Selected Writings by Sanmugam Sabesan,
சபேசன், அவுஸ்திரேலியா
ஒரு தேசம் கோரிய மன்னிப்பு
18 February 2008
[see also
Apology
to Australia's Indigenous Peoples
- Mr.Kevin Rudd, Prime Minister of Australia]
"மன்னிப்பைக் கோருவதன் மூலம் தமது கடந்த காலத்
தவறுகளைத் திருத்திக் கொள்ள முயல்கின்ற இந்த நாடுகள்,
தங்களுடைய நிகழ்காலத் தவறுகளையும் உடனடியாகத் திருத்திக் கொள்ள
முன் வர வேண்டும். அப்போதுதான் இத்தகைய மன்னிப்புக்
கோரல்கள்மீது உண்மையான நம்பிக்கையும் ஏற்படும்."
உலகத்தின் மிகத்
தொன்மையான, ஆதிப்பழங்குடியினங்களில் ஒன்றான �அபரிஜினல்' (Aborigines)
பூர்வகுடி மக்களிடம், அவுஸ்திரேலிய அரசு, தம்மை மன்னிக்குமாறு,
கடந்த புதன்கிழமை 13-02-2008 அன்று, உத்தியோகபூர்வமாகச் சம்பிரதாயபூர்வமாகக்
கோரியது.
கடந்த
230 ஆண்டுகளுக்கும் மேலாகத் தாம் அபரிஜினல் இனத்தினரை
இழிவுபடுத்தியதற்கும், அவர்களுக்கு எதிரான கொள்கைகளைக்
கொண்டிருந்ததற்கும், அவர்களுடைய குடும்பங்களையும், சமூகங்களையும்
பிரித்தமைக்கும், அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் வருத்தம் தெரிவித்து,
அபரிஜினல் இனத்தவரிடம் மிக்க மரியாதையோடு மன்னிப்புக் கோரியுள்ளது.
அவுஸ்திரேலிய முதலமைச்சர் திரு கெவின் ரட் (Kevin Rudd)
அவர்கள், அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில்
இவ்வாறு, இந்த மன்னிப்பைக் கோரியபோது, நாடாளுமன்றத்திற்கு
உள்ளேயும், வெளியேயும், மற்றும் அவுஸ்திரேலியக் கண்டத்தின் நகரச்
சதுக்கங்களிலும் கூடியிருந்த அபரிஜினல் மக்கள் கண்ணீர் மல்கக்
கரவொலி எழுப்பினார்கள். அவர்களோடு இணைந்து, கூடியிருந்த
அவுஸ்திரேலிய வெள்ளை இனத்தவரும், கரவொலி எழுப்பித் தங்கள்
உள்ளக்கிடக்கையைச் சேர்த்து வெளிப்படுத்தினார்கள்.
அவுஸ்திரேலிய அரசு, அபரிஜினல் பூர்வகுடி மக்களிடம் கோரியுள்ள
மன்னிப்புக் குறித்துச் சில கருத்துக்களை முன்வைப்பதற்கு முன்னர்,
ஆதிப் பழங்குடியினரான அபரிஜினல் குறித்துச் சில தகவல்களைச்
சுருக்கமாகத் தருவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
அபரிஜினி (Aborogine) என்ற சொல்லுக்கான
அர்த்தம், �ஆதியிலிருந்தே � அல்லது தொடக்கத்திலிருந்தே - இங்கு
வாழுகின்ற மக்கள்� என்பதாகும். சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு
மேலாக, அவுஸ்திரேலியக் கண்டத்தில் வாழ்ந்து வருகின்ற அபோரிஜினல்
பழங்குடி மக்கள், தென்-கிழக்கு ஆசியக் கண்டத்திருந்து வந்தவர்கள்
என்று கருதப்படுகின்றது. அபரிஜினல் இனத்துக்குள்ளேயே, ஐநூறுக்கும்
மேற்பட்ட தனித்துவமான பிரிவுகள் உண்டு. எனினும் இவ்வளவு
பிரிவுகளையும் ஒன்றிணைக்கின்ற வகையில்தான், அவர்களுடைய பண்பாட்டு
மற்றும் ஆன்மீக (Spiritual) வாழ்வு முறை
அமைந்துள்ளது.
