Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF >நீதித்திரட்டு (மறைந்து போன பழம் தமிழ் நூல்களில் சில)

 

நீதித்திரட்டு (மறைந்து போன
பழம் தமிழ் நூல்களில் சில)
1. ஆசிரிய மாலை; 2. குண்டலகேசித் திரட்டு
3. பெரும்பொருள் விளக்கம், 4. தகடூர் யாத்திரை (திரட்டு)

nItit tiraTTu: A collection of some
literary works partially lost
 



Acknowledgements:
Preparation, Etext-keying, Proof-reading, TSCII & UTF-8 Webversions N D LogaSundaram & his sister Ms. N D Rani - Chennai Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2009.Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

    Source: நீதித் திரட்டு
    பேரா. ச பாலசுந்தரம் - பதிப்பாசிரியர்
    தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதிமகால் நுலக சங்கம்
    வெளியீட்டு எண் 270 - 1988

    1.ஆசிரிய மாலை

    அறிமுகம்
    காலத்தால் மறைந்து போன பற்பல பழம் தமிழ் நூல்களில், சில பாடல்கள் மடடுமே கிடைத்துள்ளதில் ஒன்று இவ் ஆசிரிய மாலை. இது நீதித்திரட்டு எனும் தொகை நூலில் கண்டது. அத்திரட்டில் தொகுப்பாளர், அறம் பொருள் எனும் பால்சார் பல்வேறு அதிகாரத் தலைப்புகளின் கீழ், பற்பல நூல்களினின்றும் தொகுத்த 1474 பாடல்கள் உள்ளன. அப்பாடல்களிடை மிடைந்து காணப்படும் ஆசிரியமாலைப் பாக்கள் ஈங்கு இருமடி திரட்டாக வகுக்கப்பட்டு, அதனுடன் உரை ஆசிரியர் சிலர் காட்டும் மேற்கோள்களின்றும் கிட்டிய பாக்கள் இணைய, ஓர் குறுநூலாக படைக்கப்படுகின்றன.

    மேலும் சில விளக்கங்களை கீழே காண்க
    நூ.த.லோகசுந்தரமுதலி, மயிலை,சென்னை
    -----------

    நூற்பாக்கள்

    1

    மூஇலை நெடுவேல் ஆதி வானவன்
    இடமருங்(கு) ஒளிக்கும் இமயக் கள்வி
    தனிக்கண் விளங்கும் நுதல்பிறை மேல்ஓர்
    மிகைப்பிறை கதுப்பின் சூடி வளைக்கையின்
    வாள்பிடித்(து) ஆளி ஏறித் தானவர்
    மானக் கடும்பொர் கடந்த குமரி
    மூவா மெல்லடித் திருநிழல்
    வாழி காக்கஇம் மலர்தலை உலகே
          (அறம் 1-கடவுள் வாழ்த்து/உமையவள்-7) 7

    2

    எளி(து)என இகழாது அரி(து)என உரையாது
    நுமக்குநீர் நல்குதிர் ஆயின் மனத்திடை
    நினைப்பினும் பிறக்கும் மொழியினும் வளரும்
    தொழில்படின் சினைவிடூஉப் பயக்கும் உணர்த்தின்
    இவணும் உம்பரும் துணையே அதனால்
    துறைதொறும் துறைதொறும் நோக்கி
    அறம்நிறுத்தி ஆய்மின் அறிந்திசி னோரே
         (அறம் 4-அறன்வலி உறுத்தல்-22) 39

    3

    வரிக்கடை நெடுங்கண் விளங்க மேதக
    மணித்தோடு பெய்து வாள்முகம் திருத்தி
    நால்நிலம் வளைத்த பரவையடு கெழீஇய
    கான்யாற்று வருபுனல் ஆடலும் தேமலர்
    வல்லிப் பந்தர் வண்டுவாழ் ஒருசிறை
    நிலமகள் புணரும் சேக்கையும் மாமுதல்
    மெல்உரி வெண்துகில் உடையும் தொல்வகைப்
    படைஉழா விளையுளில் உணவும் மந்திரத்துச்
    சுடர்முதல் குலமுறை வளர்த்தலும் வரையாது
    வருவிருந்து ஓம்பும் செல்வமும் வரைமுதல்
    காடுகைக் கொள்ளும் உறையுளும் என்(று)இவ்
    எண்வகை மரபின் இசைந்த வாழ்க்கை
    ஐம்பொறிச் சேனை காக்கும் ஆற்றலொடு
    வென்றுவிளங்கு தவத்தினர் அரசியல் பெருமை
    மாக்கடல் உடுத்த வரைப்பின்
    யார்க்(கு)இனி(து) என்(று)அ�(து) அறியுநர்ப் பெறினே
         (அறம் 28-தவம்-15) 279

    4

    அரையது துகிலே மார்பின(து) ஆரம்
    முடியது முருகே நாறும் தொடையல்
    புடையன, பால்வெண் கவரியின் கற்றை
    மேலது,
    மாலை தாழ்ந்த மணிக்கால் தனிக்குடை
    முன்னது, முரசு முழங்கும் தானை
    இந்நிலை இனைய செல்வத்து ஈங்(கு)இவர்
    யாவ ரேயோ தேவர் அல்லர்
    இமைப்பதும் செய்தனர் மாந்தரே என
    மயக்கம் நீங்க களிற்றுமிசை வந்தனர்
    நெருநல் இன்றிஇவர் பசிப்பிணி காய்தலின்
    உணங்கிய துணியும் உடுத்து
    மாசுமீப் போர்த்த யாக்கையடு
    தாமே ஒருசிறை இருந்தனர் மன்னே
         (அறம் 36-செல்வம் நிலையாமை-18) 349

    5

    யாணர் வரவின் மேல்நாள் ஈங்(கு)இவன்
    இளமை செவ்வி நயந்த பேதையர்
    காதல் உண்கண் வருபனி நீங்கி
    இன்னும் துயில்கொண்(டு) இலவே இன்(று)இவன்
    போர்வைப் பாசறை உணங்கிப் பாணர்
    பழந்தலை சீறியாழ் போலக் குரல்அழிந்து
    நரம்பு மடித்(து)யாத்த யாக்கை மூப்(பு)உற
    பதிகெழு மூதூர் மன்றத்துப்
    பொதியில் புறம்சிறைச் சார்ந்தனன் மன்னே
         (அறம் 38-இளமை நிலையாமை-12) 361

    6

    உள்ளது கரக்கும் கள்ள யாக்கை
    மேம்படு குற்றம் மூன்றொடு வழங்கலின்
    உண்டிநல் அரசு தண்டத்தின் வகுத்த
    நோன்பிணி அகப்பட் டிருப்பினும்
    தோன்றுவது முன்னர் காப்பது பின்னே
         (அறம் 38-யாக்கை நிலையாமை-23) 384

    7

    நெருநல் என்பது சென்றது நின்ற
    இன்றும் செல்லா நின்றமுன் சென்று
    வருநாள் கண்டவர் யாரோ அதனால்
    ஒருநாள் அகப்படுத் துடையோர் இன்மையின்
    இல்லது நாடுமின் உள்ளது கொடுமின்
    வாழ்வில் இன்பமும் புணர்மின்
    அ�தான்று
    கீழது நீரகம் புகினும் மேலது
    விசும்பின் பிடர்தலை ஏறினும் புடையது
    நேமி மால்வரைக்(கு) அப்புறம் புகினும்
    கோள்வாய்த்துக் கொட்கும் கூற்றத்து
    வீளிக் கொடுநா விலக்குதற்(கு) அரிதே
         (அறம் 39-பல்வகை நிலையாமை-10) 394

    8

    தற்பாடு பறவை பசிப்பப் பசையற
    நீர்சூல் கொள்ளாது மாறிக் கால்பொரச்
    சீரை வெண்டலைச் சிறுபுன் கொண்மூ
    மழைகரல் ஊன்றா வளவயல் விளையா
    வாய்மையும் சேட்சென்று கரக்கும் தீதுதரப்
    பிறவும் எல்லாம் நெறிமாறு படுமே
    கடும்சினம் கவைஇக் காட்சிக்
    கொடுங்கோல் வேந்தன் காக்கும் நாடே
         (பொருள் 19-கொடுங்கோன்மை-7) 667

    9

    குடிபிறப்(பு) உடுத்துப் பனுவல் சூடி
    விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு காமுற
    வாய்மைவாய் மடுத்து மாந்தித் தீதறு
    நடு(வு)நிலை நெடுநகர் வைகி வைகலும்
    அழுக்கா(று) இன்மை அவாஅ இன்மைஎன
    இருபெரு நிதியமும் ஒருதர மீட்டும்
    தோலா நாவின் மேலோர் பேரவை
    உடன்மரீஇ இருக்கை ஒருநாள் பெறும்எனின்
    பெறுகதில் அம்ம யாமே வரன்முறை
    தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து
    நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது
    நிலைஅழி யாக்கை வாய்ப்பஇம்
    மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே
         (பொருள் 32-அவை அறிதல்-11) 815

    10

    தாமரை வண்கிழங்கு விரவி ஓராங்குக்
    கருமலங்கு மிளிரக் கொழுமுகந்(து) இயக்கிய
    பழஞ்சேற்றுப் பரப்பில் பருமுதல் எடுத்து
    நெடும்கதிர் இறைஞ்ச வாங்கிக் கால்சாய்த்து
    வாளில் துமித்த சூட்டே மாவின்
    சினைகளைந்து பிறக்கிய பேரே எருத்தின்
    கவைஆடி வைத்த உணவே மருதின்
    கொழுநிழல் குவைஇய குப்பையோ(டு) அனைத்தினும்
    மலர்மகிழ்ந்(து) ஊங்க உலகுபுறம் தரூஉம்
    மாவண் சேணாட்(டு) ஊர்தொறும்
    ஏரோர் களவழி வாழிய நெடிதே
    (பொருள் 33-நாடு-19) 834

    11

    சிறுபுனம் சில்என் நெடுவெளி ஆனா
    மரம்பயில் தானத்துப் பரல்புறம் கொண்ட
    அடியர் நெடுநெறிச் செல்வாய் உடையது
    முல்லை வருந்தில் போகிப் புல்அருந்திக்
    கானியாற்றுத் தெள்நீர் பருகாமுன்
    கன்றுபால் அருந்துபுக்(கு) என்றன மாதோ
    முன்பல் அரும்பிய பால்நாறு செவ்வாய்ப்
    புன்தலை மகாஅர்த் தந்த
    கன்றுசூழ் கடிமனை கவைஇய நிரையே
    (பொருள் 64-நிரை கோடல்-10) 1212

    12

    மாமுது தாதை ஏவலின் ஊர்துறந்து
    கான்உறை வாழ்க்கை கலந்த இராமன்
    மாஅ இரலை வேட்டம் போகித்
    தலைமகள் பிரிந்த தனிமையன் தனாது
    சுற்றமும் சேணிடை யதுவே முற்றிய
    நஞ்சுகறை படுத்த பூண்மிடற்(று) இறைவன்
    உலகுபொதி உருவமொடு கோதையைத் தலைநாள்
    வெண்கோட்டுக் குன்றம் எடுத்த மீளி
    வன்தோள் தடக்கை ஊன்ற அன்றோர்
    சொல்முறை மறந்தனம் வாழி
    வில்லும் உண்(டு)அவற்(கு) அந்நாள் ஆங்கே
    (பொருள் 73-எயில் கோடல்-11/1) 1301

    13

    மாதர் கெண்டை வரிப்புறத் தோற்றமும்
    நீலக் குவளை நிறுமும் பாழ்பட
    இலங்கை அகழி முற்றும் ஆக்கிய
    கருங்கால் நெடுங்கழைக் கண்ணும் விளிம்பிழிந்து
    பெருநீர் உகுதல் மாதோ
    குரங்குதொழில் கொண்ட இராமன்
    அலங்கு தடந்தோள் வாள்சுழித்த ஞான்றே
    (பொருள் 73-எயில் கோடல்-11/2) 1301

    14

    இருசுடர் இயங்காப் பெருமூ(து) இலங்கை
    நெடுந்தோள் இராமன் கடந்த ஞான்றை
    எண்கிடை மிடைந்த பைங்கண் சேனையின்
    பச்சை போர்த்த பல்புறத் தண்ணடை
    எச்சார் மருங்கினும் எயில்புறத்(து) இறுத்தலின்
    கடல்சூழ் அரணம் போன்றது
    உடல்சின வேந்தன் முற்றிய ஊரே
    (பொருள் 73-எயில் கோடல்-12) 1302

    15

    மேலது வானத்து மூவா நகரும்
    கீழது நாகர் நாடும் புடையன
    திசை காப்பாளர் தேயக் குறும்பும்
    கொள்ளைச் சாற்றிக் கவர்ந்துமுன் தந்த
    பல்வேறு விழுநிதி எல்லாம் அவ்வழிக்
    கண்ணுதல் வானவன் காதலின் இருந்த
    குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழில்உறத்
    தோலாத் துப்பின் தாள்நிழல் வாழ்க்கை
    வலம்படு மள்ளர்க்கு வீசி இலங்கையில்
    வாடா நொச்சி வகுத்தனன்
    மாலை வெண்குடை அரக்கர் கோவே
    (பொருள் 74-எயில் காத்தல்-10) 1312

    16

    இருபால் சேனையும் நனிமருண்டு நோக்க
    முடு(கு)இயல் பெருவிசை உரவுக்கருங் கொட்பின்
    எண்திசை மருங்கினும் எண்ணிறைந்து தோன்றினும்
    ஒருதனி அநுமன் கைஅகன்று பரப்பிய
    வன்மரம் துணிபட வேறுபல நோன்படை
    வழங்கிய கம்பத் தோள்படை யாக
    ஓச்சிஆங்(கு) அவனும் முன்கையில் அழுத்தலின்
    தனாது வன்தலை உடல்புக்குக் குளிப்பக்
    கரிந்(து)உயிர் போகும் செந்நெறி பெறாமையின்
    பொருகளத்து நின்றன நெடும்சேண் பொழுதே
    (பொருள் 76-தானை மறம்-11) 1338

    17

    பொருபோர்க் - - - - - - னெ
    தமிழ்சிறு கெண்டை இமையத்(து) அமைத்து
    வடதிசை ஆண்ட தென்னவன் கடிகொள
    முனிந்தக் கூற்றத்துப் புருவம் போல
    வாங்கிரும் கொழுங்கடை வளைந்த
    வேம்பின் இலைஅவன் சூடும் பூவே
    (பொருள் 83-புகழ்-28) 1460

    18

    சிறுசெவி யன்னே பெரும்கேள் வியனே
    குறும்கணி யன்னே நெடும்காட் சியனே
    இளையன் ஆயினும் அறிவின்மூத் தனனே
    மகளிர்ஊ டிடினும் பொய்அறி யலனே
    கீழோர் கீழ்மை செய்யினும் தான்தன்
    வாய்மை வழக்கம் மறுத்தல் அஞ்சி
    மேல்நெறி படரும் பேரா ளன்னே
    ஈண்டுநலம் தருதல் வேண்டிப் பாண்டியர்
    பாடுதமிழ் வளர்த்த கூடலின் வடாஅது
    பல்குடித் துன்றக் கன்னியம் பெரும்பதிச்
    சாஅல்பு மேல்மேல் தோன்றிய தாழி
    காதலின் மேவலன் பிறர்பிறர்க் கீந்து
    தானும் உண்டு விருந்(து)உண்டு மிகினே
    (பொருள் 83-புகழ்-29) 1461

    [ஈங்கு பாடல்களின் கடையில் பிறைக் குறியுள்
    காண்பன நீதித் திரட்டார் தான் கொண்ட கருத்தின்
    இனமாகும் தலைப்புகளே. ஆகலின் மூலநூலின்
    (ஆசிரிய மாலை) தாங்கு பொருளும் ஒழுக்கும்
    அல்ல என துணிக]

    19

    ஆள்வினை முடித்த அருந்தவ முனிவன்
    வேள்வி போற்றிய இராமன் அவனொடு
    மிதிலை மூதூர் எய்திய ஞான்றை
    மதிஉடன் பட்ட மடக்கண் சீதை
    கடுவிசை வில்ஞாண் இடிஒலி கேளாக்
    கேட்ட பாம்பின் வாட்டம் எய்தித்
    துயில்எழுந்து மயங்கினள் அதாஅன்று மயிலஎன
    மகிழ் - - - - - - - - -
    (நச்சி.தொல்.அகத்.சூத்.54)

    20

    கடலும் மலையும் நேர்படக் கிடந்த
    மண்ணக வளாகம் நுண்எயில் துகளின்
    நொய்தால் அம்ம தானே இ�(து)எவன்
    குறித்தனன் நெடியான் கொல்லோ மெய்தவ
    வாங்குசிலை இராமன் தம்பி ஆங்(கு)அவன்
    அடிபொறை ஆற்றின் அல்லது
    முடிபொறை ஆற்றலன் படிபொறை குறித்தே
    (நச்சி.தொல்.புறத்.சூத்.76)


    மேற்கண்ட ஆசிரியமாலை பற்றி ஓர் குறு விளக்கம்

    இ�து நச்சினார்க்கினியரின் உரைகளினின்று அறியப்படும் நூல்களில் ஒன்று. புறத்திரட்டு, நீதித் திரட்டு பெருந்தொகை எனவரும் தொகுப்புகளில் காணும் பல பாக்களின் வைப்புமுறை அவற்றின் பாடல்கள் பல இவர்தம் உரைகள் வழியே வந்தன என காட்டாநிற்கின்றன. பெருந்தொகை என காணப்படும் ஓர் தொகுப்பிலும் 'மறைந்துபோன தமிழ் நூல்கள்' கண்ட மயிலை சீனிவேங்கடசாமியார் புறத்திரட்டினின்று காட்டுவனவும் இவையே.

