Literary Works of Bharathidaasan  
( Kanakasubbaratnam, 1891-1964) 
புரட்சி கவிஞர் பாரதிதாசன்  
(கனகசுப்பரத்னம், 1891 - 1964) படைப்புகள் 
 
mutaRl tokuti - 75 kavitaikaL - Nature 
புரட்சிக் கவிதைகள் - முதற் தொகுதி 
	 
- 75 கவிதைகள் - 
இயற்கை   
  
					
						Acknowledgements  
						EText input : Mr.P.I.Arasu, 
						Toronto, Ontario, Canada.; Ms.Suhitha Arasu, Toronto, 
						Ontario, Canada. & Ms.Mahitha Sridhar, Toronto, Ontario, 
						Canada. Proof-reading: Mr.P.K.Ilango, Erode, Tamilnadu, 
						India. Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, 
						Switzerland  � Project Madurai 1999 - 2003 Project 
						Madurai is an open, voluntary, worldwide initiative 
						devoted to preparation of  electronic texts of 
						tamil literary works and to distribute them free on the 
						Internet. Details of Project Madurai are available at 
						the website
						
						http://www.projectmadurai.org/ You are welcome to 
						freely distribute this file, provided this header page 
						is kept intact.- 
						
						 
					 
					
					
உள்ளுறை
  
	
 
					
	1. 4. மயில்   
					 
					
					அழகிய மயிலே! அழகிய மயிலே! அஞ்சுகம் கொஞ்ச, 
					அமுத கீதம் கருங்குயி லிருந்து விருந்து செய்யக் கடிமலர் 
					வண்டுகள் நெடிது பாடத் தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில் 
					அடியெடுத் தூன்றி அங்கம் புளகித் தாடுகின்றாய் அழகிய மயிலே!
  
					உனது தோகை புனையாச் சித்திரம் ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் 
					அதுவாம்!
  உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை உச்சியில் 
					கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!
  ஆடு கின்றாய்; அலகின் 
					நுனியில் வைத்தஉன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்! 
					சாயல்உன் தனிச்சொத்து! ஸபாஷ்! கரகோஷம்!
  ஆயிரம் ஆயிரம் 
					அம்பொற் காசுகள் ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள் மரகத 
					உருக்கின் வண்ணத் தடாகம் ஆனஉன் மெல்லுடல், ஆடல், உள்உயிர், 
					இவைகள் என்னை எடுத்துப் போயின! இப்போது, "என்நினைவு" 
					என்னும் உலகில் மீண்டேன். உனக்கோர் விஷயம் சொல்வேன்: 
					நீயும் பெண்களும் "நிகர்" என்கின்றார்! நிசம்அது! 
					நிசம்!நிசம்! நிசமே யாயினும் பிறர்பழி தூற்றும் பெண்கள்இப் 
					பெண்கள்! அவர்கழுத்து உன்கழுத் தாகுமோ சொல்வாய்! அயலான் 
					வீட்டில் அறையில் நடப்பதை எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே 
					இயற்கை அன்னை, இப்பெண் கட்கெலாம் குட்டைக் கழுத்தைக் 
					கொடுத்தாள்! உனக்கோ கறையொன் றில்லாக் கலாப மயிலே, 
					நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்! இங்குவா! உன்னிடம் 
					இன்னதைச் சொன்னேன் மனதிற் போட்டுவை; மகளிற் கூட்டம் 
					என்னை ஏசும் என்பதற் காக!
  புவிக்கொன் றுரைப்பேன்: 
					புருஷர் கூட்டம், பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி 
					திருந்தா வகையிற் செலுத்தலால், அவர்கள் சுருங்கிய உள்ளம் 
					விரிந்தபா டில்லையே!
  
