Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் > பட்டுக்கோட்டை பாடல்கள் - பொருளடக்கம் >   அரசியல் அறம் > நாட்டு நலம்இயற்கை > தெய்வம் தேடுதல் > சிறுவர் சீர்திருத்தம் > காதல் சுவை நகைச்சுவை > தத்துவம் > தனிப்பாடல்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Pattukottai Kalyanasundaram: 1930 - 1959

 பட்டுக்கோட்டை தந்த பாட்டுக்கோட்டை பாடல்கள்
தத்துவம்

8.1 எது சொந்தம்!
8.2 மனக்குரங்கு
8.3 போலிகளும் காலிகளும்
8.4 வரவும் செலவும்
8.5 உழைக்காமல் சேர்க்கும் பணம்
8.6 இனிப்பும் கசப்பும்
8.7 உண்மை
8.8 வீண் அனுதாபம்!
8.9 வெறும் பேச்சு!
8.10 துணிச்சல்
8.11 துன்பத்தை மிதி!
8.12 பொறுமை பொங்கினால்!
8.13 கற்பின் விலை
8.14 வெற்றி எங்கள் கையிலே
8.15 சோம்பல் ஒழிக
8.16 ஒற்றுமை
8.17 நிழலும் வெயிலும்
8.18 ஆரம்பமும் முடிவும்!
8.19 ஒன்றிருந்தால் ஒன்றில்லை
8.20 தேன் கலசம்
8.21 எது வேண்டும்?
8.22 நிலையில்லா உலகம்!


8.1 எது சொந்தம்!

    குட்டி ஆடு தப்பிவந்தால்
    குள்ளநரிக்குச் சொந்தம்!
    குள்ளநரி மாட்டிகிட்டா
    கொறவனுக்குச் சொந்தம்!

    தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில்
    பட்டதெல்லாம் சொந்தம்!
    சட்டப்படி பார்க்கப்போனால்
    எட்டடிதான் சொந்தம்!

    உனக்கெது சொந்தம்
    எனக்கெது சொந்தம்!
    உலகத்துக் கெதுதான் சொந்தமடா! (உனக்கு)
    மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே
    வந்தலாபம் மதிமந்தமடா (உனக்கு)

    கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
    குருவியின் சொந்தம் தீருமடா!
    ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
    அதோட சொந்தம் மாறுமடா! - காலை
    நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
    நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
    காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
    கணக்கத் தீர்த்திடும் சொந்தமடா (உனக்கு)

    பாப சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
    பாசாங்கு வேலைசெய்த பகல் வேஷக்காரர்களும்
    ஆபத்திலே சிக்கி அழிந்தார்களானாலும்
    அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!
    அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் - முடிவில்
    எவருக்குமே தெரியாம ஓடினார் - மனதில்
    இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்

    செவரு வச்சுக் காத்தாலும்
    செல்வமெல்லாம் சேர்த்தாலும்
    செத்தபின்னே அத்தனைக்கும்
    சொந்தக்காரன் யாரு? - நீ
    துணிவிருந்தா கூறு!

    ரொம்ப-

    எளியவரும் பெரியவரும்
    எங்கே போனார் பாரு! - அவரு
    எங்கே போனார் பாரு!

    பொம்பளை எத்தனை ஆம்பிளை எத்தனை
    பொறந்த தெத்தனை எறந்த தெத்தனை
    வம்பிலே மாட்டிப் போன தெத்தனை
    மானக் கேடாய் ஆன தெத்தனை?
    மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
    எத்தனை எத்தனை ஆனந்தம்! (உனக்கு)

    [ பாசவலை,1956 ]

8.2 மனக்குரங்கு

    இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் - பெருங்
    கூட்டிருக்குது கோனாரே! - இதை
    ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
    ஒரு முடிவுங் காணாரே!
    தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
    எல்லாம் இப்படிப் போகுது
    நல்லாருக்குள் பொல்லாரைப்போல்
    நரிகள் கூட்டம் வாழுது
    தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
    தில்லாலங்கிடி தில்லாலே (இந்த)

    கணக்கு மீறித் தின்றதாலே
    கனத்த ஆடு சாயுதே - அதைக்
    கண்ட பின்னும் மந்தையெல்லாம்
    அதுக்கு மேலே மேயுது
    பணக்கிறுக்குத் தலையிலேறிப்
    பகுத்தறிவுந் தேயுது - இந்த
    பாழாய்ப்போற மனிதக்கூட்டம்
    தானாய் விழுந்து மாயுது (இந்த)

    ஆசை என்ற பம்பரத்தை உருவாய்க் கொண்டு
    பாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங் கண்டு
    நேசம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு
    நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு

    இதைப்-
    படித்திருந்தும் மனக்குரங்கு
    பழைய கிளையைப் பிடிக்குது,
    பாசவலையில் மாட்டிக்கிட்டு
    வௌவால்போலத் துடிக்குது

