Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings by Dharmeratnam Sivaram (Taraki) > விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை..? எனக்கேட்கும் சிங்கள தேசம்

Selected Writings by Dharmeratnam Sivaram (Taraki)

விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை..?
எனக்கேட்கும் சிங்கள தேசம்

10 October 2004, Virakesari
[see also English Version]


சிங்கள தேசத்திடம் எமது சிக்கலைப்பற்றி விளங்கப்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை என போனகிழமை நான் எழுதியதைப்பற்றி நெதர்லாந்திலிருந்து சந்திரநாதன் ஒரு கருத்தை எழுதி அனுப்பியிருக்கின்றார்.

சிங்கள மக்களை அவர்களுடைய தலைவர்களும் கருத்தியலாளர்களும் இனச்சிக்கல் விடயத்தில் ஒரு மாயைக்குள் வைத்திருக்கிறார்கள் எனவும் அதனால் நாம் சிங்கள தேசத்திலுள்ள ஒரு சிலரையாவது எமது கருத்துக்களை புரிந்து கொள்ள வைப்பதற்கு இடையறாது முயற்சிக்க வேண்டும் என எனது வீரகேசரி கட்டுரைகளை மறுபிரசுரம் செய்யும் தமிழ்நாதம் இணையத்தளத்தூடாக சந்திரநாதன் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அவரது கருத்தை நான் மறுக்கவில்லை. சிங்கள மக்களிடத்தில் எமது தரப்பு நியாயங்களை நாம் தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டுமென்பதில் இரண்டாம் பேச்சுக்கு இடமில்லை. ஆனால் அவ்வாறு செய்வதனால் எம்முடைய உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்ற மாயைக்குள் யாரும் வீழ்ந்துவிடக் கூடாது என்பதே எனது அக்கறையாகும். சிங்கள மேலாண்மையால் அரை நூற்றாண்டுக்கு மேலாக பெரும் அழிவுகளைச் சந்தித்துவரும் நாம்لل இன்றுவரை அதை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து புரிந்துகொள்வதற்கு எந்தளவு முயற்சி எடுத்திருக்கின்றோம்? 'சரிநிகர்" ஏட்டில் வெளியாகிய ஒருசில ஆய்வுகளைத் தவிர தமிழ் அறிவுலகப் பரப்பில் சிங்கள பௌத்த மேலாண்மைக் கருத்தியலையும் அதன் வரலாற்று மற்றும் சமூகப் பரிமாணங்களையும் ஆராய்வதற்கோ புரிந்துகொள்வதற்கோ எடுக்கப்பட்ட எந்த முயற்சியையும் யான் கண்டிலன். (அப்படி ஏதாவது உங்களுக்குத் தெரிந்திருந்தால் தயவு செய்து எனக்கு அறியத்தரவும்).

அண்மையில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில பேராசிரியர்கள்لل எழுத்தாளர்கள்لل கருத்தியலாளர்கள் போன்றோர் கலந்துகொண்ட இரு நாள் கருத்தரங்கொன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கு என்னை தமிழ் மக்களின் அரசியல் அவாவுதல்களைப்பற்றி விளக்குமாறு அதை ஒழுங்கு செய்தவர்கள் கேட்டனர். தமிழ் மக்களும் அவர்களுடைய ஆங்கிலம் மற்றும் சிங்களம் பேசத் தெரிந்த தலைவர்களும்لل செய்தியாளர்களும்لل அறிஞர்களும் 56 வருடங்களுக்கு மேலாக இடையறாது எமது அரசியல் கோரிக்கைகள் என்ன என்பதைப்பற்றி எல்லாவகையிலும் பேசியும் எழுதியும் வந்துள்ளார்கள்.

அதுமட்டுமன்றி இந்த அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் சிங்கள அரசுகளுக்கெதிராக 28 ஆண்டுகளாக (1948-1976) அமைதி வழியிலும் அதன் பின் 28 ஆண்டுகளாக (1976-2004) பெரும் ஆயுதக் கிளர்ச்சி மூலமாகவும் போராடி வந்துள்ளனர். அவர்களது கோரிக்கைகள் நிறை வேறாமையாலேயே சிங்கள மக்கள் மத்தியில் குண்டுகள் வெடித்தன என்பது அப்பட்டமான விடயம். எந்த மந்த புத்தியுள்ள பேர்வழியும் தன்னைச்சுற்றி ஏன் குண்டுகள் வெடிக்கின்றனلل தனது நாட்டின் பன்னாட்டு வான்தளத்தை ஏன் சிலர் தகர்த்துச் செல்கிறார்கள் என கேள்வியெழுப்புவது நிச்சயம்.