அவர்களது தொன்மையான வாழ்க்கை குறித்து எழுத்து ரீதியான ஆவணங்கள்
இல்லையென்றாலும், தொல் பொருள் ஆராய்ச்சிகள் ஊடாகவும், பரம்பரை
பரம்பரையூடாகத் தொடர்ந்து வருகின்ற மரபுவழிச் சடங்குகள், வாழ்க்கை
முறைகள் ஊடாகவும், இந்த ஆதிப் பழங்குடியினரின் பெருமை பற்றி அறியக்
கூடியதாக இருக்கின்றது.
உலகத்தின் இன்னுமொரு மிகத் தொன்மையான தமிழினத்திற்கும், அபரிஜினல்
இனத்திற்குமிடையே மிக நெருக்கமான ஒற்றுமைக் காரணிகள் உண்டு.
குமரிக் கண்டம் கடலுக்குள் மூழ்கியபோது, இமயம்வரை வடக்கே பரவிய
தமிழினம், கிழக்கே அவுஸ்திரேலியாவை நோக்கியும், மேற்கே
ஆப்பிரிக்காவை நோக்கியும் பரவி வாழ்ந்திருந்தது. இதற்குரிய விரிவான
ஆய்வுக்கு இது தளம் இல்லையென்ற காரணத்தால், பண்டைக்காலத் தமிழ்ச்
சொற்களுக்கும், அபரிஜினல் பழங்குடி மக்களின் சொற்களுக்கும் இடையில்
உள்ள ஒற்றுமையை மட்டும் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.
பண்டைக்கால தமிழ்ச்சொல் |
அபரிஜினச் சொல் |
அரத்தம்
(குருதி) |
Arkuga |
காற்று
|
Yartu |
தாலம்
(நாக்கு) |
Thalay |
தூம்பு
(உள் துளை, மதகு) |
Thumpi |
நெற்றி |
Netri |
பிறை |
Pira |
மலை |
Muli |
மணல் |
Manal |
மாதம் |
Mithiyen |
மழை |
Maharra |
மையல்
|
Mayaal |
முகம் |
Mulha |
வாரணம்
(கடல்) |
Wadarn |
|
|
சான்றுநூல்: Aboriginal Words: Nick
Thieberger,
William Megreoor(சொற்களுக்கும்,
கருத்துக்களுக்கும் அப்பால், மிக ஆழமான, விரிவான ஆய்வுகள் உண்டு.)
இவ்வாறான, பெருமை வாய்ந்த, தொன்மை இனமான அபரிஜினல் இனத்திற்குக்
கேடு ஆரம்பித்தது 1788ம் ஆண்டில்தான்! பிரித்தானிய மாலுமிகளால்
�கண்டு பிடிக்கப்பட்ட� அவுஸ்திரேலியாவைத் தன்னுடைய காலனித்துவ
நாடுகளில் ஒன்றாக மாற்றும் முயற்சியில் பிரித்தானியப் பேரரசு
இறங்கியது.
கப்பல்,
கப்பலாகப் பிரித்தானியாவில் இருந்து மக்கள் அவுஸ்திரேலியாவிற்கு
வந்திறங்கினார்கள். ஆனால் அவர்கள் அமைதியாகவோ, நட்பாகவோ
வந்திறங்கவில்லை. பிரித்தானியாவின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த
கொலையாளிகள், கொள்ளையர்கள், திருடர்கள், வன்முறையாளர்கள், பாலியல்
பலாத்காரக் காமுகர்கள் என்று பலதரப்பட்ட சமூக விரோதிகளை, தனது
புதிய காலனித்துவ தேசத்திற்குப் பிரித்தானிய அரசு அனுப்பி வைத்தது.
