Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home  >  Tamil Eelam Struggle for FreedomInternational Frame & the Tamil Struggle > Tamil Nadu & the Tamil Eelam Freedom Struggle மத்திய அரசைக் காப்பதா?  இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பதா?  - Janasakthi> Tamils: a Trans State Nation - Tamil Nadu

International Relations
in THE AGE OF EMPIRE

Tamil Nadu & the Tamil Eelam Struggle for Freedom

 மத்திய அரசைக் காப்பதா?  இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பதா?

Editorial in Janasakthi - Indian Communist Party Official Daily
30 October 2008 [also in PDF]

"திராவிடகட்சியின் கோரிக்கை அல்ல மக்களின் வேண்டுகோள்... கருணை உள்ளம் கொண்டு, கண்ணீர் வடிப்போருக்கு உதவிட முற்படுவதைக் குறைகூறுவதே ஒரு பெருங்குற்றமாகும். ஆனால், இதற்குள் அரசியல் கேள்விகள் அடங்கியுள்ளன... இப்போது நன்கொடை வசூல், தானம் உதவி என்று தமிழக முதல்வர் தொடங்கி யிருக்கிறார். இவை எப்படி அங்கு போய்ச் சேரும்? யார் இதை அவதிப்பட்ட மக்களுக்கு வழங்குவது? மத்திய அரசு, இலங்கைக்குத் தொடர்ந்து ராணுவ உதவி செய்வதால், இலங்கைத் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கத் துணை புரியும், டில்லியிடம் மன்றாட மக்கள் தயாராக இல்லை. அங்கிருந்து எந்த நற்காரியத்தையும் எதிர்பார்க்க இயலவில்லை...  மத்திய அரசைக் காப்பதா?  இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பதா? என்பதை முதல்வரின் முடிவுக்கே விட்டுவிடலாம்."  more

[see also Kottum Mazhaiyil Makkalai Muttaal Akkiya Thalaivan
- கொட்டும் மழையில் மக்களை முட்டாளாக்கிய தலைவன்]


மத்திய அரசைக் காப்பதா?  இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பதா?

DMK கட்சியின் கோரிக்கை அல்ல மக்களின் வேண்டுகோள்.

“இக்கட்டான நேரத்தில் உதவிக்கரம் நீட்டுவது நமது இன்றியமையாக் கடமையாகும்”

“ஈழத்தில் வேதனையால் விழி நீர்பெருக்கி வாடிக் கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு தமிழக மக்கள் இயன்றதை வழங்கி உதவிடுவீர்”

“இலங்கைத் தமிழர் நிவாரண நிதி முதல்வர் கலைஞர் பத்து லட்சம் ரூபாய் வழங்கினார்”

29.10.08 முரசொலியின் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ள வரிச் செய்திகள். இது தமிழக முதல்வரின் ஏடு. வேண்டுகோளும் முதல்வரால் வெளியிடப்பட்டுள்ளது. கருணை உள்ளம் கொண்டு, கண்ணீர் வடிப்போருக்கு உதவிட முற்படுவதைக் குறைகூறுவதே ஒரு பெருங்குற்றமாகும்.

ஆனால், இதற்குள் அரசியல் கேள்விகள் அடங்கியுள்ளன.

நாங்களும் - நீங்களும், சகோதர - சகோதரிகளுக்கு உதவி எனும்போது, புலிக்கு உதவி என்பதும் கேட்கிறதா?

தமிழ்நாட்டு மக்கள், இலங்கையில் பிறந்த ஒரே காரணத்தால், பல்லாண்டுகளாக வேட்டையாடப்பட்டு வரும், சகோதர சகோதரிகளுக்கு, இயன்ற உதவிகள் செய்ய எப்போதும் தயங்கியதே இல்லை. விடுதலைப்புலிகள் மீது மட்டும் பாயும் குண்டும், சுடும் துப்பாக்கியும் உண்டா? மக்களைக் கவசமாகப் பயன்படுத்துவதாகக் கூறுவோர். விமானக் குண்டு வீச்சுக்கு கவசம் கண்டு பிடித்துள்ளனரா? அரசியல் நெறி என்ற பெயரால், கொலைகாரர்கட்குத் துணைபோகலாமா?

இலங்கைத் தமிழர்களான - சகோதர - சகோதரிகளுக்கு ஏற்படும் இன்னல்களைத் தடுக்க இந்தியத் தமிழ் மக்கள் நேரில் சென்று உதவிட முடியாது.

எனவே தான், தமிழ் மொழி பேசும் இந்தியக் குடிமக்கள், இந்திய அரசிடம் சில வேண்டுகோள்களை முன் வைத்தனர்.

