Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings by Dharmeratnam Sivaram (Taraki) > கருணாவுக்கு ஒரு கடிதம்

Selected Writings by Dharmeratnam Sivaram (Taraki)

கருணாவுக்கு ஒரு கடிதம்

Virakesari - 14 March  2004


அன்பின் கருணாவுக்கு வணக்கம்!

அரியத்திடம் நீங்கள் கூறிய தகவல் கிடைத்தது. என்மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பிற்கு நன்றி.

நீங்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து தனித்து இயங்கப்போவதாக 'அசோசியட்டட் பிரஸ்" என்ற அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அறிவித்ததைக் கேள்வியுற்று மட்டக்களப்புக்கு விரைந்து வந்தேன். அந்தச்; செய்தி பொய்யாக இருக்கும். பிரச்;சினைகள் ஏதாவது இருந்தால் அது எமது விடுதலைப்போராட்டத்தைப் பாதிக்காத வகையில் சுமுகமாகத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையில் கொக்கட்டிச்;சோலைக்கு வந்தேன். அங்கே ஒரு பகல் பொழுதை உங்களோடு தொடர்புகொள்ளும் முயற்சியில் செலவழித்தேன். முயற்சி பயனளிக்கவில்லை.

போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா இராணுவத்தின் பல அச்;சுறுத்தல்களுக்கும் கெடுபிடிகளுக்கும் மத்தியில் நின்று செயல்பட்ட ஊடகவியலாளர் பற்றி நீங்கள் அடிக்கடி பெருமையுடன் பேசியிருக்கிறீர்க்ள். நீங்கள் போராளிகளிடம் என்னுடய கட்டுரைகளை கட்டாயம் படிக்கும்படி கூறுவதை அறிந்து நான் பலதடவை பெருமைப்பட்டிருக்கிறேன்.

எமது மாவட்டத்தின் நன்மை கருதி அதன் முன்னேற்றம் சுபீட்சம் என்பவற்றை பற்றி மட்டக்களப்பின் ஊடகவியலாளர்களோடு நீங்கள் பல்வேறு முறை உரையாடியிருக்கிறீர்கள். நாங்களும் பலமுறை உரிமையோடு உங்களை அணுகி எமது மண்ணின் அரசியல் சமூகப் பிரச்;சினைகளைப் பற்றி மனம்விட்டுப் பேசியிருக்கின்றோம். ஆனால் நீங்கள் விடுதலைப் புலிகளிலிருந்து பிரிவதாக எடுத்த பாரதூரமான முடிவைப்பற்றி எங்களிடம் ஒருவார்த்தை கூட இதுவரை பேசவில்லை. மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களின் நலன்கருதியே நீங்கள் தனித்து இயங்கமுடிவு எடுத்ததாகக் கூறிவருகின்றீர்கள். அந்த மக்களின் ஒரு இன்றியமையாத அங்கமாகவே ஊடகவியலாளரான நாம் உள்ளோம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டதாலேயே எம்மோடு நெருங்கிப் பழகினீர்கள். ஆனால் எமது மட்டு-அம்பாறை மாவட்ட மண்ணையும் அதன் மக்களையும் மிகப் பாரதூரமாகப் பாதிக்கின்ற முடிவை எடுத்தபோது நாங்கள் ஏன் உங்கள் கண்களில் படவில்லை? ஏன் அமெரிக்கச்; செய்தி நிறுவனமான 'அசோசியேட்டட் பிரஸ்"சிற்கு மட்டும் உங்களுடைய முடிவுகளை பிரத்தியேகமாக அறிவித்துக்கொண்டிருந்தீர்கள்? மட்டக்களப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டிடும் சிமாலி சேனாநாயக்க மட்டுமே உங்கள் கருத்தை வெளிக்கொணர தகுதி வாய்ந்தவராக ஏன் தெரிந்தெடுக்கப்பட்டார்?

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மண் மீது உங்களுக்குப் பற்றும் பாசமும் இருக்கிறது - அதனால் தான் தனித்து இயங்கப்போகின்றேன் என கூறும் நீங்கள் சிங்கள இராணுவத்தின் கோரப்பிடியில் எமது மக்கள் சிக்கி மரண ஓலம் எழுப்பிய காலங்களிலே எமது வேதனை கண்டு எள்ளி நகையாடிய சிங்கள பேரினவாத ஊடகவியலாளர்களை எப்படி இப்போது உங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆக்கிகொண்டிர்கள்? எமது மண்ணையும் மக்களையும் உங்களுடைய ஆணையின் கீழ் தமிழீழம் என்ற இலட்சியத்தோடு விடுதலைக்கு வித்தாகிப்போன எமது போராளிகளையும் இழிவுபடுத்தும் கொச்;சைப்படுத்தும் உங்களிடம் அவர்கள் எடுக்கின்ற ஒவ்வொரு பேட்டியையும் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? தெரியாவிட்டால் கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள ஆங்கில பத்திரிகைகளை தூக்கிபாருங்கள்.

