Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
 

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > பாண்டிக் கோவை


பாண்டிக் கோவை
(ஆசிரியர் யார் என அறியப்படவில்லை)

pANTik kOvai

Acknowledgements:
Etext-Input-keying, Proof reading, Web versions in TSCII & Unicode as well as PDF: N D LogaSundaram & N D Rani - Chennai Web Master : Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland This webpage presents the Etext in Tamil script in TSCII 1.7 encoding.

© Project Madurai 1998 - 2009 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to
preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website. You are welcome to freely distribute this file, provided this
header page iskept intact


இறையனார் அகப்பொருள் உரையில் காணப்படும் எடுத்துக்காட்டு, மேற்கோள் பாடல்கள் ஈங்கு தொகுக்கப் பட்டுள்ளன (செம்பகுதியாம் 325+ பாடல்கள் // கோவை 400 கலித்துறைப் பாடல்களில் பாடுவது மரபு) ஆசிரியர் யார் என அறியப்படவில்லை நூலின் பெயரும் ஆங்கு காட்டப்படவில்லை. ஆனால் இந்நூல் முன்பு தனியாக அச்சினில் பதிப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

தமிழ்கூறு நல்லுலகம் மூன்றைனையும் ஓர்குடைகீழ் ஆட்சி செய்தவன் எனக் காட்டப்படும் பாட்டுடைத் தலைவன் மன்னன் நெடுமாறன் பாண்டியன் என்பதால் இப் பெயர் பெற்றது போலும்.இம்மன்னன் வாழந்த காலம் மற்றும் இந்நூல் ஆசிரியர் தம் காலம் எனும் வரலாற்றினை கணிக்க அவன் ஆட்சி பற்றி இந்நூலில் காணும் இடப் பெயர்கள், அவன் கீர்த்திப் பெயர்கள், வென்ற போர்க் களங்கள் எனும் வரலாற்றுக் குறிப்புகள்
கொண்டு அறிஞர் ஆய்ந்து அறிய வாய்ப்புகள் பல உள்ளன. இவ்வழி தமிழக வரலாற்றின் ஓர் சிறு துளி அறியக்கூடும். இக்குறிப்புகளின் குறு தொகுதிதனைக் கீழே நூல் முடிவினில் காண்கமற்றும் பாடலுக்குள் சொல் ஓவியங்களாக காணும் பயிர்-உயிர் இனங்களின்
வருணனைகளும் மற்றைய அரிய தொன்மைக் குறிப்புகளும் பயனுள்ளவையே


நூலடைவு
களவு - 001 >> 239 = 239
கற்பு - 240 >> 325 = 86
ஆக . . . . . . . . . . .= 325


நூல்
1 களவு


பூமரு கண்ணினை வண்டாப் புணர் மெல் முலை அரும்பாத்
தேமரு செவ்வாய் தளிராச் செருச் செந்நிலத்தை வென்ற
மாமரு தானை எம் கோன் வையை வார் பொழில் ஏர் கலந்த
காமரும் பூங்கொடி கண்டே களித்த எம் கண் இணையே 1

உரை உறை தீந் தமிழ் வேந்தன் உசிதன் தென்னாட்டு ஒளி சேர்
விரை உறை பூம்பொழில் மேல் உறை தெய்வம் கொல் அன்றி விண் தோய் வரை உறை தெய்வம் கொல் வான் உறை தெய்வம்கொல் நீர் மணந்த திரை உறை தெய்வம் கொல் ஐயம் தரும் இத் திருநுதலே 2

பா அடியானைப் பராங்குசன் பாழிப் பகை தணித்த
தூ வடிவேல் மன்னன் கன்னித் துறை சுரும்பார் குவளைப்
பூ அடி வாள் நெடும் கண் இமைத்தன பூமி தன் மேல்
சேவடி தோய்வ கண்டேன் தெய்வம் அல்ல அளிச் சேயிழையே 3

வேறும் என நின்று இகல் மலைந்தார் விழிஞத்து விண் போய்
ஏறும் திறம் கண்ட கோன் தென் பொதியில் இரும் பொழில் வாய்த்
தேறும் தகைய வண்டே சொல்லு மெல் இயல் செந்துவர் வாய்
நாறும் தகைமையவே அணி ஆம்பல் நறுமலரே 4

தூ உண்டை வண்டினங்காள் வம்மின் சொல்லுமின் துன்னி நில்லாக்
கோ உண்டை கோட்டாற்று அழிவித்த கோன் கொங்க நாட்ட செங்கேழ்
மா உண்டை வாட்டிய நோக்கி தன் வார் குழல் போல் கமழும்
பூ உண்டை தாம் உளவோ நுங்கள் கானல் பொழிவிடத்தே 5

இரும் கழல் வானவன் ஆற்றுக்குடியில் கல் சாய்ந்து அழியப்
பெரும் கழல் வீக்கிய பூழியன் மாறன் தென் பூம் பொதியில்
மருங்கு உழலும் களி வண்டினங்காள் உரையீர் மடந்தை
கருங்குழல் நாறும் என் போது உளவோ நும் கடிபொழிலே 6

விண்டே எதிர்ந்த தெவ் வேந்தர் பட விழிஞத்து வென்ற
ஒண்தேர் உசிதன் என் கோன் கொல்லிச்சாரல் ஒளி மலர்த் தாது
உண்டே உழல்வாய் அறிதி அன்றே உளவேல் உரையாய்
வண்டே மடந்தை குழல்போல் கமழும் மதுமலரே 7

பொரும் கழல் வானவர்க்காய் அன்று பூலந்தைப் போர் மலைந்தார்
ஒரும் கழல் ஏற என்றான் கொல்லிச் சாரல் ஒண்போதுகள் தம்
மருங்கு உழல்வாய் நீ அறிதி வண்டே சொல் எனக்கு மங்கை
கருங்குழல் போல் உளவோ விரை நாறும் கடிமலரே 8

தேற்றம் இல்லாத தெவ் வேந்தரைச் சேவூர் செரு அழித்துக்
கூற்றம் அவர்க்கு ஆயவன் கொல்லிச் சாரல் கொங்கு உண்டு உழல்வாய்
மாற்றம் உரை நீ எனக்கு வண்டே மங்கை வார் குழல் போல்
நாற்றம் உடைய உளவோ அறியும் நறுமலரே 9

மின்னின் பொலிந்த செவ்வேல் வலத்தான் விழிஞத்து எதிர்ந்த
மன்னிற்கு வானம் கொடுத்த செங்கோல் மன்னன் வஞ்சி அன்னாய்
நின்னின் பிரியேன் பிரியினும் ஆற்றேன் நெடும் பணைத் தோள்
பொன்னின் பசந்து ஒளி வாட என்னாங்கொல் புலம்புவதே 10

அணி நிற நீள் முடி வேந்தரை ஆற்றுக்குடி அழியத்
துணி நிற வேல் வலம் காட்டிய மீனவன் தொண்டி அன்ன
பிணி நிற வார் குழல் பெய் வளைத் தோளி நின்னைப் பிரியேன்
மணி நிறம் பொன் நிறம் ஆக என் ஆவி வருந்துவதே 11

பொன் ஆர் புனைகழல் பூழியன் பூலந்தைப் பூ அழிய
மின் ஆர் அயில் கொண்ட வேந்தன் விசாரிதன் வெண்திரை மேல்
முன் நாள் முதல் அறியா வண்ணம் நின்ற பிரான் முசிறி
அன்னாய் பிரியேன் பிரியினும் ஆற்றேன்அழுங்கற்கவே 12

பா அணை இன் தமிழ் வேந்தன் பராங்குசன் பாழி வென்ற
வேவணை வெம் சிலையான் வஞ்சி அன்ன இனையல் எம் ஊர்த்
தூ வண மாடச் சுடர் தோய் நெடும் கொடி துன்னி நும் ஊர்
ஆவணவீதி எல்லாம் நிழல் பாய நின்று அணவருமே 13

திணி நிற நீள்தோள் அரசு உகத்தென்ன நறையாற்று மின்ஆர்
துணி நிற வேல் கொண்ட கோன் தொண்டி அன்னாய் துயரல் எம் ஊர்
மணி நிற மாடத்து மாட்டிய வான் சுடர் மாலை நும் ஊர்
அணி நிற மாளிகை மேல் பகல் பாரித்து அணவருமே 14

ஒன்றக் கருதா வயவர் நறையாற்றுடன் அழிந்து
பொன்றப் படை தொட்ட கோன் புனநாடு அனையாய் நுமர்கள்
குன்றத்து இடை புனம் காவல் இட்ட குரூஉச் சுடர் எம்
மன்றத்து இடை இருள் நீக்கும் படித்து எங்கள் வாழ்பதியே 15

சேல் அங்கு உளர் வயல் சேவூர் எதிர் நின்ற சேரலனை
மாலம் கடைவித்த மன்னன் வரோதயன் வஞ்சி அன்ன
ஏலம் கமழ் குழல் ஏழை எம் ஊர் எழில் மாடத்து உச்சிச்
சூலம் துடைக்கும் நும் ஊர் மணிமாடத் துகில் கொடியே 16

சின வேல் வலம் கொண்டு செந்நிலத்து ஏற்ற தெவ் வேந்தர்கள் போய்
இன வேய் நரல் குன்றம் ஏற என்றோன் இரும் தண் சிலம்பின்
புன வேய் அனைய மென் தோளிதன் ஆகம் புணர்ந்தது எல்லம்
கனவே நனவாய் விடினும் எய்தாது இனிக் கண் உறவே 17

இருநிலம் காரணம் ஆக நறையாற்று இகல் மலைந்த
பொருநில வேந்தரைப் பொன் உலகு ஆள்வித்த பூ முக வேல்
பெருநிலம் காவலன் தென் புனல் நாடு அன்ன பெண் அணங்கின்
திரு நலம் சேர்ந்தது எல்லாம் கனவே என்று சிந்திப்பனே 18

கைஏர் சிலை மன்னர் ஓடக் கடையல் தன் கண் சிவந்த
நெய் ஆர் அயில் கொண்ட நேரியன் கொல்லி நெடும் பொழில்வாய்
மை ஏர் தடம் கண் மடந்தை மெல் ஆகம் புணர்ந்து எல்லாம்
பொய்யே இனி மெய்மை ஆயினும் இல்லைப் புணர் திறமே 19

தேயத்தவர் உயிரைப் புலன் அன்று என்பர் செந்நிலத்தைக்
காயக் கனன்று எரிந்தார் மருமத்துக் கடும் கணைகள்
பாயச் சிலை தொட்ட பஞ்சவன் வஞ்சிப் பைம் பூம் பொழில்வாய்
ஆயத்திடை இதுவோ திரிகின்றது என் ஆருயிரே 20

இன் உயிர் கண்டறிவார் இல்லை என்பர் இகல் மலைந்தோர்
மன் உயிர் வான் சென்று அடையக் கடையல் உள் வென்று வையம்
தன் உயிர் போல் நின்று தாங்கும் எம் கோன் கொல்லித் தாழ் பொழில்வாய்
என் உயிர் ஆய்த்திடை இதுவோ நின்று இயங்குவதே 21

நீடிய பூந்தண் கழனி நெல்வேலி நகர் மலைந்தார்
ஓடிய ஆறு கண்டு ஒண்சுடர் வைவேல் உறை செறிந்த
ஆடு இயல் யானை அரிகேசரி தெவ்வர் போல் அழுங்கி
வாடிய காரணம் என்னை கொல்லோ உள்ளம் வள்ளலுக்கே 22

வண்டுறை வார் பொழில் சூழ் நறையாற்று மன் ஓட வை வேல்
கொண்டு உறை நீக்கிய தென்னவன் கூடல் கொழும் தமிழின்
ஒண் துறை மேல் உள்ளம் ஓடியதோ அன்றி உற்றது உண்டோ
தண் துறைவா சிந்தை வாடி என்னாம் கொல் தளர்கின்றதே 23

தெவ்வாய் எதிர் நின்ற சேரலர் கோனைச் செருக்கழித்துக்
கைவான் நிதியம் எல்லாம் உடனே கடையல் கவர்ந்த
நெய்வாய் அயில் நெடுமாறன் பகை போல் நினைந்து பண்டை
ஒவ்வா உருவும் மொழியும் என்னோ வள்ளல் உள்ளியதே 24

அளை ஆர் அரவின் குருளை அணங்க அறிவு அழிந்து
துளை ஆர் நெடும் கைக் களிறு நடுங்கித் துயர்வது போல்
வளை ஆர் முனை எயில் தார் மன்னன் மாறன் வண் கூடல் அன்ன
இளையார் ஓருவர் அணங்க நைந்தால் யான் நினைகின்றதே 25

அலை ஆர் கழல் மன்னர் ஆற்றுக்குடி அழல் ஏறச் செற்ற
கொலை ஆர் வேல் படைக் கொற்றவன் கூடல் அன்னார் ஒருவர்
முலையாய் முகிழ்த்து மென் தோளாய்ப் பணைத்து முகத்து அனங்கன்
சிலையாய் குனித்துக் குழலாய் சுழன்றது என் சிந்தையே 26

பொரு நெடும் தானைப் புல்லார்தமைப் பூலந்தைப் பூ அழித்த
பரு நெடும் திண் தோள் பராங்குசன் கொல்லிப் பனிவரை வாய்த்
திரு நெடும் பாவை அனையவள் செந்தாமரை முகத்துக்
கரு நெடும் கண் கண்டு மீண்டு இன்று சென்றது என் காதன்மையே 27

ஆய்கின்ற தீம்தமிழ் வேந்தன் அரிகேசரி அணி வான்
தோய்கின்ற முத்தக் குடை மன்னன் கொல்லியம் சூழ் பொழில்வாய்
ஏய்கின்ற ஆயத்திடை ஓர் இளங்கொடி கண்டேன் உள்ளம்
தேய்கின்றது என்பது அழகியது அன்றோ சிலம்பனுக்கே 28

தண்தேன் நறை நறும் தார் மன்னர் ஆற்றுக்குடி தளரத்
திண்தேர் கடாய் செற்ற கொற்றவன் கொல்லிச் செழும் பொழில்வாய்
வண்டுஏர் நறுங்கண்ணி ஆயம் கொள் மாதர் மதிமுகம் நீ
கண்டு ஏர் தளரின் நல்லார் இனியார் இக் கடலிடத்தே 29

விண்டு ஆர்பட விழிஞக் கடல் கோடி வேல் வலங்கைக்
கொண்டான் குடை மன்னன் கொல்லிக் குடவரைக் கொம்பர் ஒக்கும்
வண்டார் குழல் மடமங்கை மதர்வை மென்நோக்கம் என்போல்
கண்டார் உளரோ உரையார் பிறவி அன்ன கட்டுரையே 30

விண்டு அலங்கு எ·கொடு வேணாட்டு எதிர் நின்ற வேந்து அவித்து இம்
மண்தலம் காக்கின்ற மான்தேர் வரோதயன் வஞ்சி அன்னாள்
குண்டலம் சேர்த்த மதி வால் முகத்த கொழும் கயல் கண்
கண்டிலீர் கண்டால் உரையீர் உரைத்த இக் கட்டுரையே 31

மண் கொண்டு வாழ வலித்து வந்தார் தம் மதன் அழித்துப்
புண் கொண்ட நீர் மூழ்கப் பூலந்தை வென்றான் புகார் அனைய
பண் கொண்ட சொல் அம் மடந்தை முகத்துப் பைம் பூம் குவளை
கண் கண்ட பின் உரையீர் உரைத்த இக்கட்டுரையே 32

வன் தாள் களிறு கடாஅ அன்று வல்லத்து மன் அவியச்
சென்றான் கருங்கயல் சூட்டிய சென்னிச் செம்பொன் வரைபோல்
நின்றான் நிறையும் அறிவும் கலங்கி நிலைதளரும்
என்றால் தெருட்ட வல்லார் இனி யார் இவ் இரு நிலத்தே 33

வல்லிச் சிறு மருங்குல் பெருந் தோள் மடவார் வடுக்கண்
புல்லிப் பிரிந்து அறியாத மந்தாரத்து எம்கோன் புனநாட்டு
அல்லித் தடம் தாமரை மலரோ அவன் தண் அளியார்
கொல்லிக் குடவரையோ அண்ணல் கண்டது அக் கொம்பினையே 34

கண்டார் மகிழும் கடி கமழ் தாமரையோ கடையல்
விண்டார் விழு நிதிக் குப்பையும் வேழக் குழாமும் வென்று
கொண்டான் மழை தவழ் கொல்லிக் குடவரையோ உரை நின்
ஒண் தார் அகலம் மெலிவித்த மாதர் உறை இடமே 35

அடி வண்ணம் தாமரை ஆடு அரவு அல்குல் அரத்த மங்கை
கொடி வண்ண நுண் இடை கொவ்வைச் செவ்வாய் கொங்கைக் கோங் கரும்பின்
படி வண்ணம் செங்கோல் பராங்குசன் கொல்லிப் பனிவரை வாய்
வடி வண்ண வேல் கண்ணினால் என்னை வாட்டிய வாள் நுதற்கே 36

திருமா முகத் திங்கள் செங்கயல் உண்கண் செம்பொன் சுணங்கு ஏர்
வருமா மணிச் செப்பிணை வானவன் கானம் உன்னக்
குருமா நெடுமதில் கோட்டாற்று அரண் கொண்ட தென்னன் கன்னிப்
பெருமான் வரோதயன் கொல்லியம் சாரல் பெண் கொடிக்கே 37

