சர்வதேசத்தின்
அனுசரணையுடன், 2002ம் ஆண்டு பெப்ருவரி மாதம் இருபத்தியிரண்டாம் திகதி,
சிறிலங்கா அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே
கைச்சாத்திடப்பட்ட
புரிந்துணர்வு ஒப்பந்தம் என்கின்ற, போர்நிறுத்த
ஒப்பந்தத்திலிருந்து,
தன்னிச்சையாகச் சிறிலங்கா அரசு விலகிக் கொண்டு விட்டது.
இந்த அறிவித்தலை இந்த
ஜனவரி மாதம் மூன்றாம் திகதியன்று, நோர்வே அரசிற்கு எழுத்து மூலமாக,
உத்தியோக பூர்வமாக சிறிலங்கா அறிவித்தும் விட்டது. ஒப்பந்தத்தில்
இருந்து விலகிக் கொள்வதென்று அறிவித்த தினத்தில் இருந்து, பதினான்கு
தினங்களுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் உத்தியோக பூர்வமாகக்
கைவிடப்பட்டு, முடிவுக்கும் வந்து விட்டது.
மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா அரசு, தன்னிச்சையாக, போர்நிறுத்த
ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டதற்குக் காரணம், தமிழீழத்தின் மீது
மிகப் பாரிய போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழீழப் பிரதேசங்களைக்
கைப்பற்றி, அதனூடே தமிழின அழிப்பைச் செய்வதற்காகத்தான் என்ற எண்ணம்
எல்லோர் மனதிலும் உருவாகியுள்ளது. இந்த எண்ணம் எழுவது இயல்பானது
மட்டுமல்லாது, சிறிலங்கா அரசின் அடிப்படை நோக்கமும் இதுவேதான்!
ஆயினும், தமிழீழ மக்கள் மீதான போருக்கு அப்பால், சிறிலங்கா அரசின்
சிங்களப் பௌத்தப் பேரினவாதத்தின் நாசூக்கான அரசியல் சிந்தனையொன்று
செயல்பட உள்ளதாகவே நாம் கருதுகின்றோம். இந்தக் கருத்தை முன் வைத்துத்
தர்க்கிப்பதுதான் இக் கட்டுரையின் நோக்கமாகும்!
போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர்தான்,
தமிழீழ மக்கள் மீதான போரை ஆரம்பிக்க முடியும் என்ற கருத்து, மகிந்த
ராஜபக்சவிற்கோ, அல்லது அவரது அரசிற்கோ இல்லை. போர் நிறுத்த ஒப்பந்தம்
முழுமையாக அமலில் இருக்கும்போதே, கண்காணிப்புக் குழுவினர் உத்தியோக
பூர்வமாகப் பிரசன்னமாக இருந்தபோதே, மிகப் பாரிய போர் நடவடிக்கைகளை
மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வந்துள்ளது. போர்
நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள பல சரத்துக்களை மகிந்தவின் அரசு
வெளிப்படையாகவே மீறியும் வந்துள்ளது.
உதாரணத்திற்காகச் சில சரத்துக்களைச் சுட்டிக் காட்ட விழைகின்றோம்.
சரத்து 1.2 - வலிந்து தாக்கும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடலாகாது.
சரத்து 1.2.டீ விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் மேற்
கொள்ளப்படலாகாது.
சரத்து 1.2.ஊ - கடல் வழி வலிந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாகாது.
சரத்து 1.3 - சிறிலங்காவின் ஆயுதப்படையினர், தமிழீழ விடுதலைப் புலிகள்
மீதான வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை ---- மேற்கொள்ளக் கூடாது.
சரத்து 1.8 - தமிழ்த் துணை இராணுவக் குழுக்களை யுத்த நிறுத்தம்
நடைமுறைக்கு வந்த தினத்திலிருந்து முப்பது நாட்களுக்குள், சிறிலங்கா
அரசு ஆயுதமற்றவர்களாக்கும் - - --. இந்தத் தமிழ்த் துணை இராணுவக்
குழுக்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு--- அப்பால் இருக்க வேண்டும்.
