Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > கலக்கமென்ன?

Selected Writings by Sanmugam Sabesan

கலக்கமென்ன?

6 August  2008



�தமிழீழ விடுதலைப் புலிகள் சுதந்திரத்திற்கான தமது இலட்சியத்தில் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளார்கள். சிங்கள அரசுகள் தம்முடைய சிங்கள பௌத்தப் பேரினவாதக் கொள்கையிலும், செயல்களிலும் தெளிவாகவும் திடமாகவும் உள்ளார்கள். மேற்குலகமும் உண்மையைத் தெரிந்து வைத்துக் கொண்டு, உள்ளுரத் தெளிவாகத்தான் உள்ளது.

ஆனால்,

ஆனால்,

புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் எமது நாட்டின் விடுதலைக்கான இலட்சியத்தில் ஒட்டுமொத்தமாகத் தெளிவாகவும், விழிப்பாகவும், சஞ்சலம் எதுவும் இல்லாமலும் இருக்கிறோமா என்ற மிக முக்கியமான கேள்விக்கு நாம் இதயசுத்தியுடன் பதில் அளிக்க வேண்டிய நேரம் இது! இந்தச் சுய விமர்சனத்தின் ஊடாக, எமது குறைகளைக் களைந்து, தமிழீழத் தேசியத் தலைமையின் கரங்களைப் பலப்படுத்துகின்ற பணியில் மேலும் முனைப்பாகச் செயல்படுவோம்! � �

- என்று சுமார் ஓராண்டுக்கு முன்னர் - அதாவது 17-09-2007 அன்று - எமது கட்டுரை ஒன்றினூடாகக் குறிப்பிட்டிருந்தோம்.

பின்னர் அதற்கடுத்த வாரம் - அதாவது 24-09-2007 அன்று - மேற்கூறிய விடயத்தைச் சற்று விரிவாக விபரித்துப் பல கருத்துக்களை முன்வைப்பது அவ் வேளையில் அவசியமானதாக இருக்குமென்று கருதி, அதனடிப்படையில் சில முக்கியமான தர்க்கங்களை எமது வாசகர்கள் முன் வைத்திருந்தோம்.

ஆனால் அந்தத் தர்க்கங்கள் பயனற்றதாகவோ, பலனற்றதாகவோ போய் விட்டனவோ என்ற சந்தேகம், எமக்கு இன்றைய தினம் எழுகின்றது. எமது இந்தச் சந்தேகத்திற்குப் புலம் பெயர் வாழ் தமிழ் உறவுகளின் தற்போதைய கலக்க உணர்வுதான் காரணமாக அமைகின்றது.

இன்று மகிந்த ராஜபக்சவின் சிங்கள அரசு, பல முனைகளில் போர்க் களங்களைத் திறந்து, தமிழீழப் பிரதேசத்தின் சில பகுதிகளை வன் கவர ஆரம்பித்துள்ளது. இந்தச் செய்திகளைக் கேட்கின்ற புலம் பெயர் வாழ் தமிழ் உறவுகள் கலக்கமுற்று வருவதை நாம் வெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளது. பன்னெடுங்காலமாகச் சிங்கள அரசுகளின் பேரினவாதப் போர் வெறிக்குத் தொடர்ந்தும் முகம் கொடுத்து, உயிரிழந்து, உறவிழந்து, உடமையிழந்து, உறைவிடமும் இழந்து வாழுகின்ற எமது இரத்த உறவுகளின் இன்னல் மிக்க வாழ்க்கையைக் கண்ணுற்று நாம் கலங்குவதும், கண்ணீர் விடுவதும் மிக இயல்பானதுதான்! ஆனால் நாம் எமது கடமையைச் செய்யாது கலங்கி நிற்பதுதான் மிகத் தவறானது!

ஆகையால் சுமார் ஓராண்டுக்கு முன்னர் நாம் தெரிவித்திருந்த சில கருத்துக்களை இந்த வேளையில் மீண்டும் தருவது ஒரு முக்கியான தேவையாகும் என்றே நாம் கருதுகின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியில், புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் பங்களிப்பானது மிக முக்க்pயமான ஒன்றாக விளங்கி வருகின்றது. தமிழீழத் தேசியத்தின் மீது புலம் பெயர் தமிழீழ மக்கள் கொண்டுள்ள பற்றும், உணர்வும் மகத்தானவையாகும். ஆயினும், புலம் பெயர்ந்துள்ள தமிழீழ மக்களில் பெரும்பான்மையோருக்கு, அடிப்படையில் ஒரு சஞ்சலக் குணம் உண்டு.

