Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > 20th Century Ceylon Tamil Literature > அழியா நிழல்கள்: ஒரு கவிதைத் தொகுப்பு

20th Century Eelam Tamil Literature at Project Madurai


அழியா நிழல்கள்: ஒரு கவிதைத் தொகுப்பு
(ஆசிரியர் : எம்.ஏ.நுஹுமான்)
aziyA nizalkaL: oru kavitait tokuppu (by M.A. Nuhman)


[ Etext Preparation : Mr. R. Padmanabha Iyer, London, UK & Dr. N. Kannan, Kiel, Germany (input);Govardhanan Ramachandran, Columbus, Ohio, USA (Proof-reading) Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland  © Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).  and ii) Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. The Latha font may be downloaded from here]

" ...இத் தொகுப்பில் உள்ள கவிதைகள் எல்லாம் மகத்தான சிருஷ்டிகள் என்று நான் கருதவில்லை. மகத்தான கவிதைகளைப் படைப்பது என் நோக்கமும் அன்று. எனது அனுபவங்களையும், உணர்வுகளையும் சிந்தனைகளையும் நான் கவிதைகளாகப் பரிவர்த்தனை செய்கின்றேன் அவ்வளவுதான். நான் ஒரு சாதாரண மனிதன்; எனது கவிதைகளும் சாதாரணமானவை..."


1. ஒரு முன்னுரை

1964 முதல் 1979 வரையுள்ள காலப்பகுதியில் என்னால் எழுதப்பட்ட தனிஉணர்வு சார்ந்த (Personal) கவிதைகள் சிலவற்றின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. இத்தொகுப்பில் உள்ள கவிதைகளிற் சில, நான் 'சித்தாந்த வெறுமையில்' இருந்த எனது ஆரம்பகாலப் படைப்புகள். முற்போக்கு அரசியல், இலக்கியக் கொள்கைகளில் ஈடுபாடு ஏற்பட்ட பிறகு எழுதிய கவிதைகள் சிலவும் இத்தொகுப்பில் உள்ளன. ஆயினும் இவற்றில் எதுவும் நேரடியான சமூக, அரசியல் பிரச்சினைகள் சார்ந்தவையல்ல. அதே வேளை இவையெல்லாம் முற்றிலும் தனி ஆளுக்குரியவையும் (Private) அல்ல. ஆனால் பொதுவாக அரசியலுக்கு புறம்பானவை என்று சொல்லலாம்.

எனது சமூக, அரசியல் சார்பான கவிதைகளைப் படித்திருப்பவர்கள் இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் அவற்றிலிருந்து வித்தியாசமாக இருப்பதைக் காண்பார்கள். இந்த வித்தியாசத்தை எனது முரண்பாடாகக் கருதுவோரும் உளர். வேறுபாட்டுக்கும் முரண்பாட்டுக்கும் இடையே பேதம் காண முடியாமையின் விளைவே இது. இதுபற்றிப் பிறகு விளக்குவேன்.

முதலில், முற்போக்கு இலக்கியக்காரரை (சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) இத்தொகுப்பு திருப்திப்படுத்தாது என்றே நினைக்கிறேன். ஏனெனில் இதிலே சமூக அரசியற் பிரச்சனைகள் பற்றிய கவிதைகள் எதுவும் இல்லை. இக்கவிதைகள் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வோ, வழிகாட்டலோ தரா; மக்களைப் போராட்டத்துக்குத் தட்டி எழுப்பா. யாரோ ஒருவனுடைய தனிப்பட்ட மன உணர்வுகளையும் அவசங்களையும் படிப்பதால் சமூகத்துக்கு என்ன லாபம்? என்று அவர்கள் கேட்பார்கள், இது நியாயமான கேள்விதான்.

ஆனால் ஒருபக்க நியாயமே. இலக்கியத்திலே சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவன் நான். ஆனால் சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு மட்டுமே இலக்கியத்தில் இடம் உண்டு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. முற்போக்கு எழுத்தாளர்கள் சமூக, அரசியல் பிரச்சினைகள் பற்றியே எழுதவேண்டும், இவற்றுக்குப் புரம்பான (காதல் போன்ற) தனிப்பட்ட விசயங்களை எழுதக்கூடாது என்று பல முற்போக்காளர்கள் கருதுவதாகத் தெரிகிறது. இது அபத்தமான கருத்து என்பது என் அபிப்பிராயம்.

இலக்கியம் முழுமொத்தமான மனித அனுபவத்தின் வெளிப்பாடு என்றுதான் நான் கருதுகின்றேன். கவிஞனும் ஒரு சாதாரண மனிதன்தான். அவன் சமுதாயத்தில் ஒரு அங்கம் என்ற வகையிலே, சமுதாயத்தில் தங்கியிருக்கிறவன் என்ற வகையிலே சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு அவன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதேவேளை அவன் தனியனாகவும் இருக்கிறான். அவனுக்கென்று தனிப்பட்ட, சொந்த (Personal) அனுபவங்களும் பிரச்சினைகளும் உண்டு.

அவை கவிதைகளில் வெளிவருவது தவிர்க்க முடியாதது. அவற்றுக்கும் ஒரு தேவையும் முக்கியத்துவமும் உண்டு. சிலவேளை ஒரு சமூகப்பிரச்சினையும் ஒரு தனிப்பட்ட அனுபவமும் உறவுடையவையாக ஒன்றாகவே இருக்கலாம். சிலவேளை அவை உறவற்று வேறுவேறாக இருக்கலாம். உதாரணமாக காதல் ஒரு தனிப்பட்ட அனுபவம், ஒரு தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல.

அது ஒரு சமூகப் பிரச்சினையும்தான். ஒரு சமூகப் பிரச்சினை என்ற வகையில் அதற்கு எந்த அளவு முக்கியத்துவம் உண்டோ தனிப்பட்ட அனுபவம் என்ற வகையிலும் அதற்கு அந்த அளவு முக்கியத்துவம் உண்டு. மனித வாழ்வில் இருந்து காதலைப் பிரிக்க முடியாது. ஆகவே கவிதையில் இருந்தும் இலக்கியத்தில் இருந்தும் அதைப் பிரிக்க முடியாது.

இது போன்றதுதான் ஒரு நண்பனின் ஒரு குழந்தையின், ஒரு தாயின் பிரிவுக்காக, மரணத்துக்காக இரங்கிக் கலங்குவதும்; ஒரு இயற்கை வனப்பில் மனதை இழப்பதும் இதுபோன்றதுதான். இவற்றுக்கு அரசியல் முக்கியத்துவம் இல்லாவிடினும் இலக்கியத்திலே இவை எல்லாவற்றுக்குமே முக்கியத்துவம் உண்டு. ஏனெனில் இவை மனித அனுபவங்கள் என்று சிலவற்றை ஒதுக்குவதும் முற்போக்கை எதிர்க்கும் சுத்த இலக்கியவாதிகள் அரசியல் விசயங்கள் என்று சிலவற்றை ஒதுக்குவதும் அபத்தமானது; இது என் கருத்து.

எனது 'தாத்தாமாரும்' பேரர்களும், 'நிலமென்னும் நல்லாள்' போன்ற கவிதைகளுக்கு உள்ள சமூக, அரசியல் முக்கியத்துவம், இத்தொகுப்பிலே இடம் பெற்றுள்ள 'அழியா நிழல்கள்' தனிமை இரவு' போன்ற கவிதைகளுக்கு இல்லை என்பது வெளிப்படை. சமூக முக்கியத்துவம் அற்றவை என்பதனாலேயே இவை வெளிப்படுத்தும் மனித உணர்வுகள் பெறு மதியற்றவை ஆகிவிடுமா?

 அப்படியானால் வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதியே பெறுமதியற்றதாகி விடும். சமூகக் கொடுமைகளுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்துவது ஒரு படைப்பாளிக்கு எவ்வளவு இயல்பானதோ அதுபோல் தனக்கே உரியா தனி அனுபவ உணர்வுகளை வெளிப்படுத்துவதும் இயல்பானதுதான். நிலமென்னும் நல்லாளும்', 'அழியா நிழல்களும்' எனது அனுபவங்களின் உணர்வுகளின் வெளிப்பாடுகள்தாம். ஒன்று சமூக உணர்வு, மற்றது தனி உணர்வு இரண்டும் முரண்பட்டவை அல்ல ; வேறுபட்டவை.

'தன்னை மார்க்சியவாதி என்று பாவனை பண்ணிக் கொள்பவர் 'காலி வீதியில்' செல்லும் பெண்ணைப் பார்த்து 'வெரி நைஸ் கேர்ல்' என்று சென்டிமென்டலாக உருகித்தள்ளலாமா? இது பேதமை அல்லவா?' என்ற பொருள்பட இத்தொகுப்பில் உள்ள 'காலிவீதியில்' கவிதைபற்றி பத்து வருடங்களுக்கு முன்பே எனது நண்பர் மு.பொன்னம்பலம் எழுதியிருந்தார். (மல்லிகை, மார்ச் 1972).

இத்தனைக்கும் அவரும் ஒரு கவிஞர். முதலி அந்தக் கவிதை சென்டிமென்ட்லாக உருகித்தள்ளுவதல்ல என்பதைக் கூட அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவ்வளவு கவித்துவ உணர்வு அவருக்கு! அறுபதுகளின் பிற்பகுதியிலே ஈழத்து முற்போக்கு இலக்கியத்தில் வரட்டுவாதம் மேலோங்கி இருந்தபோது (அது இன்னும் முற்றாக மறைந்துவிடவில்லை).

