தமக்கு
உரிய இடத்தில் பிறர் நுழையாது தடுத்திட முள்வேலி போடுகிறார்கள். இடத்துக்குப்
போடப்பட்ட முள்வேலியைப் பற்றிய கதை அல்ல இது; இதயத்துக்குப் போடப்பட்டுவிடும்
முள்வேலி பற்றியது. கருத்துக்களின் தோற்றம், மாற்றம், வகை, வடிவம், விளைவு, அவை
ஏற்படுவதற்கான சூழ்நிலை ஆகியவை பற்றிய விளக்கமளிக்கும் இலக்கியம். 'மனிதத்
தன்மை'யின் புனிதத்தை விளக்கிடும் தூய்மை மிக்க கருத்தோவியம்.
கருமேகங்கள் திரண்டுள்ள காட்சியைத் தீட்டிட திறமை மிக்க எந்த ஓவியனாலும் முடியும்.
பால் நிலவு அழகொளி தந்திடும் காட்சியினைத் தீட்டிடவும், கைத்திறன் மிக்க ஒரு
ஓவியனால் முடியும்.
ஆனால் கருமேகங்கள் திரண்டிருப்பதால் காரிருள் கப்பிக் கொண்டிருக்கும் காட்சியுடன்
ஓர் புத்தொளி மெள்ள மெள்ளக் கிளம்புகிறது என்பதனையும் இணைத்தளித்திட கைத்திறன்
மட்டும் போதாது. கருத்துத் திறனும் இருந்திட வேண்டும், ஓவியனுக்கு.
கெட்டவனைக் காட்டிடுவது எளிதான காரியம், ஓரளவு திறமை பெற்ற எழுத்தாளனுக்கு.
நல்லவனைக் காட்டிடும் எழுத்தோவியம் தந்திடுவதும் எளிதுதான் தரமான எழுத்தாளனுக்கு.
ஆனால் 'கெட்டவன்' நல்லதும் எண்ணுகிறான்; செய்கிறான் என்று காட்டிடவும், நல்லவனிடம்
புற்றுக்குள் அரவுபோல கெடு நினைப்போ செயலோ இருந்திடுவதைக் காட்டிடவும், எழுத்தாளனாக
மட்டும் இருந்தால் போதாது; எண்ணங்களை ஆள்பவனாகவும் இருந்திட வேண்டும்.
எளிதான காரியம் அல்ல என்பதுடன், ஒரு துளி தவறினால், அத்தகைய முயற்சி, ஆபத்தையே கூட
மூட்டிவிடக்கூடும், படிப்போரின் உள்ளத்தில்.
இந்தச் சூழ்நிலையில், இவன் இப்படித்தான் எண்ணியிருப்பான் - இவ்விதம் தான்
செய்திருப்பான் என்று 'யூகித்து' எழுதுவதிலேயே தவறுகள் நேரிட்டு விடுகின்றன.
சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுவிடும் எண்ணத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு,
முற்றிலும் வேறான, ஆனால் தூய்மையான எண்ணத்தை ஒருவன் கொண்டிருந்தான் என்பதை
எடுத்துக் காட்டும் எழுத்தோவியம் தீட்டித் தருவதனை எல்லா எழுத்தாளர்களும்
மேற்கொள்வதில்லை, ஆபத்தான முயற்சி என்ற காரணத்தால்.
ஆனால், சிற்சிலர், தனித் திறமை பெற்றோர், இத்தகைய எழுத்தோவியம் தருகின்றனர். இறவாப்
புகழுக்கு உரியராகின்றனர்.
பகைவனிடம் கோபமும் கொதிப்பும், வெறுப்பும் எழுவதும், வஞ்சம் தீர்த்தாக வேண்டும்
என்ற எண்ணம் வெறி அளவு ஓங்குவதும் இயல்பு.
ஆனால் பகைவனிடமும் பரிவு எழுகிறது - எழ முடியும் என்று எடுத்துக்காட்ட மிகச்
சிலருக்கு மட்டுமே முடியும் - அது பொது இயல்புக்கு மாறானது; உலகில் ஒப்புக்
கொள்ளப்பட்டு விட்டுள்ள முறைக்கு முரணானது. எனவேதான் அதனை கூறுவதற்குத் தனியானதோர்
திறமை தேவைப் படுகிறது.
நம் நாட்டினை வேறோர் நாட்டினர் தாக்கிடும்போது - போர் மூண்டிடும்போது, நாட்டுப்
பற்று உணர்ச்சிதான், மற்ற எந்த உணர்ச்சியையும்விட, மேலோங்கி நிற்கிறது.
நம் நாடு தாக்கப்படுகிறது! நமது தன்மானம் தாக்கப்படுகிறது!! என்ற எண்ணம் உள்ளத்தை
எரிமலையாக்குகிறது; வெடித்துக் கொண்டு கிளம்புகிறது கோபம், கொதிப்பு, வெறுப்பு,
பழிவாங்கும் எண்ணம், பகைவனை அழித்தொழிக்க வேண்டும் என்ற துடிப்பு.
போர் மூண்டிடாதபோது எவையெவை 'வெறி' என்று கருதப்படுமோ அவை யாவும், தேவைப்படுவனவாக,
வர வேற்கப்படுவனவாக, போற்றப்படுவனவாக ஆகிவிடுகின்றன.
"இப்படியா இரக்கமின்றி அடிப்பது. அவனும், பாவம் மனிதன் தானே" என்று மனம் உருகிப்
பேசிடும் நல்லோர் கூட, மெல்லியலார் கூட, "சுட்டுத் தள்ளவேண்டும்! வெட்டி வீழ்த்த
வேண்டும்! பூண்டோ டு அழிக்கவேண்டும்!" என்று பேசுகின்றனர் - போர் மூட்டிவிடும் வெறி
உணர்ச்சி காரணமாக! அந்த உணர்ச்சியை வெறி என்று கூடக் கூறிடத் துணிந்திடார்!
கவிதைகள் இயற்றப்படுகின்றன, அந்த 'எழுச்சி' பற்றி.
நாடு வாழ்ந்திட எதனையும் செய்திடுவேன்! - என்ற பேச்சுக்குப் பெரியதோர் மதிப்புக்
கிடைக்கிறது. எதனையும் செய்திடுவேன்! படுகொலைகள் கூட! பச்சிளங் குழந்தைகளைக்
கொன்றிடும் பாதகம் கூட! போர்க் கோலத்தில், "கொல்லு! இல்லையேல் கொல்லப்படுவாய்!"
என்பதுதான் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கணம் - போரிடும் இரு நாடுகளிலும்!
ஒரு நாடு மற்ற நாட்டின் மீதே எல்லாப் பழிகளையும், எல்லா கெடு நினைப்பினையும் ஏற்றி
வைக்கும்; காட்டு மிராண்டிகள்! கொலை பாதகர்கள்! வெறியர்கள்! மனித மாண்பு
அறியாதவர்கள்! - என்று கண்டனக் கணைகள் கிளம்பிடும், இருபுறமுமிருந்து.
போர் ஓய்ந்து, ஓர் புது உறவு ஏற்பட்ட பிறகுதான், உண்மை வெளியே தலைகாட்டும்,
தைரியமாக! போர் துவங்கியதும், உண்மை ஓடி ஒளிந்து கொள்கிறது.
வெறி பிடித்தலையும் சிலரால் மூண்டது இந்தப் போர் என்று, போர் ஓய்ந்த பிறகுதான்
பேசப்படும் - போர் நடக்கும்போது அந்த நாட்டு மக்கள் அனைவரையுமே வெறியர்கள்,
காட்டுமிராண்டிகள், இரத்தம் குடிப்பவர், பிணம் தின்பவர், கற்பழிப்பவர், கயவர்
என்றுதான் பேசுவர் - ஒருவர் தவறாமல்.
யாரேனும் ஒருவர் இவ்விதம் பொதுப்படையாக ஒரு நாட்டு மக்கள் எல்லோரையும் மொத்தமாகக்
கண்டிப்பது முறை அல்ல என்று கூறிடின், அவனுடைய நாட்டுப் பற்று பற்றிய பலமான
ஐயப்பாடு எழும்; அருவருப்பு கிளம்பும்; அவன் 'தேசத்துரோகி' ஆக்கப்பட்டுவிடுவான்.
தேசத்துரோகி - நாட்டைக் காட்டிக் கொடுப்பவன் - எதிரிக்கு உளவாளி - எதிரியைவிடக்
கொடியவன் - இழி மகன் - என்றெல்லாம் அவன் கண்டிக்கப்படுவான்; தனது நிலைமையை விளக்கிட
அவன் முனைந்தாலோ, மக்களின் ஆத்திரம் மேலும் வளரும்; அவனை வெட்டி வீழ்த்திடக்
கிளம்புவர்.
இந்தக் கரத்தால் - இந்த வாள் கொண்டு - பகைவர் இருபதின்மரைக் கொன்றேன்.
துரத்தினேன்! அவன் ஏற்கனவே அடிபட்டவன். ஆகவே வேகமாக ஓடிட முடியவில்லை. களத்திலே
இருள் கப்பிக் கொண்டிருந்தது. படை கிளப்பிய தூசியால்! எதிரில் யானை விரண்டோ டி
வருவது அவன் கண்களில் படவில்லை - சிக்கிக் கொண்டான்; காலின்கீழ் போட்டு... ஆ!
என்றான் ஒருமுறை; ... ஒரே ஒரு முறை... பிறகு... கூழ்! கூழாகிப் போனான்!
இப்படிப் பல நிகழ்ச்சிகளைத் தன் வீரத்திற்குச் சான்றுகளாகக் கூறுவான், களம் சென்று
திரும்பியவன்; கேட்போர் மகிழ்வர்; அவனை நாட்டைக் காத்த நாயகன் என்று பாராட்டுவர்.
பகை உணர்ச்சி கிளம்பிவிட்டால் அது தடுப்பாரற்று வேகமாக வளரும்; வளர்ந்திடுவது
போரின்போது மேற்கொள்ளப்படும் ஒரு முறையாகிவிடுகின்றது. நாட்டு மக்கள் அனைவரும்
அந்தப் பகை உணர்ச்சியைக் கொண்டு விடுகின்றனர்; பொறி ஏதோ ஓர் இடத்தில்தான்
விழுகிறது; தீயோ எங்கும் பரவி, எல்லாவற்றையும் பிடித்துக் கொள்கிறது அல்லவா.
இன்முகம் காட்டுதல், நன்மொழி பேசுதல், அன்பு வழங்குதல், அறநெறி கூறுதல், இரக்கம்
கொள்ளுதல் ஆகிய பண்புகள் அவ்வளவும் போர்ச் சூழ்நிலையில் அடியோடு மறைந்துபோய்,
'தாக்கு! அழி! வெட்டு! குத்து!' - என்ற உணர்ச்சியை அனைவரும் பெற்றுவிடுகின்றனரே;
அப்படியானால் அந்தப் பண்புகள் - மனிதத் தன்மை - அடியோடு மடிந்து போகின்றனவா?
மடிந்து விடுகின்றன என்றும் கூறுவதற்கில்லை. ஏனெனில் போர் முடிந்து வேறோர் புதிய
நிலை ஏற்பட்டதும், மீண்டும் மெள்ள மெள்ள அந்தப் பண்புகள் மலருகின்றன;
சமுதாயத்துக்கு மணம் அளிக்கின்றன.
மடிவதில்லை; ஆனால் அந்தப் பண்புகள் மங்கி விடுகின்றன; மறைந்து விடுகின்றன.
பகைவனிடம் மூண்டுவிடும் வெறுப்புணர்ச்சி, அந்தப் பண்புகளை மூலைக்குத்
துரத்திவிடுகின்றன! கண் சிமிட்டிக் களிப்பூட்டும் விண்மீன்களைக் கருமேகம் மறைத்து
விடுவது போன்ற நிலை!
கப்பிக் கொண்டிருக்கும் காரிருளுக்குப் பின்னே, விண்மீன் உளது என்பதனையும், அதன்
ஒளி காரிருளைக் கூடக் கிழித்தெறிந்து கொண்டு வெளிக் கிளம்பக் கூடும் என்பதனையும்
எடுத்துக் காட்டுகிறார் ஹால்கெயின் என்னும் பேரறிவாளர் 'இரும்பு முள்வேலி' எனும்
தமது நூலில்.
இங்கிலாந்துடன் ஜெர்மனி போரிடும் நாட்கள்; உலகையே தன் காலடி விழச் செய்திடத்
துணிந்து கெய்சர், போர் நடாத்திய நாட்கள்; முதலாவது உலகப் போர்.
ஜெர்மனியில், கெய்சர் போர் வெறி மூட்டுகிறார் என்று துவங்கிய பேச்சு, ஜெர்மானியர்
போர் வெறியர்கள் என்ற கட்டத்தை அடைந்து விட்டது. ஒரு நாட்டு மக்களுடைய நாட்டுப்
பற்றையும், 'ராஜபக்தி'யையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அந்த நாட்டு அதிபன்,
அவர்களை பலிக்கிடாக்களாக்கி, இரத்த வெள்ளம் புரண்டோ டச் செய்தான்.
கெய்சர் மீதுதான் முதலில் கண்டனம், வெறுப்பு, கொதிப்பு! பிறகு ஜெர்மன் மக்கள் மீதே
அந்த வெறுப்புணர்ச்சி பாய்ந்தது.
குழந்தைகளை வெட்டித் தின்கிறார்கள் ஜெர்மன் வெறியர்கள் என்று இங்கிலாந்து நாட்டு
முதியவர்கள் - குறிப்பாகத் தாய்மார்கள் பேசினர்!
ஜெர்மன் மொழி, ஜெர்மன் தொழில் திறமை, ஜெர்மன் கலை என்ற எல்லாவற்றின் மீதும் அந்த
வெறுப்புணர்ச்சி பாய்ந்தது.
போர் மூளுவதற்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் வேலை பார்த்து வந்த
ஜெர்மானியர்கள் விரட்டப்பட்டனர் அல்லது சிறை வைக்கப்பட்டனர்.
ஜெர்மனியுடன் எந்த விதமான தொடர்பும் கூடாது என்பது தேசியக் கட்டளையாகிவிட்டது.
எல்லாத் தொடர்புகளும் அறுத்தெறியப்பட்டன.
இங்கிலாந்து நாட்டு அரச குடும்பம் ஜெர்மன் கெய்சர் குடும்பத்துக்கு நெருங்கிய உறவு.
அதனை வெளியே சொல்லக் கூடக் கூசினர். பகை உணர்ச்சி அந்த அளவு கப்பிக் கொண்டிருந்தது.
அந்த சூழ்நிலையில் நடைபெறும் நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டது. 'இரும்பு
முள்வேலி' போர் கிளப்பிவிடும் பகை உணர்ச்சிக்கும் இதயத்தின் அடியிலே
மறைந்திருக்கும் அன்பு உணர்ச்சிக்கும் இடையே நடைபெறும் போர் பற்றிய கதை.
