Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > நளவெண்பா - புகழேந்திப் புலவர்


 
புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பா
naLaveNpA by pukaZenthip pulavar


Text Input: Mr. Sivalingam Ramalingam (Uthayanan)  Proof-reading: Mr. Ilango Meyyappan © Project Madurai 1999. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided thisheader page is kept intact.

பாயிரம்

கடவுள் வணக்கம்

1. ஆதித் தனிக்கோல மானா னடியவற்காச்
சோதித் திருத்தூணிற் றோன்றினான் - வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலே யெனவழைப்ப
என்னென்றா னெங்கட் கிறை.

அவையடக்கம்

2. வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின்
தந்துவினாற் கட்டச் சமைவதொக்கும் - பைந்தொடையில்
தேன்பாடுந் தார் நளன்றன் தெய்வத் திருக்கதையை
யான்பாட லுற்ற இது.

நூல் வரலாறு
-----------
யுதிட்டிரர் வனத்தில் இருந்தது

3. பாண்டவரின் முன்தோன்றல் பார்முழுதுந் தோற்றொருநாள்
ஆண்டகையே தூதுவனாய்ச் சென்றவனி - வேண்ட
மறுத்தா னிருந்தானை மண்ணொடும் போய் மாளப்
பொறுத்தா னிருந்தான் புலர்ந்து.

யுதிட்டிரரை மன்னர் பலர் சென்று கண்டது

4. நாட்டின்கண் வாழ்வைத் துறந்துபோய் நான்மறையோர்
ஈட்டங்கள் சூழ விருந்தானைக் - காட்டில்
பெருந்தகையைக் கண்டார்கள் பேரெழிற்றோள் வேந்தர்
வருந்தகையா ரெல்லோரும் வந்து.

யுதிட்டிரரிடம் பிரகதசுவர் என்னும் முனிவர் வந்தது

5. கொற்றவேல் தானைக் குருநாடன் பாலணைந்தான்
எற்றுநீர் ஞாலத் திருள்நீங்க - முற்றும்
வழிமுறையே வந்த மறையெல்லாந் தந்தான்
மொழிமுறையே கோத்த முனி.

6. மறைமுதல்வ நீயிங்கே வந்தருளப் பெற்றேன்
பிறவிப் பெருந்துயர மெல்லாம் - அறவே
பிழைத்தேன்யா னென்றானப் பேராழி யானை
அழைத்தேவல் கொண்ட அரசு.

7. மெய்த்திருவந் துற்றாலும் வெய்ந்துயர்வந் துற்றாலும்
ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே - சித்தம்
வருந்தியவா என்னென்றான் மாமறையா லுள்ளம்
திருந்தியவா மெய்த்தவத்தோன் தேர்ந்து.

8. அம்பொற் கயிலைக்கே யாகத் தரவணிவார்
தம்பொற் படைக்குத் தமியனா - எம்பியைமுன்
போக்கினே னென்றுரைத்தான் பூதலத்தும் மீதலத்தும்
வாக்கினே ரில்லாத மன்.

9. காண்டா வனந்தீக் கடவுளுணக் கைக்கணையால்
நீண்ட முகில்தடுத்து நின்றாற்கு - மீண்டமரர்
தாளிரண்டும் நோவத் தனித்தனியே ஓடியநாள்
தோளிரண்டு மன்றோ துணை.

10. பேரரசு மெங்கள் பெருந்திருவுங் கைவிட்டுச்
சேர்வரிய வெங்கானஞ் சேர்தற்குக் - காரணந்தான்
யாதோவப் பாவென்றா னென்றுந்தன் வெண்குடைக்கீழ்
தீதோவப் பார்காத்த சேய்.

11. கேடில் விழுச்செல்வங் கேடெய்து சூதாடல்
ஏடவிழ்தார் மன்னர்க் கியல்பேகாண் - வாடிக்
கலங்கலைநீ யென்றுரைத்தான் காமருவு நாடற்
கிலங்கலைநூன் மார்ப னெடுத்து.

12. கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூன்மார்பா மேதினியில் வேறுண்டோ
என்போ லுழந்தா ரிடர்.

முனிவர் நளசரிதம் கூறுதல்

13. சேமவேன் மன்னற்குச் செப்புவான் செந்தனிக்கோல்

நாமவேற் காளை நளனென்பான் - யாமத்
தொலியாழி வைய மொருங்கிழப்பப் பண்டு
கலியால் விளைந்த கதை.

1. சுயம்வர காண்டம்
-----------------
நிடதநாட்டுச் சிறப்பு

14. காமர் கயல்புரழக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் றளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலுந் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு.

மாவிந்தநகர்ச் சிறப்பு

15, கோதை மடவார்தங் கொங்கை மிசைத்திமிர்ந்த
சீத களபச் செழுஞ்சேற்றால் - வீதிவாய்
மானக் கரிவழுக்கும் மாவிந்த மென்பதோர்

ஞானக் கலைவாழ் நகர்.

16. நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை
என்று மகிழ்கமழு மென்பரால் - தென்றல்
அலர்த்துங் கொடிமாடத் தாயிழையா ரைம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து.

17. வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்சம்
கலங்குவன மாளிகைமேற் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.

18. தெரிவனநூ லென்றுந் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவு மிரவே யிகழ்ந்தெவரும்
கல்லா தனவுங் கரவு.

19. மாமனுநூல் வாழ வருசந் திரன்சுவர்க்கி
தாமரையாள் வைகுந் தடந்தோளான் - காமருபூந்
தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்
பாராளும் வேந்தன் பதி.

அந்நாட்டு மன்னன் நளன் சிறப்பு

20. ஓடாத தானை நளனென் றுளனொருவன்
பீடாருஞ் செல்வப் பெடைவண்டோ - டூடா
முருகுடைய மாதர் முலைநனைக்குந் தண்தார்
அருகுடையான் வெண்குடையா னாங்கு.

21. சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும்
ஒருகூட்டில் வாழ வுலகு.

நளன் பூஞ்சோலை சென்றமை

22. வாங்குவளைக் கையார் வதன மதிபூத்த
பூங்குவளைக் காட்டிடையே போயினான் - தேங்குவளைத்
தேனாடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாடன்
பூனாடிச் சோலை புக.

23. வென்றி மதவேடன் வில்லெடுப்ப வீதியெலாம்
தென்றல் மதுநீர் தெளித்துவர - நின்ற
தளவேனல் மீதலருந் தாழ்வரைசூழ் நாடற்கு
இளவேனில் வந்த தெதிர்.

24. தேரின் துகளைத் திருந்திழையார் பூங்குழலின்
வேரின் புனல்நனைப்ப வேயடைந்தான் - கார்வண்டு
தொக்கிருந்தா லித்துழலுந் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப்
புக்கிருந்தா லன்ன பொழில்.

சோலையில் அன்னப்புள் வந்ததும், அதனை மங்கையர் பற்றி அரசன்முன் வைத்தலும்

25. நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன்
தாணிறத்தாற் பொய்கைத் தலஞ்சிவப்ப - மாணிறத்தான்
முன்னப்புள் தோன்றும் முளரித் தலைவைகும்
அன்னப்புள் தோன்றிற்றே யாங்கு.

26. பேதை மடவன்னந் தன்னைப் பிழையாமல்
மேதிக் குலவேறி மென்கரும்பைக் - கோதிக்
கடித்துத்தான் முத்துமிழுங் கங்கைநீர் நாடன்
பிடித்துத்தா வென்றான் பெயர்ந்து.

27. நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம்
ஓடி வளைக்கின்ற தொப்பவே - நீடியநல்
பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து
தன்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து.

28. அன்னந் தனைப்பிடித்தங் காயிழையார் கொண்டுபோய்
மன்னன் திருமுன்னர் வைத்தலுமே - அன்னம்
மலங்கிற்றே தன்னுடைய வான்கிளையைத் தேடிக்
கலங்கிற்றே மன்னவனைக் கண்டு.

29. அஞ்சல் மடவனமே உன்றன் னணிநடையும்
வஞ்சி யனையார் மணிநடையும் - விஞ்சியது
காணப் பிடித்ததுகா ணென்றான் களிவண்டு
மாணப் பிடித்ததார் மன்.

30. செய்ய கமலத் திருவை நிகரான
தையல் பிடித்த தனியன்னம் - வெய்ய
அடுமாற்ற மில்லா அரசன்சொற் கேட்டுத்
தடுமாற்றந் தீர்ந்ததே தான்.

அன்னம் தமயந்தியின் சிறப்புரைத்தமை

31. திசைமுகந்த வெண்கவிதைத் தேர்வேந்தே! உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள் - வசையில்
தமையந்தி யென்றோதுந் தையலாள் மென்றோள்
அமையந்தி யென்றோ ரணங்கு.

32. அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச் - சொன்னமயில்
ஆர்மடந்தை யென்றா னனங்கன் சிலைவளைப்பப்
பார்மடந்தை கோமான் பதைத்து.

33. எழுவடுதோள் மன்னா இலங்கிழையோர் தூண்டக்
கொழுநுதியிற் சாய்ந்த குவளை - உழுநர்
மடைமிதிப்பத் தேன்பாயும் மாடொலிநீர் நாடன்
கொடைவிதர்ப்பன் பெற்றதோர் கொம்பு.

34. நாற்குணமும் நாற்படையா வைம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்குஞ் சிலம்பே யணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை யரசு.

35. மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு - நாட்டேன்
அலம்புவார் கோதை யடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு.

36. என்றும் நுடங்கு மிடையென்ப வேழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே - ஒன்றி
அறுகாற் சிறுபறவை யஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து.

37. செந்தேன் மொழியாள் செறியளக பந்தியின்கீழ்
இந்து முறியென் றியம்புவார் - வந்தென்றும்
பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி
ஏவாளி தீட்டும் இடம்.

நளன் தமயந்திபால் காதல் கொண்டது

38. அன்னமே நீயுரைத்த அன்னத்தை யென்னாவி
உன்னவே சோரு முனக்கவளோ - டென்ன
அடைவென்றான் மற்றந்த அன்னமதை முன்னே
நடைவென்றாள் தன்பால் நயந்து.

39. பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமள்தான்
மாமனைவாய் வாழும் மயிற்குலங்கட் - காமன்
படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள்பாத
நடைகற்பான் வந்தடைந்தே யாம்.

40. இற்றது நெஞ்ச மெழுந்த திருங்காதல்
அற்றது மான மழிந்ததுநாண் - மற்றினியுன்
வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான் வெங்காமத்
தீயுடைய நெஞ்சுடையான் தேர்ந்து.

அன்னம் நளனுக்கு ஆறுதல் கூறித் தமயந்திபால் சென்றது

41. வீமன் திருமடந்தை மென்முலையை யுன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் - சேம
நெடுங்குடையா யென்றுரைத்து நீங்கியதே யன்னம்
ஒடுங்கிடையாள் தன்பா லுயர்ந்து.

நளனது விரக தாபம்

42. இவ்வளவிற் செல்லுங்கொ லிவ்வளவிற் காணுங்கொல்
இவ்வளவிற் காத லியம்புங்கொல் - இவ்வளவில்
மீளுங்கொ லென்றுரையா விம்மினான் மும்மதம்நின்
றாளுங்கொல் யானை யரசு.

43. சேவல் குயிற்பெடைக்குப் பேசுஞ் சிறுகுரல்கேட்
டாவி யுருகி யழிந்திட்டான் - பூவின்
இடையன்னஞ் செங்கா லிளவன்னஞ் சொன்ன
நடையன்னந் தன்பா னயந்து.

44. அன்ன முரைத்த குயிலுக் கலசுவான்
மென்மயில்தான் தோகை விரித்தாட - முன்னதனைக்
கண்டாற்றா துள்ளங் கலங்கினான் காமநோய்
கொண்டார்க்கிஃ தன்றோ குணம்.

45. வாரணியுங் கொங்கை மடவார் நுடங்கிடைக்குப்
பேருவமை யாகப் பிறந்துடையீர் - வாரீர்
கொடியா ரெனச்செங்கை கூப்பினான நெஞ்சம்
துடியா நெடிதுயிரரச் சோர்ந்து.

தமயந்தி அன்னத்தை நோக்கி வினாவியது

46. மன்னன் விடுத்த வடிவிற் றிகழ்கின்ற
அன்னம்போய்க் கன்னி யருகணைய - நன்னுதலும்
தன்னாடல் விட்டுத் தனியிடஞ்சேர்ந் தாங்கதனை
என்னாடல் சொல்லென்றா ளீங்கு.

அன்னம் நளன் சிறப்புரைத்தல்

47. செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்
தம்மனத்தை வாங்குந் தடந்தோளான் - மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளனென்பான் வேந்த னுனக்கு.

48. அறங்கிடந்த நெஞ்சு மருளொழுகு கண்ணும்
மறங்கிடந்த திண்டோ ள் வலியும் - நிலங்கிடந்த
செங்கண்மா லல்லனேல் தேர்வேந்த ரொப்பரோ
அங்கண்மா ஞாலத் தவற்கு.

தமயந்தி நளன்பால் கொண்ட காதற்றிறம்

49. புள்ளின் மொழியினொடு பூவாளி தன்னுடைய
உள்ளங் கவர வொளியிழந்த - வெள்ளை
மதியிருந்த தாமென்ன வாய்ந்திருந்தாள் வண்டின்
பொதியிருந்த மெல்லோதிப் பொன்.

50. மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும்
அன்ன முரைக்க வகமுருகி - முன்னம்
முயங்கினாள் போல்தன் முலைமுகத்தைப் பாரா
மயங்கினா ளென்செய்வாள் மற்று.

51. வாவி யுறையும் மடவனமே யென்னுடைய
ஆவி யுவந்தளித்தா யாதியால் - காவினிடைத்
தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி யென்றுரைத்தாள்
பார்வேந்தன் பாவை பதைத்து.

தோழியர் தமயந்தியின் நிலை வேறுபாட்டைத் தாய்க்குரைக்க அவள் அரசனுக்கு அறிவித்தது

52. கொற்றவன்தன் தேவிக்குக் கோமகந்தன் தோழியர்கள்
உற்ற தறியா வுளநடுங்கிப் - பொற்றொடிக்கு
வேறுபா டுண்டென்றார் வேந்தனுக்கு மற்றதனைக்
கூறினாள் பெற்ற கொடி.

வீமராசன் தமயந்தி மாளிகைக்கு வந்தது

53. கருங்குழலார் செங்கையினால் வெண்கவரிப் பைங்கால்
மருங்குலவ வார்முரசம் ஆர்ப்ப - நெருங்கு
பரிவளை நின்றேங்கப் போய்ப்புக்கான் பெற்ற
வரிவளைக்கை நல்லாள் மனை.

தமயந்தி தந்தையை வணங்கியது

54. கோதை சுமந்த கொடிபோ லிடைநுடங்கத்
தாதை திருவடிமேல் தான்வீழ்ந்தாள் - மீதெல்லாம்
காந்தாரம் பாடிக் களிவண்டு நின்றரற்றும்
பூந்தாரம் மெல்லோதிப் பொன்.

வீமன் தமயந்திக்குச் சுயம்வரம் ஏற்படுத்தியது

55. பேரழகு சோர்கின்ற தென்னப் பிறைநுதன்மேல்
நீரரும்பத் தன்பேதை நின்றாளைப் - பாராக்
குலவேந்தன் சிந்தித்தான் கோவேந்தர் தம்மை
மலர்வேய்ந்து கொள்ளும் மணம்.

56. மங்கை சுயம்வரநாள் ஏழென்று வார்முரசம்
எங்கும் அறைகென் றியம்பினான் - பைங்கமுகின்
கூந்தன்மேற் கங்கைக் கொழுந்எதாடும் நன்னாடன்
வேந்தர்மேல் தூதோட விட்டு.

சுயம்வரத்திற்கு அரசர்களின் வருகை

57. மாமுத்த வெண்குடையான் மால்களிற்றான் வண்டிசைக்கும்
தாமத் தரிச்சந் திரன்சுவர்க்கி - நாமத்தால்
பாவேய்ந்த செந்தமிழா மென்னப் பரந்ததே
கோவேந்தர் செல்வக் குழாம்.

58. புள்ளுறையுஞ் சோலைகளும் பூங்கமல வாவிகளும்
உள்ளும் புறமு மினிதுறைந்தார் - தெள்ளரிக்கண்
பூமகளைப் பொன்னைப் பொருவேல் விதர்ப்பன்றன்
கோமகளைத் தம்மனத்தே கொண்டு.

