Maha Kavi Subramaniya Bharathy
- Suya Sarithai 2: Bharathy Arupathu Aru
சி. சுப்ரமணிய பாரதி - சுயசரிதை 2:
பாரதி-அறுபத்தாறு
[Etext input: / Proof-reading : Mr.
Govardanan � Project Madurai 1999 Project Madurai is an open,
voluntary, worldwide initiative devoted to preparation of electronic
texts of Tamil literary works and to distribute them free on the
Internet. Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org You are welcome to freely
distribute this file, provided this header page is kept intact.]
கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி
மரணத்தை வெல்லும் வழி
அசுரர்களின் பெயர்
சினத்தின் கேடு
தேம்பாமை
பொறுமையின் பெருமை
கடவுள் எங்கே இருக்கிறார்?
குருக்கள் துதி(குள்ளச்சாமி புகழ்)
குரு தரிசனம்
உபதேசம்
கோவிந்த சுவாமி புகழ்
யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்
குவளைக் கண்ணன் புகழ்
பெண் விடுதலை
தாய் மாண்பு
காதலின் புகழ்
விடுதலைக் காதல்
சர்வ மத சமரசம்
கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்;
மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள்
மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி;
தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
செய்யமணித் தாமரை நேர் முகத்தாள் காதல்
வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும்
வண்டினைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள். 1
தீராத காலமெலாம் தானும் நிற்பாள்
தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி,
நீராகக் கனலாக வானாக் காற்றா
நிலமாக வடிவெடுத்தாள்;நிலத்தின் மீது
போராக நோயாக மரண மாகப்
போந்திதனை யழித்திடுவாள்;புணர்ச்சி கொண்டால்
நேராக மோனமகா னந்த வாழ்வை
நிலத்தின்மிசை அளித் தமரத் தன்மை ஈவாள். 2
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை
வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி.
பாகார்ந்த தேமொழியாள்,படருஞ் செந்தீ
பாய்ந்திடுமோர் விழியுடையாள்,பரம சக்தி
ஆகார மளித்திடுவாள்,அறிவு தந்தாள்
ஆதிபரா சக்தியென தமிர்தப் பொய்கை.
சோகா டவிக்குளெனைப் புகவொட்டாமல்
துய்யசெழுந் தேன்போலே கவிதை சொல்வாள். 3
மரணத்தை வெல்லும் வழி
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்:
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார்,மடிந்திட்டார்,மண்ணாய் விட்டார். 4
பொந்திலே யுள்ளாராம்,வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம்,பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம்,
நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனென் றில்லை;
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தண்னாம் சங்கரா சார்யுன் மாண்டான்;
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்! 5
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை.6
அசுரர்களின் பெயர்
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்;
மிச்சத்தைப் பின் சொல்வேன்,சினத்தை முன்னே
வென்றிடுவீர்,மேதினியில் மரணமில்லை;
துக்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே,
சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே.
நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில். 7
சினத்தின் கேடு
சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்;சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்,
சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார். 8
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்.
வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா;
சாகா மலிருப்பதுநம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்;
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்.
பாரீர்நீர் கேளீரோ,படைத்தோன் காப்பான்;
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேதுவந்தால் எமக்கென் னென்றே. 9
தேம்பாமை
''வடகோடிங் குயர்ந்தென்னே,சாய்ந்தா லென்னே,
வான் பிறைக்குத் தென்கோடு''பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை,தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்! 10
பொறுமையின் பெருமை
திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
திருக்கொலுவீற் றிருக்குமதன் பொருளைக் கேளீர்!
திருத்தணிகை யென் பதிங்கு பொறுமை யின்பேர்.
செந்தமிழ்கண் டீர்,பகுதி'தணி'யெ னுஞ்சொல்,
பொறுத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,
'பொறுத்தவரே பூமியினை ஆள்வார்'என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம்.
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்! 11
பொறுமையினை,அறக்கடவுள் புதல்வ னென்னும்
யுதிட்டிரனும் நெடுநாளிப் புவிமேல் காத்தான்.
இறுதியிலே பொறுமைநெறி தவறி விட்டான்
ஆதலாற் போர்புரிந்தான் இளையாரோடே;
பொறுமை யின்றிப் போர்செய்து பரத நாட்டைப்
போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது
வறுமையையுங் கலியினையும் நிறுத்தி விட்டு
மலைமீது சென்றான்பின் வானஞ் சென்றான் 12
ஆனாலும் புவியின்மிசை உயிர்க ளெல்லாம்
அநியாய் மரணமெய்தல் கொடுமை யன்றொ?
