம்புபோல உயிர்நிலையில் பாயத் தக்கவை, வீரர் விடும் அம்பல்ல; கொலையொன்றையே கருதிக் காட்டில் திரியும் வேடர் விடும் முரட்டு வாளிகள் அவை. "நீ சோழனுக்குப் பிறந்தவனா?" என்ன கொடூரமான வார்த்தைகள்! - புலவர் மனத்தில் இந்த எண்ணச் சுருள்கள் விரிந்தன, 'புலவரை, அந்தணர் பெருமானை நாம் வட்டு வீசிப் புண்ணாக்கினோமே! இது வெறும் விளையாட்டு. இதில் நேர்ந்த தவறுகளைப் பொறுக்கத் தெரியாத நான், எப்படி உலகத்தார் தவறுகளைப் பொறுக்கும் சால்புடையவனாவேன்? இவ்வளவு நாள் பழகிய இப் புலவர் பெருமான், உண்மையில் பொறுத்தற்கரிய தவறு செய்தாலும் கெழுதகைமை பாராட்டிப் போற்ற வேண்டியவன் அல்லவா நான்? விளையாட்டில் வினையைப் புகுத்தினேனே. என் மடமை இது. இந்தச் சதுரங்கத்தைப் போர்க்களத்துப் படையோடு உவமித்துப்பேசிய நான் உண்மையிலேயே போரை எழுப்பிப் புண்ணையும் உண்டாக்கிவிட்டேனே! என்னுடைய ராஜச குணம் விளையாட்டின்பத்தை உணர முடியாமல் செய்துவிட்டதே. இனி இவரை நிமிர்ந்து பார்த்து நேருக்கு நேரே பேச எனக்கு வாயேது?' - இவ்வாறு படர்ந்தது மாவளத்தான் கழிவரக்கம், புலவர் நினைக்கிறார்: 'இப்போதல்லவா இவனுடைய பெருந்தன்மையை உள்ளவாறு உணர முடிகிறது? நம்முடைய கொடிய சொல்லம்புகளைத் தாங்கிக்கொண்டு இவன் மேரு மலைபோல் விளங்குகிறான். முதலில் வஞ்சகம் செய்த குற்றமோ என்னுடையது, முடிவில் தகாத வார்த்தைகள் கூறியதோ படுமோச மான பெருங்குற்றம். இதற்காக நானல்லவா நாணியிருக்கவேண்டும்? இவன் நாணி முகம் கவிழ்ந்து இருக் கிறானே! இது சால்பா? பொறுமையா? உண்மையான ஞான வீரமா? என்ன பெருந்தகைமை!" அவர் உள்ளம் பட்ட வேதனைக்குக்கங்கு கரை இல்லை, தம்மை அணு அணுவாகச் சேதித்தாலும் தாம் செய்த குற்றத்துக்குரிய தண்டனை நிறைவேறிய தாகாது என்று எண்ணினார், மாவளத்தான் நிலைகண்டு உருகினார், தம் பேதைமையை நினைந்து இரங்கினார். துக்கம் பொங்குகிறது, வேதனை நெஞ்சை அறுக்கிறது, அவனுடைய நாணத்திலே அவன் சிறப்பு ஆயிரமடங்கு மிளிர்ந்து அவர் உள்ளத்தை நிரப்புகிறது, 'மன்னிப் புக் கேட்கவேண்டும்' என்று உந்துகிறது நெஞ்சம். முந்துகிறது வார்த்தை: கூறத்தொடங்கினார், தாம் கூறிய இழி சொற்களுக்கெல்லாம் பிராயச்சித்தமாக அவனுடைய குலப் பெருமையையும். அந்தக் குலத்தில் வந்த அவன் பெருமையையும், அவன் தனக்குக் குற்றம் செய்தோரைப் பொறுக்கும் பொறுமையையும் எடுத்துக் காட்டுகிறார்; "பிறப்பின்கண் ஐயமுடை யேன் என்ற தகாத வார்த்தை சொன்னதற்குரிய விடையை நீ உன் செயலாலேயே காட்டிவிட்டாய். அக் குலத்திற்கு உரிய குணங்க ளெல்லாவற்றிற்கும் நீ இருப்பிடம் என்பதை உணர்ந்துகொண்டேன்!" என்ற குறிப்புத் தோன்றும்படி அவர் பாடுகிறார்: "சூரியன் உலகத்திலுள்ள உயிர்களுக்கு இன்றி யமையாதவன், ஆனாலும் அவனுடைய கிரணங்களின் வெம்மை முழுவதையும் தாங்குவதற்கு ஏற்ற ஆற்றல் உயிர்களுக்கு இல்லை. அதனால் அந்த உயிர்களின்மேல் கருணைகொண்டு சில தேவரிஷிகள் தினந்தோறும் சூரியனோடு பிரயாணம் செய்து அவனுடைய வெம் மையைத் தாம் ஏற்றுக்கொண்டு தணிக்கிறார்கள். அவர்களுடைய கருணையை உலகம் வியக்கிறது. ஆனால் அந்தக் கருணையாளர்கள்கூட வியக்கும்படியான கருணை சிபிச் சக்கரவர்த்திபால் இருந்தது. தன்னைக் கொல்ல வந்த பருந்துக்கு அஞ்சி அடைக்கலம் புகுந்த ஒரு சிறிய புறாவுக்காகத் துலையில் புக்குத் தன் உடம்பையே தியா கம் செய்ய முன்வந்தவன் அவன்; தனக்கென்று எத னையும் பாதுகாவாத தயா வீரனாகிய அந்த மன்னவன் குலத்தில் உதித்தவனே! இது பழம் பெருமை என்றால் இதோ நின்னோடு உடன்பிறந்தவன் பெருமை எப்படி இருக்கிறது? உன் தமையனாகிய நலங்கிள்ளி பகைவரை வென்று பெற்ற செல்வமும், இரவலர்களுக்குத் தேரை ஈயும் ஈகையும் உடையவன். அத்தகையவனுக்கு ஏற்ற இளவலே! அம்பும் வில்லும் கொண்டு போர் செய்யும் வீரர்களுள் வீரனே! விரைந்த குதிரையையுடைய வள்ளலே! 'ஆத்திமாலை புனைந்த சோழர்களாகிய நின் முன்னோரெல்லாம் அந்தணர் வருந்தும் செய்கையைச் செய்யார்; இதை நீ செய்தாயே; இது நின் இயல்புக்கு ஒத்ததோ? நீ இதைச் செய்ததால் உன் பிறப் பில் எனக்குச் சந்தேகம் உண்டாகியிருக்கிறது' என்று வெறுப்பு உண்டாகும்படி சொல்லி உன் திறத்து நான் பெரிய குற்றத்தைச் செய்தேன். அதைக் கண்டும் நீ என்னை வெறுக்கவில்லை. குற்றம் செய்த நான் முன்னே இருக்க, குற்றம் செய்தவனைப் போல நீ மிகவும் நாணினாய். 'தமக்குக் குற்றம் செய்தவர்களைப் பொறுக்கும் சிறப்பு இந்தக் குடியிற் பிறந்தவர்களுக்கு மிகவும் எளிதான காரியமென்பதைப் பாரும்' என்று சிறந்த பலமுடைய நீ இன்று புலப்படுத்தினாய். நான்தான் தவறு செய்தவன். நீ தீர்க்காயுள் பெற்று வாழ்வாயாக! பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரி எக்கரிட்ட மணலைக் காட்டிலும் பல காலம் வாழ்வாயாக!'' (புறநா.43). இந்தக் கருத்து அமைந்த பாட்டு அவர் உள்ளங் குழைந்து வெளிவந்தது.
மாவளத்தான் சிறிது தலை நிமிர்ந்தான். 'இனி வட்டாடுதலை விளையாட்டிற்கும்
செய்யேன்' என்று கூறும்போதே அவன் கண்களில் நீர் துளித்தது.
தாமப்பல்கண்ணனார் கண்களிலோ வெள்ளம் பாய்ந்து அதனை வரவேற்றது. 6. நிர்வாண தேசம்
இயற்கைக்குப் பிசாசுதான் பிடித்துவிட்டதோ? சண்ட மாருதம் உலகத்தையே சுழற்றி அடிக்கிறது. அலைகள் மலைகளைப்போலக் குமுறி எழுகின்றன. கப்பலை அம்மானையைப்போல மேலே தூக்கி எறிகிறது கடல். கப்பலில் உள்ளவர்கள் யாவரும் கதிகலங்கி உயிருக்கு மன்றாடிக் கத்துகிறார்கள். அந்தப் பெரும் புயலின் முழக்கத்தில் அவர்களுடைய புலம்பல் யாருக்குக் கேட்கப்போகிறது? "படார்! படீர்! பட்!" என்ற சப்தம்; கப்பல் உடைந்துவிட்டது."ஐயோ! அப்பா! அம்மா!" என்ற ஒலிகள் அதற்குள் இருந்த சிற்றுயிர்களின் உயிராசையை வெளிப்படுத்தின. கரையில்லாமற் படர்ந்து கிடக்கும் கடலுக்கு அந்த உயிர்கள் அன்று பலியாயின. அந்தக் கடலின் பசிக்குக் கப்பல் எம்மாத்திரம்! கடலின் குமுறல் அடங்கியது; சண்டமாருதமும் சளைத்து நின்றது. கப்பலையும் அதிலுள்ள உயிர்களையும் விழுங்கிவிட்டுப் பழைய சாந்தியுடன் சமுத்திரம் பிரணவ கோஷம் செய்யத் தொடங்கியது. அந்தக் கப்பலில் பிரயாணம் செய்தவர்களுடைய ஆசைகள் என்ன என்ன விதமாக இருந்தனவோ, அவர்களுடைய வரவை எதிர்பார்த்து யார் யார் ஆவலாகக் காத்திருக்கின்றார்களோ? சமுத்திரத்திலே அடித்த சண்டமாருதம் தான் செய்த படுகொலையை அவர்களுக்குத் தெரிவிக்குமா என்ன? உயிரிழந்தவர்களுடைய சடலங்கள் கடற் பிராணிகளுடைய பசியைத் தணித்தன. அவர்களுடைய உயிர்கள் எல்லையற்ற ஒன்றிலே போய்ச் சேர்ந்தன. அந்தப் புயலின் கதையை உலகத்துக்குச் சொல்ல ஒரு சாட்சிகூட இல்லை என்றுதான் தோற்றியது. அந்தத் தோற்றம் பொய். அதோ ஒரு மனிதன் ஒரு துண்டுக்கட்டையைப் பிடித்துக்கொண்டு கடலிலே மிதக்கிறான். அந்தப் பெரும் புயலின் வேகத்தோடு அவனுடைய விதி போராடி வென்றுவிட்டது. அவனுடைய வாழ்க்கை நூலை அந்தக் கயிற்றால் அறுக்க முடியவில்லை. அவன் கடலில் மிதந்து வந்தான். அவன்தான் சாதுவன். காவிரிப்பூம்பட்டினத்தில் அவன் ஒரு பெரிய வணிகன். கப்பல் வியாபாரம் செய்பவன். அவனுடைய மனைவி ஆதிரை. சாதுவனுக்கு அம்மனைவியால் மிக்க பெருமை உண்டாயிற்று. அவள் அத்தகைய கற்பரசி.கையில் இருந்த பணம் செலவழிந்துவிட்டமையால் திரைகடலோடித் திரவியந் தேட எண்ணிப் புறப்பட்டான் சாதுவன். ஒரு கப்பலில் ஏறினான். கப்பல் கடலுக்கு இரையாயிற்று. அவன் தப்பினான். ஆனாலும் என்ன? கடலிலே எவ்வளவு நாளைக்கு மிதக்க முடியும்? ஆகாரம் வேண்டாமா? குடிக்க ஜலம் வேண்டாமா? உடம்பில் பலம் வேண்டாமா? இடையிலே திடீரென்று ஒரு திமிங்கிலம் வந்து அவனை விழுங்கிவிட்டால் என்ன செய்வது? கடலின் வெள்ளலைக் கைகளோடு அவன் கைகள் போராடின. புத்த தேவனுடைய ஸ்மரணம் ஒன்றுதான் அவனுக்கு உற்சாகம் உண்டாக்கியது. "ஹா!" என்று அவன் மகிழ்ச்சியோடு வீரிட்டுக் கத்தினான் அவன் கண்ணுக்கு ஒரு தீவு தெரிந்தது. பச்சைப் பசேலென்று அடர்ந்திருந்த மரங்கள் அவன் கண்ணுக்குப் புலப்பட்டன.அவனுடைய கைகளுக்கு முறுக்கேறியது. தன்னுடைய முழுப் பலத்தோடும் நீந்த ஆரம்பித்தான். நீந்த நீந்தத் தீவு விலகிக்கொண்டே போவதுபோல் இருந்தது அவனுக்கு. உண்மையில் அது நெருங்கியது. இதோ வந்துவிட்டான். இன்னும் பத்துமரர் தூரம் கூட இல்லை; அவன் கால் நிலைத்துவிட்டது. ஆனால் கால் கீழே ஊன்றவில்லை; அவனுடைய சந்தோஷம் அவனுக்கு அதிகப் பலவீனத்தை உண்டாக்கியது. தட்டுத் தடுமாறிக் கரைக்கு ஓடினான். அங்கிருந்த ஒரு மரத்தடியில் விழுந்தவன் தான்; இந்த உலகத்தையே மறந்துவிட்டான். எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தான் என்று அவனுக்கே விளங்கவில்லை. ஏதோ ஒரு கடுமையான குரல் அவனை எழுப்புவதுபோல் இருந்தது. கண்ணைத் திறந்து பார்த்தான். அடர்ந்த மயிரும் குரூபமான உடம்பும் நிர்வாண நிலையும் உடைய சிலர் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தார்கள். அந்தக் கோர ரூபங்களைப் பார்த்தவுடன் சாதுவன் திடுக்கிட்டான். உயிருக்காக அலைகளுடன் போராடிய போராட்டத்தில் அவன் மூளை குழம்பியிருந்தது. சுய ஞாபகம் வருவதற்கு நேரமாயிற்று. அவன் எழுந்து உட்கார்ந்தவுடன் சுற்றிலும் நின்றவர்கள் அவனை மொய்த்துக் கொண்டார்கள். ஒருவன் சாதுவனின் கையைத் தொட்டுப் பார்த்தான். மற்றொருவன் அவன் காலைத் தொட்டுப் பார்த்தான். கசாப்புக் கடைக்காரன் சந்தையில் ஆடு வாங்கும் போது அதைப் பரிசோதிப்பது போல அவர்கள் அந்த வணிகனைப் பரிசோதித்தார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் ஆரவாரித்துப் பேசிய பேச்சில் சாதுவன் சிறிது அறிவைச் செலுத்தினான். அது தமிழ் அன்று. ஆனால், அவர்கள் பேசு வதன் கருத்து அவனுக்கு விளங்கியது; யாரோ ஒரு சந்நியாசியிடம் அவன் அந்தப் பாஷையைக் கற்றுக் கொண்டிருந்தான். தன்னுடைய ஞாபகத்தைச் சற்றே கிண்டிப் பார்த்தான். 'ஆம்; இப்போது ஞாபகத் துக்கு வருகிறது. நமக்கு இந்தப் பாஷையைச் சொல் லித் தந்த பிக்ஷு இது நாகர்கள் பாஷை என்றல்லவோ சொன்னார்? "இந்தப் பாஷையைப் பேசுகிறவர்கள் நிர் வாணிகள்,நரமாமிச பக்ஷிணிகள்" என்று அவர் சொல்லியிருக்கிறாரே!' இப்படி நினைத்தவுடன் அவன் உடம்பில் ஒரு நடுக்கம் எடுத்தது, 'கடலுக்கு ஆகாரமாக வேண்டிய நாம் இவர்களுக்கு ஆகாரமாகவேண்டுமென்பது விதிபோலும்' என்று அவன் எண்ணினான். ஆனாலும் அவர்களோடு அவர்கள் பாஷையிலே பேசிப் பார்த்தால் ஏதாவது நன்மை உண்டாகுமோ என்று ஒரு சபலம் தட்டியது. "பெரியவர்களே! நீங்கள் யார்?" என்று மெல்லிய தொனியில் பணிவோடு அவன் கேட்டான். பாசி நிறைந்த குளத்தில் கல்லைப் போட்டால் திடீரென்று அந்தப் பாசி விலகிவிடுவதுபோல இந்தக் கேள்வியைக் கேட்டதும் அவர்கள் திடீரென்று விலகிக் கொண்டார்கள். மறுபடியும் மொய்த்துக்கொள்ளவில்லை. அவர்கள் முகத்தில் ஆச்சரியக்குறி தோற்றியது. அப்படியே ஸ்தம்பித்து நின்றார்கள். 'நம்முடைய பாஷையை இவன் பேசுகிறான்! இவன் யாரோ! இவனைத் துன்புறுத்தக் கூடாது' என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாயிற்று. தாய் மொழியின் அன்பு அந்தக் காட்டுமிராண்டி ஜனங்களீடத்தில்கூட இருப்பதைச் சாதுவன் அறிந்து வியந்தான். அப்பால் சிறிது கம்பீரமாகவே பேசத் தொடங்கினான். "சகோதரர்களே! நீங்கள் யார்?" என்று மறுபடியும் கேட்டான். "நாங்கள் இங்கே இருக்கும் நாகர்கள்" என்று விடை வந்தது. அதற்குள்
