Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home  > The Tamil History - History & Geography > PallavaChera Dynasty > Chola Dynasty > Pandya Dynasty > பாண்டியர் வரலாறு - திருமதி தே. தியாகராஜன், எம். ஏ

பாண்டியர் வரலாறு
திருமதி தே. தியாகராஜன், எம். ஏ
 


"மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெலென்று ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை" என்று கூறப்பட்ட வளமிகு தென் மதுரையைத் தலைநகராகக் கொண்டது பாண்டிய நாடு.

இதன் எல்லை, "வெள்ளாறு வடக்கா மேற்குப் பெருவெளியாந் தெள்ளாம் புனற்கன்னித் தெற்காம் - உள்ளார ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம் பாண்டிநாட் டெல்லைப் பதி" என்பர் "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" என்பதே போல், புகழுடைய சேர, சோழ, பாண்டியரென்ற மூவர் தமிழகத்தை யாண்டனர்.

இம்மூவரும் ஒரு தாய்ப் பிள்ளைகளெனவும் இவர்கள் நாகரிகத்தின் பிறப்பிடமான தாம்பிரவருணி ஆற்றங் கரையில் கொற்கையைத் தலைநகராக்கி வாழ்ந்தனரெனவும், பின் ஏதோ காரணத்தால் பாண்டியர் அங்குத்தங்க மூத்த இருவரும் கிழக்கும் மேற்கும் சென்று தங்கள் தங்கள் பெயரால் நாடுகளமைத்துக்கொண்டன ரெனவும் வரலாறுகள் சொல்வதாய் ஒப்பிலக்கணத் தந்தை கால்டுவெல் கூறுவர்.கால்டுவெல் ஒப்பிலக்கணம், பக்14.

தமிழக வரலாற்றிலே பாண்டியர் வரலாறு முக்கியம். கலைகள் பல அவர்க் வளர்த்தனர். இலக்கியம் வளர்ந்தது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர். பண்பாடும் நாகரிகமும் ஓங்கி மதமும் அறிவும் வளர இடந்தந்தது மதுரை.

பாண்டிய நாட்டின் வரலாறறிய வழியென்ன?

ஒரு நாட்டின் வரலாறறிய உள்நாட்டிலக்கியம், பிறநாட்டிலக்கியம், புதை பொருளாராய்ச்சி, நாணயங்கள் என்ற சான்றுகள் தேவை. வரலாறறிய வெறுங் கர்ண பரம்பரைக் கதைகள் மட்டும் போதா. ஆகவே எழுத்திலே, ஏடுகளிலே, இலக்கியத்திலே, நு‘ல்களிலே, கல்வெட்டுக்களிலே, ஓலைகளிலே, செப்பேடுகளிலே, நாணயங்களிலே உள்ள அகச்சான்றுகள், புறச்சான்றுகள் வேண்டும். பாண்டியர் வரலாற்றைக் காட்டக்கூடிய இத்தகைய சான்றுகள் உளவா?

முதலாவதாக, மதுரை பற்றிய இலக்கியம் எடுத்தால், 'திருவிளையாடற் புராணம்,' 'பெரியபுராணம்' போன்றவையுண்டு. இவற்றால் வரலாறறிய அதிகப் பயனில்லை. 'The Pandyan Kingdom' - திரு.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி. பக். 3. சங்க நு‘ல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருத்தொண்டத் தொகை முதலியனவும் உள்நாட்டிலக்கியச் சான்றுகளே.

வெளிநாட்டிலக்கியச் சான்றுகள் பல. அவை விவிலிய நு‘லின் பழைய ஏற்பாடு, மெகஸ்தனீஸ் போன்றவர்கள் குறிப்பு, பிளினி, பெரிப்ளுசின் ஆசிரியர், இலங்கை மகாவம்சம், பிந்தியகாலப் பாண்டியர் பற்றி முஸ்லிம் ஆசிரியர்கள், மார்க்கோபோலோ முதலியவர்களின் குறிப்புகள் முதலியன.

