Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil Language & Literature > Maha Kavi Subramaniya BharathyIndex of Works - பட்டியல்  > Gnana Padalkal - ஞானப்பாடல்கள்

Maha Kavi Subramaniya Bharathy Gnana Padalkal

சி. சுப்ரமணிய பாரதி - ஞானப்பாடல்கள்

[Etext input: / Proof-reading : Mr. Govardanan © Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).  and ii) Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. The Latha font may be downloaded from here]

1. அச்சமில்ல2. ஐய பேரிகை 3. விடுதலை-சிட்டுக்குருவி 4. விடுதலை வேண்டும5. உறுதி வேண்டும6. ஆத்ம ஜெயம7. காலனுக்கு உரைத்தல் 8. மாயையைப் பழித்தல் 9. சங்க10. அறிவே தெய்வம் 11. பரசிவ வெள்ளம12. உலகத்தை நோக்கி வினவுதல13. நான14. சித்தாந்தச் சாமி கோயில15. பக்தி 16. அம்மாக்கண்ணு பாட்டு 17. வண்டிக்காரன் பாட்டு 18. கடம19. அன்பு செய்தல20. சென்றது மீளாது 21. மனத்திற்குக் கட்டள22. மனப் பெண23. பகைவனுக்கு அருள்வாய24. தெளிவு 25. கற்பனையூர்



1. அச்சமில்ல

(பண்டாரப் பாட்டு)

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 2


2. ஐய பேரிகை

பல்லவி

ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஐய பேரிகை கொட்டடா!
சரணங்கள்
1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்(ஐயபேரிகை)
2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம். (ஐய பேரிகை)
3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம். [ஐய பேரிகை)


3. விடுதலை-சிட்டுக்குருவி

பல்லவி

விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

சரணங்கள்

1. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)

2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)

3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)


4. விடுதலை வேண்டும்

ராகம் - நாட்டை

பல்லவி

வேண்டுமடி எப்போதும் விடுதலை,அம்மா;

சரணங்கள்

1. தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழ ராகி எம்மோ டமுதமுண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய
நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ (வேண்டுமடி)

2. விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,
விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே
பொருத்த முறநல் வேத மோர்ந்து
பொய்ம்மை தீர,மெய்ம்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய
வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி)

3. பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,
நண்ணி யமரர் வெற்றி கூற
நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ண மினிய தேவ மகளிர்
மருவ நாமும் உவகைதுள்ள. (வேண்டுமடி)


5. உறுதி வேண்டும்

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.


6. ஆத்ம ஜெயம்

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம்,அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ?-அட,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு ப்ராசக்தியே! 1

என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ? 2


7. காலனுக்கு உரைத்தல்

ராகம் சக்கரவாகம்
தாளம்-ஆதி

பல்லவி

காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)

சரணங்கள்

1. வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்;என்றன்
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித்
[துதிக்கிறேன்-ஆதி
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே-நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட,
[மூடனே?அட (காலா)

2. ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை
[யறிகுவேன்-இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்!உனைவிதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட
(காலா)


8. மாயையைப் பழித்தல்

ராகம்-காம்போதி
தாளம்-ஆதி

உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே-மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ !-மாயையே! 1

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே-நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ?-மாயையே! 2

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!-நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர்-மாயையே! 3

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே!-இந்தத்
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய்!-மாயையே! 4

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப
மாயையே!-தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ?-மாயையே! 5

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே-சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை-மாயையே! 6

என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையே!-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண்-மாயையே! 7

யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே! 8


9. சங்கு

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்! 1

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூய ராமென்றிங் கூதேடா சங்கம்! 2

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்! 3

மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம்! 4


10. அறிவே தெய்வம்

கண்ணிகள்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ? 1

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ? 2

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ? 3

வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே. 4

நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே. 5

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே-உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே. 6

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம்-நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ? 7

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ? 8

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ? 9

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே. 10


11. பரசிவ வெள்ளம்

உள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானாகும்
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார்
[வேதியரே. 1

காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே. 2

எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள தென்றறிஞர் என்றுமய லெய்துவதாய் 3

வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய். 4

தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானாகி,5

தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒரு பொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே. 6

எங்குமுளான் யாவும் வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே. 7

வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே. 8
காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொரு
[ளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே. 9

எல்லாந் தானாகி யிரிந்திடினும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே. 10

மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனைத்துங் கண்டாரே. 11

இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்;
எப்பொருளுந் தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே. 12

வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே. 13

ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே. 14

வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா! 15

யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றுநின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா! 16

எண்ணமிட்ட லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதை யுள்ளே ததும்பப் புரியுமடா! 17

எங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற்
[போதுமடா! 18

யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா! 19

காவித் துணிவேண்டா,காற்றைச் சடைவேண்டா
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே 20

சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா! 21

தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா!
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தைசெய்தாற்
போதுமடா! 22

சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின்றசிவம்
வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா! 23

நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ்சிரத்தை யொன்றே போதுமடா! 24


12. உலகத்தை நோக்கி வினவுதல்

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 1

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
[போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? 2

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர்
[விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு
சேர்ப்பாரோ? 3

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம்
(காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம். 4


13. நான்

இரட்டைக் குறள் வெண் செந்துறை

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானிழல் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான். 1

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியிலுள்ள உயிரெலாம் நான். 2

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான். 3

இன்னிசை மாத ரிசையுளேன் நான்;
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்;
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். 4

மந்திரங் கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்,
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். 5

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்;
கண்டநற் சக்திக் கணமெலாம் நான்,
காரண மாகிக் கதித்துளோன் நான். 6

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற சோதிநான்! 7


14. சித்தாந்தச் சாமி கோயில்

சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
தீபவொளி யுண்டாம்;-பெண்ணே!
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்டதிருச் சுடராம்;-பெண்ணே! 1

உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
ஒட்டவருஞ் சுடராம்;-பெண்ணே!
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே1 2

தோன்று முயிர்கள் அனைத்டும்நன் றென்பது
தோற்ற முறுஞ் சுடராம்;-பெண்ணே!
மூன்று வகைப்படும் காலநன் றென்பதை
முன்ன ரிடுஞ் சுடராம்;-பெண்ணே! 3

பட்டினந் தன்னிலும் பாக்கநன் றென்பதைப்
பார்க்க வொளிர்ச்சுடராம்-பெண்ணே!
கட்டு மனையிலுங் கோயில்நன் றென்பதைக்
காண வொளிர்ச் சுடராம்;-பெண்ணே! 4


15. பக்தி

ராகம்-பிலஹரி

பல்லவி
பக்தியினாலெ-தெய்வ-பக்தியினாலே

சரணங்கள்

1. பக்தியினாலே-இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சித்தந் தெளியும்,-இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும்,-நல்ல
வீர ருறவு கிடைக்கும்,மனத்திடைத்
தத்துவ முண்டாம்,நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். (பக்தி)

2. காமப் பிசாசைக்-குதி
கால்கொண் டடித்து விழுந்திடலாகும்;இத்
தாமசப் பேயைக்-கண்டு
தாக்கி மடித்திட லாகும்;எந்நேரமும்
தீமையை எண்ணி-அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியெ றிந்துபொய்ந்
நாம மில்லாதே-உண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும். (பக்தி)

3. ஆசையைக் கொல்வோம்,-புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்ட
பாச மறுப்போம்,-இங்குப்
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல்-உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி-இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம். (பக்தி)

4. சோர்வுகள் போகும்,-பொய்ச்
சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெறலாகும்,நற்
பார்வைகள் தோன்றும்-மிடிப்
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும்,-பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்,
தீர்வைகள் தீரும்-பிணி
தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும். (பக்தி)

5. கல்வி வளரும்,-பல
காரியங் கையுறும்,வீரிய மோங்கிடும்,
அல்ல லொழியும்,-நல்ல
ஆண்மை யுண்டாகும்,அறிஉ தெளிந்திடும்,
சொல்லுவ தெல்லாம்-மறைச்
சொல்லினைப் போலப் பயனுள தாகும்,மெய்
வல்லமை தோன்றும்,-தெய்வ
வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்ந்திடலாம்-உண்மை.

6. சோம்ப லழியும்-உடல்
சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங்
கூம்புத லின்றி நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்,
வீம்புகள் போகும்-நல்ல
மேன்மை யுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப்
பாம்பு மடியும்-மெய்ப்
பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும் (பக்தி)

7. சந்ததி வாழும்,-வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்,
'இந்தப் புவிக்கே-இங்கொர்
ஈசனுண்டா யின் அறிக்கையிட் டேனுன்றன்
கந்தமலர்த்தாள்-துணை;
காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என்
சிந்தையறிந்தே-அருள்
செய்திட வேண்டும்'என்றால் அருளெய்திடும்.(பக்தி)


16. அம்மாக்கண்ணு பாட்டு

1. ''பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந் திறப்பது மதியாலே''
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

2. ஏட்டைத் துடைப்பது கையாலே-மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே;
வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.

3. காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்
துணி வுறுவது தாயாலே.


17. வண்டிக்காரன் பாட்டு

(அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்)

''காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?''எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!'' 1

''நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே''-''எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!'' 2


18. கடமை

கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறிவோம் தொழிலறியோம்;
கட்டென் பதனை வெட்டென் போம்;
மடமை,சிறுமை,துன்பம்,பொய்,
வருத்தம்,நோவு,மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.


19. அன்பு செய்தல்

இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ? 1

வேறு

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!2


20. சென்றது மீளாது

சென்றதினி மீளாது மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.


