Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Struggle for Tamil Eelam  > தனது விரலால் தனது கண்ணையே குத்திக் கொள்கின்றதா இந்தியா? - மு.திருநாவுக்கரசு 

TAMIL EELAM STRUGGLE FOR FREEDOM

தனது விரலால் தனது கண்ணையே
குத்திக் கொள்கின்றதா இந்தியா?

மு.திருநாவுக்கரசு 

25 October 2008


‘‘சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா, இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் 1942 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அப்போது பத்திரிகையாளர்கள் இந்தியா பற்றிய சுதந்திர இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கும் என்று டி.எஸ்.சேனநாயக்காவிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்.

'விரும்பியோ விரும்பாமலோ இலங்கையின் நிலைப்பாடு எப்போதும் இந்தியா பக்கம்தான் அமையமுடியும்" என்பதே.

ஆனால், அவர் 1948 இல் சுதந்திரமடைந்த இலங்கையின் முதலாவது பிரதமரான போது இந்தியாவிற்குப் பாதகமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை பிரித்தானிய அரசுடன் செய்து கொண்டார்.

அதன்படி இலங்கையில் திருகோணமலையில் பிரித்தானிய கடற்படைத்தளமும், கட்டுநாயக்காவில் பிரித்தானிய விமானப்படைத்தளமும் அமைக்கப்பட்டன.

இவ்வாறு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவிற்கு எதிராக இந்தியாவின் எதிர்நாடுகளுடன் கூட்டுச்சேரும் போக்கு சிங்களத் தலைவர்களிடம் எப்போதும் உண்டு.

பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் தொடர்பாக 1970 ஆம் ஆண்டு இந்தோ-பாக்கிஸ்தானிய யுத்தம் வெடித்தபோது அப்போதைய இலங்கைப் பிரதமராயிருந்த திருமதி.சிறீமாவோ பண்டாரநாயக்கா பாக்கிஸ்தானிற்கு அனுசரணையாக நடந்து கொண்டார்.

அதாவது, பாக்கிஸ்தானிய இராணுவம் சிவில் உடையில் இலங்கைக்கூடாக விமானப் பயணங்களை மேற்கொள்ள பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா வகை செய்து கொடுத்திருந்தார்.

இந்நிலையில் யுத்தம் முடியும் வரை இலங்கையை இராணுவ ரீதியாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பீல்ட் மார்ஷல் மனோக்ஷா அன்றைய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் வலியுறுத்தியபோது இந்தியப் பிரதமர் இராஜதந்திர வழிமுறையின் மூலம் இலங்கைப் பிரதமரை அணுகி கொழும்பிற்கூடான பாக்கிஸ்தானிய இராணுவத்தின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினார்.

டி.எஸ்.சேனநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். சிறீமாவோ பண்டாரநாயக்கா சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்தவர்.

மேற்படி இரண்டில் ஒரு கட்சிதான் இலங்கையில் மாறி மாறிப் பதவிக்கு வருவதுண்டு. மேற்படி இரு கட்சிகளும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைத்தான் உலகரங்கில் மேற்கொள்கின்றன என்பது ஒரு வரலாற்றுப் போக்காய் உள்ளது.

மேற்படி இரு கட்சிகளுக்கும் அடுத்த பெரும் கட்சியாக இருப்பது ஜனதா விமுக்தி பெரமுன என்ற ஜே.வி.பி.யினர்.

இந்த மூன்றாவது கட்சியாகிய ஜே.வி.பி. மேற்படி இரு பெரும் கட்சிகளையும் விட அதிதீவிர இந்திய எதிர்ப்பு வாதம் கொண்ட கட்சியாகும்.

இந்த வகையில் இலங்கைத்தீவில் உள்ள மூன்று முக்கிய சிங்களக் கட்சிகளும் தெளிவாக இந்திய எதிர்ப்பு வாதத்தையும் அதன்வழி ஈழத்தமிழர் எதிர்ப்பு வாதத்தையும் தமது அடிப்படைக் கொள்கைகளாய் பின்பற்றி வருகின்றன.

ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிங்கள ஆட்சியாளரை அணைத்து நடத்த வேண்டும் என்ற கொள்கையை எப்போதும் கொண்டுள்ளானர்.

சிங்கள ஆட்சியாளரை அணைத்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஈழத்தமிழரின் நலன்களை பலியிடுவதில் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு எப்போதும் கவலை இல்லை.

பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் கொள்கை வகுப்புக் குழுத் தலைவராக இருந்த ஜி.பார்த்தசாரதி சிங்கள ஆட்சியாளர்களின் கபடத்தனங்களை அதிகம் விளங்கி வைத்திருந்தவர் ஆவார். அவரைப் போலவே ஏ.பி.வெங்கடேஸ்வரனும் திறமை மிக்க இராஜதந்திரி ஆவார்.

இதில் முதலாவது சிறந்த இராஜதந்திரியாயிருந்த ஜி.பார்த்தசாரதியை அரங்கிலிருந்து அகற்றுவதில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெற்றி பெற்றார்.

ஜி.பார்த்தசாரதி ஒரு தமிழன் என்றும், அவர் தமிழருக்கு சாதகமாகவே பேச்சுவார்த்தையில் நடந்துகொள்வாரென்றும் எனவே அவரை நீக்கினால்தான் தாம் பயனுள்ள முறையில் பேசமுடியும் என்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்திய அரசை வற்புறுத்தியதன் பெயரில் ஜீ.பார்த்தசாரதி 1985 ஆம் ஆண்டு அரங்கைவிட்டு அகற்றப்பட்டார்.

அத்துடன் ஏ.பி.வெங்கடேஸ்வரனும் கொள்கை வகுப்பில் புறக்கணிக்கபட்ட நிலையில் தனது வெளியுறவுச் செயலர் பதவியை 1987 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இராஜினாமா செய்தார்.

மேற்படி இரு பெரும் இராஜதந்திரிகளும் அரங்கத்தில் இல்லாதபோது சிங்கள ஆட்சியாளர்களால் ஏனைய இந்திய இராஜதந்திரிகளை இலகுவில்
ஏமாற்றுவது சாத்தியப்பட்டது.

ஈழத்தமிழருக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் இந்தியாவின் நலனுக்கேற்படும் பாதிப்பாய் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்திய இராஜதந்திர வட்டாரங்களுக்குள் காணப்படும் உள்முரண்பாட்டை சரிவரக் கையாள்வதில் சிங்கள இராஜதந்திரிகள் கைவந்தவர்கள்.

தொடர்ச்சியறாது 2,300 ஆண்டுகால நிறுவனமான பௌத்த மகாசங்கம் சிங்கள மக்களிடம் உண்டு.

எழுத்தும், அறிவும் கொண்ட பன்மொழிப் புலமைமிக்க, முற்றிலும் அரசியல் மயப்பட்ட ஒரு நிறுவனமாய் பௌத்த மகாசங்கம் உள்ளது.

பழைய வரலாற்று சித்தாந்தத்தினால் வற்றி இறுகிப்போயிருக்கும் இந்த பௌத்த நிறுவனம் தொடர்ச்சியாக இந்திய எதிர்ப்பு வாதத்தையும் தமிழின எதிர்ப்பு வாதத்தையும் காவிப்பேணி வருகின்றது.

இத்தகைய தொடர்ச்சி குன்றாத நிறுவனத்தினால் அரசமைப்புடன் கூடிய இராஜதந்திர பாரம்பரியம் 2300 ஆண்டுகளுக்கு மேலாய் பேணப்பட்டு வருகின்றது.

இலங்கையில் அரசும் பௌத்த மகாசங்கமும் ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரிக்க முடியாதவாறு இணைந்துள்ளவை.

இப்பின்னணியில் நோக்குகையில் சிங்கள அரசியல்வாதிகளின் இராஜதந்திரம் மிகவும் மெருகானதாய் இருக்க முடியும்.

பல கட்டங்களில் சிங்கள இராஜதந்திரம் இந்திய இராஜதந்திரத்தை மிகவும் இலகுவாகவே தோற்கடித்துள்ளது.