கடித்தடம் விண்ட கமலம் முகம் கமலத்து அரும்பு ஏர்
பொடித்து அடங்கா முலை பூலந்தைத் தெம் மன்னர் பூ அழிய
இடித்து அடங்கா உரும் ஏந்திய கோன் ஈர்ம் பொழில்வாய்
வடித் தடம் கண் இணையால் என்னை வாட்டிய வாள் நுதற்கே 38

தண்தாது அலர் கண்ணி அண்ணல் தன் உள்ளம் தளர்வு செய்த
வண்டார் குழலவளே இவள் மால் நீர் மணற்றி மங்கை
விண்டார் உடல் குன்றம் ஏறி விழிகள் கழுது உறங்கக்
கண்டான் பொதியில் அதுவெ அவன் சொன்ன கார்ப் புனமே 39

சினமும் அழிந்து செரு இடை தோற்ற தெவ் வேந்தர்கள் போய்க்
கனவும்படி கடையல் செற்ற வேந்தன் கனம் குழலார்
மனமுமம் வடிக்கண்ணும் தங்கு மந்தாரத்து மன்னன் கொல்லிப்
புனமும் இது இவளே அவன் தான் கண்ட பூங்கொடியே 40

இரு நெடும் தோள் அண்ணலே பெரியான் வல்லத்து எற்ற தெவ்வர்
வரு நெடும் தானையை வாட்டிய கோன் கொல்லி மால்வரை வாய்த்
திரு நெடும் பாவை அனையவள் செந்தாமரை முகத்துக்
கரு நெடும் கண் கண்டு மற்று வந்தாம் எம்மைக் கண்ணுற்றதே 41

பெரிய நிலைமை அவரே பெரியர் பிறை எயிற்றுக்
கரிய களிறு உந்தி வந்தார் அவியக் கடையல் வென்ற
வரிய சிலை மன்னன் மான் தேர் வரோதயன் வஞ்சி அன்னாள்
அரிய மலர் நெடும் கண் கண்டு மால் அண்ணல் ஆற்றியதே 42

மின்நேர் ஓளி முத்த வெண்மணல் மேல் விரை நாறு புன்னைப்
பொன்நேர் புதுமலர் தாய்ப் பொறி வண்டு முரன்று புல்லா
மன் ஏர் அழிய மணற்றி வென்றான் கன்னிஆர்துறைவாய்த்
தன்நேர் இலாத தகைத்தின்றி யான் கண்ட தாழ் பொழிலே 43

களி மன்னு வண்டுளர் கைதை வளாய்க் கண்டல் விண்டு தண்தேன்
துளி மன்னு வெண் மணல் பாயினதே சுடர் ஓர் மருமான்
அளி மன்னு செங்கோல் அதிசயன் ஆற்றுக்குடியுள் வென்ற
ஒளி மன்னு முத்தக் குடைமன்னன் கன்னி உயர் பொழிலே 44

தேன் உறை பூங்கண்ணிச் சேரலன் சேவூர் அழியச் செற்ற
ஊன் உறை வைவேல் உசிதன்தன் வைகை உயர் மணல்மேல்
கான் உறைப் புன்னைப் பொன் நேர் மலர் சிந்திக் கடி கமழ்ந்து
வான் உறைத் தேவரும் மேவும் படித்து அங்கோர் வார்பொழிலே 45

மேவி ஒன்னாரை வெண்மாத்து வென்றான் கன்னி வீழ் பொழில்வாய்
தேவி என்றாம் நின்னை யான் நினைக்கின்றது சேயரியாய்
காவி வென்றாய கண்ணாய் அல்லேயேல் ஒன்று கட்டுரையாய்
ஆவி சென்றால் பின்னை யாரோ பெயர்ப்பர் அகலிடத்தே 46

திரை உறை வார் புனல் சேவூர் செரு மன்னர் சீர் அழித்த
உரை உறை தீம் தமிழ் வேந்தன் உசிதன் ஒண் பூம் பொதியில்
வரை உறை தெய்வம் என்று எற்க அல்லையேல் உன் தன் வாய் திறவாய்
விரை உறை கோதை உயிர் செல்லின் யார் பிறர் மீட்பவரே 47

அரும்பு உடைத் தொங்கல் செங்கோல் அரிகேசரி கூடல் அன்ன
சுரும்பு உடைக் கோதை நல்லாய் இவர்க்குத் துயர் செய்யும் என்று உன்
பெரும் புடைக்கண் புதைத்தாய் புதைத்தாய்க்கு நின் பேர் ஒளி சேர்
கரும்பு உடைத் தோளும் அன்றோ எனது உள்ளம் கலக்கியதே 48

தேம் தண் பொழில் அணி சேவூர் திருந்தார் திறல் அழித்த
வேந்தன் விசாரி தன் தெவ்வரைப் போல் மெலிவிக்கும் என்று உன்
பூம் தடம் கண் புதைத்தாய் புதைத்தாய்க்கு உன் பொரு வில் செங்கேழ்க்
காந்தள் விரலும் அன்றோ எம்மை உள்ளம் கலக்கியதே 49

ஆமாறு அறிபவர் யாரோ விதியை அம் தீம் தமிழ்நர்
கோமான் குல மன்னர் கோன் நெடுமாறன் கொல்லிச் சிலம்பில்
ஏமாண் சிலை நுதல் ஏழையை முன் எதிர் பட்டு அணைந்த
தூ மாண் இரும் பொழிலே இன்னும் யான் சென்று துன்னுவனே 50

பெரும்பான்மையும் பெறுதற்கு அரிதாம் விதி பேணி நில்லாப்
பொரும் பார் அரசரை பூலந்தை வாட்டிய கோன் பொதியில்
கரும்பு ஆர் மொழி மட மாதரைக் கண்ணுற்று முன் அணைந்த
சுரும்பு ஆர் இரும் பொழிலே இன்னும் யான் சென்று துன்னுவனே 51

துனிதான் அகல மண் காத்துத் தொடு பொறி ஆய கெண்டை
பனிதாழ் வட வரை மேல் வைத்த பஞ்சவன் பாழி வென்ற
குனி தாழ் சிலை மன்னன் கூடல் அன்னாளது கூடலைப் போல்
இனிதாய் எனது உள்ளம் எல்லாம் குளிர்வித்த தீம் பொழிலே 52

தேர் மன்னு தானை பரப்பித் தென் சேவூர் செரு மலைந்த
போர் மன்னர் தம்மைப் புறம் கண்டு நாணிய பூம் கழல் கால்
ஆர் மன்னு வேல் அரிகேசரி அம் தண் புகார் அனைய
ஏர் மன்னு கோதையைப் போல் இனிதாயிற்று இவ் ஈர்ம் பொழிலே 53

நீரில் மலிந்த செவ்வேல் நெடுமாறன் நெல்வேலி ஒன்னார்
போரில் மலிந்த வெம் தானை உரம் கொண்ட கோன் பொதியில்
காரில் மலிந்த பைம் பூம் புனம் காக்கின்ற காரிகையீர்
ஊரின் பெயரும் நும் போரும் அறிய உரைமின்களே 54

நிதியின் கிழவன் நிலமகள் கேள்வன் நெல்வேலி ஒன்னார்
கதியின் மலிந்த வெம் மாவும் களிறும் கவர்ந்து கொண்டான்
பொதியில் மணிவரைப் பூம் புனம் காக்கும் புனை இழையீர்
பதியின் பெயரும் நும் போரும் அறிய பகர்மின்களே 55

அறை ஆர் கழல் மன்னர் ஆற்றுக்குடி அமர் சாய்ந்து அழியக்
கறை ஆர் அயில் கொண்ட கோன் கொல்லிக் கார் புனம் காக்கின்ற வான்
பிறை ஆர் சிறு நுதல் பெண்ணார் அமுது அன்ன பெய் வளையீர்
மறையாது உரைமின் எமக்கு நும் பேரொடு வாழ் பதியே 56

கறையில் மலிந்த செவ்வேல் வலத்தால் தென் கடையல் வென்ற
அறையும் கழல் அரிகேசரி அம் தண் புகார் அனைய
பிறையில் மலிந்த சிறு நுதல் பேர் அமர்க்கண் மடவீர்
உறையும் பதியும் நும் பேரும் அறிய உரைமின்களே 57

வருமால் புயல் வண்கை மான் தேர் வரோதயன் மண் அளந்த
திருமாலவன் வஞ்சி அன்ன அம் சீரடிச் சேயிழையீர்
கருமால் வரை அன்ன தோற்றக் கருங்கை வெண் கோட்ட செங்கண்
பொரு மால் களிறு ஒன்று போந்தது உண்டோ உன்தன் புனத்து அயலே 58

கண்ணுற்று எதிர்ந்த தெவ் வேந்தர் படைக் கடையல் கொடி மேல்
விண்ணுற்ற கோள் உரும் ஏந்திய வேந்தன் வியன் பொதியில்
பண்ணுற்ற தேமொழிப் பாவை நல்லீர் ஓர் பகழி மூழ்கப்
புண்ணுற்ற மா ஒன்று போந்தது உண்டோ நும் புனத்து அயலே 59

முடி உடை வேந்தரும் மும்மத யானையும் மொய் அமருள்
பொடி இடை வீழத் தென் பூலந்தை வென்றான் புகார் அனைய
வடி உடை வேல் நெடுங்கண் மடவீர் நுங்கள் வார் புனத்தில்
பிடியடு போந்தது உண்டோ உரையீர் ஓர் பெரும் களிறே 60

சின மாண் கடல் படைச் சேரலன் தென் நறையாற்று வந்து
மன மாண் பகழி வை வேல் கொண்ட கோன் வையை நாடு அனைய
கன மாண் வன முலைக் கை ஆர் வரி வளைக் காரிகையீர்
இன மான் புகுந்ததுவோ உரையீர் இரும் புனத்தே 61

சிலை மாண் படை மன்னர் செந்நிலத்து ஓட செரு விளைந்த
கொலை மாண் அயில் மன்னன் தென் புனல் நாடு அன்ன கோல் வளையீர்
இலை மாண் பகழியின் ஏ உண்டு தன் இனத்தில் பிரிந்தோர்
கலை மான் புகந்தது உண்டோ உரையீர் நுங்கள் சீர புனத்தே 62

வெல்லும் திறம் நினைந்து தேற்றார் விழிஞத்து விண் படரக்
கொல்லில் மலிந்த செவ்வேல் கொடை வேந்தன் கொல்லிச் சாரலின் தேன்
புல்லும் பொழில் இள வேங்கையின் கீழ் நின்ற பூங்குழலீர்
செல்லும் நெறி அறியென் உரையீர் நும் சிறுகுடிக்கே 63

தன்னும் புரையும் மழை உரும் ஏறு தன் தானை முன்னால்
துன்னும் கொடி மிசை ஏந்திய கோன் கொல்லிச் சூழ் பொழில்வாய்
மின்னும் கதிர் ஒளி வாள் முகத்தீர் என் வினா உரைத்தால்
மன்னும் சுடர் மணி போந்து உகுமோ நுங்கள் வாய் அகத்தே //64

விரை ஆடிய கண்ணி வேந்தன் விசாரி தன் கொல்லி விண் தோய்
வரை ஆடிய புனம் காவலும் மானின் வழி வரவும்
நிரை ஆடிய குழலாட்கும் இவற்கும் நினைப்பின் இல்லை
உரை ஆடுவர் கண்ணினான் உள்ளத்து உள்ளதும் ஒன்று உளதே 65

பெரும் கண்ணி சூடிவந்தார் படப் பூலந்தைப் பொன்முடிமேல்
இரும் கண்ணி வாகை அணிந்தான் பொதியல் இரும் பொழில்வாய்
மருங்கண்ணி வந்த சிலம்பன் தன் கண்ணும் இவ்வாள் நுதலாள்
கருங் கண்ணும் தம்மில் கலந்துண்டாம் இங்கு ஓர் காரணமே 66

தேர் மன்னு வாள் படை செந்நிலத்து ஓடச் செரு விளைத்த
போர் மன்னன் தென்னன் பொதியில் புனமா மயில் புரையும்
ஏர் மன்னு காரிகை எய்தல் உண்டாம் எனின் யானும் நின் போல்
நீர் மன்னும் நீல நெடும் சுனை ஆடுவன் நேரிழையே 67

புண்தான் அருநிறத்து உற்றுத் தென் பூலந்தைப் போர் மலைந்த
ஓண் தார் அரசர் குழாமும் உடனே ஒளி வான் அடையக்
கண்டான் பொதியில் மயில் அன்ன காரிகை எய்தல் நின் போல்
உண்டாம் எனில் தையல் ய¨னும் சென்று ஆடுவன் ஓள் சுனையே 68

திருமால் அகலம் செஞ்சாந்து அணிந்து அன்ன செவ்வான் முகட்டுக்
கருமா மலர்க்கண்ணி கை தொழ தோன்றிற்று காண் வந்து ஒன்னார்
செரு மால் அரசு உகச் செந்நிலத்து அட்ட தென் தீம் தமிழ்நர்
பெருமான் தன் குல முதலாய பிறைக் கொழுந்தே 69

மண் தான் நிறைந்த பெரும் புகழ் மாறன் மந்தாரம் என்னும்
தண் தாரவன் கொல்லித் தாழ் சுனை ஆடியதான் அகன்றாள்
ஓள் தாமரை போல் முகத்தவள் நின்னொடு உருவம் ஒக்கும்
வண்டு ஆர் குழலவள் வந்தால் இயங்கு வரை அணங்கே 70

ஆள் நெடும் தானையை ஆற்றுக்குடி வென்ற கோன் பொதியில்
சேண் நெடும் குன்றத்து அருவி நின் சே அடி தோய்ந்தது இல்லை
வாள் நெடும் கண்ணும் சிவப்பச் செவ்வாயும் விளர்ப்ப வண்டு ஆர்
தாள் நெடும் போது அவை சூட்ட அற்றோ அத் தடம் சுனையே 71

கலவா வயவர் களத்தூர் அவியக் கணை புதைத்த
குலவு ஆர் சிலை மன்னன் கோன் நெடுமாறன் தென்கூடல் அன்ன
இலவு ஆர் துவர் வாய் மடந்தை நம் ஈர்ம் புனத்து இன்று கண்டேன்
புலவு ஆர் குருதி அளைந்த வெம் கோட்டு ஓர் பொரு களிறே 72

பொருது இவ்உலகம் எல்லாம் பொது நீக்கிப் புகழ் படைத்தல்
கருதி வந்தார் உயிர் வான் போய் அடையக் கடையல் வென்ற
பரிதி நெடு வேல் பராங்குசன் கொல்லிப் பைம் பூம் புனத்துக்
குருதி வெண் கோட்டது கண்டேன் மடந்தை ஓர் குஞ்சரமே 73

கந்து ஆர் அடு களிறு யானைக் கழல் நெடுமாறன் கன்னிக்
கொந்தாடு இரும் பொழில்வாய்ப் பண்ணை ஆயத்துக் கோல மென் பூப்
பந்து ஆடலின் இடை நொந்துகொல் பைங்குழல் வெண்மணல் மேல்
வந்து ஆடலின் அடி நொந்துகொல் வாள்நுதல் வாடியதே 74

பொருந்திய பூந்தண் புனல்தான் குடைந்துகொல் பென்கயிற்றுத்
திருந்திய ஊசல் சென்றுஆடிகொல் சேவூர் செரு அடர்ந்த
பருந்து இவர் செஞ்சுடர் வெல்வேல் பராங்குசன் பற்றலர் போல்
வருந்திய காரணம் என்னைகொல்லோ மற்று இவ் வாள் நுதலே 75

மழையும் புரை வண்கை வானவன் மாறன் மை தோய் பொதியில்
வழையும் கமழும் மணி நெடும் கோட்டு வண் சந்தனத்தின்
தழையும் விரை தரு கண்ணியும் ஏந்தி இத் தண் புனத்தில்
நுழையும் பிரியல் உறான் அறியேன் இவன் உள்ளியதே 76

திண் பூ முக நெடுவேல் மன்னர் சேவூர் பட முடி மேல்
தண் பூ மலர் தும்பை சூடிய தார் மன்னன் நேரி என்னும்
வண் பூஞ்சிலம்பின் வரைப் புனம் நீங்கான் வரும் சுரும்பு ஆர்
ஒண் பூந்தழையும் தரும் அறியேன் இவன் உள்ளியதே 77

செறிந்தார் கருங்கழல் தென்னவன் செந்நிலத்தைச் செருவில்
மறிந்தார் புறம் கண்டு நாணிய கோன் கொல்லிச் சாரல் வந்த
நெறிந்தார் கமழ் குஞ்சியானோடு இவள் இடை நின்றதெல்லாம்
அறிந்தேன் பல நினைந்து என்னை ஒன்றே இருவர் ஆருயிரே 78

வண்ண மலர்த் தொங்கல் வானவன் மாறன் வை வேல் முகமும்
கண்ணும் சிவப்பக் கடையல் வென்றான் கடல் நாடு அனைய
பண்ணும் புரை சொல் இவட்கும் இவற்கும் பல நினைந்து இங்கு
எண்ணும் குறை என்னை ஒன்றே இருவர்க்கும் இன் உயிரே 79

படல் ஏறிய மதில் முன்று உடைப் பஞ்சவன் பாழி வென்ற
அடல் ஏறு அறில் மன்னன் தெம் முனை போல் மெலிந்து ஆடவர்கள்
கடல் ஏறிய கழி காமம் பெருகக் கரும் பனையின்
மடல் ஏறுவர் மற்றும் செய்யாதன இல்லை மாநிலத்தே 80