இத்தகைய சிறு அனுபவங்களும் கவிதையாக எழுதப்படலாம் என்பதைக் காட்டுவதற்காகவே நான் அதை எழுதினேன். சன நெரிசலின் மத்தியில், அவசர காரியமாகச் சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண்ணின் அழகின் ஈர்ப்பு ஏற்படுத்திய ஒரு கணச் சலனம், அதே அவசரத்தில், கார்களும் பஸ்களும் இரைந்து கலந்த நெருசலில் அவசரமாகவே கலைந்து போவரைத்தான் அக்கவிதை கூறுகின்றது. புதுமைப் பித்தனின் 'இது மிஷின் யுகம்' கதையில் வரும் மனிதயந்திரம் மாதிரி அதிலே 'சென்டிமென்டலான உருகல்' எதுவும் இல்லை. ஒரு மார்க்சீயவாதியாக இருப்பதற்கு இத்தகைய அனுபவங்களை எழுதுவதற்கும் என்ன முரண்பாடு? இக்கவிதை மார்க்சீயக்கோட்பாட்டோடு எப்படி மோதிக் கொள்கின்றது? என்பது எனக்கு புரியவில்லை.

பிற்காலத்தில் பொன்னம்பலம் என்று ஒரு 'பிரபஞ்ச யதார்த்தவாதி' இப்படியெல்லாம் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் ஜென்னியைப் பற்றித் தான் எழுதிய அற்புதமான காதல் கவிதைகளையெல்லாம் கார்ல்மார்க்ஸ் தீயிட்டுக் கொளுத்தியிருப்பானோ தெரியாது. அப்படி நடந்திருந்தால் எவ்வளவு நஷ்டமாக இருந்திருக்கும். மார்க்ஸ் என்ற மனிதனின் பிறிதொரு பகுதியை நம்மால் அறிய முடியாமலே போயிருக்கும். நல்ல காலம் அத்தகைய துரதிர்ஷ்டங்கள் நிகழவில்லை.

முற்போக்கு எழுத்தாளர்கள் வர்க்கப் போராட்டத்தைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருந்தால் பொன்னம்பலம் போன்ற ஆன்மீகவாதிகள் வெகு சந்தோஷமாகச் சத்தம் போடுகிறார்கள். பாருங்கள் இந்த முற்போக்கு எழுத்தாளர்களை. இவர்கள் வாழ்க்கையை வெறும் பொருளாதார உறவாகவே பார்க்கின்றார்கள். இது எவ்வளவு வறட்டுத்தனம் என்று முற்போக்கு எழுத்தாளர்கள் மனிதனின் தனி உணர்வுகளுக்கும் இலக்கிய வடிவம் கொடுத்தாலும் இவர்கள் சத்தம் போடுகிறார்கள். பாருங்கள் இந்த மார்க்சீயவாதிகளை. இவர்கள் தனிமனித உணர்வுகளைப் பற்றியெல்லாம் எழுதுகிறார்கள். மார்க்சீயமே இவர்களுக்குப் புரியவில்லை என்று. இவ்வாறு இவர்கள் தங்களுக்கு வசதியான ஒரு மார்க்சீயத்தைச் சிருஷ்டித்துக் கொண்டு அல்லல்படுகிறார்கள். அவர்களுக்காக அனுதாபப்படுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை.

இவ்வளவும் நான் சொன்னது எனது கவிதைகளுக்கு 'வக்காலத்து' வாங்கி அவற்றின் சிறப்பை நிலைநாட்டுவதற்காக அல்ல. முற்போக்கு வாதிகளும், முற்போக்கைத் தாண்டிப் பிரபஞ்சத்தில் சஞ்சரிப்பவர்களும் இத்தகைய படைப்புகளைத் தீண்டாமை உணர்வுடன் பார்க்கத் தேவையில்லை என்பதை உணர்த்தத்தான். மற்றபடி இத் தொகுப்பில் உள்ள கவிதைகள் எல்லாம் மகத்தான சிருஷ்டிகள் என்று நான் கருதவில்லை. மகத்தான கவிதைகளைப் படைப்பது என் நோக்கமும் அன்று. எனது அனுபவங்களையும், உணர்வுகளையும் சிந்தனைகளையும் நான் கவிதைகளாகப் பரிவர்த்தனை செய்கின்றேன் அவ்வளவுதான். நான் ஒரு சாதாரண மனிதன்; எனது கவிதைகளும் சாதாரணமானவை. இன்று தமிழிலே எல்லோரும் மகத்தான கவிதைகள் எழுதுகின்றார்கள். எனது கவிதைகள் மட்டுமாவது சாதாரணமாக இருந்துவிட்டுப் போகட்டுமே.

இத்தொகுப்பு வெளிவரக் காரணமாய் இருந்த நண்பர் இ.பத்மநாப ஐயருக்கும், இந்நூலை வெளியிடும் நர்மதா பதிப்பகத்தாருக்கும் எனது நன்றிகள்.

"நூறி மன்ஸில்",
கல்முனை- எம்.ஏ.நு·மான்
இலங்கை. 30.8.1982
 


2. விளையாட்டு

நீண்ட நெடும்பாதை;
நெஞ்சோ சுமை கனக்கும்
பாண்டம்.
அதற்குப் பரிகாரம் தேடுவதற்கு
வேண்டி நடக்கின்றேன்.

வீதி அருகினிலே
காலம் கடந்து கழித்த சுவடுகளின்
கோலம் வரைந்து, குளிர்ந்த நிழலுக்கோர்
பாலம் அமைக்கும் பழைய மருதமரம்.

மந்தி கொறித்து மகிழ்ந்த கனிகளினைச்
சிந்தும் கிளைகள் சிலிர்க்க
இனியவளை
முந்திப் பிடிக்க முனைந்த மகிழ்ச்சியிலே
கீச்சென்றும்,
இன்பக் கிளர்ச்சி தவழ்ந்தோடும்
பேச்சில் மகிழ்ந்தும், பிணைந்தும்
உணர்ச்சிகளை
மேய்ச்சல் புரியும் விருப்பில்
மனிதத்தின்
ஆதங்கம் இன்றி நடக்கும்
அணிற்பிள்ளைக்
காதல் விளையாட்டில்
கவலைக்கிடமுண்டோ?
வீதி கிடக்கும் வெறுமைக்கு, இது ஒன்று
போதாதோ இன்பப் பொலிவை விளைவிக்க.
மாதாள், கணவன் மனதை இழுத்து, இருண்ட
பாதை குறுக்காகப் பாய்ந்தாள்;
அணில் கூட ஆணன்றோ?
அந்த அணங்கைத் துரத்துவதும்
வீணாகிப்போமோ?
விரட்டிக் கொண்டோடுகையில்
வாணாளைப் போக்குதற்கு வந்ததுவே இவ்வண்டி
நீண்ட தெருவில்
நெரிந்து கிடந்தாய் நீ.
பேச்சிழந்து,
அன்புப் பிணைப்பிழந்து
மண்மீது
மூச்சும் துறந்து முடிந்த உனைப் பார்த்துக்
'கீச்' சென்றாள்;
இன்பக் கிளர்ச்சி தவழ்ந்ததுவா?

ஆண்ட இனிமை
அனைத்தும் இழந்த உனைத்
தீண்டி எடுத்தேன்.
திணித்தாய் எனது மனப்
பாண்டத்துள் மீண்டும் பழு.
**
24.01.1964

 

3. மீட்சி

நீ ஒரு நாள், உன் நினைவுப்
பெட்டகத்தை என்பால்
நீட்டியதும் நான் அதற்குள்
நித்திரையில் ஆழ்ந்தேன்.

வேய்ங்குழலின் மெல்லிசையாம்
மெத்தையிலே, கண்கள்
வீசுகின்ற அன்பின்இள
மென்வளியின் ஊடே
ஓய்வெடுக்க வேண்டுவதன்
உன்நினைவோ? இல்லை.
ஊறிவரும் தண்புனலில்
இன்கனவு காணப்
பாய்விரித்த ஓடத்தில்
பள்ளி கொள்ளுகின்றேன்.

பாழ்வெளியில் ஓர் சுனையைப்
பார்த்து ரசிக்கின்றேன்.

நம் இதயம் மாறியதை
நாம் அறிந்து கொண்டோம்.
நள்ளிரவில், விண்வெளியில்
வெள்ளிகளை எண்ண
எம்மிடையே எண்ணளவு
இன்றுவரை இல்லை.
என்கனவை எண்ணுவதும்
எண்ணரிய தொல்லை.

தம்உணர்வுப் பொய்கை, ஒரு
தாமரையின் கேணி.
தண்மனத்தைச் சிந்துவதற்காய்
அங்கு முளைத்துள்ள
செம்முளரியின் முகையின்
மெல்லிதழ்கள் சேர்த்து
தெள்ளியஅவ் வோடையிலே
விட்டு மகிழ்கின்றேன்.

வெண்முகிலை வீழ்த்துதற்காய்
வெள்ளிகளும் ஓடும்.
வெள்ளிகளை வீழ்த்துதற்காய்
வெண்முகிலும் ஓடும்.