ஆனால்لل இவ்வளவுக்குப் பின்னரும் தமிழரின் அரசியல் அவாவுதல்கள்لل கோரிக்கைகள் என்ன என்று கேட்கும் போக்குத்தான் சிங்கள தேசத்தில் இன்னும் காணப்படுகின்றது. 'அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது அரசியல் கோரிக்கைகளைப் பற்றி வடக்கு கிழக்கிலும் சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பன்னாட்டு அரங்கு களிலும் வாய்கிழிய விளக்கிய பின்னரும் நீங்கள் அவை என்ன என்று கேட்பது மகா அபத்தம். ஆகவே நான் இந்த விடயம் பற்றிப் பேசமுடியாது" என அவர்களிடம் கூறிவிட்டேன்.

இதில் சுவையான விடயம் என்னவென்றால் தமிழருடைய அரசியல் கோரிக்கைகள் என்ன வென்பதுபற்றி அங்கு வந்திருந்த பெரும்பான்மையானவர்களுக்கு உண்மையிலேயே தெரிந்திருக்கவில்லை என்பதாகும். 56 வருடங்களாக இவ்வளவு நடந்தும் எமது கோரிக்கைகளை புரிந்து கொள்ளாதவர்கள் இனி எப்படிப் புரிந்து கொள்ளப் போகின்றார்கள் என எனக்குத் தெரியவில்லை.

எம்முடைய கோரிக்கைகளைப் பொறுத்த வரையில் விடிய விடிய இராமர் கதைلل விடிந்த பின்னர் இராமர் சீதைக்கு என்னமுறை என்ற பாணியில்தான் சிங்கள தேசம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

சிங்கள மக்களுக்கு எங்களுடைய அரசியல் கோரிக்கைகளை புரியவைக்க வேண்டும் என்று கூறிவருபவர்கள் ஒன்றை ஆராய வேண்டும். அதாவது 56 வருடங்களாக எமது கோரிக்கைகளை முன்வைத்து எத்தனையோ தடவைகள் பேசிய பின்னரும் போராடிய பின்னரும் சிங்கள தேசம் இன்னும் ஏன் எங்களைப் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றது என்பதை நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரை நூற்றாண்டுக்கு மேலாக புரிந்துகொள்ள மறுத்தவர்களை அல்லது புரிந்துகொள்வதில் அக்கறையில்லாமல் இருந்தவர்களை இனி நாம் எப்படி மாற்ற முடியும்?

இதில் இன்னொன்றையும் நாம் முக்கியமாக நோக்க வேண்டும். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை தமிழ் மக்களுடைய சிக்கலையும் நியாமான அரசியல் கோரிக்கைகளையும் புரிந்துகொண்ட சிங்கள அரசியலாளர்கள்لل கருத்தியலாளர்கள்கூட காலவோட்டத்தில் தலைகீழாக மாறியிருக்கின்றார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இங்கிலாந்தில் கல்விகற்றுத் திரும்பியவுடன் ஜனாதிபதி சந்திரிகாவின் தந்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா இலங்கை ஒரு சமஷ்டி ஆட்சியாக மாற்றப்பட வேண்டும்لل அதில் கண்டிلل கரையோரச் சிங்களப் பகுதிகள்لل தமிழர் தாயகம் என மூன்று மாநிலங்கள் அமையவேண்டும் எனவும் கூறிவந்ததை நீங்கள் அறிவீர்கள். அவர் பின்னர் என்ன செய்தார்?

இதேபோல இலங்கை கமியூனிஸ்ட் கட்சி 1944இல் நடைபெற்ற தன்னுடைய தேசிய மாநாட்டில் தமிழருக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. இதே கம்யூனிஸ்ட் கட்சியே 1972ஆம் ஆண்டில் இலங்கையை ஒரு சிங்கள பௌத்த நாடென சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து பிரகடனப்படுத்தியது.

