Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Karthigesu Sivathamby >  இலங்கை அரசியற்சூழலில் தமிழ்த்தேசியம்

Tamil National Forum
TAMIL NATIONAL FORUM

Selected Writings - Karthigesu Sivathamby

 இலங்கை அரசியற்சூழலில் தமிழ்த்தேசியம்


இலங்கை அரசியற் சூழலில் இத்தலைப்பு பல்வேறு கோணங்களில் வைத்துப் பார்க்க வேண்டியது. முதலாவதாக வரலாற்று ரீதியானது. அண்மைக்கால ஆய்வினை எடுத்துக்கொண்டால் தமிழர்களுடைய அல்லது தமிழ் அறிவு ஜீவிகளுடைய சிந்தனையைப் பொறுத்தளவில் குறிப்பாக சமூக விஞ்ஞானத் துறையில் ஆய்வு செய்பவர்களைப் பொறுத்தவரையில் இலங்கையின் தமிழ்த்தேசியம் என்பது இன்று ஏற்றுக் கொள்ளப்படுகின்ற ஒன்றாகக் கொள்ளப்பட்டு அதனுடைய வேர்களை, அவற்றினுடைய வரலாற்றை கண்டு பிடிக்கும் முயற்சிகள் படிப்படியாகத் தொடங்கிவிட்டன.

எண்பதுகளில் வந்த எழுத்துக்களிலேயே இதற்கான ஒரு தொடக்கத்தை நாம் காணலாம். தமிழுணர்வுஇ வளர்ந்த முறைமைஇ தமிழர்களின் சமூகக் கட்டமைப்பு பற்றி கைலாசபதியினதும் எனது சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. நித்தியானந்தன் இவை பற்றி எழுதியுள்ளார். பின்னர் சிவராசாவும் இது பற்றி ஆராய்ந்துள்ளார்.

தமிழ்த் தேசியம் சம்பந்தமாக இப்போது வரன்முறையாக ஆய்வுகள் தொடங்கப்பட்டுவிட்டன. அண்மையில் வெளிவந்துள்ள குணசிங்கத்தின் ஆய்வான இலங்கை தமிழ்த் தேசியத்தின் தோற்றம் பற்றி மிக நுண்ணியதாக ஆய்கின்ற ஒரு முக்கியமான நல்லாய்வு என நான் கருதுகிறேன். இவையெல்லாம் ஓரளவிற்கு தமிழ்த்தேசியத்தின் வரலாற்றை அது எவ்வாறு வளர்ந்து வந்தது என்பதைக் காட்டிக் கொண்டு வருகின்றன.

இலங்கையின் ஆட்சியில் மக்கள் பிரதிநிதித்துவ முறைமை தோன்றிய காலந்தொடக்கம் இனங்களின் அடிப்படையில் தெரியப்படும்இ நியமிக்கப்படும் பிரதிநிதித்துவமுறை காணப்பட்டது. இலங்கையில் காலனித்துவத்திற்கு எதிராகத் தொழிற்பட்ட வரலாற்றுக் காரணிகள் காரணமாகவும் இங்கு இனங்களின் அடிப்படையிலேயேஇ நமக்கு தேர்தல் ஜனநாயகம் கூட வந்தது எனலாம். அந்நேரத்தில் வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. வாக்குரிமையை எல்லோருக்குமாக்கும் போது இப்பிரச்சினை எல்லோருக்குமான-பொதுமக்களுடைய பிரச்சினையாக மாற்றும் தன்மை குறிப்பாக சிங்கள அரசியல் தலைமைகளிடையே தோற்றம் பெற்றது. அதனுடைய தாக்கத்தை 40களில் நாம் கல்லோயா போன்ற இடங்களில் காணக்கூடியதாகவிருந்தது.

