Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home >Tamils - a Nation without a State> One Hundred Tamils of the 20th Century > Sundara Ramaswamy > என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும் - சுந்தர ராமசாமி

One Hundred Tamils of the 20th Century

Sundara Ramaswamy - சுந்தர ராமசாமி

என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும்

[see also Tamil Language & Literature]

Courtesy Forum Hub: சில மாதங்களுக்கு முன் ஓர் இலக்கியக் கூட்டத்தில் ஆற்றிய இவ்வுரையை நம் 'போரம் ஹப்' நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதியளித்த திரு.சுந்தர ராமசாமிக்கு நன்றி கலந்த வணக்கங்கள். பலத்த அலுவல்களுக்கிடையே 'ஹப்' உள்ளீட்டுக்கேற்ப உரையை வடிவமைத்து உதவிய அவர் மகனும், 'காலச்சுவடு' ஆசிரியர்குழுவில் ஒருவருமான திரு.கண்ணனுக்கு மனமார்ந்த நன்றி. --காஞ்சனா தாமோதரன், டிசெம்பர் 1999.

அன்பார்ந்த நண்பர்களே,

சேலத்தில் முதல் முதலாக ஒரு கூட்டத்தில் பேசுகிறேன். இந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்த நண்பர்கள் சிபிச்செல்வன் அவர்களுக்கும் கான் அவர்களுக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு வாசகர் கூட்டத்தில் பேசிய பேச்சு அனுபவம் எனக்கு அதிகம் இல்லை. நேற்று திருவண்ணாமலையில் பேசினேன். சமீப காலங்களில் அதுதான் முதல் கூட்டம். இது இரண்டாவது.

சேலம் எனக்குப் புதிய ஊர் அல்ல. சுமார் இருபது வயதிலிருந்து நாற்பது, நாற்பத்தைந்து வயது வரையிலும் பல்வேறு தடவைகள் இங்கு வந்திருக்கிறேன். ஒருசில வருடங்களேனும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வந்திருப்பேன். சேலத்துக் கடைத் தெருக்களெல்லாம் எனக்கு நன்கு பரிச்சயமானவை. காலையிலிருந்து மாலை ஐந்து மணி வரையிலும் நான் வந்த வேலையை முன்னிட்டுச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வேன். ஐந்து மணியிலிருந்து ஒன்பது மணி வரையிலும் - சில சமயம் பத்து, பதினொன்று மணி வரையிலும் கூட - தொடர்ந்து ஊருக்குள் மாறி மாறிச் சுற்றிக்கொண்டிருப்பது என் வழக்கம். எந்தவிதமான நோக்கமும் இல்லாமல் ஊர் சுற்றுவது என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு காரியமாக இருந்து வந்திருக்கிறது. பயணம் மனிதனுக்கு ஒரு பெரிய அனுபவத்தைத் தரும் காரியம் என்று தொன்றுதொட்டு சொல்லப்பட்டு வந்திருக்கிறது. எனக்குப் பயணத்தில் ஆசையோ நம்பிக்கையோ கிடையாது. அவசியத்தை மேற்கொண்டு அதைச் செய்கிறேன். ஊர் சுற்றுவதில்தான் எனக்கு ஆசையும் நம்பிக்கையும்.

பயணம் என்று சொல்வதற்கும் ஊர் சுற்றுவதற்கும் என்ன வித்தியாசம். பயணம் என்பது திட்டமிட்டுச் செய்யக்கூடியது. அதற்கு ஒரு நோக்கம், குறிக்கோள் இருக்கும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போகிறோம்.நோக்கம் நிறைவேறிய பின் ஊர் வந்து சேர்கிறோம். ஊர் சுற்றுவது நோக்கமற்றது. திட்டமற்றது. குறிக்கோளற்றது. மனம் போன போக்கில் பயணத்தை மேற்கொள்வது. நான் பஸ்டாண்டுக்கு வந்தபின்பும் எந்த பஸ்சில் ஏறப்போகிறேன் என்பது தெரியாது. ரயில்வே நிலையத்தில் நிற்கும்போது எந்த ரயிலில் ஏறப்போகிறேன் என்பது தெரியாது. மனம் விரும்பும் இடத்திற்குப் போய்ச் சுற்றி அலைந்துவிட்டு இதற்குமேல் சுற்ற முடியாது என்ற களைப்பு மேலிடும்போது ஊர் வந்து சேர்கிறேன்.இந்தச் சுதந்திரத்திலிருந்து பெறும் அனுபவங்கள் விலைமதிப்பற்றவை. பயணத்தில் இது இல்லை, திட்டத்தை நிறைவேற்றுதல் என்ற காரியம் மட்டுமே அதில் இருக்கிறது.

சேலத்தைப் பொறுத்தவரை எனக்குப் பயணமும் ஊர் சுற்றலும் ஏதோ ஒரு வகையில் இணைந்திருக்கிறது. அநேக இடங்கள் இப்போது என் நினைவில் இருக்கின்றன. உங்களில் பலர் அப்போது பிறந்திருக்க மாட்டீர்கள். வியாபார இடங்களும் திரையரங்குகளும் ஓட்டல்களும் தங்கும் விடுதிகளும் என் நினைவில் இருக்கின்றன. 25, 30 வருடங்களுக்கு முன்னால் நான் இங்கு வரும்போது அருமையான காப்பி கிடைக்கும். இப்போது கிடைக்குமா, கிடைக்காதா என்று தெரியாது. அந்தக் காலத்தில் திரையரங்கில் டிக்கட் எடுக்க க்யு வரிசை உருவாகியிருக்கவில்லை. எங்கள் ஊரிலும் இல்லை. இங்கும் இல்லை.

ஆனால் படம் வெளியாகும் முன் பெரிய சந்தடியும் இருக்கும். உங்கள் ஊர் தியேட்டர்கள் முன் படம் ரிலீஸ் ஆன அன்று பார்க்கக் கிடைக்கும் சந்தடிக் காட்சிகளை நிறையவே கண்டிருக்கிறேன். எங்கள் ஊரில் 10, 15 வயது பையன்கள் பக்கத்திலிருக்கும் ஒரு சுவரில் ஏறிக் கூட்டத்தினரின் தலைகள் மீது குதித்து நீச்சலடித்து டிக்கட் கவுண்டரைப் பார்க்கப் போவார்கள். டிக்கட் கவுண்டரைச் சென்றடைய இருபது முப்பது அடிகள் வரையிலும் நீச்சலடிக்க வேண்டியிருக்கும். அதே வித்தையை இங்கும் பார்த்திருக்கிறே ன். எங்கள் ஊர்ப் பையன்கள் எவ்வளவு திறமையாக அந்தக் காரியத்தைச்செய்தார்களோ அந்த வித்தையை அதற்குச் சற்றும் குறைவில்லாமல் சேலம் பையன்கள் செய்தார்கள் என்பது என் நினைவிலிருக்கிறது.