'ஒரு மொழியெனில் இரு நாடுகள். இரு மொழிகளெனில் ஒருநாடு" என தனிச்சிங்களச் சட்டத்தைப் பற்றி தீர்க்கதரிசனத்தோடு கூறிய இலங்கையின் மூத்த இடதுசாரித் தலைவர்களில் ஒருவரும் சமசமாஜக் கட்சியின் தூணுமாயிருந்த கொல்வின் ஆர்.டி.சில்வா என்ன செய்தார்? 1972ஆம் ஆண்டிலே சிறிலங்காவின் சிங்கள பௌத்த ஒற்றையாட்சி அரசியல் யாப்பை முன்னின்று வடிவமைத்தவர்களுள் இவரே முதன்மையானவராயினார்.

இவையெல்லாம் நீங்கள் அறிந்த பழைய கதைகள். எமது உரிமைப் போராட்டம் ஆயுதமேந்திய காலகட்டத்தை எடுத்துக்கொள்வோம். 1970களின் பிற்பகுதியிலிருந்து தமிழருடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டு மென்ற கோரிக்கைகளை ஜே.வி.பி. வலியுறுத்தி வந்தது.

இந்த அடிப்படையில் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் எத்தனையோ தமிழ் இளைஞர்கள் அதில் இணைந்து செயலாற்றினார்கள். பின்னர் என்ன நடந்தது? 1986ஆம் ஆண்டில் ஜே.வி.பியின் தலைவர் ரோஹண விஜேவீரلل அதன் மத்திய குழுவுக்காற்றிய மிக நீண்ட உரையில் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் முறியடிக்கப்பட வேண்டிய ஓர் ஏகாதிபத்திய சதி என நிறுவி அறுதியிட்டு உரைத்தார். அந்தப் பேச்சு நூல் வடிவில் பின்னர் வெளிவந்து இன்றுவரை ஜே.வி.பியின் அரசியல் வேதமாக திகழ்கிறது.

1973ஆம் ஆண்டளவில் ஜே.வி.பி. அல்லாத சில படித்த சிங்கள இடதுசாரி இளைஞர்கள் இணைந்து 'ஸ்டாலினிஸ கல்வி வட்டம்" என்றொரு அமைப்பை உருவாக்கினார்கள். இவ்வமைப்பு தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை முன்னிலைப்படுத்தி எழுதியும் பேசியும் வந்தது. தமிழ் போராட்டக் குழுக்களோடும் இந்த அமைப்பு அந்த நேரத்தில் சில தொடர்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. (வீரகேசரி வார வெளியீட்டில் இப்போது எழுதிவரும் பெ.முத்துலிங்கம் அப்போது இந்த அமைப்போடு சம்பந்தப்பட்டிருந்தார்.)

ஸ்டாலினிஸ கல்வி வட்டத்தில் தமிழரின் சுயநிர்ணய உரிமை பற்றியும் எமது ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தைப் பற்றியும் அப்போது முன்னின்று பேசி வந்தவர் தயான் ஜயதிலக்க. அதுமட்டுமன்றிلل 1982இலே அவரும் அவரது சகாக்களும் 'விகல்ப கண்டாயம" என்ற ஆயுதப் போராட்ட அமைப்பை நிறுவினர்.

இடதுசாரிக் கோட்பாட்டின் அடிப்படையில் ஈழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த சில இயக்கங்களோடு இணைந்து தமிழரின் சுய நிர்ணய உரிமைக்காக அவர்கள் செயற்பட்டனர். கண்டியிலும் கொழும்பிலும் இவர்களை சந்தித்து அக்காலத்தில் நான் உரையாடித் திரிந்ததுண்டு. (மூன்றாம் உலக நாடுகளில் நடைபெற்றுவந்த விடுதலைப் போராட்டங்களைப் பற்றியும் ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய அடக்குமுறைகளைப் பற்றியும் தயான் ஜயதிலக அன்று முன்வைத்த கூர்மையான விளக்கங்களும் ஆய்வுகளும் ஏற்படுத்திய தாக்கத்தை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது.)

விகல்ப கண்டாயம அமைப்பு அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 1986ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது. தயான் ஜயதிலக்க தலைமறைவாகினார். அவரை சிறிலங்கா காவல்துறையினரும் படையினரும் சல்லடைபோட்டுத் தேடின 1987இல் அவர் பிடிபட இருந்த வேளையில் என்னுடன் தொடர்புகொண்டார்.

