Selected
Writings
V.Thangavelu, Canada
தமிழ்மொழிக் கிழமை -
தமிழில் பேசுவோம் தமிழ்ப் பண்பாடு காப்போம்
23 June 2005
தமிழ்க் கலை தொழில் நுட்பக் கல்லூரி கனடியத் தமிழ் மக்கள் இடையே
தமிழ்மொழி பற்றிய விழிப்புணர்வை உருவாக்க யூன் 26 தொடங்கி யூலை 02 வரைத் தமிழ்மொழி
வாரம் கொண்டாட முன்வந்துள்ளதைத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் பாராட்டி வரவேற்கிறது.
தமிழ்மொழி விழிப்புணர்வு என்பது தமிழ்மக்களின் வாழ்வியலின் அனைத்துத் தளங்களிலும்
துறைகளிலும் கூறுகளிலும் தாய்மொழியாகிய தமிழ்மொழிக்கு முதன்மை கொடுப்பதாகும்.
இல்லையேல் அவ்வித முயற்சி ஓட்டைப் பானைக்குள் தண்ணீர் நிரப்பிய கதையாகி விடும்.
ஒரு சிலர் வீட்டில் தமிழ்ப் பேசுவதை ஊக்கிவிப்போம் என்பார்கள். ஆனால் தமிழ்க்
குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வையுங்கள் அவர்களைத் தமிழர்களாக அடையாளம்
காட்டுங்கள் என்றால் முகத்தைச் சுழிக்கிறார்கள். தூய தமிழ்ப் பெயர் சூட்டுவதற்குத்
தடையாக இருப்பது பேரளவு மக்கள் எண்சாத்திரம் மீதும் பஞ்சாங்கம் மீதும்
வைத்திருக்கும் மூட நம்பிக்கையே ஆகும். இந்த மூடநம்பிக்கையை உடைத்தெறியுங்கள்.
உதறித் தள்ளுங்கள். தமிழ்ப் பெயர்தான் தமிழரின் தலையாய தேசிய அடையாளம் என்பதை
நினைவில் இருத்துங்கள்.
தமிழ்ப் பெயர் சூட்டுவது போலவே தமிழ்மொழியில் திருக்கோயில் வழிபாடு நடத்த வேண்டும்
என்றால் அதற்கு நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.
இப்படி அரைக் கிணறு தாண்டுகிற தமிழர்களின் தன்மானமற்ற மனப்போக்கே தமிழ்மொழி
மேம்பாட்டுக்கும் தமிழன் உயர்வுக்கும் பெரிய தடைக் கல்லாக இருக்கின்றது.
தமிழர்கள் தமிழ்மொழியைத் தங்கள் வாழ்வியல் மொழியாக ஏற்காவிட்டால் புலம்பெயர்
நாடுகளில் தமிழ்மொழி கால வெள்ளத்தில் அழிந்து விடும். இதற்குக் கடந்தகால வரலாறு
சான்று பகருகிறது.
எனவே தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழன் வாழ்வுக்கும் பின்வரும் அறிவுறுத்தல்களை
தமிழ்க் கிழமையில் மட்டுமல்லாமல், பின்னரும் பொன்னே போல் போற்றிக்
கடைப்பிடிக்குமாறு விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.
(1) எப்பொழுதும் தமிழ் மொழியில் உங்கள் குழந்தைகளோடு;
பேசுங்கள்.
(2) தமிழ் மொழியை வீட்டுமொழியாகப் பயன் படுத்துங்கள்.
(3) உங்கள் உறவுமுறைகளை டடி மமி, அங்கிள் ஆன்ரி என்று ஆங்கிலத்தில் சொல்லாது
தமிழில் அப்பா அம்மா, மாமா மாமி என்று சொல்லுங்கள். அவ்வாறே பெற்றோரின்
பெற்றோரைப் பாட்டன் பாட்டி என்று அழையுங்கள்.
(4) உங்கள் சமயம் எதுவானாலும் உங்கள் குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர்களைச்
சூட்டுங்கள். அதன் மூலம் அவர்களைத் தமிழர் என அடையாளம் காட்டுங்கள். ஏற்கனவே
வடமொழியில் வைத்த பெயர்களைத் தமிழில் மாற்றப் பெற்றோர்கள் முயற்சி எடுத்தல்
வேண்டும்.
(5) தமிழர்கள் நடத்தும் அங்காடிகள். நிறுவனங்கள் ஆகியவற்றின் பெயர்கள்
முடிந்தளவு தூய தமிழில் இருக்க வேண்டும். பெயர்ப்பலகைகளில் ஆங்கிலத்துக்குச்
சமமான இடம் தமிழுக்கும் கொடுத்தல் வேண்டும்.
(6) திருக்கோயில் வழிபாடு தமிழில் இருக்க வேண்டும். நீங்கள் வணங்கும் கடவுளரைத்
தமிழில் வழிபடுங்கள்.
(7) உங்கள் வீட்டுத் திருமணங்களைச் செத்த வடமொழியில் செய்வதைக் கைவிட்டு
செந்தமிழில் தமிழர் மரபுப்படி செய்யுங்கள்.
(8) மொழி, கலை, இலக்கியம் தொடர்பான விழாக்களுக்கு முடிந்த மட்டும் தமிழ்த்
தேசிய உடை அணிந்து செல்லுங்கள்.
(9) உலகப் பொதுமறையான திருக்குறளை உங்களது தமிழ்ப் பண்பாட்டுக் கையேடாகவும்
தமிழின எதிர்கால வழிகாட்டியாகவும் கொள்ளுங்கள்.
(10) வீட்டுக்கொரு தமிழ் நூலகம் தொடங்குங்கள். திருமணம் பிறந்த நாள்
விழாக்களுக்கு தமிழ் நூல்களை வாங்கிப் பரிசாகக் கொடுங்கள்.
(11) உங்கள் நண்பர்களைச் சந்திக்கும் பொழுதும் அவர்களோடு பேசும் பொழுதும்
�ஹலோ�விற்கு மாற்றாக வணக்கம் என்று தமிழில் சொல்லுங்கள். �தாங்ஸ்� எனபதற்கு
மாற்றாக நன்றி என்று சொல்லுங்கள்.
(12) இலக்கணமும் இலக்கியமும் படியாதான் ஏடெழுதல் கேடுதரும் என்பதால்
ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் முடிந்த மட்டும் வடமொழி, ஆங்கிலம் கலக்காத
உரைநடையில் எழுதல் வேண்டும். செவ்வியைப் பேட்டி என்றும் சிறப்பை விசேடம்
என்றும் செலவை விஜயம் என்றும் குடிமகனைப் பிரஜை என்றும் எழுதுவதையும்
சொல்வதையும் கைவிட்டுத் தமிழில் எழுதுங்கள். தமிழில் சொல்லுங்கள்.
(13) உங்கள் பிள்ளைகளுக்கு வள்ளுவரின் திருக்குறள், அவ்வையாரின் ஆத்தி சூடி,
பாரதியாரின் புதிய ஆத்தி சூடி போன்ற அற நூல்களைச் சொல்லிக் கொடுங்கள்.
(14) இசை, நடனம் போன்ற நுண் கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலமொழி மூலம்
அவற்றைக் கற்பிப்பதைக் கைவிட்டுத் தமிழில் கற்பியுங்கள்.
(15) தமிழ் மொழிக் கிழமையை ஏனைய புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும்
கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
|