நளன் அன்னம் திரும்பிவரக் கண்டது
59. வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாம
மொழிமேற் செவிவைத்து மோகச் - சுழிமேல்தா
நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்
மஞ்சோட அன்னம் வர.

60. முகம்பார்த் தருள்நோக்கி முன்னிரந்து செல்வர்
அகம்பார்க்கு மற்றாரைப் போல - மிகுங்காதல்
கேளா விருந்திட்டா னன்னத்தைக் கேளாரை
வாளால் விருந்திட்ட மன்.

நளனது வினாவும் அன்னத்தின் மறுமொழியும்

61. அன்னக் குலத்தி னரசே அழிகின்ற
என்னுயிரை மீள வெனக்களித்தாய் - முன்னுரைத்த
தேமொழிக்குத் தீதிலவே யென்றான் திருந்தாரை
ஏமொழிக்கும் வேலா னெடுத்து.

62. கொற்றவன்ற னேவலினாற் போயக் குலக்கொடிபால்
உற்றதும் ஆங்கவள்தான் உற்றதுவும் - முற்றும்
மொழிந்ததே அன்னம் மொழிகேட் டரசற்
கழிந்ததே யுள்ள அறிவு.

நளனது காதல் நோய் நிலை

63. கேட்ட செவிவழியே கேளா துணர்வோட
ஓட்டை மனத்தோ டுயிர்தாங்கி - மீட்டும்
குழியிற் படுகரிபோற் கோமான் கிடந்தான்
தழலிற் படுதளிர்போற் சாய்ந்து.

வீமராசன் விடுத்த தூதர் நளனிடம் வந்தது

64. கோதை சுயம்வரநாள் கொற்றவனுக் குற்றுரைப்ப
ஏதமிலாக் காட்சியர்வந் தெய்தினார் - போதில்
பெடையொடு வண்டுறங்கும் பேரொலிநீர் நாடன்
அடையாத வாயி லகம்.

65. காவலன்றன் தூதர் கடைக்கா வலர்க்கறிவித்
தேவலிற்போ யீதென் றியம்புதலும் - மாவில்
பொலிந்ததேர் பூட்டென்றான் பூவாளி பாய
மெலிந்ததோள் வேந்தன் விரைந்து.

நளன் தேரூர்ந்து குண்டினபுரம் சென்றது

66. கெட்ட சிறுமருங்குற் கீழ்மகளிர் நீள்வரம்பில்
இட்ட பசுங்குவளை யேரடித்த - கட்டி
கரையத்தே னூறுங் கடல்நாட னூர்க்கு
விரையத்தே ரூரென்றான் வேந்து.

67. சடைச்செந்நெல் பொன்விளைக்குந் தன்னாடு பின்னாகக்
கடல்தானை முன்னாகக் கண்டான் - அடற்கமைந்த
வல்லியரும் பொற்றாம வீமன் திருமகளாம்
நல்லுயிரும் வாழும் நகர்.

நாரதமுனிவர் வானுலகு சென்றது

68. நெற்றித் தனிக்கண் நெருப்பைக் குளிர்விக்கும்
கொற்றத் தனியாழ்க் குலமுனிவன் - உற்றடைந்தான்
தேனாடுந் தெய்வத் தருவுந் திருமணியும்
வானாடுங் காத்தான் மருங்கு.

இந்திரன் நாரதரை வினாவியது

69. வீரர் விறல்வேந்தர் விண்ணாடு சேர்கின்றார்
ஆரு மிலராலென் றையுற்று - நாரதனார்
நன்முகமே நோக்கினான் நாகஞ் சிறகரிந்த
மின்முகவேற் கையான் விரைந்து.

நாரதர், தமயந்தி சுயம்வரத்தையும் அவளது எழிற் சிறப்பையும் கூறியது

70. வீமன் மடந்தை மணத்தின் விரைதொடுத்த
தாமம் புனைவான் சயம்வரத்து - மாமன்னர்
போயினா ரென்றான் புரந்தரற்குப் பொய்யாத
வாயினான் மாதவத்தோர் மன்.

71. அழகு சுமந்திள்த்த ஆகத்தாள் வண்டு
பழகு கருங்கூந்தற் பாவை - மழகளிற்று
வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம் மற்றவளே
காமன் திருவுக்கோர் காப்பு.

அச்சுயம்வரத்திற்கு இந்திரன் முதலிய தேவர்கள் புறப்பட்டது

72. மால்வரையை வச்சிரத்தா லீர்ந்தானும் வானவரும்
கோல்வளைதன் மாலை குறித்தெழுந்தார் - சால்புடைய
விண்ணாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு
மண்ணாடு நோக்கி மகிழ்ந்து.

நளனைத் தேவர்கள் வழியில் கண்டது

73. பைந்தெரியல் வேல்வேந்தன் பாவைபாற் போயினதன்
சிந்தை கெடுத்தனைத் தேடுவான் - முந்தி
வருவான்போல் தேர்மேல் வருவானைக் கண்டார்
பெருவானிற் றேவர் பெரிது.

இந்திரன் நளனைத் தமயந்திபால் தூதுசெல்ல வேண்டியது

74. காவற் குடைவேந்தைக் கண்ணுற்ற விண்ணவர்கோன்
ஏவற் றொழிலுக் கிசையென்றான் - ஏவற்கு
மன்னவனும் நேர்ந்தான் மனத்தினான் மற்றதனை
இன்னதென றோரா திசைந்து.

75. செங்கண் மதயானைத் தேர்வேந்தே தேமாலை
எங்களிலே சூட்ட இயல்வீமன் - மங்கைபால்
தூதாக வென்றானத் தோகையைத்தன் ஆகத்தால்
கோதாக வென்றானக் கோ.

76. தேவர் பணிதலைமேற் செல்லுந் திரிந்தொருகால்
மேவுமிளங் கன்னிபால் மீண்டேகும் - பாவில்
குழல்போல நின்றுழலுங் கொள்கைத்தே பூவின்
நிழல்போலுந் தண்குடையான் நெஞ்சு.

77. ஆவ துரைத்தா யதுவே தலைநின்றேன்
தேவர்கோ னேயத் திருநகரிற் - காவல்
கடக்குமா றென்னென்றான் காமநீ ராழி
அடக்குமா றுள்ளத் தவன்.

78. வார்வெஞ் சிலையொழிய வச்சிரத்தால் மால்வரையைப்
போர்வெஞ் சிறகறிந்த பொற்றோளான் - யாருமுனைக்
காணார்போய் மற்றவளைக் காணென்றான் கார்வண்டின்
பாணாறுந் தாரானைப் பார்த்து.

நளன் தூது சென்றதும், தமயந்தியைக் கண்டதும்

79. இசைமுகந்த வாயும் இயல்தெரிந்த நாவும்
திசைமுகந்தா லன்ன தெருவும் - வசையிறந்த
பொன்னாடு போந்திருந்தாற் போன்றதே போர்விதர்ப்ப
நன்னாடற் கோமாந்தன் நாடு.

80. தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப்
பூங்குவளை தாமரைக்கே பூத்ததே - ஆங்கு
மதுநோக்குந் தாரானும் வாள்நுதலுந் தம்மில்
பொதுநோக் கெதிர்நோக்கும் போது.

நளனைக் கண்ட தமயந்தி நிலை
81. நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
தீண்டு மளவில் திறந்ததே - பூண்டதோர்
அற்பின்தாழ் கூந்தலாள் வேட்கை யகத்தடக்கிக்
கற்பின்தாழ் வீழ்ந்த கதவு.

82. உய்ஞ்சு கரையேற வொட்டுங்கொ லொண்டொடியாள்
நெஞ்சு தடவும் நெடுங்கண்கள் - விஞ்சவே
நீண்டதோ வங்ஙனே யிங்ஙனே நீள்மலராள்
ஆண்டதோள் மன்ன னழகு.

83. மன்னாகத் துள்ளழுந்தி வாரணிந்த மென்முலையும்
பொன்னாணும் புக்கொளிப்பப் புல்லுவனென் - றுன்னா
எடுத்தபே ரன்பை யிடையே புகுந்து
தடுத்ததே நாணாந் தறி.

தமயந்தி நளனை யாவனென வினாவியது

84. காவல் கடந்தெங்கள் கன்னிமா டம்புகுந்தாய்

யாவனோ விஞ்சைக் கிறைவனோ - தேவனோ
உள்ளவா சொல்லென்றா ளூசற் குழைமீது
வெள்ளவாள் நீர்சோர விட்டு.

நளனது மறுமொழி

85. தீராத காமத் தழலைத்தன் செம்மையெனும்
நீரா லவித்துக் கொடுநின்று - வாராத
பொன்னாட ரேவலுடன் போந்தவா சொல்லித்தன்
நன்னாடுஞ் சொன்னான் நளன்.

86. என்னுரையை யாதென் றிகழா திமையவர்வாழ்
பொன்னுலகங் காக்கும் புரவலனை - மென்மாலை
சூட்டுவா யென்றான் தொடையில் தேன்தும்பிக்கே
ஊட்டுவா னெல்லா முரைத்து.

தமயந்தி கூறிய உறுதிமொழி

87. இயமரநின் றார்ப்ப இனவளைநின் றேங்க
வயமருதோள் மன்னா வகுத்த - சுயம்வரந்தான்
நின்பொருட்டா லென்று நினைகென்றா நீள்குடையான்
தன்பொருட்டால் நைவாள் தளர்ந்து.

88. போதரிக்கண் மாதராள் பொன்மாலை சூட்டத்தான்
ஆதரித்தார் தம்மோ டவையகத்தே - சோதிச்
செழுந்தரள வெண்குடையாய் தேவர்களும் நீயும்

எழுந்தருள்க வென்றா ளெடுத்து.

89. வானவர்கோ னேவல் வழிச்சென்று வாணுதலைத்
தானணுகி மீண்டபடி சாற்றவே - தேன்முரலும்
வண்டார் நளன்போந்து வச்சிராயு தற்றொழுதான்
கண்டா ருவப்பக் கலந்து.

நளனுக்கு அத்தேவர்கள் அளித்த வரங்கள்

90. விண்ணவர்தம் ஏவலுடன் வீமன் திருமகள்பால்
நண்ணு புகழ்நளனும் நன்குரைத்த - பெண்ணங்கின்
வன்மொழியுந் தேவர் மனமகிழத் தான்மொழிந்த
மென்மொழியுஞ் சென்றுரைத்தான் மீண்டு.

91. அங்கி யமுதம்நீ ரம்பூ அணியாடை
எங்குநீ வேண்டினைமற் றவ்விடத்தே - சங்கையறப்
பெற்றா யெனவருண ஆகலண்டன் தருமன்
மற்றோனு மீந்தார் வரம்.

தமயந்தியின் துயர நிலை

92. தூதுவந்த காதலனைச் சொல்லிச் செலவிடுத்த
மாதுவந்து பின்போன வன்னெஞ்சால் - யாதும்
அயிர்த்தா ளுயிர்த்தா ளணிவதன மெல்லாம்
வியர்த்தா ளுரைமறந்தாள் வீழ்ந்து.

93. உள்ளம்போய் நாண்போ யுரைபோய் வரிநெடுங்கண்

வெள்ளம்போய் வேகின்ற மென்றளிர்போல் - பிள்ளைமீன்
புள்ளரிக்கும் நாடன் திருமடந்தை பூவாளி
உள்ளரிக்கச் சோர்ந்தா ளுயிர்.

94. பூவின்வாய் வாளி புகுந்த வழியேயென்
ஆவியார் போனாலு மவ்வழியே - பாவியேன்
ஆசைபோ காதென் றழிந்தா ளணியாழின்
ஓசைபோற் சொல்லா ளுயிர்த்து.

சூரியன் அத்தமித்தல்

95. வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்பப்
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்பப் - பையவே
செவ்வாய அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு.

96. மாயிரு ஞாலத் துயிர்காண வானரங்கில்
பாயிரு ளென்னும் படாம்வாங்கிச் - சேய்நின்

றறைந்தா ரணம்பாட ஆடிப்போய் வெய்யோன்
மறைந்தான் குடபால் வரை.

மாலைப்பொழுதின் வரவு

97. மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை யந்திப் பொழுது.

98. புற்கென்றா ரந்தி புனைமலர்க்கண் நீரரும்ப
நிற்கின்ற தந்தோ நிலங்காப்பான் - முற்கொண்
டடைகின்ற வேந்தர்க்கு மாண்டஞ்சி னோர்க்கும்
இடைநின்ற காலம்போ லின்று.

பிறையின் தோற்றம்

99. பைந்தொடியா ளாவி பருகுவான் நிற்கின்ற

அந்தி முறுவலித்த தாமென்ன - வந்ததால்
மையார்வேற் கண்ணாள் வனமுலைமே லாரழலைப்
பெய்வா னமைந்த பிறை.

100. கூட்டுமைபோற் சிறந்த கூரிருளைக் கூன்கோட்டால்
கோட்டுமண் கொண்ட குளிர்திங்கள் - ஈட்டுமணிப்
பூணிலா மென்முலைமேற் போதச் சொரிந்ததே
நீணிலா வென்னும் நெருப்பு.

தமயந்தியின் துயர நிலை

101. அன்னங்காள் நீங்களுமவ் வாதித்தன் தானும்போய்
மன்னும் படியகலா வல்லிரவின் - மின்னும்
மழைத்தாரை வல்லிருட்கும் வாடைக்கும் நாங்கள்
பிழைத்தால்வந் தேனென்னும் பேர்.

102. கொப்புளங் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுது
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து.

103. கானுந் தடங்காவுங் காமன் படைவீடு
வானுந்தேர் வீதி மறிகடலும் - மீனக்
கொடியாடை வையமெலாங் கோதண்ட சாலை
பொடியாடிக் கொன்றதெல்லாம் பொய்.

104. கொள்ளைபோ கின்ற துயிரென்னும் கோளரவின்
முள்ளெயிறோ மூரி நிலாவென்னும் - உள்ளம்
கொடிதிரா வென்னுங் குழையுந் தழல்போல்
நெடிதிரா வாய்புலர நின்று.

105. வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை யனலிற் கொளுந்தியோ - திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னோ இரா.

106. ஊழி பலவோ ரிரவாயிற் றோவென்னும்
கோழி குரலடைத்த தோவென்னும் - ஆழி
துயிலாதோ வென்னுஞ் சுடர்மதியங் கான்ற
வெயிலா லுடலுருகா வீழ்ந்து.


107. ஆடி வரிவண் டருகே பறக்கவே
வாடி மெலிவாள் வனமுலைமேல் - ஓடிப்
பொறையாகச் சோர்வாள் பொறுக்குமோ மோகத்
துறைவா யடங்காத் துயர்.

108. ஈர மதியே! இளநிலவே யிங்ஙமேன
சோர்குழலின் மீதே சொரிவதெவன் - மாரன்
பொரவளித்தான் கண்ணி யுனக்குப் புலரா
இரவளித்தா னல்லனோ இன்று.

109. தாங்கு நிலவின் தழல்போய்த் தலைக்கொள்ளத்
தேங்குழல்சேர் வண்டு சிறைவெதும்ப - ஓங்குயிர்ப்பின்
தாமங் கரியாத் தனியே தளர்கின்றாள்
யாமங் கரியாக இன்று.

110. மையிட்ட கண்ணருவி வார வளைசோரக்
கையிற் கபோலத் தலம்வைத்து - மெய்வருந்தி
தேனிருந்த பூங்கணையே தீயாகத் தேமொழியாள்
தானிருந்து செய்வாள் தவம்.

இருளின் மிகுதியும் தமயந்தியின் துயரமும்

111. அள்ளிக் கொளலா யடையத் திரண்டொன்றாய்க்
கொள்ளிக்கும் விள்ளாத கூரிருளாய் - உள்ளம்
புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள்
இதயமே போன்ற திரா.

112. ஊக்கிய சொல்ல ரொலிக்குந் துடிக்குரலர்
வீக்கிய கச்சையர் வேல்வாளர் - காக்க
இடையாமங் காவலர்கள் போந்தா ரிருளில்
புடைவா யிருள்புடைத்தாற் போன்று.

113. சேமங் களிறுபுகத் தீம்பாலின் செவ்வழியாழ்
தாமுள் ளிழைபுகுந்த தார்வண்டு - காமன்தன்
பூவாளி ஐந்தும் புகத்துயில் புக்கதே
ஓவாது முந்நீ ருலகு.