    நடக்கும் பாதை புரிந்திடாமல்
    குறுக்கே புகுந்து தவிக்குது;
    அடுக்குப் பானை போன்ற வாழ்வைத்
    துடுக்குப்பூனை ஒடைக்குது (இந்த)

    [ பாசவலை,1956 ]

8.3 போலிகளும் காலிகளும்

    உறங்கையிலே பானைகளை
    உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
    உருப்படியாய் இருப்பதையும்
    கெடுப்பதுவே குரங்குக் குணம் - ஆற்றில்
    இறங்குவோரைக் கொன்று
    இரையாக்கல் முதலைக்குணம் - ஆனால்
    இத்தனையும் மனிதனிடம்
    மொத்தமாய் வாழுதடா

    பொறக்கும்போது - மனிதன்
    பொறக்கும்போது பொறந்த குணம்
    போகப் போகப் மாறுது - எல்லாம்
    இருக்கும்போது பிரிந்த குணம்
    இறக்கும்போது சேருது (பொறக்)

    பட்டப்பகல் திருடர்களைப்
    பட்டாடைகள் மறைக்குது - ஒரு
    பஞ்சையைத்தான் எல்லாஞ் சேர்த்து
    திருடனென்றே உதைக்குது (பொறக்)

    காலநிலையெ மறந்து சிலது
    கம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின்
    கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
    வாலைப்பிடிச்சி ஆட்டுது - வாழ்வின் (பொறக்)

    கணக்குப் புரியாம ஒண்ணு
    காசைத்தேடிப் பூட்டுது - ஆனால்
    காதோரம் நரைச்ச முடி
    கதை முடிவைக் காட்டுது (பொறக்)

    புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை - பச்சை
    புளுகை விற்றுக் சலுகை பெற்ற மந்தை - இதில்
    போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
    ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
    உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் - நம்பி
    ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் - நாம்
    உளறி என்ன,கதறி என்ன?
    ஒன்றும் நடக்கவில்லை தோழா - ரொம்ப நாளா (பொறக்)

    [ சக்ரவர்த்திக் திருமகள்,1957 ]

8.4 வரவும் செலவும்

    கருவுலகில் உருவாகி
    மறுவுலகில் வரும் நாளைக்
    கண்டறிந்து சொல்வாருண்டு - இந்தக்
    திருவுடலில் குடியிருக்கும்
    சீவன் பிரியும் நாளைத்
    தெரிந்தொருவர் சொன்னதுண்டோ?

    வருவனவும் போவனவும்
    விதியென்று வைத்தவன்
    வாழ்வினை விதைத்த உழவன் - அவன்
    அறுவடைக்காலத்தில்
    அழுதாலும் தொழுதாலும்
    அனுதாபங் காட்டுவானோ?....

    [ சௌபாக்கியவதி,1957 ]

8.5 உழைக்காமல் சேர்க்கும் பணம்

    சூழ்ச்சியிலே சுவரமைத்து
    சுயநலத்தால் கோட்டைகட்டிச்
    சுடர்விட்ட நீதிதனைத்
    தூக்கி எறிந்துவிட்டுச்
    சாட்சிகள் வேண்டாம்
    சகலமும் நானென்று
    சதிராடும் வீணர்களின்
    அதிகார உலகமடா

    புதிரான உலகமடா - உண்மைக்கு
    எதிரான உலகமடா - இதில்
    பொறுமையைக் கிண்டிவிடும்
    போக்கிரிகள் அதிகமடா

    குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
    குருட்டு உலகமடா - இது
    கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
    திருட்டு உலகமடா - தம்பி
    தெரிந்து நடந்துகொள்ளடா - இதயம்
    திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)

    இருக்கும் அறிவை மடமை மூடிய
    இருட்டு உலகமடா - வாழ்வின்
    எந்த நேரமும் சண்டை ஓயாத
    முரட்டு உலகமடா - தம்பி
    தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
    திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)

    விளையும் பயிரை வளரும் கொடியை
    வேருடன் அறுத்துவிளையாடும் -மனம்
    வெந்திடும் தோட்டக்காரனிடம்
    மிரட்டல் வார்த்தைகளாடும் - பல
    வரட்டு கீதமும் பாடும் - விதவிதமான
    பொய்களை வைத்துப்
    புரட்டும் உலகமடா - தம்பி
    தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
    திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)

    அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
    அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
    அழகைக் குலைக்க மேவும்
    கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
    குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
    குணமும் இதுபோல் குறுகிப்போகும்
    கிறுக்கு உலகமடா - தம்பி
    தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
    திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)

    தாயித்தோ...தாயித்து - பலர்
    சந்தேகம் தீர்ந்துவிட
    சந்தோஷமான ஒரு
    சங்கதியைக் சொல்லவரும் தாயித்து - சில
    சண்டாளர் வேலைகளை
    ஜனங்களின் மத்தியிலே
    தண்டோரா போடவரும் தாயித்து - அய்யா
    தாயித்தோ...தாயித்து - அம்மா
    தாயித்தோ...தாயித்து