					
					  
					
					 
					 
					
	1.5. 
	சிரித்த முல்லை 
					
					 மாலைப் 
					போதில் சோலையின் பக்கம் சென்றேன். குளிர்ந்த தென்றல் 
					வந்தது. வந்த தென்றலில் வாசம் கமழ்ந்தது. வாசம் வந்த 
					வசத்தில் திரும்பினேன். சோலை நடுவில் சொக்குப் பச்சைப் 
					பட்டுடை பூண்டு படர்ந்து கிடந்து குலுக்கென்று சிரித்த 
					முல்லை மலர்க்கொடி கண்டேன் மகிழ்ச்சிகொண் டேனே!
  
					
					  
					
					 
					 
					
	1.6. உதய 
	சூரியன் 
	 
					 
					 
					உலகமிசை உணர்வெழுப்பிக் கீழ்த்திசையின் மீதில் 
					உதித்துவிட்டான் செங்கதிரோன்; தகத்தகா யம்பார்! விலகிற்றுக் 
					காரிருள்தான்; பறந்ததுபார் அயர்வு; விண்ணிலெலாம் பொன்னொளியை 
					ஏற்றுகின்றான் அடடா! மிலையும்எழிற் பெருங்கடலின் அமுதப்ர 
					வாகம்! மேலெல்லாம் விழிஅள்ளும் ஒளியின் ப்ரவாகம்! 
					நலம்செய்தான்; ஒளிமுகத்தைக் காட்டிவிட்டான், காட்டி 
					நடத்துகின்றான் தூக்கமதில் ஆழ்ந்திருந்த உலகை!
  
					ஒளிசெய்தான் கதிர்க்கோமான் வானகத்தில் மண்ணில் உயர்மலைகள், 
					சோலை,நதி இயற்கைஎழில் கள்பார்! களிசெய்தான் பெருமக்கள் 
					உள்ளத்தில்! அதனால் கவிதைகள், கைத்தொழில்கள் என்னென்ன 
					ஆக்கம்! தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி! 
					திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள்; ஒளியுலகின் 
					ஆதிக்கம் காட்டுகன்றான்; வானில் உயர்கின்றான்; உதயசூ 
					ரியன்வாழ்க நன்றே! 
					 
					
					  
					
					 
					 
					
	1.7. காடு  
					 
					 
					 [காவடிச் 
					சிந்து மெட்டு]
  முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும்! - 
					எதிர் முட்டுகருங் கற்களும்நெ ருங்கும் - மக்கள் இட்டடி 
					எடுத்தெடுத்து  வைக்கையிலே கால்களில்  தடுங்கும் - உள் 
  		 நடுங்கும்.
  கிட்டிமர வேர்கள்பல கூடும் - அதன் கீழிருந்து 
					பாம்புவிரைந் தோடும் - மர மட்டையசை வால்புலியின் 
					குட்டிகள்போய்த் தாய்ப்புலியைத் தேடும் - பின் வாடும்.
  
					நீள்கிளைகள் ஆல்விழுதி னோடு - கொடி நெய்துவைத்த 
					நற்சிலந்திக் கூடு - கூர் வாளெயிற்று வேங்கையெலாம் 
					வால்சுழற்றிப் பாயவருங் காடு - பள்ளம் மேடு!
  
					கேளோடும் கிளம்பிவரும் பன்றி - நிலம் கீண்டுகிழங் கேஎடுத்த 
					தன்றி - மிகு தூளிபடத் தாவுகையில் ஊளையிடும் குள்ளநரி 
   குன்றில் - புகும் ஒன்றி.
  வானிடைஓர் வானடர்ந்த வாறு - பெரு 
					வண்கிளை மரங்கள்என்ன வீறு! - நல்ல தேனடைசொ ரிந்ததுவும் 
					தென்னைமரம் ஊற்றியதும் ஆறு - இன்பச் சாறு!
  
					கானிடைப் பெரும்பறவை நோக்கும் - அது காலிடையே காலிகளைத் 
					தூக்கும் - மற்றும் ஆனினம் சுமந்தமடி ஆறெனவே பால்சுரந்து 
					தீர்க்கும் - அடை ஆக்கும்.
  