வேறு பல நினைவுகளும் சேலம் பற்றி. கவிஞர் சி.மணி என் நண்பர்.அவர் சற்று உற்சாகமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. அவரைப் பார்ப்பதற்காக நானும் க்ரியாவைச் சேர்ந்த நண்பர்களும் வந்திருந்தோம். 1972 , 73 வாக்கில் என்னுடைய 'பல்லக்குத் து�க்கிகள்' சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. அந்தத் தொகுப்பு அச்சானது சேலத்தில்தான். அதை மிக அழகாக அச்சேற்றித் தந்தவர் சி.மணி. அந்தக் காலத்தில் அந்தப் பதிப்பு இலக்கிய வாசகர்களின் கவனிப்பைப் பெற்றது. இதன் அட்டை, பக்கங்கள், அச்சு, வடிவம் எல்லாமே நன்றாக இருந்தன.

மிக முக்கியமான இலக்கிய இதழ் ஒன்று சேலத்திலிருந்து வந்தது. அஃகு என்ற பெயரில். பரந்தாமன் அதை ஆரம்பித்து ஒரு சில இதழ்கள் கொண்டு வந்தார். வடிவத்திலும் அச்சுக் கலையிலும் பல புதுமைகள் செய்து காட்டினார். ஒருசில முக்கிய எழுத்துகள் அதில் வெளிவந்திருக்கின்றன. அஃகு வெளிவந்த காலத்திலும் அதற்குப் பின்னாலும் பரந்தாமனை ஒன்றிரண்டு முறைகள் சேலத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது அவர் எங்கிருக்கிறார் என்பதே எனக்குத் தெரியவில்லை.

பேச வேண்டிய விஷயத்தைப் பற்றித் தீர்மானிக்க சிபிச்செல்வன் என்னுடன் போனில் தொடர்புகொண்டபோது 'அங்கிருக்கும் நண்பர்கள் எதைப் பற்றி நான் பேசவேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைப் பற்றி நான் பேசுகிறேன் ' என்று சொன்னேன். உங்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் விஷயத் தேர்வு இருக்க வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய அக்கறைகள் மட்டுமே சார்ந்து பேச வேண்டாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. கான் எழுதியிருந்த கடிதத்தில் 'படிப்பனுபவமும் படைப்பனுபவமும்' என்ற பொருளில் பேசலாம் என்று யோசனை தெரிவித்தார். ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு எனக்கு இந்தத் தலைப்பு பொருத்தமில்லாமல் பட்டால் என் விருப்பம் சார்ந்து பேசலாம் என்றும் கடிதம் எழுதியிருந்தார். அவர் சொன்ன தலைப்பு எனக்குச் சரியாகப் பட்டது. ஏதும் பிரச்சினை இருப்பதுபோல் தோன்றவில்லை. சரி, அந்தத் தலைப்பிலேயே பேசுகிறேன் என்று சொன்னேன்.

படிப்பனுபவமும் படைப்பனுபவமும் இரு வேறுபட்ட விஷயங்களாகவே என் மனதில் இல்லை. இரு வேறுபட்ட இழைகள் ஒன்றாகப் பிணைந்து கிடக்கும் தோற்றம்தான் என் மனதில் முதலில் வருகிறது. எல்லா எழுத்தாளர்களும் - உலக எழுத்தாளர்கள், இந்திய எழுத்தாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள் எல்லோரும் - திரும்பத் திரும்ப கூறியிருக்கும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ' முதலில் நாங்கள் வாசிக்க ஆரம்பித்தோம். சிறந்த புத்தகங்களைப் படித்தபோது எங்களுக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை தோன்றிற்று. எழுதத் தொடங்கினோம்.' இப்படிச் சொல்லாத எழுத்தாளர்கள் உலகத்தில் எந்த மொழியிலும் இருப்பதாகத் தெரியவில்லை. என் அனுபவமும் அப்படித்தான். வாசிப்பு மூலம்தான் நான் படைப்பிற்குத் து�ண்டப்பட்டேன்.

ஆழ்ந்த வாசகர்கள் கொண்ட குடும்பம் என்றோ மேலான புத்கங்களைச் சேமித்து வைத்திருந்த குடும்பம் என்றோ எங்களுடையதைக் கூறிக்கொள்ள முடியாது. பத்துப் பதினைந்து வயது வரையிலேனும் வாசிக்கப் பெரியளவுக்குத் து�ண்டுதல் என்று எனக்கு எதுவும் இல்லை. அப்பாவுக்குப் புத்தகங்களில் பெரிய ஈடுபாடோ அவற்றைச் சேமிப்பதில் ஆசையோ இருக்கவில்லை. அம்மாவுக்கு ஓரளவுக்கு ஆசை இருந்தது. தமிழ் இலக்கியத்தில் சிறிய ஈடுபாடு இருந்தது. 30க்களில் வெளிவந்த மணிக்கொடி இதழ்களை அவள் படித்திருக்கிறாள்.

கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன், ந.சிதம்பர சுப்ரமணியன் ஆகியோரின் பெயர்களும் கதைகளும் அவள் பேச்சில் அடிபட்டிருக் கின்றன.பி.எஸ்.ராமையாவின் 'நட்சத்திரக் குழந்தை' என்ற கதை பற்றியும் ந.பிச்சமூர்த்தியின் 'தாய்' என்ற கதை பற்றியும் சொன்னது என் நினைவில் இருக்கிறது. இந்த எழுத்தாளர்களின் பெயர்களும் கதை என்ற ஒன்றை உருவாக்கும் அதிசயமும் என் மனதில் பல மூட்டமான கனவுகளை உருவாக்கின. நாற்பதுக்களின் ஆரம்பத்தில் கல்கியின் படைப்புகள் எங்கள் வீட்டில் மிகுந்த கவுரவம் பெற்றன.

அவருடைய தொடர்கதைகளை வீட்டில் எல்லோரும் விரும்பிப் படித்தார்கள். அதைப் பற்றிய பேச்சும் வீட்டில் அடிபட்டுக்கொண்டிருந்தது.