தேனான உயிரைவிட்டுச் சாக லாமோ?
செத்திடற்குக் காரணந்தான் யாதென் பீரேல்;
கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார்
ஜகதீச சந்த்ரவஸு கூறு கின்றான்;
(ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்!)
''நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்''என்றான்.13
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்!
கொடுங்கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம்
ஆபத்தாம்,அதிர்ச்சியிலே சிறிய தாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
கொல்வதர்கு வழியெனநான் குறித்திட்டேனே. 14
கடவுள் எங்கே இருக்கிறார்?
''சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்'' லென்று ஹைரணியந்தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன் சொல்வான்:-'தூணி லுள்ளான்
நாரா யணந்துரும்பி லுள்ளான்'என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ ? 15
கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்
''கீழான்''பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே. 16
சுத்த அறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர்,
வித்தை யிலாப் புலையனு மஃதென்னும் வேதம்;
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்தநும தருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றொ நிகழ்த்து வீரே? 17
உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் ரில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்! 18
குருக்கள் துதி(குள்ளச்சாமி புகழ்)
ஞான்குரு தேசிகனைப் போற்று கின்றேன்;
நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்;
மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி
முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோ ம்;
தேன்னைய பராசக்தி திறத்தைக் காட்டிச்
சித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான்.
வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும்
வகையுணர்த்திக் காத்த பிரான் பதங்கள் போற்றி!19
எப்போதும் குருசரணம் நினைவாய்,நெஞ்சே!
எம்பெருமான் சிதம்பரதே சிகந்தாள் எண்ணாய்!
முப்பொழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான்,
முத்தியெனும் வானகத்தே பரிதி யாவான்,
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்,
தவம் நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்,
குப்பாய ஞானத்தால் மரண மென்ற
குளிர்நீக்கி யெனைக்காத்தான்,குமார தேவன்! 20
தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச்சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தனைமுடிமீ தேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான்,
ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே. 21
வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை;
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?
ஆயிரனூல் எழுதிடினும் முடிவ்ய் றாதாம்;
ஐயனவன் பெருமையைநான் சுருக்கிச் சொல்வேன்;
காயகற்பஞ் செய்துவிட்டான்;அவன்வாழ் நாளைக்
மணக்கிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை. 22
குரு தரிசனம்
அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக் கலஞ்சேர் ஈசுவரன் தர்மராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்,
முன்றனது பிதா தமிழில் உபநிடதத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்றனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி. 23
அப்போது நான்குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியது பேச லுர்றேன்:
''அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே!எனக்குநினை உணர்த்து வாயே. 24
யாவன் நீ? நினைக்குள்ள திறமை என்னே?
யாதுணர்வாய் கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே? சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் பித்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,அனக்குணர்த்த வேண்டும்''என்றேன். 25
பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த் தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்;
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதித்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வாவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்.26
உபதேசம்
பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரம யோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி, [என்றேன்
''அறிதிகொலோ!''எனக்கேட்டான்''அறிந்தேன்''
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்;யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன். 27
தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;
''வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே,வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி நுள்ள்
தெரிவதுபோல் உனக்குள்ள் சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை.அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்''என்றான். 28
கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்,
கருத்தையதில் காட்டுவேன்;வானைக் காட்டி
மையிலகு விழியாளின் காத லொன்றே
வையகத்தில் வாழுநெறி யென்றுகாட்டி,
ஐயனெனக் குணார்த்தியன பலவாம் ஞானம்,
அகற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்.
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்
பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே. 29
மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டென் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்;
''தம்பிரா னே; இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றொ?
மூட்டைசுமந் திடுவதென்னே?மொழிவாய்''அன்றென்.30
புன்னகைபூத் தாரினும் புகலுகின்றான்;
''புறததேநான் சுமக்கின்றேன்;அகத்தி னுள்ளே;
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ"
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தால் வேண்டும். 31
சென்றதினி மீளாது;மூடரே,நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புடிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும். 32
மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேதையில்லா மானுடரே!மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்.
ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும். 33
சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
'ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறழ்து விட்டேன்;
நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்'
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்;பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார். 34
குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய். 35
கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்;
தோளைப் பார்த் துக்களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே;
வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க! 36
கோவிந்த சுவாமி புகழ்
மாங்கொட்டைச் சாமி புகழ் சிறிது சொன்னோம்;
வண்மை திகழ் கோவிந்த ஞானி,பார்மேல்
யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்;
எம்பெருமான் பெருமையையிங் கிசைக்கக் கேளீர்!