					
					  
					
					 
					 
					
	1. 8. கானல் 
	
					 
					
					வானும் கனல்சொரியும்! - தரை மண்ணும் 
					கனல்எழுப்பும்! கானலில் நான்நடந்தேன் - நிழல் காணும் 
					விருப்பத்தினால்! ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல் உயிருக் 
					கில்லைஅங்கே! ஆன திசைமுழுதும் - தணல் அள்ளும் 
					பெருவெளியாம்!
  ஒட்டும் பொடிதாங்கா - தெடுத் தூன்றும் 
					அடியும்சுடும்; விட்டுப் புறங்குதித்தால் - அங்கும் 
					வேகும்! உளம்துடிக்கும்! சொட்டுப் புனல்அறியேன்! - ஒன்று 
					சொல்லவும் யாருமில்லை! கட்டுடல் செந்தணலில் - கட்டிக் 
					கந்தக மாய்எரியும்!
  முளைத்த கள்ளியினைக் - கனல் 
					மொய்த்துக் கரியாக்கி விளைத்த சாம்பலைப்போய் - இனி 
					மேலும் உருக்கிடவே கொளுத்தி டும்கானல்! - உயிர் கொன்று 
					தின்னும்கானல்! களைத்த மேனிகண்டும் - புறங் கழுத்த 
					றுக்கும்வெளி!
  திடுக்கென விழித்தேன் - நல்ல சீதளப் 
					பூஞ்சோலை! நெடும் பகற்கனவில் - கண்ட நெஞ்சுறுத் 
					தும்கானல்  தொடர்ந்த தென்நினைவில்! - குளிர் சோலையும் 
					ஓடையுமே சுடவ ரும்கனலோ - என்று தோன்றிய துண்மையிலே.
  
					
					  
					
					 
					 
	
					
	
	1. 9. 
	மக்கள் நிலை 
	
					 
	சிட்டு
  தென்னை மரத்தில் - 
	சிட்டுப் பின்னும் அழைக்கும் - ஒரு புன்னை மரத்தினில் ஓடிய காதலி "போ 
	போ" என்றுரைக்கும்.
  வண்ண இறக்கை - தன்னை அங்கு விரித்தே - தன் 
	சென்னியை உள்ளுக்கு வாங்கிஅச் சேவலும் செப்பும் மணிவாயால்:
  "என்னடி 
	பெண்ணே - உயிர்  ஏகிடும் முன்னே - நீ என்னிடம் வாஎனை யாகிலும் கூப்பிடு, 
	தாமதம் நீக்கிவிடு"
  என்றிது சொல்லப் - பெட்டை எண்ணம் உயர்ந்தே - அத் 
	தென்னையிற் கூடிப்பின் புன்னையிற் பாய்ந்தது, பின்னும் அழைக்கும் சிட்டு.
  
	அணில்
  கீச்சென் றுகத்தி - அணில் கிளையொன் றில்ஓடிப் - பின் 
	வீச்சென்று பாய்ந்துதன் காதலன் வாலை வெடுக்கென்று தான் கடிக்கும்.
  
	ஆச்சென்று சொல்லி - ஆண் அணைக்க நெருங்கும் - உடன் பாய்ச்சிய அம்பெனக் 
	கீழ்த்தரை நோக்கிப் பறந்திடும் பெட்டை அணில்!
  மூச்சுடன் ஆணோ - அதன் 
	முதுகிற் குதிக்கும் - கொல்லர் காய்ச்சும் இரும்பிடை நீர்த்துளி ஆகக் 
	கலந்திடும் இன்பத் திலே.
  ஏச்சுக்கள் அச்சம் - தம்மில் எளிமை வளப்பம் 
	- சதிக் கூச்சல் குழப்பங்கள் கொத்தடி மைத்தனம் கொஞ்சமும் இல்லை அங்கே!
  
