Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil Language & Literature > Cilapathikaram > pukaark kaaNtam > maturaik kANTam > vanjcik kANTam

 cilappatikAram   - vanjcik kANTam
of ilankO aTikaL

சிலப்பதிகாரம் - வஞ்சிக் காண்டம்
இளங்கோ அடிகள் இயற்றியது

[also in PDF]

[eText input:Etext input: Etext input: Mr. P.I. Arasu, Toronto, ON, Canada..;Proof-reading: Mr. P.K.Ilango, Erode, Tamilnadu, India; HTML encoding: Dr.K. Kalyanasundaram, Lausanne, Switzerland   - � Project Madurai

2000 மின்னுரையாக்கம்: மின்னுரையாக்கம்: திரு. பா. இ. அரசு, தொரோண்டோ, ஒண், கனடா.; பிழை திருத்தம்: திரு. பா. கா. இளங்கோ, ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா.; உயருரைக் குறிமொழியாக்கம்: திரு. கு. கல்யாணசுந்தரம்-� மதுரைத் திட்டம் 2000  

 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.]


3. வஞ்சிக் காண்டம்
உள்ளுரை
24. குன்றக் குரவை
25. காட்சிக் காதை
26. கால்கோட் காதை
27. நீர்ப்படைக் காதை
28. நடுகற் காதை
29. வாழ்த்துக் காதை
30. வரந்தரு காதை
கட்டுரை
நூற் கட்டுரை



24. குன்றக் குரவை
உரைப்பாட்டு மடை

குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி
அருவியாடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேம்முன்
மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க
முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோவென முனியாதே
மணமதுரையோ டரசுகேடுற வல்வினைவந் துருத்தகாலைக்
கணவனையங்கு இழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள்
என்றலும் இறைஞ்சியஞ் இணைவளைக்கை எதிர்கூப்பி
நின்றஎல்லையுள் வானவரும் நெடுமாரி மலர்பொழிந்து
குன்றவரும் கண்டுநிற்பக் கொழுநனொடு கொண்டுபோயினார்
இவள்போலும் நங்குலக்கோர் இருந்தெய்வம் இல்லையாதலின்
சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே
நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே
தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவுலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்
ஒருமுலை இழந்த நங்கைக்குப்
பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே; 1

கொளுச் சொல்

ஆங்கொன்று காணாய் அணியிழாய் ஈங்கிதுகாண்
அஞ்சனப் பூமி யரிதாரத் தின்னிடியல்
சிந்துரச் சுண்ணஞ் செறியத் தூய்த் தேங்கமழ்ந்து
இந்திர வில்லின் எழில்கொண் டிழுமென்று
வந்தீங் கிழியு மலையருவி யாடுதுமே;
ஆடுதுமே தோழி யாடுதுமே தோழி
அஞ்சலோம் பென்று நலனுண்டு நல்காதான்
மஞ்சுசூழ் சோலை மலையருவி ஆடுதுமே; 2

எற்றொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைக்
கற்றீண்டி வந்த புதுப்புனல்
கற்றீண்டி வந்த புதுப்புனல் மற்றையார்
உற்றாடி னோம்தோழி நெஞ்சன்றே; 3

என்னொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைப்
பொன்னாடி வந்த புதுப்புனல்
பொன்னாடி வந்த புதுப்புனல் மற்றையார்
முன்னாடி னோம்தோழி நெஞ்சன்றே; 4

யாதொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைப்
போதாடி வந்த புதுப்புனல்
போதாடி வந்த புதுப்புனல் மற்றையார்
மீதாடி னோம்தோழி நெஞ்சன்றே; 5

பாட்டுமடை

உரையினி மாதராய் உண்கண் சிவப்பப்
புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின்
உரவுநீர் மாகொன்ற வேலேந்தி ஏத்திக்
குரவை தொடுத்தொன்று பாடுகம்வா தோழி; 6

சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமு நீங்கா இறைவன்கை வேலன்றே
பாரிரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே; 7

அணிமுகங்க ளோராறும் ஈராறு கையும்
இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே
பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம்
மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே; 8

சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா ரறுவர்
திருமுலைப்பா லுண்டான் திருக்கைவே லன்றே
வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து
குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே; 9

பாட்டுமடை

இறைவளை நல்லாய் இதுநகையா கின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க
அறியாள்மற் றன்னை அலர்கடம்பன் என்றே
வெறியாடல் தான்விரும்பி வேலன்வரு கென்றாள்; 10

ஆய்வளை நல்லாய் இதுநகை யாகின்றே
மாமலை வெற்பனோய் தீர்க்கவரும் வேலன்
வருமாயின் வேலன் மடவன் அவனிற்
குருகு பெயர்க்குன்றங் கொன்றான் மடவன்; 11

செறிவளைக்கை நல்லாய் இதுநகையா கின்றே
வெறிகமழ் வெற்பனோய் தீர்க்கவரும் வேலன்
வேலன் மடவன் அவனினுந் தான்மடவன்
ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்; 12

நேரிழை நல்லாய் நகையா மலைநாடன்
மார்பு தருவெந்நோய் தீர்க்க வரும்வேலன்
தீர்க்க வரும்வேலன் தன்னினுந் தான்மடவன்
கார்க்கடப்பந் தாரெங் கடவுள் வருமாயின்; 13

பாட்டுமடை

வேலவனார் வந்து வெறியாடும் வெங்களத்து
நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன் புதல்வன் வரும்வந்தால்
மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே; 14

கயிலைநன் மலையிறை மகனைநின் மதிநுதல்
மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
அயல்மணம் ஒழியருள் அவர்மணம் எனவே; 15

மலைமகள் மகனைநின் மதிநுதல் மடவரல்
குலமலை உறைதரு குறவர்தம் மகளார்
நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம்
பலரறி மணமவர் படுகுவ ரெனவே; 16

குறமகள் அவளெம குலமகள் அவளொடும்
அறுமுக வொருவநின் அடியிணை தொழுதேம்
துறைமிசை நினதிரு திருவடி தொடுநர்
பெருகநன் மணம்விடு பிழைமண மெனவே; 17

பாட்டுமடை

என்றியாம் பாட மறைநின்று கேட்டருளி
மன்றலங் கண்ணி மலைநாடன் போவான்முன்
சென்றேன் அவன்றன் திருவடி கைதொழுது
நின்றேன் உரைத்தது கேள்வாழி தோழி
கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி
மடந்தை பொருட்டால் வருவ திவ்வூர்
அறுமுகம் இல்லை அணிமயில் இல்லை
குறமகள் இல்லை செறிதோ ளில்லை
கடம்பூண் தெய்வ மாக நேரார்
மடவர் மன்றவிச் சிறுகுடி யோரே; 18

பாட்டுமடை

என்றீங்கு,
அலர்பாடு பெற்றமை யானுரைப்பக் கேட்டுப்
புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன
மலர்தலை வெற்பன் வரைவானும் போலும்
முலையினால் மாமதுரை கோளிழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தமராரும் கூடிப்
பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
நிலையொன்று பாடுதும் யாம்
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால்
மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே
பாடுற்றுப்
பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாளோர்
பைத்தர வல்குல்நம் பைம்புனத் துள்ளாளே
பைத்தர வல்குல் கணவனை வானோர்கள்
உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே
வானக வாழ்க்கை யமரர் தொழுதேத்தக்
கான நறுவேங்கைக் கீழாளோர் காரிகையே
கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ வில்லாளே
மறுதர வில்லாளை ஏத்திநாம் பாடப்
பெறுகதில் லம்மஇவ் வூருமோர் பெற்றி
பெற்றி யுடையதே பெற்றி யுடையதே
பொற்றொடி மாதர் கணவன் மணங்காணப்
பெற்றி யுடையதிவ் வூர்
என்றியாம்
கொண்டு நிலைபாடி ஆடும் குரவையைக்
கண்டுநம் காதலர் கைவந்தா ரானாது
உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர்
வில்லெழுதிய இமயத்தொடு
கொல்லி யாண்ட குடவர் கோவே.


