சிங்கள பௌத்தத்தைப் புரிந்துகொள்வது
பேச்சுவார்த்தைக்கு அவசியம்
24 October 2004
கடந்தமுறை எழுதிய கட்டுரையில் தென்னிலங்கையில் தமிழர் உரிமைக்காக
ஒரு காலத்தில் குரல்கொடுத்ததோடு மட்டுமல்லாமல் எமது சுயநிர்ணய
உரிமைக்கான ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபாடு காட்டிய பலர் (ஜனாதிபதி
சந்திரிகா உட்பட) எங்ஙனம் இன்று சிங்கள மேலாண்மையாளர்களாக மாறியுள்ளனர்
என்பதுபற்றி எனது அனுபவங்களை எழுதியிருந்தேன்.
இவர்கள் அனைவரும் ஏன் இப்படி மாறினார்கள் என்ற கேள்வியை மட்டும்
அக்கட்டுரை எழுப்பியதேயொழிய விளக்கம் எதனையும் முன்வைக்கவில்லை. அதைப்
படித்தவர்களிடமிருந்து இரு கருத்துக்கள் வந்தன. முதலாவது, நான்
குறிப்பட்ட அனைவரும் தத்தமது சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாதம் காரணமாகவே
சிங்கள மேலாண்மையாளர்களாக மாறினார்கள் என்பது. இரண்டாவது, சிங்கள
தேசியவாதத்தின் உள்ளார்ந்த தன்மை காரணமாகவே இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன
என்ற கருத்தாகும்.
தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்குவதற்கு சிங்கள தேசியம்
மற்றும் கலாசாரம் என்பவற்றின் அடிப்படைத் தன்மை இடமளிக்காது என்பதே
ஆரம்பத்திலிருந்து இந்தக் கட்டுரைத் தொடரின் உட்கிடையாகும்.
சுயநலம் காரணமாகவே தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிங்கள
மேலாண்மையாளராக மாறுகின்றனர் என நம்புகின்றவர்கள் ஒன்றை எண்ணிப்
பார்க்க வேண்டும். அதாவது இந்த அரசியல்வாதிகளுடைய சுயநலம் அவர்களை
எப்போதுமே இறுதியில் ஏன் சிங்கள மேலாண்மைக் கருத்தியலுக்குள்
தள்ளவேண்டும்? அவர்களுடைய சிங்கள அடையாளத்தின் அடிப்படைத் தன்மையே
அவர்களை இவ்வாறு செய்யத் து}ண்டுகின்றது என்பது எனது கருத்து. தமிழர்
பற்றிய சாதகமற்ற வரலாற்று பார்வைகளும் ~சிங்களமாய் இருத்தல்| என்ற
உளநிலைக்கு இன்றியமையாத அத்திவாரமாக இருக்கின்றன என்பதை நாம் நோக்க
வேண்டும்.
சிங்கள தேசியவாதத்தால் நாம் கடந்த 56 ஆண்டுகளுக்கு மேலாக பெரும்
பாதிப்புகளுக்குள்ளாகி வந்துள்ளோம். ஆகவே அதன் வரலாறுபற்றி,
உளவியல்பற்றி, கலாசாரம்பற்றி தமிழில் தொடர்ச்சியான ஆய்வுகள்
செய்யவேண்டிய கடமை, கட்டாயம் எம்முன் உள்ளது. காலத்துக்குக் காலம்
பேச்சுவார்த்தை, போச்சுவார்த்தை எனக் கத்துகிறோம். எல்லாம் பிழைத்த
பின்னர் ஏமாந்த வரலாறுகளைப்பற்றி பேசுகிறோம். சிங்கள தேசியத்தைப்
பற்றிச் சரியாக புரிந்துகொண்டால் நாம் இவ்வாறான குழப்பங்களுக்கு ஆளாகி
காலத்துக்குக் காலம் அல்லல்படுவதை ஓரளவேனும் தவிர்த்துக்கொள்ளலாம் என
நினைக்கின்றேன்.
