"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil National Forum
> Selected Writings & Poems - Raj Swarnan
> Puthukudyirupu Massacre
ஆரிடம் சொல்லியழ?
A poem by Raj Swarnan
on the
Sri Lanka bombing of Tamil civilians in Puthukudyirupu
4 October 1999
புதுக்குடியிருப்பில் குடிமக்கள் அநியாயமாக விமானக் குண்டுவீச்சினால் கொல்லப்பட்டதனையும், அதனைத் தொடர்ந்து எழுந்த அறிக்கை அரசியலையும் மையமாய்க் கொண்டு எழுதியது.
வானம் வழமை போல்
வெளிச்சென்றிருந்தது..
வழியிடையில் வந்து போகும்
வெள்ளிப் பறவை பற்றிச்
சிந்தனையேதுமின்றி
சாரிகளாய்ச் சவாரி செய்யும்
சைக்கிள்கள்..
சந்தைக்கு வந்த
சாம்பல் வாழைக்காயைச்
சரியான மலிவுக்குத்
தீர்த்த சந்தோஷத்தில்
திருநாவுக்கரசு..
எணை மோனை எடு அந்தக்
கொட்டைப் பெட்டியை
எண்ணிப்பார் எவ்வளவு
தேறிச்செண்டு?
என்னாலை ஏலாது வெளிக்கிடுவோம்..
சாடையா முத்திட்டிது முருங்கைக்காய்..
முழுவிலை கிடையாட்டி போகுது சனியன்
வித்துத் துலைப்போம்..
வாறது வரட்டும்..
வெங்காயம் இங்காலை
விளைஞ்சு கிடக்கு.. வாங்குவாரில்லை..
சாக்காலை பீறி
முளைவிடவும் தொடங்கீட்டு..
அவிட்டுப் பரப்பேன் அம்மா..
சும்மா நிக்கிறாய்..
பாலன்றை தேத்தண்ணிக்
கடைப்பக்கம் போய்க் கொஞ்சம்
பால் விட்ட தேத்தண்ணி
கொண்டு வா செல்லம்மா
பருகீட்டுத் தொடங்குவோம்..
என்னதிவன் அலட்டிக் கொண்டே
போறானெண்டினைக்கிறிங்கள்?
விளங்குது எனக்கு..
வேறையண்டுமில்லையுங்கோ..
இவை..
பயங்கரவாதிகளின்பகிரங்கக் கூட்டத்தில்
நாட்டின் இறைமைக்கும் ஒருமைக்கும்
பெருஞ்சவாலை விடும்வண்ணம்
பேசப்பட்ட ஆகிரோஷ வசனங்கள்..
கேட்டது.. ஆம்...
ஆயிரமடிக்கு மேல்
சத்தமின்றிப் பறந்த
தேசிய வீரருக்கு
இந்தத் தேசத்துரோகிகள்
பேசிக் கொண்டது
தெளிவாய்க் கேட்டது..
கூட்டம் முழுவதும்
(அறுபது தாண்டிய)
இளைஞர் பட்டாளம்..
சதிசெய்வோர் கூட்டமென்பதில்
சந்தேகத்துக்கிடமில்லை..
விட்டு வைத்தால்
விளைவுகள் பயங்கரம்..
ஏலவே கைகளில்
ஆர்.பீ.ஜீ. தெரிகிறது..
(பாவம் அந்த
வாழைப் பொத்திக்கடை
வன்னியசிங்கம்)
பொல்லாத பூசணிக்காய்க்
குண்டுகளும் ஏராளம்
விட்டு வைத்தால்
விமான எதிர்ப்புத்
துவக்கும் தூக்குவார்கள்..
அங்கிருந்து பார்த்தே
இவர் கண்டுணர்ந்து கொண்டனர்..
அடையாளங் குறித்து
அடி சரியாக விழுந்தது..
ஐயகோ..
ஆயுதங்கள் அங்கே சிதறிப் பறந்தன..
பயங்கரவாதிகள்
செத்துச் சிதறினர்..
வெற்றிக் களிப்பில்
பறவைகள்
வட்டமிட்டு மறைந்தன..
அங்கே..
