| 
		 "To us
		all towns are one, all men our kin.  | 
	
| Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search | 
Home > The Tamil History - History & Geography > Pallava > Chera Dynasty > Chola Dynasty > Pandya Dynasty > பாண்டிய நாட்டுக் காசுகள் - நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் திரு. அ. இராகவன்
| 
			 
			பாண்டிய நாட்டுக் காசுகள்  முற்காலத்தில் தமிழ் 
			மக்கள் வாழ்ந்த நிலப் பரப்பு தமிழகம் என்று அழைக்கப்பட்டது. 
			பிற்காலத்தில் அது தமிழ் நாடு என்று கூறப்பட்டது. இத்தமிழ் நாடு 
			குடபுலம், குணபுலம், தென்புலம் என்று மூன்று பகுதிகளாகப் 
			பிரிக்கப்பட்டிருந்தது. இதனைச் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய 
			மூவேந்தர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள் ஆட்சி புரிந்து வந்த 
			நிலப்பகுதிகள் முறையே சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் என்று 
			சொல்லப்பட்டன. 
			 பாண்டிய மண்டலம் : 
			பாண்டிய மண்டலம் பாண்டிய நாடு என்றும் வழங்கப்பட்டது. தமிழகத்தை ஆண்ட 
			மூவேந்தர்களில் பாண்டியர்கள் வரலாற்றுக் காலந்தொட்டு மேன்மையுற்றுவரும் 
			பழம் பெரும் குடியினர். இவர்கள் தொன்றுதொட்டு இந்த நிலப்பகுதியிலே 
			வாழ்ந்து வருகின்றனர். 
			 வட மொழியினரின் ஆதிகாவியம் என்று கூறும் 
			வான்மீகி இராமாயணத்தில் பாண்டிய நாட்டுப் பழம்பெரும் தலைநகர் 
			'கபாடபுரம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கபாடபுரம் பொன்னாலும், 
			மணிகளாலும் அணி செய்யப்பட்ட கோட்டை வாயிலின் கதவுகளை உடையது என்று 
			சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் 
			வாழ்ந்தவராகக் கூறப்படும் வடமொழிப் புலவர் காத்தியாயனர் பாண்டியர் 
			என்னும் மொழிக்கு இலக்கணம் கூறியுள்ளார். அசோக மன்னன் கல்வெட்டுக்களில் 
			பாண்டியர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. 
			 பௌத்தர்களால் வரையப் பெற்ற பழம்பெரும் 
			இலங்கையின் வரலாற்று நூலாகிய மகாவம்சம் கி.மு. 478-இல் வாழ்ந்த இலங்கை 
			வேந்தன் விசயன், பாண்டிய நாட்டு இளவரசியை மணந்தான்; அவன் தோழர்கள் 
			பாண்டிய நாட்டு அரசாங்க அதிகாரிகளின் பெண்மக்களை மணந்துகொண்டு பாண்டிய 
			நாட்டுப் பெரிய மரக்கலத்தில் ஏறி வந்தார்கள் என்று கூறுகிறது. கி.மு. 
			மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டினின்று சந்திர குப்தன் 
			அரசவைக்குப் போந்த அரச தூதுவனாகிய மெகஸ்தனிஸ் பாண்டிய நாட்டின் 
			வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளான். 