மான் தீவு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலே ஒரு பகுதி. அங்கு ஒரு விவசாயக் குடும்பம்.
மிராசுதாரனிடம் ஒரு பண்ணையைக் குத்தகைக்கு எடுத்துப் பாடுபட்டு வாழ்க்கையை நடத்திச்
செல்லும் ஒரு குடும்பமும், முதியவர் - அவர் மகன் - அவர் மகள் - கொண்ட குடும்பமும்.
ஜெர்மனியை அழித்தொழித்தாலொழிய, இங்கிலாந்து மட்டுமல்ல, மனித குலமே அழிந்து போகும்
என்ற உணர்ச்சி எங்கும் பரவி இருந்ததுபோலவே, அந்த சின்னஞ்சிறு தீவிலும் பரவி
இருந்தது.
முதியவரின் மகன், பிரிட்டிஷ் படையில் சேர்ந்தான்; முதியவர் மகிழ்ந்தார்.
'என் அண்ணன் போர்வீரன்! பொல்லாத ஜெர்மானியரை அழிக்கும் புனிதப் போரில்
ஈடுபட்டிருக்கிறான்' என்ற எண்ணம் கொண்ட அந்த எழில் மங்கை, தன் குடும்பத்துக்கு
அண்ணன் பெருமை தேடிக் கொடுக்கிறான் என்ற பெருமித உணர்ச்சியில் திளைத்திருக்கிறாள்.
எங்கும் பரவி, எல்லோர் உள்ளத்திலும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது போலவே மோனா
மனதிலும் ஜெர்மானியர் வெறுப்புணர்ச்சி ததும்பிக் கிடந்தது. 'ஒரு துளியும் ஈவு
இரக்கம் காட்டக் கூடாது. கொன்று குவிக்க வேண்டும் அந்தக் கொடியவர்களை; பூண்டோடு
ஒழிக்க வேண்டும்' என்று கருதினாள்.
ஜெர்மானியர்களின் காட்டுமிராண்டித்தனம், கொலை பாதகத் தன்மை பற்றிய தகவல் நிரம்பக்
கிளம்பியபடி இருந்தன. ஒன்றுக்குப் பத்தாக இவை வளர்ந்தன! வெறுப்புணர்ச்சி
மூண்டுவிட்டிருந்தது. முதியவர் கூட அவ்வளவு கொதித்துப் பேசுவதில்லை. அவருடைய மனதிலே
சிறிதளவு பழைய பண்புகள் உலவிட இடம் இருந்தது. அந்த மங்கைக்கோ உள்ளம் முழுவதும் அந்த
ஒரே ஒரு உணர்ச்சிதான்; ஜெர்மானியர் மீது வெறுப்பு; அளவு கடந்த அகற்றப்பட முடியாத
வெறுப்பு. அதிலும் போர்க்களம் சென்றுள்ள தன் அண்ணனைப் பற்றிய எண்ணம், அந்த
வெறுப்புணர்ச்சியை வெந்தழல் ஆக்கிவிட்டிருந்தது.
இரும்பு முள்வேலி
தொடர்ச்சி - 2
ஜெர்மனி வெற்றிகளை ஈட்டிக் கொண்டு, ஆணவத்தைக் கக்கிக் கொண்டிருந்த கட்டம் முடிந்து
தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது; பல இடங்களிலே தோல்வி
கண்டு திணறிக் கொண்டிருந்தது; ஜெர்மானியர் பலர் கைதாயினர்.
அந்தக் கைதிகளை, இந்தத் தீவிலே கொண்டு வந்து சிறை வைக்க ஏற்பாடாகிறது.
காட்டு மிராண்டிகள், வருகிறார்கள்; இங்கு நாம் இருக்கக்கூடாது என்று எண்ணி அந்தத்
தீவிலிருந்து பல குடும்பங்கள் வெளியேறிவிட்டன. சில குடும்பத்தினர் தீவிலே தங்கினர்;
என்றாலும் பெண்களை மட்டும் வேறு இடத்துக்கு அனுப்பிவிட்டனர்.
"இங்கு ஏன் அந்த இழிமக்களைக் கொண்டு வருகின்றனர்? கேவலம் இது, மிகக் கேவலம். அந்தக்
கொடியவர்களின் நிழல் பட்டாலே இழிவாயிற்றே! அவர்களுக்கா நமது தீவிலே இடம்? அந்த
வெறியர்கள் இங்கு இருக்கப் போகிறார்கள் என்றால், அதே இடத்தில் நாம் இருப்பதா?
கேவலம்! மிகக் கேவலம் அது. அப்பா! நாம் இந்தத் தீவைவிட்டு வேறிடம் போய்விடலாம்.
அந்தக் கொடியவர்களைக் காண்பது கூடப் பெரும் பாவம்! இங்கு இருக்கலாகாது" என்று பெண்
வற்புறுத்துகிறாள். அவள் உள்ளத்தில் வெறுப்புணர்ச்சி அவ்வளவு கப்பிக்
கொண்டிருக்கிறது. முதியவர் புன்னகை செய்கிறார். அடே அப்பா! எவ்வளவு கொதிப்புடன்
பேசுகிறாள் மகள் என்பதை எண்ணி.
"மகளே! மற்றவர்கள் தீவை விட்டுச் சென்றுவிட்டாலும், நாம் செல்வதற்கு இல்லை.
மிராசுதாரர், நாம் இங்கேயே இருந்தாக வேண்டும்; கவனிப்பு இல்லாவிட்டால் பண்ணை
பாழாகிவிடும் என்கிறார்; மேலும் இங்கு சிறை வைக்கப்பட இருப்பவர்களுக்கு, நாம் தான்
பால் தரவேண்டி இருக்கிறது; வேறு வழியில்லை..." என்கிறார்.
"பால் தருவதா! அந்தப் பாவிகளுக்கா! எந்தப் பாதகர்களை ஒழித்திடும் புனிதப் போரிலே
அண்ணன் ஈடுபட்டிருக்கிறாரோ, அந்தப் பாதகர்களுக்கு நாம் பால் தருவதா? அக்ரமம்!
அநியாயம்! இழிசெயல்! நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன். அந்தப் பாவிகளை வெட்டி
வெட்டிப் போட வேண்டும், கழுகுக்கும் நரிகளுக்கும்; அவர்களுக்கு நமது தீவிலே இடம்!
நமது பண்ணையிலிருந்து பால்! இது என்ன அநியாயமப்பா!" - என்றெல்லாம் அவள் எண்ணிக்
கொதிப்படைகிறாள். முதியவர் புன்னகை புரிகிறார்.
"அதனால் என்னம்மா! அவர்களும் மனிதர்கள்தானே! ஜெர்மானியர்களாகப் பிறந்ததனாலேயே
அவர்கள் மனித குலம் அல்ல என்று கூறிவிட முடியுமா! போர் மூண்டுவிட்டது, நம்
நாட்டுக்கும் ஜெர்மனிக்கும். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறோம். அதனால்
ஜெர்மானியர் மனிதர்களே அல்ல என்று கூறிவிட முடியுமா!" - என்று கனிவாகப் பேசுகிறார்
முதியவர்; கன்னி கடுங்கோபம் கொள்கிறாள்.
போரின் போது, இரு தரப்பினருந்தான் அழிவு வேலையில் ஈடுபடுகின்றனர். எந்தச்
சமயத்தில், எந்த இடத்தில் எவருடயை கரம் ஓங்கி இருக்கிறதோ அவர்கள் அதிக அளவுக்கு
வெட்டி வீழ்த்துவார்கள்! இரு தரப்பினரும் ஒரே விதமான வேலையில் - கொல்லும் வேலையில்
ஈடுபட்டுள்ளனர். இதிலே ஒரு தரப்பினர் மட்டுமே காட்டு மிராண்டிகள் - கொலை பாதகர்கள்
- இரத்த வெறி பிடித்தலைவோர் - என்று கூறிவிட முடியுமா? போர்,
காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டு விடுகிறது. ஒரு தரப்பினர் குண்டுகளால்
தாக்குகின்றனர்; மற்றொரு தரப்பினர் மலர்கொண்டு அர்ச்சிக்கின்றனர் என்பதா போர்! கொலை
நடக்கிறது, பெரிய அளவில் - சட்டத்தின் அனுமதியுடன் - சமூகத்தின் ஒப்புதலுடன்! இதிலே
அதிகமான அளவு அழிவைச் செய்பவன் வெற்றி வீரனாகிறான். அவனுடைய கரம் இரத்தக் கறை
படிந்தது. ஆனால் அது நாட்டைக் காத்த கரம் - வெற்றி ஈட்டிய கரம் - புகழ் தேடித் தந்த
கரம் என்பதால் பாராட்டப்படுகிறது.
முதியவர் இதுபோன்ற கருத்தினைக் கொண்டவராக இருந்திருக்க வேண்டும்; அவருடைய உள்ளம்
ஒரேயடியாக வெறுப்பு நிரம்பியதாக இல்லை; நியாய உணர்ச்சியும் சிறிதளவு உலவிட
இருந்தது.
"இப்படி ஒரு மனமா! ஜெர்மானியர் வந்து தங்கினால் என்ன!! அவர்களுக்குப் பருகிடப் பால்
தந்தால் என்ன என்று பேசுவதா? நமது நாட்டு மக்களின் இரத்தத்தைக் குடிக்கக்
கிளம்பியுள்ள கொடியவர்கள் இந்த ஜெர்மானியர். இவர்களுக்குப் பருகப் பால்! நாம்
கொடுப்பதா! என்ன நியாயம் இது! அப்பா ஏன் இப்படிக் கெட்டுக் கிடக்கிறார் - பால்
தருவதாமே பகைவர்களுக்கு!! கொடுத்தால் என்னம்மா என்று வாதாடுகிறார்! அவர்களும்
மனிதர்தான் என்று நியாயம் பேசுகிறார்! அவர்கள் மனிதர்களா!! பதைக்கப் பதைக்கக்
கொன்றார்கள் நம்மவர்களை! பச்சிளங் குழந்தைகளைக் கூடக் கொன்றனர் அக் கொடியவர்கள்!
அவர்களும் மனிதர்கள்தான் என்கிறார் அப்பா! ஏன் இவருக்கு இப்படிப் புத்தி கெட்டுப்
போய்விட்டது. அங்கே அண்ணன் துரத்துகிறான் ஜெர்மன் கொடியவர்களை - இங்கே அப்பா பால்
தரச் சொல்கிறார். அண்ணன் என்ன எண்ணிக்கொள்வார், இதனை அறிந்திடின்? செச்சே! அப்பா
சுத்த மோசம்!"
ஜெர்மன் கைதிகளை அடைத்து வைக்க, சிறைக்கூடம் கட்டப்படுகிறது. கைதிகள் தப்பித்துக்
கொள்ளக்கூடாது என்பதற்காக, அங்கு இரும்பு முள்வேலி போடப்படுகிறது. மிருகங்களை
அடைத்து வைப்பது போல ஜெர்மன் கைதிகளை அடைத்து வைக்கிறார்கள். வெளியே பிரிட்டிஷ்
போர் வீரர்கள் காவல் புரிகின்றனர், தப்பியோட முயற்சித்தால் சுட்டுத்தள்ள.
கைதிகளான எல்லா ஜெர்மானியருமே, போர் வீரர்கள் அல்ல; பலர் தொழிலில், வாணிபத்தில்,
பல்வேறு அலுவலகங்களில் ஈடுபட்டிருந்தவர்கள்; சிலர் செல்வம் படைத்தவர்கள்கூட!
எல்லாம் ஜெர்மானியர்தானே! வெறியர்கள் - கொடியவர்கள்தானே! இவர்களை இப்படித்தான்
அடைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் மோனாவுக்கு. முதியவருக்கோ ஒரு பச்சாதாப
உணர்ச்சி. ஜெர்மானியர்கள் தமக்கு அளிக்கப்படும் உணவு மோசமாக இருப்பதாகக்
குறைப்பட்டுக் கொள்கிறார்கள் என்று கூறுகிறார். இதுகளுக்கு அப்படிப்பட்ட உணவுதான்
தரவேண்டும் என்கிறாள் மோனா, அவள் இதயத்தில் வெறுப்புணர்ச்சி நிரம்பி இருப்பதால்.
'வீட்டை விட்டு, குடும்பத்தைவிட்டு இழுத்துவரப்பட்டிருக்கிறார்கள்; அது போதாதா;
மேலும் வாட்ட வேண்டுமா அவர்களை' என்று முணுமுணுக்கிறார் முதியவர்.
கொடியவர்களுக்காகப் பரிவு காட்டுவது மோனாவுக்கு துளியும் பிடிக்கவில்லை. "நம்முடைய
மக்கள் களத்திலே பூப்பந்தாட்டமா ஆடிக் கொண்டிருக்கிறார்கள்! விருந்தும் இசையும் நடன
விழாவுமா நடக்கிறது அவர்களுக்கு. என்னென்ன இன்னலோ, ஆபத்தோ! நிலைமை எவ்வளவு மோசமாக
இருக்கிறதோ? அதைப்பற்றி நினைத்துக் கொண்டால் நெஞ்சிலே நெருப்பு விழுவது
போலிருக்கிறது. இவர் என்னடா என்றால், இந்தக் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் இடம்
மோசம்! போடப்படும் சாப்பாடு மட்டம் என்று உருகுகிறார். அந்தப் பாவிகளுக்காக! அந்தப்
பாதகர்களுக்காக!" என்று மோனா கூறுகிறாள். முதியவர், 'கல்மனம் மகளே! உனக்குக்
கல்மனம்!' - என்று மெள்ளக் கூறுகிறார்.
மேலும் மேலும் ஜெர்மானியர் கொண்டுவரப் படுகின்றனர். இரும்பு முள்வேலி போட்ட
சிறைக்குள்ளே தள்ளப்படுகிறார்கள்.
மோனாவின் மனம் இளகவில்லை; படட்டும், படட்டும்! அனுபவிக்கட்டும்! என்றே கூறுகிறாள்.
என்ன செய்தார்கள் அவர்கள்? என்ன செய்ய வேண்டும்? அவர்கள் ஜெர்மானியர்கள்; அது
போதாதா அவர்களிடம் வெறுப்புக் கொள்ள?
அத்தனை வெறுப்புக் கொண்டிருக்கும் மோனா! அந்த ஜெர்மானியர்களை நாளைக்கு இரண்டு
வேளையாவது பார்த்துத் தொலைக்க வேண்டி வருகிறது. பால் வாங்கிக் கொண்டு போக ஜெர்மன்
கைதிகளில் சிலர் வருகிறார்கள். பிரிட்டிஷ் போர்வீரர்கள் உடன் வருகின்றனர், கைதிகள்
தப்பி ஓடிவிடாதபடி பார்த்துக் கொள்ள. ஜெர்மானியரைப் பார்க்கும் போதே எள்ளும் -
கொள்ளும் வெடிக்கிறது மோனாவின் முகத்தில், சுட்டுவிடுவது போன்ற பார்வை! காலில்
ஒட்டிக் கொள்ளும் மலத்தைக் கழிவியான பிறகும் ஒருவிதமான அருவருப்பு இருந்தபடி
இருக்குமல்லவா, அதுபோல, அவர்களைக் கண்டால் மோனாவுக்கு ஒருவித அருவருப்பு.