    தில்லில்லா மனுஷன்
    பல்லெல்லாம் நெல்லாரிக்க
    சொல்லெல்லாம் வெஷமிரிக்கி கேளுங்கோ - இதர்
    நெல்லார்க்கி பொல்லார்க்கி அல்லா நடுவேரிக்கு
    எல்லாம் வௌக்கிப் போடும் பாருங்கோ லேலோ-
    தாயித்தோ...தாயித்து - ஆவோ தாயித்தோ...தாயித்து
    பொம்பளைங்க பித்துக்கொண்ட
    பொடவைப் பக்தர்களுக்குப்
    புத்தியைப் புகட்ட வந்த தாயித்து - செம்பு
    தகட்டைப் பிரிஞ்சா
    திரையில் மறஞ்சிருக்கும்
    சேதிகளைச் சொல்லும் இந்தத் தாயித்து
    ஒருவன் : அய்யா! இதிலே வசியம் பண்ற
    வேலையிருக்கா!
    மந்திரம் வசியமில்லை
    மாயாஜால வேலையில்லை
    வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப அவசியம் - இதில்
    மறஞ்சிருக்கு அரிய பெரிய ரகசியம் (தாயித்தோ)
    மற்றவன் : ஏம்பா!பணம் வருமானத்துக்கு
    ஏதாவது (வழி)யிருக்கா இதிலே?
    ஒடம்பை வளைச்சு நல்லா ஒழைச்சுப்பாரு - அதில்
    உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
    உக்காந்துகிட்டு சேக்கிற பணத்துக்கு
    ஆபத்திருக்கு அது உனக்கெதுக்கு? (தாயித்தோ)
    மற்றொருவன் : ஏய்யா! இதால
    பொம்பளைகளே மயக்க முடியுமா?
    கண்ணும் கருத்துமே பெண்ணைக் கவர்ந்திடும்
    காதலும் வாழ்வும் தொடர்ந்திடும்
    கண்ட கண்ட பக்கம் திரிஞ்சா
    கையும் காலும் வாழ்வும்
    துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்

    (வசனம்)
    தம்பி,அதெல்லாம் செய்யாது இது வேறே?
    (தாயித்தோ)

    [ மகாதேவி,1957 ]

8.6 இனிப்பும் கசப்பும்

    வீடு நோக்கி ஓடிவந்த என்னையே
    நாடி நிற்குதே அனேக நன்மையே உண்மையே (வீடு)

    இனி-
    காடு மேடு சொந்தம்
    காணும் யாவும் சொந்தம்
    கூடுமில்லை குஞ்சுமில்லை
    என்ன ஆனந்தம்!
    இரு காலிருந்தும் கையிருந்தும்
    பாரிலே
    ஒரு வாலுமில்லை தலையுமில்லை
    வாழ்விலே (வீடு)

    இனிக் காற்று மழையிலின்பம்
    கல்லு முள்ளிலின்பம்
    பூட்டுமில்லை கதவுமில்லை
    எந்தன் வீட்டுக்கே
    நான் எண்ணிஎண்ணி கதறியென்ன
    உலகிலே
    ஒரு இனிப்புமில்லை கசப்புமில்லை
    முடிவிலே! (வீடு)

    [ பதிபக்தி,1958 ]

8.7 உண்மை

    ஒருத்தி : உருளுது பெரளுது உலகம் சுழலுது
    ஓடுது ஆடுது கூடுது குறையுது
    உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க - அய்யா
    உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க

    மற்றவன் : இரவும் பகலும் இருட்டுது மெரட்டுது
    ஏறுது இறங்குது இடையிலும் மாறுது
    எடங்கண்டு நடந்துக்கிங்க - சாமி
    எடங்கண்டு நடந்துக்கிங்க

    ஒருத்தி : பாயுது சாயுது ஞாயத்தைத் தாண்டி
    மேயுது மனம்போலே!

    மற்றவள் : பல-ஆயிரமாயிரம் தீமையைத் தாங்கி
    அலையுது வெறியாலே!

    ஒருத்தி : ஆசைகள் அதிகம் அறிவுக்குப் பஞ்சம்
    அதிசயம் இதுதாங்க

    மற்றவள் : வெறும்-வேஷமும் மோசமும்
    வெடச்சுப்பாக்குது
    வேதனை அதுதாங்க! (உருளுது)

    ஒருத்தி : கூடுவிட்டுக் கூடு பாஞ்சு
    கூறுகெட்டு நின்னதெல்லாம்
    நூறுதிட்டம் போடுதுங்க - வாய்
    வீரம் பேசுதுங்க!

