Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil National ForumSelected Writings - V.Thangaveluவேதாளம் மீண்டும் முருக்கை மரத்தில்

Selected Writings V.Thangavelu, Canada

வேதாளம் மீண்டும் முருக்கை மரத்தில்

22 February 2009

" இந்தியாவின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது. சந்திமுனையில் அல்ல. இந்திய நாடாளுமன்றத்தில். வாய்மொழியாக அல்ல எழுத்தில்... வரதராசப்பெருமாள் ஏறி விழுந்த குதிரையில்தான் இப்போது பிரணாப் முகர்ஜி தமிழ்மக்களை ஏறிவிழச் சொல்கிறார். தமிழீழ மக்களது அரசியல் தலைவிதியை எழுத வேண்டியவர்கள் எமது மக்களே. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை..."


இந்தியாவின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது. சந்திமுனையில் அல்ல. இந்திய நாடாளுமன்றத்தில். வாய்மொழியாக அல்ல எழுத்தில்.

கடந்த பெப்ரவரி 18 ஆம் நாள் கீழ்ச்சபையில் (லோக்சபாவில்) இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை (�The Situation in Sri Lanka") இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வாசித்தார். அப்பொது அவர் அடுக்கடுக்காக வி.புலிகள் மீது பல குற்றச்சாட்டுக்களை வீசினார்.

�இலங்கைச் சிக்கலுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு தாங்கள் பிடித்து வைத்துள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும்."

இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இலங்கையில் சண்டை ஓய்ந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரப்பகிர்வு அமல்படுத்தப்படவும் அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா உதவும்.�

இவற்றோடு அவர் நிறுத்தவில்லை பழைய குருடி கதவைத் திறவடி என்ற பாணியில் �போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது"  என்று பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இதையடுத்து கோபமடைந்த பாமக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இருமுறை கீழவை ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை அரசியல் சட்டத்தின் 13 ஆவது சட்டத் திருத்தம் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும். அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வு ஏற்படும்.

வடக்கு மாகாணத்தில் அமைதி திரும்ப அரசியல் வாய்ப்பு இருப்பதாகவே இந்தியா கருதுகிறது. 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் இதற்கு முக்கியமானது. வடக்கு மாகாணத்தின் மறு சீரமைப்புக்கும் மறு வாழ்வுக்கும் இந்தியா உதவத் தயாராகவே உள்ளது.

இலங்கையில் அமைதி நிலவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் தொடர்ந்து இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இந்தியா மத்தியஸ்தம் செய்யவே செய்யாது. அதற்கான வாய்ப்பே இல்லை.� பிரணாப் முகர்ஜி. போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஒருவார்த்தைகூட அமைச்சர் கூறவில்லை.

வன்னிமக்கள் கொத்துக் கொத்தாக வகை தொகை இல்லாது சிங்களப் படைகள் வான்வழியாகக் குண்டு போட்டும் எறிகணைகள் வீசியும் கொல்லப்படுவது பற்றி பிரணாப் முகர்ஜி மூச்சே விடவில்லை. முன்பு கொழும்பு சென்று திரும்பி வந்து செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ்மக்களது பாதுகாப்புக்கு இராசபக்ஷ உறுதிமொழி தந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

பிரணாப் முகர்ஜியின் அறிக்கைக்கு இரண்டுநாள் முந்தி சென்னை மாங்கொல்லையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசிய பேச்சை ஒத்திருந்தது கவனிக்கத்துக்கது. அவரும் வி.புலிகள் தமிழ்த் தலைவர்களை கொன்று ஒரு சர்வாதிகார அரசை நிறுவ முயற்சித்தார்கள் எனக் குற்றம்சாட்டியிருந்தார். அவர் கொடுத்த பட்டியலில் இயற்கைச் சாவைச் தழுவி வி.புலிகளால் நாட்டுப்பற்றாளர் என மேன்மைப் படுத்தப்பட்ட மு.சிவசிதம்பரம் இருந்தார். அது மட்டுமல்ல தனது இயக்கத்தினராலேயே சுட்டுக் கொலைசெய்யப்பட்ட உமாமகேஸ்வரன் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இலங்கைத் தீவில் பெரும்பான்மை பவுத்த சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தேசியமான தமிழர்களுக்கும் இடையில் மோதல்களும் முரண்பாடுகளும் ஸ்ரீலங்கா சுதந்திரம் பெற்ற காலந்தொட்டே இருந்து வருகிறது. அதில் இந்தியா தமிழர் சார்பான கொள்கையைப் பிடித்து வருகிறது என்ற எண்ணம் தமிழ்மக்களிடையே இருந்து வந்தது. குறிப்பாக இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அந்த எண்ணம் வலுப்பெற்றது.

