Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil Language & Literature > Maha Kavi Subramaniya BharathyIndex of Works - பட்டியல்  >  Palvahai Padalkal - பல்வகைப் பாடல்கள்

Maha Kavi Subramaniya Bharathy - Palvahai Padalkal

சி. சுப்ரமணிய பாரதி - பல்வகைப் பாடல்கள்

[Etext input: / Proof-reading : Mr. Govardanan � Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).  and ii) Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. The Latha font may be downloaded from here]

1. புதிய ஆத்தி சூடி 2. பாப்பாப் பாட்டு. 3.முரசு 4. புதுமைப் பெண். 5. பெண்ம6. பெண்கள் விடுதலைக் கும்மி 7. பெண் விடுதலை 8. தொழில9. மறவன் பாட்ட10. நாட்டுக் கல்வி 11. புதிய கோணங்கி



1. புதிய ஆத்தி சூடி

காப்பு

பரம்பொருள் வாழ்த்து

ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து,
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே;
அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

நூல்

அச்சம் தவிர்.
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி.
ஈகை திறன்.
உடலினை உறுதிசெய். 5

ஊண்மிக விரும்பு.
எண்ணுவ துயர்வு.
ஏறுபோல் நட.
ஐம்பொறி ஆட்சிகொள்.
ஒற்றுமை வலிமையாம். 10

ஓய்த லொழி.
ஔடதங் குறை.
கற்ற தொழுகு.
காலம் அழியேல்.
கிளைபல தாங்கேல். 15

கீழோர்க்கு அஞ்சேல்.
குன்றென நிமிர்ந்துநில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு.
கேட்டிலும் துணிந்துநில். 20

கைத்தொழில் போற்று.
கொடுமையை எதிர்த்து நில்.
கோல்கைக் கொண்டு வாழ்.
கவ்வியதை விடேல்.
சரித்திரத் தேர்ச்சிகொள். 25

சாவதற்கு அஞ்சேல்.
சிதையா நெஞ்சு கொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக்கு இளைத்திடேல்.
சூரரைப் போற்று. 30

செய்வது துணிந்து செய்.
சேர்க்கை அழியேல்.
சைகையிற் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்.
சோதிடந் தனையிகழ். 35

சௌரியந் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று.
ஞிமிரென இன்புறு.
ஞெகிழ்வத தருளின். 40

ஞேயங் காத்தல் செய்.
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்றுவாழ்.
தீயோர்க்கு அஞ்சேல். 45

துன்பம் மறந்திடு.
தூற்றுதல் ஒழி.
தெய்வம் நீ என்றுணர்.
தேசத்தைக் காத்தல்செய்.
தையலை உயர்வு செய். 50

தொன்மைக்கு அஞ்சேல்.
தோல்வியிற் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினைசெய். 55

நினைப்பது முடியும்.
நீதிநூல் பயில்
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல். 60

நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு. 65

பாட்டினில் அன்புசெய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி யிழந்திடேல். 70

பெரிதினும் பெரிதுகேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
பொய்ம்மை இகழ்.
போர்த்தொழில் பழகு.
மந்திரம் வலிமை. 75

மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங்கொடேல். 80

மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல். 85

யவனர்போல் முயற்சிகொள்.
யாவரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில். 90

ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொள்.
ரோதனம் தவிர். 95

ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பயிற்சிசெய்.
லீலை இவ் வுலகு.
(உ)லுத்தரை இகழ். 100

(உ)லோகநூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வானநூற் பயிற்சிகொள்.
விதையினைத் தெரிந்திடு. 105

வீரியம் பெருக்கு.
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமைசெய்.
வையத் தலைமைகொள்
வௌவுதல் நீக்கு. 110


2. பாப்பாப் பாட்டு.


 

ஓடி விளையாடு பாப்பா! - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! - ஒரு
குழைந்தையை வையாதே பாப்பா!. 1

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! 2

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா! 3

பாலைப் பொழிந்து தரும், பாப்பா! - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா! 4

வண்டி இழுக்கும் நல்ல குதிரை, - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா! 5

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! 6

பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா! 7

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! 8

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! 9

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா! 10

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! 11

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா! 12

வடக்கில் இமயமலை பாப்பா! - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா! 13

வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்துஸ் தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா! 14

சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர். 15

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா! 16


3. முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!

1. ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும் - ஒரு
தெய்வம் துணைசெய்ய வேண்டும்.

2. வேத மறிந்தவன் பார்ப்பான், பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.
நீதி நிலைதவ றாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.

3. பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென் றோர்வகுப் பில்லை, - தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை.

4. நாலு வகுப்பும்இங் கொன்றே; - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.