    மற்றவள் : நன்மையும் தீமையும் நாளைக்குத் தெரியும்
    ரகசியம் இதுதாங்க - ஒங்க
    கண்ணையும் காதையும் திருப்பிடும் விஷயம்
    கடைசியில் இருக்குதுங்க

    ஒருவன் : நாணயமில்லை நன்றியுமில்லை
    நம்பவும் வழியில்லை

    மற்றவள் : இதில்-
    உண்மையன்புக்கு உடல் நலமில்லை!

    ஒருத்தி : அது உயிரை இழந்தால்
    நாட்டுக்குத் தொல்லை!

    மற்றவள் : இதால்-
    ஒவ்வொரு நாழியும்
    நீதியின் மனசு உருகுதுங்க

    ஒருத்தி : நேரமும் காலமும் மாறி வருதுங்க
    நெலமையைக் கேளுங்க

    மற்றவள் : ரொம்ப -
    நீண்ட குட்டுகள் வெடிக்கப் போகுது
    நேருலே பாருங்க (அய்யா)

    [ பெற்ற மகனை விற்ற அன்னை,1958 ]

8.8 வீண் அனுதாபம்!

    இரைபோடும் மனிதருக்கே
    இரையாகும் வெள்ளாடே
    இதுதான் உலகம், வீண்
    அனுதாபம் கொண்டு நீ
    ஒரு நாளும் நம்பிடாதே
    டேயண்ணா-டேயண்ணா-டேயண்ணா ட்ரியோ டேயண்ணா

    முறையோடு உழைத்துண்ண
    முடியாத சோம்பேறி
    நரிபோலத் திரிவார் புவிமேலே - நல்ல
    வழியோடு போகின்ற
    வாய்பேசா உயிர்களை
    வதச்சுவதச்சு தின்பார் வெறியாலே (இரை)

    காலொடிந்த ஆட்டுகாகக்
    கண்ணீர் விட்ட புத்தரும்
    கடல்போல உள்ளங்கொண்ட
    காந்தி ஏசுநாதரும்
    கழுத்தறுக்கும் கொடுமைகண்டு
    திருந்தவழி சொன்னதும் உண்டு
    காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க - ஆனா
    கறிக்கடையின் கணக்கைப் பெருக்கி வந்தாங்க (இரை)

    [ பதிபக்தி,1958 ]

8.9 வெறும் பேச்சு!

    தர்மமென்பார் நீதி என்பார்
    தரமென்பார்
    சரித்திரத்துச் சான்று சொல்வார்
    தாயன்புப் பெட்டகத்தைச்
    சந்தியிலே எறிந்துவிட்டுச்
    ;தன்மான வீரரென்பார்
    மர்மமாய்ச் சதிபுரிவார்
    வாய்பேசா அபலைகளின்
    வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
    கர்மவினை யென்பார்
    பிரமனெழுத் தென்பார்
    கடவுள்மேல் குற்றமென்பார்

    இந்தத்-
    திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
    கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம்
    ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
    எந்நாளும் உலகில் ஏமாற்றும் விழிகள்
    இல்லாத நன்னாளை உண்டாக்கணும் - இந்த (திண்ணை)

    பொதுநலம் பேசும் புண்யவான்களின்
    போக்கினில் அனேக வித்தியாசம் ;
    புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
    புவியை மயக்கும் வெளிவேஷம் - அந்தப்
    பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
    நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் - இந்த (திண்ணை)

    கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
    கவைக்குதவாத வெறும் பேச்சு
    கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
    கருதவேண்டியதை மறந்தாச்சு - பழங்
    கதைகளைப் பேசி காலம் வீணாச்சு ;
    கையாலே முன்னேற்றம் கண்டாகணும் - இந்த (திண்ணை)

    நாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்க
    நல்லவங்க கெட்டவங்க நம்பமுடியாதவங்க
    பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
    பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
    படிப்பவங்க வீடு புடிப்பவங்க
    பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க

    இன்னும்-
    பொம்பளைங்க ஆம்பளைங்க
    அத்தனை பேரையும் வச்சு மாடா இழுக்கிறோம் வேகமா
    நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
    வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
    உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் - இந்த (திண்ணை)

    [ பதிபக்தி,1958 ]

8.10 துணிச்சல்

    ஒரு குறையும் செய்யாமே
    ஒலகத்திலே யாருமில்லே - அப்படி
    உத்தமனாய் வாழ்ந்தவனை - இந்த ஒலகம்
    ஒதைக்காம விட்டதில்லை....

