Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Struggle for Tamil Eelam > International Frame & the Tamil  Struggle தமிழீழ விடுதலையும் சர்வதேச சமூகமும்

THE INTERNATIONAL FRAME &
THE TAMIL STRUGGLE

தமிழீழ விடுதலையும் சர்வதேச சமூகமும்

சுப்பிரமணியம்
Thinakural, 10 October 2005

".. தமிழ்த் தேசத்திற்கு பாரிய கடமையொன்று இருக்கின்றது. சர்வதேச சமூகம் நோக்கி அரசியலை முன்னெடுப்பதே அந்த பணி, இந்தப் பணி சர்வதேச சமூகத்தை நோக்கியிருக்க வேண்டுமே தவிர, சர்வதேச நாடுகளை நோக்கி இருக்கக் கூடாது... தமிழ்த் தேசத்தினை பொறுத்தவரை புலம் பெயர் மக்கள் அதற்குக் கிடைத்த மிகப் பெரிய சொத்து. இச் சொத்துகளை சரியாகப் பயன்படுத்தி சர்வதேச சமூகம் நோக்கி முன்னேற வேண்டும்..."


சமாதான முன்னெடுப்புகள் நெருக்கடி நிலைக்கு சென்றுகொண்டிருக்கும் இக்காலத்தில் அதனை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் ஐரோப்பிய யூனியன் புலிகளுக்கு பிரயாணத் தடையை விதித்துள்ளது.

சமாதான முன்னெடுப்புக் காலத்தில் அதனை விரும்பும் சர்வதேச சக்திகள் நடுநிலையாக இருப்பதுதான் சர்வதேச அறநெறி. அந்த அறநெறிக் கோட்பாட்டினை இத்தடையின் மூலம் ஐரோப்பிய யூனியன் குப்பைத் தொட்டியில் வீசியிருக்கின்றது.

புலிகளைத் தடைசெய்துள்ள அமெரிக்கா போன்ற நாடுகள் கூட யதார்த்தத்தினை கணக்கிலெடுத்து சமநிலையான அழுத்தங்களை இரு தரப்பிற்கும் கொடுக்க முனையும் போது ஐரோப்பிய யூனியன் மட்டும் திடீரென்று ஒரு பக்கம் சார்ந்து முடிவுகளை எடுத்திருப்பது சமாதானத்தின் எதிரிகளை ஊக்கப்படுத்தி முழுச் சமாதான செயற்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வாஷிங்டன் மாநாட்டில் சம பங்காளிகள் என்ற கோட்பாட்டை புறக்கணித்ததன் மூலம் தமிழ்த் தேசத்தை பேச்சுவார்த்தை வட்டத்திலிருந்து வெளியேற்றியது. ஜனாதிபதி நிழல் யுத்தத்தினை முடக்கி விட்டதன் மூலம் தமிழ்த் தேசத்தை யுத்த நிறுத்த வட்டத்திலிருந்து வெளியேற்றினார். தற்பொழுது ஐரோப்பிய யூனியன் புலிகளுக்கு தடை விதித்ததன் மூலம் முழுச் சமாதான வட்டத்திலிருந்தே தமிழ்த் தேசத்தை வெளியகற்றும் வேலையினை செய்து முடித்திருக்கின்றது.

தமிழ்த் தேசம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினை நம்பி சமாதானச் செயற்பாட்டிற்குள் வரவில்லை.

அவ்வாறு நம்பிக்கை கொள்வதற்கு சிங்கள தேசம் சிறிய அடையாளத்தினைக் கூட வரலாற்றில் விட்டு வைக்கவில்லை. முழுக்க முழுக்க சர்வதேச சமூகத்தினை நம்பியே சமாதானச் செயற்பாட்டிற்குள் வந்தது. அதுவும் சர்வதேச சக்திகளில் புலிகளை தடை செய்த நாடுகளை நம்பிவரவில்லை. புலிகளை தடை செய்யாது தமிழ்த் தேசத்தின் அபிலாஷைகளை நியாயபூர்வமாக அணுகிய ஐரோப்பிய யூனியனை நம்பித்தான் சமாதான முயற்சிகளுக்கு சம்மதித்தது. தற்போது ஐரோப்பிய யூனியனும் காலை வாரிவிட்ட பின் சமாதான முயற்சிகளில் தமிழ்த் தேசம் நம்பிக்கை கொள்வதற்கு எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை.

