Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > முகம் கொள் - கி.பி. அரவிந்தன்

20th Century Eelam Tamil Literature at Project Madurai


 
முகம் கொள் - கி.பி. அரவிந்தன்
mukam koL by K.P. Aravindan


[ Etext Preparation : Mr. R. Padmanabha Iyer, London, UK & Dr. N. Kannan, Kiel, Germany , Mr. Ramanitharan Kandiah, New Orleans, USA,  Ms. Geetha Ramaswami, Singapore(Proof-reading)Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland  © Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).  and ii) Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. The Latha font may be downloaded from here]


Preface
Introduction
முன்னுரை ... 11
முகம் கொள் ... 23
முடிவுறாத பாடல்கள் ... 31
ஆண்ட பரம்பரை ... 33
மாலை விழுந்த பின் முன்னிராப் பொழுதொன்றில் ... 38
நன்றி கெட்டதுகள்.. ... 42
பனங்கொட்டைகள்.. ... 45
நண்பனுக்கு ... 49
உறைதலாய் ... 55
துருவங்கள் மாறி... ... 57
இருப்பிடம் தேடி... ... 61
தாலாட்டும் தன்பாட்டும்... ... 63
வதைமொழி ... 66
நிலமை ... 68
பிரிப்பு ... 69
என் இனிய...க்கு ... 70
போ...அங்கிரு ... 73
ஞாயிறும் நானும் ... 78
விடைபெறும் நேரம்.. ... 88


Preface

'கடல் மடி ஏறி
இன்றளவும் திரும்பாத
என்னருந் தோழன்
ஏலோலா பாடகன்
மைக்கலுக்கு.......'

வணக்கம்.

இவை என் முகத்தின்
சில பக்கங்கள், பதிவுகள்.
நினைவுப்பரணில் இருந்து
இறக்கப்பட்டவைகள்.
பட்ட நன்றிக் கடனுக்கு
நன்றி சொல்லும் முனைவு.
இத்துடன்
நட்பு, நேசம், தோழமை,
காதல், கனிவு, மனிதம்
என்பவற்றையும்,
அவலமுற்று தொய்த மனத்தின்
ஆறாப் புண்களையும்
எனக்கு பரிச்சயமான
சொற்களுக்குள்
புகுத்திவிடலாம்
எனும் துணிபு.
இச் சொற்களுக்குள்
அவை வசப்படவில்லையாயின்
அது என்
மொழியறிவின் பற்றாக் குறையே.
வெட்கம் கொள்கிறேன்.
நூலாக்கியதற்கு மன்னித்து
ஓங்கி ஒரு குட்டு,
முடிந்தால் அதிகமாகவும்.

தலைதாழ்த்தி, நட்புடன்
கி.பி.அரவிந்தன்.


Introduction

முடிவுறாத பாடல்கள்

தனது தாயத்திற்கான இந்த ஏக்கத்தைத் தவிர வேறெந்த ஏக்கத்தையும் நாம் நிராகரிக்க வேண்டுமல்லவா? இந்த ஏக்கம் என்னுடன் இருக்கிறது. எனக்குள் இருக்கிறது. அது எனது பாதத்தோலை உரசும் கடலின் வெண்மணல் போன்றது. அது என் கண்களில், என் இரத்தத்தில் வாழ்கிறது. எனது வாழ்வின் ஒவ்வொரு நம்பிக்கையின் பின்னணிக்கும் அதற்குரிய பரிமாணத்தை வழங்குகிறது. ஒருநாள், எழுதுவதை நிறுத்திவிட்டு ஜன்னல் வழியாக நான் பார்ப்பேன் - ஒரு ரஷ்ய இலையுதிர் காலத்தை. - விளாடிமிர் நபகோவ் (நினைவே, பேசு)

"துப்பாக்கி வாய்ப்பட்ட" தனது "சிறு தேச"த்தை விட்டுக் கவிஞன் புலம்பெயர்கிறான். தாயகத்தில் "காற்றும் நெருப்புமாய், வாழ்வும் இருப்பும்". "ஊனத்தழும்புக"ளேறிய கவிஞனின் உடலும் இதயமும் காலத்தின் "சுழல்" பாதையை விட்டகன்று விலகியிருப்பதையே விரும்புகின்றன -தேசிய விடுதலைப் போராட்டம் குறிதவறி, இலக்கு மறந்து, உருமாறிய காரணத்தால். கடல் கடந்து மாற்றான் தேசத்தை அண்டி வாழ்ந்தாலும்,

"விழிநீர்ப் பெருக்குடனும்
ஆழ்கடல் போர் முடித்து
அணிகுலைந்து திரும்பும்
கடற்புரவிகள்"

கொண்ட 'நேசக்கடலின்' நினைவு கவிஞனின் மனத்தை விட்டொழிய மறுக்கிறது. "துருவம் தப்பி வந்த" அவன், இப்போது "வெண்தோல் மினுங்கும்" மேற்கத்திய சொர்க்கத்தில் "ஊரில் தீண்டாத 'இழிசனப்' பணிகளை" மேற்கொண்டு காலம் கழிக்கும் முகமற்ற அகதி; சரணாலயம் நீங்கிய ஏதிலிப்பறவை. தாயகத்தில் அவனது மனைவியும் மகனும்; விழித்துறங்கும் தொலைவுகளில் அவர்கள் இருப்பினும், அவள் கண்ட சூரியனை அவன் காண நேரம் பிடிக்கும். பிள்ளை சிரித்து நித்திரையில் முகம் சுருக்கும்போது, "நாவந்து விரட்டுதென்று" சொல்ல அவனால் முடியாது. "குண்டும் குழியுமான" அவன் பிறந்த நாட்டில் மனைவி" ஊனுருகி உடலுருகி" பிள்ளையைத் "தன்னுக்குள் போர்த்து" அவனுக்காகக் காத்திருப்பாள். கவிஞனுக்கு இனி வாய்த்ததுதான் என்ன? இனி அவனால் வீடு திரும்ப முடியுமா?


முன்னுரை - வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை - சென்னை, 17.09.1992

கி.பி. அரவிந்தனின் கவிதைகள் மூன்று வகை அனுபவங்களை உள்ளடக்கியவை: யாழ்ப்பாணத்து அனுபவங்கள்; தமிழகத்தில் வாழ்ந்த இடைக்காலத்து அனுபவங்கள்; அகதிவாழ்வின் பாதிப்புகள் (மேற்கு ஐரோப்பிய அனுபவங்கள்).

இக்கவிதைகள் வரலாற்றனுபவங்களில் தோய்ந்து எழுந்தவை மட்டுமல்ல. அவ்வனுபவங்கள் அலாதியான ஒரு கற்பனைத் திறத்தால், பளிங்கு போன்றதொரு தெளிவான மொழியால் சீரமைக்கப்பட்டு, பண்படுத்தப்பட்டுக் கவிதைகளாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளன.

போராளியின் சோர்வு, அகதியின் மனத்தாங்கல்கள் சிந்திக்கும் மனிதர் எவருக்குமே உண்டாகும் ஐயப்பாடுகள், தர்மசங்கடங்கள்- இவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த நிலையை இக்கவிதைகளில் காணலாம்.

கவிதை மொழி வெளிப்படும்போது சரி ('நண்பனுக்கு') இலக்கியச் சாற்றில் ஊறித் திளைத்து இலக்கிய உணர்வுகளை யதார்த்தத்தின் எதிரே நிறுத்தி நையாண்டி செய்யும்போதும் சரி ('போ...அங்கிரு') நயமான சொற்களைக் கொண்டு ஒரு கனவுலகைப் படைத்துக் காட்டும்போது சரி- இப்படைப்பாளியின் உணர்வும் உணர்ச்சிகளும் தனியருவரது உணர்ச்சிகள், அனுபவங்கள் என்ற அளவில் நின்று விடாது, குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் குறிப்பிட்ட வரலாற்று நிர்ப்பந்தங்களுக்கும் கட்டுப்பட்டு வாழும் ஈழ மக்கள், போராளிகள், அகதிகள் ஆகிய அனைவரது கூட்டு உணர்வாக, கூட்டு அனுபவமாக, கூட்டு நினைவாக பரிணமிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் அவர் கண்டவை 'கரைந்துருகும் மனிதம்', 'ஆண்டபரம்பரை'யினரின் இறுமாப்பு, காய்களை நகர்த்தித் தலைகளை வீழ்த்தும் 'சதுரங்க ஆடல்'... அங்குள்ள 'நண்பர்கள்'

வாடும் பயிர் கண்டு
வாடுவர் முதலில்.
படி அளந்து
கஞ்சி வார்ப்பர்
இடையில்
தவிக்கும் உயிர்களைப்
பங்கு வைப்பர்
முடிவில்.

கவிஞனை நண்பர்கள் பார்ப்பார் ஒருவிதமாக; 'விலகுகின்றாயா?' எனக் கேட்டு முகத்தைத் திருப்பிக் கொள்வர். ஆனால் 'முற்றத்தில் வேலி'யையும் தலைவாசல் தாண்டினால் முட்புதரையும் காண்கையில் அவனால் என்ன செய்ய முடியும்? தனது இலட்சியத்தைக் கைவிட மறுக்கும் அவன் கூறுகிறான்:

பொடியன்களின்
கிட்டிப்புள்
விளையாட்டல்ல
அழாப்ப...
பணயம் வைக்கப்பட்டுள்ளவை
தேசிய நிர்ணம்

கவிஞன் வரலாறறிந்தவன், வரலாற்றின் எதிபாராத் திருப்பங்களையறிந்தவன்; வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள துரோகச் செயல்களையும் கண்டவன்.

எதிரி மாநிலம் ஆளவந்தான் - தோழன்
கூடவே வந்து சேர்ந்தான்.

என்பதைக் கூறும் அவன் 'தோள் கொடுத்த எலும்புகளில் சமைக்கப்பட்ட சிம்மாசனத்'திற்குச் சிரம் தாழ்த்த மறுத்தவன். அதேசமயம் முறை தவறிய 'நண்பனை' எச்சரிக்கவும் தயங்காதவன்:

சயனைட் குப்பியை
சயனைட் தின்னும்
தொப்புள் கொடியில்
சயனைட் பூக்கும்

ஆழமான கேள்விகளையும் கருத்துக்களையும் முன்வைக்கும் கவிஞன் இவற்றுக்கு எளிதான, இதமான பதில்களை யாராலும் பெற்றுவிட முடியாது என்பதையும் வலியுறுத்துகிறான். தேசிய விடுதலைப் போராட்டம் "சறுக்குகின்றது இலக்கு/ குறியும் தவறி" என்று அவன் வேதனைப்பட்டாலும் போராட்டத்திற்கான தேவை, தொடர்ந்து போராட வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை அவன் மறக்கவில்லை:

உழு
மறுத்துழு
மீளவும், மீளவும்
பண்படும் நிலம்

தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தினால் இனிவரும் தலைமுறைகளும் பாதிக்கப்படும் என்பதை அவன் அறிவான். ஆயினும் கையினில் ஏந்திய நெருப்பை அணைக்கவா முடியும்? அது சுட்டொ¢ப்பதைத் தடுக்கவா முடியும்? நெருப்பு

எரியவும் வேண்டும்
ஒளிரவும் வேண்டும்
புயலினும் ஏறவும் வேண்டும்

அது அழிக்கவும் வேண்டும்; ஆக்கவும் வேண்டும்.

ஆனால் போர்க்களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட போராளியின் நெஞ்சத்திற்கு அமைதி ஏது?

அகதிமுகம் பெறவா
உயிர்க்களையை
நான் இழுந்தேன்?
தேசமெங்கும்
தீ விதைத்தேன்?

ராஜராஜன் குதிரையின் குளம்புகளதிர்ந்த தமிழகத்தில் "செவிலியர் பண்புடன் ஒத்தடம்" கொடுத்து ஆசுவாசப்படுத்திய நாட்கள், நீங்காத உறவுகள் உருக்கொண்ட நாட்கள் கவிஞனின் நினைவுத் திரையில் தோன்றுகின்றன. கவிஞன் இங்கிருந்தும் விடைபெற வேண்டிய கட்டாயம். "முகம் பெற்றவனாக" திரும்பி வருவதாகக் கூறிச் செல்கிறான்...

இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகள் தற்கால அகதியின்- ஈழத் தமிழரின், பாலஸ்தீனியரின், குர்து இனமக்களின்-இருப்பு நிலை, வீடற்ற வாழ்வு, நிறவெறிக்கிலக்காகும் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றின் பாதிப்புகளிலிருந்து பிறந்தவை. கடுமையான அரசியல் போராட்டமும், மூர்க்கத்தனமான குழுச்சண்டையும், துப்பாக்கிச் சண்டையும் பு¡¢ந்து பு¡¢ந்து அலுத்துப் போய், இலேசான நம்பிக்கையிழையன்றில் தொங்கிக் கொண்டு ஊசலாடும் மனிதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, தாயகத்தை விட்டுப் பலர் நீங்குகின்றனர். தேசிய ஆளுமையை உறுதிப் படுத்தியும் தேசவிடுதலையைக் குறிக்கோளாக்கியும் தொடங்கிய போராட்டங்கள், தேசத்தையே காயப்படுத்தும் போராட்டமாக மாறியுள்ள கொடுமையை ஈழத்தில் மட்டுமல்ல, வேறு சில மூன்றாம் உலக நாடுகளிலும் காணலாம்.