சரத்து 1.9 - இரண்டு தரப்பினரும், சரத்து 1.4 மற்றும் சரத்து 1.5
ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளபடி, ஆரம்பத்தில் தத்தமது கட்டுப்பாட்டில்
உள்ள பிரதேசங்களுக்குள் இருக்க வேண்டும்.
சரத்து 2.1 - சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக, சித்திரவதை, பயமுறுத்தல்,
ஆட்கடத்தல், பணம் பறித்தல், தொந்தரவு செய்தல் போன்றவை தவிர்க்கப்பட
வேண்டும்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள மேற்குறிப்பிட்ட சரத்துக்களை
மட்டுமல்லாது, கிட்டத்தட்ட சகல சரத்துக்களையுமே, சிங்கள அரசு
தொடர்ந்தும் முழுமையாக மீறியே வந்துள்ளது. தென் தமிழீழத்தில்,
வெளிப்படையாகவே மிகப் பாரிய போர் நடவடிக்கைகளை மேற் கொண்டு, தமிழ்
மக்களின் பாரம்பரிய பிரதேசங்களைக் கைப்பற்றி, இலட்சக்கணக்கான தமிழ்
மக்களைச் சிறிலங்கா அரசு, ஏதிலியாக அலைய வைத்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கத்தின் முக்கிய தலைவர்களும், போராளிகளும் கொல்லப்பட்டனர். தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அறிவு ஜீவிகள், ஊடகவியலாளர்கள்
கொல்லப்பட்டனர். தமிழ்ப் பொதுமக்கள் குண்டு வீச்சுக்களால்
கொல்லப்பட்டனர்.
கடத்தப்பட்டுக் காணாமல்
போயினர். தமிழ்ப் பொதுமக்கள் மீதான பயமுறுத்தல்கள், சித்திரவதைகள்
தொடர்ந்தும் இடம் பெற்றன. சொல்லொண்ணா அளவிற்கு மனித உரிமை மீறல்களைச்
சிறிலங்காவின் அரசு இயந்திரம் தொடர்ந்தும் நடாத்தி வந்தது. போர்
நிறுத்தத்தைக் கண்காணிக்க வந்த கண்காணிப்புக் குழுவினரும் பல
அபாயங்களுக்கு உள்ளாகி நூலிழையில் உயிர் தப்பிய சம்பவங்களும்
நடந்தேறின.
சர்வதேசமோ கண்டும், காணாதது போல் தொடர்ந்தும் நடித்து வந்தது. போனால்
போகின்றதென்று, சிலவேளைகளில் கவலை தெரிவித்து| அறிக்கைகளை
வெளியிடுவதோடு மட்டும், சர்வதேசம் நின்று கொண்டது. சிறிலங்கா அரசு மீது
எந்த விதமான அழுத்தங்களையும் சர்வதேசம் மேற்கொள்ளவில்லை. இதனால்
உற்சாகமுற்ற சிறிலங்கா அரசு, தனது தமிழின அழிப்பைத் தொடர்ந்து
மூர்க்கத்தனமாக மேற்கொண்டும் வந்தது.
இவை யாவும் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோதே நடைபெற்ற
விடயங்களாகும்! போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது வெறும் காகிதத்தில்
மட்டுமே இருந்ததே தவிர, முறையாகச் செயல் வடிவம் கொடுக்கப்- படவில்லை.
ஆகவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து
விட்டுத்தான், இன்னுமொரு போரை தமிழ் மக்கள்மீது தொடுக்க வேண்டும்
என்கின்ற அவசியம் சிறிலங்கா அரசிற்கு யதார்த்தத்தில் இல்லை!
என்றாலும் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து, சிறிலங்கா அரசு
தன்னிச்சையாக விலகியுள்ளது. ஏன்? என்ன காரணம்?
இந்தக் காரணத்தைத் தர்க்கிப்பதற்காக, நாம் மீண்டும் போர்நிறுத்த
ஒப்பந்தத்தைத்தான் அணுக வேண்டும். போர்நிறுத்த ஒப்பந்தத்தின்
சரத்துக்களுக்கு அப்பால், அந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முன்னுரை
(Pசுநுயுஆடீடுநு) தெரிவித்துள்ள சில முக்க்pயமான விடயங்களைச் சற்றுக்
கவனிப்போம்.
இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முன்னுரையில் உள்ள முதல் பந்தி
கீழ்வருமாறு கூறுகின்றது.
இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கு,
பேச்சுவார்த்தை மூலமான தீர்வு ஒன்றைக் காண்பதே, சிறிலங்கா ஜனநாயக
சோசலிசக் குடியரசினதும் (GOSL) தமிழீழ விடுதலைப் புலிகளினதும் (LTTE)
ஒட்டு மொத்தமான நோக்காகும்.
இந்தப் பந்தியில் எடுத்தாளப்பட்டிருக்கும் சொற்றொடர்களான
நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட, பேச்சு வார்த்த தீர்வ,
ஒட்டு மொத்தமான நோக்க என்பனவற்றின் கருத்துக்களை முதலில் கவனிப்போம்.
இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்க என்ற
சொல்லாடல் மூலம் சில விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டு ஏற்றுக்
கொள்ளப்பட்டிருந்தன. அதாவது இலங்கைத்தீவிலே இனத்துவ
முரண்பாட என்று ஒரு பிரச்சனை இருக்கின்றது என்பதையும், அது
தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது என்பதையும், ஆறு
ஆண்டுகளுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம்
உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் சில தரப்பினர்
கூறிய, கூறி வருகின்ற கருத்தான, பிரச்சனை எதுவும் இல்லை|| என்ற
பரப்புரை இந்த ஒப்பந்தத்தின் முன்னுரையின், முதல் பந்தியின், முதல்
வரியிலேயே அடிபட்டுப் போகின்றது.
அடுத்த சொற்றொடரான பேச்சு வார்த்தை மூலமான தீர்வு ||என்பதைக்
கவனிப்போம். இது சில முக்கிய விடயங்களை ஏற்றுக் கொண்டு அவற்றை
வலியுறுத்துகின்றது. அதாவது, இந்த இனத்துவ முரண்பாட்டிற்குத் தீர்வு
ஒன்று காணப்பட வேண்டும்|| என்பதுவும், அது பேச்சு வார்த்தை|| மூலமாகவே
காணப்பட வேண்டும் என்பதுவும் இந்தச் சொல்லாக்கங்கள் மூலமாக,
முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை நாம் இங்கே காணக்கூடியதாக
உள்ளது. இந்தக் கருத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில்தான் இந்த
முன்னுரையின் முதல் பந்தியின், கடைசி வசனம் அமைந்துள்ளது.
(இதுவே) சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசினதும், தமிழீழ விடுதலைப்
புலிகளினதும் ஒட்டு மொத்தமான நோக்காகும் || என்ற வசனம் இந்த
ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
அந்த முன்னுரையின் முதல் பந்தியினை இப்போது மீண்டும் வாசித்தால், ஒரு
தெளிவான பார்வை தென்படக்கூடும்.
இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கு,
பேச்சு வார்த்தை மூலமான தீர்வு ஒன்றைக் காண்பதே, சிறிலங்கா ஜனநாயக
சோசலிசக் குடியரசினதும் (GOSL), தமிழீழ விடுதலைப் புலிகளினதும் (LTTE)
ஒட்டு மொத்தமான நோக்காகும்.||
இந்த முன்னுரையின் இரண்டாவது பந்தி, இந்த இனத்துவ முரண்பாட்டைத்
தீர்க்கக் கூடியவர்கள் என்று இரண்
டு தரப்பினரை மட்டும் அடையாளம் காட்டுகின்றது. அந்த இரண்டு தரப்பினர்
(Pயுசுவுஐநுளு) என்பவர்கள் இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப்
புலிகளும்தான் என்பதைப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முன்னுரையின்,
இரண்டாவது பந்தி ஏற்றுக் கொள்கின்றது.