ஒருவருக்கொருவர் ஏதோ பேசலானார்கள். சிறிது நேரங் கழித்து அந்தக்
கூட்டத்தில் இருந்த ஒருவன், "நீ எங்களுடன் வா. அவரிடம் அழைத்துப்
போகிறோம்" என்றான். சாதுவன் அந்தத் தலைவனுகு முன் நின்றான். "உங்களைப் பார்ப்பதற்காக என்னை இவர்கள் அழைத்து வந்தார்கள்" என்றான். நாகர் தலைவன் சந்தோஷத்தால் பல்லை இளித்துக் கொண்டு இரண்டு முழம் எழும்பிக் குதித்தான். அவன் மனைவி நல்ல ஆகாரம் வந்திருக்கிறதென்று பல்லைத் தீட்டிக்கொண்டாள். அந்த நிர்வாண தேசத்தில் அவன்தான் குரு, அவனே அரசன். அவனது ஆணையின்படி அந்த நிர்வாணப் பிராணிகள் சேவகம் புரிந்தன. சாதுவன் நாக அரசனோடு சிறிது நேரம் பேசினான். அந்தப் பேச்சைக் கேட்பதில் அந்தத் தலைவனுக்கும் மற்றவர்களுக்கும் உண்டான இன்பத்திற்கு எல்லை இல்லை. 'நாம் தினந்தோறும் இதைப் பேசுகிறோம். ஆனாலும் இவன் பேசும்போது என்ன இனிமையாக இருக்கிறது!" என்று அவர்கள் வியந்தார்கள். சாதுவன் அழகாகக் கருத்துக்களைக் கோத்துப் பேசினான். " வெட்டு, குத்து, தின்னு, அடி, உதை" என்பவை போன்ற பிரயோகங்களுக்கே உபயோகப்பட்ட அந்த நாகர் பாஷை நாகரிக மனிதன் ஒருவனுடைய கருத்தை வெளியிட உதவும்போது அந்தப் பாஷைக்கே ஒரு தனியழகு உண்டாயிற்று. நாள் முழு வதும் பேசிக்கொண்டிருந்தாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாமென்று தோற்றியது, நிர்வாண தேச அரசனுக்கு. சாதுவன், பாஷையாகிய காந்தத்தால் அந்த நரமாமிச பக்ஷிணிகளின் இருதயத்தைக் கவர்ந்தான். ''அடே! யார் அங்கே! இவனுக்கு நிறையக் கள் ளும் மாமிசமும் கொடுங்கள். மிகவும் அழகான பெண் ஒருத்தியையும் அளியுங்கள்'' என்று உத்தரவிட்டான், நாகர் தலைவன். சாதுவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. "அவை எதற்கு?" என்று கேட்டான். "எதற்கா? சந்தோஷமாக இருப்பதற்கு!" "இவைகளால் உடம்புக்குச் சந்தோஷமே ஒழிய உயிருக்கு என்ன சந்தோஷம்?" "அதென்ன சமாசாரம்? உயிர் வேறு, உடம்பு வேறு என்று உண்டா?" அவனுக்குச் சாதுவன் மெல்ல மெல்ல உபதேசம் செய்யத் தொடங்கினான். உடம்புக்குள் உயிர் என்ற பொருள் ஒன்று உண்டு என்பதையும், உணவு துயில் முதலியவை மட்டும் மனிதனுக்குப் போதா என்பதையும் உணர்த்தினான். "கப்பல் கரை தட்டி வந்த காலத்தில் அந்தக் கப்பலிலுள்ள ஜனங்களைக் கொன்று தின்று வாழும் எங்களுக்கு இந்த உபதேசம் ஒன்றும் விளங்கவில்லையே!" என்று நாகர் தலைவன் சொன்னான். ''இனிமேல், நரமாமிச பக்ஷணம் செய்வதில்லை என்ற விரதத்தை மாத்திரம்
அனுஷ்டியுங்கள். அதுவே போதும்'' என்று சாதுவன் உபதேசம் செய்தான். எவ்வளவோ கப்பல்களின் பாய்மரங்களும் உடைந்த பகுதிகளும் அந்தத் தீவில் சிதறிக் கிடந்தன. அக் கப்பல்களில் வியாபாரிகள் ஈட்டி வந்த மணியும் பொன்னும் மற்றப் பொருள்களும் நாகரிகமற்ற அந்தத் தீவிலே தீண்டுவாரற்றுக் கிடந்தன. அவைகளை என்ன செய்வதென்பதையே அந்த முரட்டுப் பிராணிகள் அறியார்கள். சாதுவன் அந்தக் குவியல்களை மூட்டை கட்டிக் கொண்டான். தினந்தோறும் கடற்கரைக்குப் போய், �ஏதாவது கப்பல் வராதா?� என்று பார்த்துப் பார்த்து ஏங்கி நின்றான். கடைசியில் ஒரு நாள் வந்த கப்பலொன்றைக் கூவி அழைத்து அந்தக் கப்பல் நிறைய மணியையும் பொன்னையும் ஏற்றிக் கொண்டான். நாகர்களின் அரசன் வழி அனுப்பினான்; மீண்டும் வரவேண்டுமென்று உபசரித்தான். சாதுவன் காவிரிப்பூம்பட்டினத்திற்கு ஒரு பெரிய கோடீசுவர னாகத் திரும்பினான். நாகர்களுக்கு அவன் செய்த உபதேசம் சில வாரங் களே இருந்தது. அப்புறம்
அவர்களுடைய நாக்கு, பழைய பழக்கத்தைப் பிடித்துக் கொண்டது. பழைய படியே
அவர்கள் நர மாமிசத்திற்குச் சப்புக் கொட்ட லானார்கள். 7. தேவரும் குருவும்
"வடமொழியில் எவ்வளவோ காவியங்கள் இருக் கின்றன. தமிழில் இல்லை. சில காவியங்கள் இருந்தா லும் நன்றாக அமையவில்லை" என்றார் அவருடைய அருகில் இருந்த மற்றொரு புலவர். "நல்ல கவிஞர்கள் தமிழில் இல்லையா? ஏன் புதிய காவியங்களைப் பாடக் கூடாது?" "புலவர்கள் இல்லாமல் என்ன? இப்பொழுது நம்முடன் பழகும் திருத்தக்க தேவர் நல்ல வாக்கு வன்மையுடையவர். சிறந்த புலவர். அவர் எதையும் பாடலாம்." "போயும் போயும் ஒரு ஜைனத் துறவிதானா உம் முடைய கண்ணிற் பட்டார்! ஜைனர்களுக்குத் துறவைப்பற்றிப் பாடத் தெரியுமே யல்லாமல் இன்பச் சுவை என்ன தெரியும்?" "அப்படிச் சொல்லக் கூடாது. துறவியாக இருப்ப தனாலேயே இன்பச் சுவையைப்பற்றிப் பாடும் வன்மை இராதென்று கொள்வதற்கில்லை. அவர்களால் இன்பச் சுவையை உணரமுடியாதா? காவியங்களைப் படித்தால் அறிய மாட்டார்களா? துறவுள்ளம் பற்றற்றது. எதனையும் உள்ளவாறே உணரக் கூடியது." இவ்வாறு பேசிச் சில புலவர்கள் திருத்தக்க தேவருக்கு ஊக்க மூட்டி விட்டார்கள். அவர்களுடைய தூண்டுதலால் சீவகனுடைய சரித்திரத்தைக் காவியமாகப் பாடுவதென்று நிச்சயம் செய்தார் தேவர். ஆயினும் தம்முடைய குருவினிடம் சென்று அநுமதி பெற் றுப் பிறகே தொடங்க வேண்டுமென்பது அவர் எண்ணம். சீவகனது சரித்திரம் ஜைனர்களுக்குள் ராமாய ணம் போலப் பரவியிருந்தது. அதைக் கவிச் சுவை அமையப் பாடிவிடலாம் என்ற துணிவு தேவருக்கு உண்டாயிற்று. குருவினிடம் போனார். "அடியேன் சீவகனது சரிதையைக் காவியமாகப் பாட எண்ணியிருக்கிறேன். அருள் புரிய வேண்டும்" என்று விண்ணப்பித்தார். துறவரசராகிய குருநாதர் தம் மாணாக்கரின் ஆற் றலை நன்கு உணர்ந்தவர். ஆனாலும் அவரைச் சோதிக்க எண்ணி, "பெருங் காவியம் செய்வதற்கு முன்பு சிறிய நூல் ஏதேனும் ஒன்றை இயற்றிப் பழகவேண்டும்" என்று சொன்னார். அங்ஙனம் சொல்லிக்கொண் டிருந்த போதே எதிரில் ஒரு நரி ஓடிற்று. உடனே ஆசிரியர் அதைச் சுட்டி, ''அதோ ஓடுகிறதே, நரி; அதை விஷய மாக வைத்து ஒரு சிறு நூல் இயற்று, பார்க்கலாம்" என்று கட்டளையிட்டார். திருத்தக்க தேவரின் தீவிரமான அறிவுக்கு அது ஒரு பெரிய வேலையா? மிக விரைவில் 'நரி விருத்தம்' என்ற சிறு நூலைப் பாடிக் காட்டினார். 'மனித வாழ்க்கை நிலையற்றது, செல்வம் நிலையற்றது' என்பன போன்ற உண்மைகளை விளக்கிக்கொண்டு நின்றது அந் நூல். அதைக் கண்ட ஆசிரியர் வியந்து பாராட்டினார். "இன்று நான் நரி முகத்தில் விழித்தேன்" என்று மகிழ்வுற்றார் திருத்தக்க தேவரும். "சீவகன் சரித்திரத்தைப் பாடும் தகுதி உமக்கு இருக்கிறது. நீர் சிறிதும் கவலையின்றிப் பாடலாம். கடவுள் திருவருள் அது நன்கு நிறைவேறும்படி செய்யவேண்டும்"என்று சொல்லி வாழ்த்தினார் ஆசிரியர். பால சந்நியாசியாகிய தேவர் உவகையால் பூரித் தார். தம் ஆசிரியர் பாதத்தில் விழுந்து பணிந்து எழுந்து, ''அடியேனுக்கு இந்தக் கட்டளை கொடுத் தது பெரிதன்று. தேவரீரே ஆரம்பித்துத் தரவேண் டும்" என்று விநயமாக இரந்து நின்றார். அறிவின் தலையெல்லையிலே நின்ற அந்த இளந் துறவியின் அடக்கம் ஆசிரியரின் உள்ளத்தைப் பிணித்தது. அவரது வேண்டுகோளைப் புறக்கணிக்க முடி யுமா? ஜைனர்கள் அருகன், சித்தன், சாதுக்கள் என் போரையும் தர்மத்தையும் வணங்கித்தான் நூல் தொடங்குதல் மரபு. இவற்றை முறையே அருகசரணம், சித்தசரணம், சாதுசரணம், தர்மசரணம் என்று சொல் வார்கள். ஆசிரியர் அருகசரணத்தைப் பாடி முடித்தார். அருக பரமேஷ்டியின் திருவுருவ எழிலை அதில் வருணித்தார். 'சிவந்த பொன்மலையைப் போலச் சோதி வீசுவது அருக பரமேஷ்டியினது திவ்விய மங்கள விக்கிரகம். அவருடைய திருமேனியிலே அங்கங்கே எழுதினாற் போலவும் அழகமையப் பிதிர்ந்தாற் போலவும் ஆயி ரத்தெட்டு மறுக்கள் திகழ்கின்றன. யாவரும் விரும்பி நோக்குதற்குரிய இளஞ் சூரியனைப் போன்ற தேசு வீசும் அந்த மூர்த்தியின் அடித்தாமரையைத் தேவர் களெல்லாம் முடிமேல் தரிக்கின்றனர். யாமும் நம் சென்னியிலே அணிவோம்' என்று அமைந்தது பாட்டு: "செம்பொன் வரைமேற் பசும்பொன் எழுத்து இட்ட தேபோல் அம்பொன் பிதிர்வின் மறுஆயிரத் தெட்டு அணிந்து வெம்புஞ் சுடரிற் சுடருந்திரு மூர்த்தி விண்ணோர் அம்பொன் முடிமேல் அடித்தாமரை சென்னி வைப்பாம்." [வெம்பும்-யாவரும் விரும்பும். சுடரின்-சூரியனைப் போல. இச் செய்யுளை முடித்து எழுதி மாணாக்கரை அழைத்து அவர் கையில் ஆசீர்வாதம் செய்து அளித் தார். ஆசிரியர் அருகசரணத்தை முடிப்பதற்குள் திருத்தக்க தேவர் சித்தசரணத்தைப் பாடியிருந்தார். ஆசிரியர் அளித்த அச் செய்யுளைப் பணிந்து பெற்றுத் தலைமேல் வைத்துப் படித்தார். "அடியேன் பெற்ற பாக்கியம்! இதனை முன்வைத்துத் தொடங்கும் சீவ கன் சரிதை இடையூறின்றி நிறைவேறும்" என்று ஆனந்தம் பொங்கக் கூறினார். அப்பால், "அடியேன் இயற்றிய சித்தசரணப் பாடலைக் கேட்டருள வேண் டும்" என்று அதனை விண்ணப்பித்தார். அந்தப் பாடல் சித்தனுடைய திருவுருவ வர் ணனையாக இருக்கவில்லை. அவனது குணச்சிறப்பைச் சொல்லுவதாக இருந்தது. 'ஈறும் முதலும் இல்லாத மூவுலகத்துள்ள உயிர் களும், கெடுகின்ற சிற்றின்பத்தையே இன்பமெனக் கொண்டு உழலுகின்றன. அவை நிலையாதனவென்று கண்டு துறக்கும்பொழுது, கெடாத பேரின்பத்தை எய்துகின்றன. அந்த இன்பமே தலையாகியது. அதனை எவனால் உயிர்கள் அடைகின்றனவோ அவன் குணங்களெல்லாம் நிறைந்தவன், அக்குணங்களையே நிதியாக உடைய செல்வன் என்று சாதுக்கள் கூறுகின்றனர். அவனே தேவா திதேவன். அவனுடைய சேவடிகளை நாம் வணங்குவோம்' என்ற கம்பீரமான பொருளோடு விளங்கியது அப்பாடல். "மூவா முதலா உலகம்மொரு மூன்றும் ஏத்தத் [மூவா- அழியாத. முதலா-முதலில்லாத, அச் செய்யுளை இரண்டு மூன்று முறை சொல்லச் செய்து ஆசிரியர் கேட்டார். அதன் பொருளாழத்திலே அவர் உள்ளம் சென்று தங்கியது. 