"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF >"முல்லைத்திணை" : மு.வரதராசனார்
mullaittiNai by M. Varadarajan
நன்றியுரை காதல்பாட்டுக்களை நெறிப்படுத்தி முறையுற வகுத்த பெருமை, பழந்தமிழ் இலக்கியத்தின் சிறப்பியல்பாகும். அவ்வாறு நெறியும் முறையும் போற்றிவளர்த்த காரணத்தால்தான், பழைய காதல்பாட்டுக்களில் கலைச்செல்வம் மிளிர்வதுடன் நுட்பமும் தூய்மையும் குன்றாமல் விளங்குகின்றன. மற்றவர்கள் உடலின் பசியைப் புனைந்துரைத்துக் களித்துத் திரிந்த அந்தக்காலத்தில். தமிழ்ச் சான்றோர் உள்ளத்தின் உணர்வைத் தெரிந்தெடுத்துக் கலைத்தொண்டு ஆற்றிய சிறப்புக்குக் காரணம் அதுவே ஆகும். முல்லைத்திணையாக வகுக்கப்பட்ட பாட்டுக்களின் பெற்றியைக் குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்தும் வாய்ப்பை எனக்குச் சென்னைப் பல்கலைக் கழகம் தந்தது. பல்கலைக்கழகத்தார் 'ஆனரரி ரீடர்' என்னும் பதவி அளித்து, ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் நிகழ்த்துமாறு கோரினர். 1946 நவம்பர் 4,5 ஆகிய நாட்களில் அவ்வாறு நிகழ்த்திய சொற்பொழிவே இந்நூலாக அமைந்தது. நூல்வடிவில் இதை வெளியிட உரிமை நல்கிய பல்கலைக்கழகத்தார்க்கு நன்றியுடையேன். மு.வ. --------- "முல்லைத்திணை" காடும் மேடும் சேர்ந்த பகுதியும் முல்லை நிலம் என்று கூறப்படும். மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்து நாகரிகத்தை வளர்ப்பதற்கு ஏற்ற நிலப் பகுதி இதுவே ஆகும். குறிஞ்சி நிலமாகிய பாலைப் பகுதியில் மனிதன் இயற்கையை எதிர்த்து வென்று வயிறு வளர்க்க வேண்டும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் மனிதன் இயற்கையை எதிர்பார்த்து நிற்காமல் உழைத்துப் பாடுபட்டு வயிறு வளர்க்க வேண்டும். கடற் பகுதியாகிய நெய்தல் நிலத்தில் வாழும் மனிதன் மற்ற நிலப் பகுதிகளின் உதவியை எதிர் பார்த்து வாழவேண்டும். முல்லை நிலத்தில் இயற்கையை எதிர்பார்த்து நம்பி வாழவேண்டும். அங்கு வாழ்க்கை துன்பமாகத் தோன்றாமல் பொழுது போக்காகத் தோன்றக்கூடிய வகையில் இயற்கை மனிதனுக்குத் துணை செய்கிறது. ஆதலின் கவலை குறைந்த இனிய எளிய வாழ்க்கை முல்லை நிலத்தில் அமைந்திருக்கிறது. மனிதன் நாகரிகம் பெற்று வளரத் தொடங்கியது முல்லை நிலத்திலேயே ஆகும். மக்கள் ஓர் இனமாய்க் கூடிச் சமுதாயமாய் அமைந்தது முதல் முதலில் முல்லை நிலத்திலாகும். அதனால் தான், முல்லை நிலத்தில் பசுக்களை மேய்ப்பதற்கு உதவும் கருவியாக கோல், மக்களினத்தின் தலைவனுடைய ஆட்சிக்கு அறிகுறியாக அமைந்தது. அவன் ஏந்திய கோல் அவனுடைய குடிமக்கள் வணங்கும் கோலாக நின்றது. அவன் நல்ல முறையில் நேர்மையாக ஆளும் காலத்தில் அந்தக் கோல் செங்கோல் எனப் புகழப்பட்டது. அவன் நெறிமுறை தவறி ஆளும் காலத்தில் அதுவே கொடுங்கோல் எனப் பழிக்கப்பட்டது. நாகரிகத்தின் தொடக்கமாகிய அக்காலத்தில் அந்தத் தலைவனுக்குச் செல்வமாக விளங்கியவை மாடுகளே. அது பற்றியே மாடு என்றால் செல்வம் என்னும் பொருளும் அமைந்தது. கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடு அல்ல மற்றவை யவை. -- திருக்குறள். 400# # கேடுஇல் - அழிவு அற்ற. விழு - சிறந்த. மாடு - செல்வம். இவற்றால், இனமாய்க் கூடி ஆட்சி முறை அமைத்துச் செல்வம் சேர்ந்த நாகரிகம் முல்லை நிலத்தில் தோன்றியதை உணரலாம்.
உரிய காலம் முல்லை நிலம் மழைவளம் பெற்றுக் காடெல்லாம் பூத்து அழகுற விளங்கும் காலம் கார் காலமாகும். கார்காலம் என்பது ஏறக்குறைய ஆவணியும் புரட்டாசியும் ஆகிய இரு திங்களுமாகும். அந்தக் காலத்தில் பருவ மழை தொடங்கி எங்கும் நீர் வளம் பெருகச்செய்யும். காட்டில் உள்ள மரங்கள் எல்லாம் தழைக்கும்; செடிகொடிகள் எல்லாம் செழிக்கும். புதர்களில் பலவகை மலர்கள் மலரும். இத்தகைய கார்காலத்தில் மலர்கள் மலர்ந்து மணம் கமழும் சிறப்புடையது மாலைக் காலம். ஆதலின் கார்காலத்து மாலை நேரம் முல்லை நிலத்திற்குச் சிறந்த சிறு பொழுதாகும். முல்லை நிலத்தில் கார்காலத்தில் மாலைப் பொழுதில் பூத்து மணம் கமழும் மலர்களின் தூய்மையான அழகும் இன்பமான மணமும் பெற்று விளங்குவது முல்லைமலர். காட்டில் திரிந்து வீட்டிற்குத் திரும்பும் கணவர்க்கும் வீட்டிலிருந்தவாறே கணவரை எதிர்நோக்கும் மனைவியர்க்கும் ஒருங்கே உள்ளத்தைக் கவர்வது இத்தகைய முல்லை மலரே. ஆதலின் காதலரின் தூய இன்ப வாழ்வுக்கு முல்லைமலர் ஓர் அடையாள மலராக அமைந்தது. முல்லை என்பது கற்பு என்னும் பொருள் உடையதாயிற்று. இக்கருத்துக்களையே பொருளிலக்கணத்தில், முல்லைத்திணையின் முதற்பொருள், காடு, கார்காலம், மாலைப்பொழுது ஆகியவை என்றும், கருப்பொருள் முல்லை முதலிய மலர்களும் மான் முதலிய விலங்குகளும் பிறவும் என்றும், உரிப்பொருள் கற்புடன் இருத்தல் என்றும் கூறப்படும்.
கற்பு முல்லை நிலத்தில் மழை பெய்த பிறகு ஆறு திங்கள் வரையில் மக்களுக்குத் தொழில் உண்டு. மழை பெய்த பிறகு மக்கள் நிலத்தை உழத்தொடங்குவர்; உழுது விதைத்துக் களைகட்டுக் காவல் புரிந்து அறுவடை செய்தல் ஆகிய எல்லாம் மார்கழிக்குள் முடிந்துவிடும். தைத்திங்கள் தொடங்கி உழவுத் தொழிலுக்கு இடம் இல்லை; ஆடு மாடுகளை மேய்க்கும் தொழில் மட்டுமே உண்டு. ஆகவே தைத்திங்கள் அவர்களின் பொழுதுபோக்குத் தொடங்கும் காலமாகும். ஏறு தழுவல் முதலிய வீர விளையாடல்கள் அப்போது நிகழ்வன. நாட்டின் பகைவர் படையெடுத்து வருவாராயின், அல்லது படையெடுத்தல்கூடும் என்ற ஐயம் எழுவதாயினும், நாட்டின் தலைவன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று போர் நிகழ்த்துவது இயற்கை. அத்தகைய போருக்கு உரிய காலம் பெரும்பாலும் இக்காலமே ஆகும். அப்போது மக்களுக்குத் தம்தம் நிலத்தில் தொழில் இல்லாமையாலும், போருக்கு இடையூறான மழை முதலியன இல்லாமையாலும், அந்தக் காலம் போர்க்கு ஏற்ற காலமாக அமைந்தது. ஊர்களில் வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டுப் பொழுது போக்கிய மக்கள், நாட்டின் காரணமாகப் போர்க்களத்தில் வீரப்போர் புரிய வேண்டும் என்ற அழைப்பு வந்தபோது மகிழ்ச்சியோடு எழுந்தார்கள். பெரும்பாலும் திருமணமாகிக் குழந்தை பெற்றவர்களே போர்வீரர்களாய்த் திரண்டு எழுந்தார்கள். அவர்கள் தம் தம் மனைவியரிடம் விடைபெற்றுப் பிரிந்தார்கள். மனைவியரும் நாட்டின் கடமை என்றும், கணவர்க்கு மனமகிழ்ச்சி தரும் கடமை என்றும் உணர்ந்து கலங்காமல் விடை கொடுத்தார்கள். அடுத்த மழைக்காலத்திற்கு முன்பு (கார்காலத்திற்கு முன்பு) எப்படியும் திரும்பிவரக்கூடும் என்று உணர்த்தி வீரர்கள் பிரிந்தார்கள்; பிரிந்தவர்கள் வெற்றி பெற்றுக் குறித்த காலத்தில் தவறாமல் திரும்பிவருவர் என்று காதலியரும் நம்பிக்கையோடு ஆற்றியிருந்தனர். சிறுபான்மை, பொருள் தேடும் காரணமாக வெளிநாட்டுக்குச்சென்று கார்காலத்திற்குள் திரும்பி வருவதாகக்கூறிப் பிரிவதும் உண்டு. அதுவும் முல்லைத்திணையாகப் பாடப்படும். இவ்வாறு தம் கணவன்மாரின் வருகையை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் ஆற்றியிருத்தலையே இருத்தல் என்று சுருங்கக் குறிப்பிட்டனர்; முல்லைத் திணையின் உரிப்பொருள் 'இருத்தல்' என்றனர். 'கற்பு' என்பது கல்போன்ற திண்மை என்றும், இல்வாழ்க்கைக்கு உரியன கற்றுக் கற்ற நெறியில் நிற்றல் என்றும் பலவாறு பொருள் கூறப்படும். ஆயினும், 'கற்பெனப்படுவது சொல்திறம்பாமை' என்ற அவ்வையாரின் விளக்கமே உண்மையைத் தெளிவுபடுத்துகிறது. "கடமையை முடித்துக் கார்காலத்திற்குள் திரும்பி விடுவேன்" என்று தலைவன் சொல்லிப் பிரிகிறான். "கார் காலம் வரையில் நீ பிரிவை நினைந்து கலங்காமல் பொறுத்திரு" என்று சொல்லி விடைபெறுகிறான். அவ்வாறே பொறுத் திருப்பதாகக்-கலங்காமல் ஆற்றியிருப்பதாகக்-கூறித் தலைவியும் விடைதருகிறாள். இருவரும் இருவகைச் சொற்களால் கட்டுப்படுகின்றனர். குறித்த காலத்திற்குள் வருவதாகக் கூறித் தலைவன் கட்டுப்படுகிறான். அதுவரையில் ஆற்றியிருப்பதாகத் தலைவி கட்டுப்படுகிறாள். இருவரும் சொன்ன சொல் தவறாமல், தம்தம் கட்டுப்பாட்டுக்கு இயைந்து நடக்கின்றர். இவ்வாறு சொல் தவறாமல் - சொல் திறம்பாமல் - நடத்தலே கற்பு என்னும் ஒழுக்கமாகும். இக் காரணத்தாலேயே முல்லை என்பது கற்பு என்னும் பொருள் உடையதாயிற்று.
உணர்ந்து பாடுதல் தமிழ் இலக்கியம் அகம் புறம் என்று இருவகைப்பட்டது. குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை, பாலைத்திணை என அகம் ஐந்து வகைப்படும். எனவே, அகப்பொருளில் ஐந்தில் ஒரு பகுதியாக விளங்குவது முல்லைத்திணையாகும். அது, காதலி காதலன் வரவை எதிர்நோக்கி ஆற்றியிருக்கும் ஒழுக்கம் பற்றிக் கூறப்படுவதாகும். சங்க இலக்கியமாகிய பத்துப்பாட்டு எட்டுத்தொகையுள் முல்லைத்திணை பற்றிய பாடல்கள் பல உள்ளன. பத்தப்பாட்டுள் முல்லைப்பாட்டு என்பது முழுதும் இத்திணை பற்றியதே ஆகும். மற்றப் பாட்டுக்களிலும் முல்லை நிலத்தைப் பற்றியும் அங்கு வாழும் மக்களைப் பற்றியும் கூறும் பகுதிகள் சிற்சில உள்ளன. எட்டுத்தொகையுள், கலித் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியாக முல்லைக்கலி உள்ளது. ஐங்குறுநூற்றிலும் அவ்வாறே நூறு பாட்டுக்கள் உள்ளன. அகநானூற்றில் முல்லைத்திணைப் பாட்டுக்கள் நாற்பது உள்ளன. நற்றிணை குறுந்தொகை என்ற தொகை நூல்களிலும் பல பாட்டுக்கள் உள்ளன. பிற்காலத்து நூல்களில், முல்லைநில வருணனைகள் ஆங்காங்கே உள்ளன. கண்ணனைப் பாடும் பாடல்களில் பல முல்லை நிலம் பற்றிய வருணனைகள் கொண்டுள்ளன. கோவைகளில் முல்லைத்திணை பற்றிய பாட்டுக்கள் சில உள்ளன. கலம்பகங்களிலும் சிற்சில உள்ளன. இவை எல்லாவற்றையும், முல்லை நிலத்தில் வாழ்ந்து பழகி உணர்ந்த புலவர்கள் பாடியுள்ளனர். முல்லை நிலம் வளமுறப் பரவிக் கிடக்கும் நாடு இது. ஆதலின், நேரில் கண்டறிந்த இயற்கையின் எழிலையும் மக்களின் வாழ்க்கை முறையையுமே பாட்டில் வடித்துள்ளனர். பாடவேண்டும் என்ற மரபுக்காக, தாம் காணாதவற்றைக் கற்பனை செய்து பாடவில்லை. கண்டு உணர்ந்தவற்றிற்கே கலைவடிவம் தந்துள்ளனர். ஆங்கிலத்தில் முல்லை ஆங்கிலத்தில் முல்லைப் பாடல்கள் பல உண்டு. அவற்றைப் பாடிய புலவர்களும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து கண்டவற்றையே பாடியுள்ளனர். அப்பாடல்களைக் குறித்து வாஷிங்டன் இர்விங் என்பவர் புகழும்போது, "மற்ற நாடுகளின் முல்லைப் பாடல்களைப் பாடியவர்கள் இயற்கையை என்றோ ஒருமுறை சென்று கண்டு பொதுவான எழிலை மட்டும் அறிந்தவர்களாகவே தோன்றுகின்றனர். ஆனால் பிரிட்டிஷ் புலவர்களோ இயற்கையோடு கலந்து வாழ்ந்து திளைத்தவர்கள்; கண்ணுக்கெட்டாத இயற்கையின் நுட்பங்களையும் நெருங்கிக் கண்டு பழகியவர்கள்; இயற்கையின் நுண்ணிய திருவிளையாடல்களையும் துருவிக் கண்டறிந்தவர்கள் "& என்கிறார். & The pastoral writers of other countries appear as if they had paid Nature an occaional visit,and become acquainted with her general charms; but the British poets have lived and revelled with her - thay have wooed her in her most secret haunts, they have watched her minutest caprices. தேர்ந்த அனுபவம் இக்கருத்து, தமிழில் உள்ள முல்லைப் பாடல்களுக்கும் பொருந்தும்; மிகமிகப் பொருந்தும். தமிழ்ப் புலவர்கள் பித்திகை அரும்பின் வடிவமும் நிறமும் முதலாகக் காயாம்பூ வாடலுக்கு இடையே செம்மூதாய் குறுகுறு என ஓடிப்பரக்கும் அழகு வரையில் ஒன்றையும் விடாமல் நுணுகிக் கண்டு தேர்ந்தவர்கள். முல்லை நிலத்தின் செந்நிலப் பரப்பில் மழை பெய்தபின் விரைந்து ஓடும் வெள்ளம் நிலத்தில் வரி வரியாகச் செய்து விடுகிறது. வழியில் ஆங்காங்கே சேர்ந்திடும் ஈரமணலைக் காட்டுக்கோழிகள் காலால் கிளறிச் சிதறுகின்றன. பசுக்களோடு தலைமைதாங்கி வரும் காளை, வழியில் கண்ட (பாம்பு வாழும்) புற்றின் ஈரமான மேற்புறத்தைத் தன் கொம்புகளால் குத்துகிறது. அவ்வாறு மண்பட்ட கொம்புகளோடு தன்னுடன் விரும்பிவரும் இளம் பசுவுடன் சேர்ந்து ஊரை நோக்கித் திரும்பி வரும் மாலைப் பொழுதில், மற்றப் பசுக்களும் ஒருங்கு சேர்ந்து தம் தம் கன்றுகளை அழைக்கும் குரலோடு மன்றம் நிறையப் புகுகின்றன. அப்போது அந்தப் பசுக்களின் கழுத்தில் கட்டிய மணிகள் அழகாக ஒலிக்கின்றன. அந்த ஒலி இனிய இசையாகின்றது. கடுநீர் வரித்த செந்நில மருங்கின் விடுநெறி ஈர்மணல் வாரனம் சிதறப் பாம்புறை புற்றத்து ஈர்ம்புறம் குத்தி மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு உடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ ஊர்வயின் பெயரும் பொழுதின் சேர்புடன் கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரும் ஆபூண் தெண்மணி ஐதியம்பு இன்னிசை. -- அகநானூறு. 64@ @ கடுநீர்- விரைந்து ஓடும் வெள்ளம். வரித்த- வரிவரியாக அழகுபடுத்திய. வாரணம்- காட்டுக்கோழி. புற்றத்து- புற்றின். கோட்ட-கொம்புகளை உடைய. அண்ணல்- தலைமை. நாகு-பசு. பயிர்- அழைக்கும். ஐது- அழகாக. ஒருநாள் இரவில் பெருமழை பெய்தது. நன்றாகப் புலர்ந்த காலைப் பொழுதில் எல்லோரும் தம் தம் நிலங்களில் ஏர் பூட்டி உழுதனர். அந்தச் செம்மண் நிலத்துப் புழுதி கீழ்மேலாக மாறிடுமாறு உழுதனர். ஏர் உழுதபின், பிளந்து செல்லப்பட்ட செம்மண் செந்நிறமான ஊனைக் கிழித்துச் சென்றதுபோல் தோன்றியது. அங்கு வரகு விதைக்கப்பட்டது. பல விதைகள் முளைத்து எழுந்தன. உழவர்கள் ஓலைக்குடையை தலை மேற் பிடித்துத் தொழில் செய்த காட்சி கலைமானின் கூட்டம் அங்கெல்லாம் பரந்து திரிவதுபோல் காணப்பட்டது. பறை ஒலிக்க, உழவர்கள் பயிர்களை வளைத்து ஒதுக்கிக் களையைப் பறித்து எறிந்தார்கள். இவ்வாறு களைகட்ட பிறகு வரகு நன்றாகச் செழித்து வளர்ந்து கதிர் விட்டது. கதிர்கள் இரண்டிரண்டாகப் பிளவு பட்டாற்போல் விட்டுத் தோன்றின. அந்தக் கதிர்களை மயில்கள் பறிந்து உண்டன. அந்த நீலநிற மயில்கள் அழகிய தோகையைப் பரப்பி, (உழவர்கள் கூழ் உண்பதற்கு நிழல் தந்த) குருந்த மரத்தின் வளைந்த கிளைகளில் ஏறி இருந்தன. அங்கிருந்து அவைகள் அசவிய ஒலி, கிளி ஒப்பும் மகளிரின் ஒலிபோல இருந்தது. அத்தகைய கார்காலம் இது: பேருறை தலைஇய பெரும்புலர் வைகறை ஏர்இடம் படுத்த இருமறுப் பூழிப் புறமாறு பெற்ற பூவல் ஈரத்து ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால் வித்திய மருங்கின் விதைபல நாறி இரலை நன்மான் இனம்பரந் தவைபோல் கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர் கறங்குபறைச் சீரின் இறங்க வாங்கிக் களைகால் கழீஇய பெரும்புன வரகின் கவைக்கதிர் இரும்புறம் கதூஉ உண்ட குடுமி நெற்றி நெடுமாத் தோகை காமர் கலவம் பரப்பி ஏ முறக் கொல்லை உழவர் கூழ்நிழல் ஒழித்த வல்லிலைக் குருந்தின் வாங்குசினை இருந்து கிளிகடி மகளிரின் விளிபடப் பயிரும் கார்மன் இதுவால்.. -- அகநானூறு, 194..@@ .