ஆனால் இந்த தமிழர் பிரச்சினை. தமிழுணர்வு அரசியல் ரீதியாகத் தொழிற்பட்டு வந்தாலும் அதற்கு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு புவியியல் அடிப்படையான வரைவிலக்கணத்தை கொடுத்தது தமிழரசுக் கட்சிதான். அது வடக்கையும் கிழக்கையும் தமிழ்பேசும் மக்கள் வாழுகின்ற பிரதேசமாக எடுத்துக்கொண்டது.

தமிழ்த் தேசியம் என்பதை நாங்கள் மிக நிதானமாக பார்க்க வேண்டும். ஏனென்றால் தமிழரசுக் கட்சி பேசியது தனித்தமிழ் தேசியம் அல்ல. அது பேசியது தமிழ்பேசும் மக்களுடைய தேசியம். அந்தவகையில் புதியதும் முக்கியமானதுமான இரண்டு புதிய சொற்றொடர்களை சிறுபான்மை அரசியலில் அவர்கள் புழக்கத்திற்கு விடுகிறார்கள். ஒன்று புவியியல் அடிப்படையான வடக்கு கிழக்கு பாரம்பரிய பிரதேசம் என்பது. இரண்டாவது தமிழ்பேசும் மக்கள் என முஸ்லிம்களையும் தமிழர்களையும் இணைத்துப் பேசுவது.

துரதிஷ்டவசமாக வடக்கு கிழக்கு பாரம்பரிய பிரதேசம் வளர்ந்த அளவிற்கு, தமிழ்பேசும் மக்கள் என்ற கோட்பாடு வளரவில்லை. ஆரம்பத்தில் கிழக்கு முஸ்லிம்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழரசுக்கட்சி அரசியலில் மிகப்பெரும் ஆர்வத்தைக் காட்டினர். முக்கியமான சில அரசியல்வாதிகள் அதற்குள்ளாலேயே வந்து தேசிய அரசியலில் புகுந்து கொண்டார்கள். என்றாலும் கூட அது நின்று நிலைக்கவில்லை என்றே கூறவேண்டும். அந்தச்செல்நெறி முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்குமானால் பல விடயங்களை சாதித்திருக்கும். அது முன்னெடுத்துச் செல்லப்படாததிற்கான காரணத்தை இன்று நாங்கள் பின்னோக்கிப் பார்க்கலாம்.

ஒன்று, இலங்கையின் தேசிய உணர்ச்சி நிலைப்பாடு என்பது முதலில் இனத்துவ அடிப்படையிலேயே வளர்கிறது. உண்மையிலேயே கால அடிப்படையை பார்க்கும்போது தமிழ் உணர்வுதான் முதலில் வருகிறது. 1822-1879 நாவலருடைய காலத்தில் அது தமிழ்-சைவம் என்றே கிறிஸ்தவத்திற்கு எதிரான போராட்டம் என வளர்ந்தது. அதற்குப் பின்னர் 1870களில் சித்திலெப்பையின் முஸ்லிம் லெப்பையின் இயக்கம் வருகிறது. 1915 சிங்கள முஸ்லிம் கலவரம், 1917 இராமநாதனுக்கு எதிரான நிலைப்பாடு. இவற்றின் காரணமாக வேறு திருப்பங்களைப் பெற்று தமிழ்பேசும் மக்கள் என்ற கோட்பாடு நிச்சயமாக நின்று பிடிக்க முடியாமல் போகிறது இது முதலாவது காரணம்.

இரண்டாவது காரணம், இரண்டு தேசிய இனங்களிடையே குறிப்பாக பெரும்பான்மையினர் முதலாம் சிறுபான்மையினருக்கிடையேயான போர் நடக்கின்ற போது இரண்டாவது சிறுபான்மையினருடைய நிலை எப்போதும் ஒரு சிக்கலான நிலைதான். இரண்டாவது சிறுபான்மையினருக்கு அரசாங்கமும் சில சலுகைகளைச் செய்துகொடுக்கும். இரண்டாவது சிறுபான்மையினமும் தங்களது தனித்துவத்தை பேண முயல்வார்கள். இதுவெல்லாம் மிக நுட்பமாக நடந்த சம்பவங்கள். அக்காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு 1960, 70களில் பதியுதீன் மஹ்மூத்தின் தலைமையும் ஒன்றிருந்தது அது பற்றிய ஒரு மீள் மதிப்பீடு செய்யும்போது பதியுதியினுடைய தாக்கம் மிக முக்கியமானது என்று கருதுகிறேன்.

