Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் > பட்டுக்கோட்டை பாடல்கள் பொருளடக்கம் >   அரசியல் அறம் > நாட்டு நலம்இயற்கை > தெய்வம் தேடுதல் > சிறுவர் சீர்திருத்தம் > காதல் சுவை நகைச்சுவை > தத்துவம் > தனிப்பாடல்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Pattukottai Kalyanasundaram: 1930 - 1959

 பட்டுக்கோட்டை தந்த பாட்டுக்கோட்டை பாடல்கள்
தனிப்பாடல்

9.1 புதிய ஒளி வீசுது பார்!
9.2 நண்டு செய்த தொண்டு
9.3 வெஞ்சிறை உடைந்தது
9.4 பெண்
9.5 மனித சக்தி
9.6 சுதந்திரத் தாயின் மகிழ்ச்சி....
9.7 தாமரை என்றோர் ஏடு மலர்ந்தது
9.8 பாரதி
9.9 என் விருப்பம்
9.10 கொதிக்கும் தார்
9.11 ஏற்றத்தாழ்வு மாற்றும் கொடி!
9.12 நடுவில் இருக்கும் சாமி
9.13 நாலு முழ வேட்டி
9.14 படத் தொழில் வளர
9.15 அகராதியைக் கிழிக்கும்
9.16 நீ யார்
9.17 சாதி மயக்கம்
9.18 அடிமை விலங்கு ஒடிந்தது
9.19 வாழவிடு
9.20 பின்னாலே கண்ணு
9.21 இருள் வர அஞ்சும்
9.22 காலத்திலே செல்லு
9.23 உன்னை நீ!
9.24 இறைவனுக்கு நன்றி
9.25 நல்லவரைப் போற்றுவோம்
9.26 ஜீவா
9.27 கவிஞரின் முதல் கவிதை
9.28 கவிஞரின் இறுதிக் கவிதை


9.1 புதிய ஒளி வீசுது பார்!
புதியஒளி வீசுதுபார்
இமயம் தாண்டிப்
புன்சிரிப்புக் காட்டுதுபார்
இன்பம் அங்கே
கதைபுனைந்து கூறவில்லை
கண்ணில் தோன்றும்
காட்சியிவை ரஷ்யாவில்
மக்களாட்சி
சதிமிகுந்த கொடுங்கோலன்
ஜார்முன் மக்கள்
கதிஉயரக் காணும்வழி
ஏது மின்றி
மிதியுண்டார் அராஜகத்தின்
மீளாச் சேறில்
வெம்பியழுதார் பசியால்
வெந்தார் நைந்தார்
கொதிக்கின்ற ஏழைமனம்
குமுறிற்று ஆனால்
கொக்கரிக்கும் ஜார்மன்னன்
சிரித்து நின்றான்
இதைக்கண்டார் லெனின்,ஸ்டாலின்
இன்னும் கண்டார்
எதைக்கொண்டு தீர்ப்பதென
விரதம் பூண்டார்
பதைக்கின்ற உயிர்களையும்
பார்த்தார் அங்கும்
பல்லிளிக்கும் பணக்கழுகின்
நிலையும் பார்த்தார்
சதைக்குன்முய் வாழுமந்தச்
சுரண்டல் வர்க்கம்
ஜாரினுக்குத் தக்கதுணை
யாதல் கண்டார்
விதிக்கின்ற சட்டம்
ஜன உரிமை தன்னை
வெடுக்கென்று பறிப்பதையும்
எளியோர் வாழ்வைச்
சிதைக்கின்ற தன்மையையும்
செக்கி லிட்ட
தேங்காய்போல் தொழிலாளர்
துயரும் கண்டார்
உதிர்த்தகண்ணீர் துடைத்தெழுந்தார்
துணிந்தார் அன்றே
உதித்ததுபார் புரட்சியெனும்
உரிமைச் செம்போர்
குதித்தார்கள் மக்களெல்லாம்
குருதிப் போரில்
கொழுந்துவிட்டுப் பற்றியது
செந்தீ யெங்கும்.