கொழும்பில் தயான் ஜயதிலக்க இருந்த மறைவிடத்திலிருந்து அவரை பாதுகாப்பான வேறு இடத்திற்கு கொண்டுசெல்ல அப்போது அவருக்குத் தெரிந்த பல சிங்கள நண்பர்கள் கூட எனக்கு உதவ மறுத்தனர். இறுதியில் நடுநிசியில் அவரை இரகசியமாக அழைத்துச் சென்று மறைந்த நடிகரும் ஜனாதிபதி சந்திரிகாவின் கணவருமான விஜயகுமாரதுங்கவிடம் பேசி அவருடைய உதவியுடன் கொழும்பிற்கு வெளியில் ஒரு மறைவிடத்தில் தங்கவைத்தோம். (இது விடயத்தில் தனது மனைவி உட்பட யாரிடமும் ஆலோசனை கேட்காது எனக்கு உடனடியாகவே உதவிய விஜய குமாரதுங்க ஒரு வித்தியாசமான மனிதர்) தயான் ஜயதிலக்க பின்னர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றார். பின்னர் பொதுமன்னிப்புப் பெற்று திரும்ப வந்து மாகாணசபையில் அமைச்சரானார்.

இந்தளவிற்கு தமிழர் விடுதலை இயக்கங்களோடு நெருங்கிப் பழகிய தயான் ஜயதிலக இன்று என்ன செய்கிறார்? தமிழருடைய போராட்டம் எப்படியெல்லாம் முறியடிக்கப்பட வேண்டும் என இடையறாது எழுதி வருகிறார். ஒரு காலத்தில் கடும் அமெரிக்க ஏகாபத்திய எதிர்ப்பாளராக இருந்த அவர் இன்று தமிழரின் படைபலத்தை இல்லாதொழிப்பதற்கு அமெரிக்காவுடன் சிறிலங்கா கூட்டுச்சேர வேண்டுமென வலியுறுத்தி கிழமைக்குக் கிழமை எழுதி வருகிறார்.

ஒரு காலத்தில் தமிழர்لل சிங்களவர் என்ற பேதத்திற்கப்பால் ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிராகவும் வர்க்க விடுதலைக்காகவும் எழுதியும் பேசியும் வந்த எனது இனிய நண்பன் தயான் ஜயதிலக்க இன்று 'நாம்" அதாவது சிங்களவர்களாகிய நாம் தமிழ் மக்களின் படைபலத்தை முறியடிக்க அமெரிக்காவின் உதவியை சிங்கள தேசம் கட்டாயம் நாட வேண்டும் என 'ஐலன்ட்" செய்தித் தாளில் எழுதுகிறார். இவருக்கு என்ன நடந்தது?

இது மட்டுமா? 1984-86 காலப்பகுதியில் தென்னிலங்கையில் எமது போராட்டத்திற்குச் சார்பான சிங்கள இயங்கங்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி ஐக்கிய இலங்கையில் பரந்துபட்ட புரட்சியொன்றை உருவாக்கும் வேலையில் நான் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஈடுபட்டிருந்தேன். அப்போது கொழும்பில் எனக்கு ஒரு முக்கிய தொடர்பாக இருந்தவர் கணிதத்துறைக் கலாநிதி நளின் டி சில்வா.

கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்த அவருடைய அலுவலகத்தில் எமது போராட்டத்திற்கு நேரடியாக உதவி வந்த அவருடைய இரு சிங்கள இடதுசாரி இளைஞர்களை சந்திக்கச் செல்வேன். அவ்வேளைகளில் கலாநிதி சில்வா என்னோடு மிக அன்பாக நடந்துகொள்வார். ஒருநாள் கூட அவர் என்னிடம் பழகப் பயந்தது கிடையாது. எனது கைத்துப்பாக்கியைக் கண்டுகூட அவர் திடுக்கிடவில்லை. இன்று அவர் என்ன செய்கிறார்? சிங்கள பௌத்த மேலாண்மை அடிப்படைக் கருத்தியலான ஜாதிக சிந்தனய என்பதின் தலைமைக் கருத்தியலாளராக அவர் இன்று திகழ்கிறார்.

அவருக்கு என்ன நடந்தது?

என்னை இப்போது கண்டாலும் அன்பாக நடந்துகொள்கிறார். ஆனால் இலங்கை சிங்கள பௌத்தத்தின் உறைவிடம் என்பதை அவர் இடையறாது வலியுறுத்தியே வருகின்றார்.