    இந்நூலின் பெயரினின்று இ�து ஓர்வகைப் பா யாப்பினால் யாத்தமை பெறப்படுகின்றது. மாலை எனும் பாவினப்பெயர் பல்வகைப் பொருள்/கருத்து மிடைந்து வரும் பாக்களால் ஆவதால் ஈங்கு அகம் புறம் என இருவகைத் திணையின் பாற்பட்ட பாக்களால் தொடுக்கப்பெற்ற ஓர் நூல் போலும். தலைப்பு, நூலின் பெருமை, தாங்கு கருத்து பற்றி குறித்தில. கிட்டிய ஓர்சில பாடல்களில் 'நாடுமின்' 'கொடுமின்' 'மன்னே' என முன்னிலை விளிகொண்டு பாடப்பட்டிருப்பினும் 'நாலடி' போன்று பற்பல புலவர் தம்மால் பாடப்பெற்று பின் கோர்க்கப்பெற்ற வகைத்தாக தோன்றில. மற்றும் ஆசிரியர் யார் எனவும் காட்டில. கடவுள் வாழ்த்தினில் சிலப்பதிகாரம் போன்று ஆளியின் மீதமர்ந்த சிவனே பெண்பாலாகதோற்றும் வடிவுடைத் தெய்வம் (துர்கை) போற்றப் பெற்றுள்ளதால் அ�தும் அரசகுலம் மற்றும் அரசுசார்ந்தோருக்கே சிறப்பாதலின் அவ்வழி வந்தவர் ஆகலாம் அல்லது புரக்கப்பட்டவராகலாம்.இராமாயணத் தொடர்புடைய சில காட்சிகள் பாடப்பட்டுளதலால் அதை மலைந்து பாடியதும் கூடும். பாடலின் தொன்மையான யாப்பு நடை ஒழுக்கு இவற்றால் ஓர் பழம் புலவரால் பாடப் பட்டமை மட்டும் ஏலும்.

    பாடல்களின் சொல்லிலும் பொருளிலும் காணும் சீர்மைகள் சில

      "எளிதென இகழாது அரிதென உரையாது" (2)
      "இல்லது நாடுமின் உள்ளது கொடுமின்" (7)
      "மழைகரல் ஊன்றா வளவயல் விளையா" (8)
      என வரும் செவிஅறிஉரூஉ வும்
      "எண்வகை மரபின் இசைந்த வாழ்க்கை" (3)

      எனும் தொகுப்பும்

      "சிறுசெவி யன்னே பெரும்கேள் வியனே
      குறும்கணி யன்னே நெடும்காட் சியனே
      இளையன் ஆயினும் அறிவின்மூத் தனனே" (18)

      என வரும் முரண்தொடையும்

      "தாமரை வண்கிழங்கு விரவி ஓராங்குக்
      - - - - - - - - - - - - - - -
      மாவண் சேணாட்டு ஊர்தொறும்" (10)

      என்ற நாட்டு வளமை விளக்கமும்

      "மேலது வானத்து மூவா நகரும்
      கீழது நாகர் நாடும் புடையன" (15)

      "பாடுதமிழ் வளர்த்த கூடலின் வடாஅது
      பல்குடித் துன்றக் கன்னியம் பெரும்பதி"

      எனும் புவிஇயல் குறிப்புகளும் நோக்கத்தக்கன.

    அதான்று, 12, 13, 14, 15, 16, 19
    இவைகளில் இராமயணக் காட்சிகளும்
    "தமிழ்சிறு கெண்டை இமையத் தமைத்து
    வடதிசை ஆண்ட தென்னவன்" (17)
    என வரலாற்றைக் குறித்தலையும் காண்க


    ஆசிரியமாலைப் பாடல்கள் பல்வேறு தொகுப்புகளில் காணும் ஒப்புநோக்கு நிரல்

    மேற்படி

    மயிலையார்

    நீதித் திரட்டு

    பெருந்தொகை

    நச்சி. உரை
    புறத்திரட்டு

    வரிசை #

    வரிசை #

    வரிசை #

    வரிசை #

    வரிசை #

    சூத். #

    1

    1

    7

    113

    2

    2

    39

    225

    ??

    XX

    3

    3

    279

    328

    ??

    XX

    4

    4

    349

    309

    ??

    XX

    5

    5

    361

    302

    ??

    XX

    6

    6

    384

    303

    ??

    XX

    7

    7

    394

    294

    ??

    XX

    8

    8

    667

    350

    ??

    XX

    9

    9

    815

    369

    827

    76

    10

    10

    834

    XX

    ??

    XX

    11

    11

    1212

    XX

    ??

    XX

    12

    13%

    1301/1$

    482/1$

    ??

    XX

    13

    14%

    1301/2$

    482/2$

    ??

    XX

    14

    15%

    1302

    481

    1334

    67

    15

    16%

    1312

    461

    ??

    XX

    16

    17%

    1338

    536

    ??

    XX

    17

    XX

    1460

    XX

    ??

    XX

    18

    12

    1461

    XX

    ??

    XX

    19

    XX

    XX

    688

    ??

    54

    20

    XX

    XX

    747

    ??

    76

    % இவை 'காப்பியங்கள்' தலைப்பின் கீழ் உள்ளன
    $ இவை இரண்டும் ஒரே பாவாக இணைந்துள்ளன
    ----------------------------------------------

    இப்பதிவினில் பயன்பட்ட நூல்கள்
    (1) நீதித் திரட்டு - பேரா. ச பாலசுந்தரம் - பதிப்பாசிரியர், தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதிமகால் நுலக சங்கம், வெளியீட்டு எண் 270 - 1988
    (2) மறைந்துபோன தமிழ் நூல்கள் - மயிலை சீனி வேங்கடசாமி
    (3) தொல்காப்பியம் பொருளதிகாரம்-நச்சினார்க்கினியம் / முதல்பகுதி (4) தொல்காப்பியம் பொருளதிகாரம்-நச்சினார்க்கினியம் / செய்யுளியல்
    தமிழ்மண் பதிப்பகம் / இளங்குமரனார், பதிப்பாளர்-இளவழகன்
    (5) சங்கநூல் முழு தொகுப்பு::1957 மர்ரே ராஜம் பதிப்பின் 1981 வெளியீடு
    (6) பெருந்தொகை= ?? (பல்வகை பொருள் பற்றியனவும், யாப்பினவும், வேறுவேறு சூழ்நிலை/காலத்தும் பற்பல ஆசிரியர்களாலும், இயற்றப்பட்ட தனிப்பாடல்களின் திரட்டு. யான் கண்ட இந்த தமிழ் அகாடெமியின் வலயப் பதிவு அத்தொகுப்பாசிரியர்/பதிவாளர் கருத்தில் ஏதோ ஒருவகையில் முழுமை பெறாமல் நின்றதோ என ஐயம் உள்ளது.) [மதுரைத் தமிழ்சங்கம் வெளியிட்ட இராகவ ஐயங்கார் பதிப்பின் வோறானது போலும்]


    2. குண்டலகேசித் திரட்டு


    ஓர் குறு அறிமுகம்

    சங்க காலத்திற்கு பின் ஓரிரு நூற்றாண்டுகளுக்குள் எழுந்த தொடர்நிலை பாடல்களால் யாத்த ஒர்பொருள்/வரலாறு /கதை இவற்றின் மேல் எழுந்த மிகு நீண்ட பெருநடையுடை நூற்களை காவியங்கள் எனவும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன. அவற்றின் பெருமை, சீர்மை கருதி ஐம்பெரும் காப்பியங்கள் எனவும் அடுத்தெழுந்த சிந்தாமணி சூளாமணி முதலியவை ஐஞ்சிறுகாப்பியங்கள் எனவும் பழந்தமிழ் மரபு நூல்களைப் பயிற்றுவோர் குறிப்பதனை நாம் நன்கு அறிவோம். பெருங்காப்பியங்களில் ஒன்றெனத் திகழ்ந்து பின்பு மறைந்தனவற்றில் குண்டலகேசியும் ஒன்றென்பர். எனினும் குண்டலகேசி, வளையாபதி, முத்தொள்ளாயிரம் பாரதம் தகடூர் யாத்திரை என்பனவற்றின் சில பாடல்கள் மட்டும் தொன்மையான உரை ஆசிரியர்களால் அவர் எடுத்த நூல்தம் உரைகளின் மேற்கோள் பாடல்களாக காட்டப்பட்டுள்ளன.

    மேலும்,
    எடுத்த நல்ல கருத்துகள் சில/பல கொண்டு அதன்வழிப்படும் பாடல்கள் பலநூல்களில் அமையக்காண்பனவற்றை சில புலவர் பெருமக்கள் ஒருமுகமாகத் தொகுத்து திரட்டு நூல்கள் என படைத்துச் சென்றுள்ளனர். அவற்றின்கண் பற்பல தொன்மை வாய்ந்த நூல்களின் பொறுக்குப் பாடல்களின் கொத்துகளைக் காண்கின்றோம். சங்கநூற்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்பவையும் மேற்படி வழியில் வந்த தொகை நூற்கள்தானே. சைவ வைஷ்ணவ திருமறைகளாம் தேவாரம், பிரபந்தம் முதலியனவும் அவ்வகைத்ததே என்பதும் நன்கு அறிவீர்கள்

    பன்னூல்திரட்டு, புறத்திரட்டு, நீதித் திரட்டு, பெருந்தொகை, தனிப்பாடல்திரட்டு, சீட்டுக்கவித்திரட்டு என்பன சில திரட்டு நூல்களாகும்.

    ஈங்கு காணும் 17 குண்டலகேசிப்பாடல்கள் 'நீதித் திரட்டு' எனும் திரட்டு நூலில் காண்பவை. அத்திரட்டினில், தொகுப்பாசிரியர் திருக்குறளில் காணும் 'அறம்' 'பொருள்' எனும் பால் பகுப்பு மற்றும் 'யாக்கை நிலையாமை' 'குற்றங்கடிதல்' போன்ற அதிகாரங்கள் வழி பற்பல வகைத்ததான நூல்களினின்று பொறுக்குப் பாடல்களைத் தொகுத்து படைத்துள்ளார். எனினும் கிடைத்துள்ள மிகக் குறைந்த பாடல்களின்று 'குண்டலகேசி' எனும் பெரும் காவியத்தின் மூலகதை/பொருள் மற்றும் ஈங்குளள்ள வைப்பு முறையினின்று புலப்படா.

    'குண்டலகேசி' பற்றி அறிந்த சிறு குறிப்பு::
    � இஃது பௌத்தசமயம் சார்புடைய ஓர் நுல். சமகாலத்ததான பிற மாற்றுச்சமயங்களின் தாக்கங்களை எதிர்கொள்ள எழுந்தது. நாகர்தம் நாட்டதனில் தற்காலம் பெருவழக்காக திகழும் இச்சமயத்தின் ஆதிமொழிதனில் செய்யப்பட்டுள்ள சமய நூற் கருத்துக்களை தாங்கி தமிழ்மொழியில் பெயர் கிட்டாத ஆசிரியரால் பாடப்பட்ட நூல். முதற்பாடல் சித்த சரணமாக புத்தப்பிரானைக் குறிப்பதுவும், 16 ஆம் பாடல் நெற்றிக்கண் திறந்த சிவன் தன் கறைக்கண்டத்தைக் காட்டுவதும், 8-9 ஆம் பாடல்களின் யாப்பு / ஓசையில் அப்பர்பெருமான்தன் தேவாரப் பாடல்கள் போல் அமைந்துள்ளமையும் 14 ஆம் பாடலில் புத்தர் பிரானை 'பிறந்தமூர்த்தி' (வைணவ மரபினில் அவதாரம் என்பர்) என காட்டுவதும் காண்க. பாடல்கள் யாவற்றின் ஈற்றசைகள் சேக்கிழார் பெருமானின் 'திருத்தொண்டர் புராணம்' போன்று ஓர் நீள்தொடர்நூலின் ஒழுக்கினை நன்கு காட்டாநிற்கும்.
    நூ. த. லோகசுந்தரமுதலி

    கிடைத்துள்ள குண்டலகேசிப் பாடல்கள்

    1

    கலித்துறை
    முன்தான் பெருமைக்கண் நின்றான்முடி வெய்துகாறும்
    நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கென்று
    ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக் குழந்தான்
    அன்றே இறைவன் அவன்தாள் சரண் நாங்களன்றே
          அறத்துப்பால்-1 கடவுள் வாழ்த்து,சித்த சரணம்-5 / 5

    2

    கலித்துறை
    நோய்க்குற்ற மாந்தர் மருந்தின் சுவைநோக்க கில்லார்
    தீக்குற்ற காதலுடையார் புகைத்தீமை ஓரார்
    போய்க்குற்றம் மூன்றும் அறுத்தான் புகழ்கூறு வேற்கென்
    வாய்க்குற்றம் சொல்லின் வழுவும் வழுவல்ல அன்றே
          அறத்துப்பால்-2 அவையடக்கம்-4 / 12<

    3

    கொச்சகக் கலிப்பா
    வாயுவினை நோக்கிஉள மாண்டவய நாவாய்
    ஆயுவினை நோக்கிஉள வாழ்க்கையது வேபோல்
    தீயவினை நோக்கும்இயல் சிந்தனையும் இல்லா
    துயவனை நோக்கிஉள துப்புரவும் எல்லாம்
          அறத்துப்பால்-21 தீவினை அச்சம் -15 / 201

    4

    அறுசீர் விருத்தம்
    வகைஎழில் தோள்கள் என்றும் மணிநிறக் குஞ்சி என்றும்
    புகழ்எழ விகற்பிக் கின்ற பொருளில்கா மத்தை மற்றோர்
    தொகைஎழும் காதல் தன்னால் துய்த்தியாம் துடைத்தும் என்பார்
    அகைஅழல் அழுவம் தன்னை நெய்யினால் அவிக்க லாமோ
          அறத்துப்பால்-30 புணர்ச்சி விழையாமை-14 / 298

    5

    அறுசீர் விருத்தம்
    அனல்என நினைப்பில் பொத்தி அகம்தலைக் கொண்ட காமம்
    கனலினை உவப்பு நீரால் கடையற அவித்தும் என்னார்
    நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குதும் என்று நிற்பார்
    புனலினைப் புனலி னாலே யாவர்போ காமை வைப்பார்
          அறத்துப்பால்-30 புணர்ச்சி விழையாமை-15 / 299

    6

    அறுசீர் விருத்தம்
    போதா உயிர்த்த ஆவி புகஉயிர்க்(கு) இன்ற தேனும்
    ஊதியம் என்று கொள்வார் உணர்வினால் மிக்க நீரார்
    ஆதலால் அழிதல் மாலைப் பொருள்களுக்(கு) அழிதல் வேண்டா
    காதலால் அழிதும் என்பார் கண்அணி களையல் உற்றார்
          அறத்துப்பால்-38 யாக்கை நிலையாமை-19 / 380<

    7

    அறுசீர் விருத்தம்
    அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மை
    மருவினால் தீயஆகா வரம்பில் காலத்துள் என்றும்
    பிரிவிலம் ஆகித் தன்சொல் பேணியே ஒழுகும் தங்கட்(கு)
    ஒருபொழுது இரங்க மாட்டாக் கூற்றின்யார் உய்த்தும் என்பார்
          அறத்துப்பால்-38 யாக்கை நிலையாமை-20 / 381

    8

    அறுசீர் விருத்தம்
    பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
    காளையாம் தன்மை செத்தும் காமுறு இளமை செத்தும்
    மீளும்இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
    நாளும்நாள் சாகின் றாமால் நமக்குநாம் அழாத தென்னே
          அறத்துப்பால்-38 யாக்கை நிலையாமை-21 / 382

    9

    அறுசீர் விருத்தம்
    கோள்வலைப் பட்டும் சாவாம் கொலைக்களம் குறித்தும் சென்றே
    மீளினும் மீளக் காண்டும் மீட்சிஒன் றானும் இல்லா
    நாளடி இடுதல் தோன்றும் நம்உயிர் மருகும் கூற்றின்
    வாளின்வாய்த் தலைவைப் பாக்குச் செல்கின்றோம் வாழிகின் றோமோ
          அறத்துப்பால்-38 யாக்கை நிலையாமை-22 / 383

    10

    அறுசீர் விருத்தம்
    நன்கென நாறும்இ தென்றிவ் வுடம்பு நயக்கின்ற தாயின்
    ஒன்பது வாயில்கள் தோறும் உள்நின்று அழுக்கு சொரியத்
    தின்பதோர் நாயும் இழுப்பத் திசைதொறும் சீப்பில்கு போழ்தின்
    இன்பநன் நாற்றம் இதன்கண் எவ்வகை யால்கொள லாமே
          அறத்துப்பால்-40 துய்யத்தன்மை-8 / 402

    11

    அறுசீர் விருத்தம்
    உறுப்புகள் தாம்உடன் கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை
    மறைப்பில் விழவற்கு சார்வாய் மக்குவ தேல்இவ் வுறுப்புக்
    குறைந்தன போல அழுகிக் குறைந்து குறைந்து சொரிய
    வெறுப்பில் கிடந்த பொழுதின் வேண்டப் படுவதும் உண்டோ
          அறத்துப்பால்-40 துய்யத்தன்மை-9 / 403

    12

    அறுசீர் விருத்தம்
    மாறுகொள் மந்தரம் என்றும் மரகத வீங்கெழு என்றும்
    தேறிடத் தோள்கள் திறத்தே திறத்துளிக் காமுற்ற தாயின்
    பாறொடு நாய்கள் அசிப்பப் பறிப்பறிப் பற்றின போழ்தின்
    ஏறிய இத்தசை தன்மாட் டின்புறல் ஆவதிங் கென்னோ
          அறத்துப்பால்-40 துய்யத்தன்மை-10 / 404