மூன்றாவதாகப் புதைபொருளாராய்ச்சி மூலம் எவை கிடைத்துள்ளன பாண்டியர் வரலாறறிய? ஆனைமலை, ஐவர்மலை கல்வெட்டுக்கள், வேள்விக்குடிச் சாசனம், சென்னைப் பொருட்காட்சிச் செப்பேடுகள் (Madras Museum Plates), சிறிய சின்னமனு‘ர்ச் செப்பேடுகள், பெரிய சின்னமனு‘ர்ச் செப்பேடுகள் முதலியன.

நாணயங்களை எடுத்தால், பாண்டியர்கள் காலத்தில் வழங்கும் நாணயங்கள் முந்திய காலப்பாண்டியர்கள் பற்றி அதிகம் தெரிவிக்கவில்லை. கி.பி. 5-ஆம் நு‘ற்றாண்டிலுள்ள நாணயங்கள் அதிகங் கிடைக்கின்றன. எனவே அவை வெளிநாட்டு வணிகர்க்குப் பயன்படும்படி மதுரையிலேயே செய்யப் பட்டன வெனலாம். Sewell in Journal of Royal Asiatic Society of Great Brintain and Ireland (London).

பாண்டியர் வரலாற்றைச் சங்க காலம், முதற் பேரரசு இரண்டாம் பேரரசு என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு காலத்திலும் அரசாண்ட பாண்டியர்கள், அரசாளப்பட்ட நாட்டின் பரப்பு, மக்கள், மன்னர்கள் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சியிவையும் முக்கியம். இவற்றைக் காண ஒவ்வொரு காலத்தையும் அதற்குரிய சான்றுகள், வரலாறு, மக்கள் வாழ்க்கை, வீழ்ச்சி என்ற நான்கு தலைப்புகளிலே அடக்கிப் பார்க்க வேண்டும்.

சங்க காலப் பாண்டியர்களென்றால் எந்தக் காலம்? சங்கம் இருந்ததா? எப்போதென்றெல்லாம் வினாக்களெழும். இவற்றிற்கு விடை இலக்கிய ஆராய்ச்சியாளர் கூற வேண்டியது. பாண்டியர்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்குச் சான்றுகள் சங்க நு‘ல்களிலிருந்து தானே காண வேண்டும்? சங்க நு‘ல்களான பத்துப் பாட்டு எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு நு‘ல்கள் பாண்டியர் பலரைப் பற்றிக் கூறுகின்றன. சிலப்பதிகாரமும் மணி மேகலையுங்கூடக் கூறுகின்றன. எனவே, இப்பாண்டியர்கள் காலம் பழமைதொட்டுக் கி.பி. 300 வரை எனலாம்.

சங்க காலப் பாண்டியர்களிலே வடிம்பலம்ப நின்ற பாண்டியன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், கானப்பேரேயில் கடந்த உக்கிரப்பெரு வழுதி முதலியோர் குறிப்பிடத்தக்கவர். இன்னும் சில மன்னர்களும் உளர்.
இவர்களிலே ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் ஆரியர்களை வென்றானென்பர்.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வயதில் சிறுவனாதலால் அவனைச் சேரன், சோழன், இன்னும் ஐந்துவேளிர் இவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்தனர். இளையவனென்றாலென்ன? வீரமும் திறமையும் வயதையா பொறுத்தது, அவனவன் தன்னம்பிக்கையையல்லவா பொறுத்தது! எனவே அவன் வென்று புகழ் நாட்டினான்.

