Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State> One Hundred Tamils of the 20th Century : C.N.Annadurai > பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரையின் படைப்புகள் -  ரங்கோன் ராதா 

ரங்கோன் ராதா 

C.N.Annadurai


1
"ஜப்பானியனின் குண்டுகள் அங்கு விழாமலிருந்தால், அவளை நீ கண்டிருக்கவே முடியாது! திரைகடல் கடந்து சென்றே அந்தத் தேவியைத் தரிசிக்க வேண்டியிருந்திருக்கும். அது உன்னால்தான் முடியுமா, எனக்குத் தான் முடியுமா? அவளுடைய 'கெட்டகாலம்' அவளை இப்படியாக்கிவிட்டது!" - இது என் நண்பன், தன் அடுத்த வீட்டுக்குப் புதிதாக வந்து சேர்ந்த சிங்காரியைப் பற்றி என்னிடம் கூறியது.

என் நண்பன் நாகசுந்தரம் இதிலே தேறியவன். எங்கெங்கு எழிலுள்ள மங்கையர் உள்ளனர், அவர்களின் நிலைமை என்ன என்ற அட்டவணை அவனிடம் உண்டு. பிரதி தினமும் கோயிலுக்கு அவன் போய் வருவது, தேவ பூஜைக்கா? தேவிகளைத் தரிசிக்கவேதான்! அவன் தான் எனக்கு ரங்கோன் ராதா விஷயமாக முதலிலே கூறினான். வந்து பார்த்தால்தான் என் மனம் திருப்தியாகும் என்று என்னை வற்புறுத்தினான்.

"நான் அவளைக் காண்பதால் உனக்கென்னப்பா திருப்தி?" என்று நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். "இது பெரிய பிரச்சனையாகி விட்டதோ உனக்கு? சங்கீத வித்வான் 'சபாஷ்' என்ற மொழியைச் சபையிலே எதிர்பார்க்கிறாரே, அது ஏன்? அவருடைய கீதத்தை ரசித்தவர்கள் இருப்பது தெரிந்தால் அவருக்கு ஆனந்தம்! அது போலத்தான் எனக்கும், நான் கண்டுபிடித்த அந்த சுகுமாரியை நீ ஒருமுறை பார்த்து 'பேஷ்' என்று பிரேமையும் பெருமூச்சும் கலந்து கூறினால், என் திறமைக்கு அத்தாட்சி" என்றான் நாகசுந்தரம். நகைச்சுவையுடன் பேசுவான் என் நண்பன்.

 "அடுத்து வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள்? கூறு, கேட்போம், பிறகு பார்ப்போம்" என்று நான் கேட்டேன். "கூறுவதா? கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடி" என்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். "போதும்! போதும்! கம்பா! அங்கமங்கமாக வருணிக்கத் தொடங்கிவிடாதேயப்பா! இங்கு சடையர் இல்லை, உனக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய. நாளை மாலை, உன் வீட்டு மாடியிலே உலவ வருகிறேன். அந்த உல்லாசியைக் காண்போம்" என்று நான் வாக்களித்தேன்.

நண்பன் வேறு விஷயம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டான். என் மனதிலே அவன் தூவிய எண்ணம், அன்றிரவு, முளைவிட்டு, செடியாகிக் கொடியாகிக் காதற்பூவும் பூத்துவிட்டது. கண்டதும் காதல் என்றனர் கவிகள்! நானோ அவளைக் காணவுமில்லை, கேட்டேன் அவளைப் பற்றிய வர்ணனையை. உடனே எனக்கோர் விதமான 'ஆசை' பிறந்தது! என்ன சித்தம்! வாலிப சித்தத்தை அடக்கக் கடிவாளம் ஏது? மனம்போன போக்கை மாற்றிக் கொள்ளும் திறமைதான் ஏது? ரங்கோன் ராதா! ராதா என்ற பெயரே ரசமாகத் தோன்றிற்று! ரங்கோன், ரசமான இடமாமே!

அன்றிரவு அடிக்கடி விழித்துக் கொண்டேன், ராதாவை எண்ணி எண்ணி. என் நண்பனே என்னைக் கேலி செய்வான். அத்தகைய திடீர்க் கொந்தளிப்பு என் மனதில்! பாவம்! அவள் யாரோ! குண்டுகளுக்குப் பயந்து, இங்கு வருகிறாள்; அவள் மீது பாணம் பூட்ட நான் கிளம்புவதா? சீச்சீ! கெட்ட நினைப்பு நமக்கு ஏன்? என்றும் எண்ணினேன். கெட்ட நினைப்பு என்று இதை எப்படிக் கூற முடியும்?