@@ பேர் உறை - பெரிய மழைத்துளி. தலைஇய - பெய்த. இரு மறு - பெரிய வடு. பூவல் - செம்மண். சுவல் - மேடு. நாறி - முளைத்துத் தோன்றி. இரலை - மானில் ஒருவகை. வினைஞர் - தொழிலாளர். கறங்கு - ஒலிக்கின்ற. சீர் - ஒலி. இறங்க - வளைய. கவை - இரண்டாய்ப் பிளந்த கதூஉ - கதுவி - பற்றி தோகை - மயில். காமர் - அழகிய. கலவம் - தோகை. வாங்கு - வலை. சினை - கிளை. பயிரும் - அழைக்கும். சிறிய இலைளை உடைய நெல்லி மரத்தின் காய்களைப் போன்ற சின்ன விழி பொருந்திய கண்களை உடைய குறு முயல், வளைந்த வரகின் பருத்த குருத்தைத் தின்று, செவிகளை வளைத்துக்கொண்டு புதரில் ஒடுங்கி, சிறிதுநேரம் உறங்கி, பிறகு கண் விழித்து எழுந்து தன் துணையோடு சென்று, வீட்டு முற்றத்தில் சிறிதளவு தேங்கியிருந்த நீரைக் கண்டு அதைக் குடிக்கும் அழகு வாய்ந்த முல்லை நிலம்: சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன குறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல் முடந்தை வரகின் வீங்குபீள் அருந்துபு குடந்தையஞ் செவிய கோட்பவர் ஒடுங்கி இந்துயில் எழுந்து துணையொடு போகி முன்றில் சிறுநிறை நீர்கண்டு உண்ணும் புன்புலம்... அகநானூறு. 284 # # கூரல் -(கூரிய) மயிர். முடந்தை-வளைந்த. வீங்குபீள்-பருத்த குருத்து. அருந்துபு - அருந்தி - தின்று. குடந்தை - வளைந்த. கோள்பவர் - காய்களைக் கொண்ட கொடிகள். பழந்தமிழ்ப் புலவர் முல்லை நிலத்துப் பூக்கள் ஒவ்வொன்றன் அமைப்பையும் நிறத்தையும் உணர்ந்து அவற்றை ஒருங்கே நேரில் கண்டும், கற்பனை செய்து கண்டும் மகிழ்ந்தனர். செறிந்த இலைகளை உடைய காயாமரத்தில் அஞ்சனம் போன்ற நீலநிற மலர்களும், இளந்தளிர்கள் கொத்துக் கொத்தாகத் தோன்றும் கொன்றை மரத்தில் நல்ல பொன் காசு போன்ற மலர்களும், வெண்காந்தளின் குவிந்த முகைகள் அழகிய கைபோல் மலர்ந்த மலர்களும், இதழ் நிறைந்த தோன்றியில் குருதிபோன்ற செந்நிற மலர்களும் நிறைந்து காடு பொலிவுற்றதாக முல்லைப்பாட்டு எடுத்துரைக்கிறது: செறியிலைக் காயா அஞ்சனம் மலர முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக் கோடல் குவிமுகை அங்கை அவிழத் தோடார் தோன்றி குருதி பூப்பக் கானம் நந்திய செந்நிலப் பெருவழி. முல்லைப்பாட்டு. 93&& && செறி-நெருங்கிய. அஞ்சனம் -மை. முறி - தளிர். இணர்-கொத்து. கால - வெளியிட - மலர. அவிழ - மலர. தோடு ஆர் - இதழ் பொருந்திய. நந்திய - செழிப்புற்ற. இவற்றால், முல்லை நிலத்தைப் பாடிய தமிழ் புலவர்கள் அந்நிலத்தில் வாழ்ந்து பழகிய அனுபவமும் இயற்கையைப் பலகாலும் கண்டு தேர்ந்த தேர்த்ச்சியும் மிக்கவர்கள் என்பது விளங்கும். இவ்வகையில் ஆங்கிலப் பாடல்களின் சிறப்பு-அவற்றின் மிக்க சிறப்பும் - தமிழ்ப் பாடல்களுக்கு உண்டு என்று தெளியலாம். வேறுபாடு ஆயினும் ஆங்கிலத்தில் உள்ள முல்லைப் பாடல்கள் கருத்துவகையால் வேறுபட்படுள்ளன. தமிழில் உள்ளவாறு முல்லைநிலத்து வாழும் காதலரின் கற்பொழுக்கம் போன்ற கருத்து ஆங்கிலத்தில் அமையவில்லை. நகர வாழ்க்கையிலிருந்து தப்பி ஓடி நாட்டுப்புறத்தின் நலங்களைத் துய்த்தல், ஆடம்பரத் தொல்லைகளிலிருந்து விலகி எளிமையின் இனிமையில் மகிழ்தல், கவலையும் பரபரப்பும் மிக்க வாழ்க்கையைத் துறந்து கவலையற்ற அமைதியான வாழ்வை நாடுதல் இவைகளே ஆங்கில முல்லைப்பாடல்கள் கூறும் கருத்துக்கள். இவற்றை அடிப்படையாகக் கொண்டே முல்லைநிலப் பெண்களின் காதல் முதலியன ஒட்டி வரப்பெறும். முல்லை நிலத்தில் இயற்கையோடு இயைந்து வாழும் மக்களின் எளிமையும் அமைதியுமே புலவர்களின் உள்ளங்களைப் பெரிதும் கவர்ந்தனவாகக் காணப்படுகின்றன. அவைகளும் ஆங்கிலப் புலவர்கள் தாமே உணர்ந்து பாடும் கருத்துக்கள் அல்ல என்றும், இத்தாலி நாட்டுப் புலவர்களான தியோகிரிடஸ் வர்ஜீல் முதலியவர்களின் பாடல்களிலிருந்து கடன்வாங்கிய கருத்துக்களே என்றும் எட்மண்ட் ப்ளண்டன் (Edmund Blunden) முதலான ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.** ** The pastoral escape has suffered in our esteem because too frequently those professing to make it have merely followed a prepared track leading into a large wardrobe, full of relics of the imitators of Theocritus and Virgil-Nature in English Literature, p.89. முல்லை நிலத்து ஆயர்வாழ்வு ஆங்கிலப் பாடல்களில் வருகின்றன; எனினும் அவர்கள் இத்தாலி நாட்டு ஆயர்களாகவே உள்ளனர் என்றும், அதனாலேயே குளிர் மிகுந்தது இங்கிலாந்து என்பதையும் மறந்து ஆயர்கள் குளிர்ந்த இடம் நாடித் திரிவதாகப் பாடுகிறார்கள் என்றும் ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர். இன்னும் சில பாடல்களில் ஆயன் ஆடு மாடு முதலிய சொற்கள் எல்லாம் நேர்ப் பொருளை உணர்த்தாமல், உருவகப் பொருளையே உணர்த்துகின்றன; ஆதலின், அவைகள் உண்மையான முல்லைப் பாடல்கள் அல்ல என்பது சிலர் கருத்து.+ --- + Shepherd is with them merely another word for lover or poet, while almost any act of such may be described as 'folding his sheep' or the like. Allegory has reduced itself to a few stock phrases. - Pastoral Poetry and Pastoral Drama by Walter W.Greg. ---- தமிழ் இலக்கியத்தில் இவ்வாறு கடன் வாங்கிய கருத்துக்கள் இல்லை. நானிலமும் வளமாக வாய்க்கப் பெற்ற தமிழகத்தில் முல்லைநிலத்தின் எழிலுக்கும் வளத்துக்கும் பஞ்சம் இல்லை. முல்லை நிலத்திலே பிறந்து வாழ்ந்து இயற்கையை உள்ளவாறு உணர்ந்த இடைக்காடனார் போன்ற புலவர்பெருமக்களுக்கும் பஞ்சம் இல்லை. முல்லை நிலம் கார்காலத்தில் மாலைப்பொழுதில் சிறந்து விளங்குவது இன்றும் காணத்தக்க காட்சியாக உள்ளது. முல்லை மலர் உள்ளத்தைக் கவரவல்ல தூய்மையான அழகும் இன்பமான மணமும் கொண்டு இன்றும் சிறந்து விளங்குகிறது. முதற்பொருளும் கருப்பொருளும் இன்றும் மாறவில்லை. உரிப்பொருள் மட்டுமே மாறியுள்ளது. எவ்வாறு எனில், கார்காலத்தில் திரும்புவதாகக் கூறிப் போர் காரணமாகப் பிரியும் பிரிவு இன்று இல்லை; கார் காலத்து வரவை எதிர்நோக்கி ஆற்றியிருக்கும் நிலைமையும் இன்று இல்லை. இது காலப் போக்கால் வாழ்க்கை மாறி அமைந்துள்ள அமைப் பால் ஏற்பட்ட மாறுதல். இது தவிர, முதற்பொருள் கருப்பொருள் வகையை ஆராய்ந்து காண்பவர்க்கு, முல்லை நிலப் பாடல்கள் தமிழில் இயல்பாக அமைந்த பாடல்கள் என்பது தெளிவாகும். ஆயர் வாழ்வு முல்லை நிலத்து வாழும் ஆயர்களின் வாழ்க்கை எளிமையும் அமைதியும் இன்பமும் நிறைந்தது என்று ஆங்கில இலக்கியம் கூறுவது போலவே தமிழ் இலக்கியமும் கூறுகிறது. கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை -- சிலப்பதிகாரம், அடைக்கலக். 121@ @கொடும்பாடு - கொடுமை. என்று இளங்கோவடிகள் கோவலர் வாழ்க்கைக்கு நற்சான்று தந்துள்ளார். அவர்களின் எளிய அமைதியான வாழ்க்கைக்கு இடையே ஏதேனும் துன்பம் நேருமானால், அதுவும் இயற்கையின் விளையாட்டுப் போலவே அமைகிறது; அவர்களுக்கு இயல்பானதாகி விடுகிறது. ஆயர்கள் பெரிய கோடல்பூவைச் சூடிக்கொண்டு இரு தலையாய்ப் பிரிந்த கோல் உடையவர்களாய், பகற்காலத்தில் பெய்த மழையினால் துன்புற்ற பசுக்கூட்டத்தோடு ஊரை நோக்கித் திரும்பி வருகிறார்கள். அவர்கள் தலையில் சூடிய மாலைகளில் மழையின் நீர் இன்னும் உள்ளது: ...கோடல் பெரிய சூடிய கவர்கோல் கோவலர் எல்லுப்பெயல் உழந்த பல்லா னிரையொடு நீர்திகழ் கண்ணியர் ஊர்வயின் பெயர்தர. அகநானூறு. 264++ ++ கவர் - இரண்டாய்ப் பிரிந்த. எல்லுப்பெயல் - பகல் மழை உழந்த - துன்புற்ற. பல்லானிரை - பல்ஆன்நிரை - பல பசுக்களின் கூட்டம். ஊர்வயின் - ஊரில். பெயர்தர - திரும்ப. --- பருவ மழை பெய்கிறது; நள்ளிரவில் ஆட்டுமந்தை அஞ்சாமல் உறங்குவதற்காக ஆயன் காவல் காக்கின்றான். தீக்கடைகோலால் தீப் பற்றவைத்து அதன் ஒளியால் கொடிய விலங்குகள் அணுகாதபடி காவல் புரிகிறான். உறியும் பானையும் தோலும் அவனைச் சூழ்ந்திருக்கின்றன. நுண்ணிய மழைத்திவலை பல அவனை ஒருபக்கம் நனைக்கின்றன. கோலைத் தன் காலுடன் சேர்த்து ஊன்றித் தனியே நிற்கிறான். அடிக்கடி இதழை மடித்துவிட்டு வீளைஒலி எழுப்புகிறான். மந்தையில் துள்ளியாடும் குட்டிகளைக் கவர்வதற் காக அங்குவந்து வாய்ப்புப் பார்த்திருக்கும் குள்ளநரி அந்த ஒலியைக்கேட்டு அஞ்சி, முள்புதரில் ஓடி ஒளிகிறது: ...வானம் பருவம் செய்த பானாள் கங்குல் ஆடுதலைத் துருவின் தோடு ஏமார்ப்பக் கடைகோல் சிறுதீ அடைய மாட்டித் திண்கால் உறியன் பானையன் அதளன் நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத் தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன் மடிவிடு வீளை கடிதுசென்று இசைப்பத் தெறிமறி பார்க்கும் குறுநரி வெரீஇ முள்ளுடைக் குறுந்தூறு இரியப் போகும்.... -- அகநானூறு. 274% %பருவம்-கார்காலம். பானாள்-நள்ளிரவு. தோடு-தொகுதி, மந்தை. அதளன் -தோல் உடையவன். கடிது- விரைவாக. தெறி- துள்ளி ஆடுகின்ற. வெரிஇ- அஞ்சி, தூறு- புதர். இரிய- நீங்க. --- முல்லை நிலத்தின் அகன்ற புலங்களில் ஆனிரை ( பசுக்கள் ) பரந்து மேயும்படியாக விட்டுவிட்டு ஆயர்கள் சிறு குன்றுகளின் பக்கத்தில் நறுமணமுள்ள மலர்களைப் பறித்து மாலை கட்டி மகிழ்கிறார்கள் : முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர் குறும்பொறை மருங்கின் நறும்பூ அயர... -- அகநானூறு. 14+ +வியன் - அகன்ற. குறும்பொறை-குன்று. --- இத்தகைய வாழ்க்கையில் தொழில் வேறு, பொழுதுபோக்கு வேறு என்று பிரியாமல் இரண்டும் ஒன்றுபட்டு விளங்குகின்றன. பசுக்களை மேய விட்டுவிட்டு, அதே நேரத்தில் இன்பமாகப் பூக்களைப் பறித்துத் தொடுத்து மகிழ்தல் இதைக் காட்டுகிறது. துன்பப் போராட்டம் இவ்வாறு பலநாளும் இன்பம் நல்கிக் காத்திடும் இயற்கை, சில நாட்களில் மிக்க கடுமையோடு ஆயர்களை அணுகுகிறது. மழையும் பனியும் குளிரும் மிகுந்த இராக் காலங்கள் அவர்களுக்குத் துன்பம் செய்வன. அத்தகைய துன்பத்திற் கிடையிலும் எளிய ஆயர்கள் கடமையைச் செய்து காலம் கழிக்கும் காட்சி நெடுநல்வாடையில் கூறப் படுகிறது: உலகமே நடுங்கும்படியாக வெற்றிகொண்டு எழுந்து வளைந்து மழை பொழிகிறது. எங்கும் நீர் பரந்து ஓடுகிறது. வெள்ளத்தைக் கண்டு வெறுக்கும்படியான மனநிலை பெறுகிறார்கள் கோவலர்கள். வளைந்த கோலைக் கையில் ஏந்திய அவர்கள், காளைகளோடு உள்ள பசுக்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி மேட்டுநிலத்தில் விடுகிறார்கள். இடம்விட்டு மாறும்படியான துன்பத்தால் கலங்குகிறார்கள். காந்தளின் நீண்ட இதழ்களால் தொடுத்த மாலைகள் மழைநீர் அலைப்பதால் கலைந்துவிடுகின்றன. உடம்பில் சேர்ந்த மிக்க குளிர்ச்சி வருத்துவதால், பலரும் ஒன்று கூடிக் கையில் நெருப்பை ஏந்தியவராய், குளிர் மிகுதியால் வாய் படபடக்க நடுங்குகிறார்கள்: வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர் ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூ நடுங்க. -- நெடுநல்வாடை 1-8 %% %% பனிப்ப- நடுங்க. ஆர்கலி- வெள்ளம். முனைஇய- வெறுத்த. கொடுங்கோல்- வளைந்த கோல். புலம்பெயர்- இருந்த நிலத்தை விட்டுச் செல்கின்ற. புலம்பு- தனிமைத் துன்பம். கவுள்- கன்னம். புடையூ- புடைத்து, அடித்து. -- இன்பப் பொழுதுபோக்கு செருப்பு அணிந்ததனால் ஆகிய வடு (காய்ப்பு) அவனுடைய வன்மையான அடிகளில் உள்ளது. சிறந்த தடியைப் பற்றி ஊன்றிப் பழகிய கைகளில் மழு(கோடரி) பிடித்து ஏந்தி வெட்டி வெட்டித் தழும்பு இருக்கிறது. காவடியின் இருபக்கமும் உறியைக் கட்டிச் சுமந்து சென்ற தழும்பு அவனுடைய தோள்கட்டில் உள்ளது. கறந்த பால்பட்ட கையைத் தலைமயிரில் தடவிக்கொள்கிறான். அவன் காட்டில் கொம்புகளிலும் கொடிகளிலும் மலர்ந்த மலர்களைப் பறித்து அவற்றைக் கலந்து கட்டிய தலைமாலை அணிந்திருக்கிறான். ஒரே ஆடை உடுத்து எளிய கூழை உண்கிறான். கன்றுகளோடு உள்ள பசுக்களோடு காட்டில் தங்குகிறான். கையால் முயன்று தீக்கடைகோல் கொண்டு சிறுபுகை கமழும்படியாகச் செய்து தீப்பற்றவைத்த கொள்ளிக்கட்டையின் நெருப்பால், கருநிறமான துளைகளை உண்டாக்கிக் குழல் செய்துகொண்டு இசை எழுப்புகிறான். இனிய பாலைப்பண்ணை இசைக்கிறான். அதில் சலிப்புத் தோன்றும்போது குமிழின் துளை உடைய கொம்பில் மரலின் நாரையே நரம்புகளாகத் தொடுத்து வியாழ் செய்து கொண்டு விரலால் எறிந்து குறிஞ்சிப்பண் பாடுகிறான். அந்தக் குறிஞ்சிபப்ண்ணின் இசையைத் தேனீக்கள் தம் இனத்தின் ஒலி என்று உற்றுக் கேட்கின்றன: தொடுதோல் மரீ இய வடுவாழ் நோன் அடி விழுத்தண்டு ஊன்றிய மழுத்தின் வன்கை உறிக்கா ஊர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல் மேம்பால் உரைத்த ஓரி ஓங்குமிசைக் கோட்டவும் கொடியவும் விரை இக் காட்ட பல்பூ மிடைந்த படலைக் கண்ணி ஒன்றமர் உடுக்கைக் கூழார் இடையன் கன்றமர் நிரையொடு கானத்து அல்கி அந்நுண் அவிர்புகை கமழக் கைம்முயன்று ஞெலிகோல் கொண்ட பெருவிறல் ஞெகிழிச் செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின் இன் தீம் பாலை முனையின், குமிழின் புழற்கோட்டுத் தொடுத்த மரல்புரி நரம்பின் வில்யாழ் இசைக்கும் வீரல்எறி குறிஞ்சிப் பல்கால் பறவை கிளை செத்து ஓர்க்கும்... -- பெரும்பாணாற்றுப்படை. 169-184&& && தொடுதோல் - செருப்பு. மரீஇய - பொருந்திய. நோன்-வலிய. சுவல் - தோள்கட்டு. ஓரி - தலைமயிர். கோட்ட-மரக்கொம்புகளில் உள்ளன. விரைஇ - கலந்து. படலை - தழை. கண்ணி-தலைமாலை. உடுக்கை-உடை. அல்கி-தங்கி. ஞெலிகோல் - தீக்கடைகோல். ஞெகிழி - கொள்ளி. தோட்ட - துளைசெய்த. முனையின் - வெறுத்தல். செத்து-போலக் கருதி ----- இதனாலும் ஆயருடைய வாழ்க்கையில் பொழுது போக்கான விளையாடல்கள் மிக்குக் கலந்து நிற்பதைக் காணலாம். அந்தப் பொழுதுபோக்குக்கு உரிய குழல் யாழ் முதலிய கருவிகளும் அவன் கருதிய அளவில் எளிதில் செய்யப்பட்டு அமைவதையும் காணலாம். எளிமையிலே வாழ்க்கை நடத்தி இன்பமும் நுகர்வதை இப்பகுதி எடுத்துரைக்கின்றது ஆய்ச்சியர் வாழ்வு முல்லை நிலத்துப் பெண்கள் வாழும் வாழ்க்கையும் இவ்வாறே எளிமையும் அமைதியும் நிறைந்தது என்பதைத் தமிழ் இலக்கியம் காட்டுகிறது. வீட்டைச் சுற்றி முள்வேலி இடப்பட்டிருக்கிறது. அருகே எரு மிகுதியாக்க கிடக்கிறது. இத்தகைய வீட்டில் விடியற்காலையில் பறவைகள் ஒலித்து எழும் நேரத்தில் எழுந்து, தயிர் கடையும் மத்து எடுத்துத் தயிர் கடைகிறாள் ஆய்ச்சி. தயிர் கடையும் ஒலி புலியின் முழக்கம் போல் கேட்கிறது. தயிரில் வெண்ணிறமான காளான்முகை போன்ற முகைகள் இருக்கின்றன. அத்தகைய முகைகளை மத்துக் கலக்கிவிடுகின்றது. வெண்ணெய் நுரைகளை எல்லாம் தனியே எடுத்துச் சேர்க்கிறாள் ஆய்ச்சி. பிறகு தயிரின் வெண்ணிறப் புள்ளிகள் பொருந்திய வாயை உடைய குடத்தை எடுத்துப் பூக்களால் செய்த சுமட்டின்மேல் வைத்துக்கொண்டு காலையில் மோர் விற்கச் செல்கிறாள். மோரை விற்றுப் பெறும் பண்டங்களைக் கொண்டுவந்து தன் சுற்றத்தார் அனைவர்க்கும் உணவு அளிக்கிறாள். சேர்த்த வெண்ணெயை நெய்யாக்கி, அதற்கு விலையாகக் கட்டிப் பசும்பொன் கொடுத்தாலும், வேண்டா என்று மறுக்கிறாள். ஆனால் அதற்கு விலையாக எருமையும் பசுவும் கொடுத்தால் பெற்றுக்கொள்கிறாள்: இடுமுள் வேலி எருப்படு வரைப்பின் நள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப் புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி ஆம்பி வான்முகிழ் அன்ன கூம்புமுகை உறைஅமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ நாள்மோர் மாறும் நன்மா மேனி...ஆய்மகள் அளைவிலை உணவின் கிளையுடன் அருத்தி நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள் எருமை நல்லான் கருநாகு பெறூஉம்... -- பெரும்பாணாற்றுப்படை. 