சிங்கள தேசியத்தின் பிரிக்கமுடியாத அம்சம் பௌத்த மதமாகும். சிங்கள
அடையாளத்தின் வடிவம், வரலாறு, சமூக உளவியல் என அனைத்துமே
ஏதோவொருவகையில் இலங்கையின் தேரவாத பௌத்தத்தோடு பின்னிப் பிணைந்தவையாகவே
காணப்படுகின்றன. இதுபோலவே பௌத்த குருமாரும் அவர்களுடைய பீடங்களும்
இல்லாத ஒரு சிங்கள சமூகத்தை நாம் கற்பனைசெய்வது கடினம். ஏனெனில் சிங்கள
அடையாளமும் உணர்வும் இலங்கையின் பௌத்த மத பாரம்பரியங்களில் வேரூன்றி
இருப்பதற்கு பௌத்த பீடங்கள் சிங்கள சமூகத்தில் இன்றியமையாதனவாகும்.
முதலில் எழுதப்பட்ட தீபவம்சம், அதையொட்டிப் பின்வந்த மஹாவம்சம்,
சூளவம்சம், ராஜவாளிய என சிங்கள அடையாளத்தின் ஊற்றுமூலங்களாக உள்ள
அனைத்தும் பௌத்த பிக்குகளால் இலங்கைத் தீவில் தேரவாத பௌத்தத்தின்
அரசியல் மேலாண்மை கருதி உருவாக்கப்பட்டவையாகும். இவையின்றி சிங்கள
தேசியமில்லை. ஏன்? சிங்களம் என்ற இனப்பெயரின் தோற்றுவாயான விஜயன் கதையே
இல்லை. சிங்கள கிறிஸ்தவர்கள் கூட தங்களுடைய இன அடையாளத்தின்
அடித்தளமாக மேற்படி பௌத்த அரசியல் மேலாண்மையை நிறுவும் நு}ல்களின்
கருத்தியலையே கொள்கின்றனர். எனவேதான் சிங்கள தேசியத்தையும் இலங்கையின்
தேரவாத பௌத்த பீடங்களின் அரசியல் மேலாண்மைக் கலாசாரத்தையும் பிரித்துப்
பார்த்திட முடியாது என நான் கருதுகிறேன்.
மதத்தைத் தூக்கி ஒருபக்கம் போட்டாலும் தமிழ் அடையாளம் மாறுபடாது.
மதமே இல்லாத தமிழ்த்தேசியம் சாத்தியமானது. "கடவுள் இல்லை. கடவுள்
இல்லவே இல்லை. கடவுளை உருவாக்கியவன் ஒரு முட்டாள். கடவுளை வணங்குபவன்
ஒரு காட்டுமிராண்டி " என தன் இறுதிநாள்வரை அயராது கூறிவந்த பெரியாரை
நாம் இன்றுவரை தமிழ்த் தேசியத்தின் தந்தையாக போற்றுகின்றோம்.
மறுபுறம் பேராசிரியர் சிவத்தம்பி அடிக்கடி கூறுவதுபோல உலகின்
பெருமதங்கள் அனைத்தும் (கிறிஸ்தவம், இந்துமதம், இஸ்லாம், பௌத்தம்,
சமணம்) தமிழில் தம்மை சிறப்புற வெளிப்படுத்தியுள்ளன. இதுமட்டுமன்றி மத
நம்பிக்கையை அறவே மறுத்த ஆசீவகமும் உலோகாயதமும் தமிழில் தமது
கோட்பாடுகளை பரப்பியுள்ளன. மதமில்லாமலோ அல்லது அனைத்து மதங்களுடாகவோ
தமிழ்தேசியமென்பது சாத்தியமாகும். ஆனால் பௌத்தமின்றி சிங்கள
தேசியத்தைப்பற்றி நாம் பேசமுடியாது. அதுவே அதன் பிரிக்கணிடியாத
அடித்தளமாகும்.