சிங்கள இராஜதந்திரமானது பலக்கோட்பாடில் நம்பிக்கை கொண்டதல்ல. அது தந்திரோபாயத்திலேயே நம்பிக்கை கொண்டது.

பெரிய இந்தியாவை அது பலத்தால் வெல்லமுடியும் என்று நம்பவில்லை.

தன்னை ஒரு மிகச் சிறிய அரசாக விளங்கிக்கொண்ட இலங்கை அரசு எப்போதும் தந்திரோபாயத்தின் மீதே தன்னை தக்கவைத்துக் கொண்டது.

இந்திய உபகண்டத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைத்தீவு 69 மடங்கு சிறியதாகும்.

இத்தகைய பிரமாண்டமான இந்தியாவுக்கு கீழ் தென்பகுதியில் உள்ள சிறிய இலங்கைத் தீவானது தன்னை 2,300 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்தியாவின் பிடியிலிருந்து தற்காக்க முடிந்துள்ளது என்பது ஓர் அபூர்வமான உண்மையாகும்.

இந்தியாவின் அரசியல் பிடிக்குள் நேரடியாய்ச் சிக்காது ஒரு சிறிய தீவால் 2,300 ஆண்டுகளுக்கும் மேல் தாக்குப்பிடிக்க முடிந்தமை சிங்கள இராஜதந்திரத்தின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சில தற்காலிகமான பின்னடைவுகளுக்கு அநுராதபுர அரசு உட்பட்டிருந்த போதிலும் இறுதியில் சிங்களப் பௌத்த அரசு இந்தியாவிற்கு எதிராகத் தன்னை நிலைநிறுத்துவதில் இறுதிவெற்றியை இதுவரை ஈட்டியுள்ளது.

இப்படி ஒரு கூட்டுமொத்தக் கணக்கை பார்க்க இத்திய இராஜதந்திரிகள் தவறக்கூடாது. ஈழத்தமிழரைத் தோற்கடித்து இலங்கைத்தீவு முழுவதையும் சிங்களமயமாக்கிவிட்டால் இறுதியில் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு அந்நிய சக்திகளுடனும் இலகுவாக கூட்டுச்சேரலாம் என்பதே சிங்கள இராஜநதிரத்தின் நோக்கு நிலையாகும்.

இலங்கைத்தீவு முழுவதையும் சிங்கள பௌத்த மயமாக்கும் முயற்சியில் கிழக்கு மாகாணம் வரை பாரிய வெற்றியை இதுவரை சிங்கள அரசு எட்டியுள்ளது.

தன்வாயால் கொள்ளக்கூடிய அளவு சோற்றை உண்பது போல் சிங்கள அரசு நாளும் பொழுதும் படிப்படியாக ஈழத்தமிழரை விழுங்கி வருகின்றது.

கடந்த 60 ஆண்டுகளாக இது விடயத்தில் உறுதியாக கொள்கை நிலைப்பாட்டுடன் சிங்கள அரசு, ஈழத்தமிழரை ஏப்பமிட்டு வருகின்றது.

இப்போக்கை இந்திய அரசு தொடர்ந்தும் அசட்டை செய்யுமேயானால் இறுதியில் இதற்கு முதற்பலியாகப் போவது தமிழகமும் தென்னிந்திய மாநிலங்களுமே.

பதவிக்கு வரும் சிங்கள கட்சிகளுள் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி, இந்தியாவுக்கு எதிரான மேற்குலக அரசுகளுடன் கூட்டுச்சேரும் கொள்கையைப் பின்பற்றி வந்தது.

மற்றைய கட்சியான சுதந்திரக்கட்சி இந்தியாவுக்கு எதிரான ஆசிய நாடுகளுடன் கூட்டுச்சேரும் கொள்கையைக் கொண்டது.

தற்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இதில் இரண்டாவது வகையாகும்.

குறிப்பாக இந்தியாவிற்கு எதிரான இந்தியாவின் அயல்நாடுகளுடன் கூட்டுச்சேர்வதே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கையாகும்.

இது மகா ஆபத்தானது.