    இருக்கும் பொழுதை ரசிக்கணும் - அட
    இன்பமாய் கழிக்கணும்
    எதிலும் துணிஞ்சு இறங்ணும் - நீ
    ஏங்கி எதுக்குத் துடிக்கணும்? (இருக்)

    நாளை நாளை என்று பொன்னான
    நாளைக் கெடுப்பவன் குருடன்
    நடந்து போனதை நெனச்சு ஒடம்பு
    நலிஞ்சு போறவன் மடையன் - சுத்த மடையன்
    நம்மைப்போல கெடச்சதைத் தின்னு
    நெனத்ததைச் செய்யிறவன் மனுஷன் (இருக்)

    ஆடி ஓடி பொருளைத் தேடி......
    அவனும் திங்காம பதுக்கி வைப்பான்....
    அதிலே இதிலே பணத்தைச் சேத்து
    வெளியிடப் பயந்து மறச்சுவைப்பான் ;
    அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
    ஆருக்கும் சொல்லாம பொதைச்சு வைப்பான் ;
    ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
    அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான் - ஆமா
    பொதச்சு வைப்பான் (இருக்)

    நல்ல வழியிலே வாழ நெனச்சு
    நாயா அலையாதே - அது இந்த
    நாளிலே முடியாதே
    நரியைப் போலே எலியைப் போலே
    நடக்கத் தெரிஞ்சுக்கணும் - தம்பி
    உடம்பு அழுக்கு ; உடையும் அழுக்கு!
    உள்ளம் அழுக்குங்க - அதுலேதான்
    உலகம் கிடக்குங்க - இது
    உமக்கும் எமக்கும் கழுதைக்கும் தெரியும்
    ஒண்ணும் சுத்தமில்லை - உள்ளதைச்
    சொன்னா குத்தமில்லை (இருக்)

    [ கண் திறந்தது,1959 ]

8.11 துன்பத்தை மிதி!

    விதியென்னும் குழந்தை கையில்
    உலகந்தன்னை
    விளையாடக் கொடுத்துவிட்டாள்
    இயற்கையன்னை - அது
    விட்டெறியும் உருட்டிவிடும்
    மனிதர் வாழ்வை
    மேல் கீழாய்ப் புரட்டிவிடும்
    வியந்திடாதே
    மதியுண்டு கற்புடைய
    மனைவியுண்டு
    வலிமையுண்டு வெற்றி தரும்
    வருந்திடாதே
    எதிர்த்து வரும் துன்பத்தை
    மிதிக்கும் தன்மை
    எய்திவிட்டால் காண்பதெல்லாம்
    இன்பமப்பா

    [ தங்கப் பதுமை,1959 ]

8.12 பொறுமை பொங்கினால்!

    ஏனென்று கேட்கவே
    ஆளில்லை என்பதாலே
    தானென்ற அகங்காரம்
    தலைவிரித்து ஆடுதடா
    ஊனுருக ஏழைகளின்
    உள்ளமெல்லாம் புண்ணாக
    உயிரோடு கொல்பவனைக் - காலம்
    உயர்வாய் மதிக்குதடா!

    பொறுமை ஒருநாள்
    பொங்கி எழுந்தால்
    பூமி நடுங்குமடா
    கொடுமை புரியும் பாதகனை - அவன்
    குறைகள் விழுங்குமடா!
    காலையாகி மதியமாகி
    மாலையானது பலபொழுது,
    மாலையாகி பகலும் முடிந்து
    இருளும் போனது பல இரவு
    ஞாலம் முழுவதுமே ஆள்கின்ற கதிரோன்
    வாழ்வெல்லாம் ஒரு நாள் வாழ்வென்றதால்
    தினம் தீராத வெறியோடு போராடும் மனிதன்
    பேராசை நிலைதன்னை என்னவென்று சொல்வேன்! (பொறுமை)

    மானம் என்றே மங்கை அழுதால்
    இன்பமென்றே நகைப் பானே
    பால வயதில் செய்த வினையை
    வாழ்வு முடிவில் நினைப்பானே!
    தானாகச் சிரிப்பான் தானாக அழுவான்
    காணாத கனவும் காண்பானே - அவன்
    ஆனந்த வாழ்வென்று ஈனங்கள் தேடித்
    கூனாகி ஊனாகிக் கூடாகிப் போவானே! (பொறுமை)

    [ இரத்தினபுரி இளவரசி, 1959 ]

8.13 கற்பின் விலை

    கல்லால் இதயம் வைத்து
    கடும் விஷத்தால் கண்ணமைத்து
    கணக்கில்லாப் பொய்களுக்குக்
    காரணமாய் நாக்கமைத்துக்
    கள்ள உருவமைத்துக்
    கன்னக்கோல் கையமைத்து
    நல்லவரென்றே சிலரை - உலகம்
    நடமாட விட்டதடா!