அத்தோடு, அவர்களைக் கண்காணிப்பதற்காகத் தன்னுடைய போர்வீரர்களையும்
பிரித்தானிய அரசு அனுப்பியிருந்தது. அந்தக் காலத்தில், பிரித்தானிய
தேசத்தின் சிறைச்சாலைகளில் கொலையாளிகளும், கொள்ளையர்களும் நிரம்பி
வழிந்த காரணத்தினால் �இடப் பற்றாக் குறை� காரணமாக, அவுஸ்திரேலியா
பிரித்தானியாவின் �திறந்தவெளிச் சிறைச்சாலை� ஆயிற்று.
பிரித்தானிய அரசு, தனது புதிய காலனித்துவ நாட்டில் விவசாயப்
பண்ணைகளையும், பட்டினங்களையும் நிர்மாணிக்க ஆரம்பித்தது.
அவுஸ்திரேலியாவின் ஆதிப்பழங்குடியினரை, வந்திறங்கிய வெள்ளையர்கள்
வேட்டையாடிக் கொன்றார்கள். வெள்ளைக்காரர்கள் தங்களோடு கொண்டு வந்த
தொற்று நோய்கள் கரணமாகவும் பல்லாயிரக்கணக்கான அபரிஜினல்
பழங்குடியினர் இறந்தார்கள். தஸ்மேனியாத் தீவில் இருந்த சகலப்
பழங்குடியினரும் வேட்டையாடிக் கொல்லப்பட்டார்கள். அதில் நாற்பது
பேர் மட்டும் முதலில் தப்பியோடிவிட்டதை அறிந்த தஸ்மேனியத் தீவின்
பிரித்தானிய ஆளுநரின் (Governor) மனைவி,
தானே முன்னின்று அந்த நரவேட்டையை நடாத்தி முடித்தார். அந்த
அபரிஜினல் மக்களின் மண்டையோடுகளை, இலண்டன் நகரத்து வீடுகளில்
அலங்காரப் பொருட்களாக வைப்பதற்காக, அந்த அம்மணி, இவ்வாறு அபரிஜினல்
ஆதிப்பழங்குடியினரை வேட்டையாடிக் கொன்றார் என்று ஆவணங்கள்
கூறுகின்றன.
அவுஸ்திரேலியக் கண்டத்தின் வௌவேறு பகுதிகளில், வௌவேறு
காலப்பகுதிகளில் இந்த இனச் சுத்திகரிப்பு நடைபெற்றது. சிட்னி
மற்றும் பரமட்டா பகுதிகளில் 1788ம் ஆண்டுகளிலும், கம்பல்ரவுண்,
கம்டன் பிரதேசங்களில் 1800 இன் ஆரம்ப காலப்பகுதிகளிலும், இல்லவாரா
பிரதேசத்தில் 1815 ஆண்டிலிருந்தும், பழங்குடி மக்களுக்கு எதிரான
செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களுடைய பாரம்பரிய உணவு
உற்பத்திக்கான வளங்களும் அழிக்கப்பட்டன.