    13

    அறுசீர் விருத்தம்
    எனதென சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேன்
    தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவும் மூத்தவும் ஆகி
    நுனைய புழுக்குலம் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட
    இனைய உடம்பினைப் பாவி யான்என தென்னலு மாமே
          அறத்துப்பால்-40 துய்யத்தன்மை-11 / 405

    14

    கலிவிருத்தம்
    இறந்த நற்குணம் எய்தற்கு அரியவாய்
    உறைந்த தம்மைஎல் லாம்உடன் ஒக்குவான்
    பிறந்த மூர்த்திஒத் தால்திங்கள் வெண்குடை
    அறம்கொள் கோள் அண்ணல் மும்மத யானையான்
          பொருட்பால்-1 இறைமாட்சி 21 / 483

    15

    கலிவிருத்தம்
    சீற்றம் செற்றுப்பொய் நீங்கிச்செங் கோலினால்
    கூற்றம் காய்ந்து கொடுக்க எனும்துணை
    மாற்ற மேவிநன் றான்தடு மாற்றத்துத்
    தோற்றம் தன்னையும் காமுறத் தோற்றினான்
          பொருட்பால்-1 இறைமாட்சி 22 / 484

    16

    அறுசீர் விருத்தம்
    மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டதே அன்று வாய்மை
    நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
    விண்ணுளார் புகழ்தற் கொத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
    கண்ணுளான் கண்டம் தன்மேல் கறையனார் கறையன் றென்பார்
          பொருட்பால்-6 குற்றம் கடிதல் 9 / 539

    17

    கலித்துறை
    வேரிக் கமழ்தார் அரசன் விடு கென்ற போழ்தும்
    தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும்
    பூரித்தல் வாடுதல் என்றி வற்றால் பொலிவின்றி நின்றான்
    பாரித் தெல்லாம் வினையின் பயன் என்ன வல்லான்
          பொருட்பால்-25 இடுக்கண் அழியாமை 14 / 712



    3. பெரும்பொருள் விளக்கம்


    அறிமுகம்
    மறைந்து போன பற்பல பழம் தமிழ் நூல்களில், குறையாக ஒருசில பாடல்களே கிடைத்துள்ளனவற்றில் பெரும்பொருள் விளக்கம் எனும் நூலும் ஒன்று. இதன் 39 பாடல்கள் நீதித்திரட்டினில், அறம் பொருள் சார்ந்த பல்வேறு அதிகாரத் தலைப்புகளின் கீழ் வேறு பல நூற்களின் பாடல்களிடை மிடைந்து காணப்படுவன, ஈங்கு ஓர் நூல்தலைப்பு வழி இருமடி திரட்டாக தொகுக்கப்பட்டு, படைக்கப்படுகின்றன

    மேலும் சில விளக்கங்களை கீழே காண்க

    நூற்செய்யுள்கள்

    1

    மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஓர்இனமாய்ப்
    பொன்னின் பெயர்படைத்தால் போல்வதே - கொன்னே
    ஒளிப்பாரும் மக்களாய் ஒல்லுவ(து) ஆங்கே
    அளிப்பாரும் மக்கள்ஆ மாறு
          (அறம்-23 ஈகை-12) 224

    2

    இளையர் முதியர் எனஇருபால் பற்றி
    விளையும் அறிவு எனல் வேண்டா - இளைஞனாய்த்
    தன்தாதை காமம் நுகர்தற்குத் தான்காமம்
    ஒன்றாது நீத்தானும் காண்
          (பொருள்-5 அறிவுடைமை-15) 530

    3

    யானை நிரைஉடைய ரேனும் எழில்சிறந்தார்
    ஏனை நிரைஉடை ஏர்வாழ்நர் - யானைப்
    படையோர்க்கு வென்றி பயக்கும் பகட்டுஏர்
    உடையோர்க்கு அரசரோ ஒப்பு
          (பொருள்-58 குடிமரபு-9) 1130

    4

    நிலம்பொறை ஆற்றா நிதிபல கொண்டும்
    குலம்பெறும்தீங்(கு) அந்தணர் கொள்ளார் - நலம்கிளர்
    தீவாய் அவிசொரியத் தீவிளங்கும் ஆறுபோல்
    தாவா(து)ஒளி சிறந்தார் தாம்
          (பொருள்-58 குடிமரபு-10) 1131

    5

    ஈட்டிய(து) எல்லாம் இதன்பொருட்(டு) என்பது
    காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறும்
    காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர்
    தாமரையும் சங்கும்போல் தந்து
          (பொருள்-58 குடிமரபு-11) 1132

    6

    வெவ்வாள் மறவர் மிலைச்சிய வெட்சியால்
    செவ்வானம் செல்கின்றதுபோல் செல்கின்றார் - எவ்வாயும்
    ஆர்கும் கழல்ஒலி ஆங்கண் படாலியரோ
    போர்க்கும் துடியடு புக்கு
          (பொருள்-64 நிரை கோடல்-2) 1204

    7

    வாள்வலம் பெற்ற வயவேந்தன் ஏவலால்
    தாள்வல் இளையவர் தாம்செல்லின் - நாளைக்
    கனைகுரல் நல்ஆ,தன் கன்றுஉள்ளப் பாலால்
    நனைவது போலும்நம் ஊர்
          (பொருள்-64 நிரை கோடல்-3) 1205

    8

    வந்த நிரையின் இருப்பும் மணியுடன்
    எந்தலை நின்றலை யாம்தருதும் - முந்துநீ
    மற்றவை பெற்று வயவேந்தன் கோல்ஓங்கக்
    கொற்றவை கொற்றம் கொடு
          (பொருள்-64 நிரை கோடல்-4) 1206

    9

    திரைகவுள் வெள்வாய் திரிந்துவீழ் தாடி
    நரைமுதியோன் நின்றுரைத்த நற்சொல் - நிரைஇன்றி
    எல்லைநீர் வையம் இறையோன் களிக்குமால்
    வல்லையே செல்மின் வழி
          (பொருள்-64 நிரை கோடல்-6) 1208

    10

    பிறர்புலம் என்னார் தமர்புலம் என்னார்
    விறல்வெய்யோர் வீங்கிருள்கண் சென்றார் - நிறையும்
    கடாஅம் செருக்கும் கடும்களி யானை
    படாஅம் முகம்படுத்(து) ஆங்கு
          (பொருள்-64 நிரை கோடல்-7) 1209

    11

    அழுங்கல்நீர் வையகத்து ஆர்உயிரைக் கூற்றம்
    விழுங்கியபின் வீடு கொண்டற்றால் - செழுங்குடிகள்
    தார்ஆர் கரந்தை தலைமலைந்து தாம்கோடல்
    நேரார்கைக் கொண்ட நிரை
          (பொருள்-65 நிரை மீட்சி-1) 1214

    12

    அடியதிர் ஆர்ப்பினர் ஆபெயர்த்தற்(கு) அன்னாய்
    கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை
    மீளாது மீளார் விறல்வெய்யோர் யாவாம்கொல்
    வாள்ஆர் துடியர் வளம்
          (பொருள்-65 நிரை மீட்சி-2) 1215

    13

    கங்கை பரந்தாங்கு கானப் பெருங்கவலை
    எங்கும் மறவர் இரைத்(து)எழுந்தார் - தம்கிளைகண்
    மன்றுகாண் வேட்கை மடிசுரப்பத் தோன்றுவ
    கன்றுகாண் மெய்குளிர்வில் கண்டு
          (பொருள்-65 நிரை மீட்சி-3) 1216

    14

    கடல்புக்கு மண்எடுத்தக் கார்ஏனக் கோட்டின்
    மிடல்பெரி(து) எய்தின மாதோ - தொடலைக்
    கரந்தை மறவர் கருந்தாழ் குழாஅம்
    துரந்து நிரைமீட்ட தோள்
          (பொருள்-65 நிரை மீட்சி-6) 1219

    15

    கல்கெழு சீரூர்க் கடைகாண் விரும்பினான்
    மெல்ல நடவா விரையும் - நிரைஎன்னோ
    தெள்ளநல் கானியாற்றுத் தீநீர் பருகவும்
    மள்ளர் நடவா வகை
          (பொருள்-65 நிரை மீட்சி-7) 1220

    16

    காட்டகம் சென்றுயிர் போற்றான் கடும்சுரையான்
    மீட்ட மகனை வினவுறான் - ஓட்டந்து
    தன்எதிர் தோன்றும் புனிற்றா தழீஇக்கலுழும்
    என்னதுயர் பட்டாயோ என்று
          (பொருள்-65 நிரை மீட்சி-8) 1221

    17

    யாமே பகுத்திட வேண்டா இனநிரை
    தாமே தமரை அறிந்தனகொல் - ஏமுற
    அன்றீன்ற தம்மை அறிந்துகொள் கன்(று)ஏய்ப்பச்
    சென்(று)ஈண்டும் ஆங்கவாபால் சோர்ந்து
          (பொருள்-65 நிரை மீட்சி-9) 1222

    18

    விண்ணசைஇச் செல்கின்ற வேல்இளையர் ஆர்ப்பெடுப்ப
    மண்ணசைஇச் செல்கின்றான் வாள்வேந்தன் - எண்ணம்
    ஒருபால் படர்தரக் கண்டு ஒன்னார்தம் உள்ளம்
    இருபால் படுவ(து) எவன்
          (பொருள்-66 பகைவயிற்சேறல்-4) 1226

    19

    போர்ப்படை ஆர்ப்பப் பொடியாய் எழுமரோ
    பார்ப்புரவு எண்ணான்கொல் பார்வேந்தன் ஊர்ப்புறத்து
    நில்லாத தானை நிலன்நெளிய நீளிடைப்
    புல்லா மேல்செல்லும் பொழுது
          (பொருள்-66 பகைவயிற் சேறல்-5) 1227

    20

    மூதில்வாய் தங்கிய முல்லைசால் கற்புடை
    மாதர்பால் பெற்ற வலிஅளவோ - கூதிரின்
    வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலான்
    ஐங்கணை தோற்ற அழிவு
          (பொருள்-67 பாசறை-4) 1241

    21

    மாற்றுப்புலம் தொறும் போர்மண்டி மாக்களம்கொள்
    வேற்றுப் புலவேந்தர் வெல்வேந்தர்க்(கு) - ஏற்ற
    படைஒலியில் பாண்ஒலி பயில்கின்றால் ஒன்னார்
    உடையன் தாம்பெற்(று) உவந்து
          (பொருள்-67 பாசறை-5) 1242

    22

    தழிச்சிய வாள்புண்ணோர் தம்இல்லம் தோறும்
    பழிச்சியசீர் பாசறை வேந்தன் விழுச் சிறப்பில்
    சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன
    புல்அணலார் வெய்(து)உயிர்க்கும் புண்
          (பொருள்-67 பாசறை-7) 1244

    23

    பகல்எறிப்(து) என்கொலோ பால்மதி என்(று)அஞ்சி
    இகல்அரணத்(து) உள்ளவர் எல்லாம் - அகம்நலிய
    விண்தஞ்சம் என்ன விரிந்தகுடை நாள்கொள்ளக்
    கண்(டு)அஞ்சி சிம்புளித்தார் கண்
          (பொருள்-73 எயில் கோடல்-2) 1292

    24

    தொழுது விழாக்குறைக்குத் தொல்கடவுள் பேணி
    அழுது விழாக்கொள்வர் அன்னோ - முழுதளிப்போன்
    வாள்நாள்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்ந்தார்
    நீள்நாள்கோள் என்று நினைந்து
          (பொருள்-73 எயில் கோடல்-3) 1293

    25

    இற்றைப் பகலுள் எயிலகம் புக்கன்றி
    பொன்தேரான் போனகங்கை கொள்ளானால் - ஏற்றாம்கொல்
    ஆறாத வெம்பசித்தீ ஆற உயிர்பருகி
    மாறா மறலி வயிறு
          (பொருள்-74 எயில் கோடல்-7) 1297

    26

    தாய்வாங்கு கின்ற மகனைதனக் கென்று
    பேய்வாங்கி அன்னதோர் பெற்றித்தே - வாய்வாங்கு
    வெல்படை வேந்தன் விரும்பாதார் ஊர்முற்றிக்
    கொல்படை வீட்டுங் குறிப்பு
          (பொருள்-74 எயில் கோடல்-8) 1298

    27

    வெஞ்சின வேந்தன் எயில்கோள் விரும்பியக்கால்
    அஞ்சி ஒதுங்காதார் யார்யாவர் - மஞ்சுசூழ்
    வான்தோய் புரிசை பொறியும் அடங்கின
    ஆன்றோர் அடக்கம்போல் ஆங்கு
          (பொருள்-74 எயில் கோடல்-9) 1299

    28

    பொருவரு மூதூரில் போர்வேட்டு ஒருவர்க்(கு)
    ஒருவர் உடன்(று)எழுந்த காலை - இருவரும்
    மண்ணோடு சார்த்தி மதில்சார்த்திய ஏணி
    விண்ணோடு சார்த்தி விடும்
          (பொருள்-74 எயில் கோடல்-10) 1300

    29

    முற்றரணம் என்னும் முகில்உருமுப் போல்தோன்ற
    கொற்றவன் கொற்றவாள் நாள்கொண்டான் - புற்(று)இழிந்த
    நாகக் குழாம்போல் நடுங்கின என்னாம்கொல்
    வேகக் குழாக்களிற்று வேந்து
          (பொருள்-74 எயில் காத்தல்-4) 1306

    30

    இடியான் இருள் முகிலும் ஏறுண்ணும் என்னும்
    படியால் பக(டு)ஒன்று மீட்டு - வடிவேல்
    எறிந்தார்த்தார் மன்னர் இமையாத கண்கொண்(டு)
    அறிந்(து)ஆர்த்தார் வானோரும் ஆங்கு
          (பொருள்-75 அமர்-4) 1316

    31

    ஆளும் குரிசில் உவகைக் கள(வு) என்னாம்
    கோள்அன்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி
    ஆடினார் ஆர்த்தார் அடிதோய்ந்த மண்வாங்கிச்
    சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து
          (பொருள்-75 அமர்-5) 1317

    32

    வான்துறக்கம் வேட்(டு)எழுந்தார் வாள்மறவர் என்பதற்குச்
    சான்(று)உரைப்ப போன்றன தம்குறை - மான்தேர்மேல்
    வேந்து தலைபனிப்ப விட்ட உயிர்விடாப்
    பாய்ந்தன மேல்மேல் பல
          (பொருள்-75 அமர்-6) 1318

    33

    வெய்யோன் எழாமுன்னம் வீங்(கு)இருள் கைஅகலச்
    செய்யோன் ஒளிவழங்கும் செம்மற்றே - கைஅகன்று
    போர்தாங்கும் மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன்
    தார்தாங்கி நின்ற தகை
          (பொருள்-76 தானை மறம்-4) 1331

    34

    மம்மர் விசும்பின் மதியும் மதிப்பகையும்
    தம்மில் தடுமாற்றம் போன்றதே - வெம்முனையில்
    போர்யானை மன்னர் புறம்கவித்த வெண்குடையைக்
    கார்யானை அன்(று)அடர்த்த கை
          (பொருள்-78 யானை மறம்-12) 1367

    35

    வான்தோய் கழுகினமும் வள்உகிர்ப் பேய்க்கணமும்
    ஊன்தோய் நரியும் உடன்தொக்க - மூன்றும்
    கடமா நிலம்நனைக்கும் கார்யானைக்(கு) இட்ட
    படம்ஆறு நீப்(பு)அதனைப் பார்த்து
          (பொருள்-78 யானை மறம்-13) 1368

    36

    மாயத்தால் தாக்கும் மலையும் மலைபோல்
    காயத்தூறு அஞ்சாக் களிற்றொடும் போய்ச் - சாயும்
    தொலைஅறியா ஆடவரும் தோன்றினார் வான்மேல்
    மலைஉறையும் தெய்வம்போல் வந்து
          (பொருள்-78 யானை மறம்-14) 1369

    37

    வென்று களம்கொண்ட வேந்தன்தேர் சென்றதன்பின்
    கொன்ற பிணக்கூழ் கொற்றவை - நின்(று)அளிப்ப
    உண்டாடு பேய்க்கண்(டு) உவந்தனவே போர்ப்பரிசில்
    கொண்டாடின குரவைக் கூத்து
          (பொருள்-80 களம்-12) 139

    38

    உலகு பொதிஉருவம் தன்உருவ மாகப்
    பலர்பரவத் தக்க பறந்தலை நன்காடு
    புலவும்கொல் என்போல் புலவுக் களத்தே(டு)
    இகல்நெடுவே லானை இழந்து
          (பொருள்-81 இரங்கல்-19) 1422

    39

    கண்ணுதலோன் காப்ப கடிநேமியான் காப்ப
    எண்ணிருதோள் ஏந்திழையாள் தான்காப்ப - பண்ணியல்நூல்
    சென்னியர்க்(கு) அளிக்கும் தெய்வம் நீஇ
    மன்னுக நாளும்இம் மண்மிசை யானே
          (பொருள்-84 வாழ்த்து-)


    (ஈங்கு ஒவ்வொரு பாடல்களின் கடையில் பிறைக்குறியுள் காண்பவை
    'நீதித்திரட்டு' தான் அடக்கும் பால் / அதிகாரத் தலைப்புகளே. இவை
    மூலநூல் தாங்கு பொருள் காட்டா. (எ.கா.) இங்கு 39 ஆம் பாடலாவது
    இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் என நச்சி.குறிப்பால் அறிகிறோம்)

    -------------------

    பெரும்பொருள் விளக்கம்
    இஃது நச்சினார்க்கினியரின் உரைகளினின்று அறியப்படும் நூல்களில் ஒன்று. புறத்திரட்டு, நீதித் திரட்டு பெருந்தொகை எனவரும் தொகுப்புகளில் காணும் பல பாக்களின் வைப்புமுறை அவற்றின் பாடல்கள் பல இவர்தம் உரைகள் வழியே வந்தன என காட்டாநிற்கின்றன. பெருந்தொகை என காணப்படும் ஓர் தொகுப்பிலும் 'மறைந்துபோன தமிழ் நூல்கள்' கண்ட மயிலை சீனிவேங்கடசாமியார் புறத்திரட்டினின்று காட்டுவனவும் இவையே.