தண்ணிலவு மெல்லொளியால்
சித்திரங்கள் தீட்டித்
தந்திருக்கும் இவ்வினிய
வேளையிலே, நான்என்
கண்இமைகள் மூடுகிறேன்.
காண்பதற்கு நல்ல
காட்சிகளாய் இல்லை எனும்
காரணத்தால் அல்ல.

விண்வெளியின் மெல்லமைதி
மெய்யுணர்வை மீட்க
மீண்டும் உளத் தண்புனலில்
இன்கனவு காண்பேன்.

16-05-1964

 

4. நம்பிக்கை

கண்ணீர்த் துளியின் கருத்தென்ன
என் இனிய பெண்ணே?
வசந்தப் பெருநிலவில்
வெள்ளிகளை
நோக்கி எதற்கிந் நெடுமூச்சு?
நுண் உணர்வைத்
தேக்கும் உனது சிறுநகையில்
என் உயிரைக்
கட்டி இழுத்த அக் காலத்தை உன்நினைவு
வட்டமிடல் கூடும்.
எனுனிம் மனம் வெதும்பித்
துன்பத்தில் கண்ணீர் உகுக்கும் துயர் எதையும்
அன்பே, அதில் நான் அறியேனே;

உன்மீதென்
நெஞ்சில் விளைந்து நிறைந்த முழு அன்பினையும்
துஞ்சும் பொழுது உறுதி தொலையாத
நம்பிக்கையோடும் பிணைந்து,
நறுமலரின்
தும்பியாய்ப் பாடித் துதித்தேன்.
எனினும் நீ
எல்லாம் நடிப்பென்றே எண்ணுவையோ

இல்லையெனில்
சொல்லுக என் அன்பே;
துயர்நிறைந்த, சந்தேகக்
கல்நிறைந்த பாதையில் நீ
கால் நோகச் செல்லாதே.
மெல்லிய உன் பாதத்தில் வீழ்ந்து,
என் தனி இயல்பைக்
காணிக்கை செய்யென்று, அக்
கண்ணீரைக் காட்டாதே.
நாணம் நிறைந்த நறைவிழியில்
நம்பிக்கை
அங்குசமாய் நின்றால்
அடுத்துன் துயரெல்லாம்
எங்கோ மறையும்.

இருவர் இதயத்தும்
செம்பொன் சுடர்ந்து
செழுமை பேற வேண்டில்
நம்பிக்கை வேண்டும் நமக்கு.

16-01-1965

 

5. கவிதை உள்ளம்

வெண்முகிலோடு நாமும்
மிதக்கலாம்; வீசுகின்ற
தண்ணிய தென்றலூடும்
தளிர்களின் மென்மையூடும்
பண்ணுடன், உணர்வைப் பெய்யும்
பசுங்கிளைக் குயில்களோடும்
தண்ணீரும் தண்ணீரும் போல்
கலந்துற வாடலாமே.

கொட்டைப் பாக்கன்ன
சின்னக் குருவிகளோடு
நாமும் ஒட்டலாம்.
அவற்றின் நீண்ட
ஊசி மூக்கோடு சேர்ந்து
மொட்டலர் மலரில் தேனை
முகரலாம்; இழைகள் பின்னும்
பட்டுநூற்பூச்சியோடும்
பலகதை பேசலாமே.

மல்லிகைப் பூவில், நெஞ்சம்
மகிழலாம்; மறுகால் அந்த
மெல்லிதட் செறிவில் தெய்வ
மேன்மையை உணரலாம், செவ்
வல்லியின் அமைவில் தூய்மை
அடையலாம்;மணத்தைச் சிந்தும்
முல்லையில் காதற் பெண்ணின்
முறுவலைக் காணலாமே.

குழந்தையின் சிரிப்பில் நெஞ்சம்
குழையலாம்; புலரிப் போதில்
விழும்பனித் துளியில்; புல்லின்
விளிம்பினில்; தரையில் குந்தி
எழும் சிறு புள்ளின் வண்ண
இறக்கையின் துடிப்பில் நெஞ்சம்
தளம்பலாம்: அவற்றில் இன்பத்
தனிச்சுவை காணலாமே.
இயற்கையின் அசைவு தோறும்
இன்பத்தை நுகரலாம்;விண்
வயல்களில் உலக வாழ்வின்
மறைபொருள் தெளியலாம்; நம்
அயலவர் துயரில் பங்கும்
அடையலாம் எனிலோ, வாழ்வின்
கயமைகள் கழிய நாமோர்
காவியம் பாடலாமே.

10-06-1965.

 

6. கனவும் காரியமும்

கூந்தலைக் கையால் பற்றிக்
கோதினாள் கோதை; தூணிற்
சாய்ந்தனள்; இருந்தாள்; கையில்
ஆய்ந்தமென் பூங்கொத்தைப் போல்
ஆடினாள்; பின்னால் செய்தே
வேய்ந்தனள் நெஞ்சிற் காதல்
வேட்கையை; எழுந்து சென்றாள்.

துடைப்பத்தைக் கொண்டு முற்றம்
துலக்கினாள்; இடுப்பில் கையை
மடக்கியவாறு நின்றாள்;
மறுபுறம் திரும்பிச் சென்றாள்.
கிடைத்ததை எல்லாம் சற்றே
கிழிக்கிறாள்; கசக்குகின்றாள்
இடைக்கிடை முகத்தில் வேர்வை
கசிவதைத் துடைத்தல் செய்தாள்.

செயல்களின் பொருள் யாதொன்றும்
தெரிகிலாள்; விழியின் உள்ளே
புயல்வரும் போல் ஓர் தோற்றம்
புதைக்கிறாள்; எனினும் வெட்டை
வயல்வெளி போல் ஓர் தோற்றம்
வதனத்தில் காட்டுகின்றாள்.
மயல்கொளும் மார்க்கம் ஓவ்வோர்
அசைவிலும் வரைந்தே உள்ளாள்.

குடத்துடன் நடந்து சென்றாள்
குளிர்ந்த நீர் மொண்டு வண்ண
நுடக்குடன் அசைந்தசைந்து
நொசிகிறாள்; வருகிறாள், பின்
அடுப்படி சென்று குந்தி,
அதரங்கள் குவித்துத் தீயை
முடுக்கினாள், நிலவை மேகம்
மூடுதல் காட்டுகின்றாள்.

கண்களை விரல்கள் கொண்டு
கசக்கினாள், முகத்தில் வீழும்
விண்களை கொள்ளவந்த
மேகத்தை ஒதுக்கி, எல்லாப்
பெண்களைப் போலும் சேலை
பின்புறம் செருகிக் குந்தி
உண்கலம் அனைத்தும் தேய்த்து
உரசியே கழுவுகின்றாள்.

உணவினை முடித்தாள் போலும்
உளத்திடை உருளுகின்ற
நின€வினை விழியிற் கூட
நிகழ்த்தினாள்: இளமை காணும்
கனவுகள் இடையில் வீட்டுக்
காரியம் வந்தால் என்ன?
தினமும்போல உணர்வின் இன்பச்
சிலிர்ப்பினில் தளம்புகின்றாள்.


6-07-1965

 

7. அழகிய தீமை

மையிருட் போதில், வானில்
மலர்ந்துள பூக்களின்கீழ்
வையகம் உறங்கும்போது
வழியிலும் இருள் தூங்கிற்று,
கையில் ஓர் விளக்கை ஏந்தி
கவிந்துள இருளினூடு
பைய, என் இல்லம் நோக்கிப்
பாதையில் நடந்து சென்றேன்.

காட்டிடை மலர்ந்த பூக்கள்
கமழ்ந்தன; நுகர்ந்ததால், ஓர்
பாட்டென துள்ளத்துள்ளே
பதுங்கிப் பின் வெளியே றிற்று.
நாட்டிய விழியிற் காதை
நடுவிலே, சிறிது தள்ளி
காட்டிய விளக்கில் ஏதோ
கவினுற ஒளிரக் கண்டேன்.

பெருகிய ஒளியில் நீலம்
பிறந்தது: கறுப்பு வெள்ளை
மரகத நிறங்கள் சேர்ந்த
வரிகளால், மணியின் கோவைச்
சுருளெனச் சுருண்ட சின்னச்
சுடர் உருக் கண்டேன்; ஆம் ஓர்
இருதலை ராகம் கண்டவ்
வெளியிலே கவர்ச்சி கொண்டேன்.

ஒளிர்கிற அதனை நெஞ்சம்
உவந்தது; தோளில் மார்பில்
தழுவலாம் என என் நெஞ்சுட்
தாபமும் மேலோங்கிற்று
தழுவலாம், ஆயின் நச்சுத்
தன்மை உண்டன்றோ? ஆம், ஓர்
அழகிய தீமை போன்ற
அதனை நான் அடித்தே கொன்றேன்

26-12-1966

 

8. மழையில் நனைபவளுக்காக

செருப்புப் போடாது செல்லும்
சேயிழாய், சற்று நில்: இச்
சுருப்புக்குள் உனது பாதம்
தோய்கிறதே, ஐயோ, என்
விருப்புக்கும் உரிய பெண்ணே,
வீதியில் மழைபெய்யுங்கால்
குருத்துப் போல் உனது மென்கால்
சேற்றிலே குமையலாமோ?