'இன்னும் ஒரு தமிழ் எட்டப்பன் கிடைத்துவிட்டான்" என அவை கொக்கரிப்பதை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களையும் தலைவரையும் கொச்;சைபடுத்தி இழிவுபடுத்தி முன்பக்கத்தில் வரைகின்ற கேலிச்;சித்திரங்களை கண்டால் எந்தவொரு தன்மானமுள்ள மட்டக்களப்பானும் கூனிக்குறுகிப்போவான்.

கருணா ஈவிரக்கமற்ற கொலைகாரன் பிள்ளைபிடிகாரன் என்றெல்லாம் கொழும்புப் பத்திரிகைகள் மிககேவலமாக உங்களைப்பற்றி எழுதிய காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் குறிப்பாக மட்டக்களப்பு செய்தியாளர்கள் எவ்வாறெல்லாம் பொதுநன்மை கருதி உங்களுக்கு உறுதுணையாக நின்றோம் என்பதையெல்லாம் கணப்பொழுதில் மறந்து சிங்கள பேரினவாத ஊடகங்களையும் எமது மண்ணோடு எந்த சம்பந்தமும் இல்லாத வெளிநாட்டு செய்தி நிறுவனங்களையும் இப்போது நீங்கள் தலையில் வைத்துக்கொண்டாடுவதன் மர்மம் என்ன?

இனி விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து செல்வதற்கு நீங்கள் கூறும் காரணத்தைப் பார்ப்போம். மட்டு-அம்பாறை மாவட்டப் போராளிகள் வடக்கில் சென்று போராடி மடிவதை நீங்கள் விரும்பவில்லை எனவும் அவர்கள் தென் தமிழீழத்தை காப்பதற்கே கடமைப்பட்டவர்கள். ஆகவே வன்னிக்கு நீங்கள் போராளிகளை அனுப்ப மறுத்து தனித்து இயங்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ளீர்கள். 'nஐயசிக்குறு" என்ற மாபெரும் படையெடுப்பை முறியடிக்க தலைவர் பிரபாகரனின் வலதுகரமாக நின்று வன்னியிலிருந்து அனைத்து தளபதிகளுக்கும் தலைமைத் தளபதியாக செயல்பட்ட நீங்கள் இப்படிக் கூறியிருப்பது எனக்கு மகா வியப்பை தருகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போரியல் மூலோபாயம் எது? அதன் தன்மை என்ன? என்பதை அறியாத சிறுபிள்ளை அல்ல நீங்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போரியல் மூலோபாயம் என்பது நீங்கள் 10 வயதுப் பாலகனாக இருந்த காலத்தில் கிழக்குப் பிராந்தியத்தின் இராணுவ புவியியல் அம்சங்களைக் கவனமாக கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டதாகும். இது நீங்கள் பள்ளி செல்லும் பாலகனாக இருந்த காலத்தில் மட்டு-அம்பாறை மண்ணில் இருந்து விடுதலைக்கென புறப்பட்ட எமது போரட்ட முன்னோடிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைப் போரியல் மூலோபாயமாகும்.

உலக விடுதலைப்போரியல் நுணுக்கங்களைக் கவனமாகக் கற்றதன் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலையின் இராணுவ மூலோபாயம் வகுக்கப்பட்டது என்பது நீங்கள் நன்றாக அறிந்தவிடயமாகும். ஒரு தேசிய விடுதலைப்போர் ஏகாதிபத்திய தரவுடன் இயங்கும் ஓர் அடக்குமுறை அரசின் படைகளுக்கு எதிராக போராடுவதனால் அதற்கு விடுக்கப்பட்ட தக்கவைக்கப்படக்கூடிய தளப்பிரதேசம் இன்றியமையாதது. வியட்னாம் விடுதலைப்போருக்கு யுனான் மாநிலமும் கிய10பாவின் விடுதலைப்போர் கிழக்கு திமோரின் விடுதலைப்போர் ஆகியவற்றுக்கு அவற்றின் மத்திய மலைப்பிராந்தியங்களும் எரித்திரிய விடுதலைப்போருக்கு அதன் போராளிகளால் தக்கவைக்கப்பட்ட தளப்பிரதேசமும் அந்த நாடுகளின் சுதந்திர போராட்ட வெற்றிக்கு எவ்வாறு வழிவகுத்தன என்பதை உலக போரியல் வரலாறு பதிந்துவைத்துள்ளது. இவ்விடுதலை வரலாறுகளையும் அவை தந்த போரியல் பாடங்களையும் கற்றறிந்த கிழக்கு மாகாண விடுதலை போர் முன்னோடிகள் முன்வைத்த கோட்பாட்டையே அறியாதவர் போல் நீங்கள் பேசுவது எனக்கு வேதனையளிக்கின்றது.