பெண்ணிடம் பிரேமை கொள்ளுவது ஆணின் இயற்கை. இதை நான் மாற்ற முடியுமா? நான் என்ன, கிடைக்கும் தையலைத் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டு, தாண்டவமாடப் போகிறேனா சிவனார் போல்! ராதையும் என்னைக் கண்டு 'மோகித்தால்' நானென்ன மகாவிஷ்ணுபோல், அலைகடலில் ஆலிலைமேல் படுத்துக் கொண்டு அந்த ஆபத்தான இடத்துக்கா பிரியவதியை அழைப்பேன். இரண்டடுக்கு மாடி என் வீடு! இந்த ஆண்டு மட்டும் என் தகப்பனார் வியாபாரத்தில் 70 ஆயிரம் சம்பாதித்தார். இளைஞன் நான்! எழில் ஒன்றும் மட்டல்ல! என்ன குறை ராதாவுக்கு! என்றும் எண்ணினேன்.

ராதையே நீ என்னை நேசிப்பதாலுன்னை - என்ற கீதம் ராதையின் மோகன கோபாலா என்ற பாடல் - ராதாரமணா என்ற பஜனை - ராதா ருக்மணி சமேதா என்ற பாகவத மொழி - ராதாபாய் என்ற நடிகையின் பெயர் - என் மனதிலே ராதா, ராதா என்று பலப்பல விதத்திலே எண்ணம் கூத்தாடிற்று.

காலை மலர்ந்தது. அதற்கு என் கஷ்டம் தெரிகிறதா! கணக்குப் புத்தகமும் கையுமாகக் கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தேன். மாலை வழக்கப்படி உலாவச் சென்றேன் - வழக்கமான இடத்துக்கு அல்ல! நாகசுந்தரனின் வீட்டுக்கு.

"விளையாட்டுக்குச் சொன்னாய் என்று எண்ணினேன். நிஜமாகவே வந்துவிட்டாயே" என்று நாகசுந்தரம் கூறினான். கேலி செய்தது போலிருந்தது அவன் பேச்சு. என்ன இருந்தாலும் 'பிகு'வை விட்டுவிடலாமா? "சேச்சே! நான் அதை மறந்தே விட்டேனப்பா! வழக்கப்படி உலவப் புறப்பட்டேன். உன்னையும் அழைத்துப் போகலாமென்றுதான் இங்கு வந்தேன்" என்று சமாதானங் கூறினேன். முதுகைத் தட்டிக் கொடுத்து, "எவ்வளவு பாசாங்கு பேசுகிறாயடா பரந்தாமா!" என்று கூறி என்னைக் கேலி செய்து மாடிக்கு அழைத்துச் சென்று, அந்த மங்கையைக் காட்டுவான் என்று நான் கருதினேன்.

ஆனால், நாகசுந்தரம், "சரி போவோமா! கோயிலுக்கா, ஆற்றோரமா?" என்று கேட்டுக் கொண்டே, தெருவில் இறங்கி விட்டான். நான் அடைந்த ஏமாற்றத்தை என்னென்பது. என் நண்பனின் திடீர் மாறுதலின் காரணம் எனக்குப் புரியவில்லை.

அவனைக் கேட்கவோ மனம் வரவில்லை. 'சரி! ரங்கோன் ராதாவை நான் பார்க்கக்கூடாது என்று இவன் கருதுகிறான். அவளிடம் இவன் எண்ணம் வைத்துவிட்டான் போலிருக்கிறது' என்று எண்ணினேன். கோபந்தான் எனக்கு. எனவே, மனிதனின் சுயநலம், கபடம், மாதரால் உண்டாகும் மயக்கம் ஆகியவற்றைக் காரசாரமாகப் பேசினேன். என் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள வேறு வழியில்லை, என் செய்வது.