    கிடைத்துள்ள பாடல்கள் யாவும் வெண்பாவாகவே காணப்படுதலின் முழு நூலும் அந்த யாப்பினில் அமைந்ததாகலாம். "கடல்புக்கு மண் எடுத்தக் கார்ஏனக் கோட்டின்" என திருமால்தம் 'கேழல்நிலை' (14) தோள்திறல் காட்டப்பட்டாலும் கடவள் வாழ்த்து என நச்சினார் குறிக்கும் பாடலில் சிவன் திருமால் கொற்றவை என மூன்று தெய்வங்களைப் பாடி உள்ளதால் ஆசிரியர் இறை வழிபாட்டில் பொதுநிலை கொண்டவராகலாம்.

    இந்நூலில் காணும் சீர்மைகள் சில

    பொன் என்றால் தங்கம் ஆகாது பொதுநிலையில் ஓர் உலோகத்தையே
    குறிக்கும் என்ற விளக்கமும் (1)

    'யயாதி' எனும் ஓர் வடநாட்டு மன்னன் அவன்தன் தன்மகனிடை இளமை
    முதுமை பற்றி பின்னிப் பேசப்பட்ட தொன்மைக் கதை குறிப்பும் (2)

    அரசுக்கு நிகரான உழவுத்தொழிலின் மேன்மை சிறப்பை காட்டுதலும் (3)

    சோழநாட்டு புகார்நகர வணிகர்தம், செல்வநிலை குறிப்பும் (5)
    [அப்பர்பெருமான் குறித்துள்ள சங்கநிதி, பதுமநிதி - இக்காலத்து
    கோடீசுவரர், லட்சாதிபதி என்பர்-சங்கம் பதுமம் ஓர் பேரெண்,
    மாபெரும் போரில் மலைக்கும் தானை அளவை குறிக்கவும் வருவன]

    'திரைகவுள், வெள்வாய், திரிந்துவீழ் தாடி, நரை" என ஓர் முதியோனின்
    உடல் இயல் விளக்கமும் (9)

    ஈன்ற அன்றே தன்தாயை அறியும் புனிற்றிளம் கன்றுபோல் எனும்
    (நாலடியார்-பல்லாவுள்-101) உவமையும் (17)

    அரணத்தே நிகழும் போரில் பல்வகைப் போர்ப்பொறிகள் பயன்படுதல் குறிக்கப்படுதலும் (27) // யவனர் இயற்றிய பல பொறிகள் மற்றும் எந்திரம் (பெரும் கல்லெறி கவண், வெப்பம் ஏற்றின எண்ணெய், நெடுதூரம் கணை ஏவும் வில்) வஞ்சனை பலவும் அமைந்த, இடங்கர் உள்ளடக்கிய புறம்சூழ் கிடங்கு, தோட்டிமுள் பதித்த காவற்காடு, பதணம், ஏப்புழை, ஞாயில், எழு, சீப்பு இவை அமையப்பெற்ற வாயிலங கோபுரம் இவை கொண்டு தண்டு கொண்டு வந்த மாற்றாரை எதிர் கொள்ளுதல் பற்றி நச்சினார் தம் தொல். பொருள் புறத்திணை இயல் சூத் 65) உரை விளக்கத்தில் காட்டுபவைதனை கண்டுகொள்க.
    தகடூர் யாத்திரையில் "மறனுடைய மறவர்" என்னும் பொன்முடியார்
    படலிலும் இவை நிரல்படுத்தப்பட்டுள்ளமை காண்க //

    ஞாயிறு தோன்றா இரவினில் செவ்வாய்க்கோளின் ஒளிவழி நெறி
    செல்லல் ஆகிய உவமையும் (33)

    திங்களை மறைக்கும் பாம்பு (வானியல்-பற்றுதல்) யானை மற்றும்
    மன்னன் வெண்கொற்றக்குடை இவற்றிடை உருவகமும் (34)
    குறிக்கத்தக்கன

    நூ.த.லோகசுந்தரமுதலி-மயிலை,சென்னை

    o0O0oo0O0oo0O0oo0O0oo0O0oo0O0oo0O0oo0O0oo0O0oo0O0oo0O0oo0O0o

    பெ.பொ.வி.

    நீதித்திரட்டு

    புறத்திரட்டு

    நச்.உரை (எ.கா.)

    பெருந்தொகை

    மேற்படி #

    வரிசை#

    வரிசை#

    தொல்.புற.இயல் வரிசை#

    சூத்.#

    1

    224

    228

    90

    274

    2

    530

    542

    76

    359

    3

    1130

    1159

    76

    397

    4

    1131

    1160

    75

    289

    5

    1132

    1161

    75

    279

    6

    1204

    1236

    58

    429

    7

    1205

    1237

    58

    420

    8

    1206

    1238

    58

    425

    9

    1208

    1239

    58

    422

    10

    1209

    1240

    58

    428

    11

    1214

    ??

    ??

    ??

    12

    1215

    1245

    58

    441

    13

    1216

    1246

    58

    446

    14

    1219

    1247

    58

    442

    15

    1220

    1248

    58

    445

    16

    1221

    1249

    58

    444

    17

    1222

    1250

    58

    447

    18

    1226

    1255

    63

    450

    19

    1227

    ??

    60

    451

    20

    1241

    1271

    76

    544

    21

    1242

    1272

    67

    ??

    22

    1244

    1273

    63

    457

    23

    1292

    ??

    68

    475

    24

    1293

    1326

    68

    476

    25

    1297

    1927

    67

    487

    26

    1298

    1328

    68

    490

    27

    1299

    1329

    68

    496

    28

    1300

    1330

    68

    485

    29

    1306

    1338

    68

    464

    30

    1316

    ??

    72

    535

    31

    1317

    ??

    72

    542

    32

    1318

    1350

    71

    540

    33

    1331

    1363

    72

    504

    34

    1367

    ??

    ??

    507

    35

    1368

    ??

    ??

    508

    36

    1369

    1401

    72

    506

    37

    1398

    1430

    76

    546

    38

    1422

    1501

    90

    713

    39

    1469

    1439

    79

    ??




    இப்பதிவினில் பயன்பட்ட நூல்கள்

    (1) நீதித் திரட்டு - பேரா. ச பாலசுந்தரம் - பதிப்பாசிரியர்
    தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின்
    சரசுவதிமகால் நுலக சங்கம்
    வெளியீட்டு எண் 270 - 1988
    (2) மறைந்துபோன தமிழ் நூல்கள் - மயிலை சீனி வேங்கடசாமி
    (3) தொல்காப்பியம் பொருளதிகாரம்-நச்சினார்க்கினியம் / முதல்பகுதி
    (4) தொல்காப்பியம் பொருளதிகாரம்-நச்சினார்க்கினியம் / செய்யுளியல்
    தமிழ்மண் பதிப்பகம் / இளங்குமரனார்
    பதிப்பாளர்-இளவழகன்
    (5) சங்கநூல் தொகுப்பு::1957 மர்ரே ராஜம் பதிப்பின் 1981 வெளியீடு
    (6) பெருந்தொகை=மதுரைத் தமிழ்சங்கம் வெளியிட்ட இராகவ ஐயங்கார் பதிப்பு


    4. தகடூர் யாத்திரை (திரட்டு)

    அறிமுகம்
    மறைந்து போன பற்பல பழம் தமிழ் நூல்களில், குறையானதாக ஒருசில பாடல்களே கிடைத்துள்ளனவற்றில் தகடூர் யாத்திரை ஒன்று. இப்புறப்பொருள் நூலின் 45 பாடல்கள் நீதித்திரட்டு எனும் ஓர் தொகுப்பு நூலில், அறம் பொருள் சார்ந்த பல்வேறு அதிகாரத் தலைப்புகளின் கீழ் வேறு பல நூல் பாடல்களின் இடைஇடையே மிடைந்து காணப்படுவன, ஈங்கு நூல்தலைப்பு வழியில், இருமடி திரட்டாக தொகுத்து, வேறு 11 பாடல்களும் இணைய, சந்தி பிரித்து, இயன்ற சிறு குறிப்புகள் இணைத்து படைக்கப்படுகின்றன.

    இந்நூல் பற்றி மேலும் பல விவரங்கள், விளக்கங்கள் கீழே காண்க

    1

    நேரிசை வெண்பா
    வியத்தக்க காணுங்கால் வெண்மையில் தீர்ந்தார்
    வியத்தக்க தாக வியப்பர் - வியத்தக்க
    அல்ல எனினும் அறியாதார் தாம்போல
    எல்லாம் வியப்பர் இனிது
    (அற.2 அவையடக்கம்-1) 9

    1

    ஆசிரியப்பா
    கிழிந்த சிதாஅர் உடுத்தும் இழிந்தார்போல்
    ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த்
    தாமரை அன்ன சிறப்பினர் தாமுண்ணின்
    தீயூட்டி உண்ணும் படிவத்தர் தீயவை
    ஆற்றுழி ஆற்றிக் கழுவுபு தோற்றம்
    அவிர்முருக்கத் தோலுரித்த கோலா துவர்மன்னும்
    ஆடையர் பாடின் அருமறையர் நீடின்
    உருவம் தமக்குத்தா மாய
    இருபிறப் பாளர்க் கொரூஉகமா தீதே
    (அற.3 நீத்தார் பெருமை 5) 17

    1

    பஃதொடை வெண்பா
    நூற்றுவரில் தோன்றும் தறுகண்ணன் ஆயிரவர்
    ஆற்றுளித் தொக்க அவையகத்து மாற்றம்
    ஒன்றக் கொடுக்கும் மகன்தோன்றும் தேற்றப்
    பரப்புநீர் வையகம் தேரினும் இல்லை
    இரப்பாரை எள்ளா மகன்
    (அற.23 ஈகை 11) 223

    4

    பஃதொடை வெண்பா
    இறப்பப் பெருகி இசைபடுவ தல்லால்
    சிறப்பில் சிறுகுவ துண்டோ அறக்கோலால்
    ஆர்வமும் செற்றமும் நீக்கிமற் றியார்கண்ணும்
    இன்னாத வேண்டா இகல்வேல் மறமன்னர்
    ஒன்னார்க் குயர்த்த படை
    (பொரு.18 செங்கோன்மை 6) 654

    5

    இன்னிசை வெண்பா
    அறம்புரிந்தன்(று) அம்ம அரசில் பிறத்தல்
    துறந்த தொடர்பொடு துன்னிய கேண்மை
    சிறந்தார்க்கும் பாடு செயல்ஈயார் தத்தம்
    பிறந்தவேல் வென்றிப் பொருட்டு
    (பொரு.18 செங்கோன்மை 7) 655<

    6

    பஃதொடை வெண்பா
    சொல்லுங்கால் சொல்லின் பயன்காணும் தான்பிறர்
    சொல்லிய சொல்லைச் செலச் சொல்லும் - பல்லார்
    பழித்தசொல் தீண்டாமல் சொல்லும் விழுதக்க
    கேட்டார்க் கினியவாச் சொல்லானேல் பூக்குழலாய்
    நல்வயலூரன் நறும்சாந் தணிஅகலம்
    புல்லின் ஊடல் இனிது
    (பொரு.21 சொல்வன்மை 11) 744

    7

    இன்னிசை வெண்பா
    கால வெகுளிப் பொறைய கேள்நும்பியைச்
    சாலும் துணையும் கழறிச் சிறியதோர்
    கோல்கொண்டு மேல்சேறல் வேண்டா அதுகண்டாய்
    நூல்கண்டார் கண்ட நெறி
    (பொரு.29 தூது 10) 764
    இதனில் சேரன்பால் (பெருஞ்சேரல் இரும்பொறை) புலவர்
    (பொன்முடியார் ?) உன் தாயாதியையும் அவன்துணையாக
    வந்தோர் மேலும் கோபித்து போரிட வேண்டாமே நல்லோர்தம்
    நெறி அதுதானே என அறிவுறத்துகிறார் போலும்

    8

    இணைக்குறள் ஆசிரியப்பா
    ஒளிவிடு பசும்பொன் ஓடை சூட்டிய
    வெளிறில் வெண்கோட்டு களிறுகெழு வேந்தே
    வினவுதி யாயின் கேண்மதி சினவாது
    ஒருகுடர் படுதர ஓர்இரை தூற்றும்
    இருதலைப் புள்ளின் ஓர்உயிர் போல
    அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக்
    கண்உறு பொழுதில் கைபோல் எய்தி
    நும்மோர்க்கு நீதுணை ஆகலும் உளையே,
    நோதக
    முன்னவை வரூஉங் காலை நும்முன்
    நுமக்குத் துணை யாகலும் உரியன்,
    அதனால்
    தொடங்க உரிய வினைபெரி தாயினும்
    அடங்கல் வேண்டுமதி அத்தை அடங்கான்
    துணைஇலன் தமியன் மன்னும் புணைஇலன்
    பேர்யா றெதிர்நீந்தும் ஒருவன் அதனைத்
    தாழ்தல் அன்றோ, அரிது தலைப்படுதல்
    வேண்டின் பொருந்திய
    வினையின் அடங்கல் வேண்டும்
    அனைய மாகீண் டறிந்திசி னோர்க்கே
    (பொரு.30 மன்னரைச் சேர்ந்து ஒழுகுதல் 1) 773
    "ஓடையடு பொலிந்த வினைநவில் யானை"
    நெடுநல். 169. ஓடை= யானைக்கு இடும்
    முகபடாம். ஈங்கு தங்கத்தால்ஆன முககவசம்
    புலவர், ஈங்கும் நல்ல ஏதுக்களைக்காட்டி
    அரியன செய்வான் அடங்கிட வேண்டும் என
    அமைச்சன் போல் அடக்கமுடைமையை
    வலியுறுத்துகின்றார். மிக மிக அரிய பிறப்பாக
    பறவைக்கு ஓர் மெய் இருதலைகள் உள்ளதாக
    காணப்பட்டமை ஆவணப்படுத்தப் படுகின்றது.
    ஈங்கு அதியமான் தெடுமான் அஞ்சியும் சேரர்
    குல மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையும்
    தாயாதிகள் ஆகும் என்பதற்கு அகச்சான்று

    9

    ஆசிரியப்பா
    மொய்வேல் கையர் முரசெறிந் தொய்என
    வையகம் அறிய வலிதலைக் கொண்டது
    எவ்வழி என்றி வியன்தார் மார்ப
    எவ்வழி ஆயினும் அவ்வழித் தோன்றித்
    திண்கூர் எ�கின வயவர்க் காணின்
    புண்கூர் மெய்யின் உராய்ப் பகைவர்
    பைந்தலை துமித்த மைந்துமலி தடக்கை
    ஆண்டகை மறவர் மலிந்துபிறர்
    தீண்டல் தகாது வேந்துடை அரணே
    (பொரு.30 மன்னரைச் சேர்ந்து ஒழுகுதல் 2) 774
    புலவர், அம்மன்னனின் (அதியமான் நெடுமான் அஞ்சி)
    கோட்டை வலிமிக்கது வீரம்மிக்க வீரர் காப்பதால்
    வெல்லுவதற்கு எளிதன்றென சேரனுக்கு விளக்குகின்றார்
    தொல்.பொரு.புறத்.நச்சி.உரையில் 'கொள்ளார் தேஎம்'
    எனும் 67 ஆம் சூத் 'உடன்றோர்வருபகை' எனும் அடி
    விளக்கத்திற்கு 'இதுபொன்முடியார் தகடூரின் தன்மை
    கூறியது' என காட்டுகிறார். பெருந்தெகை எனும்
    மற்றுமோர் திரட்டு நூல் 462 பாடலிலும் "பொன்முடியார்
    சேரமானுக்குத் தகடூரின் தன்மை கூறியது" எனும் அதே
    தலைக் குறிப்புள்ளது.