ஓர் ஒடுக்குமுறை அரசின் - அதுவும் குறிப்பாக ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய சக்திகளின் துணையோடு செயற்படுகின்ற ஒரு அரசின் படைகளை முறியடித்து தேசிய விடுதலையை ஒரு இனம் முன்னெடுக்க வேண்டுமானால் அது எக்காலத்திலும் சிறிய கெரில்லா போர்முறையில் மட்டும் தங்கியிருக்க முடியாது. பலமான பின்னணியுடன் இயங்கும் எதிரியை முறியடிக்க அல்லது வலுவிழக்க செய்வதனால் விடுதலைப்போராட்ட அணிகளை சிறந்த பயிற்சிகளும் தொழில்நுட்பங்களும் மருத்துவ வசதிகளும் கொண்ட மரபுவழி இராணுவமாக மாற்றியமைப்பது கட்டாயமாகும். பெரிய அணிகளை பயிற்றுவிக்கக்கூடிய ஆயுதங்களை பெருமளவில் களஞ்சியப்படுத்தக்கூடிய காயப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகளையும் பேணக்கூடிய தங்குதடைகள் இன்றி களமுனைக்கு சகலவிதமான வழங்கல்களையும் செய்திடக்கூடிய தளம் இதற்கு அவசியம். அதைவிட இப்படியான ஒரு தளப்பிராந்தியம் பாதுகாப்பானதாக இருப்பது இன்னும் அவசியமாகும். இவ்வாறான ஒரு தளத்தை வெற்றிகரமாகத் தக்க வைப்பதில்லேயே விடுதலைப்போரின் வெற்றி தங்கியுள்ளது என்பது போரியல் தரம் அடிப்படை பாடம்.

கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளும் எதிரியின் எறிகணை வீச்;சு எல்லைக்கு உட்பட்டவையாகவே காணப்படுகின்றன. அதாவது கிழக்கில் எமக்குத்தளப் பிரதேசங்களாக அமையக்கூடிய கஞ்சிக்குடிச்;சாறு தரவை வாகரை சம்பூர் சேனைய10ர் பகுதி திருமலை வடக்கில் பேராரு திரியாய் காடு ஆகிய அனைத்துமே சிறிலங்கா படைகளின் எறிகணை வீச்;சு எல்லைக்கு உட்பட்டவையே. அதுமட்டுமன்றி அவை கடல்வழியாகவும் தரைவழியாகவும் சிறிலங்கா படைகளால் மிக இலகுவாக ஊடுருவக்கூடியவையாகும். இதற்கேற்றவகையில் சிறிலங்கா அரசு போரியல் தொலைநோக்குடன் பல சிங்கள குடியேற்றங்களை கிழக்கின் எல்லைப்புறங்களில் ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி கிழக்கின் தளப்பிராந்தியங்களாக கருதப்படக்கூடிய பிரதேசங்கள் காடுகளும் பற்றைக்காடுகளும் வாவிகளும் களப்புகளும் திறந்தவெளிகளும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவை கடலுக்கும் சிங்கள எல்லைக்கும் இடையில் ஆகக்கூடிய தூரம் 40 கிலோ மீற்றராகவும் ஆகக்குறைந்த தூரம் 15 கிலோ மீற்றராகவும் காணப்படுகின்றன. ஆகவே இவற்றை விடுவிக்கப்பட்ட தளப் பிராந்தியங்களாக ஒரு கெரில்லா இயக்கம் எடுத்த எடுப்பில் தக்கவைப்பது சாத்தியமற்றது என்பது தெளிவு.