தேசியத் தன்னுரிமைக்கான போராட்டங்கள் பாதை மாறிச் செல்கையில், போராட்டத்திற்காகக் குரல் கொடுத்தும் கைகொடுத்தும் உதவிய கலைஞர்கள், அறிவாளிகள் -ஏன் போராளிகளில் சிலரும் கூட - மனம் தடுமாறுகின்றனர்; செய்வதறியாது திகைக்கின்றனர்; போராட்டத்தை வழிநடத்தும் தலைமையை இடித்துரைக்கவோ மாற்றுப் பாதையைக் காட்டவோ முனைகின்றனர். விமர்சனக் குரல்களோ அடக்கப்படுகின்றன. காலம் செல்லச் செல்ல போர்வாடை சித்தத்தையே மயக்கி நிலைகுலையச் செய்கிறது. எனவே அவர்கள் தாயகத்தை விட்டு வேறு புகலிடங்களை நாடிச் செல்லத் தலைப்படுகின்றனர். நமது கவிஞனும் செல்கிறான் - யாருடைய சொர்க்கத்தையும் தட்டிப்பறிப்பதற்காக அல்ல.

அவன் போய்ச் சேர்ந்த இடம் உலகிலுள்ள சாலைகள் மட்டுமல்லாது "றுகள் வாய்க்கால்கள், நிலத்தடி நீரோடைகள், பாதாளச் சுரங்கள்" ஆகியவையும் கூட போய்ச் சேரும் இடம். அங்கு

வந்து வந்து
சேர்கின்றன பார்
அறுத்தெடுத்த
ஈரல் குலைகள்
துடிதுடிக்கும்
இதயங்கள்
உருவி எடுக்கப்பட்ட
நாடி நரம்புகள்
பதமான
முகங்கள்....

மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், வட அமரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கும் அகதிகளாகச் செல்லும் உலக மக்கள்- பழுப்பு நிறத்தவரோ, மஞ்சள் நிறத் தவரோ, கறுப்பினத்தவரோ, யாராக இருந்தாலும் சரி- அவர்கள் எல்லாருமே 'கறுப்பர்கள்தாம்'. 'வெள்ளையரல்லாதவர்கள்தாம்'. அங்கு "ஊரினில் தீண்டாத 'இழிசன' பணிகளை ஆலாய்ப் பறந்து தலைகளில் சுமந்தாலும் அதுவும் கூட நிரந்தரமாக அமைவதில்லை. அகதிகள் தஞ்சம் புகுந்துள்ள குறிப்பிட்ட நாட்டின் வறிய பகுதியினரின் வெறுப்பையும் குரோதத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அக் குறிப்பிட்ட நாட்டிலுள்ள நிறவெறியர்கள் அகதிகளை வெளியேற்றுவதையே இலட்சியமாகக் கொள்கின்றனர். அவர்கள்

தீப்பற்றும் குரல்களால்
செவிகளில் அறைவர்
"வெளியேறு..."
சிலைகள் உயிர்க்கும்
வாள்முனை மினுங்கும்

அகதிகளுக்குத் தஞ்சமளித்துள்ள மேற்கு நாட்டரசாங்கங்கள், மூன்றாம் உலக மக்களின் நிலை கண்டு கவலைப்படுவதாகக் கூறிக்கொண்ட போதிலும், நிறவெறியர்களின் அச்சுறுத்தல்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கத் தயங்குகின்றன. ஏனெனில் வெள்ளையர் அல்லாதவர்களைப் "பிறத்தியாரா`கவே பார்க்கும் ஒரு சமூக வரலாற்று மரபில் வந்தவைதானே அவையும்? இனவெறி தனது கோரைப் பற்களைக் காட்டாத சாதாரண நாட்களிலும் கூட வெள்ளையா¢ன் 'பூனைக் கண்கள்' இகழ்ச்சியைக் கொட்டும். தமது 'நிழலும் குறுகிக் கரைய' அகதிகள் தமக்குள்ளேயே சுருங்கிக்கொள்வர். அல்லது கவிஞனைப் போல் சவால் விடவும் செய்வர்:

"சாதிய வெக்கையிலும்
வேகாத உயிர்
நிறவெக்கையிலா வேகும்?"

எத்தகைய வாழ்க்கை அது? அங்கு

மனிதம் சிறுமையுற
சூத்திரங்கள் அச்சுறுத்த
இயந்திரங்கள் காவு கொள்ளும்.

கவிஞனின் அந்நியமாதல் இங்கு கொடூரமான பா¢மாணங்களைப் பெறுகிறது. அவனோ ஒரு ஏதிலி. அதுவும் 'கறுப்பிலும் மாற்றுக் குறைந்தவன்' இவனுக்குப் பாலுணர்வு ஒரு கேடா? இயல்பூக்கள் அவனைச் சீண்டிப்பார்க்கின்றன. என்ன கொடுமை!

கும்பி கூழுக்கழ
கொண்டை
பூவுக்கழுததாம்!
இது
எதற்கழுகின்றது
இடம் வலம்
தொ¢யாத இடத்தில்.

சாதித்திமிரோடு வளர்ந்த யாழ்ப்பாணத் தமிழர் சிலர் மூன்றாம் உலக மக்களின் மானுடத்துவமே மறுக்கப்படும் இந்த நாடுகளிலும் கூட கறுப்பின மக்களைத் தங்களினும் இழிவாகப் பார்ப்பதும் நடக்கிறது:

குறுக்குக் கட்டும்
நார்க் கடகமும்
சுமந்தோரெல்லாம்
இழிந்தவரானால்
என்னவர் அகங்கள்
தரமிங்கும் அளக்கும்
கறுப்பினை இகழும்

புலம் பெயர்ந்து வாழ்வோருக்கு வேறு சில சிக்கல்களும் தோன்றுகின்றன. தாயகம் பற்றிய நினைவுகள் ஒருபுறம் அவர்களை வாட்டி வதைக்கும். மற்றோர் புறமோ எதிலிகளுக்கே உரிய நிச்சயமற்ற நிலை அவர்களது நினைவுகளையும் கூட கொன்றழிக்கக் கூடியதாக மாறி அவர்களைத் துன்புறுத்தும்.

என்றாவது ஒருநாள் தாயகம் திரும்பலாம் என்ற நம்பிக்கையைக் குலைக்கும் செய்திகள் தாயகத்திலிருந்து வந்து, அவர்களது செவிகளைத் தீண்டும். அங்கு முடிவே கண்ணுக்குத் தொ¢யாத ஒரு போராட்டத்திற்காக இளைஞர்கள் மடிவதும் பெண்களும் வயோதிகர்களும் பிணங்காத்துப் பிணங்காத்துச் சோர்வுறுவதும்தான் அன்றாட நிகழ்வுகள்.

வரலாறு, நினைவு, அன்றாட வாழ்வு இவற்றில் சிக்குண்டு மனங்குமுறுபவரே இன்றைய அகதிகள். வரலாற்றின் இயக்கத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவரைப் பார்த்து சங்கடங்கள் நிறைந்த அன்றாட வாழ்வு ஏளனப் புன்னகை வீசும். தமது நிலையை மறக்க முனைபவரைப் பாழாய்ப் போன நினைவு வந்து சஞ்சலம் கொள்ள வைக்கும்.

ஏக்கப் பெருமூச்சுடன் கடந்தகால நினைவுகளில் தம் சிந்தனையைப் படர வைக்க முயல்பவர்களை வரலாற்றின் வலிய கரம் உசுப்பி எழுப்பி விடும். தாயகத்தின் பண்பாடும் இலக்கியமும், ஏன் அதன் வரலாறும் கூட, அகதி மனத்திற்கு ஆறுதல் தந்து அதனைத் தேற்றக்கூடிய சக்தியை இழந்து விடுகின்றன. வேரறுந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் எதை ஆறுதலாகக் கொள்வது? பயணங்கள் முடிந்த பிறகும் இளைப்பாற முடியாமல் போனால்? "பறவைகள் எங்கு செல்லும், கடைசி வானத்திற்குப் பின்?" - பாலஸ்தீனியக் கவிஞர் மஹ்மூக் தார்வீஷின் இக்கேள்வி உலகமெங்கும் சிதறிக் கிடக்கும் அகதிகளின் உதடுகளில் உறைந்து போய் விட்ட கேள்விதான்.

இந்த நம்பிக்கை வறட்சியைக் கடந்து செல்லும் இடையறாத முயற்சியை அரவிந்தனிடம் காணலாம். தாயகத்தின் மீதுள்ள அவரது தணியாத வேட்கையை, தற்செயலாகக் கவிஞன் மீது விழும் நிலவொளி தட்டியெழுப்புகிறது. அது வேறுபல நிலாக் காலங்களை அவனுக்கு நினைவுபடுத்துகிறது. "நிலவின் குறுக்காய்" எட்டடுக்கு மாளிகைகளும் இராட்சத இயந்திரங்களும் நின்று நிலவின் தோபையை அபகா¢த்த போதிலும் கவி மனம் கற்பனையில் இலயிக்கின்றது. 'குருதிபட்டு குழிக்குள் ஒடுங்கும் துயர்வாய்ப் படுமுன்னம்' தென்பட்ட தாயகத்து நிலவொளியைக் கவிதையாக மாற்றுகிறான் அகதிக் கவிஞன். கற்பனா உலகில் கண நேரமே சஞ்சா¢க்கிறான். ஆனால் அதுவே அவனுக்குத் தெம்பூட்டப் போதுமானது:

நிலவாடி
நிலவொளியில் நீராடி
நீருக்குள் ஒளிந்தாடி
வாலைப் பருவத்தார்
இளந்தேகம் தொட்டாடி

அக்காலத்தில் கவிஞனை தனது ஒளியில் 'தோய்ந்த' அந்நிலவு, நினைவுச் சின்னமாகவும் நாளைய உலகிற்கு ஒளியூட்டக் கூடியதாகவும் உருவகப்படுத்தப்படுகிறது.

உயிருக்கு
பால் சிந்து
அங்கிரு
நான் வர.....

என்று நிலவுக்கு விடை கொடுத்தனுப்புகிறான் கவிஞன்.

அரவிந்தனின் கவிதைகள் முடிவு பெறாதவை. அவர் தனக்குள் நடத்தி வரும் உரையாடல்களே இங்கு கவிதைகளாக வடிவங் கொண்டுள்ளன. புலம் பெயர்ந்து வாழ்வோர் கடந்தகால நம்பிக்கைகளுக்கும் தற்கால மனச்சோர்வுக்குமிடையே ஒரு சமன்பாட்டை உருவாக்க விரும்புவர். நினைவுகளைக் கொன்றோ, தற்கால எதிர்பார்ப்புகளைத் தவிர்த்தோ, மிகை நம்பிக்கைகளை உருவாக்கியோ இந்தச் சமன்பாட்டை உருவாக்க முடியாது. அகதிகள் நாடிழந்தவர்கள்; நாடிழந்த காரணத்தால் தம்மையே இழந்தவர்கள். அவர்கள் பெயர் மாறி, உருமாறித்தான் வாழ வேண்டியுள்ளது. பாலஸ்தீனிய அறிஞர் எட்வர்ட் சய்து கூறுகிறார்: நாடு விட்டு நாடு சென்று வாழ்பவரது வாழ்க்கை, பெயர்கள் சூட்டப்படாத புகைப்படங்களாக உறைந்து போனவை. இந்தப் புகைப்படங்களில் காட்சியளிக்கும் பிம்பங்களுக்குப் பெயா¢ல்லை. அவற்றால் பேச முடியாது. அவற்றைப் பற்றி எதையும் விவா¢த்துக் கூற முடியாது. ஆனால் காண்போர் மனத்தை அவை சலனப்படுத்தும் - சுண்டியிழுக்கும். தொலைந்துபோன தாயகங்களை நினைவுபடுத்தும்.

அப்படி நினைவுபடுத்தப்பட்ட தாயகத்தின் பொருட்டுத் தான் அரவிந்தன் சூ¡¢யனிடம் மன்றாடுகிறார்,

உன் சினம் தணி!
வெங்கதிர்களை
சுருக்கிக் கொள்!
கடல் நீர்
உறிஞ்சி
கார்மேகம்
படைத்து
மழைக்கரங்களால்
நீராட்டு,
செழிப்பூட்டு,
பூக்களும் தென்றலும்
முத்தமிட.

வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை

சென்னை
17.09.1992


முகம் கொள்

1.

இருள் பாய் சுருள்கின்றது
வேறெங்கோ விரிவதற்காய்.

நங்கூரம் தூக்குகின்றது
இராமானுஜம் கப்பல்.

இன்னமும் அணையாமல்
இராமேஸ்வரம் விளக்கு.

ஆழிக்குமரனும் நீந்திய
பாக்கு நீரிணை

சொற்பக் கடல்தான்
அப்பால் வி¡¢யும்
மகா சமுத்திரமாய்
விழிநீர் பெருக்குடனும்....

ஆழ்கடல் போர் முடித்து
அணி குலைந்து திரும்பும்
கடற்புரவிகள்.

கணக்கும் காயமும்
கரையினில் தொ¢யுமோ?

நானுமாய் வலை வீசிய
கடலிடம் ஏது?
கலைகள்தாம் எங்கே?

எனதரும் தோழர்
ஏலேலோ பாடகரை
உட்கொண்ட கடல்.

அடேய் மைக்கல்....
எதையெல்லாம் நான்....

கடுகின் காரம் நீ.
புரண்டெழும் அலைகளில்
எற்றுண்ணும் நீர்த்திவலைகள்

காற்று காவி வரும்.
கண்கள் கா¢க்கும்
அழுது விடுவேனோ?