ராதாவைக் காணாததால் என் மனதிலே மூண்ட ஆவல் மேலும் அதிகரித்தது. அன்றிரவும் வேதனையை அனுபவித்தேன். அநாவசியமாக அவளைப்பற்றிக் கூறுவானேன். என் உள்ளத்திலே ஏதேதோ நினைப்பு வருமாறு செய்வானேன். பிறகு இவ்விதம் என்னை வாட்டுவானேன். உண்மை நண்பனின் காரியம் இப்படியா இருப்பது! என்று சலித்துக் கொண்டேன். ராதா எப்படி இருப்பாளோ, என்ற எண்ணம் வேறு, எரிமலையிலிருந்து கிளம்பும் நெருப்பெனக் கிளம்பி என்னைத் தகித்தது.

ராதாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அவள் மணமானவளாகக் கூட இருப்பாள் ஒரு சமயம். அவன் தான் "அழகான ஒரு பெண் ஆபத்தான நேரத்தில், பர்மாவிலிருந்து வந்துவிட்டாள்" என்று மட்டுந்தானே என்னிடம் சொன்னான். வேறு தகவல் தெரியாதே. அவனை விசாரிக்கவும் முடியாது போய்விட்டது. அவன், திடீரென மாறியே விட்டான். என்னிடம் பேசுவதைக்கூடக் குறைத்துக் கொண்டான். வீட்டிலேயும் அதிகம் தங்குவதில்லை. பிறகு நானே ராதாவைப்பற்றி அவனைக் கேட்க வேண்டி நேரிட்டது. "ஒரு நாளில் கூற முடியாது அப்பா, அந்தக் கதையை! பல நாளாகும். அதிலும், நீ யாரிடமும் அதைக் கூறுவதில்லை என்று உறுதிமொழி தந்தால்தான் சொல்வேன்" என்றான்.

"சரி! சொல். இப்போது ராதா எங்கே? அடுத்த வீட்டில் தானே?" என்று அவசரமாகக் கேட்டேன். என் நண்பன் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "நீ அவளைக் காதலிக்கிறாயா?" என்று கேட்கவே, நான் சிரித்துவிட்டு "என்ன பித்தம் பிடித்தவன் போலப் பேசுகிறாய். அவளை நான் கண்டதுமில்லை! காதலாம் காதல்" என்று கூறிக் கேலி செய்தேன்.

என் நண்பனின் முகமோ மிகக் கவலையுடன் இருந்தது. சில விநாடி மௌனமாக இருந்துவிட்டு அவன் என்னை உற்று நோக்கியபடி, "நண்பா! நீ ராதாவிடம், தூய்மையான முறையில் நடந்துகொள்வதாக வாக்குத்தர வேண்டும். பிறகு ராதாவிடம் நீ பழகலாம்" என்றான் சோகக் குரலில்.

என் நண்பனின் போக்கு எனக்கு ஆச்சரியமூட்டியது. எவ்வளவு துன்பத்தையும் சகித்துக் கொள்பவன், எவ்வளவு துயரச் செய்தியைக் கூறினாலும், 'சகஜம்' என்று கூறுபவன். அப்படிப்பட்டவன், ராதா யார்? எங்கே இருக்கிறாள்? என்ற சர்வசாதாரண விஷயத்தைப்பற்றி, ஏன் இப்படிக் கவலையும் கலக்கமும் கொண்டவனாகப் பேசுகிறான் என்பது புரியவில்லை. "என்னடா இது, விளையாடுகிறாயா? ராதா, கலியாணமானவளா? எதையோ மறைக்கிறாயே! என்னிடம் கூடச் சொல்லக்கூடாத பிரமாதமான இரகசியம் என்னடாப்பா அது?" என்று நான் கேட்டேன், கொஞ்சம் கோபமாகத்தான்.

நாகசுந்தரம், இதுபோல் நான் எப்போதாவது கொஞ்சம் கோபித்துக் கொண்டால், சிரித்துகொண்டே என் முதுகில் தட்டுவது வழக்கம். அன்று, பின்புறமாகக் கையைக் கட்டிக்கொண்டு, மௌனமாகவே நடந்தான், என் கோபப் பேச்சைக் கேட்ட பிறகும். "சரி, அவ்வளவுதான் உன் சினேகிதத்தின் யோக்யதை. யாரோ ஒரு பெண், ரங்கோன்காரி, அவள் விஷயத்திலே உனக்கு இவ்வளவு..." என்று நான் மேலும் கொஞ்சம் சூடாகப் பேசலானேன். நாகசுந்தரம் என்னைக் கெஞ்சுபவன் போலப் பார்த்து, "ராதா விஷயமாகக் கோபத்திலே கண்டபடி பேசிவிடாதே அப்பா. ராதா என் தங்கை" என்றான்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "உனக்குத் தங்கை ஏது?" என்று நான் கேட்டேன், திகைப்புடன். நண்பன் பதில் கூறவில்லை. என்னுடைய வற்புறுத்தல், அவனுக்கு வேதனையை உண்டாக்குவதை அவனுடைய முகம் நன்றாகக் காட்டிற்று. அவன் அந்த மர்மத்தை விளக்கிக் கூறாவிட்டாலோ, என் வேதனை குறையாது என்று எனக்குத் தோன்றிற்று. எனவே நான் வாஞ்சையுடன் நாகசுந்தரத்தை அணைத்துக் கொண்டு, "நாகு! என்னடா இது, விடுகதை பேசுகிறாய்!