தமிழீழ விடுதலைப் போராட்டம் களமுனைகளில் பாரிய வெற்றிகளை அடைகின்றபோது மகிழ்வின் உச்சியில் நின்று ஆர்ப்பரிக்கின்ற புலம் பெயர் தமிழீழ மக்கள், களமுனைகளில் சில பின்னடைவுகள் ஏற்படுகிறபோது விரக்தியின் எல்லைக்கே சென்று விடுவது போல் சிந்திக்கவும், பேசவும் முற்படுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. எம்மவர்களின் இந்தச் சஞ்சலக் குணத்தை உரிமையோடு சுயவிமர்சனம் செய்து, ஆக்கபூர்வமான சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம்.

உலக வரலாற்றில் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் விரக்தி அடையாமல், சஞ்சலம் கொள்ளாமல் முழு முனைப்போடு தங்களது விடுதலையில், பற்றுதியோடு இருந்த போராட்டங்கள், தமது இலக்கை அடைந்து வெற்றி பெற்றிருப்பதை வரலாறு சுட்டிக்காட்டும். வேற்று நாடுகள் தமது தேசத்தை வன் கவர முயல்கின்றபோது, அத் தேசத்து மக்கள் உறுதியோடு எதிர்த்துப் போராடியதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.

உதாரணத்திற்கு நாம் இரஷ்ய நாட்டைக் கருத்தில் கொள்வோம். இரஷ்யாமீது மூன்று தடவைகள் பாரிய படையெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுவீடிய நாட்டு அரசன் 12வது சார்ள்ஸ், பின்னர் பிரான்ஸ் நாட்டின் நெப்போலியன், அதன் பின்னர் ஜெர்மனியின் ஹிட்லர் என்று வேற்று நாட்டவர்கள் இரஷ்ய நாட்டின்மீது பெரும் படையெடுப்புக்களை நடாத்தியுள்ளார்கள். இந்தப் பெரும் படையெடுப்புக்களை இரஷ்ய அரசும், இரஷ்ய மக்களும் கடுமையாக எதிர்த்துப் போராடி தமது நாட்டைத் தக்க வைக்கிறார்கள். இரஷ்ய நாட்டை வன் கவர முயன்ற இந்த மூன்று பேருமே முடிவில் தோற்றுப் போகின்றார்கள்.

1707ம் ஆண்டு, சுவீடப் பேரரசின் அரசனான 12வது சார்ள்ஸ் மிகப் பெரிய படைகளோடு இரஷ்ய நாட்டின்மீது படையெடுத்து முன்னேறி வந்து கொண்டிருந்தார். இரஷ்ய நாட்டின் ஒவ்வொரு நகரத்தையும் சார்ள்ஸ் அரசன் கைப்பற்றுகின்றபோது இரஷ்ய அரசும், இரஷ்ய மக்களும் பின் வாங்கிச் சென்றார்கள். அப்படி அவர்கள் பின்வாங்கிச் செல்கின்றபோது அவர்கள் தங்களுடைய சொந்த நகரங்களையே எரித்து விட்டுத்தான் பின் வாங்கினார்கள். ஏனென்றால், எதிரி அங்கே தங்கி, முறையாக நிலைகொள்ளக் கூடாது என்பதற்காக! அது மட்டுமல்லாது அந்தக் காலத்தில்- ஏன் இந்தக் காலத்திலும் - நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒரு விடயத்தை, இரஷ்யப் பேரரசன் பீற்றரும், இரஷ்ய மக்களும் செய்தார்கள். இரஷ்யாவின் தேவாலயங்களில் இருந்த பாரிய தேவாலய மணிகளையெல்லாம் இறக்கி, அவற்றை உருக்கி, அந்த இரும்பில் புதிதாகப் பீரங்கிகளைச் செய்து, தமது எதிரியை இரஷ்ய மக்கள் தாக்கினார்கள். இவ்வாறு சுவீடன் நாட்டின் படையெடுப்புக்கு எதிராகப் போராடி இரஷ்யப் போர் வீரர்களும், மக்களும் தமது நாட்டைத் தக்க வைத்துக் கொள்கின்றார்கள்.