'ஜைன சமய உண்மைகளை இச் செய்யுள் எவ்வளவு நன்றாகச் சொல்கிறது! காமச் சுவை அமைந்த காவியம் இயற்றத் தொடங்கும்போதும் இவன் மனம் சிற்றின்பத்தின் நிலையாமையையும் பேரின்பத்தின் பெருமையையும் நினைத்துப் புகுகின்றதே. என் பாட்டு வெறும் உருவ வருணனை; இவன் பாடலோ அறிஞர்கள் அறிவுக் கண்ணால் பார்க்கும் குண வருணனை. இதுதான் அழகு. இவன் பேரறிஞன். குருவுக்கு மிஞ்சின சிஷ் யன்' என்று பலவாறு அவர் மனத்துள் யோசனை படர்ந்தது. சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு மௌனத்தினின்றும் கலைந்து, "தேவா, ஒன்று சொல் கிறேன்; அப்படிச் செய்" என்று சொன்னார். அந்த வார்த்தைகள் அவர் உள்ளம் உருகி வந்தன என் பதைத் தொனியே குறிப்பித்தது. "தேவரீர் கட்டளைக்குக் காத்திருக்கிறேன்." "உன்னுடைய செய்யுளை முதலிலே வைத்து அதனை அடுத்து இரண்டாவதாக என் செய்யுளை வை.: திருத்தக்க தேவர் திடுக்கிட்டுப் போனார். தம் ஆசிரியர் ஏன் அப்படிச் சொல்லுகிறார் என்பது விளங்கவில்லை; மயங்கினார். "என்ன யோசிக்கிறாய்? நீ இயற்றிய சித்த சரணத்தை முதற் பாட்டாக அமைத்துக்கொள்" என்று மீட்டும் முனிவர்பிரான் கனிவு ததும்பக் கூறினார். "அது சம்பிரதாய விரோதமாயிற்றே. அப்படிச் செய்தால் இரண்டு வகையில் நான் குற்றவாளி ஆவேனே!" "இல்லை; அதைத்தான் முதலில் வைக்கவேண்டும்." "குருநாதருடைய செய்யுளுக்குத் தலைமை அளிக் காத குற்றமும், அருக சரணத்திற்குப் பின் வைக்க வேண்டியதை முன் வைத்த குற்றமும் என்னைச் சாருமே!" "குற்றமே இல்லை; உன்னுடைய செய்யுள் பொருட் சிறப்பால் முதலில் நிற்கத்தக்கது. யோசிக்க வேண்டாம். என் பாடல் உன்னுடைய பாடலை அடுத்து நிற்கும் பெருமை பெற்றால் போதும்." "என் மனம் துணியவில்லையே!" "நான் உன்னுடைய ஆசிரியனென்ற எண்ணத் தினால்தானே இப்படிக் கலங்குகிறாய்?" இந்தக் கேள்விக்குத் தேவர் பதில் சொல்லவில்லை. "அந்த உரிமையை நான் ஒப்புக்கொண்டே கட்டளையிடுகிறேன். உன்னுடைய காவியத்திற்கு உன்னுடைய பாடலே முன் நிற்கட்டும். ஆசிரியன் கட்டளையை மறுக்கும் குற்றத்தைச் செய்யப் போகிறாயா?" இதற்கு மேல் ஒன்றும் வழி தோன்றவில்லை. திருத்தக்கதேவரை ஆசிரியர் சிக்கவைத்துவிட்டார். அவர் வார்த்தையை மீறத் தேவர் துணியவில்லை. அவர் பாடலை இரண்டாவதாக வைத்துச் சீவக சரித் திரத்தைப் பாடத் தொடங்கினார். பேராற்று வெள்ளம்போலத் தேவருக்குச் செய் யுள் நடை அமைந்தது. கதையும் கம்பீரமானது. ஆகவே அவர் பாடிய சீவகசிந்தாமணி புலவர்களுக்குச் சிந்தாமணியாக விளங்குதற்கு ஏற்றதாயிற்று. சீவகன் பல மகளிரை மணம் புரிந்து இன்புற்ற செயல்களை யெல்லாம் காவிய இலக்கணங்கள் செறிந்து விளங் கும்படி தேவர் பாடினார். கடைசியில் முத்தி யிலம்பக மென்னும் பகுதியில் சீவகன் துறவு பூண்டு முக்தி பெற்றதாகக் கதையை அமைத்தார். அதில் ஜைன சமய உண்மைகளை விரிவாகச் சொன்னார். காவியத்தை முடித்துவிட்டுக் கடைசியில் அருகக் கடவுள் துதியொன்றையும் பாடிச் சேர்த்து ஆசிரியப் பிரானிடம் கொண்டு போய்ப் படித்துக் காட்டினார். காவியத்தைத் கேட்கக் கேட்க ஆசிரியர் தம்மை மறந்தார். "தேவா, உன் பெயர் உலகுள்ளளவும் அழியாது" என்றும், "உன்னை மாணாக்கனாகப் பெற்றது என் பாக்கியம்" என்றும் அவர் வாயி லிருந்து அவரை அறியாமலே வார்த்தைகள் வந்தன. இறுதிப் பாட்டைக் கேட்டு முடித்தார் குரு. தேவரை வாயார வாழ்த்தவேண்டுமென்று அவருக்குத் தோற்றியது. உள் உருகிவந்த அவர் வார்த்தைகள் செய்யுளாக அமைந்தன. "கடலிலே பிறந்த வலம்புரிச் சங்கில் தோற்றிய முத்துக்களையும் மாணிக்கத்தையும் கோத்து அமைத்த அழகிய வடம்போலே இருக்கிறது. இந்தச் சிந்தாமணியென்னும் காவியம். இதனை ஓதி உணர்ந்தவரும், கூறிக் கேட்டோரும் சுவர்க்க பதவி பெற்று இன்புற்றுப் பின்பு முத்தி பெறுவர்; இம்மை யிலும் திருமகள் திருவருளைப் பெறுவர்" என்ற பொருள் அமைந்த ஒரு செய்யுளால் குருநாதர் தேவரைப் பாராட்டினார். தேவர் நன்றியறிவிலே மூழ்கினார். அந்தச் செய் யுளையும் ஆசிரியர் கட்டளைப்படி சிந்தாமணியில் சேர்த்து அதற்குமேல் இரண்டு பாடல்களில் தமக்கு ஆசிரியர்பாலுள்ள நன்றியறிவைப் புலப்படுத்திக் காவியத்தை நிறைவேற்றினார். இங்ஙனம் ஆசிரியரது உள்ளத்தைக் கவர்ந்து நின்ற அக் காவியம்
தமிழ்ப்புலவர் போற்றிப் பாது காக்கும் இலக்கியச் செல்வமாக
விளங்கலாயிற்று. 8. 'மூங்கிலிலை மேலே'
அவர் காதில் கணீரென்று ஒரு தமிழ்ப் பாட்டு விழுந்தது. வயல் பக்கத்திலிருந்து வந்த அந்த இன் னோசையைத் தொடர்ந்து அங்கே சென்றார். வயலுக்கு இருவர் ஏற்றத்தால் நீர் இறைத்துக்கொண்டிருந் தார்கள். ஏற்றக்காரன் அந்தக் குளிர்ந்த வேளையில் ஸ்வரம் ஏறிய தொண்டையோடும், வீட்டுக்குப் போக வேண்டும் என்ற உற்சாகத்தோடும் பாடிய பாட்டுத் தான் கம்பரை அங்கே இழுத்துச் சென்றது. காவிரி பல கரல்களில் ஓடி வயல் வளம் பெருக்கும் சோழ நாட்டிலே இந்த ஏற்றக் காட்சிகளை அவர் அதிகமாகப் பார்த்ததில்லை. இது பாண்டி நாடு. ஏற்றத்தின் எழிலைக் கண்டு களித்ததோடு ஏற்றக்காரன் பாட்டிலே தம் மனம் செல்ல அங்கே நின்றார். இலக்கியப் பூம் பொய்கையிலே ஒருதனியே ஓங்கிய தாமரை மலரைப் போன்ற காவிய ரத்தினத்தை உலகுக்கு அளித்த அந்தக் கவிப் பெருமான், வாழ்க்கையோடு ஒட்டி வரும் ஏற்றக்காரனுடைய எளிய பாடலைக் காதுகொடுத்துக் கேட்கலானார். அந்த மாலை வேளையில் ஏற்றக்காரன் காலைக் காட்சியை வருணிக்கும் ஒரு பாட்டைப் பாடிக்கொண் டிருந்தான். "மூங்கிலிலை மேலே" என்று அவன் அந்தப் பகுதியை ஆரம்பித்தான். இயற்கை எழிலின் கவர்ச்சியை முற்றும் உணர்ந்த கம்பர் இயற்கையோடு கலந்து மகிழ்ந்து தொழில் புரிந்து ஆடிப் பாடும் அந்த மக்களின் இயல்பையும் நன்கு உணர்ந்தவர். கற்பனையும் அலங்காரமும் செறிந்த கவிதையை அங்கே அவர் எதிர்பார்க்கவில்லை. குழந்தையின் மழலைப் பேச்சைப்போல மழலைப் பரு வத்தில் அமைந்த பாட்டைத்தான் அவர் எதிர்பார்த் தார். அதுதான் அங்கே எழுந்தது. வானை அளாவிய மூங்கில், அதன் இலை, இரண் டையும் அந்தச் சிறிய அடி - அரை அடி - கம்பர் கருத் திலே நட்டுவிட்டது. அவர்தாம் கருத்தினால் உலகை அளப்பவர் ஆயிற்றே! "மூங்கிலிலை மேலே தூங்கு பனி நீரே" என்று ஏற்றக்காரன் அடி முழுவதையும் சொன் னான். அந்த அடியில் ஓர் அழகிய சித்திரம் பூர்த்தி யாயிற்று. விடியற்காலையில் ஓங்கி உயர்ந்த மூங்கிலின் நீண்ட இலைத் தொட்டிலிலே ஒரு சிறு பனித் துளி தூங்கு கின்றது!* என்ன அழகான இயற்கை! மேல் காயாம்பூப் பூத்தாற்போலத் தனி கிடக்கும் கண்ணன் திருவழகைப் புலவர்களெல்லாம் பாராட்டுகிறார்கள். அந்தப் பாடல்களின் நயத்தை அறிஞர்கள் சுவைத்துச் சுவைத்து மகிழ்கிறார்கள். இங்கே ஒரு தோப்பிலே தனித்து ஓங்கி நின்ற மூங்கிலின் மேலே ஓர் இலையில் அந்தக் கண்ணனைப்போலத் தூங்குகின்ற பனிநீரை ஏற்றக்காரன் பாட்டு, சிறிய சொற்களாலே சித்திரிக்க, அந்தச் சித்திரம் கம்பருடைய உள்ளக் கிழியிலே நன்றாகப் பதிந்துவிட்டது. அந்த அடியை மீட்டும் நினைந்து மகிழ்ந்தார். அப்படி மகிழ்வதற்கு அவகாசம் கொடுத்தான் ஏற்றக்காரன். அவன் அந்த அடியைத் திருப்பித் திருப்பிப் பல முறை பாடினான். நடுவிலே ஏற்றச் சாலின் கணக்கைச் சொன்னான். 'சவுக்க காலத்திலே' அவனுடைய சங்கீதம் தவழ்ந்ததால் கம்பர் ஒவ்வொரு சொல்லாகச் சுவைத்துப் பார்க்க முடிந்தது. ஆனாலும் 'அடுத்தபடி என்ன வரப்போகிறது?' என்ற ஆவலும் அவருடைய உள்ளத்தில் ஒரு வேகத்தை எழுப்பியது. பெரும் புதையலுக்கு முன்னே ஒரு பேராசைக்காரனை விட்டால் கை கொண்ட மட்டும் வாரிக்கொள்ள ஓடுவானே, அப்படித் துடித்தது அவர் உள்ளம். ஏற்றக்காரனோ நின்று, நிதானமாகச் சங்கதி போடாமலே பாட்டைத் திருப்பித் திருப்பிச் சொன்னான். 'அடுத்த அடி எப்பொழுது வரப்போகிறதோ?' என்று ஏங்கி நின்றார் கம்பர். 'ஒருகால் இவனுக்குத் தெரியவே தெரியாதோ! பாட்டு இவ்வளவோடு முடிந்து போகிறதோ?' என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்த கம்பரைக் கிள்ளி உணர்ச்சி வரச் செய்தது ஏற்றக்காரனுடைய குரல். அவன் அடுத்த அடியைப் பாடினான்: "மூங்கிலிலை மேலே தூங்கு பனி நீரே! தூங்கு பனி நீரை..." பாட்டு மடங்கி வந்தது. தமிழ்ப் பாடல்களிலே இந்த அடி மடக்கு மிகவும் இயற்கையானது. யாப்பிலக் கணங்களிலேஇதற்கு இலக்கணம் இருக்கிறது. இசைப் பாட்டுக்களுக்குரிய இதைக் கந்தர்வ மார்க்கம் என்று சொல்லுவார்கள். கம்பருடைய ஞாபகம் ஒரு கணம் பண்டைத் தமிழ்க் கவிதைப் பரப்பிலுள்ள கந்தர்வ மார்க்கத்திலே சென்றது. நாடோடியாக வழங்கும் இந்த ஜீவனுள்ள பாடல்களிலிருந்துதான் பண்பட்ட கவிஞர்கள் பல விஷயங்களை எடுத்துக்கொண் டிருக்கிறார்கள் என்று தோன்றியது. கவிதையுலகின் பிள்ளைப் பிராயமும் சங்கீத உலகின் தொட்டிற் பருவமும் ஏற்றப் பாட் டிலே, நாடோடிப் பாடல்களிலே, தொடங்கியிருக்க வேண்டும் என்ற உண்மையைச் சிந்தித்தார். இந்த ஆராய்ச்சி மின்னல்போல அவர் உள்ளத்தில் ஓடியது; அவ்வளவுதான். மீட்டும் ஏற்றக்காரன் பாட்டின் சுருதியிலே உள்ளம் லயித்தது. "மூங்கிலிலை மேலே தூங்கு பனிநீரே" என்ற ஒற்றை அடியிலே முடிந்திருந்த சிறிய சித்தி ரத்தை அதோடு முடித்துவிடாமல் மேலும் விரிக்கத் தொடங்கிய அந்த அரையடியைக் கேட்டார் கம்பர். "தூங்கு பனிநீரை" இவ்வளவு அழகிய ஓவியத்தைப் பின்னும் விரித்து அமைக்கும் சித்திரம், அழகிலும் விரிந்துதானே இருக்க வேண்டும்? ஏற்றக்காரன் அந்த அரை அடியைத்தான் சொன்னானே ஒழிய அதை லேசில் முடிப்பவனாக இல்லை. சுகமாகத் தூங்கிக்கொண் டிருந்த பனி நீரை அங்கிருந்து எடுத்து அந்தரத்திலே விட்டுவிட்டால், அந்தப் பனி நீருக்கு உயிர் இருந்தால், அது எப்படித் துடிக்கும்?-கம்பர் உள்ளம் அப்படித்தான் துடித்தது. 'பனி நீரை, பனி நீரை' - 'அடுத்தபடி என்ன?' இந்தக் கேள்விக்கு விடையை அவர் கவனத்தோடு எதிர்பார்த்தார்; ஏமாந்து போனார். ஏற்றக்காரன் அன்றைக்கு ஏற்றத்தை நிறுத்தி வீட்டுக்குப் புறப்பட்டு விட்டான். பனிநீரை அந்தரத்திலே விட்டுவிட்டுக் கம்பரின் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சியையும் புகுத்தி விட்டு அவன் போய்விட்டான். 'பாட்டு எப்படி முடியும்? மூங்கில் இலைமேலே தூங்கு பனி நீரை யார் பார்த்தார்கள்? சோலைக் குயில் வந்து குடித்ததா? மழலை வண்டு வந்து பார்த்ததா?' -என்ன என்னவோ நினைத்துப் பார்த்தார். அப்படியே நெடு நேரம் நின்று சிந்தித்தார். ஏற்றக்காரன் போட்ட முடிச்சு அவிழ்கிறதாகக் காணவில்லை. தம் இருப்பிடம் சென்றார். இரவு முழுவதும் அவருக்குத் தூக்கம் இல்லை. தூங்கு பனி நீரின் மேல் உள்ளம் படரத் தூங்காத இரவாக அது முடிந்தது. அந்தப் பாட்டின் சித்திரம் மூளியாக நிற்க, அதை வண்ணமிட்டு நிறைவுறுத்த வழியில்லாமல் அவர் உள்ளங் குலைந்து அலந்துபோனார். 'எப்பொழுது விடியும்!' என்று இராப் பொழுதைக் கழித்தார். விடிந்தது! அவர் குறை நீங்குமா? விரைவாக எழுந்து வயல் வெளிக்குப் போனார்; ஓடினாரென்று சொன்னாலும் பிழையில்லை. நல்ல வேளை: ஏற்றப் பாவலன் அப்பொழுதுதான் வந்திருந்தான். அவனு டைய சங்கீதம் இன்னும் ஆரம்பமாகவில்லை. அவன் சாலைப் பூட்டி ஏற்ற வீணையை மீட்டத் தொடங்கும் அந்தக் குறுகிய காலத்துக்குள் அவர் உள்ளம் பட்ட பாட்டைத் 'தாளம் படுமோ; தறி படுமோ!' ஏற்றக்காரன் சம்பிரதாயமாக, "பிள்ளையாரே வாரீர் பெருமாளே வாரீர்" என்று விநாயக வணக்கத்திலிருந்து தொடங்கி னான்; இந்தத் தெய்வங்களையெல்லாம் யார் இப் போது வேண்டினார்கள்!' என்று கம்பர் சொல்லிக் கொண்டார். சில நாழிகை பூர்வ பீடிகை ஆயிற்று. 'நேற்றுப் பாடின பாட்டையே பாடுவானோ மாட் டானோ!'என்ற பயம் வேறு கம்பருக்கு உண்டா யிற்று.நல்ல வேளையாக ஏற்றக்காரன் தயை காட் டினான்;மீட்டும் மூங்கிலிலையைப் பாட ஆரம்பித்தான். "மூங்கிலிலை மேலே தூங்குபனி நீரை!" 'அட பாவமே! இதை எத்தனை தடவை சொல்வது? இதைக் கேட்டுக் கேட்டுத்தான் புளித்துப் போயிற்றே! மேலே பாடி முடியப்பா பெருமானே!' என்று கம்பர் தம் கருத்தினால் ஏற்றக்காரனைப் பிரார்த் தித்துக்கொண்டார். "தூங்கு பனி நீரை" என்று வந்தது பாட்டு. இதுவும் பழையதுதான். மேலே சொல்லப்பா சொல்.'