			 உரோம் நாட்டில் கி.மு. முதல் 
			நூற்றாண்டில் வாழ்ந்த அகஸ்டஸ் என்னும் பேரரசன் அரசவைக்குப் பாண்டியன், 
			தன் அரசத் தூதுவரை அனுப்பி நட்பு வளர்த்து இரு நாடுகளும் அரசத் 
			தூதுவர்களைப் பரிமாறிக் கொள்ளச் செய்தான். அதனால் இரு 
			நாடுகளுக்குமிடையே வாணிகம் வளர்ந்தது. கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த 
			பிளினி என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன் பழம் பாண்டியரின் வரலாற்றைக் 
			குறிப்பிட்டுள்ளான். "பாண்டி நாடே பழம் பெரும் நாடு" என்று தேவார 
			ஆசிரியர்கள் புகழ்மாலை சூட்டியுள்ளனர்.  நாகரிகம் 
			பாண்டிய நாடு கிறித்துவ ஊழி எழுவதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே 
			நனிசிறந்த நாகரிகத்தைப் பெற்றுவிட்டது; கழகங்கள் கண்டு கருத்தோடு 
			தமிழ்க் கருவூலத்தை வளர்த்து வந்ததது. பாண்டிய நாட்டில் மகேச சூத்திரம் 
			என்னும் பேரிலணக்கம், களவியல் என்னும் ஐந்திணை அகநூல், அகத்தியம், 
			முதுநாரை, முதுகுருகு, ஐந்திரம், பரதம், கூத்தநூல், இசை நுணுக்கம், 
			தொல்காப்பியம், திருக்குறள் போன்ற எண்ணற்ற இலக்கியங்கள் எழுதப் பெற்றன. 
			அஃது அறநெறிபற்றி ஆட்சி நடத்தும் அரசர்களையும், அரும் பெரும் அரசியல் 
			அமைப்பையும் பெற்று விட்டது. 
			 பாண்டிய நாட்டில் கலைகளும், மொழியும், 
			எழுத்தும், செல்வமும், கைத்தொழில்களும், பயிர்த் தொழில்களும் வளம் 
			பெற்றெழுந்தன. வணிகம் வளர்ந்தது. போக்குவரத்துச் சாதனங்கள் பெருகின. 
			கலங்கள் கட்டப்பட்டன. யவனர்களோடு பெரும் அளவில் கடல் வாணிகம் 
			நடைபெற்றது (1) இருமீன்கள் தீட்டிய பாண்டிய நாட்டுக் கொடிகள் பறந்த 
			நாவாய்கள் ஆழ்கடல் தாண்டி வெளி நாடுகள் போந்து மீண்டும் வந்தன. 
			 கோநகர் : 
			 பாண்டிய நாட்டிற்குப் புறநகர் (துறைமுகப் 
			பட்டினம்)கொற்கையாகவும் பின்னர், பழைய காயலாகவும் இருந்து வந்தது. 
			அகநகர் (கோநகர்) மதுரையாக இறுதிக் காலத்தில் இருந்து வந்தது. கோநகரில் 
			அரசர் இருந்து ஆட்சி புரிந்து வந்தார். இளவரசர் கொற்கையில் இருந்து 
			மன்னர்க்குத் துணைபுரிந்து வந்தார். கொற்கை அருகே கடலில் ஏராளமான 
			முத்துக்கள் கிடைத்தன. கொற்கை, முத்துக் குளிக்கும் மூதூராக 
			விளங்கியது. கொற்கைத் துறைமுகத்தில் யவனர்கள், அரேபியர்கள் 
			கப்பல்களும், பாண்டியர்களின் பல்வேறு வகையான படகுகளும், தோணிகளும், 
			அம்பிகளும், நாவாய்களும் ஏராளமாக இருந்து வந்தன. யவனர்கள் 
			பொற்காசுகளையும், பொற்கட்டிகளையும் கொடுத்து முத்து, மிளகு, சந்தனக் 
			கட்டை முதலிய பொருள்களை வாங்கிச் சென்றனர். 
			 அஃக சாலை : 
			 பாண்டியர்கள் உள்நாட்டுச் செலாவணிக்கும் 
			அயல் நாட்டுச் செலாவணிக்கும் ஏராளமான காசுகளை வெளியிட்டு வந்தனர். 
			பாண்டியர் அரசாங்கத்திற்குப் பொன், வெள்ளி, செம்பு ஆகிய தாதுப் 
			பொருள்களில் காசு வெளியிடும் அஃகசாலைகள் கொற்கையிலும் மதுரையிலும் 
			இருந்து வந்தன. காசு வெளியிடும் இடத்திற்கு அஃகசாலை என்று பெயர். காசு 
			வெளியிடும் நிலையம் இருக்கும் தெருவிற்கு அஃகசாலைத் தெரு என்று பெயர். 