    காதலுக்கு நாலுகண்கள்
    கள்வனுக்கு ரெண்டு கண்கள்
    காமுகரின் உருவத்திலே
    கண்ணுமில்லை காதுமில்லை (காதலுக்கு)

    நீதியின் எதிரிகளாய்
    நிலைமாறித் திரிபவர்கள்
    பாதையில் நடப்பதில்லை
    பரமனையும் மதிப்பதில்லை
    பாதகம் கொஞ்சமில்லை
    பண்புமில்லை முறையுமில்லை
    பேதைப்பெண்கள் இதைப்
    பெரும்பாலும் உணர்வதில்லை (காதலுக்கு)

    பேதம் இல்லை என்பார்
    வேதாந்தம் பேசிடுவார்
    பெற்றவளைப் பேயென்பார்
    மற்றவளைத் தாயென்பார்
    காதல் அறம் என்பார்
    கற்பின் விலை என்னவென்பார்
    கண்மூடி மாந்தர் இதை
    கடைசிவரை அறிவதில்லை (காதலுக்கு)

    [இரத்தினபுரி இளவரசி,1959 ]

8.14 வெற்றி எங்கள் கையிலே

    இருவர் : ஆட்டம் ஆட்டம் ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
    ஆட்டத்திலே பல வகையுண்டு - அதில்
    கூட்டத்திலே சொல்லும்படி சிலதுமுண்டு (ஆட்ட)

    பெண் : சிறகை விரித்தால் மயிலாட்டம்
    சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம்
    ஆண் : சீறிப் பாய்ந்தால் புலியாட்டம்
    தரையில் மறைந்தால் நிழலாட்டம்
    பெண் : கோஷ்டிகள் சேர்ந்தால் வாதாட்டம்
    குழப்பம் வந்தால் போராட்டம்
    ஆண் : சேஷ்டைகள் மிகுந்தால் குரங்காட்டம்
    திருடர்கள் ஆட்டம் நரியாட்டம்
    இருவர் : ஆட்டத்திலே
    ஆண் : வெற்றி எங்கள் கையிலே
    வெள்ளிப்பணம் பையிலே
    வேடிக்கை தேவையில்லை ரெடியா
    பெண் : சக்தி எங்கள் கையிலே
    சகலமும் பையிலே தாமதம் தேவையில்லை ரெடியா

    குழு : சக்தி
    ஆண் : ஒன் டூ த்ரீ
    ஆண் : வெற்றி
    பெண் : சக்தி
    குழு : சக்தி
    ஆண் : ஒன் டூ த்ரீ ஃபோர் பைவ்

    [ பாகப்பிரிவினை,1959 ]

8.15 சோம்பல் ஒழிக

    ஆண் : அண்ணாச்சி வந்தாச்சி
    அறிவு தௌிஞ்சாச்சு? - ஓ மீனாச்சி
    குப்பே கொறஞ்சாச்சி
    சுத்தம் பொறந்தாச்சடி (அண்ணா)

    பெண் : அண்ணாச்சி வந்தாலும்
    ஆயிரம் சொன்னாலும் - ஓ மாமா
    துன்பந்தான் போகாமே
    சுத்தந்தான் உண்டாகுமா? - எல்லாம்
    அண்ணாச்சி எண்ணம்போல் நடந்திடுமா? - அறிவு
    அவ்வளவு சீக்கிரம் தௌிஞ்சிடுமா? - ஒரு
    கருத்தும் புரியாமே படிப்பும் வளராமே
    திருந்து திருந்துண்ணா திருந்திடுமா?

    ஆண் : அடி-இருக்கும் பொருளே சுத்தமாவச்சிக்கே
    இங்கிலீசு படிக்க வேணுமா?
    அடிக்கடி குளிக்கவும் அழுக்கைத் தொலைக்கவும்
    அஞ்சாறு வருஷங்களாகுமா - நம்ப (அண்ணா)

    பெண் : பல-சேலையுள்ள சீமாட்டி
    தினம் ஒன்னாகக் கட்டிடலாம்
    ஏழையென்ன செய்யுறது மாமா?

    ஆண் : அடி-
    கந்தைத்துணி ஆனாலும்
    கசக்கித்தான் கட்டிக்கிட்டா
    பஞ்சைக்கொரு காலம் வரும் போடி

    பெண் : ஆகா-
    இந்நிலை மாறுமா மாமா - நீ
    என்மேலே பாயாதே கோவமா?

    ஆண் : ஆகா-
    சந்தேகம் வேணாண்டி மீனாச்சி - இது
    சரியாப் போகாட்டி நானாச்சி

    பெண் : ஆகா-மாமா அழகாய்ப் பேசுறே

    ஆண் : ஓகோ-மீனாச்சி நீயா சொல்லுறே

    இருவர் : நம்மை இறுக்கிப் பிடிச்சிருந்த மூடத்தனம்

    குழு : ஒழிக!

    இருவர் : ஏமாளி ஆக்கிவைச்ச கோழைத்தனம்

    குழு : ஒழிக!

    இருவர் : சுருண்டு படுத்திருந்த சோம்பல்

    குழு : ஒழிக!

    இருவர் : துணியில் படிஞ்சிருந்த சாம்பல்

    குழு : ஒழிக!

    இருவர் : போகாத பீடைகளும் பூச்ச்சிவரும்
    பாதைகளும் தீராத போதைகளும் சேர்ந்து (அண்ணா)

    குழு : ஒழிக!
    விடிஞ்செழுந்து வீடு மொழுகி
    விறுவிறுப்பா வேலை முடிச்சி
    எல்லோரும் புது உல்லாசமுடன்
    ஒன்னா நீந்திடுவோமே (விடிஞ்செழுந்து)

    ஒருத்தி : மாரியக்கா மாரியக்கா
    மஞ்சப் புடிச்சிருக்கா - எம் முகத்திலே
    மஞ்சப் புடிச்சிருக்கா?