குடைப்பிடித்துள்ளாய்; ஆனால்
கொட்டுமிப் பெருமழை உன்
உடைகளை நனைத்தால் உன்றன்
உள்ளாடை தெரியுமன்றோ?
நடைதவிர்; சற்று நில், நீ
நனைதலைத் தவிர்த்த பின்னர்
விடை தருகிறேன், இன்னும்
வேகமாய் போகலாமே.

மழையிலே நனையும் பெண்ணே
வா, சற்றே ஒதுங்கி நிற்போம்.
வழி எங்கும் சக்தியேல், எவ்
வாறு நீ மட்டும் சொந்த
அழகுடன் போதல் கூடும்,
ஆதலால் மழை ஓயட்டும்
மழையிலே நனையும் பெண்ணே
வா, சற்றே ஒதுங்கி நிற்போம்.

4-10-1966

 

9. இறப்பில்லா இறந்த காலம்

வீதியில் போகும்போதுன்
விழிகளைப் பார்த்தேன்,
என்றன் காதலி,
நீயோ என்னைக்
காணாது போல் செல்கின்றாய்,
மாதங்கள் சிலமுன், அன்பால்
மகிழ்ந்து நாம் கலந்திருந்தோம்
பேதங்கள் அற்றோம் என்று
பேசினோம்: பிணைந்து நின்றோம்.

புன்னகை ஒன்று செய்தேன்
பூவை நீ வருதல் கண்டு
என்னகை மலரைக் கண்டாய்
எனினும் நீ திரும்பிச் சென்றாய்
முன்னெலாம் அன்பில் நாங்கள்
முழுகினோம்; நினைக்கும் போதே
இன்புற்றோம், முறுவல் பூத்தோம்
இதயத்தில் மலர்ச்சி கொண்டோம்.

இன்று நீ அவற்றையெல்லாம்
ஏன் அழிக்கின்றாய்?
நாங்கள்
சென்றநாள் வாழ்ந்ததெல்லாம்
செயற்கையா?
பொய்யா? என்றே
இன்று எனதிதயத்துள்ளே
எழுந்தன வினாக்கள்;
உண்மை ஒன்று
பின் பொய்'ய் மாறில்
ஓ, அது பெரிய துன்பம்!

வெறுப்புற்று வாழ்தல்
அன்பே
இயற்கைக்கு விரோதமாகும்.
வெறுப்புறும் போதே நாங்கள்
துன்பத்தில் விழுகின்றோம்
விருப்புறல், அன்பு செய்தல்
இயல்பான வேட்கையாகும்
விருப்பினை, அன்பைக் கொன்றால்
துன்பமே மிகுந்துபோகும்.


என் விழிகளினைக் காண
இயலாது திரும்புமாறும்
என் முறுவலினை ஏந்த
இயலாது குனியுமாறும்
உன் உளம் பலம்குன்றிற்றா?
உண்மையில் அன்பு செய்த
முன்னைய நிலையை மூட
முனைந்தனையா இப்போது?

இறப்புற்ற கணங்களெல்லாம்
உண்மையில் இறப்பதில்லை.
பிறப்புற்று எம் வாழ்க்கை ஏட்டின்
பின்புறம் தொடர்ந்து நிற்கும்.
மறப்புற்று வாழ்தல் பொய்
அம் மணித் துகள்களினை.

நாங்கள்
இறப்புற்ற போதும்
அந்தக் கணங்களோ
இறப்பதில்லை.


9-3-1967

 

10. வைகறை நிலவு

வைகறை நிலவு வாசலில் விழுந்தது
நெய் உறைந்தது போல்
நீண்ட வானில்
மேற்கே கவிழ்ந்து விழப்பார்க்கிறது.

மேகக் கூட்டம் மிதந்து சென்றது
போகப் போகப்
புதைந்து புதைந்து
வெள்ளிப் பூக்கள் மிளிர்ந்தன மங்கி

வெள்ளிப் பூக்கள்
மேகக் கூட்டம்
தள்ளித் தெரியும்
தனித்தனி மரங்கள்
வைகறை நிலவு வரைந்த நிழல்கள்

வைகறை நிலவு வாசலில் விழுந்தது
இலைகளுக் கூடே நிலவு வழிந்தது
நிலவுத் துளிகள் நெளிந்தன மண்ணில்

வைகறை நிலவு
மணக்கும் பூக்கள்
பனிக்குளிர் சுமந்து
பரவும் காற்று...
அமைதி அழகை அணைத்துப் புணர்ந்தது.

அடுத்த அறையில்
குறட்டைச் சத்தம்
இடைக்கிடை கேட்கும்,
எனினும்
வைகறை நிலவு வாசலில் விழுமே!.

7-1-1968.

 

11. இரவுக்கு வாழ்த்து

இரவே, நீ வாழி!
இளமைக் கனவு
தரவந்து நிற்கின்றாய்
தழுவும் கரும் போர்வை
போர்த்துவந் துள்ளாய்
பொழுது புலர்வதன் முன்
சேர்ந்து முயங்கச்
சிறிதே துகில் களைந்தோம்

எங்கள் துயரை எரித்துப் பொசுக்க
இதோ, கங்குற் பொழுதே, நீ
காதல் நெருப்பேற்றி
இங்குவந்துள்ளாய்

இளமை கனிகையில், நாம்
மூச்சோடு மூச்சை உரசி
முயங்குகிறோம்.
ஆழ்ந்த இரவின் அமைதி
இளம் கனவைச்
சூழ்ந்து கிடக்கும் சுகம் பெரிது
நீ வாழி.

இரவே நீ வாழி!
இனிய உறக்கம்
தரவந்து நிற்கின்றாய்
தழுவும் கரும் போர்வை
போர்ந்துவந் துள்ளாய்
பொழுது புலர்வதன் முன்
நூர்ந்த அடுப்பை எரிக்க
இனி மீண்டும்
வேர்த்துக் களைத்து
வெறி கொண்டு போராடிச்
சேர்த்து வருதற்காய்
சிறிது களைப்பாற
நீ வந்து நிற்கின்றாய்
நீண்ட பகற் பொழுது
காய்ச்சி எடுத்த
கனலைத் தணிக்கின்றாய்.

இரவே நீ வாழி!
இனிய அமைதி பரவ வருகின்றாய்.
அமைதி பரவுகையில்..
பல்லி ஒலி செய்யும்
'பக்கிள்' என்று ஓர் மரத்தில்
குந்தி இருந்து குரல் கொடுக்கும்
அவ்வோசை
விட்டு விட்டுக் கேட்கிறது.
வீதிகளில் நீள்வெறுமை
ஒட்டித் துயில் கிறது.
எங்கோ ஒரு நாயின்
சத்தம் எழவும்,

தொடர்ந்து சிலசத்தம்
கேட்டு மறைகிறது
நெஞ்சில் கிளர்ந்துவரும்
பாட்டை மெதுவாய்ப் படிக்கும்
இனந்தெரியாச்
சிற்றுயிர்கள் செய்யும்
சிறுசத்தம் கேட்கிறது.
உற்றுணர்ந்தால்
நெஞ்சம் உவக்கும் இவைதவிர
பற்றி எரியும் பகற் பொழுதின்
அல்லோலம்
சற்றேனும் அற்ற இரவு
தரும் கரிய
போர்வைக்குள் நாங்கள் புகுந்து
எம் துயர் மறப்போம்
வேர்வை தணிய
விழிமூடி நாம் துயில்வோம்.

பூக்கள் துயிலும்
புழுதி மணலோடு
தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும்
பனிக்கசிவில்
சில்லிட்டுப் போன சிறுபுல் நுனிமீதும்
காற்றுத் துயில் செய்யும்
நாங்கள் கனவுகளை
ஏற்றுத் துயில்வோம்
இரவும் துயில் செய்யும்.

இரவே நீ வாழி
இனிய உறக்கம்
தரவந்து நிற்கின்றாய்
தழுவும் கரும்போர்வை
போர்த்துவந் துள்ளாய்

பொழுது புலர்வதன்முன்
இற்றைப் பகலில் இழந்தவற்றை
நாம் மீட்கும்
வெற்றிப் பொழுதாய் விடிய
உனது கரும்
போர்வைக்குள் நாங்கள் புகுந்து
பலம் பெறுவோம்.

எங்கள் துயரங்கள்
எங்கள் உளக்குமுறல்
எங்கள் பொறாமை
எங்கள் குரோதங்கள்

எங்கள் சபலங்கள்
எங்கள் உணர்ச்சிவெறி
இத்தனையும் சற்றே இழந்து
நாம்
உன்வரவால்

புத்தம் புது உலகுள் போய் புகுந்து
காலைவரை
எம்மை மறந்து கிடப்போம்
அதனால்.... ஆ!
இரவே நீ வாழி இனிது.

25-3-1968.

 

12. உன் வரவுக்காக....

உன்னுடைய முன்னிலையில்
நான் துரும்பாய் ஆவதையும் உவப்பேன்.
அன்பே,
இன்னும் இன்னும் நான்சிறிய உருவாகி
கடைசியிலே இல்லாதாகி
என்னை அழித்திடுவதற்கும் இணங்கிடுவேன்
ஆயினும் நீ
எங்கே உள்ளாய்?
இன்னும் இங்கு தோன்றாத உலகிடையா?
இங்கேதான் இருக்கின்றாயா?