-கம்பர் மனசினாலே கெஞ்சுகிறார். "தூங்கு பனி நீரை" 'ஹா' என்று ஏங்கிப்போய் எல்லாப் புலன்களையும் காதிலே வைத்துக்கொண்டு நின்றார் கம்பர். அவர் காதிலே ஜில்லென்று விழுந்தது பாட்டு: "தூங்கு பனி நீரை வாங்குகதி ரோனே!" கம்பர் துள்ளிக் குதித்தார். 'விடிந்து விட்டது. சூரியோதயம் ஆகிவிட்டது. என்ன பாட்டு! என்ன சித்திரம்! ஒரு சிறு துளிககு முன்னே உலகைத் தன் கதிர்க்கிரணங்களால் அளக்கும் சூரியன்! அவன் தூங் கும் பனி நீரை வாங்கிவிட்டான்! இந்தக் கருத்து ராத் திரி முழுதும் தலை வலிக்கச் சிந்தித்தும் நமக்குத் தட் டுப்படவில்லையே! "அறிதோ றறியாமை கண்டற்றால்" என்று வள்ளுவர் சொல்வது எவ்வளவு உண்மை!' கம்பர் மனம் இப்படி யெல்லாம் சிந்தித்தது. மூங்கி லிலையும் பனித்துளியும் அதை வாங்கும் கதிரோனும் அவர் உள்ளத்தைத் தண்மைசெய்து ஒளிபரப்பி மலரச் செய்தன. பாட்டு முழுவதையும் பலமுறை சொல்லிச் சொல்லி இன்புற்றார். அதன் சுவையில் திளைத்தார். "மூங்கிலிலை மேலே தூங்குபனி நீரே தூங்குபனி நீரை வாங்குகதி ரோனே!" ஏற்றக்காரன் தொடர்ந்து வேறு எதையோ பாட ஆரம்பித்தான். கம்பர் அந்த இரண்டடியையே நினைந்து நினைந்து மகிழ்ந்தார். அந்த நாட்டிலே மேலே பிரயாணம் செய்ய எண்ணியவரானாலும், தம் கருத்துக்கு எட்டாத இயற்கைப் பாட்டைக் கேட்டு, ஏற்றக்காரன் முன் தம் சிறுமையை உணர்ந்தவரைப் போன்ற உணர்ச்சி ஏற் பட்டதாம்.அதனால் அவர் அப்படியே திரும்பிவிட் டாராம். இந்தக் காரணத்தால் அவ்வூருக்கு "மீள விட்டான்" என்ற பெயர் வழங்கத் தொடங்கியதாம். கதை எப்படி யிருந்தாலும், 'மூங்கிலிலை மேலே' என்ற அந்தச் சிறு துணுக்கு
ஒரு பெரிய கவிஞரையும் கவரும் கவிதைச் சுவை பொருந்தியது என்ற உண்மை
கதையினுள்ளே பொதிந்திருப்பதை நாம் அறிந்தால் போதும்; "ஏற்றப்
பாட்டுக்கு எதிர்ப்பாட்டில்லை" என்ற பழமொழியின் பொருளும் ஓரளவு நமக்கு
அர்த் தமாகிவிடும். 9. நெடுஞ்சுவர்
"இந்த உலகத்தில் உன்னை நினைந்தா தமிழை ஓதினேன்? உலகம் முழுவதுமே சோழ நாடா? வேறு தேசங்களும் அத் தேசங்களுக் குரிய மன்னர்களும் இல்லாமல் உலகம் அஸ்தமித்து விட்டதா? நான் எங்கே போனாலும் என் புலமைச் செங்கோலின் அதிகாரத்தைச் செலுத்த முடியும்" என்று சோழனிடம் வீரம் பேசி வெளியேறினார் அப்புலவர் பிரான். சோழ நாட்டை விட்டு அப்பால் போனபோதுதான் உண்மையான உலகம் அவர் கண்ணுக்குப் புலனாயிற்று. அவர் தன்னந் தனியாகப் புறப்பட்டிருக்கிறார். மாணாக்கர்களோ, தோழர்களோ யாரும் துணை இல்லை. அவரை இன்னார் என்றே பலர் அறிய முடியாது. இந்த நிலையில், 'நான்தான் கம்பர்; சோழ நாட்டுப் பெரும்புலவர்' என்று தாமே சொல்லிக்கொண்டு பிறருடைய ஆதரவைப் பெறுவது என்பது முடியுமா? கால் நடந்த வழியே சென்றார். தர்மம் நிறைந்த தமிழ்நாட்டில் அவர் ஓர் இரவலராகச் சென்றிருந்தால் எவ்வளவோ உபசாரத்தைப் பெற்றிருக்கக் கூடும். அப்படிச் செல்வதற்கு அவர் உள்ளம் துணியவில்லை. முகம் அறியாத வேற்று நாட்டில் யாரோ பரதேசியைப் போலப் பிரயாணம் செய்துகொண் டிருந்த அவருக்கு விசித்திரமான எண்ணம் ஒன்று தோன்றியது. 'நாம் ஒருவரிடம் சென்று நம்முடைய புலமையைக் காட்டி உபசாரம் பெறுவது கூடாது. அவர்களாக நம் பெருமை தெரிந்து வந்தால்தான் நமக்கு மதிப்பு. நம்முடைய கவிதையின் உதவி இல்லாமலே நாம் உலகத்தில் வாழ முடியாதா? கவிதையை அடகு வைத்துப் பிழைப்பதைக் காட்டிலும் உடம்பினால் உழைத்துக் கூலி வேலை செய்து பிழைப்பது எவ்வளவோ மேலானது. நாம் எப்போதும் இந்த நிலையில் இருக்கப்போவதில்லையே! யாரும் அறியாமல் சாமான்ய மனிதனைப்போல உலவுவதென்பது நம்மைப் போன்றவர்களுக்குக் கிட்டாத பதவி. இன்னும் சில நாட்களுக்குள்ளே இந்த நாட்டிலும் நமக்கு அன்பர்கள் சேர்ந்துவிடுவார்கள். 'அத்தகைய மதிப்புக்குரிய நிலை வருவதற்கு முன் நம்மை நாமே சோதித்துக்கொள்ள வேண்டும். நம்முடைய கைகளும் கால்களும் நம்முடைய வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் பயன்படுகின்றன என்று தெரிந்து கொள்ளவேண்டும். நாவைக் கொண்டு பிழைக்கும் கூட்டத்தை நாம் சேர்ந்திருந்தாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் தொழிலாளர்கள் எப்படி ஜீவனம் செய்கிறார்கள் எனபதை அநுபவத்தால் உணரவேண்டும். அதற்கு ஏற்ற சந்தர்ப்பம் இதோ வாய்த்திருக்கிறது. நம்முடைய வேஷம் குலைவது இன்றோ நாளையோ தெரியாது. அதற்குள், இந்த அருமையான சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் சோதனை செய்து விட வேண்டும். நம்முடைய உடம்பு வணங்கி வேலை செய்து இந்த ஒரு சாண் வயிற்றுக்குக் கஞ்சி பெற்று வாழ முடியுமா? பார்த்து விடவேண்டும்' என்று அவர் சிந்தனை சென்றது. அவரைக் கவிஞர் என்று அறிந்துவிட்டால் ஊரினர் சும்மா விடுவார்களா? அப்பால் அவர் இஷ்டப்படி போக முடியுமா? வர முடியுமா? பட்டினி கிடக்க முடியுமா? நடக்க முடியுமா? வாழ்க்கையில் அரிய அநுபவங்களைப் பெறும் சந்தர்ப்பங்கள் சில, யாவருக்கும் கிடைக்கின்றன. ஆனால் அந்த அநுபவங்களால் பயன் அடைபவர்கள் மிகச் சிலரே. கம்பர் உலகைத் தம்முடைய கவிதைக் கண்களால் நோக்கி, ஒவ்வொரு கணத்திலும் புதிய புதிய உணர்ச்சிகளைப் பெறுபவர். உலக அரங்கில் உலவும் மக்களின் உணர்ச்சிகளை ஊடுருவிப் பார்த்து, அவர்கள் செயல்களை அறிந்து வியப்பவர். மற்ற மனிதர்களின் வாழ்க்கையைக் கண்டு அதைத் தம் கற்பனைக்குக் கருவியாக்கும் அப் பெரும் புலவர், இப்போது தம்முடைய வாழ்க்கையிலே ஒரு சிக்கலான நிலையில் நின்றார். சக்கரவர்த்தியின் அவைக்களப் புலவராக இருந்தவர் பழக்கமில்லாத மக்களிடையே யாரோ அயலார்போல் நடக்கும் நிலைக்கு வந்துவிட்டார். வந்தால் என்ன? அந்த நிலை யிலும் அவருக்கு இன்பம் இருந்தது; புதுமை இருந் தது; தம் வாழ்க்கையில் கிடைத்தற்கு அரிய செவ்வி அது என்ற உணர்ச்சியும் இருந்தது. ஆகவே தம் எண் ணத்தைச் செயலில் காட்ட முனைந்தார். கூலிக்கு வேலை செய்யும் சிறு கூட்டம் ஒன்றைக் கம்பர் பார்த்தார். "ஐயா, இந்த ஊரில் கூலிக்கு வேலை கிடைக்குமா?" என்று கேட்டார். அவர்கள் அவரை ஏற இறங்கப் பார்த்தார்கள்; கூலி வேலை செய்வதற் காகப் படைக்கப்பட்ட தேகமாகத் தோன்றவில்லை. "ஏன் அப்பா, நீ எந்த ஊர்? திடீரென்று இங்கே வந்த இடத்தில் கூலி வேலை ஏன் செய்யவேண்டும்?" என்று கேட்டான் ஒருவன். அவன் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. "இந்த ஊரில் வேலை செய்து பிழைக்கலாம் என்று வந் திருக்கிறேன். நான் இந்த ஊருக்குப் புதிது. அதனால் தான் கேட்கிறேன்" என்றார். அந்த மனிதனுக்கு அவருடைய விடை திருப் தியை அளிக்கவில்லை. 'தம்பி யாரிடமோ கோபித்துக் கொண்டு வந்திருக்கிறான். பார்த்தால் ராஜா மாதிரி இருக்கிறான். இவனாவது, கூலி வேலை செய்வதாவது!" என்ற எண்ணமும் அவன் பார்வையும் கம்பரைச் சுற்றி வட்டமிட்டன. "வேலை இருந்தால் சொல்லுங்கள்; இல்லையானால் பக்கத்து ஊருக்குப் போகிறேன்." "இல்லை தம்பி; உண்மையைச் சொல்லிவிடு. எதற்காக நீ வேலை செய்யவேணும்? எங்கள் வீட்டுக்கு வா; சோறு போடுகிறோம்." கம்பருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. "நான் யார் வீட்டிலும் உண்பதில்லை. என் கையால் சமைத்துத்தான் உண்பது வழக்கம். கூலிக்கு வேலை இருந்தால் சொல்லுங்கள். அதுவே எனக்குச் சோறு போட்டதற்குச் சமானம்" என்றார். மேலே சம்பாஷணை வளர்ந்தது. வேலைக்காரனுக்கு ஏற்றபடி பேசத் தெரியாதா கம்பருக்கு? கடைசியில் அந்த மனிதன், "அதோ ஊர் ஓரத்தில் வேலி என்ற தாசி வீடு இருக்கிறது. அவள் வீட்டுப் புறக்கடையில் ஏதோ ஒரு சுவர் இடிந்திருக்கிறதாம். ஒருவேளை வேலை செய்தால் அதை அடைத்துவிடலாம்" என்று சொல்லிப் போய்விட்டான். கம்பர் வேலியின் வீட்டிற்குப் போனார். அவளிடம் சுவர் வைக்க இவ்வளவு நெல் என்று பேசிக்கொண்டார். அதிகமாகப் பேச்சுக் கொடுக்கவில்லை. அவள் வீட்டிலே மண் வெட்டி, குடம் எல்லாம் வாங்கிக் கொண்டார். வேலையில் முனைந்துவிட்டார். மண்ணை வெட்டிக் குழைத்தார்; துவைத்தார். சுவர் வைக்க ஆரம்பித்தார். சொல்லையும் பொருளையும் குழைத்து மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் கட்டத் தெரியுமே அன்றி மண்ணைக் குழைக்கும் வேலை அவருக்கு எப்படித் தெரியும்? அதிகமாகத் தண்ணீரைக் கொட்டிவிடுவார். அதனால், மண்ணை எடுத்துச் சுவர் மேல் வைத்தால் அது வழிந்துவிடும். தண்ணீர் போதாமல் மண்ணை வெட்டி அப்புவார். பொல பொலவென்று அப்படியே உதிர்ந்துவிடும். உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் போயிற்று. கைகள் கன்றிப் போயின. தொடர்ந்து ஒரே மூச்சாக வேலை செய்ய அவரால் முடியவில்லை. இடையிடையே சிறிது நேரம் உட்கார்ந்துகொண்டார். வெயில் ஏறிக்கொண்டு வந்தது. கம்பர் இன்னும் ஒரு படைகூட எழுப்பினபாடில்லை. "சுவர் வைக்கத் தெரியாத நாம், கவிதையினால் புதிய உலகைப் படைக்கிறோம். நம்முடைய கைகளால் எழுத்தாணி பிடிக்கத்தான் முடியும்; மண்வெட்டிக்கும் இவைகளுக்கும் வெகு தூரம்" என்ற விஷயம் அவருக்கு அப்பொழுது தான் புலப்படலாயிற்று. மறுபடி எழுந்து முயன்றார். சிரமம் அதிகமாயிற்று. மீண்டும் உட்கார்ந்தார். அவர் உள்ளம் பிரயாணம் செய்யத் தொடங்கியது. சோழ மகாராஜனுடைய அரண்மனையில் அவருக்கு இருந்த செல்வாக்கு என்ன! அவருக்கு நடந்த உபசாரம் என்ன! இப்போது சுவர் வைக்க நேர்ந்த காலத்தின் கோலம் என்ன! நெற்றி வேர்வையை வழித்துக்கொண்டார். அப்போது ஏதோ பேருக்கு இரண்டு மண்வெட்டி மண் எடுத்து அப்பியிருந்தார்; அதுவும் படபடவென்று சரிந்துவிட்டது. எழுந்து நின்று ஆத்திரத்தோடு ஐந்தாறு முறை மண்ணை வெட்டி வீசி ஒழுங்குபடுத்தினார். வழுக்கு மரத்தின்மேல் வெகு வேகமாக ஏறும் ஒருவன் அதே வேகத்தோடு சருக்கிவிட்டு இறங்குகிறானே, அதே போல அவ்வளவு மண்ணும் மடமடவென்று சரிந்து விட்டது. கம்பருக்கு இப்போது மலைப்பு வந்துவிட்டது. சோர்ந்துபோய்க் கீழே உட்கார்ந்தார். சக்கரவர்த்தி திருமுன்னர்ப் புலவர் கூட்டத்திடையே கம்பர் அமர்ந்திருக்கிறார். சோழ மன்னன் புன்னகை பூத்தபடி சிங்காதனத்தில் வீற்றிருக்கிறான். அருகில் இள நங்கையர் கவரி வீசுகின்றனர். கம்பர் மேனியில் கவரிக் காற்று மெல்லெனத் தவழ்கிறது. முதல் நாள் பாடிய ஒரு பாட்டின் சுவையைப்பற்றி அரசன் வியந்துகொண் டிருக்கிறான். கம்பருக்கு உண்டான பெருமிதம் கட்டுக்கு அடங்கவில்லை. "கம்பர் இந்த நாட்டுக்கு விளக்கு; நம் அவைக்களத்திற்கு நடு நாயக மணி; தமிழ் உலகத்திற்கே தனிப்பெரும் புலவர்" என்று மன்னன் வாயாரப் பாராட்டுகிறான். அங்குள்ள புலவர்களெல்லாம் உவகைக் குறிப்போடு தலையை அசைக்கின்றனர். காட்சி மறைந்தது. படை பதைக்கும் வெயில்; எதிரே சுவர் அவரைப் பார்த்துப் பரிகசித்துக்கொண்டு நிற்கிறது. இங்கே கவரி இல்லை, காற்று இல்லை. வெயில், வேர்வை, சோர்வு எல்லாம் இருந்தன. அவரைக் கவிஞரென்று தெரிந்துகொண்டவர் யாரும் இல்லை. இரண்டையும் ஒப்பிட்டு நோக்கின கம்பர் உள்ளம் உணர்ச்சி வசமாயிற்று.