114. ஊன்தின் றுவகையா லுள்ள வுயிர்புறம்பே
தோன்றுங் கழுதுந் துயின்றதே - தான்தன்
உரைசோரச் சோர வுடல்சோர வாயின்
இரைசோரக் கைசோர நின்று.

115. அன்றிலொருகண் துயின் றொருகண் ணார்வத்தால்
இன்றுணைமேல் வைத்துறங்கு மென்னுஞ்சொல் - இன்று
தவிர்ந்ததே போலரற்றிச் சாம்புகின்ற போதே
அவிழ்ந்ததே கண்ணீ ரவட்கு.

116. ஏழுலகுஞ் சூழிருளா யென்பொருட்டால் வேகின்ற
ஆழ்துயர மேதென் றறிகிலேன் - பாழி
வரையோ எனுநெடுந்தோண் மன்னாவோ தின்னும்
இரையோ இரவுக்கு யான்?

117. கருவிக்கு நீங்காத காரிருள்வாய்க் கங்குல்
உருவிப் புகுந்ததா லூதை - பருகிக்கார்
வண்டுபோ கட்ட மலர்போல் மருள்மாலை
உண்டுபோ கட்ட வுயிர்க்கு.

118. எழுந்திருக்கு மேமாந்து பூமாந் தவிசின்
விழுந்திருக்குந் தன்னுடம்பை மீளச் - செழுந்தரளத்
தூணோடு சேர்க்குந் துணையேது மில்லாதே
நாணோடு நின்றழியும் நைந்து.

119. விரிகின்ற மெல்லமளி வெண்ணிலவின் மீதே
சொரிகின்ற காரிருள்போற் சோரும் - புரிகுழலைத்
தாங்குந் தளருந் தழலே நெடிதுயிர்க்கும்
ஏங்குந் துயரோ டிருந்து.

120. மயங்குந் தெளியும் மனநடுங்கும் வெய்துற்று
உயங்கும் வறிதே யுலாவும் - வயங்கிழைபோய்ச்
சோருந் துயிலுந் துயிலாக் கருநெடுங்கண்
நீருங் கடைசோர நின்று.

121. உடைய மிடுக்கெல்லா மென்மேல் ஓச்சி
விடிய மிடுக்கின்மை யாலோ - கொடியன்மேல்
மாகாதல் வைத்ததோ மன்னவர்த மின்னருளோ
ஏகாத தென்னோ இரா.

122. விழுது படத்திணிந்த வீங்கிருள்வாய்ப் பட்டுக்
கழுதும் வழிதேடுங் கங்குற் - பொழுதிடையே
நீருயிர்க்குங் கண்ணோடு நெஞ்சுருகி வீழ்வார்தம்
ஆருயிர்க்கு முண்டோ அரண்.

பொழுது புலர்ந்தமை

123. பூசுரர்தங் கைம்மலரும் பூங்குமுத மும்முகிழ்ப்பக்
காசினியுந் தாமரையுங் கண்விழிப்ப - வாசம்
அலர்ந்ததேங் கோதையின் ஆழ்துயரத் தோடு
புலர்ந்ததே யற்றைப் பொழுது.

சூரியோதயம்

124. வில்லி கணையிழப்ப வெண்மதியஞ் சீரிழப்பத்
தொல்லை யிருள்கிழியத் தோன்றினான் - வல்லி
மணமாலை வேட்டிடுதோள் வாளரசர் முன்னே
குணவாயிற் செங்கதிரோன் குன்று.

125. முரைசெறிந்த நாளேழும் முற்றியபின் கொற்ற
வரைசெறிந்த தோள்மன்னர் வந்தார் - விரைசெறிந்த
மாலை துவள முடிதயங்க வால்வளையும்
காலை முரசுங் கலந்து.

நளன் சுயம்வர மண்டபம் வந்தமை

126. மன்றலந்தார் மன்னன் நடுவணைய வந்திருந்தான்
கன்று குதட்டிய கார்நீலம் - முன்றில்
குறுவிழிக்கு நேர்நாடன் கோதைபெருங் கண்ணின்
சிறுவிழிக்கு நோற்றிருந்த சேய்.

தமயந்தி சுயம்வர மண்டபம் வந்தது

127. நித்திலத்தின் பொற்றோடு நீலமணித் தோடாக
மைத்தடங்கண் செல்ல வயவேந்தர் - சித்தம்
மருங்கே வரவண்டின் பந்தற்கீழ் வந்தாள்
அருங்கேழ் மணிப்பூண் அங்கு.

128. பேதை மடமயிலைச் சூழும் பிணைமான்போல்
கோதை மடமானைக் கொண்டணைந்த - மாதர்
மருங்கின் வெளிவழியே மன்னவர்கண் புக்கு
நெருங்கினவே மேன்மேல் நிறைந்து.

129. மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே
பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்னிறத்துச்
செய்யதாள் வெள்ளைச் சிறையன்னஞ் செங்கமலப்
பொய்கைவாய் போவதே போன்று.

130. வடங்கொள் வனமுலையாள் வார்குழைமேல் ஓடும்
நெடுங்கண் கடைபார்த்து நின்றான் - இடங்கண்டு
பூவாளி வேந்தன்றன் பொன்னாவம் பின்னேயிட்டு
ஐவாளி நாணின்பால் இட்டு.

தோழி தமயந்திக்கு, அங்கு வந்திருந்த அரசர்கள்
ஒவ்வொருவரையும் குறிபிட்டுரைத்தல்

131. மன்னர் குலமும் பெயரும் வளநாடும்
இன்ன பரிசென் றியலணங்கு - முன்னின்று
தார்வேந்தன் பெற்ற தனிக்கொடிக்குக் காட்டினாள்
தேர்வேந்தர் தம்மைத் தெரிந்து.

சோழ மன்னன்

132. பொன்னி யமுதப் புதுக்கொழுந்து பூங்கமுகின்
சென்னி தடவுந் திருநாடன் - பொன்னின்
சுணங்கவிழ்ந்த பூண்முலையாய் சூழமரிற் றுன்னார்
கணங்கவிழ்ந்த வேலனிவன் காண்.

பாண்டிய மன்னர்

133. போர்வாய் வடிவேலாற் போழப் படாதோரும்
சூர்வாய் மதரரிக்கண் தோகாய்கேள் - பார்வாய்ப்
பருத்ததோர் மால்வரையைப் பண்டொருகாற் செண்டால்
திரித்தகோ விங்கிருந்த சேய்.

சேர மன்னன்

134. வென்றி நிலமடந்தை மென்முலைமேல் வெண்டுகில்போல்
குன்றருவி பாயுங் குடநாடன் - நின்றபுகழ்
மாதே யிவன்கண்டாய் மானத் தனிக்கொடியின்
மீதே சிலையுயர்த்த வேந்து.

குரு நாட்டரசன்

135. தெரியில் யிவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை
அரவின் பசுந்தலையென் றஞ்சி - இரவெல்லாம்
பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்டும்
வள்ளைக் குருநாடர் மன்.

மத்திர நாட்டரசன்

136. தேமருதார்க் காளை யிவன்கண்டாய் செம்மலர்மேல்
காமருசங் கீன்ற கதிர்முத்தைத் - தாமரைதன்
பத்திரத்தா லேற்கும் படுகர்ப் பழனஞ்சூழ்
மத்திரத்தார் கோமான் மகன்.

மச்ச நாட்டரசன்

137. அஞ்சாயல் மானே யிவன்கண்டாய் ஆலைவாய்
வெஞ்சாறு பாய விளைந்தெழுந்த - செஞ்சாலிப்
பச்சைத்தாள் மேதிக் கடைவாயிற் பாலொழுகும்
மச்சத்தார் கோமான் மகன்.

அவந்தி நாட்டரசன்

138. வண்ணக் குவளை மலர்வௌவி வண்டெடுத்த
பண்ணிற் செவிவைத்துப் பைங்குவளை - உண்ணா
தருங்கடா நிற்கு மவந்திநா டாளும்
இருங்கடா யானை இவன்.

பாஞ்சால மன்னன்

139. விடக்கதிர்வேற் காளை யிவன்கண்டாய் மீனின்
தொடக்கொழியப் போய்நிமிர்ந்த தூண்டின் - மடற்கமுகின்
செந்தோடு பீறத்தேன் செந்நெற் பசுந்தோட்டில்
வந்தோடு பாஞ்சாலர் மன்.

கோசல மன்னன்

140. அன்னந் துயிலெழுப்ப அந்தா மரைவயலில்
செந்நெ லரிவார் சினையாமை - வன்முதுகில்
கூனிரும்பு தீட்டுங் குலக்கோ சலநாடன்
தேனிருந்த சொல்லாயிச் சேய்.

மகத நாட்டரசன்

141. புண்டரிகந் தீயெரிவ போல்விரியப் பூம்புகைபோல்
வண்டிரியுந் தெண்ணீர் மகதர்கோன் - எண்டிசையில்
போர்வேந்தர் கண்டறியாப் பொன்னாவம் பின்னுடைய
தேர்வேந்தன் கண்டாயிச் சேய்.

அங்க நாட்டரசன்

142. கூன்சங்கின் பிள்ளை கொடிப்பவழக் கோடிடறித்
தேன்கழியில் வீழத் திரைக்கரத்தால் - வான்கடல்வந்

தந்தோ வெனவெடுக்கு மங்கநா டாளுடையான்
செந்தேன் மொழியாயிச் சேய்.

கலிங்கர் கோன்

143. ஦த்ள்வாளைக் காளைமீன் மேதிக் குலமெழுப்பக்
கள்வார்ந்த தாமரையின் காடுழக்கிப் - புள்ளோடு
வண்டிரியச் செல்லும் மணிநீர்க் கலிங்கர்கோன்
தண்டெரியல் தேர்வேந்தன் தான்.

கேகயர் கோன்

144. அங்கை வரிவளையா யாழித் திரைகொணர்ந்த
செங்கண் மகரத்தைத் தீண்டிப்போய் - கங்கையிடைச்
சேல்குளிக்குங் கேகயர்கோன் றெவ்வாடற் கைவரைமேல்
வேல்குளிக்க நின்றானிவ் வேந்து.

காந்தார வேந்தன்

145. மாநீர் நெடுங்கயத்து வள்ளைக் கொடிமீது
தனேகு மன்னந் தனிக்கயிற்றில் - போநீள்
கழைக்கோ தையரேய்க்கும் காந்தார நாடன்
மழைக்கோதை மானேயிம் மன்.

சிந்து நாட்டரசன்

146. அங்கை நெடுவேற்கண் ஆயிழையாய் வாவியின்வாய்ச்
சங்கம் புடைபெயரத் தான்கலங்கிச் - செங்கமலப்
பூச்சிந்தும் நாட்டேறல் பொன்விளைக்குந் தண்பணைசூழ்
மாச்சிந்து நாட்டானிம் மன்.

தேவர்கள் நளனுருவில் இருக்கத் தமயந்தி கண்டு தியங்கியது

147. காவலரைத் தன்சேடி காட்டக்கண் டீரிருவர்
தேவர் நளனுருவாச் சென்றிருந்தார் - பூவரைந்த
மாசிலாப் பூங்குழலாள் மற்றவரைக் காணநின்று
ஊசலா டுற்றா ளுளம்.

148. பூணுக் கழகளிக்கும் பொற்றொடியைக் கண்டக்கால்
நாணுக்கு நெஞ்சுடைய நல்வேந்தர் - நீணிலத்து
மற்றேவர் வாராதார் வானவரும் வந்திருந்தார்
பொற்றேர் நள்னுருவாப் போந்து.

தமயந்தியின் சூளுரை

149. மின்னுந்தார் வீமன்றன் மெய்ம்மரபிற் செம்மைசேர்
கன்னியான் ஆகிற் கடிமாலை - அன்னந்தான்
சொன்னவனைச் சூட்ட அருளென்றாள் சூழ்விதியின்
மன்னவனைத் தன்மனத்தே கொண்டு.

தமயந்தி நளனை அறிந்தமை

150. கண்ணிமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி
நறுந்தா மரைவிரும்பு நன்னுதலே யன்னாள்
அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு.

தமயந்தி நளனுக்கு மாலை சூட்டியது

151. விண்ணரச ரெல்லாரும் வெள்கி மனஞ்சுளிக்கக்
கண்ணகன் ஞாலங் களிகூர - மண்ணரசர்
வன்மாலைதம் மனத்தே சூட வயவேந்தைப்
பொன்மாலை சூட்டினாள் பொன்.

மற்ற அரசர்களின் ஏமாற்ற நிலை

152. திண்டோ ள் வயவேந்தர் செந்தா மரைமுகம்போய்
வெண்டா மரையாய் வெளுத்தவே - ஒண்டாரைக்
கோமாலை வேலான் குலமாலை வேற்கண்ணாள்
பூமாலை பெற்றிருந்த போது.

நளன் தமயந்தியுடன் சென்றமை

153. மல்லல் மறுகின் மடநா குடனாகச்
செல்லும் மழவிடைபோற் செம்மாந்து - மெல்லியலாள்
பொன்மாலை பெற்றதோ ளோடும் புறப்பட்டான்
நன்மாலை வேலான் நளன்.

தேவர்கள், கலி எதிர்வரக் கண்டது

154. வேலை பெறாவமுதம் வீமன் திருமடந்தை
மாலை பெறாதகலும் வானாடர் - வேலை
பொருங்கலிநீர் ஞாலத்தைப் புன்னெறியி லாக்கும்
இருங்கலியைக் கண்டா ரெதிர்.

இந்திரன் கலியின் வரவு வினாவியதும், கலியின் மறுமொழியும்

155. ஈங்குவர வென்னென் றிமையவர்தங் கோன்வினவத்
தீங்கு தருகலியுஞ் செப்பினான் - நீங்கள்
விருப்பான வீமன் திருமடந்தை யோடும்
இருப்பான் வருகின்றேன் யான்.

156. மன்னவரில் வைவேல் நளனே மதிவதனக்
கன்னி மணமாலை கைக்கொண்டான் - உன்னுடைய
உள்ளக் கருத்தை யொழித்தே குதியென்றான்
வெள்ளைத் தனியானை வேந்து.
157. விண்ணரசர் நிற்க வெறித்தேன் மணமாலை
மண்ணரசற் கீந்த மடமாதின் - எண்ணம்
கெடுக்கின்றேன் மற்றவள்தன் கேள்தற்க்குங் கீழ்மை

கொடுக்கின்றே னென்றான் கொதித்து.

158. வாய்மையுஞ் செங்கோல் வளனும் மனத்தின்கண்
தூய்மையும் மற்றவன் தோள்வலியும் - பூமான்
நெடுங்கற்பு மற்றவற்கு நின்றுரைத்துப் போனான்
அருங்கொற்ற வச்சிரத்தா னாங்கு.

நளனைக் கெடுக்கக் கலி துவாபரனைத் துணைவேண்டியது

159. செருக்கதிர்வேற் கண்ணியுடன் தேர்வேந்தன் கூட
இருக்கத் தரியேன் இவரைப் - பிரிக்க
உடனாக என்றா னுடனே பிறந்த
விடநாகம் அன்னான் வெகுண்டு.

சூரியோதயம்

160. வெங்கதிரோன் தானும் விதர்ப்பன் திருமடந்தை
மங்கலநாள் காண வருவான்போல் - செங்குமுதம்
வாயடங்க மன்னற்கும் வஞ்சிக்கும் நன்னெஞ்சில்

தீயடங்க ஏறினான் றேர்.

தமயந்திக்குச் செய்த மணக்கோலம்

161. இன்னுயிர்க்கு நேரே இளமுறுவல் என்கின்ற
பொன்னழகைத் தாமே புதைப்பார்போல் - மென்மலரும்
சூட்டினார் சூட்டித் துடிசே இடையாளைப்
பூட்டினார் மின்னிமைக்கும் பூண்.

நளதமயந்தியர் திருமணம்

162. கணிமொழிந்த நாளிற் கடிமணமுஞ் செய்தார்
அணிமொழிக்கும் அண்ண லவற்கும் - பணிமொழியார்
குற்றேவல் செய்யக் கொழும்பொன் னறைபுக்கார்
மற்றேவரும் ஒவ்வார் மகிழ்ந்து.

நளதமயந்தியர் கூடிமகிழ்ந்தமை

163. செந்திருவின் கொங்கையினுந் தேர்வேந்த னாகத்தும்
வந்துருவ வார்சிலையைக் கால்வளைத்து - வெந்தீயும்
நஞ்சுந் தொடுத்தனைய நாம மலர்வாளி
அஞ்சுந் தொடுத்தா னவன்.