பொரு நெடும் தானைப் புல்லார் தம்மைப் பூலந்தைப் போர் தொலைத்த
செரு நெடு செஞ்சுடர் வேல் நெடுமாறன் தென் நாடு அனையாய்
அரு நெடும் காமம் பெருகுவதாய் விடின் ஆடவர்கள்
கரு நெடும் பெண்ணைச் செங்கேழ் மடல் ஊரக் கருதுவரே 81

தலமன்னு புள்ளினம் பார்ப்பும் சினையும் அவை அழிய
உலமன்னு தோள் அண்ணல் ஊரக் கொளாய்கொல் ஒலிதிரை சூழ்
நில மன்னன் நேரியன் மாறன் நெடுங்களத்து அட்ட திங்கள்
குல மன்னன் கன்னிக் குலை வளர் பெண்ணைக் கொழு முதலே 82

அண்ணல் நெடும் தேர் அரிகேசரி அகல் ஞாலம் அன்னாள்
வண்ணம் ஒருவாறு எழுதினும் மா மணி வார்ந்தனைய
தண் என் கரும் குழல் நாற்றமும் மற்று அவள்தன் நடையும்
பண் என் மொழியும் எழுத உளவோ படுச்சந்தமே 83

களி சேர் களிற்றுக் கழல் நெடுமாறன் கடையல் வென்ற
தெளி சேர் ஒளி முத்த வெண் குடை மன்னன் தென்னாடு அனையாள்
கிளி சேர் மொழியும் கருங் குழல் நாற்றமும் கேட்பின் ஐய
எளிதே எழுத எழுதிப்பின் ஊர்க எழில் மடலே 84

வில்தான் எழுதிப் புருவக் கொடி என்றீர் தாமரையின்
முற்றா முகை நீர் எழுதி முலை என்றீர் மொய் அமருள்
செற்றார் படச் செந்நிலத்தை வென்றான் தென்னன் கூடல் அன்னனான்
சொல்தான் ஏனக் கிள்ளையோ நீர் எழுதத் துணிகின்றதே 85

ஓங்கும் பெரும் புகழ் செங்கோல் உசிதன் உறுகலியை
நீங்கும்படி நின்ற கோன் வையைவாய் நெடு நீரிடையாள்
தாங்கும் புணையடு தாழும் தண் பூம் புனல் வாய் ஒழுகின்
ஆங்கும் வரும் அன்னதால் இன்ன நாள் அவள் ஆர் அருளே 86

காடு ஆர் கரு வரையும் கலி வானும் கடையல் சென்று
கூடார் செலச் செற்ற கோன் நெடுமாறன் தென் கூடல் அன்ன
ஏடு ஆர் மலர்க் குழலாள் எங்கு நிற்பினும் என்னை அன்றி
ஆடார் புனலும் மேல் ஊசலும் ஈது அவள் ஆர் அருளே 87

பா மாண் தமிழுடை வேந்தன் பராங்குசன் கொல்லிப் பைம் பூந்
தேமாந் தழையடு கண்ணியும் கொண்டுச் செழும் புனத்தில்
ஏ மாண் சிலை அண்ணல் வந்து நின்றார் பண்டு போல இன்று
பூ மாண் குழலாய் அறியேன் உரைப்பது ஓர் பொய்ம் மொழியெ 88

கொடி ஆர் நெடு மதில் கோட்டாற்று அரண் கொண்ட கோன் பொதியில்
கடி ஆர் புனத்து அயல் வைகலும் காண்பல் கருத்துரையான்
அடி ஆர் கழலன் அலங்கலன் கண்ணியன் மண் அளந்த
நெடியான் சிறுவன்கொலோ அறியேன் ஓர் நெடுந்தகையே 89

நண்ணிய போர் மன்னர் வான் புக நட்டாற்று அமர் விளைத்த
மண் இவர் செங்கோல் வரோதயன் வையை நல் நாடு அனையாய்
கண்ணியன் தண்ணந் தழையன் கழலன் கடும் சிலையன்
எண்ணியது யாதுகொல்லோ அகலான் இவ் இரும் புனமே 90

பன்னிய தீம் தமிழ் வேந்தன் பராங்குசன் பாழி வென்ற
மன்னிய சீர் மன்னன் கொல்லி நம் வார் புனம் கட்டழித்துத்
தின்னிய வந்த களிறு தடிந்த சிலம்பன் தந்த
பொன் இயல் பூண் மங்கை வாடுபவோ மற்று இப் பூந்தழையே 91

அரை தரு மேகலை அன்னம் அன்னாய் பண்டு அகத்தியன்வாய்
உரைதரு தீம் தமிழ் கேட்டோன் உசிதன் ஒண் பூம் பொதியில்
வரை தரு வார் புனம் கை அகலான் வந்து மா வினவும்
விரை தரு கண்ணியன் யாவன்கொலோ ஓர் விருந்தினனே 92

பொரும் பார் அரசரைப் பூலந்தை வாட்டிய கோன் பொதியில்லான்
அரும்பு ஆர் தழையும் கொண்டியான் சொன்ன பொய்யை மெய் என்று அகலான்
பெரும்பான்மையும் இன்று வாராவிடான் வரின் பேர் அமர்க்கண்
சுரும்பு ஆர் கருங் குழலாய் அறியேன் இனிச் சொல்லுவதே 93

தெம்மாண்பு அழந்து செந்தீ மூழ்கச் சேவூர்ச் செருவில் அன்று
வெம் மாப் பணி கொண்ட வேந்தன் தென்னாடு அன்ன மெல்லியலாய்
இம் மாந்தழையன் அலங்கலன் கண்ணியன் யாவன்கொலோ
கைம்மா வினவாய் வந்து அகலான் நம்தம் கடிப்புனமே 94

சிலையுடை வானவன் சேவூர் அழியச் செரு அடர்த்த
இலை உடை வேல் நெடுமாறன் கழன் இறைஞ்சாதவர் போல்
நிலை இடு சிந்தை வெம் நோயடு இந்நீள் புனம் கையகலான்
முலை இடை நேர்பவர் நேரும் இடம் இது மொய் குழலே 95

பாடும் சிறை வண்டு அறை பொழில் பாழிப் பற்றா அரசர்
ஓடும் திறம் கொண்ட கோன் கன்னிக் கானல் உறை துணையோடு
ஆடும் அலவன் புகழ்ந்து என்னை நொக்கி அறிவு ஒழிய
நீடு நினைந்து சென்றான் நென்னல் ஆங்கு ஓர் நெடும்தகையே 96

பொன்றா விரி புகழ் வானவன் பூலந்தைப் பூ அழிய
வென்றான் வியன் கன்னி அன்னம் தன் மென் பொடை மெய் அளிப்ப
நன்றாம் இதன் செய்கை என்று என்னை நோக்கி நயந்து உருகி
சென்றார் ஒருவர் பின் வந்து அறியார் இச் செழும் புனத்தே 97

கணி நிற வேங்கையும் கொய்தும் கலாவம் பரப்பி நின்று
மணி நிற மாமயில் ஆடலும் காண்டும் வல்லத்து வென்ற
துணி நிற வேல் மன்னன் தென்னர் பிரான் சுடர் தோய் பொதியில்
அணி நிற மால் வரைத் தூ நீர் ஆடுதமே 98

விரை வளர் வேங்கையும் காந்தளும் கொய்தும் வியல் அறை மேல்
நிரை வளர் மா மயில் ஆடலும் காண்டும் நிகர் மலைந்தார்
திரை வளர் பூம் புனல் சேவூர்ப் படச் செற்ற தென்னன் கொல்லி
வரை வளர் மா நீர் அருவியும் ஆடுதும் வாள் நுதலே 99

சிலை மிசை வைத்த புலியும் கயலும் சென்று ஓங்கு செம்பொன்
மலை மிசை வைத்த பெருமான் வரோதயன் வஞ்சி அன்னாள்
முலை மிசை மென் தோள் மேல் கடாய்த்தன் மோய் பூங்குழல்
தலை மிசை வைத்துக் கொண்டாள் அண்ணல் நீ தந்த தழையே 100

கழுது குருதி படியக் கலிநீர்க் கடையல் வென்ற
இழுதுபடு நெடு வேல் மன்னன் ஈர்ம் புனல் கூடல் அன்னாள்
தொழுது தலை மிசை வைத்துக் கொண்டாள் வண்டும் தும்பியும் தேன்
கொழுதும் மலர் நறுந்தார் அண்ணல் நீ தந்த கொய் தழையே 101

மண்இவர் செங்கோல் வரோயதன் வல்லத்து மாற்றலர்க்கு
விண்இவர் செல்வம் விளைவித்த வேந்தன் விண் தோய் பொதியில்
கண் இவர் பூந்தண் சிலம்பு இடை வாரான்மின் காப்புடைத்தால்
பண் இவர் வண்டு அறை சோலை வளாய எம் பைம புனமே 102

புல்லா வயவர் நறையாற்று அழியப் பொருது அழித்த
வில்லான் விளங்கு முத்தக்குடை மன்னன் வியன் நிலத்தார்
எல்லாம் இறைஞ்ச நின்றான் கொல்லி மல்லல் அம் சாரல் இங்கு
நில்லாது இயங்குமின் காப்படைத்தய நீள் புனமே 103

பூவலர் தண் பொழில் பூலந்தைப் புல்லா அரசு அழித்த
மாவலர்த் தானை வரோதயன் கொல்லி மணி வரைவாய்
ஏவலர் திண் சிலையார் எமர் நீங்கார் இரு பொழுதும்
காவராய் நிற்பர் வாரன்நின் நீர் இக் கடிப் புனத்தே 104

மின்னை மறைத்த செவ்வேல் வலத்தால் விழித்துள் ஒன்னார்
மன்னை மறைத்த எம் கோன் வையை சூழ் பௌவ நீர் புலவம்
தன்னை மறைத்து இள ஞாழல் மகழும் தண் பூந்துறைவா
என்னை மறைத்து இவ் இடத்திய யாதுகொல் எண்ணியதே 105

திண் தேர் வய மன்னர் சேவூர் அகத்துச் செரு அழியக்
கண்டே கதிர் வேல் செறித்த எம் கோன் கொல்லிக் கார் புனத்து
வண்டு ஏய் நறுங் கண்ணி கொண்டே குறை உற வந்ததனால்
உண்டே முடித்தல் எனக்கு மறப்பினும் உள் அகத்தே 106

சேயே என நின்ற தென்னவன் செந்நிலத்து ஏற்ற தெவ்வர்
போயே விசும்பு புகச் செற்ற கோன் அம்தண் பூம் பொதியில்
வேயே அனைய மென் தோளிக்கு நிண் கண் மெலி உறு நோய்
நீயே உரையாய் விரை ஆர் அலங்கல் நெடும்தகையே 107

புரைத்தார் அமர் செய்து பூலந்தைப் பட்ட புல்லாத மன்னர்
குரைத்தார் குருதிப் புனல் கண்ட கொன் கொல்லிப் பாவை அன்ன
நிரைத்தார் கரு மென் குழலிக்கு நீயே நெடும்துறைவா
உரைத்தால் அழிவது உண்டோ சென்று நின்று நின் உள மெலிவே 108

பொறி கெழு கெண்டை பொன் மால் வரை வைத்து இப் பூமி எல்லாம்
நெறி கெழு செங்கோல் நடாய் நெடுமாறன் நெல்வேலி வென்றான்
வெறி கமழ் பூம் கன்னிக் கானல் விளையாட்டு அயர நின்ற
செறிகுழலார் பலர் யார் கண்ணதோ அண்ணல் சிந்தனையே 109

திளையா எதிர் நின்ற தெம்மன் ஆர் சேவூர் படச் சிறு கண்
துளை ஆர் கரும் கைக் களிறு உந்தினான் தொண்டிச் சூழ் துறைவாய்
வளை ஆர் வனமுலையார் வண்டல் ஆடும் வரி நெடும் கண்
இளையார் பலர் உளர் யார் கண்ணதோ அண்ணல் இன் அருளே 110

மன்னன் வரோதயன் வல்லத்து ஒன்னார்கட்கு வான் கொடுத்த
தென்னன் திருமால் குமரியம் கானல் திரை தொகுத்த
மின்னும் சுடர் பவளத்து அருகே விரை நாறு புன்னை
பொன்னம் துகள்கள் சிந்தி வானவில் போன்றது இப் பூந்துறையே 111

கார் அணி சோலைக் கடையல் இடத்துக் கறுத்து எதிர்ந்தார்
தோணி தானை சிதைவித்த கோன் கன்னித் தென் துறைவாய்
நீர் அணி வெண் முத்தினால் இந்நெடு மணல் மேல் இழைத்த
ஏர் அணி வண்டல் சிதைக்கின்றதால் இவ் வெறி கடலே 112

பொன் அயர் வேங்கை அம் பூந்தழை ஏந்திப் புரிந்து இலங்கு
மின் அயல் பூணினை வாரல் சிலம்ப விழிஞத்து ஒன்னார்
மன்னயர் எய்த வை வேல் கொண்ட வேந்தன் நம் மாந்தை அன்னாள்
தன்னயர் தீயர் பல்கால் வருவர் இத்தண் புனத்தே 113

பூட்டிய மா நெடும் தேர் மன்னர் பூலந்தைப் பூ அழிய
ஓட்டிய திண் தேர் உசிதன் பொதியில் உயர் வரைவாய்
ஈட்டியர் நாயிநர் வீணயர் வாளிநர் எப்பொழுதும்
கோட்டிய வில்லர் குறவர் நண்ணன்மின் இக் கொய் புனத்தே 114

ஆடு இயல் மா நெடும் தேர் மன்னர் ஆற்றுக்குடி அழியக்
கோடிய திண் சிலைக் கோன் நெடுமாறன் தென் கூடல் அன்னாள்
நீடிய வார் குழல் நீலமும் சூடாள் நினைந்து நின்றான்
தோடு இயல் பூந் தொங்கலாய் அறியேன் சென்று சொல்லுவதே 115

புள் புலம் பூம் புனல் பூலந்தைப் போர் இடைப் பூழியர் கோன்
உள் புலமபொடு செலச் செற்ற வேந்தன் உறந்தை அன்னாள்
கண் புலனாய்ச் செல்லும் தெய்வம் கண்டாய் கமழ் பூம் சிலம்பா
உள்கிலன் ஆகில் எவ்வாறு மெழிவன் இம் மாற்றங்களே 116

நடை மன்னும் என்று எம்மை நீர் வந்து நண்ணன்மின் நீர் வளநாட்டு
இடை மன்னு செல்வர் நுமர் எமர் பாழி இகல் அழித்த
படை மன்னன் தென் குல மாமதி போல் பனி முத்து இலங்கும்
குடை மன்னர் கோடு உயர் கொல்லியம் சாரல் குறவர்களே 117

உற்றவரே நுமக்கு ஒண் புனல் நாட்டு உயர் செல்வர் செல்லின்
மற்று எமர் ஆய்விடின் வானவன் தானுடை மான் இனையச்
செற்று அமர் சேவூர் புறம் கண்ட திங்கள் திருக்குலத்துக்
கொற்றவன் மாறன் குடக் கொல்லி வாழும் குறவர்களே 118

இழை வளர் பூண் அண்ணல் ஈர்ம் புனல் நாடனை நீ எமரோ
மழை வளர் மானக் களிறு உந்தி மா நீர்க் கடையல் வென்ற
தழை வளர் பூங் கண்ணி மூன்று உடை வேந்தன் தண்ணம் பொதியில்
குழை வளர் ஆரத்து அருவி அம் சாரல் குறவர்களே 119

வேழம் வினவுதிர் மென் பூந்தழையும் கொணர்ந்து நிற்றீர்
ஆழம் உடை கருமத்தில் போகீர் அணைந்து அகலீர்
சோழன் சுடர்முடி வானவன் தென்னன் துன்னாத மன்னர்
தாழ மழை உரும் ஏந்திய கோன் கொல்லித் தண் புனத்தே 120

பா உற்ற தீம் தமிழ் வேந்தன் பராங்குசன் பாழி பற்றாக்
கோ உற்ற அல்லல் கண்டான் கொல்லிச் சாரல் எம் கொய் புனத்துள்
ஏ உற்ற புண்ணொடு மான் வந்ததோ என்னும் ஈர்ம் சிலம்பா
மா உற்ற புண் இருகிடு மருந்தோ நின் கை வார் தழையே 121

வேனக நீண்ட கண்ணாளும் விரும்பும் சுரும்பு அறற்றத்
தேனக நீண்ட வண்டு ஆர் கண்ணியாய் சிறி துண்டு தெவ்வர்
வானகம் ஏற வல்லத்து வென்றான் கொல்லி மால் வரைவாய்
கானக வாழ்நரும் கண்டு அறிவார் இக் கமழ் தழையே. 122

துடி ஆர் இடை வடிவேல் கண் மடந்தை தன் சொல் அறிந்தால்
கடி ஆர் கமழ் கண்ணியாய் கொள்வல் யான் களத்தூரில் வென்ற
அடி ஆர் இலங்கு இலை வேல் மன்னன் வான் ஏற அணிந்த வென்றிக்
கொடியான் மழை வளர் கொல்லியஞ் சாரல் இக் கொய் தழையே 123

அம் கேழ் அலர் நறும் கண்ணியினாய் அருளித் தரினும்
எம் கேழ் அவருக்கு இயைவன போலா இருஞ்சிறை வாய்
வெம் கேழ் அயில் நலம் கொண்டவன் விண் தோய பொதியிலின்வாய்
செங்கேழ் மலரின் தளிர் இளம் பிண்டியின் தீம் தழையே 124