25. காட்சிக் காதை
மாநீர் வேலிக் கடம்பெறிந்து இமயத்து
வானவர் மருள மலைவிற் பூட்டிய
வானவர் தோன்றல் வாய்வாட் கோதை
விளங்கில வந்தி வெள்ளி மாடத்து
இளங்கோ வேண்மா ளுடனிருந் தருளித் 5
துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும்
மஞ்சுசூழ் சோலை மலைகாண் குவமெனப்
பைந்தொடி ஆயமொடு பரந்தொருங் கீண்டி
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்
வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு 10
விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்
பொலம்பூங் காவும் புனல்யாற்றுப் பரப்பும்
இலங்குநீர்த் துருத்தியும் இளமரக் காவும்
அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி
ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த 15
பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று
கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை
நாகம் திலகம் நறுங்கா ழாரம்
உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து
மதுகரம் ஞிமிறொடு வண்டினம் பாட 20
நெடியோன் மார்பி லாரம் போன்று
பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை
இடுமண லெக்கர் இயைந்தொருங் கிருப்பக்
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும் 25
தினைக்குறு வள்ளையும் புனத்தெழு விளியும்
நறவுக்கண் ணுடைத்த குறவ ரோதையும்
பறையிசை அருவிப் பயங்கெழும் ஓதையும்
புலியொடு பொரூஉம் புகர்முக வோதையும்
கலிகெழு மீமிசைச் சேணோன் ஓதையும் 30
பயம்பில்வீழ் யானைப் பாக ரோதையும்
இயங்குபடை யரவமோ டியாங்கணு மொலிப்ப
அளந்துகடை யறியா அருங்கலம் சுமந்து
வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து
இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது 35
திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல
யானைவெண் கோடும் அகிலின் குப்பையும்
மான்மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும்
சந்தனக் குறையுஞ் சிந்துரக் கட்டியும்
அஞ்சனத் திரளும் அணியரி தாரமும் 40
ஏல வல்லியும் இருங்கறி வல்லியும்
கூவை நூறுங் கொழுங்கொடிக் கவலையும்
தெங்கின் பழனும் தேமாங் கனியும்
பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்
காயமும் கரும்பும் பூமலி கொடியும் 45
கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும்
பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்
ஆளியி னணங்கும் அரியின் குருளையும்
வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும்
குரங்கின் குட்டியுங் குடாவடி உளியமும் 50
வரையாடு வருடையும் மடமான் மறியும்
காசறைக் கருவும் மாசறு நகுலமும்
பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்
கானக் கோழியும் தேன்மொழிக் கிள்ளையும்
மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டாங்கு 55
ஏழ்பிறப் படியேம் வாழ்கநின் கொற்றம்
கான வேங்கைக் கீழோர் காரிகை
தான்முலை இழந்து தனித்துய ரெய்தி
வானவர் போற்ற மன்னோடும் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றனள் 60
எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ
நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்
பன்னூ றாயிரத் தாண்டுவா ழியரென
மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு
கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த 65
தண்டமி ழாசான் சாத்தனி� துரைக்கும்
ஒண்டொடி மாதர்க் குற்றதை யெல்லாம்
திண்டிறல் வேந்தே செப்பக் கேளாய்
தீவினைச் சிலம்பு காரண மாக
ஆய்தொடி அரிவை கணவற் குற்றதும் 70
வலம்படு தானை மன்னன் முன்னர்ச்
சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்
செஞ்சிலம் பெறிந்து தேவி முன்னர்
வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி
அஞ்சி லோதி அறிகெனப் பெயர்ந்து 75
முதிரா முலைமுகத் தெழுந்த தீயின்
மதுரை மூதூர் மாநகர் சுட்டதும்
அரிமா னேந்திய அமளிமிசை இருந்த
திருவீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கிணர்க் கோதை தன்றுயர் பொறாஅன் 80
மயங்கினன் கொல்லென மலரடி வருடித்
தலைத்தாள் நெடுமொழி தன்செவி கேளாள்
கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொறாஅள்
மன்னவன் செல்வுழிச் செல்க யானெனத்
தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல் 85
பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்றெனக் காட்டி இறைக்குரைப் பனள்போல்
தன்னாட் டாங்கண் தனிமையிற் செல்லாள்
நின்னாட் டகவயின் அடைந்தனள் நங்கையென்று 90
ஒழிவின் றுரைத்தீண் டூழி யூழி
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றமெனத்
தென்னர் கோமான் தீத்திறங் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்
எம்மோ ரன்ன வேந்தர்க் குற்ற 95
செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது
மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம் 100
பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்லெனத்
துன்னிய துன்பம் துணிந்துவந் துரைத்த 105
நன்னூற் புலவற்கு நன்கனம் உரைத்தாங்கு
உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும்
செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும்
நன்னுதல் வியக்கும் நலத்தோர் யாரென
மன்னவன் உரைப்ப மாபெருந் தேவி 110
காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து
அத்திறம் நிற்கநம் அகல்நா டடைந்தவிப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி 115
நூலறி புலவரை நோக்க ஆங்கவர்
ஒற்கா மரபிற் பொதியி லன்றியும்
விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக்
கற்கால் கொள்ளினுங் கடவு ளாகும்
கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும் 120
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்தெனப்
பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டு
முதுநீர்க் காவிரி முன்றுறைப் படுத்தல்
மறத்தகை நெடுவா ளெங்குடிப் பிறந்தோர்க்குச்
சிறப்பொடு வரூஉஞ் செய்கையோ அன்று 125
> புன்மயிர்ச் சடைமுடிப் புலரா வுடுக்கை
முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளரொடு பெருமலை யரசன்
மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக்
கடவு ளெழுதவோர் கல்தா ரானெனின் 130
வழிநின்று பயவா மாண்பில் வாழ்க்கை
கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்
முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதிமுடிக் களித்த மகட்பாற் காஞ்சியும்
தென்றிசை யென்றன் வஞ்சியொடு வடதிசை 135
நின்றெதி ரூன்றிய நீள்பெருங் காஞ்சியும்
நிலவுக்கதி ரளைந்த நீள்பெருஞ் சென்னி
அலர்மந் தாரமொடு ஆங்கயல் மலர்ந்த
வேங்கையொடு தொடுத்த விளங்குவிறல் மாலை
மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கெனக் 140
குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும்
நெடுமா ராயம் நிலைஇய வஞ்சியும்
வென்றார் விளங்கிய வியன்பெரு வஞ்சியும்
பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று வஞ்சியும்
குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் 145
வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன்
புட்கைச் சேனை பொலியச் சூட்டிப்
பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்தென்
வாய்வாள் மலைந்த வஞ்சிசூ டுதுமெனப்
பல்யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கென 150
வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும்
நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக்
கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி
பகைப்புறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை
திகைமுக வேழத்தின் செவியகம் புக்கன 155
கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம் 160
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய 165
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீ ருலகில் முழுவது மில்லை
இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது
கடவு ளெழுதவோர் கற்கே யாதலின்
வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம் 170
தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி
மண்டலை யேற்ற வரைக வீங்கென
நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா
வம்பணி யானை வேந்தர் ஒற்றே 175
தஞ்செவிப் படுக்குந் தகைமைய வன்றோ
அறைபறை யென்றே அழும்பில்வே ளுரைப்ப
நிறையருந் தானை வேந்தனும் நேர்ந்து
கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த
வாடா வஞ்சி மாநகர் புக்கபின் 180
வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொ றூழி யுலகங் காக்கென
விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்தோர்
கற்கொண்டு பெயருமெங் காவலன் ஆதலின்
வடதிசை மருங்கின் மன்ன ரெல்லாம் 185
இடுதிறை கொடுவந் தெதிரீ ராயின்
கடற்கடம் பெறிந்த கடும்போர் வார்த்தையும்
விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையும்
கேட்டு வாழுமின் கேளீ ராயின்
தோட்டுணை துறக்கும் துறவொடு வாழுமின் 190
தாழ்கழல் மன்னன் தன்றிரு மேனி
வாழ்க சேனா முகமென வாழ்த்தி
இறையிகல் யானை யெருத்தத் தேற்றி
அறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கென்.