ஆனால் முல்லைத்தீவு மாவட்டமானது இலங்கைத்தீவிலேயே காடுகளின் அடர்த்திகூடிய மாவட்டமாகும். அதுமட்டுமன்றி கிழக்கைப்போலல்லாது காடுகளுக்கும் கடற்கரைக்கும் தொடர்ச்;சியுள்ள ஒரு பிராந்தியமாக அது காணப்படுகின்றது. கடலிலிருந்தோ சிங்கள எல்லையிலிருந்தோ பெறப்படக்கூடிய எறிகணை வீச்;சு எல்லைக்கு அப்பாற்பட்ட பல உட்பிராந்தியங்களைக் கொண்ட இடமாகவும் அது காணப்படுகின்றது.
இவற்றையெல்லாம் ஆராய்ந்ததன் அடிப்படையிலேயே கிழக்கு வன்னிப் பிராந்தியம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தளமாக அமையவேண்டுமென ஆரம்பத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில்தான் பிரதேச வேறுபாடின்றி அனைவரும் எமது விடுதலைத் தளப்பிராந்தியத்தை பலப்படுத்த நீண்டகாலமாகச்; செயற்பட்டு வந்துள்ளோம். அந்தத் தளப்பிராந்தியம் இல்லாதிருந்தால் நீங்கள் இன்று உங்களை வளர்த்துவிட்ட தாய்வீட்டிற்கே சவால் விடுவதற்கு உங்களுக்கு பின்பலமாக இருக்கின்ற எந்த ஒரு கனரக ஆயுதமும் எமக்குக் கிடைத்திருக்க முடியாது. அந்தத் தளப்பிராந்தியம் இல்லாதிருந்தால் நீங்களொரு மரபுவழி இராணுவத் தளபதியாக பெயரெடுத்திருக்க முடியாது. அதுமட்டுமா? இன்று சிங்களப் பத்திரிகையாளர்களுக்கும் எமது இனம் பிளவுபட்டுக் கிடப்பதை வேடிக்கை பார்க்கவரும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் நீங்கள் பெருமையுடன் அழைத்துச்; சென்று காட்டுகின்றீர்களே அந்த மீனகம் இராணுவத்தளம்: அதை அமைத்திருக்க முடியுமா? தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விடுவிக்கப்பட்ட தளப்பிரந்தியம் வன்னியிலிருக்கிறது. அதன் அடுத்த கட்ட வளர்ச்;சியை எப்படியாவது தடுத்திடவேண்டும் என்ற பயங்கரத்தில் சிறிலங்கா இராணுவம் தனது படைபலத்தின் பெரும்பகுதியை விடுவிக்கப்பட்ட எமது வன்னித் தளப்பிராந்தியத்தைச்; சுற்றி குவித்ததாலேயே நீங்கள் மட்டக்களப்பில் முடிசூடா சிற்றரசனாக பயமின்றிச்; செயல்படக்கூடியதாயிற்று. மட்டக்களப்பில் படுவான்கரைப் பகுதியிலிருந்து எதிரி 44 இற்கும் மேற்பட்ட சிறு முகாம்களையும் தளங்களையும் மூடி வடக்கிற்குக் கொண்டு சென்றதால்தான் நீங்கள் அங்கு தனிக்காட்டு மன்னனாக கோலோச்சக்கூடியதாக இருக்கிறது.

மாறாக எமது மாவட்டத்தின் தளப்பகுதிகளை எதிரியுடன் போரிட்டு விடுவிக்கும் முயற்சியில் நாம் இறங்கியிருந்தால் வன்னியில் இழந்ததைவிட கூடுதலான எமது மாவட்டப் போராளிகளை நீங்கள் இழக்கவேண்டி வந்திருக்கும் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. 1995ம் ஆண்டு புதுக்குடியிருப்பு விசேட அதிரடிப்படை முகாம்மீது நீங்கள் மேற்கொண்ட தாக்குதலிலும் வவுணதீவு முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலும் இறந்த எமது மாவட்டப் போராளிகளின் கணக்கை வைத்துக்கொண்டு பார்த்தால் வன்னியில் நாம் இழந்ததை விட கூடுதலான போராளிகளை மட்டுமல்ல எமது மக்களையும் இழக்கவேண்டி வந்திருக்கும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். வன்னியும் யாழ்ப்பாணமும் பேரழிவுகளையும் பொருளாதாரத் தடைகளையும் சந்தித்த வேளையில் மட்டக்களப்பு கல்வியிலும் பல்வேறுதுறைகளிலும் ஒப்பீட்டளவில் முன்னேறியது என்பதை நாம் மறுக்கமுடியாது. மட்டக்களப்பில் 1995 இன் பின்னர் நாம் வடக்கைப்போல் பேரழிவுகளைச்; சந்திக்காமல் இருந்ததற்கு வன்னியில் உங்கள் ஆணையின் கீழ் தம் இன்னுயிரை ஈந்த அனைத்து மாவட்ட போராளிகளும் காரணமாக இருந்துள்ளனர்.

இதையெல்லாம் மறைத்து நீங்கள் போரியல் அரிவரி தெரியாத கற்றுக்குட்டியாக பிரதேசவாதம் பேசுவது ஏன்? உங்களுடைய நிலைப்பாடு மேற்படி விடயங்களை ஆராயும்போது தர்க்கரீதியாகவும் நியாயபூர்வமாகவும் எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை. இதை நான் மட்டக்களப்பு மண்ணில் நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளானாக் கூறவில்லை. அந்த மண்ணோடு பல நூற்றாண்டுகளாக பின்னிப்பிணைந்த பரம்பரையைச்; சேர்ந்தவன் என்ற வகையில் எடுத்துரைக்கிறேன். விடுதலைப்போரை மீண்டும் உரமூட்டிட வருக என உங்களிடம் வேண்டி நிற்கிறேன்.

வணக்கம்
த.சிவராம்

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home