இவ்வாறு வெளிப்படையாக, அநாகரிகமாக, காட்டுமிராண்டித்தனமாக,
அவுஸ்திரேலியப் பழங்குடியின மக்களை வேட்டையாடிய வெள்ளையினம்,
பின்னாளில் வேறு வித்தியாசமான உத்திகளைக் கையாண்டு, அவர்களை மேலும்
நசுக்கி அழிப்பதில் ஈடுபட்டது. த கார்டியன் (Guardian)
பத்திரிகை, �பிரித்தானிய அரசு, அபரிஜினல் மக்கள் மீது வலிந்து
தொற்று நோயைப் பரப்பியதோடு மட்டுமல்லாது, மதுப் பழக்கத்தையும்
சாமர்த்தியமாகப் பழக்கிவிட்டது என்றும், பின்னாளில் கபடத்தனமாக,
அபரிஜினல் இனத்தை இனக் கலப்பின் மூலம் நீர்த்துப் போக வைக்க
முயன்றது|| என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த நூற்றாண்டில் மட்டும் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள், அதாவது
1910ம் ஆண்டிலிருந்து 1970ம் ஆண்டுவரை நூறாயிரத்துக்கும் மேற்பட்ட
அபரிஜினல் குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்களிடமிருந்து பலவந்தமாக
வெள்ளையர் ஆட்சி பிரித்தெடுத்தது. இந்தக் குழந்தைகளும், அவர்களது
பெற்றோர்களும் பட்ட இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல! தற்போது எண்பது வயது
நிரம்பியிருக்கும் NANNA NUNGALA FEJO
என்ற அம்மையாரின் சோக வரலாற்றை அவுஸ்திரேலிய
முதலமைச்சர் கெவின் ரட் அவர்கள், பாராளுமன்றத்தில், ஓர்
உதாரணத்திற்காக எடுத்தியம்பியது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்!
அதாவது, உலகத்தின் தொன்மையான ஒரு பழங்குடி இனத்தையும், அவர்களது
பண்பாட்டு வாழ்வுமுறையையும் முற்றாக அழித்தொழிப்பதற்காகப்
பிரித்தானிய அரசும், பின்னாளில் அவுஸ்திரேலியா அரசுகளும்
செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தன. அபரிஜினல் மக்கள் �திருடப்பட்ட
தலைமுறை�
(STOLEN GENERATION) என்பதற்கு அப்பால்,
அவர்களது தேசமும் வெள்ளையரால் திருடப்பட்ட தேசமும் கூட!||
(STOLEN COUNTRY)!
ஒரு தேசம் வெளிப்படையாக, உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோருவது
இதுதான் முதல் தடவையல்ல. முன்னர் கனடா அரசு, தனது ஆதிக்குடிகளிடம்
மன்னிப்பைக் கோரியிருந்தது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக விளங்கிய
பில் கிளின்ரன் (Bill Clinton)
அமெரிக்காவின் முன்னாள் அடிமைகளிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.
மன்னிப்புக் கோருவதற்கு நீதியும், நேர்மையும், இதயசுத்தியும்
மட்டுமல்லாது, துணிவும் தேவையானது. அதனடிப்படையில் பார்க்கும்போது,
அவுஸ்திரேலியாவின் புதிய முதலமைச்சரான கெவின் ரட் அவர்கள்
நம்பிக்கையளிப்பவராகத் தென்படுகின்றார். அத்தோடு இந்த மன்னிப்புக்
கோரல் மூலம் - அதாவது கடந்த காலத் தவறுகளுக்காக மன்னிப்புக்
கோரியதன் மூலம் - எதிர்காலத்தின் மீது ஒரு நம்பிக்கையும் இங்கு
உருவாகியுள்ளது.
எனினும் இந்தப் பொது மன்னிப்புக் கோரலுக்கு எதிராகவும்,
முரண்பாடாகவும் பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பொது மன்னிப்புக் கோரலுக்குச் சட்ட ரீதியான எந்தவிதமான
தகுதியும் கிடையாது என்றும், இந்தப் பொது மன்னிப்புக் கோரல்,
அபரிஜினல் மக்களுக்கு எந்தவிதமான நட்ட ஈட்டையும் பெற்றுத் தராது
என்றும் கண்டனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால்
நட்ட ஈட்டிற்குப் பதிலாக அபரிஜினல் மக்களின் வாழ்க்கைத் தரத்தை
உரிய முறையில் உயர்த்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்
என்றும், அதற்குரிய செலவினங்களை அரசு பொறுப்பேற்கும் என்றும் அரசு
தரப்பில் கூறப்படுகின்றது.