இன்றுவரை நான் அறிந்த எல்லோரும்
உயர்ந்த ஒரு பீடத் தேறி
நின்றபடியே அல்லால்
என்னோடு கலப்பதற்கு
நினைத்தாரில்லை.
அன்றுமுதல் இன்றுவரை
என் அறிவும் அவ்வாறே ஆகி
நானும்
சென்றமர அதைவிடவும்
உயர் பீடத்தேறி அவர்
முன் செல்கின்றேன்.

ஆயினும் என் இயல்பதனை
ஆதரிக்கவில்லை,
என்றன் அகத்தில் ஊறும்
நேய உணர்வெனும் ஊற்றை
சமவெளியின்
நிழலடர்ந்த சோலைமீது
பாயவிடும் இயல்பே, என் இயல்பாகும்.
அவ்வாறு பாயும்போதே
தூய ஒரு சுகம் பரவி
துயர்கூட மகிழ்ச்சிதரும்
சுவையாய் மாறும்.

அவர்களுடன் தனித்திருக்கும் வேளைகளில்
அன்பே,
என் அகத்தில் ஊறும்
சுவை நிறைந்த இயல்பான உணர்வுகளை
தம் இயல்பால் சோதிக்கின்றார்.
இவர் இயல்போ
எப்போதும்
தம்மை உயர் பீடத்தே ஏற்றிவைக்கும்
கவலையிலே மூழ்கியதால்
எனக்கும் அவர் அவ்வாறே
பொருள் காண்கின்றார்.

எனினும் இவர் இயல்புகளுள்
என் இயல்பை ஒருபோதும் இழக்கேன்
என்றன்
தனி இயல்பு சிறந்த தெனில்
அதில் உயிர்கள் தளிர்க்குமெனில்
அன்பே, உன்னில்
எனை உயர்த்தி வையேன் நான்.
எனதை விட உனதியல்பே
இனிக்குமானல்
எனதியல்பை உனதியல்பில்
இழக்குமொரு நாளே
என் இன்னாள் ஆகும்.

என்னுடைய சமவெளி,
உன் திசை நோக்கி
நான் எனது இதய ஊற்றை
இன்னும் இன்னும் சுமந்தபடி
நெடுந்தூரம் கால் நடையாய்
எடுத்துச் செல்வேன்.
சின்னதொரு மழைத்துளியும்
கீழ்நோக்கிச் சிப்பியினுள் வீழ்ந்து,
சேர்ந்து
தன் இயல்பை அதனோடு கலப்பதுபோல்
நானும் உனைச் சார்ந்து நிற்பேன்
நீ எங்கே இருந்திடினும்
நீ யாராய் இருந்திடினும்
நினது நெஞ்சில்
ஓயாமல் அன்பருவி ஊற்றெடுக்குமாயில்,
அதில் ஒற்றுப் பட்டுப் போய்
அழிந்து போயிடினும்
வெகுவாக நான் அதனைப்
போற்றல் செய்வேன்
ஆயினும் நீ எங்குள்ளாய்?
அன்பே, நீ
எங்கேனும் உள்ளாய் தானா?

எங்கே என் இதயமலர்
விரிகின்ற நீரருவி இருக்குமோ,
ஆ!
எங்கே என் தனிஇயல்பு
செழிப்படையும் சமவெளிகள் உண்டோ
அன்பே,
அங்கேதான் நீ இருப்பாய்,
அவை நீதான்.
அவ்விடத்தை அண்மிச் சென்று
தங்கி மகிழ்வெய்தும் ஒரு தாபத்தை
என்மனதுள் தளிர்க்கச் செய்வேன்.
நாம் ஒருநாள் சந்தித்தல் கூடுமெனில்
அத்தினத்தில்
நமது பீடம் தாம் பெரிது
எனும் சிறிய
சர்ச்சைகளுக்கப்பாலே
தாவிச் செல்வோம்.
ஆம், எமது சிறு உணர்வுக்
கப்பாலும் அப்பாலும் ஆகி
எங்கள்
பூமியிலே ஓர் புதிய
பூம்பொழிலைக் கண்டு
அதனுட் போய் உட்கார்வோம்.

நீ என்றன் இன்னிசையை
வெளிப்படுத்தும் குழலாக இருப்பாய்
நெஞ்சின் இசைப் பிரவாகம்
அங்கெழுந்து பரவி
நமைச் சுகத்துள் ஆழ்த்தும்
ஆயினும் நீ எங்குள்ளாய்?
அன்பே,
உன் கழிகூர்ந்த வரவுக்காக
தேய்ந்தழிந்து போகாமல்
என் இயல்பைக் காப்பாற்றச்
சித்தம் கொள்வேன்.

02-05-1968

 

13. இனி நாங்கள் பொழுதெல்லாம் மகிழ்ச்சி கொள்வோம்

இன்று இந்தமாலைப் பொழுதில்
அன்பே
எனது தனித் துயர்களினை எடுத்துக்கூறி
உன்னுடைய மனநிலையைக் குழப்பிவிட்டேன்.
ஓ, என்னை மன்னிப்பாய்,
இன்றைப் போல
முன்னம் ஒருபோதும்
நான் துயர்களாலே மூழ்கடிக்கப் படவில்லை.
அதனாற்போலும்
என்னை அறியாமல் அவை வெளியாகிற்று.
இதயம் அதை மெதுவாக வெளியேற்றிற்று.

கருநீலக் கடல் அலைகள் தவழ்ந்து வந்து
கடைசியிலே வெண்ணுரையை
நாம் உட்கார்ந்த
கரையினிலே வீசுகையில்
துமியின் சாரல்
காற்றோடு முகத்தினிலே
சிலிர்ப் பூட்டிற்று
அருகினிலே நீ இருந்தாய்
அமைதியாக, அத்ததையும் கேட்டபடி.
கிளிஞ்சல் ஒன்றை
விரலாலே சுண்டிவிட்டாய்
அதுபோய்ப் பட்டு
விரைவாக ஓடியதோர் சிறிய நண்டு.

தூரத்தே சிறுவரெல்லாம்
அலைகளாடு துள்ளிவிளையாடுகிறார்
அங்கே
தோணி ஓரத்தில்
யார்யாரோ உட்கார்ந்துள்ளார்
ஒருமனிதன் கரைநெடுக ஓடிச்சென்றான்
ஈரமணல் மீதினில்
கால் புதையுமாறு
இரண்டொருவர் நடந்து சென்றார்
நான் என் நெஞ்சின்
பாரங்கள் அத்தனையும்
உனக்கு முன்னே
மணல்மீது படுத்தபடி பரப்பலானேன்.

நீ மட்டும் இவ்வுலகாய் இருப்பாயானால்
நிழல்வீசும் பாதையிலே நடப்பதைப்போல்
சாமட்டும் துயரத்தைக் காணாவாறு
சந்தோசமாய்
நானும் வாழ்தல் கூடும்
நீ மட்டும் இல்லையடி உலகம்
இங்கே, நிதமும்
நான் சிந்திக்கும் மனித மூச்சால்
பூமொட்டு விரிந்ததுபோல் பூத்த நெஞ்சப்
பூவினிலே புழுதிபடும் கதை சொன்னேன் நான்.

இளமாலைப் பொழுதழிந்து
மெல்ல மெல்ல
இருள்வந்து கவிகையிலே
உன்முகத்தில்
பழுவுற்ற இதயத்தின் சுமையைக் கண்டேன்.
பளபளக்கும் விழிகளின் கீழ் இமையில்
சற்றே தளம்புகின்ற விழி நீரைக் கண்டேன்.
வானில்
தாரகைகள் ஒவ்வொன்றால் ஒளிரும் போதில்
'அழகாக இருக்கிறதிம் மாலை' என்பாய்
ஆனால் நீ இப்போதா
மௌனியானாய்.

இன்று இந்த இளமாலைப் பொழுதில்
அன்பே,
எனது தனித் துயர்களினை எடுத்துக்கூறி
உன்னுடைய மனநிலையைக் குழப்பிவிட்டேன்.
உண்மையில் நான் பெருமூடன்
உனது நெஞ்சின்
இன்னிசையைக் கேட்பதற்குத் தவறி
உன்றன் இசையினையும்
அபசுரமாய் மாற்றிவிட்டேன்
இன்று இந்த இனிமை தவழ் பொழுதை
நீயும் இழப்பதற்குச் செற்தேன்
நான் பெரியமூடன்.

உன்னுடைய விழிகளில்
நீர் துளிர்க்குமாறு
ஒரு பொழுதும் இனித்துயரைக் கூறேன்
அன்பே,
உன்னுடைய இதயத்தில்
துயரின் நிழல்
ஒருசிறிதும் எனில் இருந்து படக்கூடாது.
என்னருகே அமர்ந்திடுக
உனது நெஞ்சின்
இன்னிசையைப் பரப்பிடுக
நான் கேட்கின்றேன்
என்னுடைய துயரெல்லாம்
எனக்கே சொந்தம்
இனி நாங்கள்
பொழுதெல்லாம் மகிழ்ச்சி கொள்வோம்.

15-10-1968

 

14. தூரத்து மின்னல்

பூவாணம் போல்
என்னுள் புத்துணர்வு சீறியது
ஓர்கணம்தான்
மீண்டும் உன்புறத்தில் பார்த்தேன் நான்.

தார்வீதியில் எழும்பும்
சந்தடியைப் பார்த்தபடி
நின்றிருந்தாய்
சேற்றின் சிறு நீக்கலுக்குள்.