தென்னிலங்கையில் இடதுசாரிக் குழுக்களோடு மட்டும் நாம் தொடர்புபட்டுப்பயனில்லை. பரந்துபட்ட சிங்கள மக்களிடம் எமது போராட்டத்தின் நியாயப்பாடுகளைக் கொண்டு செல்வதானால் நாம் அவர்களிடையே பரந்து கிளைபரப்பியுள்ள சிறிலங்கா சுந்திரக்கட்சியிடமும் பேசவேண்டும் என நான் முன்வைத்த கருத்தை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் அப்போது அக்கட்சியின் ஒரு முக்கிய கருத்தியலாளராக இருந்த மங்கள முனசிங்க அவர்களை தொடர்புகொண்டேன். அவர் எனக்கு ஏற்கெனவே தெரிந்தவர்.

ஆனால் அவர் என்னை தனது கட்சியின் எதிர்கால தலைமை வட்டத்தைச் சேர்ந்தவர் என ஒருவரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்தான் திலக் கருணாரட்ன. அவருக்கும் எமது இயக்கத்துக்குமான உறவு மிகக் குறுகிய காலத்தில் இறுக்கமடைந்தது.

எமது போராளிகள் கொழும்பில் அவருடைய வீட்டிலும் அவருடைய தொகுதியான பண்டாரகமையிலும் தங்கலாயினர். அவருக்காக பல வேலைகளைச் செய்தனர். (எமது துப்பாக்கி ரவைகள் சில அவருடைய காரில் பிடிபட்டு அவருக்கெதிரான வழக்கு நீண்டகாலம் தொடர்ந்தது) சிறிலங்கா அரசை ஆயுதப் புரட்சியூடாக ஒரேயடியாக கவிழ்ப்பதற்கான வெளிநாட்டு உதவியொன்றைப் பெறுவதற்கு அவர் நெருக்கடியான காலகட்டத்தில் செய்த முயற்சி சிங்கள தமிழ் அரசியல் உறவு வரலாற்றில் முக்கியமானது. அவரும் அவரது குடும்பத்தினரும் என்னோடும் எனது தோழர்களோடும் எப்போதும் மறக்க முடியாத மிக அன்புடனே பழகினர்.

இப்படியான திலக் கருணாரட்னவுக்கு என்ன நடந்தது? சிஹல உறுமய என்ற சிங்கள பௌத்த கடும் போக்குக் கட்சியை அவர் ஏன் உருவாக்கினார்?

இது மட்டுமா?

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை வழங்குவதன் மூலம் மட்டுமே இலங்கையின் இனச்சிக்கலைத் தீர்க்கலாம் என ஆணித்தரமாகக் கூறிவந்தவர் ஜனாதிபதி சந்திரிகா. கொழும்பில் என்னையும் எனது சில தோழர்களையும் தன்னுடைய வீட்டில் தங்கிلل தென்னிலங்கையில் வேலை செய்வதற்கு அவரும் அவரது கணவரும் எமக்கு உதவி செய்தனர். அக்காலக்கட்டத்தில் 'தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஏற்காதவர்களிடம் பேச்சு வைத்துக்கொள்ளாதே" என அவர் என்னிடம் கூறியதுண்டு. (அவரது கணவர் நடிகர் விஜய குமாரதுங்க எமது மக்கள் மீதும் எமது போராட்டத்தின் மீதும் அன்பும் ஆதரவுமுள்ளவராக இருந்தவர். ஆனால் ஜே.வி.பி.யால் கொலைசெய்யப்பட்டு விட்டார்).

இப்படியாகவிருந்த ஜனாதிபதி சந்திரிகாவுக்கு என்ன நடந்தது? 'சமாதானத்துக்கான போர்" என்ற கொடூரத்தை தமிழ் மக்கள் மீது அவர் ஏன் ஏவி விட்டார்?

இவற்றுக்கெல்லாம் விளக்கம் அறிய வேண்டும் என்றால் நாம் சிங்கள தேசத்தின் உளவியலை மிக ஆழமாக ஆராயவேண்டும். இதனடிப்படையில்தான் சிங்கள தேசத்தை நோக்கிய எமது அணுகுமுறை அமைய வேண்டும்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home