    10

    ஆசிரியப்பா
    பெருநீரால் வாரி சிறக்க இருநிலத்(து)
    இட்டவித்(து) எஞ்சாமை நாறுக நா(று)ஆர
    முட்டாது வந்து மழைபெய்க பெய்தபின்
    ஒட்டாது வந்து கிளைபயில்க அக்கிளை
    பால்வார்(பு) இறைஞ்சிக் கதிர்ஈன அக்கதிர்
    ஏர்கெழு செல்வர் களம்நிறைக அக்களத்துப்
    போர்எல்லாம் காவாது வைகுக போரின்
    உருகெழும் ஓதை வெரீஇப் பொடையடு
    நாரை இரியும் விளைவயல்
    யாணர்த் தாகஅவன் அகன்தலை நாடே
    (பொரு.33 நாடு 17) 832
    பயிர் விளைச்சலின் செயற்பாடுகள் நிரல்பட
    வைத்து எதினிலும் இடர் வாராது நாட்டு
    வளம் நனிசிறக்க என புலவர் வாழ்த்துகிறார்

    11

    நேரிசை வெண்பா
    அரும்பொன் னார்கோட்டி ஆர்உற்ற கண்ணும்
    கரும்புதின் பார்முன்னர் நாய்போல் - கரும்பலவர்
    கொண்டொழிப ஒன்றோ துயில்மடிப அல்லாக்கால்
    விண்டுரைப்பர் வேறாய் இருந்து
    (பொரு.44 புல்லறிவாண்மை 14) 981
    கரும்பின் இனிய சுவை அறியா நாயினைப்போல்
    என்று சிற்றறிவினார்தம் புன்மைதனை உவமித்தது

    புறப்பொருள் திணை/துறைகள்

    12

    ஆசிரியப்பா
    நாளும் புள்ளும் கேளா ஊக்கமோ(டு)
    எம்கோன் எயினன் ஆதலின் யாமத்துச்
    செங்கோல் வெட்சியும் தினையும் தூஉய்
    மறிக்குரல் குருதி மன்றுதுகள் அவிப்ப
    விரிச்சி ஓர்தல் வேண்டா
    எயில் புறம் தருதும்யாம் பகைப்புல நிரையே
    (பொரு. 64 நிரைகோடல் 5) 1207
    எம்'கோன்' எயினன் என்றதால் அ�து ஓர் மன்னன்
    பெயரும் ஆகும். நிரை கவர் வெட்சியில், விரிச்சி
    ஓர் துறை."எம்தலைவன் 'எயினன்' ஆகவே நிமித்தம்
    முதலியன பார்க்காமலே இரவு விரிச்சியில் நாங்கள்
    பகை நாட்டாரின் நிரைகளை மீட்டு கோட்டை
    வெளியே கொணர்ந்து விடுவோம்" என சூளு�ர்தது
    புறத்திரட்டு 1241 (நிரைகோடல் 10) மற்றும்
    பெருந்தொகை 423 ம் பாடலாக, தொல்.பொரு.
    புற.இயல் நச்சி.உரையில் "விரிச்சி விலக்கிய
    வீரக் குறிப்பு" எனும் தலைப்புடன் காண்பது

    13

    ஆசிரியப்பா
    இருநில மருங்கின் எப்பிறப் பாயினும்
    மருவின் மாலையே இனிதே இரவின்
    ஆகோள் மள்ளரும் அளவாக் கானத்து
    நாம்புறத் திருந்தனம் ஆகத் தாம்தம்
    கன்றுகுரல் கேட்டன போல்
    நின்றுசெவி ஏற்றன சென்றுபடு நிரையே
    (பொரு. 65 நிரைமீட்சி 4) 1217
    மீட்ட ஆநிரைகள் அவைகளை செலுத்தப்படும்
    இரவுக் காலத்தே ஈன்ற பசுக்கள் தம் கன்றுகளின்
    அழைகுரல் கேட்டது போல் சிறிது நின்று சென்றன.
    புறத்திருத்தலும் ஆகோளும் வெட்சித்திணைக்கு
    உள்ளதான துறைகள்
    தொல்.பொரு.புறத்.நச்சி.உரையில் 'மறவர் கூற்று',
    எனவும், பெருந்தொகை 431 ம் பாடலாக 'புறத்திறை'
    எனும் வெட்சித்துறைத் தலைப்புகளுடன், புறத்திரட்டு
    'நிரைமீட்சி'-1251 ம் பாடலாகவும் காண்பது

    14

    நேரிசை வெண்பா
    செங்கண் மழவிடையின் தண்டிச் சிலைமறவர்
    வெங்களம் மகிழ்ந்து விழவயர - அங்குழைய
    வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக்
    குஞ்சி மலைந்தான்எம் கோ
    (பொரு.66 பகைவயிற்சேறல் 1) 1223
    வெட்சியில் கடந்து வஞ்சியில் செல்வது. வணக்கிய=
    பணியச்செய்த, குஞ்சிமலைத்தல்=ஒர் மெய்ப்பாடு

    15

    வெண்பா
    முன்னர் முர சிரங்க மூரிக் கடல்தானை
    துன்னரும் துப்பில் தொழுதெழா - மன்னர்
    உடைவாள் உலந்தனவால் ஓதநீர் வேலிக்
    குடைநாள் இறைவன் கொள
    (பொரு.66 பகைவயிற்சேறல் 2) 1224
    உலந்தன=உலர்ந்தன

    16

    வெண்பா
    வேத்தமர் செய்தற்கு மேல்செல்வான் மீண்டு வந்(து)
    ஏத்தினர்க் கீத்தும்என் றெண்ணுமோ - பாத்திப்
    படைக்கல மான்தேர் உடன் ஈத்தான் ஈத்த
    படைக்கலத்தில் சாலப் பல
    (பொரு.66 பகைவயிற்சேறல் 6) 1228
    போர்க்களந் மேல் செல்லும் தலைவன் தன் படையின்
    பிரிவுக்குத் தக்கபடி தேவையான கலன்களை அளித்தமை
    'பெருந்தொகை' திரட்டினில் பாடல் எண் 458 'கொடை
    வஞ்சி' எனும் தலைப்பினில்.காண்பது.
    'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல்.
    'இயங்குபடை அரவம்' எனத் தொடங்கும் 63ஆம்
    சூத்திரம் 'கொடுத்தல் எய்திய கொடைமையானும்'
    எனும் அடி விளக்கத்தில் மேற்கோள் காட்டுகிறார்.
    ஆனால் 'தகடூர் யாத்திரை'ப் பாடல் குறிக்கவில்லை.
    புறத்திரட்டில் பாடல் 1257

    17

    வெண்பா
    உண்டியின் முந்தாது உடன்உண்பான் தண்தேறல்
    மண்டி வழங்கி வழீஇயதற்கோ - கொண்டி
    மறவர் மறமிக்கு உயிர்நேர்ந்தார் மன்னர்க்(கு)
    உறவிலார் கண்ணோடார் ஓர்ந்து
    (பொரு.66 பகைவயிற்சேறல் 7) 1229
    வெற்றிக்குப்பின் போரிட்டோருடன் தானும்
    அமர்ந்து கள் அருந்தி மகிழ்ந்து ஊக்கிவிப்பது
    'பெருந்தொகை' திரட்டினில் பாடல் எண்456
    'பெருஞ்சோற்றுநிலை' எனும் தலைப்பின்கீழ்
    தொல்.பொரு.புறத்.சூத்63. "பிண்டமேயபெருஞ்
    சோற்று" எனும் அடி விளக்கதில் "துறைஎனவே
    கள்ளும் பாகும் அப்பால்படும்" எனக்கூறி இந்தப்
    பாடலைக் மேற்கோள் காட்டுகிறார்

    18

    ஆசிரியப்பா
    குழிபல ஆயினும் சால்பா னாதே
    முழைபடு முதுமரம் போல்எவ் வாயும்
    மடைநுழைந் தறுத்த இடனுடை விழுப்புண்
    நெய்இடை நிற்றல் ஆனாது பைஎன
    மெழுகுசெய் பாவையின் கிழிபல கொண்டு
    முழுவதும் பொதியல் வேண்டும் பழிதீர்
    கொடைக்கட னாற்றிய வேந்தர்க்குப்
    படைக்கட னாற்றிய புகழோன் புண்ணே
    (பொரு.68 பாசறை 6) 1243
    போர்களத்தே பட்ட பெரிய அளவிலான
    விழுப்புண்ணிற்கு (கிழிப் பொதியல்=ஒத்தடம்)
    முதலிய மருத்துவம் உரைப்பது

    19

    ஆசிரியப்பா
    கலிமா னோயே கலிமா னோயே
    நாகத் தன்ன நீள்நெடும் தடக்கைக்
    காய்சின யானைக் கலிமா னோயே
    வெள்ளத் தானைநும் வேந்தொப் பான்முன்
    உள்ளழித் துப்புகேன் ஆயின் உள்ள(து)
    இரப்போன் இன்மை கண்டும்
    காப்போன் சிறுமை யான்உறு கவ்வே
    (பொரு.71 வஞ்சினம் 4) 1273
    கலிமா=குதிரை, பொதுவாக குதிரை என பொருள்
    கூறுவர். எனினும் கூர்ந்து நோக்கின் கலப்பின
    குதிரையைக் குறிக்கும். (கலி=கலப்பு) பரி, இவுளி
    என சொற்கள் வேறுபடின் கொள்ளும் பொருளும்
    வேறுபடும். மற்றும் குதிரையிலும் உயரம் மிகுந்தது
    தாழ்ந்தது என பல வேறுபாடுடன் காணப்படும். கோஏறு
    கழுதை எனவும் ஒன்றுண்டு. இ�து கழுதை-குதிரை
    கலப்புமா ஆகும். இதனில் சூலேற்கும் பெண்மாவினை
    கொண்டு இருவகை பெறப்படும் என்பர் இவை கன்று
    ஈனும் தன்மை இழந்தவையே.

    ஓயே=விளிஅசை

    20

    பஃறொடை வெண்பா
    கூற்றுறழ் முன்பின் இறைதலை வைத்தபின்
    ஆற்றி அவனை அடுதல் அடாக்காலை
    ஏற்றுக்களத்தே விளிதல் விளியாக்கால்
    மாற்றம் அளவும் கொடுப்பவோ சான்றோர்தம்
    தோற்றமும் தேசும் இழந்து
    (பொரு.72 படைசெருக்கு 8) 1283
    தலைவன் படைவீரரிடம் போர் மரபுரைத்து
    அவர்கள் சிறப்புற பணியாற்ற முனைப்படுத்தல்

    21

    பஃறொடை வெண்பா
    தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தாம்அவற்கு
    ஒற்கத்து உதவினான் ஆகுமால் பின்பின்
    பலர்ஏத்தும் செம்மல் உடைத்தான் பலர்தொழ
    வான்உறை வாழ்க்கை இயையுமால் அன்னதோர்
    மேன்மை இழப்பப் பழிவருவ செய்பவோ
    தாமேயும் போகும் உயிர்க்கு
    (பொரு.72 படைசெருக்கு 9) 1284
    செம்மல் / மல்-மல்லன்-போர்வீரன்,
    சீர்பெற வளர்ந்த தோள்வலி உடையான்
    'புறத்திரட்டு' தனில் 1315 (படைச்செருக்கு-9) ஆம் பாடல்
    'பெருந்தொகை' யில் 'தும்பை-தானைநிலை' என தலைக்
    குறிப்படைய 505 ஆம் பாடல் மற்றும்
    'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல்.
    'தானை யானை குதிரை என்ற' எனத் தொடங்கும் 72ஆம்
    சூத்திரம் 'இனிப்போர்த் தொழிலால் தானை நிலைவருமாறு'
    எனும் குறிப்பின் கீழ் மேற்கோள் காட்டுவதில் 'தகடூர்
    யாத்திரை'ப் பாடல் என காண்பது.
    இளம்பூரணார் உரையில் "ஒருவீரன் கூற்று" என காண்ப
    தாக மயிலை சீனி வேங்கடசாமி குறிக்கினறார்.

    22

    பஃறொடை வெண்பா
    நகைஉள்ளும் நல்லவை எய்தார் பகைநலிய
    ஞாட்புள்ளும் நல்லவை எய்தார் விழைவொடு
    வேற்றுக் களத்தில் ஒருவர் தமராக
    செற்றார் ஒருவர்மேல் செம்மாந் தடர்த் தாற்றி
    புண்ணும் படுக்கலார் தாம்படார் போந்தாரக்
    கண்ணும் படுங்கொல் கவன்று
    (பொரு.72 படைசெருக்கு 10) 1285
    ஞாட்பு=போர், செம்மாந்து=பெருமிதம்

    23

    பஃறொடை வெண்பா
    வேல்தானை வெள்ளம் நெறிதர ஆற்றுக்
    கடும்புனல் கல்சிறை போல நடுக்காது
    நிற்பவற் கல்லால் எளியவோ பொற்பார்
    முறிஇலைக் கண்ணி முழுவுத்தோள் மன்னர்
    அறியுநர் என்னும் செருக்கு
    (பொரு.72 படைசெருக்கு 11) 1286
    நெறிதர=முன்னேற, கல்சிறை=கற்களின்
    தொகுப்பால் (ஆற்றுநீர்) ஓடிவிடாமல் தடுத்து
    நிறுத்தும் மடை= கல்லணை

    24

    இன்னிசை வெண்பா
    பிறந்த பொழுதேயும் பெய்தண்தார் மன்னர்க்(கு)
    உறழ்பு கொடுத்தாரே மூத்தார் உடம்பொடு
    முற்றுழிக் கண்ணும் இளையரே தம்கோமான்
    குற்றுழிச் சாவா தவர்
    (பொரு.72 படைசெருக்கு 12) 1287
    உறழ்பு=திரள்தோள், 'இடிஎதிர்கழறும்கால் உறழ்பு
    எழுந்தவர்' , 'உறழ்த்தோள்',= பரிபாடல்

    25

    நேரிசை வெண்பா
    பரவை வேல்தானை பகல்அஞ்சுவேனோ
    இரவே எறிஎன்றாய் என்னை - விரைவிரைந்து
    வேந்துநீ ஆயினாய் அன்றிப் புகுவதோ
    போந்தென்னைச் செல்லிய நா
    (பொரு.72 படைசெருக்கு 13) 1288
    பரவை=பரந்த நீர்பரப்பினை உடைய கடல் (உவமையாக)

    26

    வெண்பா
    வான்வணக்கி அன்ன வலிதரு நீள்தடக்கை
    யனைக்கீது என்கையில் எஃகமால் - தானும்
    விலங்கால் ஒருகைத்தால் வெல்கைநன் றென்னும்
    நலம்காணேன் நாணுத் தகும்
    (பொரு.72 படைசெருக்கு 14) 1289
    வான்வணக்கிஅன்ன=வானவில் போல் குமிழ்த்த

    27

    வெண்பா
    காலாளாய்க் காலாள் எறியான் களிற்றெருத்தின்
    மேலான் எறியான் மிகநாணக் - காளை
    கருத்தினதே என்று களிறெறியான் அம்ம
    தருக்கினனே சான்றோன் மகன்
    (பொரு.72 படைசெருக்கு 15) 1290
    எருத்து=பிடரி=கழுத்தின் பின்புறம்.சான்றோன்=போர்வீரன்
    "சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" புற-312

    28

    ஆசிரியப்பா
    பல்சான் றீரே பல்சான் றீரே
    வீழ்ந்த புரிசை சோர்ந்த ஞாயில்
    கணையில் தூர்ந்த கன்றுமேய் கிடங்கின்
    மல்லல் மூதூர் பல்சான் றீரே
    பல்நாள் வருந்தி இளைஞரும் முதியரும்
    நல்நுதல் மகளிரும் இன்னும்கண் டுவப்ப
    யாமம் கொள்பவர் ஒழிய மேல்நாள்
    கொல்படை மொய்த்த குன்றுயிர் விழுப்புண்
    நெய்யுடைப் பஞ்சி சேர்த்திப் பைஎனக்
    கருங்குரல் நொச்சி மிலைந்த
    திருந்துவேல் விடலை காப்பமைந் தோனே
    (பொரு.74 எயில்காத்தல்8) 1310
    புறம் 195, 246 லும் முதலடி ஈதே. சான்றோர்=(விளியில் சான்றீர்)
    போர்த்தொழில் கொண்டோர். ஈழகுலச் சான்றார் ஏனாதி
    நாயனார் என்பார் சேக்கிழார் சான்றார் திரிபு சாணார்
    என்பார் மயிலைசீனிவேங்கடசாமி. ஞாயில்=எளிதில் சாய்ந்து
    வீழாது நிலைகொள வளைஉருவில் துருத்தி அடியில் பருத்துள்ள
    மதில். புரிசை=காப்பு அரணுடை கோட்டை, [எயில்=எய்+இல்,
    நின்று வேல் கணை எய்ய ஏற்ற மதிலுருப்புடைஅரண்].
    கிடங்கு = அரணுக்கு மேலும் துணையாக தேர் குதிரை யானைப்
    படைகள் அணித்தே நெருங்க இயலாது இயற்கையாக நீர் தேங்கு
    உருப்புடன், (கராம் முதலை முதலிய கொடிய நீர்வாழ் உயிரினமும்
    கூடியதும்) ஆகிய பகுதி [அகழி=செயற்கையாக அகழ்ந்த கிடங்கு]
    விடலை = ஆணில் போர் செய்ய தகுந்த பருவம் எய்தியவன்
    நொச்சி= பகைவர் தம்முடை அரணைத் வெளியினின்று தாக்க
    ஓர் மன்னன் அதனை ஊள்ளிருந்து எதிர்ப்பது

    29

    ஆசிரியப்பா
    இவனே பொறிவரிஅன்ன பொங்குளை வயமான்
    மேலோன் யாரென வினவின் தோலா
    உரன்உடை உள்ளத்து ஒன்னார் உயிர்க்கும்
    சுரைஅமை நெடுவேல் சுடர்ப் பூணோனே
    அவனே எம்இறை ஈதவன் மாவே
    கறுவுகொள் நெஞ்சம் கதுவவந் தனனே
    யாவறும் குறுகல் ஓம்புமின் குறைநாள் மறவீர்
    நெருநல் எல்லி நிரைவரு கடும்திறல்
    பருமத யானை பதைக்க நூறி
    அடுகளத் தொழிந்தோன் தம்பி தொடுகழல்
    நொச்சித் தெரியல் நெடுந்தகை
    அச்சம் அறியான் ஆரணங் கினனே
    (பொரு.74 எயில்காத்தல்) 1311
    பொறிவரி அன்ன=வரியினை பொறியாக உடைய
    புலி போன்ற, பொங்குளை வயமான்= நெருங்கிக்
    கொத்தாக காணும் மயிற் தொகுதி உடைய சிங்கம்,
    அணங்கினன்= பாய்நிலை சீற்றத்தினன்