வேரித் தடம் தொங்கல் அண்ணல் விருந்தா இருந்தமையால்
பூரித்த மெல் முலை ஏழை புனையின் பொல்லாதுகொலாம்
பாரித்த வேந்தர் பறந்தலைக்கோடி படப் பரிமா
வாரித்த கோமான் மண நீர் மலயத்து மாந்தழையே 125

ஏ மாண் சிலை நுதல் ஏழையும் ஏற்கும் இன் தேன் அகலாப்
பூ மாண் கமழ் கண்ணியாய் நின்றது ஒன்று உண்டு பூழியர் கோன்
பா மாண் தமிழின் பராங்குசன் கொல்லிப் பனிவரைவாய்த்
தே மாண் பொழிலின் அகத்து அன்றி இத் தேம் தழையே 126

கைந்நிலைத்த சிலையால் கணை சிந்தி கறுத்து எதிர்ந்தார்
செந்நிலத்துப் பட சீறிய கோன் செழும் தண் பொதியில்
இந்நிலத்து இம்மலை மேல் ஒவ்வா இரும் தண் சிலம்பா
எம் நிலத்து எம் மலை மேல் இச் சந்தனத்து ஈ£ர்ந் தழையே 127

கந்து ஆர் களிறு கடாய் செந்நிலத்தைக் கறுத்து எதிர்ந்து
வந்தார் அவிய வை வேல் கொண்ட கோன் கன்னிவார் துறைவாய்
பந்து ஆர் விரலி தன் பாவைக்கு பைம் போது ஓருவர்
தந்தார் தர அவை கொண்டு அணிந்தாள் இத் தடம் கண்ணியே 128

திண் போர் அரசரைச் சேவூர் அழிவித்த தென்னன் நல் நீர்
மண் போல் அழிக்கும் செங்கோல் மன்னன் வையை நல் நாடு அனையாள்
கண் போல் குவளை அம் போது அங்கு ஓர் காளையை கண்டு இரப்ப
தண் போது அவன் கொடுத்தான் அணிந்தாள் இத் தடம் கண்ணியே 129

உறு கற்புடைமையின் உள்ளும் இப் பேதை உசிதன் ஒன்னார்
மறுகத்திறல் உரும் ஏந்திய கோன் கொல்லி மால் வரைவாய்த்
துறுகல் புனமும் சிதைத்து எங்கள் தம்மையும் துன்ன வந்த
சிறு கண் களிறு கடிந்து இடர் தீர்த்த சிலம்பனையே 130

கனம் சேர் முலை மங்கை உள்ளும் இப் போதும் கடையல் ஒன்னார்
மனம் சேர் துயர் கண்ட வானவன் மாறன் தன் மை தோய் பொதியில்
பும் சேர் தினையும் கவர்ந்து எம்மைப் பேகா வகை புகுந்த
சினம் சேர் களிறு கடிந்து இடர் தீர்த்த சிலம்பனையே 131

ஓங்கிய வெண் குடைப் பைங்கழல் செங்கோல் உசிதன் வையை
வீங்கிய தண் புனல் *ஆடி விளையாட்டு அயர் பொழுதில்
தேங்கிய தெள் திரை வாங்க ஒழுகி நின் சே இழையாள்
நீங்கிய போது அருள் செய்தனன் வந்து ஓர் நெடும் தகையே 132

* 'வீங்கிய' என்பதாலும் 'விளையாட்டு' எனும் கூடிய
சொல்லாலும் ஆடிப் பெருக்கினைக் குறிப்பதாகலாம்
சில் நாள் மறந்திலம் யாமும் தென் சேவூர் செரு மலைந்த
மன் ஆள் செலச் செற்ற வானவன் மாறன் வையைத் து¡றவாய்
பொன் ஆர் புனல் எம்மை வாங்கும் பொழுது அங்கு ஓர் பூங்கணை வேள்
அன்னான் ஒருவன் அணைந்து எமக்கு செய்த ஆர் அருளே 133

வண்டு ஆர் இரும் பொழில் வல்லத்து தென்னற்கு மாறு எதிர்ந்த
விண்டார் உடலின் மறி அறுத்து ஊட்டி வெறி அயர்ந்து
தண் தார் முருகன் தருகின்ற வேல தண் பூஞ்சிலம்பன்
ஓள் தார் அகலமும் உண்ணும்கொலோ நின் உறு பலியே 134

வார் அணங்கும் கழல் வானவன் மாறன் வண் கடல் கூடல் அன்ன
வேர் அணங்கும் இள மெல் முலையாட்கு இரும் தண் சிலம்பன்
தார் அணங்கு ஆவது அறிந்தும் வெறியின் கண் தாழ்ந்தமையால்
ஆர் அணங்கு ஆயினும் ஆக இச் செவ்வேள் அறிவு இலனே 135

பொன் அணங்கு ஈர்ம் புனல் பூலந்தை ஒன்னார் புலால் அளைந்த
மின் அணங்கு ஈர் இலை வேல் தென்னர் கோன் இயல் நாட்டவர் முன்
தன் அணங்கு அன்மை அறிந்தும் வெறியின்கண் தாழ்ந்தமையால்து
மன் அணங்கு ஆயினும் ஆக இச் செவ்வேள் மதி இலனே 136

அறை வாய் அதிர் கழல் வேந்து இகல் ஆற்றுக்குடி அழித்த
கறை வாய் இலங்கு இலை வேல் மன்னன் கன்னி அம் கானலின் வாய்
இறை வாய் அணி வளையாய் என்னை கொல்லோ இரவின் எல்லாம்
துறை வாய் இளம் புன்னை மேல் அன்னம் ஒன்றும் துயின்றிலவே 137

பூ நின்ற வேல் மன்னன் பூலந்தை வான் புக பூட்டழித்த
வேல் நின்ற வெம் சிலை வேந்தன் இரணாந்தகன் அறியும்
பால் நின்ற இன் தமிழ் அன்ன நல்லாய் நம்மை பைங் கானலின்வாய்த்
தூய் நின்ற மென் சிறகு அன்னம் இன்று ஒன்றும் துயின்றிலவே 138

ஒளி ஆர் திரு நுதலாளை எளியள் என்று உன்னி வந்து
விளியா வரும் துயர் செய்தமையால் விழிஞத்து வென்ற
களி ஆர் களிற்றுக் கழல் நெடுமாறன் கடி முனை மேல்
தெளியா வயவரில் தேய்வாய் அளிய என் சிந்தனையே 139

ஏர்ஆர் குழல் மடவாளை எளியள் என்று உன்னி வந்து
தீரா விழுமம் தந்தாய் தென்னன் சேவூர் செரு அடர்த்த
கார் ஆர் களிற்றுக் கழல் மன்னன் மாறன் கழல் பணிந்து
சேரா வயவரில் தேய்வாய் அளிய என் சிந்தனையே 140

மருள் போல சிறை வண்டு பாட நிலவு அன்ன வார் மணல் மேல்
இருள் போல் கொழு நிழல் பாய் அறிந்தார்கட்கு இன் தீம் தமிழின்
பொருள் போல் இனிதாய்ப் புகழ் மன்னன் மாறன் பொதியிலின் கோன்
அருள் போல் குளிர்ந்து அன்னமும் துன்னும் நீர்த்து எங்கள் ஆடு இடமே 141

காவி அம் தண் துறை சூழ்ந்து கடையல் கறுத்தவர் மேல்
தூவி அம்பு எய்தவன் தொண்டி வண்டார் புன்னைத் தூமலர்கள்
தாவிய வெண் மணற்றாய் அறிந்தார் கட்குத் தண் தமிழின்
ஆவியும் போல இனிதாய் உளது எங்கள் ஆடு இடமே 142

அம் சிறை வண்டு அறை காந்தளம் செம் போது சென்றி யான் தருவன்
பஞ்சு உறை தேர் அல்குலாய் வரற்பாற்று அன்று பாழி ஒன்னார்
நெஞ்சு உறையாச் செற்ற வேல் மன்னன் நேரி நெடு வரைவாய்
மஞ்சு உறை சோலை வளாய் தெய்வம் மேவும் வரை அகமே 143

நீ விரி கோதை இங்கே நில் நின்னால் வரற்பாலது அன்று
தீ விரி காந்தள் சென்றி யான் தருவன் தெய்வம் அங்குடைத்தால்
பூ விரி வார் பொழில் பூலந்தை வானவன் பூ அழித்த தானவன்
மாவிரி தானை எம் கோன் கொல்லி சூழ்ந்த வரை அகமே 144

பொருமா மணிமுடி மன்னரைப் பூலந்தை பூ அழித்த
குரு மா மணிவண்ணன் கோன் நெடுமாறன் குமரி முந்நீர்
அருமா மணி திகழ் கானலின்வாய் வந்து அகன்ற கொண்கன்
திருமா மணி தேரொடு சென்றது என் சிந்தனையே 145

அன்னம் புரையும் நடையாள் புலம் பெய்த அத்தம் என்னும்
பொன் அம் சிலம்பு கதிரோன் மறைதலும் போயினவால்
தென்னன் திருமால் கழல் நெடுமாறன் திருந்து செங்கோல்
மன்னன் குமரிக் கரும் கழி மேய்ந்த வண்டானங்களே 146

பொருங் கழல் மாறன் புல்லா மன்னர் பூலந்தைப் பூங்குருதி
மருங்கழி நீர் மூழ்கக் கண்ட எம் கோன் கானல் வண்டு ஆர்
கரும் கழி மேய்ந்த செங்கால் வெள்ளை அன்னம் கதிரொடும் தம்
பெரும் கழி காதன்மை நீங்கி இவனில் பிரிந்தனவே 147

மேயின் தம் பெடையடும் எம் மெல்லியலாளை வெம் தீப்
பாயின மாலைக்குக் காட்டிக் கொடுத்து பரந்து மண் மேல்
ஆயின சீர் அரிகேசரிக்கு அன்று அளநாட்டுடைந்து
போயின தெவ்வரின் போயின கானலில் புள் இனமே 148

நீர் வண்ணன் வெண் திரை மேல் நின்ற வேந்தன் நெல்வேலி ஒன்னார்
போர் வண்ணம் வாட்டிய பூழியன் பூந்தண் குருந்து ஒசித்த
கார் வண்ணன் போல் வண்ணன் காவிரி நாடு அன்ன காரிகையாள்
ஏர் வண்ணம் நோக்கி நின்று என்னையும் நோக்கினள் எம் மனையே 149

உளம் மலையாமை திருத்தி பொருவான் உடன்று எழுந்தார்
களம் மலையாமைக் கடையல் வென்றான் கடல் தானை அன்ன
வள முலை வால் முறுவல் தையல் ஆகத்து வந்து அரும்பும்
இள முலை நோக்கி நின்று என்னையும் நோக்கினன் எம் மனையே 150

செயல் மன்னும் ஆவது சொல்லாய் சிலம்ப தென் பாழி வென்ற
கயல் மன்னு வெல் கொடிக் காவலன் மாறன் கடி முனை மேல்
அயல் மன்னர் போல் கொய்து மாள்கின்றதால் அணி வான் உரிஞ்சும்
புயல் மன்னு கோட்ட மணி வரைச் சாரல் எம் பூம் புனமே 151

என் ஏர் அழியா வகை என்னை வெற்ப இருஞ்சிறை வாய்
மன் ஏர் அழிய வென்றான் முனை போல் கொய்து மாள்கின்றதால்
மின் ஏர் திகழும் மழை கால் கழிய வியல் அறை வாய்ப்
பொன் நேர் திகழும் அணி வரைச் சாரல் புனத் தினையே 152

திரை ஆர் குருதிப் புனல் மூழ்கச் செந்நிலத்து அன்று வென்ற
உரை ஆர் பெரும் புகழ் செங்கோல் உசிதன் ஒள் பூம் பொதியில்
வரை ஆர் தினைப் புனம் கால் கொய்ய நல் நாள் வரைந்து நின்ற
விரை ஆர் மலர் இயல் வேங்காய் நினக்கு விடை இல்லையே 153

வான் உடையான் முடிமேல் வளை* எற்றியும் வஞ்சியர் தம்
கோன் உடையாப் படை கோட்டாற்று அழிவித்தும் கொண்ட வென்றி
தான் உடையான் சத்ரு துரந்தரன் பொன் வரை மேல்
மீன் உடையான் கொல்லி வேங்காய் நினக்கு விடை இல்லையே 154

* இந்திரன் முடி மேல் வளை எறிந்த 'திருவிளையாடல்'
நன்று செய்தாம் அல்லம் நல் நுதலாய் நறையாற்று வெம் போர்
நின்று செய்தார் உந்தி வந்த நெடும் கைக் களிற்று உடலால்
குன்று செய்தான் கொல்லி வேங்கையை மெல் அரும்பாய்க் கொய்தல்
அன்று செய்தாம் எனில் நிற்பது அன்றோ நம் அகல் புனமே 155

உலம் புனை தோள் மன்னர் கூட வல்லத்து அட்டவர் உரிமை
கலம் புனை கோதையர் அல்லல் கண்டான் கொல்லிச் சாரல் நண்ணி
வலம் புனை வில்லோடு அருவிப் புனம் கண்டு வாடி நின்றால்
சிலம்பனை நையற்க என்னும்கொல் வேங்கைச் செழும் பொழிலே 156

பொரும் கண்ணி சூடி வந்தார் படப் பூலந்தைப் பொன் முடி மேல்
இரும் கண்ணி வாகை அணிந்த எம் கோன் கொல்லி ஈர்ம் சிலம்பில்
கரும் கண்ணி காக்கின்ற பைம் புனம் கால் தோய் நாள் வரைந்த
பெரும் கண்ணியரைப் பொன் வேங்கை என்றோ இன்னும் பேசுவதே 157

பைந்நின்ற ஆடு அரவு ஏர் அல்குலாள் செல்ல நாள் பணித்த
இந்நின்ற வேங்கை குறையாது இளம் சந்தனம் குறைத்தார்
மெய்ந்நின்ற செங்கோல் வினையசரத்தன் விண் தோய் பொதியில்
மைந்நின்ற சாரல் வரை அக வாணர் மடவியரே 158

நெய் ஒன்று வேல் நெடுமாறன் தென் நாடு அன்ன நேரிழை இம்
மை ஒன்று வாள் கண் மடந்தை திறத்து இட்ட அறம் திரிந்து
பொய் ஒன்று நின் கண் நிகழும் என்றால் பின்னைப் பூம் சிலம்பா
மெய் ஒன்றும் இன்றி ஒழியும் கொல்லோ இவ் இயல் இடமே 159

திரைப் பால் இரும் புனல் சேவூர் எதிர் நின்ற சேரலன் கோன்
வரைப் பால் அடையச் செற்றான் வையை அன்னாள் திறத்து வண்டு ஆர்
விரைப் பாய் நறுங் கண்ணியாய் பொய்மை நீ சொல்லின் மெய்ம்மை என்பது
உரைப்பார் பிறர் இனி யாவர் கொல்லோ இவ் உலகின் உள்ளே 160

வந்து அணங்கா மன்னர் தேய முன்னாள் மழையே அயர்த்த
கந்து அணங்கா மத யானைக் கழல் மன்னன் கார் பொதியில்
சந்தனம் சாய்ந்து செங்காந்தளம் பூத்து அழல் போல் விரியும்
கொந்து அணங்கு ஈர்ம் பிண்டி யாம் விளையாடும் குளிர் பொழிலே 161

காந்தளம் போது எம் கரும் குழல் போல் கடையல் ஒன்னார்
தாம் தளர்ந்து ஓட வை வேல் கொண்ட வேந்தன் தண்ணம் பொதியில்
சார்ந்து எம் சாந்தம் விளையாடு இடமும் தளை அவிழும்
பூந்தளம் பிண்டி எரி போல் விரியும் பொழில் அகமே 162

அணி நிற மாப் பகடு உந்தி வந்தார் வல்லத்து அன்று அவிய
துணி நிற வேல் கொண்ட கோன் கொல்லிச் சாரலின் சூழ் பொழில்வாய்
மணி நிற மா மயில் என்னை கொல் பொன் ஏர் மலர் துதைந்த
கணி நிற வேங்கையின் மேல் துயிலாது கலங்கினவே 163

கயில் கொண்ட வார் கழல் போர் மன்னர் ஓட கடையல் கண் வேந்து
அயில் கொண்ட கோன் அரிகேசரி கொல்லி அரு வரைவாய்
பயில் வண்டும் தேனும் பண் போல் முரலும் பூம் பொழில்வாய்
துயில் கொண்டில துணையோடும் என் செய்தன தோகைகளே 164

ஆழிக் கடல் வையம் காக்கின்ற கோன் அரிகேசரி தென்
பாழிப் பகை செற்ற பஞ்சவன் வஞ்சிப் பைம் பூம் புறவில்
பூழிப் புற மஞ்ஞை அன்ன நல்லாய் கொள் கம்போ துதியேல்
தாழிக் குவளை நின் கண் போல் விரியும் தட மலரே 165

விளைக்கின்ற பல் புகழ் வேந்தன் விசாரிதன் விண்டு எதிர்ந்து
திளைக்கின்ற மன்னரைச் சேவூர் அழித்தவன் தீம் தமிழ் போல்
வளைக்கு ஒன்று கை மங்கையாய் சென்று கோடும் நின் வாயுள் வந்து
முளைக்கின்ற முள் எயிற்று ஏர் கொண்ட அரும்பின் முல்லைகளே 166

