Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil Language & Literature > Paventhar Bharathidasan - பாரதிதாசன் >  icai amutu - இசை அமுது: 1. காதல் பகுதி > 2.தமிழ்ப் பகுதி > 3. பெண்கள் பகுதி

Literary Works of Bharathidaasan
( Kanakasubbaratnam, 1891-1964)
புரட்சி கவிஞர் பாரதிதாசன்
(கனகசுப்பரத்னம், 1891 - 1964) படைப்புகள்

icai amutu - இசை அமுது - 2. தமிழ்ப் பகுதி

Acknowledgement: Etext Preparation and Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Source  Icai amuthu by Bharathidasan, Published by Pari Nilayam, 184 Broadway, Chennai 600100. © Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



 

1.32 தமிழ்


வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!



1.33 தமிழ்ப் பள்ளு
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! -- தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே -- ஆடுவமே!

கோடுயர் வேங்கடக் குன்றமுதல் -- நல்ல
குமரிமட்டும் தமிழர் கோலங் கண்டே
நாம் -- ஆடுவமே...

மானிடம் என்னுமோர் ஆதிப்பயிர் -- தமிழ்
மக்களென் றேகுதித் தாடுவமே!
கானிடை வாழ்ந்திட்ட மனிதர்க்கெலாம் -- நல்ல
கதியினைக் காட்டினர் தமிழ ரென்றே
நாம் -- ஆடுவமே...

மூலமென்றே சொல்லல் முத் தமிழாம் -- புவி
மூர்க்கம் தவிர்த்ததும் அப் புத்தமுதாம்!
ஞாலமெலாம் தமிழ், தமிழர்களே -- புவி
நாம் எனவே குதித் தாடுவமே!
நாம் -- ஆடுவமே...

வானிடை மிதந்திடும் தென்றலிலே -- மணி
மாடங்கள் கூடங்கள் மீதினிலே,
தேனிடை ஊறிய செம்பவழ -- இதழ்ச்
சேயிழை யாரொடும் ஆடுவமே!
நாம் -- ஆடுவமே...

கவிதைகள், காவியம், உயர்கலைகள் -- உளம்
கவர்ந்திடும் சிற்பமும் சிறந்தனவாம்
குவிகின்ற பொன்பொருள் செந்நெலெலாம் -- இங்குக்
குறையில வாம் என் றாடுவமே!
நாம் -- ஆடுவமே...



1.34 நெஞ்சுக்கு நீதி
சூதும் வாதும் நிறைந்த பூதலமீது நல்லார்
ஓதும்வழி நடந்தால் யாதும் துயரமில்லை
ஏதும் சந்தேகம் உளதோ -- நெஞ்சே இதில்
தீது சிறிதும் உளதோ?

சாதி சமயக்கடை வீதியின் அப்பால்ஒரு
சோதி அறிவிற் சரி நீதி விளங்கும் அதைக்
காதினில் தினம் கேட்பாய் -- நெஞ்சே இந்த
மேதினி தனை மீட்பாய்!

கூழுமில்லாது நாட்கள் ஏழும்பசித் துன்பமே
சூழும்படியே பிறர் தாழும்நிலை தவிர்க்க
வாழும் முறைமை சொல்வார் -- நெஞ்சே நல்லார்
பாழும் இருளைக் கொல்வார்!

மேழி உழவன் பாட்டும், கோழியின் ஆர்ப்பும் கேட்டாய்
ஆழியிற் கதிர்ஏறும் நாழிகை யாயிற்றே
வாழிய மனப்பாவாய் -- அறிஞர் காட்டும்
ஊழியம் செயப் போவாய்!



1.35 தமிழர் முரசு
உயர்வென்று கொட்டுக முரசே -- நல்ல
உண்மைத் தமிழர்கள் வாழ்வு!
அயர்வில்லை அச்சமிங் கில்லை -- புி
ஆளப் பிறந்தவன் தமிழன்.
உயர்வென்று கொட்டுக முரசே!

அயல் என்று கொட்டுக முரசே!-- உற
வான திராவிடர் அல்லார்!
துயர் செய்ய எண்ணிடும் பகைவர் -- திறம்
தூள் என்று கொட்டுக முரசே!
உயர்வென்று கொட்டுக முரசே!