அந்தக் கைதிகள் அவளிடம் பேச முயற்சிக்கிறார்கள். மோனா வாய் திறக்க மறுக்கிறாள்.
இதுகளுடன் பேசுவேனோ!! என்று நினைக்கிறாள்.
"மகளே! இவ்வளவு குரூரமாக இருக்கிறாயே நமது வேதம் என்ன சொல்லுகிறது. பகைவனுக்கும்
அருள்பாலிக்கும்படி அல்லவா கூறுகிறது. பரமண்டலத்திலுள்ள பிதாவை நோக்கி நாம்
பூஜிக்கும் பாடல் நினைவிற்கு வரவில்லையா என்று கேட்கிறார். அவளுக்கு அந்த
நினைவெல்லாம் இல்லை; ஒரே ஒரு எண்ணம்தான் அவள் உள்ளத்தில் இடம் பிடித்துக்
கொண்டிருக்கிறது; வெறுப்பு! ஜெர்மானியர் என்ற உடன் ஒரு கொதிப்பு! அவர்கள் அழிந்துபட
வேண்டும் என்ற ஆத்திர உணர்ச்சி. பகைவனுக்காகக்கூடப் பகவானிடம் பிரார்த்திக்கலாம்.
ஆனால் அந்தப் பகைவன், மனிதனாக இருக்க வேண்டுமே! ஜெர்மானியரைத் தான் மோனா, மனிதர்
என்றே ஏற்றுக் கொள்ள மறுக்கிறாளே; மனித வடிவிலே உலவும் மிருகங்கள்; பிரிட்டிஷ்
இரத்தத்தைக் குடிக்கக் கிளம்பிடும் கொடிய விலங்குகள் என்றல்லவா திடமாக நம்புகிறாள்.
அவர்களிடம் பச்சாதாபமா...! முடியுமா!!
பால் எடுத்துக் கொண்டுபோக பண்ணை வீட்டுக்கு வந்திடும் ஜெர்மானியரில் ஒருவன், உடல்
மெலிந்து கிடந்தான். எப்போதும் இருமிக் கொண்டிருப்பான்; வெளுத்துப்போன முகம்.
சிலவேளைகளில், அவனிடம் சிறிதளவு பச்சாதாப உணர்ச்சி தோன்றும், மோனாவின் உள்ளத்தில்.
ஆனால் அந்த உணர்ச்சியை ஒரு நொடியில் விரட்டி அடிக்கிறாள். அய்யோ பாவம் என்று
எண்ணுவதா! பச்சாதாபம் காட்டுவதா! இவனுக்கா!! இளைத்திருக்கிறான். இருமிக்
கொண்டிருக்கிறான்; ஆனால் இவன் யார்? இவனும் ஜெர்மானியன் தானே! மனிதகுலத்தை
நாசமாக்கத் திட்டமிட்டுப் போரினை மூட்டிவிட்ட ஜெர்மன் இனத்தான் தானே!! இவனிடமா
பச்சாதாபம் காட்டுவது? கூடாது! முடியாது!
மோனாவின் உள்ளத்திலுள்ள வெறுப்புணர்ச்சி வெற்றி பெறுகிறது.
ஜெர்மானியர் செய்திடும் அட்டூழியங்களைப் பற்றி இதழ்கள் செய்திகளைத் தந்தபடி உள்ளன.
அவற்றினைப் படிக்கப் படிக்க, வெறுப்புணர்ச்சி மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது;
எரிகிற நெருப்பிலே கொட்டப்படும் எண்ணெய் ஆகிறது அந்தச் செய்திகள்.
முதியவர் வழக்கம் போலப் பிரார்த்தனையின் போது, சமாதானத்தை வழங்கும்படி பிதாவை
வேண்டிக் கொள்வது கூட மோனாவுக்குப் பிடிக்கவில்லை. பிதாவே! ஜெர்மானியரைப் பூண்டோ டு
அழித்தொழித்திடு; மனிதகுலத்தை ரட்சித்திடு! - என்பது போலப் பிரார்த்தனை இருந்திடின்
மோனாவுக்குப் பிடித்தமாக இருக்கும். முதியவர் தமது பிரார்த்தனையில் ஜெர்மானியர்
அழிக்கப்பட்டாக வேண்டும் என்பதனை வலியுறுத்தாமல் சமாதானம் வேண்டும் என்று மட்டும்
கூறுகிறாரே, நியாயமா... நாட்டுப் பற்று உள்ளவர்கள் இப்போது சமாதானம் காணவா
விரும்புவார்கள். போர்! போர்!! பகைவர் அழிந்தொழியும் வரையில் போர்! இதனை அல்லவா
விரும்புவர்! பகைவனை அழித்தொழிக்கும் வல்லமையை ஆண்டவனே! எமக்கு அளித்திடும்
என்பதல்லவா நாட்டுப் பற்று மிக்கவன் செய்திடத்தக்க பிரார்த்தனை! மோனா இது குறித்து
முதியவரிடம் கேட்டே விடுகிறாள்.
"அப்பா! உண்மையிலேயே சமாதானம் வேண்டும் என விரும்புகிறீரா?"
"ஆமாம் மகளே! சமாதானம் நாடக்கூடாதா..."
"நான் சமாதானம் மலர்வதை விரும்பவில்லை. போர் வேண்டும்! மேலும் மேலும் போர்
வேண்டும்! அந்தக் கொடிய மிருகங்கள் உலகிலிருந்தே விரட்டி அடிக்கப்படும் வரையில்
போர் வேண்டும்."
முதியவர் தன் மகளின் நிலையை உணருகிறார். ஆனால் அவள் போக்கை மாற்ற முடியாது என்று
கண்டுகொள்கிறார் போலும்! திருத்த முயற்சிக்கவில்லை; வாதிடக்கூட இல்லை.
நமது மகள் மட்டுமா, நாட்டிலே அனைவருமே இப்போது இவ்விதமான போக்குடன் உள்ளனர்; இது
திருத்தப்படக் கூடியதாகத் தெரியவில்லை; ஓங்கி வளர்ந்து வளர்ந்து போருருக் கொண்டு,
பெரியதோர் அழிவை மூட்டிவிட்டுப் பிறகே இந்த வெறி உணர்ச்சி மடியும்; இடையிலே இந்த
உணர்ச்சியின் வேகத்தைக் குறைத்திடுவதுகூட முடியாத காரியம் என்று முதியவர் எண்ணிக்
கொண்டார் போலும்.
ராபி - மோனாவின் அண்ணன் கடிதம் எழுதுகிறான், களத்தின் நிலை பற்றி; உற்சாகத்துடன்,
நம்பிக்கையுடன் பெரியதோர் தாக்குதலை நடத்தப் போகிறோம்; முன்னணிப் படையினில் நான்
இருக்கப் போகிறேன்; இந்தத் தாக்குதல் பகைவர்களை அழித்திடும் என்று கடிதத்தில்
குறிப்பிட்டிருக்கிறான். கேட்கக் கேட்க இனிப்பாக இருக்கிறது மோனாவுக்கு.
"அப்பா! மோனாவிடம் சொல்லு, அவள் எனக்கு எழுதிய கடிதத்தின் சில பகுதிகளை, அதிகாரிகள்
சிலரிடம் படித்துக் காட்டினேன். அவர்கள் மிகவும் மெச்சுகிறார்கள்; உன் தங்கை போன்ற
உணர்ச்சியும் எழுச்சியும் கொண்ட வீரர் ஆயிரவர் இருந்தால் போதும்; இந்தப் போர் ஒரு
திங்களில் வெற்றி தந்திடும் என்று கூறிப் பாராட்டுகின்றனர்." ராபியின்
கடிதத்திலிருந்து இந்தப் பகுதியைப் படித்திட கேட்டபோது மோனாவுக்குப் புல்லரித்தது;
பூரித்துப் போனாள்.
இரும்பு முள்வேலி
தொடர்ச்சி - 3
பிரிட்டிஷ் படைகள் பலமாகத் தாக்குகின்றன.
ஜெர்மன் படைகள் விரண்டோ டுகின்றன.
ஜெர்மன் படைக்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்படுகிறது.
இதழ்கள் தந்திடும் இந்தச் செய்தித் தலைப்புகள் மோனாவுக்குச் செந்தேனாக இனிக்கிறது.
ராபி ஏன் இந்த வெற்றிச் செய்திகளைப் பற்றித் தெரிவிக்கவில்லை; கடிதம் காணோமே என்று
எண்ணிக் கவலை கொள்கிறாள்.
ஒருநாள் அஞ்சல் வருகிறது; அதை எடுத்துக் கொண்டு வருபவன் முகத்தில் ஈயாடவில்லை;
குனிந்த தலையுடன் வருகிறான்; கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறான்; நீளமான
உறை; சர்க்கார் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. முதியவர் பிரித்துப் படிக்கிறார்;
'சர்க்கார் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளும் சேதி என்னவென்றால், படை வீரன் ராபி
களத்தில்...' முழுவதும் படிப்பானேன்? விஷயம் புரிந்து விட்டது; ராபி
இறந்துவிட்டான். வீரமரணம்; நாட்டைக் காத்திடும் முயற்சியில் உயிரை இழந்தான் -
என்றெல்லாம் பாராட்டு இணைக்கப்பட்டிருக்கிறது கடிதத்தில்; ஆனால் தந்தையின்
தத்தளிப்பை, வீர மரணம் என்ற பாராட்டுதல் குறைத்திட முடியுமா...
"மகளே! படி அம்மா! பாரம்மா!"
மோனா படிக்கிறாள்! அண்ணன் இறந்துபட்டான்! ராபி மறைந்துவிட்டான்! ராபியைக்
கொன்றுவிட்டார்கள் - கொடியவர்கள் - ஜெர்மானியர்! அந்தக் கொடிய ஜெர்மானிய இனத்தவரிலே
ஒரு பிரிவினர் கைதிகள் என்ற பெயருடன் இங்கே உள்ளனர்! என் அண்ணனைக் கொன்றுவிட்ட
கொடியவர்கள், ஜெர்மானியர்! அவர்களிலே ஒரு பகுதியினர் இங்கே! அவர்கள் பருகிடப் பால்
தமது பண்ணையிலிருந்து! என் அண்ணனின் குருதியைக் குடித்துவிட்டார்கள், அந்தக்
கொடியவர்கள்; அந்த இனத்தார் இங்கு பருகிட நாங்கள் பால் அளிக்கிறோம்!
இதுபோல என்னென்ன எண்ணிக் கொண்டிருந்திருப்பாள், பாவம்! ஏற்கனவே மூண்டு கிடந்த
கொதிப்பு மேலும் எந்த அளவு கிளம்பிவிட்டிருக்கும்!
பிதாவிடம் பிரார்த்திக்கச் சொன்னாரே, அப்பா! இப்பொழுது என்ன சொல்லுவார்!
"அப்பா! பால் கொடுத்து வருகிறோமே பாதகர்களுக்கு அந்த ஜெர்மன் கொடியவர்கள் உன்
மகனுடைய இரத்தத்தை - என் அண்ணன் உயிரைக் குடித்துவிட்டார்களப்பா! அண்ணனைக்
கொன்றுவிட்டார்களப்பா! அந்த கொடிய இனத்தவர், இங்கேயும் உள்ளனர்; நமது பண்ணையில்
பால் வாங்கிப் பருகிக் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பச்சாதாபம்
காட்டச் சொன்னீர்களே! அவர்கள் ஜெர்மானியராக இருந்தால் என்ன, அவர்களும் மனிதர்கள்
என்று வாதாடினீர்களே! அந்த மிருகங்கள் உன் மகனை - என் அண்ணனை - நாட்டுப் பற்று
மிக்கவனை, நியாயத்தை நிலைநாட்டப் போரிட்ட மாவீரனைக் கொன்றுவிட்டனவே அப்பா! இப்போது
என்ன சொல்கிறீர்? பிரார்த்தனை செய்ய வேண்டுமா, பிதாவிடம் சமாதானம் வழங்கும்படி?
சமாதானமா அப்பா வேண்டும்!! அண்ணன் உயிரைக் குடித்த கொடியவர்கள் கொட்டமடித்துக்
கொண்டிருப்பது; நாம் பிதாவிடம் சமாதானம் வேண்டி பூஜித்துக் கிடப்பதா? சொல்லுங்கள்
அப்பா! சொல்லுங்கள்!! என்ன செய்யலாம் சொல்லுங்கள்" என்றெல்லாம் கேட்டிட அந்தக்
கன்னி துடித்திருப்பாள்.
முதியவரின் நிலை? மகன் இறந்துபட்டான் என்ற செய்தியை அறிந்ததும், அவருடைய மனதிலே
சிறிதளவு தலை தூக்கியபடி இருந்ததே மனிதத் தன்மைக்கே உரிய பண்பு, அன்பு காட்டுதல்,
பகைவருக்கும் இரங்குதல், அது மடிந்து விட்டது; அடியோடு மடிந்தே போய்விட்டது.
இதயத்தில் ஒரு பயங்கரமான சம்மட்டி அடி விழுகிறது; முதியவர் கீழே சாய்கிறார், நினைவு
இழந்து. மருத்துவர் வருகிறார்; இதயத்திலே அடி! என்றாலும் இப்போதைக்கு ஆபத்து இல்லை.
படுத்துறங்கட்டும்; முழு ஓய்வு வேண்டும் என்று கூறிச் செல்கிறார்.
முதியவர் படுத்துக் கிடக்கிறார்; மோனாவின் உள்ளக் கொதிப்பு மேலும் ஓங்கி வளருகிறது.
ஜெர்மானியர்களை ஆண்டவன் அழித்தொழிக்க வேண்டும்.
எல்லா ஜெர்மானியரையும் ஜெர்மன் அதிபர்கள் - ஜெர்மன் கெய்சர் என்போரை மட்டுமல்ல,
எல்லா ஜெர்மானியரையும் அழித்திடவேண்டும் - ஆண் - பெண் - குழந்தை குட்டி அவ்வளவு
பேரும் - ஒருவர் பாக்கியில்லாமல் ஒழிந்து போக வேண்டும். ஆண்டவன் ஜெர்மன் மக்கள்
அனைவரையும் அழித்தாக வேண்டும்; இல்லையென்றால் அவர் உண்மையான ஆண்டவன் அல்ல!
மோனாவின் பிரார்த்தனை இதுபோல! வேதனை நிரம்பிய உள்ளத்திலிருந்து பீறிட்டுக்
கிளம்பும் பிரார்த்தனை!
முதியவர் நடத்தச் சொன்ன பிரார்த்தனை, பகைவனுக்கும் அருள்பாலிக்கும்படி. மோனா அதனை
மறுத்தாள். கல் மனம் அம்மா உனக்கு என்று முதியவர் கூறினார். இப்போது?