சூ¡¢யன் எழுமுன்னால்
கரை கடந்தாயிற்று
நேசக் கடல் தாண்ட....

காற்றும் கடலுமாய்
தொடுத்த போ¡¢ல்
அழிந்து போன கரையும்,
அழிந்த கரைமேல்
சவுக்கு மரத் தோப்பும்
கோட்டோவியமென
மங்கித் தொலைவுறும்.

என்னைச் சூழவும்
நீலம் மிஞ்சும்.


2.

கனவுகள் மொட்டவிழும்
பயமறியாப் பருவம்.

முகில் பற்றைக் காட்டுக்குள்
பின்னிலவு புதைந்திருக்கும்.

அழிந்த கரை மேலே
கள்ளத் தோணியாலே
முன்னமொரு போதில் நான்.
அலைகளின் எக்களிப்பும்
காற்றின் பேச்சொலிப்பும்
ஈர மணற் சிலிர்ப்பின்
ஊதல் வெடடெப்பும்,
சவுக்கம் தோப்பசைவின்
கருநிழல் எச்சரிப்பும்,
கருங்கற் சுவர் ஒதுக்கால்
பவனி வரும் ராஜராஜன்
குதிரைக் குளம்பதிர்வும்....

நான் அப்போது அறிந்தேனா
இறங்கியது கரையல்ல
மானுடப் பேராழியென்று.

அச்சம் தவிரென்று
உச்சி முகர்ந்தும்,

செவிலியர் பண்புடன்
ஒத்தடம் தந்தும்

நெய்தல் மருதம்
குறிஞ்சி முல்லை
நிலங்கள் தோறும்
என்னுடன் நீங்கள்.

பாலை நிலத்திற்கும்
நீர் வார்க்கும் கனவுகள்.

மனங்களில் சுரக்கும்
சுனை நீர் ஊற்றுகள்.

நெஞ்சினில் நீர்மை
மிகுந்தனாலோ
நீர் வற்றிப் போயின
காவி¡¢, வைகை, பாலாறு....


3

பசியாறா வெறியுடன்
கடல்,
மெளன இருட்டாழம்
ஆர்ப்பா¢ப்பில் அமுங்கும்.

என்னையும் அழைக்கின்றதா?

வாலிப முறுக்கினில்
மிதப்புறும் வெண் நரையாய்
நுரை பொங்கும் அலைகள்.

அலை எங்கும் கரையேறும்,
மண்தனையும் மெல்லும்.

கடல்வாய் கொள்ளுண்ட
நிலம் போலாகுமோ
துப்பாக்கி வாய்ப்பட்ட
என் சிறு தேசம்.

வீ¡¢ய விதைகள்
இரத்தத்துள் அமிழும்,
பதர்கள் மிதக்கும்.

சிறு போகம், பெரும் போகம்
எல்லாமும் பொய்த்ததுவோ....?

அகதி முகம் பெறவா
உயிர்க் களையை
நான் இழந்தேன்?
தேசமெங்கும்
தீ விதைத்தேன்?

துறவறம் கொண்டதும்
கடுந்தவம் பு¡¢ந்ததும்
வரம் பல பெற்றதும்
வீரமும் களத்தே விட்டு
வெறுங்கையோடு இலங்கை புகும்
இராவணேஸ்வரனாகவா?

சிறகுகளைக் கூட
காவிச் செல்ல மாட்டாமல்...
சரணாலயம் நீங்கும்
ஏதிலிப் பறவை.


4.

ஒளிக் கதிரில் சூடேற்றி
சூரியன் எழுகின்றான்.

நீண்டும் கோணியும்
படியும் என் நிழல்....

மூத்தது கோணலென்றால்
பின்னால் பிறந்தவையும்....

இருக்கையும் அதட்டுகிறது.

"என்ன புலம்புகின்றாய்
நாடற்றவன் போல....
அகதி முகம் உள்ளதே
அப்புறம் என்ன?

நீங்கள் கையுயர்த்தி
முகமழித்த மனிதரை
நினைவுண்டோ?

இந்த இருக்கைகளில்தான்
எத்தனை ஆயிரம்
துயர் கொண்டழுதிட்ட
என்புத் தோல் மனிதர்கள்.

மர இருக்கைகளை
பிளாஸ்டிக்காய் மாற்றியதே
அவர் உகுத்த கண்ணீர்தான்!

அலையின் சுழற்சியை
என்னென்பேன்
அவர்கள் வந்திறங்கிய
கரை இருந்து நீ.
வேடிக்கையாக இல்லை.

கவனத்தில் கொள்
உன் சந்ததியையும்
கேடு சூழும்
நாதியற்றவராய்....
நாடற்றவராய்...
அப்போது புலம்பு...."

இருப்பு கொள்ள
மனம் மறுக்கும்
காங்கேசன் துறை நோக்கும்
கப்பலின் அணியம்.

ஆபுத்திரன் கரையேறிய
மணிபல்லவம் தீவும்
மறைகின்றது.

விரிந்த வானத்தில்
வெண் முகில்கள்
இணைந்தும் கலைந்தும்
உருக்கொள்ளத் தவித்தும்,

என் முகம் போல....


5.

நான் எதையெல்லாம்
உங்களில் தொற்ற வைத்தேன்?

நீங்கள் எவற்றையெல்லாம்
எடுத்துக் கொண்டீர்?

நான் அறியேன்.

ஆனால் நான் கனிந்தேன்
உங்கள் தோளணைவால்
வெம்பலாகாமல்.

வேர் ஏன் அறுந்தது?

அத்தேசம் என்னை
உயிர்ப்பிக்கட்டும்.

என்னைத் தள்ளுங்கள்

தள்ள முடியாதவை
எல்லாவற்றையுமே
உரைத்துப் பாருங்கள்
நிறுத்துக் கொள்ளுங்கள்.

நிறுவைப் படிகள்
உங்கள் கைகளில்.

காவிரிப் படுகையிலும்
வைகைக் கரை நெடுகிலும்
கா¢சல் மண் காட்டிலும்
என்னுடன் அலைகையில்
எதை நீர் விதைத்தீர்?

பருத்தி வெடித்தால்
தறியினில் நெய்யலாம்,
கரும்பு விளைந்தால்
ஆலையில் பிழியலாம்,
கம்பு பயிரானால்
கூழ் காய்ச்சிக் குடிக்கலாம்,
கூட்டு நினைவினில்
பயிராகி வளர்ந்தவை
ஆறாத் துயரென்றால்....
கருத்துகள் பற்றிக் கொள்ளும்

சந்தேகம் கொள்ளற்க
கற்களின் உரசலில்
தீப்பொறி தெறிக்கும்.
பாறை இடுக்கிலும்
நீர்மை கசியும்.

சொர்க்க பூமியும்
கனவுத் தேசமும்
எங்குமே இல்லை.

இரத்தமும் சதையுமாய்த்தான்
பாதைகள் வி¡¢யும்
என் தேசம் போல
வெந்து தணியாக் காடாக....

நீலமலைத் தொடா¢னின்றும்
ராமர் அணை மேட்டிலிருந்தும்
எட்டிச் செல்லாப்
பாடமாக....

இன்றுபோய் நாளை வரும்.
உயிர்ப்பேன்
உங்களிடை இருப்பேன்.

கைகள் கொள்ளா
கலைச் செல்வங்கள் காவியும்
நெஞ்சு முட்ட
அன்புதனை நிறைத்தும்

நேசக் கடல் நாடி
வருவேன்-
முகம் பெற்றவனாக

1988 பாக்கு நீரிணை
 


முடிவுறாத பாடல்கள்

காற்றும் நெருப்புமாய்
வாழ்வும் இறப்பும்.

கரைந்துருகும் மனிதம்.

உயிர்த் துளிகளாய்த்
தேங்கிய வெள்ளம்.

கந்தகப் பூமியின்
வெக்கையின் வீச்சம்

காற்று சுழல்கின்றது
சருகுகள் பறக்கின்றன
சரசரத்த இரைச்சலுள்
கற்பகத் தருக்களும்
முறிபட்டு வீழ்கின்றன.

பார்வைப் புலன்களில்
புழுதிப்படலம்.

சறுக்குகின்றது இலக்கு
குறியும் தவறி....

யாரங்கே...?
ஏனிந்த முகச்சுழிப்பு?

சுரையை விதைத்தால்
அவரையா விளையும்?

அக்கினிக் குஞ்சொன்றை
ஆங்கோர் காட்டிடைப்
பொந்தினுள்....'
வைத்தது யார்?

மறந்து விடலாந்தான்
இலகானதுதான்
ஆனால் நடப்பதுவோ
அறுவடை.

வார்த்தைகளில்
தீ ஊறிப்
பாடல்களும் எ¡¢கின்றன.

சேறுபடா கரங்கள் எது?
பதர்களில்லா விளைச்சல் ஏது?

நெருப்பே நீ
வளர்!
கொழுந்து விட்டொ¢.

துடைத்துப் பொசுக்கு
பாரச்சுமைகளை
பாவ மூட்டைகளை.

இந்தா
உயிரும் சதையும்
வலுவிழந்து விடாதே

பற்று
மூண்டெழு
ஈரலிப்பு, நீர்மை
அனைத்திலும் தாவு.

பவுத்திரங்கள் பொசுக்கு

சீறிச் சினந்து
கங்குகள் விசிறு

ஓளிர்....

வசந்த ருதுவென
தேசம் வனப்புற....

 



ஆண்ட பரம்பரை

1.

கதவடைப்பு
அ¡¢தாரம் பூசிய
ஆண்டைகள்
ஆடிடும் மேடை

எந்தக் கூத்தானாலும்
இராஜபார்ட் வேடம்!

வாடும் பயிர் கண்டு
வாடுவர் முதலில்.

படி அளந்து
கஞ்சி வார்ப்பர்
இடையில்.

தவிக்கும் உயிர்களைப்
பங்கு வைப்பர்
முடிவில்.

தோள் கொடுத்த
எலும்புகளில்
சமைப்பர்
சிம்மாசனம்.

மூலைக் கற்கள்
பெயர்ந்துதிர
துப்பாக்கிகள்
தாங்கும் கவசம்.

சாரளம் கட்டி
கற்கள் சுமந்து
எழுப்பிய கோபுரம்.

நந்திகள் மறைக்கும்
பிரகார வெளியில்
நான்.

என்னில் எங்கணும்
இரத்த விளார்கள்.

மூளைப் பொறியின்
அறைகள் கனக்கும்.


2.

கற்களால் அடுக்கிய
வேலிக்குள் காலம்.

விடியலில் பனை ஏறி
வெயிலில் மண் கொத்தி
அந்தியில் வலைவீசி
ஒடுங்குவர் மனிதர்.

சாட்டைகள்
பிரம்புகள்
உலாவரும் தெருவில்.
சாதிக்காக ஒதுக்கிய
குடிநீர் தேடி
சுடுமணல் வெளியில்
அன்னையர் நடப்பர்.

நுகத்தடி திமிறி
நிமிர்பவர் மாள்வர்
ஒப்பா¡¢த் தாலாட்டில்
மீளவும் வாழ்வர்.

அம்மா... அப்பா!
நீ பிசைந்த சோற்றில்
கண்ணீர்க் கா¢ப்பு.

நெருப்புக் கவளத்தை
ஏனம்மா ஊட்டினாய்?

தொலைந்த வீரங்கள்
வண்டலாய்ப் படியும்.

தென்னங்கீற்று
விசிறும் தென்றலில்
ஒளிக்கசிந்த நிழல்
ஆடும்....பாடும்.

உதிரும் பூக்களில்
வண்ணங்கள் கழன்று
பா¡¢க்கும் நீலம்.

முருகைக் கற்களில்
கடல் நீர் எகிறும்.
எனது ஊ¡¢ல்....


3.

கறுத்த பனங்கூடல்
மரவள்ளித் தோட்டம்
தும்பிகள் ¡£ங்கா¢க்கும்
பூவரசு நிழல்.

சாமக்குருவிகளும்
தூக்கம் கொள்ளும்
எம் பேச்சும் விழிப்பும்
செம்பரத்தம் பூச்சி¡¢ப்பும்.

சதுரங்க ஆடலில்
காய்களை நகர்த்த
வெட்டுண்டவை
தலைகள்.

சுற்றிச் சுழன்றாடி
தலைகளைக் கொய்தும்
வாகை மலரென
மார்பினில் சூடியும்
ஆற அமர்ந்து
திரைதனை விலக்க
வண்டியும் மாடும்
சுப்பற்றை கொல்லைக்குள்.

கண்கள் கூசும்
பகட்டுச் செவ்வண்ணம்
மினுங்கும் பற்களில்
காயாத இரத்தம்.
புதுப்புழாவில்
பழைய கள்

மீண்டும் மறுமுறை
ஆண்ட பரம்பரை.

மொட்டுகள் கருகி
இலைகளும் நசிந்து
படிமக் குழையலாய்
கனவு.

முண்டுகொடுத்த
தோள் விலக்கி

தனியரு சருகென
அலையும் வெளியிலும்
உன்னை வி¡¢.

உழு
மறுத்துழு
மீளவும், மீளவும்...

பண்படும் நிலம்.

.




மாலையில் விழுந்த பின்
முன்னிராப் பொழுதொன்றில்...

மையல்பொழுதில்
மது அருந்துதல்
உயர்குடி
நளினம் சொட்டும்
நாகா¢கம்.
நெஞ்சுக்குள் ததும்பும்
வஞ்சகம், வன்மம்.