சாதாரண மனிதனாக இருந்தால் அந்த உணர்ச்சி அழுகையாக வெளிவந்திருக்கும்.
அவரோ கவிஞர். அவர் உணர்ச்சி ஒரு கவிதையாக வெளியாயிற்று.
உட்கார்ந்தபடியே அவர் "மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்தேன்; சொற்கொண்ட பாவின் சுவையறிவார் ஈங்கிலையே! விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலி நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே" என்று வந்தது பாட்டு. சுவர் உண்மையில் குறுஞ் சுவர் தான். அவர் அதை நெடுஞ்சுவராக்கும் வேலையை ஒப்புக்கொண்டு வந்தார். அவர் கைகளுக்கு அந்தத் திறமை இல்லை. இப்போது அவர் நாவினால் அது நெடுஞ் சுவராகிவிட்டது. வேலியோ 'விற்கொண்ட வாள் நுதலாள்'(வில்லைப் போன்று வளைந்த ஒளியையுடைய நெற்றியைப் பெற்றவள்) ஆனாள். பாட்டு உணர்ச்சியோடு வந்தது. நெடுஞ்சுவரைப் பார்த்து அவர் பாடினார்; அதற்குக் காதா இருக்கிறது, கேட்க? ஆனால் விற்கொண்ட வாணுதலாளாகிய வேலியின் காதில் இது விழுந்தது. 'என்ன இது! இந்தக் கூலிக்காரன் பாட்டுப் பாடுகிறானே! இவன் வேலை செய்வதே விசித்திரமாக இருக்கிறதே!' என்று கவனித்தாள். 'நம்மைப் பாடுகிறானே; அடே! இதென்ன! இவன் வேலை செய்கிற தொழிலாளி அல்ல. யாரோ புலவர்' என்று எண்ணினாள். ஓடி வந்தாள். கம்பர் தம்மை மறந்து நெடுஞ்சுவரைப் பிரார்த்தித்துக்கொண் டிருந்தார். அவர்முன் போய் நின்று கைகுவித்தபடி, "புலவரே!" என்றாள் வேலி. கண்ணை விழித்தார் கம்பர். முன்னே வேலி நின்றாள். "ஐயா, நான் தாங்கள் சுவர் எடுப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். வேலை செய்த பழக்கம் தங்களுக்கு இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். இப்போது தான் உண்மை வெளிவந்தது. தாங்கள் யார்? தாங்கள் இந்த மாதிரி செய்யத் தகாத கூலி வேலையை ஏற்றுக் கொள்வானேன்?" - கேள்விகள் சரமாரியாக வந்தன. கம்பர் மௌனமாக இருந்தார். அவர் கவிதை கலைத்துவிட்டதே! வேலி அவரை உள்ளே அழைத்துச் சென்றாள். காலில் விழுந்து வணங்கினாள். கம்பர் உண்மையைச் சொல்லும்படி நேர்ந்து விட்டது. வேலிக்குத் தூக்கமும் வியப்பும் ஆனந்தமும் மாறி மாறி வந்தன. "என் பாக்கியம் மகத்தானது!" என்று குதித்தாள். "ஐயோ! தங்களைக் கூலி வேலை செய்யும்படி ஏவினேனே!" என்று துடித்தாள். "நான் செய்த பிழையைப் பொறுக்க வேண்டும்" என்று அழுதாள். அன்று கம்பர் அங்கே உணவு உட்கொண்டு தங்கி மறுநாள் புறப்பட்டுவிட்டார்.
நிச்சயம் இல்லாத லட்சியத்தை நோக்கி. 10. வணங்கா மூடி
ரகுநாத சேதுபதி என்ற அரசர் தமிழன்பும் வள்ளன்மையும் மிக்கவர். அவருடைய ஆஸ்தானத்தில் அமுதகவிராயர், அனந்த கவிராயர், சவ்வாதுப் புலவர், சர்க்கரைப் புலவர் முதலிய புலவர் பலர் இருந்து விளங்கினர். சவ்வாதுப் புலவர் முகம்மதியர். தமிழில் நினைத்தபோது நினைத்த பொருளை விசித்திரமாக அமைத்துப் பாடும் ஆற்றல் உடையவர். ஒருநாள் புலவர்கள் கூடியிருந்த சபையில் நடு நாயகமாய் ரகுநாத சேதுபதி வீற்றிருந்தார். புலவர்கள் மிக்க இடத்தில் தமிழையன்றி வேறு எதைப் பற்றிப் பேச்சு நிகழப் போகிறது? அங்கே இருந்த மதிமந்திரிகளுள் ஒருவர் புலவர்களை நோக்கி, " இன்று மகாராஜாவைப்பற்றி ஓர் அழகான செய்யுளை நீங்கள் இயற்றவேண்டும்" என்று சொன்னார். "பாட்டில் என்ன பொருளை வைக்க வேண்டும்?" என்ற கேள்வி அடுத்தபடி பிறந்தது. "எல்லோரும் புகழ்கிறமாதிரி இருக்கக்கூடாது. மகாராஜா தாம் செய்யக்கூடாத காரியத்தைச் செய்ததாக இருக்கவேண்டும்" என்று ஒரு மந்திரி சொன்னார். வணங்கா முடியையுடைய மகாராஜா வணங்கினதாக ஒரு செய்யுள் சொல்லலாமே" என்று வேறொரு மந்திரி யோசனை கூறினார். அப்போது சேதுபதி அரசருக்கு முகத்தில் சிறிது கோபக்குறி தென்பட்டது. சட்டென்று ஒரு புலவர் பேச்சைத் திருப்பினார்; "சிவபெருமானுக்கு மகாராஜா வணங்கினாலும் அவருடைய திருமுன் உலகமே வணங்கி நிற்கிறது" என்று சாதுரியமாகச் சேதுபதியின் வணங்கா முடியும் வணங்கும் சந்தர்ப்பத்தைப் புலப்படுத்தினார். கேட்ட அரசருக்குக் கோபம் அடங்கிவிட்டது. வேறொரு புலவர், "அது மட்டுமா? வேறொரு சமயத்தும் மகாராஜாவின் திருமுடி வளையலாம். ஆனால் அதன் பயன் இன்பம்" என்றார். "எந்தச் சமயம்?" என்று மந்திரிகள் ஒருங்கே கேட்டனர். புலவர் சிரித்துக்கொண்டே, "இளையார் கலவியிடத்து" என்று சொல்லிச் சிரித்தார். மன்னர் முகத்தில் புன்னகை ஒளிர்ந்தது. மற்றொரு புலவருக்குக் கம்பர் பாடிய பாட்டொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் ஓர் மயிர் வினைஞனைப்பற்றிப் பாடின பாட்டு அது: "ஆரார் தலை வணங்கார்" என்று ஆரம்பமாகும் அந்தப் பாட்டை நினைத்துப் பார்த்துவிட்டு,'சே! இது உசிதமான சமாசாரம் அல்ல' என்று எண்ணி அவர் மௌனமாக இருந்துவிட்டார். ஒரு மந்திரி, இவ்வளவு தானா? இதற்கு மேலே சாமர்த்தியமாக ஒன்றும் தோன்றவில்லையா?" என்று கேட்டார். அப்போது சவ்வாது புலவர் சிறிதே கனைத்துக் கொண்டார். "என்ன புலவரே, ஏதோ சொல்லப் போகிறீர்கள் போல் இருக்கிறதே!" என்று மந்திரி கேட்டார். "ஆம். மகாராஜாவின் முடி வணங்கும் சந்தர்ப்பம் மற்றொன்று எனக்குத் தெரியும்" என்றார். எல்லோரும் அவர் வாயையே பார்த்துக்கொண் டிருந்தார்கள். "வணங்காத மகாராஜாவின் பொன்முடி வணங்கும்; அதுவும் பகை மன்னருடைய முன்னிலையில் வணங்கும்" என்றார். அங்கு இருந்தவர்களுக்குப் புலவர் கருத்து விளங்கவில்லை. அரசரும் யோசனையில் ஆழ்ந்தார். "நம்முடைய மகாராஜா பகைமன்னர் முன்னிலை யில் தலை வணங்குவாரென்றா சொல்கிறீர்கள்?" என்று ஒருவர் கேட்டார். " ஆம், நம்முடைய வணங்கா முடியையுடைய சேதுபதி மகாராஜாவின் திருமுடி பகைவர் முன்னிலையில் வணங்கும் என்றுதான் சொல்கிறேன்." "இவர் என்ன இப்படி என்னவோ உளருகிறாரே!' என்று சிலர் நினைத்தனர். வித்துவான்கள் சவ்வாதுப் புலவர் யாவரையும் பிரமிப்பில் மூழ்கச் செய்யப் போகிறாரென்றே எதிர்பார்த்தனர். "மறுபடியும் சொல்கிறேன். நம்முடைய மகாராஜா தம்முடைய பகையரசர்களூக்கு முன்னே தம் திருமுடியை வளைப்பார்." "யோசித்துப் பேசவேண்டும், புலவரே" என்று ஒருமந்திரி சொல்லி எச்சரித்தார். "பலமுறை யோசித்துத்தான் சொல்கிறேன். அப்படி வளைவதனால் நம்முடைய மகாராஜாவின் பெருமை தான் தெரிகிறது; பகையரசரின் இழிவும் புலப்படுகிறது" என்று கம்பீரமாகக் கூறினார் புலவர். இந்த மூடுமந்திரம் ஒருவருக்கும் விளங்கவில்லை. "போதும் போதும். எங்களை தவிக்கவைப்பது. விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள்" என்று சிலர் வேகமாகக் கூறினர். " மகாராஜா சிங்காதனத்தில் வீற்றிருக்கிறார். அவரால் தோல்வியுற்ற பகையரசர்கள் கையில் தளை பூண்டு சிறைப்படுகிறார்கள். சிலகாலம் கழித்து மகாராஜாவுக்குக் கருணை பிறக்கிறது. பகைவர்களை விடுவித்துத் தளையைத் தறித்து விடுகிறார். அவர்களுள் சிலர் மகாராஜாவின் பாராக்கிரமத்துக்கு அடிமையாகி இங்கேயே குற்றவேல் செய்யத் துணிகின்றனர். மகாராஜாவுக்கு அருகில் இருந்து வேண்டிய பணிவிடைகளைச் செய்கின்றனர். " மகாராஜா நல்ல இனிய வாசமுள்ள தாம்பூலம் அணிந்து சுவைத்து விட்டுத் திரும்புகிறார். அவர் குறிப்பறிந்த ஒரு பகையரசன் கையில் காளாஞ்சியை ஏந்திக்கொண்டு மன்னர்பிரானுக்கு அருகில் நிற்கிறான். அப்போது அந்தப் பகையரசனுக்கு முன்னே நம் மகாராஜாவின் திருமுடி சற்றே வளையும். வளை யாதா? காளாஞ்சியில் எச்சில் தம்பலத்தைத் துப்பும்போது வளையாதா? அந்த வளைவிலே மகாராஜாவின் வெற்றி மிடுக்குப் புலப்படவில்லையா?" "ஆஹா! என்ன சாமர்த்தியம்! என்ன அருமையான கருத்து!" என்று அங்கே இருந்தவர்கள் ஆரவாரித்தனர். மகாராஜாவின் உள்ளம் மகிழ்ச்சி நிரம்பி அலர்ந்ததை அவர் முகத்தின் மலர்ச்சி தெரிவித்தது. "ஙபுலவர் இந்தக் கருத்தைப் பாடலாகச் சொல்லலாமே" என்று ஒரு மந்திரி சொல்லும்போதே, "இதோ, சொல்கிறேன்,கேளுங்கள்" என்று சவ்வாதுப் புலவர் பின்வரும் அழகிய பாடலைச் சொன்னார். கிளையாளன் சேது பதிரகு நாயகன் கிஞ்சுகவாய் இளையார் கலவி யிடத்தும்நம் ஈச ரிடத்தும்அன்றி வளையாத பொன்முடி சற்றே வளையும் மகுடமன்னர் தளையா டியகையில் காளாஞ்சி ஏந்தும் சமயத்துமே. [மந்திரி முதலிய சுற்றத்தையுடைய ரகுநாத சேதுபதியினது, முருக்கம்
பூப்போன்ற சிவந்த வாயையுடைய இளம் பெண்களோடு இன்புறும் சமயத்திலும்
சிவபெருமான் முன்னிலை யிலுமன்றி வணங்காத, பொன் அணிந்த திருமுடி, மகுட
மணிந்த பகையரசர்கள் விலங்கு பூட்டியிருந்த தம் கைகளில் காளாஞ்சி
ஏந்தும் சமயத்திலும் சற்றே வளையும். கிளை- சுற்றம். கிஞ்சுகம்-
முள்ளூமுருங்கை. இளையார்- இளம் பெண்கள். தளை- விலங்கு.] 11. சம்பந்தச் சர்க்கரை
கோயம்புத்தூர் ஜில்லாவில் பழைய கோட்டை என் பது ஒரு பாளையக்கார்ருடைய ஊர். அங்கே உள்ள பாளையக்காரர் கொங்குவேளாளருக்குத் தலை வர். அவரை இக்காலத்தில் பட்டக்காரர் என்று வழங்குவார்கள். அந்தப் பழைய கோட்டையின் ஒரு பகுதிக்கு ஆணூர் என்ற பெயர் முன்பு வழங்கியது. ஆணூரில் பல வருஷங்களுக்கு முன் (பதினே ழாம் நூற்றாண்டு) சம்பந்தச் சர்க்கரை மன்றாடியார் என்பவர் பாளையக்காரராக இருந்தார். அவர் தமிழ்ப் புலவர்களின் அருமையை அறிந்து பாராட்டிப் பரி சளித்து அவர்கள் உவகை யடைவதைக் கண்டு தாம் உவகை யடைவார். அவருடைய வள்ளன்மையையும் தமிழறியும் இயல்பையும் தெரிந்து பல புலவர்கள் நெடுந்தூரத்திலிருந்து வருவார்கள். வந்து பார்த்துப் பழகிச் சம்பந்தச் சர்க்கரை மன்றாடியாரது சல்லாபத் தினாலே அதுகாறும் அடையாத இன்பத்தை அடைந்து, 'நாம் இவரைப்பற்றிக் கேள்வியுற்றது சிறிது; அறிந்துகொண்டது பெரிது' என்று பாராட்டி வியப்பார்கள். திருமலை நாயக்கர் மதுரையிலிருந்து அரசு செலுத்தி வந்து காலம் அது. கொங்கு நாட்டில் பெரும் பகுதி அவருடைய ஆட்சியின்கீழ் இருந்தது. அம்மன்னருடைய மந்திரியாகிய தளவாய் ராமப்பையரே கொங்கு நாட்டுக்கு உரிய அதிகாரியாக இருந்து வந்தார். பாளையக்காரர்களிடமும் காணியாளர்களி டமும் தம்முடைய அதிகார பலத்தை வெளிப்படுத்தி வரியை வாங்குவதில் அவர் வல்லவராக இருந்தார். ஒருசமயம் கொங்கு நாட்டில் பஞ்சம் உண்டாகி விட்டது. பல பசுக்களையும் எருதுகளையும் செல்வ மாக வைத்துப் பாதுகாக்கும் சம்பந்தச் சர்க்கரைக்கு அந்தப் பஞ்சம் பல வகையில் இடையூறு செய்யலா யிற்று. தக்க உணவு இன்மையால் பல பசுக்கள் இறந்தன; எருதுகள் உயிரை இழந்தன.. அவற்றைக் காணப் பொறுக்காமல் பாளையக்காரர் மனஞ் சோர்ந்து போனார். இந்த நிலையில் அவர் செலுத்த வேண்டிய வரியை அவரால் செலுத்த முடியவில்லை. அவரைப்போலவே வேறு சிலரும் வரி செலுத்த முடியாமல் துயருற்றனர். தளவாய் ராமப்பையரிடமிருந்து தாக்கீது வந்தது. அவர்களிடம் வஞ்சகம் இல்லை; வரிகொடுக்க முடியா மல் தவித்தார்கள். தளவாயினிடம் தங்கள் குறை களை விண்ணப்பிக்கும்படி சொல்லியனுப்பினார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. கடைசியில் அந்தப் பாளையக் காரர்களைச் சிறையில் இடும்படி ராமப்பையர் கட்டளை யிட்டார். சங்ககிரி துர்க்கத்தில் அவர்கள் சிறையிடப் பட்டார்கள். சம்பந்தச் சர்க்கரையும் சிறைவாசத்துக்கு உட்பட்டார். 