ஆண்டவனே எழுந்தருள்வீர்! உமது பகைவர்கள் சிதறி ஓடிடட்டும். கடவுள் நெறி மறந்தோர்
கொட்டமடித்திட விடக்கூடாது. தேவதேவா! தழலென எரியும் கரித்துண்டுகள் அவர்கள் மீது
பொழியட்டும்; நெருப்பிலே தள்ளிடுவீர் அந்த நாசகாலர்களை! நரகப் படுகுழியில்
தள்ளிடுவீர்! மீண்டும் அவர்கள் தலைதூக்கிடாதபடி படுகுழியில் அந்தப் பாவிகளைத்
தள்ளிடுவீர்!
இது முதியவரின் பிரார்த்தனை. வேதப் புத்தகத்தில், பாவிகளை ஆண்டவன் அழித்தொழித்த
படலத்தில் உள்ள பிரார்த்தனையைப் படிக்கிறார். பரிவு, பச்சாதாபம், பகைவனுக்கு
இரங்கல் என்பதை இப்போது அவருடைய உள்ளத்தில் இடம் பெற மறுத்துவிடுகிறது. மகனைக்
கொன்ற மாபாவிகள் என்று எண்ணும்போதே, ஜெர்மானியர் பூண்டோ டு அழிந்துபட வேண்டும் என்ற
கொதிப்பு எழுகிறது. மோனா சொன்னதுதான் சரி; அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்
என்கிறார் முதியவர். ஆண்டவனை அழைக்கிறார் சமாதானம் வழங்கச் சொல்லி அல்ல;
ஜெர்மானியர்களை அடியோடு அழித்தொழிக்கும்படி.
ஜெர்மன் கைதிகள் அடைபட்டுக் கிடந்ததால், மிருக உணர்ச்சி மேலிட்ட நிலையினராகின்றனர்.
அடிக்கடி சச்சரவு, குழப்பம், அடிதடி, அமளி.
கலகம் செய்த கைதிகள் சிலர் காவற்காரர்களால் சுட்டுத் தள்ளப்படுகின்றனர்.
நிலைமையை அறிந்து போக வந்திருந்த மேலதிகாரி, 'இவர்களை நாய்களை அடைத்து வைப்பதுபோல
அடைத்து வைத்தால், நாய்க் குணம் ஏற்பட்டுவிடத்தானே செய்யும். ஒரு வேலையுமின்றி
அடைபட்டுக் கிடப்பதால் வெறிகொண்டு விடுகின்றனர். ஏதாவது வேலை கொடுக்க வேண்டும்"
என்று கூறுகிறார்.
இரும்பு முள்வேலி போடப்பட்ட இடங்களிலேயே, தொழில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன,
கைதிகள் வேலை செய்ய.
மிருகங்களை மனிதர்களாக்க முயற்சிக்கிறார்கள் என்று கேலி பேசினாள் மோனா, இந்தப்
புதிய திட்டத்தைப் பார்த்து.
வழக்கப்படி பால் வாங்கிக் கொண்டு போக வரும் இருமல்காரனுக்குப் பதிலாக வேறோர்
ஜெர்மானியன் வந்தான், ஓர்நாள்.
மோனா அதனைக் கவனிக்கக்கூட இல்லை. பால் பாத்திரத்தை அவன் பக்கம் வைத்தாள். 'இது நான்
எடுத்துப் போக வேண்டிய பாத்திரமா?' என்று புதியவன் கேட்டபோது தான் திரும்பிப்
பார்த்தாள். 'அவன் மருத்துவ மனைக்குச் சென்றுவிட்டான்; அவனுக்குப் பதிலாக நான்
வந்திருக்கிறேன்' என்றான் புதியவன், இளைஞன்; சாந்தமான முகத்தினன்.
குரலிலே கடுமை இல்லை, நடையிலே ஆணவம் காணோம். முகத்திலே வெறித்தனம் காணோம்; யார்
இவன் ஜெர்மானியனாக இருக்க முடியுமா என்ற ஐயம் மோனாவுக்கு.
உன் பெயர்?
ஆஸ்க்கார்...
ஆஸ்க்கார்...?
ஆஸ்க்கார் ஹெயின்.
மூன்றாம் நம்பர் சிறைக்கூடத்திலா இருக்கிறாய்?
ஆமாம்.
மோனா, எதுவும் பேசாமல் அவனை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு, 'அதுதான் நீ எடுத்துச்
செல்ல வேண்டிய பாத்திரம்' என்று கூறுகிறாள்.
'நன்றி!' என்று கூறுகிறான் ஜெர்மானியன். பதிலுக்கு நன்றி கூற நினைத்தாள் மோனா.
முடியவில்லை. அவன் போகிறான்; அவள் பார்க்கிறாள்; அவன் போன பக்கமே பார்த்துக்
கொண்டிருக்கிறாள்; வாசற்படியில் நின்று கொண்டு பார்க்கிறாள்; பிறகு பலகணி
வழியாகவும் பார்க்கிறாள்.
அன்று முழுவதும் மோனா சிடுசிடுவென்று இருக்கிறாள். ஏதோ குமுறல், மனதில்.
வழக்கப்படி பிரார்த்தனைக்கு அழைக்கிறார் முதியவர்!"இன்றிரவு வேண்டாமப்பா, தலைவலி"
என்று கூறி விடுகிறாள் மோனா. தலைவலியா!!
அன்றிருந்த ஒரு மனப்போராட்டம், மோனா தன் உள்ளத்திலே இடம் பெறப் பார்க்கும் புதிய
உணர்ச்சியை விரட்டும் முயற்சியில் மும்முரமாகிறாள்; முடியவில்லை. முதியவருடன்
அதிகநேரம் அளவளாவுகிறாள், அவர் புதிதாகப் பெற்றுள்ள வெறுப்புணர்ச்சியைத் தனக்கு
ஊட்டுவார், உள்ளத்தில் இடம் பெறப் பார்க்கும் புதிய உணர்ச்சியை விரட்டிடுவார் என்ற
நம்பிக்கையுடன்.
ஜெர்மானியர்களை அழித்தொழிக்கச் சொல்லி முதியவர் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறார்.
மோனா? பிரார்த்தனையில் கலந்து கொள்கிறாள்; ஆனால் வேறு ஏதோ ஒரு உணர்ச்சி அவளை வேறு
எங்கோ அழைக்கிறது; இழுத்துச் செல்லப் பார்க்கிறது. அந்த ஆஸ்கார் கூடவா,
ஜெர்மானியன். அத்தனைப் பணிவாக இருக்கிறான்; கனிவாகப் பேசுகிறான்; முகத்தைப்
பார்த்தால் கொடியவனாகத் தெரியவில்லை. ஜெர்மானியனா இவன்; ஆஸ்க்கார் போன்றவர்கள்கூட
இருக்கிறார்களா ஜெர்மன் இனத்தில் - என்றெல்லாம் எண்ணுகிறாள் மோனா.
'நரகப் படுகுழியில், பகைவர்களைத் தள்ளு' என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறார்
முதியவர்; மோனாவுக்குப் பிடித்தமான பிரார்த்தனை அது; முன்பு! இப்போது? அந்தப்
பிரார்த்தனை அவளுக்கு என்னமோ போல இருக்கிறது. ஆண்டவனையா இவ்வளவு கொடுமைகளைச்
செய்திடச் சொல்லிக் கேட்பது! ஆண்டவன் என்றால் தயாபரன் அல்லவா! அவரிடம் இப்படியா ஒரு
பிரார்த்தனை செய்வது என்று கூட எண்ணி சிறிதளவு அருவருப்பு அடைகிறாள். கன்னியின்
இதயத்திலே புதிய கருத்து கருவளவாகிறது!
மோனா, சபலத்துக்கு இடமளிக்கக்கூடாது என்ற உறுதியுடன் போரிடுகிறாள். ஜெர்மன்
கைதிகளைக் கண்டால் கடுகடுப்பைக் காட்டுவது; அவர்களிடம் ஒரு பேச்சும் பேசாதிருப்பது;
அவர்களிடம் தனக்கு உள்ள வெறுப்பை வெளிப்படையாகத் தெரியச் செய்வது என்ற முறையில்
நடந்து கொள்கிறாள். ஆனால் அந்த ஆஸ்க்கார்!
லட்விக் இறந்துவிட்டான்?
யாரவன் லட்விக்?
முன்பெல்லாம் வருவானே, இருமிக்கொண்டு... அவன் தான் லட்விக். வயது 22! பரிதாபம்!
செத்துவிட்டான்! கடிதம் எழுதவேண்டும் அவன் தாயாருக்கு.
மோனாவுக்குத் துக்கம் நெஞ்சை அடைத்துக் கொள்கிறது; கண்களில் நீர் துளிர்க்கிறது;
ஆனால் சமாளித்துக் கொண்டு கூறுகிறாள்.
"மகனை இழந்த தாய் அவள் ஒருவள் தானா! போர் மூட்டி விடுபவர்கள், அதனால் விளையும்
பொல்லாங்குகளை அனுபவிக்கத்தானே வேண்டும்."
ஆஸ்க்கார் பதிலேதும் பேசவில்லை. திரும்பிச் செல்கிறான். சுடச் சுடப் பதில்
கொடுத்துவிட்டோ ம் என்ற திருப்தியுடன் அல்லவா மோனா இருக்க வேண்டும்? இல்லையே!
போகிறவனைப் பார்த்துக் கொண்டே நிற்கிறாள், தவறாகப் பேசிவிட்டோ ம் என்றெண்ணி
வருந்துபவள் போல! சிறிது தூரம் சென்றவன் திரும்பிப் பார்க்கிறான்! மோனாவின் உள்ளம்?
தவறு செய்துவிட்டாய் என்று கூறுவதுபோலிருக்கிறது.
மற்றோர் நாள் அந்த ஆஸ்க்கார் ஒரு சிறு பெட்டியைக் கொண்டு வருகிறான். 'இது
இறந்துபட்ட லட்விக்கின் தாயார் அனுப்பியது. அவன் கல்லறை மீது தூவும்படி
கண்ணாடியாலான இந்த மலரினை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நான் கல்லறை இருக்கும் இடம்
செல்ல முடியாது. அதனால், இதனைத் தாங்கள்..."
ஆஸ்க்கார் கெஞ்சும் குரலில் பேசுகிறான்; மோனா கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறாள்;
'என்னால் முடியாது; இதனை எடுத்துக் கொண்டு போய்விடு' என்று. அவன் போய் விடுகிறான்;
ஆனால் பெட்டியை அங்கேயே வைத்துவிட்டு!
'கிடக்கட்டும் இங்கேயே, எனக்கென்ன' என்றுதான் மோனா எண்ணிக் கொள்கிறாள். அன்று
பகலெல்லாம் அவள் எதிரே கிடக்கிறது அந்தப் பெட்டி! எடுத்து எறியவில்லை! முடியவில்லை!
ஆஸ்க்காரின் முகம், அதிலே தெரிந்தது போலும்.
மாலையில் யாருமறியாமல் சென்று லட்விக்கின் கல்லறை மீது அந்தக் கண்ணாடி மலரைத்
தூவிவிட்டு வந்து விடுகிறாள்.
மோனா, "ஜெர்மன் இனம் முழுவதும் அழிக்கப்பட வேண்டும், குழந்தை குட்டிகள் உள்பட"
என்று கொதித்துக் கூறிடும் கன்னி, ஒரு ஜெர்மானியன் கல்லறை மீது மலர் தூவுகிறாள்!
எப்படி முடிந்தது! பகைவனிடம் பச்சாதாபம் காட்டுவதா! என்று கேட்ட மோனா செய்கிற
காரியமா இது! எப்படி ஏற்பட்டது இந்த மாறுதல்? யார் புகுத்தியது அந்தப் புதிய
உணர்ச்சியை? ஆஸ்க்கார்! அவன் பார்வை, அவளுடைய உள்ளத்தில் ஒரு புதிய உணர்வை
எழுப்பிவிட்டது. எவ்வளவோ முயன்று பார்த்தும் அவளால் அந்தப் புதிய உணர்வை உதறித்
தள்ளிவிட முடியவில்லை. இடம் பிடித்துக் கொண்டது!
ராபியின் வீர தீரத்தை மெச்சிப் பிரிட்டிஷ் துரைத்தனம் அனுப்பி வைத்த வீரப்பதக்கத்தை
மோனா அணிந்து கொள்கிறாள் எழுச்சியுடன்.
வீரப்பதக்கம்! அண்ணன் பெற்றது! கொடியவர்களாம் ஜெர்மானியரைக் கொன்று குவித்ததற்காக!
அந்த ஜெர்மானியரில் ஒருவன் இந்த ஆஸ்க்கார். அவன் இந்த வீரப் பதக்கம் பற்றிய விவரம்
கேட்கிறான். மோனா கூறுகிறாள். நமது இனத்தவர்களைச் சாகடித்ததை வீரம் என்று மெச்சித்
தரப்பட்டது இந்தப் பதக்கம் என்பதனை அறிந்ததும் ஆஸ்க்காரின் முகம் கடுகடுப்பை அல்லவா
காட்ட வேண்டும்! இல்லை! அவன், ராபியைப் புகழ்ந்து பேசுகிறான், பாராட்டுதலுக்குரிய
வீரன் என்று!!
என்ன விந்தை இது! கப்பிக் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சி எங்கே போய்விட்டது.
தன் அண்ணனைக் கொன்ற பாவிகளாம் ஜெர்மானிய இனத்தவரில் ஒருவனாம் ஆஸ்க்காரிடம், மோனா
வெறுப்பை காட்ட முடியவில்லை, எவ்வளவோ முயன்றும்!
தன் இனத்தவரைச் சுட்டுத் தள்ளியதற்காக வீரப்பதக்கம் பெற்ற ராபியைப் பாராட்டிப்
பேசுகிறான் ஜெர்மானியன் ஆஸ்க்கார்!
கப்பிக் கொண்டிருக்கும் காரிருளைக் கிழித்தெறிந்து கொண்டு விண்மீன் கண்
சிமிட்டுகிறதே!!
இரும்பு முள்வேலி
தொடர்ச்சி - 4
மோனாவிடம் ஏதோ ஓர் மாறுதல் தோன்றி விட்டிருக்கிறது என்பது முதியவருக்குத்
தெரிகிறது. விவரம் புரியவில்லை.
பிரிட்டிஷ் கப்பலை ஒரு ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது பற்றியும்,
அதனால் பலர் மாண்டது பற்றியும் கூறக்கேட்ட முதியவர் கொதித்துச் சபிக்கிறார்.
'ஜெர்மானியர் நாசமாகப் போகட்டும்! ஆழ்நரகில் வீழட்டும்' என்று. 'ஏனப்பா இப்படி பகை
உணர்ச்சி. நமது வேதம் இதனை அனுமதிக்காது. பகைவனிடமும் பச்சாதாபம் காட்டச்
சொல்லுகிறது என்று முன்பு சொல்வீரே, நினைவில்லையா?' என்று கேட்டுவிடுகிறாள் மோனா!