			கொற்கையில் காசு வெளியிடும் தெருவும் நிலையமும் அழிந்துவிட்டன. ஆனால் 
			அத்தெருவில் உள்ள பிள்ளையார் கோயில் இன்றும் இருந்து வருகிறது. 
			அப்பிள்ளையாரை மக்கள் அஃகசாலை விநாயகர் என்று அழைத்து வருகிறார்கள். 
			உரோமர்கள், பாண்டியர்கள் அனுமதி பெற்று மதுரையருகே குடியேறித் தங்கள் 
			செலாவணிக்குச் செப்புச் காசுகள் வெளியிட்டிருக்கலாம் என்று சில 
			அறிஞர்கள் கருதுகிறார்கள். 
			 பழம் பாண்டியர்களின் காசுகள் 
			பாண்டியர்கள் வெளியிட்ட காசுகள் மதுரை, கொற்கை முதலிய இடங்களில் 
			மட்டுமின்றி இலங்கையிலும் ஏராளமாகக் கிடைத்து வருகின்றன. அண்மையில் 
			மைசூர் நாட்டுப் பகுதியில் பழம் பாண்டியர்களின் காசுகள் பல 
			கிடைத்திருப்பதாக மைசூர் புதைபொருள் ஆராய்ச்சித் துறையினர் வெளியிட்ட 
			ஆண்டு அறிக்கையின் மூலம் நன்கறிகின்றோம். இப்பொழுது மூவேந்தர்களின் 
			காசுகளும் ஏராளமாகக் கிடைத்துள்ளன. ஆனால், இன்று கிடைத்துள்ள காசுகளில் 
			பாண்டியர்கள் காசுகளே மிகத் தொன்மையானவை. 
			 பாண்டியர்கள் முதன்முதலாக, கி.பி. முதல் 
			நூற்றாண்டில் காசுகள் வெட்டியிருக்கலாம். ஆனால், கி.பி. ஐந்தாம் 
			நூற்றாண்டில் வெளியிட்ட பழம் பாண்டியர்கள் காசுகள்தான் இப்பொழுது 
			ஏராளமாகக் கிடைத்துள்ளன (2). சேரர், சோழர் காசுகளில் கி.பி. பத்தாம் 
			நூற்றாண்டிற்கு முற்பட்ட காசுகள் கிடைக்வில்லை. அண்மையில் 
			காவிரிப்பூம்பட்டினத்தில் கரிகாலன் காசுகளைக் கண்டெடுத்தாகக் 
			கூறப்படுகிறது. அவைகளை நான் பார்வையிட்டேன். அவை சோழர் காசுகள் என்று 
			என்னால் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. 
			அண்மையில் வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் சில பழங் 
			காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை சங்க காலக் காசுகள் என்று 
			பத்திரிகைகளில் எழுதப்பட்டன. இவற்றில் எதையும் நான் பார்த்ததில்லை. இவை 
			சங்க காலத்தில் உள்ள தமிழக மன்னர்கள் வெளியிட்ட காசுகளா என்று காசு 
			ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு கட்ட 
			வேண்டும். இதைப்பற்றி அறிஞர்கள் இன்னும் முடிவு காணவில்லை. 
			 நீண்ட சதுரக்காசுகள் : 
			 பழம் பாண்டியர்களின் காசுகள் இப்பொழுது 
			ஏராளமாகக் காணக்கிடக்கின்றன. அவை அனைத்தும் செம்பினால் செய்யப்பட்ட 
			அடிகாசுகளாகும். அவை அனைத்தும் சதுரமாகவும், நீண்ட சதுரமாகவும் உள்ளன. 
			 பெரும்பாலான காசுகளில் முன்புறம் யானை 
			வடிவம் தீட்டப்பட்டுள்ளது. சிலவற்றில் யானையோடு அருகில் தொட்டியும், 
			மரமும் உள்ளன. சிலவற்றில் யானையின் மேற்புறம் இருபக்கங்களிலும் 
			மலைகளும், நடுவில் புட்பக விமானம் போன்ற உருவமும் உள்ளன. மலைகளைப் 
			பௌத்த சைத்தியம் என்பாரும் உளர். 