இதேபோல்தான் பின்னர் நெப்போலியனும். ஹிட்லரும் இரஷ்யா மீது படையெடுத்தபோது இரஷ்யா மிகத் தீவிரமாகப் போராடி வெற்றிபெற்றது. இங்கே குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இந்த மூன்று போர்களின் போது, படையை விட்டு ஓடிய இரஷ்ய வீரர்களும் இருந்தார்கள். தமது சொந்த நாட்டையே கொள்ளையடித்த இரஷ்யப் பொது மக்களும் இருந்தார்கள். ஆனால் தேசப்பற்றோடு பெரும்பான்மையோர் போராடிய காரணத்தினால் இரஷ்யா மூன்று தடவைகளும் வெற்றி பெற்றது.

இங்கே அடிப்படையான விடயம் ஒன்றுண்டு. சுவீடப் பேரரசு தம் மீது படையெடுகின்றது என்பதாலோ, நெப்போலியன் தம் மீது படையெடுக்கின்றார் என்பதாலோ, ஹிட்லர் தம் மீது படையெடுக்கின்றார் என்பதாலோ இரஷ்ய மக்கள் மனமுடைந்து போய்விடவில்லை. இந்தப் படையெடுப்புக்களின் போது பல தடவைகள் பாரிய தோல்விகளை இரஷ்ய மக்கள் சந்தித்தபோதும், இரஷ்ய மக்கள் விட்டுக் கொடுக்கவில்லை. பாரிய விலை கொடுத்துப் தொடர்ந்தும் போராடி வெற்றியைப் பெறுகின்றார்கள். சரியாகச் சொல்லப் போனால், அது முழு உலகத்திற்காகப் பெற்ற வெற்றியும்கூட!

இதனுடைய மறுபக்கம் என்னவென்றால் இரஷ்யாவில் மக்கள் கோடிக்கணக்கில் இருந்தார்கள். படைவீரர்கள் ஏராளமாக இருந்தார்கள். நீண்ட ஒரு நிலப்பரப்பு இருந்தது. வெளிநாட்டவர்களுக்குப் பழக்கமில்லாத கடும்குளிர் கால சுவாத்தியம் இருந்தது. இவற்றின் காரணமாக இரஷ்யா போராடக் கூடிய வாய்ப்பும், வெல்லக் கூடிய வாய்ப்பும் இருந்தன. ஆனால் ஓப்ப்Pட்டளவில் தமிழீழம் ஒரு சிறிய தேசம். தமிழீழத்தவர் ஒரு சிறிய தேசிய இனத்தவர். குறைந்த அளவு வளங்களும், போராளிகளும் உள்ளார்கள். சுற்றிவர வலைப் பின்னல்கள் போடப்பட்டுள்ளன. தன்னையும் விடப் பெரிய தேசமான சிறிலங்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராட வேண்டிய நிலை உள்ளது. இவற்றின் ஊடாகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராடுகின்றார்கள்.

இந்த யதார்த்தத்த்pன் ஊடாக ஒரு கருத்தை முன் வைக்க விழைகின்றோம். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் �யாரோ ஒருவர்� ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார் என்று வைத்துக் கொள்வோம். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் �அவர்� சொல்கின்றார், �எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆட்டிலெறி - பீரங்கி முதலானவற்றை வைத்துப் போராட்டத்தை நடாத்துவார்கள். ஒரு கடற்படையை விடுதலைப்புலிகள் வைத்த்pருப்பார்கள். ஒரு வான் படையையும் விடுதலைப்புலிகள் உருவாக்குவார்கள் � - என்று. அன்று அப்படி �ஒருவர்� சொல்லியிருந்தால், அதைக் கேட்டுக் கொண்டவர் சொல்லியிருப்பார், � இவையெல்லாம் நம்பவே முடியாத விடயங்கள் � - என்று.