[ ஜனசக்தி, நவம்பர் புரட்சி மலர்,1954 ]

9.2 நண்டு செய்த தொண்டு
ஊரையடுத்த ஓடைக் கரையில்
ஓட்டை நிறைந்த ஒருசிறு குடிசை
நாற்புறம் வயல்கள் நல்ல விளைச்சல்
நாகனும் வள்ளியும் வசிக்கும் இடமிது

சொல்லச் சொல்ல சுவையேறு தமிழில்
வள்ளியுரைக்கின்றாள் மச்சானிடத்தில்:
"மச்சான் மச்சான் கதையைக் கேட்டியா
வாரக் குத்தகை தர்ரதாச் சொல்லி
வாம்பலில் கொஞ்சம் நட்டுவச்சோமே"

"ஆமா ஆமா அதுக்கென்ன இப்போ
நேத்தைக்குத் தண்ணி நிறைய இருந்ததே
பின்னாடி நட்டதால் பிஞ்சாயிருக்கும்
இன்னும் பத்துநாள் எல்லாம் பழுத்திடும்"

"அதுக்கில்லே மச்சான் நான் சொல்ல வந்தது
அடுத்த வயல்லே நின்னாரு
ஆத்து வாய்க்காலை அடைச்சுத் திருப்பணும்
ஐம்பது காசுக்குத் தண்ணி பாய்ச்சணும்

ஆருவந்தாலும் அடிப்பேன் உதைப்பேன்
அப்படி இப்படீன்னு அலறிக் குதிச்சாரு
இதுக்கும் நமக்கும் எட்டாதுன்னு
இருட்டும் முன்னே வீட்டுக்கு வந்திட்டேன்"

"பொழுது விடிஞ்சு போய்ப்பாத்தா
பொங்கித் ததும்புது நம்ப வயலும்
வாய்க்காலும் வெட்டலே மடையும் திறக்கலே
வழியும் அளவுக்குத் தண்ணி யேது?"

"நண்டு செஞ்ச தொண்டு மச்சான்
நாட்டு நிலைமையை நல்லாப் பாத்தது
ஏற்றத் தாழ்வை ஒழிக்க வரப்பில்
போட்டது வளையைப் புரட்சி நண்டு,
பாய்ந்தது தண்ணி பரவி எங்குமே
காய்ந்த பயிர்களும் கதிரைக் கக்கின"

"ஆகா ஆகா அருமை நண்டே
உனக்கு இருக்கும் உயர்ந்த நோக்கம்
உலக மனிதர்க்கு உண்டா நண்டே,
பெரு நிலக்காரன் வரப்பைக் குடைந்து
சிறுநிலங் காத்துச் சிறந்த நண்டே"
என்று நாகன் நன்றி செலுத்துகையில்
எதிருள வயல்களை இருவரும் நோக்கினர்
பச்சை மயில்போல் பயிர்கள் அசைந்தன,
பழுத்த கதிர்கள் படுத்துக் கிடந்தன,

படுத்திருந்த பசுந்தரை அடியில்
வெடித்த கிளையிலும் விஷயமிருந்தது
உழைப்பாளர் பலனை ஒட்ட உறிஞ்சு
ஒதுக்கிப் பதுக்கும் உல்லாச மனிதரின்
கள்ளத் துணிவையும் கருங்காலிச் செயலையும்
கொல்லும் ஈட்டிபோல் குருத்துகள் நின்றன

இந்த காட்சியில் இன்பம் கண்டனர்,
இயற்கை ஆட்சியை இருவரும் வியந்தனர்
மடைதாண்டி விழுந்த வாளை மீன்போல்
வள்ளி துள்ளி வரப்பில் குந்தினாள்

[ ஜனசக்தி,17-07-55 ]

9.3 வெஞ்சிறை உடைந்தது
கண்ணை இழுக்கும் அழகொன்று கண்டேன்
காவியம் ஓவியம் யாவையும் கண்டேன்
மின்னைநிகரிடைப் பெண்களும் ஆண்களும்
வேலைசெய்யும் அந்தக் கோலத்துடன் கண்டேன்

வண்ணக்கலையங்கு வாழ்ந்திடக் கண்டேன்
மக்கள் உழைப்பின் உயர்வெனக் கண்டேன்
பொன்னைப்பழிக்கும் கதிர்கள் ஒன்றைஒன்று
பின்னிப்பின்னி அசைந்தாடிடக் கண்டேன்

நாடுசெழிக்க உழைக்கும் எளியவர்
நாதியின்றி உள்ளம் நைந்திடக் கண்டேன்
நன்றியில்லாத முதலாளி ஆட்சியின்
நயவஞ்சகத்தால் வந்த நலிவென்று ணர்ந்தேன்

பொறுமை யிழந்தனர் மக்களெல்லாம் - மனம்
பொங்கி எழுந்தனர் எரிமலைபோல்
உரிமைபறித்த உலுத்தர் எதிர்த்தனர்
ஒருமித்த ஜனசக்தி வென்றது வென்றது

தோளோடுதோள் ஒட்டிச் சென்றனர்
அறிவாளொடு மார்தட்டி நின்றனர்
ஆளடிமைத் தளையறுந்து வீழ்ந்தது - நம்மை
அடைத்துவைத்த வெஞ்சிறை உடைந்தொழிந்தது.