ஆனால் அவருக்குப் பின் பிரதமராக வந்த இராசீவ் காந்தி தன்னிச்சையாக இலங்கை - இந்திய உடன்பாட்டினை செய்து கொண்டார். �இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய மாநிலங்களுக்குரிய அதிகாரங்களுக்கு மேலான அதிகாரங்களை இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்� என்று உடன்பாட்டில் கையெழுத்துவிட்டு தில்லி திரும்பும் வழியில் சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.

ஆனால் அந்த உடன்பாட்டின் கீழ் 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் உருவாகிய வட-கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் �உட்கார எனக்கு நாற்காலி கூட இல்லை� எனச் சொல்லித் தமிழீழ சுதந்திரப் பிரகடனத்தைச் செய்தார். அதன் பின் அவர் கடந்த 19 ஆண்டுகளாக இராஜஸ்தானில் அரசியல் வனவாசம் செய்து கொண்டிருக்கிறார்.

வரதராசப்பெருமாள் ஏறி விழுந்த குதிரையில்தான் இப்போது பிரணாப் முகர்ஜி தமிழ்மக்களை ஏறிவிழச் சொல்கிறார். தமிழீழ மக்களது அரசியல் தலைவிதியை எழுத வேண்டியவர்கள் எமது மக்களே. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.

சென்ற ஆண்டு இலங்கை- இந்திய உடன்பாட்டிற்கு மாறாக கிழக்கு மாகாணத்தைப் பிரித்து அங்கு ஆயுத முனையில் ஒரு தேர்தலை நடத்தி ஒரு பொம்மை முதலமைச்சரை மகிந்த இராசபக்ஷ நாற்காலியில் உட்கார வைத்தார். அவரும் இப்போது வரதராசப்பெருமாள் மாதிரி புலம்பத் தொடங்கியுள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் பேச்சைக் கேட்ட பாமக மற்றும் மதிமுக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து பிரணாப் பேச்சு நிறைவு தரவில்லை என்று கூறி தங்கள் எதிர்ப்பைப் தெரிவித்தனர். இந்தியா தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டு முழக்கம் இட்டனர்.

அவர்களை அமருமாறு அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றால் தனியாக முன்னறிவித்தல் தருமாறு கூறினார். ஆனால் அதை ஏற்காமல் தொடர்ந்து பாமக, மதிமுக கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் இட்டதால் கீழவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது மீண்டும் பாமக மற்றும் மதிமுக கட்சி உறுப்பினர்கள் செய்தித்தாள்களில் வந்திருந்த செய்திகளை காட்டி இலங்கையில் இனப்படுகொலை நடந்து வருகிறது. அதை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் மீண்டும் எதிர்த்து முழக்கம் இட்டார்கள். இதனால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. திமுக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பில் கலந்து கொள்ளாது பேசா மடந்தையாக இருந்து விட்டார்கள்

தில்லியில் முகாமிட்டுள்ள பாமக நிறுவனர் இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த இந்திய காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தார். செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 17, 2009) சோனியா காந்தியைச் சந்தித்துவிட்டு அந்தச் சந்திப்பு திருப்தி தருவதாகச் சொன்னர். ஆனால் அடுத்த நாள் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து விட்டு அவரது பதில் திருப்தி தரவில்லை என தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

இது காலவரை இந்தியா இனச்சிக்கலுக்கு இராணுவத் தீர்வு தீர்வாகாது. இருதரப்பும் பேசி ஒரு நியாயமான அரசியல் தீர்வை எட்ட வேண்டும் என்றுதான் இந்தியா சொல்லி வந்தது.