 உனக்குத் தங்கை கிடையாதே. ராதா என்பவள் ரங்கோனிலிருந்து வந்த பெண் என்று கூறினாயே. இப்போது 'ராதா என் தங்கை' என்று கூறுகிறாய். இது என்ன வேடிக்கை! விபரீதமாகவும் இருக்கிறதே! என்னிடம் கூடவா நீ மறைத்துப் பேச வேண்டும்" என்று கேட்டேன்.

நண்பனின் கண்களிலே தீ கொப்புளித்தது. ஆத்திரத்துடன் பேசினான். "ஆறு மாதத்துக்கு முன்பு நீ பெருந்துறைக்குப் புறப்பட்டாயே, அப்போது நான் எங்கே போகிறாய் என்று கேட்டேனல்லவா?" என்றான். "ஆமாம்" என்றேன் நான். பெருந்துறைப் பிரயாணத்துக்கும் ராதாவுக்கும் என்ன சம்பந்தம் என்று ஆச்சரியப்பட்டு, "பெருந்துறைக்குப் போகிறேன் என்று ஏன் என்னிடம் உண்மையைச் சொல்லவில்லை? ஏன் உன் நண்பனிடத்திலேயே உண்மையை மறைத்தாய்?" என்று கேட்டான்.

 "போடா பிரமாதமான தவறு கண்டுபிடித்துவிட்டாய்! நீயோ, இளகிய மனதுள்ளவன். எனக்கு இரண்டொரு மாதங்களாக இருமலாக இருந்தது; சில டாக்டர்கள் அது எலும்புருக்கியோ என்று சந்தேகத்தைக் கிளப்பினார்கள். பெருந்துறை சென்று பரீட்சித்துக் கொண்டு வருவோம் என்று கிளம்பினேன். உன்னிடம் அதைச் சொன்னால் நீ உண்மையிலேயே எனக்கு எலும்புருக்கி நோய் கண்டுவிட்டது என்று எண்ணிக் கஷ்டப்படுவாய் எனப் பயந்து, பெருந்துறை போவதைச் சொல்லவில்லை. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.

"அதே போலத்தான் இதுவும். உனக்கொரு சந்தேகம் நோயைப்பற்றி. என்னிடம் சொன்னால் நான் உனக்கு நோயே இருப்பதாக எண்ணிக்கொள்வேன் என்று பயந்து உண்மையை மறைத்தாய். அதுபோலவே, நான் ராதாவைப் பற்றி உண்மையைக் கூறப் பயப்படுகிறேன். நீ அவளைப் பற்றி தாழ்வாக மதிப்பிட்டு விடுவாயோ, என்னையும் கேவலமாக எண்ணிக் கொள்வாயோ என்று. அவளைப் பற்றி நான் கண்டறிந்த விஷயம் இருக்கிறதே, அதை நான் மறைக்க வேண்டியவனாக இருக்கிறேன். அந்த விஷயமும், எலும்புருக்கி நோய் போன்றதுதான்" என்றான் நாகசுந்தரம். "பைத்தியக்காரா! நான் பெருந்துறைக்குப் போன பிறகு எனக்குச் சாதாரண இருமலே தவிர எலும்புருக்கி அல்ல என்று தீர்மானமாகிவிட்டது.

தெரிந்ததல்லவா? இதோ காளை போல இருக்கிறேன்!" என்று நான் சொன்னேன். "அதைப்போலத் தான், காதல் சிகிச்சை சாலையில் ராதா பரிசோதிக்கப்பட்ட பிறகுதான், அவள் மாசற்றவள் என்று தீர்மானிக்க முடியும். அதற்காகத்தான் உன்னைக் கேட்டேன். நீ ராதாவைக் காதலிக்கிறாயா என்று. இப்போது சொல்லு, அவளைப்பற்றிய முழு உண்மையைக் கூறுகிறேன்" என்றான்.