தீங்கற்ற குணமுடையான் புதுவை யூரார்
செய்தபெருந் தவத்தாலே உதித்த தேவன்
பாங்குற்ற மாங்கொட்டைச் சாமி போலே
பயிலுமதி வர்ணாசிர மத்தே நிற்போன். 37
அன்பினால் முத்தியென்றான் புத்தன் அந்நாள்,
அதனையிந்நாட் கோவிந்த சாமி செய்தான்;
துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயைப் போலே
சுரக்குமரு ளுடையபிரான் துணிந்த யோகி;
அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான்;
அன்பினையே தெய்வமென்பான் அன்பே யாவான்;
மன்பதைகள் யாவுமிங்கே தெய்வம் என்ற
மதியுடையான்,கவலையெனும் மயக்கம் தீர்ந்தான்;38
பொன்னடியால் என்மனையைப் புனித மாக்கப்
போந்தானிம் முனியொருநாள்;இறந்த எந்தை
தன்னுருவங் காட்டினான்;பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவ முற்றான்;
அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத்
தனுபூதி யுடையனென்றும் அறிந்து கொண்டேன்;
மன்னவனைக் குருவெனநான் சரண டைந்தேன்;
மரணபயம் நீங்கினேன்;வலிமை பெற்றேன். 39
யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்
கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,
தேவிபதம் மறவாத தீர ஞானி,
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்,
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்;
காவிவளர் தடங்களிலே மீஙள் பாயும்
கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்.40
தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும்
துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்;
தோழரே!எந்நாளும் எனக்குப் பார்மேல்
மக்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன்,யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்
சங்கரெனன் றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி. 41
குவளைக் கண்ணன் புகழ்
யாழ்ப்பாணத் தையனையென் நிடங்கொ ணர்ந்தான்
இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக்
காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான்,பார்மேல்
கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்
பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன்,
பறையரையும் மறவரையும் நிகராக் கொண்டான்.
தீர்ப்பான சுருதிவநி தன்னிற் சேர்ந்தான்,
சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார். 42
மகத்தான் முனிவரெலாம் கண்ணன் தோழர்;
வானவரெல் லாங்கண்ணன் அடியா ராவார்;
மிகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின்
வீரப்பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான்.
ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்துச்
சமிதனை யிவனென்றன் மனைக்கொ ணர்ந்தான்
அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்;
''அன்றேயப் போதேவீ டதுவே வீடு'' 43
பாங்கான குருக்களை நாம் போற்றிக் கொண்டோ ம்,
பாரினிலே பயந்தெளிந்தோம்;பாச மற்றோம்.
நீங்காத சிவசக்தி யருளைப் பெற்றோம்;
நிலத்தின்மிசை அமரநிலை யுற்றோம்,அப்பா!
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர்,
தாரணியில் பலருள்ளார்,தருக்கி வீழ்வார்;
ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல்
என்றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர். 44
பெண் விடுதலை
பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்;அதற்குரிய பெற்றி கேளீர்;
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,
மனையாளும் தெய்வமன்றோ?மதிகெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்,
விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்,
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை. 45
தாய் மாண்பு
பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
''கண்டார்க்கு நகைப்'பென்னும் உலக வாழ்க்கை
காதலெனும் கதையினுடைக் குழப்பமன்றோ?
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவளென் றறியீரோ?உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி ஔவை ''அன்னையும் பிதாவும்,''
பாரிடை ''முன் னறிதெய்வம்''என்றா: அன்றோ?46
தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ ?
தாய்பெண்ணே யல்லளோ?தமக்கை,தங்கை
வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?
மனைவியொருத் தியையடிமைப் படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைத் படுத்த லாமோ?
''தாயைப்போ லேபிள்ளை''என்று முன்னோர்
வாக்குளதன் றோ?பெண்மை அடிமை யுற்றால்
மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ? 47
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்;
நாட்டினிலே
நாடோ றும் முயன்றிடுவான் நலிந்து சாவான்;
காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோம்,அப்பா!
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை;
பாட்டினிலே காதலை நான் பாட வேண்டிப்
பரமசிவன் பாதமலர் பணிகின் றேனே. 48
காதலின் புகழ்
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம்,அதனாலே மரணம் பொய்யாம். 49
ஆதி சக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்;வானோர்க் கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ ?