இப்போது வி.புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13 ஆவது சட்டத் திருத்தம் முழு அளவில் நடைமுறைப்;படுத்த வேண்டும். அதன் மூலம் அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். அதன் மூலம் இனச் சிக்கலுக்கு முழுமையான நிரந்தரமான தீர்வு ஏற்படும் என இந்தியா சொல்கிறது. இப்போதுதான் அரிதாரம் பூசாத இந்திய அரசின் உண்மை முகம் தெரிகிறது.

சிங்கள சமூகத்துக்கு என்ன அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பது தெரியவில்லை. முழு ஆட்சி அதிகாரமே அவர்களது பிடியில் உள்ளது. ஆட்சித்தலைவர், பிரதமர், பிரதம நீதியாளர், மாகாண ஆளுநர்கள், படைத்தளபதிகள் எல்லாமே சிங்களவர்கள்.

இராசீவ் காந்திதான் இலங்கை � இந்திய உடன்பாட்டின் சூத்திரதாரி. அதன் கீழ் கொண்டுவரப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்தை நடைமுறைப் படுத்துவது காங்கிரசின் கடமை என சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம் போன்றோர் நினைக்கிறார்கள். அதுதான் பல சகாப்தங்கள் பேசாப் பொருளாக இருந்த 13 ஆவது சட்ட திருத்தம் இப்போது பேசப்படும் பொருளாக இந்தியா மாற்றப் பார்க்கிறது.

இன்னொன்றை இங்கு கவனிக்க வேண்டும். 1987 இல் இலங்கை இந்திய உடன்பாட்டை வன்மையாக எதிர்த்த சுதந்திரக் கட்சி இப்பொழுது ஆட்சிக்கு வந்தபின் அதே 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது? மகிந்த இராசபக்ஷ பதவிக்கு வந்த காலம் தொட்டு இனச் சிக்கலுக்கு 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ்த்தான் தீர்வு என்று விடாக்கண்டனாகச் சொல்லி வந்தார். அப்படிச் சொல்வதற்கு அவருக்கு யார் முண்டு கொடுத்தார்கள் - யார் தீபதூபம் காட்டினார்கள் - என்பதற்கான விடை இப்போது கிடைத்துள்ளது.

பகற்கனவு காணும் உரிமை எல்லோருக்கும் உண்டு. குறிப்பாக இந்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு ஆலோசகர், எம்.கே. நாராயணன, வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோருக்கு உண்டு.

13 ஆவது சட்ட திருத்தச் சட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த மிதவாதத் தமிழ்த் தலைவர்களால் நிராகரிக்கப்பட்ட திருத்தமாகவும். அந்தத் திருத்தத்தின் கீழ் 1989 இல் மாகாணசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி புறக்கணித்தது. அந்தச் சட்ட திருத்தத்தை நடைமுறைப் படுத்தத்தான் இந்தியா இப்போது ஒற்றைக் காலில் நிற்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மிதவாதத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்தை இருபது ஆண்டுகள் கழித்து நடைமுறைப் படுத்த இந்தியா எத்தனிப்பது அறிவீனமாகும். அது வேதாளம் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறிய கதை போன்றது. இந்த 20 ஆண்டு காலத்தில் விடுதலைக்குத் தமிழ் மக்கள் கொடுத்த விலை - பலி கொடுத்த உயிர்கள் - சிந்திய குருதி - மிக மிக அதிகமாகும்.

பதின் மூன்றாவது சட்ட திருத்தம் பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடைய கருத்து முக்கியமானது.

"இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பரவலாக்கல் திட்டமொன்றை முன்வைக்கவேண்டுமென்ற அனைத்துலக அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் ஆட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஷ முன்வைத்திருக்கும் தீர்வுத்திட்ட யோசனையே 13 ஆவது திருத்தச் சட்டமூலம். எனினும் அனைத்துலக வலியுறுத்தலுக்கு அமைய தீர்வுத்திட்டமொன்றை உடனடியாக அவரால் முன்வைக்க இயலாது. ஏனெனில், சிறுபான்மை இனத்தவர்களின் அடிப்படைச் சிக்கலைத் தீர்க்கும் விதத்தில் அவர் செயற்படவில்லை. தேசப்பற்றுள்ள கட்சிகளாலேயே அவர் பாதுகாக்கப்பட்டு வருகிறார்.