கூட முதலில் சிங்களத்தை ஏற்றுக்கொண்டு பின்னர் சிங்கள்ததை தொடர்ந்து கைக்கொள்ளாமல் தமிழ்மொழியைக் ஏற்றுக்கொண்டது. ஆனால் இதற்கூடாக முஸ்லிம்களின் தனித்துவம் பேணப்பட்ட தன்மை - கல்வித்துறையில் ஒரு முக்கிய பதிவை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. பாடசாலைகளை-தமிழ்-சிங்கள மொழி வழிப்பாடசாலை எனப் பிரிக்காமல் தமிழ், முஸ்லிம் சிங்களப் பாடசாலையென பிரிக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டது. இவ்வாறாக பல வகைகளில் நோக்கும்போது அது துரதிருஷ்டவசமாகவோ அல்லது இலங்கை வரலாற்றின் தர்க்கங்கள் காரணமாகவோ தமிழ் முஸ்லிம்களின் மொழிவழித்தேசியம் சரிவரவில்லை என்றே நான் நம்புகிறேன்.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில் தமிழ்த்தேசியம் அல்லது தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை என்பது 1972இல் இருந்து ஒரு வன்மையான வடிவத்தினைப் பெறுகிறது. 1972இல் புதிய ஆட்சித் திட்டம் வந்தபோது தமிழுக்கு எந்த இடமும் வழங்காமையும் 56ல் இரு:நதுவந்த பிரிவு 29 நீக்கப்பட்டதுமான பல்வேறு விடயங்கள் காரணமாகவும் சமஷ்டிக்கு மேல் வேறு கோஷங்கள் வைக்க முடியாத நிர்பந்தம் காரணமாகவும் ஒரு தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

தனிநாட்டுக் கோரிக்கையின் விளைவாகவும் அரசினுடைய நடவடிக்கைகள் காரணமாகவும் படிப்படியாக தீவிரவாதத்தன்மை குறிப்பாக பாதிக்கப்பட்ட இளைஞர்களிடையே வளர்ந்தது. இப்போக்கு 72களில் முனைப்புப் பெற்று 74 தமிழராராய்ச்சி மகாநாட்டுப் படுகொலை, 78ல் பல வடிவங்களைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட இன்னுமொரு சிக்கல் என்னவென்றால் இதன் தொடர்ச்சி இன்று வரையும் காணப்படுவதுதான். சிங்கள கட்சிகளோ, சிங்கள அரசியற் தலைமைகளோ இன்றுவரையும் இந்தத் தமிழ்த் தேசியத்தையோ, முஸ்லிம் தேசியத்தையோ ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாகும். அப்படி ஒன்று இலங்கையில் இருப்பதாகவே அவர்கள் கருதுவதில்லை. அப்படி ஒன்று இருக்க முடியாது என்கின்றனர்.

சிங்கள அரசியலை ஒழுங்கமைக்கும் சக்திகளான பெளத்த மகாசங்கமும் பத்திரிகை ஊடகங்களும் இந்த விஷயத்தில் தொடர்ந்தும் மிகவும் தெளிவாகவே இருந்து வருகின்றன. இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான ஒரு வழியாக எங்களுக்கு இருந்த ஒரே வழி மார்க்ஸிஸமே. துரதிஷ்டவசமாக மார்க்ஸிஸ கட்சிகள் இதுதொடர்பாக எடுத்த நிலைப்பாடு மார்க்ஸிஸ விரோதத் தன்மையாகவே போய்விட்டது எனலாம். முக்கிய கட்சிகளான லங்க சமாசமாஜ கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் (பிறகு சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி சில முடிவுகளை எடுத்தாலும் அதற்கான ஒரு பெரும் அரசியல் தளம் குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் இருந்ததாகச் சொல்ல முடியாது. ஒரு தொழிலாளர் தளம் இருந்தது. அதுவும் பல பிரிவுகளாகப் பிரிந்த போய்விட்டது) இந்த நிலைப்பாட்டைக் களைவதற்கு உழைக்கவில்லை.