26. கால்கோட் காதை
அறைபறை யெழுந்தபின் அரிமா னேந்திய
முறைமுதற் கட்டில் இறைமக னேற
ஆசான் பெருங்கணி அருந்திற லமைச்சர்
தானைத் தலைவர் தம்மொடு குழீஇ
மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி 5
முன்னிய திசையின் முறைமொழி கேட்ப
வியம்படு தானை விறலோர்க் கெல்லாம்
உயந்த்தோங்கு வெண்குடை உரவோன் கூறும்
இமையத் தாபதர் எமக்கீங் குணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி 10
நம்பா லொழிகுவ தாயி னாங்க�து
எம்போல் வேந்தர்க் கிகழ்ச்சியுந் தரூஉம்
வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக்
கடவு ளெழுதவோர் கற்கொண் டல்லது
வறிது மீளுமென் வாய்வா ளாகில் 15
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற்
குடிநடுக் குறூஉங் கோலே னாகென
ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும்
சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால் 20
அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின்
வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ
இமைய வரம்பநின் இகழ்ந்தோ ரல்லர்
அமைகநின் சினமென ஆசான் கூற
ஆறிரு மதியினுங் காருக வடிப்பயின்று 25
ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து
வெந்திறல் வேந்தே வாழ்கநின் கொற்றம்
இருநில மருங்கின் மன்னரெல் லாம்நின்
திருமலர்த் தாமரைச் சேவடி பணியும்
முழுத்தம் ஈங்கிது முன்னிய திசைமேல் 30
எழுச்சிப் பாலை யாகென் றேத்த
மீளா வென்றி வேந்தன் கேட்டு
வாளுங் குடையும் வடதிசைப் பெயர்க்கென
உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப்
பொருந ரார்ப்பொடு முரசெழுந் தொலிப்ப 35
இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின்
விரவுக்கொடி யடுக்கத்து நிரயத் தானையோடு
ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்
வெம்பரி யானை வேந்தற் கோங்கிய
கரும வினைஞருங் கணக்கியல் வினைஞரும் 40
தரும வினைஞருந் தந்திர வினைஞரும்
மண்டிணி ஞாலம் ஆள்வோன் வாழ்கெனப்
பிண்ட முண்ணும் பெருங்களிற் றெருத்தின்
மறமிகு வாளும் மாலைவெண் குடையும்
புறநிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்திப் 45
புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்
அரைசுவிளங் கவையம் முறையிற் புகுதர
அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த
பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப்
பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி 50
வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து
ஞாலங் காவலர் நாட்டிறை பயிரும்
காலை முரசம் கடைமுகத் தெழுதலும்
நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
உலகுபொதி உருவத் துயர்ந்தோன் சேவடி 55
மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாக் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு
மறையோ ரேந்திய ஆவுதி நறும்புகை
நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்
கடக்களி யானைப் பிடர்த்தலை யேரினன் 60
குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென
ஆடக மாடத் தறிதுயல் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் 65
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கின னாகித் தகைமையிற் செல்வுழி
நாடக மடந்தையர் ஆடரங் கியாங்கணும்
கூடையிற் பொலிந்து கொற்ற வேந்தே
வாகை தும்பை மணித்தோட்டுப் போந்தையோடு 70
ஓடை யானையின் உயர்முகத் தோங்க
வெண்குடை நீழலெம் வெள்வளை கவரும்
கண்களி கொள்ளுங் காட்சியை யாகென
மாகதப் புலவரும் வைதா ளிகரும்
சூதரும் நல்வலந் தோன்ற வாழ்த்த 75
யானை வீரரும் இவுளித் தலைவரும்
வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத்
தானவர் தம்மேற் றம்பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி நீங்கித்
தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும் 80
வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத
மலைமுதுகு நெளிய நிலைநா டதர்பட
உலக மன்னவன் ஒருங்குடன் சென்றாங்கு
ஆலும் புரவி யணித்தேர்த் தானையொடு
நீல கிரியின் நெடும்புறத் திறுத்தாங்கு 85
ஆடியல் யானையும் தேரும் மாவும்
பீடுகெழு மறவரும் பிறழாக் காப்பிற்
பாடி யிருக்கைப் பகல்வெய் யோன்றன்
இருநில மடந்தைக்குத் திருவடி யளித்தாங்கு
அருந்திறல் மாக்கள் அடியீ டேத்தப் 90
பெரும்பே ரமளி ஏறிய பின்னர்
இயங்குபடை அரவத் தீண்டொலி இசைப்ப
விசும்பியங்கு முனிவர் வியன்நிலம் ஆளும்
இந்திர திருவனைக் காண்குது மென்றே
அந்தரத் திழிந்தாங் கரசுவிளங் கவையத்து 95
மின்னொளி மயக்கும் மேனியொடு தோன்ற
மன்னவன் எழுந்து வணங்கிநின் றோனைச்
செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்
மலயத் தேகுதும் வான்பே ரிமய 100
நிலயத் தேகுதல் நின்கருத் தாகலின்
அருமறை யந்தணர் ஆங்குளர் வாழ்வோர்
பெருநில மன்ன பேணல்நின் கடனென்று
ஆங்கவர் வாழ்த்திப் போந்ததற் பின்னர்
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக் 105
கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும்
தங்குலக் கோதிய தகைசால் அணியினர்
இருள்படப் பொதுளிய சுருளிருங் குஞ்சி
மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர்
வடம்சுமந் தோங்கிய வளர்இள வனமுலைக் 110
கருங்கயல் நெடுங்கட் காரிகை யாரோடு
இருங்குயில் ஆல இனவண்டு யாழ்செய
அரும்பவிழ் வேனில் வந்தது வாரார்
காதல ரென்னும் மேதகு சிறப்பின்
மாதர்ப் பாணி வரியொடு தோன்றக் 115
கோல்வளை மாதே கோலங் கொள்ளாய்
காலங் காணாய் கடிதிடித் துரறிக்
காரோ வந்தது காதல ரேறிய
தேரோ வந்தது செய்வினை முடித்தெனக்
காஅர்க் குரவையொடு கருங்கயல் நெடுங்கட் 120
கோற்றொடி மாதரொடு குடகர் தோன்றத்
தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து
வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்
ஊழி வாழியென் றோவர் தோன்றக்
கூத்துள் படுவோன் காட்டிய முறைமையின் 125
ஏத்தின ரறியா இருங்கலன் நல்கி
வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி
நாடக மகளிர்ஈ ரைம்பத் திருவரும்
கூடிசைக் குயிலுவர் இருநூற் றெண்மரும்
தொண்ணூற் றறுவகைப் பாசண் டத்துறை 130
நண்ணிய நூற்றுவர் நகைவே ழம்பரும்
கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற் றிரட்டியும்
கடுங்களி யானை ஓரைஞ் ஞூறும்
ஐயீ ராயிரங் கொய்யுளைப் புரவியும்
எய்யா வடவளத் திருபதி னாயிரம் 135
கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்
சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர்ஈ ரைஞ்ஞூற் றுவரும்
சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே
வாயி லோரென வாயில்வந் திசைப்ப 140
நாடக மகளிரும் நலத்தகு மாக்களும்
கூடிசைக் குயிலுவக் கருவி யாளரும்
சஞ்சயன் றன்னொடு வருக ஈங்கெனச்
செங்கோல் வேந்தன் திருவிளங் கவையத்துச்
சஞ்சயன் புகுந்து தாழ்ந்துபல ஏத்தி 145
ஆணையிற் புகுந்தஈ ரைம்பத் திருவரொடு
மாண்வினை யாளரை வகைபெறக் காட்டி
வேற்றுமை யின்றி நின்னொடு கலந்த
நூற்றுவர் கன்னருங் கோற்றொழில் வேந்தே
வடதிசை மருங்கின் வானவன் பெயர்வது 150
கடவு ளெழுதவோர் கற்கே யாயின்
ஓங்கிய இமையத்துக் கற்கால் கொண்டு
வீங்குநீர்க் கங்கை நீர்ப்படை செய்தாங்கு
யாந்தரு மாற்றல மென்றன ரென்று
வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் வாழ்கென 155
அடல்வேன் மன்னர் ஆருயி ருண்ணும்
கடலந் தானைக் காவல னுரைக்கும்
பால குமரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி 160
அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக்
கூற்றங் கொண்டிச் சேனை செல்வது
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன
வங்கப் பெருநிரை செய்க தாமெனச் 165
சஞ்சயன் போனபின் கஞ்சுக மாக்கள்
எஞ்சா நாவினர் ஈரைஞ் ஞூற்றுவர்
சந்தின் குப்பையுந் தாழ்நீர் முத்தும்
தென்ன ரிட்ட திறையொடு கொணர்ந்து
கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன் 170
மண்ணுடை முடங்கலம் மன்னவர்க் களித்தாங்கு
ஆங்கவ ரேகிய பின்னர் மன்னிய
வீங்குநீர் ஞாலம் ஆள்வோ னோங்கிய
நாடாள் செல்வர் நலவல னேத்தப்
பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து 175
கங்கைப்பே ரியாற்றுக் கன்னரிற் பெற்ற
வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி
ஆங்கவ ரெதிர்கொள அந்நாடு கழித்தாங்கு
ஒங்குநீர் வேலி உத்தர மரீஇப்
பகைப்புலம் புக்குப் பாசறை யிருந்த 180
தகைப்பருந் தானை மறவோன் றன்முன்
உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன்
சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னவ ரெல்லாம்
தென்றமி ழாற்றல் காண்குதும் யாமெனக் 185
கலந்த கேண்மையிற் கனக விசயர்
நிலந்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர
இரைதேர் வேட்டத் தெழுந்த அரிமாக்
கரிமாப் பெருநிரை கண்டுளஞ் சிறந்து
பாய்ந்த பண்பிற் பல்வேன் மன்னர் 190
காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப
வெயிற்கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர்
வடித்தோற் கொடும்பறை வால்வளை நெடுவயிர்
இடிக்குரல் முரசம் இழுமென் பாண்டில்
உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழுக்கத்து 195
மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிரச்
சிலைத்தோ ளாடவர் செருவேற் றடக்கையர்
கறைத்தோன் மறவர் கடுந்தே ரூருநர்
வெண்கோட்டு யானையர் விரைபரிக் குதிரையர்
மண்கண் கெடுத்தவிம் மாநிலப் பெருந்துகள் 200
களங்கொள் யானைக் கவிழ்மணி நாவும்
விளங்குகொடி நந்தின் வீங்கிசை நாவும்
நடுங்குதொழி லொழிந்தாங்கு ஒடுங்கியுள் செறியத்
தாருந் தாருந் தாமிடை மயங்கத்
தோளுந் தலையுந் துணிந்துவே றாகிய 205
சிலைத்தோள் மறவர் உடற்பொறை யடுக்கத்து
எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம்
பறைக்கட் பேய்மகள் பாணிக் காடப்
பிணஞ்சுமந் தொழுகிய நிணம்படு குருதியில்
கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட 210
அடுந்தேர்த் தானை ஆரிய வரசர்
கடும்படை மாக்களைக் கொன்று களங்குவித்து
நெடுந்தேர்க் கொடுஞ்சியுங் கடுங்களிற் றெருத்தமும்
விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட
எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை 215
ஒருபக லெல்லையின் உண்ணு மென்பது
ஆரிய வரசர் அமர்க்களத் தறிய
நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன்
போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை
ஓங்கிருஞ் சென்னி மேம்பட மலைய 220
வாய்வா ளாண்மையின் வண்டமி ழிகழ்ந்த
காய்வேற் றடக்கைக் கனகனும் விசயனும்
ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு
செங்குட் டுவன்றன் சினவலைப் படுதலும்
சடையினர் உடையினர் சாம்பற் பூச்சினர் 225
பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர்
பாடு பாணியர் பல்லியத் தோளினர்
ஆடு கூத்த ராகி யெங்கணும்
ஏந்துவா ளொழியத் தாந்துறை போகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தரக் 230
கச்சை யானைக் காவலர் நடுங்கக்
கோட்டுமாப் பூட்டி வாட்கோ லாக
ஆளழி வாங்கி அதரி திரித்த
வாளே ருழவன் மறக்களம் வாழ்த்தித்
தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி 235
முடியுடைக் கருந்தலை முந்துற ஏந்திக்
கடல்வயிறு கலக்கிய ஞாட்புங் கடலகழ்
இலங்கையி லெழுந்த சமரமுங் கடல்வணன்
தேரூர் செருவும் பாடிப் பேரிசை
முன்றேர்க் குரவை முதல்வனைவாழ்த்திப் 240
பின்றேர்க் குரவைப் பேயாடு பறந்தலை
முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித்
தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு
மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்டச்
சிறப்பூண் கடியினஞ் செங்கோற் கொற்றத்து 245
அறக்களஞ் செய்தோன் ஊழி வாழ்கென
மறக்கள முடித்த வாய்வாட் குட்டுவன்
வடதிசை மருங்கின் மறைகாத் தோம்புநர்
தடவுத்தீ யவியாத் தண்பெரு வாழ்க்கை
காற்றூ தாளரைப் போற்றிக் காமினென 250
வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வேற் றானைப் படைபல ஏவிப்
பொற்கோட் டிமயத்துப் பொருவறு பத்தினிக்
கற்கால் கொண்டனன் காவல னாங்கென்.