இணைத் தலைமை நாடுகளும் ஐரோப்பிய யூனியனின் முடிவிற்குப் பின்னர் அழுத்தம் கொடுக்கும் தகைமையை இழந்திருக்கின்றன. இந்நாடுகளில் அமெரிக்கா ஏற்கனவே தமிழ்த் தேசத்திற்கு எதிரான நிலையினை எடுத்திருப்பதனால் அழுத்தம் கொடுக்கும் தகைமையை இழந்திருக்கின்றது. ஜப்பான் அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் பாரிய அழுத்தத்தினை செலுத்தக் கூடிய நிலையில் இருக்கவில்லை. இந்நிலையில் ஒரேயொரு நம்பிக்கைக்குரிய சக்தியாக இருந்தது ஐரோப்பிய யூனியன் மட்டுமேதான். அதுவும் தற்பொழுது அந்த தகுதியை இழந்திருக்கின்றது.

சமாதானத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சக்திகள் எப்பொழுது ஒரு பக்கச்சார்பு நிலையினை எடுத்து சரிகின்றனவோ அப்போதே அழுத்தம் கொடுக்கும் தகைமையை இழந்துவிடுகின்றனர்.

இந்தியாவிற்கும் முன்னர் இதுவே நடந்தது. இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஜே.ஆர்.ஜெயவர்தனா அரசாங்கம் இந்தியாவிடம் சரணடைந்ததுடன் இந்தியா ஒரு பக்கச்சார்பு நிலையினை எடுத்து தமிழ்த் தேசத்தினை ஒடுக்கத் தொடங்கியது. அதன் பின்னர் இந்தியாவின் பாத்திரமும் இன விவகாரத்தில் இல்லாமல் போய்விட்டது.

இன்று இந்தியா எவ்வளவுதான் முயற்சித்தாலும் அந்தத் தகைமையினை பெற முடியவில்லை. தமிழ்த் தேசமும் இந்தியாவை ஏற்கும் நிலையிலில்லை. இன்று அதே நிலைக்கு ஐரோப்பிய யூனியனும் வந்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஸ்ரீலங்காவில் தனது சுரண்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான களம் உறுதியானதைத் தொடர்ந்து ஒரு பக்கச் சார்பு நிலையினை எடுத்துள்ளது.

ஐரோப்பிய யூனியனின் இந்த தீர்மானத்தில் பிரிட்டனே அதிக பங்கு செலுத்தியதாக செய்திகள் வருகின்றன. இது உண்மையானால் பிரிட்டன் இரண்டாவது தடவையாக தமிழ்த் தேசத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கின்றது. தனியான பிரதேசத்தில் வரலாற்று வழிவந்த தனியான பண்பாட்டு, கலாசார, அரசியல் அடையாளங்களுடன் வாழ்ந்த தமிழ்த் தேசத்தை ஸ்ரீலங்காவுடன் இணைத்து ஒற்றையாட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் முதலாவது துரோகத்தினை இழைத்தது. தாம் உருவாக்கிய ஆட்சியதிகார கட்டமைப்பில், தமிழ்த் தேசத்திற்கு இடம் கொடுக்காததன் மூலம் தமிழ்த் தேசத்தினை சிங்கள தேசத்தின் நிரந்தர அடிமைகளாக்கியிருந்தது.

இன்று தமிழ்த் தேசத்தின் அபிலாஷைகளை புறந்தள்ளி ஒரு பக்கச் சார்பான தீர்மானத்தினை எடுத்ததன் மூலம், இரண்டாவது தடவையாக துரோகம் இழைத்திருக்கின்றது.

இந்தத் துரோகத்தினை பிரிட்டன் தமிழ்த் தேசத்திற்கு மாத்திரம் ஆற்றியிருந்தது என கூற முடியாது. தனது காலனித்துவ ஆட்சியிலிருந்த சிறிய மக்கள் தொகையைக் கொண்ட தேசங்கள் எல்லாவற்றிற்கும் ஆற்றியிருக்கின்றது.

ஆபிரிக்க நாடுகளில் உருவாகியுள்ள தேசிய இன நெருக்கடிகள் இதற்கு நல்ல உதாரணம். இந்தியாவும் கூட இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.

ஐந்நூறுக்கும் மேற்பட்ட அரசுகளாக இருந்தவற்றை தனது சுரண்டல் வசதிகளுக்காக ஒன்றாக்கி பின்னர் சுதந்திரம் கொடுக்கும் போது வட இந்தியர்களிடம் மாத்திரம் ஆட்சி அதிகாரத்தினை ஒப்படைத்ததனால் இன்று ஓரநிலைக்கு தள்ளப்பட்ட தேசங்கள் சுய நிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றன.