164. ஒருவர் உடலில் ஒருவர் ஓதுங்கி
இருவ ரெனும்தோற்ற மின்றிப் - பொருவெம்
கனற்கேயும் வேலானுங் காரிகையுஞ் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று.

165. குழைமேலுங் கோமா னுயிர்மேலுங் கூந்தல்
மழைமேலும் வாளோடி மீள - விழைமேலே
அல்லோடும் வேலான் அகலத் தொடும்பொருதாள்
வல்லோடுங் கொங்கை மடுத்து.

166. வீரனக லச்செறுவின் மீதோடிக் குங்குமத்தின்
ஈர விளவண்ட லிட்டதே -நேர்பொருத
காராரும் மெல்லோதிக் கன்னியவள் காதலெனும்
ஓராறு பாய வுடைந்து.

167. கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலையச்
செங்கையற்க ணோடிச் செவிதடவ - அங்கை
வளைபூச லாட மடந்தையுடன் சேர்ந்தான்

விளைபூசற் கொல்யானை வேந்து.

168. தையல் தளிர்க்கரங்கள் தன்தடக்கை யாற்பற்றி
வையம் முழுதும் மகிழ்தூங்கத் - துய்ய
மணந்தான் முடிந்ததற்பின் வாணுதலுந் தானும்
புணர்ந்தான் நெடுங்காலம் புக்கு.

சுயம்வர காண்டம் முற்றும்
=====================

2. கலிதொடர் காண்டம்
--------------------

நளன் தமயந்தியுடன் தன் நாடு சென்றமை

169. தவளத் தனிக்குடையின் வெண்ணிழலுந் தையல்
குவளைக் கருநிழலுங் கொள்ளப் - பவளக்
கொழுந்தேறிச் செந்நெற் குலைசாய்க்கும் நாடன்
செழுந்தேரி லேறினான் சென்று.

நளன் தமயந்திக்கு வழியில் பல காட்சிகளைக் காட்டுதல்

170. மங்கையர்கள் வாச மலர்கொய்வான் வந்தடையப்
பொங்கி யெழுந்த பொறிவண்டு - கொங்கோடு
எதிர்கொண் டணைவனபோ லேங்குவன முத்தின்
கதிர்கொண்ட பூண்முலையாய் காண்.

171. பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே
பூவையர்கை தீண்டலுமப் பூங்கொம்பு - மேவியவர்
பொன்னடியிற் றாழ்ந்தனவே பூங்குழலாய் காணென்றான்
மின்னெடுவேற் கையான் விரைந்து.
172. மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காணென்றான் வேந்து.
173. புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல்
செல்லும் மடந்தை சிலம்பவித்து - மெல்லப்போய்
அம்மலரைக் கொய்யா தருந்தளிரைக் கொய்வாளைச்
செம்மலரில் தேனே தெளி.

174. கொய்த மலரைக் கொடுங்கையி னாலணைத்து
மொய்குழலிற் சூட்டுவான் முன்வந்து - தையலாள்
பாதார விந்தத்தே சூட்டினான் பாவையிடைக்
காதார மில்லா தறிந்து.

175. ஏற்ற முலையார்க்கு இளைஞர் இடும்புலவித்
தோற்ற வமளியெனத் தோற்றுமால் - காற்றசைப்ப
உக்க மலரோ டுகுத்தவளை முத்தமே
எக்கர் மணன்மே லிசைந்து.
176. அலர்ந்த மலர்சிந்தி அம்மலர்மேற் கொம்பு
புலர்ந்தசைந்து பூவணைமேற் புல்லிக் - கலந்தொசிந்த
புல்லென்ற கோலத்துப் பூவையரைப் போன்றதே
அல்லென்ற சோலை யழகு.

177. கொங்கை முகத்தணையக் கூட்டிக் கொடுங்கையால்
அங்கணைக்க வாய்நெகிழ்ந்த ஆம்பற்பூ - கொங்கவிழ்தேன்
வார்க்கின்ற கூந்தன் முகத்தை மதியென்று
பார்க்கின்ற தென்னலாம் பார்.

178. கொய்த குவளை கிழித்துக் குறுநுதன்மேல்
எய்தத் தனிவைத்த ஏந்திழையாள் - வையத்தார்
உண்ணாக் கடுவிடத்தை யுண்ட தொருமூன்று
கண்ணானைப் போன்றனளே காண்.

179. கொழுநன் கொழுந்தாரை நீர்வீசக் கூசிச்
செழுமுகத்தைத் தாமரைக்கே சேர்த்தாள் - கெழுமியவக்
கோமகற்குத் தானினைந்த குற்றங்க ளத்தனையும்
பூமகட்குச் சொல்லுவாள் போல்.

180. பொய்தற் கமலத்தின் போதிரண்டைக் காதிரண்டில்
பெய்து முகமூன்று பெற்றாள்போல் - எய்த
வருவாளைப் பாரென்றான் மாற்றாரை வென்று
செருவாளைப் பார்துவக்குஞ் சேய்.

181. பொன்னுடைய வாசப் பொகுட்டு மலரலையத்
தன்னுடனே மூழ்கித் தனித்தெழுந்த - மின்னுடைய
பூணாள் திருமுகத்தைப் புண்டரிக மென்றயிர்த்துக்
காணா தயர்வானைக் காண்.

182. சிறுக்கின்ற வாண்முகமுஞ் செங்காந்தட் கையால்
முறுக்குநெடு மூரிக் குழலும் - குறிக்கின்

கரும்பாம்பு வெண்மதியைக் கைக்கொண்ட காட்சி
அரும்பாம் பணைமுலையா யாம்.

183. சோர்புனலில் மூழ்கி யெழுவாள் சுடர்நுதன்மேல்
வார்குழலை நீக்கி வருந்தோற்றம் - பாராய்
விரைகொண் டெழுந்தபிறை மேகத் திடையே
புரைகின்ற தென்னலாம் பொற்பு.

184. செழுநீலம் நோக்கெறிப்பச் செங்குவளை கொய்வாள்
முழுநீல மென்றயிர்த்து முன்னர்க் - கழுநீரைக்
கொய்யாது போவாளைக் கோல்வளைக்குக் காட்டினான்
வையாரும் வேற்றடக்கை மன்.

நளன் தமயந்தியுடன் பல நதி முதலியவற்றில் நீராடியது

185. காவி பொருநெடுங்கண் காதலியுங் காதலனும்
வாவியும் ஆறும் குடைந்தாடித் - தேவின்
கழியாத சிந்தையுடன் கங்கைநதி யாடி
ஒழியா துறைந்தா ருவந்து.

186. நறையொழுக வண்டுறையும் நன்னகர்வாய் நாங்கள்
உறையும் இளமரக்கா ஒக்கும் - இறைவளைக்கைச்
சிற்றிடையாய் பேரின்பத் தேமொழியாய் மென்முறுவல்
பொற்றொடியாய் மற்றிப் பொழில்.

தமயந்தியின் ஊடல்

187. கன்னியர்தம் வேட்கையே போலுங் களிமழலை
தன்மணிவா யுள்ளே தடுமாற - மன்னவனே
இக்கடிகா நீங்க ளுறையு மிளமரக்கா
ஒக்குமதோ வென்றா ளுயிர்த்து.

188. தொண்டைக் கனிவாய் துடிப்பச் சுடர்நுதன்மேல்
வெண்தரளம் என்ன வியர்வரும்பக் - கெண்டைக்
கடைசிவப்ப நின்றாள் கழன்மன்னர் வெள்ளைக்
குடைசிவப்ப நின்றான் கொடி.

189. தங்கள் புலவித் தலையில் தனித்திருந்த
மங்கை வதன மணியரங்கில் - அங்கண்
வடிவாள்மேற் கால்வளைத்து வார்புருவ மென்னும்
கொடியாடக் கண்டானோர் கூத்து.

தமயந்தி புலவி தவிர்த்தது

190. சில்லரிக் கிண்கிணிமென் தெய்வமலர்ச் சீறடியைத்
தொல்லை மணிமுடிமேற் சூட்டினான் - வல்லை
முழுநீலக் கோதை முகத்தே மலர்ந்த
செழுநீலம் மாறாச் சிவப்பு.

ஊடல் நீங்கித் தமயந்தி நளனுடன் கூடி மகிழ்ந்தது

191. அங்கைவேல் மன்னன் அகல மெனுஞ்செறுவில்
கொங்கையேர் பூட்டிக் குறுவியர்நீர் - அங்கடைத்துக்
காதல் வரம்பொழுக்கிக் காமப் பயிர்விளைத்தாள்
கோதையரின் மேலான கொம்பு.

நள தமயந்தியர் கங்கை கண்டது

192. வேரி மழைதுளிக்கு மேகக் கருங்கூந்தல்
காரிகையுந் தானும்போய்க் கண்ணுற்றான் - மூரித்
திரையேற மென்கிடங்கிற் சேலேற வாளை
கரையேறுங் கங்கைக் கரை.

அவர்கள் ஒரு பொழிலை அடைந்தது

193. சூதக் கனியூறல் ஏற்ற சுருள்வாழை
கோதில் நறவேற்குங் குப்பியென - மாதரார்
ஐயுற்று நோக்கு மகன்பொழில்சென் றெய்தினான்
வையுற்ற வேற்றானை மன்.

நளன் தமயந்திக்குத் தன் வளநகரைக் காட்டியது

194. வான்தோய நீண்டுயர்ந்த மாடக் கொடிநுடங்கத்
தான்தோன்று மற்றின் தடம்பதிதான் - வான்தோன்றி
வில்விளக்கே பூக்கும் விதர்ப்பநா டாளுடையான்
நல்விளக்கே யெங்கள் நகர்.

நளன் பன்னிரண்டாண்டுகள் தமயந்தியோடு மகிழ்ந்திருந்தது

195. பொய்கையும் வாசப் பொழிலு மெழிலருவச்
செய்குன்று மாறுந் திரிந்தாடித் - தையலுடன்
ஆறிரண்டாண் டெல்லை கழித்தா னடையலரைக்
கூறிரண்டாக் கொல்யானைக் கோ.

தமயந்தியின் மக்கட் பேறு

196. கோல நிறம்விளர்ப்பக் கொங்கை முகங்கருக
நீல நிறமயிர்க்கால் நின்றெறிப்ப - நூலென்னத்
தோன்றாத நுண்மருங்குல் தோன்றச் சுரிகுழலாள்
ஈன்றாள் குழவி யிரண்டு.

கலி நளனைச் சார முடியாதிருந்தது

197. ஆண்டிரண்டா றெல்லை யளவுந் திரிந்தேயும்
காண்டகைய வெங்கலியுங் காண்கிலான் - நீண்டபுகழ்ச்
செந்நெறியாற் பார்காத்த செங்கோல் நிலவேந்தன்
தன்னெறியால் வேறோர் தவறு.
கலி நளனைச் சேர்ந்தது

198. சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு
புந்தி மகிழப் புகுந்துகலி - சிந்தையெலாம்
தன்வயமே ஆக்குந் தமைய னுடனிருந்தான்
பொன்னசல மார்பற் புகைந்து.

199. நாராய ணாய நமவென் றவனடியில்
சேராரை வெந்துயரஞ் சேர்ந்தாற்போல் - பாராளும்
கொற்றவனைப் பார்மடந்தை கோமானை வாய்மைநெறி
கற்றவனைச் சேர்ந்தான் கலி.

கலி புட்கரனை நளனோடு சூதாட அழைத்தது

200. நன்னெறியில் சூதால் நளனைக் களவியற்றித்
தன்னரசு வாங்கித் தருகின்றேன் - மன்னவனே
போதுவா யென்னுடனே யென்றான் புலைநரகுக்
கேதுவாய் நின்றா னெடுத்து.

புட்கரன் உடன்பட்டுக் கலியுடன் சென்றது

201. புன்னை நறுமலரின் பூந்தா திடையுறங்கும்
கன்னி யிளமேதிக் காற்குளம்பு - பொன்னுரைத்த
கல்லேய்க்கும் நாடன் கவறாடப் போயினான்
கொல்லேற்றின் மேலேறிக் கொண்டு.

புட்கரன் நிடத நாடடைந்தது

202. வெங்கட் சினவிடையின் மேலேறிக் காலேறிக்
கங்கைத் திரைநீர் கரையேறிச் - செங்கதிர்ப்பைம்
பொன்னொழியப் போதும் புறம்பணைசூழ் நன்னாடு
பின்னொழியப் போந்தான் பெயர்ந்து.

நளன் புட்கரனைக் கண்டு வினாவிய்து

203. அடற்கதிர்வேல் மன்னன் அவனேற்றின் முன்போய்
எடுத்தகொடி யென்னகொடி யென்ன - மிடற்சூது
வெல்லுங் கொடியென்றான் வெங்கலியா லங்கவன்மேல்
செல்லுங் கொடியோன் தெரிந்து.

நளன் புட்கரனுடன் சூதாட இசைந்தது

204. ஏன்றோம் இதுவாயின் மெய்ம்மையே எம்மோடு
வான்றோய் மடல்தெங்கின் வான்தேறல் - தான்தேக்கி
மீதாடி வாளைவயல் வீழ்ந்துழக்கும் நன்னாடன்
சூதாட என்றான் துணிந்து.

நளனுக்கு அமைச்சர் முதலினோர் சூதின் தீமைகளை உரைத்தது

205. காதல் கவறாடல் கள்ளுண்ணல் பொய்ம்மொழிதல்
ஈதல் மறுத்த லிவைகண்டாய் - போதில்
சினையாமை வைகுந் திருநாடா செம்மை
நினையாமை பூண்டார் நெறி.

206. அறத்தைவேர் கல்லும் அருநரகிற் சேர்க்கும்
திறத்தையே கொண்டருளைத் தேய்க்கும் - மறத்தையே
பூண்டுவிரோ தஞ்செய்யும் பொய்ச்சூதை மிக்கோர்கள்
தீண்டுவரோ வென்றார் தெரிந்து.

207. உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத்
திருவழிக்கு மோனஞ் சிதைக்கும் - மருவும்
ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது
பொருவரோ தக்கோர் புரிந்து.

208. ஆயம் பிடித்தாரு மல்லற் பொதுமகளிர்
நேயம் பிடித்தாரும் நெஞ்சிடையே - மாயம்
பிடித்தாரின் வேறல்ல ரென்றுரைப்ப தன்றே
வடித்தாரின் றிலோர் வழக்கு.

நளனது மறுப்புரை

209. தீது வருக நலம்வருக சிந்தையால்
சூது பொரவிசைந்து சொல்லினோம் - யாதும்
விலக்கலிர்நீ ரென்றான் வராலேற மேதி
கலக்கலைநீர் நாடன் கனன்று.

புட்கரனை நளன் பந்தயம் யாதென்று கேட்டது

210. நிறையிற் கவறாட நீநினைந்தா யாகில்
திறையிற் கதிர்முத்தஞ் சிந்தும் - துறையில்
கரும்பொடியா மள்ளர் கடவடிக்கும் நாடா
பொரும்படியா தென்றானிப் போது.

நளன் சூதாடியதும் யாவும் தோற்றதும்

211. விட்டொளிர்வில் வீசி விளங்குமணிப் பூணாரம்
ஒட்டினே னுன்பணையம் ஏதென்ன - மட்டவிழ்தார்
மல்லேற்ற தோளானும் வான்பணைய மாகத்தன்
கொல்லேற்றை வைத்தான் குறித்து.

212. காரேயுங் கூந்தலார் காரிகைமேற் காதலித்த
தாரேயுந் தோளான் தனிமனம்போல் - நேரே
தவறாய்ப் புரண்ட தமையனொடுங் கூடிக்
கவறாய்ப் புரண்டான் கலி.

213. வைத்த மணியாரம் வென்றேன் மறுபலகைக்
கொத்த பணைய முரையென்ன - வைத்தநிதி
நூறா யிரத்திரட்டி நூறுநூ றாயிரமும்
வேறாகத் தோற்றானவ் வேந்து.

214. பல்லா யிரம்பரியும் பத்துநூ றாயிரத்து
சொல்லார் மணித்தேருந் தோற்றதற்பின் - வில்லாட்கள்
முன்றோற்று வானின் முகிறோற்கு மால்யானை
பின்றோற்றுத் தோற்றான் பிடி.