பலராய் எதிர் நின்று பாழிப் பட்டார் தங்கள் பைம் நிணம் வாய்
புலரா அகம்புடை வேல் மன்னன் வேம்பொடு போந்தணிந்த
மலர் ஆர் மணி முடி மான் தேர் வரோதயன் வஞ்சி அன்னாட்கு
அலராய் விளைகின்றதால் அண்ணல் நீ செய்த ஆர் அருளே 167

பொருள் தான் என நின்ற மானதன் பூலந்தைத் தோற்றுப் புல்லார்
இருள் தான் அடை குன்றம் ஏற என்றோன் கன்னி ஈர்ம் பொழில்வாய்
மருள் தான் என வண்டு பாடும் தண் தார் அண்ணல் வந்து செய்த
அருள் தான் அலராய் விளைகின்றதால் மற்று இவ் ஆயிழைக்கே 168

நீர் அணி வேலி நெடுங்களத்து ஒன்னார் நிணம் அளைந்த
போர் அணி வேல் மன்னன் கன்னி அன்னாள் பொன் அணிவான்
கார் அணி வார் முரசு ஆர்ப்பப் பிறரும் கருதி வந்தார்
வார் அணி பூங்குழல் அண்ணல் என் ஆகி வலிக்கின்றதே 169

வேலைத் துளைத்த கண் ஏழை திறத்தின்று விண் உரிஞ்சும்
சோலைச் சிலம்ப துணி ஒன்று அறிந்து சுடரும் முத்த
மாலைக் குடை மன்னன் வாள் நெடுமாறன் வண் கூடலின் வாய்க்
காலைத் திருமனை முற்றத்து இயம்பும் கடி முரசே 170

போர் மலி தெவ்வரைப் பூலந்தை வென்றான் புகார் அனைய
வார் மலி கொங்கை மடந்தையை வேறு ஓர் மணம் கருதித்
தார் மலி வார் முரசு ஆர்ப்ப பிறரும் கருதி வந்தார்
ஏர் மலி தார் அண்ணல் என்னோ இதன் திறத்துஎண்ணுவதே 171

வேயும் புரையும் மென் தோளி திறத்தின்று எல்லையுள் விண்
தோயும் சிலம்ப துணி ஒன்று அறிந்து தொல் நூல் புலவர்
ஆயும் தமிழ் அரிகேசரி கூடல் அகல் நகர் வாய்
ஏயும் திரு மனை முற்றத்து இயம்பும் எறி முரசே 172

குன்று ஒத்த யானை செங்கோல் நெடுமாறன் தென் கூடல் அன்ன
மென் தொத்து அணி குழல் ஏழை திறத்து விளைவு அறிந்தே
இன்று ஒத்தது ஒன்று துணி நீ சிலம்ப அன்றாயின் எம் ஊர்
மன்றத்து நின்று முழங்கும் கொல் நாளை மணமுரசே 173

நலம் புரி தெய்வம் அன்னாய் செய்வது என் நறையாற்று வென்ற
உலம் புரி தோள் மன்னன் தென் புனல் நாட்டு ஒருவற்கு இயைந்து
குலம் புரி கோதையைக் காப்பு அணிந்தார் கொடி மாட முன்றில்
வலம்புரியோடு முழங்கும் கொல் நாளை மணமுரசே 174

என்னால் இது செய்க என்று என் சொல்லலாம் இகல் பாழி வென்ற
மின் ஆர் அயில் படைச் செங்கோல் விசாரி தன் வீங்கு ஒலி நீர்த்
தென் நாடு எனினும் கொள்ளார் விலையாய்த் தமர் சீர் செய் வண்டு
முன்நாள் மலர் ஒன்று அணையும் கண் ஏழை முகிழ் முலைக்கே 175

மால் புரை யானை மணி முடி மாறன் மாண்பாய் நிழற்றும்
பால் புரை வெண் குடைத் தென்னன் பறந்தலைக்கோடி வென்ற
சேல் புரை வெம்மை அம் கானம் எனினும் அவ் வேந்தன் செய்ய
கோல் புரைத் தன்மைய ஆம் நும்மொடு ஏகின் இக் கொம்பினுக்கே 176

கழல் அணி போர் மன்னர் கான் நீர்க் கடையல் படக் கடந்த
தழல் அணி வேல் மன்னன் சத்ருதுரந்தரன் தன் முனை போன்று
அழல் அணி வெம்மைய ஆயினும் கானம் அவன் குடையின்
நிழல் அணி தன்மைய ஆம் நும்மொடு ஏகின் எம் நேரிழைக்கே 177

ஏணும் இகலும் அழிந்து தெவ் வேந்தர் எல்லாம் இறைஞ்சிக்
காணும் கழல் நெடுமாறன் செங்கோல் நின்று காக்கும் மண் மேல்
சேணும் அகலாது உடன் என்னோடு ஓடித் திரிந்து வந்த
நாணும் அழியத்தகு கற்பு மேம்பட நைகின்றதே 178

பாயப் புரவி கடாய் வந்து பாழிப் பகை மலைந்தார்
தேயச் சிலை தொட்ட தென்னவன் தேம் தண் பொதியிலின்வாய்
வேய் ஒத்த தோளி நும்மொடு வரவு விரும்பவும் தன்
ஆயத்தவரை நினைந்து கண்ணீர் கொண்டு அலமந்தவே 179

கொங்கை தளரினும் கூந்தல் நரைப்பினும் ஏந்தல் மற்று இவ்
அங்கை அடைக்கலம் என்றே கருதி அருள்க கண்டாய்
கங்கை மணாளன் கலிமதனன் கடிமா மணற்றி
மங்கை அமர் அட்ட கோன் வையை நாடு அன்ன மாதரையே 180

மென்முலை வீழினும் கூந்தல் நரைப்பினும் விண் உரிஞ்சும்
நல் மலைநாட இகழல் கண்டாய் நறையாற்றில் வென்ற
வில் மலி தானை நெடும் தேர் விசாரிதன் வேந்தன் பெம்மான்
கொல் மலி வேல் நெடும் கண்ணிணைப் பேதைக் கொடியினையே 181

பண் தான் அனைய சொல்லாய் பைய ஏகு பறந்தலைவாய்
விண்டார் படச் செற்ற கோன் வையை சூழ் வியல் நாட்டகம் போல்
வண்டு ஆர் பொழிலும் மணி அறல் யாறும் மருங்கு அணைந்து
கண்டார் மகிழும் தகைமையது யாம் செல்லும் கானகமே 182

சிறிய பைங் கண் களிறு ஊர்ந்து தென் பாழியில் செற்று அதிர்ந்தார்
மறிய வை வேல் கொண்ட தென்னவன் வையை நல் நாட்டகம் போல்
முறிய பைம் போதுகள் மேல் வண்டு பாடி முருகு உயிர்க்கும்
நறிய பைங் கானம் நையாது நடக்க என் நல் நுதலே 183

அலை மன்னு பைங் கழல் செங்கோல் அரிகேசரி அளிஆர்
இலை மன்னு மாலை முத்தக் குடையான் இகல் வேந்தரைப் போல்
மலை மன்னு வெய்யோன் மறைந்தனன் மாது மெல்ல வாடி நைந்தாள்
சிலை மன்னு தோள் அண்ணல் சேர்ந்தனை செல் எம் சிறுகுடிக்கே 184

நின்று ஆங்கு எதிர்ந்தார் குருதியுள் ஆழ நெடுங்களத்து
வென்றான் விசாரிதன் கூடல் அன்னாளும் மிக மெலிந்தாள்
குன்று ஆர் சுடரோன் மறைந்தனன் கூர் வேல் விடலை தங்கிச்
சென்றால் அழிவது உண்டோ அணித்தால் எம் சிறுகுடியே 185

நீயும் இவளும் இன்றே சென்று சேர்திர் நெல்வேலி ஒன்னார்
தேயும்படி செற்றவன் தென்னன் தென் புனல் நாட்டு இளையர்
வாயும் முகமும் மலர்ந்த கமல மணித் தடத்துப்
பாயும் கயல் அவர் கண் போல் பிறழும் பழனங்களே 186

ஒள் முத்த வார் கழல் கை தந்து என் ஊறா வறு முலையின்
கண் முத்தம் கொண்டும் முயங்கிற்று எல்லாம் கரு வெம் கழை போய்
விண் முத்த நீள் சுரம் செல்லியவோ விழிஞத்து வென்ற
தண் முத்த வெண் குடையான் தமிழ் நாடு அன்ன தாழ் குழலே 187

வேடகம் சேர்ந்த வெம் கானம் விடலையின் பின் மெல் அடி மேல்
பாடகம் தாங்கி நடந்தது எவ்வாறு கொல் பாழி வென்ற
கோடக நீள்குடிக் கோன் நெடுமாறன் தென் கூடலின்வாய்
ஆடக மாடம் கடந்து அறியாத என் ஆரணங்கே 188

நளி முத்த வெண் மணல் மேலும் பனிப்பன நண்பன் பின் போய்
முளி உற்ற கானம் இறந்தன போலும் நிறமும் திகழும்
ஓளி முத்த வெண் குடைச் செங்கோல் உசிதன் உறந்தை அன்ன
தெளி முத்த வால் முறுவல் சிறியாள் தன் சிலம்படியே 189

மழை கெழு கார் வண் கை வானவன் மாறன் வண் கூடல் அன்ன
விழை கெழு கொங்கை என் பேதை ஓர் ஏதிலனோடு இயைந்துக்
கழை கெழு குன்றம் கடப்பவும் நீ கண்டு நின்றனையே
தழை கெழு பாவை பலவும் வளர்கின்ற தண் குரவே 190

நினைப்ப அரும் புண்ணியம் செய்தாய் குரவே நெடுங்களத்து
வினைப் பொலி மால் களிறு உந்தி வென்றான் வியல் நாட்டகத்தார்
மனைப் பொலி பாவை பயந்தேன் வருந்தவும் நீ கடத்துள்
எனைப் பல பாவை பயந்தும் எய்தாய் ஒர் இரும் துயரே 191

வில்லவன் தானை நறையாற்று அழிந்து விண் ஏற வென்ற
வல்லவன் மாறன் எம் கோன் முனை போல் சுரம் வாள் நுதலாள்
செல்ல அவன் பின் சென்ற ஆறு போழ்து என்குச் செல்லுமே
பல்லவம் ஆக்கித் தன் பாவை வளர்க்கின்ற பைங் குரவே 192

வில்லான் விறல் அடி மேலன பொன் கழல் வெண் முத்தன்ன
பல் ஆள் வினை அடி மேலன பாடகம் பஞ்சவர்க்கு
நெல் ஆர் கழனி நெடுங்களத்து அன்று நிகர் மலைந்த
புல்லாதவர் யார் கொல் அரும் சுரம் போந்தவரே 193

நிழல் ஆர் குடையடு தண்ணீர் கரகம் நெறிப்பட கொண்டு
அழல் ஆர் அரும் சுரத்து ஊடு வருகின்ற அந்தணிர்காள்
கழலான் ஒருவன் பின் செங்கோல் கலிமதனன் பகை போல்
குழலாள் ஒருத்தி சென்றனளோ உரைமின் இக்குன்று இடத்தே 194

குடை ஆர் நிழல் சேர உறி சேர் கரகத்தொடு குன்றிடத்து
நடையால் மெலிந்து வருகின்ற அந்தணிர் ஞாலம் எல்லாம்
உடையான் ஒளி வேல் உசிதன் தென் கூடல் ஒள் தீம் தமிழ் போல்
இடையாள் விடலை பின் சென்றனளோ இவ் இரும் சுரத்தே 195

செறி கழல் வேந்தரைச் சேவூர் அமர் வென்ற தென்னன் செய்ய
நெறி கெழு கோன் நெடுமாறன் முனை போல் நெடும் சுரத்து
வெறி கமழ் கோதை இங்கே நின்றது இ·தாம் விடலை தன்கைப்
பொறி கெழு திண் சிலை வாளியின் எய்த பொரு களிறே 196

கொடு வில் படை மன்னர் கோட்டாற்று அழியக் கணை உதைத்த
நெடு வில் தடக்கை எம் கோன் நெடுமாறன் தன் நேரி முன்னால்
இடு வில் புருவத்தவள் நின்ற சூழல் இது உதுவாம்
கடு வில் தொடு கணையால் அண்ணல் எய்த கதக் களிறே 197

ஆளையும் சீறும் களிற்று அரிகேசரி தெவ்வரைப் போல்
காளையும் காரிகையும் கடம் சென்று இன்று காண்பர் வெம் கேழ்
வாளையும் செங்கண் வராலும் மடல் இளம் தெங்கு உகுத்த
பாளை அம் தேறல் பருகிக் களிக்கும் பழனங்களே 198

நகு வாயன பல பெய்துற்ற நட்டாற்று அருவரை போன்று
உகு வாய் மதக் களிறு உந்தி வென்றான் மனம் போன்று உயர்ந்த
தொகு வாயன சுனை சேர் குன்றம் நீங்கலும் துன்னுவர் போய்ப்
பகு வாயன பல வாளைகள் பாயும் பழனங்களே 199

கட வரை காதலனொடு கடந்த கயல் நெடுங்கண்
பட அரவு அல்குல் அம் பாவைக்கு இரங்கல்மின் பண்டு கெண்டை
வட வரை மேல் வைத்த வானவன் மாறன் மலையம் என்னும்
தட வரை தானே அணிந்து அறியாது தண் சந்தனமே 200

வெம் நீர் அரும் சுரம் காளையின் பின் சென்றதும் மெல்லியல் மாட்டு
இந்நீர்மையீர் இரங்கல்மின் நறையாற்று இகல் அரசர்
தந்நீர் அழிவித்த சத்ருதுரந்தரன் தண் குமரி
முந்நீர் பயந்தார் அணிவார் பிறர் என்ப முத்தங்களே 201

நெடும் கடல் வேல் நெடுமாறன் நெடுங்களத்து அன்று வென்றான்
பெருங் கடல் ஞாலத்துள் பெண் பிறந்தார் தம் பெற்றார்க்கு உதவார்
இருங் கடல் போல் துயர் எய்தல்மின் ஈர்ந்தன என்று முந்நீர்க்
கரும் கடல் வெண் சங்கு அணிந்து அறியா தண் கதிர் முத்தமே 202

செம்மைத் தனிக் கோல் திறல் மன்னன் சேவூர் செரு மலைந்தார்
தம்மைப் புறம் கண்ட சத்ருதுரந்தரன் தம் முனை போல்
வெம்மைச் சுரம் வருகின்றனள் என்று விரைந்து செல்வீர்
அம்மைத் தடம் கண் என் ஆயத்தவருக்கு அறிமின்களே 203

கோடு அரில் நீள் மதில் கோட்டாற்று அரண் விட்டுக் குன்று அகம் சேர்
காடு அரில் வேந்தர் செலச் செற்ற மன்னன் கை வேலின் வெய்ய
வேடர் இல் வெம் சுரம் மீண்டனள் என்று விரைந்து செல்வீர்
ஓடு அரி வாள் கண் என் ஆயத்தவருக்கு உரைமின்களே 204

அங்கண் மலர்த் தார் அரிகேசரி தென்னர் கோன் அயில் போல்
வெங்கண் நெடும் சுரம் மீண்ட விடலை கெடல் அரும் சீர்
நங்கள் மனைக்கே வரல் நல்குமோ செல்லு வேல அல்கி
தங்கள் மனைக்கே உய்க்குமோ உரையாம் மற்று என் பேதையே 205

உருமினை நீள்கொடி மேல் கொண்ட செங்கோல் உசிதன் எம் கோன்
செரு முனை போல் சுரம் நீண்ட விடலை எம் தீதில் செல்வத்
திரு மனைக்கே நல்கும் கொல்லோ வதுவை செயத் தன்
பெரு மனைக்கே உய்க்குமோ உரையாம் மற்று என் பேதையே 206

தாளை வணங்காதவர் படச் சங்கமங்கை தன்
வாளை வலம் கொண்ட மாறன் இவ் வையத்தவர் மகிழ
நாளை நம் இல்லுள் வதுவை அயர்தர நல்கும் கொல்லோ
காளையை ஈன்று கடன் அறி நல் நெஞ்சின் காரிகையே 207

மை ஏறிய பொழில் மா நீர்க் கடையல் மன் ஓட வென்றான்
மெய் ஏறிய சீர் மதுரை விழவினைப் போல் நம் இல்லுள்
நெய் ஏர் குழலி வதுவை அயர்தர நேரும் கொல்லோ
பொய்யே புரிந்த அக் காளையை ஈன்ற பொலங் குழையே 208

மின் தான் அனைய விளங்கு ஒளி வேலொடு வெண்டரை மேல்
நின்றான் நிலை மன்னன் நேரியன் மாறன் இகல் முனை போல்
கொன்று ஆறலைக்கும் சுரம் என்பர் நீங்கலும் கோல் வளைகள்
சென்றால் அது பிரிது ஆக இவ் ஊரவர் சிந்திப்பரே 209

இகலே புரிந்து எதிர் நின்ற தெவ் வேந்தர் இருஞ்சிறை வான்
புகலே புரிய என்றான் கன்னி அன்னாய் புலம்பு உறு நோய்
மிகலே புரிகின்றது கண்டும் இன்று இவ் வியன் கழி வாய்ப்
பகலே புரிந்து இரை தேர்கின்ற நாணாப் பறவைகளே 210

அடு மலைபோல் களி யானை அரிகேசரி உலகின்
வடு மலையாத செங்கோல் மன்னன் வஞ்சி அன்னாய் மகிழ்ந்து
படு மலைபோல் வண்டு பாடிச் செங்காந்தள் பைந் தேன் பருகும்
நெடு மலை நாடனை நீங்கும் என்றோ நினைக்கின்றதே 211