இலங்கை பௌத்தத்தின் முக்கிய அம்சங்களாக இரண்டு விடயங்கள் வரலாற்றில்
தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. ஒன்று, பௌத்த தர்மத்தைக் காப்பாற்றிப்
பேணுவதற்கான விசேட இடமாக இலங்கைத் தீவு புத்தபகவானால்
ஆசிர்வதிக்கப்பட்டது என்ற நம்பிக்கை. இரண்டு, பௌத்த அரசியல்
மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும்
அச்சுறுத்தல் என்ற எண்ணம்.
ஆரம்பத்தில் எழுதப்பட்ட தீபவம்சத்திலிருந்து பிற்காலத்தில் எழுதப்பட்ட
ராஜவாளியவரை இவ்விரு கருத்துகளுமே ஊடுபாவாக காணப்படுகின்றன.
இக்கருத்துக்களின் மேலாதிக்கம் காரணமாக இலங்கையில் பௌத்தத்தை
வளர்ப்பதில் தமிழர்களின் பங்கோ அம்மதத்தை பர்மா தொடக்கம் சீனாவரை
தமிழர்கள் பரப்பிய கதையோ எடுபடாமல் போயிற்று. புத்தர் வானில்
பறந்துவந்து இலங்கைத் தீவின் நான்கு திசைகளை ஆசிர்வதித்தார் என்றும்,
இதன் காரணமாக இந்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சிங்கள, பௌத்த
மக்களுக்கே உரித்துடையவை என்ற நம்பிக்கை சிங்கள அடையாளத்தின் அடிநாதமாக
அன்றிலிருந்து இன்றுவரை இருந்துவருகிறது.
கடந்த 56 வருடங்களாக இலங்கை ஒரு சிங்கள பௌத்த ஒற்றையாட்சி நாடு என்ற
கருத்தும் தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு என்பனவும் இன
முரண்பாட்டிற்கு ஒரு நியாயமான தீர்வை உருவாக்குவதற்கு முட்டுக்கட்டையாக
இருந்துவருகின்றன. அன்று பண்டா-செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக
குரலெழுப்பிய ஜே.ஆர். ஜயவர்தன கூறியதும் இன்று புலிகளின் இடைக்காலத்
தன்னாட்சி அதிகாரசபை வரைபை தூக்கி எறியவேண்டும் என்று கோரி பத்து
லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கக் கிளம்பியுள்ள ஜாதிக ஹெல உறுமய
கூறுவதும் ஒன்றே. எந்த மாற்றமும் இல்லை.
இலங்கை சிங்கள பௌத்த ஒற்றையாட்சிக்கு உட்பட்ட நாடு என்பது
தீபவம்சத்திலிருந்து இன்றுவரை நிலவி வரும் நம்பிக்கையாகும்.
துட்டகைமுனு தமிழரை முறியடித்து இலங்கையின் அனைத்துப் பாகங்களையும்
சிங்கள பௌத்த ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான் என்ற கதை அன்றிலிருந்து
இன்றுவரை சிங்கள தேசத்தில் கொண்டாடப்படுவதின் அடிப்படையில்தான்
இலங்கையின் ஒற்றையாட்சியை மாற்றி எமக்கொரு நியாயமான தீர்வைப்
பெற்றுக்கொள்வதில் நாம் காலம் காலமாக எதிர்கொண்டுவரும்
முட்டுக்கட்டைகளை நோக்க வேண்டும். இதில் நான் அடிக்கோடிட்டுக் காட்ட
விரும்புவது என்னவெனில் சிங்கள பௌத்த ஒற்றையாட்சி என்பதும் சிங்கள
அடையாளம் - தேசியம் என்பதும் வேறாக்கிட முடியாத ஒரு நாணயத்தின் இரு
பக்கங்கள் என்ற உண்மையாகும்.
சிங்கள ஆட்சியாளர்கள் சமஷ்டி பற்றி இடையிடையே பேசினாலும் அவர்கள்
இலங்கையின் ஒற்றையாட்சியை பல்வேறு வழிகளில் பேணவும் பலப்படுத்தவுமே
முயற்சி செய்தனர்ஃசெய்கின்றனர். இது விடயத்தில் ஜனாதிபதி சந்திரிகா,
ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஹெல உறுமய
தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் ஆகியோரிடையே எந்த வேற்றுமையும் இல்லை.