    30

    வெண்பா
    கார்தரும் புல்அணல் கண்அஞ்சாக் காளைதன்
    தார்பற்றி ஏர்தரும் தோள்நோக்கித் தார்ப்பின்னை
    ஞாட்பினுள் யானைக் கணம்நோக்கி யானைப்பின்
    தேர்க்குழாம் நோக்கித்தன் மாநோக்கிக் கூர்த்த
    கணைவரவு நோக்கித்தன் வேல்நோக்கி பின்னைக்
    கிணைவனை நோக்கி நகும்
    (பொரு.76 தானை மறம் 5) 1332
    கார்தரும் புல்அணல்=கருமைநிற இளமைத் தாடி
    "மை அணல் காளை"-ஐங்குறு-389/புறம்-83,
    'புல்அணலோனே'-புறம்310, மா=(ஈங்கு) குதிரை,
    கணை=பகழி/அம்பு, கிணை=போர்மேல் செல்வோர்
    சீர்பெற்று ஏக ஒலிக்கும் கருவி
    தொல்.பொரு.புறத்திணைஇயல் நச்சி.உரை சூ.63
    "இயங்குபடை அரவம்" த்தின் "வருவிசைப் புனலை
    கற்சிலைபோல . . . " எனும் அடிக்கு மேற்கோளாக,
    மற்றும் புறத்திரட்டு 1370ஆம்பாடலாக"பொன்முடியார்
    ஆங்கு அவனை கண்டு கூறியது" எனும் தலைப்புடன்
    காண்பது இப்பாடல்

    31

    ஆசிரியப்பா
    இகழ்தல் ஓம்புமின் புகழ்சால் மறவீர்
    கண்இமைப் பளவில் கணைசெல் கடுவிசைப்
    பண்அமைப் புரவி பண்புபா ராட்டி
    எல்இடை படர்தந் தோனே கல்என
    வேந்தூர் யானைக் கல்லது
    ஏந்துவான் போலான்தன் இலங்கிலை வேலே
    (பொரு.76 தானை மறம் 12) 1339

    32

    ஆசிரியப்பா
    அதிராது அற்றம் நோக்கும் ஞாயிலுள்
    கதிர்விடு சுடரின் விளங்கும் வெள்வேல்
    எதிரிய திருவின் இளையோன் இன்றுதன்
    குதிரை தோன்ற வந்துநின் றனனே
    அவன்கை ஒண்படை இகழ்தல் ஓம்புமின்
    விழுச்சீர் விண்பெரு நெடுங்குடை வேந்தன்
    கண்படை பெறாஅன் வைகினன் இவன்கைத்
    திண்கூர் எ�கம் திறந்த
    புண்கூர் யானை நவில்குரல் கேட்டே
    (பொரு.76 தானை மறம் 13) 1340
    எ�கம்=கையில் ஏந்தி எறிந்து தாக்கும் படைக்கலன்

    33

    ஆசிரியப்பா
    கட்டி அன்ன காரி மேலோன்
    தொட்டது கழலே கையது வேலே
    கிட்டிய அதுவும் களிறே ஒட்டிய
    தனை முழுதுடன் விடுத்துநம்
    யானை காமின்அவன் பிறிதெரி யலனே
    (பொரு.76 தானை மறம் 14) 1341
    கட்டி=வீரம் மிக்க ஓர் குறுமன்னன்,
    (நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி
    துன்அருங் கடுந்திறல் கங்கன் கட்டி
    பொன்அணி வல்வில் புன்றுறை ......அகம்-44)
    காரி=கரியநிற குதிரை

    34

    ஆசிரியப்பா
    அஞ்சுதக் கனளே அஞ்சுதக் கனளே
    பயறு காவலர் பந்தர் அன்ன
    அலறுதலை முதியாள் அஞ்சுதக் கனளே
    வெஞ்சமத்து
    என்செய் கென்னும் வேந்தற்கு
    அஞ்சல் என்பதோர் களிறீன் றனனே
    (பொரு.76 தானை மறம் 15) 1342
    வெஞ்சமம்=போர்க்களம்

    35

    ஆசிரியப்பா
    வல்லோன் செய்த வகைஅமை வனப்பின்
    கொல் வினை முடியக் குருதிக் கூர்இலை
    வெல்வேல் கைவலன் ஏந்திக் கொள்எனின்
    கொள்ளும் காலும் மாவேண் டானே
    மேலோன்
    அறிவொடு புணர்ந்த நெறியின் புரவிக்
    கழல்கால் இளையோன் அழல்திகழ் வெகுளி
    இகழ்தல் ஓம்புமின் புகழ்சால் மன்னீர்
    தொல்லை ஞான்றைச் செருவினுள் இவன்கை
    வேல்வாய் வீழ்ந்தோர் பெண்டிர் கைம்மையின்
    அறுத்த கூந்தல் பிறக்கம் சகடம்
    பொறுத்தல் செல்லா பலமுரிந் தனவே
    அதனால்
    வல்லோர் பூழை நில்மின் கல்என
    வெஞ்சமம் குரைப்பக் கூர்தலின்
    அஞ்சுதக(வு) உடைத்(து)இவ் ஆற்றலோன் நிலையே
    (பொரு.76 தானை மறம் 16) 1343

    36

    ஆசிரியப்பா
    உண்டது கள்ளும்அன்று களிபட் டனனே
    ஊர்ந்தது புள்ளும்அன்று புறத்தயங் கும்மே
    மேலோர்
    தெய்வம் அல்லன் மகனே நொய்தாங்குத்
    தெரிஅலர் எடுத்த பாசிலைக் கண்ணி
    வெருவத் தக்க வேலி னோனே
    வேலே
    பைய நிமிர்ந்து பருந்தின் ஓடிக்
    கழிந்தார்த் தன்றவன் எறிந்ததைக் கழல்தொட்டு
    ஏந்துவரை இவரும் புலிபோல்
    வேந்துவந் தூரும் வெஞ்சினக் களிறே
    (பொரு.76 தானை மறம் 17) 1344

    37

    ஆசிரியப்பா
    நிலைஅமை நெடும்திணை ஏறி நல்லோள்
    இலைபொலி புதுப்பூண் கணவனொ(டு) ஊடி
    சிந்தி அன்ன சேடுபடு வனப்பின்
    புள்ளிக் காரி மேலோன் தெள்ளிதின்
    உள்ளினும் பனிக்கும் ஒருவே லோனே
    குண்டுநீர்க் கிடங்கின் கெண்டைப் பார்க்கும்
    மணிநிறச் சிறுசிரல் போலநம்
    அணிநல் யானைக் கூ(று)அளக் கும்மே
    (பொரு.76 தானை மறம் 18) 1345
    சிரல்=பாய்ந்து மூழ்கி மீன் கவ்வு புள்-மீன்கொத்தி

    38

    ஆசிரியப்பா
    வருக வருக தாங்கன்மின் தாங்கன்மின்
    வெரூஉக் குதிரை ஒருவே லோனே
    இருகை மாக்களை யா(ன்)அஞ் சலனே
    நாற்கை மாக்கள் நாட்டகத்(து) இல்லை
    அவனும்
    தாரொடு துயல்வரும் தயங்குமணிக் கொடும்பூண்
    மார்புடைக் கருந்தலை எற்குறித் தனனே
    யானும்
    கடிகமழ் உவகைக் கைவல் காட்சியன்
    துடியவன் கவன்அரை அறுவைஈந் தனனே
    அதனால்
    என்னா தாகினும் ஆக மூந்நீர்
    நீர்கொள் பெருங்குளம் தயங்க நாளை
    நோய்பொதி நெஞ்சம் குளிப்ப அவன்தாய்
    மூழ்குவள் ஒன்றோ அன்றேல் என்தாய்
    மூழ்குவள் ஒன்றோ அறியேன்
    தாயும் யாயும் உடன் மூழ்குபவே
    (பொரு.76 தானை மறம் 19) 1346

    39

    வெண்பா
    அடுதிறல் முன்பினன் ஆற்ற முருக்கிப்
    படுதலை பாறுண்ண நூறி வடிஇலைவேல்
    வீசிப் பெயர்பவன் ஊர்ந்தமாத் தீதின்றி
    நாண்மகிழ் தூங்கும் துடியன் துடிகொட்டும்
    பாணியில் கொட்டும் குளம்பு
    (பொரு.77 குதிரை மறம் 4) 1350

    40

    ஆசிரியப்பா
    என்கண் டறிகோ என்கண் டறிகோ
    என்மகன் ஆதல் என்கண் டறிகோ
    கண்ணே கணைமுழ் கினவே தலையே
    வண்ண மாலை வாள்விடக் குறைந்தன
    வாயே
    பொருநுனைப் பகழி மூழ்கலின் புலால்வழிந்து
    ஆவ நாழிகை அம்புசெறித் தற்றே
    நெஞ்சே வெஞ்சரம் கடந்தன குறங்கே
    நிறம் கரந்து பல்சரம் நிரைத்தன
    அதனால்
    அவிழ்பூ அப்பணைக் கிடந்தகாளை
    கவிழ்பூங் கழற்றின் காய்போன் றனனே
    (பொரு. 79 மூதின் மறம் 4) 1375
    'பெருந்தொகை' திரட்டினில் பாடல் எண் 702 'மூதின்
    முல்லை' யில் "துறக்கத்துப்பெயர்ந்த நெடுங்கோளாதன்
    தாய் இறந்துபட்ட தலைப் பெயல்நிலை" எனும்
    தலைப்புடன் காண்பது. மற்றும்,
    'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல்.
    'மாற்றரும் கூற்றம்' எனத் தொடங்கும் 79ஆம் சூத்திரம்
    'நல்லோள் கணவனொடு நனிஅழல்புகீஇ' என்றடியின்
    விளக்கத்து மேற்கோளில் மேற்கண்ட அதே கொளுவுடன்
    'தகடூர் யாத்திரை'ப் பாடல் என காண்பது இப்பாடல்.

    41

    ஆசிரியப்பா
    வாதுவல் வயிறே வாதுவல் வயிறே
    நோலா ததனகத் துள்ளீன் றனனே
    பொருந்தா மன்னர் அருஞ்சமம் முருக்கி
    அக்களத் தொழிதல் செல்லாய் மிக்க
    புகர்முகக் குஞ்சரம் எறிந்த எ�கம்
    அதன்முகத் தொழிய நீபோந் தனையே
    எம்மில் செய்யா அரும்பழி செய்த
    கல்லாக் காளையை ஈன்ற வயிறே
    (பொரு. 79 மூதின் மறம் 7) 1378
    'பெருந்தொகை' திரட்டினில் பாடல் எண் 705 மேற்படி
    குறிப்பு பொருந்துவது. மற்றும், 'புறத்திரட்டு' தனில் 1407.
    'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல்.
    "கரியிடை வேலொழியப் போந்தற்குத் தாய்தப வந்த
    தலைப்பெயல் நிலை" கொளுவுடன்'தகடூர் யாத்திரை'ப்
    பாடல் என காண்பது இப்பாடல்.

    42

    வெண்பா
    தருமமும் ஈதேயாம் தானமும் ஈதேயாம்
    கருமமும் காணுங்கால் ஈதே - செருமுனையில்
    கோள்வாய் மறவர் தலைதுமிய என்மகன்
    வாள்வாய் முயங்கப் பெறின்
    (பொரு. 79 மூதின் மறம் 8) 1379
    ['பெருந்தொகை' திரட்டினில் பாடல் எண் 706
    மேற்படி குறிப்பு பொருந்துவது]

    43

    வெண்பா
    இன்பம் உடம்புகொண் டெய்துவீர் காண்மினோ
    அன்பின் உயிர்மறக்கும் ஆரணங்கு - தன்கணவன்
    அல்லாமை உட்கொள்ளும் அச்சம் பயந்ததே
    புல்லார் மெய்சிதைத்த புண்
    (பொரு. 79 மூதின் மறம் 9) 1380
    'புறத்திரட்டு' தனில் 1405ஆம் (மூதின்மறம்82)
    'பெருந்தொகை' யில் 'ஆஞ்சிக்காஞ்சி' பாடல்
    எண் 707 மற்றும்,
    'நச்சினார்க்கினியர்' தொல்.பொருள் புற. இயல்.
    'மாற்றரும் கூற்றம்' எனத் தொடங்கும் சூத்.79
    'நீத்த கணவன் தீர்த்த வேலின்' என்றடியின்
    விளக்கத்து மேற்கோளில் 'தகடூர் யாத்திரை'ப்
    பாடல் என குறிப்பது இப்பாடல்.

    44

    வெண்பா
    இரவலர் வம்மின் எனஇசைத் தல்இன்றிப்
    புரவலன் மாய்ந்துழியும் பொங்கும் - உரைஅழுங்க
    வேற்கண் ணியர்அழுத வெம்பூசல் கேட்டடங்கா
    தோல்கண்ண போலும் துடி
    (பொரு. 81 இரங்கல் 2) 1405
    'புறத்திரட்டு' தனில் 1438ஆம் (இரங்கல் 3) பாடல்
    'பெருந்தொகை' யில் 'பூசல்மயக்கம்' 710 மற்றும்
    'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல்.
    'மாற்றரும் கூற்றம்' எனத் தொடங்கும் 79ஆம் சூத்திரம்
    'ஆய்ந்த பூசல் மயக்கத்தானும்' என்றடியின் உரை
    மேற்கோளில் 'தகடூர் யாத்திரை'ப் பாடல் என குறிப்பது
    இப்பாடல்.

    45

    ஆசிரியப்பா
    இழும்என முழங்கும் முரசமொடு குழுமிய
    ஒன்னா மள்ளர்த் தந்த மூன்னூர்ச்
    சிறையில் விலங்கிச் செவ்வேல் ஏந்தி
    ஆண்டு பட்டெனனே நெடுந்தகை
    ஈண்டுநின் றம்ம அணியின் பெரும்புகழே
    (பொரு. 81 இரங்கல் 14) 1417
    (ஒவ்வோர் பாடல் கடையிலும்
    பிறைக்குறிக்குள் காண்பவை
    நீதித்திரட்டினில் இப் பாடல்கள்
    வைகும் வரிசை எண் குறிப்பு)

    46

    நேரிசை வெண்பா
    செவ்விக் கடாக்களிற்றின் செம்மத் தகத்தெரிந்த
    கவ்வை நெடுவேல் கொணரானேல் - எவ்வை
    கடிபட்ட வில்லகத்துக் கைபார்த் திருப்பன்
    விடிவளவில் சென்று விரைந்து

    தகடூர் யாத்திரைப்பாடலாக் புறத்திரட்டினில் உள்ள
    44 (மயிலை சீனி வேங்கடசாமி) பாடல்களில் ஒன்று

    47

    ஆசிரியப்பா
    கலைஎனப் பாய்ந்தமாவும் அலை என
    மயங்கமர் உழந்த யானையும் இயம்படச்
    சிலைஅலைத் துய்ந்த வயவரும் என்றிவை
    பலபுறம் கண்டோர் முன்னான் நீயே
    அமர்புறம் கண்ட பசும்பூண் வேந்தே
    மாக்களி றுதைத்த கணைசேர் பைந்தலை
    மூக்கறு நுங்கிற் றூற்றயல் கிடப்பக்
    களையாக் கழல்கால் கருங்கண் ஆடவர்
    உருகெழு வெகுளியர் கெறுத்தனர் ஆர்ப்ப
    மிளைபோய் இன்று நாளை நாமே
    உரும்இசை மொண்ட மயிர்க்கண்(டு)
    இருமுர சிரங்க ஊர்கொள் குவமே

    இப்பாடல், நச்.தொல்.பொருள்.புற.'கொள்ளார் தேஎம்
    குறித்த கொற்றமும்' எனத் தொடங்கும் 67ஆம்சூத்.
    'அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்'
    என்ற அடி உரையில் 'தகடூர் யாத்திரை'ப் பாடலாக
    மேற்கோள் காட்டுவது. ''இ�து சேரமான்'பொன்முடியா'
    ரையும் 'அரிசில் கிழா'ரையும் நோக்கித் 'தன் படைபட்ட
    தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது' எனும்
    கொளுவுடன் காண்பது. பெருந்தொகை 483 பாடலுக்கு
    மேற்கண்ட வாறே தலைக் குறிப்பு உள்ளது.

    48

    ஆசிரியப்பா
    மெய்ம்மலி மனத்தின் எம்எதிர் நின்றோன்
    அடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டில்
    கைஇகந்து அமரும் தைஅணல் புரவித்
    தளைஅவிழ்க் கண்ணி இளையோன் சீறின்
    விண்உயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத்
    தண்அறும் கடாஅம் உமிழ்ந்த வெண்கோட்(டு)
    அண்ணல் யானை எறிதல் ஒன்றோ
    மெய்ம்மலி உவகைய நம்மருங்கு வருதல்
    கடிஅமை கள்உண் கைவல் காட்சித்
    துடியன் உன்கண் நோக்கிச் சிறிய
    கொலைமொழி முன்னிச் சிதர்ந்தனையதன்
    வேறிரித் திட்டு நகுதலும் தகுமே

    இப்பாடல்,
    'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல்.
    'இயங்குபடை அரவம்' எனத் தொடங்கும் 63ஆம்
    சூத்திரம் 'பொருளின்றி உய்த்த போராண் பக்கமும்'
    என்பதன் உரையில் 'தகடூர் யாத்திரை'ப் பாடல் என
    மேற்கோள் காட்டுவது இபப்பாடல் ''இ�து அதிகமானால்
    சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான்
    (பெருஞ்சேரலிரும்பொறை) முனைப்படை நின்றானைக்
    கண்டு 'அரிசில் கிழார்'கூறியது'' எனும் கொளுவுடையது.