			 பல காசுகளில் அடியில் யானை உருவமும், 
			அதன்மேலே சிறிய உருவில் சக்கரம், சுவத்திகம், குடம், கொடி, கண்ணாடி, 
			தொரட்டி, இணைக்கயல்கள் போன்ற அட்ட மங்கள உருவங்கள் (எட்டு மங்களச் 
			சின்னங்கள்) உள்ளன. சிலவற்றில் 2, 3, 4 உருவங்கள் மட்டும் உள்ளன. சில 
			காசுகளில், நந்தி, கடப்பமரம், குதிரை போன்ற உருவங்கள் தனித்தனியாகக் 
			காணப்படுகின்றன. இக்காசுகளின் பின்புறம் மீன் சின்னம் போன்ற 
			குறியீடுகள் காணப்படுகின்றன. இக்காசுகள் மொகஞ்சதாரோ, அரப்பா 
			முத்திரைகளை ஒத்ததாகக் காணப்படுகின்றன. 
			 யானை உருவம் பொறிக்கப்பட்ட பழம் 
			பாண்டியர் காசுகள், பாண்டிய மன்னர்கள் பௌத்த நெறியைத் தழுவி இருந்த 
			காலத்தில் வெளியிட்ட காசுகளாக இருக்கலாம் என்று எண்ணுகின்றனர். இந்தக் 
			காசுகள், இலங்கையில் ஏராளமாகக் கிடைப்பதினின்று, இலங்கையைப் 
			பாண்டியர்கள் வென்று அந்நாட்டின் செலாவணிக்காக வெளியிடப்பட்ட காசுகள் 
			என்றும், இலங்கை மக்களில் பெரும்பாலோர் பௌத்த மதத்தை தழுவி இருந்ததால் 
			அவர்களின் ஆதரவைப் பெறப் பௌத்தச் சின்னமாகிய யானை உருவம் தீட்டப் 
			பெற்றது என்றும் கூறப்படுகிறது. 
			 சிலர், பாண்டியர்கள் சிவநெறியைத் 
			தழுவியிருந்த காலத்தில் இந்த யானைக் காசுகள் வெளியிடப்பட்டன என்றும், 
			யானை உருவம் தமிழர்கள் பண்பாட்டிற்கு மாறானதன்று என்றும், சிந்துவெளி 
			நாகரிகத்தில் காணப்படும் யானை உருவந்தீட்டப்பட்ட முத்திரைகளே இதற்கு 
			ஏற்ற எடுத்துக்காட்டு என்றும் கூறுகிறார்கள். இந்தப் பழம் 
			பாண்டியர்களின் நீண்ட சதுரக் காசுகள் சிறிதும் பெரிதுமாகப் பல்வேறு 
			உருவங்களில் உள்ளன. இதில் வரிவடிவங்கள் எதுவும் இல்லை. பழம் 
			பாண்டியர்களின் காசுகள் கி.பி. 10-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவையாம். 
			 இடைக்காலப் பாண்டியர் காசுகள் 
			இடைக்காலப் பாண்டியர்களின் காசுகள் என்று கூறப்படுபவை கி.பி. 10-ஆம் 
			நூற்றாண்டிலிருந்து 14-ஆம் நூற்றாண்டு வரையுள்ள காசுகளாகக் கருதலாம். 
			இக்காசுகள் பொன், வெள்ளி, செம்பு முதலிய தாதுப் பொருள்களில் உள்ளன. இவை 
			வட்டவடிவமாக அமைந்துள்ளன. இன்று, பொற்காசுகள் சிலவே கிடைத்துள்ளன. 