ஆனால் அப்படி நம்பவே முடியாத விடயங்களைச் சாதித்தவர்கள்தான் தமிழீழ விடுதலைப் புலிகள்! அதுதான் தமிழர்களின் சாதனை! எங்களால்தான் தமிழீழத்தை அடைய முடியும் என்கின்ற அந்த உணர்வு நிலைதான் முக்கியம்!

நாம் முன்னர் குறிப்பிட்டதுபோல், இரஷ்யாவில் எத்தனையோ சாதகமான வளங்கள் இருந்தபோதும், பெருமளவில் அணி திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்படிப்பட்ட பெரிய தேசமே அணி திரள வேண்டியிருந்தது என்றால், எமது போராட்டத்திற்காக நாங்கள் எவ்வளவு தூரம் அணி திரண்டு நிற்க வேண்டும் என்பது மறுபக்கம் அல்லவா?

இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், புலம் பெயர்ந்த தமிழர்களின் தமிழ்த் தேசியத்திற்கான நாட்டுப்பணி மிக முக்கியம் வாய்ந்ததாகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகப் புலம் பெயர் தமிழர்கள் முழுமையாக அணி திரள்வதானது ஒரு வரலாற்றுக் கடமையுமாகும்.

புலம்பெயர் தமிழீழ மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றி வந்துள்ள, ஆற்றி வருகின்ற பணி அளப்பரியது ஆகும். புலம் பெயர் தமிழீழ மக்கள் தங்களது ஒருங்கிணைப்பின் ஊடே மேற்கொண்ட செயற்பாடுகள் காரணமாகவும், தமிழீழத் தேசத்தின் போராளிகள், மாவீரர்கள் காரணமாகவும், தமிழீழத் தேசியத் தலைமையின் காரணமாகவும் தமிழ்த் தேசியம் தனது சுயத்தை இழக்காமல் எத்தனையோ சோதனைகளுக்கு முகம் கொடுத்துப் போராடி வருகின்றது.

அன்றைய சிறிலங்கா அரசு மேற்கொண்ட மிகப்பாரிய இராணுவ நடவடிக்கையான �சூரியக்கதிர்� காரணமாக, ஓர் இரவிலேயே ஐந்து இலட்சம் தமிழ் மக்கள் வரலாற்றிலேயே முதல் முறையாக யாழ் குடாநாட்டை விட்டு அகதிகளாக வெளியேறிய போது, எந்த ஒரு உலக நாடும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. எந்த ஒரு மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்கும் உலக நாடுகள் முன்வரவில்லை. எமது மக்களின் அவலத்தை உலக மக்களின் கவனத்தின் முன் முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கு, எந்த ஒரு சர்வதேச ஊடகமும் முன்வரவில்லை.

ஆயினும் புலம் பெயர்ந்த தமிழீழத்தவர் துடித்தெழுந்து ஆற்றிய தமிழ்த் தேசியக்கடமை எமது மக்களுக்கு அரு மருந்தாயிற்று. எந்த உலக நாடுகளையும் நம்பியிருக்காமல் புலம் பெயர் தமிழ் மக்கள் தமது பங்களிப்பை, உணர்வு ப+ர்வமாக அளித்தார்கள். புலம்பெயர் தமிழ் மக்கள் தங்களது பலத்தை உணராமலேயே பங்களித்த விடயம் அது.

பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு எதுவும் கிட்டவில்லை. தமிழ் மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. உலக நாடுகள் தருவதாக உறுதியளித்த எந்த ஒரு நிதி உதவியும் முறையாக வந்து சேரவில்லை. ஆயினும் புலம் பெயர் தமிழர்கள் சோர்ந்து போய் விடவில்லை. எந்த ஒரு உலக நாட்டையும் நம்பியிராது இந்தச் சமாதானப் பேச்சு வார்த்தைக் காலத்தின் போது தமிழீழத் தேசத்தின் கட்டுமானத்திற்கான நிதியுதவியையும், தொழில் சார் நிபுணத்துவ உதவிகளையும் வழங்கினார்கள். புலம்பெயர்ந்ததால் அடைந்திட்ட வலிமையைத் தமிழர்கள் உபயோகித்த காலம் அது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட வராத ஆழிப் பேரலை 2004ம் ஆண்டு தமிழீழக் கரையோரப் பகுதிகளைத் தாக்கி மக்களுக்கும், தேசத்திற்கும் அவலத்தைக் கொண்டு வந்தபோது, உள்ளம் துடித்தெழுந்து உதவிக் கரம் நீட்டியவர்களும் எமது புலம் பெயர் தமிழீழ மக்கள்தான்! அந்த ஆழிப்பேரலையின் வலிமையையும் விட, எமது உலகத் தமிழர்களின் �அன்புப் பேரலை� வலிமை கூடியதாகத்தான் இருந்தது.