27. நீர்ப்படைக் காதை
வடபே ரிமயத்து வான்றகு சிறப்பிற்
கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின்
சினவேல் முன்பிற் செருவெங் கோலத்துக்
கனக விசயர்தங் கதிர்முடி யேற்றிச்
செறிகழல் வேந்தன் தென்றமி ழாற்றல் 5
அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை யுண்ட வொன்பதிற் றிரட்டியென்று
யாண்டும் மதியும் நாளுங் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலங் கூட்டி யெண்கொள 10
வருபெருந் தானை மறக்கள மருங்கின்
ஒருபக லெல்லை உயிர்த்தொகை உண்ட
செங்குட் டுவன்றன் சினவேற் றானையொடு
கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து
பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை 15
நூற்றிறன் மாக்களி னீர்ப்படை செய்து
மன்பெருங் கோயிலும் மணிமண் டபங்களும்
பொன்புனை யரங்கமும் புனைபூம் பந்தரும்
உரிமைப் பள்ளியும் விரிபூஞ் சோலையும்
திருமலர்ப் பொய்கையும் வரிகாண் அரங்கமும் 20
பேரிசை மன்னர்க் கேற்பவை பிறவும்
ஆரிய மன்னர் அழகுற அமைத்த
தெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை யாங்கண்
வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு
நீணில மன்னர் நெஞ்சுபுக லழித்து 25
வானவர் மகளிரின் வதுவைசூட் டயர்ந்தோர்
உலையா வெஞ்சமம் ஊர்ந்தமர் உழக்கித்
தலையுந் தோளும் விலைபெறக் கிடந்தோர்
நாள்விலைக் கிளையுள் நல்லம ரழுவத்து
வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர் 30
குழிகட் பேய்மகள் குரவையிற் றொடுத்து
வழிமருங் கேத்த வாளொடு மடிந்தோர்
கிளைக டம்மொடு கிளர்பூ ணாகத்து
வளையோர் மடிய மடிந்தோர் மைந்தர்
மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடியத் 35
தலைத்தார் வாகை தம்முடிக் கணிந்தோர்
திண்டேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழப்
புண்டோய் குருதியிற் பொலிந்த மைந்தர்
மாற்றருஞ் சிறப்பின் மணிமுடிக் கருந்தலைக்
கூற்றுக்கண் ணோட அரிந்துகளங் கொண்டோர் 40
நிறஞ்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து
புறம்பெற வந்த போர்வாள் மறவர்
வருக தாமென வாகைப் பொலந்தோடு
பெருநா ளமயம் பிறக்கிடக் கொடுத்துத்
தோடார் போந்தை தும்பையொடு முடித்துப் 45
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தன்
ஆடுகொள் மார்போ டரசுவிளங் கிருக்கையின்
மாடல மறையோன் வந்து தோன்றி
வாழ்க வெங்கோ மாதவி மடந்தை
கானற் பாணி கனக விசயர்தம் 50
முடித்தலை நெரித்தது முதுநீர் ஞாலம்
அடிப்படுத் தாண்ட அரசே வாழ்கெனப்
பகைபுலத் தரசர் பலரீங் கறியா
நகைத்திறங் கூறினை நான்மறை யாள
யாதுநீ கூறிய உரைப்பொரு ளீங்கென 55
மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்
கானலந் தண்டுறைக் கடல்விளை யாட்டினுள்
மாதவி மடந்தை வரிநவில் பாணியோடு
ஊடற் காலத் தூழ்வினை யுருத்தெழக்
கூடாது பிரிந்து குலக்கொடி தன்னுடன் 60
மாட மூதூர் மதுரை புக்காங்கு
இலைத்தார் வேந்தன் எழில்வான் எய்தக்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
குடவர் கோவே நின்னாடு புகுந்து
வடதிசை மன்னர் மணிமுடி யேறினள் 65
இன்னுங் கேட்டருள் இகல்வேற் றடக்கை
மன்னர் கோவே யான்வருங் காரணம்
மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு
குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன்
ஊழ்வினைப் பயன்கொல் உரைசால் சிறப்பின் 70
வாய்வாட் டென்னவன் மதுரையிற் சென்றேன்
வலம்படு தானை மன்னவன் றன்னைச்
சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும்
தாதெரு மன்றத்து மாதரி யெழுந்து
கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான் 75
அடைக்கல மிழந்தேன் இடைக்குல மாக்காள்
குடையும் கோலும் பிழைத்த வோவென
இடையிருள் யாமத் தெரியகம் புக்கதும்
தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்
நிவந்தோங்கு செங்கோல் நீணில வேந்தன் 80
போகுயிர் தாங்கப் பொறைசா லாட்டி
என்னோ டிவர்வினை உருத்த தோவென
உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும்
பொற்றேர்ச் செழியன் மதுரை மாநகர்க்கு
உற்றது மெல்லாம் ஒழிவின் றுணர்ந்தாங்கு 85
என்பதிப் பெயர்ந்தேன் என்துயர் போற்றிச்
செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க் குரைக்க
மைந்தற் குற்றதும் மடந்தைக் குற்றதும்
செங்கோல் வேந்தற் குற்றதுங் கேட்டுக்
கோவலன் தாதை கொடுந்துய ரெய்தி 90
மாபெருந் தானமா வான்பொரு ளீத்தாங்கு
இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு
அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று
துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும் 95
துறந்தோன் மனைவி மகன்துயர் பொறாஅள்
இறந்ததுய ரெய்தி இரங்கிமெய் விடவும்
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும் 100
தானம் புரிந்தோன் றன்மனைக் கிழத்தி
நாள்விடூஉ நல்லுயிர் நீத்துமெய் விடவும்
மற்றது கேட்டு மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு நற்றிறம் படர்கேன்
மணிமே கலையை வான்துயர் உறுக்குங் 105
கணிகையர் கோலங் காணா தொழிகெனக்
கோதைத் தாமம் குழலொடு களைந்து
போதித் தானம் புரிந்தறங் கொள்ளவும்
என்வாய்க் கேட்டோர் இறந்தோ ருண்மையின்
நன்னீர்க் கங்கை யாடப் போந்தேன் 110
மன்னர் கோவே வாழ்க ஈங்கெனத்
தோடார் போந்தை தும்பையொடு முடித்த
வாடாவஞ்சி வானவர் பெருந்தகை
மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின்
தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115
நீடு வாழியரோ நீணில வேந்தென
மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் 120
வளநா டழிக்கும் மாண்பின ராதலின்
ஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்
பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு
வேம்புமுதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப் 125
போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்
கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன்
பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி 130
உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசுகெடுத் தலம்வரும் அல்லற் காலை
தென்புல மருங்கில் தீதுதீர் சிறப்பின்
மன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலின்
நிரைமணிப் புரவி ஓரேழ் பூண்ட 135
ஒருதனி யாழிக் கடவுட் டேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவுளே றினனென
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்
ஊழிதொ றூழி உலகங் காத்து
வாழ்க எங்கோ வாழிய பெரிதென 140
மறையோன் கூறிய மாற்ற மெல்லாம்
இறையோன் கேட்டாங் கிருந்த எல்லையுள்
அகல்வாய் ஞாலம் ஆரிருள் விழுங்கப்
பகல்செல முதிர்ந்த படர்கூர் மாலைச்
செந்தீப் பரந்த திசைமுகம் விளங்க 145
அந்திச் செக்கர் வெண்பிறை தோன்றப்
பிறையேர் வண்ணம் பெருந்தகை நோக்க
இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன்
எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது
மண்ணாள் வேந்தே வாழ்கென் றேத்த 150
நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த
கொடும்பட நெடுமதிற் கொடித்தேர் வீதியுள்
குறியவும் நெடியவுங் குன்றுகண் டன்ன
உறையுள் முடுக்கர் ஒருதிறம் போகி
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச் 155
சித்திர விதானத்துச் செம்பொற் பீடிகைக்
கோயி லிருக்கைக் கோமகன் ஏறி
வாயி லாலரின் மாடலற் கூஉய்
இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர்
வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு 160
செங்கோற் றன்மை தீதின் றோவென
எங்கோ வேந்தே வாழ்கென் றேத்தி
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்
வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும் 165
குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க
அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்
திரிந்துவே றாகுங் காலமு முண்டோ
தீதோ இல்லைச் செல்லற் காலையுங் 170
காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கென்று
அருமறை முதல்வன் சொல்லக் கேட்டே
பெருமகன் மறையோற் பேணி யாங்கவற்கு
ஆடகப் பெருநிறை யையைந் திரட்டித்
தோடார் போந்தை வேலோன் றன்னிறை 175
மாடல மறையோன் கொள்கென் றளித்தாங்கு
ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரைச்
சீர்கெழு நன்னாட்டுச் செல்கவென் றேவித்
தாபத வேடத் துயிருய்ந்து பிழைத்த
மாபெருந் தானை மன்ன குமரர் 180
சுருளிடு தாடி மருள்படு பூங்குழல்
அரிபரந் தொழுகிய செழுங்கயல் நெடுங்கண்
விரிவெண் தோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச்
சூடக வரிவளை ஆடமைப் பணைத்தோள்
வளரிள வனமுலைத் தளரியல் மின்னிடைப் 185
பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு
எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றூவர்
அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல்
தெரியாது மலைந்த கனக விசயரை 190
இருபெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவித்
திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும்
பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப்
பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய
வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக் 195
குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக்
குடதிசை யாளுங் கொற்ற வேந்தன்
வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத்
தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு
நிதிதுஞ்சு வியன்நகர் நீடுநிலை நிவந்து 200
கதிர்செல வொழித்த கனக மாளிகை
முத்துநிரைக் கொடித்தொடர் முழுவதும் வளைஇய
சித்திர விதானத்துச் செய்பூங் கைவினை
இலங்கொளி மணிநிரை யிடையிடை வகுத்த
விலங்கொளி வயிரமொடு பொலந்தகடு போகிய 205
மடையமை செறுவின் வான்பொற் கட்டில்
புடைதிரள் தமனியப் பொற்கா லமளிமிசை
இணைபுண ரெகினத் திளமயிர் செறித்த
துணையணைப் பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு
எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம் 210
அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர்
தோட்டுணை துறந்த துயரீங் கொழிகெனப்
பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்தச்
சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று
பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான் 215
நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென
அமைவிளை தேறல் மாந்திய கானவன்
கவண்விடு புடையூஉக் காவல் கைவிட
வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த
ஓங்கியல் யானை தூங்குதுயி லெய்த 220
வாகை தும்பை வடதிசைச் சூடிய
வேக யானையின் வழியோ நீங்கெனத்
திறத்திறம் பகர்ந்து சேணோங் கிதணத்துக்
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்
வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக் 225
கவடி வித்திய கழுதையே ருழவன்
குடவர் கோமான் வந்தான் நாளைப்
படுநுகம் பூணாய் பகடே மன்னர்
அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும்
தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும் 230
தண்ணான் பொருநை யாடுந ரிட்ட
வண்ணமுஞ் சுண்ணமும் மலரும் பரந்து
விண்ணுறை விற்போல் விளங்கிய பெருந்துறை
வண்டுண மலர்ந்த மணித்தோட்டுக் குவளை
முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின் 235
முருகுவிரி தாமரை முழுமலர் தோயக்
குருகலர் தாழைக் கோட்டுமிசை யிருந்து
வில்லவன் வந்தான் வியன்பே ரிமயத்துப்
பல்லான் நிரையொடு படர்குவிர் நீரெனக்
காவலன் ஆனிரை நீர்த்துறை படீஇக் 240
கோவலர் ஊதுங் குழலின் பாணியும்
வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக்
குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை
வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம்
கழங்காடு மகளி ரோதை யாயத்து 245
வழங்குதொடி முன்கை மலர ஏந்தி
வானவன் வந்தான் வளரிள வனமுலை
தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு
வஞ்சி பாடுதும் மடவீர் யாமெனும்
அஞ்சொற் கிளவியர் அந்தீம் பாணியும் 250
ஓர்த்துடன் இருந்த கோப்பெருந் தேவி
வால்வளை செறிய வலம்புரி வலனெழ
மாலைவெண் குடைக்கீழ் வாகைச் சென்னியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து
குஞ்சர ஒழுகையிற் கோநக ரெதிர்கொள 255
வஞ்சியுட் புகுந்தனன் செங்குட் டுவனென்.