			அதில் முன்பக்கம் இரு மீன்களும் இருமருங்கினும் வலப்புறம் விளக்கும், 
			இடப்புறம் சாமரமும், மேலே அரசகுடையும் உள்ளன. பின்புறம் தேவ நாகரி 
			வடிவம்போல் எழுத்துக்கள் காணப்படுகின்றன; ஆனால் சரியாகப் படிக்க 
			முடியவில்லை. வெள்ளிக் காசுகள் கிடைப்பது அரிதினும் அரிது. என்னிடம் 
			ஒரேயொரு வெள்ளிக் காசு இருந்தது. அது கொற்கையில் கிடைத்தது. இப்பொழுது 
			சென்னையில் உள்ள தமிழக அரசின் தொல்பொருட்காட்சிக் சாலையில் உள்ளது. 
			 இப்பொழுது பாண்டியர்களின் வட்டவடிவமான 
			செப்புக்காசுகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. சோழர்களின் பெரும்பாலான 
			காசுகளில் தேவநாகரி வரிவடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களின் 
			பெரும்பாலான காசுகளில் தமிழ் வரிவடிவம் தீட்டப்பட்டுள்ளது என்பது 
			இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். இவை பெரும்பாலும் 60 கிராம் எடைக்கு 
			உட்பட்டவையாக இருக்கின்றன. காசுகளின் பெயர்களும், மதிப்பும் தெளிவாகக் 
			காண முடியவில்லை. சில கல்வெட்டுக்களின்றும், செப்பேடுகளின்றும் 
			அக்காலத்தில் ஒரு காசுக்கு என்னென்ன பண்டங்கள் எவ்வளவு பெற முடியும் 
			என்று அறிய முடியும். சில காசுகளில் முன் தீட்டப்பட்ட உருவங்கள்மீது 
			பாண்டியர்களின் சின்னமாகிய மீன்களின் உருவங்கள் 
			பொறிக்கப்பட்டிருக்கின்றன. இது பாண்டிய நாடு மற்றவர் ஆட்சியினின்று 
			மீட்கப்பட்டதைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது. 
			 பாண்டியர் காசுகளில் பெரும்பாலானவற்றில் 
			மன்னர்களின் சொந்தப் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. விருதுப் பெயர்களே 
			காணப்படுகின்றன. 
			 குறிப்பாக, அவனீப சேகர கோளகன், 
			அவனீபேந்திரன், கோதண்டராமன், கலியுகராமன், கச்சி வழங்கும் பெருமாள், 
			சேரகுலராமன், பூதல, பூதலவீரன், எல்லாந்தலை, எல்லாந் தலையானான், சோணாடு 
			கொண்டான், ஜெகவீர சமர கோலாகலன், கனிய வி. பெ., கோனேரி (ராயன்?) கோனேரி 
			ராயன், புவனேகவீரன், வாளால் வழிதிறந்தான் (குளிகை) என்ற விருதுப் பெயர் 
			பொறித்த காசுகள் காணப்படுகின்றன.
			 
			 இஃதன்றி, மன்னர்கள் 
			பெயர் பொறித்தவை அதாவது குலசேகரன், வேமப் பெருமாள் வீரபா, 
			வீரபாண்டியன், சு, சுந், சுந்தரன், சுந்தரபாண்டியன் போன்ற பெயர்கள் 
			உள்ள நாணயங்களும் உள்ளன. சுந்தரபாண்டியன், குலசேகரன் போன்ற பெயர்களுள்ள 
			மன்னர்கள் பலர் பாண்டிய நாட்டில் இருந்து வந்ததால் இக்காசு குறிக்கும் 
			பெயர் முதலாம் சுந்தர பாண்டியனா, இரண்டாம் சுந்தர பாண்டியனா, முதலாம் 
			குலசேகரனா, இரண்டாம் குலசேகரனா என்று அறிய முடியாமல் இருக்கிறது. 