பஞ்சாப் மக்களும், ஜம்மு காஷ்மீர் மக்களும், அஸாம், திரிபுரா, நாகலாந்து உட்பட வட கிழக்கு மாநில மக்களும் தம்மை இந்தியர்களாக அடையாளம் காண்பதில்லை. மாறாக இந்தியர்களிடம் தமது அடையாளங்களை தொலைத்தவர்களாகவே காண்கின்றனர்.

இலங்கைத் தீவில் கூட மலையக மக்களின் நிலை பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றே. அந்த மக்கள் கூட்டத்தை குடியேற்றும் போது எந்தவித மனித அறநெறிகளுக்குமான உத்தரவாதங்களை வழங்காததனால் இன்று சிங்கள தேசம் அவர்களை காலில் போட்டு மிதிக்கின்றது. ஒரு அடையாள அட்டைக்காக கூட அலைந்து திரிகின்ற கூட்டமாக சிங்கள தேசம் அவர்களை உருவாக்கியுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பாக பொறுப்புணர்ச்சி வேண்டாம். சாதாரண மனிதர்களுக்கு இருக்கின்ற கவலை உணர்வு கூட பிரிட்டனுக்கு இதுவரை வரவில்லை.

தர்க்க ரீதியாகப் பார்த்தால் இதனை எதிர்பார்க்க முடியாதுதான். இலட்சக்கணக்கான ஆபிரிக்க கறுப்பின மக்களை அடிமைகளாக சித்திரவதை செய்தவர்களிடம் மிருக உணர்வை எதிர்பார்க்க முடியுமே தவிர மனித உணர்வை எப்படி எதிர்பார்க்க முடியும். தமிழ்த் தேசம் மீதான தடை கூட இந்த மிருக உணர்விலிருந்து வெளிப்பட்ட ஒன்றென்றே கூற வேண்டும்.

இந்தத் தடை தமிழ்த் தேசத்தின் அனுபவவாதிகளுக்கு ஒரு அதிர்ச்சியாக இருக்கலாம். அனுபவவாதிகள் எப்பொழுதும் அனுபவ ரீதியாகப் பட்டுத் தெளிந்த பின்னரே சரியான திசையை நோக்கி வருவார்கள். தமிழ்த் தேசிய வாதிகளில் பெரும்பாலானவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான். புலிகளும் கூட இதற்கு விதிவிலக்காக இல்லை. இந்த அடிப்படையில் தான் புலிகளின் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி சர்வதேச சக்திகள் பற்றிய மாயையை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தது.

ஆனால், தமிழ்த் தேசத்தின் அறிவு வாதிகளுக்கு இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கவில்லை. அவர்கள் தமிழ்த் தேச அரசியல் வரலாற்றின் ஒரு படிக்கல்லாகவே இதனையும் பார்க்கின்றனர். அதாவது வளர்ச்சிப் போக்கின் ஒரு கட்டமாகவே பார்க்கின்றனர். இதனையும் தாண்டித்தான் தமிழ்த் தேசம் விடுதலை அடையலாம் என்ற இயற்கை விதியை அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

பேரினவாதத் தலைமைகளின் ஒரு பக்கச் சார்பு நிலை தமிழ்த் தேசிய அரசியல் இலங்கை மட்டத்தினை தாண்டுவதற்கு உதவியது. இந்தியாவின் ஒரு பக்கச் சார்பு நிலை தமிழ்த் தேச அரசியல் பிராந்திய மட்டத்தினை தாண்டுவதற்கு உதவியது. ஐரோப்பிய யூனியனின் ஒரு பக்கச் சார்பு நிலை சர்வதேச மட்டத்தினை தாண்டுவதற்கு உதவப் போகின்றது. தற்போது இந்தத் தடையினால் தமிழ்த் தேசம் சர்வதேச மட்டத்திற்கு வெளியே வந்துவிட்டது. இனிமேல் அது தன் இலக்கினை நோக்கி நகர்வதில் எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை.

இலங்கைத் தீவின் யதார்த்த நிலையினைப் பொறுத்தவரை போர் தொடங்கினால் எந்தவொரு நாடும் நேரடியாகத் தலையிடப் போவதில்லை. வேண்டுமானால், இது போன்ற தடைகளை மேலும் கூட்டலாம். ஆனால், அவையேதும் தமிழ்த் தேசத்தின் அத்திவாரத்தை அசைக்கப்போவதில்லை.