154-165 @@ @@ மத்தம்-மத்து. வாங்கி-இழுத்து. ஆம்பி-காளான். வான்-வெண்மை. புகர்-புள்ளி. குழுசி-குடம். சுமடு-சும்மாடு என்று இப்போது வழங்குவது. இரீஇ-இருக்கச்செய்து-வைத்து. அளை-மோர். ---- கட்டிப்பசும்பொன் கொடுத்தாலும் வேண்டா என்று மறுத்து, வாழ்வுக்கு உதவியானவற்றைக் கொடுக்க வல்லவர்க்கு நெய் கொடுத்து மகிழும் ஆய்ச்சியின் மனப்பான்மை ஆராயத் தக்கது. இயற்கையோடு இயைந்த எளிய வாழ்க்கை ஆகையால், வாழ்க்கைக்கு நேரே பயன்படாத பசும்பொன்னை அவள் பொருட்படுத்தாமல் விட்டு அப்பால் செல்கிறாள். ஆனால் மருத நிலத்தார் கொடுக்கும் உணவுப் பொருளுக்கு மோர் விற்கும் அவள், அவர்கள் எருமையும் பசுவும் தந்தால் நெய் தருகிறாள். செல்வத்தைப் பொருட் படுத்தாத எளிமையும், அந்நிலையிலேயே உணவுக்கும் தொழிலுக்கும் உதவியானவற்றைப் பொருளென மதிக்கும் அமைதியும் அவளுக்கு இயல்பாக அமைந்துள்ளன. ஏறு தழுவல் என்ற ஒரு வழக்கம் முல்லை நிலத்துக்கு உரியது. அது மற்றச் சங்க நூல்களில் இல்லாமல் கலித்தொகையில் மட்டும் காணப்படுகிறது. அப்பகுதியில், ஆயர்களின் வீரமும் அஞ்சாமையும் விளக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஆயர் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொளவதனால், அவளுக்கு உரிய கணவன் வீரம் மிக்கவனாக இருத்தல் வேண்டும்; இன்ன காளையைத் தழுவி அடக்கவல்ல வீரனே அவளை மணப்பதற்கு உரியவன் என்று பலரும் அறியத் தெரிவிப்பது வழக்கம். இவ்வாறே வேறு குடும்பத்துப் பெண்களுக்கும் திருமண ஏற்பாடாக ஏறுகள் குறிக்கப்படும். இந்த ஏறுகளைத் தழுவி அடக்குவதற்கு வீரர்கள் காத்திருப்பார்கள். இதற்கு ஒரு நாள் குறிக்கப்படும். அன்று அஞ்சாமல் களத்தில் புகுந்து ஏறுகளை எதிர்த்து, அவர்றின் கொம்புகளால் குத்துண்டும் புண்பட்டும் வெற்றி பெறும் வீரர்களை அந்தந்தப் பெண்கள் மணந்துகொள்வார்கள். இவ்வாறு நிகழ்வதே ஏறு தழுவல் என்பது. இன்ன ஏற்றை அடக்கித் தழுவும் வீரனுக்கே உரியவள் இப்பெண் என்று பலமுறை சொல்லிப் பலர் அறியச் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது: ஓஓ இவள், பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால் திருமாமெய் தீண்டலர் என்று கருமமா எல்லாரும் கேட்ப அறைந்தறைந்து எப்பொழுதும் சொல்லால் தரப்பட்டவள். -- முல்லைக்கலி.2 ## ## கருமமா-கடமையாக. ------ ஏறுகள் வீரர்களின்மேல் பாய்ந்து கூரிய கொம்புகளால் குடர் சரியக் குத்துவதும் உண்டு; அவற்றின் கொம்புகளை இதற்கென்றே சீவிக் கூர்மைப்படுத்துவதும்உண்டு. குடர்சொரியக் குத்திக் குலைபதன் தோற்றங்காண்�.. சீறரு முன்பினோன் கணிச்சிபோல் கோடுசீஇ�. -- முல்லைக்கலி. 1� � சீறரு - சீறுதற்கு அரிய. முன்பினோன் - வலிமை உடையவன், சிவன். கணிச்சி - மழு, கோடரி. சீஇ - சீவி. வீரர்களும் அவற்றின் கூரிய கொம்புகளுக்கு அஞ்சுவதில்லை, அவற்றால் குத்துண்டபோதும், உடலில் வடியும் இரத்ததாலேயே கைபிசைந்து மீண்டும் களத்துள் புகுந்து ஏறுகளை எதிர்ப்பார்கள்; அவற்றின் முதுகின்மேல் ஏறி உட்கார்ந்து, கடலில் படகுகளைச் செலுத்தும் பரதவர்போல் தோன்றுவார்கள். இறுதியில் வெற்றி பெற்ற வீரர்களை ஆயர்கள் எல்லோரும் கூடி வாழ்த்துவர்; போற்றுவர். அவர்களை மணப்பதற்கு உரிய காதலியர் மகிழ்வர். இவ்வாறு ஏறுகளை எதிர்த்துப் பொருது அடக்குவதற்கு அஞ்சும் ஆயனை எந்த ஆய்ச்சியும் விரும்பமாட்டாள்; மறுபிறவியிலும் விரும்பமாட்டாள். ஏற்றைக் கண்டு அஞ்சுவதும் ஆய்ச்சியரின் தோளை விரும்புவதும் ஆகிய இவை இரண்டும் ஒருங்கே நிகழ முடியாதவை. கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆய மகள். புல்லாள்-தழுவாள். -- முல்லைக்கலை.2�� �� கோடு - கொம்பு. மறுமையும் - மறுபிறவியிலும். புல்லாள்-தழுவாள். போரேற் றருந்தலை அஞ்சலும் ஆய்ச்சியர் காரிகைத் தோள்கா முறுதலும் இவ்விரண்டும் ஓராங்குச் சேறல் இலவோஎங் கேளே. -- முல்லைக்கலி. 6@@ @@ ஏற்று அருந்தலை -எருதின் அரிய தலை. காரிகை- அழகு. காமுறுதல்- விரும்புதல். ஓராங்கு-ஒருங்கே, ஒருசேர. கேள்-உறவு. கேளே!- தோழி! ---- வீரர்களின் வெற்றியை விரும்பும் வீரமகளிராகவே ஆய்ச்சியர் இருந்த்னர். ஆதலின் ஏறு குத்திப் புண்பட்ட வீரருடைய இரத்தம் தம் தோளில் படவேண்டும் என்று அவர்கள் விரும்பினர். தாம் தயிர் கடையும் போது அதிலிருந்து துளித்துத் தோளில் பட்ட வெண்புள்ளிகளோடு அந்தச் செந்நிற இரத்தத் துளிகள் படுதல் தோளுக்கு அழகு செய்வதாகும் என்று எண்ணியது அவர்களின் வீர நெஞ்சம்: பல்லூழ் தயிர்கடையத் தாஅய புள்ளிமேல் கொல்லேறு கொண்டான் குருதி மயக்குறப் புல்லல்எந் தோளிற்கு அணியோஎங் கேளே. -- முல்லைக்கலி 6+ + பல் ஊழ்- பலமுறை. தாஅய -பரந்த. புல்லல் -தழுவல் --- ஏறு தழுவிய வீரனை மணக்க வேண்டும் என்றும், அவ்வாறு மணந்த பின் ஊரார் தன் கணவனின் வீரத்தைப் புகழவேண்டும் என்றும் தான் மோர்விற்கச் செல்லும் போது 'இவள் கணவன் அந்த ஏற்றை அடக்கி வென்றவன்' என்று ஊரார் சோலும் சொல்லைத் தன் செவி கேட்க வேண்டும் என்றும் அத்தகைய வீரச் செல்வமே தான் விரும்புவது என்றும் ஆய்ச்சி கூறுகிறாள்: கொல்லேறு கொண்டான் இவள்கேள்வன் என்றுஊரார் சொல்லும்சொல் கேளா அளைமாறி யாம்வரும் செல்வம்எங் கேள்வன் தருமோஎங் கேளே. -- முல்லைக்கலி. 6# # கேள்வன் - காதலன். கேளா - கேட்டு. அளை - மோர். மாறி - பண்டமாற்றாக விற்று. இவ்வாறு வீரத்தை எடுத்துக் கூறிப் புகழும் புலவர், ஆயரிடையே காதலும் வீரத்துடன் கலந்து வாழ்கிறது என்னும் உண்மையை விளக்குகின்றனர். வீரன் ஏற தழுவி வெற்றி பெறுவதற்கு முன்னமே ஆய்ச்சியின் நெஞ்சம் அவனைப் பற்றுக்கோடாகக் கொண்டு காதல் கொண்டது என்பதைத் தெரிவிக்கின்றனர்: இன்றெவன் என்னை எமர்கொடுப்பது! அன்றுஅவன் மிக்குத்தன் மேற்சென்ற செங்காரிக் கோட்டிடைப் புக்கக்கால் புக்கதென் நெஞ்சு. -- முல்லைக்கலி. 5+ + எவன் - என்ன. காரி - கருநிறமுடைய எருது. புக்கக்கால் - புக்கபோது. நமக்கொரு நாள் கேளாளன் ஆகாமை இல்லை அவற்கண்டு வேளாண்மை செய்தன கண். -- முல்லைக்கலி. 1++ ++ கேளாளன் - உறவினன், காதலன். ஆகாமை இல்லை - ஆவது திண்ணம். வேளாண்மை - உதவி - அன்பு. இழிந்தோர் காதல் இவ்வாறு முல்லை நில மக்களின் தூய்மையும் எளிமையும் ஒருபுறமும், அஞ்சாமையும் வீரமும் மற்றொரு புறமும் காட்டும் தமிழ்ப்பாட்டுக்கள், அவர்களை ஒழுக்கத்தில் எளியராக்கி உயர்வல்லாத வகையில் காட்டும் பகுதிகளும் கலித்தொகையில் சில உள்ளன. அவை அந்நிலத்துத் தலைமக்களைப் பற்றியவை அல்ல, ஏவலாளரையும் அடிமைகளையும் பற்றியவை என்று அமைதி கூறுவுதும் உண்டு. எனினும், அப்பாட்டுக்கள் மேற்கண்டவை போல் சிறப்புடையவை அல்ல என்பது தெளிவு. முல்லைநிலத்து வாழ்வான் ஒருவன் ஒருத்தியை அணுகித் தன் காதலைத் தெரிவிக்கின்றான். "என் நெஞ்சம் உனக்கே உரியதாகிவிட்டது." என்கிறான். அதைக்கேட்ட அவள், "உன் நெஞ்சத்தை உரிமையாக்கிக்கொண்டு யான் எப்படி ஆள முடியும்? அது எனக்காக என்ன செய்ய முடியும்? புனத்தில் உள்ள என் தமையனுக்கு நான் உணவு கொண்டுபோய்க் கொடுக்கவேண்டும். அந்த வேலையை உன் நெஞ்சம் செய்யுமோ? அல்லது, ஆனிரையோடு இருக்கும்என் தந்தைக்குப் பால்கலம் கொண்டு போய்க் கொடுக்கவேண்டும் அதை உன் நெஞ்சம் செய்யவல்லதோ? அல்லது, தினைக்காலுள் என் தாய் விட்ட கன்றை யான் சென்று மேய்க்க வேண்டும். அதையேனும் உன் நெஞ்சம் செய்ய முடியுமோ?" என்று கேட்கிறாள்: நின் நெஞ்சம், களமாக்கொண் டியாம்ஆளல் எமக்கெவன் எளிதாகும்? புனத்துளான் என்னைக்குப் புகாஉய்த்துக் கொடுப்பதோ? இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ? தினைக்காலுள் யாய்விட்ட கன்றுமேயக் கிற்பதோ?� � களமா - இடமாக. கொண்டியாம் - கொண்டு யாம். எவன் - எவ்வாறு. புகா - உணவு. உய்த்து - கொண்டு சென்று. யாய் - என் தாய். மேய்க்கிற்பதோ - மேய்க்கவல்லதோ. மோர் விற்றுவரச் செல்கிறாள் ஒருத்தி. அவள் தெரு வழியே வருவதைக் கண்ட அந்தத் தெருப் பெண்கள் தம் தம் கணவன்மாரை முழுநாளும் வெளியே செல்லவிடாமல் தடுத்துக்கதவு அடைக்கிறார்கள். மோர் வாங்காமலே மாங்காய் ஊறுகாய் செய்துகொண்டு அதுவே போதும் என்று இருக்கத் துணிகிறார்கள். மோர் வாங்கத் தொடங்கினால், அந்தப் பெண் தம் கணவன்மாரை மயக்கித் தன்வயப்படுத்திக்கொள்வாள் என்று அஞ்சுகிறார்கள். இந்த அச்சத்தாலேயே இவ்வாறு செய்யத்துணிகிறார்கள்: மாங்காய் நறுங்காடி கூட்டுவேம் யாங்கும் எழுநின் கிளையொடு போகென்று தத்தம் கொழுநரைப் போகாமல் காத்து முழுநாளும் வாயில் அடைப்பவரும். -- முல்லைக்கலி. 9�� �� நறுங்காடி - நறுமணமான ஊறுகாய். யாங்கும் - எவ்விடத்தும். கொழுநரை - கணவரை. காதலனை எதிர்ப்படுகிறாள் ஒருத்தி. அவன் நெருங்குவதைத் தடுக்கிறாள். "என் தாய் பொல்லாதவள். என்னைத் தேடிக்கொண்டு வந்துவிடுவாள். கன்று போனவிடத்தில் கதம் கொண்ட தாய்ப்பசு தொடர்ந்து செல்வதுபோல் வருவாள். ஆகையால் நீங்கிச் செல்" என்கிறாள். அதற்கு அவன், "உன் தாய்வந்தாலும் வருக. நான் அதற்கெல்லாம் சோர்வுறமாட்டேன். நீ மட்டும் என்னிடம் அன்பு கொண்டு உதவினால் போதும்" என்கிறான்: கன்றுசேர்ந் தார்கண் கதவீற்றாச் சென்றாங்கு வன்கண்ணள் ஆய்வரல் ஓம்பு ; யாய்வருக ஒன்றே பிறர்வருக மற்றுநின் கோவரினும் இங்கே வருக ; தளரேன்யான் நீ அருளி நலகப் பெறின் -- முல்லைக்கலி. 16&& && கத - சினம் கொண்ட. ஈற்றா - கன்று ஈன்ற பசு. ஆய் - தாய். கோ - தலைவன். இவை கலித்தொகையில் இழிந்தோர் வாழ்க்கை பற்றிக்கூறும் பகுதிகளில் சில. உள்ளதை உள்ளவாறு கூறுதல் சிறந்த கலை அன்று; உயர்ந்தோர்மாட்டு நிகழ்வதனை எல்லோர்க்கும் பொதுவாக்கிக் கூறுவதே நல்ல இலக்கியமாகும். அவ்வகையில் இப்பகுதிகள் குறையுடையனவே ஆகும். பிற்காலத்தில் கலம்பகத்தில் ஆய்ச்சியரைப் பற்றிப் பாடும் பாட்டுக்கள் இவற்றைவிட இழிநிலையில் அமைந்துள்ளன. அகநானூறு நற்றிணை முதலியவற்றுள் உள்ள முல்லைத்திணைப் பாட்டுக்களோடு ஒருங்கு வைத்துக் கருதத்தகாதவை அவை. உரிப்பொருள் கலித்தொகை தவிர மற்றச் சங்க நூல்களில் முல்லைத் திணைப்பாட்டுக்கள் �ஆற்றியிருத்தல்� என்னும் பொருள் பற்றி அமைந்துள்ளன. அந்தப் பொருளே முல்லைத் திணைக்கு உரிய பொருள் - உரிப்பொருள் - எனப்படும். நூற்றுக்கணக்காக உள்ள அப்பாட்டுக்களின் கருத்தெல்லாம் இருத்தலாகிய ஒரு பொருள் பற்றியே இருப்பினும், மிக நுண்ணிய வேறுபாடு அமைந்த பலவகைச் சொல்லோவியங்களாகவே உள்ளன. புத்தர்பெருமானின் பல ஓவியங்களும் அமைதி என்னும் ஒரே தன்மை உடையனவாகத் தோன்றினும், மிக நுட்பமான சிறுசிறு வேறுபாடுகள் கொண்டு பல்வேறு வகையில் கலைவிருந்து நல்குகின்றன அல்லவோ? அவை போலவே, �இருத்தல்� என்னும் ஒரே உரிப்பொருள் பற்றிய பற்பல முல்லைத்திணைப் பாட்டுக்களும் வெவ்வேறு பாட்டின்பம் பயந்து நிற்கின்றன. முல்லை முகை கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிப் பிரிந்து சென்ற தலைவன் இன்னும் வரவில்லை: கார்காலமோ வந்துவிட்டது. மழைபெய்து முல்லைக்கொடி செழித்துவிட்டது; அரும்புகள் பல தோன்றிவிட்டன. அந்த அரும்புகள் கார்காலத்தின் வெண்ணிறப் பற்கள் போலவும் கார்காலம் அப் பற்களைக் காட்டித் தலைவியை நோக்கி நகைப்பது போலவும் தோன்றுகின்றன. "தலைவன் சொன்ன சொல் திறம்பாமல் மீள்வான் என்று நீ இன்னும் நம்புகிறபயே, பேதை!" என்று கார்காலம் தன்னை நோக்கி நகுவதுபோல் தலைவி உணர்கிறாள்: பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத் தொகுமுகை இலங்கெயி றாக நகுமே நறுந்தண் காரே. -- குறுந்தொகை. 126.&& && பெயல் - மழை. புறந்தந்த - காத்த. இலங்கு எயிறு - விளங்கும் பல். அவள் அந்த முல்லைக்கொடியை நோக்குகிறாள். தனக்கு இன்பம் தந்துவந்த பொருள்கள் எல்லாம் இப்போது துன்பம் தருவதாக உணர்கிறாள். முல்லைக்கொடியும் தனக்குத் துன்பம் செய்வதாகக் கருதுகிறாள்: தன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவதாக எண்ணுகிறாள். "முல்லைக்கொடியே! நீ வாழ்க. உன் சிறு சிறு வெண்ணிற அரும்புகளால் என்னைப் பார்த்துப் புன்முறுவல் கொண்டு நகைப்பது போல் காட்டுகிறாய். கணவனைப் பிரிந்து தனித்திருந்து வருந்தும் என்போன்றவரிடத்தில் நீ இவ்வாறு செய்வது தகுமோ?" என்கிறாள்: முல்லை வாழியோ முல்லை நீநின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை நகுவை போலக் காட்டல் தகுமோ மற்றிது தமியோர் மாட்டே. குறுந்தொகை. 162 # # முறுவல் - புன்சிரிப்பு. தமியோர் மாட்டு - தனித்தவரிடத்தில். கார் அன்று பருவ மழை தொடங்கிவிட்டதைக் கண்டும், அதனால் மயில்கள் மகிழந்து ஆடுவதைக் கண்டும், கொன்றை முதலான மலர்கள் மலர்ந்து விளங்குவதைக் கண்டும், கார்காலம் வந்தும் தலைவனுடைய தேர் வருகின்றது எனச் சொல்வார் இல்லையே என்று தலைவி வருந்துகிறாள்: பொழுதோ தான்வந் தன்றே �. மாலை நனிவிருந் தயர்மார் தேர்வரும் என்னும் உரைவா ராதே. குறுந்தொகை. 155+ + அயர்மார் - அயர, செய்ய. உரை - சொல். அவளுடைய துயரத்தை அறிந்த தோழி, அவளை ஆற்றுவிக் கருதி, "கார்காலம் வந்துவிட்டது என்று தவறாக எண்ணி நீ வருந்துகிறாய். இது கார்காலம் அன்று" என்கிறாள். "மயில்கள் ஆடுவதைக் கண்டு கார் வந்துவிட்டது என்று வருந்துகிறாய். மயில்கள் அறிவு இல்லாதவை; பருவ மழை பெய்துவிட்டது என்று அறியாமையால் மயங்கி ஆடுகின்றன ; பிடவம்பூக்களும் அவ்வாறே மயங்கிப் பூக்கின்றன. ஆயினும், சொல்கிறேன், தோழி! இது கார் அன்று. உன் துயரம் ஒழிக. பழைய மழை தன் நீர் முழுவதும் பொழியாமல் சிறிது நீர் எஞ்சியிருந்தது. அந்தப் பழைய நீரை முற்றிலும் சொரிந்த பிறகுதானே கடலிற் சென்று புதுநீரை முகந்து வர வேண்டும்? அவ்வாறு சொரிந்த பழைய நீரைக் கார் என்று மயங்கக்கூடாது. இடியும் இடிக்கின்றதே என்று கேட்பாய். மழை நம்மிடம் அன்பு இல்லாதது. ஆதலால் நம்மைத் துன்புறுத்த வேண்டும் என்று முழக்கம் செய்கிறது. அந்த முழக்கத்தைக் கேட்டு மயங்கி அறிவில்லாத மயில்கள் ஆடுகின்றன. அவ்வளவுதான் உண்மை" என்கிறாள் : மடவ வாழி மஞ்ஞை மாயினம் ; கால மாரி பெய்தென அதனெதிர் ஆலலும் ஆலின ; பிடவும் பூத்தன ; காரன்று இகுளை! தீர்கநின் படரே ; கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர் புதுநீர் கொளீஇய உகுத்தரும் நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே. -- குறுந்தொகை. 251 # # மடவ - அறியாமை உடையவை. மா - கரிய இனம் - டம். ஆலல் - ஆடல். இகுளை - தோழி. படர் - நினைந்து வருந்தல். கொளீஇய - கொள்ள. உகுத்தரும் - சொரியும். நொதுமல் - அயல், உறவு அல்லாத. "பெரிய கொன்றை மரங்களும் அறிவில்லாதவை. நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் கூறிய பருவம் வருவதற்கு முன்னமே, கிளைகளில் கொத்துக் கொத்தாக மலர்ந்துவிட்டன; இடைக்காலத்தில் பெய்துவிட்டுச் செல்லும் வம்ப மழையைப் பருவமழையாகிய கார் என்று எண்ணி மலர்ந்துவிட்டன. இதைக் கண்டு நீ வருந்தாதே." மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை . . . சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை . . . கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த வம்ப மாரியைக் காரென மதித்தே. --குறுந்தொகை. 