215. சாதுரங்கம் வென்றேன் தரும்பணைய மேதென்ன
மாதுரங்கம் பூணும் மணித்தேரான் - சூதரங்கில்
பாவையரைச் செவ்வழியாழ்ப் பண்ணின்மொழிப் பின்னுகுழல்
பூவையரைத் தோற்றான் பொருது.

216. கற்பின் மகளிர்பா னின்றும் தமைக்கவட்டின்
விற்கு மகளிர்பான் மீண்டாற்போல் - நிற்கும்
நெறியானை மெய்ம்மைவாய் நின்றானை நீங்கிச்
சிறியானைச் சேர்ந்தாள் திரு.

புட்கரன் தமயந்தியைப் பந்தயமாக வைக்ககேட்டது

217. மனைக்குரியா ரன்றே வருந்துயரந் தீர்ப்பார்
சினைச்சங்கின் வெண்டலையைத் தேனால் - நனைக்கும்
குவளைப் பணைப்பைந்தாட் குண்டுநீர் நாடா
இவளைப் பணையந்தா வின்று.

நளன் சூதாட்டத்தை விட்டு நீங்கியது

218. இனிச்சூ தொழிந்தோ மினவண்டு கிண்டிக்
கனிச்சூத வார்பொழிலின் கண்ணே - பனிச்சூதப்
பூம்போ தவிழ்க்கும் புனனாடன் பொன்மகளே
நாம்போது மென்றான் நளன்.

நளன் நகரைவிட்டுச் சென்றது

219. மென்காற் சிறையன்னம் வீற்றிருந்த மென்மலரைப்
புன்காகங் கொள்ளத்தான் போனாற்போல் - தன்கால்
பொடியாடத் தேவியொடும் போயினா னன்றே

கொடியானுக் கப்பார் கொடுத்து.

220. கடப்பா ரெவரே கடுவினையை வீமன்
மடப்பாவை தன்னுடனே மன்னன் - நடப்பான்
வனத்தே செலப்பணித்து மாயத்தாற் சூழ்ந்த
தனைத்தே விதியின் வ்லி.

நகரமாந்தரின் வேண்டுகோள்

221. ஆருயிரின் தாயே அறத்தின் பெருந்தவமே
பேரருளின் கண்ணே பெருமானே - பாரிடத்தை
யார்காக்கப் போவதுநீ யாங்கென்றார் தங்கண்ணின்
நீர்வார்த்துக் கால்கழுவா நின்று.

222. வேலை கரையிழந்தால் வேத நெறிபிறழ்ந்தால்
ஞாலம் முழுதும் நடுவிழந்தால் - சீலம்
ஒழிவரோ செம்மை யுரைதிறம்பாச் செய்கை
அழிவரோ செங்கோ லவர்.

223. வடியேறு கூரிலைவேன் மன்னாவோ வுன்றன்
அடியேங்கட் காதரவு தீரக் - கொடிநகரில்
இன்றிருந்து நாளை யெழுந்தருள்க வென்றுரைத்தார்

வென்றிருந்த தோளான்றாள் வீழ்ந்து.

224. மன்றலிளங் கோதை முகநோக்கி மாநகர்வாய்
நின்றுருகு வார்கண்ணி னீர்நோக்கி - இன்றிங்
கிருத்துமோ வென்றா னிளங்குதலை வாயாள்
வருத்தமே தன்மனத்தில் வைத்து.

புட்கரன் நளனை ஆதரிப்பார் கொல்லப்படுவார் என முரசறைவித்தது

225. வண்டாடுந் தார்நளனை மாநகரில் யாரேனும்
கொண்டாடி னார்தம்மைக் கொல்லென்று - தண்டா
முரசறைவா யாங்கென்றான் முன்னே முனிந்தாங்
கரசறியா வேந்த னழன்று.

226. அறையும் பறையரவங் கேட்டழிந்து நைந்து
பிறைநுதலாள் பேதைமையை நோக்கி - முறுவலியா
இந்நகர்க்கீ தென்பொருட்டா வந்த தெனவுரைத்தான்
மன்னகற்றுங் கூரிலைவேன் மன்.

நளன், தமயந்தியும் மக்களும் தொடர நகர் நீங்கியது

227. தன்வாயில் மென்மொழியே தாங்கினான் ஓங்குநகர்ப்
பொன்வாயில் பின்னாகப் போயினான் - முன்னாளில்
பூமகளைப் பாரினொடு புல்லினான் கன்மகனைக்
கோமகளைத் தேவியொடுங் கொண்டு.

நகரின் துயர நிலை

228. கொற்றவன்பாற் செல்வாரைக் கொல்வான் முரசறைந்து
வெற்றியொடு புட்கரனும் வீற்றிருப்ப - முற்றும்
இழவு படுமாபோ லில்லங்க டோ றும்
குழவிபா லுண்டிலவே கொண்டு.

நளனுடைய மக்களின் துயரநிலை

229. சந்தக் கழற்றா மரையுஞ் சதங்கையணி
பைந்தளிரு நோவப் பதைத்துருகி - எந்தாய்
வடந்தோய் களிற்றாய் வழியான தெல்லாம்
கடந்தோமோ வென்றார் கலுழ்ந்து.

230. தூயதன் மக்கள் துயர்நோக்கிச் சூழ்கின்ற
மாய விதியின் வலிநோக்கி - யாதும்

தெரியாது சித்திரம்போல் நின்றிட்டான் செம்மை
புரிவான் துயரால் புலர்ந்து.

நளன் தமயந்தியை மக்களுடன் குண்டினபுரம் ஏகக் கூறியது

231. காத லிருவரையும் கொண்டு கடுஞ்சுரம்போக்
கேத முடைத்திவரைக் கொண்டுநீ - மாதராய்
வீமன் திருநகர்க்கே மீளென்றான் விண்ணவர்முன்
தாமம் புனைந்தாளைத் தான்.

தமயந்தியின் மறுமொழி


232. குற்றமில் காட்சிக் குதலைவாய் மைந்தரையும்
பெற்றுக் கொளலாம் பெறலாமோ - கொற்றவனே
கோக்கா தலனைக் குலமகளுக் கென்றுரைத்தாள்
நோக்கான் மழைபொழியா நொந்து.

நளன் மக்கட் பேற்றின் சிறப்பைக் கூறியது

233. கைதவந்தான் நீக்கிக் கருத்திற் கறையகற்றிச்
செய்தவந்தா னெத்தனையுஞ் செய்தாலும் - மைதீர்
மகப்பெறா மானிடர்கள் வானவர்தம் மூர்க்குப்
புகப்பெறார் மாதராய் போந்து.

234. பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனு முடையரோ - இன்னடிசில்
புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்
மக்களையிங் கில்லாத வர்.
235. சொன்ன கலையின் துறையனைத்துந் தோய்ந்தாலும்
என்ன பயனுடைத்தா மின்முகத்து - முன்னம்
குறுகுதலைக் கிண்கிணிக்காற் கோமக்கள் பால்வாய்ச்
சிறுகுதலை கேளாச் செவி.

தமயந்தி நளனைத் தன் தந்தை நகருக்கு வருமாறு அழைத்தது

236. போற்றரிய செல்வம் புனனாட் டொடும்போகத்
தோற்றமையும் யாவர்க்குந் தோற்றாதே - ஆற்றலாய்
எம்பதிக்கே போந்தருளு கென்றா ளெழிற்கமலச்
செம்பதிக்கே வீற்றிருந்த தேன்.

நளன் அதற்கு உடன்படாது உரைத்தது

237. சினக்கதிர்வேற் கண்மடவாய் செல்வர்பாற் சென்றீ
எனக்கென்னு மிம்மாற்றங் கண்டாய் - தனக்குரிய
தானந் துடைத்துத் தருமத்தை வேர்பறித்து
மானந் துடைப்பதோர் வாள்.

238. மன்னராய் மன்னர் தமையடைந்து வாழ்வெய்தி
இன்னமுதந் தேக்கி யிருப்பரேல் - சொன்ன
பெரும்பே டிகளலரேற் பித்தரே யன்றோ
வரும்பேடை மானே யவர்.

தமயந்தி மக்களையேனும் தன் தந்தையிடம் அனுப்ப வேண்டிக்கொண்டது

239. செங்கோலா யுன்றன் திருவுள்ளம் ஈதாயின்
எங்கோன் விதர்ப்ப னெழினகர்க்கே - நங்கோலக்
காதலரைப் போக்கி யருளென்றாள் காதலருக்
கேதிலரைப் போல வெடுத்து.

நளன் தன் மக்களை அனுப்ப உடன்பட்டது

240. பேதை பிரியப் பிரியாத பேரன்பின்
காதலரைக் கொண்டுபோய்க் காதலிதன் - தாதைக்குக்
காட்டுநீ யென்றான் கலங்காத வுள்ளத்தை
வாட்டுநீர் கண்ணிலே வைத்து.

மக்களின் பிரிவாற்றாத் துயரநிலை

241. தந்தை திருமுகத்தை நோக்கித் தமைப்பயந்தாள்
இந்து முகத்தை யெதிர்நோக்கி - எந்தம்மை
வேறாகப் போக்குதிரோ வென்றார் விழிவழியே
ஆறாகக் கண்ணீ ரழுது.

242. அஞ்சனந்தோய் கண்ணி லருவிநீ ராங்கவர்க்கு
மஞ்சனநீ ராக வழிந்தோட - நெஞ்சுருகி
வல்லிவிடா மெல்லிடையாண் மக்களைத்தன் மார்போடும்
புல்லிவிடா நின்றாள் புலர்ந்து.

மக்களை ஒரு மறையோன் அழைத்துச் சென்றது

243. இருவ ருயிரு மிருகையான் வாங்கி
ஒருவன்கொண் டேகுவா னொத்து - அருமறையோன்
கோமைந்த னோடிளைய கோதையைக்கொண் டேகினான்
வீமன் நகர்க்கே விரைந்து.

244. காத லவர்மேலே கண்ணோட விண்ணோடும்
ஊதை யெனநின் றுயிர்ப்போட - யாதும்
உரையாடா துள்ள மொடுங்கினான் வண்டு
விரையாடுந் தாரான் மெலிந்து.

நளதமயந்தியர் ஒரு பாலைநிலத்தைக் கண்ணுற்றது

245. சேலுற்ற வாவித் திருநாடு பின்னொழியக்
காலிற்போய்க் தேவியொடுங் கண்ணுற்றான் - ஞாலஞ்சேர்
கள்ளிவே கத்தரவுங் கண்மணிகள் தாம்பொடியாய்த்
துள்ளிவே கின்ற சுரம்.

கலி ஒரு பொற்புள்ளாய் அங்கு தோன்றியது

246. கன்னிறத்த சிந்தைக் கலியுமவன் முன்பாகப்
பொன்னிறத்த புள்வடிவாய்ப் போந்திருந்தான் - நன்னெறிக்கே
அஞ்சிப்பா ரீந்த அரசனையுந் தேவியையும்
வஞ்சிப்பான் வேண்டி வனத்து.

அப்பொற்புள்ளைத் தமயந்தி விரும்பியது

247. தேன்பிடிக்குந் தண்துழாய்ச் செங்கட் கருமுகிலை
மான்பிடிக்கச் சொன்ன மயிலேபோல் - தான்பிடிக்கப்
பொற்புள்ளைப் பற்றித்தா வென்றாள் புதுமழலைச்
சொற்கிள்ளை வாயாள் தொழுது.

நளன் அப்பறவைஅயிப் பிடிக்க முயலுதல்

248. பொற்புள் ளதனைப் பிடிப்பான் நளன்புகுதக்
கைக்குள்வரு மாபோற் கழன்றோடி எய்க்கும்
இளைக்குமா போல இருந்ததுகண் டன்றே
வளைக்குமா றெண்ணினான் மன்.

249. கொற்றக் கயற்கட் கொடியே யிருவோரும்
ஒற்றைத் துகிலா லுடைபுனைந்து - மற்றிந்த
பொற்றுகிலாற் புள்வளைக்கப் போதுவோ மென்றுரைத்தான்
பற்றகலா வுள்ளம் பரிந்து.

நளன் தன் ஆடையால் புள் வளைத்தது

250. எற்றித் திரைபொரநொந் தேறி யிளமணலில்
பற்றிப் பவழம் படர்நிழற்கீழ் - முத்தீன்று
வெள்வளைத்தா யோடுநீர் வேலைத் திருநாடன்
புள்வளைத்தா னாடையாற் போந்து.
அப்புள் வானில் அவ்வாடையுடன் எழுந்து கூறியது

251. கூந்த லிளங்குயிலுங் கோமானுங் கொண்டணைத்த
பூந்துகில்கொண் டந்தரத்தே போய்நின்று - வேந்தனே
நன்னாடு தோற்பித்தோண் நானேகா ணென்றதே
பொன்னாடு மாநிறத்த புள்.

நளதமயந்தியர் இருவரும் ஓராடையே கொண்டமை

252. காவிபோற் கண்ணிக்குங் கண்ணியந்தோட் காளைக்கும்
ஆவிபோ லாடையுமொன் றானதே - பூவிரியக்
கள்வேட்டு வண்டுழலுங் கானத் திடைக்கனகப்
புள்வேட்டை யாதரித்த போது.

தமயந்தி கலியைச் சபித்தது

253. அறம்பிழைத்தார் பொய்த்தா ரருள்சிதைத்தார் மானத்
திறம்பிழைத்தார் தெய்வ மிகழ்ந்தார் - புறங்கடையில்
சென்றார் புகுநரகஞ் சேர்வாய்கொ லென்றழியா
நின்றாள் விதியை நினைந்து.

தமயந்தி, தாம் அவ்விடம்விட்டு நீங்க விரும்பியது

254. வையந் துயருழப்ப மாயம் பலசூழ்ந்து
தெய்வங் கெடுத்தாற் செயலுண்டோ - மெய்வகையே
சேர்ந்தருளி நின்றதனிச் செங்கோலா யிங்கொழியப்
போந்தருளு கென்றாள் புலந்து.

சூரியாத்தமயம்
255. அந்த நெடுஞ்சுரத்தின் மீதேக வாங்கழலும்
வெந்தழலை யாற்றுவான் மேற்கடற்கே - எந்தை
குளிப்பான்போற் சென்றடைந்தான் கூரிருளால் பாரை
ஒளிப்பான்போற் பொற்றே ருடன்.

நளதமயந்தியர் இருளூடே கானிற் சென்றது

256. பானு நெடுந்தேர் படுகடலிற் பாய்ந்ததற்பின்
கான வடம்பின் கவட்டிலைகள் - மானின்
குளம்பேய்க்கும் நன்னாடன் கோதையொடுஞ் சென்றான்
இளம்பேய்க்குந் தோன்றா விருள்.

ஒரு பாழ்மண்டபம் அடைந்தது

257. எங்காம் புகலிடமென் றெண்ணி யிருள்வழிபோய்
வெங்கா னகந்திரியும் வேளைதனில் - அங்கேயோர்
பாழ்மண் டபங்கண்டான் பால்வெண் குடைநிழற்கீழ்
வாழ்மண் டபங்கண்டான் வந்து.

258. மூரி யிரவும்போய் முற்றிருளாய் மூண்டதால்
சாரு மிடமற்றுத் தானில்லை - சோர்கூந்தல்
மாதராய் நாமிந்த மண்டபத்தே கண்டுயிலப்
போதரா யென்றான் புலர்ந்து.

தமயந்தியின் துயரநிலை

259. வைய முடையான் மகரயாழ் கேட்டருளும்
தெய்வச் செவிகொதுகின் சில்பாடல் - இவ்விரவில்
கேட்டவா வென்றழுதாள் கெண்டையங்கண் நீர்சோரத்
தோட்டவார் கோதையாள் சோர்ந்து.

நளன் தமயந்தியைத் தேற்றியது

260. பண்டை வினைப்பயனைப் பாரிடத்தி லார்கடப்பார்
கொண்டல் நிழலிற் குழைதடவும் - கெண்டை
வழியனீ ரென்றான் மனநடுங்கி வெய்துற்
றழியனீ யென்றா னரசு.

மீண்டும் தமயந்தி வருந்தியது

261. விரைமலர்ப்பூ மெல்லணையு மெய்காவல் பூண்ட
பரிசனமும் பள்ளி யறையும் - அரசேநான்

காணேனிங் கென்னாக் கலங்கினாள் கண்பனிப்பப்
பூணேர் முலையாள் புலர்ந்து.