1. இலங்கை அரசிடம் பேசி விமானத் தரைப்படைத் தாக்குதலை நிறுத்தச் செய்யுங்கள்.

2. இந்திய அரசு, எங்கள் சகோதர - சகோதரிகளைச் சுட்டுக் கொல்ல, இந்திய அரசு ஆயுதங்களையும், ராμவ வீரர்களையும் அனுப்புவதை நிறுத்த வேண்டும்.

3. அகதிகளாக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கட்கு, இந்திய அரசு நிவாரணப் பொருட்கள் அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தரும் பொருளை அனுப்பிட அனுமதி வேண்டும்.

மக்கள் இந்த வேண்டுகோள்களை வைப்பதற்கு முன்பே, மத்திய அரசுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள ‘இக்கட்டான நேரம்’ - அதற்குரிய காரணம் தெரியும். தெரிந்தும், எந்த முடிவையாவது நடவடிக்கையாவது எடுத்ததா?

சர்வ கட்சிக் கூட்டம், அதில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலக நேரிடும் என்ற எச்சரிக்கைக்குப் பின் வெளி விவகார அமைச்சர், தமிழக முதல்வரைச் சந்தித்துள்ளார்.

போர் நிறுத்தப்படும் என்று கூறவில்லை. குண்டுகள் சுடுகிற விமானிகளை அனுப்ப மாட்டோம் எனக் கூறவில்லை. மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்றே கூறினார். எனவே, மத்திய அரசு, தானாக மனிதாபிமானத்தால் உந்தப்பட்டு எதையும் செய்யவில்லை.

 எனவே தான் முதல்வரின் நம்பிக்கை, மக்களுக்கு ஏற்படவில்லை.

இப்போது நன்கொடை வசூல், தானம் உதவி என்று தமிழக முதல்வர் தொடங்கியிருக்கிறார். இவை எப்படி அங்கு போய்ச் சேரும்? யார் இதை அவதிப்பட்ட மக்களுக்கு வழங்குவது? மத்திய அரசு, இலங்கைக்குத் தொடர்ந்து ராணுவ உதவி செய்வதால், இலங்கைத் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கத் துணை புரியும், டில்லியிடம் மன்றாட மக்கள் தயாராக இல்லை. அங்கிருந்து எந்த நற்காரியத்தையும் எதிர்பார்க்க இயலவில்லை.

ஆனால், தமிழக முதல்வரிடம் ஒரே ஒரு வேண்டுகோளுக்கு விடை கேட்கிறோம்.

1 . குண்டுத் தாக்குதலை நிறுத்தாமல் இருக்கும்போது, அங்கு உதவிப் பொருட்களைஎவ்வாறு கொண்டு செல்ல முடியும்?

2. சில மாதங்கட்கு முன்னர் திரு.பழநெடுமாறன், மருத்துவப் பொருட்களை அனுப்பிட, வசூலித்து வைத்த பின்னர் கேட்ட போது, மறுக்கப்பட்டதே. ஏன்? இப்போது எங்கிருந்து வழி பிறந்தது?

3 . இலங்கைத் தமிழர்களைக் கொல்பவர்களிடமே, மருந்து, உணவுப் பொருட்களைக் கொடுப்பதைவிட கொடுமையான செயல் உண்டா? அவர்கள் கையால் தமிழ் மக்கள் வாங்கிச் சாப்பிடுவார்களா? சர்ச்சைக்கு உட்படாத சமூகத் தலைவர்கள் நேரில் சென்று உணவு, உதவி வழங்கிட இலங்கை அரசும், இந்திய அரசும் மறுப்பது ஏன்?

எல்லாவற்றிற்கும் மேலாக, குண்டு போட்டுக் கொல்லப்படுவது நிறுத்தப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாக ராஜபக்சே பிரகடனம் செய்துவிட்ட பிறகு, நீங்கள் கருணையுடன் அனுப்பும் பாலும், பருப்பும், பாகும், சைவ அசைவ விருந்தாக அமைந்தாலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே சாகத் தானே வேண்டும்.

பட்டினி கிடந்து, குண்டடிபட்டுச் சாகாதே! நன்கு சாப்பிட்டு விட்டுச் சா என்று கூறுவதாகத்தானே உங்களது அழைப்பு அமைந்துள்ளது.

முதலில் குண்டுபோரை நிறுத்தச் சொல்லுங்கள், இல்லையேல் இதுவும் கொடை மடம் என வருணிக்கப்பட நேரிடும். மத்திய அரசைக் காப்பதா? இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பதா? என்பதை முதல்வரின் முடிவுக்கே விட்டுவிடலாம்.

இது கட்சியின் கோரிக்கை அல்ல. மக்களின் புலம்பல்.


 

Mail Us up- truth is a pathless land - Home