சைக்கிளிலே
என்றும்போல் சென்ற எனது விழிகளிலே
உன் தோற்றம் தற்செயலாய்
மோதி உலுப்பியதும்
பூவாணம்போல் என்னுள்
புத்துணர்வு சீறியது.

நீதானா முன்பும் இங்கு
நிற்கும் இளம் சிறுமி?
ஏதோ ஓர் நாட்காலை
வெய்யில் எரிக்கையில்
இக் கேற்றடியில்
கையில் கிளிசெறியாக் கம்பெடுத்து
ஓர் ஆட்டைத் துரத்திய
அச்சிறுமி நீதானா?

நீதான் அவள்
அந்த நீண்ட கருவிழிகள்
ஆராரமாக அதை எனக்குக் கூறின.
ஆம்,
அப்போது நீயோர் அரும்பு.
அடிக்கடி நான்
இப்பக்கம் சைக்களிலே
ஏறி வருகையில்
நீ
நிற்பதனைக் கண்டுள்ளேன்.
நேரம் பொழுதின்றி
எப்போதும் இந்த இடத்தில்
இரைச்சலுடன்
வாகனங்கள் போகையில்
நீ வந்து நிற்கக் கண்டுள்ளேன்.

ஆனாலும் பின்னர் உனை
அவ்விடத்தில் காணவில்லை.
எப்போதும் நிற்கும் இடத்தில்
பலநாளாய்
இப்பக்கம் சைக்கிளில்
நான் ஏறி வருகையில்
நீ நில்லா திருந்த
நினைவே எனக்கில்லை.
எனக்கும் பலநூறு
தொல்லைகள்தான்.
இன்றோ,
தொலைவில் திடீரென்றோர்
மின்னல் அடித்ததுபோல்
உன்விழியைக் கண்டேன் நான்.

நீதான் அவள்
அந்த நீண்ட கருவிழிகள்
ஆதாரமாக அதை எனக்குக் கூறின.
கேற்றடியில்
கையில் கிளிசெறியாக் கம்பெடுத்து
ஓர் ஆட்டைத் துரத்திய
அச்சிறுமி நீயேதான்.

இப்போது நீயோர்
இளைய புதியமலர்.

முக்காட்டு நெற்றி
இக் கேற்றின் சிறுமுடுக்கால்
எப்போ தெனினும்
எனக்கு இனித் தெரியும்.

1-12-1968

 

15. அழியா நிழல்கள்

உள்ளத்தின் உள்ளும்
உடலின் அணுவெங்கும்
கொள்ளப்படாது
குவிந்து கிடந்த
இளமைத் தருவின்
இளந்தளிர்கள் எத்தைனையோ....?

வழமைப்படியே
வளர்ந்து மலர்ந்த
உணர்வு மலரில்
உதிர்ந்தவைதான் எத்தனையோ

அத்தனையும் எங்கோ
அழிந்து மறைந்தாலும்
புத்தம் புதிதாக
மென்மேலும் பூத்தனவே
பூத்தவைகள் மீண்டும்
புதர் அடியில் வீழ்ந்தனவே...

பூத்த மலரின் புதுமை அழியாது
கொள்ளக் கொடுக்க,
குளிர்ந்து சிவந்தகரம்
அள்ளி எடுக்கும், ஓர்
அந்திப் பொழுதின்றி
வாழ்வே வெறிதாய் வளர்ந்து சுழிகையில்
நீ
தாள் அகற்றி வைத்தாய்...
தனித்துக் கதவடியில்
காத்திருந்தாய்:
உன்றன் கறுத்த விழிகளிலே
பூத்த மலரின்
புதுமை மணத்ததடி...

சந்திப்பு நேரல் சகஜம்
எனில் நம்முடைய
பிந்திக் கிடைத்த பிணைப்பும் அதுபோன்றா?

அந்திப் பொழுதின் அழகில்
பலநாள், உன்
உள்ளத்தின் உள்ளும் உடலின்
அணுவெங்கும்
கொள்ளப்படாது குவிந்து கிடந்த
இளமைத் தருவின்
இளந்தளிர்கள் எத்தனையோ?
வழமைப் படியே வளர்ந்து மலர்ந்த
உணர்வு மலரில்
உதிர்ந்தவைதான் எத்தனையோ?

அத்தனையும் சேர்த்து
நீ அர்ப்பணிக்கக் காத்திருந்தாய்
எத்தனையோ நாட்கள்
எவர் வரவுக்காகவோ,
என்னைப்போல் நீயும்
இருந்தாய்,
எதிர்பார்த்து!

ஒன்றைப் போல் ஏங்கி
உருகும் இரண்டுளங்கள்
ஒன்றுவதில் உள்ள
இயல்பை உணர்வித்தாய்,
ஒன்றைப் போல் ஏங்கி
உருகும் இரண்டுளங்கள்
ஒன்றுவதில் உள்ள
உகப்பை உணர்வித்தாய்.

நீ உன் மலரை,
நினைவின் இனிமைகளை
தேன் தரவிவைத்த
சிவந்த இதழ்களினால்
அன்பளிப்புச் செய்தாய்

அகத்தின் உணர்வுகளைக்
கவ்வி எடுத்தாய்
கனிந்த இதழ்களினால்...

ஒவ்வோர் கணமும்
வளர்ந்து மலர்கையில்
உன் நெஞ்சக் கனிகள்
என் நெஞ்சில் அழுந்தின
அக் கொஞ்சப் பொழுதோ
நினைவில் குளிர்கிறதே!

நீதிறந்து வைத்த
கதவின் நிலைப்படியுள்
நான் நுழைந்த போது
நனைந்த உதடுகளை
இன்னும் அழுத்தித் துடையா திருக்கின்றேன்
இன்றும் உனது இதழின் மிருதுவினை
என்றன் உதட்டில்
சிறையிட்டு வைத்துள்ளேன்.

சந்திப்பு நேரல் சகஜம்
எனில், அவ்வாறே
சந்தித்த பின்னர்
தனித்துப் பிரிவதுவும்

என்றன் கனவில்
எனது நினைவுகளில்
நீ வந்து போதல் நிகழும்.
அதுபோல
உன்றன் கனவில்
உனது நினைவுகளில்
நான் வந்து போதல்
சிலநாள் நடைபெறலாம்...

நீயும் நினைவும்
நினைவின் சுமைகளும்
சாயும் பொழுதில்
சரியும் நிழல்போல
நீண்டு வளர்கையில்
என் நெஞ்சம் கனக்கிறது...

13-12-1968

 

16. நிலவு பொழிந்த ஓர் இரவு வேளையில்

நிலவு பொழிந்த இரவு வேளையில்
கொல்லையில் சேவல் கூவிக்கேட்டது.
அடுத்த வீட்டிலும்
அதற்கப் பாலும்
கொல்லையில் இருந்த சேவல் கூவின.

விறாந்தையில் வந்தேன்
மேனி குளிர்ந்தது.
நிலவு கூரை முகட்டிலே நின்றது
இலைகள் மெதுவாய் சலசலத்தன
நிலவு விழுத்திய நிழல்கள் அசைந்தன.

சிறுநீர் பெய்து திரும்பி வருகையில்
கமுகில் படர்ந்த வெற்றிளைத் தளிர்கள்
ஒழுகியநிலவில் ஒளிரக் கண்டேன்
கிணற்றுக் கொட்டில் சிந்திய நீரில்
ஒளித்துளி பட்டுப் பொழுபொழுத்தது.

இலைகள் மீண்டும் சலசலத்தன
நிலவு விழுத்திய நிழல்கள் அசைந்தன
துவாயினால் போர்த்தித்
துயிலச் சென்றேன்
இருண்ட அறையில் கூரையின் இடுக்கால்
நிலவு கசிந்தது
நிழல் விழுத்தியது
கொல்லையில் மீண்டும் சேவல் கூவியது
அடுத்த வீட்டிலும்
அதற்கப்பாலும்
ஒவ்வொன்றாகக் கூவி அமர்ந்தன.

களவிலே கருக்கொண்ட பெண்யாரும்
இருந்தால் இரவில் சேவல் கூவுமாம்
நிலவு பொழிந்த இரவில் ஒருநாள்
சேவல் கூவுகையில், யாரோ சொன்னதை
நினைக்கையில்
மெதுவாய்ச் சிரிப்பு வந்தது.
தெரிந்த பெண்களில்
நினைவு சென்றது.

இருண்ட அறையில்
கதவின் இடுக்கால்
நிலவு கசிந்தது
நித்திரை யானேன்.

4-12-1969.

 

17. காலி வீதியில்

காலி வீதியில் அவளைக்கண்டேன்
ஐந்து மனிக்குக்
கந்தோர் விட்டதும்
கார்களும்
பஸ்களும்
இரைந்து கலந்த நெரிசலில்
மனிதர் நெளிந்து செல்லும்
காலி வீதியில் அவளைக் கண்டேன்.

சிலும்பிய கூந்தலைத் தடவியவாறு
பஸ்நிறுத்தத்தில்
அவ்வஞ்சி நின்றதைக் கண்டேன்.
அவளைக் கடந்து செல்கையில்
மீண்டும் பார்த்தேன்
`very nice girl' என
மனம் முணுமுணுத்தது.
வழியில் நடந்தேன்.