28. நடுகற் காதை
தண்மதி யன்ன தமனிய நெடுங்குடை
மண்ணக நிழற்செய மறவா ளேந்திய
நிலந்தரு திருவின் நெடியோன் றனாது
வலம்படு சிறப்பின் வஞ்சி மூதூர்
ஒண்டொடித் தடக்கையின் ஒண்மலர்ப் பலிதூஉய் 5
வெண்திரி விளக்கம் ஏந்திய மகளிர்
உலக மன்னவன் வாழ்கென் றேத்திப்
பலர்தொழ வந்த மலரவிழ் மாலை
போந்தைக் கண்ணிப் பொலம்பூந் தெரியல்
வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர் 10
யானை வெண்கோடு அழுத்திய மார்பும்
நீள்வேல் கிழித்த நெடும்புண் ஆகமும்
எய்கணை கிழித்த பகட்டெழில் அகலமும்
வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும்
மைம்மல ருண்கண் மடந்தைய ரடங்காக் 15
கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ
அகிலுண விரித்த அம்மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும் 20
மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த
இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக்
கருங்கயல் பிறழுங் காமர் செவ்வியில்
திருந்தெயி றரும்பிய விருந்தின் மூரலும்
மாந்தளிர் மேனி மடவோர் தம்மால் 25
ஏந்துபூண் மார்பின் இளையோர்க் களித்துக்
காசறைத் திலகக் கருங்கறை கிடந்த
மாசில்வாள் முகத்து வண்டொடு சுருண்ட
குழலுங் கோதையுங் கோலமுங் காண்மார்
நிழல்கால் மண்டிலம் தம்மெதிர் நிறுத்தி 30
வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇப்
புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர்க்
குரல்குர லாக வருமுறைப் பாலையில்
துத்தங் குரலாத் தொன்முறை யியற்கையின்
அந்தீங் குறிஞ்சி யகவன் மகளிரின் 35
மைந்தர்க் கோங்கிய வருவிருந் தயர்ந்து
முடிபுறம் உரிஞ்சுங் கழற்காற் குட்டுவன்
குடிபுறந் தருங்கால் திருமுகம் போல
உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம்
பலர்புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க 40
மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப
ஐங்கணை நெடுவேள் அரசுவீற் றிருந்த
வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும்
மண்ணீட் டரங்கமும் மலர்ப்பூம் பந்தரும்
வெண்கால் அமளியும் விதானவே திகைகளும் 45
தண்கதிர் மதியம் தான்கடி கொள்ளப்
படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்
திடைநின் றோங்கிய நெடுநிலை மேருவிற்
கொடிமதின் மூதூர் நடுநின் றோங்கிய
தமனிய மாளிகைப் புனைமணி யரங்கின் 50
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதியேர் வண்ணங் காணிய வருவழி
எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம்
பல்லாண் டேத்தப் பரந்தன வொருசார்
மண்கணை முழவும் வணர்கோட் டியாழும் 55
பண்கனி பாடலும் பரந்தன வொருசார்
மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும்
கூனுங் குறளுங் கொண்டன வொருசார்
வண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும்
பெண்ணணிப் பேடியர் ஏந்தின ரொருசார் 60
பூவும் புகையும் மேவிய விரையும்
தூவியஞ் சேக்கை சூழ்ந்தன வொருசார்
ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்
சேடியர் செவ்வியின் ஏந்தின ரொருசார்
ஆங்கவள் தன்னுடன் அணிமணி யரங்கம் 65
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஏறித்
திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவும்
செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும்
செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும் 70
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை ஒலியாது மென்முலை அசையாது
வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது
உமையவள் ஒருதிற னாக ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் 75
பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கைய னாடலின் மகிழ்ந்தவன்
ஏத்தி நீங்க இருநிலம் ஆள்வோன்
வேத்தியன் மண்டபம் மேவிய பின்னர்
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80
மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி
வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின்
கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது
தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே
செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு 85
வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய
சித்திர மண்டபத் திருக்க வேந்தன்
அமரகத் துடைந்த ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று தகையடி வணங்க
நீளம ரழுவத்து நெடும்பே ராண்மையொடு 90
வாளுங் குடையும் மறக்களத் தொழித்துக்
கொல்லாக் கோலத் துயிருய்ந் தோரை
வெல்போர்க் கோடல் வெற்றம் அன்றெனத்
தலைத்தேர்த் தானைத் தலைவற் குரைத்தனன்
சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை 95
ஆங்குநின் றகன்றபின் அறக்கோல் வேந்தே
ஓங்குசீர் மதுரை மன்னவற் காண
ஆரிய மன்னர் அமர்க்களத் தெடுத்த
சீரியல் வெண்குடைக் காம்புநனி சிறந்த
சயந்தன் வடிவில் தலைக்கோ லாங்குக் 100
கயந்தலை யானையிற் கவிகையிற் காட்டி
இமயச் சிமையத் திருங்குயி லாலுவத்
துமையொரு பாகத் தொருவனை வணங்கி
அமர்க்களம் அரசன தாகத் துறந்து
தவப்பெருங் கோலங் கொண்டோர் தம்மேல் 105
கொதியழற் சீற்றங் கொண்டோன் கொற்றம்
புதுவ தென்றனன் போர்வேற் செழியனென்
றேனை மன்னர் இருவருங் கூறிய
நீண்மொழி யெல்லாம் நீலன் கூறத்
தாமரைச் செங்கண் தழனிறங் கொள்ளக் 110
கோமகன் நகுதலும் குறையாக் கேள்வி
மாடலன் எழுந்து மன்னவர் மன்னே
வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக்
கறிவளர் சிலம்பிற் றுஞ்சும் யானையின்
சிறுகுரல் நெய்தல் வியுலூ ரெறிந்தபின் 115
ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரி வாயில் நிலைச்செரு வென்று
நெடுந்தேர்த் தானையொ டிடும்பிற்புறத் திறுத்துக்
கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி
உடன்றுமேல் வந்த ஆரிய மன்னரைக் 120
கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய்
நெடுந்தார் வேய்ந்த பெரும்படை வேந்தே
புரையோர் தம்மொடு பொருந்த வுணர்ந்த
அரைச ரேறே யமைகநின் சீற்றம்
மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள் 125
தண்ணான் பெருநை மணலினுஞ் சிறக்க
அகழ்கடல் ஞாலம் ஆள்வோய் வாழி
இகழா தென்சொற் கேட்டல் வேண்டும்
வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந் திரட்டிச் சென்றதற் பின்னும் 130
அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோ யாயினை
வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப்
போந்தைக் கண்ணிநின் னூங்கணோர் மருங்கில்
கடற்கடம் பெறிந்த காவல னாயினும் 135
விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும்
நான்மறை யாளன் செய்யுட் கொண்டு
மேல்நிலை யுலகம் விடுத்தோ னாயினும்
போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக்
கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும் 140
வன்சொல் யவனர் வளநா டாண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும்
மிகப்பெருந் தானையோடு இருஞ்செரு வோட்டி
அகப்பா எறிந்த அருந்திற லாயினும்
உருகெழு மரபின் அயிரை மண்ணி 145
இருகடல் நீரும் ஆடினோ னாயினும்
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்
மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின்
யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய் 150
மல்லன்மா ஞாலத்து வாழ்வோர் மருங்கில்
செல்வம் நில்லா தென்பதை வெல்போர்த்
தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்
கண்டனை யல்லையோ காவல் வேந்தே
இளமை நில்லா தென்பதை எடுத்தீங்கு 155
உணர்வுடை மாக்கள் உரைக்க வேண்டா
திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே
நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை
விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும் 160
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும்
விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர்
கலங்கஞர் நரகரைக் காணினுங் காணும்
ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக் 165
கூடிய கோலத் தொருங்குநின் றியலாது
செய்வினை வழித்தாய் உயிர்செலு மென்பது
பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்
எழுமுடி மார்பநீ யேந்திய திகிரி
வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே 170
அரும்பொருட் பரிசிலன் அல்லேன் யானும்
பெரும்பேர் யாக்கை பெற்ற நல்லுயிர்
மலர்தலை யுலகத் துயிர்போகு பொதுநெறி
புலவரை யிறந்தோய் போகுதல் பொறேஎன்
வானவர் போற்றும் வழிநினக் களிக்கும் 175
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்
நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினு நீங்கும் 180
இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவது மில்லை
வேள்விக் கிழத்தி யிவளொடுங் கூடித்
தாழ்கழல் மன்னர் நின்னடி போற்ற
ஊழியோ டூழி யுலகங் காத்து 185
நீடுவா ழியரோ நெடுந்தகை யென்று
மறையோன் மறைநா வுழுது வான்பொருள்
இறையோன் செவிசெறு வாக வித்தலின்
வித்திய பெரும்பதம் விளைந்துபத மிகுத்துத்
துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன் 190
நான்மறை மரபின் நயந்தெரி நாவின்
கேள்வி முடித்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி
ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் 195
பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத்
தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
வேளா விக்கோ மாளிகை காட்டி
நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள்
தம்பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லியம் 200
மன்னவர்க் கேற்பன செய்க நீயென
வில்லவன் கோதையை விருப்புடன் ஏவிச்
சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணும்
கறைகெழு நல்லூர்க் கறைவீடு செய்ம்மென
அழும்பில் வேளோடு ஆயக் கணக்கரை 205
முழங்குநீர் வேலி மூதூர் ஏவி
அருந்திற லரசர் முறைசெயி னல்லது
பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப்
பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை
பார்தொழு தேத்தும் பத்தினி யாகலின் 210
ஆர்புனை சென்னி யரசற் களித்துச்
செங்கோல் வளைய வுயிர்வா ழாமை
தென்புலங் காவல் மன்னவற் களித்து
வஞ்சினம் வாய்த்தபி னல்லதை யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்த ரென்பதை 215
வடதிசை மருங்கின் மன்னவ ரறியக்
குடதிசை வாழுங் கொற்றவற் களித்து
மதுரை மூதூர் மாநகர் கேடுறக்
கொதியழற் சீற்றம் கொங்கையின் விளைத்து
நன்னா டணைந்து நளிர்சினை வேங்கைப் 220
பொன்னணி புதுநிழல் பொருந்திய நங்கையை
அறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி
சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று
மேலோர் விழையும் நூனெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து 225
இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்
சிமையச் சென்னித் தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப் 230
பூப்பலி செய்து காப்பக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்
கடவுள் மங்கலம் செய்கென ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவ ரேறென்.