66## ## தடவு - பெரிய. வாரா அளவை - வருமுன். இணர் - கொத்து. ஊழ்த்த - மலர்ந்தன. "அவர் வருவதாகக் கூறித் தெளிவித்த பருவம் இது தானே என்று கேட்கிறாய். அறிவில்லாமல் உரிய காலத்தை மறந்து கடலிடம் சென்று நீரை முகந்துகொண்டு வந்த கரிய மேகம் நீரைப் பொறுத்திருக்க முடியாமல் கொட்டி விட்ட மழை இது; இது கார் என்று மயங்கிய உள்ளத்தால் ஆராய்ந்து பார்க்காமல் பிடவமும் கொன்றையும் காந்தளும் பலவாக மலர்ந்துவிட்டன, அறிவில்லாதவை ஆகையால்:" தாம்வரத் தெளித்த பருவம் காண்வர இதுவோ என்றிசின் மடந்தை ; மதியின்று மறந்துகடல் முகந்த கமஞ்சூல் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல் கார் என்று அயர்த்த உள்ளமொடு தேர்வில் பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின் மலர்ந்தன பலவே. -- நற்றிணை. 99+ + தெளித்த - தெளியுமாறு கூறிய. என்றிசின் - என்கிறாய். மதி இன்று - அறிவு இல்லாமல். கமம் - நிறைந்த. செல்லாது - முடியாமல், இறுத்த-தங்கிப் பெய்த. தேர்வு இல - ஆராய்ச்சி இல்லாதனவாய். இவ்வாறு நேரே பற்பல கூறியும் தலைவியின் உள்ளம் தேறாதது கண்ட தோழி, சிறிது பொறுத்து, பெய்கின்ற மழையையே நோக்கிப் பின்வருமாறு கூறுகிறாள்: "மழையே! வாழ்க. புதிய சிறு பூக்கள் - மணம் கமழும் முல்லைப் பூக்கள் - புதர் நிறையப் பூத்து, அந்தப் புதரே புள்ளிமானின் முகம்போல் தோன்றி அழகு பெறும்படியாக மழைபொழியும் கார்காலமே தாம் வரும் காலம் என்று அவர் கூறிச் சென்றார். இதை அறிந்த நீ, துயரம் மிக்க எம் உள்ளம் மேலும் நடுங்குவதைக் காணவேண்டும் என்று இடிமுழக்கம் செய்கிறாய். எம்மிடம் அன்பு இல்லாமையால் இரக்கம் அற்ற முறையில் திரும்பத் திரும்பப் பொய்யான குரலால் இடிமுழக்கம் செய்கிறாய். அதைக் கார்கால முழக்கம் என்று உண்மையாகக் கருதி மயில்கள் கூட்டமாய் மகிழ்ந்து ஆடுகின்றன. அவைகளைப் போல் யானும் உன்னால் மருள்வேனோ? தலைவி மருண்ட போதிலும் யான் மருள மாட்டேன்:" சிறுவீ முல்லைத் தேங்கமழ் பசுவீ பொறிவரி நன்மான் புகர்முகம் கடுப்பத் தண்புதல் அணிபெற மலர வண்பெயல் கார்வரு பருவம் என்றனர் மன்இனிப் பேரஞர் உள்ளம் நடுங்கல் காணியர் அன்பின் மையின் பண்பில பயிற்றும் பொய்யிடி அதிர்குரல் வாய்செத்து ஆலும் இனமயில் மடக்கணம் போல நினைமருள் வேனோ வாழியர் மழையே. -- நற்றிணை. 248 @ @ வீ - மலர். புகர் - புள்ளி. கடுப்ப - போல. அஞர் - துன்பம். காணியர் - காண. வாய்செத்து - உண்மை என்று கருதி. ஆலும்-ஆடும். கணம்-கூட்டம். நினை-நின்னை-உன்னை. மருள்வேனோ - கண்டு மயங்குவேனோ. மழையை விளித்துக் கூறிய சொற்களாலும் தலைவியின் உள்ளத்தை மாற்ற முடியவில்லை; கார்காலம் என்று உணர்ந்து அவள் மேலும் வருந்துகிறாள். அப்போது தோழி அவளை நோக்கி, "நீ என் சொல்லை நம்பாவிட்டாலும் விடுக; தலைவர் சொன்ன சொல்லிலும் உனக்கு நம்பிக்கை இல்லையா? அவர் சொன்ன சொல் திறம்புவாரா?" என்கிறாள். "முல்லைக்கொடிகள் மலரும்படியாக இடைக் காலத்துப் புதுமழை -வம்பமழை- பெய்துவிட்டுப் போகிறது என்றுநான் சொன்னால் கேட்கவில்லை. இது வம்பமழை அன்று, பருவ மழையாகிய கார் என்றே கொள்வாயானால், கார்காலம் தொடங்கியதும் நம் காதலர் தவறாமல் வந்திருக்க மாட்டாரோ? அவர் வராமையாலேயே இது கார் அன்று என்பது தெரியவில்லையா?" என்கிறாள்: ....முல்லை மலர வம்புப் பெயும்மார் மழையே ; வம்பு அன்று கார் இது பருவம் ஆயின் வாரா ரோ நம் காத லோரே. குறுந்தொகை. 382 தலைவியின் உள்ளம் கண்ணெதிரே கார்காலத்தின் பல அறிகுறிகளையும் காண்கிறாள். அதனால், கார் அன்று கார் அன்று எனத் தோழி பலமுறை எடுத்துச் சொல்லி வற்புறுத்துவது கேட்டுச் சலிப்பு அடைகிறாள். "பொன் காசுகளைப் போன்ற பூக்களை ஈன்ற கொன்றையைக் காண்கிறேன். குருந்த மலர்கள் மலர்ந்து அசைவதையும் காண்கிறேன். மிக்க குளிர்ச்சி பெற்ற இந்தக் காலம் கார்காலம் அன்று என நீ சொல்வாயானால், நான் காண்பது எல்லாம் கனவுதானா என்று கேட்கிறேன்" என்கிறாள்: காசின் அன்ன போதுஈன் கொன்றை குருந்தோடு அலம்வரும் பெருந்தண் காலையும் கார்அன்று என்றி யாயின் கனவோ மற்றிது வினவுவல் யானே. -- குறுந்தொகை - 148. �� �� காசின் அன்ன - பொன்காசு போன்ற. போது - பேரரும்பு- மலர். அலம்வரும் - அசையும். காலை - காலம். என்றி - என்பாய். வினவுவல் - வினவுவேன். தலைவர் சொன்ன சொல் பிறழாமல் மீண்டும் வருவார் என்பதில் தலைவியின் நம்பிக்கை சிறிதும் தளரவில்லை: அம்ம வாழி தோழி காதலர் நிலம்புடை பெயர்வ தாயினும் கூறிய சொல்புடை பெயர்தலோ இலரே. -- நற்றிணை -289.&& &&புடைபெயர்வது - அசைந்து மாறுவது. பிறகு, தன் துயரத்தைப் பற்றிக் கவலை இல்லை என்றும், தன்னைப் போல் கணவரைப் பிரிந்து தனித்திருக்கும் மற்ற மகளிர்க்கு வழி என்ன என்றும், பிறரைப் பற்றிக் கவலையுறுபவள் போல் தோழியை நோக்கிச் சொல்கிறாள்: "கார்காலம் என்பதற்கு அறிகுறியாக, மிகக் குளிர்ந்த மழைக் காலத்திற்கு உரிய பித்திகத்தின் அரும்பு முன்பே மிகச் சிவந்து தோன்றுவதைப் பார். யானா மருள்கிறேன்? என்னைவிட மற்றப் பெண்களின் நிலைமை என்ன ஆகுமோ? மலையிலே அருவி துள்ளும்படி பெய்வதற்காக மழை இடித்து முழங்கும் குரலை நள்ளிரவில் கேட்பார்களானால், கணவரைப் பிரிந்து தனித்து வருந்தும் மகளிர் மேலும் எவ்வளவு துயருருவார்கள்?" பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே; யானே மருள்வென் தோழி? பானாள் இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும் என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே அருவி மாமலை தத்தக் கருவி மாமழைச் சிலைதரும் குரலே. -- குறுந்தொகை. 94& & பேதை - அறியாமை உடைய. மருள்வென் - மயங்குவேன். பானாள் - நடுநாள் - நள்ளிரவு. பிரிந்திசினோர் - பிரிந்தோர். கருவி - மின்னல் முதலியவற்றை உடைய. சிலைதரும் - ஒலிக்கும். மேலும் மேலும் கார்காலத்து நினைவை வளர்க்கக் கூடிய பொருள்களைக் கண்டு அவள் நெஞ்சம் கலங்குகிறது. காட்டில் ஆட்டு மந்தையில் பறியோலையைக் கையில் கொண்ட ஆயர் காத்து நிற்க, அங்கிருந்து பால் கொண்டு வந்து வீட்டில் சேர்ப்பித்து, வீட்டிலிருந்து கூழ்கொண்டு திரும்பும் ஆடுமேய்க்கும் இடைமகனுடைய தலையில் சூடிய அரும்புகளைக் காண்கிறாள். அவை எல்லாம் சிறு சிறு முல்லைமுகைகளே என்பதைக் காண்கிறாள். "முல்லையும் மலரத் தொட்ங்கிவிட்டனவே! அவர் இன்னும் வரவில்லையே" என்று கலங்குகிறாள்: அவரோ வாரார்; முல்லையும் பூத்தன பறியுடைக் கையர் மறியினத்து ஒழியப் பாலொடு வந்து கூழொடு பெயரும் யாடுடை இடைமகன் சென்னிச் சூடிய எல்லாம் சிறுபசு முகையே. -- குறுந்தொகை, 221% % பறி - ஓலையால் செய்து வைத்திருப்பது; பை போன்றது. பெயரும் - திரும்பும். யாடு - ஆடு. சென்னி - தலை. நாம் இவ்வாறு துன்புறுகிறோமே, அவர் எப்படிக் கவலையில்லாமல் தொலைநாட்டில் இருக்க முடிகிறதோ என்று எண்ணி வருந்துகிறாள். மாலைவேளையில் தன் துயரத்தைத் தானே நினைந்து பார்க்கிறாள். தன் எதிரே கட்டப்பட்டுள்ள இளங்கன்றின் துன்பத்தைக் காண்கிறாள். தாய்ப்பசு மந்தையோடு வெளியே மேயச் சென்றிருப்பதால், அந்தக் கன்று திரும்பத் திரும்பத் தொழுவத்தையே நோக்கிச் சுற்றிச் சுற்றிக் கலங்குகிற துன்பத்தை உணர்கிறாள். தன் துயரமும் அத்தகையதாகவே இருப்பதை எண்ணுகிறாள். இதை உணராமல் தலைவர் தொலைநாட்டில் கவலையில்லாமல் காலம் கழிக்கிறாரே என்று நோகிறாள்: பல்லா நெடுநெறிக்கு அகன்று வந்தெனப் புன்றலை மன்றம் நோக்கி மாலை மடக்கண் குழவி அலம்வந் தன்ன நோயேம் ஆகுதல் அறிந்தும் சேயர் தோழி சேய்நாட் டோரே. -- குறுந்தொகை, 64+ +பல்ஆ - பல பசுக்கள். மன்றம் - ஊர்ப்பொதுவான மரத்தடி. குழவி - கன்று. அலம்வந்தன்ன - கலங்கினாற் போன்ற. நோயேம் - துன்பம் உடையேம். சேயர் - தொலைவில் உள்ளார். மாலைப்பொழுது மேய்வதற்காகச் சென்ற பசு ஊர் நோக்கித் திரும்பி வருகிறது. நிலத்தில் படிவதுபோல் அசையும் அலைதாடியோடு, பால் சொரிந்தவாறே தன் கன்றை நினைந்து மந்தைக்கு உட்பட் டிருக்காமல் வெளியேறி ஊர் நோக்கித் திரும்பி வருகிறது. அத்தகைய மாலைக் காட்சியைக் காண்கிறாள் தலைவி. அந்தப் பசுவின் வருகைபோல் காதலர் திரும்பி வருதலும் காண்பார்களானால், அவருடைய வருகையை எதிர்நோக்கியிருக்கும் பெண்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்று எண்ணிப் பார்க்கிறாள். அவ்வாறு காதலர் திரும்பி வரும் காட்சியைக் காணப்பெற்ற பெண்களே நற்பேறு பெற்றவர்கள், அவர்களே நோற்றவர்கள் என்று தன் துயர் தோன்றத் தோழிக்குக் கூறுகிறாள்: நோற்றோர் மன்ற தோழி... நிலம் தூங்கு அணல வீங்குமுலைச் செருத்தல் பால்வார்பு குழவி உள்ளி நிரைஇறந்து ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை... பிரிந்துறை காதலர் வரக்காண் போரே. -- குறுந்தொகை, 344# # நோற்றோர் - தவமுடையோர் (பாக்கியம் உடையோர்). தூங்கு - அசையும். அணல - அலைதாடி உடையனவாகிய. செருத்தல் - மடி. இறந்து - கடந்து. புன்கண் - துன்பம். தலைவியின் மனத்தில் வேறொருவகை எண்ணம் எழுகிறது. "தலைவருக்கு நம் துன்பம் தெரியாது. நாம் வாடி மெலிந்து பசலையுற்ற நிலையை அவர் அறியார். நம் நிலை தெரிந்தால் அவர் சென்ற இடத்தில் நீட்டித்திருக்க மாட்டார்" என்று எண்ணுகிறாள். பிரிவாற்றாமையால் மெலிந்து வருந்தியதால் பீர்க்கம்பூவின் நிறம் போன்ற பசலை வரப் பெற்றாள். தோட்டத்தில் பூத்திருக்கும் பீர்க்கம் பூவின் நிறத்தைக் கண்டு தன் நிறத்தோடு ஒப்பிடுகிறாள். இந்தப் பூக்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டு போய் அவரிடம் காட்டி, "உன் துணைவி இத்தகைய நிறம் உற்றாள்" என்று யாரேனும் நெருங்கிச் சொல்வார்களானால் நன்மையாகும் என்று எண்ணுகிறாள்: இன்னள் ஆயினள் நன்னுதல் என்றுஅவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழிநம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர்சில கொண்டே. -- குறுந்தொகை,98# ## துன்ன - நெருங்க - நெருங்கி. படப்பை - தோட்டம். கலித்த - செழித்து வளர்ந்த. பீரத்து அலர் - பீர்க்கம் பூ. தலைவி கார்காலமே எனத் தெளிந்து பலவாறு கலங்கிக் கண்ணீர் சொரிவதைக் கண்ட தோழி, தலைவன் விரைவில் திரும்பிவரக் கூடும் எனக் கூறித் தேற்ற முயல்கிறாள். "மேற்கொண்ட போர்ச் செயலில் வெற்றி பெற்று மிக்க மகிழ்ச்சியோடு மீள்வார் தலைவர். இளைய வீரர்கள் அந்த முயற்சியாலாகிய வெற்றியை வாழ்த்தித் தொடர, மழை வளம் பொழிதலால் பசுமை பெற்றுச் சிறந்த குளிர்ந்த காட்டுவழியாக வருவார். வரும் வழியில் பெண்மானின் மருண்ட நோக்கம் அவருடைய கண்ணில் படும். அதைக் காணும் போதெல்லாம் அவர் உன்னை நினைந்து, தேர்ப்பாகனை நோக்கி, 'தேரை விரைந்து செலுத்துக' என்று சொல்லி இன்றே வந்து சேர்வார். நீ அழாதே" என்கிறாள். அதைக் கேட்ட தலைவி, "தோழி! நீ என்னைத் தேற்றுவதற்காகக் கூறும் நல்ல பலவாகிய இனிய சொற்களைக் கேட்டு அமைதியுறுவேன். ஆனால் துன்பமான இந்த மாலைக் காலத்தில் கோவலர் ஊதும் குழலின் ஓசை என்னை வருத்துகிறதே! என்ன செய்வேன்? முன்பெல்லாம் இனிதாக மென்மை உடையதாக இருந்த குழல் இப்போது எனக்குக் கடுமையுடையதாக இருக்கிறதே. அது மட்டும் என்னை வருத்தாதிருக்குமாயின், நான் உன் சொல் கேட்டு அமைதியுறுவேன்" என்கிறாள்: வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து போர்வல் இளையர் தாள்வலம் வாழ்த்தத் தண்பெயல் பொழிந்த பைதுறு காலை... வண்டுபோது அவிழ்க்கும் தண்கமழ் புறவில் கருங்கோட்டு இரலைக் காமர் மடப்பிணை மருண்டமான் நோக்கம் காண்தொறும் நின்நினைந்து திண்தேர் வலவ கடவெனக் கடைஇ இன்றே வருவர் ஆன்றிகம் பனிஎன வன்புறை இன்சொல் நன்பல பயிற்றும் நின்வலித்து அமைகுவன் மன்னோ அல்கல் புன்கண் மாலையொடு பொருந்திக் கொடுங்கோல் கல்லாக் கோவலர் ஊதும் வல்வாய்ச் சிறுகுழல் வருத்தாக் காலே. -- அகநானூறு, 74& & வினை - போர்க்கடமை. வலம் - வெற்றி. இளையர் - ஏவலாளர். பைதுறு - பசுமையுற்ற. காலை - காலம் - கார்காலம். புறவில் - முல்லை நிலத்தில். கோட்டு - கொம்பு உடைய. காமர் - விருப்பமான. பிணை - பெண் மான். வலவ - தேர்ப்பாகனே! கடைஇ - செலுத்தி. ஆன்றிகம் - அமைவோம் - நிறுத்துவோம். பனி - கண்ணீர். அல்கல் - நாள்தோறும். தலைவியின் சொல்லைக் கேட்டு ஒருவாறு தேறி மறந்திருக்கும்போது, கோவலர் ஊதும் குழலின் ஓசை செவி வழியாகப் பாய்ந்து மீண்டும் மீண்டும் மாலைப் பொழுதையும் கார்காலத்தையும் நினைவூட்டி, தலைவனின் தேர் வரவில்லையே என்று எண்ணி ஏங்கும்படியாகச் செய்கிறது. ஆதலின் தோழியின் சொல்லைக் கேட்டும் அமைதியுற முடியவில்லையே என்கிறாள். இருள் செறிந்த நள்ளிரவில் யாதொரு நினைப்பும் அற்று அமைதியாய் இருக்கும் நேரத்தில் தொழுவத்தில் காளை இங்கும் அங்கும் திரிவதால் அதன் கழுத்தில் உள்ள ஒற்றைமணி ஒலிக்கிறது. அதைக் கேட்டதும் தலைவி எல்லோரும் உறங்கும் அமைதிக்கு இடையே தன் தனிமையை எண்ணித் துயருறுகிறாள். "என் கூந்தலையும் தோளையும் தடவி விடைபெற்று, என் வளை நெகிழுமாறு விட்டுவிட்டுப் பிரிந்த தலைவர், நள்ளிரவில் தொழுவத்திலே ஒலிக்கும் இந்த ஒற்றைமணியின் குரலை அறிவாரோ?" என்று வருந்துகிறாள்: நெறியிருங் கதுப்பொடு பெருந்தோள் நீவிச் செறிவளை நெகிழச் செய்பொருட்கு அகன்றோர் அறிவர்கொல் வாழி தோழி... ... அரையிருள் நடுநாள் நல்லேறு இயங்குதோறு இயம்பும் பல்லான் தொழுவத்து ஒருமணிக் குரலே. -- குறுந்தொகை, 190##. ## கதுப்பு - கூந்தல். நடுநாள் - நள்ளிரவு. இயம்பும் - ஒலிக்கும். பல்ஆன் - பல பசுக்கள் உள்ள. எல்லோரும் உறங்கும் நள்ளிரவின் அமைதி, நெஞ்சில் கிடக்கும் துன்பத்தை மிகுவிக்க வல்லது. அந்த அமைதியைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதுபோல் ஒலிக்கிறது ஒற்றை மணியின் குரல். அதனால் அவள் துயரம் முன்னிலும் மிகுகிறது. தொழுவத்தில் பல பசுக்கள் இருப்பதால், அவை எல்லாம் எழுந்து இயங்கி நள்ளிரவின் அமைதியைக் குலைத்தாலும் நன்மையாக இருக்குமே என்றும், அவைகள் அமைதியைக் காக்கும்போது இந்த ஒற்றைமணியின் குரல் அதை எடுத்துக்காட்டுவதுபோல் ஒலிப்பதுதான் என்னால் பொறுக்க முடியவில்லையே என்றும் கலங்குகிறாள். தலைவன் தன்னை மறந்திருக்க மாட்டார் என்றும், கார்காலம் வந்துவிட்டது என்பதை அறிந்தால் விரைந்து மீள்வார் என்றும் தலைவியின் பேதை நெஞ்சம் எண்ணுகிறது. "அவர் சென்ற நாட்டிலும் கார்காலம் வந்திருக்குமே. அங்கும் இதுபோல் காடு இருக்குமே. அங்கே என் பசலைநிறம்போல் கொன்றைப் பூ மலரும் காட்சி இருக்காதோ? என்னை விட்டுப் பிரிந்த அவரைப் போலவே பெண்மானை விட்டுப் பிரிந்த ஆண்மான் அந்தக் காட்டில் இருக்காதோ? அதைத் தலைவர் காண்பாரோ?" என்று எண்ணுகிறாள்: சென்ற நாட்ட கொன்றையம் பசுவீ நம்போல் பசக்குங் காலைத் தம்போல் சிறுதலைப் பிணையின் தீர்ந்த நெறிகோட்டு இரலை மானையும் காண்பர்கொல் நமரே. -- குறுந்தொகை, 183@ @ நாட்ட - நாட்டில் உள்ளனவாகிய. பசக்குங்காலை - பசலையுறும்போது. பிணையின் - பெண்மானை விட்டு. தீர்ந்த - பிரிந்த நமர் - நம்மவர் - நம் தலைவர். "என்னை வருத்தும் கார்காலத்து மாலைப் பொழுது அவர் சொன்ன நாட்டில் இல்லையோ? இருந்தால், அதுவே அவர் குறித்த பருவம் வந்த செய்தியை நினைவுறுத்துமே. கதிரவன் பெரிய மலையில் சென்று மறைதல், பறவைகள் தம் குஞ்சுகள் உள்ள இடத்திற்குச் சென்று சேர்தல், காட்டில் மான் துணை தேடித் தழுவல், முல்லை அரும்புகள் வாய்திறந்து மலர்தல், தோன்றி மலர்கள் செந்நிறமாய் மலர்ந்து புதர்களை விளக்கமுறச் செய்தல், பசுக்களின் தெளிந்த மணிஓசை கோவலரின் குழலொலியோடு கலந்து மெல்லவந்து இசைத் தல் ஆகிய இவை அருள் இல்லாத இந்த மாலைப் பொழுதிற்கு உரியனவாக உள்ளனவே! இவை எல்லாம் அவர் சென்ற நாட்டில் இவ்வாறே தோன்றிப் பருவத்தை நினைவூட்டு மானால், அவர் உடனே புறப்பட்டு வருவாரே! கடமையே பெரிது என்று என்னைப் பிரிந்திருக்க அவரால் முடியாதே." பல்கதிர் மண்டிலம் பகல்செய் தாற்றிச் சேயுயர் பெருவரைச் சென்றுஅவண் மறையப் பறவை பார்ப்புவயின் அடையப் புறவின் மாயெருத் திரலை மடப்பிணை தழுவ முல்லை முகைவாய் திறப்பப் பல்வயின் தோன்றி தோன்றுபு புதல்விளக் குறாஅ மதர்வை நல்லான் மாசில் தென்மணி கொடுங்கோல் கோவலர் குழலோடு ஒன்றி ஐதுவந் திசைக்கும் அருளில் மாலை ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் இனைய ஆகித் தோன்றின் வினைவலித் தமைதல் ஆற்றலர் மன்னே. -- நற்றிணை. 