இலங்கையில் நிகழ்ந்து வரும் இன ஒடுக்குமுறையை வைத்துக்கொண்டு கொழும்பு அரசாங்கத்தை தம் கைக்குள் கொண்டுவர இந்தியாவின் எதிர் அரசுகள் முயன்று வருகின்றன.

இத்தகைய வாய்ப்பான நிலையைப் பயன்படுத்தி சிங்கள இராஜதந்திரிகள் ஒருபுறம் இந்தியாவிடம் தமது பேரம் பேசும் சக்தியை வளர்த்தும் மறுபுறம் இந்தியாவுக்கு அடிப்படைப் பலமான ஈழத்தமிழரை நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாய் நசுக்கியும் வருகின்றனர்.

இவ்வாறு அரசாங்கத்தில் காணப்படும் அத்தனை வாய்ப்புக்களையும் சிங்கள இராஜதந்திரிகள் தமது சாதகமாக்கிக் கொள்கின்றனர்.

உதாரணமாகப் பார்க்கையில் 'தமிழ்ப்பயங்கரவாதத்தை" வெற்றிகொள்ள இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவிகளைச் செய்ய மறுக்குமிடத்து தாம் இந்தியாவுக்கு விருப்பமில்லாத நாடுகளிடம் ஆயுதம் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு என்று சிங்கள ஆட்சியாளர் கூறி, இந்திய அரசிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இங்குள்ள கேள்வி என்னவெனில், யாரிடம் இலங்கை அரசு ஆயுதங்களைப்பெற்றால் என்ன அது தமிழரை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றது என்பதேதான்.

எனவே, பாக்கிஸ்தானிடம் ஆயுதத்தைப்பெற்றால் என்ன? இந்தியாவிடம் ஆயுதத்தைப்பெற்றால் என்ன? அது தமிழரை அழிக்கப் பயன்படுத்தபடுகின்றது என்பதேதான்.

இது விடயத்தில் தனது இறுதி இலக்கை சிங்கள அரசு ஈட்டிக்கொள்கிறது.

மேலும், இலங்கையில் தமிழரை தோற்கடிப்பதன் மூலம் இறுதியிலும் இறுதியாக இந்தியாவை தோற்கடிப்பது என்ற இலக்கை நோக்கி சிங்கள அரசு முன்னேறுகின்றது என்பதே பொருள்

சிங்கள ஆட்சியாளர் தமது பிரதான பாரம்பரிய எதிரியாக கருதுவது இந்தியாவையே.

இந்த வகையில் சிங்கள அரசியல்வாதிகள் ஈழத்தமிழரை இந்திய விரிவாக்கத்திற்கான கருவியாகக்கண்டு அச்சமடைகிறார்கள்.

ஆதலால் ஈழத்தமிழரை தோற்கடிப்பதிலிருந்தே இந்தியாவிற்கு எதிரான தமது போரை சிங்கள ஆட்சியாளர் ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழரை ஒடுக்குவதற்கு சிறிலங்கா அரசுக்கு உதவுவதன் மூலம் அது தனக்கு எதிராகத் தானே போர் புரியும் நிலைக்குப் போய்விட்டது எனலாம்.

இதனை சற்று விரிவாக நோக்குவோம்.

ஈழத்தமிழரை தமிழகத்தின் நீட்டமாகவே சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள பௌத்த மகா சங்கத்தினரும் பார்க்கின்றனர்.

இது அவர்களின் மனதில் இருக்கும் ஒரு வரலாற்றுப் பதிவு.

பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் வரை இதுதான் சிங்கள மாணவர்களுக்கும் கற்பிக்கப்படுகின்றது.

அதாவது, ஈழத்தமிழர் இந்தியாவின் கைக்கூலிகள் எனவும், இந்திய விரிவாக்க வாதத்தின் கருவியாக அவர்கள் செயற்படுகின்றனர் எனவும், போதித்தே அவர்களை சிங்கள அரசு கொன்றொழித்து வருகின்றது.

அந்த வகையில் இந்தியா மீதான அச்சத்தின் பெயரால்தான் ஈழத்தமிழரை சிங்கள அரசு தொடர்ச்சியாக கொன்றொழித்து வருகின்றது என்ற அடிப்படை அரசியல் உண்மையை நாம் புரிந்து கொள்ளலாம்.