நான் பள்ளிக்கூடத்தில் தமிழ் படிக்கவில்லை. எந்த ஊரில் நான் ஆரம்பப் பள்ளிக்குப் போனேனோ அங்கு தமிழைக் கற்றுக்கொள்ள வசதி இல்லை. பின்னால் நாகர்கோவில் வந்தபின்பு, அங்கு தமிழைக் கற்றுக்கொள்ள வசதி இருந்தும் நடுவில் அதைச் சேர்த்துக் கொள்ள முடியவில்லை.பள்ளிக்கூடத்தில் நான் ஒழுங்காகப் படித்ததே இல்லை என்று சொல்லிவிடலாம். அதற்கான ஆர்வமும் எனக்கு இருக்கவில்லை. ஆரோக்கியமும் இருக்கவில்லை.

நாகர்கோவிலில் நான் படித்த பள்ளி மிகப்பெரியது.அற்புதமான கட்டிடம். அங்கு போய்வருகிற சடங்கை நான் சில காலங்கள் செய்திருக்கிறேன். ஆசிரியர் வகுப்பில் பாடம் எடுக்கும்போது எனக்குக் கவனம் செலுத்தவே முடிந்ததில்லை. இது என் மனநிலைக் கோளாறாகக்கூட எனக்குத் தோன்றியிருக்கிறது. அவர் பாடம் எடுக்கும் சத்தம் மட்டும் காதில் விழுந்துகொண்டிருக்கும்.என் மூளை ஜன்னலுக்கு வெளியே கற்பனைகளைப் பின்னிக்கொண்டிருக்கும். ஆசிரியர்கள் கடுமையான தண்டனைகளில் நம்பிக்கை கொண்டிருந்த காலம். எனக்கு கடுமையான தண்டனைகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவை என்னிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சிறிது அவமானமும் வேதனையும் ஏற்பட்டன. 'நான் இப்படித்தான். என்னை ஒருவர் மாற்றவோ அல்லது நானே மாறிக் கொள்ளவோ முடியாது ' என்ற எண்ணம் உறுதியாக இருந்தது.

படிப்பில் சிறிதும் அக்கறை இல்லாத நான் பள்ளிக்கூடத்தை நேசித்தேன். அந்தப் பள்ளிக்கூடத்தின் முகப்பு, ராட்சசத் து�ண்கள்,வராண்டாக்கள், படிக்கட்டுகள் என் மனத்தை வெகுவாகக் கவர்ந்தன. முன்பக்கம் இருந்த தோட்டம், தொடர்ந்து வரும் மைதானங்கள், மேடு பள்ளங்கள், ஒரு மைதானத்திலிருந்து மற்றொரு . மைதானத்துக்கு இறங்கிச் செல்ல கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள். பள்ளிக்கூடத் திலிருந்த மரங்கள் (வேம்பு, மா, புன்னை என்றுபல). வயது ஆக ஆக எனக்கும் பள்ளிக்கூடத்துக்குமான உறவு நெருங்கிக்கொண்டே வருகிறது. இப்போது ஒவ்வொரு நாளும் காலையில் அந்தப் பள்ளிக்குச் செல்கிறேன். அதன் மைதானங்களில் என் காலை நடையை வைத்துக்கொண்டிருக்கிறேன். மாலையிலும் அங்கு போய் ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது பழக்கத்துக்கு வந்துவிட்டது.

14, 15 வயது வாக்கில் படுக்கையில் விழுந்துவிட்டேன். அதற்கு முன்பே உடல்நிலை தொடர்ந்து சரியில்லாமல்தான் இருந்தது. படுக்கையில் பொழுது போவது மிகவும் கஷ்டமாகிவிட்டது. டி.வி, ரேடியோ என்று எதுவும் இல்லாத காலம். ஒரு உறவினர் என்னைப் பார்க்க வந்தார். நான் அலுப்பினால் படும் சங்கடத்தைப் பற்றி அம்மா அவரிடம் சொன்னாள்.

அவர் உள்ளூர் நு�ல்நிலையத்திலிருந்து சில புத்தகங்களை எடுத்துக் தந்தார். பு .பி .யின் சிறுகதைத் தொகுதியான காஞ்சனை அதில் இருந்தது. அந்தத் தொகுப்பின்ஆரம்பக்கதைகள் அப்போது என் மனத்தில் படியவில்லை. ஆனால் நான்காவது கதை 'மகாமசானம்' எனக்கு ரொம்பப் பிடித்தது.மனரீதியாக மட்டுமல்ல, உடல்ரீதியாகவும் அக்கதை என்னைப் பாதித்தது. உடல், மனம் எங்கும் ஒரு இன்ப அதிர்ச்சி பரவுவதை உணர்ந்தேன். அப்போது அந்தப் புத்தகத்தை எழுதியவர் புதுமைப்பித்தன் என்பது தெரியாது.

நான் பள்ளிக் கூடத்திலும் சரியாகப் படிக்கவில்லை. பெற்றிருந்த மதிப்பெண்கள் எல்லாம் ஒற்றை இலக்கங்கள். உடல்நிலை மிகவும் மோசம். இதுபோன்றதொரு நிலையில் வீட்டில் ஒரு மாணவன் என்ன மரியாதையைப் பெற முடியும்? என் எதிர்காலம் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கேள்விக்குறியாக இருந்தது. உள்ளூர என்னைப் பற்றி ஒரு கவலை இருந்தது. அந்தக் கவலை என்னிடமும் தொற்றி எனக்கே வகைப்படுத்தத் தெரியாத வருத்தத்தில் நான் ஆழ்ந்திருந்தேன். இந்தச் சூழலில் என் மனநிலையில் மாற்றத்தை உருவாக்கிய து இந்தக் கதைதான். இந்தக் கதையை எழுதியவர் வாழ்க்கையில் என்ன காரியத்தைச் செய்திருக்கிறாரோ அதே காரியத்தைத்தான் நானும் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

இந்த அனுபவம்தான் எனக்கு வாசிப்புப் பழக்கத்தைத் து�ண்டிற்று.