நளன் தமயந்தியைக் கண்ணுறங்குமாறு கூறியது

262. தீய வனமுந் துயின்று திசைஎட்டுமேதுயின்று
பேயுந் துயின்றதாற் பேர்யாமம் - நீயுமினிக்
கண்மேற் துயில்கை கடனென்றான் கைகொடுத்து
மண்மேற் றிருமேனி வைத்து.

நளனது துயரம்

263. புன்கண்கூர் யாமத்துப் பூழிமேற் றான்படுத்துத்
தன்கண் துயில்வாளைத் தான்கண்டும் - என்கண்
பொடியாதா லுள்ளாவி போகாதால் நெஞ்சம்
வெடியாதா லென்றான் விழுந்து.

தமயந்தியின் துயரம்

264. முன்றில்தனில் மேற்படுக்க முன்தா னையுமின்றி
இன்று துயில இறைவனுக்கே - என்றனது
கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்றழுதாள்
மைபுகுந்த கண்ணீர் வர.

மீண்டும் நளனது துயரம்

265. வீமன் திருமடந்தை விண்ணவரும் பெற்றிலாத்
தாம மெனக்களித்த தையலாள் - யாமத்துப்
பாரே யணையாப் படைக்கண் துயின்றாள்மற்
றாரோ துயரடையா ராங்கு.

கலி நளன் மன உறுதியைக் கலைத்தது

266. பெய்ம்மலர்ப்பூங் கோதை பிரியப் பிரியாத
செம்மை யுடைமனத்தான் செங்கோலான் - பொய்ம்மை
விலக்கினா னெஞ்சத்தை வேறாக்கி நின்று
கலக்கினான் வஞ்சக் கலி.

267. வஞ்சக் கலிவலியான் மாகத் தராவளைக்கும்
செஞ்சுடரின் வந்த கருஞ்சுடர்போல் - விஞ்ச
மதித்ததேர்த் தானை வயவேந்த னெஞ்சத்
துதித்ததே வேறோ ருணர்வு.

268. காரிகைதன் வெந்துயரங் காணாமல் நீத்தந்தக்
கூரிருளிற் போவான் குறித்தெழுந்து - நேரே
இருவர்க்கு மோருயிர்போ லெய்தியதோ ராடை
அரிதற் கவனினைந்தா னாங்கு.

269. எண்ணிய எண்ணம் முடிப்ப இகல்வேந்தன்
கண்ணி யதையறிந்து காய்கலியும் - பண்ணினுக்குக்
கேளான தேமொழியை நீக்கக் கிளரொளிசேர்
வாளாய் மருங்கிருந்தான் வந்து.

நளன் அடையை அரிந்தது

270. ஒற்றைத் துகிலு முயிரு மிரண்டாக
முற்றுந்தன் னன்பை முதலோடும் - பற்றி
அரிந்தா னரிந்திட் டவள்நிலைமை நெஞ்சில்
தெரிந்தா னிருந்தான் திகைத்து.

நளனது பிரிவுத்துயர்

271. போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும்
ஆயர் கொணர்ந்த அடுபாலின் - தோயல்
கடைவார்தங் கைபோல் ஆயிற்றே காலன்
வடிவாய வேலான் மனம்.

272. சிந்துரத்தான் தெய்வ முனிவன் தெரிந்துரைத்த
மந்திரத்தால் தம்பித்த மாநீர்போல் - முந்த
ஒளித்ததேர்த் தானை யுயர்வேந்த னெஞ்சம்
வலித்ததே தீக்கலியால் வந்து.

273. தீக்கா னகத்துறையுந் தெய்வங்காள்! வீமன்தன்
கோக்கா தலியைக் குறிக்கொண்மின் - நீக்காத
காதலன்பு மிக்காளைக் காரிருளிற் கைவிட்டின்
றேதிலன்போற் போகின்றேன் யான்.

நளன் தமயந்தியை நீத்துச் சென்றது

274. ஏந்து மிளமுலையா ளின்னுயிருந் தன்னருளும்
பூந்துகிலும் வேறாகப் போயினான் - தீந்தேன்
தொடைவிரவு நாள்மாலை சூட்டினாள் தன்னை
இடையிருளிற் கானகத்தே யிட்டு.

275. தாருவெனப் பார்மேல் தருசந் திரன்சுவர்க்கி
மேருவரைத் தோளான் விரவார்போல் - கூரிருளிற்
செங்கா னகஞ்சிதையத் தேவியைவிட் டேகினான்
வெங்கா னகந்தனிலே வேந்து.

தமயந்தி விழித்துக்கொண்டு நளனைக் காணாது வருந்தியது

276. நீல மளவே நெகிழ நிரைமுத்தின்
கோல மலரின் கொடியிடையாள் - வேல்வேந்தே
எங்குற்ற யென்னா இனவளைக்கை நீட்டினாள்
அங்குத்தான் காணா தயர்ந்து.

277. வெய்ய தரையென்னும் மெல்லமளி யைத்தடவிக்
கையரிகொண் டெவ்விடத்துங் காணாமல் - ஐயகோ
என்னப்போய் வீழ்ந்தா ளினமேதி மென்கரும்பைத்
தின்னப்போம் நாடன் திரு.

278. அழல்வெஞ் சிலைவேட னம்புருவ ஆற்றா
துழலுங் களிமயில்போ லோடிக் - குழல்வண்
டெழுந்தோட வீழ்ந்தா ளிருகுழைமேற் கண்ணீர்க்
கொழுந்தோட வீமன் கொடி.

279. வான்முகிலும் மின்னும் வறுநிலத்து வீழ்ந்ததுபோல்
தானுங் குழலுந் தனிவீழ்ந்தாள் - ஏனம்
குளம்பான் மணிகிளைக்குங் குண்டுநீர் நாடன்
இளம்பாவை கைதலைமே லிட்டு.

பொழுது புலர்ந்தமை
280. தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம்
கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் - வெய்யோனை
வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல்
கூவினவே கோழிக் குலம்.

சூரியோதயம்

281. வான நெடுவீதி செல்லும் மணித்தேரோன்
தான மடந்தைக்குத் தார்வேந்தன் - போனநெறி
காட்டுவான் போலிருள்போய்க் கைவாங்கக் கானூடே
நீட்டுவான் செங்கரத்தை நின்று.

தமயந்தி நளன் அடிச்சுவடு கண்டு வருந்தியது

282. அல்லியந்தார் மார்ப னடித்தா மரையவள்தன்
நல்லுயிரு மாசையும்போல் நாறுதலும் - மல்லுறுதோள்
வேந்தனே என்று விழுந்தாள் விழிவேலை
சார்ந்தநீர் வெள்ளத்தே தான்.

தமயந்தி, மயில் முதலியவற்றை நோக்கி 'நளன் சென்ற வழி காட்டீர்' எனக் கூறியது

283. வெறித்த இளமான்காள்! மென்மயில்காள்! இந்த
நெறிக்கண் நடிதூழி வாழ்வீர் - பிறித்தெம்மைப்
போனாரைக் காட்டுதிரோ என்னாப் புலம்பினாள்
வானாடர் பெற்றிலா மான்.

ஒரு பாம்பு தமயந்தியைப்பற்றி விழுங்கலுற்றது

284. வேட்ட கரியை விழுங்கிப் பெரும்பசியால்
மோட்டு வயிற்றரவு முன்தோன்ற - மீட்டதனை
ஓரா தருகணைந்தாள் உண்தேன் அறற்கூந்தல்
போரார் விழியாள் புலர்ந்து.

285. அங்கண் விசும்பி னவிர்மதிமேற் சென்றடையும்
வெங்க ணரவுபோல் மெல்லியலைக் - கொங்கைக்கு
மேலெல்லாந் தோன்ற விழுங்கியதே வெங்கானின்
பாலெல்லாந் தீயுமிழும் பாம்பு.

தமயந்தி நளன் உதவிநாடி அழுதது

286. வாளரவின் வாய்ப்பட்டு மாயாமுன் மன்னவநின்
தாளடைந்து வாழுந் தமியேனைத் - தோளால்
விலக்காயோ வென்றழுதாள் வெவ்வரவின் வாய்க்கிங்
கிலக்காகி நின்றா ளெடுத்து.

287. வென்றிச் சினவரவின் வெவ்வா யிடைப்பட்டு
வன்துயராற் போயாவி மாள்கின்றேன் - இன்றுன்
திருமுகநான் காண்கிலேன் தேர்வேந்தே யென்றாள்
பொருமுகவேற் கண்ணாள் புலர்ந்து.

தமயந்தி தன் மக்களை நினைத்து வருந்தியது

288. மற்றொடுத்த தோள்பிரிந்து மாயாத வல்வினையேன்
பெற்றெடுத்த மக்காள் பிரிந்தேகும் - கொற்றவனை
நீரேனுங் காண்குதிரே என்றழுதாள் நீள்குழற்குக்

காரேனு மொவ்வாள் கலுழ்ந்து.

தமயந்தி தன் உயிர் நீங்கு நிலையில் நளனை நினைந்து வணங்கிக் கூறியது

289. அடையுங் கடுங்கானி லாடரவின் வாய்ப்பட்
டுடையுமுயிர் நாயகனே ஓகோ - விடையெனக்குத்
தந்தருள்வா யென்னாத்தன் தாமரைக்கை கூப்பினாள்
செந்துவர்வாய் மென்மொழியாள் தேர்ந்து.

ஒரு வேடன் அங்கு வந்தது

290. உண்டோ ரழுகுரலென் றொற்றி வருகின்ற
வெண்தோடன் செம்பங்கி வில்வேடன் - கண்டான்
கழுகுவாழ் கானகத்துக் காரரவின் வாயில்
முழுகுவாள் தெய்வ முகம்.

தமயந்தி அவ்வேடனை வேண்டிக் கொண்டது

291. வெய்ய அரவின் விடவாயி னுட்பட்டேன்
ஐயன்மீ ருங்கட் கபயம்யா - னுய்ய
அருளீரோ என்னா அரற்றினா ளஞ்சி
இருளீரும் பூணா ளெடுத்து.

வேடன் தமயந்தியைப் பாம்பின் வயினின்று மீட்டது

292. சங்க நிதிபோல் தருசந் திரன்சுவர்க்கி
வெங்கலிவாய் நின்றுலகம் மீட்டாற்போல் - மங்கையைவெம்
பாம்பின்வாய் நின்றும் பறித்தான் பகைகடிந்த
காம்பின்வாய் வில்வேடன் கண்டு.

தமயந்தி வேடன் உதவிக்கு நன்றி கூறியது

293. ஆருயிரும் நானு மழியாமல் ஐயாவிப்
பேரரவின் வாயிற் பிழைப்பித்தாய் - தேரில்
இதற்குண்டோ கைம்மா றெனவுரைத்தாள் வென்றி
விதர்ப்பன்றான் பெற்ற விளக்கு.

வேடன் தமயந்தியை விரும்பித் தன்னுடன் வர அழைத்தது

294. இந்து நுதலி எழில்நோக்கி ஏதோதன்
சிந்தை கருதிச் சிலைவேடன் - பைந்தொடிநீ
போதுவா யென்னுடனே யென்றான் புலைநரகுக்
கேதுவாய் நின்றா னெடுத்து.

தமயந்தி வேடனிடம் தப்பி ஓட முயன்றது

295. வேட னழைப்ப விழிபதைத்து வெய்துயிரா
ஆடன் மயில்போல் அலமரா - ஓடினாள்
தூறெலா மாகச் சுரிகுழல்வேற் கண்ணினீர்
ஆறெல்லா மாக வழுது.

தமயந்தி சீறிவிழிக்க வேடன் எரிந்து நீறானது

296. தீக்கட் புலிதொடரச் செல்லுஞ் சிறுமான்போல்
ஆக்கை தளர வலமந்து - போக்கற்றுச்
சீறா விழித்தாள் சிலைவேட னவ்வளவில்
நீறாய் விழுந்தா னிலத்து.

தமயந்தியை ஒரு வணிகன் கண்டு வினாவியது

297. அவ்வளவி லாதிப் பெருவழியி லாய்வணிகன்
இவ்வளவு தீவினையே னென்பாள்தன் - மெய்வடிவைக்
கண்டானை யுற்றான் கமலமயி லேயென்றான்
உண்டாய தெல்லா முணர்ந்து.

298. எக்குலத்தாய் யார்மடந்தை யாதுன்னூர் யாதுன்பேர்
நெக்குருகி நீயழுதற் கென்னிமித்தம் - மைக்குழலாய்
கட்டுரைத்துக் காணென்றான் கார்வண்டு காந்தாரம்
விட்டுரைக்குந் தார்வணிகர் வேந்து.

299. முன்னை வினையின் வலியால் முடிமன்னன்
என்னைப் பிரிய இருங்கானில் - அன்னவனைக்
காணா தழுகின்றே னென்றாள் கதிரிமைக்கும்
பூணாரம் பூண்டாள் புலர்ந்து.

வணிகன் தமயந்தியைச் சேதி நகரில் விட்டுச் சென்றது

300. சேதி நகர்க்கே திருவைச் செலவிட்டப்
போதிற் கொடைவணிகன் போயினான் - நீதி
கிடத்துவான் மன்னவர்தங் கீர்த்தியினைப் பார்மேல்
நடத்துவான் வட்டை நடந்து.

தமயந்தியைக் கண்ட பணிப்பெண்கள் சேதியரசன் தேவிக்கு அறிவித்தது

301. அற்ற துகிலு மறாதொழுகு கண்ணீரும்
உற்ற துயரு முடையவளாய் - மற்றொருத்தி
நின்றாளைக் கண்டோ ம் நிலவேந்தன் பொற்றேவி
என்றார் மடவா ரெடுத்து.

சேதிராசன் தேவி தமயந்தியை அழைத்து வரச் செய்தது

302. போயகலா முன்னம் புனையிழையாய் பூங்குயிலை
ஆய மயிலை யறியவே - நீயேகிக்
கொண்டுவா வென்றாள்தன் கொவ்வைக் கனிதிறந்து
வண்டுவாழ் கூந்தன் மயில்.

சேதியரசன் தேவி தமயந்தியை வினாவியது

303. அந்தா மரையி லவளேயென் றையுற்றுச்
சிந்தா குலமெனக்குத் தீராதால் - பைந்தொடியே
உள்ளவா றெல்லா முரையென்றா ளொண்மலரின்
கள்ளவார் கூந்தலாள் கண்டு.

தமயந்தியின் மறுமொழி

304. என்னைத் தனிவனத்திட் டென்கோன் பிரிந்தேக
அன்னவனைக் காணா தலமருவேன் - இந்நகர்க்கே
வந்தே னிதுவென் வரவென்றாள் வாய்புலராச்
செந்தேன் மொழிபதறாத் தேர்ந்து.

தமயந்தி அரண்மனையில் தங்கியிருந்தது

305. உன்றலைவன் தன்னை யொருவகையால் நாடியே
தந்து விடுமளவுந் தாழ்குழலாய் - என்றனுடன்
இங்கே யிருக்க இனிதென்றா ளேந்திழையைக்
கொங்கேயுந் தாராள் குறித்து.

வீமராசன் நளனையும் தமயந்தியையும் தேடிவர ஒரு மறையவனை ஏவியது

306. ஈங்கிவளிவ் வாறிருப்ப இன்னலுழந் தேயேகிப்
பூங்குயிலும் போர்வேற் புரவலனும் - யாங்குற்றார்
சென்றுணர்தி யென்று செலவிட்டான் வேதியனைக்
குன்றுறழ்தோள் வீமன் குறித்து.

மறையோன் சேதிநாடு சென்று தமயந்தியைக் கண்டது

307. ஓடும் புரவித்தேர் வெய்யோ னொளிசென்று
நாடு மிடமெல்லாம் நாடிப்போய்க் - கூடினான்
போதிற் றிருநாடும் பொய்கைத் திருநாடாம்
சேதித் திருநாடு சென்று.

308. தாமஞ்சே ரோதித் தமயந்தி நின்றாளை
ஆமென் றறியா அருமறையோன் - வீமன்
கொடிமேல் விழுந்தழுதான் கொம்புமவன் செம்பொன்
அடிமேல் விழுந்தா ளழுது.

மறையோன் சேதியரசியிடம் தமயந்தியின் நிலை அறிவித்ததும் அவள் துயரும்

309. மாரி பொருகூந்தன் மாதராய் நீபயந்த
காரிகைதான் பட்டதுயர் கண்டாயோ - சோர்குழலும்
வேணியாய் வெண்டுகிலும் பாதியாய் வெந்துயருக்
காணியாய் நின்றா ளயர்ந்து.