எனினும்
இதற்கு எதிராகவும் ஒரு தர்க்கம் முன் வைக்கப்பட்டுள்ளது. அதாவது
�மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்பது, ஓர் அரசுக்கு
உரிய ஒரு இயல்பான கடமையாகும். தனது கடமையைச் செய்வதும், நட்ட ஈடு
கொடுப்பதும் இரண்டு வித்தியாசமான விடயங்களாகும். இவ்விரண்டையும்
ஒன்றாகச் சேர்த்துச் சொல்வது அபரிஜினல் மக்களுக்கு இழைக்கப்படும்
இன்னுமொரு தவறாகும்!� என்ற தர்க்கமும் முன் வைக்கப்பட்டுள்ளது.
�எது
எப்படியிருப்பினும், பழைய தவறுகளைத் திருத்துவதற்கான முதல் படியாக,
இந்தப் பொது மன்னிப்புக் கோரலைக் கருதி, நல்லதொரு
எதிர்காலத்திற்கான செயற்பாடுகளை மேற் கொள்வதற்கு இதுவே தருணம்
என்பதை உணர்ந்து புதிதாக ஒரு நல்வாழ்க்கையை ஆரம்பிப்போம்� - என்ற
கருத்துப் பரவலாக எல்லோர் மனதிலும் வியாபித்து இருப்பதையும் அறிய
முடிகின்றது.
ஆனால் இவற்றிற்கு அப்பாற்பட்டு, வேறு ஒரு தேசத்திடமிருந்தும் பொது
மன்னிப்புக்கான கோரிக்கை வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்போது
எழுந்துள்ளது. அது வேறு எந்த தேசமுமில்லை. பிரித்தானியா தேசம்தான்!
�பிரித்தானியா தேசமும், அபரிஜினல் மக்களின் பொது மன்னிப்பைக் கோர
வேண்டும்|| - என்ற எதிர்பார்ப்பு இப்போது அவுஸ்திரேலியாவில்
எழுந்து வருவதையும் நாம் காண்கின்றோம்.
அபரஜினல் மக்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளுக்கு மட்டுமல்லாது,
அவர்களுடைய தேசத்தைப் பறித்தெடுத்த கொடுமைக்கும் பிரித்தானிய அரசு
பொறுப்பேற்றாக வேண்டும். பிரித்தானியா அரசுக்குத் தார்மீகப்
பொறுப்பு மட்டுமல்லாது, நேரடிப் பொறுப்பும் உண்டு. ஆகவே
அவுஸ்திரேலிய அரசு கேட்டுக் கொண்ட பொது மன்னிப்புக் கோரலுக்கு
இசைவாக, பிரித்தானியா அரசும், அபரஜினல் மக்களிடம் மன்னிப்பைக் கோர
வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அவுஸ்திரேலியாவில் மட்டுமல்லாது
பிரித்தானிய மக்களிடமும் தோன்றியுள்ளதாக ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக இப்போது கட்டுரைகளும் வெளிவர
ஆரம்பித்துள்ளன.
பிரித்தானிய அரசு வேறு ஒரு நாட்டு மக்களுக்குச் செய்திட்ட
தீங்குகள் பற்றிப் பேசுகின்றபோது, இயல்பாகவே எமக்கு இலங்கைத்
தீவும் ஞாபகத்திற்கு வருவதில் வியப்பேதும் இல்லை. ஒப்பீட்டளவில்,
அபரிஜினல் இனத்தைப் போலவே மிகத் தொன்மையான இனம்தான் எமது தமிழினம்!
இந்த இரண்டு இனங்களுக்குரிய அடிக்கூறை இப்போது ஆராயப்புகாமல்,
தற்கால அரசியல் ஒற்றுமைகளை மட்டும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
பிரித்தானிய அரசு முழு இலங்கைத் தீவையும் கைப்பற்றியபோது, அங்கே
இருந்த தனிப்பட்ட, தனித்துவமான அரசுகளான தமிழ் அரசையும், சிங்கள
அரசையும், தனது நிர்வாக வசதி கருதி, பிரித்தானியா இணைத்தது.