"இப்படியும் ஒரு நிபந்தனை உண்டா? கட்டுக் கதைகளிலே வருமே, ராஜகுமாரன் தூங்கிக் கொண்டிருந்தான்; ஒரு மாயாவி அவனை அப்படியே கட்டிலோடு தூக்கிக் கொண்டுபோய், ஒரு ராஜகுமாரி வீட்டிலே கொண்டு போய்ச் சேர்த்து இருவருக்கும் கலியாணம் செய்து வைத்தான் என்று, அதுபோல இருக்கிறதே உன் கலியாண ஏற்பாடு" என்று நான் கேட்டேன்.

அவ்வளவு சோகத்துக்கிடையிலும் கொஞ்சம் சிரிப்பு வந்தது நாகசுந்தரத்துக்கு.

"நண்பா! நான் நம்பிக்கையில்லாமல் சொல்லவில்லை. ராதாவை நீ கண்டால், கட்டாயம் காதலிப்பாய்!" என்றான். "அதை எப்படி நீ கண்டுபிடித்தாய்?" என்று நான் கேட்டேன்.

"ஏன் முடியாது. நீ அடிக்கடி, உன் இலட்சிய மங்கையைத் தான் எனக்குக் காட்டி இருக்கிறாயே! வயது இருபது இருக்கவேண்டும் என்பாய். ஒரு வயது ஏறத்தாழ இருக்கும் ராதாவுக்கு. அடக்கம் இருக்கவேண்டும், ஆனால் அசடாக இருக்கக்கூடாது. புத்தி இருக்கவேண்டும், ஆனால் போக்கிரித்தனம் இருக்கக்கூடாது. அழகு இருக்கவேண்டும், ஆனால் ஆளை மயக்கும் நோக்கம் இருக்கக்கூடாது. படிப்பு இருக்கவேண்டும், ஆனால் படாடோ பம் இருக்கக்கூடாது, சகஜமாகப் பழகவேண்டும், ஆனால் சந்து பொந்து திரியும் சுபாவம் கூடாது என்று கூறுவாயே கவனமிருக்கிறதல்லவா?" என்று கேட்டான். உண்மை தான்.

 நான் அடிக்கடி இப்படிப்பட்டவளைத்தான் கலியாணம் செய்து கொள்வேன் என்று சொல்லுவது உண்டு. இந்த இலட்சியப் பெண்ணைப் பற்றி நான் அடிக்கடி பேசினதற்குக் காரணம், நான் பல தடவை கேட்ட 'வாழ்க்கை ஒப்பந்த'த்தைப் பற்றிய பிரசங்கங்களல்ல; என் மாமன் மகள் வதனா, இந்த இலட்சணத்துக்கு நேர்மாறாக இருந்தாள். அவளை எனக்கு மனைவியாக்குவதற்கு இரு குடும்பத்திலும் விசேஷமான முயற்சி. அந்தக் கோபத்திலே நான் தீட்டிய இலட்சிய மங்கையை, நாகசுந்தரம் எனக்குக் கவனமூட்டினான்.

"ஆமாம்! அப்படிப்பட்ட பெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள்வேன். கேலியா உனக்கு? நீ வேண்டுமானால் பாரேன்" என்று நான் வீரமாகப் பேசினேன். "கேலியல்ல, பரந்தாமா! நீ குறிப்பிடும் அந்த இலட்சணம் அவ்வளவும் பொருந்தியவள் ராதா. அதனால்தான் நான் தைரியமாகச் சொன்னேன், அவளைக் கண்டால் நீ காதலிப்பாய் என்று. ராதா பத்தாவது தேறியிருக்கிறாள். இப்போது கல்லூரியில் படிக்கிறாள். கல்லூரிப் படிப்பு, கால் கூந்தலும், காலில் அலங்காரப் பூட்சும், காமினியா ஸ்நோவும் இல்லாமல் கூட வரும் என்பதை ராதா கல்லூரிப் பெண்களுக்குக் காட்டுவதற்குப் போயிருக்கிறாள்" என்று நாகசுந்தரம் சொன்னான்.