ஷெல்லுக்குப் பயந்து
இடம் பெயர்ந்த செல்லம்மா
செத்துப் போய்க் கிடந்தாள்..
கூடவே இறுக அணைத்தபடி
அவள் கைக்குழந்தை..
பாவம்..
பத்துவரியமாய்ப்
பாரிச வாதத்தால்
பக்கமொண்டு இழுத்துப் போன
பரமசிவம் மாஸரர்..
பாவி மனுசின்றை கரைச்சல் தாங்காமல்
பாவக்காய் வாங்க வந்து
பயங்கரவாதியாய்ப்
பரலோகம் போய்ச் சேர்ந்தார்..
இது நிற்க..
அங்கே..
இயம்பினார் கோனார்..
எங்கள் இலக்குகள்
எப்போதும் தப்பாது..
ஐ.சீ.ஆர்.சீக்கு
அரைலூஸ கண்டீரோ..
அடையாளங் கண்டபின் தான் நாம்
அடிக்கவே தொடங்குவோம்..
அங்கொன்றாய் இங்கொன்றாய்
இப்படியும் நடக்கலாம்
அமெரிக்கா மட்டும்
அச்சொட்டாய் அடிக்குதோ..?
அலறினார் அடுத்தவர்..
ஐயா மேதை..
ஐ.நா. வில் போய்ச் சொன்னார்
அது அக்ஸிடண்ட் எண்டு..
நுளம்பை மட்டும் நீங்கள்
அடித்துக் கொ(ல்லு)ள்ளுங்கோ
சனத்தை நாங்கள்
பாத்துக் கொள்ளு(ல்லு)வோமெண்டு
சொல்லாமல் சொல்லிவிட்டார்..
பரவாயில்லை..
கொலையை உணர்த்த
இன்னொரு கொலை..
மனிதநேயம் மறைந்தது யாரால்?
இருபத்தொரு உயிர்களின்
இறப்பை மறைத்ததால்
ஐம்பது உயிர்கள்
அநியாயமாயின..
நட்ட ஈட்டிலும் கூட
நயவஞ்சகம்..
செத்த மனிதரிலும்
சுத்த வேற்றுமை..
இந்த விறுத்தத்தில்
இன்னொருத்தர,
சமவுரிமைச் சட்டமுலத்தைச்
சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு
சங்கடப் படுகிறார்..
ஆவியன்று
அர்த்தராத்திரியில்
என்னை எழுப்பி
ரகசியமாய்ச் சொன்னது
போனகிழமை புதுக்குடியிருப்பில்
பொசுங்கிப் போனேன்..
சித்திரகுப்தன் என்னை
சென்றுவா மீண்டும்
சிறீலங்காவுக்கெண்டான்..
சிறப்புரிமைகளைச்
சீராய்ப் பெறுவதற்காய்
சிங்கள வீட்டில்
சிசுவாய்ப் பிறந்தேன்
இந்தக் கிழமை
என் அம்மாவுடன் சேர்ந்து
அறுபட்டுப் போனேன்..
சுற்றிச் சுற்றிப்
போவதும் வருவதும்
பொறுக்க முடியாமல் என்னைக்
கொஞ்ச காலம்
ஆவியுருவிலேயே
அலையப் பணித்தனன்..
அடுத்த பிறப்பு
கிழக்குத் திமோரிலோ
காசுமீரிலோ..?
என்னிடம் சொல்லி என்னபயன்?
நான் யாரிடம் போயழ?
அழுவதற்கும் ஆளில்லை..
அப்பனே அண்ணான்..
நீ அசையாமல் இரப்பா..
இப்போதைக்கெங்களுக்கு
உன் உதவிகள் தேவையில்லை..
மழைகாலம் வரட்டும்...
ஙொய்யென்று காதோரம்
ரீங்காரமிடுவார்
அனோபிலிஸ நுளம்பார்...
மலேரியா பரப்பி
மக்களைக் கொல்வதற்கு
மாபெருஞ் சதி செய்வார்...
அப்போது நீ வந்தால்
அடித்துக் கலைக்கலாம்..
அதுவரை
ஆறுதலாய் இரப்பா...
நீ அதுக்குத் தான் லாயக்கு...