அறிவுள்ள திராவிடர் நாட்டில் -- சற்றும்
ஆண்மை யில்லாதவர் வந்து
நமர்பசி கொள்ள நம்சோற்றை -- உண்ண
நாக்கைக் குழைப்ப துணர்ந்தோம்.
உயர்வென்று கொட்டுக முரசே!

தமிழ்நாடு தமிழருக் கென்றே -- இந்தச்
சகத்தில் முழக்கிடு முரசே!
நமைவென்ற நாட்டினர் இல்லை -- இதை
நாற்றிசை முற்றும் முழக்கு!
உயர்வென்று கொட்டுக முரசே!



1.36 எழுச்சி
தமிழனே இது கேளாய் -- உன்பால்
சாற்ற நினைத்தேன் பல நாளாய்!

கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு
காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு!
நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு
நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு!
தமிழனே இது கேளாய்

தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு;
தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு!
கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு
காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு.
தமிழனே இது கேளாய்

வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார்.
தமிழனே இது கேளாய்



1.37 எந்நாள்?


அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?
அந்த வாழ்வுதான்

இந்த மாநிலம் முழுதாண் டிருந்தார்
இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர்
அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?

ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்;
ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்!
புலி, வில், கயல் கொடி மூன்றினால்
புது வானமெங்கும் எழில் மேவிடும்
அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?

குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு
கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை.
பிற மாந்தர்க்கும் உயி ரானதே
பெறலான பேறு சிறி தல்லவே!
அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?



1.38 பாண்டியன்மேற் காதல்


பாண்டியன் என் சொல்லைத் தாண்டிப் போனாண்டி,
பாண்டியன் என் சொல்லை...

ஈண்டு மயலில்நான் தூண்டிலில் மீனாய்
மாண்டிட விடுத்தே வேண்டிட வேண்டிட,
பாண்டியன் என் சொல்லை...

தமிழிசைப் பேச்சும், செங்கோலோச்சும்;
தடக்கை வீச்சும், காதலைப் பாய்ச்சும்,
இமைப்பினில் ஓடி அவனைத் தேடி
என்னகம் நாடி வாடிபோடி
பாண்டியன் என் சொல்லை...

பிரிந்திடும் போது நெஞ்சு பொறாது;
வரும்போது பேசா திருக்க ஒண்ணாது
எரிந்திடும் சினத்தில் எதிர்வரு வானேல்
என்னுயிர் தாவிடும் அன்னவன் மேல்
பாண்டியன் என் சொல்லை...



1.39 தமிழன்


தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை!
தமிழகமேல் ஆணை!
தூயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கின்றேன்:

நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்,
ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்.

தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்!
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!

"தமக்கொரு தீமை" என்று நற்றமிழர்
எனைஅழைத்திடில் தாவி
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!

மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்தஎன் மற வேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்!

ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்!



1.40 இன்பத் தமிழ்


இன்பந் தருந்தமிழில் அன்பு பிறந்ததுண்டு;
துன்பம் இனியு முண்டோ
சொல் சொல் சொல் பகையே!
முன்பு துருப்பிடித்தி ருந்த படைக்கலமாம்
முத்தமிழ் ஒளி அறிந்து
செல் செல் செல் பகையே!
இன்பந் தருந்தமிழில்...

தெள்ளு தமிழில்இசைத் தேனைப் பிழிந்தெடுத்துத்
தின்னும் தமிழ் மறவர்
யாம் யாம் யாம் பகையே!
துள்ளும் பகைமுடித்துக் கூத்திடுவோம் தமிழர்
கொள்கை நிறைவ டைந்து
போம் போம் போம் பகையே!
இன்பந் தருந்தமிழில்...



1.41 உலகின் நோக்கம்


உவகை உவகை உலகத்தாயின் கூத்து! -- வந்து
குவியுதடா நெஞ்சில்
உவகை உவகை!

எவையும் தன்னுள் ஆக்கிய பெருவெளி
எங்கும் அடடே தாயின் பேரொளி!
உவகை உவகை!