29. வாழ்த்துக் காதை
உரைப் பாட்டு மடை
குமரியொடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட
சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன்மகளீன்ற
மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்
யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி
வஞ்சியுள் வந்திருந்த காலை, வட ஆரிய மன்னர் ஆங்
கோர் மடவரலை மாலைசூட்டி உடனுறைந்த இருக்கை
தன்னில் ஒன்றுமொழி நகையினராய்த் தென்றமிழ் நாடா
ளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின்றவழும்
இமய நெற்றியில் விளங்கு வில் புலி கயல் பொறித்த
நாள் எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லை போலும் என்ற
வார்த்தை அங்குவாழும் மாதவர் வந்தறிவுறுத்தவிடத்
தாங்கண் உருள்கின்ற மணிவட்டைக் குணில்கொண்டு
துரந்ததுபோல் இமயமால்வரைக் கற்கடவுளாமென்ற
வார்த்தை இடந்துரப்ப, ஆரியநாட்டரசோட்டி அவர்
முடித்தலை அணங்காகிய பேரிமயக் கல்சுமத்திப்
பெயர்ந்து போந்து நயந்த கொள்கையிற் கங்கைப்பேர்
யாற்றிருந்து நங்கைதன்னை நீர்ப்படுத்தி வெஞ்சினந்தரு
வெம்மை நீங்கி வஞ்சிமா நகர்புகுந்து நிலவரசர் நீண்
முடியாற் பலர்தொழு படிமங் காட்டித் தடமுலைப் பூச
லாட்டியைக் கடவுண் மங்கலஞ்செய்தபின்னாள் கண்ணகி
தன் கோட்டத்து மண்ணரசர் திறைகேட்புழி, அலம்வந்த
மதிமுகத்திற் சில செங்கயல் நீர் உமிழப் பொடியாடிய
கருமுகில்தன் புறம்புதைப்ப அறம்பழித்துக் கோவலன்றன்
வினையுருத்துக் குறுமகனாற் கொலையுன்ன காவலன்
றன் இடஞ்சென்ற கண்ணகிதன் கண்ணீர்கண்டு மன்
னரசர் பெருந்தோன்றல் உண்ணீரற் றுயிரிழந்தமை
மாமறையோன் வாய்கேட்டு மாசாத்துவான் தான்றுறப்
பவும் மனைக்கிழத்தி உயிரிழப்பவும் எனைப் பெருந்
துன்பமெய்திக் காவற்பெண்டும் அடித்தோழியும் கடவுட்
சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன்கூடிச் சேயி
ழையைக் காண்டுமென்று மதுரைமாநகர் புகுந்து முதிரா
முலைப் பூசல்கேட்டு ஆங்கடைக்கலமிழந் துயிரிழந்த
இடைக்குல மகளிடமெய்தி ஐயையவள் மகளோடும்
வையையொரு வழிக்கொண்டு மாமலை மீமிசையேறிக்
கோமகடன் கோயில்புக்கு நங்கைக்குச் சிறப்பயர்ந்த
செங்குட்டுவற்குத் திறமுரைப்பர் மன்; 1

தேவந்தி சொல்

முடிமன்னர் மூவருங் காத்தோம்புந் தெய்வ
வடபே ரிமய மலையிற் பிறந்து
கடுவரற் கங்கைப் புனலாடிப் போந்த
தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர்
சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்; 2

காவற்பெண்டு சொல்

மடம்படு சாயலாள் மாதவி தன்னைக்
கடம்படாள் காதற் கணவன் கைப் பற்றிக்
குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த
தடம்பெருங் கண்ணிக்குத் தாயர்நான் கண்டீர்
தண்புகார்ப் பாவைக்குத் தாயர்நான் கண்டீர்; 3

அடித் தோழி சொல்

தற்பயந்தாட் கில்லை தன்னைப் புறங்காத்த
எற்பயந் தாட்கும் எனக்குமோர் சொல்லில்லை
கற்புக் கடம்பூண்டு காதலன் பின்போந்த
பொற்றொடி நங்கைக்குத் தோழிநான் கண்டீர்
பூம்புகார்ப் பாவைக்குத் தோழிநான் கண்டீர்; 4

தேவந்தி யரற்று

செய்தவ மில்லாதேன் தீக்கனாக் கேட்டநாள்
எய்த வுணரா திருந்தேன்மற் றென்செய்தேன்
மொய்குழன் மங்கை முலைப்பூசல் கேட்டநாள்
அவ்வை யுயிர்வீவுங் கேட்டாயோ தோழீ
அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழீ; 5