முதியவர் திகைக்கிறார். 'மகளே! என்ன இது! இவ்விதம் பேசுகிறாய்! உன் போக்கே
மாறிவிட்டிருக்கிறதே! எப்படி? எதனால்?' என்று கேட்கிறார்.
அவளுக்கே புரியவில்லை அந்தக் காரணம்! முதியவர் கேட்கிறார்; பதில் என்ன தருவாள்.
மோனா, முதியவர் மனதில் குடியேறிவிட்டாளோ?
முதியவர், மோனா மனதிலே இடம் பெற்று விட்டாரோ!
முதியவரின் முன்னாள் மனப்பான்மை இந்நாள் மோனாவுக்கும், முன்னாளில் மோனா கொண்டிருந்த
மனப்பான்மை இதுபோல முதியவருக்கும் அமைந்து விட்டதோ! விந்தை! ஆனால் காரணம்?
ஜெர்மானியரின் அட்டூழியம் பற்றிய செய்திகளைப் படிக்கிறார் முதியவர்; அவர்
உள்ளத்திலே மூண்டுகிடந்த வெறுப்புணர்ச்சி மேலும் தடித்துக் கொண்டிருக்கிறது.
அதே இதழ்களில், போர்ச் சூழ்நிலையிலும், இதயம் படைத்தவர்கள் நற்செயல் சில
புரிகின்றனர் என்பதற்கான செய்திகள் வெளிவருகின்றன. மோனா அதைப் படித்துப்
பார்க்கிறாள். ஏற்கனவே மெள்ள மெள்ள அவள் உள்ளத்திலிருந்து கலைந்து கொண்டிருந்த
வெறுப்புணர்ச்சி மேலும் கலைகிறது.
எப்போது கலையத் தொடங்கிற்று அந்த வெறுப்புணர்ச்சி? ஆஸ்க்கார் எனும் ஜெர்மானியனைக்
கண்ட நாள் தொட்டு; அவன் பேச்சிலே குழைந்திருந்த பாசத்தை உணர்ந்த நாள் முதல்.
ஜெர்மானியரின் பாசறைப் பகுதியில், பலத்த அடிபட்ட பிரிட்டிஷ் போர் வீரனொருவன்
தப்பிச் செல்ல முயற்சிக்கிறான். துரத்திப் பிடிக்க வருகின்றனர். ஒரு வீட்டுக்குள்
நுழைந்து கொள்கிறான். அது ஒரு ஜெர்மானியன் வீடு!
அந்த வீட்டிலே, ஜெர்மன் படைத் தலைவர்கள் சிலர் விருந்துண்டு களிநடமாடுகின்றனர்.
வீட்டுக்கு உரியவனான ஜெர்மானியன், பிரிட்டிஷ் வீரனைக் கண்டுவிடுகிறான்.
ஒரு குண்டு! ஒரு அலறல்! ஒரு பிணம்! பிறகு கைதட்டல், பாராட்டு, வீரப்பதக்கம்!! -
இப்படித்தான் நிகழ்ச்சி வடிவம் கொண்டிருக்க வேண்டும். அதுபோல நடக்கவில்லை.
உயிருக்குப் பயந்து ஒளிந்து கொள்ள வந்த பிரிட்டிஷ் படை வீரனை, அந்த ஜெர்மானியன்
பிடித்து மேலிடம் ஒப்படைக்கக்கூட இல்லை. ஜெர்மன் தளபதிகள் கண்களில் பட்டுவிடாதபடி
மறைந்து கொள்ள வழிசெய்து தருகிறான். அந்தத் தளபதிகள் சென்றான பிறகு, பிரிட்டிஷ்
வீரனைத் தப்பி ஓடிவிடும்படிச் சொல்லுகிறான்!
பிரிட்டிஷ் வீரன் உயிரை ஜெர்மானியன் காப்பாற்றுகிறான்! தீராத பகை! ஓயாத போர்!
பயங்கரமான பழி வாங்கும் உணர்ச்சி! எங்கும் வெறுப்புணர்ச்சி கப்பிக்
கொண்டிருக்கிறது. என்றாலும் ஒரு ஜெர்மானியன் இதயம் படைத்தவனாகிறான்; இரக்கம்
காட்டுகிறான்; பகைவனுக்கே துணை செய்கிறான்.
இந்தச் செய்தியை மோனா இதழிலிருந்து முதியவருக்குப் படித்துக் காட்டுகிறாள்.
'புரிகிறதா அப்பா, எந்த இனத்திலும் நல்லவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இதோ
இந்த ஜெர்மானியன் நல்லவனல்லவா?' என்று கேட்கிறாள், முதியவர் மனதில் மூண்டுள்ள
வெறுப்புணர்ச்சியைக் குறைத்திடலாம் என்ற எண்ணத்துடன்.
முதியவர் அதற்குத் தயாராக இல்லை.
"இவன் நல்லவனாக இருக்கலாம் மகளே! ஆனால், என் மகன் உயிரைக் குடித்த குண்டு வீசியவன்,
இவனுடைய மகனாக இருந்திருந்தால்... மகளே! ஜெர்மானியரில் நல்லவர் என்று ஒரு பிரிவும்
உண்டா? வெறியர்கள்! அழிந்துபட வேண்டியவர்கள்! மனித குல விரோதிகள்!" என்று முதியவர்
பேசுகிறார்.
அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை மோனாவினால்; அந்த இடத்தை
விட்டுச் செல்கிறாள்.
முதியவர் காண்கிறார்! என்னமோ நேரிட்டுவிட்டிருக்கிறது! என் மகளின் மனதிலே ஓர்
மாறுதல் புகுந்துவிட்டிருக்கிறது. என்ன காரணம் இந்த மாறுதலுக்கு? என்றெண்ணித்
திகைக்கிறார்.
போரினில் ஈடுபட்டு இதயம் இரும்பாகிவிடும் நிலையிலே கூட, மனிதத்தன்மை பளிச்சிட்டுக்
காட்டத் தவறுவதில்லை என்பதற்கான சான்றுகள் ஒன்றன்பின் ஒன்றாக மோனாவுக்குக்
கிடைக்கின்றன. அதன் காரணமாக ஜெர்மானியர் அனைவருமே கொடியவர்கள் என்ற எண்ணம்
தகர்ந்துபோய் விடுகிறது.
அவர்களிலேயும் நல்லவர்கள் உண்டு என்ற எண்ணம் பிறக்கிறது.
ஜெர்மானியர் எல்லோருமே கொடியவர்கள் என்றால் இவ்வளவு நல்லவனான ஆஸ்க்கார் எப்படி அந்த
இனத்திலே பிறந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. மோனாவின் மனமாற்றம் வேகமாக
வளர்ந்த வண்ணம் இருந்தது. ஆனால் அவளைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டிருந்ததோ,
வெறுப்புணர்ச்சிதான். முதியவரே ஒவ்வொரு நாளும் 'பிதா'வை வேண்டிக் கொண்டிருக்கிறார்,
கொடிய ஜெர்மானியரைக் கொன்றொழி என்று.
ராபி களத்திலே கடும் போரில் ஈடுபட்டிருந்தபோது பிரிட்டிஷ் படை வரிசையினால்
தாக்கப்பட்டு, குற்றுயிராகி ஒரு ஜெர்மன் போர் வீரன், ராபி இருந்த 'குழிக்கு' அருகே
துடித்துக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியைக் கண்ட ராபி உருகிப் போனான். இவனை
இப்படி இம்சைப்படவிடக்கூடாது என்ற இரக்க உணர்ச்சி எழுந்தது. பாய்ந்தோடி சென்று
துடித்துக் கிடந்த ஜெர்மானியனை தன் வரிசையினர் பதுங்கிக் கிடந்த 'குழி'க்கு
இழுத்துக் கொண்டு வந்தான். ஆனால் அந்த முயற்சியில் ஜெர்மன் படை வரிசையினரின்
குண்டுகள் அவனைத் துளைத்தன; துடித்துக் கிடந்தான்.
ஒரே குழியில், ஒரு ஜெர்மன் போர் வீரன், பிரிட்டிஷ் படையினரின் குண்டடிபட்டு; ஒரு
பிரிட்டிஷ் போர்வீரன் ஜெர்மன் குண்டடிபட்டு! ஜெர்மானியன் துடிப்பது கண்டு மனம்
தாளவில்லை பிரிட்டிஷ் ராபிக்கு! ஜெர்மன் வீரனைக் காத்திடச் சென்றபோது ஜெர்மன்
குண்டு தாக்குகிறது பிரிட்டிஷ் ராபியை! குண்டடிபட்ட இருவரும் ஒரே குழியில்
கிடக்கிறார்கள்.
பிரிட்டிஷ் படை வேறிடம் செல்கிறது, அடிபட்ட இருவரையும் விட்டுவிட்டு.
ஜெர்மானியன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிவிட்டான்; பிரிட்டிஷ் ராபியோ மரணத்தின்
பிடியில் சிக்கிக் கொண்டான்.
கடைசி நேரம் நெருங்குவது அறிந்த ராபி, தன் கைக்கடியாரத்தைக் கொடுக்கிறான்
ஜெர்மானியனிடம். 'நீ உயிர் தப்பி ஊர் திரும்பினால், இதனை என் தங்கையிடம் சேர்த்து
விடு' என்று கூறிவிட்டு ராபி இறந்துவிடுகிறான்; அந்த ஜெர்மானியன் பிழைத்துக்
கொள்கிறான்.
அவன், ஆஸ்க்காருக்குப் பள்ளித் தோழன்! விவரம் தெரிந்துகொண்டு அந்தக் கைக்கடிகாரத்தை
ஆஸ்க்காருக்கு அனுப்பி வைக்கிறான். 'ராபியின் தங்கையிடம் கொடுத்து விடு. அதுதான்
ராபியின் கடைசி விருப்பம் என்பதைக் கூறு' என்று.
ஆஸ்க்கார் இந்தத் தகவலையும் கைக்கடியாரத்தையும் மோனாவிடம் கொடுக்கிறான். அவள் மனம்
பாகாய் உருகிவிடுகிறது.
கடும்போர் நடைபெறும் களத்திலே கூட இப்படி ஒரு நட்புணர்ச்சி பூத்திட முடிந்ததே!
ஒரே பதுங்குமிடத்தில் அடிபட்ட இருவர்; ஒருவர் ஜெர்மானியர்; மற்றவர் பிரிட்டிஷ்.
அவர்கள் வெட்டிக் கொள்ளவில்லை. சுட்டுக் கொள்ளவில்லை; ரணப் படுக்கையிலே வீழ்ந்து
விட்டிருந்த அந்த இருவரும் நட்புணர்ச்சி பெற்றனர்.
இந்த மனிதத் தன்மை தான் இயற்கையானது.
போர், இந்த இயற்கையான பண்பை அழித்து விடுகிறது.
ஒருவரிடம் ஒருவர் நட்புணர்ச்சி காட்டிடப் பிறந்த மக்களை, ஒருவரை ஒருவர் சுட்டுத்
தள்ளிக் கொள்ளச் செய்கிறது; வெறி ஊட்டுகிறது; மனிதத் தன்மையை மாய்க்கிறது போர்! ஏன்
தான் போர் மூட்டிக் கொள்கின்றனரோ! என்றெல்லாம் எண்ணி உருகுகிறாள் மோனா.
மோனா ஒரே சமயத்தில் இரண்டு போர் முனைகளில் ஈடுபட வேண்டி நேரிட்டுவிட்டது.
ஒரு முனையில், தன் தகப்பனாரின் உள்ளத்தில் வளர்ந்த வண்ணம் இருந்த
வெறுப்புணர்ச்சியைப் போக்கிடப் போரிட வேண்டி இருந்தது. வெற்றி கிட்டவில்லை.
மற்றோர் முனையில், ஆஸ்க்கார் நிற்கிறான், இதயத்தில் இடம் கொடு என்று கேட்டபடி;
மறுத்திடவும் முடியவில்லை; கொடுத்திடவும் துணிவில்லை. போர் மூள்கிறது; நாளாகவாக
மோனாவின் போரிடும் ஆற்றல் குறைந்து கொண்டு வருகிறது.
எப்போதும் ஆஸ்க்கார் பற்றிய நினைவு; இரவிலும் பகலிலும்; பார்க்கும்போதும்
பார்க்காதிருக்கும் போதும்! அந்தப் பாசம் நிறைந்த கண்கள் அவளைப் படாதபாடு
படுத்துகின்றன.
வாய் திறந்து அவன் தன் காதலைக் கூறிவிடவில்லை. ஆனால் அவன்? அவன் கண்கள் வேறென்ன
பேசுகின்றன! ஜெர்மானியர்களை வெறுத்த நிலை மாறி, அவர்களிலும் நல்லவர் இருக்கின்றார்
என்ற அளவுக்குக் கருத்து மாற்றம் கொண்டு, ஆஸ்க்காரிடம் பச்சாதாபம் காட்டத் தொடங்கி,
பிறகு பரிவு கொள்ளத் தொடங்கி, இறுதியில் காதலே அல்லவா அரும்பத் தொடங்கிவிட்டது.
நெஞ்சிலே நெருப்பு மூண்டு கிடந்தது; அங்குக் காதல் மலருகிறதே; எப்படி? எண்ணுகிறாள்;
விம்முகிறாள்; குமுறுகிறாள்; எப்படியாவது தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்
என்பதற்காகப் போராடுகிறாள்; துடிக்கிறாள்.
"கேட்டாயா பெண்ணே! அக் கொடியவர் செயலை. பள்ளிக்கூடத்தின்மீது குண்டு வீசி, பச்சிளங்
குழந்தைகளைக் கொன்றுவிட்டனர். இந்தப் பாவம் சும்மா விடுமா! ஆண்டவன் இதைச் சகித்துக்
கொள்வாரா! நமது அரசாங்கம் பழிக்குப் பழி வாங்காமலிருக்குமா! உடனே கிளம்ப வேண்டும்;
ஜெர்மன் குழந்தைகள் கொல்லப்படவேண்டும்! ஒன்றுக்கு ஓராயிரம்! பழிக்குப் பழி" - என்று
பதறுகிறார் முதியவர்.
"அவர்கள் செய்த கொடுமையை நாமும் செய்வதுதான் நியாயமா! குழந்தைகள் தூய்மையின்
சின்னம்! ஜெர்மன் குழந்தைகளாக இருந்தால் என்ன!" - இவ்விதம் பேசிப் பார்க்கிறாள்
மோனா; முதியவரின் கோபம் அதிகமாகிறதே தவிர பழிவாங்கும் உணர்ச்சி மாறுவதாக இல்லை.