பின்னர் முழு இலங்கைத் தீவுக்கும் பிரித்தானியா சுதந்திரம்
வழங்கியபோது, தான் கைப்பற்றியபோது இருந்த அரசதானிகளுக்கு இருந்த
தனிச் சுதந்திரத்தை வழங்காமல், �முழு இலங்கைக்கும் ஓர் அரசு|| என்ற
அடிப்படையில் சுதந்திரத்தை வழங்கியதால்தான் இன்று சிங்கள-பௌத்தப்
பேரினவாத அரசுகளால் தமிழினம் ஒடுக்கப்பட்டு வருகின்றது. தவிரவும்,
பிரித்தானிய அரசின் அனுசரணையின் கீழ் உருவான இலங்கையின் முதலாவது
அரசியல் யாப்பும் தமிழர்களின் நலன்களை முற்றாகப் பேணுவதாக
இருக்கவில்லை.
ஆகையால், இலங்கைத்தீவு �சுதந்திரம் அடைந்த தினத்திலிருந்து,
இன்றுவரை, தமிழினம் பட்டு வருகின்ற அவலங்களுக்கும்,
அழிவுகளுக்குமான நேரடிப் பொறுப்பையும், தார்மீகப் பொறுப்பையும்,
பிரித்தானிய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். இவற்றிற்கு
அப்பாற்பட்டு, மகிந்த ராஜபக்சவின் தற்போதைய அரசு மேற்கொண்டு
வருகின்ற தமிழின அழிப்பிற்கான பொறுப்பையும், பிரித்தானிய அரசே
ஏற்றுக் கொள்ள வேண்டும். ஹிட்லருக்கு இணையான பேரினவாதப் பயங்கரவாத
சிங்கள அரசுக்கு, உதவிகளை வழங்கி, ஆதரவாக இருந்து வருவதன் மூலம்,
பிரித்தானிய அரசு தமிழர்களின் நலனுக்கு முற்றிலும் எதிராகவே
செயல்பட்டு வருகின்றது.
அபரிஜினல் மக்களைப்போல் அல்லாது, தமிழீழ மக்கள் தம்முடைய சுதந்திர
விடுதலைக்காகத் தொடர்ந்து போராடி வருபவர்கள் ஆவார்கள்.
எதிர்காலத்தில் சுதந்திரத் தமிழீழம் அமைகின்றபோது, தேவை கருதி,
பிரித்தானியா அரசு தன்னை மன்னிக்குமாறு, தமிழீழ மக்களின்
மன்னிப்பைக் கோரக் கூடும்!
இந்தக் கூற்று, பொது மன்னிப்பை வெவ்வேறு சந்தர்ப்பங்களில்
கோரியுள்ள கனடா, அமெரிக்கா. அவுஸ்திரேலிய நாடுகளின் அரசுகளுக்கும்
பொருந்தும்.
தமிழீழ
மக்களின் நியாயமான சுதந்திரப் போராட்டத்திற்குரிய ஆதரவை வழங்காமல்,
சிங்களப் பௌத்தப் பேரினவாதப் பயங்கரவாத அரசோடு கைகோர்த்து நிற்கும்
இந்த நாடுகளின் செயற்பாடுகள், உலகின் இன்னுமொரு மிகத் தொன்மையான
இனத்திற்கு எதிரானவையும், ஜனநாயகத்திற்கு எதிரானவையுமாகும்!
மன்னிப்பைக் கோருவதன் மூலம் தமது கடந்த காலத் தவறுகளைத் திருத்திக்
கொள்ள முயல்கின்ற இந்த நாடுகள், தங்களுடைய நிகழ்காலத் தவறுகளையும்
உடனடியாகத் திருத்திக் கொள்ள முன் வர வேண்டும். அப்போதுதான்
இத்தகைய மன்னிப்புக் கோரல்கள்மீது உண்மையான நம்பிக்கையும்
ஏற்படும். |