"யாமறிந்த புலவரிலே
கம்பனைப் போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப் போல்
யாங்கணமே பிறந்த தில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை":
என்று மகாகவி பாரதியார் தமிழ் நாட்டில் தோன்றிய மாபெரும் புலவர்களான
கம்பர்,
வள்ளுவர்,
இளங்கோ
மூவரையும் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.
"கர்ணனொடு கொடை போயிற்று, உயர்கம்ப நாடானுடன் கவிதை போயிற்று" என்ற
கூற்று கல்வியில் பெரிய கம்பரின் கவிதா விலாசத்திற்குச் சான்று பகரும்.
வான் புகழ் வள்ளுவரின் சிந்தனை வளத்திற்கு காலத்தை வென்று நிற்கும்
அவரின் திருக்குறள் என்ற பொதுமறை கட்டியங் கூறும்.
இளங்கோ அடிகளின் முத்தமிழ்ப் புலமைக்கு அவர் இயற்றிய முத்தமிழ்க்
காப்பியமான சிலப்பதிகாரம் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
கம்பன், வள்ளுவன், இளங்கோ இவர்களோடு வைத்துப் போற்றக் கூடிய இன்னொரு
புலவனும் தமிழில் உண்டு. அவர்தான் மகா கவி பாரதியார். அவரது
வார்த்தையில் கூறுவதென்றால்
"ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல் வந்த ஓர் மாமணி"
மகாகவி பாரதியார். இப் பூமிப்பந்தில் முப்பத்தொன்பது அகவை மட்டும்
வாழ்ந்து மறைந்த மகாகவி பாரதி அடுத்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு தனது
முத்திரையைத் தமிழ்க் கவிதை இலக்கியத்தில் பதித்துவிட்டு மறைந்த
புலவனாவான்.
வேறு யாரிடமும் காணப்படாத கவிதா சக்தி தன்னிடம் இருப்பதை உணர்ந்து
கொண்டு கவிதை படைத்தவர் பாரதியார். இல்லாவிட்டால்-
"புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசை யென்னாற் கழிந்த தன்றே!"
மார்தட்டி அவர் சொல்லியிருக்க முடியாது. பாரதியாரின் வாக்கு " உண்மை
வெறும் புகழ்ச்சி இல்லை" என்பதற்கு அவரது கவிதைகள் அனைத்தும் சாட்சியாக
விளங்குகின்றன.
பாரதியாரைப் பல கோணத்தில் இருந்து பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள்.
பாரதியார்-
"ஆடுவோமே
பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்"
என்று பாடிய இந்தியத் தேசியக் கவி.
"சுத்த அறிவே சிவமென்று கூறும்
சுருதிகள் கேளீரோ -பல
பித்த மதங்களி லேதடுமாறிப்
பெருமை யழிவீரோ?"
என்று கேட்ட வேதாந்தி.
"முப்பது கோடி சனங்களின் சங்கம்,
முழுமைக்கும் பொதுவுடமை"
என்று உரத்து முழங்கிய பொதுவுடமைவாதி.
"நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்"
என்று பெண் விடுதலைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் குரல் கொடுத்த
சமத்துவவாதி.
"சென்றதினி மீளாது மூடரே, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா!"
என்று இடித்து அறிவுரை சொன்ன சீர்திருத்தவாதி.
"பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!
புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்
................................................................................
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே"
என்று சமயப் பொதுமை பேசிய பொதுமைவாதி.
இவ்வாறெல்லாம் பாரதியின் பல பக்கங்கள் காட்டப்பட்டுள்ளன. அப்படி அவரைக்
காட்டியவர்கள் அவரைப் பாராட்டியிருக்கிறார்கள். போற்றியிருக்கிறார்கள்.
உச்சிமேல் வைத்துக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆனால் இவை யாவற்றிற்கும்
மேலான ஒரு பாரதி இருக்கின்றார்.
அவர்தான் தமிழ்த் தேசியத்திற்கு அடிக்கல் நாட்டிய பாரதி. தமிழ்த்
தாய்க்;கு வாழ்த்துப் பாடிய அமர கவி. துரதிட்டவிதமாக பாரதியாரின்
மற்றப் பக்கங்கள் அறிமுகமான அளவிற்கு இந்த தமிழ்தேசியக் கவி என்ற
பக்கம் அறிமுகமாகாது போய்விட்டது.
பாரதிக்கு முன்னர் எத்தனையோ புலவர்களும், கவிஞர்களும், கவியரசர்களும்
வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். எனக்கு முன்னர் பல சித்தர்கள்
இருந்தார்கள் நானும் ஒருவன் வந்தேனப்பா என்று அவரே தன்னைப்பற்றிப் பாடி
இருக்கிறார்.