அக்கால மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தனர். மன்னரும், மக்களும் வீரர்; வீரப் பெண்டிர் பலர். பாண்டியர் வாணிகச் சிறப்பறிய மதுரைக் காஞ்சி போதுமே. பாணரும் பாடினியரும் இசை வளர்த்தனர். அகவாழ்க்கையைக் களவு கற்பு எனப் பிரித்தனர். தமிழரது பொருளிலக்கணம் நுணுக்கமாயிருந்தது அவரது வாழ்க்கையைப் பின்பற்றியெழுதியதால்தானே?

அக்காலத்தில் ஆரிய மதம் புகுந்துவிட்டது. இந்திரன், நெடியோன், பலராமன், போன்ற தெய்வங்களை மக்கள் வழிபட்டனர். மன்னர்களிலே பாண்டியன் அறிவுடைநம்பி, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் முதலியோரும், அரசி பூதப்பாண்டியன் தேவி, பெருங்கோப் பெண்டு முதலியோரும் சங்க நு‘ல்களில் கவி பாடியிருக்கிறார்கள்.

சங்க காலப் பாண்டியர்கள் வீழ்ந்ததேன்? பாண்டியன் கானப் பேர் கடந்த உக்கிரப் பெருவழுதிக்குப் பின் ஆண்ட மன்னர் யாவரென்று தெரியவில்லை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள், பாண்டியர் வரலாறு, பக் 19.

கி.பி.3ஆம் நு‘ற்றாண்டில் களப்பிரர் என்பது தனி ஒருவனைக் குறிக்கவில்லை. அது ஒரு போர்ச் சாதியைக் குறிக்கிறது. எப்படி இவர்கள் பாண்டியர்களை வென்றார்கள்? எத்தனை காலம் ஆண்டார்கள்? போன்ற செய்திகள் விபரமாகத் தெரியவில்லை என்கிறார் வெங்கையா. எவ்வாறு சிம்ஹவிஷ்ணு திடீரெனத் தோன்றிப் பல்லவ குலத்தை நிலைநாட்டினானோ டூப்ரில் கருத்து. அதே போல் கடுங்கோன் கி.பி.590-இல் தோன்றி முதலாம் பாண்டியப் பேரரசை நிலைநாட்டினான் என்கிறார் வெங்கையா.

முதலாம் பேரரசிற்குச் சான்றுகளுண்டா? வேள்விக்குடிச் சாசனம், சென்னைப் பொருட்காட்சிச் செப்பேடுகள், ஆனைமலைக்கல்வெட்டுக்கள், ஐவர்மலைக் கல்வெட்டுக்கள் முதலாம் பேரரசிலுள்ள அரசர்களைப் பற்றி அறிவிக்கின்றன. முதற் பேரரசின் காலம் கி.பி. 590 முதல் 920 வரை. žன யாத்ரிகர் யுவான் சுவாங் தமது குறிப்பிலே, தம் காஞ்சியிலிருந்து மதுரை புறப்படும்போது ஒரு பாண்டியன் இறந்ததாகக் கூறுகிறார். இறந்தவன் சேந்தன் என்ற பாண்டியனென நம்ப வழியிருக்கிறது. இப்படிச் சில சான்றுகள்.

கடுங்கோன் களப்பிரரை முதுகு கண்டானென வேள்விக்குடிச் சாசனம் கூறுகிறது. இவனையும் இவன் மகன் மாறவர்மன் அவனி சூளாமணி பற்றியுமதிகம் தெரியவில்லை. அரிகேசரி மாறவர்மன் மிகவும். திறமையாளன், நெல்வேலியில் வெற்றிபெற்றான். வேள்விக்குடிச் சாசனம் பெரியமன்னு‘ர்ச் செப்பேடுகள். குறுநாட்டை வென்றான்; நாட்டை விரிவாக்கினான்; பரவர்களை வென்றான்; கேரள மன்னனைத் தோற்கடித்தான்.