2. அந்தப் புலவன் சம்பந்தச் சர்க்கரையின் புகழைப் பல காலமாகக் கேட்டிருக்கிறான். ஒருமுறை வந்து பார்த்துப் பழகவேண்டும் என்ற ஆசையை அவன் உள்ளத்திலே வளர்த்துவந்தான். காலம் இசைய வில்லை. அவன் துரதிருஷ்டம் இப்போது ஒழிந்தது. புறப்பட்டு நேரே ஆணூருக்குப் போனான். சர்க்கரை ஆணூரை விட்டுச் சங்ககிரியில் சிறைப்பட்டிருக்கும் செய்தியை அவன் அறியான். அறிந்தபோது தன் ஊழ்வினையை நொந்துகொண்டான். "நல்ல காலத் தில் நீங்கள் வந்திருக்கக் கூடாதா? எவ்வளவு புலவர் கள் இங்கே வந்து பரிசு பெற்றுப் போயிருக்கிறார்கள்! இப்போது சிறைக்குள் அந்தக் குரிசில் அடங்கிக் கிடக் கிறார். ஆனாலும் அவர் புகழ் நாடு முழுவதும் விரிந் திருக்கிறது. அதற்கு உங்கள் வரவே தக்க சாட்சி" என்று ஒருவர் சொன்னார். அதைக் கேட்டபோது புலவனுக்குத் துக்கம் பொங்கிவந்தது. 'நமது அதிருஷ்டத்தை முற்றும் சோதித்து விடுவோம். சங்ககிரி துர்க்கத்துக்கே போய் எப்படி யாவது அந்த வள்ளலைப் பார்த்த பிறகுதான் ஊர் போகவேண்டும்' என்று தீர்மானித்துக்கொண்டான் புலவன். "நான் போய்ப் பார்க்கிறேன்" என்று அவன் சொன்னதைக் கேட்டவர்கள் நகைத்தார்கள். "ராமப் பையன் அதிகாரம் லேசானதா என்ன? சுக்கிரீ வாக்ஞை அல்லவா? அங்கே போய் உங்களுக்கு ஏதா வது ஆபத்து நேர்ந்தால், அபக்கியாதி எங்கள் தலைவ ருக்கு வரும். பேசாமல் ஊருக்குப் போய்விடுங்கள். நல்ல காலம் வந்த பிறகு ஆண்டவன் அருளால் பிழைத் திருந்தால் ஒன்றுக்குப் பத்தாகச் சம்மானம் வாங்கிப் போகலாம்" என்றார்கள். அவர்கள் வார்த்தைகள் யாவும் தன்னுடைய அதிருஷ்டக் குறைவைக் குத்திக் காட்டுவனவாகவே புலவனுக்கப் பட்டன. 'அந்த வள்ளலைப் பாராமல் ஊர் திரும்பக்கூடாது. அவரைப் பார்க்க முடியாவிட்டால் சிறை நீங்கும் வரையில் நான் சிறைவாயிலிலே தவங்கிடப்பதற்கும் சித்தமாக இருப் பேன்' என்ற அவனுடைய தீர்மானம் பின்னும் உறுதி பெற்றது. அதனைத் தடுப்பார் யார்? சங்ககிரி துர்க்கத்தை வந்து அடைந்தபோதுதான் அவனுக்கு மனம் நிலைகொண்டது. சிறைச்சாலை இருக் கும் இடத்தைக் தெரிந்துகொண்டான். சிறைக்குள் வேறு யாரேனும் புக முடியுமா என்பதை விசாரித் தான். அவனுக்குக் கிடைத்த விடையிலிருந்து, 'நம் முடைய சங்கற்பம் நிறைவேறவும் வழி இருக்கும் போலும்' என்ற எண்ணம் உண்டாயிற்று. பாளையக் காரர்கள் சிறையிலே இருந்தாலும் அவர்களுக்கு வேண் டிய வசதிகளைத் தளவாய் ராமப்பையர் செய்வித்திருந் தார். மிகவும் முக்கியமான உறவினர்கள் அவர்களைப் பார்ப்பதற்கும் அநுமதி கிடைத்துவந்தது. எந்த இட மானாலும் புகுவதற்கு உரிமை பெற்றவர்கள் புலவர் கள். ஆகையால் அவர்களுக்குத் தடையே இல்லை. தான் புலவனென்பதைப் புலப்படுத்திய பிறகு அவன் சிறைகாவலனது அநுமதி பெற்றுச் சிறைக் குள்ளே புகுந்தான். உள்ளே போனபோது, அங்கே பல பேர் அமர்ந்திருந்தனர். புலவர் போகும்போதே சம்பந்தச் சர்க்கரை விஷயமாக ஒரு பாடலைப் பாடிக் கொண்டே சென்றார். அதைக் கேட்டு அங்கே இருந் தவர்களுள் சிலர் சிரித்தார்கள். "சரிதான், சிறைச் சாலையிலுங்கூடவா யாசகம்? நல்ல சமயத்தில் வந் தீரே!" என்று இகழ்ச்சியாக ஒருவர் பேசினார். "யாச கனுக்குச் சிறையென்றும் வீடென்றும் பேதம் இல்லை. கொடுப்பவர்களுக்கும் அந்தப் பேதம் இல்லை. சந்திரன் தன்னை ஒருபால் ராகு பற்றிக்கொண்டே ..... போது மற்றொரு பால் நிலவொளியைத் தருவதை நீங்கள் பார்த்ததில்லையா? நல்ல சமயம் வரட்டும் என்று நான் பார்த்துக் கொண்டிருந்தால் அது வரைக்கும் என் வறுமை என்னை விடாதே. அவரை பதமாகு முன்பே கடுகு பொடியாகிவிடுமே! அது கிடக்கட்டும். சம்பந்தச் சர்க்கரை யார் என்பதைத் தெரிவிக்க மாட்டீர் களா?" என்று புலவர் சொல்லி அந்தக் கருத்தையே ஒரு பாடலாகவும் பாடினார். "எவரையென்று நாம் அறியோம் இரப்பவனோ இடமறியான் இரவில் ராகு கவருமதி யொருபுறத்தே நிலவெறிக்கும் பான்மைதனைக் கண்டிலீரோ அவரைபத மாகுமுனம் கடுகு பொடி ஆகிவிடும் அதனை யோர்ந்து துவரைமுதல் காதலனாம் சம்பந்தச் சர்க்கரையார்? சொல்லுவீரே." [துவரைமுதல் காதலன் - துவாரகாபுரி வாசியாகிய கண்ண பிரானிடத்துக் காதலுடையவன்.] பாட்டுப் புறப்பட்டதைக் கேட்டவுடனே அவர் கள் தங்கள் பரிகாசத்தை விட்டுவிட்டுப் புலவருக்கு மரியாதை செய்தார்கள். பிறகு தனியே ஓரிடத்தில் சிந்தனையுள் மூழ்கியிருந்த சம்பந்தச் சர்க்கரையிடம் கொண்டுபோய் விட்டார்கள். புலவன் கண்ணைக் கொட்டாமல் அவரைப் பார்த் தான். பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று ஆர் வம் கொண்டு தவங்கிடப்பதற்குக் காரணமான வள் ளலை, நற்கலையில்லாத மதிபோல் நகையிழந்த முகமும் வாடிய மேனியுமாகக் கண்டான். சர்க்கரை வள்ளல் எழுந்து உபசரித்தார். "இந்த நிலையிலே தங்களைக் கண்ட கண்களைத் தோண்டி எறிய அல்லவா வேண் டும்? நான் பாவி! திருமகள் நடனஞ் செய்த காலத் திலே காணக் கொடுத்துவைக்கவில்லை" என்று புலவன் மனமுருகி நைந்தான். "வருந்த வேண்டாம். எல்லாம் அவரவர் வினை ப்பயன். தங்களைத் தக்கவண்ணம் உபசரிக்கக் கொடுத்து வைக்காத பாவி நான் தான். என்னுடைய சுதந் திரத்தை இழந்து சிறைப்பட்டுக் கிடக்கும் இந்தச் சம யத்தில் தங்களை உபசரிப்பதற்கோ, தங்கள் புலமையை அறிந்து பாராட்டுவதற்கோ என்னால் இயன்றதை அளிப்பதற்கோ வழியில்லாமல் இருக்கிறதே!" என்று அந்த உபகாரி இரங்கலானார். புலவன் அவருக்கு ஆறுதல் சொன்னான். அப்பால் இருவரும் சம்பாஷித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று சர்க்கரை வள்ளலுக்கு ஏதோ ஞாபகம் வந்தது; அவ ருக்குத் தெரிந்த சிறை ஏவலாளை அழைத்து ஏதோ சொல்லியனுப்பினார். சிறிது நேரம் கழித்து அவன் தன் கையில் எதையோ மூடிக் கொணர்ந்து பிரபுவின் கையில் கொடுத்தான். அவர் புலவனை நோக்கி, "இந்த இடத்திலே என்னால் உதவ முடிந்தது இது தான். என்னுடைய ஞாபகத்துக்கு அடையாளமாக இதை வைத்துக் கொள்ளவேண்டும்" என்று அந்தப் பொரு ளைப் புலவன் கையிலே கொடுத்தார். புலவன் அதைப் பார்த்தான். அது ஒரு பொற் றாலியாக இருந்தது. புலவனுக்குத் திடுக்கிட்டது; மயிர்க் கூச்செறிந்தது; உடம்பெல்லாம் வேர்த்தது. "என்ன இது?" என்று பதறிப்போய்க் கேட்டான். "என் மனைவி இவ்வூரில் தங்கியிருக்கிறாள். அவளுக்குச் சொல்லியனுப்பினேன். அவள் இதை அனுப்பினாள். கழுத்தில் மஞ்சட் சரடு இருக்கிறது. அது போதும். இது மிகை தானே? இந்தச் சமயத்தில் உதவுவதற்கு இது கிடைத்தது. இப்பொழுதுதான் இது மங்கலம் பொருந்தியதாயிற்று" என்று சர்க்கரை வள்ளல் சொல்லச் சொல்லப் புலவருடைய கண்களில் நீர் சுரந்து வழிந்தது. "இப்படி யாரையும் நான் கண்டதில்லை. உலகத்தில் மழை பொழிவது உங்களுக்காகத்தான். நான் பரிசு வாங்க வரவில்லை. உங்களைப் பார்த்துப் போகத்தான் வந்தேன்" என்று தழுதழுத்த குரலில் புலவன் பேசினான். "தாங்கள் வருந்துவதற்கு நியாயம் ஒன்றுமே இல்லையே. என்னுடைய வாழ்நாள் இன்னும் எவ்வளவு காலமோ, யார் அறிவார்கள்? இந்தச் சிறையே எனது இறுதி வாசஸ்தலமாக இருந்தாலும் இருக்கலாம். இந்தச் சமயத்தில் தங்களுக்கு இதையாவது கொடுக்க முடிந்ததுபற்றி என் நல்லூழை வாழ்த்துகிறேன்." என்று சர்க்கரை வள்ளல் கூறினார். புலவனுக்குப் பேச வரவில்லை. பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டான். கடைசியில் விடை பெற்றுக்கொண்டான். "இத்தகைய தாதாவைச் சிறையில் அடைக்கத் துணிந்தவன் மிகவும் கல் நெஞ்சனாக இருக்கவேண்டும். கடவுள் இவரையும் படைத்து அவனையும் படைத்திருக்கிறாரே!" என்று புலவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. �அந்த அதிகாரியிடம் போய் நம்முடைய ஆத்திரந்தீர வைதுவிட்டு வரலாம்' என்று ராமப்பையரை நோக்கிப் புறப்பட்டான். 3. தளவாய் ராமப்பையர் அவன் நினைத்தது போல அவ்வளவு கொடியவர் அல்ல. தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் இயல்பு அவரிடமும் இருந்தது. வித்துவானுக்கு எங்கும் தடையின்றிப் புகும் உரிமை உண்டு; ஆதலால் அப்புலவன் நேரே ராமப்பையரை அணுகினான். ஒன்றும் பேசாமல் சர்க்கரை கொடுத்த தாலியை எடுத்து நீட்டி, "இதைப் பார்த்தீர்களா?" என்றான். "என்ன இது?" என்று பரபரப்பாகக் கேட்டார் தளவாய். புலவன் ஒரு பாட்டிலே பதில் சொன்னான்; "கொங்கினில் ராமப் பயனதி காரக் குரூரத்தினால் கங்குல் இராப்பகல் சர்வசங் காரஞ்செய் காலத்திலே சிங்கநற் சம்பந்தச் சர்க்கரை தேவி திருக்கழுத்தின் மங்கலி யந்தனைத் தந்தான் தமிழ்க்கவி வாணருக்கே" என்று தன்னுடைய ஆத்திரத்தையெல்லாம் கொட்டினான். ராமப்பையரது கலங்காத நெஞ்சமும் கலங்கியது. "ஹா! நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார். "சொல்வது என்ன? சமுகத்தின் அதிகாரம், புருஷர் இருக்கையிலே நல்ல மகளிர் தம் மங்கலியத்தை இழக்கும்படி செய்கிறது. இதனால் அவர்கள் மங்கலம் இழக்கவில்லை. மங்கலம் இழப்பவர்கள் வேறு" என, என்ன வந்தாலும் வரட்டுமென்று துணிந்து பேசலானான் புலவன். "அப்படியா! சம்பந்தச் சர்க்கரை கொடுத்ததா இது!" - அந்த மங்கலியம் ராமப்பையர் நெஞ்சில் வேதனையைக் கிளப்பியது. வேகத்தையும் உண்டாக்கியது. அவருடைய அதிகாரத்துக்குச் சொல்ல வேண்டுமா? ஆட்கள் ஓடினார்கள். சிறைச்சாலைக்குச் சென்று சம்பந்தச் சர்க்கரைக்கு ஆசார உபசாரங்கள் செய்து தளவாயினிடம் அழைத்துவந்தார்கள். "அடடா! உம்முடைய பெருந்தன்மையை இவ்வளவு காலம் நான் அறிந்துகொள்ளவில்லையே. தமிழுக்குத் தாலி கொடுக்கும் தாதாவை நான் சிறையில் அடைத்தது பிழை" என்று அவரை ராமப்பையர் வரவேற்றார். "எல்லாம் விதியின் செயல்" என்று சுருக்கமாகப் பதில் வந்தது. தளவாயும் வள்ளலும் அளவளாவிப் பேசினர். "உம்முடைய செயல் என் மனத்தை உருக்கிவிட்டது. வரியை உமக்குச் சௌகரியமானபோது கட்டலாம். உமக்கு ஏதாவது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்" என்றார் தளவாய். "எனக்கு ஒன்றும் வேண்டாம். உங்கள் தயை இருந்தால் போதும். ஒரே ஒரு வேண்டுகோள்; அதை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்." "என்ன, என்ன?" "என்னுடன் சிறையில் இருந்த பாளையக்காரர்களும் காணியாளர்களும் மானமுள்ளவர்கள். கால வேற்றுமையால் அவர்கள் வரி கட்ட இயலவில்லை. நல்ல காலம் வந்தால் கரவின்றி வரியைக் கட்டிவிடுவார்கள். அவர்களையும் விடுதலை செய்யும்படி உத்தரவாக வேண்டும். என்னை மட்டும் விடுதலை செய்தால் பக்ஷபாதம் உடையவர்கள் என்ற அபவாதம் சமுகத்தைச் சாரும்" என்று பணிவுடன் வேண்டிக்கொண்டார் சம்பந்தச் சர்க்கரை. ராமப்பையர் சிறிது யோசித்தார்; "சரி; உம்முடைய உயர்ந்த குணத்தை மெச்சுகிறேன். உம்மோடு இருந்த விசேஷத்தால் அவர்களும் விடுதலை பெறட்டும்" என்றார். சிறைச்சாலைக் கதவு அகலத் திறந்தது. யாவரும் விடுதலை பெற்றனர். புலவர் சர்க்கரைவள்ளலோடு ஆணூருக்குச் சென்று அவருடைய உபசாரத்தைப் பெற்றுச் சில காலம் தங்கினான். "தங்களுக்கு நான் அளித்த பொருள் சிறிதானாலும், நல்லவர்களுக்கு அளிக்கும் ஈகை பன்மடங்கு பயனைத் தருமென்பதற்கு இணங்க, உடனே எங்கள் யாவருக்கும் விடுதலை கிடைக்கச் செய்தது. எல்லாம் நீங்கள் தந்த வாழ்வு!" என்றார் சர்க்கரை. "உலகம் உள்ள அளவும் மறவாத செயலை நீங்கள் செய்தீர்கள். உங்கள் புகழ்
வாழ்க!" என்றான் புலவன். 12. பூங்கோதை