தொடர்ந்து புதுமைப்பித்தன் கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். எந்த நூல்நிலையத்துக்குப் போனாலும் அவருடைய புத்தகங்கள் இருக்கிறதா என்று தேடத் தொடங்கினேன். புதிதாக ஒரு நண்பரைச் சந்தித்தால் நீங்கள் புதுமைப்பித்தனை வாசித்திருக்கீறீர்களா? என்று கேட்பேன். புதுமைப்பித்தனுக்கும் எனக்கும் ஏற்பட்டிருந்த மான�க உறவும் அவர் என்மீது செலுத்தத் தொடங்கிய செல்வாக்கும் அம்மாவுக்கு என்னைப் பற்றிய ஒரு பீதியை உருவாக்கியது. ஒருவகையான மனப் பேதலிப்புக்கு நான் ஆளாகிறேனோ என்று அம்மா என்னைப் பற்றிச் சந்தேகப்படத் தொடங்கினாள். வாசகனாக இருப்பவன் எழுத்தாளனாக மாறவேண்டும் என்ற பெரும் கனவை மனதிற்குள் கொள்ளும்போது அவன் மனநிலையில் பெரிதும் மாற்றம் ஏற்படுகிறது என்று நம்புகிறேன். அந்த மாற்றம் வெளியே இருப்பவர்களுக்கு எப்படி காட்சியளிக்குமோ! இதற்குப் பின்னால் என் பயணத்தை ஒருவிதத்தில் திரும்பிப் பார்க்காத பயணம் என்றுதான் சொல்ல வேண்டும்.

புதுமைப்பித்தனைப் படித்த ஒரு வருடத்துக்குள் சிலேட்டில் தமிழ் எழுத்துக்களை எழுதத் தொடங்கி விரைவில் எழுதும் அளவுக்கு அதைக் கற்றுக்கொண்டேன். இந்த முயற்சியில் நான் எந்தச் சிரமத்தையும் உணரவில்லை. உள்ளூர சந்தோஷம் தரும் விளையாட்டுபோல் அது எனக்கு இருந்தது. தமிழைக் கற்றுக்கொண்ட பின் இரண்டு மூன்று வருடங்களுக்குள் புதுமைப்பித்தன் நினைவு மலர் என்ற தொகுப்பை வெளியிட்டேன். தகழி சிவசங்கரபிள்ளையின்தோட்டியின் மகனைத் தமிழில் மொழி பெயர்த்தேன்.நிழலும் நிஜமும் என்ற கதையை எழுதினேன். அந்தக் கதையைப் பின்னால் படித்தபோது அது முழுக்கப் புதுமைப்பித்தனின் எதிரொலியாகத்தான் தெரிந்தது.

தொடர்ந்து பல கதைகளில் புதுமைப்பித்தனின் செல்வாக்கு இருந்து வந்தது. எனக்கு நண்பர்கள் உருவானார்கள். வீட்டில் என்னைப் பார்க்கும் பார்வையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. தான் கற்பனை செய்திருந்த அளவுக்கு நான் ஒரு முட்டாள் இல்லையோ என்ற சந்தேகம் என் அப்பாவுக்கு வந்தது. இந்தச் சந்தேகத்தை ஏற்படுத்த முடிந்தது எனக்குப் பெரிய வெற்றி என்று நினைத்தேன்.

தொ.மு.சி. ரகுநாதன் என்ற எழுத்தாளரைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் அப்போது என்னுடைய லட்சியமாக இருந்தது. ஏனெனில் அவர்தான் புதுமைப்பித்தனின் வாரிசு என்று நம்பினேன். அவருடைய புத்தகங்களை ஏற்கெனவே படித்திருந்தேன். இந்த ஆசையை நான் யாரிடமும் சொல்லவில்லை. அதைப் பிறர் புரிந்துகொள்ளும்படி எனக்குச் சொல்லவும் அப்போது தெரியாது.

ஐந்தாறு மாதங்களுக்குள் இயற்கையாக மலர்ந்த ஒரு சூழ்நிலையில் நான் தொ.மு.சி.ரகுநாதனைச் சந்தித்தேன். அதன்பின் எனக்கு அவருடன் நெருக்கமான உறவு ஏற்பட்டது. திருநெல்வேலியைச் சேர்ந்த பல எழுத்தாளர்கள் என் நண்பர்களானார்கள். ரகுநாதன் தீவிர இடதுசாரியாக மாறிக்கொண்டிருந்த காலம் அது. மலையாள எழுத்துகளின் தாக்குதலால் நானும் ஒரு தீவிர கம்யூனிஸ்ட் அனுதாபியாக மாறியிருந்தேன். பின்னர் ரகுநாதனும் அவரது நண்பர்களும் இணைந்து நடத்திய புதுமைப்பித்தன் நினைவுப் போட்டியில் நான் எழுதிய 'தண்�ர் ' கதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

என் வாசிப்புப் பழக்கம் புதிய உத்வேகத்தை அடைந்தது. நண்பர்களைச் சந்திக்கும் போதெல்லாம் நாகர்கோவிலிலும் சரி, திருநெல்வேலியிலும் சரி, புத்தகங்களைப் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் இடது சாரி இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றியும் அரசியல் கோட்பாடுகளைப் பற்றியும் பேசினேன். அநேகமாக ஒரு புத்தகத்தைக் காலையில் தொடங்கி மாலையில் முடித்துவிடுவது பழக்கமாக இருந்தது. மறுநாள் எந்தப் புத்ததகத்தை எடுத்துக்கொள்வது என்பது பின்னிரவிலும் அதிகாலையிலும் பெரும் பரபரப்பைத் தரும். படிக்கப் புத்தகங்கள் இல்லாமல் ஆகிவிடுமோ என்ற பயம் உள்ளூர விரட்ட மாலைகளில் நண்பர்களைத் தேடியும் நு�ல்நிலையங்களைத் தேடியும் போவது வழக்கத்திலிருந்தது. பொழுது நன்றாக விடிந்தபின்பும் கையில் ஒரு புத்தகம் இல்லாமல் நான் மட்டும் இருக்கும் நிலையை என்னால் அப்போது நினைத்துப் பார்க்க முடியாமல் இருந்தது.

தமிழ் ஆங்கிலம் மலையாளம் ஆகிய இந்த மூன்று மொழிகள் சார்ந்து இந்த நு�ற்றாண்டைச் சேர்ந்த புத்தகங்களின் மீது நான் எந்தளவுக்கு ஆர்வம் கொண்டேனோ அந்தளவுக்கு இதற்கு முற்பட்ட நூற்றாண்டைச் சேர்ந்த புத்தகங்களின் மீது நான் ஆர்வம்கொள்ளவில்லை. இந்த நு�ற்றாண்டின் மீதுதான் மீண்டும் மீண்டும் என் கவனம் பதிகிறது.