சான்றோர் வரவும் விடுத்தவர் தம் தகவும் நும்
வான் தோய் குடிமையும் நோக்கின் அல்லால் வண் பொருள் கருதின்
தேன் தோய் கமழ் கண்ணிச் செம்பியன் மாறன் செங்கோல் மணந்த
மீன் தோய் கடல் இடம் தானும் விலை அன்று இம் மெல்லியற்கே 212

நடையால் இகல் வென்று நேரி நல் வால் நறையாற்று வென்ற
படையான் பனி முத்த வெண் குடை வேந்தன் பைங் கொன்றை தங்கும்
சடையான் முடி மிசைத் தண் கதிர்த் திங்கள் தன் தொல் குலமாய்
உடையான் உசிதன் உலகும் விலை அன்று எம் மெல்லியற்கே 213

தாது அலர் நீள் முடி தார் மன்னன் மாறன் தண் அம் குமரி
போது அலர் கானல் புணர் குறி வாய்த்தாள் புலம்பி நைய
ஏது இலர் நோய் செய்வதோ நின் பெருமை என நெருங்கிக்
காதலர் தம்மைக் கழறின் என் ஊனம் கரும் கடலே 214

மின் கண் படா அடி வேல் நெடுமாறன் விண்டார் முனை மேல்
மன் கண் படாத மயங்கு இருள் நாள் வந்த நீர் துறைவற்கு
என் கண் படாத நிலைமை சொல்லாது இளம் சேவல் தழீஇ
தன் கண் படா நின்ற அன்னத்த தேயால் தகவு இன்மையே 215

ஆயும் தமிழ் மன்னன் செங்கோல் அரிகேசரி முனை போல்
தேயும் நினைவொடு துஞ்சாள் மடந்தை இச் சேயிழையாள்
தாயும் துயில் மறந்தாள் இன்ன நாள் தனித் தாள் நெடும் தேர்க்
காயும் கதிரோன் மலை போய் மறைந்த கனை இருளே 216

வார் உந்து பைங் கழல் செங்கோல் வரோதயன் வஞ்சி அன்னாள்
சேரும் திறம் என்னை தேன் தண் சிலம்பனைத் திங்கள் கல் சேர்ந்து
ஊரும் துயின்றிடம் காவலோடு அன்னை உள்ளுறுத்து எல்
லோரும் துயிலினும் துஞ்சா ஞமலி அரை இருளே 217

மாவும் களிறும் மணி நெடும் தேரும் வல்லத்துப் புல்லாக்
கோவும் துமிய வை வேல் கொண்ட கோன் அம் தண் கூடல் அன்னாய்
பூவும் புகையும் கமழ்ந்து பொன்னாம் உம்பர் பேர் உலகு
மேவும் விழவொடு துஞ்சாது இவ் வியல் நகரே 218

அடிக்கண் அதிரும் கழல் அரிகேசரி தெவ்வன் துங்கக்
கொடிக்கண் இடி உரும் ஏந்திய தென்னன் கூடல் அன்னாய்
வடிக்கண் இரண்டும் வள நகர் காக்கும் வை வேல் இளைஞர்
துடிக்கண் இரட்டும் கங்குல் தலை ஒன்றும் துயின்றிலவே 219

சென்று செரு மலைந்தார்கள் செந்தீ மூழ்கச் செந்நிலத்தை
வென்று களம் கொண்ட கோன் தமிழ் நாடு அன்ன மெல்லியலாய்
இன்று இவ் இரவின் இருள் சென்று இடம் கொண்டது எங்கு கொல்லோ
நின்று விசும்பில் பகல் போல் எரியும் நிலா மதியே 220

உருள் தங்கு மா நெடும் திண் தேர் உசிதன் உலகு அளிக்கும்
அருள் தங்கு செங்கோல் அடல் மன்னன் கொல்லி அரு வரை வாய்
மருள் தங்கு வண்டு அறை சோலைப் பொதும்பில் வழங்கற்கு இன்னா
இருள் தங்கு நீள் நெறி எம் பொருட்டால் வந்து இயங்கன்மினே 221

பண் குழை சொல் இவள் காரணமாய் பனி முத்து இலங்கும்
வெண் குடை வேந்தன் விசாரிதன் மேற்கரை எற்று எதிர்ந்தார்
புண் குடை வேல் மன்னன் தென்னன் பொதியில் புன வரைவாய்
எண்கு உடை நீள் வரை நீ அரை எல்லி இயங்கன் மினே 222

அன்பு எதிர்ந்தாலும் வருதல் பொல்லாதய ஆர் அமருள்
முன்பு எதிர்ந்தார் படச் சேவை* வென்றான் முகிழ் தோய் பொதியில்
பொன் பிதிர்ந்தால் அன்ன மின்மினி சூழ் புற்றின் முற்றிய சோற்று
இன் பிதிர் வாங்கி எண்கு ஏறு திளைத்து உண்ணும் ஈண்டு இருளே 223

* சேவை=சேவூர்
கை அமை வேல் விளக்காக கனை இருள் நள் இரவில்
ஐய மைதோய் வெற்ப வாரல் நறையாற்று அமர் கடத்தில்
வையம் எல்லாம் கொண்ட மன்னவன் மாறன் வண்டு ஆர் பொதியில்
தெய்வம் எல்லாம் மருவிப் பிரியாச் சிறு நெறியே 224

தோள் வாய் மணி நிற மங்கைக்கு வாட்டவும் துன்னுதற்கே
நாள் வாய் வருதி விண் தோய் சிலம்பா நறையாற்று நண்ணார்
வாள் வாய் உகச் செற்ற வானவன் மாறன் மை தோய் பொதியில்
கோள் வாய் இளம் சிங்கம் நீங்கா திரிதரும் குன்றகமே 225

காந்தள் முகை அன்ன மெல் விரல் ஏழை தன் காரணமாய்த்
பூந்தண் சிலம்ப இரவில் வருதல் பொல்லாது கொலாம்
வேந்தன் விசாரிதன் விண் தோய் குடுமிப் பொதியில் என்றும்
தேம் தண் சிலம்பின் அரிமா திரிதரும் தீ நெறியே 226

அழுதும் புலம்பியும் நையும் இவள் பொருட்டாக ஐய
தொழுதும் குறை உற்று வேண்டுவல் வாரல் துன்னார் நிணமும்
இழுதும் மலிந்த செவ்வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல்
கழுதும் துணிந்து வழங்கல் செல்லாக் கனை இருளே 227

பொய் தலை வைத்த அருளடு பூங்குழலாள் பொருட்டாய்
மைத்தலை வைத்த வண் பூங்குன்ற நாட வர ஒழீஇத்
நெய் தலை வைத்த வே வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல்
கை தலை வைத்துக் கழுது கண் சோரும் கனை இருளே 228

பணி கொண்டு வாழாது எதிர்ந்து பறந்தலைகோடி பட்டார்
துணி கொண்டு பேய் துள்ள வேல் கொண்ட கோன் சுடர் தோய் பொதியின்
அணி கொண்ட தார் அண்ணல் வாரல் விடர் நின்று அரவு உமிழ்ந்த
மணி கொண்டு கானவர் வேழம் கடியும் மயங்கு இருளே 229

உரவும் கடல் சூழ் உலகு உடை வேந்தன் உசிதன் ஒன்னார்
பரவும் கழல் மன்னன் கன்னியம் கானல் பகலிடம் நீ
வரவு மகிழ்ந்திலள் தையல் வெய்யோன் போய் மலை மறைந்த
இரவும் வரவு என்ன ஊனம் என்று ஆயினது இன் அருளே 230

அடி மேல் அகல் இடம் எல்லாம் வணக்கி அமரர் தம் கோன்
முடி மேல் வளை புடைத்தோன்* நெடுமாறன் முன்னாள் உயர்த்த
கொடி மேல் உரும் அதர் கூர் இருள் வாரல்மின் நீர் மகிழும்
படி மேல் பகல் வம்மின் வந்தால் விரும்பும் என் பல் வளையே 231

*இந்திரன் முடிமேல் வளை எறிந்த திருவிளையாடல்
அஞ்சாது எதிர் மலைந்தார் அமர் நாட்டுடனே மடிய
நஞ்சு ஆர் இலங்கு இலை வேல் கொண்ட தென்னன் நல் நாடு அனைய
பஞ்சு ஆர் அகல் அல்குல் பால் பகல் வந்தால் பழி பெரிதாம்
மஞ்சு ஆர் சிலம்ப வரவு என்ன ஊனம் மயங்கு இருளே 232

ஓதம் கடைந்து அமரர்க்கு அமுதாக்கி உணக் கொடுத்துப்
பூதம் பணி கொண்ட* பூழியன் மாறன் பொதியிலின் வாய்
ஏதம் பழினொடு எய்துதலால் இரவும் பகலும்
மாதம் கடைந்த மெல் நோக்கி திறத்தைய வாரல்மின்னே 233

* 64 இல் ஓர் திருவிளையாடல்
மின் போல் சினத்து உரும் ஏந்திய கோன் கன்னித் தாழ்துறை வாய்
பொன் போல் மலர்ப் புன்னைக் கானலும் நோக்கிப் புலம்பு கொண்ட
என் போல் இரவின் எல்லாம் துயிலாது நின்று ஏங்குதியால்
அன்போடு ஒருவற்கு அறிவு இழந்தாயோ அலை கடலே 234

பொன்தான் பயப்பித்து கல் நிறம் கொண்டு புணர்ந்து அகன்று
சென்றார் உளரோ நினக்குச் சொல்லாய் செந்நிலத்து வெம் போர்
வென்றான் வியனில வேந்தன் விசாரிதன் ரவல் கழல் சேர்ந்து
ஒன்றார் முனை போல் கலங்கித் துஞ்சாயால் ஒலி கடலே 235

நெய்ந் நின்ற வேல் நெடுமாறன் எம் கோன்அம் தண் நேரி என்னும்
மைந் நின்ற குன்றச் சிறுகுடி நீரைய வந்து நின்றால்
கைந் நின்று கூப்பி வரை உறை தெய்வம் என்னாது கண்டார்
மெய்ந் நின்று உணர்ப எனின் உய்யுமோ மற்று இம் மெல்லியலே 236

அன்னாய் நெருநல் நிகழ்ந்தது கேள் அகல் வேந்து இறைஞ்சும்
பொன் ஆர் கழல் நெடுமாறன் குமரி அம் பூம் பொழில்வாய்
மின் ஆர் மணி நெடும் தேர் கங்குல் ஒன்று வந்து மீண்டது உண்டால்
என்னா முகம் சிவந்து எம்மையும் நோக்கினான் எம்மனையே 237

பண் இவர் சொல்லி கண்டாள் தென்னன் பாழிப் பகை தணித்த
மண் இவர் சீர் மன்னன் வாள் நெடுமாறன் மலையம் என்னும்
விண் இவர் குன்றத்து அருவி சென்று ஆடி ஓர் வேங்கையின் கீழ்
கண் இவர் காதல் பிடியடு நின்ற கரும் களிறே 238

தொடுத்தாள் மலரும் பைங்கோதை நம் தூதாய் துறைவனுக்கு
வடுத்தான் படா வண்ணம் சொல்லும்கொல் வானோர்க்கு அமிழ்து இயற்றிக்
கொடுத்தான் குல மன்னன் கோட்டாற்று அழித்துத் தென் நாடு தன் கைப்
படுத்தான் பராங்குசன் கன்னி அம் கானல் பறவைகளே 239


2 கற்பு
மைதான் இலாத தம் கல்வி மிகுத்து வருவது எண்ணிப்
பொய்தான் இலாத சொல்லார் செல்வர் போலும் புல்லாது அமரே
செய்தார் படச் செந்நிலத்தைக் கணை மழை திண் சிலையால்
பெய்தான் விசாரிதன் தென்னன் நாட்டுறை பெண் அணங்கே 240

தேக்கிய தெள் திரை முந்நீர் இரு நிலம் தீது அகலக்
காக்கிய செல்வது காதலித்தார் அன்பர் காய்ந்து எதிரே
ஆக்கிய வேந்தர் அமர் நாடு அடைய தன் அஞ்சுடர் வாள்
நோக்கிய கோன் அம் தண் கூடல் அனைய நுடங்கிடையே 241

தாக்கிய போர் வய வேந்தர் இருவர்க்கும் சந்திடைநின்று
ஆக்கிய செல்வது காதலித்தார் நமர் ஆர் அமருள்
வீக்கிய வார் கழல் வேந்தர் தம் மானம் வெண்மாத்துடனே
நீக்கிய கோன் நெடு நீர் வையை நாடு அன்ன நேரிழையே 242

வார் ஆர் முரசின் விரை சேர் மலர் முடி மன்னவர்க்காய்ச்
சேரார் முனை மிசைச் சேறல் உற்றார் தம் செந்நிலத்தை
ஓராது எதிர்ந்தார் உடலல் துலாவி உருள் சிவந்த
தேரான் திருவளர் தென் புனல் நாடு அன்ன சேயிழையே 243

கல் நவில் தோள் மன்னன் தெம்முனை மேல் கலவாரை வெல்வான்
வில் நவில் தோள் அன்பர் செல்வர் விசாரிதன் என்னும்
தென்னவன் சேரர் பட நறையாற்றுச் செரு அடர்த்த
மன்னவன் கூடல் வண் தீம் தமிழ் அன்ன மட மொழியே 244

படலைப் பனி மலர்த் தார் அவர் வைகிய பாசறை மேல்
தொடலை கமழ் நறும் கண்ணியினாய் சென்று தோன்றும் கொல்லோ
அடலைப் புரிந்த செவ்வேல் அரிகேசரி தென் குமரி
கடலைப் பருகி இரும் விசும்பு ஏறிய கார் முகிலே 245

வாமான் நெடும் தேர் வய மன்னர் வாள் முனை ஆர்க்கும் வண்டார்
தேமா நறும் கண்ணியாய் சென்று தோன்றும்கொல் சேரலர் தம்
கோமான் கடல் படை கோட்டாற்று அழியக் கணை உதைத்த
ஏ மாண் சிலையவன் கன்னி நல் நீர் கொண்ட ஈர் முகிலே 246

இன் பார்ப்பு ஒடுங்க வலம் சிறை கோலி இடஞ்சிறையால்
அன்பால் பெடை புல்லி அன்னம் நடுங்கும் அரும் பனி நாள்
என் பால் படரொடு என்னாம்கொல் இருஞ்சிறை ஏற்ற மன்னர்
தென் பால் படச் சென்ற கோன் வையை நாடு அன்ன சேயிழையே 247

அன்பு உடை மாதர் ஆற்றும்கொல் ஆற்றுக்குடி அடங்கா
மன் படை வாட வென்றான் தமிழ் நாட்டு வலம் சிறைக்கீழ்
இன்புடை ஏர் இளம் பார்ப்புத் துயிற்ற டஞ்சிறைக் கீழ்
மென் பெடை புல்லிக் குருகு நரல்கின்ற வீழ் பனியே 248

கடி ஆர் இரும் பொழில்கண் அன்று வாட்டி இன்று கலவாப்
படியார் படை மதில் மேல் பனி வந்து பாரித்ததால்
வடி ஆர் அயில் நெடுமாறன் எம் கோன் கொல்லி வண்டு இமிர் பூங்
கொடி ஆர் இடை மட மான் பிணை நோக்கி குழை முகமே 249

கயவாய் மலர் போல் கரும் கண் பிறழ வெண் தோடு இலங்க
நயவார் முனை மிசைத் தோன்றி இன்று நட்டாற்று எதிர்ந்த மன்னை
வியவார் படை இட்டு எண் காதம் செலச் சென்று மீன் திளைக்கும்
வயவால் செறித்த எம் கோன் வஞ்சி அன்னாள் தன் மதி முகமே 250

தண் கயல் வெள் ஒளி ஓலையதாய் தட மா மதிள் மேல்
பொங்கு அயல் வேந்தர் எரி மூழ்கத் தோன்றி இன்று போதுகள் மேல்
பைங் கயல் பாய் புனல் பாழிப் பற்றாரைப் பணித்த தென்னன்
செங் கயலோடு சிலையும் கிடந்த மதி முகமே 251

வென்றே களித்த செவ்வேல் நெடுமாறன் விண்டார் முனை மேல்
சென்றே வினை முற்றி மீண்டனம் காரும் சிறிது இருண்டது
இன்றே புகும் வண்ணம் ஊர்க திண் தேர் இள வஞ்சி என்ன
நின்றே வணங்கும் நுண் இடை ஏழை நெடு நகர்க்கே 252

பட்டு ஆர் அகல் அல்குல் பாவையும் காணும்கொல் பாழி வெம் போர்
அட்டாள் அரிகேசரி ஐயம் ஆயிரம் யானை முன்நாள்
இட்டான் மருகன் தென்னாட்டு இருள் மேகங்கள் கண்டீர்
கட்டார் கமழ் கண்ணி போல் மலர்கின்றன கார்ப் பிடவே 253

புரிந்த மெல் ஓதியை வாட்டும்கொல் வல்லத்துப் போர் எதிர்ந்தார்
இரிந்த வகை கண்ட வாள் மன்னன் தென்நாட்டு இரும் சுருள் போய்
விரிந்த புதவங்கள் மேய்ந்து தம் மென்பிணை கை அகலாது
திரிந்த திண் கோட்ட கலை மா உலளும் செழும் புறவே 254

செறி கழல் வானவன் செம்பியன் தென்நாடு அனைய வென்றி
வெறி கமழ் கோதைகண் வேட்கை மிகுத்து அன்று வெள்ளம் சென்ற
நெறி கெழு வெண் மணல் மேல் நெய்யில் பால் விதிர்ந்து அன்ன அந்துண்
பொறி கெழு வாரணம் பேடையை மேய்விக்கும் பும் புறவே 255

