"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan > KaLaiyum PayiRum
களையும் பயிரும்
A poem by Raj Swarnan
1 September 1999
காலை விடியக்
கடலின் மேலெழும்
கதிரவன்,
பாதி நாள்
பகல் பொழுதில்
உச்சந்தலைக்கு மேல் நின்று
உங்கள்
உறுதுணையென்பான்..
மீதிப் பொழுதில்
நீர் உறங்கியதாய் எண்ணி
நீலக் கடலுட் சங்கமித்திடுவான்..
நீலக் கடலிடை
மறைந்த சூரியன்
நீர் சூட்டி மகிழ
முத்தா எடுப்பான்?
உங்கள் முன்னால்
வெப்பம் உமிழ்ந்தவன்
கடலுட் சென்றதும்
கரியாய்ப் போவான்..
மறுநாள் மீண்டும்
ஏறி வருவான்..
சில புதிய கிரணங்கள்
சேர்த்ததாய்ச் செப்புவான்..
தான்
உதித்த கிழக்கையே
உருக்குலைத்திடுவான்..
உண்ட வீட்டுக்கு
இரண்டகம் செய்வான்..
ஆழக் கடலின்
நீலத் துகிலுள்
அடைக்கலமான இக்
கொள்ளைச் சூரியனின்
குள்ள முளையை
அறிவார் அறிவார்..
அறியார் அறியார்..
இக்
கள்ளக் கதிரவனின்
உள்ளம் புரியாது
அள்ளி இறைத்தான் விதையை
எங்கள் ஊரான்..
அவன் தோட்டத்தில்
எத்தனை பயிர்கள்
எகிறி முளைத்தன..
அத்தனையும் தூயதென
நம்பியன்றோ இருந்து விட்டான்?
இன்று தான்,
அவ் விதைகளுக்குள்,
களைகளும்
சேர்ந்தே இருந்ததெனக்
கண்டு பிடித்தான்..
இனியென்ன?
காலங் கடந்ததென
நீங்கள் கூறலாம்..
எனில்,
கவனம் வேண்டும்..
களைகள்,
பயிருக்கு உரித்தான
பசளையை எடுத்தால்
பரவாயில்லை..
அது
பயிரையே அழித்தால்
பார்த்திருத்தல் தகுமோ?
களை பிடுங்கினால்
கவலை கொள்வோரும் உள்ளார்..
அதுவும் ஓர் பயிர் தானே எனப்
பரிதாபங் கொள்வோர் சிலர்..
களைகளுக்குள் இது
காரியமுள்ள களையென்பார் மறு சிலர்..
பாவம்..
பக்கத்து ஊர்ப் பயிர்கள் கூட
இக் களைகளின் மறைவுக்காய்க்
கண்ணீர் உகுக்கும்..
ஆனால்,
களை களைதானே எனக்
கருதிலர் பலர்..
களையின் பாதிப்புக்
களைகளுக்கா தெரியும்?
பயிரைக் கேளுங்கள்..
உமக்குப் பாடம் நடத்தும்..
அதன் பின்..
நினைத்துப் பாருங்கள்..
ஞானம் பிறக்கும்..
உம் பயிர்கள் அழியப்
பாதிக் காரணம்
உம் பயிரினம் சேர்ந்த
களையினம் தானெனப்
பட்டெனப் புரியும்..