இதற்கு முற்பட்ட நூற்றாண்டையும் நான் எட்டிப் பார்த்திருக்கிறேன் என்று சொல்லலாம். ராமலிங்க சுவாமிகள் மீது எனக்கு எப்போதும் ஒரு பிரியம் இருந்து வந்திருக்கிறது. அதன் பின்னால் பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம், பாரதி எழுத்துகள் என்று தொடங்கி இன்றைய இளம் எழுத்தாளன் வரையிலும் எல்லோரையும் நியாயமான மரியாதையுடன் கவனத்திருக்கிறேன் என்று சொல்லலாம்.

ஆங்கிலம் வழியாக ஒரு மிகப் பெரிய சுரங்கத்திற்குப் போகலாம் என்ற கனவு எனக்குச் சிறுவயதிலேயே தோன்றத் தொடங்கிவிட்டது. ஆனால் அந்த மொழியைத் தாண்டிச் செல்வது எப்படி? ஆங்கிலத்தில் நான் தேர்ந்தெடுக்கவேண்டிய புத்தகங்கள் எவை? இதனால் இது எனக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்தப் பிரச்சினையை நான் சரிக்கட்டுவதற்கு முன் ஆங்கிலப் புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படிக்கத் தொடங்கினேன்.

இதைத் தொடர்ந்து இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த அநேகமாக எல்லாப் புத்தகங்களையும் தேடிப் படித்தேன். ரவீந்திரநாத தாகூர், சரத் சந்திரர், பிரேம் சந்த், தாரா சங்கர் பானர்ஜி, அம்ரிதா ப்ரீதம், சிவராம் கரந்த் என்று தொடர்ந்து எதுவும் கண்தப்பிப் போய்விடக்கூடாது என்ற கவலையுடன் படித்தேன்.

உலக இலக்கியங்களிலிருந்து க.நா.சு. ரகுநாதன், கு.அழகிரிசாமி போன்றோர்கள் மொழிபெயர்த்துத் தந்திருக்கும் புத்தகங்களில் அநேகமாக எல்லாவற்றையும் படித்தேன். டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்', அன்னா கரிநின்னா, புத்துயிர் ஆகியவற்றை முதலில் தமிழில்தான் படித்தேன்.

அதன்பின் மலையாள சஞ்சிகைகளைப் படிக்கத் தொடங்கிச் சிறுகச் சிறுக மலையாளப் புத்தகங்களுடன் ஒரு நெருக்கத்தை உருவாக்கிக்கொண்டேன். இந்த நு�ற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் எனக்கு எந்தளவுக்குப் பரிச்சயமானவர்களோ அந்தளவுக்கு - அந்தளவுக்கு இல்லையென்றாலும் சற்றே குறைவாகவேனும் - மலையாள எழுத்தாளர்களும் எனக்குப் பரிச்சயமானவர்கள்.

தகழி சிவசங்கரபிள்ளை, வைக்கம் முகம்மது பஷ�ர், கேசவதேவ், எஸ்.கே. பொற்றைக்காட் என்று தொடங்கி அநேகமாக எல்லோரையும் வாசித்தேன். இன்றைய இளம் படைப்பாளிகளின் எழுத்துகளை முடிந்தவரையில் படித்துக்கொண்டு வருகிறேன். மலையாளத்தின் முக்கிய விமர்சகர்களான எம்.கோவிந்தன், சி.ஜே.தாமஸ் ஆகியோர் என்னைப் பாதித்திருக்கிறார்கள். எம்.கோவிந்தனுடன் எனக்கு நேர்ப் பழக்கமும் உண்டு. இந்திய சிந்தனையாளர்கள் வரிசையிலும் அவர் முக்கியமானவர். ஐரோப்பிய கம்யுனிஸ்ட் உலகங்களுக்குள் சோஷலிச சிந்தனைகள் அமுலாகவில்லையென்றும் அப்பட்டமான சர்வாதிகாரம்தான் அங்கு தலை விரித்தாடுகிறது என்றும் முதலில் கண்டு சொன்ன இந்திய சிந்தனையாளர்களில் அவர் முக்கியமானவர்.

இருபது வயது வாக்கில் நான் ஆங்கிலப் புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினேன். முற்றிலும் ஒரு அந்நிய மொழியாகத்தான் இருந்தது அது. அம்மாவுக்குக் கூடத் தெரியக் கூடாது என்ற எண்ணத்தில் என் அறையைத் தாழிட்டுக்கொண்டு ரகசியமாக உதரிங் கைட்ஸ் என்ற நாவலைப் படித்தேன். ஆங்கிலப் புத்தகத்தை நான் படிப்பதைப் பிறர் பார்ப்பது எனக்கு வெட்கத்தைத் தருவதாக இருந்திருக்கவேண்டும். ஒவ்வொரு பக்கத்திலும் எண்ணற்ற புரியாத வார்த்தைகள் வந்துகொண்டிருந்தன. அகராதியைப் பார்த்துப் பார்த்து மனக் களைப்பு ஏற்பட்டுவிட்டது.

அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அலுப்பு மேலிட்டபோது அழத் தொடங்கினேன். அகராதியின் வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதே அப்போது மிகச் சிரமமாக இருந்தது. அவ்வாறு நான் தனியாக உட்கார்ந்து அழுதது நல்லது என்று நினைக்கிறேன். அதுபோன்ற அழுகைகள் என் ஆற்றல்களை வளர்த்துக்கொள்ள எனக்கு உதவி செய்தன. அதன் பின்னால் இரண்டொரு வருடங்களில் அதிகச் சிரமம் இல்லாமல் ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க முடியும் என்று ஆகிவிட்டது. இப்போது பின்னால் வந்த 40 வருடங்களில் ஆங்கிலம் வழியாக உலக இலக்கியத்தை ஓரளவு தெரிந்துகொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன். உலக இலக்கியத்தில் ருஷ்ய இலக்கியத்தையும் பிரெஞ்சு இலக்கியத்தையும் அமெரிக்க இலக்கியத்தையும் கூடுதலாகத் தெரிந்துகொண்டிருக்கிறேன். இதுபோன்ற அனுபவங்களையெல்லாம் பெற நான் உருவாக்கிக்கொண்ட சந்தர்ப்பங்களைப் பற்றி நினைக்கும்போது எனக்கே வியப்பாக இருக்கிறது.