69@ @ மன்டிலம்-சூரியன். வரை-மலை. அவண்-அங்கே. பாப்புவயின்-குஞ்சுகளிடம். புறவின்-காட்டில் வாழும். வாய் திறப்ப-மலர. பல்வயின்-பல இடங்களில். தோன்றுபு - தோன்றி. விளக்குறாஅ-விளங்கச்செய்து. மதர்வை-செம்மாப்பு உள்ள. கொடுங்கோல்-வளைந்த கோல் ஏந்திய. ஒன்றி-ஒன்றுசேர்ந்து. ஐது-மெல்ல. இனைய-இத்தன்மை உடையன வாய். வலித்து அமைதல்-வற்புறுத்தஇருத்தல். தோழி முயற்சி இருந்த இடத்திலிருந்தே தோழி தலைவிக்குக் கூறும் தேற்றுமொழிகள் பயன்படவில்லை. வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்று தேற்ற முயல்கிறாள். முல்லைக் கொடி படர்ந்த பாறை ஒன்று அருகே இருக்கிறது. அதன்மேல் உயர ஏறித் தேர் வரும் வழியைக் காண்பதற்கு வருமாறு தலைவியை அழைக்கிறான். "ஏதோ மணியோசை கேட்கிறது. போய்ப் பார்க்கலாம், வா. புல் மேய்ந்து விட்டுப் பொழுது போவதை அறிந்து ஊர்க்குத் திரும்பும் பசுக்களின் கழுத்தில் கட்டிய மணிகளின் ஒலியோ? அல்லது, மேற்கொண்ட கடமையை முடித்த பெருமித உள்ளத்தோடு, ஏவலாட்கள் சூழ்ந்து போற்ற, ஈர மணல் பொருந்திய காட்டுவழியே வருகின்ற தலைவருடைய தேரின் மணியோசைதானோ? போய்க் காண்போம், வா" என்கிறாள்: முல்லை ஊர்ந்த கல்உயர்பு ஏறிக் கண்டனம் வருகம் சென்மோ தோழி! எல்லூர்ச் சேர்தரும் ஏறுடைஇனத்துப் புல்லார் நல்லான் பூண்மணி கொல்லோ? செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு வல்வில் இளையர் பக்கம் போற்ற ஈர்மணல் காட்டாற்று வரூஉம் தேர்மணி கொல்ஆண்டு இயம்பின உளவே.&& -- குறுந்தொகை. 275&& && புல்ஆர்-புல் தின்ற. இயம்பிய-ஒலித்தவை ஆற்றாமை தலைவனுடைய தேர் வராமை கண்டு மீண்டும் மீண்டும் கலங்குகிறாள் தலைவி. "தோழி! அவர் வருவதாகச் சொன்ன கார்காலமும் வந்து கழிகிறது. இத்தன்மையாகச் சில நாள் கழிவதானால், யான் இன்னும் பல நாள் உயிர்வாழ மாட்டேன். விரைவிலேயே இறந்திடுவேன்" என்கிறாள்: சொல்லிய பருவம் கழிந்தன்று... இன்ன சின்னாள் கழியின் பன்னாள் வாழலேன் வாழி தோழி. - நற்றிணை, 364�. � கழிந்தன்று பகைவர்மேல் சினம் மிகக் கொண்ட வேந்தனுடைய பாசறையிலே அவர் நீடித்திருக்கிறார். நம்முடைய துன்பத்தை உணராதவராக அறநெஞ்சம் இல்லாதவராக இருக்கிறார். என் துயரத்தைப் போக்குவதற்காக அவர் வருவாரோ என ஐயுற்று வருந்துகிறேன். ஓயாமல் வாடைக்காற்று வீசி என் தனிமைத் துன்பத்தைப் பெருக்குகிறது. என்னால் பொறுத்திருக்க முடியவில்லை." காய்சின வேந்தன் பாசறை நீடி நந்நோய் அறியா அறனி லாளர் இந்திலை களைய வருகுவர் கொல்என ஆனாது எறிதரும் வாடையொடு நோனேன் தோழிஎன் தனிமை யானே. -- அகநானூறு, 294.& & நீடி - நீட்டித்துத் தங்கி. நந்நோய் - நம் துன்பம். ஆனாது -ஓயாமல். நோனேன் - என்னால் பொறுக்க முடியவில்லை. தலைவன் மேல் இருந்த நம்பிக்கை தளரத் தொடங்குவதாலேயே, அவனை "அறனிலாளர்" என்று பழிக்கவும் "தோழி! இனி அவர் வராவிட்டாலும் என்ன? வந்தாலும் என்ன? நமக்கும் அவர்க்கும் தொடர்பு என்ன? அவர் யாரோ? இத்தகைய துன்ப நிலையில் யான் வருந்திக் கொண்டிருக்கிறேன். 'அவள் அங்கே என்ன ஆனாளோ?' என்று அவர் எண்ணிப் பார்க்கவுமில்லை. அத்தகையவர் இனி வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?" வாரார் ஆயினும் வரினும் அவர்நமக்கு யாரா கியரோ தோழி...... என்ஆ யினள்கொல் என்னா தோரே. -- குறுந்தொகை, 110@ @ என்னாதோர் - என்று இரங்காதவர். மாலைக் காலத்தைக் கண்டு வருந்தும் நிலைமை மாறியது. இரவும் பகலும் எப்பொழுதும் தலைவனுடைய வருகையை நினைந்து ஏங்கத் தொடங்கினாள். பாழான மாலைக் காலம் வரின் தலைவியின் துயர் பெருகுகிறது எனத் தோழி உரைத்தாள். அதைக் கேட்ட தலைவி, "மாலைப் பொழுதா? துயர் செய்யும் மாலைப் பொழுதா? கதிரவன் மறைய, வானம் சிவக்க, முல்லை மலருகின்ற ஒரு பொழுதை மட்டும் மாலை என்று கூறுவர் தெளிவு இல்லாத சிலர். தலைவனைப் பிரிந்து துணை இல்லாதவராய்த் தனித்து வருந்தும் மகளிர்க்கு அது மட்டும் மாலை அன்று; வீட்டில் உச்சிக்கொண்டை உடைய சேவல் கூவுகின்ற விடியற்காலமும் மாலையே; பகலும் மாலையே; எல்லாப் பொழுதும் துன்பம் மிகுந்த மாலைப்பொழுதே" என்கிறாள். சுடர்செல் வானம் சேப்பப் படர்கூர்ந்து எல்லுறு பொழுதின் முல்லை மலரும் மாலை என்மனார் மயங்கி யோரே; குடுமிக் கோழி நெடுநகர் இயம்பும் பெரும்புலர் விடியலும் மாலை பகலும் மாலை துணையி லோர்க்கே. -- குறுந்தொகை, 234�. � சேப்ப - சிவக்க. படர் கூர்ந்து - துயரம் மிகுந்து. நெடுநகர் - பெரிய வீட்டில். எவ்வாறேனும் தலைவியின் துயரைத் தணிவிக்க வேண்டும் என்று தோழி முயல்வது போலவே, வயதான பெண்கள் சிலரும் முயல்கிறார்கள். தலைவன் வருகையைச் சகுனம் பார்த்துச் சொல்லித் தேற்றலாம் என்று அந்தக் காலத்து நம்பிக்கைக்கு ஏற்ற வழியில் முயல்கிறார்கள். ஊர் நடுவே சென்று ஓரிடத்தில் நெல்லையும் முல்லைமலர்களையும் தூவிக் கைதொழுது நல்ல சொல் எதிர்பார்த்து நிற்கிறார்கள். அங்கே ஆய்மகள் ஒருத்தி சிறு கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றின் பசித்துன்பத்தையும் அது தாயை நினைந்து வருந்துவதையும் கண்டு, அதன் முதுகைத் தடவி, "ஆயர்கள் பின்னே இருந்து கையில் கோல் கொண்டு செலுத்த, உன் தாய்மார் இப்போதே வீட்டுக்கு வந்து சேர்வார்கள்" என்று சொல்வதைக் கேட்கிறார்கள். மிக நல்ல வாய்ச்சொல் (விரிச்சி என்னும் சகுனம்) கேட்டோம் என்று முதிய பெண்கள் மகிழ்கிறார்கள். உடனே திரும்பி வந்து தலைவியிடம் அதைச் சொல்லி, "பகைவரை வென்று திறை கொண்டு தலைவர் திரும்புவது திண்ணம்; நீ இவ்வாறு துயரப்படாதே" என்று தேற்றுகிறார்கள் : பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை அருங்கடி மூதூர் மருங்கின் போகி யாழிசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச் சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள் நடுங்குசுவல் அசைத்த கையள் கைய கொடுங்கோல் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே வருகுவர் தாயர் என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம் அதனால் நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர் முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து வருதல் தலைவர் வாய்வது நீநின் பருவரல் எவ்வம் களைமா யோய்என.... -- முல்லைப்பாட்டு, 6-21 &&. && கடி - காவல். தூஉய் - தூவி. விரிச்சி - பிறர் கூறும் வாய்ச் சொல்லாகிய சகுனம். தாம்பு - கயிறு. சுவல் - தோள். உய்த்தர - செலுத்த. இன்னே - இப்போதே. வாய்ப்புள் - வாய்ச்சொல்லாகிய சகுனம். தெவ்வர் - பகைவர். வாய்வது - வாய்மையானது, உண்மை. பருவரல் - துன்பம். எவ்வம் - துன்பம். பாணன் உதவி இசைக் கலைஞனாகிய பாணனுக்கும் முல்லைத்திணையில் இடம் உண்டு. அவன், குடும்பத் தலைவனுக்கும் தலைவிக்கும் தன் இசைத்திறனால் மகிழ்ச்சி அளிப்பதோடு, அவர்களுக்கு உற்றுழி எல்லாம் உதவுபவனாகக் காணப்படுகிறான். ஐங்குறுநூற்றில் பேயனார் பாடிய முல்லைப் பாட்டுக்களில் பாணன்பத்து என்னும் பத்துப் பாட்டுக்களும் இங்குக் கருதத் தக்கவை. கார்காலம் வந்தது கண்டு வருந்தும் தலைவியின் நிலையை அறியாமல், வழக்கம்போல் பார்த்துச் செல்வதற்காகப் பாணன் வருகிறான். அவனைக் கண்ட தோழி, "பாண! உனக்கு நிலைமை தெரியாதுபோல் இருக்கிறது. கார்காலம் வந்தும் தலைவன் வராமையால், தலைவி வளை நெகிழ மெலிந்து வாடுகிறாள்; கண்ணீர் சொரிந்து கலங்குகிறாள்; தலைவன் வரவில்லை. அவர்தன்மையை என்ன என்பது? இந்த நிலைமை தெரியாதவன்போல் நீ இவ்வாறு வாளா வருகிறாயே" என்கிறாள்: எல்வளை நெகிழ மேனி வாடப் பல்லிதழ் உண்கண் பனியலைக் கலங்கத் துறந்தோன் மன்ற மறம்கெழு குருசில்; அதுமற்று உணர்ந்தனை போலாய் இன்னும் வருதி; என்அவர் தகவே. -- ஐங்குறுநூறு, 471& & எல் - ஒளி. பனி - கண்ணீர். துறந்தோன் - விட்டுப் பிரிந்தான். குருசில் - சிறந்த ஆண்மகன். பாணனைக் கண்ட தலைவி அவனை அன்பு இல்லாதவன் எனப் பழிக்கிறாள். தன் துயரம் அறியாமல் தனக்கு உரிய வகையில் உதவி ஒன்றும் செய்ய முயலாமல் வாளா வருவதைக் கண்டே "அன்பில் பாண" என்கிறாள். "மழை பொழிந்து ஆரவாரம் செய்ய, முல்லைக் கொடிகளும் பூத்துக் கார்ப்பருவம் செய்துவிட்டன. ஆனிரை மேய்க்கும் கோவலரும் முல்லை மலர்களை மாலையாகக் கட்டுகிறார்கள். இத்தகைய மாலைக்காலம் அவர் சென்ற நாட்டில் உண்டோ?" என்கிறாள்: கருவி வானம் கார்சிறந்து ஆர்ப்பப் பருவம் செய்தன பைங்கொடி முல்லை பல்லான் கோவலர் படலைக் கூட்டும் அன்பின் மாலையும் உடைத்தோ அன்பில் பாண அவர்சென்ற நாடே. -- ஐங்குறுநூறு, 476@ @ படலை - தழைமாலை(க்கு) "எல்லோரும் மகிழும்படியான - கோவலரும் மலர் பறித்து மாலை கட்டி மகிழும்படியான - அன்பான மாலைக் காலம், அவர் இல்லாத காரணத்தால் எனக்குமட்டும் துன்பம் தருவதாக இருக்கிறதே. இதை அவர் உணர்ந்தால் உடனே மீள்வாரே" என்று கருதுகிறாள். அதனால்தான் பாணனை அன்பில்லாதவன் எனப் பழித்து, மாலைப் பொழுதை அன்பான பொழுது என்கிறாள். தலைவன் வராதது குறித்துத் தலைவி வருந்திக் கூறிய சொல்லைக் கேட்டதும், பாணன் மறுமொழி கூறமுடியாமல் தன் கடமையைச் செய்ய முற்படுகிறான். உடனே யாழை எடுத்து மெல்லச் செவ்வழிப்பண் இசைத்துக் கடவுளை வாழ்த்துகிறான். அவன் உடம்பில் துயரம் தேங்குகிறது. தலைவன் இருக்கும் இடம் நாடிச் சென்று அவனுக்கு மையைத் தெரிவித்து அழைத்துவர முற்படுகிறான். மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன் செவ்வழி நல்யாழ் இசையினன் பையெனக் கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந்நிறுத்து அவர்திறம் செல்வேன். -- அகநானூறு, 14@@ @@ செல்லேன் - மாட்டேன். செவ்வழி - ஒரு பண். இசையினன் - இசைத்து, இசைஎழுப்பி. பையுள் - துன்பம். அவர்திறம் - அவரிடம். அவன் தூதாகச் சென்று தலைவனுக்கு உரைப்பது நல்ல முயற்சியே என்று தலைவி அன்புடன் அவனுடைய அறிவைப் பாராட்டுகிறாள். தோழியைப் பார்த்து, "இந்தப் பாணன், வாடிய என் தோளையும் மாவடி போன்ற அழகை இழந்த என் கண்ணையும் நோக்கி எனக்காக வருந்தினான். இவன் நம் காதலரின் சார்பானவன் அல்லன்; அவரைப் போல் அன்பு இல்லாதவன் அல்லன்; நம்மிடம் பேரன்பு உடையவனாக இருக்கிறான்" என்று கூறுகிறாள்: சென்றவர்த் தருகுவல் என்னும் நன்றால் அம்ம பாணனது அறிவே. - ஐங்குறுநூறு, 474. தொடிநிலை கலங்க வாடிய தோளும் வடிநலன் இழந்தஎன் கண்ணும் நோக்கிப் பெரிதுபுலம் பினனே சீரியாழ்ப் பாணன் எம்வெங் காதலொடு பிரிந்தோர் தம்மோன் போலான் பேரன் பினனே. - ஐங்குறுநூறு, 475. அவர்த் தருகுவன் - அவரை அழைத்து வருவேன். புலம்பினன் - வருந்தினான். சீறியாழ் - சிறிய யாழ். பாணனை இவ்வாறு பாராட்டிய போதிலும், அவனும் அந்நாட்டிற்குச் சென்ற பிறகு தன்னை மறந்துவிடுவானோ என்று ஐயுற்றவள்போல் கூறுகிறாள்; "பலரும் புகழும் சிறப்பு உடைய தலைவனை நாடிச் செல்ல முற்படுகின்றாயானால், ஒன்று சொல்வேன், கேள். எனக்கு இத்தகைய துன்பம் ஏற்படச் செய்த அந்தப் பொய்யர்போல் நீயும் அங்குச் சென்ற பிறகு என்னை மறந்துவிடாதே." பலர்புகழ் சிறப்பின்நும் குரிசில் உள்ளிச் செலவுநீ நயந்தனை ஆயின் மன்ற இன்னா அரும்படர் எம்வயின் செய்த பொய்வ லாளர் போலக் கைவல் பாண! எம்மறவா தீமே. -- ஐங்குறுநூறு. 473# # குரிசில் - தலைவன். செலவு - செல்லுதல். நயந்தனை - விரும்பினாய். எம்வயின் - எமக்கு. இனி, தலைவன் பாசறையில் (போர்க்களத்தை அடுத்துத் தங்குமிடத்தில்) கார்காலத்தின் வருகையைக் கண்டு என்ன உணர்கிறான் என்று காணவேண்டும். அவன் போர்க் கடமைகளில் மூழ்கித் தலைவியை மறக்கவில்லை. கார்காலத்தைக் கண்டு, தான் திரும்பிவருவதாகக் கூறிய சொல்லை நினைந்து வருந்துகிறான். "விண் முழுதும் மறையும்படியாகப் பரவி மேகம் ஓயாமல் பெருமழை பெய்கிறது. வேந்தனும் கொடிய பகையோடு மாறுபட்டு, வேல் மினனும் பாசறையில் வென்று புகழ்பெறுவதையே விரும்பியவனாய் எப்போதும் உறங்காமல் விழித்திருக்கிறான். போர் செய்வதும் நம் கடமையாக உள்ளது. (சொன்ன சொல் பிறழாமல் கார்காலத்தில் திரும்பிச் செலவ்வதும் கடமையாக உள்ளது. ஆனால் திரும்ப முடியவில்லை). த்னிடம் காதல் கொண்டவன் என்று என்னை நம்பி, நான் அறிவித்த குறிப்பையும் நம்பி, எனக்காக் காத்திருக்கும் தலைவி என்ன நிலையில் இருக்கிறாளோ? கோவலர் ஒரு பக்கம் குழல் ஊதஈ மற்றொருபால் யாழிசைத்துச் செவ்வழிப்பண் பாட, காளையின் கழுத்தில் கட்டிய தெளிந்தமணி உயிரை வருத்துவதாய் ஒலிக்கும் ஒலியை இந்தத மழைக்காலத்து மாலைப்பொழுதில் அவள் தனியாக இருந்து கேட்பாளோ? கேட்டு என்ன?" என்று துன்புறுகிறான் : அகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப் பகலுடன் கரந்த பல்கதிர் வானம் ..... பெரும்பெயல் அழிதுளி பொழிதல் ஆனாது ; வேந்தனும் வெம்பகை முரணி ஏந்திலை விடுகதிர் நெடுவேல் இமைக்கும் பாசறை அடுபுகழ் மேவலொடு கண்படை இலனே ; அமரும் நம்வயி னதுவே ; நமர்என நம்அறிவு தெளிந்த பொம்மல் ஓதி யாங்கா குவள்கொல் தானே தெண்மணி ஆபெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇப் பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப ஆருயிர் அணங்கும் தெள்ளிசை மாரி மாலையும் தமியள் கேட்டே. -- அகநானூறு. 214## ## புதைய - மூட. பாஅய்; - பரவி. அழிதுளி - மிக்க மழைத்துளி. ஆனாது - ஓயாது கண்படையிலன் - உறக்கமில்லை. நம்வயினது - நம்மிடத்தது. பொம்மல் - பெரிய. ஓதி - கூந்தல். பையுள் - துன்பம். ஆம்பல் - ஒருவகைக் குழல். தலைவியைத் தனியே விட்டு விட்டு வந்ததற்காகத் தன் நெஞ்சத்தை நோகின்றான். "சிறந்த நம் கதலி தனிமைத் துயரம் உறும்படியாக அவளை அங்கே விட்டுவிட்டு நீ இங்கே பாசறைக்கு வந்துவிட்டாயே. இப்போது ஏறு தழுவியவாறே நாகு ஊர் நோக்கித் திரும்பும் மாலைக் காலத்தை நினைக்குந்தோறும் கலங்கும் நெஞ்சமே! அன்று நீ தான் என்னையும் பாசறைக்கு விரைந்து வருமாறு செய்தாய்" என்கிறான் : புகழ்நூல் சிறப்பின் காதலி புலம்பத் துறந்துவந் தனையே அருந்தொழில் கட்டூர் ; நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை உள்ளுதொறும் கலிழும் நெஞ்சம்! வல்லே எம்மையும் வரவிழைத் தனையே. -- ஐங்குறுநூறு. 445@ @ கட்டூர் - பாசறை. நாகு - பசு. பெயர்காலை - திரும்பும்காலம். கலிழும் - கலங்கும். வல்லே - விரைவில். "முரசு காலையில் ஒலிக்க, கடுஞ்சினம் உடைய வேந்தன் போர்த்தொழிலை ஏற்றுக் கொண்டான். மென்மையான பள்ளங்களில் முல்லை மலர, கார்காலம் மிக்க மழை பெய்யத் தொடங்கிவிட்டது. காதலியை நினைக்குந்தோறும் உறக்கம் இல்லாமல் கலங்கும் நிலையை நான் ஏற்றுக்கொண்டேன்." தழங்குரல் முரசம் காலை இயம்பக் கடுஞ்சின வேந்தன் தொழில்எதிர்ந் தனனே ; மெல்லவல் மருங்கின் முல்லை பூப்பப் பொங்குபெயல் கனைதுளி கார்எதிர்ந் தன்றே ; அஞ்சி லோதியை உள்ளுதொறும் துஞ்சாது அலமரல் நாம்எதிர்ந் தனமே. -- ஐங்குறுநூறு. 