இதை உணராமல் எம்மிடையே காலத்துக்குக் காலம் தோன்றும் சில வெங்காயக்
கூட்டங்கள் ஒவ்வொரு சிங்களத் தலைவரைப் பற்றியும் எம் மக்களிடையே போலி
நம்பிக்கைகளையூட்டிடும் வேலைகளில் ஈடுபடுகின்றன.
சிங்கள தேசியத்தின் இந்த அம்சங்கள் 20 ஆம் நு}ற்றாண்டில் தோன்றிய
சிங்கள அதிகார வர்க்கங்களால் இலங்கைத் தீவின்மீது தமது பிடியை
வலுப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்ட மேலாண்மைக் கருத்தியலின்
கூறுகள் என பல அறிஞர்கள் கூறிவந்துள்ளனர். அதாவது நாம் இன்று காணும்
சிங்கள தேசியம் என்பது நவீன சிங்கள ஆளும் வர்க்கத்தால்
தயார்செய்யப்பட்டு பரப்பப்பட்ட ஒருவகை கற்பிதம் என்ற கருத்தே இந்த
அறிஞர்களிடம் காணப்பட்டது. இந்த அடிப்படையில் சிங்கள ஆளும் வர்க்கம்
முறியடிக்கப்பட்டால் சிங்கள தேசியமும் அதன் மேலாண்மைக் கருத்தியலும்
தாமாகவே இல்லாதொழிந்துவிடும் என இடதுசாரிகளும் பின்நவீனத்துவ
கல்வியாளர்களும் நம்புகின்றனர்.
தமிழரின் நியாயமான அரசியல் அவாவுதல்கள், இன்னல்கள் பற்றி சிங்கள
மக்களிடையே நாம் இடையறாது பரப்புரைகளைச் செய்தால் அவர்கள் தமது
ஆட்சியாளரின் சிங்கள பௌத்த தேசியம் என்ற கற்பித்ததிலிருந்துவிடுபட்டு
சரியான தீர்வொன்று ஏற்படுவதற்கு உறுதுணை செய்வார்கள் என்ற எண்ணம் இந்த
நம்பிக்கையிலிருந்துதான் பிறக்கிறது.
ஆனால் சிங்கள பௌத்த ஒற்றையாட்சி என்பதும் தமிழர் பற்றிய சாதகமற்ற
பார்வைகளும் சிங்கள அடையாளத்தின் இன்றியமையாத கூறுகள் என்ற நோக்கில்
நாம் சிங்கள தேசியத்தை அணுகுவோமேயானால் இரண்டு விடயங்களை ஆராயவேண்டும்.
ஒன்று சிங்கள தேசியமும் அதன் அடிப்படைகளும் நவீன சிங்கள ஆளும்
வர்க்கத்தால் தன்னுடைய நலன்களை முன்னெடுப்பதற்காக
உருவாக்கப்பட்டவையல்ல, ஆனால் அவை சிங்கள மக்களிடையேயும் அவருடைய
கலாசாரத்திலும் வேரூன்றியுள்ள விடயங்கள் என்பது. இரண்டு, அவை 20 ஆம்
நு}ற்றாண்டில் சிங்கள ஆளும் வர்க்கத்தாலும் அநகாரிக தர்மபால போன்ற அதன்
நவீன கருத்தியலாளர்களாலும் தயாரிக்கப்பட்ட ஒரு அரசியற் கருத்தியல் அல்ல
என்பது.
சிங்கள தேசியக் கருத்தியல் என்பது இருபதாம் நு}ற்றாண்டுக்கு முற்பட்ட
காலத்திலிருந்து சிங்கள பௌத்த ஒற்றையாட்சி, தமிழ்விரோதம் என்ற
அடிப்படைகளைக் கொண்ட கருத்தியலாக எவ்வாறு நிலவியது என்பதையும் அது
வெறுமனே ஆளும் வர்க்கத்திற்குரியதாக அல்லாமல் சிங்கள பொது மக்களிடையே
நிலவிய வேரூன்றி காணப்பட்டது என்பதையும் பின்வரும் உதாரணங்களில்
காணலாம்.