    49

    ஆசிரியப்பா
    மறனுடைய மறவர்க் கேறஇடன் இன்றி
    நெய்யோ டைஅவி அப்பிய எவ்வாயும்
    எந்திரப் பறவை இயற்றின நிறீஇக்
    கல்லும் கவணும் கடுவிசைப் பொறியும்
    வில்லுங் கணையும் பலபட பரப்பி
    பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும்
    என்றிவை பலவும் சென்றுசென் றெறியு
    முந்தை மகளிரை இயற்றிப் பின்றை
    எய்பெரும் பகழி வாயில் துக்கிச்
    சுட்டல் போயின் றாயினும் வட்டத்
    தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர
    நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்கும்
    தாக்கரும் தானை இறும்பொறை
    பூக்கோள் தண்ணுமை கேட்டொறும் கலுழ்ந்தே

    அக்காலத்து போர்களங்களிலேயே மனித ஆற்றலை
    தேக்கிவைத்து எய்யும் யந்திர கல்லெறி பெரும்கவண்,
    கணைஎறி பொறி, சூடேற்றிய நெய்யை விசிறும் கலம்
    வட்டவடிவிலான எறியும் எரிபந்தம் (திருமால்கை ஆழி)
    என இக்லத்து பீரங்கி முதலியவை களின் முன்னோடி
    கள் எயில் தாக்கலில் பயன் கொண்டமை ஈங்கு குறிக்
    கப்படுகின்றன. "கற்பொறியும்" எனதொடங்கும் புறப்
    பொருள் வெண்பாமாலை பாடல் இவற்றையே குறித்து
    மேலும் பாம்புகள் கடிக்கும் குரங்குகள் முதலியனவும்
    பயன்பட அதனை விலக்கியே எயில் ஏறுவார் என
    'ஏணி மற'த்தில் காட்டும். கிடங்கு/அகழிகளைக்
    கடக்குங்கால் முதலை, கராம், சுறவு என பலவும்
    தாக்க வருவன அறிவோம். மதில் ஏறுவோறும் நன்கு
    பழக்கிய உடும்பினை பயன்கொள்வதும் அறிவோம்.
    கிளிகளை பழக்கி அவைகொணரும் கதிர்மணிகளால்
    கோட்டைக்குள் சிறைபட்டோர் பயன்கொண்டமையும்
    சங்கநூல் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளன. ஈங்கு
    தொங்கி தூக்கும் நிலை கோட்டை வாயில்கள்
    குறிப்பிடப்படுகின்றன. நச்சினார் தம் உரையில்
    யவனர் சிலவற்றை வடிவமைத்தனர் என்பார்.

    மேலும்
    தொல். பொரு. புறத். இயல் நச்சி. உரை "கொள்ளார்
    தேஎம் குறித்த" 67 ஆம் சூத்திரத்தின் "தொல் எயிற்கு
    இவர்தலும்" எனும் அடியின் விளக்கமாக பாடல் மேற்
    கோள் மற்றும் "பொன்முடியார் பாட்டும் இது" என
    குறிப்பும் உள்ளது

    50

    ஆசிரியப்பா
    இல்எழும் வயலை இலையு மூழ்த்தன
    சொல்வன் மாக்களில் செல்லும் அ�கின
    மயிலடி இலைய மாக்குரல் நொச்சிப்
    பயிலிணர் நறும்பொழில் பாவையும் தமியள்
    ஏதி லாளன் பொய்ப்பப் பொய்மருண்டு
    பேதை போயினள் பிறங்குமலை இறந்தென
    மான்ற மாலை மனையோர் புலம்ப
    ஈன்ற தாயும் இடும்பையள் எனநினைந்து
    அங்கண் வானத் தகடூர்ந்து திரிதரும்
    திங்களம் கடவுள் தெளித்துநீ பெயர்த்தரில்
    கடிமலர்க் கொன்றைக் காவலன் சூடிய
    குடுமியம் செல்வம் குன்றினும் குன்றாய்
    தண்பொழில் கவித்த தமனிய வெண்குடை
    ஒண்புகழ் தந்தைக் குறுதி வேண்டித்
    தயங்குநடைத் முதுமை தாங்கித் தான்தனி
    இயங்குநடை இளமை இன்புற் றீந்த
    மான்தேர் அண்ணல் தோன்றுபுகழ் போலத்
    துளங்கிருள் இரவினும் மன்ற
    விளங்குவை மன்னாஇவ் வியலிடத் தானே

    இதனில் சிலவரிகள் தந்தையின் முதுமையை
    வாங்கிக்கொண்டுதன் இளமையை தந்தைக்கு
    அளித்த யயாதி கதை குறிக்கின்றது போலும்
    தொல். பொரு. புறத். இயல் நச்சி. உரை "தன்னும்
    அவளும் சுட்டி" 36 ஆம் சூத்திரத்தின் விளக்கமாக
    மேற்கோள் பாடலாக" இது தெய்வத்தை நோக்கிக்
    கூறியது" எனும் குறிப்புடன் காண்பது

    51

    ஆசிரியப்பா
    கனவே போலவும் நனவே போலவும்
    முன்னிய தன்றிஎன் உள்ளகம் நடுக்குறக்
    கருநிறக் காக்கையும் வெண்ணிற கூகையும்
    இருவகை உயர்திணைக் கேந்திய கொடியடும்
    வெருவந்த தோற்றத்தால் உருவின பலகூளிக்
    கணங்கள் குருதிமண்டை சுமந்தா டவும்
    பறைஅன்ன விழித்தகண்ணாள் பிறைஎன்ன பேர்எயிற்றாள்
    குவடன்ன பெருமுலையோள் இடைகரந்த பொருமாட்டாள்
    இடிஅன்ன பெரும்குரலாள் தடிவாயால் தசைபுதைத்தாள்
    கடலன்ன பெருமேனியாள் தாள்பின்னாக் கமழ்கோதையாள்
    சிலைஎன்ன புருவத்தாள் சென்றேந்திய அகல்அல்குலாள்
    மழையும் அஞ்சும் வளியும் போலும்
    செலவினாள் ஒருபெண் டாட்டி
    தலைவிரித்துத் தடக்கை நாற்றி
    மறன்அறிந்து மாறு கொண் டறியா
    அறிவுக்(கு)இம் முறைநாள் இவ்வள(வு) அன்றே
    பூவிரல் காட்டி நீறுபொங் கத்தன்
    கைகளால் நிலன்அடித்துத் தூரை இடம்செய்து
    காடு புகுதல் கண்டேன் என்றும்
    கவலை நெஞ்சமொடு அவலம் நீத்தினாள்
    அன்றது மன்றஅவ் அதிகமான் தாய்க்கே

    தக்கயாகப் பரணி உரையாசிரியர் காளிக்குக்
    கூளி கூறிய 397 ஆம் தாழிசைக்கு மேற்கோள்
    காட்டுவது இப்பாடல் என மறைந்த தமிழ் நூல்
    பாடல்களை தொகுத்த பெரியார் மயிலை சீனி
    வேங்கடசாமி தன் தொகுப்பு நூலில் குறித்துள்ளார்.

    52

    ஆசிரியப்பா
    வீங்குசெலல் பரிதி வெவ்வெயில் எறித்தலின்
    நோங்கண் நோக்கா தாங்கு நீபோய்
    அரசுநுகம் பூண்ட பின்னர் நின்னலை
    முரசுடை வேந்தர் முகம்திரிந் தனரே
    அ�தான்று
    உவவுமதி நோக்குநர் போலப் பாணரொடு
    வயிரியர் பொருநர்நின் பதிநோக் கினரே
    அதனால்
    அதரும் கோடு முதலிய கூட்டுண்(டு)
    இகலின் இசைமேஎந் தோன்றித்
    தீதில ஆகிய நீபெறு நாளே

    தொல்.பொரு.புறத்.இயல் நச்சி.உரை "வெறியறி
    வெவ்வாய் வேலன்" எனும் 60 ஆம் சூத்திரத்தின்
    "தாவா விழுப்புகழ் பூவைநிலையும்" எனும் அடியின்
    விளக்க மேற்கோளாக"இது முடியும் குடையும்
    ஒழித்து அரசற்கு உரியன கூறி இழித்துக் கூறியும்
    புகழ் மிகுத்தது" என மற்ற மேற்கோள் பாடல்களுக்
    குள்ளன போல் ஓர் புலவர்-அரசன் தொடர்பு காட்டப்
    படுதலால் தகடூர் யாத்திரையைச் சேர்ந்ததாகத்
    தோன்றுகின்ற மேலும் பெருந்தொகை கண்ணும்
    (பாடல் 724) "அரசு புகழைக் காட்டு வாழ்வோர்க்குக்
    கூறியது" எனும் தலைப்புக் குறிப்புள்ளது. அதான்று
    ஆசிரியப்பாவில் இடை இடை 'அ�தான்று',
    'அதனால்' என தனிச்சொற்கள் 8, 34, 35, 36, 38, 40
    ஆம் பாடல்களைப்போல் யாப்பமைப்பு காணப்
    படுதலாலும் உரையிடை இட்ட (தனிச் சொல்)
    கொண்டநூல் என உரையாசிரியர்களால் குறிக்கப்
    படுததாலும் 'தகடூர்யாத்திரை' பாடலாகலாம்.

    53

    நேரிசை வெண்பா
    தாக்கற்குப் பேரும் தகர்போல் மதிலகத்(து)
    ஊக்கம் உடையோர் ஒதுங்கியும் - கார்க்கண்
    இடிபுறப் பட்டாங்கு எதிர்ஏற்றார் மாற்றார்
    அடிபிறக் கீடும் அரிது

    [தகர்= (மறி)ஆடு]
    'புறத்திரட்டு' தனில் 1341ஆம்பாடல் (எயில் காத்தல் 7) .
    'பெருந்தொகை' யில் 'எயில்காத்தல்' எனும் தலைக்
    குறிப்புடைய 470 ஆம் பாடல் மற்றும்
    'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல்.
    'குடையும் வாளுநாள் கோளன்றி' எனத் தொடங்கும் 68ஆம்
    சூத்திரம் 'புறத்தோன் வீழ்ந்த புதுமையானும்' என்றடியின்
    உரை மேற்கோள் காட்டுவதில் 'தகடூர் யாத்திரை'ப்
    பாடல் எனவும் "இ�து அகத்தொன் வீழ்ந்த புதுமை" என
    குறிப்புடன் விளக்குகிறார்.ஆனால் நீதித்திரட்டினில்
    'பெரும்பொருள்விளக்க' ப் பாடலாக காட்டப்பட்டுள்ளது"

    54

    வெண்பா
    மழுவான் மிளையோய் மதிலான் அகழ்ந்தூர்ந்(து)
    எழுவாள் ஆன் ஏற்று உண்ட(து) எல்லாம் - இழும்என
    மட்(டு)அவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ
    விட்டெரிய விட்ட மிகை

    'புறத்திரட்டு' தனில் 1340ஆம் (எயில் காத்தல்) பாடல்
    'பெருந்தொகை' யில் 'புறத்தோன் வீழ்ந்த புதுமை' எனும்
    தலைக்குறிப்படைய 497 ஆம் பாடல் மற்றும்
    'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல்.
    'கொள்ளார் தேஎம்' எனத் தொடங்கும் 67ஆம்
    சூத்திரம் 'உள்ளியதுமுடிக்கும்' என்றடியின் உரையில்
    மேற்கோள் காட்டுவதில் 'தகடூர் யாத்திரை'ப் பாடல் என
    காண்பதில் ஒன்று இப்பாடல். ஆனால் நீதித்திரட்டினில்
    'பெரும்பொருள்விளக்க' ப் பாடலாக காட்டப்பட்டுள்ளது

    55

    வெண்பா
    பொருசினம் ஆறாப் புலிபோத் துறையும்
    அருவரை கண்டார்போல் அஞ்சி ஒருவரும்
    செல்லா மதில்அகத்து வீற்றிருந்தான் தேர் வேந்தன்
    எல்லார்க்கும் எல்லாம் கொடுத்து

    [புலிபோத்து=ஆண்புலி]
    'புறத்திரட்டு' தனில் 1339ஆம் (எயில் காத்தல் 5)
    'பெருந்தொகை' யில் 'உழிஞை-அகத்தொன் செல்வம்'
    எனும் தலைக்குறிப்படைய 460 ஆம் பாடல் மற்றும்
    'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல்.
    'கொள்ளார் தேஎம்' எனத் தொடங்கும் 67ஆம்
    சூத்திரம் 'அகத்தோன் செல்வம்' என்றடியின் உரையில்
    மேற்கோள் காட்டுவதில் 'தகடூர் யாத்திரை'ப் பாடல் என
    காண்பது இப்பாடல்.ஆனால் நீதித்திரட்டினில்
    'பெரும்பொருள்விளக்க' ப் பாடலாக காட்டப்பட்டுள்ளது

    56

    நேரிசை வெண்பா
    குன்றுயர் திங்கள்போல் கொற்றக் குடைஒன்று
    நின்றுயர் வாயில் புறம்நிவப்ப - ஒன்றார்
    விளங்குருவப் பல்குடை விண்மீன்போல் தோன்றித்
    துளங்கினவே தோற்றம் தொலைந்து

    தொல்.பொரு.புறத்.இயல் நச்சி.உரை "குடையும்
    வாளும் நாள் கோள்" எனும் 68 ஆம் சூத்திரத்தின்
    முதலடியின் விளக்க மேற்கோள் பாடலாக" இ�து
    அகத்தோன் குடைநாட்கோள்" என குறிக்கின்றார்.
    புறத்திரட்டு 1337 எயில்காத்தல் 3 ஆக காண்பது
    ஆனால் நீதித்திரட்டினில் 'பெரும்பொருள்விளக்க'ப்
    பாடலாக காட்டப்பட்டுள்ளது


    தகடூர் யாத்திரை
    மரபுத் தமிழ்மொழி நூல்களில் ஊன்றி கற்றோர், தமிழகத்தில் ஒருகால் பயின்றிருந்து காணாமல் மறைந்த பல்லாயிரம் பழம் நூல்களில் தகடூர் யாத்திரை ஒன்றென அறிவர்.

    கல்வெட்டுகள் செப்பேடுகள் போன்ற பழம் ஆவணங்களினின்றும் உரையாசிரிய பெருமக்கள் உரைவிளக்க மேற்கோள்களிலிருந்தும் மறைந்த பல தமிழ்நூல்கள் பற்றி விவரங்கள் அறியப்பட்டுதலும், இதுகாறும் முழு நூல்கள் கிடைக்காமலிருப்பதும், நாமறிவோம். சில தொகுப்பு/திரட்டு நூல்களில் இவற்றின் பாடல்கள் காண்பதும் இவ்வழி குண்டலகேசி, வளையாபதி, முத்தொள்ளாயிரம் போன்றவற்றின் பாக்கள் கிடைத்ததும் நன்கு அறிவோம்.

    தொன்மை மதித்த ஓர் புலவர் புறத்திரட்டு என பல்வகைப் பாக்களை தொகுத்து வைத்தமையால் மறைந்து போன சில நூல்களின் பாக்கள் பற்பல கிடைக்கப் பெற்றன. இதனில் தகடூர் யாத்திரை பாடல்களும் அடங்கும். மற்றுமோர் ஆன்றோர் நீதித்திரட்டு எனும் தொகுப்பினை செய்துள்ளார். இதனில் வேறு நூல்களினின் பாடல்களுடன் சில தகடூர் யாத்திரைப் பாடல்களும் கிட்டின. தொன்மையான நூல்களுக்கு உரை எழுதிய பழம் உரை ஆசிரியர்கள் உரையில் மேற்கோள் காட்டிய சில தகடூர் யாத்திரை பாடல்கள் புறத்திரட்டிலும் காணப்படுகின்றன. பெருந்தொகை என ஓர் தொகுப்பு நூலிலும் அதே தகடூர் யாத்திரைப் பாடல்கள் காணப்படுகின்றன.

    பெருமகனார் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் தன் மறைந்த போன தமிழ்நூல்களில் தகடூர் யாத்திரை பற்றி எழுதிய ஒருசில கருத்துகளின் சுருக்கம்:
    பேராசிரியர், நச்சினார்க்கனியர், தக்கயாகப்பரணி உரையாசிரியர் என்போர் தகடூர் யாத்திரை பாக்களை மேற்கோள் காட்டியுள்ளனர். இம்மூவரும் தகடூர் யாத்திரை யாப்பினைப்பற்றி குறித்துள்ளனர்.
    பேராசிரியர்
    "பாட்டிடை வைத்த குறிப்பினானும் என்பது ஒரு பாட்டு இடைஇடை
    நிற்கும் கருத்தினான் வருவது எனப்படும் என்னை. பாட்டு வருவது
    சிறுபான்மை ஆதலின் அவை தகடூர் யாத்திரை போல்வன"
    நச்சினார்க்கினியர்
    "பாட்டிடை வைத்த குறிப்பினானும்-ஒருபாட்டினை இடைஇடை
    கொண்டு நிற்கும் கருத்தினால் வருவனவும்" "அவை தகடூர் யாத்திரை
    சிலப்பதிகாரம் போல்வன"
    "தொன்மை என்பது உரை விராய் பழமையாகிய கதை பொருளாகச்
    செய்யப்படுவது என்றவாறு. அவை பெருந்தேவனாரால் பாடப்பட்ட
    பாரதமும் தகடூர் யாத்திரை போல்வன"
    "இனி யானை நிலைக்கும் குதிரை நிலை . . . . பிறவும் ஆம்
    . . . இவை தனித்து வராது. தொடர்நிலைச் செய்யுட்கண் வரும்
    அவை தகடூர் யாத்திரையிலும் பாரதத்திலும் காண்க"
    தக்கயாகப்பரணி உரைகாரர்
    "இது தர்க்க வாதம். இது தகடூர் யாத்திரையிலும் உண்டு"

    [தொல்காப்பிய சூத்திரம் பொரு. செய்யு.173]
    "பாட்டிடை வைத்த குறிப்பி னானும்
    பாவின்றி எழுந்த கிளவி யானும்
    பொருளடு புணர்ந்த நகைமொழி யானுமென்று
    உரைநடை மொழியே நான்கென மொழிப"

    இவற்றால் தகடூர் யாத்திரை எனும் நூலில் பாக்களுக்கு இடை இடையே உரைநடை சொற்களும் பயின்று வரும் என்பதே. சிலப்பதிகாரத்திற்கும் உரையிடை இட்ட பாட்டுடைச்செய்யுள் எனும் பெயருடைமை அறிவோம். கலிப்பாக்களிலும் 'எனவாங்கு' என்று தனிச்சொற்கள் மிடைந்து வருவதும் அறிந்ததே. பாடல் எண் 8, 35, 36, 38, 40, 54 முதலியவற்றில் 'அதனால்' போன்ற தனிச்சொற்கள் வந்து அடி குறளானமை காண்க. மேலும் மயிலையார் இந்நூல் சிலப்பதிகாரத்திற்கு முந்தையது என்றும் பேராசிரியர் சிலர் உரையில் குறித்தது (பாரதம்) போன்று வாய்வழி/நூல்வழி அறிந்த ஒரு வரலாற்றை பிற்காலத்தோர் பாடியது அல்ல என அறிஞர் சிலர் கூற்றுகளை மறுக்கிறார்.