அதே சம்பவம் பற்றிய சேதி அறிந்த ஆஸ்க்கார், பச்சாதாபம் காட்டுகிறான். 'என் நாட்டவர்
இந்தக் கொடுமை செய்ததைக் கேள்விப்பட்டு நான் வெட்கப்படுகிறேன்; வேதனைப்படுகிறேன்'
என்கிறான். மோனாவின் மனம் சாந்தி அடையவில்லை. மிகக் கடுமையான முறையில் பேசுகிறாள்.
"நீ வெட்கப்பட்டு என்ன பயன்? வேதனைப்பட்டு என்ன பயன்? எங்கள் நாட்டுக்
குழந்தைகளுக்கு நேரிட்டது போன்ற கொடுமை, உங்கள் நாட்டுக் குழந்தைகளுக்கு நேரிட
வேண்டும். அப்போது புரியும்" என்று மோனா கூறிவிட்டுப் போகிறாள். ஆஸ்க்கார்
திகைத்துப் போகிறான்.
சில நாட்கள் வரையில் மோனா ஆஸ்க்காரைப் பார்க்க முயலவில்லை. ஜெர்மானியரிடம்
வெறுப்புணர்ச்சி கொள்ள முயற்சிக்கிறாள்.
கிருஸ்மஸ் பண்டிகை! கைதிகள் முகாமிலேயும், இசை விருந்து விழாக் கோலம்.
அன்றிரவு ஆஸ்க்கார் வருகிறான், வீடு நோக்கி.
வீட்டுக்குள்ளேயே வந்தமருகிறான்; காரணம், தனக்கு ஏற்பட்ட வேதனையை மோனாவிடம் கூறி
ஆறுதல் பெற. அவனுடைய வீட்டின் மீது பிரிட்டிஷ் குண்டு வீசப்பட்டதில், அவனுடைய தங்கை
பத்து வயதுச் சிறுமி இறந்து விட்டிருக்கும் செய்தி அன்று அவனுக்குக்
கிடைத்திருக்கிறது; வேதனை தாளமாட்டாமல் வந்தேன்; ஆறுதல் அளித்திட வேறு யாரும்
இல்லை. அதனால் இங்கு வந்தேன். தங்கச் சிலை என் தங்கை! பத்தே வயது! சின்னஞ் சிறு
சிட்டு! என் உயிர்! எங்கள் குடும்பத்துக் கொடிமலர் - என்றெல்லாம் கூறிக் குமுறிக்
குமுறி அழுகிறான் ஆஸ்க்கார்.
வேதனை நிரம்பிய இந்தச் செய்தி பற்றி அவனுக்குக் கிடைத்த கடிதத்தைப் படித்துவிட்டு
மோனா கலங்குகிறாள். அருகே செல்கிறாள் ஆறுதல் கூற! அணைத்துக் கொள்கிறாள்! அவன்
மெய்மறந்த நிலை அடைகிறான். எவருமே பிரிக்க முடியாததோர் அணைப்பு! காலமெல்லாம்
இதற்காகத்தானே காத்துக் கிடந்தோம் என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளவில்லை. ஆனால்
அந்த அணைப்பில் பொருள் அதுவாகத்தான் இருந்தது.
ஜெர்மானியரும் பிரிட்டிஷாரும் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக்கொள்கின்றனர். இங்கு
ஓர் ஜெர்மன் வாலிபனைத் தழுவிக் கொள்கிறாள் ஓர் பிரிட்டிஷ் கன்னி; காமவெறியால் அல்ல,
கயமைக் குணத்தால் அல்ல, எந்தத் தடையும் தகர்த்தெறியும் காதலின் தூய்மை தந்திடும்
வலிமை காரணமாக. இரண்டு உள்ளங்கள் கலந்துவிட்டன; இன பேதம், மூண்டுள்ள பகை, நடைபெறும்
போர், கப்பிக் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சி எதுவும் அவர்களைத் தடுக்க முடியவில்லை.
அவர்கள் ஜெர்மனி-பிரிட்டன் என்ற நாட்டுக் கட்டுகளை மீறியதோர் காதலால் கட்டுண்டு
கிடந்தனர். ஒரு நிமிடமா, ஓராயிரம் ஆண்டுகளா, எவ்வளவு நேரமாக ஒருவரை ஒருவர் ஆரத்
தழுவி நின்றனர் என்பது இருவருக்கும் புரியாத நிலை. நாடு இனம் எனும் உணர்ச்சிகளைக்
கடந்த நிலை மட்டுமல்ல, காலத்தையும் கடந்ததோர் நிலை! காதல் உணர்ச்சி அவர்களைப்
பிணைத்துவிட்டது.
கீழே ஏதோ பேச்சுக் குரல் கேட்ட முதியவர், தள்ளாடி தள்ளாடி வந்து பார்க்கிறார்,
ஜெர்மானியனுடன் தன் மகள் குலவுவதை! திகைத்தார்! துடித்தார்! பதறினார்! கதறினார்!
"அடி கள்ளி! உன் அண்ணனைக் கொன்றவர் ஜெர்மானியர்; நீ அணைத்துக் கொண்டிருப்பது ஒரு
ஜெர்மானியனை! விபச்சாரி! குடும்பத்துக்கும், நமது இனத்துக்கும் இழிவு தேடிவிட்டாயே!
இந்தக் கள்ளக் காதல் காரணமாகத்தான் உன் போக்கு மாறிவிட்டிருந்ததா! பாவி! இந்தப்
பாவம் உன்னைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுச் சித்திரவதை செய்யாதா! அண்ணன் உயிர்
குடித்த அக்ரம ஜெர்மானிய இனத்தானுடன், அடிப் பாதகி! விபச்சாரி..." - முதியவரால்
அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மகனைக் களத்திலே சாகடித்தான் ஒரு
ஜெர்மானியன்! மகளின் கற்பையே அழிக்கத் துணிந்தான் மற்றோர் ஜெர்மானியன்! இதனைக் கண்ட
பிறகுமா உயிர் தங்கும் உடலில்! கீழே சாய்ந்தார். கூக்குரல் கேட்டு அங்கு வந்த
பண்ணையாட்கள், முதியவரைப் படுக்கையில் கிடத்தினர். மோனாவின் இழிசெயலைப் பற்றி
முதியவர் பதறிக் கூறியது அவ்வளவையும் அவர்கள் கேட்டுவிட்டிருந்தனர். மோனா இனி
அவர்களிடமிருந்து தப்ப முடியாது. 'அவள் பாதகி! காதகி! விபச்சாரி' என்று கூவிடும்
அந்த ஊர் முழுதும். திரும்பிப் பார்த்தாள். ஆஸ்க்காரைக் காணோம். நடந்ததை நினைத்துக்
கொண்டாள்; அவளுக்கே நடுக்கம் எடுத்தது. படுக்கையில் பார்க்கிறாள், முதியவர்
மரணத்தின் பிடியில் தன்னை ஒப்படைத்து விட்டதை. சுற்றிலும் பார்க்கிறாள்,
சுட்டுவிடுவது போல பார்வையைச் செலுத்தும் பண்ணையாட்களை. முதியவர் இறந்துவிட்டார்.
ஊரே அவளைத் தூற்றுகிறது; பண்ணையாட்கள் அவளிடம் வேலை செய்வது இழிவு என்று கூறி
விலகிக் கொள்கிறார்கள்.
அப்பனைச் சாகடித்தவள்!
ஜெர்மானியனுடன் குலவினவள்!
கெட்ட நடத்தைக்காரி!
காம சேட்டைக்காரி!
என்றெல்லாம் தூற்றுகிறார்கள்; இதயத்தைத் துளைக்கிறார்கள். நான் என்ன தவறு செய்தேன்
என்று கேட்கமுடியுமா? இனத்தவர் முழுவதும் ஜெர்மானியரிடம் வெறுப்புணர்ச்சியைக்
கக்கிடும்போது இவள் ஒரு ஜெர்மானியனுடன் காதல் கொண்டால் சகித்துக் கொள்வார்களா! இனத்
துரோகி! நாட்டுத் துரோகி! பெண் குலத்தின் பெருமையையே அழித்தவள் என்று பேசத்தான்
செய்வார்கள். ஜெர்மானியன் பிரிட்டனைத் தோற்கடித்து, பொன்னையும், பொருளையும் தான்
கொண்டு போயிருப்பான்! இந்தப் பொல்லாதவள் ஜெர்மானியனிடம் கற்பையே அல்லவா
பறிகொடுத்தாள் மனமொப்பி.
இரும்பு முள்வேலி
தொடர்ச்சி - 5
பண்ணை முழுவதும், முதியவர் மோனாவுக்கே சொந்தமாக்கி வைத்திருந்தார். தூற்றுவோர்
தூற்றட்டும் என்று எண்ணிக் கொண்டு மோனா பண்ணை வேலைகளைப் பார்த்துக் கொண்டு வந்தாள்!
மோனாவும் ஆஸ்க்காரும் பல நாட்கள் சந்திக்கக்கூட இல்லை.
அவர்கள் இருவரும் கள்ளக் காதல் நடத்திக் கொண்டிருந்தனர்; அதனை ஒருநாள் முதியவர்
கண்டு பிடித்துவிட்டார் என்று ஊர் பேசிற்று; நடைபெற்றதோ ஒருகணம் தோன்றி அவர்கள்
இருவரையும் பிணைத்துவிட்ட காதல் உணர்ச்சி. அதனை அவள் விளக்கிடத்தான் முடியுமா. ஊரே
தூற்றுகிறது, அவளை விபச்சாரி என்று.
வெறுப்புணர்ச்சிக்கும் மனிதத் தன்மைக்கும் நடைபெறும் கடும்போர், உள்ளத்தை
உலுக்கிவிடத் தக்கது. பலருடைய வாழ்க்கையிலே விபத்துக்களை மூட்டிவிடக் கூடியது
என்பது 'இரும்பு முள்வேலி' போன்ற ஏடுகள் மூலம் விளக்கப்படுகின்றன.
ஆனால் இதிலே எடுத்துக் காட்டப்படும் 'மக்கள் மனப்போக்கு' எளிதிலே
மாற்றப்படுவதில்லை. மூட்டிவிடப்பட்ட வெறுப்புணர்ச்சியிலிருந்து தம்மை விடுவித்துக்
கொள்ள மக்களில் பெரும்பாலோரால் முடிவதில்லை.
வெறுப்புணர்ச்சி சூழ்நிலை கப்பிக் கொண்டிருக்கும் போதும் மோனா போல் ஒருவரிருவர்
அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்றனர் - என்றாலும் வெறுப்புணர்ச்சியின்
பிடியில் தம்மை ஒப்படைத்துவிட்ட மக்கள், 'மோனா' போன்றவர்கள் மீது சீறிப் பாய்வர்.
மோனா, பிரிட்டிஷ் இனம்; ஆஸ்க்கார், ஜெர்மன் இனம்; இருந்தால் என்ன? காதல் அவர்களைப்
பிணைக்கிறது! அதிலே என்ன தவறு என்று எண்ணிட முடியவில்லை, வெறும் புணர்ச்சி கொண்ட
மக்களால்.
எந்த நாட்டிலும் இவ்விதமான உணர்ச்சியின் பிடியில் சிக்கிக் கொண்ட மக்களின் தொகையே
மிக அதிகம்.
பெர்ல் பக் எனும் உலகப் புகழ் பெற்ற ஆசிரியர், தமது படைப்புகளில், இது போன்ற
உணர்ச்சிக் குழப்பங்களை விளக்கிக் காட்டியுள்ளார்.
மோனாவுக்கு ஏற்பட்ட பிரச்சினை தன் மனதிலே இடம் பெற்ற ஜெர்மானியனை மணம் செய்து
கொள்வது தவறல்ல என்பதை நாட்டவர் ஒப்புக் கொள்ளச் செய்திட வேண்டும் என்பதாகும்.
மற்றோர் 'முனை'யைக் காட்டுவது போல, பெர்ல் பக் ஒரு கதையைத் தீட்டி அளித்துள்ளார்.
ஜப்பானியர்களுக்கும் அமெர்க்கர்களுக்கும் போர் நடந்திடும் நேரம். இரண்டாவது உலகப்
போர்! இட்லர் மூட்டிவிட்ட போர்!
ஜப்பானியரைக் கண்டதும் சுட்டுத் தள்ள வேண்டும் என்ற உணர்ச்சி அமெரிக்கர்களுக்கு;
அது போன்றே ஜப்பானியருக்கும்.
இது 'தேசிய உணர்ச்சி' என்ற மதிப்புப் பெற்றுவிட்டிருந்த நேரம்.
அவனும் மனிதன் தான்! - என்று பேசுவதே தேசத் துரோகம்!
அவன் ஜப்பானியன். ஆகவே கொல்லப்பட வேண்டியவன் என்ற எண்ணம், ஏற்புடையது என்று
ஆக்கப்பட்டுவிட்டிருந்த சூழ்நிலை.
அந்நிலையில், ஏதோ விபத்திலே சிக்கி, குற்றுயிராகிக் கிடந்த நிலையில் ஒரு
அமெரிக்கன், கடலோரம் கிடத்தப்பட்டிருப்பதை ஒரு ஜப்பானியன் காண்கின்றான்.
அந்த ஜப்பானியன் ஒரு டாக்டர். அமெரிக்கனோ, உயிருக்கு மன்றாடுகிறான்!
டாக்டரின் கடமை என்ன? விபத்திலே சிக்கி உயிர் துடித்துக் கொண்டிருப்பவனைக்
காப்பாற்றுவது! இனம், ஜாதி, எனும் எதனையும் கவனிக்கக்கூடாது; நோயாளி - டாக்டர் என்ற
தொடர்பு மட்டுமே அதுபோது தெரியவேண்டும்.
வீட்டுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை செய்கிறான். அமெரிக்கன் பிழைத்துக்
கொள்கிறான்.
எந்த அமெரிக்கனைக் கொல்வது, 'தேசியக் கடமை' என்று கொள்ளப்பட்டிருக்கிறதோ, அந்த
அமெரிக்கனைச் சாவின் பிடியிலிருந்து மீட்டுவிட்டான்!
மருத்துவன், தன் கடமையைச் செய்தான்! ஆனால் ஜப்பானியன் என்ற முறையில் செய்ய
வேண்டியதை மறந்து!
இது தேசத் துரோகம் என்று கருதப்படுமே. தன் மீது பழி வருமே என்ற பயம் பிடித்துக்
கொள்கிறது ஜப்பானிய மருத்துவரை.
அதே ஊரில் இருந்த மேலதிகாரியிடம் சென்று, ஒரு அமெரிக்கன், பிடிபட்டிருக்கிறான்
என்றும், தன் வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறான் என்றும் கூறுகிறான்.
அந்த அதிகாரி, அமெரிக்கனை இரவு இரண்டு ஆட்களை ஏவிக் கொன்றுவிடச் செய்வதாகக் கூறி
அனுப்புகிறான்.
எந்த அமெரிக்கன் உயிரைக் காப்பாற்றினானோ, அதே அமெரிக்கன் உயிரைப் போக்க ஏற்பாடு
செய்வதாக அதிகாரி கூறுகிறார்; அதற்கு இந்த ஜப்பானிய மருத்துவர் உடந்தை!