கடைசிக் கண்டி மன்னன் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்பது நீங்கள் அறிந்ததே.
இவனை வீழ்த்துவதற்கு எஹெலப்பொல என்ற சிங்கள அதிகாரி செய்த
சதிமுயற்சிகளுக்கு ஆதரவாக இரு நூல்கள் இயற்றப்பட்டன. ஒன்று கிரில
சந்தேசய (ஆட்காட்டியின் தூது). இக்கவிதை நூல் கித்தாலகம தேவமித்த என்ற
பௌத்த பிக்குவால் எழுதப்பட்டது. மற்றது எஹெலப்பொல வர்ணனாவ. இது வலிகால
கவிசுந்தர முதலி என்பவரால் எழுதப்பட்டது. இவையிரண்டும் தமிழரை
முறியடித்து இலங்கைத் தீவு முழுவதும் சிங்கள பௌத்த ஆட்சியை நிறுவிய
நாயகனாக எஹெலப்பொலவை போற்றுகின்றன. ஐயாயிரம் ஆண்டுகள் இலங்கைத்
தீவில் நிலைபெற்று விளங்க வேண்டிய (பௌத்த) சாசனத்தை அழித்த களவாணித்
தமிழ்க்கூட்டங்களை லங்காவிலிருந்து (எஹெலப்பொல) துரத்தியடித்தான்| என
கிரில சந்தேசய கூறுகிறது. "கண்டியின் கடைசி மன்னனை ~கெட்ட தமிழன்",
"களவாணித் தமிழன்" (தெமல சொரா), "தமிழ் அலி" போன்ற பல இனக்குரோத
சொற்பதங்களால் கிரில சந்தேசயவும் எஹெலப்பொல வர்ணனாவவும் து}ற்றுகின்றன.
தமிழர்களையும் இவை கடுமையாக தாக்குகின்றன. "பெருத்த நீற்றுப்ப10சணி
போல் உடல்பருத்த சாம்பல் ப10சிய தமிழர்கள் பன்றிகளைப்போல் மோரை
உறிஞ்சிக் குடிப்பர்| என எஹெலப்பொல வர்ணனாவ கூறுகிறது.
~கேடுகெட்ட தமிழர்களை அழிப்பதற்கு துட்ட கைமுனு படைதிரட்டியதைப் போல|
எஹெலப்பொலவும் படைதிரட்டியதாகவும் ~சிங்களவரின் நாட்டை அழித்த
குற்றத்திற்காக தமிழ் மன்னனுக்கு (எஹெலப்பொல) அடித்த அடியில் அவனுடைய
பற்களெல்லாம் வீழ்ந்தன| எனவும் கிரில சந்தேசய கூறுகிறது.
இதிலெல்லாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் மகாவம்சம்,
சூளவம்சம், ப10ஜாவளிய, து}பவம்சம், ராஜவளிய ஆகிய முக்கிய சிங்கள பௌத்த
நு}ல்களிலெல்லாம் மேற்படி இலங்கைத் தீவு பௌத்த ஒற்றையாட்சி நாடு
என்பதும் தமிழ்விரோத கருத்துக்களும் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றன
என்ற உண்மையாகும். இவ்விரண்டு விடயங்களும் பல்வேறு வரலாற்றுச்
சந்தர்ப்பங்களில் சிங்கள வெகுஜனங்களிடையே மேலோங்கியதை கிரில
சந்லதேசயவும் எஹெலப்பொல வர்ணனாவவும் காட்டுகின்றன. கண்டியின் சிங்களப்
பிரதானிகள் பிரித்தானியரோடு சேர்ந்து மலைநாட்டுக்குப் படையெடுத்த போது
~கண்டி மக்களை மூன்று தலைமுறையாக அடக்கியாண்ட தமிழர் ஆட்சியிலிருந்து
மீட்பதற்காக| அது செய்யப்பட்டதாகக் கூறினர்.
கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டபோது வெளியிடப்பட்ட பிரகடனத்தில்
~தமிழினம் சிங்கள மக்களுடைய நாட்டை ஆளுவதற்கான உரிமை இத்தால் முற்றாக
ஒழிக்கப்படுகிறது| என்ற முக்கிய சரத்து காணப்படுகிறது. (பேராசிரியர்
கே.என்.ஓ. தர்மதாச இவை பற்றி விரிவாக எழுதியுள்ளார்.)
மகாவம்சம் தொடக்கம் கிரில சந்தேசவரை காணப்படும் இலங்கை தனிச்சிங்கள
பௌத்த நாடு என்ற கருத்தும் தமிழர் விரோதிகள் என்ற எண்ணமும் சிங்கள
வெகுஜனங்களிடையே நிலவவில்லை, ஆனால் 20 ஆம் நு}ற்றாண்டில்
அச்சியந்திரத்தின் வருகையோடுதான் சிங்கள ஆளும் வர்க்கம் தன்னுடைய சுயநல
நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சிங்களப் பொதுமக்களிடையே இவ்விடயங்களை
பரப்பியது என்றும் இடதுசாரிகளும் பல்வேறு சிங்கள தமிழ் அறிஞர்களும்
கூறிவந்துள்ளனர்.
அண்மைக்காலத்தில் சாதாரண சிங்கள மக்களிடையேயும் மேற்படி
கருத்துக்கள் பரவலாகக் கொண்டு செல்லப்பட்டன எனவும் இவை சிங்கள
வெகுஜனங்களிடையே நாட்டார் கதைகள், பாடல்கள், கவிகள், ஆலய ஓவியங்கள்
போன்ற ஊடகங்களுடாக பல நு}ற்றாண்டுகளாக வேரூன்றி வந்துள்ளன எனவும் சில
அறிஞர்கள் நிறுவி எழுதி வருகின்றனர்.
இதில் முக்கியமானது பேராசிரியர் மைக்கல் ரொபர்ட்ஸ் எழுதியுள்ள
'ளுinhயடய ஊழளெஉழைரளநௌள in வாந முயனெலயn Pநசழைன 1590ள-1815' என்ற ஆய்வு
நூலாகும். இதில் இலங்கை சிங்களவருக்கே உரிய நாடு, தமிழர் விரோதிகள்
ஆகிய மகாவம்ச காலம் தொடக்கம் கூறப்பட்டுவரும் கருத்துக்கள் 1590-1815
காலப்பகுதியில் சாதாரண சிங்கள மக்களிடையே எங்கனம் பரவிக் காணப்பட்டன
என்பது விளக்கப்படுகிறது.
தேசியவாதம் பற்றி அண்மையில் நடைபெற்றுவரும் மறுபரிசீலனைகளும் இதற்கு
வலுவூட்டும் என நினைக்கிறேன். இலங்கை முழுவதையும் உள்ளடக்கும் சிங்கள
பௌத்த ஒற்றையாட்சியும் தமிழர் பற்றிய சாதகமற்ற பார்வைகளும் ஆளும்
வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என்ற வேறுபாடின்றி சிங்கள அடையாளத்திற்கு
இன்றியமையாதனவாக நீண்டகாலமாக இருந்து வந்துள்ளன என்பதையே மேற்படி
உதாரணங்களும் ஆய்வுகளும் காட்டுகின்றன.
ஸ்ரீலங்காவின் சிங்கள பௌத்த ஒற்றையாட்சியை மாற்றி எமக்கொரு நியாயமான
தீர்வை பெறுவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் எமது இன்னல்களைப் பற்றி
பிரச்சாரம் செய்வது பலனளிக்கும் என்ற கருத்தை இவற்றின்
அடிப்படையில்தான் இக்கட்டுரைத்தொடர் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (24.10.04)
|