ஆகவே போர்க்காலமாக இருந்தாலும் சரி, சமாதானத்திற்கான காலமாக இருந்தாலும் சரி, இயற்கை கொடுக்கக் கூடிய அழிவுக் காலமாக இருதாலும் சரி புலம் பெயர் தமிழீழ மக்கள் தங்களது தமிழ்த் தேசியக் கடமையைச் செய்யத் தவறுவதேயில்லை. வேறு எவரது தயவையும் புலம் பெயர் தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்து நிற்பதுமில்லை.

ஆனால் போர்க்காலப் பின்னடைவுகளின் போது மட்டும், புலம் பெயர் தமிழர்கள் சஞ்சலப்பட்டு அங்கலாய்ப்பது ஏன்? ஐயப்படுவது ஏன்?

நாம் முன்னர் குறிப்பிட்டது போல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் விரக்தி அடையாமல், சஞ்சலம் கொள்ளாமல், முழு முனைப்போடு தங்களது விடுதலையில், பற்றுறுதியோடு இருந்த போராட்டங்கள்தான் தமது இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளன. எங்களால் எமது இலட்சியத்தை அடைய முடியும் என்கின்ற அந்த உணர்வு நிலைதான் முக்கியம். வீண்சஞ்சலமும், சந்தேகமும் இத்தகைய உணர்வு நிலையை நீர்த்துப்போக வைத்துவிடும். அன்றைய இரஷ்ய மக்களின் போராட்டமும், இன்றைய தமிழீழ விடுதலைப் புலிகளின் மகத்தான சாதனைகளும் உணர்வுநிலைக் கருத்தைத்தான் நிரூபித்து நிற்கின்றன.

ஒரு வாதத்திற்காக, நடைபெற்றிராத இரண்டு விடயங்களை முன் வைத்துத் தர்க்கிக்க முனைகின்றோம். இந்த ஆண்டு - அதாவது 2008ம் ஆண்டு - ஜேர்மன் நாட்டிற்கும், பிரித்தானியா நாட்டிற்கும் இடையே பெரும் போர் ஒன்று ஆரம்பமாகின்றது என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்.

எந்த நாடு சரி, எந்த நாடு பிழை என்ற கருத்துக்கு அப்பால் ஒரு விடயத்தை நாம் அப்போது அவதானிக்கக் கூடும். அதாவது வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ள இந்த நாடுகளுக்குரிய மக்கள், தங்கள் தாய் மண்ணின் வெற்றிக்கான பணிகளில், கேள்வி கேட்காமல் செயற்படுவார்கள். அதற்கு அடிப்படைக் காரணம், தாங்கள் அந்த மண்ணின் மைந்தர்கள், அது நமது நாடு என்ற உணர்வு நிலை அவர்களிடம் படிந்திருப்பதனால்தான்!

அடுத்த விடயத்தை வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்ப்போம். கடந்த ஆண்டு - அதாவது 2007ம் ஆண்டு - சுதந்திரத் தமிழீழத் தனியரசு அமைந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இந்த ஆண்டு - அதாவது 2008ம் ஆண்டு - மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா அரசின் இராணுவம், சுதந்திரத் தமிழீழத்தின் மீது படையெடுத்து அதனை ஆக்கிரமிக்கின்றபோது, புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்களாகிய நாம் சும்மா இருப்போமா? இல்லைத்தானே? கொந்தளித்து அல்லவா எழுந்திருப்போம்! ஏனென்றால் இப்போது எமக்கு என்று ஒரு நாடு உள்ளது, நாம் அந்த நாட்டின் குடிமக்கள், அந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் என்ற உணர்வு நிலை எம்முள்ளே ஆழமாகப் படிந்து விட்டிருப்பதனால் நாம் கேள்வி கேட்காமல் எமது கடமையைச் செய்ய ஆரம்பித்திருப்போம்.