வடிசாராயம்
குடியானவர்க்கானது.
நேசங்களான
உறவுகள் சூழும்
கோபங்கள் நெகிழ்ந்து
பொங்கியும் வழியும்.
சுமை மெல்ல இறங்கும்.

பாட்டுக் கட்டலாம்
கட்டறுத்து நிமிரலாம்
உள்ளத்தைக் கொட்டலாம்
சிறகின்றிப் பறக்கலாம்
கனவெல்லாம் நிரவலாம்.

மடக்கென ஊத்தாமல்
தொண்டை எ¡¢த்தாலும்
ருசித்து ருசித்து...
மெல்லென ஏறி
மயிர்க்கால் சிலிர்த்து
நரம்புகள் நீவி
தாளத்தால் கோதி.

'கண்ணின் மணிபோல
உறவாடினாய்
காற்றிலும் இனிதாகத்
தாலாட்டினாய்
விண்ணிலே நிலாக்காட்டி
சோறூட்டினாய்
அம்மா தாயே
ஏனிந்தக் கோலம்
அம்மா....அம்மாவென்று.."*

சாராயத்துள் தாழுமோ
நம்மிருள்?
கலைஞனே
நிழல்களை எட்டி
நிழல் ஒதுக்குக்குள்
துழாவி,
சொற்களைக் கூராக்கு
வில்லில் நாணேற்று...
இறங்கினால்
இந்தா சுவை
இன்னுமொரு முறடு
எடு....தொடு
பாடு.

கத்தி¡¢ வெயிலிலே - புழுதி
புகைந்தெழும் சாலையிலே
தாகம் மேலிட யார் நடந்தார்? - கானல்
நீருக்கோ அவரலைந்தார்.

எழு, துணி, ஓடு என்றார் - கருவி
கையெடு, போரெயென்றார்
எதி¡¢ மாநிலம் ஆளவந்தான்-தோழன்
கூடவே சேர்ந்தும் வந்தான்.

தந்தனதான தன்னா -தன
தந்தனதான தன்னா
தந்தன தான தன்னா- தோழா
நீயுமா கூட வந்தாய்?
மூல உபாயத்தை விற்று வந்தாய்.

சுணக்கெட்ட நாவில்
ஊறுகாயைத் தடவு
காரச் சட்டினியில் இட்டிலியைத் தொடு.
சுள்ளென உறைக்கட்டும் - நீ
மனசை உதறு...ஆடு
நிலவும் இனி
சாராயத்துள் தோயும்.
காற்றும் பருகும்
பூக்களும் நுகரும்

தாளம் உடைந்தாலென்ன
கானம் பிய்ந்தாலென்ன
நிரல்கள் குலைந்தாலென்ன
சுற்றமும் வெறித்தாலென்ன
ஆடு....
கலைஞனே டு
டடா நீ ஆடு
குதித்தாடு
விண்முட்டி மோது
கூவு....கூத்திடு...

தோம்...தகதோம்
தக தக தகதோம்
தகதோம்
தகதகததோம், தகதோம்
தகதோம், தகதோம்.

யாரங்கே நண்பன் போலே
கோடியால் உள்நுழைந்து
பாரெங்கள் படைப்பெருப்பை
பொடிப்பயல் நீர் சரண்புகுவீர்
தாருந்தன் கருவியெல்லாம்
நொடியிலென ஆணையிட்டார்.

மார்தட்டும் நியாயவானே
அபயக்கரம் கேட்டோர் மேலே
அகண்ட காலால் மிதிக்கலாச்சா
பஞ்சசீலமும் மறந்து போச்சா
காந்தி கைத்தடி துவக்குமாச்சா
ஒப்பந்தங்கள் அடிமைச் சீட்டா?
தகதோம் தகதோம்
தக தக தகதோம்
தகதோம்....தகதோம்
கொதி எண்ணைத் தாழியாலே
எ¡¢ நெருப்பில் தான் வீழ்ந்-தோம்
தோம்....தோம்....

* கலைஞர் லடீஸ் வீரமணியின் பாடலொன்றில் இருந்து நன்றியுடன் இவ்வா¢கள் எடுத்தாளப்படுகின்றன.



நன்றி கெட்டதுகள்!

கண்களில்
வேட்டைப் பற்கள்.
காயத்தைத் தின்னும்
ஈக்கள்.
கால்களிடைத் தொங்கும்
நிமிரா வால்.
காலடியை முகரும்
என் நாய்.
தாண்டிச் சென்றால்
குதறிடுமோ?
என்னில்
பசியாறிடுமோ?

நன்றி கெட்டது
நாயா...நானா?

அல்சேஷன், பார்மேனியன்
மேல் சாதியானால்
மடியில், தோளில்
ஏன்
சைக்கிளிலும் பெட்டி கட்டிக்
காவிச் சென்றிருக்கலாம்.
பதுங்கு குழியுள்ளும்
இடம் ஒதுக்கி இருக்கலாம்.
ஆனால் நீ....

ஊர் நாய்
தெரு நாய்
'பற' நாய்

ஐம்புலனும் ஒடுங்க
அந்தகாரம் சூழும்.
துப்பாக்கிச் சனியன்களின்
வேட்டைகள் தொடங்கும்.
எவ்விழியாய், செவியாய்
உணர் நரம்பாய்...
நீ....

அந்நிய வாடை சுமந்த
காற்றையும் எதிர்த்தாய்.
இந்திய ஜெனரல்களின்
சிம்ம சொப்பனமானாய்.
இசையின் சுருதியென
குலைப்பினில் பி¡¢த்து உரைத்தாய்
உயர்சாதி நாயெல்லாம்
சோபாவில், குஷனில்
ஒய்யாரமாய் ஓய்வெடுக்க
மண் விறாண்டா கிடங்கெடுத்து
படலையடியில்
காவல் இருந்தாய்.

இருந்தும்தான் என்ன?
கைவிடப்பட்டாய்.

அப்படிப் பார்க்காதே
கம்பியால் இழைத்த
சுருக்குத் தடத்தினுள்
உன் மூதாதையா¢ன்
உயி¡¢ன் யாசிப்பு,
நாய்களின் தொல்லையென
முன்னம் நாட்களில்
காட்டிக் கொடுத்தது.

உனக்கு நினைவுத் தொடர் உண்டா?

ஐந்தறிவு ஜீவன்
வாஞ்சையுடன் தாவுகின்றது
பா¢தவிப்பின் முனங்கல்
புண்களின் வீச்சம்
கண்கள் சுடா¢ட
செவிமடல் துடிக்கின்றது.
அன்ன தண்ணி இல்லாமல்
எப்படி நீ....?
சோற்றுப் பருக்கையுமின்றி
விடுப்பல்லவா
பார்க்க வந்தேன்

ஈனப் பிறவியடா நான்
இந்த எஜமானனுக்காகவா
நீ....?

மூசி மூசி
மூச்சிரைத்து, சிணுங்கி
பிறாண்டி, கல்விப்
பிடித்திழுத்து
வானை மோப்பமிட
தெற்கிருந்து வரும்
சாவின் இரைச்சல்.
நிலத்தில் முகம் கவிழ
நான்.
மூச்சிழந்திருந்தது
நாய்
கண்களில்
வேட்டைப் பற்கள்.....

ஆகஸ்ட் 1990, யாழ்ப்பாணம்

 



பனங்கொட்டைகள்

வெளிக்கிட்டாயிற்று
நில் என்பார் எவருமிலர்.
செல் என்கின்றது காற்றும்
முகத்திலடித்தபடி....

பனங்கருக்குச் சிராய்ப்பினால்
காய்ச்சுப்போன
நெஞ்சாங்குழி.
நெஞ்சுக்குள் சரசரக்கும்
பனைமர வெளி

பனந்தோப்பில் பழம் பொறுக்கி
சூப்பி எறிந்த பனங்கொட்டை.
நிலத்தடிநீர் உறிஞ்சி
நிமிரும் பனை.
வேரோடிப் பிளக்கும்
சுண்ணக் கற்பாறை.

வாழ்வுக்குள் ஒன்றித்து
ஓர்மத்தை விளைவித்து
கிளைவிட்ட நீட்சியில்
பனை ஈனும் வடலிகள்.

வடலி வளர்த்தா இனி
கள் குடிக்கப் போகின்றீர்?
எத்துணை இளக்காரம்?
மண் உரம் அறியா மூடர்.
ஏதறிவார் இவர்
கதிகாலை நகர்த்தி நட்டு
வளவு வளைத்த
பாரம்பா¢யம் தவிர....

பனையைத்தான் அறியார்
பனை போலாயினும்
அதில் பாதியாய்
பாதியில் பாதியாய் தன்னும்
எக்குணங்குறியும்
இல்லாமலே இதுகள்.

சிங்காசனம் இல்லையேல்
அசோக சக்கர நாற்காலியென
விலாங்காய், ஓடுகாலியாய்
தலைகால் பு¡¢யாத
அதிகாரப் பசியில்
அம்மணமாய் ஆபாசமாய்
எப்படி விளைந்தன
இவ்வகைப் பிறவிகள்?

என்னையே என்னிலிருந்து
துறக்கச் செய்கின்றது பார்
எடுப்பார் கைப்பிள்ளையாகும்
இவர்களின் சகவாசம்.

புதுப்பாளைக் கள்ளும்
குரும்பை இளநுங்கும்
காவோலை உதிரச்
சி¡¢க்கும் குருந்தோலையும்
பனம்பழம் விழுங்காலை
பழம் தின்ற காற்றும்
நுகராத நானும்....

எல்லாமும் இருக்கட்டும்
நீ போய்விடு
தனியனாய் நிற்காதே
உறவுந்தான் துரத்துகின்றது
நகராதாம் கால்
மரத்துப் போய்
மரத்துப் போய்
எதற்காம் இப்பின்வாங்கல்
நடந்த களை ஆறாமல்.....

கைகாலில் முள் கீறி
கசிகின்றது இரத்தம்
செல்லமாய்த்தான்.
பின்னே யாருக்காம் பழம் சிந்தும்
இலந்தை, விளா?
எனக்காய்த்தானே.

காய்க்கொத்தாய் நாயுண்ணி
குலைதள்ளும் ஈச்சமரம்
பூச்சுருங்கா தொட்டாச்சிணுங்கி
எல்லாவற்றிலும் முள்ளுத்தான்.
முள்ளுப் பற்றைக் காடுதான்
பனந்தோப்பு.

பட்ட பனை சாயக்கூட
நாளெடுக்கும்,
வட்டுக்குள் பச்சைக்கிளி
கூடுகட்டும்.
செண்பகக் கூவலுக்கு
மைனர்கள் பதிலிறுக்கும்.
அணில் பிள்ளை துள்ளலுக்கு
கோட்டான்கள் தாளமிடும்.

தாளகதி மங்கி மங்கி
பனந்தோப்பும் எனை நீங்கி
ஏழ்பனை நிலத்திருந்த
பனை.
யார் வளர்த்தார்
வழிவழியாய்?
பனங்கொட்டை
எல்லாமா
ஊமல்களாயிரும்?

சக்கரங்கள் எனைக்காவி
வெளிநோக்கி
வெளிநோக்கித்
தள்ளுகின்றன
ஆணிவேர்
பின்னிழுத்துப்
பின்னிழுத்து
வீழ்த்துகின்றது
புழுதி மண்ணில்....

செப்டம்பர் '90, யாழ்ப்பாணம்
 



நண்பனுக்கு


காயங்களை
ஒற்றியபடி
நீ
சிரித்திருக்கலாம்.

சிரித்த
நான்தான்
ஏமாந்தேன்.

என்னைத் கைத்தது
உந்தன்
கூர் நா.
'விலகுகின்றாயா?'

வழிவிட்டு
ஒதுங்கி
நடக்கின்றேன்
ஊனத்
தழும்புகளுடன்.

முகத்தைத்
திருப்பிக் கொண்டாய்
சி¡¢ப்பு மலராத
முகத்தை
அடைத்தபடி
முளைத்திருந்தன
வெட்டுப் பற்கள்

இவ்வழியில்
வந்தவர்கள்
வருபவர்கள்
எவர் முகத்தில்லை
வெட்டுப் பற்கள்.

என்னிலும் பார்
எங்கேனும்
துருத்தி நிற்கும்.

உன்னிடத்தில்
ஏதோ
விகா¡¢த்துப் போய்.

பிளாஸ்டிக் பூக்களை
நட்டு
மற்றவர் போல்
மறைக்காதது
பிடித்திருக்கின்றது
எனக்கும்.

பூக்களைத்
தழைக்க விட்டு
பூக்களும்
பற்களுமாய்
சமன்
செய்திருக்கலாம்.

தலையெடுத்த
பூக்களை மட்டுமா
நசித்தாய்?
உயிர் உனக்கு
மயிராயிற்று.

உடன்பாடற்ற
சமன்பாடு.

பொறு
பல்லை நறும்பாதே
சதைப் பிண்டத்தைத்தான்
குண்டெட்டும்
உயிர்த் தலத்தையல்ல.
அதனால்தானா
குரல்வளையையும்
நொ¢த்தாய்.

எல்லார் கையும்
சறுக்கியது
இதில்தான்
உலகெங்கும்.
உன்னாலும்
முடிந்ததா
இப்போது
ஒட்டுச் செடிகளில்
பூக்களும்
ஒட்டாத நிறங்களும்

தர்க்கப் பூக்களும்
உதிர்கின்றன
நதி
வற்றிப் போயிற்றாம்.

நதிமூலம்
யார் அறிந்தார்?
அதன்
பரப்பாழம்
யார் பு¡¢ந்தார்?
யானை பார்த்த
குருடர்தான்
எல்லாரும்.