இவன் கூன்பாண்டியன் எனக் கொள்ளலாம். திருத்தொண்டத் தொகை,பெரிய புராணம். இவன் சிறுத்தொண்ட நாயனார்க்கு இளையவன்; திருஞாசம்பந்தர்க்கு மூத்தவன். Epigraphia Indica, Vol III, pp. 277-8. Dubreuil 'The Pallvas' pp. 67-8. இவனுக்குப் பராங்குசன், நெடுமாநன் போன்ற பட்டங்களுண்டு.

இவனைப் போலவே கோச்சடையன் இரணதீரன் என்பானும் வெற்றி பல கண்டான். பிறகு ஜடிலா, பராந்தகன் என்றழைக்கப்பட்ட வரகுண மகாராஜன் அரசாண்டன். இவன்தான் வேள்விக்குடிச்சாசனம், சென்னைப் பொருட்காட்சி செப்பேடுகள் இவற்றை ஏற்படுத்தியவன். இன்னும் பாண்டியர்கள் பலர் ஆண்டனர். இந்தப் பேரரசின் கடைசி மன்னன் இரண்டாம் இராஜசிம்ஹன். அவனை முதலாம் பராந்தகன் என்ற சோழன் வென்றான்.

முதலாம் பேரரசு நாட்களிலே அரசியலிலே முதன் மந்திரி 'உத்தர மந்திரி' என்றழைக்கப்பட்டான். அரசாங்கத்திலோ பட்டாளத்திலோ இருந்தவர்கள் 'பராந்தகவீரர்', 'திருமலை வீரர்' என்றழைக்கப்பட்டனர். 'ஏனாதி' முதலிய பட்டங்களைப் படைத் தலைவர்கள் பெற்றார்கள். வணிகருள் சிறந்தோர் 'எட்டி' என்ற பட்டம் வழங்கப் பெற்றனர். மன்னர்கள் கல்வி, கலைகளை யாதரித்தனர். அவைத் தலைமைக் கவிஞருண்டு. அவருக்கு மானிய முண்டு.

அறநிலையங்கள் வரியின்றிப் பெற்ற நிலங்கள் தானமெனவும், அந்தணர் பெற்றவை பிரமதேயமெனவும் அழைக்கப்பட்டன. கிராமத்தில் சபையுண்டு. பௌத்தம், சமணம் இருந்தன இக்காலத்தில். பிறகு திருஞானசம்பந்தரே ஆயிரக்கணக்கான சமணர் கழுவிலேற்றப்படக் காரணமென்பர். சைவமும், வைணவமும் வாழ்ந்தன. 10-ஆம் நு‘ற்றாண்டில், வட்டெழுத்துத் தற்காலத் தமிழெழுத்தாக மாறியது.

இரண்டாம் இராஜசிம்ஹனுக்குப் பிறகு பாண்டிய நாடு பாழடைந்தது. அவனை முதலாம் பராந்தக சோழன் தோற்கடித்தான். முதலாம் பேரரசு கி.பி. 920-இல் முடிவடைகிறது. The Pandyan Kingdom by K.A. Nilakanta Sastri, p. 82.பத்தாம் நு‘ற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நு‘ற்றாண்டு வரை பாண்டியர் அரசாட்சியொன்றுந் தெரியவில்லை. இரண்டாம் இராஜசிம்ஹன் தோல்வி பற்றித் திரு விதாங்கூரிலுள்ள சுžந்திரத்திலிருக்கும் முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு விளக்குகிறது.

ஆனைமலை, குற்றாலம் இங்குள்ள கல்வெட்டுகளும் இவ்வாறே அறிவிக்கின்றன. முதலாம் இராஜராஜ சோழன் பாண்டிய நாட்டை வென்ற போது அது தன் பெயரையே இழந்து பெருமை குன்றி இராஜராஜ மண்டலம் அல்லது இராஜராஜப் பாண்டி நாடு எனப் பெயர் பெற்றது. Annual Reports on Epigraphy (Madras). மேலும் பாண்டிநாடு பாண்டிய குலாசனி வளநாடு என்ற பெயரும் அடைகிறது. அரங்காச்சாரியின் 'சென்னை மாகாணத்தின் கல்வெட்டுகள்' - திருச்சி மாவட்டக் கல்வெட்டுக்களில் 691, 538 (பக்கம் 106).