"ஆஹா! நீ மட்டும், இந்த 56 தேசத்து அரசர்கள் இருந்த காலத்திலே வாழ்ந்திருந்தால், தூது போகும் வேலையில் வேறு யாரும் உனக்கு நிகர் இல்லை என்றாகியிருக்கும்" என்று நான் கேலி செய்தேன்.

"பரமா! உன் மனதிலே இவ்வளவு காலமாக உலவிக் கொண்டிருந்த இலட்சியப் பெண், ராதாதான். நீ கூற மறந்த குணங்களைக்கூட அவளிடம் காண்பாய். அவளுடைய முகத்திலே இருக்கும் லாவண்யம், உன் கற்பனைக்கு எட்டாதது. கண்டால் நிச்சயமாக என் காலடி வீழ்வாய்" என்றான் நாகு.

"அவளைக் கண்டால் உன் காலடி வீழ்வானேன்? என்னடா நாகு! ஒன்றுக்கொன்று பொருத்தமே இல்லாமல் பேசுகிறாயே!" என்று நான் கேட்டேன், என் நண்பனின் போக்கு மேலும் மேலும் விசித்திரமாவது கண்டு. "தங்கையைக் கலியாணம் செய்து கொள்ள, அண்ணனின் தயவு வேண்டாமோ?" என்று கேட்டான் நாகசுந்தரம். "அண்ணனா! ராதாவுக்கு நீ எப்போது அண்ணனானாய்?" என்று நான் முதுகைத் தட்டிக் கொடுத்தபடி கேட்டேன்.

"பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு!" என்றான் அவன்.

"டே! நாகு, வீணாக என்னைக் குழப்பாதே, ராதா யார்?" என்று கேட்டேன்.

"என் தங்கை" என்று பெருமூச்சுடன் கூறினான். என் திகைப்பைக் கண்டு, மெள்ள, சிரமப்பட்டு பேசலானான்.

"நண்பா, அந்தப் பெரிய கதையைச் சொல்லவும் எனக்குக் கூச்சமாக இருக்கிறது. இருந்தாலும், சொல்லாவிட்டாலோ, மனத்திலுள்ள பாரம் நீங்காது. ராதா, என் தங்கைதான். திடுக்கிடாதே! ராதாவுக்கு இவ்விஷயம் தெரிந்தபோது ஆச்சரியப்பட்டாள். பூராக் கதையையும் கேள்விப்பட்டால் நீயும் ஆச்சரியப்படுவாய். ஆனால், முதலிலே நீ அவளைச் சந்திக்க வேண்டும். பழக வேண்டும். உனக்கு ராதையிடம் பிரேமை பிறந்தால், நான் முழு விவரத்தையும் கூறுகிறேன். இல்லையானால் மௌனமாகத்தான் இருக்க வேண்டும். யார், ராதாவை உள்ளன்போடு நேசிக்கிறானோ, எவனொருவன் அவளைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறானோ, அவனிடமே ராதாவின் பரிதாப வரலாற்றைக் கூற வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்.

ராதா, என் தங்கை என்று தெரிந்த உடனே, நான் அவளை மேல் படிப்புக்காகச் சென்னைக்குக் கல்லூரிக்கு அனுப்பிவிட்டேன். ஹாஸ்டலில் இருக்கிறாள். பண வசதி செய்து விட்டேன். மிக அடக்கம், நல்ல குணம், படிப்பு, பழக மிக மேன்மையானவள்; என்றாலும், உலகின் முன், ராதா என் தங்கைதான் என்று பெருமையுடன், பூரிப்புடன் கூறிக் கொள்ள முடியாது. கண்ணாடியிலே தெரியும் பொருளைக் கையால் தொட முடியுமா? காலத் திரை எனக்கும் என் தங்கைக்கும் இடையே நிற்கிறது. அதைக் கிழித்தெறியும் தைரியம் எனக்கு இல்லை. ஆனால், என் தங்கையின் எதிர்கால வாழ்வு கௌரவமானதாக, நிம்மதியாக இருக்க வேண்டும். அவ்விதம் இருக்கும்படி செய்ய வேண்டியது என் பொறுப்பு. ராதா என் தங்கை - உலகம் அதை ஒப்ப மறுக்கும்; என் உள்ளமோ, அந்தக் கருத்தைத் தழுவிப் பூரித்தது" என்றான். அவனுடைய மொழியிலே, அவன் உள்ளத்தை ஏதோ இரகசியம், மென்று தின்று கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home