5. ஒற்றைக் குடும்பந் தனிலே - பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை;
மற்றைக் கருமங்கள் செய்தே - மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை;

6. ஏவல்கள் செய்பவர் மக்கள்! - இவர்
யாவரும் ஓர்குலம் அன்றோ?
மேவி அனைவரும் ஒன்றாய் - நல்ல
வீடு நடத்துதல் கண்டோ ம்.

7. சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.

8. சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

9. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.

10. கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்.

11. தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர்பொருளானது தெய்வம்.

12. தீயினைக் கும்பிடும் பார்ப்பார், - நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்,
கோவிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் யேசு மதத்தார்.

13. யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

14. வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை
பேருக் கொருநிற மாகும்.

15. சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.

16. எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

17. வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.

18. நிகரென்று கொட்டு முரசே! - இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே - பொய்ம்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.

19. அன்பென்று கொட்டு முரசே! - அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு;
துன்பங்கள் யாவுமே போகும் - வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனால்.

20. அன்பென்று கொட்டு முரசே! - மக்கள்
அத்தனைப் பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.

21. உடன்பிறந் தார்களைப் போலே - இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
இடம்பெரி துண்டுவை யத்தில் - இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?

22. மரத்தினை நட்டவன் தண்ணீர் - நன்கு
வார்த்ததை ஓங்கிடச் செய்வான்;
சிரத்தை யுடையது தெய்வம், - இங்கு
சேர்த்த உணவெல்லை யில்லை.

23. வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! - இங்கு
வாழும் மனிதரெல் லோருக்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.

24. உடன்பிறந் தவர்களைப் போலே - இவ்
வுலகினில் மனிதரெல் லாரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?

25. வலிமை யுடையது தெய்வம், - நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;
மெலிவுகண் டாலும் குழந்தை - தன்னை
வீழ்த்தி மிதத்திட லாமோ?

26. தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?

27. அன்பென்று கொட்டு முரசே! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.

28. அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

29. பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர்
பற்றுஞ் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமைசெய் யாது - புவி
யெங்கும் விடுதலை செய்யும்.

30. வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

31. ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.


4. புதுமைப் பெண்.

போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி! நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலோளி
தோற்றி நின்றனை பாரத நாடைலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே! எங்கள்
சாதி செய்த தவப்பயன் வாழி நீ! 1

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ?
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே! 2

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ! 3

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ! 4

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சாலவே யரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ! 5

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான் வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம். 6

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ! 7

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம். 8

சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ! 9

போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
அருளி நாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம். 10


5. பெண்மை

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும். 1

அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம். 2

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம். 3

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா. 4

சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும்
ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம். 5

உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே. 6

'போற்றி தாய்' என்று தோழ் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே. 7

'போற்றி தாய்' என்று தாளங்கள் கொட்டடா!
'போற்றி தாய்'என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே. 8

அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம். 9


6. பெண்கள் விடுதலைக் கும்மி

காப்பு

பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே.

1. கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)

2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி)

3. மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டி விட்டோ மென்று கும்மியடி! (கும்மி)

4. நல்ல விலை கொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்ப துண்டோ ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார். (கும்மி)

5. கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி)

6. பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி! (கும்மி)

7. வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடு வோம். (கும்மி)

8. காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி! (கும்மி)


7. பெண் விடுதலை


விடுதலைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்;வெல்லுவம் என்றெ
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.
உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்;
இடையிலேபட்ட கீழ்நிலை கண்டீர்.
இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ? 1

திறமை யால்இங்கு மேனிலைசேர்வோம்;
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;
குறைவி லாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்
சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே. 2

விடியு நல்லொளி காணுதி நின்றே,
மேவு நாக ரிகம்புதி தொன்றே;
கொடியர் நம்மை அடிமைகள் என்றே
கொண்டு,தாம்முதல் என்றன ரன்றே.
அடியொ டந்த வழக்கத்தைக் கொன்றே,
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர்,நந்தேசத்து வீரக்
காரிகைக் கணத்தீர்,துணி வுற்றே. 3


8. தொழில்

இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்திரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்.
பிரம தேவன் கலையிங்கு நீரே! 1

மண்ணெடுத்துக் குடங்கள்செய் வீரே!
மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
எண்ணெய்,பால்நெய் கொணர்ந்திடு வீரே!
இழையை நாற்றுநல் லாடைசெய் வீரே!
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே! 2

பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
பரத நாட்டியக் கூத்திடு வீரே!
காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே!
நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டிவைப் பீரே!
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வ மாக விளங்குவிர் நீரே! 3