சர்வதேச சக்திகள் என்பவை முரண்பாடற்றவை அல்ல. ஒரு அமைப்பாக இருந்தாலும் கூட அவற்றிற்குள் நிறைய முரண்பாடுகள் உள்ளன.

தமிழ்த் தேசம் இன்று ஒரு அரை அரச அந்தஸ்துக்கு வந்த நிலையில் முரண்பாடுகளில் உள்ள இடைவெளிகள் தமிழ்த் தேசத்திற்கு மறைமுகமாகவாவது உதவக் கூடிய நிலையினை தோற்றுவிக்கும்.

ஐரோப்பிய யூனியனுக்குள் கூட முரண்பாடுகள் உச்ச நிலையில் உள்ளன. அங்கு பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் ஒரு பக்கத்திலும் ஏனையவை மறுபக்கத்திலும் இருக்கின்றன.

பிரிட்டன் அணி தமிழ்த் தேசத்தை எதிர்த்தால் மற்றைய அணி தமிழ்த் தேசத்திற்கு உதவக் கூடும். இந்திய சீன முரண்பாட்டினால் சீனா சற்று நெகிழ்ச்சியாக நடந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. ஆபிரிக்க நாடுகளும் இலத்தீன் அமெரிக்க நாடுகளும் தமிழ்த் தேசத்திற்கு உதவலாம்.

முஸ்லிம்களுடனான முரண்பாடுகளுக்கு தீர்வு கண்டால், ஈரான் போன்ற நாடுகளிடமிருந்தும் சிரியா நெகிழ்ச்சிப் போக்குகளை எதிர்பார்க்கலாம். எதிரியின் எதிரி நண்பன் என்ற சூத்திரத்திற்கு இணங்க அவர்கள் தமிழ்த் தேசத்துடன் உறவுகளைப் பேண முன்வரலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக உலகெங்கும் போராடி வரும் விடுதலை இயக்கங்கள் என்றென்றும் தமிழ்த் தேசத்திற்கு துணையாகவே நிற்கும். எனவே,தமிழ்த் தேசத்திற்கு எதிரான தடை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.

ஆனாலும், தமிழ்த் தேசத்திற்கு பாரிய கடமையொன்று இருக்கின்றது. சர்வதேச சமூகம் நோக்கி அரசியலை முன்னெடுப்பதே அந்த பணி, இந்தப் பணி சர்வதேச சமூகத்தை நோக்கியிருக்க வேண்டுமே தவிர,சர்வதேச நாடுகளை நோக்கி இருக்கக் கூடாது.

சர்வதேச நாடுகள் என்பவை தங்கள் நலன்களில் இருந்து மட்டும் செயற்படும் ஒரு திருடர் கூட்டம். தமிழ்த் தேசம் பலமாகவிருந்தால் தமிழர் தேசத்தைக் கூட ஆதரிக்க அவர்கள் பின்னிற்க மாட்டார்கள். அதுவரை போராடும் தேசத்திற்கு அழுத்தங்களை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவ்வழுத்தங்களுக்கு மத்தியிலும் எழுச்சியடைந்தால் அங்கீகரிக்க முன்வருவர்.

எனவே, போராடும் காலத்தில் போராடும் தேசம் சர்வதேச மக்களை நோக்கி அரசியல் பணிகளைச் செய்து அவர்கள் மூலமாக அந்தந்த நாடுகளின் அரசியல் தலைமைகளுக்கு நிர்ப்பந்தங்களைக் கொடுக்க முன்வர வேண்டும்.

தமிழ்த் தேசத்தின் சர்வதேச சமூகம் நோக்கிய அரசியல் பணிகள் போதியளவாக உள்ளது எனக் கூற முடியாது. வெளிநோக்கிய ஊடகச் செயற்பாடுகளும் மிகவும் பலவீனமாகவே இருக்கின்றது. தமிழ்த் தேசத்தினை பொறுத்தவரை புலம் பெயர் மக்கள் அதற்குக் கிடைத்த மிகப் பெரிய சொத்து. இச் சொத்துகளை சரியாகப் பயன்படுத்தி சர்வதேச சமூகம் நோக்கி முன்னேற வேண்டும்.

தமிழ்த் தேசம் உடனடியாகவே இப்பணிகளில் கவனத்தை குவிப்பது நல்லதென்றே நினைக்கின்றேன்.பிரிட்டன் இரண்டாவது தடவையாக தமிழர்களுக்கு மாபெரும் துரோகத்தனத்தைச் செய்துள்ளது.
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home