Selected
Writings
V.Thangavelu, Canada
Thalaivar Vaazhthu
பல்லாண்டு பல்லாண்டு பலநூறாண்டு வாழ்க!
26 November 2005
[see also Velupillai
Pirabakaran , Leader of Liberation Tigers of Tamil Eelam]
|
பல்லாண்டு பல்லாண்டு பலநூறாண்டு வாழ்க!
தமிழன் வீரம் பாட்டுக் கட்டும்
புலவர் நாவிலும் இலக்கிய வாதியின்
மேடைப் பேச்சிலும் பட்டி மன்றங்களிலும்
கற்பனை வல்லோர் வடித்த கதைகளிலும்
திரைப்பட வசன எதுகை மோனையிலும்
ஏட்டுச் சுரக்காய் எனக் கிடந்ததே ஒழிய
பார்த்த சாட்சி யாரும் இல்லை!
தலைக்கு நெய்தடவி வாரிப் பூச்சூடி
வேல் கைகொடுத்து செங்களம் ஆடி
வென்றுவா மகனேயென செருக்களம் அனுப்பிய
புறநானூற்றுத் தாயின் வீரத்தைப் போற்றிப்
புலவர்கள் பாடிய பரணி படித்தோம்
நன்று நன்றென ஆடி மகிழ்ந்தோம்
பெருமிதம் கொண்டோம் ஆனால் கண்டதில்லை
யானைப்படை குதிரைப்படை தேர்ப்படை நிலப்படை,
வேற்படை கடற்படையென நாநிலம் நடுங்க
படைபல நடத்திப் பகைப்புலம் வென்று
இமயம் மோதிப் புலிககொடி பொறித்து
கடாரம் வென்று கங்கை கொண்டு
சாவகம் அடித்து புட்பகம் பிடித்து
ஈழம் முழுதும் கட்டி ஆண்டு
இராசராசனும் அவன் மகன் இராசேந்திரனும்
படைத்த பொற்காலம் ஓடி மறைந்து
ஓராயிரம் ஆண்டுகள் ஆகிப் போயின!
நானூறு ஆண்டுகள் கொடியும் முடியும்
குடையும் படையும் கொற்றமும் வைத்து
ஆரியச் சக்கரவர்த்திகள் அரசு ஆண்ட
யாழ்ப்பாண இராச்சியம் உட் பகையாலும்
காட்டிக் கொடுத்த கயவர் கயமையாலும்
அந்நியப் படையிடம் வீழ்ந்து பட்டது!
பிறந்த மண்ணை மாற்றான் கொள்வதா?
உயிருள்ள வரைவும் ஒருப்பட மாட்டோம்
என வெள்ளைப் படையை எதிர்த்த
பண்டார வன்னியன் கயிலை வன்னியன்
களத்தில் வீழ்ந்து நடுகல் ஆகினர்!
ஈராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்தபின்
வாராது எழுந்தது வானில் விடிவெள்ளி
புறநானூற்றுக்குப் புத்தம் புதிய பொழிப்புரை
வீரத்துக்கு இலக்கணம் தீரத்துக்கு இலக்கியம்
போர்க் கலைக்குப் புதிய உள்ளுறை
எழுதி முடித்தான் இரண்டாம் கரிகாலன்
நிலப்படை, நீர்ப்படை, வான்படை எனப்
புலிப்படை எழுந்தது போர்க்களம் பாய்ந்தது
பகைவர் தலைகளைக் கொய்து குவித்தது
மாண்டுபோன தமிழீழ அரசு முகிழ்ந்தது
மீண்டும் புலிக்கொடி விண்ணில் உயர்ந்தது!
மாற்றுக்குறையாத வீரத்தின் விளை நிலமே
வெற்றித் திருமகளின் நிகரில்லா வீரனே
பாயும் புலிகளின் தானைத் தலைவனே
தமிழீழ அரசின் ஆட்சிக் கட்டிலில்
கரிகாலன் உன்னை நாம் அமர்த்தி
கண் குளிரப் பார்க்க வேண்டும்!
மாற்றார்கண் படாமல் இருக்க வேண்டும்!
உன் காலம் தமிழினத்தின் பொற்காலம்
இன்று உன் பிறந்த நாளில்
நோய் நொடி நீங்கி பல்லாண்டு
பல்லாண்டு பலநூறாண்டு வாழ்க என
கற்கண்டுத் தமிழில் பாமாலை பாடி
நற்பூக்கள் கொண்டு பூமாலை கட்டி
புகழ்மாலை சூட்டுகிறோம்! உன்னை வணங்கி
வாயார மனதார நெஞ்சார வாழ்த்துகிறோம்! |
|
|