இந்த முன்னுரையின் மூன்றாவது பந்தியும் ஒரு மிக முக்கியமான விடயத்தைத்
தெளிவாக்குகின்றது. அதாவது இந்த மோதல் நிலையில் நேரடியாகச்
சம்பந்தப்படாத சாராரும் கூட (எ.கா- முஸ்லிம் மக்கள்) அதன் விளைவுகளை
அனுபவிக்க நேரிடுகின்றது என்று இரண்டு தரப்பினரும் இனம்
கண்டுள்ளார்கள். ஆகவே இந்த ஒப்பந்தத்தில் உள்
ள சரத்துக்கள் (இலங்கையின்) அனைத்துக் குடிமக்களுக்கும்
பொருந்துவனவாகும்.
அதாவது இலங்கைத் தீவில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்குமான பிரச்சனையைப்
பேசித் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்
ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரண்டு சாரார்கள் மட்டுமே
பங்காளிகளாக உள்ளார்கள். அவர்கள் சிறிலங்கா அரசும், தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கமுமே ஆவார்கள்.
இதற்கு அப்பாற்பட்ட தெளிவான விடயம் என்னவென்றால், சிறிலங்காவின்
தேர்தல்கள் மூலம் அரசுகள் பின்னாளில் மாறினாலும், புதிய அரசு பேச
வேண்டிய தரப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமேயாகும்!
எனவே இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது, இலங்கைத்தீவில் பிரச்சனை
இருக்கின்றது என்பதையும், சிறிலங்கா அரசு அதனைப் பேச்சுவார்த்தைகள்
மூலமாகத் தீர்க்க வேண்டும் என்பதையும், சிறிலங்கா அரசு (அது எந்தச்
சிங்களக் கட்சியின் அரசாக இருந்தாலும் சரி) பேச வேண்டிய மற்றைய தரப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான் என்பதையும் இந்தப் புரிந்துணர்வு
ஒப்பந்தம் என்கின்ற போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அது மட்டுமல்லாது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டு
ப்பாட்டுக்குள் குறிப்பிடப்பட்ட பிரதேசங்கள் இருக்கின்றன என்பதும்
அங்கே தனியாக நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதும், ஏற்றுக்
கொள்ளப் பட்டுள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்
படைக்கலன்களை வைத்திருக்கின்ற ஓர் அமைப்பு என்பதும் ஏற்றுக்
கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு ஏற்றுக்
கொள்ளப்பட்ட சரத்துக்கள் ஊடாக, அடிப்படையில் சில விடயங்கள் ஏற்றுக்
கொள்ளப்பட்டுள்ளன. அவை இலங்கைத் தீவில் இனத்துவ முரண்பாடு இருக்கின்றது
என்பதையும், அது பேச்சு வார்த்தை மூலமாகத் தீர்க்கப்பட வேண்டும்
என்பதையும், அந்தப் பேச்சு வார்த்தை தமிழீழ விடுதலைப் புலிகளோடுதான்
நடாத்தப்பட வேண்டும் என்பதையும், தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்பதையும், அவர்களின்
கட்டுப்பாட்டிலும், நிர்வாகத்திலும் பிரதேசங்கள் இருக்கின்றன
என்பதையும் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக் கொண்டு,
உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேசம் தன்னுடைய
அனுசரணையூடாக இவற்றைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுமுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் அரசு, இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து
தன்னிச்சையாக விலகியதன் மூலம், மேற்கூறிய விடயங்களைப் புறம் தள்ள
முயல்கின்றது என்பதுதான் இங்கே நாம் வலியுறுத்துகின்ற கருத்தாகும்!
மகிந்த ராஜபக்சவின் எண்ணத்தின் பிரகாரம், தீர்வுத் திட்டமாக
இருந்தாலும் சரி, பேச்சு வார்த்தைகளாக இருந்தாலும் சரி, இனிமேல் தமிழீழ
விடுதலைப் புலிளோடு கலந்தாலோசிக்க வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால்
அவர்களைச் சம பங்காளிகள் என்றும், தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள்
என்றும் இனிமேல் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. காரணம் இதனை வலியுறுத்தி
நின்ற யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை, இப்போது சிறிலங்கா அரசு தன்னிச்சையாக
முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது.
இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக ஓரம் கட்டி
விடலாம் என்று மகிந்த தப்புக் கணக்கு போட்டு, மனப்பால் குடித்த வண்ணம்
உள்ளார். இதற்குச் சில உலக நாடுகளும் மறைமுகமாகத் துணை போவதை நாம் உணர
முடிகின்றது.
பிரித்தானியாவின் முன்னாள் இலங்கைத் தூதுவர் டொமினிக் சில்கொட் அவர்கள்
10.12.2007 அன்று தெரிவித்த சில கருத்துக்களைச் சுட்டிக்காட்டி, நாம்
சில விடயங்களைக் கடந்த ஆண்டு இறுதியில் தர்க்கித்திருந்தோம். அப்போது
இவ்வாறு குறிப்பிட்டிருந்தோம்:-
இந்த வரவு செலவுத் திட்டம் நிறைவேறிய பின்னர், 2009ம் ஆண்டு வரை
தேர்தல்கள் எதுவும் இல்லை என்பதையும், கிட்டத்தட்ட பதினெட்டு மாதம்
திடமாகத் தற்போதைய (மகிந்தவின்) அரசு இருக்கும் என்பதையும் சில்கொட்
ஓரிடத்தில் சொல்லிக்காட்டி விட்டு, இன்னுமொரு இடத்தில் கீழ்வருமாறு
கூறுகின்றார்:-
போர் ஒன்று வரவேண்டியிருந்தால், மக்களின் இன்னல்கள் குறைவாக இருக்கும்
வகையில் போர் புரிய வேண்டும்.||
இவ்வாறு சில்கொட் சொல்லியிருப்பதன் மூலம், மறைமுகமாகச் சிறிலங்கா
அரசின் போருக்கு ஆதரவையும், ஊக்கத்தையும் கொடுக்கின்றார் என்றுதான்
எண்ணத் தோன்றுகின்றது..., . . .||
இவை எல்லாவற்றிற்கும் மேலாகப் பிரித்தானியத் தூதுவர்
டொமினிக் சில்கொட் அவர்கள் கூறிய ஒரு கருத்தானது, பிரித்தானியாமீது
தமிழ் மக்கள் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தகர்த்து எறிந்து
விட்டது. அவர் இவ்வாறு கூறுகின்றார்:-
சர்வகட்சிக் குழுவானது முன் வைக்கவிருக்கின்ற சமாதானத்
தீர்வானது,
மிதவாதத் தமிழ் மக்களின் | கருத்தைக் கவருவதாக இருக்க வேண்டும்.
மிதவாதத் தமிழ் மக்கள்!|| என்று சில்கொட் யாரைச் சொல்கின்றார் என்று
தெரியவில்லை. அது ஆனந்த சங்கரியாக, டக்ளஸ் தேவானந்தாவாகக்கூட
இருக்கலாம். உண்மையாகவே தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை, உரிய
முறையில் தீர்க்
க வேண்டும் என்று பிரித்தானியத் தூதுவர் சில்கொட் விரும்பியிருந்தால்,
அவர் கீழ்வருமாறுதான் சொல்லியிருக்க வேண்டும்.
சர்வ கட்சிக் குழுவானது, முன் வைக்கவிருக்கின்ற சமாதானத் தீர்வானது,
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைச் சரியாக இனம் கண்டு, அவற்றை
முற்றாகத் தீர்ப்பதாக அமைய வேண்டும்!||
அடிப்படைப் பிரச்சனையைத் தீர்ப்பது பற்றிப் பேசாமல்,
மிதவாதம்| என்று பிரித்தானியா பேசுவதற்குக் காரணம் இருக்கின்றது.
இவ்வாறு கூறிச் செயல்படுவதன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளை ஓரம்
கட்டி விடலாம் என்று பிரித்தானியாவும், சர்வதேசமும் மனப்பால்
குடிக்கின்றன. தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகளான, தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கத்தை ஓரம் கட்டலாம் என்றும், அவ்வாறு ஓரம் கட்டுவதன்
மூலம், தமிழ் மக்கள்மீது ஓர் உதவாத திட்டமொன்றைத் திணிக்கலாம் என்றும்,
இவை நம்புகின்றன. இதன் அடிப்படையில்தான், கடந்த காலங்களில் சர்வதேசம்
செயற்பட்டு வந்திருக்கின்றது. அதனை இன்னும் அது தொடர முயற்சிக்கின்றது.