448%% %% தழங்கு - ஒலிக்கும். எதிர்ந்தனன் - ஏற்றான். அவல் - பள்ளம். கனைதுளி - மிக்க துளிகள். எதிர்ந்தன்று - ஏற்றது. அஞ்சிலோதி - அம் சில் ஓதி - அழகிய சிலவாகிய கூந்தல். "மிகத் தொலைவில் உள்ளது என்று கவலைப்படாமல் நல்ல தேரில் ஏறிச்சென்று, இளம்பிறை போன்ற அழகிய ஒளி பொருந்திய அவளுடைய நெற்றியின் அழகைக் காண்பேன்; காணவேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், வானளாவிய பல அரண்களை வென்று கைப்பற்றிய வேந்தன் போர்த்தொழிலை நிறுத்தவில்லையே. நிறுத்தினால் சென்று காண்பனே." நனிசேய்த்து என்னாது நல்லதேர் ஏறிச்சென்று இலங்கு நிலவின் இளம்பிளை போலக் காண்குவெம் தில்லஅவள் கவின்பெறு சுடர்நுதல் விண்ணுயர் அரண்பல வெளவிய மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே. -- ஐங்குறுநூறு. 443% % சேய்த்து - தொலைவில் உள்ளது. காண்குவெம் - காண்போம். தலைவி தன்னை நினைந்து எவ்வெவ்வாறு வருந்துகிறாளோ என எண்ணும் தலைவன், அவள் தன்னை நொந்து வெறுக்கவும் கூடும் என்று வருந்துகிறான். "முல்லைநிலம் அழகு பெறுதற்குக் காரணமான கார்காலத்தில் வேந்தனுடைய பாசறையில் போர்க்கடமை மேற்கொண்டு வேற்று நாட்டில் தங்கியுள்ள தலைவர் பெரிதும் அறம் உடையவர் அல்லர்; நம்மிடம் அருள் இல்லாதவர் அவர்" என்று அவள் என்னை நொந்து வெறுக்கின்றாளோ? அவளுக்காக நான் படும் துன்பம் அவளுக்குத் தெரியாது. ஆகையால் என்னை நோவாள் போலும்" என்கிறான். புலன்அணி கொண்ட கார்எதிர் காலை ஏந்துகோட் டியானை வேந்தன் பாசறை வினையொடு வேறுபுலத்து அல்கி நன்றும் அறவர் அல்லர்நம் அருளா தோர்என நம்நோய் தன்வயின் அறியாள் எம்நொந்து புலக்குங்கொல் மாஅ யோளே. -- அகநானூறு. 304%% %% புலன் - நிலம். காலை - காலம். எதிர் - ஏற்ற. அல்கி - தங்கி. கடமை இவ்வாறு தலைவன் பலவாறு எண்ணுவதும் கார்காலம் தொடங்கிய பிறகே அல்லாமல், அதற்கு முன்னர் அன்று. கார்காலம் வந்ததைக் கண்ட பிறகும் பலவாறு நொந்து, செய்வது அறியாமல் திகைப்பானே அல்லாமல் வருந்திச் சோர்வுறமாட்டான். நாட்டின் கடமையாக மேற்கொண்ட போரத்தொழில் உள்ளபோது சோர்வுறுவது இழுக்கு ஆகும். கார்காலத்தில் தலைவி தலைவன் வருகையை எதிர்நோக்கி ஏமாந்த செய்தி பாசறையில் இருந்த தலைவனுக்கு எட்டியது. அவள் வருந்திக் கூறிய செய்தியை அங்கு வந்தவர்கள் அவனுக்கு உரைத்தார்கள். "அவள் சொல்லியனுப்பிய சொற்கள் அழகாக உள்ளன. இடித்து மழைபெய்யும் கார்காலத்தில் அவள் சோர்வுறும்படியாகப் பிரிந்திருக்க நேர்கிறது. யான் என்ன செய்வேன்? மேற்கொண்ட போர் இன்னும் முடியவில்லையே. இந்த நிலைமை எனக்கு மிக்க துன்பம் தருவதாக உள்ளது. யான் உறும் துயரத்தை அவள் அறிந்தால் நன்மையாக இருக்குமே." என்று வருந்துகிறான்: ஐய ஆயின செய்யோள் கிளவி கார்நாள் உருமொடு கையறப் பிரிந்தென நோய் நன்கு செய்தன்று எமக்கே யாம்உறு துயரம்அவள் அறியினே நன்றே. -- ஐங்குறுநூறு && && ஐய - அழகியவை. கிளவி - சொற்கள். உரும் - இடி. கையற - செயலற்றுச் சோருமாறு. பிரிந்தென - பிரிய. செய்தன்று - செய்தது. போர் முடியும் தறுவாயில் பாசறைக்குச் சென்று சேர்ந்த பாணன் வீட்டுச் செய்தியைத் தெரிவிக்கிறான். அதுகேட்டும் வாளா இருந்த தலைவனை அன்பற்றவன் எனப் பாணன் பழிக்கிறான். தான் தலைவனுக்குப் பாணனாக இருந்து தொண்டு செய்யும் நிலைமையையும் வெறுத்துக் கூறுகிறான். "ஐய, இதுமுதல் யான் உனக்குப் பாணன் அல்லேன் ; நீயும் எனக்குத் தலைவன் அல்லை. உன்னையே விரும்பி எதிர்நோக்கும் என் காதலி, வீட்டில் தனித்து வருந்திக் கண்ணீர் சொரிகிறாள். இந்தத் துன்பத்தைக் கேட்டறிந்தும் அவளிடம் இரக்கம் கொள்ளாமல், அவளுடைய துயரத்தைத் தீர்க்க முயலாமல் இருக்கிறாயே" என்கிறான் : நினக்குயாம் பாணரும் அல்லேம் ; எமக்கு நீயும் குருசிலை அல்லை மாதோ ; நின்வெங் காதலி தன்மனைப் புலம்பி ஈரிதழ் உண்கண் உகுத்த பூசல்கேட்டும் அருளா தோயே. -- ஐங்குறுநூறு. 480� � வெம் - விரும்பும். புலம்பி தனித்து வருந்தி. அப்போதுதான் தலைவன் தான் அமைதியாய் இருந்த காரணத்தைத் தெரிவிக்கிறான். வந்த கடமை பெரும்பாலும் நிறைவேறிவிட்டது என்றும், இன்னும் சில நாட்களில் விரைந்து திரும்பமுடியும் என்றும், அதற்குமுன் செய்யத் தக்கது ஒன்றும் இல்லையே என்றும் எண்ணியதாலேயே அவன் சிறிது நேரம் வாளா இருக்கிறான். பிறகு பாணனை நோக்கி, "பாண! நீ விரைந்து திரும்புக ; மலர்போன்ற கண்களில் பசலை படர, மிக்க துயரத்தோடு வருந்தும் என் காதலியின் சோர்ந்த மனத்துக்குத் துணையாக வீட்டில் இரு. அங்குச் சென்று சிறிது நேரம் தங்கியிருந்தால் போதும்; எம் தேர் வருவதைக் காண்பாய்" என்று தான் புறப்பட்டு வரப்போவதைச் சொல்லியனுப்புகிறான்: பனிமலர் நெடுங்கண் பசலை பாயத் துனிமலி துயரமொடு அரும்படர் உழப்போள் கையறு நெஞ்சிற்கு உசாஅத் துணையாகச் சிறுவரைத் தங்குவை ஆயின் காண்குவை மன்னால் பாணஎம் தேரே. * -- ஐங்குறுநூறு 477�� �� பாய - பரவ. துனிமலி - துன்பம் மிகுந்த. படர் - நினைந்து வருந்தல். உசாஅத்துணை - சூழ்ந்து தேற்றும் துணை. சிறு வரை - சிறிதுநேரம். பாணன் விடைபெற்றுச் செல்வதற்குமுன், தன் காதலி நொந்து கூறியனுப்பிய சொற்களை விரிவாகக் கேட்டறிய விரும்புகின்றது தலைவனுடைய நெஞ்சம். "பாண! என் காதலி, காலம் நீட்டித்தேன் என்று என் கொடுமையை எடுத்துச் சொல்லியிருப்பாள்; வாடித் துன்புற்று மெலிந்து, வேறுபட எண்ணிக் கலங்கி, அவள் சொன்ன சொல்லை எனக்குக் கூறுக" என்கிறான். "நீ சொல்லுந்தோறும் அவளுடைய சொற்கள் எனக்கு இனியனவாய் உள்ளன; ஆதலின் சொல்லுக" என்று கேட்கிறான்: நீடினம் என்று கொடுமை தூற்றி வாடிய நுதலள் ஆகிப் பிறிதுநினைந்து யாம்வெங் காதலி நோய்மிகச் சாஅய்ச் சொல்லியது உரைமதி நீயே முல்லை நல்யாழ்ப் பாணமற்று எமக்கே. சொல்லுமதி பாண சொல்லுதோறு இனிய. -- ஐங்குறுநூறு 478+ + நீடினம் - காலம் நீட்டித்தோம். நுதலள் - நெற்றி உடையாள். சாஅய் - மெலிந்து. மீளும் வேட்கை போர் முடிந்த உடனே தலைவனுடைய நெஞ்சம், வீட்டிலிருந்து காதலியுடன் வாழும் வாழ்க்கையை விழைகிறது. "காதலியுடன் வாழ்ந்து கழிந்த நாட்களே இவ்வுலகத்தில் பயனுடன் வாழ்ந்த நாட்கள். மற்றவை எல்லாம் வீணில் கழிந்த நாட்கள், பதர் போன்ற பயனில்லாத நாட்கள்" என்கிறான்: எல்லாம் எவனோ பதடி வைகல்... அரிவை தோளணைத் துஞ்சிக் கழிந்த நாள்இவண் வாழும் நாளே. -- ஐங்குறுநூறு, 479++ ++ எவனோ - என்னவோ. பதடிவைகல் - பதரான நாட்கள் இவண் - இவ்வுலகில். தேர்ப்பாகனைப் பார்த்துத் தேர் பூட்டுமாறு ஏவுகின்றான். "பாக! பாணன் தூதாக வந்து உரைத்தது அறியாயோ? சென்ற நாடு அவருக்கு இனிதாக உள்ளதோ என்று சொல்லிக் கண்கலங்குகிறாளாம் என் காதலி. பாணன் வந்து இதை உரைத்தான். நாம் மேற்கொண்ட கடமையும் முடிந்தது. ஆகலின் விரைந்து குதிரைகளைப் பூட்டித் தேரைச் செலுத்துக" என்கிறான்: வரினும் வாரார் ஆயினும் ஆண்டுஅவர்க்கு இனிதுகொல் வாழி தோழி எனத்தன் பல்லிதழ் மழைக்கண் நல்லகம் சிவப்ப அருந்துயர் உடையள் இவள்என விரும்பிப் -- குறுந்தொகை, 323@ @ பல்லிதழ் - மலர் - மலர்போன்ற. மழை - குளிர்ந்த. பாணன் வந்தனன் தூதே; நீயும் புல்லார் புரவி வல்விரைந்து பூட்டி நெடுந்தேர் ஊர்மதி வலவ! முடிந்தன்று அம்மநாம் முன்னிய வினையே. -- அகநானூறு, 244. #புல்ஆர் -புல்தின்னும். புரவி - குதிரை. ஊர் - ஊர்க - செலுத்துக. முன்னிய - கருதி மேற்கொண்ட. போர் முடிந்தபின், உடனே வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று தலைவனுடைய மனம் மிக விரைகிறது. "பாக! வேந்தன் வினை முடித்துவிட்டான். பகைவரும் திறை கொடுத்து நட்பரசர் ஆயினர். பகை மிக்கு மாறுபட்டிருந்த இரண்டு சேனையும் ஒன்றுபட்டன என்று முரசுகள் அறைந்தன. நீ தேரைப் பூட்டிப் பின்நிற்காதபடி விரைந்து செலுத்துக" என்கிறான்: வந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும் தம்திறை கொடுத்துத் தமர்ஆ யினரே; முரண்செறிந் திருந்த தானை இரண்டும் ஒன்றென அறைந்தன பணையே; நின்தேர் முன்இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது ஊர்க பாக ஒருவினை கழிய... -- அகநானூறு, 44.+ +முரண் - மாறுபாடு. பணை - முரசு. ஒருவினை - ஒருவி - விட்டு நீங்கி. தான் வெற்றி பெற்ற வீரனாய்த் திரும்புவதை அறிந்தால் தன் காதலி எவ்வாறு மகிழ்வாள் என்று தலைவன் தனக்குள் எண்ணிப் பார்க்கின்றான். தான் குறித்த காலத்தில் திரும்பி வராததை நினைந்து அவள் வருந்திய வருத்தம் எல்லாம் தீர்ந்து பெருமகிழ்ச்சி அடைவாள் என்று பாகனிடம் சொல்கிறான் ; "அவர் வருவதாகக் கூறிய நாட்களும் பொய்ப்பட்டுப் போயின ; என்னால் கலங்காமலும் இருக்க முடியவில்லை ; கார்காலத்தில் மலர்ந்த முல்லைமாலை அணியாமல் என் கூந்தல் வனப்பு இழந்திருத்தலையும் அவர் எண்ணிப் பார்க்கவில்லை ; அருள் இல்லாதவராக மாறினும் மாறுக ; சொன்ன சொல் பிறழ்ந்தோமே என்று அறம் கருதி அஞ்சவும் இல்லையே என்று சில சொற்கள் சொல்லிப் பெரிதும் வருந்தும் நிலையில் இருந்தாலும், போர்க்களத்தில் வெற்றி பெற்ற செய்தியை யாரேனும் சென்று சொல்லக் கேட்டால், என்னுடன் கூடி மகிழ்ந்தவள் போல் உவகை அடைவாள் அலலளோ?" என்கிறான் ; "வருதும் என்ற நாளும் பொய்த்தன ; அரியோர் உண்கண் நீரும் நில்லா ; தண்கார்க்கு ஈன்ற பைங்கொடி முல்லை வைவாய் வான்முகை அவிழ்ந்த கோதை பெய்வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார் ; அருள்கண் மாறலோ மாறுக ; அந்தில் அறன்அஞ் சலரே ஆயிழை நமர்" எனச் சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும் பனிபடு நறுந்தார் குழைய நம்மொடு துனிதீர் முயக்கம் பெற்றோள் போல உவக்குவள் வாழிய நெஞ்சே ... அமர்ஓர்த்து அட்ட செல்வம் தமர்விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே. -- அகநானூறு. 144& & அரி - செவ்வரி. வை- கூரிய. வான் - வெண்ணிறமான. அவிழ்ந்த - மலர்ந்த. கதுப்பு - கூந்தல். உவக்குள் - மகிழ்வாள். அட்ட - வென்ற. தான் உடனே ஊர்க்குத் திரும்பிச் செல்லாவிட்டாலும், இந்த வெற்றிச் செய்தியை யாரேனும் விரைந்து சென்று அவளிடம் சொன்னால் போதும் ; அவள் பெருமகிழ்ச்சி அடைவாள் ; தனிமைத் துயரத்தை அடியோடு மறப்பாள் என்று தலைவன் கருதுகிறான். நாட்டுக்காக ஏற்றுக்கொண்ட கடமையில் தலைவனுக்கு மட்டும் பற்றும் ஆர்வமும் இருப்பதாகக் கொள்ளலாகாது : தலைவிக்கும் அத்தகைய நாட்டுப் பற்றும் ஆர்வமும் இருத்தலால்தான், அவன் பிரியும்போது அவள் தயங்காமல் விடை கொடுத்து அனுப்பினாள். அதனால் தான் தலைவன் வராவிடினும் அவன் வென்ற செய்தி வரினும் மகிழ்வாள் என்று கூறப்படுகிறது. கற்பனை பழங்காலத்துத் தமிழ் மக்களுக்கும் பலவகை நம்பிக்கைகள் இருந்தன. பல்லி சொல்லுக்குப் பயன் தேர்தல், புள் (சகுனம்) பார்த்தல் முதலியன அத்தகையன. தலைவியின் உள்ளம் அவ்வகையில் நல்ல குறிகளை அறிந்தாலும் மகிழுமே என்று போர் முடித்த வீரன் எண்ணுகிறான். தன்னுடைய வெற்றிச் செய்தியையும் வருகையையும் தன் காதலியிடம் சென்று உரைக்கும் தூதர் இல்லை எனினும், வீட்டில் உள்ள பல்லியாவது சொல்லி வருகையைப் பற்றி நம்பிக்கை அளித்து அவளுடைய துயரத்தைத் தீர்க்காதா என ஏங்குகிறான். "நம் கடமை முடிந்தது. நம் வருகை பற்றி நினைந்து கலங்கும் காதலியின் துன்பம் தீரும்படியாக, ஊரில் உள்ள நம் பெரிய வீட்டின் நெடுஞ்சுவரில் பல்லியாவது சொல்லுமோ?" என்று எண்ணுகிறான்: முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல் வருவம் என்னும் பருவரல் தீரப் படுங்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி ....... சிறுகுடிப் பாக்கத்துஎம் பெருநக ரானே. -- நற்றிணை. 169� � முன்னியது - கருதிய கடமை. நன்னுதல் - அழகிய நெற்றியை உடைய தலைவி! பருவரல் - துன்பம். படுங்கொல் - படுமோ - ஒலிக்குமோ. நகரானே - வீட்டிலே. தன் வருகையைப் புள் என்னும் சகுனத்தின் வாயிலாகவாவது தலைவி அறிந்துகொண்டிருப்பாளா, அறிந்தால் மகிழ்வாளே என்று எண்ணுகிறது அவனுடைய எளிய நெஞ்சம். அதே சமயத்தில், தன் குழந்தையாகிய மகனுக்கு எவ்வெவற்றையோ காட்டிப் பொய் சொல்லித் தேற்றிப் பொழுதுபோக்கிக் கொண்டிருப்பாள் என்று அவளுடைய அன்பான வாழ்க்கைநிலையையும் நினைத்துப் பார்க்கிறான் : ........ ஈண்டுநம் வரவினைப் புள்அறி வுறீஇயின கொல்லோ தெள்ளிதின் காதல் கெழுமிய நலத்தள் ஏதில் புதல்வற் காட்டிப் பொய்க்கும் திதலை அல்குல் தேமொழி யாட்கே. -- நற்றிணை. 161��. �� புள் - பறவை- சகுனம். அறிவுறீஇயின கொல் - அறிவித்தனவோ. தெள்ளிதின் - தெளிவாக. திதலை - தேமல். அன்பான காட்சிகள் தலைவன் தேர் ஏறிச் செல்கிறான். செல்லும் வழியில் ஆணும் பெண்ணுமாய் விலங்குகளும் பறவைகளும் அன்பாக வாழும் காட்சிகளைக் காண்கிறான். அவற்றைக் காணும்போதெல்லாம் அவன்நெஞ்சம் குழைகிறது. நாம் நம் அன்புவாழ்க்கையை மறந்து காதலி வருந்துமாறு பிரிந்திருந்தோமே என்று உருகுகிறான். இரலை ஆண்மான் ஒன்று தன் துணைணையும் குட்டியையும் அன்புடன் கூவி அழைத்துத் தேடுகிறது. அவைகள் எதையோ கண்டு மருண்டு எங்கோ ஓடிவிட்டன. அவற்றை அன்பு நெஞ்சத்தோடு அகவித் தேடுகின்ற ஆண்மானைப் பாகனுக்குக் காட்டி, "உன் தேர் விரைந்து செல்வதாக" என்கிறான் : ........வல்விரைந்து செல்க பாகநின் தேரே உவக்காண் கழிப்பெயர் களரின் போகிய மடமான் விழிக்கட் பேதையொடு இனன்இரிந் தோடக் காமர் நெஞ்சமொடு அகவாத் தேடூஉ நின்ற இரலை ஏறே. -- நற்றிணை. 242@ @ வல் விரைந்து - மிகவிரைந்து. உவக் காண் - அதோ பார். பேதை - பெண்மான். இரிந்து - இடம் விட்டு நீங்கி. காமர் - விருப்பம். அகவா - அகவி - கூவி அழைத்து. தேடூஉ நின்ற - தேடுகின்ற. இரலை ஏறு - ஆண் இரலைமான். மற்றோரிடத்தில், அழகான காட்டுக்கோழி தன் பேடையோடு திரிவதைக் காண்கிறான். மழை நீர் ஓடிய அகன்ற காட்டு வழியில் உலராத ஈரமணலைக் கிளறுகிறது அந்தச் சேவல். அதில் இரை கிடைக்க, அதைப் பற்றிக் கொண்டு பெருமிதத்தோடு தன் பேடையை நோக்குகிறது. பேடைக்கு நல்ல உணவு தேடிக்கொடுத்து மகிழும் மகிழ்ச்சி, அது பேடையைப் பார்க்கும் பார்வையில் விளங்குவதைக் கண்டான் தலைவன் ; அதைப் பாகனுக்குக் காட்டுகிறான்: "பாக! அதோ அந்தச் சேவலின் பெருந்தகைமையானயைப்பார். அதுதானே வாழ்க்கை? நாம் விரைந்து செல்லவேண்டும். இளையர் விருப்பம்போல் நடந்து மெல்ல வரட்டும். நாம் முன்னே விரைந்து செல்வோம். இதுவரையில் தீண்டாத தாற்றுக்கோலால் இனித் தீண்டித் தேரை விரைந்து செலுத்துக" என்கிறான் : .......... இளையர் வேண்டமர் நடையர் மென்மெல வருக ; தீண்டா வைமுள் தீண்டி நாம்செலற்கு ஏமதி வலவ! தேரே ; உதுக்காண் ........ காமரு தகைய கான வாரணம் பெயல் நீர் போகிய வியல்நெடும் புறவின் புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி நாளிரை சுவர மாட்டித்தன் பேடை நோக்கிய பெருந்தகு நிலையே. -- நற்றிணை. 