1956இல் சிங்கள மேலாதிக்கச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதனை முதன்முதலில் எதிர்த்தவர்கள் இந்த இடதுசாரிகள்தான். ஆனால் 1961இல் இடதுசாரிகள் முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர். அந்த நிலைப்பாடு மார்க்ஸிஸ விரோதமாகவும் தமிழ் விரோத நிலைப்பாடகவுமே இருந்தது. முற்போக்கு அரசாங்கத்தை ஆதரிக்கின்றோம் எனச்சொல்லி அதன்வழி போனதன் ஊடாக இடதுசாரிக் கட்சிகள் தங்களுடைய நியாயப்பாட்டை இழந்துவிட்டார்கள்.

இந்த மார்க்ஸிசக் கட்சிகள் தங்களுடைய நியாயப்பாட்டை இழந்துவிட்டன என்பது இரண்டு நிலைகளில் நிரூபணம் செய்யப்பட்டது. ஒன்று-சிங்கள மக்களிடம் கூட ஒரு அரசியல் தளத்தை, இளம் தலைமுறையை இவர்களால் தக்கவைத்துக் கொள்ளமுடியாது போயிற்று என்பது 1971ம் ஆண்டைய ஜே.வி.பி.யின் எழுச்சி நிரூபித்தது. இரண்டாவது 1972, 73க்குப் பின் தமிழ் மக்களிடையேயும் காணப்பட்ட செல்வாக்கு வீழ்ச்சி, இதனால் மரபுவழி மார்க்ஸிஸ்டுகள் என நாங்கள் பேசப்பட்டது எனக்கு நினைவுக்கு வருகிறது.

குறிப்பாக ஆரம்பகாலத்தில் இடதுசாரிப் போக்குள்ளவர்கள் தமிழ்ப் பிரதேசங்களில் காணப்படும் சிக்கல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். ஓரிருவர் மரணத்திற்கு முகம் கொடுக்க வேண்டியும் ஏற்பட்டது. இந்த விடயத்தில் சிங்கள இடதுசாரிகள் எடுத்துக்கொண்ட நிலைப்பாடு ஒரு தெளிவான நிலைப்பாடாக இருக்கவில்லை. இதனால் தமிழ்த் தேசியத்திற்கான இலங்கை நிலைப்பட்ட ஒரு புரிந்து கொள்ளலை ஏற்படுத்துவதற்கான சக்தி ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. தமிழ்த் தேசியம் பற்றிய ஒரு புரிந்துணர்வை சில மார்க்சிஸ அறிவுஜீவிகளே கொண்டிருந்தனர்.

இந்த சூழலில்தான் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகிறது. உள்நாட்டுப் போர் ஆரம்பமாகி பேச்சுவார்த்தைகள் என்று வருகின்ற காலத்தில் 'திம்பு' கோட்பாடு வருகிறது. 'திம்பு' ஒரு மைல்கல்லாகும். தமிழர்களை ஒரு குழுமமாகப் பார்த்து அவர்களுடைய அரசியல் பிரச்சனைகளை அந்த அடிப்படையில் தீர்த்துக்கொள்வது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படக்கூடிய கட்டம் அது. ஆனால் இன்று திம்புவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் கூட மறுதலிக்கின்ற போக்குத்தான் உள்ளது. திம்பு பேச்சுவார்த்தை நடந்தது என்ற ஒரு பிரக்ஞை இல்லாமலே இப்போது நிகழ்வுகள் நடக்கின்றன.