காவற்பெண் டரற்று

கோவலன் றன்னைக் குறுமகன் கோளிழைப்பக்
காவலன் றன்னுயிர் நீத்ததுதான் கேட்டேங்கிச்
சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து
மாசாத்து வான்துறவுங் கேட்டாயோ அன்னை
மாநாய்கன் றன்றுறவுங் கேட்டாயோ அன்னை; 6

அடித்தோழி யரற்று

காதலன் றன்வீவுங் காதலிநீ பட்டதூஉம்
ஏதிலார் தாங்கூறும் ஏச்சுரையுங் கேட்டேங்கிப்
போதியின்கீழ் மாதவர்முன் புண்ணியதா னம்புரிந்த
மாதவி தன்றுறவுங் கேட்டாயோ தோழீ
மணிமே கலைதுறவுங் கேட்டாயோ தோழீ; 7

தேவந்தி ஐயையைக் காட்டி யரற்றியது

ஐயந்தீர் காட்சி யடைக்கலங் காத்தோம்ப
வல்லாதேன் பெற்றேன் மயலென் றுயிர்நீத்த
அவ்வை மகளிவடான் அம்மணம் பட்டிலா
வையெயிற் றையையைக் கண்டாயோ தோழீ
மாமி மடமகளைக் கண்டாயோ தோழீ; 8

செங்குட்டுவன் கூற்று

என்னேயி� தென்னேயி� தென்னேயி� தென்னேகொல்
பொன்னஞ் சிலம்பிற் புனைமே கலைவளைக்கை
நல்வயிரப் பொற்றோட்டு நாவலம் பொன்னிழைசேர்
மின்னுக் கொடியொன்று மீவிசும்பிற் றோன்றுமால்; 9

செங்குட்டுவற்குக் கண்ணகியார்
கடவு ணல்லணி காட்டியது

தென்னவன் தீதிலன் தேவர்கோன் றன்கோயில்
நல்விருந் தாயினான் நானவன் றன்மகள்
வென்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்
என்னோடுந் தோழிமீ ரெல்லீரும் வம்மெல்லாம்; 10

வஞ்சிமகளிர் சொல்

வஞ்சியீர் வஞ்சி யிடையீர் மறவேலான்
பஞ்சடி யாயத்தீ ரெல்லீரும் வம்மெல்லாம்;
கொங்கையாற் கூடற் பதிசிதைத்துக் கோவேந்தைச்
செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம்
தென்னவன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்;
செங்கோல் வளைய வுயிர்வாழார் பாண்டியரென்
றெங்கோ முறைநா இயம்பஇந் நாடடைந்த
பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம்
பாண்டியன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்; 11

ஆயத்தார் சொல்

வானவ னெங்கோ மகளென்றாம் வையையார்
கோனவன்றான் பெற்ற கொடியென்றாள்-வானவனை
வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள்; 12

வாழ்த்து

தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணின்நீர்
கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ,
வாழியரோ வாழி வருபுனல்நீர் வையை
சூழு மதுரையார் கோமான்றன் தொல்குலமே; 13

மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை
நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ,
வாழியரோ வாழி வருபுனல்நீர்த் தண்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே; 14

எல்லா நாம்;
காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்
பூவிரி கூந்தல் புகார்; 15

அம்மானை வரி

வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானை
ஓங்கரணங் காத்த வுரவோன் உயர்விசும்பில்
தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்கா னம்மானை
சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை; 16

புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக்
குறைவில் உடம்பரிந்த கொற்றவன்யா ரம்மானை
குறைவில் உடம்பரிந்த கொற்றவன்முன் வந்த
கறவை முறைசெய்த காவலன்கா ணம்மானை
காவலன் பூம்புகார் பாடேலோ ரம்மானை; 17

கடவரைக ளோரெட்டுங் கண்ணிமையா காண
வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்யா ரம்மானை
வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்றிக் கெட்டுங்
குடைநிழலிற் கொண்டளித்த கொற்றவன்கா னம்மானை
கொற்றவன்றன் பூம்புகார் பாடேலோ ரம்மானை; 18

அம்மனை தங்கையிற் கொண்டங் கணியிழையார்
தம்மனையிற் பாடுந் தகையேலோ ரம்மானை
தம்மனையிற் பாடுந் தகையெலாந் தார்வேந்தன்
கொம்மை வரிமுலைமேற் கூடவே யம்மானை
கொம்மை வரிமுலைமேற் கூடிற் குலவேந்தன்
அம்மென் புகார்நகரம் பாடேலோ ரம்மானை; 19

கந்துக வரி

பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய்கோதை வில்லிட
மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்பஆர்ப்ப எங்கணும்
தென்னன் வாழ்க வாழ்கஎன்று சென்றுபந் தடித்துமே
தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே; 20

பின்னுமுன்னும் எங்கணும் பெயர்ந்துவந் தெழுந்துலாய்
மின்னுமின் னிளங்கொடி வியனிலத் திழிந்தெனத்
தென்னன்வாழ்க வாழ்கஎன்று சென்றுபந் தடித்துமே
தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே; 21

துன்னிவந்து கைத்தலத் திருந்ததில்லை நீணிலம்
தன்னினின்று மந்தரத் தெழுந்ததில்லை தானெனத்
தென்னன்வாழ்க வாழ்கஎன்று சென்றுபந் தடித்துமே
தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே; 22

ஊசல் வரி

வடங்கொள் மணியூசன் மேலிரீஇ ஐயை
உடங்கொருவர் கைநிமிர்த்தாங் கொற்றைமே லூக்கக்
கடம்பு முதல்தடிந்த காவலனைப் பாடிக்
குடங்கைநெடுங் கண்பிறழ ஆடாமோ ஊசல்
கொடுவிற் பொறிபாடி ஆடாமோ ஊசல்; 23

ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த
போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக்
கார்செய் குழலாட ஆடாமோ ஊசல்
கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல்; 24

வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல்
தென்குமரி யாண்ட செருவிற் கயற்புலியான்
மன்பதைகாக் குங்கோமான் மன்னன் திறம்பாடி
மின்செய் இடைநுடங்க ஆடாமோ ஊசல்
விறல்விற் பொறிபாடி ஆடாமோ ஊசல்; 25

வள்ளைப் பாட்டு

தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர்
ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப்
பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல்
பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்; 26

பாடல்சான் முத்தம் பவழ உலக்கையான்
மாட மதுரை மகளிர் குறுவரே
வானவர்கோன் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்றன்
மீனக் கொடிபாடும் பாடலே பாடல்
வேப்பந்தார் நெஞ்சுணக்கும் பாடலே பாடல்; 27

சந்துரற் பெய்து தகைசால் அணிமுத்தம்
வஞ்சி மகளிர் குறுவரே வான்கோட்டாற்
கடந்தடுதார்ச் சேரன் கடம்பெறிந்த வார்த்தை
படர்ந்த நிலம்போர்த்த பாடலே பாடல்
பனந்தோ டுளங்கவரும் பாடலே பாடல்; 28

ஆங்கு, நீணில மன்னர் நெடுவிற் பொறையன்நல்
தாள்தொழார் வாழ்த்தல் தமக்கரிது சூளொழிய
எங்கோ மடந்தையும் ஏத்தினாள் நீடுழி
செங்குட் டுவன்வாழ்க என்று. 21