[ கண்ணின் மணிகள்,1955 ]

9.4 பெண்
சின்னயிடை துவள செங்கை வளை குலுங்கத்
தென்றலொடு கூந்தல் சிலிர்த்து விளையாட
மண்ணுக்கு மேனி வலியெடுக்கும் என்பதுபோல்
அன்னநடை போட்டு அழகுவிழி அம்புவிட்டுத்

தன்னையந்தாங்காத் தளிர்மேனி மீதிலொரு
சன்னயிழை மெல்லுடையுதாங்கித் தனமிரண்டும்
முன்னேவழிகாட்ட முகத்தில் ஒளிமிதக்க
வண்ணக்கழுத்தில் மணிபுரளத் தோளசைய,

மின்னலைப் பற்கள் வெளிக்காட்டி உளம் நிறைக்கக்
கன்னிப்பருவம் களையாத பெண்ணொருத்தி
தன்னந்தனியே தமிழ்நாட்டுச் சாலையிலே
செந்நெற் கதிர்போல் சிரம் வணங்கி வந்தாளே!

[ 22-03-57 ]

9.5 மனித சக்தி
சந்திரனை தொட்டதின்று

மனிதசக்தி
சரித்திரத்தை மீறியது

மனித சக்தி
இந்திரன்தான் விண்ணாட்டின்

அரசனென்ற
இலக்கணத்தை மாற்றியது

மனித சக்தி
இந்திரனும் முடியரசாய்

இருக்கொணாது
எனும்குறிப்பைக் காட்டியது

மனித சக்தி
மந்திரமா வெறுங்கதையா

இல்லை: இல்லை
மனித சக்தி; சோவியத்தின்

மனித சக்தி

[ 01-05-57 ]

9.6 சுதந்திரத் தாயின் மகிழ்ச்சி....
சுதந்திரத்தைப் பெற்றுவிட்டாள் இந்தியத் தாய்

சொல்லவொண்ணா மகிழ்ச்சியிலே திளைப்பாள் என்று
தூங்காமல் இரவுபகல் பாடுபட்ட

தோழர்களே! தாய்மாரே! தந்தைமாரே!
சிறைவாழ்க்கை வேற்றாரின் கொடிய சட்டம்

சித்ரவதை குண்டடிகள் யாவுந் தாங்கித்
தேகமெலாந் தியாகவடுப் பெற்று நின்ற

சிங்கங்காள் செக்கிழுத்த சிதம்பரமே!

உயிரிழந்தும் செங்குருதி மண்ணிற் பாய்ந்தும்

உரிமைக்கொடி காத்திட்டக் குமரக் குன்றே
வறுமையினைச் சுமந்துகொண்டு விடுதலைத்தாய்

வருகைக்கு முழக்கமிட்ட பாரதியே!
கொடுமையெலாம் விடுதலையின் குறிதான் என்று

குறுநகைத்த தில்லையாடி வள்ளி யம்மா
ஒருமையிலே சக்தி இல்லை பன்மை வேண்டும்

ஒன்றுதிரள் வோமென்ற சுபாஷ் வீரா!

உரிமைபெற்றும் கடமையெல்லாம் முடிப்பதற்குள் மத

வெறியினால் பலியான பெரியோய் காந்தி!
தான் மறைந்தும் புகழ்மறையாத் தொண்டுசெய்த

தலைவர்களே! நீங்களெல்லாம் இன்றிருந்தால்
தியாக வடுக்களை எல்லாம் கண்களாக்கித்

தேசத்தை நனைத்திருப்பீர் கண்ணீராலே
அங்குமிங்கும் வசைபெற்றுச் சுதந்திரத்தாய்

அவதியுறும் நிலைகண்டா லுங்கள் நெஞ்சம்

அனலில் மெழுகென உருகிப் போயிருக்கும்

அடுத்தாண்டில் இனும்பலவும் கூறுகின்றேன்
தலைக்கெல்லாம் தலையாய தலைமைத் தாயே

சரித்திரத்தில் இடங்கொண்ட சுதந்திர நாளில்
கொலை நடந்த விபரமெல்லாம் கூறுதற்குக்

கூசுகின்றேன் மற்றுமுள்ள விபரம் சொல்வேன்;
சுதந்திரத்தைப் பெற்ற முதல் ஓர்நாளேனும்

துளியும் நீ மகிழ்ந்ததுண்டா? உன்றன் மக்கள்

உகந்துமன ஒற்றுமையாய் வாழ்ந்த துண்டா?