எனக்குக் காலத்தின் மீது மிகுந்த அக்கறை உண்டு. இயற்கை எப்போதும் எனக்கு ஆறுதல் தந்து வந்திருக்கிறது. மனிதர்களைப் பற்றி நினைக்கும்போது எனக்கு ஏற்படும் சந்தோஷம் அவர்களுடன் நெருங்கிப் பழகும்போது ஏற்படுவதில்லை. இயற்கையும் பெண்களும் குழந்தைகளும்தான் இந்த வாழ்க்கையை நான் நேசிக்க முக்கியக் காரணங்களாக இருக்கிறார்கள்.

இந்திய ஆண்களின் அதிகாரமும் சுயநலமும் குரூரமும் இந்தியப் பெண்மையை அழிப்பதில் இன்று வரையிலும் வெற்றி பெறவில்லை. இந்தியப் பெண்கள் அவர்களுடைய சாரங்களை - மரபிலிருந்து பெற்ற அடிப்படையான செல்வங்களைக் - காப்பாற்றிக்கொள்வதில் இன்றளவும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு பெரும் மாற்றம் நிகழும்போது இந்தியாவின் முகம் மாறும். ஆண்களைப் போலி செய்து அவர்கள் �ரழிந்துவிடக்கூடாது என்ற பயமும் எனக்கு இருக்கிறது. எனக்கு மரணத்தின் மீது சிறிதும் அக்கறை கிடையாது. கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் உள்ளுர அவர்மீது எனக்கு ஒரு பிரியம் இருக்கிறது.

என் மனதில் சுத்தமாக அவர் இல்லாமல் போய்விட்டதற்கு மாற்றாகத்தான் நான் இந்தப் பிரியத்தை வைத்துக் கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகங்களில் இன்றும் நமக்கு உபயோகமான பகுதிகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.எனக்கு ஆஸ்திகப் பிரச்சாரத்திலோ அல்லது நாஸ்திகப் பிரச்சாரத்திலோ நம்பிக்கை இல்லை. மனிதர்களை மதம் சார்ந்து பிரிக்கக்கூடாது என்று நினைக்கிறேன். மதம் சார்ந்த அடையாளங்களை முன்னிட்டோ சாதி சார்ந்த அடையாளங்களை முன்னிட்டோ படிப்பு சார்ந்த அடையாளங்களை முன்னிட்டோ, பட்டம் சார்ந்த அடையாளங்களை முன்னிட்டோ மனிதனை நாம் பிரிக்க நேர்ந்தால் அது எனக்கு ஒரு பெரும் இழுக்கு என்று நினைக்கிறேன்.

அந்த அடையாளங்களைத் தாண்டி மனிதனைச் சென்றடைவதற்கான மனநிலையை உருவாக்குவதில் படைப்பாளிக்கு மிகுந்த பங்கு இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கும், வெகுஜன பத்திரிகைகளுக்கும் மதவாதிகளுக்கும் வழக்குரைஞர்களுக்கும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கும் படைப்பாளி எதிரானவன். ஒரு படைப்பாளியால் ஒரு வேசியை எப்போதும் நேசிக்க முடியும். ஆனால் அவனால் ஒரு வழக்கறிஞனை நேசிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. மூளை சாமார்த்தியம் அவன் வெறுக்கக்கூடிய ஒன்று. வழக்கறிஞர்களில் அப்பாவி வழக்கறிஞர்களைத்தான் ஓரளவுக்காவது முடியும்.

1950 வாக்கில் நான் தகழி சிவசங்கர பிள்ளையின் 'தோட்டியின் மகன்' என்ற நாவலை மொழி பெயர்த்தேன். அந்நாவல் சுமார் 200 பக்கங்கள் கொண்டது. ஒரே மாதத்தில் அந்தப் பணியைச் செய்து முடித்தேன் என்று ஞாபகம். அந்த நூலை மொழிபெயர்க்கும் திறன் எனக்கு உண்டா என்று நான் யோசித்திருந்தால் அதன் பக்கம்கூட போயிருக்க முடியாது. ஆசை சார்ந்து அந்தப் புத்தகத்தின் மீது ஏறி விழுந்து அந்த மொழிபெயர்ப்பைச் செய்தேன். அதற்குப் பின்னால் நான் செய்த காரியம் என் மனதைக் கவர்ந்த எழுத்தாளரான புதுமைப்பித்தனின் பெயரில் ஒரு நினைவு மலரைக் கொண்டுவந்தது.

அதற்குப் பின் 1954லிருந்து சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். என் ஆரம்பக்காலக் கதைகள் தொ.மு.சி.ரகுநாதன் ஆசிரியராக இருந்த 'சாந்தி' இதழில் வெளிவந்தன. என் நண்பர்கள் என்னை ஊக்குவித்தார்கள். வெளிப்படையான ஊக்கம் என்னைக் கூசவைக்கக்கூடியது. மறைமுகமாக அவர்கள் தந்த ஊக்கம் எனக்கு நம்பிக்கையை அளித்தது. இந்தக் காலகட்டத்தில் கிருஷ்ணன் நம்பி என்ற எழுத்தாளருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. சராசரி வாரத்தில் 25 மணி நேரங்களேனும் நாங்கள் ஒன்றாய் இருந்து இலக்கியத்தைப் பற்றியும் வாழ்க்கை பற்றியும் பேசிக்கொள்வோம். அவ்வாறு கால் நூற்றாண்டுக்கு மேல் பேசினோம். அவர் மிக மோசமான நோய்க்கு ஆட்பட்டு மிகுந்த வேதனையில் மறைந்தது என்னைச் சோர்வில் ஆழ்த்திற்று.

இந்தக் காலகட்டத்தில் நான் என் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்த என் சகோதரியையும் இழந்தேன். இவர்களுடைய இழப்புகள் என் மனதில் ஏற்படுத்தியிருந்த சங்கடங்களையெல்லாம் நான் வாசிப்பின் மூலம்தான் தீர்த்துக்கொண்டேன். மனச் சோர்விலிருந்து என் மனதைத் தேற்றிக்கொள்ள வாசிப்பும் எழுத்தும்தான் எனக்கு எப்போதும் உதவியிருக்கின்றன. அப்படிப் பார்க்கும்போது என் எழுத்தைப் படிக்க இந்த உலகில் ஒரு வாசகன் கூட இல்லாத நேரத்திலும் நான் எனக்காகவே எழுதிக்கொண்டிருக்க வேண்டியவன்தான். என் மனம் சிதறாமலும் புத்தி கலங்காமலும் செயல்பட இயற்கை எனக்கு இந்த உபாயங்களைத்தான் தந்திருக்கிறது.