"இருந்தமிழே உன்னால் இருந்தேன்
உம்பர் விருந்தமுதம் என்றாலும் வேண்டேன்"
என்று இறுமாப்போடு தமிழைக் காதலித்த புலவர் இருந்திருக்கிறார்கள்.
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே"
என்று பொன் ஆசை, மண் ஆசை, பெண் ஆசை இவற்றைத் துறந்த திருமூலர் என்ற
சித்தர்கூட தனது தமிழ் ஆசையை மட்டும் விட முடியாது இப்படிப்
பாடிவைத்துப் போயிருக்கிறார். திருமூலர்தான் திருமந்திரத்தை
இயற்றியவர். எனவே என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத்
திருமந்திரம் செய்யுமாறே என்று அவர் பாடியிருக்கலாம். ஆனால் அவர்
அப்படிப் பாடவில்லை. தமிழ் செய்யுமாறே என்றுதான் பாடுகிறார்.
"சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் "
என அப்பர் தனது தமிழ்மொழிப் பற்றையும், தமிழிசைப் பற்றையும் அவர் பாடிய
தேவாரங்களில் வெளிக்காட்டி இருக்கிறார்.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
என்று பாரதிக்கு ஒரு தாசன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன்
தமிழ்மொழிப் பற்றை ஊரறிய உலகறிய முழங்கி இருக்கிறார்.
ஆனால் இவர்களில் யாருமே பேசும் தமிழ்மொழிக்கும் பிறந்த
பொன்னாட்டுக்கும்ஈ அந்த மண்ணின் மக்களான தமிழர்க்கும் லாலி பாடவில்லை.
மகாகவி பாரதியார் மட்டுமே முதன் முதலில் தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப்
பாடினார். அவர் ஒருவரே தமிழ்நாட்டுக்கு வாழ்த்துப் பாடினார். அவர்
ஒருவரே தமிழர்க்கு வாழ்த்துப் பாடினார்.
மகாகவி பாரதியாரின் தமிழ்மொழி வாழ்த்துப் பா ஒலிக்காத தமிழ்மேடை இன்று
கிடையாது.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ் நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ் மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழிய வே!
மகாகவி பாரதியார் ஒரு பிறவிக் கவிஞர். காரிகை கற்று கவிதை பாடிய
கவிஞனல்ல. தமிழ் மொழி அவருக்குச் சேவகம் செய்தது. அதனால் அவரது
வார்த்தைகள் சத்திய வார்த்தைகளாக உயிர்பெற்று ஒலிக்கின்றன.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்"
என்று தமிழைப் போற்றிப்
பாடிய கவிஞரும் பாரதியார்தான்.
பாரதியாருக்கு தமிழைவிட வடமொழி, ஆங்கிலம், இந்தி, பிரன்சு மொழிகள்
நன்றாகத் தெரிந்திருந்தன. எனவே தமிழ் மொழியின் இனிமை பற்றிய அவரது
தீர்ப்பு உணர்வு பூர்வமாக இல்லாமல் அறிவு பூர்வமாக இருப்பதாகவே நாம்
கொள்ள வேண்டும்.
"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடொன்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே! (செந்தமிழ்)"
தமிழ்த் தேசியத்துக்கு அடிக்கல் நாட்டிய இன்னொருவர் மனோன்மணியம்
சுந்தரனார். அவரும் தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல் ஒன்று
பாடியிருக்கிறார்.
"நீராருங் கடலுடுத்த நி லமடந்தைக் கெழி லொழுகுஞ் சீராரும் வதனம்
எனத்.........." தொடங்கும் பாடல் அது. மனோன்மணியம் என்று அவர் எழுதிய
நாடகத்தில் வருகிறது.
"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டம் இதில்
தக்கசிறு பிறை நுதலுந் தரித்த நறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!"
சுந்தரனாரின் தமிழ்த் தெய்வ வணக்கப் பாடலின் முதல் சில வரிகள் இவை.
பாரதியார் பாடல்போலவே இந்தப் பாடலும் தமிழ்த் தாய் வாழ்த்தாகப்
படிக்கப்படுகிறது. ஆனால் எளிமை கருதி பாரதியாரின் தமிழ்மொழி வாழ்த்தே
பெரு வழக்கில் இருக்கிறது.
எனவே தமிழ்த் தேசியத்துக்கு அடிக்கல் நாட்டிய மகாகவி பாரதியார்,
மனோண்மணியம் சுந்தரனார் இருவரையும் போற்றி வணங்குவதோடு தமிழ்த்
தேசியத்தை மேலும் மேலும் வளர்த்தெடுக்கவும் நாங்கள் உறுதி பூணுவோமாக.
|