ஆழித் திருமால் அதிசயற்கு ஆற்றுக்குடி உடைந்தார்
சூழிக் களிற்றின் துணை திண் தேர் துயர் தோன்றின்று காண்
கோழிக் குடுமியம் சேவல் தன் பேடையைக் கால் குடையாப்
பூழித்தலை இரை ஆர்வித்துத் தான் நிற்கும் பூம் புறவே 256

கைம் மாவின் புறவின் கவடு தொடர்ந்து கனல் விழிக்கும்
மெய்ம் மா மத களி வேழங்கள் பின் வர முன்னுக தேர்
நெய்ம் மான் அயில் நெடுமாறன் நிறை புனல் கூடல் அன்ன
மைம் மாண் குழலாள் பரமன்று வான் இடை வார் புயலே 257

முன்தான் உறத் தா அடி முள் உறீஇ முடுகாது திண் தேர்
என்றால் இழைத்து அவற்றோடி இற்றை நாளும் இழைக்கும்கொல்லாம்
ஒன்றா வயவர் தென் பாழிப் பட ஒளி வேல் வலத்தால்
வென்றான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்லியலே 258

கடிக் கண்ணி வேந்தரை ஆற்றுக்குடி கன்னி வாகை கொண்டே
முடிக் கண்ணியாய் வைத்த மும்மதில் வேந்தன் முசிறி அன்ன
வடிக் கண்ணி வாட வள மணி மாளிகைச் சூளிகை மேல்
கொடிக் கண்ணி தாம் அண்ண நண்ணி வந்து ஆர்த்தன கொண்டல்களே 259

பண் தேர் சிறை வண்டு அறை பொழில் பற்றாத மன்னர்
புண் தேர் குருதிப் படியச் செற்றான் புனல் நாடு அனையாள்
கண்டு ஏர் அழிந்து கலங்கும் அவள் தன் கடி நகர்க்கு என்
திண் தேர் செலவு அன்றி முன் செல்லல் வாழி செழு முகிலே 260

கொற்றாம் கயில் மன்னன் கோன் நெடுமாறன் தென் கூடல் அன்ன
மற்றா இள முலை மாதே பொலிக நம் முன்கடைவாய்ச்
செற்றார் பணி திறை கொண்ட நம் அன்பர் செழுமணித் தேர்ப்
பொன் தார்ப் புரவிகள் ஆலித்து வந்து புகுந்தனவே 261

ஆரும் அணி இளம் போந்தையும் வேம்பும் அலர்ந்த தண் தேன்
வாரும் கமழ் கண்ணி வானவன் மாறன் தன் மாந்தை அன்னாய்
காரும் கலந்து முழங்கி வீசின்று காதலர்தம்
தேரும் சிலம்பிப் புகந்தது நங்கள் செழு நகர்க்கே 262

முன்தான் முகிழ் முலை ஆர முயங்கி முறவல் உண்டு
சென்றார் வரவிற்குத் தூது ஆகி வந்தது தென் புலிப்பை
வென்றான் விசாரிதன் வேல் நெடுமாறன் வியன் முடி மேல்
நின்றான் மணி கண்டம் போல் இருள் கூர்கின்ற நீள் முகிலே 263

மடை ஆர் குவளை நெடும் கண் பனி மல்க வந்து வஞ்சி
இடையாள் உடனாய் இனிது கழிந்தன்று இலங்கும் முத்தக்
குடையான் குலமன்னன் கோன் நெடுமாறன் குளந்தை வென்ற
படையான் பகை முனை போல் சென்று நீடிய பாசறையே 264

இல்லார் இருமையும் நன்மை எய்தார் என்று இருநிதிக்குக்
கல்லால் சுரம் செல்வதே நினைந்தார் நமர் காய்ந்து எதிர்ந்த
புல்லால் அவிய நெல்வேலி பொருகணை மாரி பெய்த
வில்லான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்லியலே 265

ஊனம் கடைந்த உயர் குடை வேந்தன் உசிதன் ஒன்னார்
மானம் கடந்து வல்லத்து அமர் ஓட்டிய கோன் இம் மண்மேல்
ஈனம் கடந்த செங்கோல் மன்னன் தெம் முனை போல் எரி வேய்
கானம் கடந்து சென்றோ பொருள் செய்வது காதலரே 266

விரை தங்கும் நீள் முடி வேந்தன் விசாரிதன் வெம் முனை போல்
வரை தங்கு கால் நமர் செல்லுப என்றாலும் வாள் நுதலாள்
நிரை தங்கு கழலக்கண் நித்திலம் சிந்த நில்லா
அரை தங்கு மேகலை மெல் அடி மேல் வீழ்ந்து அரற்றினவே 267

மன் ஏந்திய வாள் புகழ் நெடுமாறன் தன் மாந்தை அன்ன
மின் ஏந்திய இடையாய் நமர் செல்வர் வெம் கானம் என்னப்
பொன் ஏந்து இள முலை பூந்தடம் கண் முத்தம் தந்தன போய்
என் ஏந்திய புகழீர் இனிச் செய்யும் இரும் பொருளே 268

வரு நெடும் கங்குல் எவ்வாறு இனி நீந்தும் வல்லத்து வென்ற
செரு நெடும் தானையான் எம் கோன் தெவ்வர் போலச் சென்று அத்தம் என்னும்
ஒரு நெடும் குன்றம் மறைந்து உலகு எலாம் வளாய்க்கும் குணபால்
திரு நெடும்குன்றம் கடந்தால் வருவது செழும் சுடரே 269

படம் தாழ் பணை முக யானைப் பராங்குசன் பாழி வென்ற
இடம் தாழ் சிலை மன்னன் வெல் களம் போல் விரிந்த அந்தி
நடந்தால் இடை இருள் போய்க் கடை யாம நல் ஊழி மெல்லக்
கடந்தால் அதன் பின்னை அன்றே வருவது காய் கதிரே 270

தேனக்க தாரவர் காண்பர் செல்லார் அவர் செல்ல ஒட்டி
நானக் குழல் மங்கை நன்று செய்தாய் என்று வாய் கனிந்த
மானக் கதிர் வேல் வரோதயன் கொல்லி வரை அணிந்த
கானத்து இடைப் பிடி கை அகலாத கரும் களிறே 271

இருள் மன்னு மேகமும் கார் செய்து எழுந்தன வெள் வளையாய்
மருள் மன்னு வண்டு அறை தார் அவர் தாமும் இம் மாநிலத்தார்க்கு
அருள் மன்னு செங்கோல் அரிகேசரி அம் தண் கூடல் அன்ன
பொருள் மன்னும் எய்திப் புகுந்தனர் வந்து நம் பொன் நகர்க்கே 272

தகரக் குழலாய் தகவிலளே சங்கமங்கை வென்ற
சிகரக் களிறு செங்கோல் நெடுமாறன் தென் கூடலின்வாய்
மகரக் கொடியவன் தன் நெடுவேல் நின் மலர் விலைக்குப்
பகரக் கொணர்ந்து இல்லம் தொறும் திரியும் இப் பல் வளையே 273

மைவார் இரும் பொழில் வல்லத்துத் தெவ்வர்க்கு வான் கொடுத்த
நெய் வாய் அயில் நெடு மாறன் தென்நாடு அன்ன நேரிழையாய்
இவ்வாய் வருவர் நம் காதலர் என்ன உற்றேற்கு எதிரே
செவ்வாய் துடிப்பக் கரும் கண் சிவந்தன சேயிழைக்கே 274

சென்றே ஒழிக வயல் அணி ஊரனும் தின்னத் தந்த
கன்றே அமையும்கொல் வேண்டா பல் யாண்டு கறுத்தவரை
வென்றே விழிஞம் கொண்டான் கடல் ஞாலம் மிக வலிது
அன்றே அடியென் அடி வலம் கொள்ள அருளாகவே 275

இழுது நிணம் தின்று இருஞ்சிறைத் தெம்மன்னர் இன்குருதி
கழுது படியக் கண்டான் கன்னி அன்ன மின் நேரிடையாய்
அழுது சுவல் சென்ற அக் கரையானொடும் வந்தமையால்
தொழுது வழிபடல் பாலை பிழைப்பு எண்ணல் தோன்றலையே 276

வாரார் சிறு பறை பூண்டு மணிக் காசு உடுத்துத் தந்தை
பேரான் சுவலின் இருப்ப வந்தான் பிழைப்பு எண்ணப் பெறாய்
நேரார் வயவர் நெடுங்களத்து ஓட நெய் வேல் நினைந்த
பாரார் புகழ் மன்னன் தென் புனல் நாடு அன்ன பல் வளையே 277

மிடை மணிப் பூண் மன்னர் ஓட விழிஞத்து வென்றவன் தாள்
புடை மணி யானையினான் கன்னி அன்னாள் பொரு கயல் கண்
உடை மணியானொடு நீ வர ஊடல் சிவப்பு ஒழிந்தும்
அடை மணி நீலத்து அணி நிறம் கொண்டும் அலர்ந்தனவே 278

பங்கயப் பூம் புனல் நாடன் பராங்குசன் பாழி ஒன்னார்
மங்கையர்க்கு அல்லல் கண்டான் மணி நீர் வையை வார் துறைவாய்
எம் கையைத் தீம் புனல் ஆட்டிய ஈரம் புலர்த்தி வந்தும்
அங்கையின் சீறடி தீண்டிச் செய்யீர் செய்யும் ஆர் அருளே 279

கேளே பெருக்கும் அரும் பொருள் செய்தற்கு கேடில் திங்கள்
நாளே குறித்துப் பிரியல் உற்றார் நமர் தீ விழியால்
ஆளே கனலும் கொல் யானைச் செங்கொல் அரிகேசரி தன்
வாளே புரையும் தடம் கண்ணி என்னோ வலிக்கின்றதே 280

வந்தார் கரு மெல் குழல் மங்கை மாநிதிக்கு என்று அகன்ற
ஈர்ந்தார் அவர் இன்று காண்பர்கொல்லோ இகலே கருதி
சேர்ந்தார் புறம் கண்டு செந்நிலத்து அன்று திண் தேர் மறித்து
தேர்ந்தான் தன் குலமுதலாய பிறைக் கொழுந்தே 281

தொழித் தார் சிறை வண்டு அறை குழலாய் கங்கை சூழ் சடை மேல்
இழித்தான் மணிகண்டம் போல் இருண்டன காரிகையே
விழித்தார் விழிஞக்கடல் கோடி தன் வெண் சுடர் வாள்
சுழித்தான் குமரி நல் நீர் கொண்டு எழுந்த கண முகிலே 282

உளம் கொண்டு வாடி இன்று நட்டாற்று எதிர்ந்தார் உதிர வெள்ளம்
குளம் கொண்டு தோற்பித்த கோன் நெடுமாறன் கை போலும் கொள்
களம் கொண்டு கார் செய்த காலைக் களவின் கவை முகத்த
இளம் கண்டகம் விட நாகத்தின் நா ஒக்கும் ஈர்ம் புறவே 283

சுழலும் வரி வண்டு அலம்ப சொரி மதம் வாய்ப் புக நின்று
அழலும் களிற்று அரிகேசரி தென் புனல் நாடு அனையாய்
கழலும் வரி வளை காக்க வந்து இன்று கனலும் செந்தீ
தழலும் குளிர்ந்து பொடிப்படப் போர்க்கின்ற தாழ் பனியே 284

தனியார் தகைநலம் வாட்டும்கொல் ஆற்றுக்குடி தன்
குனியார் சிலை ஒன்றினால் வென்ற கோன் கொங்க நாட்டகொல்
கனி ஆர் களவின் அகமுள் கதிர் முத்தம் கோப்பன போல்
பனி ஆர் சிதர் துளி மேல் கொண்டு நிற்கும் பருவங்களே 285

வான் நலம் கொண்ட கையான் மன்னன் மாறன் தன் மாந்தை அன்னாள்
தான் நலம் தேயப் பனியோ கழிந்தது தண் குவளைத்
தேன் நலம் போதுவளாய் வந்து தண் தென்றல் தீ விரியும்
வேல் நலம் காலம் எவ்வாறு கழியும்கொல் மெல்லியற்கே 286

மெல்லியலாய் தங்கள் மேல் வெய்யவாய் விழிஞத்து வென்ற
மல் இயல் தோள் மன்னன் சென்னி நிலாவினன் வார் சடையோன்
வில் இயல் காமனைச் சுட்ட வெம் தீச் சுடர் விண்டவன் மேல்
சொல்லிய பாரித்த போன்றன பிண்டியின் தே மலரே 287

மஞ்சார் இரும் பொழில் வல்லத்து வாள் மன்னர் போர் அழித்த
அஞ்சா அடுகளி யானைத் தானையினான் அகல் ஞாலம் அன்ன
பஞ்சார் அகல் அல்குலாள் தன்மைச் சொல்லும் பணை முலை மேல்
செஞ்சாந்து அணிந்து வந்தாள் செய்த கோலத்தின் சேயிழையே 288

பொன் ஆர் புனல் அணி ஊரன் வந்து உன்னில் புறங்கடையான்
என்னா அளவில் சிவந்தான் சிவந்தும் இயல்வது அன்றால்
அன்னாய் எனச் சிவப்பு ஆற்றினள் வல்லத்து அரசு அவித்த
மின் ஆர் அயில் மன்னன் தென் புனல் நாடு அன்ன மெல்லியலே 289

கோடிய நீள் பருவத்து மடந்தை கொழும் பணைத் தோள்
வாடிய வாட்டம் உணர்ந்து மனை இடை வந்தமையால்
ஆடு இயல் யானை அரிகேசரி தெவ்வர் போல் அகன்று
நீடிய காதலர் தாமே பெரியர் இந்நீள் நிலத்தே 290

விண்டுறை தெவ்வர் விழிஞத்து அவிய வெல் வேல் வலம் கைக்
கொண்டு உறை நீக்கிய கோன் வையை நாடு அன்ன கோல் வளை இவ்
வண்டு உறை கோதை வருந்த நல்லார் இல்லில் வைகுதலால்
தண் துறை சூழ் வயல் ஊரன் பெரிதும் தகவு இலனே 291

நிரந்து ஆங்கு எதிர்ந்தார் அவிய நெல்வேலித் தன் நீள் சிலைவாய்ச்
சரந்தான் துரந்து வென்றான் தமிழ் நாடு அன்ன தாழ் குழலாள்
பரந்தார் வரு புனல் ஊரன் தன் பண்பின்மை எங்களையும்
கரந்தாள் கடலிடம் எல்லாம் புகழ் தரும் கற்பினளே //292

வெம் சுடர் நோக்கும் நெருஞ்சியில் ஊரனை வெண் முறுவல்
செஞ்சுடர் வாள் முகத்தாள் முன்னை என்பால் திரியலனேல்
அம் சுடர் வேல் அரிகேசரி கோளம நாட்டு உடைந்தார்
தம் சுடர் வாள் படை போல உடைக என் சங்கங்களே 293

வெறி தரு பூந்தார் விசாரிதன் வேலை முந்நீர் வரைப்பின்
எறிதரு கோல் செல்லும் எல்லையுள்ளேம் அல்லம் நீர்மை இல்லாச்
சிறியர் வாழ் பதியே எம் இல்லம் சிறிதே எமக்கே
எறி புனல்ஊர் எவ்வாறு அமையும் நின் இன் அருளே 294

வரிய வண்டு ஆர் தொங்கல் மான் தேர் வரோதயன் வல்லத்து ஒன்னார்
கரிய வை வேல் கொண்ட காவலன் காக்கும் கடல் இடம் போல்
பெரிய நல் நாட்டு பெரிய நல் ஊரில் பெரிய இல்லிற்கு
உரிய மிக்கீர்க்கு இயல்பு அன்று கொல் இவ்வாறு ஒழுகுவதே 295

இல்லென்று இரவலர்க்கு ஈதல் செய்யாதான் இல்லம் எனப்
புல் என்று வாடிப் புலம்பல் நெஞ்சே நமக்கு யார் பொருந்தார்
வில் ஒன்று சேர் பொறி வானவன் வாட விழிஞம் கொண்ட
கொல் ஒன்று வாள் படையான் தமிழ் நாடு அன்ன கோல் வளையே 296

அரை அணங்கும் துகிலாள் அல்லள் ஆற்றுக்குடியில் வென்ற
உரை அணங்கும் தமிழ் வேந்தன் உசிதன் ஒள் பூம் பொதியில்
வரை அணங்கோ அல்லையோ என்னை யாம் மம்மர் எய்த உண்கண்
நிரை அணங்கும் பனி நீர் கொள்ள நின்ற இந் நேரிழையே 297

துளியும் துறந்த வெம் கானம் செலவின்றி செல்லுதுமேல்
ஒளியும் திரு நுதல் வாடி உய்யாள்கொல் உசிதன் என்ற
தெளியும் சுடர் ஒளி வாள் மன்னன் செங்கோல் எனச் சிறந்த
அளியும் பெறாது நெஞ்சே நைய நின்ற இவ் ஆயிழையே 298

மை ஆர் தடம் கண் வரும் பனி சோர வருந்தி நின்று இந்
நெய் ஆர் குழலாள் இனைய நறையாற்று நின்று வென்ற
கை ஆர் கொடும் சிலைச் செங்கோல் கலிமதன் காய் கலிக்கு
வெய்யான் பகை என நீங்குதுமோ நெஞ்சம் வெஞ்சுரமே 299