    பெண் : மரிக்கொழுந்து மரிக்கொழுந்து - உன்
    மச்சானைக் கேட்டாத் தெரியுமடி - புது
    வடிவும் அழகும் வடியுமடி - அதில்
    புரியா விஷயமும் புரியும் (விடிஞ்செழுந்து)

    [ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, 1960 ]

8.16 ஒற்றுமை

    பெண் : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

    ஆண் : ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு (ஒன்றுபட்டால்)

    இருவர் : உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
    ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் (ஒன்றுபட்டால்)

    பெண் : ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும்
    தேதியில் தோன்றும் பொறுமை

    ஆண் : சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்
    தாரணியில் அது புதுமை

    இருவர் : உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால்
    ஓடி மறைந்திடும் மடமை (ஒன்றுபட்டால்)

    பெண் : நேசமும் அன்பும் நிலையாக வேண்டும்
    நேர்வழி வேண்டும் உறவில்

    ஆண் : பேசிடும் அன்பும் செயல் முறையானால்
    பேரின்பம் வேறெது உலகில்

    இருவர் : காணா வளமும் மாறாத நலமும்
    கண்டிடலாம் அன்பு நினைவில் (ஒன்றுபட்டால்)


    [ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, 1960 ]

8.17 நிழலும் வெயிலும்

    நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்
    வாழ்க்கை இதுதானோ? - எதிர்
    பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப்
    பாடம் இது தானோ? ( நீ கேட்ட )

    பேசிப் பேசிப் பலநாள் பேசி
    நேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே
    ஆசைக் கனியாய் ஆகும் போது
    அன்பை இழந்தால் லாபம் ஏது? ( நீ கேட்ட )

    துன்ப நரகில் சுழலும் உலகம்
    துண்டு துண்டாய் உடைந்து அதிலே
    இன்ப மென்றோர் உலகம் தோன்றி
    ஏழைத் துயரைத் தீர்த்திடாதோ? ( நீ கேட்ட )

    [ ஆளுக்கொரு வீடு,1960 ]

8.18 ஆரம்பமும் முடிவும்!

    ஈடற்ற பத்தினியின்
    இன்பத்தைக் கொன்றவன் நான் - அவள்
    இதயத்தில் கொந்தளித்த
    எண்ணத்தைக் கொன்றவன் நான்

    வாழத் தகுந்தவளை
    வாழாமல் வைத்து விட்டு
    பாழும் பரத்தையினால்
    பண்பதனைக் கொன்றவன் நான்

    அந்தக் கொள்கைக்கே
    ஆளாய் இருந்துவிட்டேன் - இனி
    எந்தக் கொலை செய்தாலும்
    என்னடி என் ஞானப்பெண்ணே

    மனிதன்-

    ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே - அவன்
    ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
    ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
    ஆத்திரங்கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே (ஆரம்ப)

    அன்பைக் கெடுத்து - நல்
    ஆசையைக் கொன்றவன்
    அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே
    துன்பத்தைக் கட்டிச்
    சுமக்கத் துணிந்தவன்
    சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே? (ஆரம்ப)

    தவறுக்கும் தவறான
    தவறைப் புரிந்துவிட்டுத்
    தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
    பதறி பதறி நின்று
    கதறிப் புலம்பினாலும்
    பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே? (ஆரம்ப)

    கண்ணைக் கொடுத்தவனே
    பறித்துக்கொண்டாண்டி - மானே
    வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி (கண்ணை)

    பொருத்தமான துணையிருந்தும்
    பொங்கிவரும் அழகிருந்தும்
    போனபக்கம் போகவிட்டேன் பார்வையை - அவன்
    பொறுத்திருந்தே புரிந்துகொண்டேன் வேலையை (கண்ணை)

    அவன்-
    எதிரில் வந்து கெடுக்கவில்லை
    இதயமிடம் கொடுக்கவில்லை
    எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை - அது
    என்தலையில் போட்டதடி பழியை (கொடுத்த)

    சிங்காரம் கெட்டுச்
    சிறைப்பட்ட பாவிக்குச்
    சம்ஸாரம் ஏதுக்கடி - என்தங்கம்
    சம்ஸாரம் ஏதுக்கடி

    மனைவியைக் குழந்தையை
    மறந்து திரிந்தவனை
    வாழ்த்துவ தாகாதடி - என் தங்கம்
    மன்னிக்கக் கூடாதடி (சிங்காரம்)
    [ தங்கப் பதுமை,1959 ]