310. தன்மக ளாவ தறியாத் தடுமாறாப்
பொன்வடிவின் மேலழுது போய்வீழ்ந்தாள் - மென்மலரைக்
கோதிப்போய் மேதி குருகெழுப்புந் தண்பணைசூழ்
சேதிக்கோன் தேவி திகைத்து.

சேதிராசன் தமயந்தியை அவள் தந்தை நகருக்கு அனுப்பியது

311. கந்தனையுங் கன்னியையுங் கண்டாயி னுஞ்சிறிது
தன்துயரந் தீர்ந்து தனியாறத் - தந்தை
பதியிலே போக்கினான் சேதியர்கோன் பண்டை
விதியிலே போந்தாளை மீண்டு.

தமயந்தியைக் கண்ட குண்டினபுர மக்களின் துயரம்

312. கோயிலு மந்தப் புரமும் கொடிநுடங்கும்
வாயிலும் நின்று மயங்கியதே - தீயகொடும்

கானாள மக்களையுங் கைவிட்டுக் காதலன்பின்
போனாள் புகுந்த பொழுது.

313. அழுவார் விழுவா உயிர்ப்பார்
தொழுவார் தமரெங்குஞ் சூழ்வார் - வழுவாக்
காமநீ ரோதக் கடல்கிளர்ந்தால் ஒத்தவே
நாமவேல் வீமன் நகர்.

314, தந்தையைமுன் காண்டலுமே தாமரைக்க ணீர்சொரியச்
சிந்தை கலங்கித் திகைத்தலமந் - தெந்தாயான்
பட்டதே யென்னப்போய் வீழ்ந்தாள் படைநெடுங்கண்
விட்டநீர் மேலே விழ.

தமயந்தியைக் கண்ட தாய்தந்தையரும் சுற்றத்தாரும் கொண்ட துயர்

315. செவ்வண்ண வாயாளுந் தேர்வேந் தனுமகளை

அவ்வண்ணங் கண்டக்கா லாற்றுவரோ - மெய்வண்ணம்
ஓய்ந்துநா நீர்போ யுலர்கின்ற தொத்ததமர்
நீந்தினார் கண்ணீரி னின்று.

316. பனியிருளிற் பாழ்மண் டபத்திலே யுன்னை
நினையாது நீத்தகன்ற போது - தனியேநின்
றென்னினைந்து என்செய்தா யென்னாப் புலம்பினாள்
பொனினைத்தாய் நோக்கிப் புலர்ந்து.

கலிதொடர் காண்டம் முற்றும்
========================


3. கலிநீங்கு காண்டம்
--------------------

தமயந்தியைப் பிரிந்து சென்ற நளன் தீயிடைப்பட்ட ஒருவன் துயரக்குரல் கேட்டது

317. மன்னா வுனக்கபய மென்னா வனத்தீயில்
பன்னாக வேந்தன் பதைத்துருகிச் - சொன்ன
மொழிவழியே சென்றான் முரட்கலியின் வஞ்சப்
பழிவழியே செல்கின்றான் பார்த்து.

நளன் ஒரு பாம்பைத் தீயிடைக் கண்டது

318. ஆருந் திரியா அரையிருளில் அங்கனமே
சோர்குழலை நீத்த துயரோடும் - வீரன்
திரிவானத் தீக்கானிற் செந்தீயின் வாய்ப்பட்
டெரிவானைக் கண்டா னெதிர்.

நளன் தீயிடம் சென்றது

319. தீக்கடவுள் தந்த வரத்தைத் திருமனத்தில்
ஆக்கி யருளா லரவரசை - நோக்கி
அடைந்தா னடைதலுமே ஆரழலோ னஞ்சி
உடைந்தான் போய்ப்புக்கான் உவர்ந்து.

பாம்பு தனது வரலாறு கூறித் தன்னை விடுவிக்க வேண்டியது

320. வேத முனியொருவன் சாபத்தால் வெங்கானில்

ஆதபத்தின் வாய்ப்பட் டழிகின்றேன் - காதலால்
வந்தெடுத்துக் காவென்றான் மாலை மணிவண்டு
சந்தெடுத்த தோளானைத் தான்.

321. சீரியாய் நீயெடுப்பத் தீமை கெடுகின்றேன்
கூருந் தழலவித்துக் கொண்டுபோய்ப் - பாரில்
விடுகென்றான் மற்றந்த வெந்தழலால் வெம்மைப்
படுகின்றான் வேல்வேந்தைப் பார்த்து.

322. என்றுரைத்த அவ்வளவி லேழுலகுஞ் சூழ்கடலும்
குன்றுஞ் சுமந்த குலப்புயத்தான் - வென்றி
அரவரசைக் கொண்டகன்றா னாரணியந் தன்னின்
இரவரசை வென்றா னெடுத்து.

323. மண்ணின்மீ தென்றனைநின் வன்றாளா லொன்றுமுதல்
எண்ணித் தசவென் றிடுகென்றான் - நண்ணிப்போர்
மாவலான் செய்த வுதவிக்கு மாறாக
ஏவலாற் றீங்கிழைப்பே னென்று.

324. ஆங்கவன்றா னவ்வா றுரைப்ப அதுகேட்டுத்
தீங்கலியாற் செற்ற திருமனத்தான் - பூங்கழலை
மண்ணின்மேல் வைத்துத் தசவென்ற வாய்மையால்
எண்ணினான் வைத்தா னெயிறு.

325. வீமன் மடந்தை விழிமுடியக் கண்டறியா
வாம நெடுந்தோள் வறியோருக் - கேமம்
கொடாதார் அகம்போற் குறுகிற்றே மெய்ம்மை
விடாதான் திருமேனி வெந்து.

அரவை நோக்கி நளன் உரைத்தது

326. ஆற்ற லரவரசே யாங்கென் னுருவத்தைச்
சீற்றமொன் றின்றிச் சினவெயிற்றால் - மாற்றுதற்கின்
றென்கா ரணமென்றா னேற்றமரிற் கூற்றழைக்கும்
மின்கா லயின்முகவேல் வேந்து.

அரவின் மறுமொழியும் அது அளித்த வரமும்

327. காயுங் கடகளிற்றாய் கார்க்கோ டகனென்பேர்
நீயிங்கு வந்தமை யானினைந்து - காயத்தை
மாறாக்கிக் கொண்டு மறைந்துறைதல் காரணமா
வேறாக்கிற் றென்றான் விரைந்து.

328. கூனிறால் பாயக் குவளை தவளைவாய்த்
தேனிறால் பாயுந் திருநாடா - கானில்
தணியாத வெங்கனலைத் தாங்கினா யிந்த
அணியாடை கொள்கென்றா னாங்கு.

329. சாதி மணித்துகில்நி சாத்தினால் தண்கழுநீர்ப்
போதின்கீழ் மேயும் புதுவரால் - தாதின்
துளிக்குநா நீட்டுந் துறைநாடர் கோவே
ஒளிக்குநாள் நீங்கு முரு.

330. வாகு குறைந்தமையால் வாகுவனென் றுன்னாமம்
ஆக வயோத்தி நகரடைந்து - மாகனகத்
தேர்த் தொழிற்கு மிக்கானீ யாகென்றான் செம்மனத்தால்
பார்த்தொழிற்கு மிக்கானைப் பார்த்து.

நளன் அக்கான் கடந்து சென்றது

331. இணையாரு மில்லா னிழைத்த உதவி
புணையாகச் சூழ்கானிற் போனான் - பணையாகத்
திண்ணாக மோரெட்டுந் தாங்குந் திசையனைத்தும்
எண்ணாக வேந்த னெழுந்து.

நளன் கடற்கரையைக் கண்டது

332. நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்
கனற்புகைய வேகின்றான் கண்டான் - பனிக்குருகு
தன்படாம் நீழல் தனிப்பேடைப் பார்த்திரவு
கண்படா வேலைக் கரை.

நளன் கடற்கரையில் பலவற்றைக் கண்டு புலம்பல்

333. கொம்ப ரிளங்குருகே கூறா திருத்தியால்
அம்புயத்தின் போதை யறுகாலால் - தும்பி
திறக்கத்தே னூறுந் திருநாடன் பொன்னை
உறக்கத்தே நீத்தேனுக் கொன்று.

334. புன்னை நறுந்தாது கோதிப் பொறிவண்டு
கன்னிப் பெடையுண்ணக் காத்திருக்கும் - இன்னருள்கண்
டஞ்சினா னாவி யழிந்தா னறவுயிர்த்து
நெஞ்சினா லெல்லாம் நினைந்து.

335. காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவா யாங்கலவ ஓடி
ஒளிக்கின்ற தென்னோ வுரை.

336. பானலே சோலைப் பசுந்தென்றல் வந்துலவும்
கானலே வேலைக் கழிக்குருகே - யானுடைய
மின்னிமைக்கும் பூணாரம் வீங்கிருள்வா யாங்குணர்ந்தால்
என்னினைக்குஞ் சொல்வீ ரெனக்கு.

நளன் அயோத்தி நகரை அடைந்தது

337. முந்நீர் மடவார் முறுவல் திரள்குவிப்ப
நன்னீ ரயோத்தி நகரடைந்தான் - பொன்னீர்
முருகுடைக்குந் தாமரையின் மொய்ம்மலரைத் தும்பி
அருகுடைக்கும் நன்னாட் டரசு.

நளன் அயோத்தி மன்னனை அடைதல்

338. மான்தேர்த் தொழிற்கு மடைத்தொழிற்கு மிக்கோனென்று
ஊன்தேய்க்கும் வேலா னுயர்நறவத் - தேன்தோய்க்கும்
தார்வேந்தற் கென்வரவு தானுரைமி னென்றுரைத்தான்
தேர்வேந்தன் வாகுவனாய்ச் சென்று.

339. பொய்யடையாச் சிந்தைப் புரவலனை நோக்கித்தன்
செய்ய முகமலர்ந்து தேர்வேந்தன் - ஐயநீ
எத்தொழிற்கு மிக்கானீ யாதுன் பெயரென்றான்
கைத்தொழிற்கு மிக்கானைக் கண்டு.

340. அன்னம் மிதிப்ப அலர்வழியுந் தேறல்போயச்
செந்நெல் விளைக்குந் திருநாடர் - மன்னா
மடைத்தொழிலுந் தேர்த்தொழிலும் வல்லன்யா னென்றான்
கொடைத்தொழிலின் மிக்கான் குறித்து.

தமயந்தி நளனைத் தேடப் புரோகிதனை விடுத்தது

341. என்னை யிருங்கானில் நீத்த இகல்வேந்தன்
தன்னைநீ நாடுகெனத் தண்கோதை - மின்னுப்
புரைகதிர்வேல் வேந்தன் புரோகிதனுக் கிந்த
உரைபகர்வ தானா ளுணர்ந்து.

342. காரிருளில் பாழ்மண் டபத்தேதன் காதலியைச்
சோர்துயிலின் நீத்தல் துணிவென்றோ - தேர்வேந்தற்
கென்றறைந்தா நேர்நின் றெதிர்மாற்றந் தந்தாரைச்
சென்றறிந்து வாவென்றாள் தேர்ந்து.

புரோகிதன் அயோத்தியை அடைந்தது

343. மின்னாடும் மால்வரையும் வேலையும் வேலைசூழ்
நன்னாடுங் கானகமு நாடினான் - மன்னு
கடந்தாழ் களியானைக் காவலனைத் தேடி
அடைந்தா னயோத்தி நகர்.

புரோகிதன் கூறிய மொழிகேட்டு நளன் கூறிய மறுமொழி

344. கானகத்துக் காதலியைக் காரிருளிற் கைவிட்டுப்
போனதுவும் வேந்தற்குப் போதுமோ - தானென்று
சாற்றினா னந்தவுரை தார்வேந்தன் தன்செவியில்
ஏற்றினான் வந்தா னெதிர்.

345. ஒண்டொடி தன்னை யுறக்கத்தே நீத்ததுவும்
பண்டை விதியின் பயனேகாண் - தண்டரளப்
பூத்தாம வெண்குடையான் பொன்மகளை வெவ்வனத்தே
நீத்தானென் றையுறேல் நீ.

தமயந்தி வந்த புரோகிதனை வினாவியது

346. எங்க ணுறைந்தனைகொல் எத்திசைபோய் நாடினைகொல்
கங்கைவள நாட்டார்தங் காவலனை - அங்குத்
தலைப்பட்ட வாறுண்டோ சாற்றென்றாள் கண்ணீர்
அலைப்பட்ட கொங்கையா ளாங்கு.

புரோகிதன் மறுமொழி

347. வாக்கினால் மன்னவனை யொப்பான் மதித்தொருகால்
ஆக்கையே நோக்கி னவனல்லன் - பூக்கமழும்
கூந்தலாய் மற்றக் குலப்பாக னென்றுரைத்தான்
ஏந்துநூல் மார்ப னெடுத்து.

தமயந்தி தன் இரண்டாஞ் சுயம்வரச் செய்தி அறிவிக்கச் செய்தது

348. மீண்டோ ர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை
பூண்டாளென் றந்தணநீ போயுரைத்தால் - நீண்ட
கொடைவேந்தற் கித்தூரந் தேர்க்கோலங் கொள்வான்
படைவேந்த னென்றாள் பரிந்து.

இரண்டாஞ் சுயம்வரச் செய்தி கேட்டு இருதுபன்னன் கூறியது

349. எங்கோன் மகளுக் கிரண்டாஞ் சுயம்வரமென்
றங்கோர் முரச மறைவித்தான் - செங்கோலாய்
அந்நாளும் நாளை யளவென்றா னந்தணன்போய்த்
தென்னாளுந் தாரானைச் சேர்ந்து.

350. வேத மொழிவாணன் மீண்டுஞ் சுயம்வரத்தைக்
காதலித்தாள் வீமன்றன் காதலியென் - றோதினான்
என்செய்கோ மற்றிதனுக் கென்றா னிகல்சீறும்
மின்செய்த வேலான் விரைந்து.

நளன் அதுகேட்டுக் கூறியது

351. குறையாத கற்பினாள் கொண்டானுக் கல்லால்
இறவாத வேந்திழையா ளின்று - பறிபீறி
நெல்லிற் பருவரா லோடும் நெடுநாடா
சொல்லப் படுமோவிச் சொல்.

இருதுபன்னன் கூறிய சமாதானம்

352. என்மே லெறிகின்ற மாலை யெழில்நளன்தன்
தன்மேல் விழுந்ததுகாண் முன்னாளில் - அன்னதற்குக்
காரணந்தா னீதன்றோ வென்றான் கடாஞ்சொரியும்
வாரணந்தா னன்னான் மறித்து.

நளனது தியக்கம்

353. முன்னை வினையான் முடிந்ததோ மொய்குழலாள்
என்னைத்தான் காண விசைந்ததோ - தன்மரபுக்
கொவ்வாத வார்த்தை யுலகத் துரைப்பட்ட
தெவ்வாறு கொல்லோ விது?

நளன் இருதுபன்னனுக்குத் தேரோட்டிச் செல்ல உடன்பட்டது

354. காவலனுக் கேவற் கடன்பூண்டேன் மற்றவன்றன்
ஏவன் முடிப்ப னினியென்று - மாவிற்
குலத்தேரைப் பூட்டினான் கோதையர்தங் கொங்கை
மலர்த்தேன் அளிக்குந்தார் மன்.

355. ஒற்றைத் தனியாழித் தேரென்ன வோடுவதோர்
கொற்ற நெடுந்தேர் கொடுவந்தேன் - மற்றிதற்கே
போந்தேறு கென்றுரைத்தான் பொம்மென் றளிமுரலத்
தீந்தேறல் வாக்குந்தார்ச் சேய்.

நளன் தேர் ஓட்டிய சிறப்பு

356. முந்தை வினைகுறுக மூவா மயல்கொண்டான்
சிந்தை யினுங்கடுகச் சென்றதே - சந்தவிரைத்
தார்குன்றா மெல்லோதி தன்செயலைத் தன்மனத்தே
தேர்கின்றா னூர்கின்ற தேர்.

357. மேலாடை வீழ்ந்த தெடுவென்றா னவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டா னேறிவர வெம்மைக் கலிச்சூதில்
மால்கொண்டான் கோல்கொண்ட மா.

இருதுபன்னனது கணிதச் சிறப்பு

358. இத்தாழ் பணையி லிருந்தான்றிக் காயெண்ணில்
பத்தா யிரங்கோடி பாரென்ன - உய்த்ததனில்
தேர்நிறுத்தி யெண்ணினான் தேவர் சபைநடுவே
தார்நிறுத்துந் தோள்வேந்தன் தான்.