உன்னைத்தான் மதித்ததுண்டா? உயர்ந்ததுண்டா?
எங்கோர் பகுதியில் ஒன்றுபட்டார்

எனிலதனை ஆதரிக்கும் முறை தானுண்டா?
பெரும்வெயிலால் வண்டல்நிலம் வெடிப்ப தைப்போல்

பிளவுபட்டுப் பிளவுபட்டுச் சுயநலத்தால்
வருமான வேட்கையிலே புகுவதன்றி

மனதிலெதும் விசாலமுண்டா? பொதுநோக்குண்டா?

இதுவரி நீ மகிழ்ந்திருப்பாய் என்ற எண்ணம்

என் போன்றோர்க் கில்லை இனியேனும் அந்தப்
புதுவாழ்வும் ஒற்றுமையும் புனிதத் தொண்டும்

பொலிகவென வணங்குகின்றோம் அன்னையே நீ
பூரிக்கும் அன்னாளை எதிர் பார்க்கின்றோம்


[ ஜனசக்தி,15-08-1958 ]

9.7 தாமரை என்றோர் ஏடு மலர்ந்தது
தாமரை என்றொரு ஏடு மலர்ந்தது

தமிழ் மணம் பரப்பச் - சுவைத்
தேமதுரத் துளி சிந்தியிலக்கியச்

சிந்தைகளை நிரப்ப - இன்று (தாமரை)

தம்மவர் மற்றவ ரென்னும் குணமின்றித்

தத்துநடை போட்டு - முகம்
விம்மிச் சிரிக்கும் குழந்தையைப் புது

வெற்றிவரங் கேட்டு - இன்று (தாமரை)

பொய்மை படர்ந்து கிடக்கும் நிலத்தினில்

உண்மைகளை விதைக்க - ஒளி
பொங்கிவரும் கதிர்போல மக்கள் விழிப்

பொய்கையிலே மிதக்க - இன்று (தாமரை)

அன்றைப் புலவர்கள் ஆக்கங்களுக்குத் தன்

நன்றிதனைக் கூற - மன
வண்டை யழைத்து விருந்துவைக்கப் புகழ்

மன்றத்தினி லேற - இன்று (தாமரை)

கண்ணுக் கினிய கலைஞருக்கும் தமிழ்

பண்ணுக்குரிய வர்க்கும் - கலைப்
பெண்ணுக் கினிய சகலருக்கும் தனிப்

பேறுதனை வளர்க்கும் - வண்ணத் (தாமரை)


[ தாமரை ]

9.8 பாரதி

பாரதிக்கு நிகர் பாரதியே - மண்ணில்
யாரெதிர்த்தாலும் மக்கள்
சீருயர்த்தும் பணியில் (பாரதி)
ஆறோ டிரண்டு திக்கும்
அதிரப் பறை முழக்கும்
அச்சமில்லாத் தமிழில்
அறிவில் நிறைந்திருக்கும் (பாரதி)
வீரமும் நெஞ்சந் தன்னில்
ஈரமும் வேண்டும் என்றான்
வேற்றாரைக் கண்டஞ்சுவார்
வீணரென்றே புகன்றான்
சோர்வகற்றி யாவரும்
ஓர் முகமாய் எழுந்தால்
சூழும் அடிமையிருள்
சொல்லாமல் ஓடும் என்றான் (பாரதி)
பாதகம் செய்பவரைப்
பாட்டாலே உமிழ்ந்தான்
பஞ்சைகளின் நிலையைப்
பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்
பேதங்கள் வளர்ப்பவரைப்
பித்தர் என்றே இகழ்ந்தான்
பெண்மையைச் சக்தியை
உண்மையைப் புகழ்ந்தான் (பாரதி)

[ தோழர் ஜீவாவின் கட்டுரையிலிருந்து எடுத்த பாடல் ]

9.9 என் விருப்பம்
தாண்டித் தாண்டிச் சதிகளைத் தாண்டி
சமுதாயத்தைத் தாழ்த்திப் போடும்
தடைகளைத் தாண்டிச் சோம்பி அஞ்சிக்

சோர்ந்து கிடந்த மனங்களைத் தூண்டிட
தூக்கம் விடுப்பீர் ஆக்கப் பணிக்கெனப்
பகைமை தீர்க்கும் புதிய நோக்கமே
பாண்டித்தேவன் படத்தின் நோக்கம்