இதனை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அறிவுபூர்வமாய் கருத்தில் எடுக்க மறுத்து வருகின்றார்கள்.

அனைத்து முன்னணி சிங்கள கட்சிகளிடமும் இந்திய எதிர்ப்பு வாதம் உண்டு.

இதில் ஜே.வி.பி. கட்சியினர் மிகவும் வெளிப்படையாகவே இந்திய எதிர்ப்பு வாதத்தை முன்வைப்பவர்கள்.

1971 ஆம் ஆண்டு ஜே.வி.பியினர் கிளர்ச்சியில் ஈடுபட்ட காலத்தில் அவர்கள் முன்வைத்த 5 கொள்கைகளுள் 'இந்திய விரிவாக்க வாதம்" என்ற கொள்கையே முதலாவதாகும்.

இந்தக் கொள்கையின் படி இந்திய விரிவாக்க வாதத்தின் கருவிகள் ஈழத்தமிழர் என தெரிவித்தனர்.

இன்றும் இந்தக் கொள்கையையே அவர்கள் பின்பற்றி தமிழீழ மக்களை இராணுவ ரீதியில் அழித்தொழிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அன்றிலிருந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம் 10 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்திய எதிர்ப்புக் கொள்கையையே அனைத்துலக அரங்கில் தெளிவாய் பின்பற்றி வந்தது.

அன்று இந்தியாவிற்கு எதிராக இருந்த நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து ஜே.ஆர். ஈழத்தமிழரை இராணுவ ரீதியில் கொன்று குவித்து வந்தார்.

அப்போது இந்திய அரசு, இராணுவ ரீதியில் தலையிடும் நிலை தோன்றிய போது ஜே.ஆர். தந்திரோபாயமாக இந்திய அரசுடன் கூட்டுச்சேர்ந்து ஈழத்தமிழரை கொன்றொழிக்கும் இராஜதந்திர திட்டத்தை தீட்டினார்.

இந்தத் திட்டத்தின் பிரகாரம் 1987 ஆம் ஆண்டு ஜே.ஆர். இந்திய அரசுடன் கபடத்தனமான ஒரு ஒப்பந்ததை செய்து கொண்டார்.

இந்த ஒப்பந்தத்தை அவர் செய்தபோது சிங்கள தீவிரவாதிகள் இதனை முதலில் எதிர்த்தனர்.

அப்போது ஜே.ஆர். பின்வருமாறு கூறினார்: 'என்னை சில நாட்களுக்கு நீங்கள் எதிர்ப்பீர்கள். ஆனால் பின்பு காலம் எல்லாம் என்னைப் பாராட்டுவீர்கள்"

இவ்வாறு கூறிய ஜே.ஆர். இந்தியாவையும் ஈழத்தமிழரையும் தந்திரமாக மோதவிட்டார்.

இது ஈழத்தமிழருக்கும் இந்தியாவிற்கும் இடையே ஆழமான பகைமையை உருவாக்கியது.

தனது அரசியற் சாணக்கியத்தில் ஜே.ஆர். வெற்றி பெற்றார்.

மேற்படி இந்தியாவிற்கும் - ஈழத் தமிழருக்கும் இடையே மூட்டப்பட்ட அரசியல் பகைமையானது இரு தரப்பினருக்கும் பேரிழப்புக்களை உருவாக்கியதுடன் விரும்பத்தகாத துயரங்களுக்கும் வழிவகுத்தது.

இது விடயத்தில் வீழ்ந்தது இந்தியாவும் ஈழத் தமிழரும்தான். ஆனால் வாழ்ந்ததோ சிங்கள இனவாதம் ஆகும்.

கடந்த காலம் இருதரப்பினருக்கும் துயரத்தில் முடிந்து விட்டது.

சிறிலங்காவின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா ஒருமுறை ஒரு ஆங்கில இராஜதந்திரியுடன் பேசிக்கொண்டிருந்த போது 'வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர் ஒருகாலம் இந்தியாவுடன் தம்மை ஒரு மாநிலமாய் இணைத்துக்கொள்வர் என்ற அச்சம் தனக்கு உண்டு" என்றாராம்.