	வானும் முல்லையும்
  எண்ணங் கள்போலே - விரி வெத்தனை கண்டாய்! - இரு 
	கண்ணைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள் கூடிச் சுடர்தரும் வான்!
  
	வண்ணங் களைப்போய்க் - கரு மாமுகில் உண்டு - பின்பு பண்ணும் முழக்கத்தை, 
	மின்னலை, அம்முகில் பாய்ச்சிய வானவில்லை,
  வண்ணக் கலாப - மயில் 
	பண்ணிய கூத்தை - அங்கு வெண்முத்து மல்லிகை கண்டு சிரித்தனள்! மேல்முத்தை 
	வான் சொரிந்தான்!
  விண்முத் தணிந்தாள் - அவள்  மேனி சிலிர்த்தாள்! - 
	இதைக் கண்ணுண்ண உண்ணக் கருத்தினி லின்பக் கடல்வந்து பாய்ந்திடுதே!
  
	மனிதர்
  மஞ்சம் திருத்தி - உடை மாற்றி யணிந்தே - கொஞ்சம் கொஞ்சிக் 
	குலாவிட நாதன் வரும்படி கோதைஅ ழைக்கையிலே,
  மிஞ்சிய சோகம் - மித  
	மிஞ்சிய அச்சம் - "என் வஞ்சியும் பிள்ளையும் நானிறந்தால் என்ன வாதனை 
	கொள்வாரோ?"
  நெஞ்சிலிவ் வாறு - நினைந் தங்குரைக் கின்றான்: - "அடி 
	பஞ்சைப் பரம்பரை நாமடி! பிள்ளைகள் பற்பலர் ஏதுக்" கென்பான்.
  கஞ்சி 
	பறித்தார் - எழுங் காதல் பறித்தார் - கெட்ட வஞ்சகம் சேர்சின்ன மானிடச் 
	சாதிக்கு வாய்த்த நிலை இதுவோ!
  
	
	  
	 
	 
	
					
	
	1.10. 
	காட்சி இன்பம் 
	
					 
	குன்றின்மீது நின்று கண்டேன் 
	கோலம் என்ன கோலமே! பொன் ததும்பும் "அந்திவானம்" போதந் தந்த தே - டி - 
	தோழி! குன்றின்மீது... 
  முன்பு கண்ட காட்சி தன்னை முருகன் என்றும் 
	வேலன் என்றும் கொன் பயின்றார் சொல்வர்; அஃது குறுகும் கொள்கை அன் - றோ - 
	தோழி! குன்றின்மீது... 
  கண்ணும் நெஞ்சும் கவரு கின்ற கடலை, வானைக் 
	கவிஞர் அந்நாள் வண்ண மயில் வேலோன் என்றார்; வந்ததே போர் இந் - நாள் - 
	தோழி! 
  		 குன்றின்மீது...
  எண்ண எண்ண இனிக்கும் காட்சிக் கேது கோயில்? 
	தீபம் ஏனோ? வண்ணம் வேண்டில் எங்கும் உண்டாம் மயில வெற்பும் நன் - றே - 
	தோழி! குன்றின்மீது... 
  பண்ண வேண்டும் பூசை என்பார் பாலும் தேனும் 
	வேண்டும் என்பார் உண்ண வேண்டும் சாமி என்பார் உளத்தில் அன்பு வேண் - டார் 
	- தோழி! குன்றின்மீது... 
  அன்பு வேண்டும்; அஃது யார்க்கும் ஆக்கம் 
	கூட்டும் ஏக்கம் நீக்கும்! வன்பு கொண்டோ ர் வடிவு காட்டி வணங்க என்று 
	சொல் - வார் - தோழி! குன்றின்மீது... 
  என்பும் தோலும் வாடு கின்றார் 
	"ஏழை" என்ப தெண்ணார் அன்றே துன்பம் நீக்கும் மக்கள் தொண்டு சூழ்க வையம் 
	தோ - ழி - வாழி! குன்றின்மீது... 
	 
	   |