இது கொலை பாதகச் செயல்! ஆனால், இரக்கமற்றவனா இந்த ஜப்பானியன் என்றால், இல்லை! உயிர்
காத்தவன்! மருத்துவன்! எனினும் இதற்கு இணங்குகிறான். ஏன்? தன்னை ஒரு ஜப்பானியன்
என்று மெய்ப்பித்துக் கொள்ள வேண்டுமே, அதனால்.
நாமாக அவனைக் கொல்லக்கூடாது; வேறு யாராவது கொன்றால் கொன்று கொள்ளட்டுமே என்று
எண்ணுகிறான்.
இதற்கிடையில் அவன் மனதில் எவ்வளவு கடுமையான போராட்டம் நடந்திருக்க வேண்டும்!
ஜப்பானியனாக இருந்தாலும் தன் உயிரைக் காத்தானே இந்த உத்தமன் என்று எண்ணிக்கொண்டு
படுத்துக் கிடக்கிறான் அந்த அமெரிக்கன்.
அவன் கொல்லப்படுவதற்கான ஏற்பாட்டினுக்கு அதே ஜப்பானியன் உடந்தையாகிறான் என்பதை
அறியவில்லை.
சாகக் கிடந்தவனை நாம்தானே காப்பாற்றினோம்; இப்போது அவனைக் கொல்வதற்கு நாம்தானே
காரணமாக இருக்கிறோம்; அவனைச் சாகடிக்கவா பிழைக்க வைத்தோம் என்று
எண்ணாமலிருந்திருக்க முடியுமா!!
ஓரிரவு, ஈரிரவு ஆகிறது; அமெரிக்கன் கொல்லப்படவில்லை.
மேலதிகாரி, சொன்னபடி கொலை செய்யும் ஆட்கள் வரவில்லை.
கடைசியில், ஜப்பானியன், அமெரிக்கனை ஒரு படகில் ஏற்றி, தப்பிச் சென்றுவிட ஏற்பாடு
செய்துவிடுகிறான். வேறோர் தீவில் அமெரிக்க முகாம் இருக்கிறது; அங்கு போய்விடச்
சொல்கிறான்.
மனிதத் தன்மை எனும் உணர்ச்சியின் வெற்றி என்பதா இதனை!
மேலதிகாரியிடம் சென்று, நீங்கள் சொன்னபடி ஆட்களை அனுப்பவில்லை; அவன்
தப்பியோடிவிட்டான் என்று கூறுகிறான் ஜப்பானியன்.
மேலதிகாரி பதறவில்லை! அவரும் உள்ளூற அந்தக் 'கொலை' கூடாது என்று எண்ணினார் போலும்!
அவர் உள்ளத்திலும் மனிதத் தன்மை மேலோங்கி நின்றிருக்கும் போல் தெரிகிறது.
'உன் கடமையை நீ செய்தாய்; அமெரிக்கன் பிடிபட்டிருக்கிறான் என்பதை
அறிவித்துவிட்டாய்; நான் அனுப்பிய ஆட்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டார்கள்.
சரி! நடந்தது நடந்துவிட்டது! நடந்தது வெளியே தெரிய வேண்டாம்!' என்று மேலதிகாரி
கூறிவிடுகிறார்.
ஆக இரு ஜப்பானியர் தம்மிடம் சிக்கிய ஒரு அமெரிக்கனைக் கொன்றுபோட வாய்ப்பு இருந்தும்
அவனைச் சாவின் பிடியிலிருந்து மீட்டதுடன், தப்பியோடிடவும் செய்துவிடுகின்றனர்.
இது போன்ற உணர்ச்சிகளின் மோதுதல், பலரால் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
வெறுப்புணர்ச்சி இயற்கையானது அல்ல; மூட்டிவிடப்படுவது; மனிதத் தன்மைதான்
இயற்கையானது. அதனைப் போர் மாய்த்துவிடுகிறது என்பதை விளக்கிட.
'இரும்பு முள்வேலி'யில் மோனா, மனிதத் தன்மையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறாள்,
மெத்தப் பாடுபட்டு தன்னை வெறுப்புணர்ச்சியிலிருந்து விடுவித்துக் கொண்டவளாக!
அவள் மீது வெறுப்புணர்ச்சிக் கொண்டோ ர் பாய்கின்றனர்.
இது, காவல் புரிய வந்திருந்த ஒரு பிரிட்டிஷ் வீரனுக்குத் துணிவைக் கொடுத்தது;
மோனாவைச் சுற்றி வட்டமிடத் தொடங்கினான்.
ஜெர்மானியனுக்கே இணங்கியவள், நாம் தொட்டால் பட்டா போய்விடுவாள் என்று எண்ணிக் கொண்ட
அந்த இழிமகன், ஓரிரவு அவள் வீடு சென்று கற்பழிக்கவே முயலுகிறான். அவள்
போரிடுகிறாள்; அலறுகிறாள்; எங்கிருந்தோ வந்த ஒருவன், அந்தக் கயவனைத் தாக்கித்
துரத்துகிறான். தக்க சமயத்தில் வந்திருந்து தன் கற்பினைக் காத்த வீரன் யார் என்று
பார்க்கிறாள் மோனா. ஆஸ்க்கார்! அரும்பு மலர்ந்தே விட்டது!
நிகழ்ச்சிகள் பலப்பல உருண்டோடுகின்றன.
கற்பழிக்க வந்த கயவனை ஜெர்மன் கைதிகள் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஒருநாள்
மோனாதான் அவனைக் காப்பாற்றுகிறாள்.
தன்னைத் தாக்கியவர்களைத் தூண்டிவிட்டவன் ஆஸ்க்கார் என்று பழி சுமத்துகிறான்
காவலாளிகளின் தலைவன். விசாரணை நடத்த மேலதிகாரிகள் வந்தபோது, ஆஸ்க்கார் குற்றமற்றவன்
என்பதை விளக்கிக் காட்டுகிறாள் மோனா. தன் கற்பைக் கெடுக்க காவலர் தலைவன்
முயன்றபோது, காப்பாற்றியவன் ஆஸ்க்கார் என்பதைக் கூறுகிறாள். ஆஸ்க்கார் குற்றமற்றவன்
என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.
இனிக் களைந்தெறிய முடியாத அளவு வளர்ந்துவிட்ட காதல் உணர்ச்சியைத் தாங்கிக் கொண்டு
இருவரும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். களத்திலே போர், ஜெர்மானியருக்கும்
பிரிட்டிஷாருக்கும்; இங்கு காதலா! ஒப்புமா உலகு! ஊரோ, மோனா ஜெர்மானியனுக்குக்
கள்ளக் காதலி ஆகி விட்டாள் என்று ஏசுகிறது. சபிக்கிறார்கள் - வெறுப்பைக்
கக்குகிறார்கள். 'அண்ணன் நாடு காக்க உயிரைக் கொடுத்தான்; இவள் பகைவனுக்குத் தன்னையே
கொடுத்து விட்டாள்! பிறந்தாளே இப்படிப்பட்டவள் ஒரு வீரக் குடும்பத்தில்! இவளையும்
நாடு தாங்கிக் கொண்டிருக்கிறதே' என்றெல்லாம் ஏசினர்.
இரும்பு முள்வேலி
தொடர்ச்சி - 6
மோனாவுக்கு இந்தத் தூற்றலைப் பற்றியெல்லாம் கவலை எழவில்லை; அவனுடைய கவலை முழுவதும்,
அவள் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டிருந்த காதல் பற்றியே! என்ன முடிவு ஏற்படும்
இந்தக் காதலுக்கு! இந்தக் காதல், நாடு இனம் எனும் கட்டுகளை உடைத்துக் கொண்டு
பிறந்து விட்டது. போர்ப் புகையால் அரும்பை அழித்துவிட முடியவில்லை. மலரே
ஆகிவிட்டது! ஆஸ்க்காருடன் கடிமணம் செய்துகொண்டு வாழ்ந்தாக வேண்டும். இந்தப் போர்ச்
சூழ்நிலையில் நடைபெறக்கூடிய காரியமா! அனுமதி கிடைக்குமா? சமுதாயம் ஒப்புக்
கொள்ளுமா?
தத்தளிக்கிறாள் மோனா - திகைத்துக் கிடக்கிறான் ஆஸ்க்கார்.
காரிருள் நீங்குமா, பொழுது புலருமா, புது நிலை மலருமா என்று எண்ணி எண்ணி ஏங்கிக்
கிடக்கின்றனர், காதலால் கட்டுண்ட இருவரும்.
விடிவெள்ளி முளைக்கிறது. பல இடங்களில் செம்மையாக அடிவாங்கி நிலைகுலைந்து
போய்விட்டது ஜெர்மன் படைகள். கெய்சரின் வெறிக்கு நாம் பலியாக்கப்பட்டோ ம் என்ற
உணர்ச்சி ஜெர்மன் மக்களிடம் பீறிட்டுக் கொண்டு கிளம்பிற்று. நம்மை அழிப்பவர்,
உண்மையான பகைவர் பிரிட்டனிலே இல்லை; ஜெர்மனியிலே இருக்கிறார். போர் மூட்டிவிட்ட
கெய்சரே நம்மை அழித்திடத் துணிந்தவர். நாம் அழிவைத் தடுத்துக் கொள்ள வேண்டுமானால்
கெய்சரை விரட்ட வேண்டும்; போர் நிறுத்தத்தைக் கோர வேண்டும் என்று ஜெர்மன் மக்கள்
துணிகின்றனர். சமாதானம் ஏற்படுகிறது. பீரங்கிச் சத்தம் நிற்கிறது; இரும்பு
முள்வேலிகள் அகற்றப்படுகின்றன. கவலை தோய்ந்த முகங்களிலெல்லாம் ஒரு களிப்பு
பூத்திடுகிறது. போர் முடிந்தது! அழிவு இனி இல்லை! பகை இல்லை, புகை எழாது! களம்
நின்று குருதி கொட்டினர் எண்ணற்றவர்; ஆயிரமாயிரம் வீரர் பிணமாயினர்; இனி வீரர் வீடு
திரும்பலாம்; பெற்றோரை மகிழ்விக்கலாம்; காதற் கிழத்தியுடன் கொஞ்சி மகிழலாம்;
குழந்தைகளின் மழலை கேட்டு இன்பம் பெறலாம்; உருண்டோ டி வரும் பீரங்கி வண்டிகள்
கிளப்பிடும் சத்தம் வீழ்ந்து வீழ்ந்து வேதனைத் தீயால் துளைக்கப்பட்ட செவிகளில் இனி
'மகனே! அப்பா! அண்ணா! மாமா! தம்பி! அன்பே! கண்ணாளா' - என்ற அன்பு மொழி
இசையெனப்புகும்; மகிழ்ச்சி பொங்கும்.
சடலங்கள் கிடக்கும் வெட்டவெளிகள், இரத்தம் தோய்ந்த திடல், அழிக்கப்பட்ட வயல்,
இடிபாடாகிவிட்ட கட்டிடங்கள், ஆழ்குழிகள், அதிலே குற்றுயிராகக் கிடந்திடும் வீரர்கள்
இவைகளையே கண்டு கண்டு புண்ணாகிப் போயிருந்த கண்களில், இனி வாழ்வு தெரியும். மாடு
மனை தெரியும்; மக்கள் சுற்றம் தெரிவர்; விருந்து மண்டபம் தெரியும்; விழாக்கோலம்
தெரியும்; பூங்கா தெரியும்; ஆங்கு உலவும் பூவையின் புது மலர்முகம் தெரியும்; கண்கள்
களிநடமிடும்.
மோனாவுக்கும் ஆஸ்க்காருக்கும் கூடப் புதுவாழ்வு பிறந்திடுமல்லவா!
பகைவனிடமா காதல், ஜெர்மன் வெறியனிடமா காதல் என்ற பேச்சுக்கு இனி இடமில்லை அல்லவா?
சமாதானம் ஏற்பட்டுவிட்டது; இனி ஜெர்மானியரும் பிரிட்டிஷ் மக்களும் பகைவர்கள்
அல்லர்; வெவ்வேறு நாட்டினர்; நேச நாட்டினர். இனி மோனாவை ஆஸ்க்காரிடமிருந்து
பிரித்து வைக்கும் பேதம் ஏது?
கைதிகளை விடுதலை செய்து ஜெர்மன் நாட்டுக்கு அனுப்பிவிடும்படி உத்திரவு
வந்துவிட்டது. சிறுசிறு அளவினராக அவர்கள் ஜெர்மனிக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
ஆஸ்க்கார்? அவனையும் தான் போகச் சொல்லுவார்கள் ஜெர்மனிக்கு. அவன் போய்விடுவதா!
நான்! என் கதி! - என்று எண்ணுகிறாள் மோனா.
பிரிட்டிஷ் பெண்ணை மணம் செய்து கொள்பவன் ஜெர்மனி போகத் தேவையில்லை என்றோர் விளக்கம்
கிடைக்கிறது; மோனா மனதிலே ஒரு நம்பிக்கை எழுகிறது.
ஆஸ்க்காரைத் திருமணம் செய்து கொண்டு தீவிலேயே வாழலாம்; பண்ணை வேலைகளை இருவரும்
கவனித்துக் கொள்ளலாம். கள்ளி என்றும் விபச்சாரி என்றும் ஏசிப் பேசினவர்கள் கண்முன்,
நாங்கள் காதலித்தோம் கடிமணம் புரிந்து கொண்டோ ம் காண்பீர்! ஏதேதோ கதைத்தீர்களே
முன்பு. இப்போது புரிகிறதா! நாங்கள் எந்த முறைகேடான செயலிலும் எங்களை ஈடுபடுத்திக்
கொள்ளவில்லை; முறைப்படி திருமணம் செய்துகொண்டோ ம் என்று கூறிடலாம்; வீசப்பட்ட
மாசுகூட துடைக்கப்பட்டுவிடும் என்று எண்ணிக் கொண்டாள் மோனா. பேதைப் பெண்! இந்த
உலகம் உண்மைக் காதல் வெற்றி பெற அவ்வளவு எளிதாக அனுமதி கொடுத்து விடுகிறதா!
துளியும் எதிர்பாராதிருந்த இன்னல்கள் தாக்கிடக் கிளம்பின.
மிராசுதாரர், குத்தகைக் காலம் முடிந்துவிட்டது; இனி பண்ணையை விட்டு வெளியேறு என்று
உத்திரவு பிறப்பித்தார்.
"மறுபடியும் குத்தகைக்குக் கொடுமய்யா! எப்போதும் போலத் தொகை கொடுத்து வருகிறேன்.