21. மனத்திற்குக் கட்டளை

பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
பா.-13


22. மனப் பெண்

மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய் 5
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய்,புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய் 10
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய். 15
அங்ஙனே,
என்னிடத் தென்று மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய்,ஆவிகாத் திடுவாய்,
கண்ணினோர் கண்ணாய்,காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா யென்னை 20
உலக வுருளையில் ஓட்டுற வகுப்பாய்,
இன்பெலாந் தருவாய்,இன்பத்து மய்ங்குவாய்,
இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய், 25
தன்னை யறியாய்,சகத்தெலாந் தொளைப்பாய்,
தன்பின் னிற்குந் தனிப்பரம் பொருளைக்
காணவே வருந்துவாய்,காணெனிற் காணாய்,
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,
பொதுநிலை அறியாய்,பொருளையுங் காணாய் 30
மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்;நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்; 35
உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்.


23. பகைவனுக்கு அருள்வாய்

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!

1. புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோ மே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!

பரமன் வாழ்கின்றான். (பகைவ)

2. சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே! (பகைவ)

3. உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ,-நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனோமோ?நன்னெஞ்சே! (பகைவ)

4. வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ)

5. போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே! (பகைவ)

6. தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! (பகைவ)


24. தெளிவு

எல்லா மகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோ டா?-மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த்பின்
புத்தி மயக்க முண்டோ ? 1

உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவதுண்டோ -மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண் டோ டா? 2

சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனெமே,
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ ? 3

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தேவனுரைத் தனனே;-மனமே!
பொய்கருதாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்ச வரோ? 4

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க்
கச்சமு முண்டோ டா?-மனமே!
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவ மடா! 5


25. கற்பனையூர்

கற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்குக்
கந்தர்வர் விளையாடு வராம்.
சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச்
சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை 1

திருமணை யிதுகொள்ளைப் போர்க்கப்பல்-இது
ஸ்பானியக் கடலில் யாத்திரை போம்
வெருவுற மாய்வார் பலர் கடலில்-நாம்
மீளவும் நம்மூர் திரும்பு முன்னே 2

அந்நகர் தனிலோர் இளவரசன்-நம்மை
அன்பொடு கண்டுரை செய்திடுவான்;
மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே-அவன்
மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். 3

எக்கால மும்பெரு நேராகும்-நம்மை
எவ்வகைக் கவலையும் போருமில்லை;
பக்குவத் தேயிலை நீர் குடிப்போம்-அங்குப்
பதுமை கைக் கிண்ணத்தில் அளித்திடவே. 4

இன்னமு திற்கது நேராகும்-நம்மை
யோவான் விடுவிக்க வருமளவும்,
நன்னக ரதனிடை வாழ்ந்திடு வோம்-நம்மை
நலித்திடும் பேயங்கு வாராதே. 5

குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்-அங்குக்
கோல்பந்து யாவிற்குமுயி ருண்டாம்
அழகிய பொன்முடி யரசிகளாம்-அன்றி
அரசிளங் குமரிகள் பொம்மையெலாம். 6

செந்தோ லசுரனைக் கொன்றிடவே-அங்குச்
சிறுவிற கெல்லாம் சுடர்மணி வாள்
சந்தோ ஷத்துடன் செங்கலையும் அட்டைத்
தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். 7

கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே-வழி
காண்ப திலாவகை செய்திடுவோம்-ஓ!
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே!-நீர்
பின்னுமந் நிலைபெற வேண்டீரோ? 8

குழந்தைக ளாட்டத்தின் கனவை யெல்லாம்-அந்தக்
கோலநன் னாட்டிடைக் காண்பீரே;
இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்-நீர்
ஏகுதிர் கற்பனை நகரினுக்கே 9

[ஜான் ஸ்கர் என்ற ஆங்கிலப் புலவன்'நக்ஷத்ர தூதன்'
என்ற பத்திரிகையில் பிரசுரித்த ''தி டவுன் ஓப்
லெட்'ஸ் பிரெடெண்டு''என்ற பாட்டின் மொழி
பெயர்ப்பு.]

குறிப்பு:- இப்பாடலின் பொருள் : கற்பனை நகரமென்பது
சித்தத்தில் குழந்தை நிலை பெறுவதை இங்குக்
குறிப்பிடுகிறது.'யோவான்'என்பது குமார தேவனுடைய
பெயர்.'அக்கடவுள் மனிதனுக்குள்ளே நிலைபெற்று,
மனிதன் அடைய வேண்டும்'என்று யேசு கிறிஸ்து நாதர்
சொல்லியிருக்கும் பொருளை இப்பாடல் குறிப்பிடுகிறது.
கவலைகளை முற்றுந் துறந்துவிட்டு உலகத்தை வெறுமே
லீலையாகக் கருதி னாலன்றி மோக்ஷம் எய்தப் படாது.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home