    மேற்கண்ட தகடூர் யாத்திரை பாடல்கள் வெண்பா ஆசிரியப்பா என இருவகை யாப்பினில் அமைந்துள்ளதாலும் தனிப்பாடல்களின் தலைப்பு குறிப்புகளினின்றும் இந்நூல் ஓன்றிற்கும் மேற்பட்ட புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பாகத் தோன்றுகிறது. அரிசில்கிழார், பொன்முடியார் எனும் சேரனைச் சார்ந்து நின்ற சங்ககாலப் புலவர் தகடூர் மேல் தண்டு கொண்டு சென்றபோது உடனிருந்து பாடும் கூற்றாக குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு எட்டாம் பத்தின் பதிகம் மிகத்தெளிவாக அரிசில் கிழார் தகடூர் எறிந்த இரும்பொறையின் வெற்றியைப் புகழ்ந்து (பத்துப்பாட்டு-8) பாடி அதனால் பெரும் பரிசு பெற்றார் என கூறுகின்றது. பெருந்தேவனார் பாரதம் எனும் பழம் காப்பிய பாடல்களாக கிடைத்துள்ளவையும் இவ்வகை ஆசிரியப்பா வெண்பா என இருவகை யாப்பினில் அமைந்துள்ளமையால் இவை அக்கலாத்து பாவின வகைபோலும்

    தன் தொகுப்பு நூலில் மயிலையார் தகடூர் யாத்திரை முழுநூலாக ஓலைச்சுவடி வடிவில் 19 ஆம் நுற்றாண்டுவரை இருந்து பிறகு மறைந்தமைதனை மகாமகாபோத்யாய உ.வே.சா. அவர்கள்தம் சுயவாழ்கையை விளக்கும் நூலில் குறித்துள்ளதைக் சுட்டுகிறார்.

    தகடூர்
    தகடூர், தற்காலம் தமிழ்நாட்டு தருமபுரி மாவட்டத் தலைநகராகத் திகழும் தர்மபுரி நகரே ஆகும் (Deg.12.8'N; Deg.78.10'E) இந்நாளில் அதிகமான் கோட்டை எனத் திருத்தப்பபெற்ற அதியமான் நெடுமான் அஞ்சியின் பெயர் தாங்கும் பழைய கோட்டை(அதமன் கோட்டா) நகருக்கு வெளியே தெற்கே சிறிது துரத்தில் அமைந்துள்ளது.

    அதிகமான் நெடுமான் அஞ்சி சங்கநூல் காலத்தே பெரும் சிற்றசனாகவும் ஔவை போன்ற புலவர்களால் பாடப்பட்டவனும் ஆன அதியமான் நெடுமான் அஞ்சி ஔவைக்கு அரிய நெல்லிக்கனி ஈந்தவனும்(புறம்-92) அவரியற்றிதாக காணும் 59 சங்கநூல் பாடல்களில் 26 பாடல்களில் சிறப்பிக்கப்பட்டவனும் ஆகும்.

    அதியமானின் தகடூர் சங்கநூல் பாடல்களில் பயின்று வந்துள்ளன.
    புறம்-50 (த) சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
    புறம்-230 (த) அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி
    அகம்-212 - - - - - - - - தகடூர் வேண்டுவழிக் கொளீஇ
    பதிற்.பத்து-78 "வில்பயில் இறும்பின் தகடூர் நூறி"
    பதிற்.பத்து எட்டாம் பத்தின் பதிகம்
    "பொய்இல் செல்வக் கடுங்கோ வுக்கு
    வேளாவிக் கோமான் பதுமன் தேவிஈன்றமகன்
    கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
    பல்வேல் தானை அதிக மானோ(டு)
    இருபெரு வேந்தரையும் உடன்நிலை வென்று
    முரசும் குடையும் கலனும் கொண்(டு)
    உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத்
    துகள்தீர் மகளிர் இரங்கத் துப்(பு)அறுத்துத்
    தகடூர் எறிந்து நொச்சிதந்(து) எய்திய
    அருந்திறல் ஒள்இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை
    மறுஇல் வாய்மொழி அரிசில்கிழார் பாடினார் பத்துப்பாட்டு.
    தகடூர் எறிந்த நெடுஞ்சேரல் இரும்பொறை
    பதினேழ்யாண்டு வீற்றிருந்தான்"

    சங்கநூல் பாடல்களான நற்-381; குறு-91, 393; பதிற்று-(8); சிறு-103; அக-115,142,162,325,352; புறம்-87, 88,89,90,91,92, 93,94,95,96,98,99,100,101, 102,103,104,114,116,117,118,119,120, 206,208,231,232,235, 319,315,390.392;
    இவைகளினின்று தகடூர், அதனை தலைநகராக உடைய அதியமான் நெடுமான் அஞ்சி, அவன் மகன் பொகுட்டெழினி, மற்றும் மன்னர்கள் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை, புலவர்கள் - ஔவையார், அஞ்சிஅத்தைமகள் நாகையார், அரிசில்கிழார், பொன்முடியார், பரணர் இவர்கள் சம காலத்தவராக இணைக்கப்படுகின்றனர்.

    அதிகமான் நெடுமான் அஞ்சியின் தகடூர் எயிலினை சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை (தன் தளபதி பெரும்பாக்கன் வைத்து) பலகாலம் முற்றுகையிட்டு போரிட்டு அதனை அழித்து பெற்ற வெற்றி தனை அரிசில் கிழார் புகழந்து பாடினார் என்கின்றார் நச்சினார் தன் உரையில் தகடூர் யாத்திரைப்பாடலை மேற்கோள் காட்டி பின் தரும் விளக்கத்தில். சங்கநூல் பாடல்களினின்று தகடூர் மன்னனாகிய அதியமான் பற்றி கீழ்கண்ட விவரங்கள் தெரிய வருகின்றன::

    அதியமான் (அதிகமான்) நெடுமான் அஞ்சி வேள்வி பலசெய்தோர்.
    வழிவந்தவன் எழுவரை ஒருசேர வென்றவன்.
    பரணரும் பாடினார், கோவலூரை அழித்தவன் (புறம்-99)
    வளைபோன்ற எரியுடை தீப்பொற கலன் (திருமால் கை நேமி) எய்ய வல்ல வீரன்.

    அவன் முன்னோர்தான் கரும்பு எனும் தீம்பால் பயிரினத்தை முதல் முதலில் தமிழகத்திற்கு கொணர்ந்து பயிராக்கினர் (புறம்-99 392)

    அதியமான் அதியர் குலத்துத்தவன் (புறம்-91,392) மழவர் (புறம்-88.90)
    எனும் போர்செய் பிரிவினர் தானையும் உடையவன்

    அதியமானின் ஓர்தவமகன் (பொகுட்டெழினி/புறம்-102) பிறந்தநாளில்
    ஔவை வாழ்த்தினார் (புறம்-100 தலைப்பு)

    அதியமான் போர் பல வென்று விழுப்புண் பட்டுக்கிடந்தவன் (புறம்-92)

    "உன் படையும் படைக்கலங்களும் பல போர்களில் நின்று முதுநிலையில்
    உள்ளன. பெருமன்னனுக்கு நீசென்று திறைசெலுத்து அல்லது வீரமுடன்
    'போர்' அறிவித்துவிடு. இரண்டு மல்லாது பெண்கள் துணைநாடுவது சீர்
    அல்ல தேர்ந்து செயல்படு" என ஔவை அம்மன்னனை இடித்துரைக்கவும்
    செய்கிறார் (புறம்-97)

    சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரநாட்டு பெருமன்னன்
    அதிகமானின் தகடூரை சென்று போரிட்டுச் சிதைத்தான்

    அதிகமானும் (அவன்மகன் பொகுட்டு) எழினியும் போரில் வீழ்ந்தனர்

    ஔவையார் தம் காலத்தேயே அதிகமான் சேரமன்னன் தாக்கி வீழ்ந்தான்
    ஆதலால்தான் புகழ்பாக்களும் அதன் பிறகு இரங்கல் பாவும் பாடினார்

    அதியமானுக்கு நடுகல் நடப்பட்டமை ஔவை தன் இரங்கற்பாவில்
    காட்டுகிறார்(புறம்-232)

    நூ த லோகசுந்தர முதலி
    -------------------

    கீழ்கண்ட பாடல்கள் தகடூர் யாத்திரைப்பாடல்கள் போல் தோற்றுகின்றன.

    (1) நீதித்திரட்டிலும் பெருந்தொகையிலும் தகடூர் யாத்திரைப் பாடல்களுக்கு இடைஇடையே மிடைந்து உள்ளமையும்; (2) பாக்களின் யாப்பு/நடை/தாங்குபொருள்/தலைப்புகளின் விளக்க நீட்டம் இவையும் ஐயம் எழ காரணங்களாகும்

    பெருந்தொகையில் 423,431,456,458,460,462,463,470,484, 497 மற்றும் 702,705,706,707,710 தகடூர் யாத்திரையினது ஆனது.
    ----------

    தகடூர் யாத்திரை

    நீதித்திரட்டு

    பெருந்தொகை

    நச்சி. மேற்கோள்
    புறத்திரட்டு

    மேற்படி 12

    1207

    423

    1241

    மேற்படி 13

    1207

    431

    1251

    மேற்படி ?

    443
    பூசன்மாற்று

    பூசன்மாற்று-
    கண்டோர் கூற்று


    1

    ஆவூர் எறிந்து நிரையடு பெயர்ந்த
    வெட்சி மறவர் வீழவும் உள்காது
    கயிறியல் பாவை போல வயிறிரித்(து)
    உழைக்குரற்கு உணர்ந்த வயப்புலி போல
    முற்படு பூசல் கேட்டனர் பிற்பட
    நிணமிசை இழுக்காது தமர்பிணம் இடறி
    நிலங்கெடக் கிடந்த கருந்தலை நடுவண்
    மாக்கெட நெருப்புப் போல நோக்குபு
    வெஞ்சிலை விடலை வீழ்ந்தனன்
    அஞ்சுதக்க அன்றான் செஞ்சோற்று நி�
    உழை=மான், / ஆவூர்=இரவூர்-பாடபேதம் /
    [இஃது போர் நிகழ்ச்சியை புலவர் நேரில் பார்
    விளக்குவதாக உள்ளமை காண்க]

    தகடூர் யாத்திரை=?;பெருந்தொகை 459 உண்டாட்டு;
    நச்சி. மேற்கோள் உண்டாட்டு

    2

    பகைவர் கொண்ட படுமணி ஆயம்
    மீட்டிவள் தந்த வாள்திறல் குரிசில்
    முழவுத் துயில்மறந்த மூதூர் ஆங்கண்
    விழவுத் தலைகொண்ட விளையாட்டு ஆயத்து
    ஊன்சுடு கொழும்புகை கருங்கொடி உம்பர்
    மீனசுடு புகையின் விசும்பு வாய்த்தன்றே
    கைவல் கம்மியர் பல்கூட் டாரமொடு
    நெய்பிழி நறுவிரை நிலம் பரந்தன்றே
    காவில் காவில் கணங்கொள் வண்டெனப்
    பூவிலை மகளிர் புலம்படர்ந் தனரே
    சந்தியும் சதுக்கமும் பந்தர் போகிய
    வாடுறு நறவின் சாடிதோறும்
    கொள்வினை மாற்றாக் கொடையடு
    கள்விலை ஆட்டுடியும் கைதூ வாளே

    தகடூர் யாத்திரை=?; பெருந்தொகை 453 கொற்ற வஞ்சி;
    நச்சி. மேற்கோள் அடுத்தூர்ந்திட்ட-கொற்றமும்

    3

    நீள்நில வேந்தர் நாள்செல் விருப்பத்துத்
    தோள்சுமந்(து) இருத்தல் ஆற்றார் ஆள்வினைக்
    கொண்டி மாக்கள் உண்டியின் முனிந்து
    முனைப்புலம் மருங்கில் நிலைப்பரும் செய்வினை
    வென்றியது முடித்தனர் மாதோ
    ஆங்குள கொல்இனி ஊங்குப்பெறும் செருவே
    [இஃது நச்சினார் உரை மேற்கோளசூத். 58 "அடுத்து ஊர்ந்து
    அட்ட கொற்றத்தானும்" என வரும் அடியின் விளக்கத்தினுள் காண்பது.]
    [இஃது காலத்தினால் நீண்ட போர் நிகழ்ச்சியை புலவர்
    நேரில் பார்த்திருந்து விளக்குவதாக உள்ளமை காண்க]

    தகடூர் யாத்திரை=?; பெருந்தொகை 558 அறிவன் வாகை
    நச்சி. மேற்கோள் நெறியினாற்றிய அறிவன்தேயமும்

    4

    வாய்மை வாழ்ந மூதறிவாள
    நீயே ஒருதனித் தோன்றல் உறைபதி
    யாருமில் ஒருசிறை யானே தேரின்
    அவ்வழி வந்தநின் உணர்வுமுதல் தங்கும்
    தொல்நெறி மரபின் முயவகை நின்றன
    காலமும் நினனொடு வேறென
    யாரோஓ பெருமநின் றேர்கு வோரே

    இஃது நச்சினார் உரை மேற்கோளசூத். 75 "நெறியின் ஆற்றிய
    அறிவன் தேயமும்" என வரும் அடியின் விளக்கத்தினுள் காண்பது.
    [இஃது புலவர் சேரமன்னனை அவன் தொல்மரபு வழி வந்த
    தோன்றல் உனக்கு பதி என்று யாரும் இல்லை என பலவாறு
    நல்நெறியை முன்னிலையில் கூறுவதாக உள்ளமை நோக்குக]

    தகடூர் யாத்திரை

    நீதித்திரட்டு

    பெருந்தொகை

    நச்சி. மேற்கோள்
    புறத்திரட்டு

    மேற்படி 17

    1229

    456

    1241

    மேற்படி 16

    1207

    458

    1257

    மேற்படி 55

    பெ.பொ.வி<

    460

    1339

    மேற்படி ?

    <

    701

    மறக்காஞ்சி


    போர் முடிந்த பின் களம்புக்கு நடுகல்
    ஆயினானை ஒருவீரன் கண்டு நிகழ்த்தியது

    5

    பொருது வடுபட்ட யாக்கை நாணிக்
    கொன்று முகம்தோய்ந்த எ�கம் தாங்கிச்
    சென்று களம்புக்க யானை தன்னொடு
    முன்மலைந்து மடிந்த ஓடா விடலை
    நடுகல் நெடுநிலை நோக்கி ஆங்குதன்
    புண்வாய் கிழித்தனன் புகழோன் அந்நிலை
    சென்றுழிச் செல்க மாதோ வெண்குடை
    அரசுமலைந்து தாங்கிய களிறுமடி பறந்தலை
    முரண்கெழு தெவ்வர் காண
    இவன்போல் இந்நிலை பெறுகயான் எனவே.
    [ இஃது நச்சினார் உரை மேற்கோளில் சூத். 79 "பண்புற
    வரும் பகுதி நோக்கி" என வரும் அடிக்கான
    விளக்கத்தின் கீழ் காணப்படுகின்றது]

    தகடூர் யாத்திரை (மேற்படி 40); நீதித்திரட்டு 1375;
    பெருந்தொகை 702; நச்சி. மேற்கோள்
    தகடூர் யாத்திரை=?; பெருந்தொகை 703 மூதின் முல்லை;
    நீதித்திரட்டு 1382 மூதின் மறம்

    6

    குரங்கு மேனித் திரங்குமுகச் செதுமுலை
    நரைமூ தாட்டி வினவுதி யாயின்
    நும்மகன் கொல்லோ அறியேன் இம்மகன்
    கொற்ற வெண்குடை மன்னர்க் குதவி
    செஞ்சோற் றருங்கடன் வெஞ்சமத் தாற்றி
    களிறுதலை அடுத்து மாகால் நீட்டிப்
    பிளிறுகுரல் முரசம் மெத்தணை யாக
    பருந்தின் செறுநிழல் பந்தர் ஆக
    அழிபிணக் குன்றே வேலியாகக்
    கழுகுணக் கிடந்த காளை
    நும்மகன் கொல்லை நான் அறியேனே
    தகடூர் யாத்திரை=?; பெருந்தொகை 704மூதின் முல்லை;
    நீதித்திரட்டு 1383 மூதின் மறம்

    7

    வாழிய துடிய வாழிய துடிய
    என்மகன்
    ஆர்த்தெறிந் தனனோ ஆர்த்தெறிந் தனனோ
    ஆர்த்தும் எறியான் எறிந்தும் அமரான்
    கையது வேலே காலது கழலே
    மெய்யது சினனே மேல்சென் றனனே
    வேந்தர் எல்லாம் தன்நோக் கினரே
    நோக்கி நோக்கான் முறுவலன் தாக்கித்
    தழீஇம் தாம்எனத் தண்ணுமை
    சுழித்தான் ஒள்வாள் வீழ்ந்தன களிறே


    தகடூர் யாத்திரை

    நீதித்திரட்டு

    பெருந்தொகை

    நச்சி. மேற்கோள்
    புறத்திரட்டு

    மேற்படி 41

    1378

    705

    1308

    மேற்படி 42

    1379

    706

    மேற்படி 43

    1380

    707

    1405

    மேற்படி 44

    1405

    710

    1438

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home