இந்நிலையில் இலங்கைத் தமிழ்த் தேசியமும் முழு உலகறிந்த ஒரு சக்தியாயிற்று. இந்தக் கட்டத்தில் வேறு சிக்கல்களையும் நாங்கள் எடுத்துச் சொல்லவேண்டும். தமிழ்த் தேசியம் இளைஞர் இயக்கங்களைப் பொறுத்தவரையில், தன்னை முனைப்புப் படுத்திய முறைமையில் மலையக மக்களையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டது. சில தமிழ் இயக்கங்கள் இதில் முக்கிய இடம் வகித்தன. ஆனால் இன்று வரை மலையக இயக்கங்களின் குறிப்பான ஒரு சாரார், மலையகத் தமிழர்களின் தனித்துவத்தை பேணவேண்டும், அதற்காகப் போராட வேண்டுமென்று மிக அண்மையிலும் கூட வலியுறுத்தி வரும் தன்மை ஒன்று காணப்படுகிறது.

மலையக மக்களிடையே இலங்கையின் பொதுவான தமிழ்த் தேசியத்தை ஏற்றுக்கொள்வதில் ஒரு தயக்கநிலை குறிப்பாக மலையக அரசியல்வாதிகளிடையே காணப்படுவதை நாங்கள் அவதானிக்கலாம். இந்த அரசியல்வாதிகளின் மேலாதிக்கம் காரணமாக அவர்களுடைய வரலாற்றில் மிக முக்கியமாக இடம்பெற்று வந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றின் நினைவுகளையே இல்லாமல் ஆக்கும் செயற்பாடுகளை செய்துவருகின்றனர். அண்மையில் முத்துலிங்கத்தின் 'திராவிட இயக்கம்' என்ற நூல் இதுபற்றிப் பேசுகின்றது. தோட்டத் தொழிலாளர்கள் என்ற அடையாளத்திற்கு அப்பால் போய் தமிழர்கள் என்கின்ற, தமிழகத்தோடு இணைத்துப் பார்க்கின்ற அடையாளத்தை, இலங்கைத் தமிழர்களோடு இணைத்துப் பார்க்கின்ற ஒரு அடையாளத்தையும் தருவதற்கு அந்த இயக்கம் (திராவிட இயக்கம்) முயன்றது. அதற்கு மேல் செல்வதற்கு அந்த இயக்கத்திற்கு முடியாமல் போய்விட்டது. அதற்கு காரணம் அத்தலைமையின் சில போதாமைகள்.

மலையக மக்களின் அடிப்படையான பொருளாதார வாழ்:ககை தொழிற்சங்கங்களினால்தான் தீர்மானிக்கப்படுகின்றனவே தவிர, அரசியல் கட்சிகளால் அல்ல. இந்நிலைமை அவர்கள் தோட்டத் தொழிலாளர்களாக இருக்கும்வரை நீடிக்கும். ஆனபடியால் அந்நிலைமையிலிருந்து விடிவுகாண முடியாது போய்விட்டது. ஆனால் அதிலிருந்து விடுபட சில மக்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் சென்று குடியேறி வாழ்கின்றார்கள். ஆனால் அவர்கள் மிகக் குறைந்த தொகையினராக இருந்தாலும் வன்னிப் பகுதியில் அப்பகுதியிலுள்ள மக்களுடன் அவர்கள் இணைந்தே விட்டார்கள் என்று சொல்ல வேண்டும். இருந்தாலும் இப்படியொரு பிரச்சினை இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாங்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலும் கூட இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற இனரீதியான பிரிவு உணர்வு ஏற்பட்டுவிட்டது. இந்த இனரீதியான பிரிவு, உணர்வு வளர்க்கப்பட்டு வந்த நிலையில் தமிழ்த் தேசியம் என்பது எவ்வாறு நோக்கப்படுகிறது என்பது மிக முக்கியமான விசயம்.