நீயும்
நானும்
மா¢த்துப் போனவனும்
மரக்கலத்தில்
பயணித்த
நதி.

சேருமிடம்
கடலென்று
நான் சேர்ந்தது
குழம்பிய குட்டை.
அது தொ¢ந்தாயிற்று.

வழிகாட்டியாய்த்
துப்பாக்கிகள்
வெள்ளி முளைக்காத
இருட்திசையில்.

மீன்களும்
உன் பறியில்
துடுப்பும்
உன் கையில்
வலித்தபடி
நீ....

நதி ஒதுக்கிய
உயிர் ஜீவிகள்
காத்திருக்கின்றன.
உந்தன்
கனவிடம்
கடலிடந்தானா
குளங்குட்டையா
என....

சொல்லாமலே
சொல்லலாம்தான்
ஆனாலும் பார்
காலவெளி
நீள் கோட்டில்
இல்லை,
சுழல்பாதையில்.

விளக்குப் பிடிக்கின்றன
உந்தன்
சமன்பாட்டின்
முரண்களும்.

இதென்ன
முற்றத்தில் வேலி?
தலைவாசல்
தாண்டியும்
முட்புதர்?
கோடிப்புறத்திலும்
நிற்க இடமின்றி....

காக்காக்கள்
வேண்டாமென்றால்
நல்லாயரும்
மதம் பிடித்த
முகமாறிகள்தானே,
சங்கிலியான்
வெட்டியவன்தானே.

பொடியன்களின்
கிட்டிப்புள்
விளையாட்டல்ல
அழாப்ப....
பணயம் வைக்கப்
பட்டுள்ளவை
தேசிய நிர்ணயம்!

அதல்லாத
உன் முகம் ஏது?
வடிவம் ஏது?
சைபர்தானா?

முக வரையில்
நீ
எந்த விளிம்பை
எட்டியுள்ளாய்?

உன்னையே
நீ
அறிவாய்.

முகத் தீட்டு
படுமென்று
காவோலை
காலில்கட்டி
நடக்கவிட்டவரதும்,

கோடிப்புறத்தில்
நிற்க வைத்து
சிரட்டையில்
நீர் வார்த்தவரதும்,

மாறு முகம்தான்
உனதென்றால்

நண்பனே...

சயனைட் குப்பியை
சயனைட்
தின்னும்.
தொப்புள் கொடியிலும்
சயனைட்
பூக்கும்.
 


உறைதலாய்

நிழலும்
குறுகிக் கரையும்.
பார்வை தாழ
நெஞ்சுக்குள் கூசும்.
சுறுப்பிலும்
மாற்றுக் குறைந்த
என்னை
பூனைக் கண்கள்
உ¡¢க்கும்.
எலும்பு மச்சைக்குள்ளும்
துழாவும்.
இரத்தம்
கறுப்பாய் இல்லையோ...?
இகழ்ச்சி கொப்பளிக்கும்.

ஆப்பிரிக்காவுக்கு
தெற்கேதான் நரகமாம்.
நரக வெக்கையில்
கறுத்தவர்கள்
தங்கள் வளையத்துள்
நுழைவதோவாம்...

நரகத்தின்
வாசல் தாண்டி
வாஸ்கொடகாமா
பயணித்ததனால்தானே
குளிர் வலயத்தில்
சொர்க்கம் எழுந்தது.

யாருக்கு வேண்டும்
உனது சொர்க்கம்?
தட்டிப் பறிப்பதற்காய்
நான் வரவில்லை.
எங்கள் சொர்க்கத்தை
தட்டிப் பறித்தவர்கள்.
நீங்களே என்பதும்
எப்போதும் மறவேன்.

நீர் உறிஞ்சி
மண்ணில் வேர் பிடித்து
கனி தரும் நிழல் தரும்
மரமாகி,
விதை பரப்பி,
தோப்பாகும் முன்னால்
வேரடி மண்ணுடன்
வீழ்த்தப்பட்டேன்.
நற்கனி கொடாத மரமென்றோ
உறைபனியில் வீசப்பட்டேன்.
குண்டி மண்ணையும்
தட்டி விட்டாயிற்று.

ஆணிவோ¢ல் ஒட்டியவற்றை?

சாதிய வெக்கையிலும்
வேகாத உயிர்
நிறவெக்கையிலா வேகும்?
அந்நியன்
எங்கே, எப்போது
நேசிக்கப்பட்டான்?
இருநூறு முன்னூறு
ஆண்டுகள்
நாங்கள்
உன்னைப் பொறுத்திருந்ததோமே
கொஞ்சம் பொறு.

நிழலும்
குறுகிக் கரைய
நெஞ்சுக்குள் கூச
பனியில் உறைந்திருக்கிறேன்....


அக்டோபர்,'90. ஜெர்மனி.



துருவங்கள் மாறி....

1.

பனிப்பாளமும்
உருகும் நேரம்
மாறும் பருவம்.
துருவ வடக்கு
இனித் துலங்கும்.
பகலின் நீட்சி.

ஆடைகளைந்த
நிர்வாண மென்மைகள்.

ஓடுடைத்த
கூட்டுப் புழுக்கள்
எங்கெங்கும் பூக்கள்
வண்ணத்துப் பூச்சிகள்
சிறகடிக்கும்
கடைக்கண் எறியும்
கும்மாளந்தான்.


2.
இருளினுள் தென் துருவம்
தெற்கேதான் என் தேசம்
நீலம் சூழ் மணித்திரள்
இரத்தின துவீபம்
மாணிக்கக் கற்களிலா
சிவப்பு....
பாயும் கங்கைகளிலும்
கைமுனுவும் எல்லாளனும்
பொருதிய போதே
பீறிட்ட இரத்தம்.
புத்தன் வந்த தேசம்
தேசத்தின் ஆழ்மனப் படிவுகள்
குரோதங்கள் தானென்றால்
புத்தனாவது சித்தனாவது....
முத்தி கூட இரத்தத்திலோ
திக்கெங்கும் தெறிக்கின்றது
இன்றைக்கும்.


3.

துருவம் தப்பி
வந்த என்னை
அலாரம் அடித்தெழுப்பும்.
கடிகார முள்
ஓடு முன் ஓடி
தாவலில் ஏறி
துள்ளலில் இறங்க
மேல் மூச்சு வாங்கும்
முழங்கால் சில்லுத் தேயும்.

ஊ¡¢னில் தீண்டாத
'இழிசனப்' பணிகளை
ஆலாய்ப்பறந்து
தலைகளிற் சுமக்க
கூலிகள் பெருகும்
பெருமையும் சேரும்
சாதியத் தடிப்பிலும்
ஒரு சுற்றுப் பருக்கும்.

நா¡¢ முறிய
கழுவித் துடைத்து
கழிவுகளைக் கொட்டி
சேவகம் செய்ய
வெண்தோல் மினுங்கும்
மூட்டுக்குள் வலிக்கும்.
ஆறு...இளைப்பாறென
உடல் சோரும்.
படுத்தெழும்ப இடம் தேடி
கண்ணயர
குறண்டிக் கிடக்கும்
ஊரும் உறவும்
இனசன பந்தமும்
கால்களில் இடறும்.
நாளை நாள் விழுங்கும்
தவளைப் பாய்ச்சலில்
வாரம் இங்கு நாளாகும்.
கடிதம் என் வரவில்லை?

மனிதம் சிறுமையுற
சூத்திரங்கள் அச்சுறுத்த
இயந்திரங்கள் காவு கொள்ளும்.

துருவங்கள் எதிரெதிராய்
துயரங்கள் சமாந்தரமாய்
இனி என்ன......

மே'91, பரிஸ்.


இருப்பிடம் தேடி....


நிலவு எப்போது
எழும் போகும்.
எச்சில் கோப்பைகள்
விழிகளில் சுழலும்.
ஆளரவம் அடங்கி
இயந்திரமும் உறங்கி
மயானமாய் நகரம்.

வந்தது தொலைவா?
செல்வது தொலைவா?
தா¢ப்பிடமெல்லாம்
இருப்பிடமானால்...
திசை எட்டும் சாலைகள்
பி¡¢யும் நீளும்.
போக்கிடம் ஏது?

ஆங்காங்காய்
எலிவளைகள்
குறுக்கும் மறுக்குமாய்
எ·கு அட்டைகள்
விரைந்தூரும்.
மனிதரைக் காவும்
நிறக் குருடாக.

மூட்டை பி¡¢ந்து
கொட்டுண்டு சிதறும்
வெங்காயங்கள்.
உ¡¢த்து பி¡¢த்து
தேடியது எதனை?
வியர்வை நாற்றம்
கண்களை எ¡¢க்கும்.

குறுக்குக் கட்டும்
நார்க் கடகமும்
சுமந்தோரெல்லாம்
இழிந்தவரானால்
என்னவர் அகங்கள்
தரமிங்கும் அளக்கும்
கறுப்பினை இகழும்.

காலணிகளில் முகங்கள்
நசுங்கும் சிதையும்
அதனால் என்ன?
ஐரோப்பியக் காலன்றோ!
மோதிரக் கையன்றோ!
தோத்திரங்கள் சொல்வோம்
Thanks, Merci, Danke...

கனவுகள் காயமான
மனிதரைப் போல
இலைகளை உதிர்த்து
உள்ளுக்குள் உயிர்த்து
மரங்கள் வெறிக்கும்
இருப்பிடம் தொலைத்த
எனக்காய் இரங்கும்.

மலர்கள் தூவிய
பீடங்கள் ஒவ்வொன்றிலும்
கூர்வாள் உயர்த்திய
வீரரைத் தாங்கும்
பாயும் புரவிகள்.
தேசங்கள் வென்றவர்
சிலையிலும் முறைப்புடன்!
தீப்பற்றும் குரல்களால்
செவிகளில் அறைவர்
'வெளியேறு...."
சிலைகள் உயிர்க்கும்
வாள்முனை மினுங்கும்
தாயகம் துறந்தவனே
உனக்கு ஏது இருப்பிடம்?....

இலையுதிர்காலம் 1991, பரிஸ்.
 



தாலாட்டும்
தன்பாட்டும் .....

தொட்டிலில் நீ
ஆடாயென்றும்
தாலாட்டுப் பாடலையே
கேளாயென்றும்,
இரசாயன நெடியினையே
நுகர்வாயென்றும்,
கருவறை போலவே
நிலவறையுள்
வதிவாயென்றும்,
யாரேனும்
முன் எழுதிச் சென்றதுண்டோ...?

கனவே...
எங்கள் கனவின்
உருவே....
உன் பொன்னார் மேனி
உதைப்புறவும்
கருவண்டு விழிகள்
மருண்டிடவும்,
நாங்கள்
இருளையோ கொணர்ந்தோம்?
இருட்டின் தொடக்கமெனவும்
தொடர்ச்சி எனவும்
நாங்களே இருக்கையில்
யாரை நோவோம்?
யா¡¢டத்தில் முறையிடுவோம்?
இருளகல நீ வளர்வாய்
கண்ணுறங்கு என் மகனே.

மகனே...
எங்கள் மகிழ்வின்
விளைவே....
முன் எழுதா ஓவியமே
கண்ணுறங்கு, கண்ணுறங்கு
சற்றேனும் கண்ணுறங்கு.
கண்ணுறங்கும் வேளையிலே,
நீ சி¡¢க்க - முகம் சுருங்க
நா¢ வந்து விரட்டுதென்று
சொல்லியாற யாருண்டு?
கண்டறியா தேசத்தில்
இயந்திரத்துப் பற்களுள்ளே
கனவுருகி - வாழ்வுருகி
உன்னப்பன் நானிருக்க,
உன் காதுள் பஞ்சடைத்து
தன்னுக்குள் உனைப் போர்த்து
ஊனுருகி உயிருகி
உன் அன்னை காத்திருப்பாள்
நானறிவேன்...என் மகனே...
மெல்ல நீ கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்மணியே.
கண்மணியே....
எங்கள் காதல்
கனியமுதே....
கண்ணுறங்கு கண்ணுறங்கு
காற்றினில் படிந்திருக்கும்
கதை கேட்டுக் கண்ணுறங்கு...
முற்றுப்பெறா
அஞ்சலோட்டத்
தொடர் ஒன்றில்
உன்னப்பன் கையினிலும்
நெருப்பிருந்தது.
கையையும் சுட்டுவிடும்
நெருப்பு.
அணையா நெருப்பு.

எ¡¢யவும் வேண்டும்
ஒளிரவும் வேண்டும்
புயலினுள் ஏறவும் வேண்டும்.
யாரால்தான் முடிந்தது?
நெருப்பேந்தா
வீரர்கள் எத்தனை?
விட்டில்களாய்
வீழ்ந்தவர் எத்தனை?
அணைத்தவர் எத்தனை?
அணையாதார் எத்தனை?
என்னுள்ளும் புதையுண்ட
கதைகள்தாம் எத்தனை....

அஞ்சலோட்டம் தொடர்கின்றது
நெருப்பின்னும் எ¡¢கிறது
கண்ணுறங்கு கண்ணுறங்கு.

கண்ணுறங்கு கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
"ஆராரோ ஆ¡¢ரரோ
ஆர் அடித்து நீர் அழுதீர்?
அடித்தாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்"
வழிவழியாய் வாய்மொழியாய்
வருமிந்தத் தாலாட்டை
முன் சொல்லிச் சென்றது யார்?
ஏன் சொல்லிச் சென்றனரோ...
நானறியேன் என் மகனே.
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்ணுறங்கா நேரம் வரும்,
உன் கையிலும் நெருப்பு வரும்
கண்ணுறங்கு கண்ணுறங்கு....