கொங்கு நாட்டில் மோரூர் என்னும் ஊரில் அதைச் சூழ்ந்துள்ள கீழ்கரைப் பூந்துறைநாடு என்னும் பகுதிக்குத் தலைவனாக நல்லதம்பிக் காங்கேயன் என்னும் உபகாரி வாழ்ந்து வந்தான் (பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி). அவன் தமிழன்பு மிகுந்தவன். தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் இயல்புடையவன். எம்பெருமான் கவிராயருக்கும் நல்லதம்பிக் காங்கேயனுக்கும் நட்பு உண்டாயிற்று. அடிக்கடி கவிராயர் மோரூருக்குப் போய்ச் சில தினங்கள் இருந்து அந்த உபகாரியோடு அளவளாவி இன்புறுவார். கம்பராமாயணச் சொற்பொருள் நயங்களை எடுத்து விளக்குவார். ஒரு நாள் காங்கேயன் கம்பராமாயணப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருந்தபோது எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டான். "என்ன நினைத்துக் கொண்டீர்கள்?" என்று புலவர் கேட்டார். "சோழ நாட்டின் பெருமையை நினைத்துப் பார்த்தேன்.அந்த நாட்டுக்கு எத்தனை நிலவளம் இருந்தாலும் அது பெரிய புகழ் ஆகாது. கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பருடைய கவி வளம் உண்டான நாடு என்ற பெரும் புகழ் ஒன்றைப்போல வேறு எதுவும் வராது. 'சோழ நாடு கம்பராமாயணத்தை உடைத்து' என்று பாராட்டுவதுதான் முறை" என்றான் காங்கேயன். "திடீரென்று ஏன் இந்த ஞாபகம் உங்களுக்கு வந்தது?" "திடீரென்று வரவில்லை. கம்பராமாயணத்தை நினைக்கும்போதெல்லாம் இந்த நினைவும் உடன் வருகின்றது. இன்று அந்த நினைவு மிகுதியாகிவிட்டது." "உண்மைதான். ஒரு வேளை தின்றால் மறு வேளைக்குப் பயன்படாத சோற்றைத் தருவது பெரிய சிறப்பன்று. எக்காலத்தும் நினைக்க நினைக்க இன்பத்தைத் தரும் கவிச் செல்வத்தை, அதுவும் சுவைப்பிழம்பாக விளங்கும் கம்பராமாயணத்தைத் தந்த சிறப்பினால் சோழ நாடு எல்லா நாடுகளிலும் உயர்ந்து விளங்குகிறது." "அந்த மாதிரியான பெருமை வேறு நாட்டிற்கு வரக்கூடாதா?" என்று ஆவலாக வினவினான் காங்கேயன். "மீட்டும் கம்பர் அந்த நாட்டிற் பிறந்தால் வரக்கூடும்!" "இது சாத்தியமா? அவ்வளவு புகழ் இல்லாவிட்டாலும் 'நம்முடைய நாட்டிலும் ஒரு ராமாயணம் பிறந்தது' என்ற புகழை அடைய முடியாதா?" காங்கேயன் கருத்து என்னவென்று ஆராய்வதில் புலவர் மனம் சென்றது; அவர் மௌனமாக இருந்தார். "என்ன, கொங்கு நாட்டிலும் ஒரு புலவர் ராமாயணம் ஒன்றை இயற்றினார் என்ற புகழை இந்த நாட்டுக்கு அளிக்க முயல்வது கடினமான காரியமா?" புலவருக்குக் காங்கேயன் கருத்து விளங்கிவிட்டது. அவர் புன்னகை பூத்தார். காங்கேயனும் புன்முறுவல் செய்தான். "என் கருத்தை உணர்ந்துகொண்டீர்களென்று நினைக்கிறேன். அந்தப் புகழை உண்டாக்க..." "நான் முயல்வேன்" என்று உற்சாகத்தோடு சொல்லி வாக்கியத்தை முடித்தார் கவிராயர். "சந்தோஷம்! நல்லது; பெரும் பாக்கியம். இந்த நாட்டின் அதிருஷ்டம்! உங்கள் திருவாக்கினால் ஒரு ராமாயணம் வெளியாக வேண்டுமென்று நான் பல நாளாக ஆசைகொண்டிருந்தேன். அந்த விருப்பத்தை வெளிப்படையாகச் சொல்ல அஞ்சினேன். கம்பராமாயணத்திலே ஊறி நிற்கும் உங்களுக்கு எல்லா வகையான தகுதிகளும் இருக்கின்றன. நீங்கள் மனம் வைத்தால் எளிதில் நிறைவேற்றுவீர்கள் என்ற உறுதி எனக்கு உண்டு." இந்தக் தூண்டுதலின் விளைவாக எம்பெருமான் கவிராயர் தக்கை என்னும் வாத்தியத்தோடு பாடுவ தற்கு ஏற்ற இசைப் பாட்டுக்கள் அமைந்த ராமாயணம் ஒன்றை எளிய நடையில் பாடி முடித்தார். நல்லதம்பிக் காங்கேயனுடைய ஆதரவால் அந்தத் தக்கை ராமாயணம் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது. எம்பெருமான் கவிராயருடைய மனைவியாகிய பூங்கோதை என்னும் பெண்மணி, புலவருக்கு ஏற்ற மனைவியாக இருந்தாள். அவளும் தமிழ்ப் புலமை உடையவள். பிறந்த வீட்டிலே தமிழ் நூல்களைப் படித்து அறிவு வாய்ந்ததோடு எம்பெருமான் கவிராயருக்கு வாழ்க்கைப்பட்ட பிறகும் அந்த அறிவைப் பன்மடங்கு பெருக்கிக்கொண்டாள். இதனால் அவளும் இலக்கண இலக்கியத் தேர்ச்சி பெற்றுச் செய்யுள் இயற்றும் வன்மையை உடையவளானாள். ஒரு நாள் சில வித்துவான்கள் தக்கை ராமாயணம் பாடிப் புகழ் பெற்ற எம்பெருமான் கவிராயரைப் பார்க்கும்பொருட்டு வந்திருந்தார்கள். அவர்கள் வந்த சமயத்தில் கவிராயர் ஏதோ வேலையாகப் புறத்தே சென்றிருந்தார். வித்துவான்கள் வந்திருப்பதை அறிந்த பூங்கோதை தன் குழந்தைகளை அனுப்பி அவர்களைத் திண்ணையிலே உட்கார்ந்திருக்கும்படி சொல்லி வெற்றிலை பாக்கும் அனுப்பினாள். அவர்கள் திண்ணையிலேயே அமர்ந்து தாம்பூலத்தைப் போட்டுக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். தமிழ் சம்பந்தமான பேச்சாக இருந்ததனால் பூங்கோதை வீட்டிற்குள் இருந்தபடியே அந்தச் சுவையுள்ள சம்பாஷணையைக் கவனித்து ரசித்து வந்தாள். எம்பெருமான் கவிராயருடைய பெருமையையும் தக்கை ராமாயணச் சிறப்பையும் பற்றிப் பேசினார்கள். கம்ப ராமாயண நயம் இடையே வந்தது. தமிழ்ப் பாடல்களும் புலவர்களைப்பற்றிய செய்திகளும் வந்தன. ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிரியமான செய்திகளைச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். பேச்சு மெல்ல மெல்லப் பெண்களைப்பற்றிய விவகாரத்தில் திரும்பியது. "பெண்கள் தனியே வாழ முடியாது. எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும் பெண்புத்தி பின்புத்திதான்" என்றார் ஒருவர். "பேதையரென்ற பெயரே அவர்களுடைய அறியாமையைப் புலப்படுத்தவில்லையா?" என்றார் மற்றொருவர். "தெரியாமலா பரிமேலழகர், 'அறிவறிந்த மக்கள்' என்ற திருக்குறளுக்கு
'அறிவறிந்த என்பது பெண்ணொழித்து நின்றது' என்று எழுதினார்?" என்று
ஆதாரங் காட்டினார் வேறொருவர். கவிராயர் மனைவிக்குக் கோபம் கோபமாக வந்தது. அவர்களுக்கு எதிரே சென்று அவர்கள் வாயை அடக்க வேண்டுமென்று ஆத்திரம் பொங்கியது. ஆனாலும் இயல்பாக இருந்த நாணம் மிஞ்சியது. திண்ணைப்பேச்சில் பெண்ணைப் பழிக்கும் படலம் இன்னும் முடிந்த பாடில்லை. 'ஏதாவது ஓர் உபாயம் செய்து தான் தீரவேண்டும்' என்று துணிந்தாள் அந்தத் தமிழ் மங்கை. சிறிதுநேரம் யோசித்தாள். ஒரு சிறிய ஓலையையும் எழுத்தாணியையும் எடுத்தாள். என்னவோ எழுதினாள். ஒரு குழந்தையைக் கூப்பிட்டு, "இந்தா, இதைக் கொண்டுபோய்த் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார்களே, அவர்களிடம் கொடு" என்றாள். குழந்தை அப்படியே அதைக் கொண்டுபோய்த் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர்களுக்குள் ஒருவர் கையில் கொடுத்தது. அதை அவர் பார்த்தவுடனே அவர் முகம் மங்கியது. ஓலையை மற்றொருவர் பார்த்தார். அவர் பேச்சு நின்றது. ஒவ்வொருவராகப் பார்த்தார்கள். எல்லோரும் திடுக்கிட்டு, ஸ்தம்பித்து, மௌனமானார்கள். ஓலையில் என்ன இருந்தது? பூங்கோதை அவர்களை வைது ஒன்றும் எழுதவில்லை; 'நீங்கள் இப்படிப் பெண்ணினத்தை அவமதிப்பது தவறு' என்றும் எழுதவில்லை. ஆனால் ஒரு வெண்பாவை எழுதி அனுப்பினாள். 'ஆண்மக்கள் பெண்களைக் காட்டிலும் அறிவில் தாழ்ந்தவர்கள்' என்று அந்தக் கவி சொல்லியது. "அறிவில் இளைஞரே ஆண்மக்கள்" என்ற முதலடியே அவர்களைத் திடுக்கிடச் செய்தது. இவ்வளவு நேரம் பேசிக்கொண் டிருந்தபோது அவர்கள் சொன்ன அத்தனை பேச்சுக்கும் விரோதமான கருத்து; அது மட்டுமா? "மாதர், அறிவில் முதியரே யாவர்." இதென்ன வெட்கக் கேடு? பெண்கள் அறிவில் ஆடவர்களைக் காட்டிலும் - அவர்களைக் காட்டிலும் - முதியவர்களாம்! இதற்கு என்ன ஆதாரம்? "அறி கரியோ?" இதை அறிந்துகொள்வதற்குச் சாட்சியா? இதோ "தாம்கொண்ட சூலறிவர் தத்தையர்; ஆண்மக்கள், தாம்கொண்ட சூலறியார் தாம்." சாஸ்திரங்களிலும் பழைய நூல்களிலும் சொல்லப்பட்ட ஒரு தத்துவத்தை ஆதாரமாகப் பாட்டு எடுத்துக் காட்டுகிறது. உயிர் தாயினுடைய கர்ப்பத்திலே புகுவதற்கு முன்பு இரண்டு மாதங்கள் தகப்பனுடைய கர்ப்பத்திலே இருக்குமென்று அந் நூல்கள் சொல்கின்றன. மாதர் தாம் கர்ப்பமுற்ற செய்தியை அறிந்துகொள்வார்கள். ஆடவர்களோ தம்மிடத்தில் உயிர் தங்கியிருப்பதை அறிய முடிவதில்லை. இந்த விஷயத்தில், அதாவது தமக்குச் சூல் உண்டாகியிருக்கிறது என்று அறிந்துகொள்வதில் ஆடவர், பெண்களிலும் தாழ்ந்தவர்களே. அதைத்தான் அந்த வெண்பாவின் பிற்பகுதி சொல்லுகிறது. திண்ணையில் இருந்த வித்துவான்கள் அந்தப் பாடலின் ஒவ்வோர் அடியையும் கவனித்துப் பார்த்தார்கள். முன்னே ஆரவாரித்துப் பெண்களை இழித்துப் பேசியதற்கு நாணமடைந்தார்கள். "இந்தப் பாடல் எந்த நூலில் இருக்கிறது?" என்று ஒருவர் மெல்லத் தமக்குள்ளே கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. 'கவிராயர் மனைவி நன்றாகப் படித்திருக்கிறாள். நம்முடைய வாயை அடைக்கத் தக்க மேற்கோளைத் தெரிந்து நம் பேச்சுக்குப் பதிலாக அனுப்பியிருக்கிறாள். இது நமக்குத் தெரியாத நூலாகவும் இருக்கிறதே!' என்று எண்ணி மனக்குழப்பமும், 'தவறு செய்துவிட்டோமே' என்ற அச்சமும் உடையவர்களாகி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அப்போது எம்பெருமான் கவிராயர் வந்தார். அவர் வரவைக் கண்டு யாவரும் எழுந்து அஞ்சலி பண்ணினர். "வாருங்கள். வந்து நெடுநேரம் ஆயிற்றே?" என்று சொல்லிக் கவிராயர் அவர்களை வரவேற்றார். "முதலில் உங்கள் மனைவியாரிடம் 'எங்களைப் பொறுத்தருள வேண்டும்' என்ற எங்கள் வேண்டு கோளைத் தெரிவித்து அவர்களுடைய பெருமையை அறியாத எங்களை மன்னிக்கச் சொல்லும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்" என்றார் ஒருவர். கவிராயருக்கு ஒன்றும் விளங்கவில்லை. விரைவாக உள்ளே சென்று, "என்ன நடந்தது?" என்று பூங்கோதையைக் கேட்டார். புன்சிரிப்போடு நிகழ்ந்தவற்றை அவள் சொல்லி, "வந்த விருந்தினர்களை அவமதித்த குற்றத்தை நீங்கள் பொறுத்தருள வேண்டும்" என்றாள். கவிராயருக்கு உள்ளத்துக்குள்ளே மகிழ்ச்சி. புன்முறுவலோடு திண்ணைக்கு வந்து, "உங்களுடைய மன்னிப்பைத்தான் அவள் வேண்டுகிறாள்" என்று சொல்லி அமர்ந்தார். "நாங்கள் மன்னிப்பதா? இதோ இந்தப் பாட்டுச் சொல்லுமே. அந்தப் பெருமாட்டியின் பேரறிவை. நாங்கள் இனி எந்த இடத்திலும் இந்தப் பிழையைச் செய்யமாட்டோம்." புலவர் பாட்டை வாங்கிப் பார்த்தார். "அறிவில் இளைஞரே ஆண்மக்கள் மாதர் அறிவில் முதியவரே ஆவர் - அறிகரியோ தாம்கொண்ட சூலறிவர் தத்தையர் ஆண்மக்கள் தாம்கொண்ட சூலறியார் தாம்" என்று இருந்தது. "பார்த்தீர்களா? இது தான் எங்களுக்கு அறிவூட்டியது. ஒரு சந்தேகம்: இந்தப் பாடல் எந்த நூலில் இருக்கிறது? அதைத் தெரிவித்தருள வேண்டும்." புலவர் சிறிதும் யோசியாமலே, "இதை அவளே தான் பாடி உங்களிடம் அனுப்பினாள்" என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார். அவர்கள் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. "ஹா!" என்று
அவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. 13. கற்பூர நாயக்கர்