இதில் அடிப்படை விடயம் என்னவென்றால், தமிழீழம் என்பது எமது தாய் நாடு. அது தற்போது சுதந்திரத்தை இழந்துள்ளது. தமிழீழம் என்ற எமது நாடு உண்மையில் சிறிலங்காவால் வன்கவரப்பட்டுள்ளது என்கின்ற மனநிலையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த மனநிலையை நாம் பெற்றுக் கொண்டால்தான் தமிழீழத்தை மீட்க வேண்டிய உணர்வு நிலை எமக்குத் தோன்றும்.

இந்த உணர்வு நிலையை நாங்கள் முழுமையாகப் பெறும் வரைக்கும் எமக்குத் தேவையற்ற சந்தேகங்களும், சஞ்சலங்களும் எழுந்து கொண்டேயிருக்கும். இன்று புலம் பெயர் தமிழர்களாகிய எம்மிடையே இருக்கின்ற மிகப் பெரிய குறைபாடு இதுவாகும் என்ற சுயவிமர்சனத்தை உரிமையோடு நாம் முன் வைக்கின்றோம். இந்த மிகப் பெரிய குறைபாட்டை, உடனடியாகக் களைந்து எறிவதுதான் எமது தேசியத்திற்கான பணிகளில் அடிப்படையானதும், முதன்மையானதும் ஆகும்.

எங்களுக்குள் என்ன பலம் இருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளாமல், பலத்தைத் தேடி எங்கெங்கெல்லாமோ ஓடிக் கொண்டிருப்பதுதான் எமது வேலையாக இப்போது உள்ளது. ஆனால் எங்களுக்கு உள்ளேதான் எல்லாப் பலமும் உள்ளது. எங்களுக்கு உள்ளேதான் எல்லா ஆற்றலும் உள்ளது. எங்களால் இந்த உலகத்தைத் திருப்பவும் (திருத்தவும்) முடியும்!

இங்கே பிரச்சனை என்னவென்றால், யாரோ வருவான், யாரோ தருவான், யாரோ திருப்புவான் என்று பார்த்துக் கொண்டும், ஓடிக்கொண்டும் நாங்கள் இருக்கின்றோம். இது உண்மையில் ஒரு வரலாற்றுச் சோகம்!

புலம் பெயர் தமிழீழ மக்களாகிய நாம் தேவையற்ற சந்தேகங்களையும், சஞ்சலங்களையும் உடனடியாகக் களைந்து எறிந்துவிட்டு, நாம் எல்லோரும் முழுமையாக ஒருங்கிணைந்து நிற்கவேண்டும். இந்த ஒருங்கிணைவது என்பது - இன்றைக்குத்தான் - அதாவது நெருக்கடிகள் வரும்போதுதான் பலமாக இருக்க வேண்டும். இந்தப் பலம் நமக்குள்தான் உள்ளது.

புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய எம்மிடம் உள்ள இன்னுமொரு குறை எதிரிகளிடமும், துரோகிகளிடமும் இணங்கிப்போய், சமரசம் செய்து கொள்வதாகும். நாட்டுப்பற்று என்பதானது இணங்கிப் போவதற்கும், சமரசம் செய்வதற்கும் அப்பாற்பட்டதாகும்.

உதாரணத்திற்குச் சில விடயங்களைச் சுட்டிக்காட்டலாம்.

83ம் ஆண்டு, ஆதாவது இருபத்தி ஜந்து ஆண்டுகளுக்கு முன்னர் சிங்களப் பெரும்பான்மையினம் தமிழின அழிப்பை மேற்கொண்ட பிறகுதான் - அதாவது அடி போட்ட பின்னர்தான் - சாதாரணத் தமிழனுக்கும் சிங்களவர்களோடு போராட வேண்டும் என்ற உணர்வு வந்தது. சிங்களவர்கள் முன்னரேயே தமிழர்களுக்குச் சிறுகச் சிறுக அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டு வந்தாலும், 83க்குப் பின்னர்தான் இதை இப்படி விடமுடியாது, எதிர்த்துப் போராடவேண்டும் என்ற எண்ணமும் உணர்வும் பரவலாக எழுந்தன.