அதனால்தான் சிங்களப் பேரினவாதச் சாத்தானுக்காக என்று புதிய வேதம்
ஒன்றைத் தயாரித்து, அதனையும் தாங்களே ஓதி வருகின்றார்கள்.||
- இவ்வாறு கடந்த ஆண்டு இறுதியில் நாம் கருத்துக்களை
வெளியிட்டிருந்தோம். இந்தக் கருத்து மெய்ப்படும் வகையிலேயே இன்று
சம்பவங்கள் நடைபெறுவதையும் நாம் அவதானிக்கின்றோம்.
மேற்கூறிய கருத்துக்களோடு நாம் வேறு சில ஊகங்களையும்
தெரிவித்திருந்தோம். இந்த ஆண்டு சில
நாசூக்கான திட்டங்களைச்|| சிறிலங்கா அரசு செய்யக் கூடும் என்ற
சிந்தனையின் அடிப்படையில் அவற்றைக் கீழ்வருமாறு
வகைப்படுத்தியிருந்தோம்.:-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைதி வழிச் சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு
வர மாட்டார்கள்|| என்ற கருத்துருவாக்கத்தைப் பரப்புரை செய்து, தமிழ்
மக்கள் மீதான போரை நியாயப்படுத்துவது.
- இந்தப் போரின் ஊடாகத் தமிழ் மக்களின் வாழ்வை அவல நிலைக்குத் தள்ளி,
அவர்களைக் கையறு நிலைக்குக் கொண்டு வந்து, அதனூடாக ஒரு அரைகுறைத்
தீர்வுத் திட்டத்தைத் தமிழர்கள் மீது திணிப்பது.
- இந்த ஒன்றுக்கும் உதவாத அரைகுறைத் திட்டத்தைத் தமிழர்கள் சார்பில்
ஏற்றுக் கொள்வதற்காக,
மிதவாதத் தமிழர்கள்|
என்ற பெயரில் தமிழ்த் துரோகிகளை ஒன்றிணைத்து அவர்களிடம் இந்தத்
தீர்வுத் திட்டத்தைக் கொடுத்து, அவர்களது ஒப்புதலைப் பெற்று,
தமிழர்களின் தேசியப் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டது என்று
அறிவிப்பது.
மேற்கூறிய எமது ஊகங்களை நிரூபிக்கும் வகையில், இன்று சிறிலங்காவில்
காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின்
தீர்வுத் திட்டம் இப்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. அது தரப்போகின்ற
அரைகுறைத் திட்டத்தைக்கூட மகிந்த ராஜபக்ச அரசு செயல்படுத்த மாட்டாது
என்கின்ற யதார்த்தத்திற்கு அப்பால், நரிகள் இப்போது ஊளையிட்டுக்
கொண்டிருக்கின்றன.
இத்தகைய மோட்டுப் பேரினவாதச் சிந்தனைகளின்|| அடிப்படையில்தான், யுத்த
நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து மகிந்தவின் அரசு தன்னிச்சையாக
விலகியுள்ளது. இதன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் வெல்ல
முடியாது என்பதுவும், தமிழீழ விடுதலைப் புலிகளை ஓரம் கட்ட முடியாது
என்பதுவும், தமிழீழ மக்களின் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும்
அங்கீகரிக்காத எந்தத் தீர்வும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதுவும்,
சிறிலங்காவின் சிங்களப் பௌத்தப் பேரினவாத அரசிற்கும், சம்பந்தப்பட்ட
சில உலக நாடுகளுக்கும் விரைவில் உணர்த்தப்படும். தமிழீழத் தேசியத்
தலைமையின் அடுத்த கட்ட நகர்வுகள் இவற்றைப் புலனாக்கும் என்பதில்
ஐயமில்லை.
|