பாண்டித்தேவன் படத்தில் பயனும்
பங்கு கொண்டான் பணிபுரிந்ததின்
ஆக்க முயற்சி அன்பின் புரட்சி
ஊக்கம் தளரா உழைப்புப் பயிற்சி

இப்பெரும் படத்தில் இத்தனைப் பணிகளில்
என்பணி செப்பிடில் மழையில் ஒருதுளி
வளனுள்ள மலைகளும் வளமுள்ள சோலையும்
தேனிகர்ச் சுனைகளும் சிரித்திடும் மான்களும்

படத்தில் அடைந்தும்,நான் பார்த்தும் ரசித்தேன்
உள்ளத்தில் நினைத்ததை உரைக்க விரும்பினேன்
இப் படத்தலைவர் சுப்பிர மணியம்
ஒப்பிலாக் கலைஞர் உலகமே அறியும்

திரைப்படக் கலைத்தாய்
குறிப்பிடத் தக்கவர் தாயிக்குத் தலைமகன்
சிந்தனை,சொல்,செயல் யாவுமே பொதுவாய்,
செம்மையும் புதுமையும் செறிந்ததா யிருக்கும்

இன்றைய உலகிற் கென்னென்ன தேவை
இவைவரும் காலத்திற்கெவை அவை நலஞ்செயும்
இவைகளே இவரின் தயைமிகு நினைவுகள்
இவர்தம் படத்தைக் கலைக்கென்றே எடுத்தார்

கலையினை மக்கள் கலையாக்கிக் கொடுத்தார்
ஏழைகள் துயரை ஏங்கிடும் நிலையைத்
தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்து கிடக்கும்

பசிக்குறி முகங்களைப் பாட்டாளி வர்க்கத்தை
நசுக்கிப் பிழிந்திடும் அராஜகச் செயலை
மாற்றிடும் கருத்தை தமிழ்ப்பட உலகம்
வன்மையாய் உரைக்க அஞ்சும் நடுங்கிடும்

சிக்கல் நிறைந்த வர்க்கங்கள் திருந்த
மக்கள் கலைதான் மலர்ந்திட வேண்டும்
என்னும் பொருள்கள் பாண்டித் தேவனில்
பின்னிக்கிடப்பதைப் பார்ப்போர் அறிவர்

நாட்டை உயர்த்தும் நற்படம் இதுபோல்
நாளும் வளர்த்தல் வேண்டும்; பணத்தின்
வேட்டையை குறிப்பாய் படம் எடுப்போர்
பாட்டையே பாடாமல் காலத்தை நோக்குக

பாண்டித் தேவனைப் பார்த்துத் தெளிக, என்
சொந்த விருப்பமிது மக்கள்தம் விருப்பமும்
இவ்விருப்பத்தோடிணைய மறுக்காது
என்று நினைக்கறேன், நன்றி வணக்கம்


9.10 கொதிக்கும் தார்
உறுப்பு அறுந்து போனாலும்
உள்ளம் கலங்கேன்;
செருப்பறுந்து போனதற்கோ
சிந்திப்பான்!

நெருப்பினில் வீழ்ந்து
எதிர் நீச்சல் அடிக்கத்
துணிந்தான்;
கொதிக்கும் தார் குளிர் நீர்!

9.11 ஏற்றத்தாழ்வு மாற்றும் கொடி!
ரோட்டில் பள்ளம் மேடு எங்கும் பாருங்கள் கோடை

ஆற்று மணல் காட்சி அங்குப் பாருங்கள்
போக்குவரவை எச்சரிக்கும் செங்கொடி - அங்கே
ரோட்டின் ஓரத்தில் காற்றிலாடப் பாருங்கள்!
பழுது பார்க்கும் தொழிலாளரைப் பாருங்கள்!
ஏற்றத் தாழ்வு இருக்குமிடம் எங்குமே
மாற்றம் காணவே பறக்கும் செங்கொடி!

9.12 நடுவில் இருக்கும் சாமி
நல்லாருக்கும் பொல்லாருக்கும்

நடுவில் இருக்கும் சாமி - நீ
கல்லாய்ப் போன காரணத்தை
எல்லாருக்கும் காமி!