புத்தகத்தை வாசிப்பது மட்டுமின்றிப் புத்தகக் கடைகளுக்குப் போவதும் முக்கிய அனுபவம். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் புத்தகக் கடைகளில் புத்தகங்களைப் புரட்டுவதில் நீண்ட காலம் செலவழித்திருக்கிறேன். இந்தியப் புத்தக கடைகளில் கழிப்பிடமும் காப்பி-சிற்றுண்டி கடையும் புத்தக்கடையோடு இல்லாமலிருப்பது எனக்கு ஆழ்ந்த கவலையைத் தந்து கொண்டிருந்தது.

மேற்கத்திய நாடுகளில் இந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.புத்தகங்களைக் கழிப்பறையோடும் காப்பியோடும் இணைத்தது மேற்கத்திய மூளையின் மிகப் பெரிய வெற்றி. இந்த அரிய வசதி இந்தியாவிலும் 21ஆம் நு�ற்றாண்டில் தோன்றும் என்று நான் நம்புகிறேன். புத்தகங்களைக் கையில் எடுத்து புரட்டுவதும் ஓரத்தாள், பின்பக்கம், முன்னுரை, அந்தப் புத்தகத்தைப் பற்றிய பிறரது அபிப்பிராயங் கள் இவற்றையெல்லாம் படிப்பதும் முக்கியமான அனுபவங்கள்.

புத்தகங்களைத் தொட்டுப் பார்ப்பதும் முகர்ந்து பார்ப்பதும் விசிறிப் பார்ப்பதும் சந்தோஷத்தைத் தருகின்றன. காகிதத்தின் தரத்தைப் பற்றியும் அச்சின் நேர்த்தியைப் பற்றியும் நுட்பமாக உணர்வது மிக அவசியமானது. புத்தகம் பொதுவாகச் சிறிய அளவில் ஆனது என்றாலும்கூட மனிதன் அதன்மீது கணக்கற்ற நூதனங்களைச் செலுத்தி வருகிறான்.

என் இளம் வயதில் சோவியத் அரசாங்கம் நான் விரும்பக்கூடிய எத்தனையோ புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றன. தோல்ஸ்தாய், அந்தோன் சகோ, மாக்ஸ�ம் கார்க்கி, துக்க நேவ், புஷ்கின், மக்கோவஸ்கி, அலெக்ஸாண்டர் குஃபின் (தஸ்தாயேவஸ்கி அப்போது அவர்கள் பிரசுரம் செய்யவில்லை) போன்ற நான் விரும்பும் பல படைப்பாளிகளையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். புத்தக வடிவம் சற்று குட்டையாக இருக்கும். பைண்டிங் செய்வதில் அவர்கள் நிபுணர்கள்.

 கால்பந்தாகக் கருதி நாம் ஒரு புத்தகத்தைப் பாவித்தாலும் இரண்டு கோல் போடுவது வரையிலும்கூட அந்தப் புத்தகம் கட்டாயம் தாங்கும். ஆனால் அவர்கள் தேர்வு செய்த அச்சு வடிவம் எனக்கு ஒத்து வரவில்லை. அதைவிட மோசமானது காகிதத்திலிருந்து வெளிப்பட்ட மணம். இந்தியாவில் மோசமான கழிப்பிடங்களைச் சுத்தம் செய்தபின் விசிறும் வெள்ளைத் து�ளின் (அதன் ரசாயனப் பெயர் எனக்கு மறந்து போய்விட்டது) நெடி அந்தக் காகிதத்திலிருந்து வெளிவரும்.

என் இளமைக் காலத் தோழர்கள் கம்யுனிஸத்தின் மீது கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கை காரணமாகத்தான் அந்த வாடையைத் தாங்கிக்கொண்டார்கள். இந்த மணம் கமழும் காகிதத்தைத்தான் சோவியத் யூனியனில் கிளாஸ�க்குகளை வெளியிட அவர்கள் பயன்படுத்தினார்கள்.

ஆனால் அவற்றின் விலை மிக மலிவாக இருந்தது ஒரு முக்கிய விஷயம். அமெரிக்கப் பதிப்புகளையோ பிரிட்டிஷ் பதிப்புகளையோ வாங்க எனக்கு வக்கு இல்லை. அதனால் முடிந்த அளவு சுவாசத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு நான் அந்த கிளாஸ�க்குகளையெல்லாம் படித்தேன். ருஷ்ய எழுத்தாளர்களின் மேதமை இதைப் போன்ற இடர்ப்பாடுகளைத் தாண்டி என்னைத் தழுவிக்கொண்டதை நினைக்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. எழுத்து மேதைகளைச் சாகடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல என்றே நம்புகிறேன்.

புத்தகங்களைப் பற்றி முன்கூட்டிச் சாதகமாகவோ, பாதகமாகவோ தீர்மானங்களைக் கூறக்கூடாது என்று கற்றுக்கொண்டேன். ஆனால் சூழல் நாம் புத்தகத்தைக் கையில் எடுப்பதற்கு முன்பே அதைப் பற்றிய அபிப்பிராயத்தை நம்மிடம் உருவாக்கத்தான் முயலும். ஒரு ஆசிரியருடன் நெருக்கமான உறவுகொண்டு மான�கமாக அவர் பக்கத்தில் நின்றபடிதான் நாம் புத்தகத்தைப் படிக்கத் தொடங்க வேண்டும். ஆசிரியர் நம்மை இழுத்து அணைத்துக்கொள்ளவும் பிடித்துத் தள்ளவும் வசதியான அளவுக்கு நெருக்கமாக நின்றுகொண்டு படிக்க வேண்டும்.

பல ஆசிரியர்கள் அவர்கள் எழுதியிருக்கும் நு�ல்களின் முதல் பக்கத்திலிருந்தே வாகர்களைக் கிள்ளத் தொடங்கிவிடுவார்கள். இந்த அற்புதக் கிள்ளல்களை நாம் சகித்துக்கொண்டே போனால் ஐம்பது அல்லது நு�று பக்கங்கள் தாண்டியபின் நாம் அவர்கள் மடிமீது கூட உட்கார்ந்து கொள்ளலாம். அதன் பின் அவர்கள் தங்கள் எழுத்து வன்மையால் அந்தரத்தில் து�க்கிப் போட்டுப் பிடிப்பார்கள். ஆனந்தக் கடலில் ஆழ்த்துவார்கள். ஆசிரியருக்கும் வாசகனுக்குமான உறவில் ஊடலும் உண்டு .