			 
			 மேற்கூறிய 
			பாண்டியர்களின் காசுகள் பெரும்பாலும் ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய 
			நாட்டை ஆண்ட �மாறன் �வல்லபன் (கி.பி. 815-862) காலத்திலிருந்து, 
			சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1175-1180). முதல் சடையவர்மன் குலசேகர 
			பாண்டியன் (கி.பி. 1190-1218), முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் 
			(கி.பி. 1216-1238), முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 
			1251-1271), சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1267-1281), முதல் 
			மாறவர்மன் குலசேகரபாண்டியன் (கி.பி.1268-1311), மூன்றாம் சடையவர்மன் 
			சுந்தர பாண்டியன் (கி.பி. 1303-1309) வரை ஆட்சிபுரிந்த மன்னர்கள் 
			வெளியிட்ட காசுகளாகக் காணப்படுகின்றன.  பிற்காலப் பாண்டியர் 
			காசுகள் 
			 கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் 
			பிற்பகுதியிலிருந்து 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை ஆண்டு வந்த 
			பாண்டியர்கள் வெளியிட்ட காசுகளைப் பிற்காலப் பாண்டியர்களின் காசுகள் 
			என்று கூறலாம். பிற்காலப் பாண்டியர்களிற் பலர் தென்பாண்டி நாட்டில் 
			ஆட்சி புரிந்து வந்தனர். பாண்டியப் பேரரசு வீழ்ந்ததும், சில பாண்டிய 
			இளவரசர்கள் தென்பாண்டிய நாட்டில் பல இடங்களில் சிற்றரசர்கள்போல் ஆட்சி 
			புரிந்து வந்தனர். அவர்களில் சிலர் கொற்கையில் இருந்து ஆட்சி புரிந்து 
			வந்ததோடு அங்குள்ள அஃகசாலையில் காசுகளும் வெளியிட்டு வந்தனர். 
			 கொற்கைப் பாண்டியர் காசுகள் 
			முற்காலத்தில் மட்டுமல்ல பிற்காலத்தும் ஒரு தனித்தன்மை வாய்ந்தனவாக 
			மிளிர்கின்றன. இவை மதுரைப் பாண்டியர் காசுகளினின்று எளிதில் வேற்றுமை 
			காணக்கூடியனவாக இருக்கின்றன. கொற்கையில் அறிஞர் லோவந்தால் 
			அவர்களுக்குக் கிடைத்த யானை உருவம் பொறித்த காசுகளும், நந்தி உருவம் 
			பொறித்த காசுகளும்கூட ஒரு தனித்தன்மையுடையனவாய்க் காணப்படுகின்றன. 
			மேலும், தாமரை மலர், ஞாயிறு, தண்பொருநை, சுவத்திகம், அன்னம், 
			வைணவர்களின் நாமம், சிவபார்வதி உருவம் தீட்டிய காசுகளாகவும், அரச 
			உடையில் நிற்கும் மனித உருவம், மனித உருவத்தின் அருகே கோடரி போன்ற 
			உருவங்கள் தீட்டிய கொற்கைப் பாண்டியர்கள் காசுகளாகவும், மதுரைப் 
			பாண்டியர்களின் காசுகளுக்கு முற்றிலும் மாறுபட்டனவாகவும் 
			காணப்படுகின்றன. 
			 பிற்காலப் பாண்டியர்கள் வெளியிட்ட 
			கொற்கைக் காசுகளில் பல வைணவச் சின்னங்கள் காணப்படுகினற்ன. எனவே, 
			பிற்காலப் பாண்டியர்கள், வைணவர்களின் திருத்தலங்களான ஆழ்வார்திருநகரி, 
			�ர்வைகுந்தம் முதலிய ஊர்களின் அருகேயுள்ள கொற்கையில் இருந்ததால் 
			நிலைகுலைந்த தங்கள் ஆட்சிக்குப் புத்துயிர் தருமாறு வைணவர்களாகி, 
			திருமாலை வேண்டியிருக்கிறார்கள் என்று தெற்றெனத் தெரிகிறது. பிற்காலப் 
			பாண்டியர்கள் பலர் வைணவப் பெயர்களைக் கொண்டிருப்பது, இதனை 
			உறுதிப்படுத்துகின்றது. 
			எடுத்துக்காட்டாகச் சடைய வர்மன் அதிவீரராமபாண்டியன் (கி.பி. 