அதற்கு அந்த ஆங்கில அதிகாரி 'கிழக்கு மாகாணம் இல்லாத வட மாகாணம் இந்தியாவுக்கு தேவைப்படாது. ஆகவே, கேக்கை வெட்டிச் சாப்பிடுவது
போல கிழக்கு மாகாணத்தைத் துண்டு துண்டாய் வெட்டி சிங்களமயமாக்கி விட்டால் மேற்படி அச்சம் அர்த்தமற்றதாகி விடும்" என்றாராம்.

இந்த வகையில் கிழக்கு மாகாணத்தை அரசியல்-இராணுவ அர்த்தத்திலும் புவியியல் அர்த்தத்திலும் கபளீகரம் செய்வதில் இன்றைய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பெரிதும் அக்கறை காட்டி வருகின்றார்.

இந்த வகையில் கிழக்கு மாகாணம் சிங்கள இனவாதத்தால் கபளீகரம் செய்யப்படுவது என்பது கூடவே இந்தியாவும் ஈழத்தமிழரும் தோற்கடிக்கப்படுகின்றனர் என்பதுதான்.

சிங்கள ஆட்சியாளர் எவரும் இந்தியாவுக்கு நண்பரல்ல. அவர்கள் 'பயங்கரவாதம்" என்ற பூச்சாண்டியை காட்டி இந்திய அரசை தம்பக்கம் அணைத்து ஈழத்தமிழரை ஒடுக்குவதற்காக இந்தியாவுடன் பாசாங்கான உறவைக் கொள்கின்றனர். அவ்வாறு ஈழத்தமிழர் ஒடுக்கப்பட்டதும் அவர்கள் இந்தியாவின் எதிர்நாடுகளுடன் பின்பு கூட்டுச்சேர்ந்து விடுவர்.

இதில் இந்திய இராஜதந்திரம் மோசம் போகப்போகின்றதா?

ஈழத்தமிழர் இல்லையேல் இலங்கையில் இந்தியாவுக்கு எதுவம் இல்லை. இலங்கைத் தீவில் இந்தியாவுக்கு எதுவுமில்லையேல் தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியா எதிரிகளின் கையில் கைதியாகிவிடும்.

அதேவேளை இந்தியா இல்லையேல் ஈழத்தமிழருக்கும் எதுவுமில்லை என்ற உண்மையையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியம்.

இலங்கைத்தீவு இந்தியாவுக்கு எதிரான அந்நிய நாடுகளின் கைக்குள் சிக்குண்ணுமானால் அதன் விளைவாக முதலில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியது தமிழகம்தான்.

ஆதலால் தமிழகத்தின் பாதுகாப்பு என்பது ஈழத்தமிழர்களின் பாதுகாப்பிலேயே உள்ளது.

மொத்தத்தில் இந்தியாவினதும் தமிழகத்தினதும் பாதுகாப்பானது ஈழத்தமிழரின் பாதுகாப்பில்தான் தங்கி உள்ளது. ஆதலால் வெள்ளம் வரும் முன்னே அணைகட்ட வேண்டும்.

பனிப்போரின் பின்னான காலத்திலும் பனிப்போரின் பின் பின்னான காலத்திலும் என தேசிய இனங்கள் பிரிந்து சென்ற தேசிய அரசுகள் உருவான வரலாறு சர்வதேச அரசியலில் அரங்கேறியுள்ளது.

இவ்வாறு 1990 ஆம் ஆண்டின் பின்பு இன்றுவரை 23 தேசிய இனங்கள் பிரிந்து சென்று தேசிய அரசுகளை உருவாக்கியுள்ள்மை சர்வதேச அரசியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யதார்த்தமாய் உள்ளது.

பெரிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு எதிரானவே மேற்படி தேசிய இனங்கள் பிரிந்து சென்று தேசிய அரசுகளை உருவாக்கின.

இத்தகைய நியதியும் நியாயமும் தமிழீழ மக்களுக்கும் முற்றிலும் பொருந்தும்.