சோழர்களிலே இராஜேந்திரனுக்குப் பிறகு சிறந்த மன்னர்களில்லை. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பாண்டியர் தலையெடுத்தனர். வீரபாண்டியன் விக்ரம பாண்டியனென இருவர் சண்டையிட மூன்றாம் குலோத்துங்கன் விக்ரம பாண்டியனுக்கு உதவி செய்யப் பாண்டியர் முன்னேறினர். விக்ரமனுக்குப் பிறகு ஜடாவர்மன் குலசேகரன் காலத்தில் பாண்டியர் இரண்டாம் பேரரசு ஆரம்பமாயிற்று.

பாண்டியர் இரண்டாம் பேரரசுக்காலம் கி.பி. 1190-1313 The Pandyan kingdom by K.A.N. Sastri, Page 212. இரண்டாம் பேரரசிற்குச் சான்றுகள் வெவ்வேறிடங்களில் கிடைக்கின்ற. அந்தந்தக் காலத்து அரசர்களின் கல்வெட்டுகள். ஆனால் அவை பாண்டியரின் மரபு விளக்கத்திற்கு உதவவில்லை. கல்வெட்டுக்களில் வரும் ஜாதகக் குறிப்புகள் மரபு விளக்கத்திற்கு உதவி செய்வதற்குப் பதிலாகக் குழப்பத்தை யுண்டாக்குகின்றன.

மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பான் கி.பி. 1216-இல் அரசுக் கட்டிலேறினான். Kielhorn, Epigraphia India. Vol III., App. II., p. 24. இவன் சோழரை வென்றான்; கி.பி. 1223-இல் இவன் முடிகொண்ட சோழ புரத்தில் வீராபிஷேகம் செய்து கொண்டான். பிறகு மற்றுமோர் வீரன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பல வெற்றிகளடைந்து 'மகாராஜாதி ராஜ பரமேஸ்வரா என்ற பட்டம் சூடினான். பலமுறை வீராபிஷேகம் செய்து கொண்டான். சிதம்பரத்தில் பொற்சபை கட்டினான். சிதம்பரத்திலும், ஸ்ரீரங்கத்திலும், உள்ள கோயில்களுக்குப் பொன்வேய்ந்து 'கோயில் பொன் வேய்ந்த பெருமாள்' என்ற பெயர் பெற்றான். Annual reports on epigraphy-1927, Part II, Para 4. இடையே பலர் ஆண்டனர். பிறகு மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆண்டான். இவன் காலத்திலேயே மாறவர்மன் விக்ரம பாண்டியன், இரு ஜடாவர்மன் சுந்தர பாண்டியர் ஜடாவர்மன் வீரபாண்டியன் என்றவர்கள் ஆண்டனர். The Pandyan Kingdom by K.N. Nilakanta Sastri, p. 180.

மாறவர்மன் குலசேகரன் என்பானுக்குத் தன் மனைவிமூலம் பிறந்தவன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன். வேறொரு பெண்மூலம் பிறந்தவன் ஜடாவர்மன் வீரபாண்டியன். குலசேகரன் தனக்குப் பின் அரசாள வீரபாண்டியனைத் தேர்ந்தெடுத்தான்.உடனே சுந்தர பாண்டியன் கோபப்பட்டுத் தன் தந்தையைக் கொன்றுவிட்டான். இதனால் வீரபாண்டியன் சுந்தரபாண்டியனைப் பழிவாங்க எண்ணவே உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. சுந்தரபாண்டியன் தோற்றான்.