8.19 ஒன்றிருந்தால் ஒன்றில்லை

    எல்லோரும் நம்பும்படி
    சொல்லும் திறனிருந்தால்
    சொல்லிலே உண்மை இல்லை
    உள்ளதை உள்ளபடி
    சொல்லும் மனிதனிடம்
    உணர்ந்திடும் திறமையில்லை
    உண்மையும் நம்பவைக்கும்
    திறனும் அமைந்திருந்தால்
    உலகம் அதை ஏற்பதில்லை
    அது இருந்தால் இது இல்லை
    இது இருந்தால் அது இல்லை
    அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்
    அவனுக்கிங்கே இடமில்லை (அது-இரு)

    அங்கமதில் மங்கையர்க்கு
    அழகிருந்தால் அறிவில்லை
    ஆராய்ந்து முடிவு செய்யும்
    அறிவிருந்தால் அழகில்லை
    அழகும் அறிவும் அமைந்த பெண்கள்
    அதிசயமாய்ப் பிறந்தாலும்
    குறுகு மனம் கொண்டவர்கள்
    குலைக்காமல் விடுவதில்லை (அது-இரு)

    பள்ளி செல்லும் மாணவர்க்குப்
    படிப்பு வந்தால் பணமில்லை
    பணமிருந்தால் இளைஞருக்குப்
    படிப்பதிலே மனமில்லை;
    மனமிருந்து படிப்பு வந்து
    பரீட்சையிலும் தேறி விட்டால்
    பலபடிகள் ஏறி இறங்கிப்
    பார்த்தாலும் வேலையில்லை (அது-இரு)

    பொதுப்பணியில் செலவழிக்க
    நினைக்கும்போது பொருளில்லை
    பொருளும் புகழும் சேர்ந்தபின்னே
    பொதுப்பணியில் நினைவில்லை
    போதுமான பொருளும் வந்து
    பொதுப்பணியில் நினைவும் வந்தால்
    போட்ட திட்டம் நிறைவேறக்
    கூட்டாளிகள் சரியில்லை (அது-இரு)

    [ நல்ல தீர்ப்பு,1959 ]

8.20 தேன் கலசம்

    கண்ணாடிப் பாத்திரத்தில்
    கல்லெறிபட்டது போல் - என்
    எண்ணமெனும் தேன்கலசம்
    உண்ணாமல் உடைந்திடுமோ - இன்பக்
    காவியம் பொய்தானோ? - கொண்ட
    காதலும் பொய்தானா? - என்
    ஆசைகள் வீண்தானா? - இனி
    அமைதியும் காண்பேனா? (இன்ப)

    இது
    காலத்தின் செயல்தானா? - சுகம்
    கானல் நீர் தானா?
    மன நம்பிக்கை வீண்தானா? - நான்
    வெம்பிய காய்தனா? (இன்ப)

    இருள் மூடிய வான்போலே
    கரை ஏறிய மீன்போலே
    துயர்மீறிடும் நிலையாலே
    படும்வேதனை தீராதோ? - ஒரு
    பாதையும் தோணாதோ? (இன்ப)

    [ புனர் ஜென்மம்,1961 ]

8.21 எது வேண்டும்?

    உருண்டோடும் நாளில்
    கரைந்தோடும் வாழ்வில்
    ஒளி வேண்டுமா?
    இருள் வேண்டுமா? (உருண்டோடும்)

    திருந்தாத தேகம்
    இருந்தென்ன லாபம்
    இது போதுமா?
    இன்னும் வேண்டுமா?
    ஓய்...ஓய்...ஓய் (உருண்டோடும்)

    விரும்பாத போதும்
    விருந்தாக மேவும்
    குணம் வேண்டுமா?
    விஷம் வேண்டுமா? (உருண்டோடும்)

    [ புனர் ஜென்மம்,1961 ]

8.22 நிலையில்லா உலகம்!

  • பிஞ்சு மனதில் பிரியம் வளர்த்து
    மஞ்சள் அழகும் மணமும் கொடுத்து
    வஞ்சம் தீர்க்கும் எதிரி போலே
    மனிதரை விதியும் வாட்டுதே

    கோடி கோடி உயிர்கள் வந்து
    ஓடி ஓடிப் போகுதே
    கொண்டிருந்த ஆசையெல்லாம்
    துண்டு துண்டாய் ஆகுதே...(கோடி கோடி)

    கண்ணைமூடி திறக்குமுன்னே
    காட்சி வேறாய் மாறுதே
    கணக்கில்லாத வேகத்தோடு
    காலரதமும் ஓடுதே.... (கோடி கோடி)

    ஒளியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தால்
    உடனே இருளும் மூடுதே
    ஒளியினாலே விரிந்த மலர்கள்
    ஒளியால் உதிர்ந்து வாடுதே
    ஒளியால் உதிர்ந்து வாடுதே
    ஒளியால் உதிர்ந்து வாடுதே... (கோடி கோடி)

    [ எல்லோரும் இந்நாட்டு மன்னர் ]


 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home