			1564-1604), வரதுங்கராமபாண்டியன் (கி.பி. 1588), வரகுணராம குலசேகர 
			பாண்டியன் (கி.பி. 1631) வரண ராம பாண்டிய குலசேகரதேவ தீட்சிதர் (கி.பி. 
			1748) போன்ற பெயர்களைக் கூறலாம். சில பாண்டியர்கள் பிராம்ம�யத்தைத் 
			தழுவி வேத விதிப்படி வேள்விகள் செய்தும் வந்தனர். 
			 
			 எடுத்துக்காட்டாக 
			வரகுணராம குலசேகர பாண்டியன் (கி.பி. 1615), குலசேகர சோமாசியார் என்ற 
			பட்டத்தைச் சூட்டிக் கொண்டார் (3). என்ன செய்தும் பாண்டியர்கள் ஆட்சி 
			நிலைக்கவில்லை. �ரிய நிலையில் இருந்த பாண்டியர் ஆட்சி நிலைக்கவில்லை. 
			 �ரிய நிலையில் இருந்த பாண்டியர் ஆட்சி 
			14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தாழ்ந்த நிலையை அடையத் தொடங்கிற்று. 
			பாண்டிய நாட்டில் அன்னியர் ஆட்சி : 
			 பாண்டிய நாட்டு இளவரசர்களின் 
			அறிவின்மையால் கி.பி. 1330-ஆம் ஆண்டு முதல் 1378-ஆம் ஆண்டுவரை 
			மதுரையில் முஸ்லிம் ஆட்சி எழுந்தது. அவர்களின் பெயரால் அரபி எழுத்துப் 
			பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர். 
			 பாண்டிய மன்னர்கள் பல தலைமுறைகளாகத் 
			தேடிவைத்த பொன்னும், மணியும், முடியும், கொடியும், செங்கோலும், அரச 
			கட்டிலும், பிற விலையுயர்ந்த பொருள்களும் டில்லியில் அரசாண்ட மொகலாயக் 
			கொள்ளைக்காரர்களால் சூறையாடப்பட்டு டில்லிக்குக் கொண்டு போகப்பட்டன 
			(4). அப்பால் விசயநகர நாயக்க மன்னர்கள் பாண்டிய நாட்டின்மீது 
			படையெடுத்து வந்து, மொகலாய ஆட்சியை விரட்டிவிட்டு நாயக்கர்களின் 
			தளபதிகள் மதுரையில் இருந்து ஆட்சி புரிந்தனர். 
			 நாயக்கர்கள் மதுரையிலிருந்து, "பழநி, 
			மதுரை, விருபாசி, திருமல" என்ற தமிழ் வரி வடிவம் பொறித்த காசுகளை 
			வெளியிட்டுள்ளனர். அப்பால் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் 
			கிழக்கிந்தியக் கும்பினியார்கள் பாண்டிய நாட்டில் காசுகளை 
			வெளியிட்டனர். அக்காசுகளில் தமிழ், ஆங்கில எழுத்துக்கள் 
			காணப்படுகின்றன. 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாண்டிய நாட்டில் 
			ஆங்கில ஆட்சி நன்றாகக் கால் ஊன்றிக் கொண்டு ரூபாய், அணா, பை, துட்டு 
			என்னும் பெயர்களால் நாணயங்களை ஆங்கில எழுத்தில் வெள்ளி, செம்புத் 
			தாதுப் பொருள்களில் வெளியிட்டனர். 1947-ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர 
			ஆட்சி எழுந்து காசுகளை வெளியிட்டு வருகிறது. 
			 இடைக் காலத்தில் சேது என்ற தமிழ் 
			எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட காசுகள் சில பாண்டிய நாட்டிலும், ஈழ 
			நாட்டிலும் கிடைத்தன. இதை யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்கள் 
			வெளியிட்டிருக்கலாம் என்று நல்லூர் ஞானப் பிரகாச அடிகள் கருதுகிறார். 