நாயக்கர் தோத்திரப் பிரியர். அவருடைய முன்னோருடைய வீரப்பிரதாபங்களையும், அவர் தாமே பத்து வருஷங்களுக்கு முன் புலி வேட்டைக்குப் போய் நரி வேட்டையாடிய சாமர்த்தியத்தையும், அந்த வேட்டையைக் கொண்டாட அவர் அன்னதானம் செய்த விமரிசையையும் பாராட்டிப் பேசி, ஜமீன்தாருடைய திருவுள்ளத்தில் இடம் பெற்றவர்கள் பலர். அவருக்கு ஒரு மந்திரி. அநேகமாகப் பணக்காரர்களுக்கும் ஜமீன்தாரர்களுக்கும் முன்னடியாராக இத்தகைய மந்திரிகள் இருப்பது எங்கும் வழக்கந்தான். இவரும் முதலில் ஜமீன்தாரருக்கு இங்கிதமாகப் பேசி அவர் பிரியத்துக்கு ஆளானவரே. வாய்ச் சவடால் அடிப்பதிலும் யாரையும் மடக்கிப் பேசுவதிலும் ஆள் மிகவும் கெட்டீக்காரர். தெரியாத விஷயங்களில் எல்லாம் தலையிட்டுக்கொண்டு பேசுவதில் அவருக்கு உள்ள துணிவு வேறு யாரிடமும் இராது. அந்தச் சவடால் ராயரைத் திருப்தி பண்ணினால்தான் ஜமீன்தாரின் திருப்தியைப் பெறலாம் என்பது ஊரறிந்த ரகசியம். ஒரு நாள் ஒரு புலவர் கற்பூர நாயக்கரை நாடி வந்தார். அவர் நாடு முழுவதும் சுற்றினவர். முரடர்களுக்கு முரடராகவும் சாதுக்களுக்கச் சாதுவாகவும் இருப்பார். உலகம் அறிந்தவர். இன்னாரிடம் இன்னபடி பேசவேண்டும். இன்ன திசையில் வெட்டினால் இன்ன பக்கம் சாயும் என்ற ரந்திரங்களெல்லாம் தம் அநுபவத்தால் தெரிந்துகொண்டவர் அவர். கற்பூர நாயக்கருடைய தரிசனம் அவருக்குக் கிட்டியது. நாயக்கருடைய திருமுக விலாசத்தைக் காணும்போதே அவர் மூளையையும் புலவர் அளவெடுத்துவிட்டார். 'இந்த இடத்தில் நம்முடைய வெண்பாவும் விருத்தமும் கவைக்கு உதவா. ஆளுக்குத் தகுந்த வருணனையும் பாட்டுமே இப்போது வேண்டும்' என்று எண்ணிக்கொண்டார். முதலில் தாம் கொண்டுபோன எலுமிச்சம் பழத்தை ஜமீன்தார் கையில் சமர்ப்பித்தார். சமர்ப்பித்துவிட்டுப் பல்லை இளித்துக்கொண்டு நின்றார். ஜமீன்தார் புலவரைத் தம் கடாட்ச வீட்சண்யத்தால் ஒரு தடவை பார்த்துவிட்டு அருகில் நின்ற தம் அந்தரங்க மந்திரியைப் பார்த்தார். அந்தப் பார்வையில் 'இவரை விசாரிக்க வேண்டும்' என்ற அர்த்தம் இருப்பது மந்திரிக்குத் தெரியும். "நீர் யார்? எந்த ஊர்?" என்று மந்திரி கேட்டார். "நான் தமிழ்ப்புலவன். கவிஞன். பாட்டுக்கள் பாடுவேன். சமுகத்தைக் கண்டுவிட்டுப் போகலாமென்று வந்தேன்" என்று விநயமாகச் சொன்னார் புலவர். "ஏதாவது பாடும் பார்ப்போம்" என்று மந்திரியார் உத்தரவிட்டார். "நான் எஜமான் விஷயமாகவே ஒரு பாடல் இயற்றி வந்திருக்கின்றேன். விண்ணப்பித்துக் கொள்ள அநுமதி வேண்டும்" என்று புலவர் சொன்னார். ஜமீன்தார் தம்முடைய ஹூங்காரத்தால் அநுமதி தந்தார். புலவர் கிராமத்துக் கைத்தொழிலாளிகள் பாடும் ராகத்திலே பாட்டைப் பாட ஆரம்பித்தார். "கோவைப் பழம்போலே என்று தொடங்கினார். பாட்டைச் சொல்லும்போதே உடம்பை நெளித்துக்கொண்டு கையைக் குவித்துக் கோவைப் பழம் என்று தெரியும்படி அபிநயம் பிடித்தார். ஜமீன்தாருக்குத் தம் திருமேனியைப் புலவர் வருணிக்கிறார் என்பது தெரிந்தது. அவருக்குத் தெளிவாக விளங்கும் வார்த்தைகளைத்தானே புலவர் சொல்கிறார்? "கோவைப் பழம்போலே என்று புலவர் வலக் கையாலும் இடக் கையாலும் மாறி மாறி அபிநயம் பிடித்துப் பாடினார். ஜமீன்தார் ஒரு முறை தம் திருமேனியின் நிறத்தைத் தாமே பார்த்துக்கொண்டார். "கோவைப் பழம்போலே என்று பாடிக் குன்றிமணியை அபிநயத்தால் காட்டினார், உலகியல் அறிந்த புலவர். குன்றிமணி என்று சொன்னால் நாயக்கருக்கு விளங்காதென்று 'குண்டுமணி' என்றே சொற் பிரயோகம் பண்ணினார். ஜமீன்தார் புன்முறுவல் பூத்தார். கறுத்து அடர்ந்த மீசைக்கு அடியில் வெண்பல் வரிசை பளிச்சென்று மின்னியது. புவ்வருக்கு உற்சாகம் மூண்டு விட்டது. "காவிக் கல்லைப் போலே என்று மூன்றாவது அடியைப் பாடும்போது ஜமீன்தார் சொக்கிப் போனார். கோவைப் பழமும் குன்றிமணியும் காவிக்கல்லும் முன்னாலே நின்று உல்லாஸ நடனம் புரிவதாக அவருக்குத் தோன்றியது. அடிக்கடி தம் மந்திரியின் முகத்தைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். "காவிக் கல்லைப்போலே என்று ஜமீன்தாரின் திருநாமத்தைப் பாட்டிலே இணைத்து முடித்தார் புலவர். "நல்லா இருக்குது" என்று ஜமீன்தார் தம்மையும் மறந்து சொன்னார். மந்திரி மௌனமாக நின்றார். அவர் சந்தோஷத்தை வெளிப்படுத்தவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார். "என்னப்பா சும்மா நிற்கிறாய்? பாட்டு எப்படி?" ஜமீன்தாரே இப்படிக் கேட்கும்போது மந்திரி எப்படி மௌனத்தைக் கலைக்காமல் இருக்கமுடியும்? "எங்கே, பாட்டை இன்னும் ஒரு தரம் சொல்லும்" என்றார் மந்திரி. "கோவைப் பழம்போல என்று பாட்டு முழுவதையும் சொன்னார் புலவர். மந்திரி எதையோ கண்டுபிடித்தவரைப் போலத் திடீரென்று, "அதுதான் சொல்கிறேன்" என்று சொல்லி ஜமீன்தாரைப் பார்த்தார். மந்திரி என்ன சொல்கிறார் என்பதை அவர் அறிய விரும்பினார். "இதிலே குண்டுமணி இருக்கிறதே, அதைப் பற்றித்தான் சொல்கிறேன். குண்டுமணியில் கொஞ்சம் கறுப்பு இருக்கிறதே; அதை வைத்தது சரியா?" என்று கூறி வெற்றி மிடுக்கோடு புலவரை ஏறிட்டுப் பார்த்தார். 'புலவர் இடி விழுந்தது போலத் திடுக்கிட்டு முகஞ் சுண்டித் தோல்வியுற்று வந்த வழியே போய் விடுவார். தம்முடைய சாமர்த்தியத்தை ஜமீந்தார் அறிந்து பாராட்டுவார்' என்றெல்லாம் அவர் கோட்டை கட்டலானார். புலவரோ இதற்கெல்லாம் அயர்ந்த பேர்வழி அல்ல; இந்த மந்திரியைப் போல ஆயிரம் பேரை வாயில் போட்டுக்கொள்ளும் மனிதர். சிறிதும் அஞ்சாமல் உடனே பதில் சொன்னார். "அதற்குத்தானே காவிக் கல்லைக் கூட வைத்திருக்கிறேன்? அதை உரைத்துத் தடவிவிடுகிறது!" "பலே, பலே!" என்று ஜமீந்தார் ஆனந்தத்தால் துள்ளினார். சவடால் ராயர் வாயடங்கினார். புலவர் அந்தச் சந்தோஷ வேகத்திலேயே சம்மானம்
பெற்றுக் கொண்டு போனார். சில குறிப்புகள்
இந்த வரலாற்றுக்கு ஆதாரம் தொல்காப்பியப் பாயிரத்துக்கு நச்சினார்க்கினியர் எழுதியிருக்கும் உரைப்பகுதி. அது வருமாறு: 'பாண்டியன் மாகீர்த்தி இருபத்துநாலாயிரம் யாண்டு வீற்றிருந்தானாதலின் அவனும் அவன் அவையிலுள்ளோரும் அறிவு மிக்கிருத்தலின் அவர்கள் கேட்டிருப்ப அதங்கோட்டாசிரியர் கூறிய கடாவிற்கெல்லாம் குற்றந்தீர விடைகூறுதலின் அரில்தப என்றார். அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோக்கி, "நீ தொல்காப்பியன் செய்த நூலைக் கேளற்க" என்று கூறுதலானும், தொல்காப்பியரும் பல்காலும் சென்று "யான் செய்த நூலை நீர் கேட்டல் வேண்டும்" என்று கூறுதலானும், இவ்விருவரும் வெகுளாமல் இந்நூற்குக் குற்றங்காட்டி விடுவலெனக் கருதி, அவர் கூறிய கடாவிற்கெல்லாம் விடை கூறுதலின் "அரில் தபத் தெரிந்து" என்றார். 'அவர் கேளற்க என்றற்குக் காரணம் என்னையெனின், தேவரெல்லாங் கூடி யாம் சேர இருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற் குரிய ரென்று அவரை வேண்டிக் கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபமுத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிர் உள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியிலின்கண் இருந்து, இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி, திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி, "நீ சென்று குமரியாரைக் கொண்டு வருக," எனக் கூற, அவரும், "எம்பெருமாட்டியை எங்ஙனம் கொண்டு வருவல்?" என்றார்க்கு, "முன்னாகப் பின்னாக நாற்கோல் நீளம் அகல நின்று கொண்டு வருக" என, அவரும் அங்ஙனம் கொண்டு வருவழி, வையை நீர் கடுகிக் குமரியாரை ஈர்த்துக்கொண்டுபோக, தொல்காப்பியனார் கட்டளை இறந்து சென்று ஓர் வெதிர்ங்கோலை முறித்து நீட்ட, அதுபற்றி ஏறினார். அது குற்றமென்று அகத்தியனார் குமரியாரையும் தொல்காப்பியனாரையும், "சுவர்க்கம் புகாப்பிர்" எனச் சபித்தார்; "யாங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையான் எம்பெருமானும் சுவர்க்கம் புகாப்பிர்" என அவர் அகத்தியனாரைச் சபித்தார். அதனான் அவர் வெகுண்டாராதலின் அவன் செய்த நூலைக் கேளற்க வென்றாரென்க.' முற்றுகை ப. 21. இங்கே குறிப்பிட்ட செய்யுள் வருமாறு: அளிதோ தானே பாரியது பறம்பே சில குறிப்புகள் ப.29 கபிலர் பாடல்: ப. 30. கபிலர் கிளிகளை வளர்த்து நெல்லைக் கொண்டுவரச் செய்தார் என்ற செய்தியைப் பின்வரும் செய்யுட் பகுதிகள் புலப்படுத்துகின்றன: உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை புலங்கந் தாக இரவலர் செலினே யமன் வாயில் மண் இவ்வரலாற்றுக்கு ஆதாரமான பாட்டு வருமாறு: சோழன் நலங்கிள்ளியுழை நின்று உறையூர் புகுந்த இளந்தத்தென்னும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, ஒற்று வந்தானென்று கொல்லப் புக்குழி கோவூர்கிழார் பாடி உய்யக்கொண்டது. வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி யானைக்கதை: ஆதாரம்: திணை-பாடாண் திணை. துறை-செவியறிவுறூஉ. பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது. காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே குடிப்பெருமை: திணை-வாகை. துறை-அரச வாகை. சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப வெகுண்டு வட்டுக்கொண்டு எறிந்தானைச் சோழன் மகன் அல்லையென நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது. நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத் நிர்வாண தேசம்: மணிமேகலையில் 16-ஆம் காதையாகிய 'ஆதிரை பிச்சையிட்ட காதை' என்பதில் இங்கே உள்ள வரலாற்றுக்கு மூலம் இருக்கிறது. சாதுவன் செய்த உபதேசம்: ப.64 மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் தேவரும் குருவும்: சீவக சிந்தாமணியின் உரையில் நச்சினார்க்கினியர். 'செம்பொன் என்னும் கவியால் குருக்கள் அருகனை வணங்குதலின் தாம் சித்தனை வணங்கினார். குருக்கள் கூறுதலானும் அருகனை வணங்குதலானும் அதனை முன் வைக்கவெனின், அவர், "இது நன்று; இதனை முன்னே வைக்க" என்றலின் முன் வைத்தார், என்று எழுதிய குறிப்பு இக்கதைக்கு ஆதாரம். ப. 73. திருத்தக்க தேவரைப் பாராட்டி அவருடைய குரு பாடிய செய்யுள் வருமாறு: முந்நீர் வலம்புரி சோர்ந்தசைந்து இது தேவர் குருக்கள் கூறினாரென்றுணர்க: தேவர் இங்ஙனம் புனைந்துரைத்தல்
ஆகாமையின்' என்பது நச்சினார்க்கினியர் குறிப்பு. மூங்கிலிலை மேலே இவ்வரலாற்றைக் கூறினவர்கள் என் ஆசிரியப் பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள். 'தூங்குபனி நீர்' என்பதற்கும் தொங்கும் பனிநீர் என்று சிலர் பொருள்
கொள்வர். இலக்கிய வழக்காகிய தூங்கு என்பது நாடோடிப் பாடலிலும் வருதல்
கூடுமானாலும் பாட்டின் எளிமையை அது கெடுக்கிறது. அன்றியும் இலை மேலே
தொங்குவதைவிடத் தூங்குவதே பொருத்தமாகத் தோன்றுகிறது. நெடுஞ் சுவர் வேலியின் வீட்டுச் சுவரில் ஒரு பேய் இருந்து, எடுக்க எடுக்கக்
குலைத்துக்கொண்டு வந்ததென்றும், கம்பர் பாடி அதனை ஓட்டிச் சுவரை
எடுத்து கூலி பெற்றாரென்றும் விநோதரஸ மஞ்சரி கூறும் வரலாறு இங்கே
இயற்கைக்குப் பொருத்தமாக மாற்றப்பட்டிருக்கிறது. சம்பந்தச் சர்க்கரை: கொங்குமண்டல சதகத்தில் உள்ள பின்வரும் பாடல் இச்சரித்திரத்திற்கு ஆதாரம். சங்க கிரிதுருக் கத்திற் சிறையினிற் சார்ந்திடுநாள் வாணன் உரைத்திட மால்ராமப் பையன் மனமகிழ்ந்து என்பது ஒரு தனிப்பாடல்; இச்சதகப் பதிப்பாசிரியர் ஸ்ரீ
தி.அ.முத்துச்சாமிக் கோனார் மேற்கோள் காட்டியது. பூங்கோதை: அம்புவி மெச்சுகுன் றத்தூரில் ஆயரில் ஆய்கலைதேர் குறுமுனி நேர்தமிழ் ஆழியுண் வாணர் குழாம்வியப்ப கற்பூர நாயக்கர்: இது நாடோடியாக வழங்கி வரும் கதை ---------
|