9. மறவன் பாட்டு

மண்வெட்டிக் கூலிதின லாச்சே;-எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே-இந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே! 1

நாணிலகு வில்லினொடு தூணி-நல்ல
நாதமிகு சங்கொலியும் பேணி,
பூணிலகு திண்கதையும் கொண்டு,-நாங்கள்
போர்செய்த கால்மெல்லாம் ப்ண்டு. 2

கன்னங் கரியவிருள் நேரம்-அதில்
காற்றும் பெருமழையும் சேரும்;
சின்னக் கரியதுணி யாலே-எங்கள்
தேகமெல்லாம் மூடிநரி போலே. 3

ஏழை யெளியவர்கள் வீட்டில்-இந்த
ஈன வயிறுபடும் பாட்டில்
கோழை யெலிக ளென்னவே-பொருள்
கொண்டு வந்து...... 4

முன்னாளில் ஐவரெல்லாம் வேதம்-ஓதுவார்;
மூன்று மழை பெய்யுமடா மாதம்;
இந்நாளி லேபொய்ம்மைப் பார்ப்பார்-இவர்
ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார், 5

பேராசைக் காரனடா பார்ப்பான்-ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்;
யாரானா லும்கொடுமை ... ... ...
... ... ... ... ... ... 6

பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்-நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்
கொள்ளைக் கேசென் ... ...
... ... ... ... ... ... 7

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?
... ... ... ... ... ...
... ... ... ... ... ... 8

நாயும் பிழைக்கும் இந்தப்-பிழைப்பு;
நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு;
பாயும் கடிநாய்ப் போலீசுக்-காரப்
பார்ப்பானுக் குண்டிதிலே பீசு. 9

சோரந் தொழிலாக் கொள்வோமோ?-முந்தைச்
சூரர் பெயரை அழிப் போமோ?
வீர மறவர் நாமன்றோ?-இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ? 10


10. நாட்டுக் கல்வி

(ஆங்கிலத்தில் ரவீந்திரநாதர் எழுதிய பாடலின்
மொழிபெயர்ப்பு)

விளக்கி லேதிரி நன்கு சமைந்தது
மேவு வீர்இங்கு தீக்கொண்டு தோழரே!
களக்க முற்ற இருள்கடந் தேகுவார்
காலைச் சோதிக் கதிரவன் கோவிற்கே;
துளக்க முற்றவிண் மீனிடம் செல்லுவார்
தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார்;
களிப்பு மிஞ்சி ஓளியினைப் பண்டொரு
காலன் நீர்சென்று தேடிய தில்லையோ? 1

அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே
ஆசை யென்ற விண் மீன்ஒளிர் செய்ததே;
துன்று நள்ளிருள் மலை மயக்கத்தால்
சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்;
நின் றவிந்தன நுங்கள் விளக்கெலாம்;
நீங்கள் கண்ட கனாக்களெல் லாம் இசை
குன்றித் தீக்குறி தோன்றும்;இராப்புட்கள்
கூவ மாறொத் திருந்தன காண்டிரோ? 2

இன்னு மிங்கிருள் கூடி யிருப்பினும்
ஏங்கு கின்ற நரகத் துயிர்கள்போல்
இன்னு மிங்கு வனத்திடை காற்றுத்தான்
ஓங்கும் ஓதை இருதிடும் ஆயினும்
முன்னைக் காலத்தின் நின்றெழும் பேரொலி
முறை முறைபல ஊழியின் ஊடுற்றே
பின்னை இங்குவந் தெய்திய பேரொலி. 3

"இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்,
இறப்பை நீக்கி,அமிர்தத்தை ஊட்டுவாய்"
அருளும் இந்த மறையொலி வந்திங்கே
ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப் பீர்தமைத்
தெருளு றுத்தவும் நீர்எழு கில்லிரோ?
தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர்
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ?
வான்ஒ ளிக்கு மகாஅர்இ யாம்என்றே. 4


11. புதிய கோணங்கி

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு. 1

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான்,போவான்,ஐயோவென்று போவான்! 2

வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்.
சாத்திரம் வளருது;சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது;தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது,வளருது; 3

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சொல்லடி,சொல்லடி,மலையாள பகவதீ!
அந்தரி,வீரி,சண்டிகை,சூலி
குடுகுடு குடுகுடு 4

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
தொப்பை சுருங்குது,சுறுசுறுப்பு விளையுது:
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
சாத்திரம் வளருது,சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது;
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது;
வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது;
சொல்லடி சக்தி,மலையாள் பகவதி;
தர்மம் பெருகுது,தர்மம் பெருகுது. 5

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home