சிங்கள மக்களிடையே மிகமிகக் குறைந்த பகுதியினர்தான், அவர்களுக்கு சிங்கள மக்கள் மத்தியல் பெரும் செல்வாக்கிருக்கின்றது என்றும் கூற முடியாது. தமிழ் மக்களுடைய தேசியத்தை அல்லது தேசியத் தன்மை உணர்வை ஃ பிரக்ஞையை ஏற்றுக்கொள்கிறார்கள்; அதனை இனம் காணத் தயாராக இருக்கின்றனர்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தமிழர்களுடைய போராட்டமானது முஸ்லிம் தமிழ் மக்களிடையே சில கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தியது நமக்குத் தெரியும். அதனால் ஏற்பட்ட பிரச்சினைகள் இன்றும் தீரவில்லை. ஆனால் ஏற்பட்ட பிரச்சினையின் தாக்கங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வந்ததன் காரணமாகவும் அந்தப் பிரச்சினையின் தாக்கங்களை உணர்ந்துகொண்டு, புரிந்து கொண்டு இனிமேல் அவ்வாறு நடக்கக்கூடாது என்ற நிலைமை தோன்றியதன் காரணமாகவும் இப்போது அந்த முரண் முனைப்பு சற்றுக் குறைந்தாகவே காணப்படுகிறது.

மட்டக்களப்பில் நான் இரண்டு வருடங்கள் வாழ்ந்த கால அனுபவத்தை வைத்துக்கொண்டு சொல்ல முடியும், தமிழர்களுடைய அபிலாஷைகளை மதிக்கின்ற ஒரு மனோபாவம் முஸ்லிம் மக்களிடையே இன்று உள்ளது. இவ்விடத்தில் ஒரு விடயத்தை நான் சொல்லுவது பொருத்தமென நினைக்கின்றேன். சிங்கள மக்களிடம் தமிழர்கள் எதற்காகப் போராடுகின்றார்களோ அதனை முஸ்லிம் மக்களுக்கு மறுக்கக்கூடாது என்பது எனது கருத்தாகும். அடுத்து தமிழ்த் தேசியத்தை இன்னொரு தளத்தில் வைத்துப் பார்க்க வேண்டும்.

19ம் நூற்றாண்டிற்குப் பிறகு 20ம் நூற்றாண்டின் 50களில் ஜெர்மனியில் ஏற்பட்ட அல்லது ஐரோப்பாவில் தேசியத்திற்கு ஏற்பட்ட வரலாறு காரணமாக, அதாவது நாசி எழுச்சி காரணமாக, தேசியம் என்பது எல்லாக் காலத்தும் பேரினவாதத்திற்கு, பாசிசத்திற்கு நம்மை இட்டுச்செல்லலாம், அதற்குள்ளும் பாசிசம் இருக்கிறது. ஹிட்லர் பாசிசம் போல் தமிழ்ப்பாசிசம் என்கின்ற ஒன்று வந்திடலாம் என்கிறதுமான சந்தேகமான பார்வையும் உள்ளது. இதனை வலியுறுத்திப் பேசும் நண்பர்களும் உள்ளனர். இந்த ஊகத்தை நாங்கள் புரிந்துகொள்ளலாம்.

இதற்கு அடிப்படையான விடயம் என்னவென்றால், தமிழ், சிங்கள, முஸ்லிம் தனித்துவம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு ஒரு பொருளாதார உண்மையாகவும் நிலைநாட்டப்பட்டுவிட்டது என்பதுதான். மார்க்ஸிஸ சிந்தனையில் ஈடுபட்டுகொண்டிருப்பவர்கள் இலங்கையில் இன அடையாளம் என்பது ஒரு பொருளாதார விடயமாகவும் பாரபட்சமாகவும் உள்ளது என்பதை மறந்து பேசக்கூடாது என்பது என் அபிப்பிராயம். அதாவது தமிழர்களாக இருப்பது ஐn வாந டயளவ யயெடலளளை ஒரு நுஉழழெஅiஉ னுநகinவைழைn ஆகவும் உள்ளது. அது சில விடயங்களைச் செய்ய விடாது. முஸ்லிம்களுக்கும் இந்தப் பாதிப்பு உள்ளது. சிங்களப் பேரினவாதத்தின் பொருளியல் அம்சங்களையும் தர்க்கங்களையும் சிந்திப்பது அவசியம்.