9.13 நாலு முழ வேட்டி
ஒரம் கிழிஞ்சாலும்
ஒட்டுப்போட்டு கட்டிக்கலாம் - இது
நடுவே கிழிஞ்சுதடி
நாகரத்தினமே - அதுவும்
நாலுமுழ வேட்டியடி
கனகரத்தினமே

9.14 படத் தொழில் வளர
பாடுமிடம் தெரிந்து
பாடவேண்டும் - ஆடுவோர்
பாட்டின் பொருள் உணர்ந்து
ஆட வேண்டும் - கவிஞன் (பாடும்)

பாடும் படக் கலைக்கும்
பாடுபட்டோர் தமக்கும்
பலருக்கும் பலனளிக்கும்
பக்குவ மிருக்கும்படி (பாடும்)

கலைஞர்களைக் குழுவாய்க்
கூட்ட வேண்டும் - முதலில்
கதையமைப்பை விளக்கிக்
காட்டவேண்டும் - அந்தக்
கருத்தோ டிணைந்து
கவிதீட்ட வேண்டும் - அதில்
காலத்திற் கேற்ற
சுவையூட்ட வேண்டும் - கவிஞன் (பாடும்)

ஆடற்கலைக் கழகு
உடலமைப்பு-இன்னும்
அகத்தின் நிலை
விளக்கும் முகக்குறிப்பு
பாடற்கலைக் கழகு
இசையமைப்பு - கலை
பலருழைப்பால் வளரும்
பொதுப்படைப்பு-என்பதால் (பாடும்)

ரசிக்கத் தெரிந்தவரே
நடிக்கத் துணிய வேண்டும்
நம்பிக்கை கொண்டோர்
படம் எடுக்கத் துணிய வேண்டும்
படிக்கத் தெரியாதாரும்
பார்த்துத் தெளிய வேண்டும்
படத் தொழில் வளம் சிறக்க
பண்பட்ட திறன் வேண்டும் (பாடும்)
[ பேசும்படம்,1984]

9.15 அகராதியைக் கிழிக்கும்
அன்னையை அடிக்கும்

அகராதியைக் கிழிக்கும்

தன்னையே வீழ்த்தும்

தடுமாறி நிற்கும்

இந்த மது"


[ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 55வது பிறந்த நாள் விழா மலர் ]

9.16 நீ யார்
"தாயால் பிறந்தேன்

தமிழால் வளர்ந்தேன்

நாயே நேற்றுன்னை

நடுவீதியில் சந்தித்தேன்

நீ யார் என்னை

நில்லென்று சொல்வதற்கு"


9.17 சாதி மயக்கம்
வேலய்யா - வடி

வேலய்யா - உன்னை
வேண்டி வந்தேன் - ஒரு

வேலையா(ய்)

கோலத் தினைப்புனத்தில்

ஆலோலம் பாடிய
கோதை வள்ளிக் காதலா,

சாதித் தடை கடந்த.... (வேலய்யா)

ஆறுமுகத் தோடும்,

ஈராறு கரத்தோடும்,
ஆடும் மயிலோடும்,

அணிவெல்லும் வேலோடும்,

மாறாதுணை வந்து

வணங்கும் மனிதர் - சொந்த
வாழ்வில் மட்டும் சாதி மயக்கம்

வந்த தேனையா? (வேலய்யா)

[ 30-12-80ல் திருச்சி வானொலி நிலைய ஒலிபரப்பில் இசைமணி சீர்காழி கோவிந்தராசன் பாடியது ]


9.18 அடிமை விலங்கு ஒடிந்தது

ஒடித்தார்கள் அடிமையெனும் விலங்கைச் சென்று
உடைத்தார்கள் அதிகாரக் கோட்டை தன்னை
எதிர்த்துநின்ற தனித்தாளும் முதலாளித்துவம்
எடுத்த முழு முயற்சியெல்லாம் மண்ணாய்ப் போச்சு
குடிக்கின்ற தண்ணீரும் செந்நீராச்சு
கோஷமிட்டுக் கிளம்பியது ஏழைக் கூட்டம்
துடிக்கின்ற இதயத்துப் பெண்கள் நாட்டின்
துயர் கொல்லக் குதித்துவிட்டார் போராட்டத்தில்

இடித்தார்கள் எதேச்சாதிக்காரர் தன்னை
இருகூறாய்ப் பிளந்துவைத்தார் இரங்கா நெஞ்சை
வடித்தார்கள் இரத்த வெள்ளம் வாழ்வுக்காக
மடிந்த உயிர் கணக்கற்றோர் எனினும் மக்கள்
வெடித்த குண்டில் கிளம்புகின்ற பொறிகள் போல்
கூறிட்டுக் கிளம்பி நின்று முழக்கமிட்டார்
கொடுஞ்சிறையும் கொலைவாளும் மலிந்தது,ஆனால்
கொந்தளிக்கும் மக்கற்படை சளைக்கவில்லை
தடதடவென்று ஆடிற்று ரஷ்யா அன்று