அவர்களும் தேசிய உரிமையினதும், அதன் மிக அடிப்படையான ஜனநாயக உரிமையின் நிமித்தமும், அனைத்து வகை மனித உரிமைகளின் நிமித்தமும், சிங்கள இன ஒடுக்குமுறை ஆட்சியிலிருந்து பிரிந்து சென்று தனியரசை அமைக்க வேண்டியது ஒரு வரலாற்று நிர்ப்பந்தமாய் உள்ளது.

தமிழீழ மக்கள் ஏமாற்றப்பட்டவர்களாய், துரோகமிழைக்கப்பட்டவர்களாய், நீதியின் முன் கைவிடப்பட்டவர்களாய் பாதுகாப்பற்றவர்களாய், துயரப்படுபவர்களாய், தமது வாழ்வுரிமைகள் அனைத்தையும் இழந்தவர்களாய், ஐனநாயக வாழ்வை அடியோடு இழந்தவர்களாய், குரலற்றவர்களாய், வாழ்விடங்களை இழந்தவர்களாய், பிள்ளைகளை, சகோதரர்களை, உறவினர்களை, நண்பர்களை, காதலர்களை இழந்தவர்களாய், அங்கவீனம் உற்றவர்களாய், சொத்துக்களை இழந்தவர்களாய், சுகத்தை இழந்தவர்களாய், அடுத்து என்ன? அடுத்த நிமிடம் நடக்கபோவது என்ன? என்ற கேள்விகளுக்கு பதிலற்றவர்களாய், தொழில்துறைகளை இழந்தவர்களாய், மிகச்சாதாரண மிருகங்கள், பிராணிகள் என்பவற்றிற்கு இருக்கக்கூடிய உரிமைகள் கூட அற்றவர்களாய் அவதியுறுகின்றனர்.

இத்தகைய அவலங்களும் துயரங்களும் ஏன் ஏற்பட்டன? யாருக்காக துயருறுகிறார்கள்? ஏன் இத்துயரத்தை அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் தீர்க்கவோ கடக்கவோ முடியவில்லை?

மேற்படி தமிழீழ மக்களின் துயரத்திற்கான காரணங்களும் அத்துயரங்கள் நீண்டு செல்வதற்கான காரணங்களும் வெறும் மன வேகங்களுக்கு வெளியே அறிவுபூர்வமாகக் கண்டறிந்து யதார்த்தபூர்வமாக தீர்வுகாண வேண்டியது அவசியமானதாகும்.

அறிஞர்களே, ஆய்வாளர்களே, நீதிமான்களே உங்கள் புயங்களை விடவும் புருவங்களை உயர்த்தி நுண்மான் நுழை புலத்தால் கூர்ந்து பாருங்கள் இதயம் உள்ளவர்களே தமிழீழக் குழந்தைகளை, பருவப் பிள்ளைகளை, காதல் கனியத் துடிக்கும் இளம் உள்ளங்களை ஒருகணம் உங்கள் இதயங்களால் உரசிப்பாருங்கள். தமிழீழ மண்ணில் அவதியுறும் மக்களின் துயரங்களை அளர்ந்து பார்க்க பூமியின் அளவுமானி எதுவுமில்லை.

தமிழக மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் தெரியாத ஓர் உண்மை இருக்கிறது. கொள்கை வகுப்பாளர்களும், தீர்மானம் எடுப்போரும், தெரிய விரும்பாத, புரியமறுக்கின்ற ஒரு பக்கம் இருக்கின்றது.

அதாவது, சிங்கள ஆட்சியாளர்களால் தமிழீழ மக்கள் ஒடுக்கப்படுவதும் கொன்றொழிக்கப்படுவதும் இந்தியாவின் பெயரால்தான். தமிழீழ மக்கள் இரத்தம் சிந்துவதும், செத்து மடிவதும், துயரப்படுவதும் இந்தியாவிற்காகக்தான். இது ஒரு புரியப்படாத உண்மை. இனிமேலாவது புரிந்தேயாக வேண்டிய உண்மை அது.

 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home