60களுக்குப் பிறகு படிப்படியாக உலக அரங்கில் ethnicity (இனக்குழுமம்) என்ற கோட்பாடு வளரத் தொடங்கிற்று. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் இருந்து வந்த அங்கில்லாத தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான ஒரு அரசியல் முறைமைக்குள் தொழிலாளர்கள் தொடர்ந்தும் அதிருப்தியில் வாழக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட ஒரு மிதப்பு இக்கொள்கையால் வளர்க்கப்பட்டது. ethnicity என்பது இன்று ஒரு முக்கியமான அரசியல் விடயமாக எடுத்துப் பேசப்படுகிறது. இந்த ethnicity யில் உள்ள மிக முக்கிய விசயம் என்னவென்றால் ethnicity மாறாது. உதாரணமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளானாலும் தமிழர் தமிழர்தான்-முஸ்லிம்கள் முஸ்லிம்கள்தான். கொசோவோக்கள் கொவோவாக்கள்தான். சேர்பியர் சேர்பியர்தான்.

ஒருபுறத்தில் Ethnicity / Racism   (இனக்குழுமம் ஃ இனவாதம்) பேசிக் கொண்டு இன்னொரு புறத்தில் நாட்டின் ஒருமைப்பாடு பற்றிப்பேசமுடியாது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு இனங்களின் பன்முகப்பாட்டை (சிங்கள மக்களிடையே) ஏற்றுக்கொள்ள வேண்டும். இது புரியும்வரை இலங்கைக்கு விமோசனம் இல்லை. ethnicity யினுடைய தர்க்க ரீதியான முடிவு எந்தவிதமான ஒருமைப்பாட்டுக்கும் இடம் கொடுக்ககாது.

 இலங்கை அரசியலில் மிகவும் துரதிஷ்டவசமானது என்னவென்றால் படித்தவர்கள் கூட, அல்லது படித்தவர்கள் என தங்களைக் கருதியவர்கள் கூட இலங்கையின் இனப்பிரச்சினையை பற்றி பேசுகின்ற போது இப்பிரச்சினையை ஒரு 'வகுப்புவாதப் பிரச்சினை'யாகப் பார்த்தார்களே தவிர ஒரு நாலைந்து பேரைத்தவிர மற்றவர்கள் இதனை ஒரு 'தேசியப் பிரச்சினை'யாக பார்க்கவில்லை, இல்லையென்றே சொல்லலாம். இப்பிரச்சினை தேசியப்பிரச்சினையாக பார்த்தவர்களில் குமாரி ஜெயவர்த்தனா, சால்ஸ் அபேசேகர, நியூட்டன் குணசிங்க (இவர்கள் இடதுசாரிச் சிந்தனையாளர்கள்) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இடதுசாரிக் கட்சிகள் கூட பார்க்கவில்லை.