பங்குனி'91.



வதைமொழி

தாங்கிக் கொள்வீரோ
உயிரின் வாதையை.

காற்றை உண்ணும்
மூச்சுரவமின்றி
எதிரிவரவேங்கி
விழியில் இலக்காடும்.
கண்ணிமைப் பொழுதில்
மரணம் தொங்கும்.
அதனாலென்ன....
அது
இருத்தலின் மகத்துவம்.

உள்ளத்தைச் சொல்லென
நகக் கண்ணிடை
குண்டூசிகள்....
எனக்குத் தொ¢யாதென...
பாலுறுப்பு விண்ணென வலிக்கும்.
மின்மினிப் பூச்சிதறும்,
குதிக்கால் நரம்பில்
கந்தகத் தீ பற்றும்.
தூ!....இதெல்லாம் வாதையா?
உணர்வுகள் உயிர்க்கும்
கனவுகள் வளரும்.

இரும்புக் கம்பிகள்
முகத்தின் குறுக்காய்
சூழும் சுவருள்
பார்வை முறியும்.
சுண்ணாம்பு
பூச்சுதிர்வில்
என்னென்ன சித்திரங்கள்.
இருளடைவினுள்ளும்
வண்ணத்துப் பூச்சிகள்.
சிறகசைந்து சிறகசைந்து
ஊரும் பாடலில்
என்னுயிர்க் கானம்.
சிறையென்ன? வதையென்ன?

மடிந்தவர்கள் பாக்கியவான்கள்.
மடியாதவர்
ஆன்மா கரைந்து
ஆளுமை சிதைந்து
வெறுத்து, விகா¡¢த்து
உயிர் சூம்பி, உயி¡¢ன் வேர் சூம்பி
அம்மா....அம்மா....
சிதை இது....வதை இது....

முகமுறிஞ்சிப் பெருத்தவா¢ன்
பாதங்களில் தெண்டனிட்டு
இறைஞ்சிப் பெற்ற
முகத்திரை
முண்டத்திற்கு மொட்டாக்கு,
இதிலென்ன குதூகலிப்பு
சவலையாய் நாமானதற்கா?

ஆகா....ஆகா....
அகதிகள் நாமென்றா....

.



நிலமை

இறங்கியாயிற்று
ஆளை அளக்கின்றன
பார்வைகள்
முகமன் கூறாமல்.

பட்டத்தில் தொங்காத
படிப்பென்ன?
புலமை என்ன?

புதுசா...
நசுக்கு
முளையிலேயே
கிள்ளி எறி....

ஊரும் நத்தை
ஓட்டுக்குள்
முடங்கும்.

ஒதுங்கி விலக
கண்சிமிட்டும்
அழைப்புகள்
சாத்தான்களிடமிருந்து....

இறங்கி நட
தனிமையாயினும்.


10.02.92, பரிஸ்


பிரிப்பு

உள்முகம்
நிறங்களின் பின்னல்.

காரிருள் படிவு.

கருநீல நெளிவில்
கருஞ்செம்மைப் பூச்சு.

நீர்மைக் கசிவில்
சாம்பல் செறிவு.
பாசிப் பச்சையின்
படர்வு.

கலவை நிற வெளிர்வு.

ஒளிர் மஞ்சள்
தீச்சுடர்.

நிழலிடும் ஊதா.

இருள் படியா
ஒளியில்
உயிர்ப்பேது?
அழகேது?


06.02.1992, பாரிஸ்


என் இனிய....க்கு

என்னம்மா
வார்த்தைக்குள்
வசப்படாத உன்னை
என் அன்பை....

மானுட ஆதியில்
இவ்வீர்ப்பு
சொல்வயமாயிருப்பின்
இவ்வளவு மொழியிலுமேன்
காதல் மொழி தனியாக....

நீ காணா தேசத்தில்
நான்,
நான் வரா தாயகத்தில்
நீ.
விழித்துறங்கும்
தொலைவுகளில் தேசங்கள்.

நீ கண்ட சூ¡¢யனும்
எனைக் காண
நேரமெடுக்கும்.
நமக்கேது நேரதூரம்
ஒளி, ஒலி வேகமெல்லாம்
ஓரமாகும்
அருகருகாய்
நாம் மெளனிப்பில்....

என்ன குஞ்சு...

பனை உயர
அலைகள் எழும்.
அலை,
உறைபனித் தூவலில்
முறிபட்டு முறிபட்டு
மீள எழும்
காதல் மீதுர....
மீசை அரும்பும்
விடலைப் பையனாய்
துளிர்க்கும் மரங்கள்
வண்ணங்காட்டி
மனமாகி சினைப்படும்.
சாயாத பொழுது
கடிதங்களில்
நம் கூடல்
கருக்கலையும்
கண்ணீரில்
பெருமூச்சில்

ததும்பி முட்டும்
நீர்க் குடம்
என்னடா நீ...?

என் விழிப்பில் நீ உறங்கி
உன் விழிப்பில் நான் உறங்கி
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்சிரையும் எக்கணமும்
உன் வனப்பில்.

பிணைந்து நழுவும்
கயிற்றிரவு.

நிழல் நீ,
நான்.
நிறங்களில் நீ,
நான்.
ஊன் உறக்கம் நீ,
நான்.
உள்விசை
உன்மத்தம்
எல்லாம் நீ,
நான்.

துவளும் நாம்....

இன்னும் பிடியை
இறுக்கு....
நீயும்தான்.
அழாதம்மா
குஞ்சல்ல....
நானும்தான்
மொழிகளுக்குள்
வசமாகா
உன்,
என்,
நம்
உறையாத அழுகைகள்.

14.3.92, பாரிஸ்


போ...அங்கிரு

தற்செயல்
எனத்தான் சொல்வேன்.

நிலவைப் பார்த்தேன் (பார்க்கிறேன்)

மதிய வெயிலில்
ஓடோடி வந்து
பாடசாலை
சுவரொதுக்கில்
வாடி நிற்கும்
தாயின் முகம்
நிலவில்.

கட்டிடப் புதா¢டை
மீண்டெழும்
களையுடன்....

சின்னக் குழந்தை
கரையெல்லாம் பிய்த்த
பாலப்பமாய்,
முக்காலளவினதாய்....

முழுநிலவா இப்படி!
பெளர்ணமிக்கு
முன் நிலவாம்.

சோடியம் நியான்
வெளிச்ச வீச்சுள்
மங்கலாகி
சோபை இழந்த
வெண்ணொளி.

எட்டாம் மாடி
என் ஜன்னலாலும்,
எட்டமாட்டா
பலவீனத்தில்
ஒளிக்கற்றைகள்.

நிலவின் குறுக்காய்
கட்டிடத்தை
அடுக்கி நிமிர்த்தும்
இராட்சதக் கை
இரும்புக் கிரேன்
ஜடம்....

வார இறுதிநாள்
மகிழ்வாய்
கழியுமென்றால்
இந்த நிலவேன்
கண்ணில் பட்டது?

ஐயகோ....
நிலவின் களையுமா
கொள்ளை போயிற்று?
மூன்றாம் உலகம் போல்...

இந்தக் களை இழந்த
நிலவு
எதிலெல்லாம்
தென்படுமோ
வருங்கிழமை முழுதும்....

எந்தன் ஊ¡¢னிலும்
தென்படுமே
இந்நிலவு
என்னழகு....

பெளர்ணமிகள்
குருதிபட்டு
குழிக்குள் ஒடுங்கும்
துயர் வாய்ப்படுமுன்னம்.

பனங்காட்டிடை
ஊடி உரசியும்
தென்னங்கீற்றிடை
வழுக்கி ஒழுகியும்
என்னைத் தோய்த்திடுமே
அந்நிலவு.

நிலவாடி
நிலவொளியில் நீராடி,
நீருக்குள் ஒளிந்தாடி
வாலைப் பருவத்தார்
இளந்தேகம் தொட்டாடி,
தொடுமின்ப உணர்வாடி,
வாயாடி,
வாய்க்குறும்பாடி,
சொல்லாடா மெளனிப்பில்
இதழ்கடை சி¡¢ப்பாடி,
கடைக்கண் எறிந்தாடி,
கண்ணுக்குள் நிழலாடி,
நிலவில் நம் நிழலாடி,
நீயாடி, நானாடி....

ஆடிய ஆட்டமெல்லாம்
போயிற்றறுந்த
ஆடிக் காற்று
பட்டமாகி....

ஆனாலும் பார்
அலைகள்தான் போயிற்று...
போகவே மாட்டாதாம்.
'நிலவினில் பேசலாம்'*
எனும்
பாசாங்குத்தனம்
நால்வர்ண மனம்
துருவக் கோடிக்கும்
காவி வந்த குணம்.

தாயகத்தைப் புறக்கணித்த
என் தேச மாந்தரா
உன்னை
ஏறெடுத்துப் பார்ப்பார்?
மதியாதார் வாசல் மிதியாதே.
என்னைப் பார்த்தாயா
நில்லாதே
புறப்பட்டு விடு
எட்டிப் போ.
பாற்கடலில்
பள்ளி கொண்டு
அமுதம் மொண்டும்,
மலைமேல் ஏறி
மல்லிகைப் பூக்கொய்தும்
ஆடிச் செல்லாமல்
ஓடிப்போ....

குண்டும் குழியுமாய்
தேசம்.
இருளின் ஆளுகை.
தட்டுத் தடுமாறி
தவிக்கும் தாய்
கால் தடக்கி,
கால் தடம் தவறி
ஆள் மாறாட்டம்.
குறி துலங்க
ஒளிவீசு.
உயிருக்குப்
பால் சிந்து.
அங்கிரு....
நான் வர....


கோடைகாலம், 1991 - பரிஸ்

* ஈழத்தின் மூத்த சிறுகதையாளர் என்.கே.ரகுநாதன் அவர்களின் சாதிப் பிரச்னையை உள்ளடக்கமாய் கொண்ட 'நிலவினில் பேசலாம்' எனும் சிறு கதைத் தலைப்பு இங்கே நினைவு கொள்ளப்படுகின்றது.



ஞாயிறும் நானும்!

1

விழிப்பு.

விறைத்திருந்தது
தினவெடுத்த
பால்குறி.

கும்பி கூழுக்கழ
கொண்டை
பூவுக்கழுததாம்!
இது
எதற்கழுகின்றது
இடம்வலம்
தொ¢யா இடத்தில்?

கால் இறைக்குள்
நமைச்சல்

தூக்கக் கிறக்கமும்
சொறிந்த சுகமுமாய்
சப்புக் கொட்ட
நமைச்சல்போய்
எ¡¢ந்தது
சொறிந்தபுண்.

என்ன வீச்சம்
கறிக்கு வதக்கிய
வெங்காயம்
சொக்ஸ், கோமணம்
குசு.
குழைத்து வரும்
காற்றும்.
தாங்காது
காசு தின்னும்
களையில்
அழுக்கு நன்னும்
இயந்திரத்திடம்
கொடுத்தாக வேண்டும்
உடுதுணி,
போர்வை,
இந்த அறை....

என் செய்யலாம்
உடம்பை
மனசை....

புதியது முளைக்க
பழையதைக் கழற்றும்
பாம்பு
அடியேன் எனக்கும்.

ஏவாள்
ஏன் ஏமாந்தாள்
ஏதேன் தோட்டத்தில்
இந்தப் பாம்பிடம்*
அல்லது போனால்
ஆடையும் இல்லாமல்
பால்குறி அழுக்குறும்
தொல்லையும் இல்லாமல்
ஆகா....ஆகா....
'கனவுலக சஞ்சா¡¢யே
எழுந்திரடா...'
குண்டியில் சுட்டது
வெயில்.


2

தாழ்பணிவோம்.

ஞாயிறு போற்றியும்
பொங்கல் படைத்தும்
வாழ்த்தும் வழக்கத்தால்

சூ¡¢ய ஆட்சியின்
அமர்க்களம்.

காந்தும் தேகம்
அம்மியில்
மிளகாய் அரைத்த
கையாய்....

வியர்வை அ¡¢யண்டம்
புழுக்கத்தில் மனம்.

சூ¡¢யக்கை
துழாவலா இது?
காலையில்
காற்றையும்
துரத்தி விட்டு
அப்பப்பா...

சூர்யா...!
ஏனடா இச்சினம்.

உன் உதிரத்தே
உதித்தெழுந்த
புவிப் பையன்
தறுதலையாய்ச்
சுற்றுகிறானா?

அண்டவெளிதனில்
நீயும்
உன் குடும்பமும்
வீச்சிய
துணைக்கோள்கள்
எற்றுண்டு போயிற்றா
பால்வீதிக்கப்பாலும்?

அப்படியானால்
இப்புவி உலா
நான் ஒருவன்
என் இருப்பு
சாத்தியந்தானா?

என்னிடம் சொல்
நானும் நெருப்பன்
நெருப்பின்
நிறம் குணம்
அறிந்தவன்
அணையாதவன்
உன்னைப் போல்...

நானே சொல்லிவிடவா...?


3

நீயும்
அறிந்திருப்பாய்
சாலைகளெல்லாம்
ரோமாபு¡¢க்கென்று.

அதன்
முடிகொடி
செங்கோல்கள்
நாளாயிற்று
இடம்மாறி.

ஆறுகள்
வாய்க்கால்கள்
நிலத்தடி நீரோடைகள்
பாதாளச் சுரங்கங்கள்
எல்லாமும்
திருப்பப்பட்டாயிற்று
வட அத்திலாந்திக்
கரைகளுக்குக்
கரை தொட்ட
தேசங்களுக்கு.