தலைக்கொழுத்துத் திரிந்த மன்னன் ஜாரும் வீழ்ந்தான்
விடுதலையும் பிறந்ததங்கு மக்களாட்சி
மேவிற்று இன்பமெல்லாம் விளைந்ததங்கே
அடக்குமுறைக் கஞ்சாத லெனின் ஸ்டாலின்
ஆரம்பித்த புரட்சியிலே அமைதி கண்டார்
நடத்து என்றார் சோவியத்தை மக்கள் அன்னார்
நட்டு வைத்த செம்பயிரும் நட்பும் வாழ்க

[ தாமரை,1960 ]

9.19 வாழவிடு

வாழப் பிறந்தவரை
வாழவிடு முருகா வாழவிடு
வாழ் வேண்டுமென்றால் நீயும்
நீதிகொடு முருகா நீதிகொடு!
இருப்பவங்க இல்லை என்றால்
விட்டுவிடு முருகா விட்டுவிடு
ஏழைகளின் கண்ணீரைத்
துடைத்துவிடு முருகா துடைத்துவிடு!
உழைத்துப் பிழைப்பவர்க்கே
வாழ்வு இல்லை முருகா வாழ்வு இல்லை!
இங்கே ஏய்த்துப் பிழைப்பவர்க்கு
வாழ்விருக்கு முருகா வாழ்விருக்கு
இருப்பவர்கள் இல்லை என்றால்
விட்டுவிடு முருகா விட்டுவிடு!
இங்கே உழைத்துப் பிழைப்பவர்க்கு
என்ன இருக்கு முருகா என்ன இருக்கு!

( ஒரு நாடகத்திற்காக எழுதிய பாடல் )

[ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 55வது பிறந்தநாள் விழா மலர் ]


9.20 பின்னாலே கண்ணு
புதுமையான ரோட்டுதான்

போய்ச் சேர லேட்டுதான்
அதிகமான ஹைட்டுதான்

அசந்தால் ஆளு அவுட்டுதான்! (புதுமையான)

இஞ்சினீயர் சாரு

ஏறி இயங்கும் காரு
இரவும் பகலும் டூரு

நின்னுகிட்டா தேரு! (புதுமையான)

பகட்டாய் சிலர்வந்து ஜம்முன்னு

ரசிப்பார் நடுரோட்டிலே நின்னு
பக்கத்திலே வண்டி வந்ததுன்னு

பார்த்திடலாம் டான்சு ஒன்னு!

சட்டம் தெரிஞ்ச மனிதருக்கு

சமயத்திலே பின்னாலே கண்ணு
தானா வந்து மோதிக்கிட்டு

சாதிப்பாங்க டிரைவர் தப்புன்னு!

என்றுமுள்ள சம்பளந்தான்

எங்கும் இந்த சங்கடந்தான்
இரண்டு மூன்று மெம்பர்களானால்

ஏகாதசி விரதந்தான்!

[ தனிப்பாடல் ]

9.21 இருள் வர அஞ்சும்
மின்னும் இயற்கையெல்லாம்

உன்னழகைக் காட்டுதடி
எண்ணமெனும் தேன்கூட்டில்

இன்பக் கனல் மூட்டுதடி!
வான நிலாப்பெண்ணை

வட்டமிட்டு மேகமொன்று
மோன முகத்தினிலே

முத்தமிட்டுப் போகுதடி!
துள்ளிவிழும் நீரலையில்

வெள்ளிமலர் பூத்ததடி!
வள்ளியுனை எதிர்பார்த்த

மெல்லுடலும் வேர்த்ததடி!
இல்லத்தில் நீயிருந்தால்

இருள்வர அஞ்சுதடி
மெல்லத் தமிழ் உனது

சொல்லில் வந்து கொஞ்சுதடி (மின்னும்)

[ 22-03-1957 ]

9.22 காலத்திலே செல்லு
காலம் கடந்து விட்டது

பொழுது ஓய்வாகப் போகிறது
காலத்தோடு வீடு செல்லு

காலிப் பயல் சுத்துமுன்
ஞாலத்திலே நம்ம மனம் தமிழ்

இனத்தின் குலத்தைக் காக்க வேண்டும்
காலத்திலே செல்லு மகளே!


9.23 உன்னை நீ!
சீவி முடித்துத் திருமணக்கும்

பொட்டு வைத்துக்
கோவிலைச் சுற்றி வரும்
குலமகளே-பாவியரின்
கண்ணிலகப் பட்டுக் களங்கம்
வரா வண்ணம்
உன்னை நீ காப்பாற்றிக்கொள்!