அவசரகாரிய மாகச் செல்கையில்
நினைவும் அதிலே நினைத்து நிற்கையில்
காலி வீதியில் கண்டேன் அவளை

கார்களும்
பஸ்களும்
இரைந்து கலந்த
நெரிசலில்
நானும் நெரிந்துநடந்தேன்

7-2-1969

 

18. நான் வளர்ந்த கருப்பை

நான்வளர்ந்த கருப்பையை
நான் இழந்து போனேன்காண்...
நான் வளர்ந்த கருப்பை, ஆம்
நான் வளர்ந்த கருப்பையை
நான் இழந்து போனேன்காண்...

என்னுடைய வித்து
விழுந்து முளைத்த இடம்
என்னுடைய வித்து
விழுந்து வளர்ந்த இடம்
என்னுடைய வித்து
வளர்ந்து மலர்ந்த இடம்
அந்த இடத்தை
அடியோடு நான் இழந்தேன்...
அந்த இடத்தை
அடியோடு நான் இழந்தேன்...

வாழ்வு மலர் ஒன்றை
மரணம் பொசுக்கியது
வாழ்வின் மலர்,
தன் மணத்தை வெளியெங்கும்
வீசி நிலைத்திருக்க விட்டு விட்டுச்
சாவென்னும்
தீயில் குளித்துத்
திடீரென் றழிந்ததுகாண்.
ஆமாம்
மஹாகவி,
என் அன்பா இறந்து விட்டாய்

நீ இறக்கு முன்னர்
இரண்டுமணி முன்புவரை
உன்னோடு நான் இருந்தேன்
உன் அருகே நின்றிருந்தேன்...
கட்டிலில் நீண்டு கிடந்தாய்
நரைகலந்த
நாடி வளர்ந்து
தளர்ந்து
களைத்திருந்தாய்
வேடிக்கைப் பேச்சும்
சிரிப்பும்
விடைபெற்றுப் போய்விட்டன
உன்னிடம் இருந்து.

நோய்ப்பட்ட
மார்வு வலிக்குதென்றாய்
வைத்தியரைக் கூட்டிவந்தேன்
பார்த்தார் அவர்,
ஊசி மருந்தேற்றச்சொன்னார்
பின்

ஆட்கள் நிற்றல் நல்லதல்ல
என்றே அவர் நடந்தார்...
ஆட்கள் நிற்றல் நல்லதல்ல...
ஆகையினால் கிட்டவந்து
'போய்வருகிறேன்' என்றேன்
போய்வாரும் என்றொரு சொல்
சொல்வதற்கும் வார்த்தைத் துணைவியின்றி
மல்லார்ந்து
கட்டிலில் நீண்டு கிடந்தே
என் கைபற்றிக்
கிட்ட இழுத்தெடுத்தாய்
கிட்ட இழுத் தெடுத்து
நெஞ்சில் கிடத்தினாய்...
நெஞ்சில் கிடத்துகையில்
முட்டிவரும் கண்ணீரைக்
கண் இமைக்குள் மூடிவிட்டு
மெல்லத் தலையசைத்துப்
போக விடை கொடுத்தாய்
போக விடை கொடுத்தாய்
நாம் பிரிந்து போனோம் காண்...

மற்ற நாள் வந்தேன்
வறிதாய்க் கடந்த அந்தக்
கட்டிலைத்தான் கண்டேன், உன்
கட்டிலைத்தான் கண்டேன் காண்...

கட்டிலில் நீண்டு கடந்தே
என் கைபற்றிக்
கிட்ட இழுத்தெடுத்து
நெஞ்சில் கிடத்துகையில்
முட்டிவரும் கண்ணீரைக்
கண் இமைக்குள் மூடிவிட்டு
மெல்லத் தலையசைத்துப்
போக விடை கொடுத்த
நீ இறந்து போனாயாம்...

'நீ இறந்து போனாய்
நெருக் கென்ற தென்நெஞ்சு'

புள்ளியளவில் ஒரு பூச்சியினைத்
தற்செயலாய்ச்
சாகடித்து விட்டுத் தவித்துக் கலங்கிய
நீ இறந்து போனாய்
என் நெஞ்சம் பதறியது...

பெட்டியிள் நீண்டு கிடந்து
துயில்வதைத்தான்
மற்றநாட் கண்டேன்.
மழித்த முகத்தோடு
நித்திரைதான் என்று
நினைக்கும்படி கிடந்தாய்

நித்திரை அல்ல,
அது நித்திரையே அல்ல
இனி எத்தினமும்
மீண்டும்
எழுந்திருக்க மாட்டாத
நீண்ட மரணம்
அது நீண்ட மரணம் காண்...
அந்த மரணத்துள்
ஆழ்ந்து கிடந்தஉனைப்
பார்த்படி நின்றேன்
நான் பார்த்தபடி நின்றேன் காண்...

நீண்டு கிடந்தபடி
நீ துயின்ற பெட்டியினை
வண்டியிலே ஏற்றுதற்கு
நானும் இரு கைகொடுத்தேன்

கை கொடுத்து விட்டுக்
கருந்தார்ப் பெருந்தெருவைப்
பார்த்தபடி நின்றேன்
நான் பார்த்தபடி நின்றேன் காண்...

வீட்டிலே சுற்றத்தார்
வீழ்ந்து புலம்பியதை
நீட்டிக் கிடந்தபடி
நீ துயின்ற பெட்டியினை

சுண்ணம் இடித்த மகன்
சோர்ந்து விழுந்ததனை
கண்ணா என உம்
மனைவி கதறியதை
நண்பர் உனைப்பற்றி
நல்லுரைகள் கூறியதை
'புள்ளி அளவில் ஒரு பூச்சியினை'
ஓதியதை
பார்த்தபடி நின்றேன்
நான் பார்த்தபடி நின்றேன் காண்...

பாடையைத் தோளில்
பலபேர் சுமந்ததனைப்
பாடையின் பின்னால்
பலபேர் நடந்ததனை
ஓங்கி உயர்ந்த
பனைகள் உசும்பியதை
பார்த்தபடி சென்றேன்
நான் பார்த்தபடி சென்றேன் காண்...

கட்டை அடுக்கிக்
கறுத்து நெடுத்த உன்
கட்டையை அங்கேற்றி
வைத்ததனைக் கண்டேன் நான்...

கட்டைகளை மேலும்
கறுத்து நெடுத்த உடல்
மீதினில் ஏற்றி
மறைத்ததையும் கண்டேன் நான்...

கோதி ஒதுக்க ஒதுக்கக்
குலைந்து விழும்
கட்டற்ற உன் கேசம்
காற்றில் உலைந்து
கலைந்து பறந்ததனைக்
கட்டைகளின் ஊடே
சில கணங்கள் கண்டேன் நான்.

அவ்வளவே,
அவ்வளவே,
அந்த நெடும்பனைகள்
ஓங்கி உயர்ந்தே
உலையும் சுடலையிடை
நீங்கா நினைவுகளை
நெஞ்சில் சுமந்திருந்து
மாண்டோரின் சாம்பல்
படிந்த அம் மேட்டினிலே
மீண்டும் ஒரு மனிதன்...

மேன்மைக் குணங்களின்
பாண்டமாய் வாழ்ந்தோன்
பலரைத் தன் அன்பினால்
கட்டி இணைக்கும்
கனிந்த இருதயத்தைப்
பெற்றோன்,
மனித இனம் பெற்ற பேறாகத்
தற்கால வாழ்வைத்
தனது கவிதைகளில்
சித்தரித்து வைத்த
சிறந்த பெருங்கவிஞன்

இந்த நூற்றாண்டின்
இடைநடுவில் வாழ்ந்திருந்த
மாகவி,

ஆம், நீ
மரணப் பெருந்தீயில்
சாம்பராய் விட்டாய்.
உன்னுடைய சாம்பல்
அச்சாம்பல் திடலில்
தனித்துக் தெரியவில்லை...

சாம்பலிலா உண்டு தனித்தன்மை?
ஓ அந்தச்
சாம்பலிலா உண்டு
தனித்தன்மை அன்பனே?

எல்லாம் முடிந்தன
எல்லாம் முடிந்தன காண்...
எல்லாம் முடிந்த பிறகு
தடதடத்து
ஓடுகின்ற வண்டியிலே
உட்கார்ந் திருக்கையில்
வீடும் வெளியும்
விரைந்து கழிகையில்
பத்தாண்டுகாலப் பசிய நி€னைவுகள்
பொத்துக் கிளம்பும்
தனிமைப் பொழுதில்

நீ இல்லா திருக்கும்
இழப்பின் கனதி,
என் நெஞ்சில் நிறைந்தது
என் நெஞ்சில் நிறைத்தது காண்...

ஓங்கி உயர்ந்த பனைகளே,
பனைகளிடைத்
தூங்கிக் கிடந்து

துணுக்குற்று வீசுகிற காற்றே,
அக்காற்றில் வளர்ந்தெழும்பும்
வெந்தீயே,
வெந்தீயில் வெந்து
பின் காற்றில் விசுறுண்டு
செல்லுகின்ற சாம்பல்த் துகள்களே
உங்களைப்போல்
நானும் இருந்திருந்தால்...