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும். 50
கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்
கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்;
மங்கைதனைக் காட்டினிலும் உடண்கொண் டேகி
மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே
சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க
ஸ்ரீதரனுஞ் சென்றுபல துன்ப முற்றான்;
இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம்
இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சி யன்றோ? 51
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே. 52
காதலிலே இன்பமெய்திக் களித்து நின்றால்
கனமான மன்னவர்போர் எண்ணு வாரோ?
மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ?
பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருது வாரோ? 53
விடுதலைக் காதல்
காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை
கடுகிவளர்ந் திடுமென்பார் யூரோப் பாவில்;
மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்;
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே,
பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால்,
வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் றனைக்கூட வேண்டும் என்பார். 54
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்
விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்!
சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது
சுவைமிக்க பெண்மைநல முண்ணு கின்றார்.
காரணந்தான் யாதெனிலோ;ஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார்;கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே! 55
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ?வீட்டைச் சுட்டால்,
நலமான் கூரையுந்தான் எரிந்தி டாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்றார்?
காணுகின்ற காட்சியெலாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே! 56
சர்வ மத சமரசம்
(கோவிந்த சுவாமியுடன் உரையாடல்)
''மீளவுமங் கொருபகலில் வந்தான் என்றன்
மனையிடத்தே கோவிந்த வீர ஞானி,
ஆளவந்தான் பூமியினை,அவனி வேந்தர்
அனைவருக்கும் மேலானோன்,அன்பு வேந்தன்
நாளைப்பார்த் தொளிர்தருநன் மலரைப்போலே
நம்பிரான் வரவுகண்டு மனம் மலர்ந்தேன்;
வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம்,
வெயிலுள்ள போதினிலே உலர்த்திக் கொள்வோம்.57
காற்றுள்ள போதேநாம் தூற்றிக் கொள்வோம்;
கனமான குருவையெதிர் கண்டபோதே
மாற்றான அகந்தையினைத் துடைத்துக் கொள்வோம்;
மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;
கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;
குலைவான மாயைதனை அடித்துக் கொள்வோம்;
பேற்றாலே குருவந்தான்;இவன்பால் ஞானப்
பேற்றையெல்லாம் பெறுவோம்யாம்''அன்றெனுள்ளே.58
சிந்தித்து ''மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே!
தேய்வென்ற மரணத்தைத் தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினைக்கே டேன் கூறாய்''என்றேன்.
வானவனாம் கோவிந்த சாமி சொல்வான்;
''அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன்
அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம்;
பந்தமில்லை;பந்தமில்லை;பந்தம் இல்லை;
பயமில்லை;பயமில்லை;பயமே இல்லை; 59
''அதுவேநீ யென்பதுமுன் வேத வோத்தாம்;
அதுவென்றால் எதுவெனநான் அறையக் கேளாய்!
அதுவென்றால் முன்னிற்கும் பொருளின் நாமம்;
அவனியிலே பொருளெல்லாம் அதுவாம்;நீயும்
அதுவன்றிப் பிறிதில்லை;ஆத லாலே,
அவனியின்மீ தெதுவரினும் அசைவு றாமல்
மதுவுண்ட மலர்மாலை இராமன் தாளை
மனத்தினிலே நிறுத்தியிங்கு வாழ்வாய் சீடா! 60
'பாரான உடம்பினிலே மயிர்களைப்போல்
பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கை யாலே;
நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா;
காரான நிலத்தைப்போய்த் திருத்தவேண்டா;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா;
சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு;
சிவன் செத்தா லன்றிமண்மேல் செழுமை உண்டு.61
''ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண் டாகும்!
பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்
பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு
நீதமில்லாக் கள்வர்நெறி யாயிற் றப்பா!
நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி யன்றோ?
பாதமலர் காட்டினினை அன்னை காத்தாள்;
பாரினிலித் தருமம்நீ பகரு வாயே. 62
''ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும்
ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என்ற
ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒருமொழி 'ஓம் நமச் சிவாய' வென்பர்;
'ஹரிஹரி'யென் றிடினும் அஃதே;'ராம ராம'
'சிவசிவ'வென்றிட்டாலும் அஃதேயாகும்.
தெரிவுறவே 'ஓம்சக்தி'யென்று மேலோர்
ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும். 63
''சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்;
சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும். 64
''பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!
புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
சநாதனமாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்,
நாமமுயர் சீனத்துத் 'தாவு''மர்க்கம்,
நல்ல ''கண் பூசி''மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே. 65
''பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:
சாமி நீ;சாமி நீ;கடவுள் நீயே;
தத்வமஸி;தத்வமஸி;நீயே அஃதாம்;
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்
சதாகாலம் 'சிவோஹ'மென்று சாதிப் பாயே!'' 66 |