[ பேசும்படத்தில் வெளியான கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட சில கவிதை வரிகள் ]


9.24 இறைவனுக்கு நன்றி
செல்லக் கிளியே, அல்லிக் குளமே,
சொல்லத் தெரியாமல் துள்ளி மகிழ்ந்தாடும்
பிள்ளைச் செல்வமே!
தாலேலோ தாலேலோ தாலேலோ

சந்திரனைக் கொஞ்சம் கிள்ளி எடுத்தே
சாதிப் பழத்தில் சேர்த்து வைத்தே
உன்றனைச் செய்தே உலகினுக் கீந்த
அந்த இறைவனின் அன்பினுக்கு என் நன்றியடா!
தாலேலோ தாலேலோ தாலேலோ

[ மல்லிகை,ஏப்ரல் 1960 ]


9.25 நல்லவரைப் போற்றுவோம்
நாடுயரப் பாடுபடுவோம்

நல்லவரைப் பாடியாடுவோம்

சுரண்டலின் பாதை தன்னை மூடுவோம்

தொழிலாலே வாழுவோம்

தூங்காமல் ஒன்றாய்க் கூடுவோம்

இதைக் கேளுங்கோ...

இவ்வுலக நாடு இனி

எங்கள் சொந்த வீடு - இல்லை

என்போர் கண்கள் குருடு.

செந்நெல் வளம் மேவிட வேர்வை

சிந்திடும் கூட்டம் நாமானால்

சீக்கிரம் காண்போம் இன்பமே


9.26 ஜீவா
புவியினிலே சுவர்க்கத்தைச் சமைப்பதற்கு

போராடும் வர்க்கத்தின்

தலைவன் ஜீவா

தன்னலமே சிறிது மிலா

இயக்கம் தந்த

தமிழ்க் கலையின் முழுவடிவம்

கலைஞன் ஜீவா.

[ ஜீவாவைப் பற்றி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் எழுதிய இந்தப் பாடல் ஜீவாவின் மறைவுக்குப்
பின் தாமரை இதழில் இடம் பெற்றுள்ளது ]


9.27 கவிஞரின் முதல் கவிதை
ஓடிப்போ ஓடிப்போ

கெண்டைக் குஞ்சே - கரை

ஓரத்தில் மேயாதே

கெண்டைக் குஞ்சே

தூண்டில் காரன் வரும்

நேரமாச்சு - ரொம்பத்

துள்ளிக் குதிக்காதே

கெண்டைக் குஞ்சே

[ பட்டுக்கோட்டைக் கவிஞர் 15 வயதில் எழுதிய முதல் பாடல் ]


9.28 கவிஞரின் இறுதிக் கவிதை

செக்கச் சிவந்த செழுங்கதி ரோனும்
கிழக்கினில் வந்துவிட்டான் - புற
மக்கள் மதிக்கண் விழித்துக் கிளம்பிட
வானில் உதித்து விட்டான்.

கொக்கரக்கோ வெனக் கோழியும் கூவுது
கொக்கோடு பற்பல புட்களும் மேவுது
சக்கரம் போலவே ஜகம் சுழன்றாடுது
தொக்கி நின்ற இருள் சொல்லாமல் ஓடுது
பத்துத் திசையிலும் ஜன சக்தி முழங்கிடுதே (செக்க)

தெற்கில் ஒரு குரல் தென்பாங்கு பாடுது
தீய செயல்களைச் செங்கைகள் சாடுது
பக்குவம் கொண்ட படைபல கூடுது
சிக்கல் அறுத்து பொது நடை போடுது
சொத்தை மனம் திருந்தப் புதுச் சத்தம் பிறந்திடுதே (செக்க)

கத்தும் பறவை கனிகரத்தில் வந்து
ஒற்றுமை காட்டிடுதே தலைப்
பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி
பேதம் வளர்த்திடுதே
ரத்த வேர்வைகள் சொட்ட உழைத்தவன்
நெற்றி சுருங்கிடுதே - ஏழை
உத்தமர் வாழ்வை உறிஞ்சும் உலுத்தரின்
கொட்டம் அடங்கிடுதே - மக்கள்
வெற்றி நெருங்கிடுதே (செக்க)

[ 15-08-1959 ஜனசக்தியில் புது ஞாயிறு என்ற தலைப்பில் வெளிவந்த இந்த கவிதைதான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் எழுதிய இறுதிக் கவிதை]

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home