காதலும் உண்டு. பெரிய ஆசிரியர்களுக்கு நம்மை சுவாரசியப்படுத்தவேண்டும் என்ற அக்கறையே அநேகமாக இல்லை. அவர்களுக்கு அவர்களுடைய உலகமே சுவாரசியமாக இருக்கிறது. அந்த உலகத்தை அவர்கள் அனுபவிக்கும் விதம் நமக்குச் சுவாரசியமாக இருக்கிறது. நம்முடைய பார்வை சார்ந்தும் கோணம் சார்ந்தும் மட்டுமேதான் நமக்கு ஒரு புத்தகத்தை அணுகத் தெரியுமென்றால் பெரும்பான்மையான புத்தகங்களை நமக்குப் படிக்கமுடியாமல் போய்விடும். சிறந்த வாசகன் விரிந்த பார்வையும் காலமும் மக்களும் கூடி நிகழ்த்தியுள்ள எண்ணற்ற விசித்திர நாடகங்களில் நாட்டமும் கொண்டவன். அவன் எட்டிப் பார்ப்பதில் மிகுந்த ஆசை கொண்டவன்.

அறிவுத் தேடல் சார்ந்த சுறுசுறுப்பும் ரகசியங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் ஏதோ நாம் அறியாத, அறிய முடியாத ஏதோ ஒன்று விலை மதிப்பற்றதாய், எல்லாப் பக்கங்களுக்குள்ளும் ஒளிந்துகொண்டிருக்கிறது என்றும் அவன் நம்புகிறான். அநேகப் பக்கங்கள் அவனை ஏமாற்றி விடுகின்றன. ஆனால் முன்னர் வேறு புத்தகங்கள் மூலம் பெற்ற கண்டுபிடிப்புகளை மனதில் கொண்டு புதிய பக்கங்களில் ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயணம் மேற்கொள்கிறான்.

50க்களில் நான் ஒரு முற்போக்கு எழுத்தாளனாக இருந்தேன். விஷய நேர்த்திபோல் வடிவ நேர்த்தியும் எனக்கு ஆரம்பத்திலிருந்தே முக்கியமாக இருந்தது. சோவியத் சர்வாதிகாரத்தைப் பற்றிய செய்திகளை என் மூளை சேமித்துக்கொண்டபோது கம்யூனிஸத்தில் நம்பிக்கை வைத்திருந்த என் மனோபாவத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. தத்துவத்தையும் செயல்பாடையும் எனக்கு அன்றும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. இன்றும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகும் அனைவரும் தொடர்ந்து இறந்து கொண்டிருக்கும்போது அறுவைச் சிகிச்சை பற்றி எழுதப்பட்டுள்ள நூல்களின் நேர்த்தி பற்றிப் பேச எனக்கு கூச்சமாக இருக்கிறது. வாழ்க்கையைப் பற்றிய விசாரம் முக்கியமா? வாழ்க்கை முக்கியமா? இவ்வாறு நான் சிந்திக்கத் தொடங்கினேன். அப்போது பொருளாதாரத் தரத்தைத் தாண்டியும் பல பிரச்சினைகள் மனிதர்களுக்கு இருப்பது தெரிந்தது. அது மட்டுமல்ல, பிரச்சினைகள் வேறு, நெருக்கடிகள் வேறு என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. பிரச்சினைகள் தெள்ளத்த தெளிவாக தெரிபவை.

 திட்டமிட்டு அந்தப் பிரச்சினைகளை ஒரு எல்லை வரையிலும் நாம் தீர்த்துக்கொள்ளவும் முடியும். லோகாயுதப் பிரச்சினைகள் தீர்ந்தபின்பும் மனிதனுக்கு நெருக்கடிகள் இருக்கின்றன. லோகாயுதப் பிரச்சினைகளை முதலில் கவனித்துவிட்டுப் பின்னால் ஆற அமர நெருக்கடிகளைக் கவனித்துக் கொள்ளலாம், என்று சொல்லக்கூடிய விவேகிகள் நம் சமூகத்தில் இருக்கிறார்கள்.

 பிரச்சினைகளும் நெருக்கடிகளும் வெவ்வேறு தொடர்புடையவை என்ற எண்ணம் எனக்கு இல்லை. மனிதன் தான் எதிர்கொள்ளும் வாழ்க்கையின் அர்த்தத்தை, உரிமையை மிகத் தீவிரமாகப் பரி�லனை செய்துகொள்வதன் மூலம்தான் சிறியளவுக்கேனும் ஆசுவாசம் அடையமுடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இச்சிந்தனைகளின் விளைவாக என் எழுத்துப் போக்கிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. 60க்குப்பின்னால் நான் எழுதியுள்ள பல கதைகள் நான் எதிர்கொண்ட நெருக்கடிகளை உள்ளடக்கியவை. இந்த மனோபாவத்தைத் திருப்திகரமாக வெளிப்படுத்திய படைப்பு என்று ஜே.ஜே. சில குறிப்புகளைச் சொல்லலாம். ஜே.ஜே. சில குறிப்புகளையும் புளியமரத்தின் கதையையும் ஒன்றன்பின் ஒன்றாகப் படிக்கும் வாசகனுக்கு என் எழுத்துப் பயணத்தின் சுமைகளும் விசனங்களும் ஓரளவுக்கேனும் புரியும் என்று எண்ணுகிறேன்.

கடைசியாக நான் இப்போது எழுதியுள்ள 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' என்ற நாவல் மனித உறவுகளை ஒரு காலத்தோடும் இடத்தோடும் இணைத்துப் பரிசீலனை செய்து பார்க்கிறது.

இந்தப் பரீசிலனையில் நான் எந்தளவுக்கு வெற்றி அடைந்திருக்கிறேன் என்பது தெரியாது. ஆனால் அதை ஆழ்ந்து படிக்கும் வாசகன் அதன் எளிய தோற்றத்தில் ஏமாறாத ஒரு வாசகன் அந்தப் படைப்பில் நான் சொல்லிய வரிகளுக்குப் பின்னால் சொல்லாமல் விட்டிருக்கும் வரிகளையும் இணைத்துப் படித்தால் வாழ்க்கை சார்ந்த என் அக்கறையை ஏதோ ஒரு விதத்தில் பகிர்ந்துகொள்வான் என்பது தான் என் நம்பிக்கை.

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home