அவிழும் கூந்தல் வானக் கருமுகிலாய் -- இடையினின்
றலையும் பூந்துகில் பெருவெளி எங்கும் போம்
தவழப் புதுநகை மின்னித் துலங்கும்
தாய்நின் றாடிய அடிஇடி முழங்கும்
உவகை உவகை!

தொடுநீள் வானப் பெருவில் ஒருகையில் -- பெரும்புறம்
தூளா கிடவரு கதிர்வேல் ஒருகையில்
அடுநீள் விழியிற் கனலைப் பெருக்கி
ஆடும் திறல்கண் டோடும் பகைதான்
உவகை உவகை!

அகலொளி விளக்கு நிலவினில் அவள்ஆடும் -- ஆடிநின்
றந்தமி ழின்பத் தென்பாங்கிற் பாடும்
துகளறு விண்மீன் துளிகள் பறக்கத்
துடிஇடை நெளியும் துணைவிழி உலவும்
உவகை உவகை!

அறிவே உயிராய் அதுவே அவளாகி -- மற்றுள
அறமென்ப வெலாம் அழியும் எனவோதிக்
குறியும் செயலும் ஒன்றாய் இயலக்
கூத்தாடுந் தாய் பார்த்திடு தோறும்
உவகை உவகை!

மடமைப் பகைமையும் சாகப் பின்வருமோர் --கொடிதாம்
வறுமைத் தீயும் அலறிப் புறமேக
அடிமைத் தனமே துகள் துகளாக
ஆடுந் தாயவள் நாளும் வாழிய!
உவகை உவகை!




1.42 தமிழ் நாடு


சேரன் செங்குட்டு வன்பிறந்த
வீரம் செறிந்த நாடிதன்றோ?
சேரன் செங்குட்டுவன்...

பாரோர் புகழ் தமிழ்ச் சேயே
பகை யஞ்சிடும் தீயே
நேரில் உன்றன் நிலையை நீயே
நினைந்து பார்ப் பாயே.
சேரன் செங்குட்டுவன்...

பண்டி ருந்த தமிழர் மேன்மை
பழுதாக முழு துமே
கண்டி ருந்தும் குகையிற் புலிபோல்
கண்ணு றக்கம் ஏனோ?
சேரன் செங்குட்டுவன்...



1.43 தமிழ்


வெண்ணி லாவும் வானும் போலே
வீரனும்கூர் வாளும் போலே
வெண்ணிலாவும் வானும் போலே!

வண்ணப் பூவும் மணமும் போலே
மகர யாழும் இசையும் போலே
கண்ணும் ஒளியும் போலே எனது
கன்னல் தமிழும் நானும் அல்லவோ?
வெண்ணிலாவும் வானும் போலே!

வையகமே உய்யு மாறு
வாய்த்த தமிழ் என்அரும் பேறு!
துய்யதான சங்க மென்னும்
தொட்டிலில் வளர்ந்த பிள்ளை
(தம்) கையிலே வேலேந்தி இந்தக்
கடல் உலகாள் மூவேந்தர்
கருத் தேந்திக் காத்தார்; அந்தக்
கன்னல் தமிழும் நானும் நல்ல
வெண்ணிலாவும் வானும் போலே!



1.44 அன்றும் இன்றும்


பண்டு தமிழ்ச் சங்கத்தை
உண்டு பண்ணிய மன்னன் சீரெல்லாம்,
விண்டு புகழ்ந்து பாடி
இன்னும் வியக்கின்றார் இப் பாரெல்லாம்.

அண்டும் புலவர்க் கெல்லாம்
அந்நாள் மன்னர் கொடுத்த கொடைதானே,
தண்டமிழ் இந்நாள் மட்டும்
சாகாமைக்கே அடிப்படை மானே!

புலவர் நினைப்பை யெல்லாம்
பொன் னெழுத்தால் பதித்து நூலாக்கி,
நலம் செய்தா ரடிமானே
நம் தமிழ்வேந்தர் நம்மை மேலாக்கி!

இலை என்று புலவர்க்கோ
எடை யின்றிப் பொன்தந்தார் மூவேந்தர்,
கலை தந்தார் நமக் கெல்லாம்
அதனால் இன்றைக்கு நாம்தமிழ் மாந்தர்!

 

 


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home