வந்து வந்து
சேர்கின்றன பார்.
அறுத்தெடுத்த
ஈரல் குலைகள்,
துடிதுடிக்கும்
இதயங்கள்,
உருவி எடுக்கப்பட்ட
நாடி, நரம்புகள்,
பதனமான
முகங்கள்.
கனிமச் சத்தும்
எண்ணெய்க் கொழுப்பும்
ஊறின தேறல்
ருசி என்ற ருசி.

சொ¢த்துக்
கழிச்சதைக்
கொட்டவா
இடமில்லை.

புத்துலகக் கோட்பாடு
வேறெதற்கு...?

மத்தியக் கோட்டிற்கு
தெற்கேயென்ன
கடகக் கோட்டிற்கு
தெற்கேயென்ன?
கொல்லைப்புறம்தானே!

மண் செத்து
மலை செத்து
மரங்கொடி
செடி செத்து,

உரசுண்டு
மோதுண்டு
உயிர்மூச்சும்
நஞ்சுண்டு

வடக்கென
தெற்கென
மனிதமுகம்
பிளவாகி
தனித்தனிக்
கோளாகி,

உறிஞ்சும்
வெண்
ஒட்டுண்ணிகளோ
புவிப்பரப்பும்
போதாமல்
அண்டவெளி தாவி....

மனுக்குல
அறிவியலாம்,
பாய்ச்சலாம்.
அழிவியல்
மானுட அறங்களின்
சாவியல்.

பொசுக்கு நீ
புவிக்கோளையே
நொறுக்கு நீ.

உன் சீற்றம்
நான் அறிந்தேன்
சா¢தானே
சூர்யா...!

அதற்கு
உறிஞ்சலில்
இழுபட்டு
சத்திழந்து
நைந்தவனை
என்னையுமேன்....

விட்டுவிட மாட்டாயா?


4

இரக்கம் கொள்ளாயா?

ஒரு கோப்பை
தேநீர்
சூடாக்கிக் தாராயா
நெருப்புமிகும்
கதிர்களால்?

என்ன முறைக்கிறாய்?

உன்னை
மாலை நேரத்
தேநீர் விருந்திற்கு
அழைத்தான்தானே
ரஷ்யன் ஒருவன்?**

தேநீர்க் கடன் நீ
பட்டுள்ளாய்தானே
பின்னென்ன முறைப்பு?

செய்யேன்
என் கா¢நா
சபிக்குமுன்!

மாட்டாயா
கையாலாகா
நன்றி கெட்ட
கடன்காரா....
நானும் பார்
என்
மொழிப் புலவனின்
கடன் வாங்கிய
சொற்களால்
இந்தா
பிடிசாபம்.

'உன் கரங்கள்
நீட்டி நிமிர்த்த
மாட்டாமல்
பனியும், குளிரும்
மிகுந்தெழும்
முடங்குவாய்***
கடகக் கோட்டிருந்து
மகரக் கோட்டிற்கு
தள்ளப்படுவாய்
போ....அப்பால்.

சூர்யா
சக்தி மூலவனே
பயந்தா போனாய்
பயப்படவும் வேண்டாம்.
கடன்பட்ட
தேநீரும் வேண்டாம்.
முழு முதலானவனே
கோபம் கொள்வேன்
வேறு யாருடன்
இப்படி
வேடிக்கை கொள்வேன்.

பொறுத்துக் கொள்
எந்தன்
சுடு சொல்.
மறந்து செல்.

உச்சி வெயிலில்
கானல் நீர் படரும்
மத்தியக் கோட்டருகே
தா¢த்து
நிற்கையில் பார்.

நீ¡¢டை நெருப்பென,
தீப்பந்தமென,
செம்மணிச்
சுடலையென
வேகும் என் தேசம்.

என் கனவு,
என் வனப்பு,
என் இளமை,
என் பாசம்
நேசம்,
இரத்த உ¡¢த்து
எல்லாமும்
அவியலாகி...

தா¢சித்தாயா...?

உன் சினம் தணி
வெங்கதிர்களை
சுருக்கிக் கொள்.
கடல்நீர்
உறிஞ்சி
கார் மேகம்
படைத்து
மழைக் கரங்களால்
நீராட்டு,
செழிப்பூட்டு,
பூக்களும் தென்றலும்
முத்தமிட
இப்போ நீ
கை கொடு
நான் எழ.


கோடைகாலம் - 1992
பா¡¢ஸ்

* விலிலியத்தில் (Bible) கூறப்படும் கதை.
** மாயாகோவ்ஸ்கி
*** பெரிய புராணத்தில் சேக்கிழார்

 



விடைபெறும் நேரம்.....

நண்பர்களே...

வாழத் துடித்த ஒரு மானுடக் கூட்டத்தின் பிரதிநிதிகளாய் நாங்கள் உங்களுக்கு அறிமுகமானோம். '77ஆம் ஆண்டு ஆகஸ்டு கலவரம் தமிழகத் தேசிய சக்திகளை, எம்மீது அனுதாபம் கொள்ளச் செய்தது. இந்திய உபகண்டப் பிரச்சினைகளில் ஈழப் பிரச்சனையும் பின்னிப் பிணைந்திருப்பதனால், இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து எமது போராட்டத்திற்கு பின் தளமாய் இந்தியாவைக் கொள்ள நாம் எண்ணம் கொண்டோம். இந்தியாவின் உள்ளக முரண்பாடுகள் எம்மைப் பாதிக்கா வண்ணம் அவர்களின் உதவியை, ஆதரவை வகையாகப் பயன்படுத்தத் திட்டமிட்டோம். '77இன் இலங்கைக் கலவரம் எம்மை இத்தீர்மானத்திற்கு உந்தித் தள்ளியது. அவ்வேளையில் தொடக்கக் கால ஈழப் போராளிகள், தேசிய சக்திகளுடன் தம்மை அடையாளப்படுத்தியிருந்தனர். பரவலான அபிப்பிராயத்தை அவ்வேளையில் பெற்றிருக்கவில்லை.

'77இன் பின்னால் ஈழத் தேசிய இனப் போராட்டத்தின் தீர்மான சக்தியாய் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை அடையாளப்படுத்தி, உருப்பெறத் தொடங்கியிருந்தனர். இவ்வேளையிலேயே நாங்கள் இங்கு அறிவுஜீவிகள் மத்தியில் எம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். ஈழப் போராட்டத்தின் தத்துவ வேறுபாட்டை, உள் முரண்பாடுகளை, சிக்கல்களை, சா¢யான திசையை நாம் பு¡¢யவைத்தோம். தமிழக அறிவு ஜீவிகளில் சிலர் எம்மைப் பு¡¢ந்து கொண்டனர். 'தமிழக ஈழ நட்புறவுக் கழகமாய்' 1977 இல் தம்மை அமைப்பு வடிவத்திற்கு உட்படுத்திக் கொண்டனர். இக்கழகமே ஈழப் போராட்டத்தின் ஆதரவாளர்களை அமைப்பு வடிவமாகக் கொண்ட முதல் ஆதரவாளர் அமைப்பாகும். இவ்வமைப்பு மாதாந்தக் கூட்டங்களை நடத்தியது. எம்முடன் அரசியல் உறவுடன் அல்லாது, எமது இலக்கியம், கலை, சமூக இயல், வரலாறு இவற்றுடனும் உறவு கொண்டது. சிறு வெளியீடுகளை வெளிக் கொணர்ந்தது. 'இலங்கையில் ஈழம்' என்னும் சிறு நூல் அவ்வேளையில் ஈழப் போராட்டத்தை, அதன் வரலாற்றை புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தியது. தமிழீழத் தேசிய சக்திகள் தம்மை தமிழகத் தேசிய சக்திகளுடன், அவற்றைப் பிரதிபலித்த கட்சிகளுடன் தம்மை நெருக்கமாய் அடையாளப்படுத்திக் கொண்டன.

ஒவ்வொரு தமிழகக் கட்சிகளும் ஒவ்வொரு தமிழீழ இயக்கங்களை ஞானக் குழந்தைகளாக சுவீகா¢த்துக் கொண்டன. நாம் இவற்றில் இருந்து ஒதுங்கி, பார்வையாளர்களாய் இருந்ததுடன் தமிழகத்தின் முற்போக்காளர்களிடம் எம்மை அடையாளப் படுத்தினோம். அவர்களிடம் நண்பர்களாய் உறவு கொண்டோம்; தோழமை வளர்த்துக் கொண்டோம்; கருத்துக்களைப் பறிமாறிக் கொண்டோம்; விவாதித்தோம். தாயகத் தமிழன், சேயகத் தமிழன் என்ற மனப்பாங்குடன் நாம் உறவு கொள்ளவில்லை. நாம் இருவரும் மனித நேயத்தையே உயர்த்திப் பிடித்தோம். மனித குலத்தை துன்பங்களுப், துயரங்களும் சூழுகையில் துன்பப்பட்டோம்; எதிர்கொள்ளும் பக்குவம் பெற்றோம்; ஆற்றலை வளர்த்தோம். உலகெங்கும் ஆன அடக்குமுறைகளை எதிர் கொள்ளும் ஒவ்வொரு போராளியையும், தோழனையும் நினைவு கொண்டோம். அவர்கள் உணர்வுகளுடன் இறுக்கமானோம். அப் போராளிகளின் வெற்றிகள் எமக்கு உற்சாகமூட்டின. அவர்களுடைய அனுபவங்களை நாம் உள்வாங்கிக் கொண்டோம்.
எங்களுக்கும் இந்தியாவிற்குமான, குறிப்பாகத் தமிழகத்திற்குமான உறவு இப்படித்தான் இருந்தது. அறிவு ஜீவிகளுடன் ஆரம்பித்த எமது உறவு, இலக்கிய அமைப்புகள், பொ¢யா¡¢ன் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்கள் என வி¡¢வடையத் தொடங்கியது. அப்போது நாம் 'லங்கா ராணி' என்ற நாவலை வெளியிட்டோம்.
இந்நூல் எமக்குப் பரவலான தொடர்புகளைப் பெற்றுத் தந்தது. எமது வெளியீடுகளை அனுப்பிக் கொண்டிருந்தோம். கருத்துக்களில் இணைந்தோம். ஆசி¡¢யர்கள், பேராசி¡¢யர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலை இலக்கியவாதிகள், டாக்டர்கள், இளம் வக்கீல்கள், முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்கள், பல்லவன் பேருந்து ஊழியர்கள், பேச்சாளர்கள், மாணவர் அமைப்பினர், இளைஞர் அணியினர், சிற்றூழியர்கள், ஆலைத் தொழிலாளிகள், இப்படிப் பல மட்டங்களில் தொடர்புகள் இறுக்கமாகின. இவற்றை விடவும் கிராமப் புறத்து விவசாயிகள், இளைஞர்கள் கரையோர மீன் பிடித் தொழிலாளர்களும் எம்மீது அன்பு கொண்டிருந்தனர். இவர்களுடன் கழிந்த எமது பொழுதுகள் இனிமையானவை.

சென்னை நகரில், கூவம் நதிக்கரையும், பக்கிங்காம் கால்வாய்க் கரையும் நாம் வாழ்ந்த பகுதிகளாய் இருந்தன. குடிசை மாற்று வா¡¢யக் குடியிருப்புக்களே எமது வதியிடங்களாய் இருந்தன. இந்த மக்களிடம்தான் நாம் தமிழகத்தின் ஆத்மாவை, மனிததத்துவத்தை தா¢சித்தோம். நாங்கள் அழுகையில் அவர்களும் அழுதார்கள்; நாங்கள் சி¡¢க்கையில் அவர்களும் சி¡¢த்தார்கள்; எம்முடன் அவர்கள் பட்டினி கிடந்தனர். எமது பெரும்பாலான சாப்பாட்டுப் பொழுதுகள் இவர்களது இல்லங்களிலேயே நிகழ்ந்தன. ஒருவர் முதுகின் மேல் ஒருவர் ஏறி நின்று சுவரொட்டி ஓட்டினோம். எங்களுக்கு அவசியமான நேரங்களில் இவர்கள் கடன்பட்டனர். நாம் முன்னேறிச் செல்வதில் இவர்கள் ஆர்வம் காட்டினர்; உற்சாகம் தந்தனர். சிறந்த நண்பர்களை நாம் இங்கு பெற்றிருக்கிறோம். மாறிய சூழ்நிலையில் இன்று "ஈழ நண்பர் கழகம்" மூலம் நாம் பரந்த உறவைப் பெற்றிருக்கிறோம். கொடிய பசி வேளைகளில், வெளியில் கொடுமையில் அலைந்து தி¡¢கையில், எத்தனைக் குடும்பங்கள் எங்களை அரவணைத்தன! முகமலர்ச்சியுடன், விருந்தோம்பும் உணர்வுடன் எங்கள் கவலைகளை, சோகங்களை, கோபங்களை வருடிக் கொடுத்தனர்; நாங்கள் அவர்களைத் தாயாய், தந்தையாய், தோழராய், உறவினர்களாய் மதித்தோம்.