ஆனால் சிங்களவனோடு இருக்க முடியாமல் ஓடிவந்துவிட்ட புலம் பெயர் தமிழர்கள், இன்று சிங்களவனின் விளையாட்டுக்களில் கலந்து மகிழ்வதும், சிங்களவர் பொருட்களை விலை கொடுத்து நுகர்வதும் எமது நாட்டுப்பற்றுக்கு முரணான விடயங்களாகும்.

அதாவது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குச் சார்பு நிலை இல்லாத எவரோடும் - அது வர்த்தக ரீதியாகவோ, வேறு எதுவாக இருந்தாலும்-அவர்களோடு தொடர்புகளை அறுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு திடமான முடிவுக்குத் தமிழர்கள் வரவேண்டும். ஜனநாயக முறைகளுக்கு ஏற்ப, இந்தப் புறக்கணிப்பு ஊடாகத்தான் அவர்களுக்கு திடமான ஒரு செய்தியையும் நாம் சொல்ல முடியும். அத்தோடு எமக்கு ஆதரவானவர்களையும் அறிந்து அவர்களுக்கு ஊக்கத்தையும் கொடுக்க முடியும்.

புலம் பெயர் தமிழர்களுடைய நிதி வளம், அறிவு வளம், தொழில் வளம், வர்த்தக வளம், மற்றும் மக்கள் திரட்சி என்பவையெல்லாம் பெரிய பலங்களாகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக உள்ளவர்களை இத்தகைய பலங்களுக்கு ஊடாகப் புறக்கணிக்க வேண்டும். இதில் புலம் பெயர் தமிழர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும்.

உண்மை நிலையை அறிந்து கொண்டும், கண்ணை மூடிக் கொண்டுள்ள மேற்குலகத்தைப் புலம் பெயர் மக்களின் போராட்டம்தான் இப்போது மெதுவாக அசைக்கத் தொடங்கியுள்ளது. இவையெல்லாம் தாங்களாகச் சொந்தமாக இந்த நாடுகள் எடுத்த முடிவு அல்ல. புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இந்த மாற்றங்கள் வருகின்றன. புலம் பெயர் வாழ் தமிழர்களின் பொங்கு தமிழ் நிகழ்வுகள் சர்வதேசத்திற்கு மீண்டும் ஒரே செய்தியை உரத்துச் சொல்லியுள்ளன. உண்மையில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ஓர் ஆரம்பம்தான்! நாம் முழுமையாக ஒன்று திரண்டால், நாம் வாழுகின்ற நாடுகளிலே, அந்த நாடுகளின் ஜனநாயக முறைகளுக்கு ஏற்ப, நாம் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்த முடியும்!

ஆகவே புலம் பெயர் தமிழர்களின் சிறு பலவீனங்கள் அவர்களுடைய பெரும் பலத்தைக் குலைப்பதற்கு இடம் கொடுக்கக் கூடாது. புலம் பெயர் தமிழர்களாகிய நாம் எமது பலவீனங்களைச் சுயவிமர்சனத்தினூடாகக் களைந்து, எம்மிடமிருக்கும் பாரிய பலத்தை உணர்ந்து அதனூடே தமிழீழத் தேசியத் தலைமையின் கரங்களை மேலும் பலப்படுத்துவோம். புலம் பெயர் தமிழர்களின் முழுமையான மாபெரும் ஒருங்கிணைப்பு இன்றைய உடனடிக் கடமையுமாகும்.!

தமிழீழ விடுதலைப் புலிகள் அங்கே என்ன செய்கிறார்கள் என்று நாங்கள் கேள்வியைக் கேட்பதை விடுத்து, இங்கே நாங்கள் என்ன செய்கின்றோம், என்ன செய்யப் போகின்றோம் என்று எம்மை நாமே கேட்டுக் கொண்டு செயல்படுவதுதான் எமது கடமையுமாகும்!

கலங்கற்க!

கடமையைச் செய்யும் காலமிது!

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home