செரு மால் கடற்படை சேரலர் கோன் நறையாற்று அழிய
பொரு மா சிலை தொட்ட பூழியன் மாறன் பொரு முனை போல்
அருமா நெறி பொருட்கோ செல்வது அன்று நெஞ்சே அவள் தன்
பெரு மா மழைக் கண்ணும் நித்திலம் சிந்தின போது உறவே 300

செல்லார் அவர் என்று யான் இகழ்ந்தேன் சுரம் செல்லத் தன் கண்
ஒல்லாள் அவள் என்று அவர் இகழ்ந்தார் மற்று இவை இரண்டும்
கொல்லார் அயில் படைக் கோன் நெடுமாறன் குளந்தை வென்ற
வில்லான் பகை போல் என்னுள்ளம் தனை மெய்விக்குமே 301

காடவும் நெடும் தேர்க் கலிமதனன் கலி தேயச் செங்கோல்
நடாவும் நகை முத்த வெண்குடை வேந்தன் நண்ணார் மதில் பாய்ந்து
இடாவும் மத மா மழை பெய்யும் ஓதை என முழங்கப்
பிடாவும் மலர்வன கண்டே மெலிவது என் பெண் அணங்கே 302

விடக்கு ஒன்று வை வேல் விசாரிதன் மற்று இவ் வியலிடம் போய்
நடக்கின்ற செங்கோல் ஒரு குடை வேந்தன் நண்ணார் முனைபோல்
கடக் குன்றம் சென்ற நம் காதலர் பொய்யலர் நையல் பொன்னே
மடக் கொன்றை அம்பினை கார் என்று மலர்ந்தனவே 303

பூரித்த மென் முலையாய் அன்று பூலந்தைப் போர் மலைந்த
வேரித் தொடையன் விசாரிதன் விண் தோய் கொல்லி மேல்
மூரிக் களிறு முனிந்து கை ஏற்ற முழங்கு கொண்டல்
மாரிக்கு முல்லையின் வாய் நகவே நீ வருந்துவதே 304

மை ஆர் தடம் கண் மடந்தை வருந்தற்க வாள் முனை மேல்
நெய் ஆர் அயிலவர் காணப் பொழிந்த நெடுங்களத்து
வெய்யார் அமர் இடை வீழச் செந்தூவி வெள்ளம் புதைத்த
கை ஆர் சிலை மன்னன் கன்னி நல் நீர் கொடை கார் முகிலே 305

கொடி ஆர் மதில் கோட்டாற்று அரசர் குழாம் சி¨த்த
வடி ஆர் அயில் படை வானவன் மாறன் வள மதுரைத்
துடி ஆர் இடையாய் வருந்தல் பிரிந்துளங்கு ஒளி சேர்
அடி ஆர் கழலார் அணுக வந்து ஆர்த்த அகல் விசும்பே 306

ஆ மான் அனைய மென் நோக்கி அழுங்கல் அகன்று சென்ற
தேமா நறுங் கண்ணியாரையும் வாட்டும் தென் பாழி வென்ற
வாமா நெடும் தேர் மழை வண்ணன் மாறன் வண் தீம் தமிழ்நர்
கோமான் கொடி மேல் இடி உரும் ஆர்க்கின்ற கூர்ம் புயலே 307

கரும் தண் புயல் வண் கைத் தென்னவன் கை முத்து அணிந்து இலங்கும்
இரும் தண் குடை நெடுமாறன் இகல் முனை போல் நினைந்து
வருந்தல் மடந்தை வருவர் நம் காதலர் வான் அதிரக்
குருந்தம் பொருந்தி வெண் முல்லைகள் ஈன்றன கூர் எயிரே 308

புலம் முற்றும் தண் புயல் நோக்கிப் பொன் போல் பசந்ததன் பால்
நலம் முற்றும் வந்த நலமும் கண்டாய் நறையாற்று எதிர்ந்தார்
குலம் முற்றும் வாட வை வேல் கொண்ட மாறன் குரை கடல் சூழ்
நிலம் முற்றும் செங்கோலவன் தமிழ் நாடு அன்ன நேரிழையே 309

அறை ஆர் கழல் மன்னன் ஆற்றுக்குடி அழல் ஏற என்று
கறை ஆர் அடர் வேல் வலம் கொண்ட கோன் கூடல் ஞாலம் அன்னாய்
நிறையாம் வகை வைத்து நீத்தவர் தேரொடு நீ பிணித்த
இறை ஆர் வரி வளை சோர வந்து ஆர்த்தன ஏர் முகிலே 310

திரு நெடும் கோதையும் தெய்வம் தொழாள் தெவ்வர் மேல் செலினும்
பெரு நெடும் தோள் அண்ணல் பேர்ந்து அன்றுத் தங்கான் பிறழ்வு இல் செங்கோல்
அருநெடும் தானை அரிகேசரி அம் தண் கூடல் அன்ன
கரு நெடும் கண் மடவாய் அன்ன தால் அவர் காதன்மையே 311

பார் மன்னன் செங்கோல் பாராங்குசன் கொல்லிப் பனி வரை வாய்க்
கார் மன்னு கோதை அன்னாளும் அருந்ததிக் கற்புடையாள்
தேர் மன்னன் ஏவச் சென்றாலும் முனைமிசைச் சேர்ந்து அறியா
போர் மன்னு வேல் அண்ணல் பொன் நெடும் தேர் பூண் புரவிகளே 312

கூர் ஆர் அயில் கொண்டு நேரார் வளம் பல கொண்ட வென்றித்
தேரான் வரோதயன் வஞ்சி அன்னாள் தெய்வம் சேர்ந்து அறியாள்
வார் ஆர் கழல் மன்னன் தானே பணிப்பினும் வல்லத்துத் தன்
நேரார் முனை என்றும் தங்கி அறியான் நெடும் தகையே 313

உலத்தின் பொலிந்த திண் தோள் மன்னன் ஒள் தேர் உசிதன்
நிலத்தில் பொலிந்த செங்கோலவன் நீள் புனல் கூடல் அன்ன
நலத்திற்கும் நாணிற்கும் கற்பிற்கும் ஞாலத்தின் நல்ல நங்கள்
குலத்திற்கும் தக்கது அன்றால் இன்னை ஆகுதல் கோல் வளையே 314

தேன் நறவு ஆர் கண்ணிச் செம்பியன் மாறன் செழும் குமரி
மால் நிற வெண் திரை மாக்கடல் தோன்றினை மண் அளந்த
நீல் நிற வண்ணனும் ஏந்தினன் தம் முன் நிறம் புரை தீம்
பால் நிற வெண் சங்கம் யார் நின்னின் படிமையரே 315

வருவர் வயங்கிழாய் வாட்டாற்று எதிர் நின்று வாள் மலைந்த
உருவ மணி நெடும் தேர் மன்னர் வீய ஒளி தரு மேல்
புருவம் முரிவித்த தென்னவன் பொன் அம் கழல் இறைஞ்சாச்
செரு வெம் படை மன்னர் போல் வெம் கானகம் சென்றவரே 316

பண்டான் அனைய சொல்லாய் பரி விட்டுப் பறந்தலைவாய்
விண்டார் படச் செற்ற கோன் கொல்லிப் பாங்கர் விரை மணந்த
வண்டு ஆர் கொடி நின் நுடங்கு இடை போல் வணங்குவன
கண்டால் கடக்கிற்பரோ கடப்பர் அன்பர் கானகமே 317

சென்றார் வருதல் நன்கு அறிந்தேன் செருச் செந்நிலத்தை
வென்றான் பகை போல் மெல்லியல் மடந்தை முன் வெற்பு எடுத்து
நின்றான் அளந்த நிலமும் குளிர்ந்தது நீள் புயலால்
பொன்தான் மலர்ந்து பொலங் கொன்றை தாமும் மலர்ந்தனவே 318

கோவைக் குளிர் முத்த வெண் குடைக் கோன் நெடுமாறன் முந்நீர்
தூ வைச் சுடர் வேலவர் சென்ற நாட்டினும் துன்னும் கொலாம்
பூவைப் புதுமலர் வண்ணன் திரை பெரு நீர்க் குமரி
பாவைக்கு இணை அணையாய் கொண்டு பண்டித்த பல் முகிலே 319

கோடல் மலர்ந்து குருகு இலை தோன்றின கொன்றைச் செம் பொன்
பாடல் மணி வண்டு பாண் செயப் பாரித்த பாழி வென்ற
ஆடல் நெடும் கொடி அரிகேசரி அம் தண் பொன்னி
நாடன் பகை போல் மெலி கின்றது என் செய்ய நல் நுதலே 320

முளி தரு வேல் நல் கண் கானவர் ஆர்ப்ப முகில் கணங்கள்
தளி தரு தண் சிலம்பா தக்கது அன்று தாரணி தன்மேல்
அளி தரு செங்கோல் அரிகேசரி அம் தண் கூடல் அன்ன
ஒளி தரு வாள் நுதலாள் நைய இவ்வாறு ஒழுகுவதே 321

மானக் கடும் சிலை மான் தேர் வரோதயன் வாள் முனை போன்று
ஊனப்பட நினைந்து வாடல் பொன்னே உறு வெம் சுரம்
நானக் குழல் மிசை நாள் கொய்து கொண்டே நயந்து அணிந்த
கானக் குரவின் அம் போதே கமழும் என் கைத்தலமே 322

வாடும் நிலை தனையே நீக்கி மண் காத்து வல்லத்து எதிர்ந்தார்
ஓடும் நிலை கண்டான் வையை ஒள் நுதல் மங்கையரோடு
ஆடும் நிலையும் அல்லை அவரோடு அம் பூம் பொழில் வாய்
நீடம் நிலைமையும் அல்லை சொல்லாய் என் நெடும் தகையே 323

பள்ளத்து நீலம் பறந்தலைக்கோடிப் பட்டார் குருதி
வெள்ளத்துச் செங்கழுநீர் வைத்த கோன் தொண்டி வண்டு மென் பூ
வள்ளத்துத் தேம் மகிழ் கானல் வந்தார் சென்ற தேர் வழி எம்
உள்ளத்தி னோடு சிதைய வந்து ஊரும் ஒலி கடலே 324

இடி ஆர் முகில் உரும் ஏந்திய கோன் இருணோதயன் தன்
வடி ஆர் அயில் அன்ன கண்ணி தன் வாட்டம் உணர்ந்து வண் பூங்
கடி ஆர் கரும் கழி மேய்கின்ற கானல் கலந்து அகன்ற
கொடியாரினும்மிகத் தாமே கொடிய குருகினமே 325


--------------------------------------------------------------------------------


பிற்சேர்க்கை

குருகைப் பெருமாள் கவிராயர் இயற்றிய 'மாறன் அகப்பொருள்'
எனும் அகப்பொருள் இயல் நூல் உரை முலமாக பல பாடல்கள்
கிடைத்தன. அவற்றில் மேல்கண்டவற்றிற்கு வேறானதான சில
பாண்டிக் கோவை பாடல்கள் இவை
1
யாழ் இயல் மெல் மொழியார் தம்முள் வைத்தெனக்கு எவ்விடத்தும்
தோழி என்ஆருயிர் என்பது காட்டும் செறி பொழில் சூழ்
கோழியும் வானவன் வஞ்சியும் கொண்டவன் வண்டு அறை தார்ப்
பூழியன் மாறன் புகார் அனையாள் படைப் போர் விழியே
2
கயில் அணி ஆர் கழல் காவலர் ஓடக் கடையல் வென்ற
அயில் அணிவேல் அரிகேசரி ஒன்னார் என்பது உன்
உயிர் அனையான் தனைக் கண்டு உரை செய்தால் ஒழிதல் உண்டே
குயில் மொழியாள் தனைச் சென்று யான் இன்னமும் கூடுதலே
3
பொன்னம் கனைகழல் பூழியன் பூலந்தைப் போர் மலைந்த
தென்னன் பொதியில் செழும் புனம் காக்கும் சிலைநுதல்பூண்
அன்னம் தனை ஆரணங்கினை ஆடமைத் தோளியை ஏழ்
மன்னும் கடல் அமிழ்து தந்தனைக் கண்டு வருகுவனே
4
கொடியார் நுணுகிடைத் தான் புனைக் கோலம் எனக் குலவும்
படி நான் புனைந்தனன் பாவாய் வருந்தல் பறந்தலைவாய்
வடிவார் இலங்கு அயில் மன்னரை வென்ற வழுதிச் செம்பொன்
அடி நாள் மலர் இணை சூடா மடந்தையர் போல் அயர்ந்தே


அடிக்குறிப்புரை

பாடல் சொற்கள் சந்தி பிரித்து படைக்கப் பட்டுள்ளமையால் எழுத்து அசை சீர் தளை வேறுபட்டு படிக்க சில இடங்களில் இசை குன்றி காணப்படும்.

உரையினுள் பாடல்களுக்கான துறை விளக்கங்கள் நீண்ட சொற்றொடர்களாக உள்ளமையாலும் சூத்திரங்களுக்கு இடையே காட்டப்பட்டவை மட்டும் இடை விட்டு கிடைப்பதாலும் ஓர் பாடலுக்கும் அடுத்தற்கும் நூல் ஒழுக்கு மற்றும் பொருள் தொடர்பு
காணப்படாமையாலும், ஒரே துறைக்குப் பற்பல பாடல்கள் உள்ளமையாலும், தனித்தனி தலைப்புகள் தவிர்க்கப்பட்டன.

இந்நூல் பழமையான கோவைகளில் ஒன்றாகக் போற்றப்படும் 8-9 ஆம் நூற்றாண் டினரான மாணிகவாசகரின் சிற்றம்பலக்கோவையாரினுக்கு மூத்ததெனலாம். அவர்தம்
திருவாசகத்தில் அரிகேசரி எனும் இடப்பெயர் குறிக்கப்படுகின்றது.

இந்நூல் அரிகேசரி பாண்டியனின் சீர்த்தியை பெரிதியம்பவே இயற்றப்பட்டாலும் இறையனார் அகப்பொருள் இயல் நூலின் உரைக்கு விரியாக துறைகளை விளக்கவும் பிறந்தது இ·து எனக் கருத இடமுள்ளது. அல்லது அவ் உரைகாரரோ அவர் முன்னோரோ
இந்நூலின் ஆசிரியரும் ஆகலாம். எவ்வாறு எனின் உரையில் துறை ஒவ் ஒன்றுக்கும் ஓரே வகைத்ததான மேற்கோள் பாடல்கள் பல வலிந்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் நமக்கோர் நூல் கிடைத்தமை சிறப்பே.

அதான்று வரலாற்று ஆய்வுநர்கட்கு பெரிதும் பயன்படும் சேர சோழ பாண்டிய நாட்டு ஊர்கள், மன்னர், தலைநகர், போர்க்களங்கள், வரலாற்று நிகழ்ச்சிகள் பல இதனில் காணக் கிடைக்கின்றன. இவற்றின் குறு தொகுப்புதனைக் கீழே காண்க. இவை பாடல்களில் குறிக் கப்படும் நிலை மற்றும் பொருள்களைப் பற்றி கூர்ந்து ஆய்வு செய்யின் தமிழக வரலாற்று மேம்பாட்டிற்கு உதவலாம்.

பாண்டியன் நெடுமாறனைக் குறிக்கும் பெயர்கள் = அரிகேசரி,
அதிசயன், இரணாந்தகன், இரணோதயன், உசிதன், சத்ருதுரந்தரன்,
சிலம்பன், செம்பியன்-மாறன், செழியன், துறைவன், தென்னவன், நேரியன், பஞ்சவன், பராங்குசன், பூழியன், பூழியன்-மாறன், மாறன், மீனவன், வரோதயன், வழுதி, வானவன், வானவன்-மாறன், விசயசரிதன், விசாரிதன்

பற்சொல் பண்புப் பெயர்கள் = உரும்ஏந்தியகோன், கங்கைமணாளன்,
கலிமதனன், கன்னிப்பெருமான், சந்திரகுலத்தோன், தமிழ்நர் பெருமான்,
தீம்தமிழ்வேந்தன்,முத்தக்குடைமன்னன், வெண்குடைவேந்தன்,

அவன் வென்ற போர்க்களங்கள் = அளநாடு, ஆற்றுக்குடி, இருஞ்சிறை,
கடையல், களத்தூர், குளந்தை, கோட்டாறு, கோளமநாடு, சங்கமங்கை,
செந்நிலம், சேவூர், தொண்டி, நட்டாறு, நறையாறு, நெடுங்களம், நெல்வேலி, பறந்தலை, பாழி, புலிப்பை, பூலந்தை, மணற்றிமங்கை, மேற்கரை, வல்லத்து, வாட்டாறு, விழிஞம், வெண்டரை, வெண்மாத்து, வேணாடு

குறிக்கப்படும் ஏனைய இடப்பெயர்கள்
அத்தமலை, உறந்தை, காவிரிநாடு, கூடல், கொங்கநாடு, கொல்லி, தொண்டி, நேரிமலை, பறந்தலைக்கோடி, புகார், புனல்நாடு, பொதியில், மந்தாரம், மலயம், மாந்தை, முசிறி, வஞ்சி, விழிஞத்துக்கடல்கோடி (தனுஷ்கோடி போன்று கடல் முனை)

இதர நிகழ்ச்சிகள் பாண்டியர் கெண்டை பனிவரைமீது பொறித்தமை, மதுரை விழா, வேம்பொடு போந்து(பனை)அணிதல், புலியும் கயலும் செம்பொன் மலைமிசை இருத்தல்

நூ த லோகசுந்தரமுதலி - மயிலை

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home