			இராமநாதபுரம் அரசர்கள் தங்கள் முன்னோர்கள்வெளியிட்ட காசுகள் என்று 
			கூறுகிறார்கள். சர். டப்ளியூ, எலியட், சேதுக் காசுகள் பாண்டியர்கள் 
			வெளியிட்ட காசுகளாக இருக்கலாம் என்று கருதுகிறார். 
			 பிற்காலப் பாண்டியர்கள் செப்புக் காசுகளை 
			மட்டுந்தான் வெளியிட்டுள்ளனர். பிற்காலக் கொற்கைப் பாண்டியர்கள் 
			குறைந்த மதிப்புள்ள மிகச்சிறிய அளவுள்ள செப்புக் காசுகளை 
			வெளியிட்டிருக்கின்றனர். 
			 காசுகளின் பெயர்கள் : 
			 பாண்டிய நாட்டில் நாணயங்கள் காணம், 
			கழஞ்சு, காசு, பொன், குளிகை, பணம் என்ற பெயர்களால் வழங்கப்பட்டன. 10 
			பொன் கொண்டது 1 காசு. 10 காணம் கொண்டது ஒரு கழஞ்சு, 1 பொன் 1 காணம் 
			எடையுள்ளது.  காசு ஆராய்சி இயல் 
			(NUMISMATALOGY) காசு ஆராய்ச்சி இயலை 
			19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் அறிஞர்களான சர் வால்டர் 
			எலியட், லயனல் வில்பர்ட், ஐ.சி.எஸ்., லோவந்தால் (Rev. Lovfenthal), 
			டாக்டர் ஜே. ஆர். ஹெண்டர்சன் போன்றவர்கள் ஆரம்பித்து வைத்தனர். சர்.டி. 
			தேசிகாச்சாரி, திவான் பகதூர் இரங்காச்சாரி, வி. சொக்கலிங்க முதலியார் 
			போன்றவர்கள் காசியலை வளர்க்க முன்வந்தனர். ஆனால், அடிப்படையிட்டு 80 
			ஆண்டுகள் ஆகியும் தமிழகத்தில் காசு ஆராய்ச்சித்துறை சிறிதும் 
			வளரவில்லை-ஏன்? இன்று அந்த அடிப்படை கூடத் தகர்ந்துவிட்டது என்பது 
			ஆராயத்தக்கது. 
			 காசு ஆராய்ச்சி-ஏன்? 
			 காசு ஆராய்ச்சி நாட்டின் கலை வளர்ச்சியை 
			எடுத்துக்காட்டும் ஓர் அரும் பெரும்துறை. அது நாட்டின் வரிவடிவத்தின் 
			அபிவிருத்தியை நன்கு விளக்குவதாகும். காசுகளின் அமைப்பு, அதில் காணும் 
			சின்னங்களின் சிறப்பு மக்களின் நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் 
			கண்ணாடியாகும். பழங்காசுகள், எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டின் 
			உண்மையான வரலாற்றை வரைவதற்கு உற்ற-உயரிய கருவியாக ஒளிர்கின்றன. மேலும், 
			காசுகள் நாட்டின் அவ்வக்காலப் பொருளாதார நிலை உணர்த்தப் போதிய 
			சான்றாகத் திகழ்கின்றன.
			 முடிவுரை : 
			 தமிழர்களின் விழிப்புணர்ச்சியின் பயனாக 
			எழுந்த உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கும், தமிழ் மக்களின் 
			தவப்பேறாக இன்று தமிழகத்தில் துளிர்த்துள்ள தமிழர் ஆட்சியும் காசு 
			ஆராய்ச்சித்துறை வளர்ச்சிக்கு ஆவன செய்யும் என்று நம்புகிறோம். 
			தமிழகத்தின் வரலாற்றை விரைவில் காணநாடும் நமது தமிழக ஆட்சியினருக்குக் 
			காசு ஆராய்ச்சி மிகமிக இன்றியமையாதது என்று நினைப்பூட்டிக் 
			கொள்கின்றோம்.  
  |