எங்களுக்கு 'யேவழைn' என்பது யாது? யேவழையெடவைல என்பது யாது? என்கிற பிரச்சினைகள் இருந்தன, இருக்கின்றன. நாங்கள் விரும்பினாலென்ன, விரும்பாவிட்டாலும் கூட தேசியம் என்பது ஒரு அரசியல் கோட்பாடு. அதுவொரு 'தேசம்' சம்பந்தப்பட்டது. ஒரு இன மக்கள் ஒரு தேச மக்களாக மாறுகின்ற தன்மையில் இக்கோட்பாட்டிற்கு ஒரு முக்கிய இடமுண்டு. இது நல்லதா கெட்டதா என்பது வேறு விசயம். இது ஹிட்லர் செய்ததை திரும்பியும் செய்யுமா என்பது வேறுவிசயம். நான் இக்கேள்வியை இன்னொரு வகையாக கேட்கிறேன். குறிப்பாக கடந்த பலவருடமாக நான் என்னை எடுத்துக் கொண்டேன் என்றால், என்மீது என் தமிழ் அடையாளம் திணிக்கப்படுகிறது. நான் கேட்பது இதுதான். இத்திணிப்பினுடைய அரசியல் வெளிப்பாடு யாது? இதற்கொரு அரசியல் வெளிப்பாடு இருக்கக்கூடாது என யாரும் சொல்ல முடியாது எனக்கு அத்திணிப்பு நடக்கவில்லை எனவும் சொல்ல முடியாது. மற்றவர்களுக்குத்தான் நடக்கும் எனக்கு நடக்காது என்று சொன்னவர் எல்லோருக்கும் இது நடந்துள்ளது.

இத்திணிப்புக்குக் காரணமாக, இலங்கையில் தமிழர்களிடையே நிலவிய உள்ளூர் வேறுபாடுகள், சமவீனங்கள் படிப்படியாக அழிந்துபோய், இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லோரும் அரசியல் ரீதியாக ஒருமை நிலைப்பட்டவர்களாக ஆகியுள்ளனர். இது ஏறத்தாழ ஒரு நாற்பது வருடகால வரலாற்றின் பெறும்பேறாக உள்ளது.

எம்மால் தமிழர்களாக இருக்க முடிகிறதே தவிர, இலங்கையர்களாக எம்மைக் கருத்திக் கொள்வதற்கு இடமளிக்கப்படவில்லை. இந்தியாவின் முன்னுதாரணத்தை இலங்கை கைநழுவிவிட்டது. இந்தியாவில் தமிழர் என்ற அடையாளத்திற்கும் இந்தியர் என்ற அடையாளத்திற்குமிடையில் முரண்பாடு கிடையாது. இது அந்த நாட்டின் பலம்.

இலங்கை அரசியல், அரசியலாக இருக்கின்ற நியாயங்கள், காரணங்களினால்-இந்த திணிப்பினுடைய அரசியல் பரிமாணம், அரசியல் வெளிக்கொணர்கை என்ன? இங்கு தான் சொல்லுக்கான பிரச்சனை வருகிறது. நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ இந்த இடத்தில் 'தேசியம்' என்ற சொல்லைப் பாவித்தே ஆகவேண்டும். ஆனால் தேசியம் என்று பாவிக்கின்ற போது ஹிட்லர் பாவித்த மாதிரியோ, அல்லது வேறு தேசியவாதிகள் பாவித்த மாதிரியோ நாங்கள் பாவிப்பதில்லை. பாவிக்கவும் கூடாது. இங்கு தேசியம் ஒரு தவிர்க்கவியலாத அடையாளமாக கொள்ளப்படுகிறது.

ஆகாயத்தில் நின்று கொண்டோ, தந்த கோபுரங்களில் இருந்து கொண்டோ இதெல்லாம் கூடாது, நாங்கள் ஒரு உலகப் பன்முகப்பாட்டை ஏற்றுக் கொள்வோம், எங்களுக்கு அரசியல் தேசியம் தேவையில்லை என்று சொல்லலாம். ஆனால் இன்று எம்மீது ஒரு தமிழ் அடையாளம் சுமத்தப்பட்டு விட்டது. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியத்தை இந்த வரையறுக்குள் வைத்துத்தான் நான் பார்க்கிறேன். மாக்ஸிசத்தில் சொல்வார்கள். 'சமூக இருப்பு சமூகப் பிரக்ஞையைத் தீர்மானிக்கிறது'.

நன்றி : எரிமலை

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home