30. வரந்தரு காதை
வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகை
கடவுட் கோலம் கட்புலம் புக்கபின்
தேவந் திகையைச் செவ்விதின் நோக்கி
வாயெடுத் தரற்றிய மணிமே கலையார்
யாதவள் துறத்தற் கேதுவீங் குரையெனக் 5
கோமகன் கொற்றங் குறைவின் றோங்கி
நாடு பெருவளஞ் சுரக்கென் றேத்தி
அணிமே கலையா ராயத் தோங்கிய
மணிமே கலைதன் வான்றுற வுரைக்கும்
மையீ ரோதி வகைபெறு வனப்பின் 10
ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது
செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண்
அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள்
ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த
நித்தில விளநகை நிரம்பா வளவின 15
புணர்முலை விழுந்தன புல்லக மகன்றது
தளரிடை நுணுகலுந் தகையல்குல் பரந்தது
குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ
நிறங்கிளர் சீறடி நெய்தோய் தளிரின
தலைக்கோ லாசான் பின்னுள னாகக் 20
குலத்தலை மாக்கள் கொள்கையிற் கொள்ளார்
யாது நின்கருத் தென்செய் கோவென
மாதவி நற்றாய் மாதவிக் குரைப்ப
வருகவென் மடமகள் மணிமே கலையென்
றுருவி லாள னொருபெருஞ் சிலையொடு 25
விரைமலர் வாளி வெறுநிலத் தெறியக்
கோதைத் தாமங் குழலொடு களைந்து
போதித் தானம் புரிந்தறம் படுத்தனள்
ஆங்கது கேட்ட அரசனும் நகரமும்
ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர் 30
தம்மிற் றுன்பந் தாம்நனி யெய்தச்
செம்மொழி மாதவர் சேயிழை நங்கை
தன்றுற வெமக்குச் சாற்றின ளென்றே
அன்புறு நன்மொழி அருளொடுங் கூறினர்
பருவ மன்றியும் பைந்தொடி நங்கை 35
திருவிழை கோலம் நீங்கின ளாதலின்
அரற்றினென் என்றாங் கரசற் குரைத்தபின்
குரற்றலைக் கூந்தல் குலைந்துபின் வீழத்
துடித்தனள் புருவந் துவரிதழ்ச் செவ்வாய்
மடித்தெயி றரும்பினள் வருமொழி மயங்கினள் 40
திருமுகம் வியர்த்தனள் செங்கண் சிவந்தனள்
கைவிட் டோச்சினள் கால்பெயர்த் தெழுந்தனள்
பலரறி வாராத் தெருட்சியள் மருட்சியள்
உலறிய நாவினள் உயர்மொழி கூறிக்
தெய்வமுற் றெழுந்த தேவந்திகைதான் 45
கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் றன்முன்
கடவுண் மங்கலங் காணிய வந்த
மடமொழி நல்லார் மாணிழை யோருள்
அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற
இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும் 50
ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குளள்
மங்கல மடந்தை கோட்டத் தாங்கண்
செங்கோட் டுயர்வரைச் சேணுயர் சிலம்பிற்
பிணிமுக நெடுங்கற் பிடர்த்தலை நிரம்பிய 55
அணிகயம் பலவுள ஆங்கவை யிடையது
கடிப்பகை நுண்கலுங் கவரிதழ்க் குறுங்கலும்
இடிக்கலப் பன்ன இழைந்துகு நீரும்
உண்டோர் சுனையத னுள்புக் காடினர்
பண்டைப் பிறவிய ராகுவ ராதலின் 60
ஆங்கது கொணர்ந்தாங் காயிழை கோட்டத்
தோங்கிருங் கோட்டி யிருந்தோய் உன்கைக்
குறிக்கோட் டகையது கொள்கெனத் தந்தேன்
உறித்தாழ் கரகமும் உன்கைய தன்றே
கதிரொழி காறுங் கடவுட் டன்மை 65
முதிரா தந்நீர் முத்திற மகளிரைத்
தெளித்தனை யாட்டினிச் சிறுகுறு மகளிர்
ஒளித்த பிறப்பின ராகுவர் காணாய்
பாசண் டன்யான் பார்ப்பனி தன்மேல்
மாடல மறையோய் வந்தே னென்றலும் 70
மன்னவன் விம்மித மெய்தியம் மாடலன்
தன்முக நோக்கலும் தானனி மகிழ்ந்து
கேளிது மன்னா கெடுகநின் தீயது
மாலதி யென்பாள் மாற்றாள் குழவியைப்
பால்சுரந் தூட்டப் பழவினை யுருத்துக் 75
கூற்றுயிர் கொள்ளக் குழவிக் கிரங்கி
ஆற்றாத் தன்மையள் ஆரஞ ரெய்திப்
பாசண் டன்பாற் பாடு கிடந்தாட்
காசில் குழவி யதன்வடி வாகி
வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச் 80
செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப்
பார்ப்பனி தன்னோடு பண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து
தேவந் திகையைத் தீவலஞ் செய்து
நாலீ ராண்டு நடந்ததற் பின்னர் 85
மூவா இளநலங் காட்டியென் கோட்டத்து
நீவா வென்றே நீங்கிய சாத்தன்
மங்கல மடந்தை கோட்டத் தாங்கண்
அங்குறை மறையோ னாகத் தோன்றி
உறித்தாழ் கரகமும் என்கைத் தந்து 90
குறிக்கோள் கூறிப் போயினன் வாரான்
ஆங்கது கொண்டு போந்தே னாதலின்
ஈங்கிம் மறையோ டன்மேற் றோன்றி
அந்நீர் தெளியென் றறிந்தோன் கூறினன்
மன்னர் கோவே மடந்தையர் தம்மேல் 95
தெளித்தீங் கறிகுவம் என்றவன் தெளிப்ப
ஒளித்த பிறப்புவந் துற்றதை யாதலின்
புகழ்ந்த காதலன் போற்றா வொழுக்கின்
இகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய்
ஏதில் நன்னாட் டியாருமில் ஒருதனிக் 100
காதலன் றன்னொடு கடுந்துய ருழந்தாய்
யான்பெறு மகளே என்றுணைத் தோழீ
வான்றுயர் நீக்கும் மாதே வாராய்
என்னோ டிருந்த இலங்கிழை நங்கை
தன்னோ டிடையிருள் தனித்துய ருழந்து 105
போனதற் கிரங்கிப் புலம்புறு நெஞ்சம்
யானது பொறேஎன் என்மகன் வாராய்
வருபுனல் வையை வான்றுறைப் பெயர்ந்தோன்
உருகெழு மூதூர் ஊர்க்குறு மாக்களின்
வந்தேன் கேட்டேன் மனையிற் காணேன் 110
எந்தாய் இளையாய் எங்கொளித் தாயோ
என்றாங் கரற்றி இனைந்தினைந் தேங்கிப்
பொன்தாழ் அகலத்துப் போர்வெய் யோன்முன்
குதலைச் செய்வாய்க் குறுந்தொடி மகளிர்
முதியோர் மொழியின் முன்றில் நின்றழத் 115
தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன்
மாடல மறையோன் றன்முக நோக்க
மன்னர் கோவே வாழ்கென் றேத்தி
முந்நூன் மார்பன் முன்னிய துரைப்போன்
மறையோன் உற்ற வான்துயர் நீங்க 120
உறைகவுள் வேழக் கையகம் புக்கு
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற
காதலி தன்மேற் காதல ராதலின்
மேனிலை யுலகத் தவருடன் போகும்
தாவா நல்லறஞ் செய்தில ரதனால் 125
அஞ்செஞ் சாய லஞ்சா தணுகும்
வஞ்சி மூதூர் மாநகர் மருங்கிற்
பொற்கொடி தன்மேற் பொருந்திய காதலின்
அற்புளஞ் சிறந்தாங் கரட்டன் செட்டி
மடமொழி நல்லாள் மனமகிழ் சிறப்பின் 130
உடன்வயிற் றோராய் ஒருங்குடன் றோன்றினர்
ஆயர் முதுமக ளாயிழை தன்மேல்
போய பிறப்பிற் பொருந்திய காதலின்
ஆடிய குரவையின் அரவணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறுமக ளாயினள் 135
நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும்
அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவ ரிறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவ தன்றே தொன்றியல் வாழ்க்கை 140
ஆனே றூர்ந்தோ னருளிற் றோன்றி
மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின்
செய்தவப் பயன்களுஞ் சிறந்தோர் படிவமும்
கையகத் தனபோற் கண்டனை யன்றே
ஊழிதோ றூழி யுலகங் காத்து 145
நீடுவா ழியரோ நெடுந்தகை யென்ற
மாடல மறையோன் றன்னொடு மகிழ்ந்து
பாடல்சால் சிறப்பிற் பாண்டிநன் னாட்டுக்
கலிகெழு கூடல் கதழெரி மண்ட
முலைமுகந் திருகிய மூவா மேனிப் 150
பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து
நித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப்
பூவும் புகையும் மேவிய விரையும்
தேவந் திகையைச் செய்கென் றருளி
வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி 155
உலக மன்னவ நின்றோன் முன்னர்
அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் 160
எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென் றேழுந்த தொருகுரல்
ஆங்கது கேட்ட அரசனு மரசரும் 165
ஓங்கிருந் தானையும் முறையோ டேத்த
வீடுகண் டவர்போல் மெய்ந்நெறி விரும்பிய
மாடல மறையோன் றன்னொடுங் கூடித்
தாழ்கழன் மன்னர் தன்னடி போற்ற
வேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின் 170
யானுஞ் சென்றேன் என்னெதி ரெழுந்து
தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி
வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுந்தை தாணிழ லிருந்தோய் நின்னை
அரைசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று 175
உரைசெய் தவன்மே லுருத்து நோக்கிக்
கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன்றன் செல்லல் நீங்கப்
பகல்செல் வாயிற் படியோர் தம்முன்
அகலிடப் பாரம் அகல நீக்கிச் 180
சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து
அந்தமி லின்பத் தரசாள் வேந்தென்று
என்திறம் உரைத்த இமையோ ரிளங்கொடி
தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்! 185
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்;
தெய்வந் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொற் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானஞ் செய்ம்மின்; தவம்பல தாங்குமின் ; 190
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட் பிகழ்மின்;
பொய்க்கரி போகன்மின்; பொருண்மொழி நீங்கன்மின்;
அறவோ ரவைக்களம் அகலா தணுகுமின்;
பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்; 195
அறமனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது 200
செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்;
மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென்.


கட்டுரை
முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்
குடதிசை யாளுங் கொற்றங் குன்றா
ஆர மார்பிற் சேரர்குலத் துதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் 5
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா இன்பத் தவருறை நாட்டுக்
குடியின் செல்வமுங் கூழின் பெருக்கமும்
வரியுங் குரவையும் விரவிய கொள்கையின்
புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய 10
மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு
பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்
கங்கைப் பேர்யாற் றுக்கரை போகிய
செங்குட் டுவனோ டொருபரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்ட முற்றிற்று. 15


நூற் கட்டுரை
குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கிற் றண்டமிழ் வரைப்பிற்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
ஐந்திணை மருங்கின் அறம்பொரு ளின்பம்
மக்கள் தேவ ரெனவிரு சார்க்கும் 5
ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர
எழுத்தொடு புணர்ந்தசொல் லகத்தெழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூஉஞ் செவ்விசிறந் தோங்கிய
பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் 10
அரங்கு விலக்கே ஆடலென் றனைத்தும்
ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த
வரியுங் குரவையுஞ் சேதமு மென்றிவை
தெரிவுறு வகையாற் செந்தமி ழியற்கையில்
ஆடிநல் நிழலின் நீடிருங் குன்றம் 15
காட்டு வார்போற் கருத்துவெளிப் படுத்து
மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதி காரம் முற்றும்.


முற்றும்.


 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home