13 ஆவது திருத்தச்சட்ட மூலத்தை நடைமுறைப் படுத்துவதற்கான காலம் கடந்துவிட்டது. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்தியாவுக்கு 13 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நன்கு தெரியும். எனினும் 13 ஆவது திருத்தச்சட்ட மூலத்தின் வரலாறு பற்றிப் பலருக்குத் தெரியாது. 1986 ஆம் ஆண்டு நட்வார் சிங் இலங்கைக்கு வந்தபோது அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. அவை குறித்து நேர்மையான முறையில் பரிசீலிக்கப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி அந்த நேரம் கோரிக்கை விடுத்தது. எனினும் அதனைக் கணக்கில் கொள்ளாது அப்பொழுது ஆட்சியிலிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன முற்றிலும் மாறுபட்ட திட்டமொன்றை முன்வைத்தார். இதற்கு இந்தியாவின் ஆதரவு இருக்கவில்லை. எனினும் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. இது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் தொடக்க கட்டப் பணிகளில் பங்கெடுத்திருக்கவில்லை.

இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணங்களிலேயே 13 ஆவது திருத்தச் சட்டமூலம் அமுல்படுத்தப்படவேண்டும். அதுபற்றிக் கவனம் எடுக்காத நிலையில் இது இவ்வாறு சாத்தியப்படும்? கடந்த 18 ஆண்டுகளாக எந்தவொரு ஆட்சித்தலைவராலும் தற்போதைய ஆட்சித்தலைவர் பிரமராக இருந்தபோதும் ஏற்றுக்கொள்ளப்படாத சட்டமூலம் தற்பொழுது மாத்திரம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படப்போகிறது? வடக்கு - கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நடைமுறைப் படுத்தப்படுவது சட்டத்துக்கு முரணானது."

செக்கென்றும் சிவலிங்கம் என்ற பாகுபாடின்றி ஆளுவோர் காலை நக்கிப் பிழைக்கும் அரசியல்வாதியே 13 ஆவது திருத்த சட்டம் பற்றி ஆட்சித்தலைவர் மகிந்தாவிடம் (23.1.2008) கூறியிருப்பது கவனத்துக்குரியது. �வெட்டுக் காயப் புண்ணாகச் சிங்களவர் தமிழர் சிக்கல் இருந்த காலத்தில் 13-ஆவது திருத்தம் ஆறுதல் மருந்தாக இருந்திருக்கலாம். இப்பொழுதோ நோய்முற்றி, புற்றுநோய் போலத் தெரியும் நிலை வந்த பின் அந்த மருந்து எதற்கும் பயன்படாது" என்கிறார்.

முன்னாள் ஆட்சித்தலைவர் சந்திரிகா குமாரதுங்கா 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் இனச் சிக்கலுக்கு தீர்வு காணமுடியாது என்று சொல்லியிருக்கிறார். அதன் காரணமாகவே புதிய யாப்பின் வரைவை 1994 இல் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். அதனை அன்றைய அய்க்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவர் இரணில் விக்கிரமசிங்காவும் அந்த யாப்பின் படிகளை நாடாளுமன்றத்துக்குள்ளேயே எரித்து அதனை சாகடித்தார்கள் என்பது வேறு கதை.

கடந்த காலத்தில் இராசீவ் விட்ட வரலாற்றுத் தவறை மீண்டும் செய்ய இந்தியா எத்தனிக்கிறது.

இன்னும் இரண்டொரு மாதங்களில் இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. மத்தியில் கூட்டணி ஆட்சிதான் மீண்டும் வரப்போகிறது. தேர்தலில் சென்னை தொடக்கம் கன்னியாகுமரி வரை 2,000 கிமீ நீளம் மனிதசங்கிலிப் போராட்டம் நடத்திய தமிழக மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கு தங்கள் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டி தமிழீழ மக்களுக்கு ஆதரவான அரசை ஆட்சியில் அமர்த்த வேண்டும். அப்போது தமிழ்மக்களுக்கு ஒரு விடிவு ஏற்பட வழி பிறக்கும்.

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home