21# # இளையர் - ஏவலாளர். வேண்டு அமர் - விருப்பமான. வை - கூரிய ஏ - ஏவுக. செலுத்துக. வலவ - பாகனே. உதுக்காண் - அதோ பார். கான வாரணம் - காட்டுக் கோழி. பெயல் - மழை. வியல் - பெரிய. புறவின் - முல்லை நிலத்தில். புலரா - உலராத. கெண்டி - கிளறி. நாள் - இரை - காலையில் கிடைத்த இரை. வழியில் மற்றோரிடத்தில், இரலை ஆண்மான் ஒன்று தன் துணையோடும் குட்டியோடும் இருத்தலைக் காண்கிறான். அது தன் பெண்மான் அறுகம்புல்லின் மெல்லிய கொத்துக்களைத் தின்னுமாறு செய்த பிறகு, தெளிந்த நீர் ஓடும் கானாற்றின் மணல் பரந்த கரையில் தூங்குமாறு செய்கிறது. அதன் பக்கத்தில் மறி (குட்டி)யும் தூங்குகிறது. அவை அசை போட்டுக்கொண்டே தூங்க, ஆண்மான் அவற்றிற்குத் துன்பம் நேராதபடி காவல் புரிகிறது. குடும்பத்தின் தலைமை இப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் அன்றோ என்று தலைவன் வியந்து எண்ணுகிறான். மானின் பெருந்தகைமையையும் தான் கடமையிலிருந்து தவறியதையும் நினைந்து அவனுடைய நெஞ்சம் உடைகிறது. தேர்ப்பாகனை நோக்கி, "வல்லவனே! தேர் செல்லட்டும். காதலி வாழும் வீட்டில் அன்னம் துணையோடு மகிழ்கின்றது. அந்தக் காட்சியை அவள் காண்பாள். தான் வளர்த்த கிளியிடம் சென்று அதைத் தன் முன்கையில் ஏந்திக் கொண்டு அதனோடு மெல்லப் பேசுவாள். "கிளியே! என்னை விட்டுப் பிரிந்து சென்றவரைப் பற்றி என்னிடம் சொல். இன்று வருவார் என்று சொல்" என்று வீட்டிலுள்ள மற்றவர்கள் அறியாதபடி மெல்லப் பேசுவாள். மழலையான இன்சொல் கூறிப் பலமுறை பேசி உருகுவாள். அத்தகைய காதலி இழந்த அழகைத திரும்பப் பெறுமாறு விரைந்து செல்ல வேண்டும். இந்த மான் குடும்பத்தின் வாழ்வைக் கண்டு, ஆண்மானின் பெருந்தகைமையைக் கண்டு என் நெஞ்சம் உடைந்துவிட்டது. உடைந்த நெஞ்சம் திருந்தி இன்புறுமாறு, தேர் மிக விரைந்து செல்லட்டும்" என்கிறான் : இருதிரி மருப்பின் அண்ணல்இரலை செறியிலைப் பதவின் செங்கோல் மென்குரல் மறியாடு மருங்கின் மடப்பிணை அருந்தித் தெள்ளறல் தழீஇய வார்மணல் அடைகரை மெல்கிடு கவுள துஞ்சுபுறம் காக்கும் பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுறச் செல்க தேரே நல்வலம் பெறுந! ......... ........ எகினம் துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில் செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்துஎன இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென மழலை இன்சொல் பயிற்றும் நாணுடை அரிவை மாண்நலம் பெறவே. * -- அகநானூறு. 34## ## இரு - பெரிய, கரிய. அண்ணல் - தலைமை உடைய. அருத்தி - தின்னச் செய்து. அறல் - நீர். மெல்கிடு - அசை போடும். கவுள - கன்னம் உடையனவாய். ஏமுற - இன்பமுற. எகினம் - அன்னம். வரைப்பில் - எல்லையில்- வீட்டில். உரைமோ - சொல்லுக. சென்றிசினோர் திறத்து - பிரிந்து சென்றவரைப் பற்றி. பயிற்றும் - பலமுறை சொல்லும். அரிவை - பெண். தலைவன் இவ்வாறு தலைவியின் நிலையைக் கற்பனை செய்து காணும்போதும், அவளுடைய பண்பாட்டையும் நாட்டுப் பற்றையும விடாமல் நினைக்கிறான். அவள் கிளியோடு பேசித் தலைவனைப் பற்றித் தனக்குச் சொல்லுமாறு கேட்கும்போது, அவனுடைய வருகையைப் பற்றித் தான் கலங்குவதைப் பிறர் அறியாதபடி மெல்லப் பேசுகிறாள் ; அஞ்சிப் பேசுகிறாள். தலைவன் பிரிந்தது நாட்டுக் கடமை பற்றியே ஆதலால், தான் கலங்குவது அறமாகாது என்றும், ஆற்றியிருப்பதே கடமை என்றும், தன் நாட்டுப் பற்றுக்குக் குறை நேரலாகாது என்றும் எண்ணும் உயர்ந்த எண்ணமே அதற்குக் காரணமாகும். அருள் நெஞ்சம் தூய காதல்வாழ்வால் நெஞ்சம் பண்பட்டவர்கள் மற்ற உயிர்களிடத்து இரக்கம் உடையவர்களாக வாழ்வார்கள் என்பதையும் புலவர்கள் முல்லைத்திணைப் பாட்டுக்களில் எடுத்துரைக்கிறார்கள். தலைவன் தன் ஊர்க்குச் செல்லும்போது வழியில் காணும் காட்சிகளால் அவன் நெஞ்சம் குழைவதாகவும், இன்பமாய் வாழும் உயிரினங்களுக்கு இடையூறு செய்யாமல் தேரைச் செலுத்துவதாகவும் முல்லைத்திணைப் பாட்டுக்கள் விளக்குகின்றன. செல்லும் வழியில் (முல்லை நிலத்து வழியில்) ஆண்மான் ஒன்று தன் துணையோடு கூடி அமைதியாய்க் கிடக்கிறது. பாகன் தேரை விரைந்து செலுத்துகிறான். இவ்வளவு விரைவாகத் தேர் சென்றால், அதன் ஒலியால் மான்களின் அமைதியான இன்ப வாழ்வு கெடுமே என்று தலைவனின் நெஞ்சம் இரக்கத்தோடு எண்ணுகிறது. வாவிச் செல்லுதலில் மிக வல்ல குதிரைகள் இப்போது மெல்ல ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறான். ஆகையால் அவற்றைத் தாற்றுக்கோலால் குத்தித் தூண்டாமல் மெல்லச் செலுத்துமாறு பாகனுக்குக் கூறுகிறான்: வாஅப் பாணி வயங்குதொழில் கலிமாத் தாஅத் தாள்இணை மெல்ல ஒதுங்க இடிமறந்து ஏமதி வலவ!... திரிமருப் பேற்றொடு கணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலை கடுமான் தேர்ஒலி கேட்பின் நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே?* -- அகநானூறு, 134% % வாஅப் பாணி - தாவிச் செல்லும் நடை. கலிமா - செருக்குள்ள குதிரை. தாஅ - தாவுகின்ற. இடி - கோலால் இடித்தல். ஏ - செலுத்துக. கூட்டம் - கூடி இன்புறும் வாழ்வு. மற்றோரிடத்தில் வழியில் மலர் மிகுந்த ஒரு சோலை காணப்படுகிறது. அதில் துணையோடு வாழும் வண்டினங்கள் கூட்டமாக இருத்தலைத் தலைவன் தொலைவிலிருந்தே காண்கிறான். கடிவாளம் நெகிழக் குதிரைகள் ஓடுவதால் தேர் விரைந்து செல்லும்போது மணிகளின் ஓசையால் அந்த வண்டுகளின் இனிய அமைதி கெட்டு அவை சிதறுண்டு மயங்கி வருந்துமே என்று தலைவன் அஞ்சுகிறான். உடனே அவன் தேரில் ஒலிக்கும் மணிகளின் நாக்குகளை அசைந்து ஒலிக்காதபடி கட்டிவிடுகிறான். தேரை மெல்லச் செலுத்துகிறான்: குரங்குளைப் பொலிந்த கொய்சுவல் புரவி நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப் பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்... -- அகநானூறு, 4&& . && குரங்கு - வளைந்த. உளை - தலையாட்டம், தலையில் அணியும் அலங்காரம். கொய் - கத்தரிக்கப்பட்ட. சுவல் - பிடரி. புரவி - குதிரை. வாங்கு - வளைந்த. வள் - கடிவாளம். பரிய - நெகிழ. வதிந்த - தங்கிய. பேதுறல் - மயங்கல், கலங்கல். ஆர்த்த - கட்டிய. மாண்வினை - சிறந்த வேலைப்பாடு உள்ள. வல்லாண்முல்லை என்னும் துறை பற்றிப் புறப்பொருளாகப் பாடிய ஒரு பாட்டிலும் காதலர்கள் இத்தகைய இரக்க உணர்வு மிகுந்தவர்களாக இருத்தல் கூறப்படுகிறது. வேட்டுவன் ஒருவன் வீட்டு முன்றிலில் கொடிகளின் செறிந்த நிழலில்-பந்தர் வேண்டா என்று சொல்லக்கூடியவாறு முஞ்ஞையும் முசுண்டையும் அடர்ந்து பரவிய நிழலில்- நன்றாக உறங்கிவிடுகிறான். அங்கே பார்வைமான் (வேட்டைக்குப் பழக்கிய மான்) கட்டப்பட்டிருக்கிறது. அது பெண்மான். ஆண்மான் ஒன்று அதன் அருகே வந்து விளையாடி மகிழ்ந்திருக்கிறது. அவற்றின் அருகே மான் தோலில் தினை உலர்த்தப்பட்டிருக்கிறது. அதைக் காட்டுக் கோழியும் காடையும் வந்து தின்கின்றன. அவற்றை ஓட்டக் கருதி அங்கே வந்த வேட்டுவன் மனைவி என்ன செய்வது என்று அறியாமல் திகைக்கிறாள். கணவனை எழுப்புவதானால் அவனுடைய உறக்கம் கெடுமே என்றும் அஞ்சுகிறாள். மான்களின் இன்பம் கெடுமே என்றும் அஞ்சுகிறாள். இத்தகைய அன்புணர்வால், பறவைகள் தினை உண்பதைத் தடுக்க அவளால் முடியவில்லை. முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டாப் பலர் தூங்கு நீழல் கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப் பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர் தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே பிணைவயின் தீர்தலும் அஞ்சி யாவதும் இல்வழங் காமையின் கல்லென ஒலித்து மான்அதள் பெய்த உணங்குதினை வல்சி கானக் கோழியோடு இதல்கவர்ந் துண்டென...." -- புறநானூறு. 320 %% %% பம்பி-அடர்ந்து. கனை துயில்-ஆழ்ந்த உறக்கம். மடிந் தென-சோர்ந்திருக்கும்போது. பார்வை-புதிய விலங்குகளைப் பிடிப்பதற்கு உதவும் பழைய விலங்கு. மான் அதள்-மான் தோல். உணங்கு-உலரும். வல்சி-உணவு. கானக்கோழி-காட்டுக் கோழி. இதல்-கவுதாரி என்னும் பறவை. இத்தகைய அருள்நெஞ்சம் இயல்பாக இருப்பதனாலேயே, தலைவன் விரைந்து ஊர்க்குத் திரும்பித் தன் காதலியைக் காணும் வேட்கை ஒரு பக்கம் இருந்தபோதிலும், அன்பாக வாழும் உயிர்களின் இன்பத்தைக் குலைக்க அஞ்சுகிறான். விரைந்து செல்லல் தேர் விரைந்து செல்கிறது. ஊரை நெருங்க நெருங்கப் பொழுது போகத் தொடங்குகிறது; இருள் சூழ்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மாலைப்பொழுது வர வர, தலைவி தன் காதலனுடைய வரவை எதிர்நோக்கி ஏங்கிக்கொண்டிருப்பது வழக்கமாகிவிட்டது. நாள்தோறும் எதிர்பார்த்து ஏமாந்து ஏமாந்து இருந்த நம்பிக்கை தளர்ந்துவருகிறது. இதை எண்ணிப் பார்க்கிறான் தேரில் விரைந்து செல்லும் தலைவன். "என் காதலி தன் தோழியைப் பார்த்து, உயிர்த்துணைவர் இன்றாவது வருவாரா என்று கேட்பாள். தன் உடல் மெலிவால் கழன்றுபோகும் வளையலைக் கழலாதவாறு செறித்துக்கொண்டு, அகன்ற வீட்டிலிருந்து பலமுறை வெளியே நோக்குவாள்; நோக்கி நோக்கி வருந்துவாள், பாவம்" என்கிறான். "பொழுது போகிறது; இருள் சூழ்ந்து வருகிறது. பாக! விரைந்து செல்க" என்கிறான். செல்க பாக! எல்லின்று பொழுதே... வருங்கொல் தோழிநம் இன்னுயிர்த் துணைஎனச் சில்கோல் எல்வளை ஒடுக்கிப் பல்கால் அருங்கடி வியனகர் நோக்கி வருந்துமால் அளியள் திருந்திழை தானே. -- அகநானூறு, 224 � � எல்லின்று - இரவாயிற்று. வியல்நகர் - பெரிய வீடு. ஆல் - அசை. அளியள் - இரங்கத்தக்கவள். குழந்தை நினைவு போரின் காரணமாகப் பிரிந்து வந்த தலைவன் குழந்தை பெற்றவன். மகனைப் பெற்ற தந்தையாக இருப்பதால்தான், அவன் போர் வந்தபோது வீரனாக வந்து நாட்டுக்கு உதவு மாறு அழைக்கப்பட்டான். அத்தகைய தலைவன் போர் முடித்து விரைந்து ஊர்க்குத் திரும்பும்போது தன் குழந்தையை நினைத்துக்கொள்கிறான். ஊர் நெருங்க நெருங்கக் குழந்தையின் நினைவு மேன்மேலும் மிகுதியாகிறது. அருமைக் குழந்தையோடு தன் காதலி பொழுதுபோக்கும் வகையை எண்ணிப் பார்க்கிறான். தான் விட்டுப் பிரிந்துவந்தபோது நடை பயிலாதிருந்த மகன் இப்போது நடக்கக் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருப்பான் என்றும், அவன் தன் சிறுஅடிகளால் மெல்ல அசைந்து நடக்கும்போது அவனுடைய அணிகலன்கள் வீடெல்லாம் ஒளி வீசும் என்றும், மெல்ல அடி எடுத்து வைக்கும்போது தவறி விழுந்துவிடுவானோ என்று தாய் அஞ்சுவாள் என்றும், அஞ்சி விழாமல் தாங்கிக் கொள்வதற்காகத் தானும் அவனுடன் அசைந்து செல்வாள் என்றும் எண்ணுகிறான். நடந்தது போதும், இனியும் நடந்தால் அருமை மகனுடைய கால் நோகும் என்று தன் மகனை அழைத்துக்கொள்வாள் என்றும், அப்போது அவள் அவனோடு "எங்கள் அப்பா! வந்தருள்க" என்று கொஞ்சுவாள் என்றும் எண்ணுகிறான். உடனே தலைவனுடைய நெஞ்சம், அவள் அவ்வாறு கொஞ்சம் சொற்களை- அழகிய இனிய சொற்களைக்- கேட்கவேண்டுமென்று அவாவுகிறது. அவற்றைக் கேட்கவேண்டுமானால், மகன் உறங்குவதற்குமுன்னே பொழுதோடு செல்ல வேண்டும் என்று பாகனிடம் சொல்கிறான்: செல்கபாகநின் செய்வினை நெடுந்தேர் ; விருந்து விருப்புறூஉம் பெருந்தோள் குறுமகள் மின்னொளிர் அவிர்இழை நன்னகர் விளங்க நடைநாள் செய்த நவிலாச் சீறடிப் பூங்கண் புதல்வன் தூங்குவயின் ஒல்கி வந்தீக எந்தை என்னும் அந்தீங் கிளவி கேட்கம் நாமே. --நற்றிணை. 221 @@ @@ வினை- வேலைப்பாடு உடைய. அவிர் இழை - விளங்கும் அணிகலன்கள். நன்னகர் - அழகிய வீடு. நவிலா - நடந்து பழகாத. சீறடி - சிறு அடி. தூங்குவயின் - தளர்ந்து அசையும் இடத்தில் எல்லாம். ஒல்கி - சாய்ந்து. வந்தீக - வந்தருள்க. அந்தீங்கிளவி - அழகிய இனிய சொல். கேட்கம் - கேட்போம். தலைவன் மனம் இப்பொழுது குழந்தையின் வாழ்க்கையில் வேறாரு நிலையை எண்ணிப பார்க்கிறது. மேல்வானத்தில் பிறை தோன்றி, நிலவொளி சிறிதாகப் பரப்புகிறது. அதைக் கண்டவுடனே, தன் காதலி குழந்தைக்கு நிலாக்காட்டிப் பாலூட்டும் நேரத்திற்கு முன்னமே வீட்டுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று மனம் விரைகிறது. காதலி நிலாவை அழைத்துக் குழந்தையோடு கொஞ்சும் காட்சியைக் கற்பனை செய்து பார்க்கிறான். "என் காதலி நிலாவை அழைத்துக் கொஞ்சுவாள். �நிலா நிலா வா வா� என்று அவள் கொஞ்சும் சொற்கள் இனியமையாக இருக்கும். நெல்லிக்காய் தின்றபின் குடிக்கும் நீரின் சுவையை விட அந்தச் சொற்கள் இனியனவாக இருக்கும். �நிலாவே, என் மகனோடு சேர்ந்து விளையாட எண்ணி வருவாயா? அப்படி வருவாயானால், உனக்குப் பால் தருவேன்� என்று ஒருக்கணித்த கண்ணோடு அவள் தன் விரலால் திரும்பத் திரும்ப அழைப்பாள். இவ்வாறு அவள் தன் மகனுக்குப் பொய் சொல்லி ஏமாற்றும் இனிய காட்சியை உடனே போய்ப் பார்க்க வேண்டுமே" என்று விரும்புகிறான். அதைக் காண்பதற்காக, குழந்தை தூங்குவதற்கு முன்னே நேரத்தோடு போய்ச் சேர வேண்டும் என்று முயல்கிறான். பாகனைத் தூண்டுகிறான் : கடவுக காண்குவம் பாக! .... புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்; நீர்குடி சுவையின் தீவிய மிழற்றி முகிழ்நிலாத் திகழ்தரு மூவாத் திங்கள் பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி வருகுவை ஆயின் தருகுவென் பால்என விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித் திதலை அல்குல்எம் காதலி புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே. -- அகநானூறு. 54� � கடவுக - செலுத்துக. காழ் - விதை, கொட்டை. சுவையின் - சுவை போன்ற. தீவிய - இனியவை. மிழற்றி - கூறி. தாலி - சிறுவர்க்குக் காப்பாகக் கழுத்தில் அணிவது. ஒற்றி - நினைந்து. வருகுவை - வருவாய். தருகுவென் - தருவேன். விலங்கு - ஒருக்கணிப்பான. பாகன் உதவி தலைவன் ஏறி வந்த தேர் திடீரென்று நிற்கிறது. பாகன் அவனைப் பார்த்து, " ஐயா, இறங்குங்கள் " என்கிறான். அதுவரையில் கற்பனையிலேயே மூழ்கிப் பலவாறு எண்ணிக் கொண்டிருந்த தலைவன் திடுக்கிட்டுப் பார்க்கிறான். தான் ஊர்க்குள் வந்துவிட்டிருப்பதையும் வீட்டெதிரே தேர் நிற்பதையும் அறிந்து பாகனுடைய திறமையை வியக்கிறான். "வேந்தன் போர்த் தொழிலை முடித்தவுடன், வேட்கையோடு யான் தேர் ஏறியதை அறிவேனே அல்லாமல், இவ்வளவு விரைவில் எப்படி வந்தோம் என்பதை அறியேன். பாக! வாழிய. முயல்பறழ் (குட்டி) துள்ளும் முல்லைக் காட்டில் வரகு விளைந்துள்ள இந்தச் சிற்றூரில் என் காதலியின் வீட்டெதிரே தேரை நிறுத்தி �இறங்குங்கள்� என்று சொன்ன நின் சொல்லைக் கேட்டு மருண்டு போனேன். வானில் வழங்கும் தன்மை உடைய காற்றையே குதிரைகளாகப் பூட்டினாயோ? அல்லது மனத்தையே குதிரைகளாகப் பூட்டினாயோ? சொல்" என்று பாகனை அன்போடு தன் மார்பில் தழுவிக்கொள்கிறான். நன்றியுணர்வு மிக்கவனாய் அவனை வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறான். தலைவியும் விருந்து பெற்று வரவேற்று மகிழ்கிறாள் : "இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப் புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் ஏறியது அறிந்தன் றல்லது வந்தவாறு நனியறிந் தன்றோ இலனே ; தாஅய் முயற்பறழ் உகளும் முல்லையும் புறவின் கவைக்கதிர் வரகின் சீறூ ராங்கண் மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே ; வான்வழங்கு இயற்கை வளிபூட்டினையோ? உரைமதி வாழியோ வலவ!" எனத்தன் வரைமருள் மார்பின் அளிப்பனன் முயங்கி மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை ; விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே. -- அகநானூறு. 