இன்னும் புலராத எங்களின் இந்தப் பொழுதிலும், எத்தனையோ நினைவுகள் குமிழிடுகின்றன. தமிழகத்தின் மாவட்டம் தோறும் நடைபெறும் மாநாடுகளின் பந்தல்களின் கீழ் நாங்கள் உங்களைச் சந்தித்தோம். சந்திப்புகள் அனைத்திலும் விவாதங்கள், கருத்து பா¢மாறல்கள், சந்தேக விளக்கங்கள், சண்டைகள் உறவுகள்! தமிழகத்தின் இயற்கையை ரசித்தோம், இந்தியாவின் சிறப்புகளை வியந்தோம். இந்தியாவில் ஒரு மானுடம், உழைக்கும் மானுடம் வீழ்ந்து கிடக்கிறது. அதன் ஆன்மாவை எம்மால் தா¢சிக்க முடிந்தது. இந்தியாவில் உள்ளக முரண்பாட்டின் விளைவுகளாய், சோகமும், வேதனையும், வேலையில்லாமையும், பட்டினிக் சாவும், தெருவோர வாழ்வும்; அந்த வாழ்விலும் அவர்களின் களங்கமற்ற சி¡¢ப்பும் மகிழ்வும்; அவர்களின் சண்டைகளையும், கோபங்களையும் அதனுள் இருக்கும் ஆற்றல்களையும் அதன் மன ஓசையைப் பு¡¢ந்து கொள்ள முடியாத வித்தகம் செய்யும் தத்துவவாதிகளையும், சமூக அமைப்பின் கோரங்களையும், நாங்கள் இங்கே கண்டோம்.

தேநீர்க் கடை ஓரத்திலும், சிகரெட் பிடித்தபடி பத்தி¡¢கை புரட்டும் பெட்டிக் கடையிலும், கை ஏந்தி உணவைச் சுவைத்த படியும்; கன்னிமாராவிலும், தேவநேயப் பாவாணர் நூலகத்திலும், அதன் மகாநாட்டுக் கூடங்களிலும், கருத்தரங்குகளிலும், ஊர்வலங்களிலும் நாங்கள் கிளர்ச்சியுடன் சந்தித்து கொண்டோம். குற்றாலச் சாரலில் நனைந்தும்; தேக்கடியிலும், பொ¢யார் அணைக்கட்டிலும், மேற்கு மலைத் தொடர்ச்சிக் காடுகளில் அலைந்தும்; ஊட்டிக் குளி¡¢ல் விறைத்தும்; கொடைக்கானல் குளிரில் படகு விட்டும்; கோவில்பட்டி, சிவகாசி, அருப்புக்கோட்டை கா¢சல் நிலத்தில் வெயிலில் வாடியும்; சேலத்தில், ஆத்தூ¡¢ல் செம்மண் பரப்பைக் கண்டு வியந்தும்; வண்டிப் பொ¢யா¡¢ல், கடலூ¡¢ல் மலையகத்தின் சோகத்தை எண்ணியும்; தீப்பெட்டி உற்பத்தித் திறனைக் கண்டு ஆச்சா¢யம் கொண்டும்; சிறுவர்கள் உழைப்பினைச் சுரண்டும் கோரத்தைக்கண்டு துணுக்குற்றும்; கிராமத்து அகலவாய்க் கிணறுகளிலும், மடைகளிலும் நீந்தி நீராடியும்; கம்பங்காட்டிலும், சோளக் கொல்லைகளில் வயல் வரப்புக்களில் நடந்து தி¡¢ந்தும்; கிராமங்கள் தோறும் பண்டைய கலைகளைக் காண்பதற்காய் இரவுகள் விழித்தும்; கும்மியும், குரவையும் கோலாட்டமும், தெருக்கூத்தும் கண்டு ரசித்தும்....

நண்பர்களே! உங்களோடிருந்த நினைவுகள் எம்மைக் கிளர்ந்தெழச் செய்கின்றன.

எந்த நினைவுகளை நாம் இந்நேரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்!

ஈழம் பற்றி- ஈழப் போராட்டம் பற்றி தமிழக மக்கள் கனவுக்குள், மாயைக்குள் ஆழ்த்தப்பட்டுள்ளனர். செய்திகள் முழுமையாக அவர்களுக்குத் தொ¢விக்கப்படவில்லை. ஆரம்பத்தில் எங்களைச் சந்தித்தவர்கள், 'நீங்கள் மலையாளமா பேசுகிறீர்கள்?' என்றனர். நாம் தமிழ் பேசும் மக்கள் என்பதையும், தமிழ் பேசுகிறோம் என்பதையும் நம்ப வைப்பது என்பது பொ¢ய செயல் எங்களுக்கு. அப்புறம் 'பிழைக்கப் போனவன், அங்கு ஒத்து வாழ்வது தானே? என்ன தனி நாடு கேட்பது? கொழும்புச் சிங்களவர், யாழ்ப்பாணத் தமிழர்கள் இவர்களுக்கு சண்டை, அய்யோ பாவம் தமிழர்கள்; தமிழர்கள் கொல்லப்படுகின்றனரே, கற்பழிக்கப்படுகின்றனரே' என்ற ஓலம். அப்புறம், 'நான்கு கோடித் தமிழர்கள் நாங்கள், புறப்பட்டு வந்தோமானால் இலங்கை தாங்காது' என்ற வீரச் சொற்கள்; அப்புறம், உலகுக்கு அறிவித்து விட்டு பயணம் சென்றனர்; கருப்பு பாட்ஜ் அணிந்து துக்கம் கொண்டாடினர்; இராணுவம் தற்போது அனுப்பப்பட்டு விட்டது.

போராட்டம் முடிந்து விட்டது (?)

தமிழக மக்கள் பெருமூச்சு விட்டனர்; தங்களின் வழமைக்குத் திரும்பிவிட்டனர்.

மலையகத்தில் 10 இலட்சம் தமிழ் பேசும் மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். அவர்களின் துயரத்தை ஏன் தமிழக மக்கள் உணரவேயில்லை. இலங்கை நாட்டை வளப்படுத்தியவர்கள் இன்று 'நாடற்றவர்கள்'. மூன்று தலைமுறைக்கும் மேலாக சோகத்தையே சுமையாக்கி, கனவுகளையே உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 150 வருடங்களுக்கு முன்னால் தமிழக மண்ணில் இருந்துதான் உங்கள் சகோதரர்கள் மலேசியாவுக்கும், பிஜி தீவுக்கும், இலங்கைக்கும் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். 150 வருடங்களின் பின்னால் - மூன்றாம் தலைமுறைக்குப் பின்னால்-அவர்கள் இங்கே திரும்பி வந்த போது, எந்தப் பாவமும் அறியாத அவர்களை, தமிழக மக்கள் ஊ¡¢ன் புறத்தே ஒதுக்கி வைத்திருக்கும் காட்சியையும் கண்ணீருடன் நோக்குகிறோம். வேற்று மொழி மாநிலங்களுக்குக் கொத்தடிமைகளாய் இவர்கள் விற்கப்பட்ட கதை எம் நெஞ்சத்தில் வலி ஏற்படுத்தியுள்ளது. இக் கொத்தடிமைகளை மீட்க அவர்களின் துயரங்களை அரங்கத்திற்குக் கொண்டு வந்த தமிழக நண்பர்கள் எங்கள் நினைவிற்கு வருகின்றனர். இவர்களை நண்பர்களாய் பெற்றதில் நாம் பெருமையடைகிறோம்.

தமிழக மக்கள் இன்று வெறும் வீர வழிபாட்டிற்குள் மூழ்கி உள்ளனர். துப்பாக்கி ஏந்திய ஈழப் போராளிகளின் படங்கள் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்றிருந்தது. ஏனைய சமுதாயக் குழுக்களை விடவும், தமிழக மக்கள் வீரக் கனவுகளில் ஆழ்வதிலும், வீர வழிபாட்டில் மூழ்கி விடுவதிலும், தங்கள் வீரத்தைத் துறந்து விட்டனர். மதுரை வீரனும், கருப்பசாமியும், சில குல தெய்வங்களும் அவர்கள் வழிபாட்டிற்குரிய சிலை வடிவங்கள். அன்றைய குலம் காத்த வீரம் செறிந்தவர்களாக, தனி மனிதர்களை உயர்த்திப் பிடிக்கப்பட்டதை வரலாற்றுப் பொருள் முதல்வாதம் தெரிந்த நாம் எப்படி மறந்து விட முடியும்? அந்த மாயைக்குள் இருந்த அவர்களை வெளிக்கொணர்வதுதான் எவ்வளவு கடினம் என்பதில் நாம் பெற்ற அனுபவங்களை மறக்க முடியுமா? இந்த மாயைக்குள் சிக்காதவர்கள் ஆதலால் தானே நீங்கள் எங்களுக்கு நண்பர்களானீர்கள்!

வடமராட்சித் துன்பத்தை விடவும், கிழக்கு மாகாண விவசாயிகள் பெற்ற துன்பங்கள் கொடுமையானவை. அவர்களின் போராட்ட வாழ்வு மகத்தானது; அவர்கள் துயரங்கள் அளப்பரியன. மூதூரிலும், மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையிலும், தங்கவேலாயுதபுரத்திலும் அவர்கள் மரணத்துள் வாழ்ந்தார்கள். ஆனால் தமிழக மக்களும் அவர்களின் தளபதிகளும் இந்த மக்களின் துயரத்தின் போது மெளனமாக இருந்தனர். எமது இதயத்தில் ரத்தம் கசிந்தது. யாழ்ப்பாண விளம்பரத்திற்குள், அந்த மக்கள் அடைந்த சோகம் மறைக்கப்பட்ட போது, நண்பர்களே! நீங்கள் தான் எங்கள் கவலைகளில் பங்கு கொண்டீர்கள்.

போராளிகள் வானத்தில் இருந்து குதித்த தேவர்கள் என்றுதான் தமிழக மக்கள் எம்மை நம்பியிருந்தனர். வீர வழிபாட்டில் மூழ்கி இருக்கும் சமுதாயத்தில் இது தவிர்க்க முடியாதது ஆகும். தமிழக ஆட்சி மாற்றங்களைக் கவனிப்போர், இந்த ஆட்சி மாற்றங்கள் வீர வழிபாட்டு மனப்பான்மையின் பங்காயிருப்பதை உணரலாம். இக் கருத்தை நாம் உடைக்க முயற்சி செய்தோம். நாங்கள் போராளிகள்; இரத்தமும் சதையுமான மனிதர்கள்; இந்தச் சமூக அமைப்பின் விளை பொருட்கள் இந்தச் சமூக அமைப்பின் எச்சங்கள் எங்களையும் ஒட்டியுள்ளன; போராளிகளை, போராட்டத்தை இவ்வகையிலேயே நோக்குங்கள் என்று அடித்துச் சொன்னோம். ஆனால் நண்பர்களே! உங்களால் தான் அந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். தமிழக மக்களும், போராளிகளின் சமூக விரோதச் செயல்களையும், சட்ட ஒழுங்கு மீறலையும் கண்டு முகத்தைச் சுழித்தனர்; ஏளனமாய் நோக்கினர். நாங்கள் அனிச்சமலராய் சுருங்கிப் போனோம்.

இச்சமூக அமைப்பை, அதன் குணாம்சத்தை, அதன் வெளிப்பாடுகளைப் பு¡¢ந்து கொண்ட நண்பர்கள் எங்களை அரவணைத்தனர். ஆதரவு காட்டினர்.

ஈழத்தின் உள்ளக முரண்பாடுகள் உங்களுக்கு இங்கே மறைக்கப்பட்டுள்ளன; நாங்கள் அவற்றை வெளிப்படையாகவே உங்கள் முன் வைத்தோம். தேசிய இனப் பிரச்சனையின் கூர்மைக்குள் உள்ளக முரண்பாடுகள் மறைக்கப்பட்டிருந்தன. இவற்றை கேள்விப்பட்ட வேளையில் உங்களுக்குக் கசப்பாகத் தான் இருந்தது. ஏனெனில் இங்கிருந்த உள்ளக முரண்பாட்டின் கோரங்கள் உங்களை மிகவும் பாதித்திருந்தன. தேசிய இனப் போராட்டத்தின் உச்சத்தில் உள்ளக முரண்பாடுகளின் கோரங்கள் நீங்கிய ஒரு சமுதாயம் ஈழத்தில் அமைய வேண்டுமென நீங்கள் விரும்பினீர்கள். அதற்காகவே ஈழப் போராட்டத்தை தி¡¢கரண சுத்தியுடன் ஆதா¢த்தீர்கள். ஏற்றத்தாழ்வும், சாதிய வேறுபாடும், சுரண்டலும், பிற்போக்குத் தனங்களும் நீங்கிய ஒரு ஈழத்தை உருவாக்க நாங்களும், நீங்களும் கனவு கண்டோம். ஆனால் இந்திய சுதந்திரப் போராட்ட வேளையில், ஒரு கட்டத்தில் பாரதி பாடிய பாடல் ஒன்று ஏனோ இவ்வேளையில் எங்களுக்கு நினைவிற்கு வருகிறது:

"தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை,
கண்ணீரால் வளர்த்தோம் கருகத்திருவுளமோ."
இவ்வா¢கள் எங்களுக்கு மிகச் சா¢யாகப் பொருந்துமா என்பது
தொ¢யவில்லை.

நண்பர்களே! இது விடைபெறும் நேரம்தானா என்பது தீர்மானமாகவில்லை. ஆனாலும் எங்கள் நினைவுகள் உங்களின் அன்பு, நட்பு, தோழமை இவற்றையே தாங்கியுள்ளன. உங்களிடமும் இவற்றையே கையளித்துள்ளோம்.

என்றென்றும் அன்புடனும்,
நட்புடனும்,
தோழமையுடனும்,
சுந்தர்,
ஆகஸ்டு '87


** முகம் கொள் ** முற்றும்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home