பாடுபட்டு, பண்ணையை நடத்தி" என்கிறாள் பாவை. "உனக்கா! ஊர் என் முகத்திலே காரித்
துப்பும்! ஜெர்மானிக்காரனுடன் திருட்டுத்தனமாக தொடர்பு கொண்டவளல்லவா நீ! உன் அப்பனே
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து செத்தானே! நீதானே அவனைக் கொன்று போட்டாய்! உனக்கு
என் பண்ணையைக் குத்தகைக்குத் தரமுடியாது. விரைவில் வெளியேறு" என்று கண்டிப்பாகக்
கூறிவிட்டான் மிராசுதாரன்.
ஊர் மக்கள் கொண்டிருந்த வெறுப்பு மாறவில்லை. இங்கு எவரும் ஆதரிக்கமாட்டார்கள்;
தங்கும் இடமும் தரமாட்டார்கள்; தொழிலும் நடத்த விடமாட்டார்கள் என்பது
புரிந்துவிட்டது. மோனாவின் மனம் உடைந்து விடுவது போலாகிவிட்டது. ஆஸ்க்கார்
கூறினான்: "கலக்கம் வேண்டாம்! நாம் வாழ வழி இருக்கிறது. நான் ஜெர்மானியன்
என்றாலும், பிரிட்டனில் ஒரு தொழில் நிலையத்தில் வேலை பார்த்து வந்தேன். போர்
மூண்டதும் ஜெர்மானியன் என்பதால் என்னைச் சிறைப்பிடித்தார்கள். நான் தவறேதும்
செய்தவன் அல்ல என்பதும் ஜெர்மனியில் கெய்சர் மேற்கொள்ளும் போக்கினைக் கண்டிப்பவன்
என்பதையும் நான் வேலை பார்த்த தொழில் நிலையத்தார் அறிவர். அப்போதே எனக்கு உறுதி
அளித்தார்கள், 'போர் முடிந்து புது உறவு மலர்ந்ததும் நீ இங்கேயே வேலைக்கு வந்து
அமரலாம்; உனக்காக அந்த வேலை காத்துக் கொண்டே இருக்கும்' என்பதாக. இப்போது அதை
நினைவுபடுத்திக் கடிதம் எழுதுகிறேன். வேலை கிடைத்துவிடும்; பிரிட்டன் சென்று
வாழ்ந்திடலாம்; போர்க்காலத்து நிகழ்ச்சிகள் கெட்ட கனவுபோல கலைந்தோடிப் போய்விடும்.
இல்லறம் எனும் நல்லறத்தின் இன்பம் பெறுவோம்; இனத்தைக் காட்டி ஒன்றுபட்டுவிட்ட
இதயங்களைப் பிரித்திட முடியாது என்பதை உலகு உணரட்டும்" என்றான். இசையென இனித்தது
அவன் பேச்சு. ஆனால் சின்னாட்களில் இடியெனத் தாக்கிற்று, பிரிட்டிஷ் தொழில் நிலையம்
அனுப்பி வைத்த பதில் கடிதம். 'வேலை இப்போதைக்கு இல்லை! போர் முடிந்து விட்டது
என்றாலும் ஜெர்மானியர்கள், பரவிவிட்டுள்ள வெறுப்புணர்ச்சி குறையவில்லை. இந்நிலையில்
தொழில் நிலையத்தில் ஒரு ஜெர்மானியனை வேலைக்கு அமர்த்துவது ஆபத்தாக முடியும்' கடிதம்
இந்தக் கருத்துடன். ஆஸ்க்கார் அழவில்லை; சிரித்தான்! வெறுப்புணர்ச்சியின் பிடியிலே
உலகே சிக்கிவிட்டிருப்பதை எண்ணிச் சிரித்தான்! போர் எங்கே நின்றுவிட்டது! "சமாதானம்
மலர்ந்துவிட்டது என்கிறார்களே, எங்கே அதன் மணம்! பகை உணர்ச்சி ஒழியா முன்பு போர்
நின்றுவிட்டது என்று கூறுவது பொருளற்ற பேச்சு. மோனா! போர் நடந்தபடி இருக்கிறது. இதோ
பார் கடிதத்தை! ஒரு ஜெர்மானியனை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாதாம்! ஆபத்தாம்!"
ஆஸ்க்காரின் பேய்ச் சிரிப்புக் கேட்டு மோனா பயந்துவிட்டாள்! நிலைமையை அறிந்து
கண்கலங்கினாள்.
அமெரிக்கா, இனவெறி அற்ற இடம்; யாரும் சென்றிடலாம்; தாயகமாகக் கொண்டிடலாம் என்ற
செய்தி அறிந்தனர் காதலர். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒரே வெள்ளக் காடாக
இருக்கையில் தொலைவிலே ஒரு பசுமையான இடம் தெரிந்தால் மகிழ்ந்திடும் புள்ளினம்
போலாயினர். புறப்படுவோம் அமெரிக்காவுக்கு; புதிய உலகுக்கு; இனபேதமற்ற சமுதாய நெறி
தவழ்ந்திடும் நாட்டுக்கு என்று எண்ணினர். ஆனால் அந்த எண்ணத்திலும் மண் விழுந்தது.
'எந்த இனத்தவரும் அமெரிக்கா வந்து குடியேறலாம். ஆனால் குறிப்பிட்ட அளவு பணத்தோடு
வந்தால் மட்டுமே இடம் கிடைக்கும். ஒரு வசதியுமின்றி புகுந்துகொண்டு நாட்டுக்குப்
பாரமாக இருக்கக் கூடாது' என்ற நிபந்தனை குறுக்கிட்டது.
பண்ணை நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டங்களுக்காக மோனா தனக்குச் சொந்தமான பசுக்களை
விற்றுவிட்டாள். அவளிடம் இருந்த செல்வம் பசுக்கள் மட்டுமே! ஆகவே இப்போது அவள் பரம
ஏழை! ஆஸ்க்காரோ 'கைதி'யாக இருந்தவன்! இருவரும் பணத்துக்கு என்ன செய்யமுடியும்?
அமெரிக்காவை மறந்துவிட வேண்டியதுதான். அது பொருள் உள்ளவர்களை மட்டுமே
ஏற்றுக்கொள்ளும் பொன் விளையும் பூமி. ஏழைக்கு அங்கு இடமில்லை! வேறு என்ன செய்வது?
வாழ இடம்? வாழ வழி?
தயங்கித் தயங்கிக் கூறினான் ஆஸ்க்கார்: "மோனா நீ மட்டும் சம்மதித்தால், நாம்
நிம்மதியாக வாழ, மதிப்புடன் குடும்பம் நடத்த வழி இருக்கிறது. போரை மறந்து, போர்
கிளறிவிட்ட பகை உணர்வை மறந்து ஜெர்மனிக்கு வந்திருக்கச் சம்மதித்தால், நாம்
இருவரும் அங்கு சென்று வாழ்ந்திடலாம். அம்மா அன்புள்ளம் கொண்டவர்கள். என் வாழ்வை
தன் வாழ்வு என்பவர்கள். உன்னைக் கண்டால் பூரித்துப் போவார்கள்! போகலாமா!" என்று
கேட்டான். மோனா சம்மதித்தாள். இடம் எதுவாக இருந்தால் என்ன, அவருடன் இருந்திடும்
இடமே எனக்குத் திருஇடம் என்று கருதினாள். ஆர்வத்துடன் கடிதம் எழுதினான் ஆஸ்க்கார்
தன் அன்னைக்கு. பதில் வந்தது, இருவர் நெஞ்சிலும் நெருப்பை வாரிக் கொட்டுவது போல.
'எப்படியடா மனம் துணிந்தது, நம்மை நாசமாக்கிய பிரிட்டிஷ் இனத்தின் பெண் ஒருவளைக்
காதலிக்க? அவர்கள் நமக்குச் செய்த கொடுமையை எப்படி மறந்துவிட முடிந்தது. உன் தங்கை,
பத்து வயதுச் சிறுமியைக் கொன்றது பிரிட்டிஷ் குண்டு என்பதையும் மறந்தனையா? காதல்
கண்ணை மறைக்கிறதா! என் மகனா நீ! ஜெர்மானியன் தானா நீ? நாட்டை விடப் பெரியவளோ உன்னை
மயக்கிவிட்ட கள்ளி' என்றெல்லாம் கண்டனச் சொற்களைக் கொட்டியிருந்தாள் மூதாட்டி
அந்தக் கடிதத்தில்.
போர் முடிந்துவிட்டது என்றால் புது நேசம் பிறந்து விட்டது, பகை அழிந்துவிட்டது,
பாசம் பிறந்துவிட்டது என்பதல்ல பொருள்; பீரங்கி ஓசை இல்லை, படை கொண்டு தாக்குதல்
இல்லை. ஆனால் ஜெர்மானியர் ஜெர்மானியர்தான்! பிரிட்டிஷார் பிரிட்டிஷார்தான் -
வெவ்வேறு இனம்! என்ற கருத்து பீடித்துக் கொண்டிருக்கிறது என்பதனை இருவரும்
உணர்ந்தனர். வெறுப்புணர்ச்சியற்ற ஒரு நாடே கிடையாதா! இனத்தை மறந்து இதயங்கள் ஒன்று
பட்டதால் கடிமணம் புரிந்து கொண்டு வாழ்ந்திட இடமளிக்கும் நாடே கிடையாதா என்று எண்ணி
ஏங்கிக் கிடந்தாள்.
'ஒன்று இருக்கிறது! போரும் பகையும் அற்ற இடம்; விரோதமும் குரோதமும் அற்ற இடம்;
மனிதர்களாக வாழக்கூடிய இடம்; வெறுப்புணர்ச்சி நுழைய முடியாத இடம் ஒன்று இருக்கிறது
மோனா!' அவன் கூறுகிறான்; அவள் திடுக்கிட்டுப் போகிறாள்; மறுகணம் உறுதி பெறுகிறாள்;
'உண்மைதான் ஆஸ்க்கார்! அந்த இடமே பகைப்புயல் வீசாத இடம்; நிம்மதியாக வாழ்ந்திட ஏற்ற
இடம். அதனால் அங்கு நீ மட்டுமா செல்வது; எனக்கும் அதே இடம்தான்; இருவருமே செல்வோம்.
நமக்கு ஏற்ற அந்த இடத்துக்கு' என்கிறாள் மோனா. அவர்கள் தேர்ந்தெடுத்த இடம்,
கொந்தளிக்கும் கடல்! மரணபுரியில் மட்டுமே நாம் வாழ்ந்திட முடியும்; மக்களை
மாக்களாக்கிடும் வெறுப்புணர்ச்சி தீண்டாத இடம் அதுவே. வேறு எந்த இடமும் நம்மை
ஏற்றுக்கொள்ளாது! உன் இனம் என்ன? என்று கேட்கும்! உன் மரபு என்ன? என்று கேட்கும்.
மரணபுரியில் மட்டுமே அந்தக் கேள்விகள் எழுவதில்லை. மான் தீவிலே இடம் இல்லை!
பிரிட்டன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அமெரிக்காவிலே தங்கிட அனுமதி இல்லை. ஜெர்மனி
துரத்துகிறது, 'உள்ளே நுழையாதே; இடம் கிடையாது' என்று. அதோ ஆழ்கடல்! கொந்தளித்தபடி
இருக்கிறது. அலைக்கரம் நீட்டி வா! வா! என்று அழைக்கிறது; காதலால் கட்டுண்ட என்
மக்களே! நாடு பலவும் உங்களை வாட்டுகின்றனவா, இனபேதம் கிளறிவிடும்
வெறுப்புணர்ச்சியால். கவலைப்படாதீர்கள்! இதோ நான் இருக்கிறேன், உங்களை ஆரத்தழுவி
வரவேற்றிட! இங்கு இனபேதம், கிளறிவிடும் பகை உணர்ச்சி கிடையாது. வந்திடுவீர்! என்று
கூவி அழைக்கிறது. பல நாடுகள் இடமளிக்க மறுத்து விட்டன இந்தக் காதலருக்கு; காதலின்
மேன்மையினை அறிந்திடும் திறனற்று. இதோ இந்த இடமே நமக்கு ஏற்ற இடம் என்று
வருகின்றனர்! என் பெருமை உணர்ந்து வருகின்றனர்! - என்ற மகிழ்ச்சிப் பெருக்கில்தான்
கொந்தளிக்கிறதோ!
உறுதி பிறந்துவிட்டது; புது உற்சாகமே வந்துவிட்டது; இருவரும் புறப்படுகின்றனர்,
தமக்கு ஏற்ற நாடு நோக்கி.
குன்றேறுகிறார்கள்! மேலே செல்கின்றனர்! பகை உணர்வும் வெறுப்புணர்ச்சியும் நெளியும்
இடம், அதோ கீழே, காலடியில்! அவர்கள் உயரச் சென்றுவிட்டனர்! குன்றேறிப்
பார்க்கின்றனர்; கீழே ஆழ்கடல்! அலைக்கரங்கள் அழைக்கின்றன.
ஆரத் தழுவிக் கொள்கின்றனர். மேலே வானம்! கீழே கடல்! மணமேடையோ சிறு குன்று!!
இயற்கையோ எழிலளிக்கிறது மணவீட்டுக்கு! எதிர்ப்பார் இல்லை! ஏளனம் பேசுவார் இல்லை!
இனம் வேறு வேறு அல்லவோ என்று குளறுவார் இல்லை. காதலரிருவர் கருத்து ஒருமித்து
ஆதரவுபட்டதே இன்பம்! அந்த இன்பத்தில் திளைத்திருந்தனர், புது வாழ்வு பெற்ற
இருவரும்.
ஆஸ்க்கார், தனது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை எடுத்து, மோனாவையும் சேர்த்துத்
தன்னுடன் பிணைத்துக் கொண்டான். ஈருடல் ஓர் உயிர்! அந்த ஈருடலும் கூட ஒன்றாகப்
பிணைக்கப்பட்டிருக்கட்டும் என்று எண்ணினான் போலும்.
கண்களைக் கண்கள் கவ்விக் கொண்டன.
அந்த கண்கள் என்னென்ன பேசிக் கொண்டனவோ! ஒரு புன்னகை பூத்திருக்கும்! இதழமுது
சுவைத்திருப்பர்! நம் காலடியில் கிடக்கிறது குள்ள மனம் படைத்தோர் இருக்கும் இடம்!
அவர்கள் தொட முடியாத உயரத்தில் நாம் நிற்கிறோம்; காதலின் சிகரத்தில்! இனி... சென்று
சேர்ந்தனர் கடலடி. மரணபுரி அவர்களை வரவேற்றுக் கொண்டது. மாதாகோயிலில் மணி ஓசை
கிளம்புகிறது. போர் முடிந்தது; பகை ஒழிந்தது; சமாதானம் மலர்ந்தது என்று அந்த ஓசை
கூறுகிறது என்பர்!
இல்லை! போய்ச் சேர்ந்தனர்; போரற்ற, பகையற்ற, பேதமற்ற, வெறுப்பற்ற இடம் போய்ச்
சேர்ந்தனர் என்றல்லவா ஒலி அறிவிக்கிறது!
காதற் பயணம் முடிந்தது. போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர்! வாழ்க
காதல் என்று ஒலிக்கிறதோ!!