384# # அறிந்தனறல்லது - அறிந்தது அல்லாமல். அறிந்தன்று - அறிந்தது. தாஅய் - பரவி. பறழ் - குட்டி. உகளும் - துள்ளும். கவை- இரண்டாய்ப் பிரிந்த. சீறூர் ஆங்கண் -சிறிய ஊரில். இல்வயின் - இல்லிடத்தே. நிறீஇ - நிறுத்தி. மருண்டிசின் - மருண்டேன். வளி - காற்று. மான் - குதிரை. வரைமருள் - மலை போன்ற. அளிப்பனன் - அளியுடையவனாய். "தேர்ப்பாக! உன் மனம் எவ்வளவு நன்மை கருதியிருக்கிறது! வழி தொலைவானதாக இருந்தாலும் போய்ச் சேராவிட்டால் காதலியின் துன்பம் தீர்க்க மாட்டோம் என்று, நன்மை விரும்பிய மனத்தோடு, முரம்பு உடைபடுமாறு கடந்து, கரம்பு நிலத்திலே புதுவழி ஏற்படுத்தினாய். உன் அறிவு என்னே! இன்று நீ அழைத்துவந்தது தேரில்தானா? துன்பத்தால் வருந்திய என் காதலியை எனக்கு அளித்தாயே " என்று பாகனுக்கு நன்றி கூறுகிறான் : சேயாறு செல்லா மாயின் இடரின்று களைகலம் காமம் பெருந்தோட்கு என்று நன்றுபுரிந்து எண்ணிய மனத்தை ஆகி முரம்புகண் உடைய ஏகிக் கரம்பைப் புதுவழிப்படுத்த மதியுடைவலவோய்! இன்று தந்தனை தேரோ நோயுழந் துறைவியை நல்கலானே. -- குறுந்தொகை. 400## ## சேயாறு - தொலைவான வழி. களைகலம் - களையமாட்டோம். காமம் - காதல் - காதலரின் பிரிவுத் துன்பம். நோய் உழந்து உறைவி - துன்பத்தால் வருந்தி வாழ்பவள் - தலைவி. நல்கலான் - அருள் செய்வதால். வரவேற்பு இவ்வாறன்றி, தலைவன் ஊரை நெருங்குமுன்பே தன் வருகையை ஏவலாளர்வாயிலாகச் சொல்லியனுப்புவதாகவும், தலைவி கவலைதீர்ந்து தன்னைப் புனைந்துகொள்வதாகவும், தலைவனைப் பெருமகிழ்ச்சியோடு வரவேற்பதாகவும் பாட்டு உண்டு. தன் வருகையைக் காதலிக்கு முன்னே அறிவிக்கக் கருதுகிறான் தலைவன். தேரில் உள்ள மணி ஒலியே போதுமே, அதைக் கேட்டுத் தலைவி தெரிந்துகொள்வாளே என்றால், மழை பொழிந்து நீர் நிறைந்த பள்ளங்களில் தவளைக் கூட்டங்களின் ஓசை மிகுதியாகையால், மணி ஒலி கேளாது என எண்ணுகிறான். அதனால் ஏவலாளரை முன்னதாகப் போகச் செய்கிறான். அவர்கள் வீட்டிற்குச் சென்று, வருகையைத் தெரிவிக்கின்றனர். அதைக் கேட்ட தலைவி பலநாளாகப் புனைந்துகொள்ளாத கூந்தலை மாசறத் தூய நீராட்டிச் சில பூக்களும் சூடிக்கொண்டிருக்கிறாள். அந்நிலையில் தலைவனுடைய தேரும் வருகிறது. அவன் தேரைவிட்டு இறங்கி உள்ளே செல்கிறான். அவனைக் கண்டதும் தலைவி, கூந்தல் அவிழ்ந்த நிலையிலே அவ்வாறே வந்து தலைவனைத் தழுவி வரவேற்கிறாள் : ........... பன்னாள் வறத்தொடு வருந்திய உலகுதொழில் கொளீய பழமழை பொழிந்த புதுநீர் அவல நாநவில் பல்கிளை கறங்க மாண்வினை மணிஒலி கோளாள் வாணுதல் அதனால் ஏகுமின் என்ற இளையர் வல்லே இல்புக்கு அறியுநர் ஆகமெல்லென மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇச் சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய அந்நிலை புகுதலின் மெய்வருத் துறாஅ அவிழ்பூ முடியினள் கவைஇய மடமா அரிவை மகிழ்ந்தயர் நிலையே. -- நற்றிணை. 42 % % வறத்தொடு - வறண்ட நிலையால். கொளீஇய - கொள்ள. அல்ல - பள்ளங்களில் உள்ளனவாகிய. கிளை - சுற்றம் (தவளைகள்). வல்லே - விரைவில். மண்ணா - குளிக்காத கழீஇ - கழுவி - தூய்மைப்படுத்தி. கவைஇய - தழுவிய. தன்னை வரவேற்று மகிழ்ந்து துயர்தீர்ந்து இருக்கும் தலைவியை நோக்கித் தலைவன் சில சொல் அன்போடு கூறுகிறான். "வந்த வழி எல்லாம் உன்னைப் போன்ற மயில்கள் ஆட, உன் அழகிய நெற்றியின் மணம்போல் கமழும் முல்லை மலர, உன்னைப் போலவே மான்கள் மருண்டு பார்க்க, அவற்றைக் கண்ட நான் உன்னையே நினைந்தபடி வந்து சேர்ந்தேன். காரைவிட விரைந்து வந்தேன்" என்கிறான் : நின்னே போலும் மஞ்ஞை ஆலநின் நன்னுதல் நாறும் முல்லை மலர நின்னே போலமா மருண்டு நோக்க நின்னே உள்ளி வந்தனென் நன்னுதல் அரிவை! காரினும் விரைந்தே. -- ஐங்குறுநூறு. 492&& && மஞ்ஞை - மயில். ஆல - ஆட. மா - மான். உள்ளி - நினைந்து. தான் பிரிந்திருந்த காலத்தில் தன் காதலிக்குத் துணையாய் இருந்து அவள் துயருற்றபோது வேண்டியன சொல்லி ஆற்றுவித்த தோழிக்கு நன்றி செலுத்துகிறான் தலைவன். அதனைத் தோழி ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கின்றாள். "யான் ஒன்றும் உதவி செய்யமுடியவில்லை. நன்றி எல்லாம் விருந்து வருமாறு கரைந்த காக்கைக்கே உரியது. நள்ளியின் காட்டில் ஆயர்களின் பல பசுக்களும் தந்த நெய்யும், தொண்டி என்னும் ஊர் முழுவதும் விளைந்த வெண்ணெலிலின் சோறும் ஆகிய இவற்றை ஏழு கலத்திலே ஏந்திக் காக்கைக்குத் தந்தாலும் அது செய்த உதவிக்கு மிகச் சிறிய கைம்மாறே ஆகும். காக்கைதான் நீ விருந்தாக வருமாறு கரைந்து உன் காதலியைத் தோற்றியது. அதன் தான் அவள் வாடி மெலிந்த துன்பத்திற்கு மருந்தாய் உரியது" என்கிறாள் : திண்தேர் நள்ளி கானத்து அண்டர் பல்லா பயந்த நெய்யின் தொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு ஏழுகலத்து ஏந்தினும் சிறிதுஎன் தோழி பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே. -- குறுந்தொகை. 210& & அண்டர் - ஆயர், இடையர். செல்லற்கு - துன்பத்திற்கு. பெய்க மழை தலைவன் போர்க் கடமை முடித்து வீட்டுக்குத் திரும்பிய பிறகு மினனியும் முழங்கியும் ஆரவாரத்துடன் மழை பெய்கிறது. இதற்கு முந்திய நாட்களில் பெய்த மழை தலைவியின் உள்ளம் நைந்துருகும்படியாகத் துயர் விளைத்தது. அப்போதெல்லாம் மழையைக் கண்டதும் அவள் கார்காலம் வந்தும் தேர் வரவில்லையே என ஏங்கிக் கலங்கினாள். இப்போது தலைவன் மீண்டு வந்து தன்னுடன் இருப்பதால் அவள் சிறிதும் கலங்கவில்லை; அதற்கு மாறாகப் பெருமகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். இதைக் கண்டு தலைவன் மழையை விளித்துச் சொல்கிறான் : மேற்கொண்ட தொழிலை வெற்றியுடன் முடித்த பெருமித உள்ளத்தோடு இவளுடன் இருந்து மகிழும்பேறு பெற்றேன். ஆகையால், பெருமழையே! இனி நீ மேன்மேலும் ஆரவாரம் செய்து இடித்து இடித்துப் பெய்வாயாக! எங்கும் பரந்த இருள் கெடுமாறு மின்னி, குளிர்ச்சியாக வீழும் மழைத் துளிகளை இனிமையாய்ச் சிதறி, முரசு போல் முறையாகப் பலமுறை இடித்து முழங்கி இனிப் பெய்வாயாக. பெய்து வாழ்வாயாக :" தாழ்இருள் துமிய மின்னித் தண்ணென வீழ்உறை இனிய சிதறி ஊழின் கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப் பெய்கினி வாழியோ பெருவான்! யாமே செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு இவளின் மேவினம் ஆகிக் குவளைக் குறுந்தாள் நாள்மலர் நாறும் நறுமென் கூந்தல் மெல்லணை யேமே. -- குறுந்தொகை. 270%% %% துமிய - துணிய, பிளவுபட்டு ஓட. வீழ் உறை - விரும்பும் மழைத்துளிகள். கடிப்பு - முரசை அடித்து ஒலி எழுப்பும் கருவி. வான் - மேகமே. இரவெல்லாம் ஒலித்து ஊரெல்லாம் குளிரவும் காடெல்லாம் குளிரவும் பெய்தது பெருமழை. பொழுது விடிந்தபின் தலைவன் எங்கும் நீர் பரந்த காட்சியைக் கண்டு அந்த மழையை வாயார வாழ்த்துகிறான் : "படுமலைப் பண் அமைந்த யாழின் நரம்புகள் இசைப்பது போல் இனிது ஒலிக்கும் மழைத் துளிகளோடு, முழவி; கண்போல் இம் மென ஒலிக்கும் ஒலியோடு, காதலியுடன் யான் இனிது வாழும் இந்த நல்ல ஊரிலே பலவகை மலர்களும் உதிரும்படியாக வீசி இரவெல்லாம் பொழிந்து உதவினாய். பெரிய ஆரவாரத்தை உடைய மழையே! நீ உலகிற்கு ஆதாரமாக நிலைத்து நின்று பலர் தொழுமாறு விளங்கிப் பல இடங்களில் நிற்கும் மலைகளின் உச்சிதோறும் பொருந்தி உலவுவாயாக!" உலகிற்கு ஆணியாகப் பலர்தொழப் பலவயின் நிலைஇய குன்றின் கோடுதோறு ஏயினை உரைஇயரோ பெருங்கலி எழிலி! படுமலை நின்ற நல்யாழ் வடிநரம்பு எழீஇ அன்ன உரையினை முழவின் மண்ணார் கண்ணின் இம்மென இமிரும் வணர்ந்தொலி கூந்தல் மாஅ யோளொடு புணர்ந்தினிது நுகர்ந்த சாரல் நல்லூர் விரவுமலர் உதிர வீசி இரவுப்பெயல் பொழிந்த உதவி யோயே. -- ஐங்குறுநூறு 139& & ஆணி - ஆதாரம். நிலைஇய - நிலைபெற்ற. கோடு தோறு - சிகரங்கள் தோறும். ஏயினை - பொருந்தினாய் ஆகி - பொருந்தி. உரைஇயரோ - உலவுக. கலி - ஆரவாரம். படுமலை - ஒரு பண். எழீஇ அன்ன - எழுப்பினாற் போன்ற. மண்ஆர்கண் - மண் பூசிய பக்கம். வணர்ந்து - நுனி சுருண்டு. ஒலி - தழைத்த. மாஅயோள் - மா (மை) நிறத்தாள் - தலைவி. ஒப்பற்ற சிறப்பு இவ்வாறு தலைவன் தன் காதலியோடும் மகனோடும் வீட்டிலிருந்து இனிது வாழும்போது, தலைவியின் தாய் வீட்டார் வந்து கண்டு மகிழ்ந்து திரும்புகின்றனர். செவிலித்தாய் ஒரு முறை வந்து தன் மகளின் இனிய குடும்ப வாழ்க்கையைக் கண்டு மகிழ்ந்து செல்கிறாள். சென்றவள் நற்றாய்க்குத் (தலைவியைப் பெற்ற தாய்க்கு) மகிழ்ச்சியோடு கூறுகிறாள் : "மறி (குட்டி) இடையே இருக்கப்பெற்ற ஆண் மானும் பெண் மானும் போல, மகனைத் தம் இடையே கொண்டு அவர்கள் தோன்றும் காட்சி மிகவும் இனிதாக உள்ளது. அது, கடல் சூழ்ந்த இவ்வுலகிலும் மேலுலகிலும் பெறுதற்கு அரியதாகும்." மறியிடைப் படுத்த மான்பிணை போலப் புதல்வன் நடுவணன் ஆக நன்றும் இனிது மன்றஅவர் கிடக்கை முனிவின்றி நீனிற வியலகம் கவைஇய ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே. -- ஐங்குறுநூறு. 401# # மன்ற- திண்ணமாக. கிடக்கை - கிடந்த நிலைமை. முனிவு - வெறுப்பு. நீல் நிற வியல் அகம் - கடல். கவைஇய - சூழ்ந்த. ஈன் - இங்கு - இவ்வுலகம். பெறலருங்குரைத்து - பெறுவதற்கு அருமை உடையது, பெறமுடியாதது. குரை - அசை. பழந்தமிழ் மக்கள் இசையின்பத்தில் திளைத்து மகிழ்ந்தவர்கள். ஆதலின், செவிலி அந்தக் குடும்பத்தின் இன்ப வாழ்க்கைக்கு உவமையாகப் பாணரின் யாழிசையை எடுத்துரைக்கிறாள் : ................ பாணர் நரம்புளர் முரற்கை போல இனிதால் அம்ம பண்புமா ருடைத்தே.+ ஐங்குறுநூறு. 402+ +முரற்கை - இசை. நரம்பு - யாழ் நரம்பு. ஆர்: அசை. (பண்பும் உடைத்து). "காதலியிடம் உள்ள அன்புபோல், தன் மகனிடத்திலும் அவனுடைய உள்ளம் பேரன்பு கொண்டதாக உள்ளது. பெருஞ் சிறப்பை உடைய தன் தந்தையின் பேரன் (தன் தந்தையின் பெயரைப் பெற்ற தன் மகன்) புன்முறுவலோடு இனிது சிரித்துச் சிறுதேர் (நடைவண்டி) உருட்டும்போது அவன் நடக்கின்ற தளர்நடையைக் கண்டு தலைவ னுடைய உள்ளம் பெருவிருப்புக் கொள்கிறது: " புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும் அமர்ந்த உள்ளம் பெரிதா கின்றே அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன் முறுவலின் இன்னகை பயிற்றிச் சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே. -- ஐங்குறுநூறு. 403++. ++ காதலியின் - காதலியிடத்து அன்புபோல். அமர்ந்த - விரும்பிய. ஆகின்று - ஆயிற்று. தந்தை பெயரன் - தன் தந்தையின் பேரன் -தன் மகன். தாய்வீட்டார் மகிழ்ச்சி செவிலி, தலைவியைத் தன் மகள் என்று குறிப்பிட வில்லை. தான் கண்ட அன்புக் காட்சியில் ஈடுபட்ட உள்ளத்தால், (முல்லைநிலத்) தலைவனுடைய மகனுக்குத் தாய் என்கிறாள். அவள் ஒளி மிக்க குத்துவிளக்கின் செந்நிறச் சுடர்போல் குடும்பத்திற்கு விளக்கு ஆயினள் என்கிறாள் : ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற ... புறவணி நாடன் புதல்வன் தாயே. -- ஐங்குறுநூறு. 405@@ @@ பாண்டில் - ஒருவகை விளக்கு. புறவு அணி - முல்லைநிலம் அழகுபெற்ற. "பாணர்கள் முல்லை நிலத்திற்கு உரிய முல்லைப் பண் பாடுகிறார்கள். ஒளி மிக்க அணிகலன்களையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய நம் மகள் முல்லை மலர்களைச் சூடிக்கொள்கிறாள். தலைவன் தன் மகனோடு விளங்கிப் பாணர் பாடும் முல்லைப் பண்ணைக் கேட்டும், காதலி சூடும் முல்லைமலரின் அழகைக் கண்டும் இனிது இருக்கிறான்." பாணர் முல்லை பாடச் சுடரிழை வாணுதல் அரிவை முல்லை மலைய இனிதுஇருந் தனனே நெடுந்தகை துனிதீர் கொள்கைத்தன் புதல்வனொடுபொலிந்தே. -- ஐங்குறுநூறு. 408# # முல்லை - முல்லைப் பண். வாள்நூதல் அரிவை - ஒளிபொருந்திய நெற்றி உடைய நங்கை - தலைவி. துனிதீர் - வெறுப்பு அற்ற. "மாலையில் முன்றிலில் குறிய கால்களை உடைய கட்டிலில் தன் மனைவி துணையாகப் பக்கத்தே இருக்கிறாள். குழந்தையாகிய தன் மகன் மார்பின்மேல் ஏறி ஊர்ந்து செல்கிறான். இவ்வாறு அமைந்த மகிழ்ச்சி மிக்க இன்பப் பொழுதிற்குப் பாணனுடைய யாழின் மெல்லிய நரம்புகளின் இன்னிசை மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது:" மாலைமுன்றில் குறுங்காற் கட்டில் மனையோள் துணைவி யாகப் புதல்வன் மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப் பொழுதிற்கு ஒத்தன்று மன்னே மென்பிணித்து அம்ம பாணனது யாழே. -- ஐங்குறுநூறு. 410## ## முன்றில் - வீட்டு முற்றத்தில். ஒத்தன்று - ஒத்திருந்தது. பிணித்து - பிணிப்பு (கட்டு) உடையது. அன்புடன் உணவு சமைத்துக் கணவனுக்கு இடுவதையும், அதை அவன் விருப்புடன் உண்பதையும், அவன் மகிழ்வதைக் கண்டு அவள் முகத்தில் முகத்தில் நுட்பமான மகிழ்ச்சி அரும்புவதையும் கண்ட செவிலி அவற்றையும் நற்றாய்க்கு எடுத்துரைக்கிறாள்: "முற்றிய தயிரைக் காந்தள் மலர் போன்ற தன் விரல்களால் பிசைகிறாள் ; உடனே விரலைத் தன் ஆடையில் துடைத்துக்கொண்டு அதைத் துவையாமலே, புளிக்குழம்பு வைத்துத் தாளிக்கிறாள். தாளிக்கும்போது எழும் புகை குவளை மலர் போன்ற மைதீட்டிய கண்களில் மணக்குமாறு சமைக்கிறாள். அவ்வாறு சமைத்த இனிய புளிக்குழம்பு இனிமையாக உள்ளது என்று கணவன் உண்கிறான். அதைக் கண்டு நம் மகளின் முகம் நுட்பமான மகிழ்ச்சி கொள்கிறது :" முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர் இனி துஎனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. -- குறுந்தொகை. 167%. % முளி - முற்றிய. கலிங்கம் - ஆடை. உடீஇ - உடுத்து. குய் - தாளிப்பு. அட்ட - சமைத்த. பாகர் - குழம்பு. நுண்ணிதின் - நுட்பமாக. மகிழ்ந்தன்று - மகிழ்ந்தது. முகன் - முகம். தமிழிலக்கியங்களில் உள்ள முல்லைத்திணைப் பாட்டுக்கள், இவ்வாறு காதலர் இருவர் நடத்தும் இனிய இல்வாழ்க்கையின் சிறந்த ஒரு பகுதியை எடுத்துரைக்கின்றன. முல்லை நிலத்துக் கார்காலமும் மாலைப்பொழுதும் கருப்பொருட் பகுதியும் தேர்ந்த அனுபவம் கொண்டு உணர்ந்து பாடப்படுதலால், முல்லைத்திணைப் பாட்டுக்களில் செயற்கைத் தன்மையோ போலிப் பண்போ சிறிதும் இல்லை. நிலமும் பொழுதும் மரமும் மலரும் புள்ளும் விலங்கும் பிறவும் பின்னணியாக நிற்க, பாட்டின் உயிர்ப்பொருளாக - உரி(மை)ப் பொருளாக - காதலர் இருவரின் நெஞ்சநிலையே விளக்கப்படுதல் இப்பாட்டுக்களின் சிறப்பியல்பாகும். இயற்கையின் உலகமும் மனிதனின் உலகமும் ஆகிய இரண்டுமே கவிஞன் உழைக்கும் களம் என ஷார்ப் என்னும் அறிஞர் கூறியுள்ளார்.+ + The world of Nature and the World of Man are the great fields in which the poet works - J.C. Shairp, Aspects of Poetry, p. 70. இவ்விருவகை உலகமும் ஒன்றி இயைந்த இயைபைச் சங்க காலத்துப் புலவர் தெளிந்து, இத்தகைய பாட்டுக்களில் சொல்லோவியமாகத் தீட்டியுள்ளனர். ஆதலின் இவை தமிழ்மொழிக்குச் சிறப்புற அமைந்த இலக்கியச் செல்வமாக ஒளிர்கின்றன. "முல்லை நிலமே! பொன் போல் மலர்ந்த கொன்றை மலர், நீல மணிபோல் பூத்த காயம்பூ, மலர்ந்த தோன்றி மலர் ஆகியவற்றோடு விளங்கி நல்ல அழகு பெற்றாய். உன்னைக் காண்பதற்காக வருகிறோம் யாம். ஒளிபொருந்திய நெற்றி உடைய காதலியையும் அவளுடைய சிறந்த அழகையும் நாடி நினைந்து வருகிறோம் :" பொன்னென மலர்ந்த கொன்றை மணிஎனத் தேம்படு காயா மலர்ந்த தோன்றியொடு நன்னலம் எய்தினை புறவே! நின்னைக் காணிய வருதும் யாமே வாணுதல் அரிவையொடு ஆய்நலம் படர்ந்தே. -- ஐங்குறுநூறு 420%% %% என - போல. தேம்படு - தேன் பொருந்திய, நல்நலம் - நல்ல அழகு. எய்தினை - பெற்றாய். புறவே - முல்லை நிலமே. காணிய - காண்பதற்காக. ஆய்நிலம் - ஆய்ந்து போற்றப்பட்ட அழகு. படர்ந்து - நினைந்து.
|