இவர்கள் ஒற்றுமையின்மை வடக்கிலிருந்து வந்த முஸ்லிம் படையெடுப்பிற்கு வசதியாயிற்று. அலாவுத்தீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் தென்னாட்டு நகரங்களையெல்லாங் கொள்ளையடித்தான். மதுரைக்குக் கி.பி. 1311-இல் வந்தான். இதன் பின் பாண்டிநாடு பெருமையிழந்து திருநெல்வேலி மாவட்ட அளவிற்குக் குறுகிப் பின் 16-ஆம் நு‘ற்றாண்டில் அறவே மறைந்தது.
இரண்டாம் பேரரசுக் காலத்தில் மக்கள் சமூக வாழ்க்கை கவனிக்கத் தக்கது. முதலில் அரசர்கள் வெற்றிமேல் வெற்றி கண்டனர். அந்நாட்களைப்பற்றி வெனிஸ் நகரைச் சேர்ந்த சுற்றுப் பிரயாணியான மார்க்கோபோலோ நன்கு விரிவாகக் கூறுகிறார்.

காயல் துறைமுகப் பட்டினம் பற்றியும் அங்கு நடந்த கடல் வாணிகம் பற்றியும் மார்கோபோலோ பின்வருமாறு கூறுகிறார்: "அரபு வணிகர் தங்கள் குதிரைகளைக் கூட்டங் கூட்டமாய்க் கொண்டு வந்து அதற்குப் பதிலாய்ப் பாண்டியர் பொன்னைத் திரள் திரளாய்ப் பெற்றுச் சென்றனர்.

"நவமணிகளும், பொன்னும் பாண்டிநாட்டில் ஏராளம். முத்துச் செல்வ மிகவுமதிகம். பாண்டிய மன்னர்களிடமிருந்த முத்துக்களின் மதிப்பையும், அளவையும் எந்த மொழியிலும் அளவிட முடியாது. கொற்கையில் முத்துக் குளித்தனர். இந்நாடு 'மாபார்' என்று வெளிநாட்டாரால் அழைக்கப்பட்டது.

"அரசனுக்குப் பல மனைவியர். குழந்தைகளும் பல. அரசனைக் காக்கத் 'தென்னவன் ஆபத்துதவிகள்' என்போர் தம்முயிரையுந் தந்தனர். சதியென்னும் உடன்கட்டையேறும் வழக்கம் பாண்டி நாட்டிலுமுண்டு. மக்களுக்குத் தையற்காரருமில்லை. அவர்கள் தேவையுமில்லை. ஏனெனில் அவர்களுடை அப்படிப்பட்டது. மக்கள் பசுவை வணங்குவர். அதனைக் கொலைசெய்யவோ உண்ணவோ மாட்டார்."

மேலேயுள்ள மார்க்கோபோலோ குறிப்புப் போலவே, 'வாசப்' என்ற ஆசிரியரும் பாண்டி நாட்டில் குதிரை வாணிகம் இருந்ததைக் குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் வந்த முஸ்லிம் ஆசிரியர்களான அமீர் குஸ்ரு, ஹ’யாவுத்தீன் பார்னி என்பவர்களும் பாண்டியர் வரலாறறியத் தங்கள் குறிப்புகள் மூலம் உதவுகின்றனர்.

பாண்டியர்கள் அரசியல் முறையும் முக்கியமே. அவர்களிற் பலர் பல நாடுகளை வென்று பரந்த நிலத்திற்குரியரானார்கள். அதனை ஆளுதற் பொருட்டுப் பல பிரிவுகளாகப் பிரித்தனர். எடுத்துக் காட்டாகத் திருமல்லி நாடு, செம்பி நாடு, புறமலை நாடு போல்வன. சில நாடுகளையும் கூற்றங்களையுங் கொண்டது வளநாடு.

இப்படிப்பட்ட வளநாடுகள் கி.பி. 9-ஆம் 10-ஆம் நு‘ற்றாண்டுகளில் இருந்தன. Epigraphia Indica, Vol XXI, Ins. No. 17. இப்படிப்பட்ட வளநாடுகள் சேர்ந்தது மண்டலம்.