நான் ஓர் மனிதன்
நரம்பும் உணர்ச்சிகளம்
உள்ள ஒருவன்
உறவின் நெருக்கத்தில்
உள்ளம் குழைந்தும்
பிரிவு உலுப்புகையில்
உள்ளம் உடைந்து
கலங்கிக் கசங்கியும்
வாழ்ந்து மடியும் மனிதன்

நீங்கா நினைவில்
நினைவின் நிழல்களில்
சஞ்சரிக்கும் போது
தவித்துக் கலங்குகின்ற
வேளை பல உள்ள
வாழ்வை உடையவன்

ஆகையினால்,
என்னை அரும்புகின்ற காலத்தே
கண்டு பிடித்தவன்
காணாமற் போனதனால்
என்னை மதித்த
இதயம் மறைந்ததனால்
என்னுடைய ஊக்கிகளில்
ஒன்றை இழந்ததனால்
இன்று கலங்கிக் கசிகின்றேன்
இக்கசிவை
ஆற்றுதற்காக
அவனின் நினைவுகளின்
ஊற்றுக்கண் மீதில்
உட்கார்ந்து கிண்டுகின்றேன்...

பத்தாண்டு காலம்
படிந்த நினைவுகளை
மீண்டும் இழுந்துவந்து
மீண்டும் அதில் வாழ்கின்றேன்.

24-06-1971.

 

19. நீலாவணன் நினைவாக

உன்னிடம் வருகையில்
நான் ஒரு சிறுவன்
கண் விடுக்காத பூனைக் குட்டிபோல்
உலகம் அறியா ஒரு பாலகனாய்
உன்னிடம் வந்தேன்.

நீ உன் கவிதை மாளிகை வாசலை
எனது கண் எதிர் திறந்து காட்டினாய்
நீலாவணையின் கடற்கரை மணலில்
நீ உன் கவிதை வீணையை மீட்டினாய்...

ஓ, என் கவிஞனே,
உனது கவிதை மாளிகை வாசலும்
உனது கவிதை வீணையின் நாதமும்
எனது நெஞ்சினை அதிர வைத்தன.
எனது நெஞ்சின் எங்கோ மூலையில்
மூடுண்டிருந்தத கவிதையின் ஊற்று
அந்த அதிர்வினால் திறந்து கொண்டது.
உனது இசையில், என் கவிதையின் ஆன்மா
உயிர்பெற் றெழுந்தது.

ஓ, என் கவிஞனே,
நீயே என்னைக் கவிஞனும் ஆக்கினாய்
நீயே என்னை உயிர்பெறச் செய்தாய்
உன்கவி வனத்தில்
இந்த இளங்குயில்
நீண்ட காலமாய்ப் பாடித்திரிந்தது.

காலம் நமது கவிதை வானிலே
இருண்ட முகில்களைக் கொண்டுவந்தது
காலம் நமது உறவின் பரிதியை
இருண்ட முகில்களால் மூடி மறைத்தது.

ஓ, என் கவிஞனே,
நமது உறவின் பரிதியை மறைத்த
கருமுகில் கும்பலைச் சிதறி அடிக்க
நீ ஏன் உனது சூறாவளியினை
அனுப்பவே இல்லை.
நீயோ உனது சூறாவளியினை
அனுப்பவே இல்லையே.

நமது பாதை பிரிந்தது தோழா
நானோ புதிய செஞ்சூரியனின்
திசையினை நோக்கிப் பயணம் தொடங்கினேன்
நீயும்ஒருநாள் என்னுடன் அந்தத்
திசையினில் வருவாய் என்றும் நம்பினேன்.

ஆ! என் கவிஞனே,
அனைத்தும் முடிந்தது.
நீயோ உனது நெடும் பயணத்தை
எதிர்பாராத வகையிலே இன்று
முடித்துக் கொண்டதாய் தந்தி கிடைத்தது.
துடித்துக் கொண்டதென் நெஞ்சு.

தொலைவிலே, நீலாவணையின்
கடற்கரைக் காற்றில்
ஓயாத உன்கவிதை
ஒலிப்பதனைக் கேட்பேன் நான்.
'மண்ணிடை இரவுக்
கன்னியின் ஆட்சி
இன்னும் தேயவில்லை இளம்
தென்னையின் ஓலைகள்
பண்ணிய இன்பப்
பாட்டுகள் ஓயவில்லை...'

ஓயாத உன்இதயம் ஓய்ந்ததுவாம்
ஆனாலும்
ஓயாத உன்கவிதை
ஒலிப்பதினைக் கேட்பேன் நான்.

உனது சடலம் சிதையிலே எரிவதை
அன்றேல் அதுஓர் குழியுள் புதைவதைக்
காண்பதற்காக நான் வரவில்லை...
இதுவே உனக்குஎன் இறுதி அஞ்சலி.

எனது துயரையும், பெருமூச்சினையும்
உனது நினைவின் சமாதியின் மீது
சமர்ப்பணம் செய்கிறேன்
சாந்திகொள் அன்பனே!

12-01-1975

 

20. தனிமை இரவு

வெளியிலே காற்று மெல்லென அசையும்
மரங்களில் இலைகள் சலசலத் தொலிக்கும்
இருண்ட வானிலே வெள்ளிகள் மினுங்கும்.
அமைதி...
எங்கும் அமைதியே துயிலும்
இந்த இரவில்
உனது நினைவுகள் என்னுட் கிளரும்...

சன்னலால் நுழையும்
மென்சிறு காற்று
உனது மூச்சாய் என்னை உரசும்
என்றோ நுகர்ந்த
உன் கூந்தலின் நறுமணம்
இக்கணம் எனது நாசியை நனைக்கும்
தாமரை முகையின் நுனியிலே எனது
நாவு படிந்த ஈரம் கசியும்

நினைவுகள் சுமந்த
தனிமை இரவோ
நீண்டு... நீண்டு...
நீண்டு .... கழியும்.

29-6-1976.

 

21. ஒரு தோழனின் மரணம்

அழகிய கனவு
கலைந்து கரைந்தது
காலையின் அந்தத் துயரினை உணர்ந்தேன்
இளகிய உணர்வுகள்
உறைந்து குளிர்ந்தன
வாழ்க்கை ஒன்று முடிந்ததை அறிந்தேன்.

சிலசில நாட்களில்
சிலசில நிமிடம்
கதைபரிமாறித் தோழமை பூண்ட
நிகழ்வுகள்...
'பாபுஜி' எதிரே
கூளா நிழலில்
புன்னகை சிந்திய பொழுதுகள்...
அன்பின் குளிர்ச்சியைக்
கைகளால் உணர்த்தும்
உனது தழுவல்கள்...
என்றுமே இவைகள்
நிரும்பவும் நிகழா.
எனது பாதையில் எதிர்ப்படா வண்ணம்
மரணம் உன்னை வழிமறித்தது.

இளகிய உணர்வுகள்
உறைந்து குளிர்ந்தன
உனது வாழ்க்கை
முடிந்ததை அறிந்தேன்

அழகிய கனவு கலைந்து கரைந்தது
காலையில் அந்தத் துயரினை உணர்ந்தேன்.
ஆயினும் என்ன
ஆயினும் என்ன
தோழமை உனது
பெயரிலே உளது

எனது பாதையில் எதிர்ப்படா வண்ணம்
மரணம் உன்னை வழிமறித்தாலும்
எனது பாதையில் எதிர்ப்படும் வண்ணம்
நினைவுகள் உன்னை
உயிர்ப்படை விக்குமே.

15-4-1977

 

22. வாழ்வும் மரணமும்

கமலாதேவியின் மரண ஊர்வலத்தில்
உமது காரிலே நானும் இருந்தேன்
மாதம் ஒன்றுதான் கழிந்தது;
மறுநாள்
உமது நீண்ட மரண ஊர்வலத்தில்
கால்நடையாக நானும் தொடர்ந்தேன்.

அதற்கு மூன்றே தினங்களில் முன்புதான்
திருமண வீட்டில் மங்கள இசையில்
அருகருகாக நாங்கள் இருந்தோம்
அதற்கு மூன்றே தினங்களின் பின்புதான்
அழுகுரல் இடையே, பேழையுள் உமது
மீளாத் துயிலின் கோலம் கண்டேன.

மரங்கள் அடர்ந்த கோம்பையன் திடலில்
உமது சாம்பலும் புகைந்து தணிந்தது
வாழ்க்கை இதுவா?
மரணமும் இதுவா?

வாழ்க்கை எத்தனை சுமையாய் இருப்பினும்
வாழ்தல் இனியதே.
மரணம் எத்தனை இலகுவாய் இருப்பினும்
மரணம் கொடியதே.

அதனினும் கொடியது உமது மரணம்
மலைசரிந்தது போன்றதுன் மரணம்
ஆழ்ந்த அமைதியில்
இடியின் முழக்கமாய்த்
திடீரென வந்தது.

வாழ்வின் நம்பிக்கை தளர்ந்தது ஒருகணம்
இருத்தலின் அடித்தளம் குலுங்கி அசைந்தது
தூக்கமும் விழிப்பாய்
நினைவுச் சுழல்களாய்க்
கரைந்து கழிந்தது.

நாட்கள் நகரும்
நாங்களும் எமது
போக்கிலே தொடர்ந்து
புதியன முயல்வோம்
வாழ்க்கை இதுதான்
மரணமும் இதுதான்.

சோகம் இடைக்கிடை சுடும் எம்நெஞ்சை
துடிக்கும் எம் இதயம்
மரணம் வாழ்வினை வழிமறித்தாலும்
நினைவில் உம்வாழ்வு நெடுகிலும் தொடரும்...

20-06-1979..
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home