இருதுபன்னன் நளனிடம் கூறியது

359. ஏரடிப்பார் கோலெடுப்ப இந்தேன் தொடைபீறிக்
காரடுத்த சோலைக் கடனாடன் - தேரடுத்த
மாத்தொழிலு மித்தொழிலும் மாற்றுதியோ வென்றுரைத்தான்
தேர்தொழிலின் மிக்கானைத் தேர்ந்து.

கலி நளனைவிட்டு நீங்கியது

360. வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான்
தண்டார் புனைசந் திரன்சுவர்க்கி - கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கலி.

இருதுபன்னன் குண்டினபுரி அடைந்தது

361. ஆமை முதுகி லலவன் துயில்கொள்ளும்
காமர் நெடுநாடு கைவிட்டு - வீமன்தன்
பொன்னகரி சென்றடைந்தான் போர்வெட் டெழுங்கூற்றம்
அன்னகரி யொன்றுடையா னாங்கு.

இருதுபன்னன் வீமராசனுக்குத் தன் வரவு அறிவித்தது

362. வெற்றித் தனித்தேரை வீமன் பெருங்கோயில்
முற்றத் திருத்தி முறைசெய்யும் - கொற்றவற்குத்
தன்வரவு கூறப் பணித்துத் தனிப்புக்கான்
மன்விரவு தாரான் மகிழ்ந்து.

வீமராசன் இருதுபன்னனை வினாவியது

363. கன்னி நறுந்தேறன் மாந்திக் கமலத்தின்
மன்னித் துயின்ற வரிவண்டு - பின்னையும்போய்
நெய்தற் கவாவும் நெடுநாட நீயென்பால்
எய்தற் கவாவியவா றென்.

இருதுபன்னன் மறுமொழி

364. இன்றுன்னைக் காண்பதோ ராதரவால் யானிங்ஙன்
மன்றல் மலர்த்தாராய் வந்தடைந்தேன் - என்றான்
ஒளியார்வேற் கண்ணாள்மே லுள்ளந் துரப்பத்
தெளியாது முன்போந்த சேய்.

நளன் மடைவாயிற் புக்கது

365. ஆதி நெடுந்தேர்ப் பரிவிட் டவையாற்றிக்
கோதி லடிசிற் குறைமுடிப்பான் - மேதிக்
கடைவாயிற் கார்நீலங் கண்விழிக்கும் நாடன்
மடைவாயிற் புக்கான் மதித்து.

நளன் புக்க மடைவாயிற் சிறப்பு

366. ஆதி மறைநூ லனைத்துந் தெரிந்துணர்ந்த
நீதி நெறியாளர் நெஞ்சம்போல் - யாதும்
நிரப்பாம லெல்லாம் நிரம்பிற்றே பொற்றேர்
வரப்பாகன் புக்க மனை.

தமயந்தி நளன் செய்யும் மடைத்தொழிலை அறிந்துவரச் செய்தது

367. இடைச்சுரத்தில் தன்னை யிடையிருளில் நீத்த
கொடைத் தொழிலா னென்றயிர்த்தக் கோமான் - மடைத்தொழில்கள்
செய்கின்ற தெல்லாந் தெரிந்துணர்ந்து வாவென்றாள்
நைகின்ற நெஞ்சாள் நயந்து.

தமயந்தி தன் மக்களை நளன்பால் விடுத்தது

368. கோதை நெடுவேற் குமரனையுந் தங்கையையும்
ஆதி யரச னருகாகப் - போத
விளையாட விட்டவன்றன்மேற் செயல்நா டென்றாள்
வளையாடுங் கையாள் மதித்து.

தன் மக்களைக் கண்ட நளன் அவர்களோடு உரையாடியது

369. மக்களைமுன் காணா மனநடுங்கா வெய்துயிராப்
புக்கெடுத்து வீரப் புயத்தணையா - மக்காள்நீர்
என்மக்கள் போல்கின்றீர் யார்மக்க ளென்றுரைத்தான்
வன்மக் களியானை மன்.

370. மன்னு நிடதத்தார் வாழ்வேந்தன் மக்கள்யாம்
அன்னைதனைக் கான்விட் டவனேக - இந்நகர்க்கே
வாழ்கின்றோ மெங்கள் வளநாடு மற்றொருவன்
ஆள்கின்றான் னென்றா ரழுது.

371. ஆங்கவர் சொன்ன வுரைகேட் டழிவெய்தி
நீங்கா வுயிரோடு நின்றிட்டான் - பூங்காவின்
வள்ளம்போற் கோங்கு மலருந் திருநாடன்
வெள்ளம்போற் கண்ணீ ருகுத்து.

372. உங்க ளரசொருவன் ஆளநீ ரோடிப்போந்
திங்க ணுறைத லிழுக்கன்றோ - செங்கை
வளவரசே யென்றுரைத்தான் மாதவத்தாற் பெற்ற
இளவரசை நோக்கி யெடுத்து.

373. நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லால்
அஞ்சாரோ மன்ன ரடுமடையா! - எஞ்சாது
தீமையே கொண்ட சிறுதொழிலா யெங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி.

374. எந்தை கழலிணையி லெம்மருங்குங் காணலாம்
கந்து கடியும் கடாக்களிற்றின் - வந்து
பணிமுடியிற் பார்காக்கும் பார்வேந்தர் தங்கள்
மணிமுடியிற் றேய்ந்த வடு.

375. மன்னர் பெருமை மடைய ரறிவரோ
உன்னை யறியா துரைசெய்த - என்னை
முனிந்தருள லென்று முடிசாய்த்து நின்றான்
கனிந்துருகி நீர்வாரக் கண்.

அச்செய்தியைக் கேட்ட தமயந்தியின் துயரம்

376. கொற்றக் குமரனையுங் கோதையையுந் தான்கண்டு
மற்றவன்றா னாங்குரைத்த வாசகத்தை - முற்றும்
மொழிந்தாரம் மாற்றம் மொழியாத முன்னே
அழிந்தாள் விழுந்தா ளழுது.

377. கொங்கை யளைந்து குழல்திருத்திக் கோலஞ்செய்
அங்கை யிரண்டு மடுபுகையால் - இங்ஙன்
கருகியவோ வென்றழுதாள் காதலனை முன்னாள்
பருகியவேற் கண்ணாள் பதைத்து.

உள்ள நிலைமையைத் தமயந்தி தன் தந்தைக்கு அறிவித்தது

378. மற்றித் திருநகர்க்கே வந்தடைந்த மன்னவர்க்குக்
கொற்றத் தனித்தேருங் கொண்டணைந்து - மற்றும்
மடைத்தொழிலே செய்கின்ற மன்னவன்கா ணெங்கள்
கொடைத்தொழிலா னென்றாள் குறித்து.

வீமராசன் நளனைத் தோற்றத்தால் அறிய முடியாது வாக்கினால் அறிந்தது

379. போதலருங் கண்ணியான் போர்வேந்தர் சூழப்போய்
காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் - ஓதம்
வரிவளைகொண் டேறும் வளநாடன் தன்னைத்
தெரிவரிதா நின்றான் திகைத்து.

380. செவ்வாய் மொழிக்குஞ் செயலுக்குஞ் சிந்தைக்கும்
ஒவ்வாது கொண்ட உருவென்னா - எவ்வாயும்
நோக்கினா னோக்கித் தெளிந்தா னுணங்கியதோர்
வாக்கினான் தன்னை மதித்து.

வீமராசன் நளனைத் தன் உருக்காட்ட வேண்டியது

381. பைந்தலைய நாக பணமென்று பூகத்தின்
ஐந்தலையின் பாளைதனை ஐயுற்று - மந்தி
தெளியா திருக்குந் திருநாடா! உன்னை
ஒளியாது காட்டுன் னுரு.

நளன் கார்க்கோடகன் தந்த ஆடைகளை உடுத்ததும் சுய உருப்பெற்றதும்

382. அரவரசன் தான்கொடுத்த அம்பூந் துகிலின்
ஒருதுகிலை வாங்கி யுடுத்தான் - ஒருதுகிலைப்
போர்த்தான் பொருகலியின் வஞ்சனையாற் பூண்டளிக்கும்
கோத்தாயம் முன்னிழந்த கோ.

383. மிக்கோ னுலகளந்த மெய்யடியே சார்வாகப்
புக்கோ ரருவினைபோற் போயிற்றே - அக்காலம்
கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும்
மானகத்தேர்ப் பாகன் வடிவு.

நளன் மக்கள் அவனைச் சுயவடிவில் கண்டு மகிழ்ந்து வணங்கியது

384. தாதையைமுன் காண்டலுமே தாமரைக்கண் நீரரும்பப்

போதலருங் குஞ்சியான் புக்கணைந்து - கோதிலாப்
பொன்னடியைக் கண்ணிற் புனலாற் கழுவினான்
மின்னிடையா ளோடும் விழுந்து.

தமயந்தி நளனடியில் வீழ்ந்து வணங்கியது

385. பாதித் துகிலோடு பாய்ந்திழியுங் கண்ணீரும்
சீதக் களபதனஞ் சேர்மாசும் - போத
மலர்ந்ததார் வேந்தன் மலரடியில் வீழ்ந்தாள்
அலர்ந்ததே கண்ணீ ரவற்கு.

தமயந்தியின் துயரநிலை

386. வெவ்விடத்தோ டொக்கும் விழியிரண்டும் வீழ்துயில்கொள்
அவ்விடத்தே நீத்த அவரென்றே - இவ்விடத்தே
வாரார் முலையாளம் மன்னவனைக் காணாமல்
நீரால் மறைத்தனவே நின்று.

வானவர் நளனை வாழ்த்திப் பூமாரி பெய்தது

387. உத்தமரின் மற்றிவனை யொப்பா ரொருவரிலை
இத்தலத்தி லென்றிமையோ ரெம்மருங்கும் - கைத்தலத்தில்
தேமாரி பெய்யுந் திருமலர்த்தார் வேந்தன்மேல்
பூமாரி பெய்தார் புகழ்ந்து.

கலி, நளனைத் தன்பால் வரம் கொள்ள வேண்டியது

388. தேவியிவள் கற்புக்குஞ் செங்கோன் முறைமைக்கும்
பூவுலகி லொப்பார்யார் போதுவார் - காவலனே
மற்றென்பால் வேண்டும் வரங்கேட்டுக் கொள்ளென்றான்
முற்றன்பாற் பாரளிப்பான் முன்.

நளன் கேட்ட வரம்

389. உன்சரிதஞ் செல்ல வுலகாளுங் காலத்து
மின்சொரியும் வேலாய் மிகவிரும்பி - என்சரிதம்
கேட்டாரை நீயடையே லென்றான் கிளர்மணிப்பூண்
வாட்டானை மன்னன் மதித்து.

கலி நளனுக்கு வரமளித்து மீண்டது

390. என்காலத் துன்சரிதங் கேட்டாரை யானடையேன்
மின்கா லயில்வேலாய் மெய்யென்று - நன்காவி
மட்டுரைக்குஞ் சோலை வளநாடன் முன்னின்று

கட்டுரைத்துப் போனான் கலி.

வீமராசன் நளன் முதலியோர்க்கு விருந்தளித்தது

391. வேத நெறிவழுவா வேந்தனையும் பூந்தடங்கண்
கோதையையு மக்களையுங் கொண்டுபோய்த் - தாது
புதையத்தேன் பாய்ந்தொழுகும் பூஞ்சோலை வேலி
விதையக்கோன் செய்தான் விருந்து.

இருதுபன்னன் நளனிடம் தன் பிழை பொறுக்க வேண்டிப் பின் தன் நகர்க்கேகியது

392. உன்னையா னொன்று முணரா துரைத்தவெலாம்
பொன்னமருந் தாராய் பொறுவென்று - பின்னைத்தன்
மேனீர்மை குன்றா வெறுந்தேர் மிசைக்கொண்டான்
மானீ ரயோத்தியார் மன்.

நளன் தனது மனைவி மக்களுடன் நிடதநாடு சென்றது

393. விற்றானை முன்செல்ல வேல்வேந்தர் பின்செல்லப்
பொற்றேர்மேற் றேவியொடும் போயினான் - முற்றாம்பல்
தேநீ ரளித்தருகு செந்நெற் கதிர்விளைக்கும்
மாநீர் நிடதத்தார் மன்.

394. தானவரை மெல்லத் தரித்தநெடு வைவேலாய்
ஏனைநெறி தூரமினி யெத்தனையோ - மானேகேள்
இந்த மலைகடந் தேழுமலைக் கப்புறமா
விந்தமெனு நம்பதிதான் மிக்கு.

சூரியோதயம்

395. இக்கங்குல் போக இகல்வேல் நளனெறிநீர்
செய்க்கங்கு பாயுந் திருநாடு - புக்கங்
கிருக்குமா காண்பான்போ லேறினான் குன்றில்
செருக்குமான் தேர்வெய்யோன் சென்று.

நளன், மாவிந்த நகரைச் சார்ந்த ஒரு சோலையில் தங்கியது

396. மன்றலிளங் கோதையொடு மக்களுந் தானுமொரு
வென்றி மணிநெடுந்தேர் மேலேறிச் - சென்றடைந்தான்
மாவிந்த மென்னும் வளநகரஞ் சூழ்ந்தவொரு
பூவிந்தை வாழும் பொழில்.

நளன் புட்கரனுக்கு அறிவித்தது

397. மற்றவனுக் கென்வரவு சொல்லி மறுசூதுக்
குற்ற பணைய முளதென்று - கொற்றவனைக்
கொண்டணைவீ ரென்று குலத்தூ தரைவிடுத்தான்
தண்டெரியல் தேர்வேந்தன் தான்.

புட்கரன் நளனைக் கண்டது

398. மாய நெடுஞ்சூதில் வஞ்சித்த வன்னெஞ்சன்
தூய நறுமலர்ப்பூஞ் சோலைவாய் - ஆய
பெருந்தானை சூழப் பெடைநடையா ளோடும்
இருந்தானைக் கண்டா னெதிர்.

புட்கரன் நளனை நலம் வினாவியது

399. செங்கோ லரசன் முகம்நோக்கித் தேர்ச்சியிலா
வெங்கோ லரசன் வினாவினான் - அங்கோலக்
காவற் கொடைவேந்தே காதலர்க்குங் காதலிக்கும்
யாவர்க்குந் தீதிலவே யென்று.

நளனும் புட்கரனும் மறு சூது ஆடியது

400. தீது தருகலிமுன் செய்ததனை யோராதே
யாது பணைய மெனவியம்பச் - சூதாட
மையாழி யிற்றுயிலும் மாலனையான் வண்மைபுனை
கையாழி வைத்தான் கழித்து.

நளன் தன் நாடு முதலியன வென்று கொண்டது

401. அப்பலகை யொன்றி னருகிருந்தார் தாமதிக்கச்
செப்பரிய செல்வத் திருநகரும் - ஒப்பரிய
வன்றானை யோடு வளநாடும் வஞ்சனையால்
வென்றானை வென்றானவ் வேந்து.

புட்கரன் யாவும் இழ்ந்து தன் நாடு சென்றது

402. அந்த வளநாடு மவ்வரசு மாங்கொழிய
வந்த படியே வழிக்கொண்டான் - செந்தமிழோர்
நாவேய்ந்த சொல்லா னளனென்று போற்றிசைக்கும்
தேர்வேந்தற் கெல்லாங் கொடுத்து.

நளன் தன் நகரை அடைந்தது

403. ஏனை முடிவேந்த ரெத்திசையும் போற்றிசைப்பச்
சேனை புடைசூழத் தேரேறி - ஆனபுகழ்ப்
பொன்னகர மெய்தும் புரந்தரனைப் போற்பொலிந்து
நன்னகரம் புக்கான் நளன்.

நகர மாந்தரின் மகிழ்ச்சி நிலை

404. கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாண்முகமோ
நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ - பார்பெற்று
மாதோடும் மன்னன் வரக்கண்ட மாநகருக்
கேதோ வுரைப்ப னெதிர்.

(பின்னுரை)

405. வென்றி நிடதத்தார் வேந்தன் சரிதையீ
தென்றுரைத்து வேத யியல்முனிவன் - நன்றிபுனை
மன்னா பருவரலை மாற்றுதியென் றாசிமொழி
பன்னா நடத்திட்டான் பண்டு.

கலி நீங்கு காண்டம் முற்றும்

நளவெண்பா முற்றும்

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home