அரசன் தன்னாட்சிக் காலத்திலேயே பட்டத்திற்குரிய மகனையோ, தம்பியையோ இளவரசனாக்குவான். சதாசிவ பண்டாரத்தாரது "பாண்டியர் வரலாறு", பக் 72. மன்னருக்கடியில் அமைச்சர், படைத்தலைவர், அரையர் வரியிலார் முதலிய அதிகாரிகள் பணியாற்றுவர். 'காவிதி' 'தென்னவதரையன்' 'பாண்டிப் பல்லவ தரையன்' போன்றன அதிகாரிகட்கு அரசன் வழங்கிப் பாராட்டியுள்ள பட்டங்கள். சதாசிவ பண்டாரத்தாரது "பாண்டியர் வரலாறு", பக் 72.
மக்கள் நிலவரி செலுத்தினர்.

அதனைப் பணமாகவோ, பொருளாகவோ தரலாம். இறை, பாட்டம் என்பன வரியையுணர்ந்துஞ் சொற்கள். 'உல்கு' என்பது சுங்கவரியாகும். நிலத்தை யளந்து வைத்தனர். அவை நன்செய், புன்செய், தோட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.

கோயில் நிலங்கள் வரி நீக்கப் பெற்று இறையிலி தேவதானம் எனப்பட்டது. மடங்களது வரியிலா நிலத்தை மடப்புறம் என்றழைத்தனர். முற்று‘ட்டு என்பது புலவர் தானமாய்ப் பெற்ற வரியிலா நிலம். அந்தணர் பெற்ற வரியிலா நிலம் பிரம்மதேயம். எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் முதலிய அளவைகளுண்டு. நாணயங்கள் பொன், செம்பு இவற்றாவ் ஆயது. மன்னர்களின் பட்டப் பெயர்களைக் கொண்டு அவை வெளிவந்தன. Mysore Gazetteer, Vol II, pp. 1260, 1272.

கிராமத்திலே சபையுண்டு. அதன் உறுப்பினருக்கு வேண்டுந் தகுதியைக் கல்வெட்டுக்கள் கூறும். Epigraphia Indica, Vol XXII, p. 5. கிராம சபையின் உட்கழகங்கள் பஞ்சவார வாரியம், தோட்டவாரியம் முதலியன. பத்திரங்கள் பதிவு செய்ய ஆவணக்களரிகள் உண்டு. மன்னர்கள் சைவம், வைணவம், பௌத்தம், சமணம் முதலிய மதங்களைக் காத்தனர்; ஆனால் முக்கியமாக முன்னவை இரண்டையும் வளர்த்தனர்.

மன்னனிடம் யானை, குதிரை, தேர், காலாள் முதலிய படைகளுண்டு. வாணிகமும் கைத்தொழிலும் நன்கு நடைபெற்றன. அவைபற்றி மார்க்கோபோலோவும் நன்கு குறிப்பிடுகிறார். மன்னர்கள் கல்வி கலைகளை நன்கு வளர்த்தனர்.

இவ்வாறு பாண்டியர்களின் நாகரிகம், கலை, பண்பாடு முதலியன மிகவுயர்ந்த நிலையிலிருந்தன. பாண்டியர் வரலாறு தொடர்ச்சியற்று இடையீடுகள் பலவுள. அவை நீங்கிப் 'பாண்டியர் வரலாறு' முழுவதும் ஒழுங்காக உலகோர் அறியச் செய்ய வேண்டியது வரலாற்றாராய்ச்சியாளர்கட்கு மட்டுமோ, தமிழரனைவர்க்குந் தலையாய கடனன்றோ? பாண்டியர் புகழ் ஓங்குக! பாண்டிய நன்னாடு வாழ்க!
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home